Pidikaadu 1-12

பிடி காடு – 1

திருச்சியின் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தாள் கௌரி. வெயில் கொளுத்தியது. மேலே நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாதளவுக் கண் கூசியது. கட்டியிருந்த நூல் புடவையின் முந்தானையை எடுத்துக் கையிலிருந்த குழந்தையின் தலையில் போட்டு மூடினாள்.

ஐந்து மாதக் குழந்தை நல்ல உறக்கத்தில் இருந்தான். வெளுத்த ஆடையும் கருத்த மேனியுமாய் வாய்ப் பிளந்து உறங்கும் மகனின் அழகை ரசித்து விரிந்த உதடுகள் அடுத்த நொடியே சுருங்கின.

‘அடுத்து என்ன?’

எளிமையான கேள்வி. எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடுதலுக்கான வித்தை நமக்குள் விதைக்கும். பல நேரங்களில் நம்மை அச்சுறுத்தவும் சில நேரங்களில் வாழ்வை வெறுக்க வைக்கவும் செய்துவிடுகிறது.

அவளின் தற்போதைய நிலை வெறுப்பையே ஏற்படுத்தியது. வாழ வேண்டும். தனக்காக இல்லையெங்கிலும் கையில் உறங்கும் உலகறியா சிசுவிற்காகவேணும் வாழ வேண்டும்.

பேருந்தை விட்டிறங்கியவள் அங்கேயே எவ்வளவு நேரம் நிற்பதென்று சற்று நகர்ந்து நிழற்குடையின் கீழ் சென்று நின்றாள். கண்களில் காத்திருப்பின் தவிப்பு.

‘இங்கன நின்னா வரவகளுக்குத் தெரியுமோ என்னவோ… இம்புட்டுக் கூட்டமா இருக்கு… இதுல எங்கன நின்னாலும் தெரியாதுப் போலயே…’

மகனை ஓர் இடுப்பில் சுமந்திருந்தாள். கையிலிருந்த பையை தூக்கி மறு இடுப்பில் வைத்துக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள்.

மனம் பரிதவிக்கச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பதும் சரியும் மகனையும் பையையும் சரி செய்வதுமாய் நிமிடங்களை நெட்டித் தள்ளினாள்.

தூரத்தில் தெரிந்த மணி – வசந்தா தம்பதியினரைக் கண்டதும் வேகமாய் அடித்துக் கொண்டிருந்த இதயம் சற்றே நிதானித்தது.

அவர்கள் யாரென்றக் கேள்விக்கு அப்பத்தா சொன்ன பதில் – “அட நம்ம முனியன் மவ பேச்சி இருக்கால்ல… அவ நாத்தனாக்காரியோட தம்பி பொண்டாட்டிக்கு ஒண்ணுவிட்ட…”

பட்டியல் நீண்டு கொண்டேப் போக ‘யாரோ சொந்தம் எப்படியோ உறவு’ என்பதை மட்டும் மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

“கௌரிதானம்மா?”

“ஆமாண்ணா”

வசந்தா எதுவும் பேசவில்லை. அமைதியாய் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தாள்.

“கல்யாணி சொல்லுச்சு. இங்க தில்லை நகர்ல ஒரு வீட்டுல தான் உனக்கு சமையல் வேலைக்கு சொல்லி வெச்சிருக்கு. எடம் தெரியுமா?”

‘ஊரே தெரியாதே… எங்கத்த எடம் தெரியுறதுக்கு?’

தலையை மறுப்பாக அசைத்தாள்.

“எங்கத் தங்குவ?”

நிற்குமிடம் பேருந்து நிலையம். நிழற்குடை இல்லாதிருந்திருந்தால் நடுத் தெரு.

‘எங்கனத் தங்க? இவகள நம்பிதானே கெளம்பி வந்தேன்’

“அவுக வீட்டுக்கு… அதா வேலைக்கு சொல்லி வெச்சிருக்கீகளே… அவுக வீட்டுலத் தங்க முடியாதா?” நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையில் ஊசலாடியது குரல்.

“அவங்க வீட்டுல இன்னைக்கு முக்கியமான விருந்தாளிங்கல்லாம் வந்திருக்காங்க. அதனாலத் தான் உன்னை நாளைக்குக் காலையில வர சொல்லலாம்னு நெனச்சேன். ஆனா நாங்க அவசரமா ஒரு இழவுக்குப் போக வேண்டி வந்திடுச்சு. உன் கையில அட்ரெஸ் குடுக்கணும் பாரு… அதான் இன்னைக்கே கெளம்பி வர சொன்னேன். நாளையிலிருந்து அவங்க வீட்டுலத் தங்கிக்கலாம். ஒண்ணும் பிரச்சன இல்ல”

நீ அங்கும் போக முடியாது எங்களுடனும் தங்க முடியாதென்று சொல்கிறான். பின் எங்கே? சுற்றிப் பார்த்தாள். தற்சமயம் திறந்தவேளியே புகலிடம்.

“நா இங்கனயே பாத்துக்குறேன். அட்ரெஸ் தரீகளா?”

“இந்தா” ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைப்பவன் போல் வேகமாய் சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்து நீட்டினான். இத்துடன் என் கடமை முடிந்ததென்றத் திருப்தி அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

இவனிடம் இதற்கு மேல் எதிர்ப்பார்க்க முடியாது. அமைதியாய் அந்தக் காகிதத்தையே வெறித்தபடி நின்றாள்.

“நா போயி தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்திடுறேன்”

கணவன் நகர்ந்தப் பிறகு வசந்தாவின் பார்வையிலிருந்த ஏளனத்தின் அளவு கூடியது. கொஞ்சம் நகர்ந்து அவளருகில் வந்தாள்.

“நாளைக்கு இந்த வேலப் போச்சுன்னா என்ன பண்ணுவ?”

ஒர் ஆணிடம் பேச வேண்டியிருக்கிறதே… அருகில் நிற்கும் அவன் மனைவி தன்னிடம் விபரம் கூறினால் அவளிடம் பேசி விசாரிப்பதற்கு சுலபமாய் இருக்குமே என்ற எண்ணத்தை அவளின் ஒற்றைக் கேள்வி மாற்றியமைத்தது.

‘இப்படி ஆரம்பத்துலயே வாய வெக்குது… இது பேசாம இருந்தாலே நல்லா இருக்கும் போல’

“வாயத் தொறக்க மாட்டியோ? எம்புருஷன்கிட்டப் பேசுன?”

இது என்ன மாதிரியான கேள்வி? போனவன் சீக்கிரம் வந்துவிட மாட்டானா?

“நாளைக்கு வேலை கீலை போயிடுச்சுன்னு எங்க வீட்டு வாசல்ல வந்து நிக்க மாட்டன்னு என்ன நிச்சயம்?”

“அப்படியெல்லா உங்க வீட்டுல வந்து நிக்க மாட்டேன்”

தனக்கு உதவி செய்தவர்கள் அவர்கள் மட்டுமே. அவளை எடுத்தெறிந்துப் பேசவும் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

“இன்னைக்கு சொல்லுவ சரி… நெலம எப்படி ஆகும்னு யாருக்குத் தெரியும்? ஹ்ம்ம்… இந்த மனுஷன்கிட்ட எல்லாத்தையும் வெளக்கமாவா சொல்ல முடியும்? போக்கத்தத் தனமா சமயக்காரியா சேத்து விடுறாரு. இந்த வேலப் பாக்குறதுக்கு நா வேற வேல சொல்லுறேன்… செய்”

உலகமே இருண்டு வரும் நேரத்தில் தூரத்தில் தெரியும் சிறு பொறியும் நம்பிக்கையைக் கொடுக்கும்.

“என்னக்கா?”

“அந்தாளுக் குடுத்த விலாசத்த எல்லாம் தூக்கிப் போடு. நான் ஒரு விலாசம் தரேன். போய்ப் பாரு. அங்க இருக்க அக்காகிட்ட வசந்தா அனுப்பி வெச்சான்னு சொல்லு போதும். உனக்கு ராஜ மரியாதக் கெடைக்கும். நோவாம செய்யுற வேலன்னு சொல்லிட முடியாது… ஒடம்புக் கொஞ்சம் நோவத்தா செய்யும். ஆனா ராத்திரி மட்டும் தான் வேலை இருக்கும். பகல்ல நல்லா ரெஸ்ட் எடுத்துக்கலாம். இப்போ நீ வாங்கப் போற சம்பளத்த விட 3 மடங்கு சம்பாதிக்கலாம்”

மூக்கு விடைக்க வேக மூச்சுக்களை எடுத்தவள் உதட்டைக் கடித்து அழுகையை அடக்க முயன்றாள்.

“அய்ய்ய… நீ நினைக்குற அளவுக்குக் கஷ்டமா எல்லாம் இருக்காது. எனக்கு செல நேரம் நகை கிகை எடுக்கக் கையிலக் காசு பத்தலன்னா அங்க தான் போய் நிப்பேன். எல்லாத்துக்கும் புருஷன் கைய எதிர்ப்பாத்தா ஆவுமா? ஹ்ம்ம்… நமக்கு வாய்ச்சது அவ்வளவு தெரவுசா இல்லையே… என்ன பண்ண…”

வசந்தாவைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. இங்கிருந்துப் போ என்று கத்தி அவளை விரட்ட வேண்டும். இல்லையேல் என்னை விட்டுவிடு என்று அலறித் தான் ஓட வேண்டும். தற்சமயம் இரண்டும் முடியாது.

மணி வருவதற்குக் காத்திருந்தாள். இவர்கள் சீக்கிரம் சென்றுவிட்டால் தேவலை. அவனும் பாட்டிலுடன் வந்து சேர்ந்தான். ஏதோ கொஞ்சம் தண்ணீராவது குடித்தால் நன்றாக இருக்கும். அவள் பாட்டிலைப் பார்க்க அவனோ அதை மனைவியிடம் கொடுத்துப் பையினுள் வைக்கச் சொன்னான்.

ஒரு வாய் தண்ணி கூட என்னிடமிருந்து உனக்குக் கிடைக்காதென்பதை இதை விட வேறு எப்படியும் உணர்த்த முடியாது. தலைக் குனிந்தபடியே கைக் கூப்பினாள்.

“அப்போ சரி. நாங்கக் கெளம்புறோம். உன்ன இப்படி விட்டுட்டுப் போறது கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் என்ன செய்ய? நாங்கப் போயாகணுமே… உன்னப் பாத்தாலும் பாவமா இருக்கு”

‘பாவம்? உன் நெலமையே இங்க சந்தி சிரிக்குது… பொஞ்சாதி என்ன பண்ணிட்டு இருக்கான்னுத் தெரியாம சுத்துற… உன்னப் பாத்தா எனக்குப் பாவமா இருக்கு’

“பஸுக்கு நேரமாச்சுங்க”

“தோ… வரோம்மா. வா போலாம்”

ஊரிலிருந்து உறவுக்காரப் பெண் ஒருத்தியை அனுப்பி வைக்கிறோம் அவளுக்கு ஏதேனும் வேலை மட்டும் பார்த்துக் கொடு என்று போன் வந்த நொடியில் துவங்கி இரண்டு நாட்களாக வீட்டில் வசைப் பாடும் மனைவியிடமிருந்து தப்பித்த உணர்வு. நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“ஹ்ம்ம்… என்னமோ… நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். இந்தா அட்ரெஸ்”

கௌரியின் கையில் ஒரு காகிதத்தைத் திணித்து கணவன் பின் போனாள் வசந்தா.

குழந்தைக் கண்ணைக் கசக்கி சிணுங்கத் துவங்கினான். இனி நாளை காலை வரை இந்த பஸ் ஸ்டாண்ட் தான் தன் இருப்பிடம். எவ்வளவு நேரம் நிற்பது எங்காவது உட்காரலாமென்று இடம் தேடினாள்.

ஒரு மூலையில் சிறு கூட்டமொன்று தென்பட்டது. தனியே உட்காருவானேன்? அவர்களுக்குச் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்து பையை அருகில் வைத்தாள்.

குழந்தை இன்னும் சினுங்கலை நிறுத்தவில்லை. நீண்ட நேரமாய் உறங்கி எழுந்ததால் நீர்ப் புகட்ட வேண்டுமென்று பையினுள் தேடினாள். வீட்டிலிருந்து கிளம்பும்போது எடுத்து வந்திருந்த பாட்டிலில் கால்வாசி தண்ணீர் இருந்தது.

மகனை மடியில் படுக்க வைத்து பாட்டில் மூடியில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அவனுக்குப் புகட்டினாள். அழகாக பொக்கை வாய் தெரிய சிரித்தான். தன் வாழ்வின் துயரங்கள் அனைத்தையும் மறந்துப் பல மணி நேரங்களுக்குப் பிறகு மனம் லேசாக மெல்லப் புன்னகைத்தாள்.

“என் ராஜா… என்ன அழகா சிரிக்குறீக…”

அவளருகில் உட்கார்ந்திருந்தவர்கள் அடுத்து வந்த பஸ்ஸில் ஏறிப் போனார்கள். தனியாக அங்கே அமர்ந்திருக்க சங்கடமாய் இருக்கச் சுற்றிப் பார்வையிட்டபடியே மகனுக்குத் தட்டிக் கொடுத்து உறங்க வைக்க முயன்றாள்.

முதலில் அமைதியாய் உறங்க ஆரம்பித்தவன் அருகில் கேட்டப் ஹாரன் சத்தத்தில் விழித்து அழ ஆரம்பித்தான்.

தோளில் கிடத்தித் தட்டிக் கொடுத்தாள். பலனில்லை. மடியில் கிடத்தி சமாதானம் சொன்னாள். கேட்கவில்லை. எழுந்து நடந்தால் அழுகை நிற்குமோ? பையுடன் எழுந்து சிறிது தூரம் நடந்தாள். ம்ம்ஹும்ம்…

பசிக்கு அழுகிறான் என்பது புரியாமலில்லை. பசியாற்ற எதுவுமில்லை.

நேற்றிலிருந்து சாப்பிடாமல் அலையும் அவளுக்கு இப்போது பால் சுரப்பது நடக்காத காரியம். தண்ணீரைத் தவிர வேறு ஆகாரம் எதுவும் எடுத்து வரவில்லை. வீட்டில் இருந்தால்தானே…

கையில் இருக்கும் காசு இருபது ரூபாய் நாளை வேலைக்குப் போகும் வீட்டிற்கு போக வைத்திருப்பது. எவ்வளவு தூரமோ? எவ்வளவு செலவாகுமோ? இருக்கும் காசையும் செலவழித்துவிட்டால் வாழ வழியில்லையே.

ஒரு க்ளாஸ் பாலும் ஒரு பாக்கெட் பிஸ்கட்டும் இருந்தால் குழந்தையை சமாளிக்க முடியும். அதை எப்படி வாங்குவது?

எவ்வளவு நேரம் பையையும் அவனையும் தூக்கிக் கொண்டு நடப்பது? மீண்டும் இடம் பார்த்து உட்கார்ந்தாள். குழந்தையின் அழுகை வீரிட்டு ஒலிக்க நெஞ்சுக்கூட்டில் எதுவோ பாரமாய் அழுத்தியது.

“அழாத ராஜா… கடவுளே… ஒரு பத்து ரூவாய்க்கு வக்கில்லாம இப்படி நடுத்தெருவுல நிக்க வெச்சுட்டியே… நா எங்கப் போவேன்? நா பசித் தாங்குவேன்… எம்புள்ள தாங்குமா?”

மெல்லிய குரலில் கதறியவள் மகனை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டாள். ஒரு நொடி அழுகைக் குறைந்து மீண்டும் அதிகரித்தது.

இது என்ன சோதனை? வாழ்வில் எத்தனையோ பார்த்தாகிவிட்டது. ஆனால் எந்த நிலையிலும் குழந்தைக்கு உணவில்லாமல் பசியில் தவிக்கவிட்டதில்லை. இன்று அந்த நிலைக்கும் தன்னை ஆளாக்கிய கடவுளை எவ்வளவு கெஞ்சியும் பாவம் வழிப் பிறக்கவில்லை.

மடியில் படுக்க வைத்த மகனைத் தட்டிக் கொடுக்கும்போது கையில் இருந்த காகிதங்கள் கண்ணில் பட்டன. மணி கொடுத்த காகிதத்தைப் பத்திரமாய்ப் பையின் முன் ஜிப்பில் போட்டு வைத்தாள்.

எஞ்சியிருந்தது வசந்தா கொடுத்த காகிதமே… மகனின் அழு குரல், பேருந்து நிலையத்தின் பேரொலி எல்லாம் அடங்கித் இதயத் துடிப்பு மட்டுமே கேட்டது.

போகலாம் தான். கையில் இருக்கும் இருபது ரூபாயில் விலாசம் விசாரித்துப் பேருந்தில் ஏறினால் எங்கும் போகலாம் தான்.

எல்லையற்ற நிம்மதியிலும் அளவுகடந்த துக்கத்திலும் மனம் நிர்மலமாகும்.

எதுவும் யோசிக்கத் தோன்றாமல் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தாள். ‘அடுத்து என்ன?’ அழும் குழந்தையைப் பார்த்தாள்.

கையிலிருந்த காகிதம் தீயாய் சுட்டது. கசக்கி விட்டெறிந்தாள். அழுகை வந்தது. அழுதால் மேலும் பலகீனமாகி விடுவோம் என்று வந்த அழுகையை அடக்கி யாரேனும் உதவிக்கு வருகிறார்களா என்று தேடினாள்.

அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர். கண்ணைக் கரித்தது. தண்ணீர் பாட்டிலிலிருந்து மீண்டும் மூடியில் நீரை ஊற்றி புகட்ட முயன்றாள். நீரைத் துப்பித் தட்டிவிட்டானே தவிர ஒரு சொட்டும் குடிக்கவில்லை.

‘இனி வயித்துக்கு ஏதாவது குடுத்தாத் தான் ஆச்சு… எங்கப் போவேன்… என்ன செய்வேன்…’

குழந்தையின் வீறிடல் உயிரை உருக்க யோசிக்க முயன்றுத் தோற்றுக் கொண்டிருந்தாள்.

“ம்மா… நீ எம்பேத்தி மாதிரி சாமி… ஒரு டீக்குக் காசு குடுத் தாயி ஒனக்குப் புண்ணியமாப் போகும்…”

தான் இருக்கும் நிலையில் தன்னிடம் வந்து கையேந்தும் மூதாட்டியைப் பார்த்து சிரிப்பதா அழுவதா?

“எதுவும் இல்ல பாட்டி”

“ஒரு டீக்கு மணிக்கணக்காக் கெஞ்சுறேன். நாக்கு வறண்டுப் போச்சு. யாருக்குமே எறக்கம் வர மாட்டேங்குது. பாழும் உசுருப் போயித் தொலச்சாலும் பரவாயில்ல…”

தன் போக்கில் புலம்பியபடியே அவர் நகர்ந்துவிடக் குழந்தையை சமாதானம் செய்வதில் மும்முரமானாள்.

இம்முறை என்ன முயன்றும் அழுகைக் குறையவே இல்லை. குறைந்தபட்சம் பாலாவது கொடுத்தாக வேண்டும்.

“ஒரு டீக்குக் காசு குடுத் தாயி…”

மூதாட்டியின் குரலே காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

இப்படி யாரிடமாவது கேட்டால் கொடுப்பார்களா? நிதானமாக யோசிக்க விடாமல் தடுத்த அழுகுரலைக் கேட்க சகிக்காமல் பையையும் மகனையும் தூக்கிக் கொண்டு விருட்டென்று எழுந்தாள்.

கடன் கேட்டிருக்கிறாள். பல முறை. கெஞ்சியதும் உண்டு. தெரிந்தவர்களிடம் மட்டும். ஆனால் இது திருப்பித் தரும் கடனில்லை. கேட்கப்போவது தெரிந்தவரிடமும் இல்லை.

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அழுகைச் சத்தம் காதைப் பிளந்தது. யாரிடம் கேட்பது? ஒரு பெரியவரைக் கண்டுப்பிடித்து மெல்ல அவரை நோக்கி நகரத் துவங்கியபோது எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் பாதம் கூசியது.

நடுங்கும் தன் கரங்களை அவர் முன் நீட்டினாள். அவள் முகத்தைப் பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டார்.

நிராகரிப்பின் வலியை உணராதவள் என்று சொல்லிவிட முடியாது. இப்படியொரு சூழ்நிலையில் நிராகரிக்கப்படுவோம் என்று கனவிலும் நினைத்துப் பார்க்காதவள்.

சோர்ந்துவிடக் கூடாது. தோல்வியை ஏற்கும் நிலையில் தான் இல்லை. எப்படியாவது முடித்தாக வேண்டிய காரியம்.

மனதைத் திடப்படுத்தி மேலும் இருவரிடம் முயன்றாள். அவர்கள் அவள் முகத்தைக் கூட நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

கேட்டால் தான் கிடைக்கும். பிச்சைக் கூட.

வாழ்க்கைக் கற்றுத் தந்தப் பாடங்களுள் ஒன்றாக அதையும் ஏற்றுக் கொண்டாள்.

அந்த மூதாட்டிக் கேட்டதை நினைவுக் கூற முயன்றாள். எப்படிக் கேட்க வேண்டும், என்ன கேட்க வேண்டுமென்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்து ஒரு வயதானப் பெண்மணியிடம் சென்று நின்றாள்.

“கொழந்த பசியில ரொம்ப அழுவுதும்மா… பால் வாங்க காசு குடும்மா…”

“போங்கம்மா… எப்போ பாரு கொழந்தைய வெச்சு பிச்ச கேக்க வேண்டியது. கை கால் நல்லா தான இருக்கு? வேல செஞ்சு சாப்பிட்டாதான் என்னவாம்?”

முகத்தைத் திருப்பியப் பெண் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசியாய்க் குத்தியது. ‘எங்கொழந்தைய வெச்சு நா பிச்ச எடுக்குறேனா? எம்புள்ள எனக்கு ராஜா… அவன வெச்சு நா…’ அதற்கு மேல் அங்கே நிற்காமல் எட்டி வந்தாள்.

கண்ணிலிருந்து வடியும் கண்ணீரைத் தோள்பட்டையில் துடைத்து மீண்டும் ஒருவரிடம் அதையே சொல்லிக் கேட்டாள். அவளையும் குழந்தையையும் பார்த்தவர் சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

கண்களில் வடியத் துவங்கிய கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. காசையே பார்த்தபடி அவள் சிலையென நிற்க அதைத் தாவி எடுக்க முயன்றான் அவள் மகன்.

பிடி காடு – 2

மாலையின் அந்தி மஞ்சள் வானிற்கும் இரவின் கரிய வானிற்கும் இடையிலான சிவந்த வானம் பேருந்துநிலையத்தின் வெளிச்சத்தைக் குறைத்திருந்தது. டீ கடைகளில் கடையை மறைத்து மொய்த்த மனிதத் தலைகளின் எண்ணிக்கைக் குறைந்து இப்போது மாஸ்டர் டீ ஆற்றும் லாவகத்தைக் காண முடிந்தது. எல்லா கடைகளிலும் சிறிது நேரம் முன்பே மின் விளக்குகள் எரியத் துவங்கிவிட்டன. இப்போது தெரு விளக்குகளும் ஒவ்வொன்றாக எரிய ஆரம்பித்தன.

பிச்சைக் கேட்க, பால் வாங்க, குழந்தைக்கு வேடிக்கைக் காட்டவெனப் பல காரணங்களுக்காக எழுந்து நடந்த கெளரி ஒவ்வொரு முறையும் இடம் மாறி அமர்ந்தாள். விருப்பப்பட்டு அல்ல. அவள் எழுந்துச் சென்றபோதெல்லாம் அவ்விடத்தை மனிதக் கூட்டம் ஆக்கிரமித்ததால்.

இத்தனை கூட்டத்தின் இடையில் நின்று அவளுக்குப் பழக்கமில்லை. கல்யாண வீடுகளில், இழவு வீடுகளில் இருந்திருக்கிறாள். சில மணி நேரங்களுக்கு மட்டும். அதுவும் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பார்கள். இப்போது அறிமுகமில்லா முகங்களுடன் அரை நாளுக்கு மேல் கழித்துவிட்டாள்.

ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள். முன்பு எப்போதும் அமராதப் புதிய இடமாக இருக்கலாம். பலமுறை அமர்ந்துப் பழகிய இடமாக இருக்கலாம். சற்று நேரத்திற்கு முன்பு அமர்ந்த இடத்திற்குப் பக்கத்து இடமாகவும் இருக்கலாம். கணக்கு மறந்து போயிருந்தது.

குழந்தை விழித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். அழுகை இல்லை. சிறிது நேரத்திற்கு ஒருமுறை பால் குடுத்ததாலோ? கெளரி மனிதர்களுள் எத்தனை வகைகள் உண்டென்ற ஆராய்ச்சியில் இருந்தாள்.

கையேந்தியதும் வசவுப் பாடிய அம்மா. எங்கேனும் வேலை செய் என்று கூடுதல் அறிவுரை வழங்கவும் மறக்கவில்லை. முகம் திருப்பியவர்கள் எத்தனை பேர்? அருவருப்பில் திருப்பியிருப்பார்களோ? காசு கொடுக்க மனமில்லாமல் போயிருக்கலாம். அவர்களிடமே காசு இல்லையோ? தன்னைப் போல் யாசகம் கேட்கத் தயங்கி கௌரவம் பார்க்கிறார்களா?

காசு கொடுத்தாலும் ஒரு ரூபாய் கொடுத்தவர்கள் இருக்கிறார்களே. நல்லவேளை ஐம்பது காசெல்லாம் அதிகம் புழக்கத்தில் இல்லை. போகிற வழிக்குப் புண்ணியம் தேட நினைத்திருக்கலாம்.

உண்மையில் இரக்கப்பட்டு உதவுவதற்காகக் காசு கொடுத்தவர்கள் உண்டா? இரண்டு அல்லது மூன்று முகங்களை நினைவுக்கூற முடிந்தது. மீண்டுமொரு முறை மனதிற்குள் அவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டாள்.

பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவியபடியே மேலும் கீழும் பார்த்து அவளைக் கூசச் செய்த ஆண்களை நினைத்துப் பார்த்தாள். அந்தச் சில நொடிப் பார்வையில் அவர்களுக்கு என்ன கிடைத்துவிடும்? போ என்று விரட்டவுமில்லாமல் தருவேன் என்ற நம்பிக்கையையும் கொடுத்து எதற்கிந்த நாடகம்? அப்படிப்பட்டச் சிலரைவிட்டு உடனடியாக விலகி வந்ததை எண்ணும்போது இப்போதும் முகம் சுருங்கியது.

குழந்தையோடு உட்கார்ந்திருக்கும்போது அருகில் வந்து உரசியபடி நின்ற ஆண்களின் எண்ணிக்கை அதிகம். போனில் பேசியபடி, அருகில் நிற்பவரிடம் பேசியபடி, பேருந்தை எதிர்பார்த்தபடி, வேடிக்கைப் பார்த்தபடி, ஒரு சிலர் குனிந்து அவளை வெறித்தபடியும் நின்றிருக்கிறார்கள். அவள் இடம் மாறி அமர சில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது.

“மணி எட்டரையாகுது. இன்னும் அர மணி நேரத்துல…”

யாரோ போனில் உரக்கப் பேசியது கேட்டது. மணியைக் கேட்டதும் பசியெடுத்தது. தள்ளுவண்டிகள் ஆங்காங்கே நின்றன. அவள் இங்கு வந்தபோது இல்லாதவை. திடீரென்று முளைத்தவை. மகனை இடுப்பில் சுமந்துப் பையைத் தூக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“அம்பது ரூபா சார்”

பிரியாணி விற்றவன் யாருக்கோ சொன்ன விலையை கேட்டு மெதுவாக நகர்ந்தாள். பரோட்டாக் கடைக்காரன் யாரிடமாவது விலை சொன்னால் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். எல்லோரும் மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தட்டுக் கடையின் முன் சென்று நின்றாள்.

“பரோட்டா எவ்ளோ?”

“ப்ளேட் இருவது ரூவா”

“ப்ளேட்டுன்னா?”

“ரெண்டு பரோட்டா. வாங்குறதுனா வாங்கு இல்ல எட்டி நில்லு. விசாரணப் பண்ணிக்கிட்டு…”

“வெலையே கேக்காம வாங்குறதுக்கு நீ பெரிய ஓட்டலு நடத்துற… ரெண்டு பரோட்டாக் குடு. இந்தாக் காசு”

காசை வாங்கி அடுப்பருகில் இருந்த டப்பாவில் போட்டு ஏதோ முனகியபடி ஒரு ப்ளேட்டில் இரண்டு பரோட்டாவும் சால்னாவும் ஊற்றி கொடுத்தான். அவளும் முனகியபடியே வாங்கி சற்றுத் தள்ளிச் சென்றாள்.

