Pizhaiye Thiruthamaaga – Full novel

Pizhaiye Thiruthamaaga – Full novel

பிழையேத் திருத்தமாக

1

அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலின் படிக்கட்டுகளை இரண்டிரண்டாக தாண்டி ஏறி வந்தான் ரோஹன் (Rohan). கதவைத் திறந்து உள்ளே வந்ததும் ac யின் குளிர்ச்சியை ஒரு முறைக் கண்ணை மூடி அனுபவித்தான்.

நல்ல உயரத்தில், கோதுமை நிறத்தில், கட்டுடலுடன், டார்க் ப்ளூ கலர் லோ வெயிஸ்ட் ஜீனும், அவன் நிறத்தை எடுத்துக் காட்டும் அடர் பச்சை நிற ரவுண்டு நெக் டி ஷர்ட்டும், ஸ்போர்ட்ஸ் ஷூவும் அணிந்திருந்தான்.

வலது pant பாக்கெட்டில் கூலேர்ஸ் வைத்து, வலக் கையில் i phone பிடித்து, இடது கை கட்டை விரலை பாண்ட் பாக்கெட்டில் விட்டிருந்தான். தலைமுடியை அங்கங்கே கலரிங் மூலம் ஹைலைட் செய்திருந்தான். எல்லோரையும் ஒரு அலட்சியப் பார்வை பார்த்துக் கொண்டு கண்களில் சிரிப்புடன் நடந்துச் சென்றான்.

நேராக இரண்டாம் தளத்தில் இருக்கும் புட் கோர்ட்டிற்கு சென்ற ரோஹன் கண்களை சுழல விட்டான். அவனை நோக்கி கை அசைத்த தன் நண்பனுக்கு பதிலுக்கு சிரித்துக் கை அசைத்து விட்டு அவன் அமர்ந்திருந்த டேபிளில் போய் அவனுக்கு எதிரில் அமர்ந்தான். அந்த டேபிளின் அருகில் செல்லும் போது தான் அவன் நண்பன் தனியாக அமராமல் இரு பெண்களுடன் அமர்ந்திருந்ததைக் கண்டான்.

தன் நண்பனைக் கேள்வியாகப் பார்த்த ரோஹனுக்கு பதில் சொல்லும் விதமாக அவர்களை அறிமுகம் செய்து வைத்தான் அவன் நண்பன். “ரோஹன், இது என் பிரெண்ட் ஷீபா (Sheeba). ரொம்ப நாளைக்கப்றம் இன்னைக்கு தான் டா இங்க மீட் பண்ணேன். அதான் நம்ம கூட சாப்பிட வர சொன்னேன்… இவங்க அவளோட பிரெண்ட் அனஹா (Anaha). இது ரோஹன்” என்றான். இருவருக்கும் பொதுவாக தலை அசைத்து சிரித்து “ஹலோ” என்றான் ரோஹன். அவர்களும் சிரித்து “ஹலோ” என்றனர்.

தன் நண்பனிடம் திரும்பிய ரோஹன் “சுதீஷ் (Sudheesh) இன்னும் வரலையா பிரமோத் (Pramodh)?” என்றான். “இப்ப தான் மெசேஜ் பண்ணான். அதோ வந்துட்டான் பாரு…” என்றான் பிரமோத்.

“சாரி மாப்ள… டிரப்பிக்ல மாட்டிக்கிட்டேன் டா” என்று கூறி ரோஹன் அருகில் அமர்ந்தான் சுதீஷ். அந்த இரு பெண்களையும் சுதீஷிற்கு அறிமுகம் செய்து வைத்தான் பிரமோத். அதோடு “இவன் சுதீஷ். ஒரு MNCல வேலைப் பார்க்கிறான்” என்று தன் நண்பனையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

ஷீபா “பிரமோத் நீ பத்திரிக்கைத் துறைல வேலைப் பார்க்கற. அப்போ நீங்க 3 பிரண்ட்சும் 3 பீல்ட்ல வேலை பார்க்கறவங்களா?” என்றுக் கேட்டாள். அதற்கு பிரமோத் “ஆமா. நாங்க 3 பேரும் காலேஜ் பிரண்ட்ஸ்” என்றான்.