கடைக்காரன் அவளைத் திட்டியிருப்பான். அவள்? அவனை வெறுப்பேற்ற வெறுமனே வாயை அசைத்தாள். உள்ளூர மகிழ்ச்சி தான். காலையிலிருந்து வசவு வாங்கியவளுக்குத் திட்ட ஆள் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.

“நீ பாட்டுக்குப் போயிட்டே இருக்க? தின்னுட்டு பிளேட்ட அந்த வாலிலப் போடணும்”

“இங்கனத் தள்ளி நிக்குறேன். தூக்கிட்டு ஓடிற மாட்டேன். வெள்ளித் தட்டுப் பாரு… வேலயப் பாருய்யா. முதல்ல தின்ன வுடு”

பையைக் கால்களுக்கு இடையில் வைத்துத் தட்டில் கை வைக்க முயன்ற மகனை சமாளித்து வேகமாக சாப்பிட்டதில் ஒரு நிமிடத்திற்கு முன்பே தட்டு காலி. பையை அவ்விடத்திலேயே விட்டு பரோட்டாக்காரன் சொன்ன வாலியில் தட்டைப் போட்டு அருகிலிருந்த வாலியிலிருந்து தண்ணீர் எடுத்து அவசரமாகக் கழுவி மீண்டும் பையைத் தூக்கி உட்கார இடம் தேடினாள்.

ஆள் நடமாட்டம் குறைந்தது. பேருந்துகளின் வருகைக் குறைந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. தள்ளு வண்டிகள் சில காணாமல் போயின. ஆட்டோ ஸ்டாண்டில் நின்ற ஆட்டோக்களுக்குள் அதனதன் டிரைவர் முடங்கிப் படுத்தார்கள். தெரு நாய்கள் கூட ஓய்ந்து படுத்தன.

அவ்விடத்தில் அமைதியின் அளவு நிமிடத்திற்கொரு முறை கூடிக் கொண்டே போனது. அதுவரை ஒரே இடத்தை சலிக்கும் வரை வேடிக்கைப் பார்த்தவள் இப்போது எல்லாத் திசைகளையும் சுற்றிப் பார்த்தாள்.

உறங்க வைக்கும் முன் கடைசியாக மகனுக்கு ஒரு முறை பாலைப் புகட்டினாள். ஒரு பாலித்தீன் கவரில் கட்டிக் கொடுத்திருந்ததைத் தண்ணீர் பாட்டில் மூடியில் ஊற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றினாள். இரவில் விழித்து அழுதால் தேவைப்படுமென்று கொஞ்சம் பாலை மிச்சம் வைத்தாள். குழந்தை உடனேயே உறங்கிப் போனான். அவள் அகமும் புறமும் முன்பைக் காட்டிலும் அதிகம் விழித்துக் கொண்டது.

“வரியா?”

“ஹான்??”

இரண்டடி இடைவெளியில் நின்ற முரட்டு மனிதன் தன்னிடம் தான் பேசினானா? அவன் எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான்.

“எவ்வளோ வாங்குற?”

அங்கு வேறு யாருமில்லை. தன்னிடம் தான் கேட்கிறானோ? மடியில் கிடந்த குழந்தையைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

“எவ்வளோன்னு சொல்லு”

நிமிர்ந்துப் பார்க்கத் துணிவில்லை. என்ன பதில் சொல்வது? எப்படி விரட்டுவது? எங்கு விலகி ஒளிவது? மனதில் கேள்விகள் அடுக்கடுக்காய் எழுந்த அளவுத் தீர்வுகள் அடுத்தடுத்துத் தோன்றவில்லை. அழுகை ஆத்திரத்தை வென்றுவிடுமோ என்ற பயம். ஓங்காரமாய்க் கத்த வேண்டும். கதறி அழுதுவிட்டால்? நினைப்பதை ஏன் செய்ய முடியவில்லை?

“அத வுடுப்பா… போய் வேற கிராக்கிப் பாரு”

சொன்னவன் எங்கிருந்து வந்தான்? அது முக்கியமில்லை. மனத்திடம் கூடியது. தெம்பாக நிமிர்ந்து அமர்ந்தாள்.

முதலில் வந்தவன் அமைதியாக நகர்ந்து செல்ல “மத்தியானத்துலேந்து நம்மப் பாத்து வெச்சா… வந்துட்டானுங்கப் பொழுது சாஞ்சதும்” என்று மெல்லிதாய் கூறி இரண்டாமவன் சற்றுத் தள்ளி நின்றான்.

மகனை இன்னும் இருக்கியணைத்து ஒரு கையில் பையை எடுத்தாள். ஓட முடியுமா? முடிவெடுக்கும் முன் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. தள்ளி நின்றவன் தொலை தூரம் சென்றுவிட்டான்.

“யாரும்மா? எந்திரி…”

அதட்டலாய் சொன்ன காக்கிச் சட்டை அருகில் வருமாறு சைகை செய்தான்.

“வெளியூரு சார்”

“இந்நேரத்துல இங்க என்ன பண்ணுற?”

“பஸ்ஸு… காலையிலதான் பஸ் கெடைக்கும்”

“இங்கெல்லாம் உக்காராத… அப்பறம் கேஸு கீஸுன்னு நாங்க மண்டைய ஒடச்சுக்கணும். வீட்டுக்குப் போ…”

கெளரி தயங்கி நின்றாள்.

“கெளம்புறியா என்ன? ஸ்டேஷன் கூட்டிட்டுப் போகணுமா?”

அங்கே அதற்கு மேல் இருப்பதும் சரியாய் படவில்லை. நடக்க ஆரம்பித்தாள்.

“பாவம் சார். அந்தப் பொண்ண ஏன் வெரட்டுறீங்க?”

ஜீப் ஓட்டியவர் கேட்டக் கேள்வியில் நியாயம் இல்லையென்று அடித்துக் கூறிவிட முடியாது. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் மனமில்லை.

“ஏற்கனவே ஒரு கேஸு முடியாம நிக்குது. அதுக்கே கஞ்சிக் காய்ச்சிட்டு இருக்காங்க. தெனம் வாங்கிக் கட்டிக்குற எனக்குதான்யாத் தெரியும். பாடிய ஐடென்டிபை பண்ண கூட யாரும் வரல. யாரு என்னன்னு ஒரு எழவும் கண்டுப்பிடிக்க முடியல. யாருக்கும் தெரியாமக் காலைல சீக்கிரம் பாடிய கிளியர் பண்ணியிருக்கணும். எங்க? இந்த ப்ரெஸ்காரனுங்க தூங்கவே மாட்டானுங்க போல. ஸ்பாட்டுக்கு நமக்கு முன்னாடி வந்து நின்னுடுறானுங்க. டார்ச்சர்யா இதெல்லாம். பாவம் பாத்தா வேலைக்காகாது. நீ வண்டிய எடு”

ஜீப் கண்ணைவிட்டு மறையும் வரை திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தாள் கெளரி. தொலைதூரம் போகக் கூடாது. இடம் தெரியாமல் மாட்டிக் கொண்டால் இந்நேரத்தில் வழிக் கேட்க கூட ஆளில்லை. எந்த தெருவிலும் திரும்பாமல் நேராக நடந்தாள். திரும்பி வருவது சுலபமாக இருக்கும்.

பூட்டிய கடைகள், பழைய பாடல் ஒலித்த தட்டு கடை, குப்பைத் தொட்டியில் எஞ்சியிருந்த மிச்ச சோற்றுக்கு அடித்துக் கொள்ளும் நாய்கள், கடை வாசலில் முகத்தைத் துண்டால் மூடி உறங்கிக் கொண்டிருந்த உடல்கள், குருட்டு தைரியம் நிறைந்த மனிதர்களைப் போலல்லாமல் அந்த அகால வேளையிலும் மிக ஜாக்கிரதையாக இரண்டு பக்கமும் பார்த்துவிட்டுத் தெருவைக் கடக்கும் எலி, சைக்கிளைக் கஷ்டப்பட்டு மிதித்துச் சென்ற முதியவர் என்று ஏதோவொன்று அவள் கவனத்தை ஈர்த்துக் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் எடுத்து வைத்தாள்.

நடந்து நடந்து கால்கள் சோர்ந்துப் போயின. இரண்டு முறை பேருந்துநிலையத்திற்கும் அவள் இப்போது நிற்கும் இடத்திற்குமாக நடந்தாயிற்று. இனி முடியாது. அங்கேயே ஒரு கடையின் வாசலில் உட்கார்ந்துவிடலாமா என்று யோசித்தவளுக்கு அதைவிடப் பஸ் ஸ்டாண்ட் சரியான இடமாகப் பட்டது.

திரும்பி வந்து பெஞ்சில் உட்கார்ந்து குழந்தையைப் போர்த்தியிருந்த துண்டுடன் அருகில் கிடத்தினாள். பாட்டிலில் இருந்த நீரை ஒரு வாய் மட்டும் குடித்தாள். இரவின் நீளம் இன்று அதிகம் தான். கண்ணைச் சொருகியபோதெல்லாம் தலையை உலுக்கித் தூக்கத்தை விரட்டினாள். பொழுதும் புலரத் துவங்கியது.

நாளை வேலைக்குப் போகலாம் என்று கூறிய மணி எப்போது போக வேண்டுமென்று நேரம் கூறவில்லை.

இப்போதே பேருந்தைப் பிடித்துப் போய்விட்டால் என்ன? முதலில் விலாசம் விசாரிக்க வேண்டும்.

எழுந்து வாய் கொப்பளித்துத் தலைமுடியைக் கோதி ஒதுக்கியவள் பையினுள் கை விட்டு மணி கொடுத்த காகிதத்துடன் சென்று ஒருவரிடம் கேட்டாள்.

அவர் சொன்னப் பேருந்து அப்போதே வந்து நின்றது. அவசரமாகக் குழந்தையையும் பையையும் தூக்கிக் கொண்டு அதில் ஏறினாள். சிறிது நேரம் அங்கேயே நின்றப் பேருந்து புறப்பட்ட ஐந்து நிமிடத்திற்குள் அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தது.

கையில் இருந்த கடைசிச் சில்லரைப் பயணச்சீட்டு வாங்க உதவியது. எஞ்சியிருந்தது நேற்றைய தினம் அவள் கையில் இருந்த இருபது ரூபாய் மட்டுமே. பெரிதாகச் சேமித்துவிட்ட பெருமிதம், நேற்றைய நிராகரிப்புகள் தந்த வலி இரண்டையும் உதறித் தள்ளி வீட்டிற்குச் செல்லும் வழிக் கேட்டு நடந்தாள்.

மெயின் ரோட்டைக் கடந்து தெருவிற்குள் நடக்க நடக்க எல்லா வீடுகளுமே அளவில் பெரியனவாக இருந்தன. அவள் வேலைப் பார்க்கப் போகும் வீட்டின் அளவும் பெரிதாகவே இருந்தது. உள்ளே நுழைய விடாமல் காவலாளித் தடுத்தான்.

“ஏய் ஏய் இரு… கேட்ட தொறக்காத. யாரு நீ?”

“வேலைக்கு வர சொல்லியிருந்தாக. மணி அண்ணே அனுப்புனாக. அப்படிச் சொன்னாத் தெரியும்னு சொன்னாக”

“என்ன வேலைக்கு?”

“சமையலுக்கு”

“இரு கேட்டு சொல்லுறேன்”

கேட்டருகே ஒரு சிறிய அறை. இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஸ்டூலின் மேல் இருந்த போனை எடுத்துப் பேசினான். கௌரிக்கு ஒன்றும் கேட்கவில்லை. வெளியே வந்தவன் “பின் பக்க வழியா வர சொன்னாங்க. அந்த வெள்ள பூ தெரியுதுப் பாரு… அது பக்கமா அப்படியே போ” என்று கேட்டைத் திறந்துவிட்டான்.

அவன் கைக் காட்டிய பூச்செடியில் பல மலர்கள் பூத்திருந்தன. அடர்த்தியாய் இருந்த பச்சை இலைகளுக்கிடையில் பளீர் வெள்ளைப் பூக்கள். என்ன மலராக இருக்கும்? யோசித்தபடியே நடந்து பின்கட்டை அடைந்தாள்.

“உன் பேரு கௌரியா?”

கேள்விக் கேட்ட மனிதர் லேசாக நரைத்த தலையுடன் வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். தலையை ஆட்டினாள்.

“மணி ரொம்பக் கேட்டுக்கிட்டதால வேலைக்கு வர சொன்னேன். சாப்பாடு ருசியா இருந்தாதான் நிரந்தர வேலை. ரெண்டு நாள் பாத்துட்டு வீட்டுல இருக்கவங்க சொல்லுறதப் பொறுத்து எல்லாம் முடிவுப் பண்ணிக்கலாம். சம்பளம் எவ்வளவுன்னு மணி சொன்னானா?”

“இல்ல”

“மாசம் ஐயாயிரம். கம்மிதான். மூணு மாசம் கழிச்சு ஏத்திக்கலாம் இப்போ இவ்வளவு போதும்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் இவங்க பேக்டரி எல்லாம் பார்த்துக்குற மேனேஜர். ராமலிங்கம். இங்கயே தங்கியிருக்கேன். நீ நேரத்தோட வந்ததும் நல்லதாப் போச்சு. முதல்ல குளிச்சுட்டு காபி கலந்து கொண்டு வா”

கேள்விக் கேட்கிறார். விபரம் சொல்கிறார். எல்லாம் முன்பே தீர்மானிக்கப்பட்ட அளவோடு இருந்தன. வீட்டு முதலாளியைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. அவள் வந்ததெப்படி என்று கேட்கவில்லை.

“குளிக்க….”

“தங்கம்… இந்தப் பொண்ண கொஞ்சம் பாத்துக்கோ” உள்ளே திரும்பி உரக்கக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். வெளியே வந்த பெண்ணுக்கு முப்பது வயதிருக்கலாம்.

“சமையலுக்கா?”

“ஆமாக்கா. குளிக்கணும்”

“உள்ள வா. பைய இங்க ஓரமா வெச்சுடு. தோ தெரியுதுல்ல அதான் பாத்ரூம். நான் இங்க வீட்டு வேலை செய்யுறேன். பாத்திரமெல்லாம் கழுவணும். நீ குளிச்சுட்டு வந்து அடுப்பப் பத்த வை. சீக்கிரம்”

செருப்பைக் கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். அந்த இடத்தை அறையென்று சொல்ல முடியாது. வீட்டினுள் செல்வதற்கான கதவு நடுவில் இருக்க ஒரு மூலையில் குளியலறை என்று தங்கம் கூறிய அறையிருந்தது.

“புள்ளைய…”

“நீ குளி முதல்ல. லேட்டா காபிக் குடுத்தா அந்தம்மா கத்தும்”

“சரிக்கா. ரெண்டு நிமிசம் புள்ளையப் பாத்துக்குறீகளா? இப்போ வந்திடுறேன்”

பேசியபடியே உறங்கும் குழந்தையை பையருகே தரையில் கிடத்தி பையைத் திறந்துத் துணி, துண்டு, சோப்பு ஆகியவற்றை எடுத்துக் குளியலறை நோக்கி ஓடினாள். அவள் வெளியே வந்தபோது குழந்தையருகில் பை மட்டுமே இருந்தது.

‘நல்லாப் பேசுச்சு… வீட்டம்மா பத்தியெல்லாம் சொல்லுச்சுன்னு புள்ளைய விட்டுட்டுப் போனா… ரெண்டு நிமிசம் பக்கத்துல இருந்தாக் கொறஞ்சாப் போயிடும்?’

அழுக்குத் துணியை ஒரு கவரில் போட்டு பையினுள் வைத்துத் துணிக்கடியிலிருந்து ஒரு சிறிய கவரை எடுத்தாள். குங்குமச்சிமிழை எடுத்தவள் முகம் சுருங்க மீண்டும் உள்ளேயே வைத்துவிட்டு அட்டையில் ஒட்டியிருந்த பொட்டை நெற்றிக்கு இடம் மாற்றினாள். அவசரமாகப் பின்னலை அவிழ்த்து சிக்கெடுத்து சீவி மீண்டும் பின்னினாள்.

குழந்தை இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். அங்கே தரையில் அப்படியே விட்டுச் செல்வதா? யோசிக்க நேரமில்லை. அவனுக்கென்று தனியே எடுத்து வந்திருந்த புடவையைப் பையிலிருந்து எடுத்துத் தொட்டில் கட்ட இடம் தேடினாள். அங்கிருந்த ஸ்டூலை எடுத்துப் போட்டு எட்டி கொக்கியில் சேலையை மாட்ட முயன்றாள். கையை எவ்வளவு நீட்டுயும் எட்டவில்லை.

வெளியே தோட்டத்தில் சத்தம் கேட்டு ஸ்டூலிலிருந்து இறங்கி எட்டிப் பார்த்தாள். யாரோ ஒருவன் குழாயைத் திறந்து முகம் கழுவி கொண்டிருந்தான்.

“இந்த சீலைய மேல மாட்டித் தரீகளா? கொழந்தையத் தூங்கப் போடணும்”

முகத்திலிருந்த நீரை ஒரு கையால் வழித்தபடி நிமிர்ந்துப் பார்த்தான். அப்படியே திரும்பி நடக்க ஆரம்பித்துவிட்டான்.

“இந்தாப் பொண்ணு… உன் பேரு என்ன?”

“ம்ம்… கெளரி. என்னக்கா?”

“சீக்கிரம் வான்னு சொல்லிட்டுதானப் போனேன்? உனக்காக நா வாங்கிக்கட்டிக்க முடியுமா? இங்க நின்னு என்ன பராக்குப் பாக்குற?”

“இல்லக்கா… தூளி கட்டணும்… எட்டல… அதான் அவருக்கிட்ட…”

“அது ஒரு முசுடு. புள்ள தூங்கிட்டுதான இருக்கு? நீ வா முதல்ல”

இப்போது உதவி செய்யாமல் போகும் அவன் முசுடென்றால் சற்று முன் பிள்ளையைப் பார்த்துக் கொள்ள உதவாத நீ? அவளிடம் கேட்க முடியாது.

புடவையைச் சுருட்டி பை மீதே வைத்துவிட்டு வீட்டிற்குள் போனாள். சமையலறை நான்கு ஆட்கள் உட்கார்ந்து வேலைப் பார்க்குமளவிற்குப் பெரிதாக இருந்தது. சுத்தமாக இருந்தது. அடுப்பினருகில் பாலும் பில்டரும் இருந்தன.

“இன்னைக்கு நா பில்டர் போட்டு வெச்சுட்டேன். நாளையிலிருந்து நீதா பாத்துக்கணும். சக்கர இந்த டப்பாவுல இருக்கு”

“சரிக்கா. எத்தன காபி கலக்கணும்?”

“பத்து காபி கலக்கு. மீந்தாக் கொஞ்ச நேரம் கழிச்சு நம்ம சூடு பண்ணிக் குடிச்சுக்கலாம். பத்தலன்னாக் கஷ்டம். கொழந்தைக்கு எத்தனை மாசம்?”

“அஞ்சு மாசம்”

“கொழந்தையோட அப்பா…”

“மூணு மாசம் முன்னாடிப் போய் சேந்துட்டாரு”

“ஓஹ்ஹ்… எந்த ஊரு?”

“கோடங்கிப்பட்டி. கரூர் பக்கம்”

“தனியாவா வந்த?”

“தொணைக்கு வர ஆளில்ல. சென்ட்ரல்லக் கொண்டு வந்து எறக்கிவிட்டான். மணி அண்ணன் வேற ஏதோ சத்திரம்னு சொன்னாரா… அங்கேந்து பஸ் புடிச்சு சத்திரம் வந்து… நேத்தே வந்துட்டேன். தனியா…”

“சரி சரி… அம்மா வந்து திரும்பக் கேக்குறதுக்குள்ள போய் மொதல்ல ஒரு கப் அவங்களுக்குக் குடுத்துட்டு வந்துடு”

அமைதியாக காபி கலந்து ஒரு கப்பில் மட்டும் ஊற்றினாள் கெளரி. சமையலறையை விட்டு வெளியே வந்ததும் டைனிங் ஹால் இருந்தது. அதற்கு அப்பால் இன்னும் இரண்டு அறைகள் என்னவென்றே புரியவில்லை. ஹாலில் சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டு எஜமானி.

காபியை நீட்டியதும் எடுத்துக் கொண்டவர் “பேரு கௌரியா?” என்றார்.

“ஆமாம்மா”

“சாப்பாட்டுல காரம் அதிகம் சேக்காத. காலைல இட்லி ஊத்திடு. மத்தியானம் என்ன வேணும்னு அப்பறம் சொல்லுறேன். காய், மளிகை சாமானெல்லாம் ராமலிங்கம் வாங்கிக் குடுத்துடுவாரு. தங்கம் தரைய சுத்தமா தொடைக்குற அளவுக்கு அடுப்பத் தொடைக்க மாட்டா. ஒரே பிசுக்கா இருக்கும். நீ தான் தொடச்சுப் பாத்துக்கணும். கொழந்தை இருக்காமே…”

“ஆமாம்மா”

“புருஷன்?”

“எறந்துட்டாரு”

“புள்ளையப் பாத்துக்குறேன்னு வேல நேரத்துல ஓபி அடிக்கக் கூடாது. தங்கத்துக்கிட்டக் கேட்டு மத்தவங்களுக்கு காபி கொடு”

மீண்டும் பேப்பரில் மூழ்கிவிட்டார். கணீர் குரலில் அவர் பேசியது கௌரிக்குப் பிடித்திருந்தது. அதிகாரத் தோரணையில்லாமல் முதலாளி என்ற தன் இடத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் பேச்சு அவருடையது.

சமையலறைக்குள் வந்தபோது கப்புகளையும் டம்பளர்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் தங்கம்.

“நல்லாப் பாத்து வெச்சுக்கோ. இப்போ அம்மாவுக்கு குடுத்தியே அதே மாதிரி இன்னும் ரெண்டு கப் இருக்கும். ஒண்ணு ஐயாவுக்கு, இன்னொன்னு அவங்கப் புள்ளைக்கு. ஐயாவோடயே பாக்டரிக்குப் போகுறதால அவருக்கும் இப்போவே காபி குடுத்துடணும். இது ராமலிங்கம் ஐயாவோட கப். இது உனக்கும் எனக்கும். இது வாச்மேன் டம்ப்ளரு. இது இப்போ போச்சே… டிரைவரு… அதுக்கு”

“அவர உங்களுக்குப் பிடிக்காதா?”

“பேசவே பேசாது. எது கேட்டாலும் மதிக்காது. ஊமக்கொட்டான்… வாய புடுங்கவே முடியாது. அதுக்கிட்ட வெச்சுக்காத”

எப்படியோ இருக்கட்டும். அடுக்கப்பட்டிருந்த கோப்பைகள் அனைத்திலும் காபியை நிரப்பினாள் கெளரி.

பிடி காடு – 3

குழந்தையைத் தூக்க வேண்டும். காலை இரண்டுமுறை பசியாற்றத் தூக்கியதோடு சரி. இவ்வளவு நேரம் அவன் அழாமல் இருப்பதே ஆச்சரியம் தான். மதிய உணவுத் தயாரித்து, அனைவரும் சாப்பிட்டு, கடைசியாகத் தான் சாப்பிட்டும் முடித்தாயிற்று. உடல் முழுதும் பிசுபிசுப்பு. அடுப்பருகில் நீண்ட நேரம் நின்ற தேகத்தைக் குளிர்விக்க வேண்டும். அதிக சீலைகள் இல்லை. கட்டிக் கொள்ள ஐந்தும் தூளிக் கட்ட ஒன்றும் இருந்தன.

தூளி… என்ன முயன்றும் மேலே இருந்த கொக்கி எட்டவில்லை. யாரிடம் உதவிக் கேட்பதென்றும் தெரியவில்லை. வீட்டு வேலை செய்யும் தங்கத்திற்கும் உயரம் பத்தாது. அவளைவிடக் குள்ளம்.

குழந்தையைத் தரையில் கிடத்தி வைத்திருக்கக் கூடாது. வீட்டில் தரையில் தான் படுக்கவைப்பது. ஆனால் இங்குச் சரியான அறைக் கூட இல்லை. ஏதோ அனாதையாக விட்டு வந்தது போல் இருந்தது.

“நா செத்த நேரம் படுக்கப் போறேன். சாயங்காலம் வேல சரியா இருக்கும். இங்க புள்ளைக்குப் பக்கத்துலயே படுத்துக்குறேன். நீயும் படு. எதுக்குப் புள்ளயவே இப்படிப் பாத்துட்டு நிக்குற?”

“குளிக்கணும். நீங்க படுங்க”

பையிலிருந்து துணியை எடுத்தவள் “எங்கனத் தொவைக்குறது? நேத்துக் கட்டியிருந்த சீலையக் கசக்கிப் போடணும். இத வேறத் தொவைக்கணும்” என்றாள்.

“பின்னாடிக் கல்லு இருக்கும். நீ சமச்சுட்டு இருந்தப்போ நா தொவச்சனே பாக்கலையா? ஆமா நீ என்னத்தப் பாக்குற? இங்க நெறையத் துணிக் காயப் போட்டிருக்கனே அந்தக் கொடிலப் போட்டுடாத. கொஞ்சம் தள்ளி என் சீலத் தொங்கும் பாரு. அந்தக் கொடியிலயே போடு”

தங்கம் உள் தள்ளி வைக்கப்பட்டிருந்த பையிலிருந்து சில சேலைகளை எடுத்து தலைக்கு வைத்துப் படுத்துவிட்டாள்.

கெளரி குளித்து, துவைத்து, காய வைத்து வந்து மகன் அருகில் படுத்தாள். விழித்திருந்தான். விளையாட்டுக் காட்டி சிரிக்க வைத்தாள். சத்தம் கேட்டு உச்சுக் கொட்டி எரிச்சலுடன் திரும்பிப் படுத்தாள் தங்கம்.

‘என்னத்துக்கு இந்த அக்கா இவ்ளோ அலுத்துக்குது? நம்ம வந்ததும் அம்புட்டு கேள்விக் கேட்டுதே… அதப் பத்தி ஏதாவது சொல்லுச்சா? சொல்லுச்சே… வேல இருக்குன்னு. கேட்டக் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னா அத காது கொடுத்துக் கேக்குற பொறும இல்ல. அப்பறம் என்னத்துக்குக் கேள்வி கேட்டுச்சாம்? எல்லாம் தெரிஞ்சுக்கணும்னுக் கொடஞ்ச மாதிரி இருந்துச்சு. எந்த வெவரமும் எனக்குத் தெரிஞ்சுக்க வேணாம்னுக் காமிச்சுக்கிட்ட மாதிரியும்…

இந்த அக்காவுக்குக் கண்ணாலம் ஆயிருக்குமா? புள்ள குட்டி இருக்குமா? இங்கனயே தான் தங்கியிருக்கா? வூடு வாச இருக்குமா? வூட்டுக்குப் போகாதா?

இங்கனயே தான் படுத்துக்கணுமா? ரூம்பு ஏதும் தர மாட்டாகளா?

செஞ்ச சோறு எப்டி இருந்துதுன்னு ஒத்தர் ஒத்த வாத்த வாய தொறக்கலயே. யாரும் எதுக்கும் வாயத் தொறக்க மாட்டாகப் போலருக்கு. இந்த அக்காவும் ஒண்ணுஞ்சொல்லாமத் தின்னுடுச்சு.

ஏன் தூக்கம் வர மாட்டுது? ராப் பூராத் தூங்காம ரோட்டுலத் திரிஞ்சு… சாமி… என்னா வேணா சோதனப் போடு. இந்த ரோட்டுல நிப்பாட்டுற வேல மட்டும் வேணாஞ்சொல்லிப்புட்டேன்.

ஏதோ சாவு வந்துட்ட மாதிரி… கழுகெல்லாம் சேந்துப் பொணத்தக் கொத்தித் திங்கும்பாகளே… அப்டிக் கூட்டத்துக்கு நடுல நிக்க வெச்ச மாதிரி… கஷ்டம் வந்தப்போலாம் அடுத்து என்ன செய்யணும்னு டக்கு டக்குன்னு யோசிக்க முடிஞ்சுது. ரோட்டுல நிக்க வெச்சா… அதும் கையிலப் பச்சப் புள்ளையோட… எனக்கென்ன கூடவே நின்னுப் பாத்துக்க ஆளா, ஆதரவா இருக்கு?’

“ஏய் இந்தா…”

வெளியில் கேட்ட சத்தத்தில் தூக்கிவாரிப் போட்டது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வந்து எட்டிப் பார்த்தாள். வீட்டு டிரைவர் நின்றிருந்தான்.

“ஒரு காபி கலந்துக் குடு”

“இப்டி தான் கூப்டுவாகளா?”

“தல வலிக்குது”

“அதுக்கு நா என்னாப் பண்ணுறது”

“காபி”

“அத்த ஒழுங்காக் கேளு”

“காபி கலந்து குடுக்க தான வந்திருக்க?”

“ஒனக்கு சேவகம் பண்ண ஒண்ணும் வல்ல. அம்புட்டு நோவுதுன்னா டீ கடையிலப் போயிக் குடிக்க வேண்டியது தான?”

“குடுக்க முடியுமா முடியாதா?”

பேச்சு சரியில்லை. கேட்ட விதம் பிடிக்கவில்லை. இருந்தாலும் முக வாட்டத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“கொண்டாறேன்”

ஏற்கனவே பால் காய்ச்சி வைத்திருந்ததால் பிரிட்ஜிலிருந்து அதை எடுத்து சூடு செய்து காபி கலக்கி எடுத்து வந்தாள். தலையை இரு கைகளாலும் பிடித்துத் தோட்டத்தில் கவிழ்த்துப் போட்டிருந்த பூத்தொட்டியின் மேல் உட்கார்ந்திருந்தான்.

“ரொம்ப நோவுதா?”

நிமிர்ந்து உட்கார்ந்தவன் காபியை வாங்கி வேக வேகமாகக் குடித்தான்.

“சூடுய்யா… தல வலிக்குதுன்னு சொன்னியேன்னு சூடா கொண்டாந்தேன். மெல்ல”

எதுவும் அவன் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. தம்ப்ளரை நீட்டினான். தலையை பிடித்து அமர்ந்தான்.

“தண்ணியாவது குடி. தொண்டப் பொத்துக்கப் போவுது. இம்புட்டு சூட இப்டியா குடிப்ப? காலைல சாப்பிட்டுப் போன. மத்தியானத்துக்கு சாப்ட வல்லயே… வெளில சாப்டியா?”

“ம்ம்ஹும்”

“சாப்டலையா? ஏன்?”

“நேரமில்ல”

“அதான் பசில தல வலிக்குது. சோறு இருக்கான்னு வாயத் தொறந்து கேட்டாக் கொறஞ்சாப் போவ? காபி கலக்குன்னு நல்லா அதிகாரம் பண்ணத் தெரியுதே. சாப்டுறியா?”

“ம்ம்”

“அடேங்கப்பா அத வாயத் தொறந்து சொன்னா ஒன் ஒசரம் கொறஞ்சிடுமோ? இங்கனயே உக்காந்தா சாப்டுவ? வா”

தம்ப்ளரை விளக்கப் போட்டாள். சமையல்கட்டை அடுத்திருந்த டைனிங் ஹாலின் மூலையில் கீழே தட்டு வைத்தாள். அவனுடைய தட்டு. அவனுக்கென்று அந்த வீட்டில் தனியே எடுத்து வைக்கப்பட்டிருந்த தட்டு. வேலை செய்யும் எல்லோருக்கும் இப்படி ஒரு தட்டு இருந்தது. தங்கம் காலையில் சொல்லித் தந்தது. தனியே எடுத்து வைக்கப்பட்டதா ஒதுக்கி வைக்கப்பட்டதா என்ற கேள்வியை மறந்தே ஆக வேண்டும். மறந்தாள். மீந்திருந்த உணவை எல்லாம் எடுத்து சூடு செய்தாள்.

“ஆறியிருந்தாப் பரவாயில்ல”

“இரு இரு. ரெண்டு நிமிசம் பொறுக்க முடில. காபி கேக்குறாரு”

“என்ன மொனவுற? எதா இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா சொல்லு”

“எடுத்தாறேன்னு சொன்னேன்”

குழம்பு ஊற்றுவதற்கு முன் தட்டிலிருந்த சுடு சோற்றில் ஒரு கவளத்தை எடுத்து வாயில் திணித்தான். கையை உதறி உதறி அவசரமாய்ச் சாப்பிட்டான்.

“ஆறுற நேரங்கூட சோத்த பாத்துட்டு உக்காந்திருக்க முடியல. இனி பசிச்சாக் கேளு. அதா சொன்னியே. சமைக்க தான வந்திருக்கன்னு”

அவன் எதுவும் பேசவில்லை. இரண்டாம் முறை சாதத்தை வைத்து குழம்பு ஊற்றினாள். மனதிற்குள் ஒரு நப்பாசை. இவனாவது சமையல் ருசி எப்படி இருக்கிறதென்று சொல்வானா? அவன் பேசுவது போல் தெரியவில்லை. கேட்டுத் தெரிந்துக் கொள்வதில் தவறில்லையே?

“நல்லாயிருக்கா? உப்பு ஒரப்பெல்லாம் சரியாயிருக்கா?”

“ம்ம்”

‘ம்ம் னா? பதில் சொல்லுதாப் பாரு. அந்தக்கா சொன்னது சரிதான். வாயத் தொறக்குதா? என்னமோ பேரு சொல்லுச்சே அந்த அக்கா… ஊமைக்கொட்டான் ஊமைக்கொட்டான். அதான் இது’

எழுந்துத் தட்டைத் தோட்டத்திலிருந்த பைப்பில் கழுவி எடுத்து வந்து அவளிடம் நீட்டினான். ஏதாவது சொல்வான்… ஒரு நன்றியாவது சொல்வானென்று எதிர்ப்பார்த்தாள். அவன் சென்றுவிட்டான்.

அடுக்களையை ஒழித்து வைத்து அவள் வெளியே வந்த நேரம் “கெளரி இங்க வாம்மா” என்றழைத்தார் ராமலிங்கம். அழத் துவங்கியிருந்த மகனைத் தூக்கி வெளியே தோட்டத்திற்கு வந்தாள். தங்கம் இவ்வளவிற்கும் எழவில்லை.

“நாளைக்கு சமையலுக்குத் தேவையான காயெல்லாம் போய் வாங்கிட்டு வந்துடு. காசு குடுத்திருக்கேன். கூட்டிட்டுப் போப்பா”

கடமை முடிந்ததென்று அவர் சென்றுவிட டிரைவரைப் பார்த்தபடி நின்றாள்.

“எம்மூஞ்சிய என்ன பாக்குற? அவரு சொன்னது கேக்கல? செவுடா? கெளம்பு. எனக்கு அடுத்து பாக்டரி போகணும்”

‘சோறு போட்ட நன்றி இருக்குதா? கத்துது இப்டி. புள்ள பயந்து அழுவுதுல்ல. இதுங்கூட என்னாத்துக்கு அனுப்புறாக? வேற ஆளே கெடைக்கலையா?’

“ஒரு பத்து நிமிசம் இரு”

“சீவி சிங்காரிக்கவெல்லாம் நேரமில்ல”

“ஒங்கண்ணென்ன நொல்லையா? புள்ள அழுவுறதுத் தெரியல? இரு. வரேன்”

அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. சற்று முன்பு உட்கார்ந்திருந்த அதே தொட்டியின் மேல் உட்கார்ந்தான். கெளரி வர கால் மணி நேரமாகியது. குழந்தை அமைதியாக இருந்தான். தலை வாரியிருந்தாள். முகம் கழுவியிருந்தாள்.

“இதத்தா எங்கூர்ல சீவி சிங்காரிக்குறதுன்னு சொல்லுவாங்க. பை எடுத்துட்டு வா. காய கையில அள்ளிட்டு வருவியா?”

“எஞ்சவுரியம். எதுலயோ அள்ளிப் போட்டுக் கொண்டாறேன். எதுக்கு எரிஞ்சு வுழுற? இரு பை எடுத்தாறேன்”

“அப்புறம் அத எதுக்கு எடுக்குற? எதுலயோ அள்ளிப் போட்டுக் கொண்டார வேண்டியதுதான?”

‘இருய்யா உன்னக் கரிச்சுக் கொட்ட எனக்கொரு சான்ஸு கெடைக்காமயாப் போகப் போவுது? அப்போ வெச்சுக்குறேன் உன்னைய’

அவள் அடுக்களையில் தேடி ஒரு பையை எடுத்து வரும் முன் அவன் விடு விடுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டான். ஓட்டமும் நடையுமாகப் பின்னால் போனாள்.

“இந்தாய்யா… எந்த கலக்டரு காத்துக் கெடக்காருன்னு இப்புடி ஓடுற?”

அவன் கேட்டையும் தாண்டி வெளியே சென்று காரில் ஏறிவிட்டான். பையையும் குழந்தையையும் தூக்கிக் கொண்டு அவள் சிரமப்பட்டு நடந்து வருவதை பார்த்த வாட்ச்மேன் கேட்டை பெரிதாகத் திறந்துப் பிடித்தான்.

‘இவனுக்கிருக்க அறிவுக் கூட அதுக்கு இருக்குதாப் பாரு. இத எப்புடித் தொறக்குறதுன்னு தெரியலயே’

அவள் கார் கதவைப் பார்த்தபடி அப்படியே நிற்க அவன் திரும்பியும் பார்க்கவில்லை. வாட்ச்மேன் வந்து திறந்துவிட்டான்.

இத்தனை நடந்த பிறகும் கௌரிக்கு சந்தோஷம் தான். கண்ணாடி வழியே அவள் முகம் பார்த்தான்.

“இப்ப என்னாத்துக்கு இளிச்சிட்டே வர?”

“நா இளிச்சா உனக்கெங்க நோவுது? ரோட்டப் பாத்து ஓட்டுய்யா. எனக்கு அவ்ளோ குஷியா இருக்குது. சிரிக்குறேன். ஒரு மனுசி சிரிக்குறதுப் பொறுக்காதோ?

காலைல நா வந்தப்போ உள்ள விடாம நிப்பாட்டுனான் அந்த கூர்க்கா. இப்போ கார் கதவெல்லாம் தொரந்துவுட்டான் பாத்தியா? ஒரு வணக்கம் மட்டும் வெச்சிருந்தான்… நா அப்புடியே காத்தாப் பறந்திருப்பேன்”

“அது ஒண்ணுதான் கொறச்சல்”

“நீ என்னா வேணா மொனவிக்கோ. இப்போ எங்காதுல எதும் வுழாது. வாழ்க்கைல மொத தடவ காருல போறேன். நீ போயிருக்கியா? நா ஒரு கிறுக்கி… ஒனக்கு இதான வேலையே. தெனம் போவியா இருக்கும்.

கிட்ட நின்னுப் பாத்தது கூடக் கெடயாது. நால்லாம் காருலப் போவேன்னு நெனச்சே பாத்ததில்லத் தெரியுமா? எம்புள்ள பாரு… இப்போவே காருல போறான். பெரிய ஆளா வருவான். என் ராஜா என்னப்பா…

நேத்து ராத்திரித் தெருத் தெருவா சுத்துனப்போ யாராவது எங்கிட்ட வந்து இத சொல்லிருந்தா கல்ல வுட்டு அடிச்சிருப்பேன். சாமி இருக்குதுய்யா. ஒனக்கு சாமி இப்புடி எதுனா செஞ்சிருக்கா?”

“வாய மூடிட்டு வா”

“நீ ஏய்யாப் பேசவே மாட்டுற?”

“…”

“ஒனக்கு என்னா வேணுன்னு ஒனக்கே தெரியலப் போலருக்கு. நீ கேளு. சாமி கொடுக்கும்”

“ஒண்ணுங்கிழிக்காது. எறங்கு. இந்த கடையில காய் வாங்கிக்கோ. கடைசியா வந்து காசு கொடுக்குறேன்”

“ஆமா அதுக்கு மட்டுந்தா ஒன்ன அனுப்பிருக்காக. கதவத் தொறந்துவிடு. எனக்குத் தெரியாது”

பக்கவாட்டில் திரும்பி கதவைத் திறந்தான்.

“புள்ளையப் பாத்துப்பியா? நீ தூக்க வேணாம். இங்கனப் படுக்க வெக்குறேன். வுழாமப் பாத்துக்கோ போதும்”

அவன் பதில் சொல்லவில்லை. சரியென்கிறானா? மாட்டேன் என்கிறானா? சில நொடிகள் அவன் முகத்தைப் பார்த்தும் கண்டறிய முடியாததால் மகனை சீட்டில் கிடத்தி இறங்கிச் சென்றாள். சரியாகப் பார்த்துக் கொள்ளாவிட்டால் அவனைத் திட்ட ஒரு வாய்ப்புக் கிடைக்குமென்ற எண்ணம்.

தானே ராஜா தானே மந்திரி என்பது போல் தானே காய் வாங்கி சமைக்க வேண்டும். பிடித்த காய்களை வாங்கினாள். எதை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டாள். எல்லாம் எடைப் போட்டப் பின் காசு வாங்க வெளியே வந்தாள்.

அவள் இறங்கியபோது உட்கார்ந்திருந்தபடியே திரும்பி உட்கார்ந்திருந்தான். குழந்தையின் கன்னத்தை ஒரு விரலால் வருடிக் கொண்டிருந்தான். லேசாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அதிசயத்தைக் கண்டவள் போல் காரின் அருகில் வந்தாள்.

“ஒனக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா?”

“சீக்கிரம் உக்காரு. பை எங்க?”

“ஓசியிலக் குடுப்பாகப் பாரு. போயி காசு குடுத்துட்டு பையத் தூக்கிட்டு வா”

“காசு குடுப்பேன். பையெல்லாம் தூக்க முடியாது”

சொல்கிறான், செய்ய மாட்டனென்று நினைத்தாள். வெறும் கையோடுக் கடையிலிருந்து திரும்பி வந்தான்.

‘ஏத்தந்தான். பையத் தூக்க மாட்டாராம் மவராசன்’

போய் பில் கவுண்டரின் அருகிலிருந்த பையைத் தூக்கி வந்து காரினுள் உட்கார்ந்தாள்.

“எனக்காக கார் கதவ மட்டும் தொறந்து வெச்சிருக்க? பதில் சொல்ல மாட்டயே”

அவனுடைய மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தவனிடம் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“எல்லாம் உன்னால. வாய மூடு”

கத்தியபடி காரின் வேகத்தைக் கூட்டினான்.

பிடி காடு – 4

வாட்ச்மேன் கேட்டை முழுதாகத் திறக்கும்வரை கூட டிரைவருக்குப் பொறுமை இல்லை. வேகமாக காரை உள்ளே ஏற்றி நிறுத்தி இறங்கி வீட்டினுள் ஓடினான். கடைக்குச் செல்லும் முன் அவன் கதவைத் திறந்தபோது பார்த்து வைத்ததால் இப்போது தானே திறந்து இறங்கினாள் கெளரி.

தோட்டத்து வழியே பின்னால் சென்று மகனைப் படுக்க வைத்து சமையலறையை அடைந்தபோது ஹாலில் முதலாளி கத்துயது கேட்டது.

“நேரத்துக்கு வந்து கூட்டிட்டுப் போக முடியாதுன்னா வீட்டுல டிரைவர் இருந்து என்ன புண்ணியம்? வேற என்ன வேல செஞ்சுக் கிழிக்குற இந்த வீட்டுல? காய் வாங்கப் போனதெல்லாம் ஒரு சாக்கா? ஏன் ராத்திரிப் போய் வாங்குனா என்ன?”

தங்கம் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். பாத்திரங்கள் இடிபடும் ஓசையின்றி பத்திரமாக எடுத்து, தண்ணீர் குழாயை மெதுவாகத் திறந்துவிட்டு, மெல்லத் தேய்த்தபடி ஹாலில் நடக்கும் பேச்சுவார்த்தையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

கௌரிக்கு அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுருக்கென்றிருந்தது. கிளம்பியதிலிருந்து காய் வாங்கி பில் போட்டவரை எதிலும் நேரமாக்கவில்லை. இருப்பினும் எப்படித் தாமதமானது? ராமலிங்கம் தான் அனுப்பி வைத்தார். அவர் ஏதாவது சொல்வாரென்று எதிர்ப்பார்த்தாள். அவர் குரலே கேட்கவில்லை.

“ஏங்கா… மேனேஜர் இல்லையா?”

“இருக்காரு இருக்காரு. அவரும் அங்க தான் இருக்காரு. செத்த சும்மா இரு”

“உங்களுக்கென்ன அவ்ளோ சந்தோஷம்?”

“அது திட்டு வாங்குதுல்ல?”

“நானும் தான் கூடப் போனேன். அப்போ என்னையும் திட்டணும்ல?”

“போ போயிக் கேட்டு வாங்கிக்கோ. எவடி இவ… பாலக் காய்ச்சு”

ஒருவேளை இப்போது அங்கேப் போய் பால் கொடுத்தால் அதை சாக்காக வைத்து அவர்கள் பேச்சுத் தடைப்படலாம். கொஞ்சம் பாலை மட்டும் தனியே எடுத்து ஒரு அடுப்பிலும் மீதமிருந்ததை மற்றொரு அடுப்பிலும் வைத்துக் காய்ச்சினாள். மூன்று காபி கலந்து கப்பில் எடுத்துக் கொண்டு ஓடினாள்.

முதலாளி, முதலாளியம்மா, அவர்கள் மகனுக்கு காபியைக் கொடுத்தாள். டிரைவர் அங்கில்லை. மேனேஜர் அமைதியாக நின்றிருந்தார். ஏனோ காலையில் அவர் மீது ஏற்பட்டிருந்த மரியாதைக் கொஞ்சம் குறைந்திருந்தது. திரும்பி வந்துவிட்டாள். அவருக்கு காபி கலந்து எடுத்துச் செல்வதை வேண்டுமென்றே தாமதமாகச் செய்தாள்.

வாட்ச்மேனுக்கு காபி எடுத்துச் சென்று கொடுத்தாள். கார் நின்றது. அவனைக் காணவில்லை.

“கொடத்துல தண்ணித் தீந்துடுச்சுப் போலருக்கு”

“ஆமா கிச்சன்லேந்து எடுத்துட்டு வரணும். எப்பவும் தங்கம் கொண்டு வரும். மதியானமே சொல்லணும்னு நெனச்சேன். நா பின்னாடி வந்த நேரம் பாத்து சார் வந்துட்டாரு… வாயெல்லாம் காயுது”

“எடுத்தாந்து ஊத்தறேன். அவக எங்க?”

“அவன் போயிட்டான். இப்புடியெல்லாம் ஏசுனா?”

“வேலைய வுட்டா? வரவே மாட்டாகளா?”

“வீட்டுக்குப் போயிருக்கான். காலைல வருவாம்மா. குடிச்சுட்டு தம்ப்ளர கொண்டாறேன். நீ போ. அடுத்து ஒனக்கும் வுழப் போவுது”

‘இங்க தங்குறதில்லப் போலருக்கு. வீடெல்லாம் இருக்கா? திங்க கூட நேரமில்லாம சுத்துறாக. என்னமோ வேலையே செய்யாத மாதிரி இப்புடிப் பேசிப்புட்டாகளே. பாவம். மனசு என்ன பாடு பட்டிருக்கும்? ஏன் வேலைக்கு வெச்ச ஆளுன்னா அம்புட்டு எளக்காரமா?

காய் வாங்கப் போனதெல்லாம் சாக்கான்னுக் கேக்குறாக. அவுக திங்கத் தானே வாங்கப் போச்சு. அதையும் மேனேஜரு சொல்லித் தானப் போச்சு. அவரு என்ன… வாயே தொறக்காம மரம் மாதிரி நிக்குறாரு. நாந்தா அனுப்புனேன்னு ஒரு வாத்த சொன்னா என்னவாம்?

என்னாலதா திட்டு வாங்குச்சோ? இல்லையே. எங்கயும் நா லேட்டு பண்ணலையே. என்னமோ போ. காலையில அது வந்துச்சுன்னா உக்கார வெச்சு சோறு போடணும். அப்பத்தா நிம்மதியாவும்’

அவன் பஸ்ஸில் எங்கோ சென்று கொண்டிருந்தான். எந்த பஸ்ஸில் ஏறினோம் என்று கூட நினைவில்லை. பத்து ரூபாய் நோட்டை நீட்டி கண்டக்டர் கொடுத்த சீட்டை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

செய்யாத தவறுக்குத் திட்டு. பிடிக்கவில்லை. கோபம் வந்தது. முதலாளியிடம் கத்த முடியவில்லை. கோபத்தை அடக்கிப் பழக்கமில்லாதவன். சுற்றி இருப்பவர்களிடம் உடனுக்குடன் கோபத்தைக் காட்டுபவன்.

அவன் அப்படித்தான் என்று முடிவு செய்து ஒதுங்கியவர்கள் பலர். அந்த ஒரு குணத்தைத் தாண்டி அவனிடமும் வேறு நல்ல குணங்கள் உண்டென்று நம்பி அவனுடன் பழகுபவர்கள் சிலர்.

அப்படிப்பட்ட சிலரில் சிலரையாவது சந்திக்க வேண்டுமென்று தோன்றியது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கினான். தான் போக வேண்டிய பேருந்தில் ஏறினான். மனம் லேசாகத் துவங்கியிருந்தது.

கெளரி பொங்கல் கிண்டிக் கொண்டிருந்தாள். தங்கம் அவள் சொந்தத்தில் ஒருவரின் வாழ்க்கை வரலாறை விளக்கிக் கொண்டிருந்தாள். காதில் விழவில்லை. வேறு சிந்தனை. வேறெங்கோ இருந்தாள்.

‘ராத்திரில பொங்கல் திங்குதுங்க பொங்கலு. இட்டிலி தோச திங்க வேண்டியதுதான? இல்ல சோத்தப் போட்டு கொழம்பு ஊத்தித் திங்க வேண்டியது தான? நெய் ஊத்தி பொங்கலு கேக்குது இதுங்களுக்கு. அவ்வளவும் கொழுப்பு. கூடவே காசு கொஞ்சம் இருக்குதுல்ல. அதான் அந்தப் பேச்சுப் பேச சொல்லுது.

முந்திரிப் பருப்பெல்லாம் சின்ன வயசுல ஆத்தா குடுக்கும். அதும் அப்பனுக்குத் தெரியாம. அப்பத்தா தீவாளி பொங்கலுக்கு எப்புடியாவது வாங்கியாந்துடும்.

இனி அதையெல்லாம் பாப்பேனோ மாட்டேனோ. என்ன பண்ணிக்கிட்டு இருக்குதோ. கஞ்சி வெச்சுக் குடிச்சுட்டிருக்கும். இல்ல பக்கத்து வீட்டு அலமேலு அக்கா கூட மல்லுக்கு நிக்கும். அதுக்கு வேற என்ன வேல. பேரனப் பாக்காமத் தவிச்சிருக்கும்’

“பொங்கல் ஆயிடுச்சுன்னா சாப்பிடக் கூப்பிடவா?”

“ம்ம்… ஆயிடுச்சுக்கா. கூப்பிடுங்க. நீங்களே சாப்ப்பாடுப் போடுறீகளா?”

“நீ என்ன பண்ணப் போற?”

“நாளைக்கு சமையலுக்குக் கொஞ்சம் காய் அறிஞ்சு வெச்சிடுறேன். பிரிட்ஜு இருக்குதுல்ல. அதுல வெச்சுடலாம். புள்ளைக்கும் பசியாத்தணும்”

சொன்னக் காரணங்கள் பொய்யில்லை என்றாலும் அவற்றை இப்போதே செய்தாக வேண்டிய கட்டாயமில்லை. தெரியும். இருப்பினும் இன்று தன் கையால் பரிமாற விருப்பமில்லை.

“வாப்பா செந்திலு. எங்க ஆளையே பாக்க முடியற்தில்ல”

“வேல”

அவன் ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னதால் கேள்விக் கேட்டவரின் முகம் வாடிவிடவில்லை. ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தான். கேள்விக் கேட்டவரின் ஆட்டோவினுள் அமர்ந்தான்.

“என்னாப்பா? பிரச்சனையா?”

“சேகர் சவாரிப் போறியா?”

செந்திலை விட்டுவிட்டு சவாரிக்கு போக அவனிடம் கேள்விக் கேட்ட சேகருக்கு மனம் வரவில்லை.

“இல்லபா நீயே போ. நீ சொல்லு செந்திலு. என்னாச்சு?”

“ஏன் சேகரண்ணே… ஒரு செகனாண்டு காரு வெலைக்கு வருதுன்னு சொன்னீங்களே… என்ன வெல இருக்கும்?”

“என்னாபா திடீருன்னு? நானும் மூணு வருஷமா காசு சேத்து வெய்யி கார் வாங்குன்னு சொல்லிட்டு தான் இருக்கேன். பாக்கலாம் பாக்கலாம்னு எல்லா துட்டையும் தூக்கி ஒன் மாமங்காரன் கையிலயே குடுத்த. இப்போ என்னா அந்தாளுப் பிரச்சனப் பண்ணுறாரா? சொல்லுப் பாத்துக்கலாம்”

“மாமா நல்லவருண்ணே. அத்தைக்குத் தெரியாம எனக்கு எவ்வுளவோ செஞ்சிருக்காரு. எல்லா காசையும் ஒண்ணுந்தூக்கி குடுக்கல. சேத்து வெச்சிருக்கேன். வேல புடிச்சமாரி இல்லண்ணே”

“இத்தினி வருஷமா அந்தூட்டுல தான வேலைக்குப் போற? இன்னைக்கு என்ன?”

“நம்மனாலலாம் சும்மா தேவயில்லாம திட்டு வாங்க முடியாது. தப்பு நம்மப் பேருல இருந்தா கம்முன்னு வரலாம். எதுத்துக் கேள்விக் கேக்க முடிலண்ணே. அப்புடியும் செல சமயத்துல பேசி விட்டுடுறேன். இருந்தாலும்… செட் ஆவாதுண்ணே”

“அதுக்கென்ன செந்திலு. காரு ரேட் விசாரிச்சு சொல்லுறேன். தெரிஞ்ச எடம். கம்மிப் பண்ணிக் கேப்போம். எதுனா கேப் சர்வீஸ்ல ஓட்டு. கையிலக் கொஞ்சம் காசு சேந்ததும் சொந்தமா ட்ராவல்ஸ் ஆரம்பி”

“சொந்தமா எதாதுப் பண்ணணும்ணே. கேட்டு சொல்லுங்க. காருக்கான காசு மட்டும் எங்கையில இருந்தா அன்னைக்கே வேலைய வுட்டுடுவேன்”

“ம்ம் இது ஒனக்குப் பழகுன எடம். இங்கயே கொஞ்ச நாளு பல்லக் கடிச்சுட்டு இருந்துட்டு வெளில வந்துடு. புதுசா ஒரு எடம் போயி… அதெல்லாம் வாணாம்”

“கெளம்புறேன்”

“வா நானே வுட்டுடுறேன்”

செந்தில் அப்போதே கையிருப்பைக் கணக்குப் போட துவங்கிருந்தான். எப்படியும் சொந்த கார் வாங்கிவிடலாமென்ற நம்பிக்கையில் இருந்தான்.

கௌரிக்கு உறக்கம் கண்களைச் சொருகியது. முதல் நாள் இரவு தூக்கமில்லை. மதியமும் தூக்கம் கெட்டது. மகன் சினுங்கும்போதெல்லாம் விழிப்புத் தட்டியது. கண்களை முழுதாகத் திறக்க முடியவில்லை. விடிந்ததும் தங்கம் எழுப்பினாள்.

எழுந்தது முதல் இன்று ஒன்றும் புதிதாக நிகழவில்லை. நேற்றைய நாளை திரும்ப வாழ்வது போன்ற பிரம்மை. சாப்பாடுப் பரிமாறும் வரை அப்படித்தானிருந்தது.

எஜமானியம்மாவைக் காணவில்லை. சிறிது நேரம் கழித்து அவசரமாக டைனிங் ஹாலிற்கு ஓடி வந்தார். கணவரிடம் ஏதோ கூறினார். எஜமானர் பாதி சாப்பாட்டில் கையைக் கூடக் கழுவாமல் அவர் பின்னே ஓடினார். பின் அவர் வந்து மகன் காதில் குசுகுசுத்தார். மகனும் தந்தையைப் போலவே எழுந்து ஓடினான்.

கௌரிக்கு ஒன்றும் புரியவில்லை. தங்கத்தைக் கேட்கலாமென்றால் அவள் தோட்டத்தில் துணித் துவைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் திரும்பி வந்தால் பரிமாற வேண்டுமென்பதால் அங்கேயே நின்றாள். காத்திருந்தாள். வந்தார்கள். கை கழுவினார்கள்.

“ராத்திரி எங்கப் படுத்திருந்த?”

“சமயக்கட்டுக்குப் பின்னாடி… பையெல்லாம் வெச்சிருக்கே அங்க. ஏம்மா?”

“தனியாவா?”

“தங்கமக்கா கூடப் படுத்திருந்தாக. கொழந்த…”

“தங்கம்….”

கத்தினார். தங்கம் ஓடி வந்தாள். சாப்பிடாமல் நின்று கொண்டிருக்கும் எல்லோரையும் விநோதமாகப் பார்த்தாள். சப்தம் கேட்டு வாட்ச்மேனும் பின்னால் ஓடி வந்தான்.

“வாட்ச்மேன்… நைட் முழிச்சு தான இருந்த? யாராவது உள்ள வந்தாங்களா?”

“இல்ல மேடம்”

“தங்கம்…. ராத்திரி இவ ஒங்கூட தான் தூங்கினாளா?”

“ஆமாம்மா”

“நடுவுல எந்திரிச்சுப் போனாளா?”

“தெரிலங்கம்மா. நல்லாத் தூங்கிட்டேன்”

“என்னம்மா ஆச்சு? எதுக்கு இதெல்லாம் கேக்குறீக?’