பின்னர் அனைவரும் சாப்பிடத் தொடங்கும் போதே பிரமோத்தின் மொபைலுக்கு கால் வந்தது. சற்றுத் தள்ளி நின்று பேசியவன், பரபரப்புடன் வந்து “ஒரு முக்கியமான வேலை. எடிட்டர் கூப்பிட்டார்…” என்றுக் கூறி கொஞ்சம் தயங்கி, பின் ஷீபாவைப் பார்த்து “ஷீபா நீ என் கூட வர முடியுமா? இப்போ என் கூட ஒரு பொண்ணு இருக்கறது அவசியம். நான் போற இடம் அப்படி. நீ இருந்தா எனக்கு கொஞ்சம் ஈசியா இருக்கும். ப்ளீஸ்…” என்றான்.

“சரி போலாம்” என்று பிரமோதைப் பார்த்துக் கூறிய ஷீபா திரும்பி “அனஹா நீ சாப்பிட்டு கெளம்பி வீட்டுக்கு போயிடு. சாரி டி. ஏதோ அவசரம் போல…” என்றுக் கூறி அவளது பையை எடுத்துக் கொண்டுக் கிளம்பினாள்.

ப்ரமோத்தும் தன் நண்பர்களிடம் சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டான். அவனுடைய பத்திரிகை துறையில் இது போன்ற அவசர அழைப்புகள் அவ்வபோது வரும் என்றுத் தெரிந்து ரோஹனும் சுதீஷும் எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தனர்.

அனஹா ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள். எப்படி இப்போது தான் அறிமுகமான இரண்டு ஆண்களுடன் தனியாக உணவு உண்பது? பாதி பர்கர் சாப்பிட்டு முடித்திருந்தாள். இப்போது இப்படியே எழ முடியாது. இதை மட்டும் சாப்பிட்டு முடித்துவிட்டுக் கிளம்பி விடலாம் என்று யோசித்துக் கொண்டே எதிரில் இருக்கும் இருவரையும் பார்த்தாள்.

ரோஹன் அவனுடைய பர்கரை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சுதீஷ் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்தவுடன் “நிதி (Nidhi) தான் போன் பண்ணா. பிரண்ட்ஸ் உங்கக் கூட இருக்கேன்னு தெரிஞ்சா பொலி போட்டுடுவா டா… நான் கெளம்பறேன் டா. வரேன் அனஹா” என்றுக் கூறி அவனும் சென்றுவிட்டான்.

இப்போது அனஹாவிற்கு இன்னும் சங்கடமாகியது. இதுவரை அவள் இப்படி ஒரு ஆணுடன் தனியாக வெளியே வந்ததில்லை. ஏற்கனவே மெதுவாக உள்ளே இறங்கிக் கொண்டிருந்த பர்கர் இப்போது முற்றிலுமாக தொண்டைக்குள் இறங்க மறுத்தது.

“What happened dolly?” என்ற குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள் அனஹா. அவளைப் பார்த்து சிரித்து மீண்டும் அந்த கேள்வியைக் கேட்டான் ரோஹன்.

“என்னது dolly ஆ???” என்று மனதுக்குள் நினைத்த அனஹா “Nothing… I need to go” என்றாள். “அப்போ நாங்கல்லாம் போக வேண்டாமா? Complete your burger. ரெண்டு பேருமேக் கெளம்பலாம்” என்று சிரிப்பு மாறாமல் சாவகாசமாக அமர்ந்து பர்கரை சுவைத்துக் கொண்டேக் கூறினான் ரோஹன்.

அனஹாவிற்கு எரிச்சலாக வந்தது. வேகமாக தனது பர்கரை உண்டு முடித்து எழுந்தாள். ரோஹனும் எழுந்தான். ஐந்தரை அடி உயரத்தில், fair complexion என்று சொல்லக் கூடிய நிறத்தில், சிவப்பு நிற சுடிதாரில் முடியை விரித்து விட்டிருந்தாள் அனஹா. இடை வரை நீளும் கூந்தல் இல்லை என்றாலும் நல்ல அடர்த்தியாக இருந்த கூந்தலை நேர்த்தியாக வெட்டி சீவி இருந்தாள்.