“உன் பைய எடுத்துட்டு வா”

“எதுக்கும்மா?”

“இரு நானே வந்து பாக்குறேன்”

வேகமாகப் பின்னால் சென்று அவளுடைய பை எதுவென்று தங்கத்திடம் கேட்டு அதிலிருந்த துணிகளையெல்லாம் எடுத்து உதறி வெளியே போட்டார். எல்லா ஜிப்பையும் திறந்துப் பார்த்தார். கீழே விழுந்த துணிகளையெல்லாம் பொருக்கி எடுத்தாள் கெளரி.

அடுத்து அவர் குழந்தையைத் தூக்கி உதறிப் பார்க்கத் துணியைக் கீழே போட்டு “அம்மாம்மா என்ன பண்ணுறீக?? புள்ளம்மா” என்றளறி அவர் கையிலிருந்து மகனை வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

“நகைய என்ன பண்ண?”

“எந்த நக?”

எரிச்சலில் அம்மாவெல்லாம் காணாமல் போயிருந்தது.

“அதான் நீ எடுத்தியே முப்பது பவுன் நக. எங்க வெச்சிருக்க?”

இல்லாததை எங்கேயென்று சொல்வது? எடுத்தாயா என்று கேட்கவில்லை. விசாரனையில்லை. முடிவு செய்துவிட்டார்கள். பேச்சு வரவில்லை.

“என்ன முழிக்குற? சொல்லலன்னா போலீஸ கூப்பிடுவேன். கம்பியெண்ணுறியா? ராமலிங்கத்தக் கூப்பிடுங்க. ஆள் யாருன்னு ஒழுங்கா ஒண்ணும் விசாரிக்காம… ராமலிங்கம்…”

ராமலிங்கம் எங்கிருந்தோ ஓடி வந்தார்.

“யாரு சொன்ன ஆளு இது?”

“என்னாச்சு மேடம்?”

“நகையக் காணும். வெரட்டி விடுங்க முதல்ல. இனி நானே பாத்து வேலைக்கு சேத்துக்குறேன். எங்கன்னுக் கேளுங்க”

“நா எடுக்கல”

“எத்தன தடவக் கேட்டாலும் இதையே தான் சொல்லும். இந்நேரம் கை மாறியிருக்காது? நக கெடைக்கப் போறதில்ல. என் கண்ணு முன்னாடி நிக்கக் கூடாது. போக சொல்லுங்க”

“நா எடுக்கல”

“சும்மா சொன்னதையே சொல்லாத பரதேசி நாயே”

“ஆமா நா பரதேசி தான். கையில சல்லிக் காசு இல்லதான். அதுக்காக ஒங்க நகைய எடுத்துப் பொழைக்கணும்னு எனக்கு எந்த அவசியமுமில்ல. காசில்லாதவகன்னா அவ்வுளோ கேவலமாப் போச்சா? புள்ளையப் போட்டு அப்புடி உலுக்குறீக? மனசாட்சி இல்ல? சந்தேகம்னு வந்துடுச்சில்ல… இனி நா இங்க நிக்க மாட்டேன். உங்க நகையத் தூக்கிட்டு ஒண்ணும் ஓடல. மானங்கெட்டு இங்க நிக்க இஸ்டமில்லாமத் தான் போறேன். சம்பளம் குடுத்தா என்னா வேணாப் பேசுறதா?”

துணியையெல்லாம் அள்ளி பையில் திணித்தாள். மகனை ஒரு இடுப்பிலும் பையை ஒரு இடுப்பிலும் சுமந்துத் திரும்பியும் பாராமல் வெளியே வந்தாள். ஏதேதோ பேசினார்கள். எதுவும் காதில் விழவில்லை. செருப்பை மாட்டி வாசலை நோக்கி நடந்தாள். கேட்டை திறந்து வெளியே வந்து அறைந்து மூடிவிட்டுத் தெருவில் நடந்தாள். கொஞ்ச தூரம். ‘அடுத்து என்ன?’

தெருவோரத்தில் மின் கம்பத்தில் சாய்ந்து அப்படியே உட்கார்ந்தாள். ‘ரோட்டுல மட்டும் நிக்க வுடாதன்னுக் கெஞ்சுனனே… ஏஞ்சாமிக் கேக்கல? கேட்டாக் குடுப்பன்னு எப்பவும் சொல்லுவனே…’ கண்களில் கண்ணீர் வடிந்தது.

‘ஒண்ணுங்கிழிக்காதுன்னு நேத்து அவக சொன்னாக. நாந்தான் நம்பி ஏமாந்துட்டேன் போல’ அவள் தலையில் கை வைத்து அழ அதை சொன்னவன் அவளை இரண்டு நொடி நின்றுப் பார்த்துவிட்டு வேலைக்குப் போனான்.

பிடி காடு – 5

இப்போது வாட்ச்மேனிற்கு கேட்டில் காவல் இருக்கப் பிடிக்கவில்லை. காலையில் சப்தம் கேட்டு யாரும் கூப்பிடாமலேயே உள்ளே போனான். கேட்டக் கேள்விக்குப் பதில் சொன்னான். வேறொன்றும் செய்ய முடியாதவனாய் அமைதியாக வேடிக்கைப் பார்த்தான். கௌரி வீட்டை விட்டு வெளியே போனபோது பின்னாலேயே போனான். தெருவில் இறங்கி அவள் நடப்பதைப் பார்த்தான். திரும்பி வந்து கேட்டருகில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்துவிட்டான். செந்திலை காணும் வரை எந்த உணர்ச்சியையும் காட்டத் தோன்றவில்லை.

“வந்துட்டியா? ஒன்னத்தான் நெனச்சேன்”

“ஏன்?”

“உள்ள ஒரே ரகளயாயிடுச்சுப்பா”

“வீட்டுக்கு வீடு வாசப்படி. இதயெல்லாம் நம்ம கண்டுக்கக் கூடாது. வேலையப் பாரு”

“என்ன இப்படி சொல்லிட்டு நீ பாட்டுக்கு உள்ளப் போற? நீ எந்தப் பிரச்சனயிலயும் தலையிட மாட்டன்னு எனக்கும் தெரியும். இருந்தாலும் பாவம்பா அந்தப் பொண்ணு”

வாட்ச்மேன் சொன்ன விஷயம் குறித்து எந்த விசாரணையுமின்றி உள்ளே போக நினைத்திருந்தவன் மெதுவாக அவனிடமே திரும்பி வந்தான்.

“எந்தப் பொண்ணு?”

“நேத்து புதுசா வேலைக்கு வந்துதுல்ல? கொழந்தைய வேற வெச்சுக்கிட்டு… ம்ம்ச்ச்… பாக்கவே சகிக்கல”

“என்னாச்சு?”

“ஏதோ நகையக் காணோம்னு வீட்டம்மா காலையில ஒரே கூப்பாடு. தங்கத்த விசாரிச்சுது. என்னையும் கேட்டுச்சு. கௌரி தான் எடுத்துடுச்சுன்னு முடிவுப் பண்ணி திட்ட ஆரம்பிச்சுடுச்சு”

“ம்ம்”

“ரோஷக்காரி. ‘நீங்க என்ன வெளியப் போவ சொல்லுறது? உங்க வேலையும் வாணாம் ஒண்ணும் வாணா’ன்னுட்டு புள்ளையத் தூக்கிட்டுக் கெளம்பிடுச்சு”

“வந்த ரெண்டாவது நாளே அப்படி என்ன சந்தேகம்? அப்பறம் எதுக்கு வேலைக்கு சேக்குறாங்க?”

“இதே கடுப்புதா எனக்கும்”

“அந்த தங்கத்துக்கூட தான இருந்துச்சு? அதுக்குத் தெரியாதா?”

“நா தூங்கிட்டேன் எனக்கொண்ணும் தெரியாதுன்னு சொல்லிடுச்சு. அதுக்கு மேல நீ என்னத்தப் போய் கேக்க முடியும்?”

“அந்தப் பொண்ணு எங்கப் போவுது?”

“தெரியலயே…”

“சரி நா உள்ளப் போறேன்”

“ம்ம் போ. அப்பறம் லேட் ஆயிடுச்சுன்னு அதுக்கும் ஏதாவது சொல்லுவாங்க. நேத்து உன்னத் தேவையில்லாமத் திட்டுனாங்க. இன்னைக்கு இந்தப் பொண்ணு. எனக்கு என்னைக்கு விதிச்சிருக்கோ”

உள்ளே கனன்று கொண்டிருந்த கோபக் கனலை நேற்றைய நினைவுகள் மேலும் ஊதிப் பெரிதாக்க வீட்டினுள் நுழைந்தான்.

“…ஊருப் பேரு தெரியாதவங்கள எல்லாம் சேர்த்து வெச்சுக்கிட்டு… தோ வராரு டிரைவரு. வர நேரத்தப் பாத்தீங்கல்ல?”

வீட்டம்மாவின் கத்தல் இன்னும் அடங்கியிருக்கவில்லை. செந்திலை கண்டதும் அவர் அவனையும் விட்டு வைக்கவில்லை. அம்மா சொல்லி அதை ஐயா கேட்காமலிருப்பதா? தன் பங்கிற்கு அவரும் பேசினார்.

“உங்களுக்கெல்லாம் அப்படி என்னதான் முக்கியமான வேல இருக்குமோ தெரியல. நாங்க கூட இவ்வளவு பிஸியா இருக்க மாட்டோம் போலருக்கு. சார் எப்படி… போய் வண்டிய எடுக்குறீங்களா?”

“இல்ல சார்”

“என்ன இல்ல?”

“இன்னையோட வேலய விட்டு நின்னுக்குறேன். சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன். இத சொல்லுறதுக்கு கரெக்ட் டைமுக்கு வரணும்னு அவசியம் இல்லையே”

“போங்க. ராமலிங்கம் கணக்கெல்லாம் பாத்து முடிச்சு விட்டுடுங்க”

வீட்டம்மாவிற்கு இவன் போனால் வேறொரு டிரைவர் என்ற எண்ணம். வருத்தமெல்லாம் இல்லை. போனால் போகட்டுமென்று நினைத்தார். ராமலிங்கத்திற்கு இனி அடுத்த டிரைவரை தேட வேண்டுமே என்ற கவலை.

ஐயாவிற்கு பேச்சு வரவில்லை. சரியான நேரத்திற்கு வேலைக்கு வந்து, போக வேண்டிய இடத்திற்கெல்லாம் மிகச் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து, எத்தனை தாமதமானாலும் பொறுமையாகக் காத்திருந்து, முக்கியமாக வாயே திறக்காத டிரைவரை இனி எங்கே சென்று கண்டுப்பிடிக்க?

அடுத்த அரை மணி நேரத்தில் செந்திலுக்கு அந்த வீட்டிலிருந்து விடுதலை. அவன் உள்ளே சென்று வெகு நேரமாகியும் ஏன் இன்னும் வந்து காரை எடுக்கவில்லையென்று யோசித்துக் கொண்டிருந்தான் வாட்ச்மேன். அவன் தலை கண்டதும் எழுந்து வேகமாக கேட்டை திறந்துவிட்டான். நடந்து வருபவனைப் பார்த்து ஒன்றும் புரியவில்லை.

“கார் எடுக்கல?”

“வேலைய விட்டுட்டேன். வரேன்”

சந்தோஷமாகச் சொல்கிறானா? கோபமா? வந்தபோது இப்படியொரு எண்ணமிருப்பதாகச் சொல்லவில்லையே. எவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி இவ்வளவு சுருங்க, இவ்வளவு சாதரணமாகச் சொல்லிச் செல்கிறான்?

வாட்ச்மேன் கேட்டக் கேள்விக்கு இன்னும் விரிவாக நின்று பதில் சொல்லியிருக்க வேண்டுமோ என்று முதலில் யோசித்தான் செந்தில். அந்த வீட்டில் நிற்கவே பிடிக்கவில்லை. வேகமாக அங்கிருந்து வந்ததே சரியென்றுப்பட்டது.

விடுவிடுவென்று நடந்தவனின் கால்கள் கௌரி உட்கார்ந்திருந்த இடத்தில் தாமதித்ததன. தாமாக அல்ல. குழந்தையின் அலறல் காதைக் கிழித்தது. சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள். எடுபடவில்லை.

தெருவில் நின்று வேடிக்கைப் பார்ப்பதெல்லாம் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்காத விஷயம். அவ்விடம் விட்டு நகர்ந்தான். பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான். வந்த பேருந்தில் ஏறத்தான் முடியவில்லை.

திரும்பிச் சென்று அவளைப் பார்க்க வேண்டும். குழந்தை இவ்வளவு அழும் வரை என்ன செய்து கொண்டிருந்தாள்? இங்கேயே ஏன் உட்கார்ந்திருக்கிறாள்? வேறு எங்காவது போக வேண்டியது தானே? போவதற்கு இடமே இல்லையோ?

மனம் அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்ப பல நிமிடங்கள் அவற்றை புறக்கணிக்க முயன்று தோற்றான்.

அவளிடமே கேட்டால் என்ன? இது அவசியமா? சம்பந்தமில்லாத விஷயம். தேவையில்லாத வேலை.

நிறையக் கேள்விகள். சப்பைக்கட்டு பதில்கள். எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திரும்பி நடந்தான்.

இவ்வளவு நேரமும் எத்தனையோ கேள்விகள் கேட்ட மனது அவளருகில் போகப் போக ஊமையாகிப் போனது.

செந்திலை பார்த்ததும் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அழுதாள் கௌரி. என்னென்னவோ சொல்ல நினைத்தாள். அழுகை இன்னும் பெரிதானது. அவளது அழுகை அவனது யோசிக்கும் திறனை இன்னும் மழுங்கடித்தது. அது அவனுக்கே பிடிக்கவில்லை.

“எதுக்கு அழுதுத் தொலைக்குற?”

இப்படியொரு கேள்வியை அவள் எதிர்ப்பர்த்திருக்கவில்லை. ஆறுதல் தேடி அலைந்த மனதிற்கு இந்த எரிச்சல் கூட இதம் தந்தது. ஒரே நொடியில் அழுகை நின்றது. புறங்கையால் கண்களைத் துடைத்தாள். குழந்தையின் அழுகைக் கூட நின்றுவிட்டிருந்தது.

கேட்பதற்கு எத்தனையோ கேள்விகள் இருந்தும் இதையாக் கேட்க வேண்டும்? அதையும் இப்படியாக் கேட்க வேண்டுமென்று நொந்தான் செந்தில். குழந்தை வெறித்து வெறித்து அவனைப் பார்த்தது.

“ரோட்டுல ஏன் உக்காந்திருக்க? வேற எங்கயாவது…”

“போறதுக்கு எடமிருந்தா ரோட்டுல யாராவது உக்காந்திருப்பாகளா?”

“உன் வீடு எங்கருக்கு?”

“வீடெல்லாம் இல்ல”

“இப்போ என்ன பண்ணப் போற?”

“என்ன பண்ணுறதுன்னு தெரியாமதான அழுதுட்ருந்தே”

“பதிலுக்கு பதில் பேச மட்டும் முடியுது. இந்த ஊருல உனக்குத் தெரிஞ்சவங்க யாருமில்லையா?”

“எதுக்குக் கத்துற? இந்த நிமிஷம் எம்முன்னாடி நிக்குற உன்னைய மட்டுந்தான் எனக்குத் தெரியும்”

“அப்போ வா எங்கூட”

என்ன சொல்லிவிட்டோம்? எதற்காகச் சொன்னோம்? சொன்னதைத் திரும்பப் பெற முடியுமா? செந்தில் குழம்பினான்.

கூட வரச் சொல்கிறானா? எங்கே? இதைச் சொல்லும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? போக வேண்டுமா? இவன் யாரென்றே தெரியாதே. இவனையும் விட்டால் வேறு கதி உண்டா? மீண்டும் இரவு முழுவதும் தெருவில் சுற்ற முடியுமா? எத்தனை நாட்களுக்கு? இவன் நல்லவன் என்று மட்டும் மனம் நம்புகிறதே… எப்படி?

“ஒங்கூட எதுக்கு வரணும்?”

அவள் முடியாதென்று மறுத்துவிட்டால் தேவலையென்று நினைத்தவனுக்கு ஏனோ அவளது இந்தக் கேள்வி நிம்மதியையே தந்தது.

“வேற யாருகூடப் போவ?”

சட்டென்று எழுந்து நின்றாள். பையைத் தூக்கி இடுப்பில் வைத்தாள்.

“கூப்பிட்டவகக் கூடவெல்லாம் போறவ நாங்கெடையாது. ஒன்ன நம்புறேன். இப்போதைக்கு நிக்குறதுக்குக் கூட நெரந்திரமான எடம் இல்ல. ஒனக்குப் புண்ணியமாப் போகும். கூட்டிட்டுப் போ”

அவள் உறுதி அவனுக்குத் தெம்பைத் தந்தது. முடிவெடுத்த பின் பேசவில்லையென்றாலும் பேசியது தவறில்லையென்று முடிவு செய்தான். முன்னே நடந்தான்.

தெளிவாகப் பேசிவிட்டாலும் கௌரிக்கு மனதிற்குள் ஏகப்பட்ட குழப்பம். எங்கே செல்கிறோம்? இனி என்ன செய்யப் போகிறோம்?

பேருந்துகளில் ஏறியது, இறங்கியது, இறங்கிய இடங்கள் எதுவும் அவள் மனதில் பதியவில்லை. அவனைப் பின் தொடர்வதை மட்டுமே அவள் செய்தாள்.

எதோவொரு தெருவிற்குள் நடந்து கொண்டிருந்தான். பேருந்தில் அவளருகில் உட்காரவில்லை. எந்த இடத்திலும் அவள் நடக்க சிரமப்படுவாளோ என்று கவலைப்படவில்லை. பையையோ குழந்தையையோ தூக்க நினைக்கவில்லை. பின்னால் வருகிறாளா என்று அவ்வபோது திரும்பிப் பார்த்ததோடு சரி.

ஒரு வீட்டின் முன் நின்றிருந்தார்கள். உள்ளே செல்லாமல் யோசனையில் இருந்தான். தெருவில் சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“யாரு வீடு?”

“உள்ள வா”

கேட்டைத் திறந்து பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான்.

“ஒன் வீடா?”

“ம்ம்”

“அப்பறம் எதுக்குத் தெருவுல நின்னு அவ்வளவு நேரம் யோசிச்ச?”

“இங்க பாரு… ரோட்டுல விட்டுட்டு அப்படியே வரதுக்கு மனசு வரல. ஏதோ ஒரு வேகத்துலக் கூட்டிட்டு வந்துட்டேன். இன்னொருத்தர் வீட்டுல ஒன்னக் கொண்டு போய் தங்க வெக்குற அளவுக்கு… அப்படியெல்லாம் நா யார்கிட்டயும் போய் ஒதவி கேட்டதில்ல. அடுத்து என்ன? இதெல்லாம் சரி வருமா? எதுவும் புரியல”

“நா போயிடுறேன்யா. விட்டுரு. என்னாத்துக்கு என்னால ஒனக்கு கஷ்டம்?”

“விடுறதா இருந்தா வேலையத் தூக்கியெரிஞ்சோமா வீட்டுக்கு வந்தோமான்னு ஒன்ன அங்கயே விட்டுட்டு வந்திருப்பேன்”

“வேலைய விட்டியா?”

“ம்ம்”

“ஏன்? வேலையும் இல்லாம என்னைய வேற வெச்சுக்கிட்டு… நா போறேன்யா”

“பையக் கீழ வை. எங்கூட இங்க தங்க வெக்க முடியாது. சைட் போர்ஷன் காலியாதான் இருக்கு. மாமா தான் ஓனர். பேசிக் கேட்டுப் பாக்குறேன். ஒத்துக்கிட்டா இப்போவே அட்வான்ஸ் குடுத்துடலாம். வாடகை கொஞ்ச கொஞ்சமா சீக்கிரம் குடுத்துடுறேன்னு சொல்லிப் பாக்குறேன். புள்ள ஏன் அழுதுட்டே இருக்கு?”

“பால் வேணும். இருக்கா?”

“வாங்கிட்டு வரேன்”

“மாமா வீடுன்னு சொல்லுற? சொந்த மாமாவா?”

“ம்ம்”

“அப்பறம் எதுக்கு அட்வான்ஸ் வாடகை…”

“ஓசில குடியிருக்க சொல்லுறியா?”

“அப்படியில்ல அ…”

அவன் சென்றுவிட்டான். எதையும் கேட்கும் பொறுமை இல்லை.

ஹாலை சுற்றிப் பார்த்தாள். பொருட்கள் அதிகமில்லை. இருந்த கொஞ்சமும் சிதறிக் கிடந்தன. ஒரு சிறிய சமையலறை. சிறிய படுக்கையறை. அவ்வளவு தான் வீடு. அவன் பால் வாங்கி வந்தால் காய்ச்ச பாத்திரம் தேடி எடுத்தாள். தண்ணீர் குடத்தைப் பார்த்ததும் தாகமெடுத்தது. இரண்டு சொம்பு குடித்தாள்.

கடையிலிருந்து வந்தவன் பால் பாக்கெட்டை அவளிடம் கொடுத்துவிட்டு படுக்கையறைக்குள் போனான். ஓரத்தில் வைத்திருந்த பெட்டியைத் திறந்து அடியிலிருந்து பணத்தை எடுத்தான். சொந்த கார் வாங்குவதற்காக அவன் சேர்த்து வைத்திருந்த பணம்.

பிடி காடு – 6

செந்தில் அவனுடைய மாமா பரசுராமனின் வீட்டுப் பக்கமே போகாதவன் கிடையாது. அவர் குடும்பத்துடன் ஒட்டி உறவாட மாட்டான். முக்கியமாக எந்தச் சூழ்நிலையிலும் அவரிடம் உதவிக் கேட்க மாட்டான்.

கால்கள் வேகமாக நகர மறுத்தன. மனம் பூவா தலையா விளையாடியது. கேட்டே ஆக வேண்டிய கட்டாயம் என்றும் கௌரி சொன்னது போல் அவளை அனுப்பிவிடுவதே நல்லது என்றும் குழம்பியது.

அவருடைய வீட்டிற்குள் நுழையும்போது கூட வேறு விஷயம் எதையாவது பேசிவிட்டு எழுந்து வந்துவிடலாமா என்று யோசித்தான்.

“என்ன வேணும் செந்திலு? சொல்லுப் பண்ணுறேன்”

எடுத்தவுடன் பரசுராமன் இப்படிக் கேட்பார் என்று அவன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

“சும்மா பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்”

“ஏம்பா? நீ ஏதாவது கேட்டு நா பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கனா? ஒம்மொகத்துலயே தெரியுது. எப்ப எங்கிட்ட ஒதவி கேக்கணும்னாலும் இப்படி சங்கடப்படுற. என்ன வேணும் கேளு செந்திலு”

“ஒதவியான்னுத் தெரியல. நா இப்போ இருக்குற வீட்டோட சைட் போர்ஷன் வாடகைக்கு வேணும்”

“ஒனக்கா? ஒண்டி ஆளுக்கு எதுக்கு ரெண்டு வீடு?”

“எனக்கில்ல. தெரிஞ்சப் பொண்ணுக்கு”

“சரி. குடுத்துடலாம். அந்தப் பொண்ணு வீட்டுலேந்து யார்னா வந்து பேச சொல்லு”

“யாரும் இல்ல. அதனாலதா நா வந்தேன்”

சில நொடிகள் அமைதியாக இருந்தவர் “சாவி இப்போவே குடுத்துடவா?” என்றார்.

“ம்ம். அட்வான்ஸ் எடுத்துட்டு வந்திருக்கேன். நா இருக்க போர்ஷனுக்கு எவ்வளோ குடுத்தேனோ அதே அந்த போர்ஷனுக்கும் தரேன்”

“அது சைட் போர்ஷன் தான? அதுக்கு அவ்வளவு…”

“இல்ல நா தரேன். சாவி குடுங்க”

பரசுராமன் அறைக்குள் போக குக்கரின் சப்தம் கேட்டது. அவனது அத்தை சமைக்கிறாராய் இருக்கும். வெளியே எட்டிக்கூடப் பார்க்கவில்லை. மாமா நீட்டிய சாவியை வாங்கிக் கொண்டான்.

“பசங்க எங்க?”

“பாஸ்கர் கடையத் தொறக்க போயிட்டான். கண்மணி காலேஜ் போயிருக்கு”

“வரேன்”

“ம்ம்”

வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டு கேட்டை திறந்தான்.

“அந்தப் பொண்ணு பேரென்ன?”

“கௌரி”

“நா சாயங்காலமா வீட்டுக்கு வரேன்”

“வாங்க”

அவருக்கு அவனிடம் கேட்க நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவனைக் கேள்விக் கேட்டுப் பழக்கமில்லாதவர் நேரில் சென்று கௌரியையே கேட்டுத் தெரிந்து கொள்ள நினைத்தார். அது அவனுக்கும் தெரியும்.

அவரிடம் சொல்வதற்கு அவனிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. தன் வாழ்வில் நடக்கும் எதையும் செய்தியாக ஒரு வரியில் சொல்லி முடித்துக் கொள்வானே தவிர முழுதாகப் பகிர்ந்து பழக்கம் இல்லாதவன்.

கௌரியிடம் அவர் என்ன கேட்பாரென்று தெரியாது. இதுவரை அவனுடைய நட்பு வட்டத்திலிருக்கும் யாரையும் செந்தில் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது கிடையாது. சேகரை அவருக்கு நன்றாகத் தெரியும். மாமா சொல்லிதான் சேகர் அவனிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தாரோ என்று கூட அவன் சந்தேகப்பட்டதுண்டு. அவனுக்கு அவரைப் பிடித்துப் போனதால் நட்பை இன்றுவரைத் தொடர்கிறான்.

அவன் வீட்டை அடைந்திருந்தான். குழந்தையின் அழுகை சத்தம் கேட்காதது நிம்மதியாய் இருந்தது. ஹாலில் தரையில் கிடத்தியிருந்தாள். அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.

“வீட்டுக்குள்ள யாரு வரான்னெல்லாம் பாக்க மாட்டியா? நீ பாட்டுக்கு கிச்சன்ல நின்னுட்ருக்க?”

“கேட் தொறக்குற சத்தம் கேட்டதும் எட்டிப் பாத்தனே. நீதான்னதும் உள்ள வந்துட்டேன்”

“இங்க என்ன பண்ணுற?”

“பால் வாங்கியாந்துக் குடுத்தியே… காய்ச்சி புள்ளைக்குக் குடுத்தேன். உனக்கு ஒரு காப்பி போடலாம்னா காபி தூள் எங்கருக்குன்னு தெரில. டீ போடலாம்னா டீ தூள் இருக்க மாதிரித் தெரில. பாலாவது ஆத்திக் குடுக்கலாம்னா சக்கரையும் காணல. அதா தேடிட்ருந்தேன்”

“சக்கர போன வாரம் தீந்துடுச்சு. டீ தூளு காபி தூளெல்லாம் தேவன்னா சின்ன பாக்கெட் வாங்கிப்பேன். எனக்கு எதுவும் வேண்டாம். வேலைக்குப் போறப்போ வழியில…”

“…”

“வேலைக்கும் போகப் போறதில்லல்ல… மறந்துட்டேன்”

“எதுக்குய்யா வேலைய வுட்ட?”

“புடிக்கல”

“புடிக்காத வேலையில ஏன்யா சேந்த? புடிக்கலன்றதுக்காக வேலைய வுட்டா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ?”

“ம்ம்ச்ச்…”

“சரி நா எதுவும் கேக்கல. காலைல எப்போ சாப்பிட்டியோ? என்ன சாப்பிட்டியோ? பசிக்கலையா?”

“இல்ல. நீ சாப்பிட்டியா?”

“கலந்து வெச்ச காபி தண்ணியக் கூட குடிக்க வுடாம அந்தம்மா சத்தம் போட்டு…”

“சரி நா போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்”

“நானே சமைக்குறேனே”

“அதெல்லா சரி வராது”

“அடுத்த வேலத் தேடுற வரைக்கும் சம்பளமும் கெடயாது. கையில இருந்த காசையும் தூக்கி எனக்காக வீட்டுக்கு குடுத்துட்ட. கொஞ்சமா அரிசி, காய் மத்த சாமானெல்லாம் வாங்கிக் குடு. நா செஞ்சுத் தரேன்”

“காசெல்லாம் இருக்கு”

“எனக்காக நெறைய செய்யுறய்யா. ஒடனே திருப்பித் தரதுக்கு எங்கையிலக் காசு கெடயாது. என்னால முடிஞ்சுது… சமச்சாவது தரனே”

“அதுக்கு எதுக்கு அழுதுத் தொலைக்குற?”

“நீயும் இல்லைன்னா இந்நேரம் நடுத்தெருவுல நின்னிருப்பேன். புள்ளையையும் வெச்சுக்கிட்டு…”

“சரி சமச்சு தா”

“பெரிய மனசுய்யா ஒனக்கு…”

“கடைக்குப் போயிட்டு வரேன். கதவ சாத்திக்கோ”

“யாரு இப்படி ஒதவி பண்ணுவா…”

செந்தில் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை. கௌரியால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்படியே சுவரில் சாய்ந்தமர்ந்து அழுதுத் தீர்த்தாள். அவன் திரும்பி வந்தபோது அவள் விசும்பிக் கொண்டிருக்க முறைத்தான். முந்தானையால் கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து நின்றாள்.

“எம்முன்னாடி அழாத. அழறது எனக்குப் புடிக்காது. மூஞ்சிய கழுவிட்டு வந்து சமைக்க ஆரம்பி”

“ம்ம்… பாத்ரூம்?”

“ரூமுள்ள இருக்கு”

கையிலிருந்த பைகளை சமையலறையுள் வைத்து ஹாலில் குழந்தை அருகில் தரையில் அமர்ந்தான். உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தைப் பார்ப்பது பிடித்திருந்தது.

நீர் சொட்டும் முகத்துடன் வந்த கௌரி பையைத் திறந்துத் துண்டை எடுத்துத் துடைத்தாள்.

“வெளில கொடி இருக்கு”

கதவைத் திறந்து வெளியே வந்தாள். தெருவே பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தன்னுடைய வாழ்க்கை மட்டும் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டதோ என்ற சந்தேகம். உலகத்தைவிட்டு ஒதுங்கி வந்து தனியே நிற்பது போன்ற மாயை. ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஓய்வுக்காய் ஏங்கும் அதே மனம் ஓய்ந்து அமரும் நேரத்தில் ஓட ஏங்கியது.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது. செந்தில் அவளைத் தேடவில்லை. அவனும் அமர்ந்த நிலையிலேயே இருந்தான். கௌரியை போல் மனம் சோர்ந்திருக்கவில்லை. அடுத்த வேலைத் தேட வேண்டும். அதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

கொடியில் துண்டை உலர்த்திவிட்டு உள்ளே வந்தாள். இடுப்பில் புடவையை எடுத்துச் சொருகி சமையலறைக்குள் போனவள் உடனேயே திரும்பி வந்தாள்.

“தொடப்பம் இருக்கா? கூட்டி விட்டுட்டு சமைக்குறேன். காலெல்லாம் கொர கொரங்குது… ஒரே குப்ப. ஒனக்கு பசிக்குதா?”

“அப்பறமாக் கூட்டிக்குறேன்”

“அஞ்சு நிமிஷத்துலக் கூட்டிடுவேன்”

“ஒரு விஷயம் சொன்னா சரின்னு கேக்கப் பழகு”

“அதையே நா ஒங்கிட்ட சொன்னா நீ கேப்பியா? நா கூட்டி சுத்தம் பண்ணுறதுல ஒனக்கு இப்போ என்ன பிரச்சன?”

“நீ எதுக்கு இதெல்லாம் செய்யணும்?”

“நீ எதுக்கு என்ன ஒங்கூடக் கூட்டியாந்த?”

“நீ அழுதத பாக்கப் பாவமா இருந்துது”

“அங்க போறவங்க வரவங்கல்லாம் பாவமாப் பாத்துட்டுதா போனாங்க. யாரும் அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலையே”

“ஏற்கனவே ஒன்ன வெச்சுக்கிட்டு அடுத்து என்ன பண்ணுறதுன்னு தெரியாமதா முழிச்சிட்ருக்கேன். நா பண்ணதுத் தப்புன்னு நெனைக்க வெச்சுடாத”

“இதுக்குதா என்ன வுட்டுடு நா போறேன்னு சொன்னேன்”

“போறேன் போறேன்னா… போறதா இருந்தா அப்பயே போயிருக்க மாட்டியா? போறதுக்கு எடமில்லன்னு சொன்ன? ஏதோ போனாப் போகுதுன்னு பாத்தா… தொடப்பம் கிச்சென்ல மூலையில இருக்கு. எடுத்துக் கூட்டித்தொல போ…”

“எதுக்குய்யா எனக்காக நீ கஷ்டப்படணும்? என்…”

“அழுதன்னா கொன்னுடுவேன். எனக்கு அழறது சுத்தமாப் புடிக்காது. கூட்டுன்னு சொல்லிட்டேன்ல… போடி”

ஒவ்வொரு முறையும் அவன் கத்தல் அவள் அழுகையைத் தடுத்து நிறுத்தியது. இம்முறை குழந்தை விழித்துக் கொண்டான். லேசாகச் சிணுங்கத் துவங்கியவனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான் செந்தில். அவனருகில் சென்று குழந்தையைத் தூக்கித் தட்டிக் கொடுத்தாள்.

அவன் எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடிவிட குழந்தையை இடுப்பிற்கு இடம் மாற்றி துடப்பம் எடுத்து ஹாலையும் சமையலறையையும் கூட்டி முடித்தாள். படுக்கையறையையும் கூட்ட வேண்டும். முதலில் கதவைத் தட்டலாமென நினைத்தவள் பின் வேண்டாமென்று முடிவெடுத்தாள்.

சமையலை முடித்துத் தயங்கிக் கதவைத் தட்டினாள். பதிலில்லை. உள்ளே சத்தம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் தட்டினாள். பதிலில்லை.

கதவைத் தள்ளினாள். உள்ளே தாழிடாததால் திறந்தது. பாயில் படுத்திருந்தான். அருகில் சென்றாள். நல்ல உறக்கத்தில் இருந்தான். அசதியாயிருக்கும். எழுப்ப மனம் வரவில்லை. இருந்தாலும் வெறும் வயிற்றுடன் உறங்குகிறானே.

தரையில் அமர்ந்தாள். குழந்தையை அவன் மீது கிடத்தினாள். தவழ்ந்துச் சென்று அவன் கன்னத்தை வருடினான். லேசாகக் கண் விழித்தவன் குழந்தையைக் கண்டதும் திடுக்கிட்டு எழுந்தான். பயந்த மகனைத் தூக்கி எழுந்தாள்.

“நல்லாத் தூங்கிட்டியா?”

“ம்ம்”

“சாப்பிடு”

“வரேன்”

சமைத்ததை எடுத்து வந்து ஹாலில் வைத்தாள். முகம் கழுவி வந்து அமர்ந்தவனுக்குப் பரிமாறினாள்.

“நீயும் சாப்பிடு”

“வீட்டுல ஒரு தட்டுதா இருக்கு”

“சாயந்தரம் வாங்கிட்டு வரேன்”

“நீ சாப்பிடு. நா இந்தப் பாத்திரத்துலயே சாப்பிட்டுக்குறேன்”

அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் போய்விட்டதே என்று காலைக் கவலைப்பட்டதற்கு நேர் மாறாய் ஒரு வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிம்மதி கௌரிக்கு.

செந்தில் கைக் கழுவிய நேரம் கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்தார் அவன் மாமா பரசுராமன்.

பிடி காடு – 7

பரசுராமனை உட்கார வைக்க வீட்டில் நாற்காலியில்லை. செந்தில் உட்காரச் சொல்வதற்காகக் காத்திராமல் தரையில் உட்கார்ந்தார். கௌரிக்கு அங்கிருப்பதா வெளியே சென்று நிற்பதா என்ற குழப்பம். அவரைத் தாண்டி வீட்டை விட்டு வெளியே போகத் தயங்கியவள் குழந்தையுடன் அடுக்களைக்குள் சென்றுவிட்டாள். செந்தில் அவர் எதிரில் அமர்ந்தான்.

“அந்தப் பொண்ணுக்குதா வீடு கேட்டியா?”

“ம்ம்”

இப்படிக் கேட்டால் அவனாக கௌரியை அழைத்து அறிமுகம் செய்து வைப்பான் என்று நினைத்தது அவர் தவறுதான். அவனிடம் எதையும் நேரடியாகக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்று மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“கூப்பிடு…”

“ஒன்னப் பாக்கதா வந்திருக்காங்க. இங்க வா”

அவன் சற்று உரக்கக் கூற, வந்தவர் என்ன கேட்பாரோ என்ற யோசனையுடன் அவர் முன் வந்து நின்றாள். குழந்தைக் குறித்து செந்தில் எதுவும் கூறாததால் அவளையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தார். அவன் எந்தச் சலனமும் இல்லாமல் ‘அவளிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்’ என்ற தோரணையில் உட்கார்ந்திருந்தான்.

“உக்காரும்மா. பேரென்ன?”

“கௌரி”

“கொழந்த…”

“எம்பையன்”

“ஓஹோ…”

“அஞ்சு மாசம் ஆகுது”

“சரி நா யாருன்னு தெரியுமா?”

இல்லையென்று தலையசைத்தாள்.

“இவனோட மாமா. உன் சொந்த ஊரு எது? திருச்சியில எத்தன நாளா இருக்க? இத்தன நாள் எங்கருந்த? செந்தில எப்படித் தெரியும்? இப்போ இந்த வீட்டுலத் தனியா இருக்கப் போறியா? எப்…”

“இத்தனக் கேள்விய அடுக்கிட்டே போனா அவ எப்டி பதில் சொல்லுவா?”

அந்த ஒரு கேள்வி பரசுராமனை அமைதியாக்கப் போதுமானதாக இருந்தது.

“ஊரு கோடங்கிப்பட்டி. சொல்லிக்குற மாதிரி சொந்தம் அப்பத்தா ஒண்டி தான். அது ஊருல இருக்கு. வீட்டுக்காரருப் போய் சேந்துட்டாரு. திருச்சிக்கு முந்தாநேத்து வந்தேன். ஒரு வீட்டுல சமையலுக்கு வேலைக்குப் போனேன்…”

“முந்தாநேத்துதான் திருச்சிக்கே வந்தியா? வேலைக்குப் போனன்னா… அங்கயே தங்க எடம் கொடுத்திருப்பாங்களே. அப்பறம் எதுக்கு இந்த வீடு?”

“வேல… தங்க எடம் கொடுத்தாக… வேல…”

“வேலப் புடிக்கலன்னு நின்னுட்டா”

கௌரி செந்திலை பார்த்தாள். கடைசியாக அந்த வீட்டை விட்டு வருவதற்கு அதுவே காரணம் என்றாலும் அது மட்டுமே காரணமில்லையே. பொய் சொல்கிறான். ஆனால் மறுக்கத் தோன்றவில்லை.

“அது சரி… இப்போ பொழப்புக்கு என்ன பண்ணுறது? நீ பாத்துக்கப் போறியா செந்திலு?”

“எனக்கும் வேலப் புடிக்கலன்னு நின்னுட்டேன்”

பரசுராமன் என்னென்னவோ கேட்க முற்பட்டார். எதுவும் கோர்வையாக வரவில்லை.

“குடிக்கக் கொஞ்சம் தண்ணிக் குடும்மா”

குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு எழுந்துச் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து எதிரே உட்கார்ந்தாள். அதை குடித்து முடித்தவர் சில நிமிடங்கள் தரையை வெறித்தபடி இருந்தார்.

“இவன ஒனக்கு எப்டித் தெரியும்?”

“ஒரே வீட்டுலதா வேல பாத்தோம்”

“ஒரே நாள்தா தெரியும்னு சொல்லுறியா?”

ஆமென்று தலையசைத்தாள்.

“ஹ்ம்ம்… இந்த வீடு என்னோடதுதா. சைட் போர்ஷன ஒனக்கு வாடகைக்கு விட சொல்லி கேட்டான். சாவி குடுத்துட்டேன். தனியாதா இருக்கப் போறியா?”

“கொழந்தையோட… வேற வழித் தெரியல”

“ஊருக்குப் போக வேண்டியதுதான?”

கண்கள் லேசாகக் கலங்க மறுப்பாகத் தலையசைத்தாள்.

“இவனப் பத்தி ஏதாவது தெரியுமா? எந்த நம்பிக்கையில இவங்கிட்ட ஒதவிக் கேட்ட? இவங்கூட வந்த?”

“அவகளாதா கூட்டி வந்தாக”

ஆச்சரியமாக செந்திலை பார்த்தவர் “ஏன்?” என்ற ஒற்றை வார்த்தையில் ஆயிரம் கேள்விகளை அடக்க முயன்றார்.

“ஒதவிப் பண்ணணும்னுத் தோணுச்சு”

பதில் திருப்திகரமாக இல்லை. எவ்வளவு விரிவாகக் கேட்டாலும் எத்தனை கேள்வி கேட்டாலும் அவன் பதிலை மாற்றமாட்டான். அவன் குணம் அறிந்தவர் கௌரியிடமே திரும்பினார்.

“எத்தன நாளைக்கும்மா இப்டி இவனோட தங்க முடியும்?”

“எங்கூட எங்கத் தங்கப் போறா? சைட் போர்ஷன்ல வேற வீட்டுல இருக்கப் போறா”

செந்திலின் பதிலில் கூடியிருந்த உஷ்ணம் பரசுராமனை மிக ஜாக்கிரதையாய் அடுத்தக் கேள்வி கேட்க வைத்தது.

“அவன் கூப்பிட்டான்னுக் கூடக் கெளம்பி வந்திருக்கியே… அவனப் பத்தி என்ன தெரியும் ஒனக்கு?”

“நல்லவக”

“நல்லவந்தா. ரொம்ப நல்லவன். அது ஒனக்கு எப்டித் தெரியும்னுக் கேக்குறேன்”

“தெரிஞ்சதுனாலதா கூட வந்தேன்”

“சரி. நீ அவனுக்கு மேல ஒழுங்கா பதில் சொல்லுற. எப்படியோ போகட்டும். ஒனக்கு அவனப் புடிச்சிருக்கா?”

கௌரிக்கு தூக்கிவாரிப்போட செந்திலை பார்த்தாள்.

“என்ன மாமா?”

“நீ சொல்லும்மா”

“இங்க பாருங்க… எனக்குப் போறதுக்கு வேற எடமில்ல, ஒதவறுதுக்கு நாதியில்ல. கொழந்தையோட நடுத் தெருவுல நிக்க முடியாதுன்னு அவகக் கூப்பிட்டதும் கெளம்பி வந்துட்டேன். அம்புட்டுத்தேன்”

பரசுராமன் இன்னும் எவ்வளவோ கேட்க நினைத்தார். கேட்டுப் பிரயோஜனம் இல்லையெனும்போது எதற்குக் கேட்க வேண்டுமென்று எழுந்துவிட்டார்.

“நா கெளம்புறேன்”

அவர் போன பிறகும் கௌரி அசையாமல் அமர்ந்திருந்தாள். இப்படியொரு கேள்வியை அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. உண்மையில் இந்தக் கேள்வியே முதலில் கேட்கப்படும் என்பது இப்போது உரைத்தது. அவள் மனதை சமன்படுத்த சில நொடிகள் தேவைப்பட்டன.

“உங்க மாமா கேட்ட மாதிரி ஏதும்… நீ என்ன கூட்டி வந்தது…”

“நீ அவருகிட்ட சொன்ன பதிலதா நா ஒங்கிட்ட சொல்லுவேன்”

அவன் தெளிவாகக் கூறியப் பிறகு கௌரியால் மேலே ஒன்றும் பேச முடியவில்லை. இருந்தாலும் பரசுராமன் வருவதற்கு முன்புவரையிருந்த சூழ்நிலை மாறியிருந்தது.

“சாவி குடுத்துட்டேன்னு சொன்னாரே…”

“ம்ம். வா போய் வீடு பாத்துட்டு சுத்தம் பண்ணிட்டு வருவோம். கொழந்த இங்கயே இருக்கட்டும்”

“ஏன்? புள்ளைய எப்டி தனியா விடுறது?”

“அங்க ஒரே தூசா இருக்கும். ரொம்ப மாசமாப் பூட்டிக் கெடக்கு”

“அப்போ சரி. தூளி கட்டணும். எனக்கு எட்டாது”

“நா கட்டித் தரேன். எடு”

எழுந்துப் படுக்கையறைக்குள் சென்று ஸ்டூல் எடுத்து வந்து போட்டான். கௌரி எடுத்துக் கொடுத்த புடவையை வாங்கிப் பிரித்து மேலே கொக்கியில் மாட்டித் தந்தான். அதை முடிப் போட்டாள்.

“நேத்து இத செஞ்சுக் குடுன்னுதானக் கேட்டேன்? ஏன்யா கண்டுக்காமப் போன? என் ராஜா… பாவம் தரையிலயே போட்டு வெச்சிருந்தேன். அந்த வீட்டுல ஒரு தூளி கட்டக் கூட என்னால முடியல. நா தப்பே பண்ணலன்னு நிரூபிக்க முடியல. நா சொல்ல வந்ததகூட யாரும் காது கொடுத்துக் கேக்கலையே…”

“அதெல்லாம் முடிஞ்சுப் போச்சு. அடுத்து என்ன பண்ணுறதுன்னு யோசி. தொடப்பம் எடுத்துட்டு வா”

“வெளக்கு வெக்குறதுக்கு முன்னாடிக் கூட்டி சுத்தம் பண்ணிடுறேன்”

செந்தில் முன்னே சென்று கதவை திறக்க மகனை தூளியில் கிடத்தி துடப்பம் எடுத்துச் சென்றாள். முன் வீட்டைவிடக் கொஞ்சம் சிறியதாய் இருந்தது. அதே போல் இருந்தது. தூசியும் குப்பையுமாய் இருந்தது. எந்த குழாயிலும் தண்ணீர் வரவில்லை.

“நீ கூட்டு. பக்கெட்ல தண்ணிப் புடிச்சுட்டு வரேன்”

கூட்டக் கூட்டக் குப்பை வந்து கொண்டே இருந்தது. தரையைத் துடைத்தாள். குளியறையைத் தேய்த்துக் கழுவி விட்டாள். செந்தில் அவள் மகனுக்குக் காவலாய் அவன் வீட்டிலேயே இருந்தான். தண்ணீர் வேண்டுமென்று அவள் கேட்கும்போது மட்டும் வாலியில் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தான்.

வீடு பளிச்சென்றாகியது. இருட்டத் துவங்கியது. விளக்கைப் போட்டாள். எரியவில்லை. வாலியையும் துடப்பத்தையும் எடுத்துக் கொண்டு முன்னே வந்தாள். சோர்ந்திருந்தாள்.

“அங்க ஹால்ல லைட் எரியல. வேற எங்கயும் பல்பு இல்ல”

“வாங்கிட்டு வந்து மாட்டுறேன்”

“என்னால ஏகப்பட்ட செலவு ஒனக்கு. கணக்கு வெச்சுக்கையா. தலைய அடமானம் வெச்சாவது திருப்பிடுறேன். செத்த நேரம் படுத்தாத் தேவலைன்னு இருக்கு. நா அங்கனயே போய்க் குளிச்சுட்டுத் தூங்குறேன். கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பு. ராத்திரிக்கு எதுனா செஞ்சுத் தரேன்”

“அங்க லைட்டே எரியலன்ற. பைப்புல தண்ணி வரல. ஃபேன் இல்ல. அப்பறம் எப்டி அங்க தூங்குவ? இங்கயே குளிச்சுட்டு உள்ள போய்ப் படு. சமைக்கல்லாம் வேணாம். கடையில வாங்கிட்டு வரேன். காலையில எல்லாம் சரி பண்ணித் தரேன்”

“இங்கன… அதா வீடு சுத்தம் பண்ணியாச்சுல்ல? படுத்துக்…”

“மாமா கேட்டதையே இன்னும் யோசிச்சுட்ருக்கியா?”

“இல்ல… எதுக்கு…”

“நா அதுக்கு பதில் சொல்லிட்டேன். நீ கஷ்டப்படுறன்னுக் கூட்டிட்டு வந்தேன். இங்க கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்த இல்ல. பெருசா வசதியெல்லாம் பண்ணிக் குடுக்க முடியாது. இருக்குறது இவ்ளோதா. நீ நடந்துக்குற விதத்த வெச்சுதா நா ஒன்ன நடத்துற விதம் மாறும்”

“ம்ம்”

“ம்ம்னா?”

“யப்பா சாமி… குளிச்சுட்டு வரேன். தூக்கமெல்லாம் போச்சு. வெளக்கேத்தி வெச்சுட்டு அப்பறமா சமைக்குறேன்”

“வெளக்கெல்லாம் இல்ல”

“இல்லையா? சாமி கும்புட மாட்டியா?”

“…”

“ஆமா எனக்கு மட்டும் இந்த சாமி என்னத்த செஞ்சுச்சு அத கும்புடுறதுக்கு. இருந்தாலும் பழகிப்போச்சே. இத்தனைய வாங்கித் தரியே… ஒரு அகல் வெளக்காவது வாங்கிட்டு வாய்யா”

அவளிடம் இந்த நேரத்தில் தர்க்கம் செய்ய விரும்பாமல் வெளியே போனான். அவன் வாங்கி வரப் போகும் விளக்கை வைக்க இடம் ஏற்பாடு செய்தாள். திரும்பி வந்தவன் ஒரு அம்மன் படத்தையும் சேர்த்து வாங்கி வந்தான்.

“சாமி படமே இல்லையேன்னு நெனச்சேன்…”

“எந்த சாமினெல்லாம் தெரியாது. கடையிலக் குடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்”

“படம் வாங்கணும்னு ஒனக்குத் தோணுனதே பெருசு”

“என்ன மொனவுற?”

“படத்த இந்த ஷெல்புல வெக்குறேன்னு சொன்னேன்”

“எங்கயோ வை”

குளிக்கப் போனாள். மனம் லேசாகியிருந்தது. இந்த நிமிடம் மனதில் எந்தக் கவலையும் இல்லை. வாழ்க்கை இப்படியே சென்றுவிட்டால்?

பிடி காடு – 8

செந்தில் வீட்டிலிருந்து வந்த பரசுராமனால் வீட்டிலிருக்க முடியவில்லை. கிளம்பி அவரது பலசரக்குக் கடைக்குப் போனார். திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். சொந்த ஊரில், அளவில் சிறியதாக இருந்தாலும் சொந்தக் கடை வைத்திருப்பதில் பெருமை அவருக்கு. அதில் வந்த வருமானத்தில் தான் மகனைப் படிக்க வைத்தார். மகளைப் படிக்க வைக்கிறார்.

பாஸ்கர் B. Sc. படித்தான். ஆனால் வேலைக்குச் செல்வதில் விருப்பம் கிடையாது. பரசுராமனைப் போல் தங்கள் கடையைக் குறித்துப் பெருமைப்படாவிட்டாலும் தந்தையின் இத்தனை வருட உழைப்பில் உருவான கடையை விரிவாக்க ஆசைப்பட்டான். தானும் வேலைக்குச் சென்றுவிட்டால் தந்தையின் காலத்திற்குப் பிறகு அவர் பெயர் சொல்லும் கடை இல்லாமலேயே போய்விடும் என்ற பயம்.

கல்லாவில் உட்கார்ந்திருந்தவன் தந்தை வந்ததும் ஸ்டூலிலுக்கு மாறினான். கடையைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினாலும் மகன் தன்னை ஒதுக்காமல் இருப்பதில் பரசுராமனுக்கு எப்போதும் பெருமிதம் உண்டு.

“சாப்டதும் வருவீங்கன்னுப் பாத்தேன். இவ்ளோ நேரங்கழிச்சு வரீங்க?”

“இன்னைக்கு செந்தில் கடைக்கு வந்தானா?”

“வந்தான்”

“ஏதாவது சொன்னானா?”

“எதப்பத்தி?”

“ஒங்கிட்டப் போய்க் கேட்டேன் பாரு…”

“நாங்கேட்டதுக்கு பதில் சொன்னீங்களா? நீங்க எதக் கேக்குறீங்கன்னேப் புரியாம என்னத்த சொல்லுறது?”

பரசுராமன் பதில் சொல்லுமுன் சேகர் வந்தார்.

“என்னண்ணே போன் பண்ணி ஒடனே வரச் சொன்னீங்க… என்னாச்சு?”

“செந்திலு வேலைய வுட்டானாம் சேகரு”

“எப்போ? நேத்துக் கூடப் பாத்துப் பேசுனனே… வேலப் புடிக்கலன்னு சொன்னான். வுடுற மாதிரி எதும் சொல்லலையே…”

“அவனுக்குப் புடிக்கல. அவன் வேலைய வுட்டான். அதுக்கு எதுக்கு நீங்க ரெண்டுப் பேரும் கூடிப் பேசிக்கிட்டு?”

“இரு பாஸ்கரு… விஷயம் இல்லாம அப்பா பேச மாட்டாங்கப்பா”

“நல்லா சொல்லுங்க. புத்தி வருதாப் பாக்கலாம்”

“இப்போ என்ன புத்தி இல்லாம கெடக்கு?”

“அட. கொஞ்சம் பொறுமையாப் பேசுங்க ரெண்டுப் பேரும். நீங்க சொல்லுங்கண்ணே”

“கூட ஒரு பொண்ணக் கூட்டி வந்து வெச்சிருக்கான். சைட் போர்ஷன் வாடகைக்கு வேணும்னுக் கேட்டான். அந்தப் பொண்ணும் ஒண்ணும் சரியா பதில் சொல்ல மாட்டேங்குது”

“பொண்ணா? யாரு என்னான்னு விசாரிச்சீங்களா?”

“அவன் வேலைக்குப் போயிட்ருந்த வீட்டுல வேல பாத்துச்சாம். அந்தப் பொண்ணும் வேலைய வுட்டுடுச்சாம். புருஷன் எறந்துட்டாருங்குது. இனி இங்கதா தங்கப் போதுன்னு சொல்லுறான். எனக்கு ஒண்ணும் புரியல சேகரு”

“ஒஹ்ஹ்… அதா அரிசி காயெல்லாம் வாங்கிட்டுப் போனானா?”

“நம்மக் கடையில வந்து வாங்குனானா? எப்போ பாஸ்கரு?”

“காலையில பால் வாங்க வந்தான். அப்பறம் அரிசி பறுப்பு காயெல்லாம் வாங்கிட்டுப் போனான். திரும்பவும் கொஞ்ச நேரம் முன்னாடி கூட எங்கயோ கடைக்குப் போயிட்டு வீட்டுப் பக்கம் போனான். அவன் அப்பா சொல்லுற மாதிரி எல்லாம் ஒரு பொண்ணக் கூட்டி வந்து நடு வீட்டுல ஒக்கார வெக்குற ஆள் கெடயாதுண்ணே”

“கைக் கொழந்தைய வேற வெச்சிருக்கு”

“அப்போ கண்டிப்பா நீங்க நெனைக்குற மாதிரியெல்லாம் எதுவும் இருக்காதுப்பா”

“அதுவும் சரிதான். ஒதவி ஏதாவது பண்ணணும்னு…”

“அவன் அப்படிதா சொல்லுறான்”

“அப்பறம் நீங்க ஏன் வீணா மனசப் போட்டுக் கொழப்பிக்குறீங்க? விடுங்கண்ணே”

“அவன் மேல எனக்கு சந்தேகமெல்லாம் கெடயாது சேகரு. தெரிஞ்சப் பொண்ணுக்கு வீடு வேணும்னுக் கேட்டதும் மறு கேள்வி இல்லாம சாவியத் தூக்கிக் குடுத்துட்டேன். பொஞ்சாதிகிட்ட கூட ஒரு வாத்தக் கேக்கல. நா ஏதோ அந்தப் பொண்ணுக் குடும்பத்தோட இருக்கும்னு நெனச்சா… ஊரு என்னாப் பேசும் சொல்லு”

“இத யோசிக்காமையா அவன் கூட்டி வந்திருப்பான்?”

“என்னத்த யோசிச்சான் என்னத்த நெனைக்குறான் ஒண்ணும் புரியலப் போ. நீ கொஞ்சம் பேசிப் பாரு சேகரு. மனசே சரியில்ல. நா வீட்டுக்குக் கெளம்புறேன்”

பரசுராமன் எழுந்து சென்றுவிட்டார்.

“இவரு இப்படித்தா. எல்லா விஷயத்துக்கும் டென்ஷன் ஆனா என்ன பண்ண முடியும்?”

“இது ஒண்ணும் சின்ன விஷயம் இல்லையே. அப்பா கவலப்படுறதுலையும் நியாயம் இருக்குல்ல?”

“அப்போ அவன்டயே என்னா ஏதுன்னு கேக்கணும். எப்பயும் அவன்ட பேசாம நம்மக்கிட்ட வெசனப்பட்டா?”

“நீ கேட்ருவியா? அவர சொல்றியே?”

“அவன் அடுத்துக் கடைக்கு வரட்டும். கேக்கதா போறேன். உள்ள வந்து உக்காருங்கண்ணே. ஏன் வெளியவே நின்னுக்கிட்டு?”

“வீட்டுக்குப் போகணும்பா”

“அதுக்குள்ளயா?”