“Ultra modern னும் சொல்ல முடியாம பட்டிக்காடுனும் சொல்ல முடியாம பார்க்கிறவங்கள கவர்ந்திழுக்கும் அழகி தான்… தூரத்துலேந்து பாத்தத விடக் கிட்ட பாக்கும்போது இன்னும் அழகா இருக்கா…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ரோஹன்.

தனது பையிலிருந்து மொபைலை எடுத்து நிமிர்ந்த அனஹா தன்னையே அளவிட்டுக் கொண்டிருக்கும் ரோஹனை கண்டாள். “ஆள் நல்லாத்தான் இருக்கான். ஆனா இவனும் இவனோட ட்ரெஸ்ஸும்… பேச்சும்… ரொம்ப hi – fi ஆ இருப்பான் போல… பாத்தவுடனே ஒரு பொண்ண dollyனு சொல்றான்” என்று நினைத்தாள்.

“வீட்டுக்கு தானே?” என்றுக் கேட்டவனிடம் “ஆம்” என்று தலை ஆட்டினாள். “கெளம்பறேன்” என்றுக் கூற அனஹா வாய் திறக்கும் முன் ரோஹன் முந்திக் கொண்டு “நான் ட்ரோப் பண்றேன்” என்றான்.

“இல்லை நான் ஆட்டோல போய்டுவேன். நீங்க ஏன் அலையப் போறீங்க…” என்றாள் அனஹா. மனதிற்குள் “இவனும் மத்த பசங்கள மாதிரி தான்… ஒரு பொண்ணப் பாத்தவுடனே லிப்ட் குடுக்கறேன்னு சொல்றான்…” என்று நினைத்துக் கொண்டாள்.

“நீங்க என் பிரண்டோட பிரண்டோட பிரெண்ட். என்னோட பிரேண்டும் உங்களோட பிரெண்டும் உங்கள என்ன நம்பி தான் விட்டுட்டுப் போயிருக்காங்க. இப்ப நீங்க என்னோடப் பொறுப்பு.

ஏதோ பிரமோத் கூப்பிட்டானேனு வந்தேன். அந்த ப்ரோக்ராமும் கான்செல் ஆய்டுச்சு. எப்படியும் இன்னைக்கு சன்டே. நான் ப்ரீ தான். உங்கள ட்ரோப் பண்றதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. So no formalities. வீடு எங்கன்னு சொல்லுங்க நான் ட்ரோப் பண்ணிடறேன்” என்று நீளமாக பேசினான் ரோஹன்.

“ம்ம்கும்… வள வளனு வேற பேசறான்…” என்று நினைத்த அனஹா, “இதுக்கப்பறமும் வரலன்னு சொன்னா இன்னும் 10 நிமிஷத்துக்கு நிறுத்தாம பேசுவான்… ஆனா இவன் கூட எப்படி போக முடியும்?” என்று யோசித்து “No problem. நான் ஆட்டோலேயே போய்டறேன்” என்றாள்.

“Ok. Let’s go” என்றுக் கூறி முன்னே நடந்தான் ரோஹன். “எங்க?” என்றவளுக்கு “உங்க வீட்டுக்கு தான். இப்போ உங்கள தனியா அனுப்பினா என் பிரெண்டுக்கு பதில் சொல்ல முடியாது. இந்த இடத்துல நீங்க இல்ல… வேற யார் இருந்தாலும் நான் தனியாப் போக விட மாட்டேன். போகலாம் வாங்க” என்றான்.

வேறு வழி இல்லாமல் அவன் பின்னே நடந்தாள் அனஹா. அவள் வீடு இருக்கும் ஏரியாவைக் கேட்டு ஆட்டோ பிடித்தான் ரோஹன். பயணம் முழுவதும் ரோஹன் ஏதேதோ பேசிக் கொண்டு வந்தான். அனஹா அது எதையும் கவனிக்காமல் போகும் வழியிலேயே கவனம் வைத்தாள்.