“ஆமாப்பா. இன்னும் ஒரு ஓட்டம் போலான்னுப் பாத்தேன். அதுக்குள்ள வீட்லேந்துக் கூப்டாங்க கோயிலுக்குப் போவணும் வாங்கன்னு. உங்கப்பா வேற அவசரமாக் கூப்பிட்டாரா… அதா இங்க வந்துட்டேன். இன்னைக்கு நமக்கு கல்யாண நாளு”

“சொல்லவேயில்ல? இந்தாங்க சாக்லேட்டு. புள்ளைக்குக் கொண்டு போயிக் குடுங்க. எத்தினி வருஷமாச்சு?”

“அது ஆச்சு பதினஞ்சு வருஷம்”

“ஏண்ணே சலிச்சுக்குறீங்க?”

“கல்யாண நாளுக்குப் பொடவ வாங்கிக் குடுக்கலையாம். காலங்காத்தாலப் பொலம்ப ஆரம்பிச்சுட்டா. இந்த மாசம் வண்டிக்கு FC போட்டது கொஞ்சம் வீட்டு வேல பாத்ததுன்னு கையக் கடிக்குது. இந்த நேரத்துல பொடவைக்கு நம்ம எங்கப் போறது? இந்த செலவெல்லாம் அவங்களுக்குத் தெரிஞ்சுதாப் பண்ணுறோம். ஆனாலும் புரிஞ்சுக்காம ம்ம்ச்ச்…”

“சரி சீக்கிரம் கெளம்புங்க. கோயிலுக்காவது போயிட்டு வாங்க”

“வரேன்பா. நாளைக்கு செந்தில பாத்துப் பேசுறேன்னு அப்பாகிட்ட சொல்லிடு”

பாஸ்கர் சொன்னதும் சரிதான். சேகருக்கு செந்தில் செய்ததில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு பெண்ணிற்கு உதவுவது அவ்வளவு பெரிய குற்றமா? உடன் அழைத்து வந்தால் என்ன? ஒரே வீட்டில் அவனுடன் தங்க வைக்கவில்லையே. அதை மறைக்கவும் இல்லை. மாமாவிடமே சென்று வீடு கேட்டிருக்கிறான். பின் எதற்காக பரசுராமன் இவ்வளவு கவலைப்படுகிறார்?

வழி நெடுகிலும் யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தவர் வாசலில் பூ கட்டிக் கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்று உட்கார்ந்தார்.

“வாசவி எங்க?”

“உள்ளக் கெளம்பிட்டு இருக்கா. அப்பா வந்துடுவாங்க மூஞ்சிய கழுவுடின்னு இவ்ளோ நேரம் கத்தி இப்போதா எந்திரிச்சுப் போனா உங்க பொண்ணு”

“ம்ம். ஏன் ரத்னம்… நா யாருக்காவது ஒதவிப் பண்ணுனா நீ வேணான்னு சொல்லுவியா?”

“நாஞ்சொல்லி நீங்க கேக்கப் போறீங்களாக்கும்? எனக்குத் தெரிஞ்சுக் கொஞ்சம் தெரியாமக் கொஞ்சம்னு செஞ்சுட்டுதான இருக்கீங்க?”

“இல்ல… நாளைக்கே ஏதோ ஒரு பொண்ணு ஆதரவில்லாம நிக்குதுன்னு வீட்டுக்குக் கூட்டியாந்தா ஒத்துப்பியா?”

“வெளக்கமாரு பிஞ்சுப் போயிரும். ஏன்யா கல்யாணங்கட்டிக் கூட்டி வந்து ஒரு நக நட்டு வாங்கிப் போட்டியா? நாளு கெழமைக்கு ஒழுங்காப் புதுத் துணி எடுத்து தந்தியா? இன்னைக்கு கல்யாண நாளு. பதினஞ்சு வருஷமாச்சு. ஒரு பொடவ எங்கைய்யான்னுக் கேட்டா காலையில மூஞ்சத் திருப்பிட்டுப் போன…”

“சரி வுடு”

“போனாப் போவுது வூடு திரும்புன மனுஷங்கிட்ட நானும் மூஞ்சிக் காட்டக் கூடாதுன்னு பொறுமையாப் பேசுனா… பொண்ண கூட்டிட்டு வருவீங்களோ?”

“அட வுடுன்னு சொல்றேன்ல. சும்மாதானக் கேட்டேன்”

“கேப்பையாக் கேப்ப. எங்கக் கூட்டிட்டு வந்துதா பாரேன்”

“நீ போயி வாசவிய வர சொல்லு. வீட்டப் பூட்டிட்டுக் கெளம்பு. நல்ல நாள் அதுவுமா கோயிலுக்குப் போவோம். போ போ”

ரத்தினம் ஏதோ முனகியபடியே உள்ளே போக சேகர் தலையை உலுக்கி எழுந்து ஆட்டோவை திருப்பி நிறுத்தினார். ‘அய்யய்யோ இது ஏதோ பெரிய வில்லங்கம்தா போலயே. பரசுராமண்ணே சும்மா ஒண்ணும் கவலைப்படல. நல்லவேள அந்த செந்தில் பையனுக்கு கல்யாணம் ஆகல. நாளைக்கு மொத வேலையா அவங்கிட்டப் பேசணும்’

செந்தில் சலிப்படைந்திருந்தான். மீண்டும் கடைக்கு போக வேண்டும். காலையிலிருந்து எத்தனை முறை செல்வது? உடையைக் கூட இன்னும் மாற்றவில்லை.

சமைக்கிறேன் என்று சொன்ன கௌரி “தோச மாவு இல்லையா? தோச கல்லு இல்லையா? கிரைண்டர் இல்லையா?” என்று அடுக்கிக் கொண்டே போக “இப்போதைக்கு உப்புமா கிண்டு போதும்” என்றுவிட்டான். அதற்கும் “ரவா இருக்கா? சேமியா இருக்கா?” என்று அவள் கேட்க என்னென்ன வேண்டுமென்று மொத்தமாகக் கேட்டு, வாங்கி வரக் கிளம்பினான்.

தூரத்தில் நடந்து வந்த செந்திலைக் கண்டதும் கடையில் நின்றவர்களுக்கு அவசரமாய் பொருட்களை எடுத்துக் கொடுத்து பணத்தை வாங்கி அனுப்பிவிட்டான் பாஸ்கர். அவன் தங்கள் கடைக்குத் தான் வருகிறானா என்று தெரியாது. வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டான்.

பாஸ்கர் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை விநோதமாக உணர்ந்தான் செந்தில். கடையருகே போனதும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தவனின் நடவடிக்கை இன்னும் சந்தேகத்தைக் கொடுத்தது.

“இப்ப என்ன வாங்க வந்த?”

“ரவா வேணும்”

“அப்பறம்”

“கடலப்பருப்பு”

“அப்பறம்”

“என்ன விஷயம் சொல்லு”

“நீதா சொல்லணும்”

“மாமா கடைக்கு வந்தாரா இல்ல நீ வீட்டுக்குப் போனியா?”

“அப்பா வந்தாரு”

“என்ன சொன்னாரு?”

“அவரு சொன்னது இருக்கட்டும். எதுக்கு இந்த சாமானெல்லாம் வாங்குற?”

“உப்புமா கிண்ட”

“நீ கிண்டப் போறியா?”

“சாப்டப் போறேன்”

“நா என்ன கேக்குறேன்… இதுக்குதா ஒன்ன கேள்வி கேக்கவே நாங்கெல்லாம் யோசிக்குறோம். எதுக்கந்தப் பொண்ண வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த?”

“மாமா சொல்லல?”

“தெளிவா எதும் சொல்லல”

“கௌரி. வேலைய வுட்டுடுச்சு. போக்கிடம் இல்ல. பாவமா இருந்துச்சு. கூட்டிட்டு வந்துட்டேன்”

“அவ்ளோதானா?”

“நம்புனா நம்பு”

“ஒம்மேல நம்பிக்க இல்லாம இல்ல. அப்பாவும் நம்புறாரு. சுத்தி இருக்கவங்க என்ன பேசுவாங்கன்னு யோசிக்குறாரு”

“எனக்குக் கவல இல்ல”

“அந்தப் பொண்ணப் பத்தி யோசிச்சியா? அது பேரும் சேந்துல்லக் கெடும்”

“அவளத் தெருவுல தனியா வுட்டுட்டு வரதவிடக் கூடக் கூட்டிட்டு வரது மேலுன்னு தோணுச்சு பாஸ்கர். கூட்டிட்டு வந்துட்டேன்”

“ஒன்னப் பாத்து வளந்தவன் நான். நீ செய்யுற எல்லாத்தையும் நானும் செய்யணும்னு ஆசப்படுவேன். அந்தளவுக்கு நீன்னா எனக்கு ஒஸ்தி. அப்பா ஒம்மேல இருக்கப் பாசத்துல கவலப்படுறாரு. தப்பு சொல்றதுக்கில்ல. எனக்கும் அந்தக் கவல இருக்கு. இவ்ளோ கவலைப்படுறீங்களே அப்போ உங்க வீட்டுல அந்தப் பொண்ண வெச்சுக்குறீங்களான்னுக் கேக்காத. சத்தியமா முடியாது. எங்கம்மாவப் பத்தித் தெரியும்ல. நீ பேரக் கெடுத்துக்காத”

“ம்ம்”

“அந்தப் பொண்ண ஒனக்குப் புடிச்சிருக்கா?”

“புடிச்சிருந்தாதான் ஒதவிப் பண்ணணுமா?”

“இல்ல. இப்பவும் நீ செஞ்சது எனக்கு ரொம்பப் பெரிய விஷயமாதா தெரியுது. ரவ, கடலப்பருப்பு வேற எதாவது வேணுமா?”

பாஸ்கர் செந்தில் கேட்டவற்றை எடுத்து ஒரு கவரில் போட்டான்.

“அவ்ளோதான்”

“இந்தா. சரி… அடுத்த வேல?”

“தேடணும். வரேன்”

கௌரி குறித்து மாமா கேட்டது, இப்போது பாஸ்கர் கேட்டது எல்லாவற்றையும் தாண்டி அடுத்த வேலைத் தேட வேண்டுமென்ற எண்ணம் வலுப்பெற்றது. காலையில் சேகரை சந்தித்துப் பேச முடிவு செய்தான் செந்தில்.

பிடி காடு – 9

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. செந்திலுக்கு மிகவும் பழக்கப்பட்ட, மிகவும் பிடித்த வேலை, கார் ஓட்டுவது. டிரைவராக வேலைப் பார்க்க ஆரபித்த அன்று முதல் இதுவரை அவன் ஒரு நாள் கூட சொந்தக் காரணத்திற்காக விடுப்பு எடுத்ததில்லை. முதலாளியின் வீட்டில் விடுப்புக் கொடுத்து அனுப்பும் நாட்கள் அவனைப் பொறுத்தவரை கருப்பு தினங்கள்.

எத்தனையோ துன்பங்களை அனுபவித்திருக்கிறான். எத்தனையோ இன்னல்களைக் கடந்து வந்திருக்கிறான். அத்தனையிலும் துணை நின்றது இது போல் ஏதோவொரு கார் தான் என்று நம்பினான்.

தனிமைப் பொழுதுகளில், தன்னுள்ளே மூழ்கிப் போகும் பயணங்களில் சிறு வயதில் அப்பா கற்றுக் கொடுத்த நினைவுகள் அவனைத் தீண்டிச் செல்லும். அவற்றை விளக்கி வைப்பான். மனதின் ஆழத்தில் புதைத்து வைப்பான். வலுக்கட்டாயமாய் வேறு சிந்தனைகளில் அவனைக் கரையச் செய்வான்.

சேகருடன் நேற்று பேசிய நினைவுகள் இப்போது அவனுக்கு கை கொடுத்தன. சேகரின் நட்பு வட்டம் பெரிது. யாருடனும் எளிதில் பழகிவிடுவார். அவன் டிரைவராக சேர்ந்த அத்தனை வீடுகளும் சேகர் அறிமுகம் செய்து வைத்தவை.

மாமா அவரிடம் கட்டாயம் பேசியிருப்பார். இல்லையென்றால் கௌரியைக் குறித்து அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவரிடம் விவரம் கூறியதும் உடனே ஒரு வீட்டில் பேசி வேலைக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். இன்று காலை முதல் வேலைக்கும் வந்தாயிற்று.

ஆனால் அவர் கௌரியைக் குறித்துக் கேட்டவை இப்போதும் அவனை சோர்வடையச் செய்தன. எதற்காக எல்லோரும் ஒரே கேள்வியைக் கேட்க வேண்டும்? அவளைப் பிடித்திருக்கிறதா? இல்லையென்று இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டியிருக்கும்? அப்படியென்ன உலகத்தில் யாரும் செய்யாததைச் செய்துவிட்டோம்? எதற்காக இத்தனை கேள்வி? இவ்வளவு கவலை?

கௌரி மாமாவிடம் சொன்ன பதில் திருப்தியளித்தது. ஆனால் அவள் தெளிவாகத்தான் யோசிக்கிறாளா என்பது சந்தேகமே. மாமா ஒருவர் கேள்விக் கேட்டதற்கே ஒதுக்கம் காட்டுகிறாள். தன்னிடம் கேட்டது போல் பலர் அவளிடம் கேட்டால் இன்னும் ஒதுங்கிப் போவாளோ? பிறகெப்படித் தான் அவளுக்கு உதவுவது?

கௌரி தனக்குள் முடங்கிப் போவதற்கான சந்தர்ப்பங்கள் அமையாமலில்லை. அவளுடைய வீட்டில் இருந்தாள். நேற்றைய தினம் ப்ளம்பரை அழைத்துக் குழாய்களைச் சரி செய்து தந்துவிட்டான். அனைத்து அறைகளிலும் பல்ப் வாங்கி மாட்டிக் கொடுத்திருந்தான். தான் சமைக்கப் போவதில்லையென்று அடுப்பையும் சிலிண்டரையும் தூக்கி வந்து அவள் வீட்டில் வைத்திருந்தான்.

அதற்கு முதல் நாள் இரவு அவனுடைய வீட்டில் தூங்கியதை நினைத்துப் பார்த்தாள். அவன் ஹாலில் படுத்துக் கொண்டான். வீட்டில் ஒரு படுக்கை மட்டுமே இருக்கப் படுக்கையறைக்குள் அதில் அவளைப் படுக்கச் சொன்னான். பிடிவாதமாக மெத்தையை வெளியே எடுத்து வந்து போட்டு அறைக்குள் அவள் தரையில் பையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டாள்.

இப்போதும் அவன் வாங்கி வந்த பாய் தலையணையில் தான் படுத்துக் கொண்டிருந்தாள். வீட்டில் இருக்கும் அனைத்தும் அவன் வாங்கித் தந்தது தான்.

‘எவ்ளோ செலவாச்சோ? நா ஒரு கூறு கெட்டவ. நேத்து ராத்திரி சமைக்குறதுக்கு மாவு இருக்கா கிரைண்டர் இருக்கான்னுக் கேட்டு ச்ச… கையில இருபது ரூபா இருக்கு.

அவகக் கடனையெல்லாம் அடைக்கணும்னா எதுனா வேலைக்குப் போவணும். எத்தன நாளிக்கு இப்டி அடுத்தவகக் காசுல சோறு திங்குறது? அவக மாமா வீடுன்னாலும் சும்மா தாங்காம அட்வான்ஸு வாடகையெல்லாம் தந்துட்டுதா தங்குறாக. நாம மட்டும் எல்லாத்துக்கும் அவக கைய எதிர்ப்பாக்குறது எவ்ளோ கேவலம்?‘

மகன் தூளியில் உறங்கிக் கொண்டிருந்தான். அதுவும் செந்தில் கட்டிக் கொடுத்தது. அவன் வீட்டில் கட்டியிருந்த புடவையை அவிழ்த்து அவள் வீட்டுப் படுக்கையறையில் கட்டித் தந்திருந்தான். சோம்பிப் படுத்துக் கிடப்பது மனதை இன்னும் சோர்வடையச் செய்ய பாயிலிருந்து எழுந்தாள்.

துணிகளை ஊற வைத்திருந்தாள். இங்கு வந்த அன்றிலிருந்து துவைக்கவில்லை. அவள் வீட்டு வாசப்படியினருகில் துவைக்கக் கல் இருந்தது. அங்கேயே ஒரு தண்ணீர் குழாயும் இருந்தது. நேற்று ப்ளம்பர் வந்து சரி செய்தபோது குறித்து வைத்துக் கொண்டாள். வாலியில் ஊறிக் கொண்டிருந்த துணிகளை எடுத்து வந்து துவைக்க ஆரம்பித்தாள்.

வீட்டைச் சுற்றி சில தலைகள் கூடி நின்றுப் பேசின. பல கண்கள் அவளையே பார்த்தன. அவளும் கவனித்தாள். சீக்கிரம் உள்ளே சென்றுவிட வேண்டுமென்று வேகமாகத் துவைத்தாள்.

பக்கத்து வீட்டுக்காரி சுவரோரம் வந்து நின்றுப் பேச்சுக் கொடுத்தாள்.

“புதுசாக் குடி வந்திருக்கியா?“

“ஆமா“

“நேத்துதா வந்த போலருக்கு?“

“ஆமா“

“ஆமா தவற வேற எதும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி வெச்சிருக்கா அந்தத் தம்பி?“

“இல்ல“

“வீட்டோட ராசிப் போலருக்கு. ஒத்த ஒத்த வார்த்தையில பதில் சொல்லுற. புள்ள இருக்கா? எத்தன மாசம்?“

“அஞ்சு“

“வூட்டுக்காரு வல்லயா? நீ மட்டும் தனியா இருக்க?“

“செத்துட்டாரு“

“அடப்பாவமே… ம்ம்… அப்போ நீயும் புள்ளயும் மட்டும்தானா?“

“ஆமா“

“என்னக்காப் பேசிக்கிட்ருக்கீங்க?“

பக்கத்து வீட்டுக்காரியுடன் இணைந்துக் கொண்டாள் எதிர் வீட்டுக்காரி.

“அஞ்சு மாச கைக் கொழந்தைய வெச்சுக்கிட்டுத் தனியா இருக்கப் போவுதாம். பாவம் புருஷன் போயிட்டாராம்“

“இது என்ன கொடுமையாவுல இருக்கு? சொந்தபந்தம்னு யாருமேவா இல்ல?“

“இருக்காங்க. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு. வரேன்“

அவசரமாகத் துணிகளை அலசிக் கொடியில் உலர்த்தி வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள் கௌரி. அவர்கள் பேச்சும் பார்வையும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. வீட்டில் சும்மா இருந்தால் இப்படித் தான் ஊர் வம்புப் பேசத் தோன்றுமோ? இவர்கள் கண்ணிலேயே படாமல் தப்பிக்க முடியுமா? வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே முடங்கிக் கிடக்க முடியுமா?

காலையில் செந்தில் வாங்கிக் கொடுத்திருந்த பால் தீர்ந்திருந்தது. குழந்தைக்குப் பால் வேண்டும். தாய் பாலை நிறுத்திவிட முடிவு செய்தாள். இன்னும் நான்கு நாட்களில் ஐந்து மாதங்கள் முடிந்துவிடும். தாய்ப்பால் கொடுக்கத் துவங்கினால் அவள் மகன் புட்டிப் பாலை குடிக்க மறுத்தான். தொடர்ந்து தன்னால் பால் புகட்ட முடியுமாத் தெரியாது. புட்டிப் பாலிற்கே பழக்க முடிவெடுத்தாள்.

கடைக்குச் செல்வதற்காகவாவது தெருவில் இறங்கி நடந்துதானே ஆக வேண்டும்? கதவை லேசாகத் திறந்து எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டின் வெளியே யாருமில்லை. கையிலிருந்த இருபது ரூபாயை எடுத்துக் கொண்டு மகனைத் தூக்கி வீட்டைப் பூட்டிப் புறப்பட்டாள்.

தெருவில் இறங்கியதும் எந்தப் பக்கம் செல்வதென்று தெரியவில்லை. இந்த வீட்டிற்கு வந்த அன்று வழியிலிருந்த கடைகளை கவனிக்கும் மனநிலையில் இல்லாததால் இப்போது அந்த இடமே புதிதாகத் தெரிந்தது.

வலதுபுறம் திரும்பி நடந்தாள். குனிந்த தலை நிமிராமல் கொஞ்ச தூரம் போனதும் தென்பட்ட மளிகைக் கடையில் ஏறினாள்.

“பால் பாக்கட்டு“

“அர லிட்டரா?“

“ஒண்ணுக் குடுங்க“

“இருபது ரூபா“

இருந்த மொத்தப் பணமும் காலி. பாக்கட்டை கையிலெடுத்து சில நொடிகள் அதை வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.

“வீடெங்க?“

“ம்ம்… இப்டியே போனா ரெண்டு சந்துத் தள்ளி“

“செந்தில் வீட்லயா?“

“ஆமா“ என்றவள் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தாள்.

‘இந்தப் பொண்ணுதானா அது?‘ என்று நினைத்த பாஸ்கர் அவள் ஏன் பயந்து பயந்து செல்கிறாள் என்று யோசித்தான்.

செந்தில் எப்போது வருவானென்று தெரியாததால் அவ்வபோது கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். இருட்டத் துவங்கியதும் வீட்டின் வெளியே இருந்த விளக்கை போட்டாள். ஏழு மணி வாக்கில் முன் பக்கம் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது.

‘வந்துட்டாகளோ? இப்போவே போயிப் பேசுவோமா? அலுப்பா வந்திருப்பாக. கொஞ்ச நேரங்கழிச்சுப் போவோம். போவணுமா? பேசிதான ஆவணும்‘

குறுக்கும் நெடுக்கும் நடைப்பழகியவளால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் வீட்டில் இருக்க முடியவில்லை. மகனைத் தூக்கிக் கொண்டு கதவை மூடித் தாழிட்டு முன்னால் சென்று கதவைத் தட்டினாள்.

“உள்ள வா“

கதவை மெல்லத் திறந்து உள்ளே நுழைந்தாள். தரையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தான்.

“நாந்தான்னு எப்டித் தெரியும்?“

“வீட்டுக்கெல்லாம் யாரும் வர மாட்டாங்க. அப்டியே வந்தாலும் பேர சொல்லிக் கூப்டுவாங்க“

“ஒஹ்ஹ்… இப்பதான் வந்தியா?“

“ம்ம்… கதவ சாத்து. கொசு வரும். ராத்திரித் தூங்க முடியாது அப்பறம்“

கதவை மூட வேண்டுமா? இருவரும் தனியாக இருக்கும்போதா?

“சீக்ரம் சாத்து. கொசு வருதுப் பாரு“

கதவை மூடி அதனருகிலேயே நின்றாள். பேச்சு வரவில்லை. அவனை நிமிர்ந்துப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது.

அவள் அடுத்து எதுவும் பேசாததால் நிமிர்ந்துப் பார்த்த செந்திலுக்கு அவள் நடவடிக்கை வித்தியாசமாய்ப் பட்டது.

“என்ன?“

“இல்ல… எனக்கொரு வேல வேணும்“

“நா அதக் கேக்கல“

“பின்ன?“

“ஒனக்குத் திடீர் திடீர்னு என்ன ஆகுது? இப்ப என்ன வந்துச்சுன்னு இப்டி பல்லி மாதிரி செவுத்துல ஒட்டிட்டு நிக்குற?“

“இல்ல ஒங்கூடத் தனியா…“

“முந்தாநேத்து ராத்திரி எங்கத் தூங்குன? நீ ரூம்ல கதவ சாத்திட்டுப் படுத்த. நா என்ன ராத்திரிப் பூராக் கதவத் தொறந்து வெச்சிருந்தேன்னு நெனப்பா?“

கௌரியால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் சொல்வதுதான் நடந்தது. இருந்தாலும் அவன் கேட்பது போல் இப்போது தனக்கு என்ன வந்தது?

“இருட்டுனா வெளக்கேத்தணும்னு சொன்ன?“

“மறந்தே போச்சு“ என்றவள் மகனை இறக்கிவைத்து விளக்கை ஏற்றினாள்.

“இதுக்குதான் நீயே வெளக்க எடுத்துட்டுப் போயி வெச்சுக்கோன்னாக் கேக்குறியா? சாமி படமெல்லாம் இங்க எதுக்கு?“

“அதெப்படிய்யா? ஒரு நாள் ஏத்திட்டு அப்டியே தூக்கிட்டுப் போனா தத்திரம் புடிக்கும். இங்கனயே இருக்கட்டும். நா வரப்போ கும்பிட்டுக்குறேன்“

இரு கரம் கூப்பிக் கண்களை மூடி சில நொடிகள் நின்றாள்.

“ஒக்காரு“ என்றவன் செய்தித்தாளை மூடி வைத்தான்.

“யாராவது எதாவது சொன்னாங்களா?“

“அதெல்லாம் ஒண்ணுமில்ல“

“…“

“பக்கத்து வீட்டக்கா யாரு என்னன்னு விசாரிச்சாங்க“

“அதுக்கு ஊர் வம்பு வளக்குறதுதா வேல. நாளைக்கும் கூப்ட்டுக் கேப்பாங்க. அதுக்காக?“

“எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரில“

“பொய் மட்டும் சொல்லாத. அசிங்கம் அதுதா“

“இல்ல. இனி எதும் கேட்டா நின்னு பதில் சொல்லிட்டு வரேன். நீ சொல்லுற மாதிரிப் பக்கத்துலயே குடியிருக்கவக. எத்தினி நாளிக்கி ஓடி ஒளிய முடியும்? மொதல்ல எதுக்கு ஒளியணும்?“

“ம்ம்“

“மத்தியானத்துக்கு மேல கடைக்குப் போனேன். பால் வாங்க. ஒன்ன எல்லாருக்கும் தெரியும் போல. ஒன் வீட்டுலதா குடியிருக்கேனான்னுக் கேட்டாக“

“எந்தக் கடைக்குப் போன?“

“பேருத் தெரில. இந்தப் பக்கமாப் போனா வருமே… ரெண்டுத் தெருத் தள்ளி…“

“ஒஹ்ஹ்… அன்னைக்கு வந்தாருல்ல… என் மாமா. அவருக் கட. பாஸ்கர் இருந்திருப்பான் நீ போன நேரத்துக்கு“

“புள்ளைக்குப் பால் வாங்க… கையில இருந்த காசெல்லாம் தீந்துப் போச்சு. கொஞ்சம் காசு தந்துட்டுப் போறியா? நீ வேலைக்குப் போயிட்டா…“

எழுந்துச் சென்று பர்ஸை எடுத்து வந்து அவளிடம் சில நூறு ரூபாய் தாள்களை நீட்டினான்.

“எது வேணும்னாலும் அங்கயே வாங்கிக்கோ. காசு இல்லன்னா நா வந்து தருவேன்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்துடு“

“எனக்கு ஏதாவது ஒரு வேல ஏற்பாடு பண்ணிக் குடுய்யா“

“ம்ம்“

“நா போயி ராத்திரிக்கு கஞ்சி வெச்சுக் கொண்டாறேன்“

“சமக்குறதுன்னாப் புடிக்குமா? எப்பப்பாரு எதையாவது செஞ்சுக்கிட்டே இருக்க?“

“சின்ன வயசுலேந்து ரொம்பப் புடிக்கும்“

“என்னாலதா இப்போதைக்கு சொந்தமா எதும் பண்ண முடியாதுன்னு ஆயிப்போச்சு. நீயும் எதுக்கு வேலைக்குப் போகணும்?“

“வேற என்ன பண்ணுறதாம்?“

“யோசிக்குறேன்“

பிடி காடு – 10

செந்தில் இரண்டு நாட்களாக எப்போதும் யோசனையிலேயே இருந்தான். கௌரிக்கு கொஞ்சம் கவலையாகக் கூட இருந்தது. தன் வேலைக் குறித்த சிந்தனையில் இருக்கிறானா இல்லை வேறு எதுவும் பிரச்சனையா என்று கேட்டபோதெல்லாம் ஒன்றுமில்லை என்றே பதில் சொன்னான். தன்னால் சிக்கல் எதுவும் வந்துவிட்டதோ என்று வேதனைப்பட்டாள்.

செந்தில் உண்மையில் குழப்பத்தில் இருந்தான். சேகருடன் பேசியதிலிருந்து தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தவித்தான். பல நூறு முறை யோசித்தும் பலனில்லை.

கௌரியிடம் நீயாவது சொந்தமாகத் தொழில் செய் என்று சொன்னதற்கு அடுத்த நாள் அவன் சேகரை அவரது வீட்டில் சந்தித்தான்.

செந்தில் எப்போதும் அவரை ஆட்டோ ஸ்டாண்டில் சந்திப்பதே வழக்கம். இன்று இவ்வளவு காலையில் வீடு தேடி வந்திருக்கிறான் எனவும் சேகர் கொஞ்சம் பதட்டமடைந்தார்.

“வா செந்திலு. என்னாபா இவ்ளோ காலையில?”

“உங்களப் பாத்துட்டுப் போலாம்னுதாண்ணே”

“உள்ள வா”

“இல்லப் பரவால்ல”

“சரி வா வெளில ஆட்டோல உக்காந்துப் பேசுவோம்”

இருவரும் வீட்டின் வெளியே நின்ற சேகரின் ஆட்டோவில் சென்று அமர்ந்தனர்.

“நானே ஒன்ன வந்து பாக்கணும்னு இருந்தேன் செந்திலு”

“எதுக்குண்ணே?”

“எல்லா நல்ல விஷயம்தா. நீ முதல்ல சொல்லு”

“ஒரு தட்டுக் கடப் போடணும். தள்ளுவண்டி ஒண்ணு வாங்கணும்ணே. மார்க்கெட்டு சைடு போயி வாங்கணுமா? எங்க சீப்பா கெடைக்கும்?”

“என்னாத்துக்கு? அந்தப் புள்ளைக்கா?”

“ம்ம்”

“சரி இதுக்கெல்லாம் காசு? அது கையில இருக்கா?”

“நா சேத்து வெச்சிருக்கேன்”

“அது நீ காரு வாங்குறதுக்கு. வாங்குற ஐடியா இருக்கா இல்லையா? நா ஒன்னப் பாக்கணும்னு நெனச்சதே இது விஷயமாதா. நெறைய எடத்துல விசாரிச்சுக் கடைசியா பாலக்கரையில பழனின்னு ஒரு ஆள் இருக்கான், செகனாண்டு கார் வியாபாரம் பண்ணுறவன். நம்மப் பழைய தோஸ்து. நேத்து எதாச்சையாப் பாத்தேன். கார் கம்மி வெலைக்கு தரேன்னுட்டான். தெரிஞ்சவன்றதால முன் பணமாப் பாதி அமௌண்டு குடுத்துட்டா மீதியத் தவணையிலக் கட்டிக்கலாம்னு சொல்லிருக்கான். நல்ல சான்ஸு. வுட்டுடாத”

“என்ன காரு?”

“ஒனக்கு இன்னா வோணுமோ கேளு. பண்ணித் தருவான். நா பேசுறேன்”

“…”

“என்ன யோசிக்குற?”

“கௌரிக்கு ஒரு கடப் போட்டுக் கொடுத்துட்டா அது பொழப்பப் பாத்துக்கும்ணே”

“நீ பண்ணுறது ஒண்ணும் எனக்கு சரியாப் படல செந்திலு. பாக்கப் பாவமா இருந்தா ஒரு வேல சோறு வாங்கிக் குடுத்துட்டு வர வேண்டியதுதான? கூடக் கூட்டியாந்து வெச்சுக்குவாங்களா? வூடு எடுத்துக் குடுத்திருக்கியே… அதும் ஒன் காசுதான?”

“ஆமா”

“இப்டியே அடுத்தவங்களுக்கு செஞ்சுட்டே உக்காந்துரு. ஒன் மாமங்காரனுக்கு ஆப்பரேசன்னு மொத்த பணத்தையும் தூக்கிக் குடுத்த. எனக்கெல்லாம் அந்தாளு மேல இன்னும் காண்டு தீரல. அந்தாளு பொண்டாட்டி… என்னா கமுக்கமாக் காச வாங்கிக்கிச்சு. மத்த நேரம் ஒங்கிட்ட ஒரு வாத்தப் பேசிருக்கா அது?”

“அத்த அப்டிதா. தெரிஞ்சுதாக் காசு கொடுத்தேன். மாமாவுக்காக. அத்த வந்து எங்கிட்ட பேசுவாங்கன்னு எதுபாத்து இல்ல”

“சரி ஏதோ அவசரம்னுக் குடுத்தல்ல. அஞ்சு வருஷமாச்சே திருப்பிக் கொடுக்கணும்னுத் தோணுதா அந்தாளுக்கு?”

“நாந்தா வேணான்னுட்டேன். அவரு எனக்கு செஞ்சதுக்கு நன்றி கடனா இருக்கட்டும்”

“அடப் போப்பா”

“வாத்தைக்கு வாத்த அந்தாளு அந்தாளுன்றீங்க? நேருல அண்ணேன்னு வாய் நெறையக் கூப்டுறீங்க?”

“மரியாதையெல்லாம் இருக்கு. ஒனக்கு ஏதாவது நல்லது பண்ணிடணும்னு ஆசைய்யா. நம்மகிட்டக் குடுக்குறதுக்குக் காசு பணமெல்லாம் கெடையாது. அடிச்சுப் புடுங்கி சம்பாதிக்குறதில்ல. வரது வயித்துப் பாட்டுக்கு சரியாப் போவுது.

ஒத்த பொட்டப் புள்ளையப் பெத்து வெச்சுருக்கேன். சொந்தமா இருக்குறது வீடும் இந்த ஆட்டோவும்தா. வூட்டப் பொண்ணுக்குக் கல்யாண சீராக் குடுத்துடுவேன். அப்றம் எனக்கும் என் பொஞ்சாதிக்கும் கடைசி வரக் கஞ்சி ஊத்தப் போறது இந்த ஆட்டோதா.

நீ மூலக்காரன். எனக்கெல்லாம் ஒன்ன மாதிரி யோசிக்கத் தெரியாது. நல்லா வரணும்னு ஆச இருந்தா மட்டும் போதாது செந்திலு. அதுக்கு நம்மதா எதுனா ஸ்டெப்பு எடுக்கணும். இப்பவும் வுட்டன்னா இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு ‘ஆமா என்னத்த சொந்தமா கார் வாங்கிக்கினு? ட்ரைவராவே காலந்தள்ளுனா என்னா’ன்னுத் தோணிடும். நல்ல முடிவா எடு”

“இன்னொருத்தரு வீட்டுலப் போயிக் கை கட்டி நின்னு ட்ரைவரா வேலப் பாக்கணும்னு எனக்கொண்ணும் ஆச இல்லண்ணே. அந்தப் பொண்ணுக்கு ஒரு வழிப் பண்ணலன்னா நாந்தா ஒக்கார வெச்சு சோறு போட்டாகணும். ஆயுசுக்கும் செலவு பண்ணிட்டு உக்காந்திருந்தா நம்மப் பொழப்புக் கெட்டுப் போவும். அது இப்பவும் வேல வாங்கிக் குடுன்னுதா கேட்டுச்சு. நாந்தா சொந்தமா எதுனாப் பண்ணலாம்னு சொல்லி வெச்சுருக்கேன். எதாவது ஏற்பாடுப் பண்ணிட்டா நிம்மதியா இருக்கும்ணே”

“புரியுது. விசாரிச்சு சொல்றேன். ஆனா மொதல்ல கார் வாங்கு”

“யோசிச்சு சொல்றேண்ணே”

சேகர் சொன்னது போல் அன்று மாலையே விசாரித்து சொல்லிவிட்டார், காரின் விலையையும் தள்ளுவண்டியின் விலையையும். இப்போது முடிவெடுக்க வேண்டியது செந்தில்தான்.

தள்ளுவண்டி வாங்கினால் அதோடு செலவுக் கணக்கு முடிந்துவிடாது. கிரைண்டர் வாங்க வேண்டும். அரிசி, பருப்பு, காய் என்று அனைத்தும் வாங்க வேண்டும். எங்கேக் கடை போடுவதென்று தீர்மானிக்க வேண்டும்.

வருமானம் எவ்வளவு வருமென்று தெரியாது. சொந்தமாக துவங்கும் எந்தவொரு தொழிலிலும் ஆரம்பத்தில் அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாதென்று அவனுக்கும் தெரியும்.

இப்போது காரையும் வாங்கிவிட்டால் கையிருப்பு மொத்தமும் கரைந்துப் போகும். அதன்பிறகு கெளரிக்கும் சேர்த்துத் தன்னால் செலவு செய்ய முடியுமாவென்றுதான் அவன் யோசித்தான்.

சேகர் சொன்னதுபோல் இப்போது விட்டால் இனி திரும்பப் பணம் சேர்ப்பதற்கு எத்தனை நாட்களாகுமோ சொல்ல முடியாது. இதுபோல் மீண்டும் தவணைக்கு கார் கிடைக்குமா என்பது சந்தேகமே.

கௌரி முதல் நாள் அவனிடம் கேள்விக் கேட்டாள். நேற்றிலிருந்து அவனிடம் பேசுவதையே தவிர்க்கிறாள். செந்தில் கவனித்தான். அவளிடம் இப்போது எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லதென்றுப்பட்டது.

பரசுராமன் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் உறங்கிவிட்டு மாலை மீண்டும் போகலாமென்ற எண்ணம். பாஸ்கர் கடையைப் பார்த்துக் கொள்ள துவங்கியதிலிருந்து இது ஒரு கூடுதல் சலுகை. உச்சி வெயில் நேரத்தில் இரண்டு மணி நேர தூக்கம்.

கஸ்தூரி டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். பரசுராமனின் மனைவி. கணவர் உள்ளே நுழையவும் “இப்டி உக்காருங்க. உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றார்.

கஸ்தூரி இப்படி ஆரம்பிக்கும்போதெல்லாம் பரசுராமனுக்கு கிலியாகும். நிற்க வைத்துக் கேள்விக் கேட்டாலாவது சீக்கிரம் முடிய வாய்ப்புண்டு. உட்கார சொன்னால் பலத்த விசாரணைக்குத் தன்னைத் தயார் செய்வதாக அர்த்தம்.

“கண்ண சொருகுது கஸ்தூரி. செத்தப் படுத்து எந்திச்சு வரேன்”

“உக்காருங்கன்றேன்”

பரசுராமன் உட்கார்ந்துவிட்டார். இதற்கு மேல் மறுத்தால் தேவையில்லாத வாக்குவாதமாகும்.

“வீட்ட வாடகைக்கு விட்டுட்டீங்களா?”

“அதா நம்ம செந்திலு ரொம்ப வருஷமா இருக்கானே”

“நக்கலா? சைட் போர்ஷன வாடகைக்கு விட்டுட்டீங்களா?”

“எத்தினி நாளிக்குப் பூட்டியே போடுறது?”

“என்ன கேட்டீங்களா? யாருக் குடி வந்துருக்கா? எப்போ வந்தாங்க? இதெல்லாம் யாரோ சொல்லி நா தெரிஞ்சுக்க வேண்டிருக்கு”

“செந்திலு அவசரமாக் கேட்டாம்மா. சாவி குடுத்துட்டேன். அட்வான்ஸு எல்லாம் கரெக்டா குடுத்துட்டான். சொல்ல மறந்துட்டேன்”

“மத்தியானம் போட்ட சாப்பாட்டுல உப்பில்லன்னு அடுத்த நாள் ராத்திரி வரைக்கும் ஞாபகம் வெச்சு சொல்லத் தெரியுதே. இது மட்டும் மறந்துடுச்சோ? யாருக்குக் கேட்டான்?”

“யாரோ தெரிஞ்சப் பொண்ணாம்”

“அவனுக்கு நம்மள விட்டா யாரத் தெரியும்னுக் கேப்பீங்க. இப்போ என்ன புதுசா?”

“அவனுக்கு நம்மள விட்டா யாரும் இல்லதா. நம்மதா அவனப் பாத்துக்கணும். அதுல எந்த மாத்தமும் இல்ல”

“இத்தன வருஷமா செஞ்சுட்டுதான இருக்கு”

“நீ என்னத்தடி செஞ்ச அவனுக்கு? இல்ல கேக்குறேன் என்ன செஞ்சுக் கிழிச்ச? என்னைக்காவது நம்மள எதுப்பாத்து வந்து நின்னுருக்கானா? அவன் பொழப்ப அவன் பாத்துக்குறான். ஏதோ கூட வேலப் பாத்தப் பொண்ணு, வீடு வேணும்னான். குடுத்தேன். ஒனக்கென்ன? காசு வருதுல்ல?”

“காசு வருதுன்னா யாருக்கு வேணா வூட்டக் குடுக்குறதா? கூட வேல பாத்தப் பொண்ணுன்னாக் கூடவே கூட்டியாந்துடுவாங்களா?”

“ஒதவிப் பண்ணனும்னு நெனச்சு… அது சரி. ஒனக்கு ஒதவின்னா என்னான்னுத் தெரியுமா? ஒங்கிட்ட போயி சொல்லுறேன் பாரு”

“ஊரு என்னப் பேசுதுத் தெரியுமா?”

“என் அக்கா மவன் உத்தமன். ஊரப் பத்தி எனக்குக் கவலையில்ல”

பரசுராமன் எழுந்துப் படுக்கையறைக்குள் வந்துவிட்டார். அவருக்குக் கோபமிருந்தது. ஊர் என்ன பேசுமென்ற ஆதங்கமிருந்தது. அதை செந்திலிடம் கேட்டார். சேகரிடம் கொட்டித் தீர்த்தார். ஆனால் மனைவியிடம் விட்டுக் கொடுக்க முடியவில்லை. செந்திலிடம் மீண்டுமொரு முறைப் பேசிப் பார்க்கலாமா என்று யோசித்தார்.

செந்தில் கார் வாங்குவதென்று முடிவு செய்திருந்தான். இதற்கு முன்பும் இப்படி எல்லாம் விசாரித்து வாங்க நினைத்த நேரம் மாமாவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. இப்போதும் தடங்கல் என்றால் மனம் சோர்ந்துவிடும். எனவே முதலில் காரை வாங்கிவிட்டுப் பிறகு கௌரி பற்றி யோசிக்கலாமென்று நினைத்தான். சேகரிடம் சொல்லி மாலை பழனியைக் காண சென்று கொண்டிருந்தான்.

பாலக்கரையின் சந்து பொந்துகளில் ஆட்டோவை திருப்பி ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்தினார் சேகர். பழனி குள்ளமாயிருந்தார். கருப்பாயிருந்தார். நரைத்த தலையுடன் வெள்ளை வேஷ்டி சட்டையணிந்திருந்தார்.

“வா சேகரு. இந்தத் தம்பிக்குதா காரு வேணுமா?”

“ஆமா பழனி. பேரு செந்திலு”

“வண்டியெல்லாம் பக்கத்துல நம்ம எடத்துல நிக்குது. நடந்தே போயிடலாம் வாங்க. என்ன வண்டி வேணும்?”

“இண்டிகா. கொஞ்சம் புது வண்டியா இருந்தா நல்லாயிருக்கும்”

“இண்டிகா… ரெண்டு வண்டி நிக்குது. பாருங்க”

கேட்டில் நின்றிருந்த பையன் பழனிக்கு எழுந்து வணக்கம் வைத்தான். கேட்டை தாண்டிப் பெரிய மைதானம் போல் இருந்தது. மேலே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் கூரை. நிறைய கார் நின்றிருந்தன. “இண்டிகா சாவி ரெண்டு இருக்கும் பாரு. அபீஸ்லேந்து எடுத்துட்டு வா” என்று கேட்டில் நின்றவனுக்கு உத்தரவிட்ட பழனி உள்ளே சென்று ஓரிடத்தில் நின்றார்.

“இது ரெண்டு வருஷம் ஓடுன வண்டி. கிலோமீட்டர் கம்மியாதா போயிருக்கு. பக்கத்துல நிக்குறது அஞ்சு வருஷம் ஆகப் போகுது. அதுவும் கிலோமீட்டர் கம்மியாதா போயிருக்கு”

செந்தில் இரண்டு கார்களையும் சுற்றிப் பார்த்தான். நிறையக் கேள்விகள் கேட்டான். சாவி வந்ததும் காரை திறந்து உள்ளே உட்கார்ந்து ஆராய்ந்தான்.

“நா இத எடுத்துக்குறேன். ரெண்டு வருஷம் ஓடிருக்கு. எவ்ளோ புதுசா எடுக்குறோமோ அவ்ளோ வேலப் பாக்குறது கம்மியாகும்”

“சரிதா தம்பி. இருந்தாலும்… சேகரு நமக்கு தோஸ்துப்பா. நம்மள நம்பி வந்துட்டு… இந்த காரு அத விடப் புதுசு. ஆனா இதுல இஞ்ஜின் கொஞ்சம் அடியாயிருக்குப்பா. வியாபாரம்னுப் பாத்தா இத முதல்ல தள்ளிவிடணும்னுதா பாப்பேன். ஆனா ஒனக்கு இது வேணா. அஞ்சு வருஷமாகியிருந்தாலும் அந்த வண்டி செம கண்டிஷன்ல இருக்கு. வேல எதுமே வராது. நா கேரன்டீ தரேன். அதையே எடுப்பா”

“அப்ப நம்ம அதையே எடுத்துர்லாம் செந்திலு. என்னா சொல்லுற?”

“சரி. மொத்தமா ரேட் சொல்லுங்க”

“ஓனர்கிட்ட திரும்பப் பேசிப் பாத்துட்டு சொல்லுறேன். இன்னும் கம்மிப் பண்ண முடிஞ்சா நல்லதுதான? நாளைக்கு ரேட்டு சொல்லிடுறேன்”

“RC எம்பேருக்கு மாத்தி வண்டிக் கெடைக்க எத்தன நாளாகும்?”

“ஒரு வாரத்துல முடிச்சுரலாம். எதுக்கும் நீ ரெண்டு வாரம் கணக்கு வெச்சுக்கோயேன். முடிச்சுக் குடுத்துர்றேன். கேஷா?”

“ஆமா”

“நாளைக்கு சேகருக்கு கூப்ட்டு சொல்லிடுறேன். பாதி அமவுண்டு இப்போ குடுத்தாப் போதும். மீதி எத்தனத் தவண எவ்ளோ கட்டணும் எல்லாம் சொல்லிடறேன். கண்டிப்பா நல்லா வருவப்பா”

அதில் சந்தேகமில்லை. எப்படியாவது முன்னுக்கு வந்துவிடலாம். கௌரியிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது? சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாள்? அவளுக்குத் தற்காலிகமாக ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்துவிடலாமா? இல்லை சிறிது காலம் காத்திருக்க சொன்னால் சம்மதிப்பாளா?

பிடி காடு – 11

கௌரியின் மனநிலையை அவளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. செந்தில் கார் வாங்குவதாகச் சொன்ன அன்று தயக்கத்துடன் தான் விஷயத்தை எடுத்துச் சொன்னான். அப்போது அவனுக்காக சந்தோஷப்பட்டாள். இன்று காரை வீட்டிற்கு எடுத்து வரப் போகிறான். மனதில் அமைதியில்லாமல் தவித்தாள்.

தான் இன்னும் அவன் கையை நம்பிக் கொண்டு இருப்பதாலா? அவன் தன்னை விட நல்ல நிலைக்கு வந்துவிட்டானே என்ற பொறாமையா?  இன்று பூஜைக்காக வீட்டிற்கு வரவிருக்கும் அவன் நண்பர்கள் சொந்தங்களை எப்படி எதிர்கொள்வதென்ற பதட்டமா?

இன்னும் விடிந்திருக்கவில்லை. சீக்கிரமே பொழுது புலர்ந்துவிடும். எழாமல் இப்படியே படுத்திருந்தால் என்ன? உறக்கம் கலைந்திருந்தது. கண்கள் எரிந்தன. இரவு சரியாகத் தூங்காததால் இருக்கலாம்.

மகனைத் தூளியிலிருந்து எடுத்து மேலே கிடத்தியிருந்தாள். தாய்ப்பாலை மறக்கடிக்க நினைத்ததையெல்லாம் வெற்றிகரமாகச் செய்தாகிவிட்டது. எதற்காக? வேலைக்குப் போனால் பிள்ளையை கவனிப்பது கஷ்டமாக இருக்குமென்பதால் தானே? ஆனால் வேலைக்குப் போகவில்லையே. தான் மகனுக்கு செய்து கொண்டிருப்பது துரோகமாகப்பட்டது.

கதவு லேசாகத் தட்டப்பட எழுந்துச் சென்று திறந்தாள்.

“இன்னும் எந்திரிக்கலையா? கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்துடுவாங்க. நா கார் எடுக்கப் போறேன். இந்த கவர்ல பால் இருக்கு. டீ போட்டு வெச்சுக்கோ. இந்தா முன்னாடி வீட்டு சாவி. யாராவது வந்தா உக்கார வை”

“எனக்கு யாரத் தெரியும்னுக் கூப்பிட்டு ஒக்கார வெக்க சொல்லுற?”

“யாரு வந்தாலும் உக்கார வை”

“ம்ம்”

“என்ன ம்ம்?”

“பின்ன இப்டி சொன்னா?”

“ஒனக்கு மாமாவத் தெரியும். பாஸ்கர பாத்ருக்க. அத்த வருவங்களானெல்லாம் தெரியாது. அப்படியே வந்தாலும் அவங்களும் கண்மணியும் மாமா பாஸ்கரோட தான் வருவாங்க. சேகரண்ண வந்தா அவரே யாரு என்னன்னு சொல்லிடுவாரு”

“கண்மணி…”

“மாமா பொண்ணு. பாஸ்கரு தங்கச்சி”

“சேகரண்ண யாரு?”

“எனக்கு நெறைய ஒதவிப் பண்ணியிருக்காரு”

“இத்தனை பேரு வருவாங்களா?”

“இவங்கள மட்டும் தான் கூப்டேன். மத்த பிரெண்ட்ஸ் யாரையும் கூப்டல”

“ம்ம்”

“என்னாச்சு?”

“இவங்கல்லாம் என்னாக் கேப்பாங்களோன்னு ஒரே யோசனையா இருக்குதுய்யா. நீயும் எங்கனயோ விட்டுப் போறேன்ற. ஒண்டியா எப்டி சமாளிக்க?”

“யாரும் கடிச்சுத் தின்னுட மாட்டாங்க”

“நீ சுளுவா சொல்லுவ”

“எனக்கிதுக்கெல்லாம் நேரமில்ல. நா… இப்போ விட்டா கார் வாங்குற ஆசையே போயிடும்னு தான் வாங்கிட்டேன். கண்டிப்பா உன் வேலைக்கோ தொழிலுக்கோ ஏற்பாடுப் பண்ணுறேன்”

“நீ நல்லாருந்தா சந்தோஷம்தான்யா. காலங்காத்தால நல்ல நாளும் அதுவுமா மனசப் போட்டுக் கொழப்பிக்காத. நிம்மதியாப் போ. எனக்கு ஒண்ணும் செய்யாத வுட்றாவாப் போற. நேரம் பொறக்கும்யா”

“அடுப்பு இங்கருக்கு. அதான் உன்ன டீ…”

“ஒனக்கு செய்யாத வேற யாருக்கு செய்யப் போறேன்?”

“வரேன்”

பொறாமை இல்லையோ? அவன் முன்னுக்கு வர வேண்டுமென்று தான் மனம் விரும்புகிறதோ? உதவி செய்தான் என்பதாலா? அன்று தூளிக் கட்ட அவன் உதவாத போதும் அவன் பசியறிந்து உணவிட்டது எதனால்?

மனம் கேட்கும் கேள்விகள் திசை மாறி எங்கோ செல்ல பையைத் திறந்தாள். புதுப் புடவை எதுவுமில்லை. நல்ல புடவை என்று சொல்லுமளவுக்கும் எதுவுமில்லை. ஒன்றிருந்தது. அவளுடைய திருமணத்தன்று கட்டியது. புடவையை வருடினாள். மகன் கைத் தட்டி சிரித்தான். எடுத்து மேலே வைத்துப் பார்த்தாள். மடித்து பையின் அடியில் வைத்து வேறொரு புடவையை எடுத்துக் குளியலறைக்குப் போனாள்.

செந்தில் சொன்னது போல் சீக்கிரம் குளித்துக் கிளம்ப வேண்டும். ஆனால் மனம் சோர்ந்திருந்தது. ஒருவேளை கணவன் உயிரோடு இருந்திருந்தால் இப்படிக் கஷ்டப்பட வேண்டியிருந்திருக்காதோ?

முதலில் சேகர் வந்தார். தன்னை அறிமுகம் செய்து கொண்டார். முன் வீட்டில் உட்கார வைத்து அவர் கையில் சாவியைக் கொடுத்துவிட்டு வந்தாள்.

செந்திலின் பேச்சுக் குரல் கேட்டது. காரை பார்க்க வேண்டுமென்ற ஆசையில் வேகமாக இரண்டு கிளாஸில் தேநீரை ஊற்றி எடுத்துப் போனாள். வாசலில் கார் நின்றிருந்தது.

‘எம்புட்டுப் பெரிய காரு! அந்த வூட்டுல இத விடப் பெருசா இருந்துது. ஆனா இதுல இருக்க லட்சணம் அதுல இல்ல. ஆமா காருல என்ன லட்சணம்? ச்சீ நமக்கு அப்படித் தோணுதா இருக்கும். ஒரு தபா இதுலப் போவணும். என்னா இருந்தாலும் அது முதலாளி வூட்டு காரு. இது சொந்த காருல்ல… நம்ம காரா என்ன? அவுக காரு… மொதோ யாரக் கூட்டிப் போவாக? அவக மாமாவக் கூட்டிப் போவாகளா இருக்கும்… ஹ்ம்ம்…’

பாஸ்கர் வந்தான். ஒருமுறை அவன் கடைக்குச் சென்றதோடு சரி. செந்திலிடம் சொல்லியே தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டதால் அவன் தனக்கு உண்மையில் பரிச்சயமானவனா என்ற சந்தேகம்.

பாஸ்கர் கௌரி வாசலில் நிற்பாளென்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவள் குறித்துப் பேசியிருக்கிறான். பேசக் கேட்டிருக்கிறான். நேரடியாக யாரும் இதுவரை அறிமுகம் செய்துவைக்கவில்லை. அமைதியாக கேட்டை திறந்து உள்ளே வந்தான்.

என்ன செய்வதென்று புரியாமல் நின்றவள் கையிலிருந்த க்ளாஸ் ஒன்றை நீட்டினாள். செந்தில் வெளியே வந்தான்.

“வாசல்ல நிக்க வெச்சு டீ குடுப்பியா?”

“இல்ல நாந்தா கேட்டேன். குடுங்க” பாஸ்கர் அவள் கையிலிருந்து க்ளாஸை வாங்கிக் கொண்டான்.

“சேகரண்ணனுக்குக் கொண்டு போய்க் குடு”

“ஒனக்கு…”

“இப்போ வேண்டா”

கௌரி வீட்டினுள் போக “நீ டீ கேட்டியா?” என்று பாஸ்கரிடம் கேட்டான்.

“விடேன். அது என்ன பாத்து பயந்து நீட்டிடுச்சு”

“வீட்டுக்கு வந்தவங்கள எப்டி வரவேக்கணும்னுக் கூடத் தெரில”

“ஒனக்கு ரொம்பத் தெரியுதாக்கும்? அவளாவது டீ குடுத்தா. நீ வாசல்ல நிக்க வெச்சு விசாரண பண்ணிக்கிட்ருக்க”

“எதுக்கு அவளுக்குப் பரிஞ்சுப் பேசுற?”

“நா இல்ல. நீ பேசுற. அவள விட்டுக் குடுக்காம எல்லார்கிட்டயும் பேசுற”

“யார் சொன்னா?”

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காலையிலப் பெரிய வாக்குவாதமே நடந்து போச்சு. அப்பா ஒன்ன விட்டுக் குடுக்கல. இருந்தாலும் வருத்தப்படுறாரு. அம்மா வர மாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டாங்க”

“அத்த வரேன்னு சொல்லிருந்தாதா ஆச்சரியம்”

“சரி. வந்தவங்கள வரவேக்க கூடத் தெரியாதவள எதுக்கு வாசல்ல நிக்க வெச்ச? நீயே நின்னு…”

“இதுக்கு மேல என்ன செய்யணும்? எனக்காக என் வீட்டுக்கு வரவங்களுக்கு டீ போட்டுக் குடுக்குறா. மரியாதையா நடந்துக்குறால்ல? போதாது? பன்னீர் தெளிச்சு வரவேக்கணுமா?”

“விட்டுக் குடுக்க மாட்டேங்குறல்ல?”

“உண்மைய சொன்னேன்”

“நானும் உண்மையதா சொல்றேன்”

“உள்ள வா”

பாஸ்கரை நிமிர்ந்து பார்க்காமல் உள்ளே வந்தவன் சேகர் கௌரியிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க “என்ன?” என்று கேட்டான்.

“சும்மா விசாரிச்சேன் செந்திலு”

“நீ ரூமுள்ள போ”

“கொழந்தைய விட்டுட்டு வந்தேன். நா போயி…”

“போ”

பாஸ்கர் சேகரின் கையிலிருந்த க்ளாஸ் இரண்டையும் வாங்கிக் கொண்டு கௌரி சென்றுவிட “அந்தப் புள்ள ஊரு எதுன்னு கேட்டேன் செந்திலு” என்றார் சேகர்.

“ம்ம்”

“ஏன் நாங்க அவக்கிட்டப் பேசக் கூடாதா? எதுக்கு இப்போ அவளப் போக சொன்ன?”

“என்ன பேசப் போறீங்க?”

“சும்மா விசாரிக்கக் கூடாதா?”

“பாஸ்கரு விடு…”

“இருங்கண்ணே. சொல்லு. நாங்க ஏன் பேசக் கூடாது? விசாரிக்கக்கூடாது?”

“அவளப் பத்தி ஏற்கனவே சொல்லிட்டேன். என்னத்த விசாரிக்கப் போற?”

“ஒன் பிரச்சன தா என்ன? எதுக்கு அந்தப் புள்ளைய கூட்டியாந்த? எதுக்கு இப்டிப் பொத்திப் பொத்தி வெச்சுக்குற?”

“நா…”

“செந்திலு”

வாசலில் பரசுராமன் குரல் கொடுக்க வேகமாக வெளியே வந்தான் செந்தில். அவருடன் கண்மணியும் நின்றிருந்தாள்.

“வாங்க”

“காரெல்லா வாங்கிட்ட. பெரியாளாயிட்ட மாமா நீ”

“நல்லாயிருக்குதுப்பா. பூஜைக்கு நேரமாயிடுச்சு. எல்லாரையும் வர சொல்லு”

“இங்கதாம்பா இருக்கோம். ஆரம்பிக்கலாம்” பாஸ்கரும் சேகரும் வெளியே வர வீட்டினுள் எட்டிப் பார்த்தார் பரசுராமன்.

“கௌரிக்குத் தெரியுமா?”

செந்தில் அவளை அழைக்கப் போனான். மகனை மடியில் கிடத்தித் தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

“வா”

“ஹான்? எல்லாரும் வந்துட்டாங்களா?”

“ம்ம்”

“நா… நீ போயேன். பூஜைக்கெல்லாம் நா வரக் கூடாதுய்யா”

“எந்திரி”

“சொல்லுறதக் கேளு…”

“எந்திரி”

குழந்தையைத் தூக்கியபடி எழுந்து நின்றாள். செந்தில் சென்றுவிட மெல்ல வெளியே வந்தாள்.

கண்மணி முதல் முறையாக கௌரியை பார்க்கிறாள். காலையில் பெற்றோர்களுக்குள் நடந்த வாக்குவாதம் மூலம் விஷயத்தை அறிந்திருந்தாள்.

ஆண்கள் கூட்டத்தின் நடுவில் கண்மணியைக் கண்ட கௌரி அவளருகில் வந்து நின்றாள். அவள் என்னக் கேட்பாளோ என்று பயந்தவளுக்கு கண்மணி புன்னகைத்தது நிம்மதியளித்தது.

“என் பேரு கண்மணி”

“தெரியும்”

“எனக்கு ஒங்களப் பத்தி ஒண்ணும் தெரியாது. காலைல அப்பாவும் அம்மாவும் சண்டப் போட்டுக்கிட்டப்போ கேட்டேன்”

“சண்டப் போட்டாங்களா?”

“சண்டன்னா… அத விடுங்க. செந்தில் மாமா விஷயத்துல அப்பாவும் அம்மாவும் ஒத்துப் போனதே இல்ல. நா அப்டி சொல்லிருக்கக் கூடாது. எதும் நெனச்சுக்காதீங்க. சாரி”

“ஐயோ சாரி எதுக்கு சொல்லுறீங்க? நா… என்னால…”

செந்தில் இரு பெண்களும் பேசுவதை கவனித்துக் கொண்டே மாமா சொன்னவற்றைச் செய்து கொண்டிருந்தான்.

பூஜை பொருட்களை அவரே வாங்கி வந்திருந்தார். காரை நேராக வீட்டிற்கு எடுத்து வரப் போவதாக அவன் சொன்னபோது கோவிலுக்கு எடுத்துப் போகச் சொன்னார். அவன் மறுத்துவிட வீட்டில் வைத்தாவது பூஜை செய்ய வேண்டுமெனச் சொல்லிவிட்டார்.

“காருக்கு பொட்டு வெக்கணும்” என்றவர் மஞ்சள் குங்குமம் குழைத்த தட்டை நீட்ட அதை வாங்கப் போன கௌரியைப் புறக்கணித்து கண்மணியிடம் நீட்டினார்.

கௌரி உடனே கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். எல்லோரும் அவளையே பார்க்க கண்மணி தட்டை வாங்கி காரின் முன்புறமும் பின்புறமும் பொட்டு வைத்து வந்தாள்.

செந்தில் ஏதாவது சொல்வானென அவனைப் பார்த்த கௌரி அவன் அமைதியாக சூடம் ஏற்றிச் சுற்ற உள்ளே சென்றுவிடலாமென யோசித்த நொடி சூடத்தை அவள் முன்னால் நீட்டினான்.

“எனக்கு சாமி மேல நம்பிக்க இல்ல. அதா கோவிலுக்குக் கூடப் போவாம கார வீட்டுக்கு எடுத்தாந்தேன். நீதா எப்போ பாரு சாமி இருக்குதும்பியே. கும்புட்டுக்க. எல்லாருக்கும் நல்ல புத்தி வரணும்னு”

பரசுராமன் கையிலிருந்த மணியை காரின் மீது வைத்தார். செந்தில் எப்போதும் அவரிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ கோபத்தைக் காட்டியதில்லை. எந்தவொரு விஷயமும் பிடிக்கவில்லை என்றால் நேரடியாகச் சொல்வான். இன்று அவர் காணும் செந்தில் அவருக்குப் பரிச்சயமில்லாதவன். எதுவும் பேசாமல் நகர்ந்து வந்து வாசலில் விட்டிருந்த செருப்பை மாட்டிக் கிளம்பினார்.

செந்தில் அவரைத் தடுக்க முயலவில்லை. சூடத் தட்டை நீட்டியபடி நின்றான். கௌரி அங்கிருந்து ஓடிவிட நினைத்தாள். செந்திலின் பார்வை அவளைத் தடுத்தது.

“செந்திலு என்னப்பாப் பண்ணுற? மாமாவக் கூப்பிட கூட இல்லாம… ம்ம்ச்ச்… நா போயி பேசுறேன்” என்ற சேகர் கிளம்பிச் செல்ல அவன் இன்னும் தட்டை நீட்டியபடி நிற்க நெருப்பைத் தாவி தொடப் போன மகனைத் தடுப்பதற்காகக் கையை நீட்டியவள் பின் கையைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

கண்மணிக்கு செந்தில் பேசியது பிடிக்கவில்லை. தந்தையை அவன் அவமதித்ததை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒன்றும் பேசாமல் அங்கிருந்துக் கிளம்பக் கூடாதென்று முடிவெடுத்தவள் “எல்லாரும் உள்ள வாங்க” என்றாள்.

செந்தில் சூடத் தட்டை அவள் முன்னால் நீட்டினான். “எனக்கு ஏற்கனவே புத்தி நல்லாதா இருக்கு” என்றவள் உள்ளே சென்றுவிட பாஸ்கர் முன்னால் வந்து சூடத்தின் மேல் கை நீட்டிக் கண்களில் ஒற்றி “உள்ள வா” என்று சொல்லி அவனைத் தாண்டிப் போனான்.

கண்மணி போல் அவனுக்குக் கோபம் இல்லை. வருத்தம் தான். காலையிலிருந்து செந்திலின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தவன் அவனிடம் சில கேள்விகளைக் கேட்க நினைத்தான். தந்தை வருவதற்கு முன் கேட்டக் கேள்வியிலிருந்து துவங்க முடிவெடுத்தான்.

“ஏன்யா?”

“என்ன ஏன்?”

“எதுக்கு அப்டிப் பேசுன? வயசுல எவ்ளோ பெரியவரு? அதும் இத்தினிப் பேரு முன்னாடி… அவருப் புள்ளைங்க முன்னாடி வெச்சு எதுவுமே யோசிக்காம இப்டி சொல்லிட்டியே… அவருக்கு எவ்ளோ அவமானமா இருக்கும்? அவருப் புள்ளைங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்?”

“அவரும் வயசுக்கேத்த மாதிரி நடந்துக்கணும். நீ வா”

“நா சொன்னாக் கேப்பியா?”

“என்ன?”

“உள்ள அவங்க ரெண்டுப் பேரும் திட்டுனா அமைதியாக் கேட்டுக்கையா”

“நா எதுக்குக் கேக்கணும்? அவங்க யாரு என்ன திட்ட?”

“நீ யாரு அவக அப்பனத் திட்ட?”

“எனக்கு உரிம இருக்கு”

“அதுங்களுக்கும் ஒம்மேல உரிம இருக்குதுல்ல?”

“இப்போ என்ன பண்ணணும்?”

“கோவப்படக் கூடாது”

“முயற்சிப் பண்ணுறேன். வா”

“பூஜ சாமானெல்லாம் எடுத்துட்டு வரேன்”

“எங்கூடவே வா. சீக்கிரம் எடு”

எல்லாவற்றையும் சேகரித்து எடுத்தவள் அவனுடனேயே வீட்டினுள் நுழைந்தாள்.

“அப்பாவ எதுக்கு மாமா அப்டி சொன்ன?”

“மூட நம்பிக்கன்னுத் தெரிஞ்சும் நம்பிக்கிட்ருந்தா?”

“எனக்கும் அவருப் பண்ணதுப் புடிக்கல. கஷ்டமா இருந்துது. அதுக்காக வீதில வெச்சு இப்டிப் பேசுவியா மாமா. காலையில வீட்டுல நடந்த ரகளையில மனசொடிஞ்சுப் போய் வந்தாரு. அம்மாக்கிட்ட ஒன்ன எம்புட்டு ஒசத்தியாப் பேசுனாருத் தெரியுமா?”

“அதுக்காக யார எப்டி நடத்தணும்னுத் தெரியாதா?”

“யாரு மாமா இவங்க? சொல்லுத் தெரிஞ்சுக்குறேன். யாரு இவங்க?”

“நீ வீட்டுக்குப் போ”

“ஒனக்கே பதில் தெரியாத ஒரு உறவ எங்கப்பா மதிக்கணும்னு எதிர்ப்பாக்குற. நீ செஞ்சதுத் தப்பு மாமா. ஒழுங்கா மன்னிப்புக் கேளு. அந்த மனுஷன் இதெல்லாம் தாங்க மாட்டாரு. வரேன். நீ வரியாண்ணே?”

“நேராக் கடையத் தொறக்கப் போயிடுவேன். நீ வீட்டுக்குப் போ”

கண்மணி சென்றுவிட “நீங்க உங்க வீட்டுக்குப் போங்க. நான் இவன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்” என்றான் பாஸ்கர்.

பூஜைப் பொருட்களை ஒரு ஓரமாக வைத்துவிட்டு கௌரி போக “இப்பவும் கண்மணி கௌரிகிட்டக் கேள்விக் கேட்டிருந்தா அவள பதில் சொல்ல விட்டிருக்க மாட்டல்ல?” என்றான்.

“அவளக் கேள்விக் கேக்க யாருக்கும் உரிம இல்ல”

“யாருக்கும் உரிம இல்லையா? எங்களுக்கு உரிம இல்லையா? ஒனக்கு இருக்கா?”

“இப்போ என்ன ஒனக்கு?”

“கண்மணி கேட்டது, சொன்னது எல்லாத்தையும் நல்லா யோசி. நா பேச நெனச்சத அவளே பேசிட்டுப் போயிட்டா. வரேன்”

கண்மணி வீட்டினுள் நுழைவதைக் கண்ட பரசுராமன் நாற்காலியிலிருந்து எழுந்து அறைக்குள் போனார். கஸ்தூரி சமையலறைக்குள் ஏதோ புலம்பிக் கொண்டிருக்க அறைக்குள் போனாள். மெத்தையில் கண் மூடிப் படுத்திருந்த தந்தையைப் பார்க்க மனம் கனத்தது.

பிடி காடு – 12

முகத்தில் மோதிச் சென்ற காற்று அதன் குளுமையை இமை மூடி ரசிக்க வைத்தது. கண் விழிக்க அவளுக்கும் மனமில்லை. கோடைக் காலத்தில் இப்படியொரு ரம்மியமான நாளும் உண்டோ? அதிகாலையில் இருந்த சூழலுக்கும் இந்த நொடிக்கும் தான் எத்தனை வித்தியாசம்?

திருச்சியின் எல்லையைத் தாண்டி கார் எங்கோ சென்று கொண்டிருந்தது. எங்கே என்று கௌரி கேட்டதற்கு செந்தில் பதில் சொல்லவில்லை. பாஸ்கர் எப்போது கிளம்பினானென்று தெரியாது. செந்தில் வாசலில் வந்து நின்றபோது அவன் முகம் வாடியிருக்கிறதா என்று ஆராய்ந்தது நினைவு வந்தது.

“ரொம்பத் திட்டிட்டாங்களா?”

“இல்ல. கார் எடுத்துட்டு எங்கயாவது போகணும். வரியா? வீட்டுள்ளயே அடஞ்சுக் கெடக்குறல்ல?”

“நானா? மொதோ ஒம்மாமாவக் கூட்டிப் போவன்னு நெனச்சேன். எங்க?”

“இப்போ அவரு வர மாட்டாரு. அவரு வர வரைக்கும் என்னாலக் காத்துக் கெடக்க முடியாது. வரியா?”

“வீட்டப் பூட்டிட்டு வரேன்”

செந்தில் காரில் காத்திருந்தான். பின்னிருக்கையில் அமரப் பிடிக்கவில்லை. ‘அப்போ அவக டிரைவரு. பின்னாடி ஒக்காந்துப்  போனேன். இது அவக காரு. நா பின்னாடி ஒக்காந்தா நல்லாருக்காது’ முன்னிருக்கையில் அவள் அமர்ந்ததற்கு அவன் எதுவும் சொல்லவில்லை.

“தூங்கிட்டியா?”

“ம்ம்?? இல்ல”

“எறங்கு”

ஒரு டீ கடையைத் தவிர வேறு எதுவும் இல்லாத நெடுஞ்சாலையில் எதற்காக காரை நிறுத்தி இறங்கச் சொல்கிறானென்று யோசித்தபடி இறங்கினாள் கௌரி.

“டேய் செந்திலு… எப்டி டா இருக்க? எம்புட்டு நாளாச்சு? இந்தப் பக்கம் ஆளையே காணும்னு நேத்துக் கூட நெனச்சேன் மாப்ள. வா வா”

“நேரம் கெடைக்கல பழனி. எப்டி இருக்க? கட எப்டிப் போவுது?”

“இந்த பக்கம் வண்டி ஓடுற வரைக்கும் நம்ம வண்டியும் ஓடும் மாப்ள. இவங்க… சொல்லாமக் கொள்ளாமக் கல்யாணம் கட்டிட்டியா என்ன?”

“தெரிஞ்சப் பொண்ணு. டீ போடேன்”

“வாங்க. ஏன் அங்கயே நிக்குறீங்க?”

கௌரி கார் அருகிலேயே நிற்க “வா. இப்டி பெஞ்சுல உக்காரு” என்றழைத்தான்.

“தெரிஞ்சவகக் கடையா?”

“கூடப் படிச்சவன். ரொம்ப வருஷ தோஸ்து”

“புது காரா இருக்கு? எப்பயும் ஓனர் வண்டி எடுத்துட்டு வர மாட்டியே மாப்ள?”

“கார் வாங்கிட்டேன்”

“வாங்கிட்டியா? எப்போ?”

“இன்னைக்குதான் எடுத்தாந்தேன். மொதோ இங்கன வரணும்னுத் தோணுச்சு”

“அடப்பாவி அத மொதல்ல சொல்ல மாட்டியா? டீ போடுன்ற? இரு ஸ்வீட் எதுனா செய்றேன். எது நடந்தாலும் மொதோ இங்கன தான வர? என்ன பாக்கவா வர? இங்க…”

“பேசாம வேலையப் பாக்குறியா? டீ குடு மொதல்ல”

“இங்க என்ன? ஏதோ சொல்ல வந்தாக?”

பழனி டீ கொண்டு வந்து கொடுக்க க்ளாஸை பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் செந்தில். அவன் பதில் சொல்லப் போவதில்லை. கௌரி ஊதி ஊதித் தேநீரை பருகினாள்.

“ச்ச கடைல எதுமே இல்ல. ரெண்டு நிமிசம் இரு மாப்ள. போயி ஸ்வீட்டு வாங்கிட்டு தோ வந்திடுறேன்” என்ற பழனி சட்டையை மாட்டியபடி ஓடினான்.

“டீ ஆறிடும். குடிய்யா”

“சில நேரம் தோணும். எதுமே பண்ணாம இருந்துட்டா இந்த நிமிஷம் ஒறஞ்சுப் போயி அப்டியே நின்னுடாதான்னு. ஒனக்கு அப்டி தோணிருக்கா கௌரி?”

‘கௌரி… மொதோ தடவ எம்பேர சொல்லுறாக. முன்னாடி சொல்லிருக்காகளா? இல்ல. எப்பயுமே வா போன்னுதான் பேசுவாக’

“என்ன யோசிக்குற?”

“புடிச்ச விஷயத்தத் திரும்பத் திரும்ப நெனச்சுக்குவேன். எங்க அப்பாரு பேசுனது செஞ்சதெல்லாம் அடிக்கடி நெனப்பு வரும். சின்னப் புள்ளையாவே இருந்துட்டா நல்லாருக்கும்னுத் தோணும். எதுமே பண்ணாம இருந்தா காலம் ஒறஞ்சுப் போயிடுமா என்ன? வாழ்க்க ஓடிட்டே தான் இருக்கும். நம்மளும் கூட சேந்து ஓடிட்டே தான் இருக்கணும்”

“நெனச்சுப் பாத்துட்டே இருந்தாப் போதுமா? அந்த நெனப்புத் தர வலிய எப்டி மறக்குறது?”

“ஏன் மறக்கணும்? நீ ரொம்ப சந்தோஷமா இருந்த நேரத்த நெனச்சுப் பாருய்யா. அதுல சின்னதா ஒரு வலி இருக்கும். அப்டி தான் சோகமும். நீ கதறி அழுத நேரத்துக்கு முன்னாடியோ பின்னாடியோ ஏதோ ஒரு சந்தோஷம் கண்டிப்பா இருக்கும்”

“சந்தோஷமும் சோகமும் தனி தனி இல்லன்னு சொல்றியா?”

“அப்டியெல்லாம் இருந்தா மனுஷனுக்குக் கிறுக்குப் புடிச்சுடும்யா”

“கொழந்தையக் குடு. ரொம்ப நேரமா அவன வெச்சுக்கிட்டு ஒரு க்ளாஸ் டீ குடிக்குறதுக்கு மல்லுக்கட்டுற”

குழந்தையை வாங்கி மடியில் அமர்த்திக் கொண்டான். அவ்வளவு நேரம் கௌரியை டீ குடிக்க விடாமல் செய்து கொண்டிருந்த குழந்தை செந்திலின் மடியில் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“என்னைக்காவது நீ ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கியா கௌரி?”

“சின்னப் புள்ளையில. பெருசாகப் பெருசாக எதுக்கு சந்தோஷப்படணும் எதுக்கு வருத்தப்படணும்னுப் புரியாமப் போயிடுச்சு. இன்னைக்கு நீ நெறையப் பேசுற. நெறைய யோசிக்குறியா?”

“எப்பயும் போலத் தான் பேசுறேன்”

“இல்ல. எம்பேரு சொல்லி இன்னைக்குதா கூப்பிடுற. புள்ளைய நீயாத் தூக்குனதில்ல. அது கூட ஒனக்கு ஒரைக்கல. ஏதோ நெனப்புல என்னமோ பேசிட்ருக்க. இந்த எடத்துல என்னமோ இருக்குப் போலருக்கு”

“இருந்துது. என் சந்தோஷம். இப்போ இல்ல. வலி மட்டும் தான் ஞாபகத்துல இருக்கு. ஆனா நீ சொல்லுற மாதிரி வலி மட்டும்னு சொல்லிட முடியாது. இப்போ புரியுது. ஒருவேள ஒங்கூட இன்னைக்குப் பேசிருக்கலன்னா வாழ்க்கப் பூரா அந்த வலிய மட்டுமே நெனச்சுட்ருந்திருப்பேன்”

“எனக்கு ஒண்ணும் புரியல. நீ நெறையப் பேசுறியே தவிரத் தெளிவா எதும் சொல்ல மாட்ற”

“கட ஒண்ணும் பக்கத்துல இல்ல. அதான் நேரமாயிடுச்சு. சாரி மாப்ள. சூடா அதிரசம் வாங்கியாந்தேன். சாப்பிடுங்க”

மூச்சிரைக்க வந்த பழனி ஒரு காகிதப் பொட்டலத்தை பெஞ்சில் கௌரிக்கும் செந்திலுக்கும் இடையில் வைத்தான்.

“நீயும் எடுத்துக்கோ”

“காரு வாங்குனியே… ஒரு ஸ்வீட் கொண்டாந்து நீட்டி ‘மாப்ள எடுத்துக்கோடா. நா காரு வாங்கிட்டேன்’னு சொல்லத் தெரியுதா? நா வாங்கியாந்தத எனக்கே குடுத்து ஒபசாரம் பண்ணுற. எல்லாம் நேரம். உங்களப் பத்தி எதுமே கேக்கலையே. பேரு என்ன?”

“கௌரி” என்றான் செந்தில்.

“எந்த ஊருங்க? செந்தில எப்டித் தெரியும்?”

“அதத் தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன பண்ணப் போற?”

“அவங்களக் கேள்விக் கேட்டா நீ பதில் சொல்லுற?”

“சரி நாங்கக் கெளம்புறோம். நேரமாயிடுச்சு”

“அதுக்குள்ளயா?”

“வேல இருக்கு. வரோம்”

“டீ ரொம்ப நல்லா இருந்துச்சு. அதிரசமும்”

“வா வா. அதெல்லாம் இவன்கிட்ட சொல்லணும்னு அவசியமில்ல”

“நீயும் சொல்ல மாட்ட. சொல்லுறவங்களையும் ஏன் விட மாட்டேங்குற? மாறவே மாட்ட மாப்ள நீ”

பழனி பேசியதை செந்தில் காதில் வாங்கியதாகக் காட்டிக் கொள்ளவில்லை. திரும்பி வரும் வழி முழுவதும் அமைதியாக இருந்தான்.

கௌரி வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள். இப்போதிருக்கும் இடம் நிம்மதியளிக்கிறதா? தெரியாது. இங்கிருந்து போக வேண்டுமா? இங்கேயே இருந்துவிட ஆசையா? தெரியாது. இந்த நிமிடம் வேறு எதுவும் வேண்டாம். அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகிவிட்டன. அடுத்து?

“காலைல கண்ண மூடித் தூங்குன. இப்போ கண்ணத் தொறந்து தூங்குற”

“ம்ம்? வீடு வந்திடுச்சா?”

“எனக்கு சாப்பாடு வேண்டாம். வெளிலப் போறேன். வர ராத்திரி ஆகும். வீட்டு சாவி நீயே வெச்சுக்கோ”

“பாத்துப் போயிட்டு வா”

“நீ பத்திரமா இரு”

முதலில் எங்குச் செல்வதென்று தெரியாமல் சுற்றிய செந்தில் சேகரை பார்க்கப் போனான். வாழ்வில் அனேக விஷயங்களில் சுயமாக முடிவெடுப்பவன் எப்போதேனும் அறிவுரைத் தேவைப்பட்டால் சேகரிடமே சென்றிருக்கிறான். அவருக்கு எல்லாம் தெரியும், சரியான வழிக்காட்டுவார் என்பதால் அல்ல. தன் மீதுள்ள அக்கறையால் ஒருபோதும் தவறான அறிவுரை வழங்கமாட்டார் என்பதால்.

சேகருக்கும் செந்திலிடம் கேட்க நிறையக் கேள்விகள் இருந்தன. காலையில் பரசுராமனின் பின்னால் போக அவர் பேச மறுத்துவிட்டார். செந்திலிடமாவது பேச வேண்டும் என்றெண்ணியவருக்கு அவன் தன்னைக் காண வந்ததும் நிம்மதியே.

இருந்தபோதும் இருவருக்கும் எப்படிப் பேச்சைத் துவங்குவதென்று தெரியவில்லை. அமைதியாக இருந்தார்கள்.

“மாமா…”

“நா ட்ராவல்ஸ் ஆரம்பிக்கலாம்னு யோசிக்குறேன்”

“ட்ராவல்ஸா?”

“ஆமாண்ணே. நீங்க என்ன நெனைக்குறீங்க?”

“எதனால இப்டி யோசிச்ச?”

“யார்கிட்டயும் கை கட்டி நிக்க வேணாம்னு தான கார் வாங்குனேன்? அப்போ ட்ரவல்ஸ் ஆரம்பிக்காம?”

“கை கட்டி நிக்குறதுக் கேவலமில்ல செந்திலு. இன்னைக்கு கை கட்டி நிக்க யோசிக்குறவன் நாளைக்கு கால் மேல கால் போட்டு அதிகாரம் பண்ண தகுதியில்லாதவன். ட்ராவல்ஸ் ஆரம்பிக்கலாம். அதுக்கு நெறைய கார் வேணும். ஒரு கார் வெச்சு நீ ட்ராவல்ஸ் ஆரம்பிச்சு என்ன பண்ணப் போற? லாங் மட்டும் ஓட்டலாம்னு நெனக்குறியா?”

“லாங் எல்லாம் நா போ மாட்டேண்ணே. கண்ணு முழிக்குறதும் ஒத்து வராது. ஊர் ஊரா சுத்துறதும் ஒத்து வராது”

“பின்ன? ஒரு காரு வெச்சுக்கிட்டு நீ ட்ராவல்ஸ் பதிவுப் பண்ணணும்னா அதுக்கே எம்புட்டு செலவுப் புடிக்கும். ஒன் பேரு வெளிலத் தெரியணும்னா வெளம்பரம் பண்ணணும். அந்த செலவு வேற. வர எல்லா சவாரியும் ஒரு காரு வெச்சுக்கிட்டு உன்னால ஓட்ட முடியாது. எப்பக் கேட்டாலும் காரில்லன்னு சொல்லுறாங்கன்னு ரொம்ப சீக்கிரம் பேருக் கெட்டுப் போவும்”

“நா இதெல்லா யோசிக்கலண்ணே”

“நீயா இப்டி சொல்லுற? ஆச்சரியமா இருக்குப்பா. என்னாச்சு ஒனக்கு? எடுத்தோம் கவுத்தோம்னு முடிவுப் பண்ணுற ஆளு இல்ல நீ. ஆனா இப்போலாம் அப்டி நடந்துக்குற. மாமாவ போய்ப் பாத்தியா?”

“ம்ம்ஹும்”

“ஏன்? அவரு ஒன் விரோதியா? இல்ல ஏதோ சின்னதாத் தப்புப் பண்ணிட்டாருன்னு அவரான்டப் பேசுறத நிறுத்திடப் போறியா?”

“பேசுறேன்”

“நேரா மாமா வூட்டுக்குப் போ. பாவம்யா அந்த மனுஷன். சொந்தப் புள்ளைங்கத் திட்டிருந்தாக் கூட இம்புட்டு வெசனப்பட்டிருக்க மாட்டாரு. மூஞ்சித் தொங்கிப் போச்சு. பேசு செந்திலு. கோவமா இருந்தாலும் நறுக்குன்னு நாலுக் கேள்விக் கேட்டுட்டு வந்துடு. அத்தோட முடிஞ்சுப் போவும்”

“ம்ம்”

“ட்ராவல்ஸ் ஆராம்பிக்குறதப் பத்தி யோசிக்குறதுக்கு இது நேரமில்ல செந்திலு. போய் எதுனா ஒரு ட்ராவல்ஸ் கம்பனில பேசு. பேருப் பதிஞ்சுட்டு வா. கொஞ்ச நாளு இப்டியே போவட்டும். எப்டி பிக்கப் ஆவுதுன்னு பாத்துட்டு முடிவுப் பண்ணிக்கலாம்”

“ம்ம்”

“இன்னைக்கு என்னமோ ஒண்ணும் பேசவே மாட்டேங்குற. சரி கெளம்பு. மாமாவப் பாரு”

‘இன்னைக்கு நீ நெறையப் பேசுற’ கௌரியின் வார்த்தைகள் நினைவு வர தலையசைத்துக் கிளம்பினான்.

கௌரிக்கு வீடு வேண்டும் என்பதைக் கூட அவரிடம் கேட்க இத்தனை தயங்கவில்லை. இன்று அவரிடம் பேச ஏன் இவ்வளவு தயக்கம் என்று புரியவில்லை. இருப்பினும் சேகர் சொன்னது போல் பேசாமாலே இருந்துவிட முடியாது. காரை அவர் வீடு நோக்கிச் செலுத்தினான்.

கௌரி அவள் வீட்டு வாசலில் மாலை நேரத்து மஞ்சள் வானை ரசித்தபடி அமர்ந்திருந்தாள். இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று பொழுதுப் போகவில்லை. இத்தனை நாட்களாக இல்லாத வித்தியாசம் என்ன என்று யோசித்தாள். செந்தில் அவளிடம் அதிகம் பேசியதாகக் கூட இருக்கலாம். அவன் அப்படி ஒன்றும் அதிகம் பேசிவிடவில்லையே.

வீட்டினுள் போகலாம் என்று எழுந்தவள் கேட்டை திறந்து கொண்டு கண்மணி வருவதைக் கண்டு அப்படியே நின்றாள்.