அவள் ஏரியா பஸ் ஸ்டாப் அருகிலேயே ஆட்டோவை நிறுத்தச் சொன்ன அனஹா, “நான் இங்கயே எறங்கிக்கறேன். கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். தேங்க்ஸ்” என்றுக் கூறி இறங்கி பணத்தை எடுப்பதற்காக purse எடுத்தாள்.

“அண்ணா நீங்கக் கெளம்புங்க” என்று ரோஹன் கூற ஆட்டோ கிளம்பியது. “ஹே” என்று அனஹா கூப்பிட ஆட்டோ நிற்காமல் சென்றது. இரண்டடி சென்றதும் தன் கையை மட்டும் வெளியில் நீட்டி டாட்டா காட்டினான் ரோஹன்.

“நினைத்ததை சாதிக்கும் ரகம்” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே கடைக்குச் சென்றாள் அனஹா. அவளுக்கு ஏனோ எரிச்சலாக வந்தது.

அதே ஆட்டோவில் ஷாப்பிங் மால் வந்த ரோஹன் பணத்தை குடுத்து ஆட்டோவை அனுப்பிவிட்டு பார்க்கிங்கில் நின்ற தனது பைக்கை எடுத்து கூலர்ஸ் மாட்டிக்கொண்டு கண்ணாடியைப் பார்த்து தலையை இருமுறை சிலுப்பிவிட்டு வண்டியைக் கிளப்பிச் சென்றான்.

2

ஒரு வாரம் கழித்து ப்ரமோத் ரோஹனிற்கு கால் செய்தான். “டேய் நீ இந்த வீக்கெண்ட் ப்ரீயா?” என்று எடுத்த எடுப்பிலேயே கேட்கும் நண்பனிடம் “Saturday வேல இருக்கு. சண்டே ப்ரீ டா” என்றான் ரோஹன்.

“போன வாரம் நம்ம மீட் பண்ற பிளான் என்னால தான் ஸ்பாயில் ஆய்டுச்சு. அதான் டா இந்த வீக்கெண்ட் மீட் பண்ணலாம்னு யோசிக்கறேன். சுதீஷ் கிட்டையும் பேசிட்டேன் அவனும் சண்டே ஓகேன்னு சொன்னான். நிதி ஊர்ல இல்லையாம்… ஈவ்னிங் 5க்கு பீச்ல நம்ம எப்பயும் மீட் பண்ற எடத்துக்கு வந்துடு ரோஹன். பாய்” என்றுக் கூறி வைத்தான் ப்ரமோத்.

சண்டே காலையில் ஷீபா அனஹாவிற்கு கால் செய்தாள். “அனஹா என்னடி பண்ற?” என்றாள். “சும்மா தான் டி இருக்கேன். போர் அடிக்குது” என்றாள் அனஹா.

“அன்னைக்கு ஷாப்பிங் மால்ல பாத்தோமே… என் பிரெண்ட் ப்ரமோத்… அவன் இன்னைக்கு கால் பண்ணான் டி. அன்னைக்கு அவன் தான் நம்மள அவங்க கூட சாப்பிடக் கூப்பிட்டான். ஆனா பாதியிலேயே விட்டுட்டு போக வேண்டியதாப் போச்சுன்னு பீல் பண்ணான். இன்னைக்கு வெளியில வர முடியுமான்னுக் கேட்டான்… போலாமா அனஹா?” என்றுக் கேட்டாள் ஷீபா.

“நீ போ ஷீபா… நான் எதுக்கு?” என்றாள் அனஹா. “இல்ல அனஹா ப்ரமோத் உன்னையும் வர சொன்னான். நீயும் என்ன விட்டா வேற யார்கூடயும் வெளில போக மாட்ட… உனக்கும் ஒரு சேஞ்சா இருக்குமேனு தான் கூப்டறேன்” என்றாள் ஷீபா.

தோழியிடம் மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாள் அனஹா. மாலை சந்திப்பதாகக் கூறி வைத்தாள் ஷீபா.

“நான் கூப்பிட்டதுக்காக வந்ததுக்கு தேங்க்ஸ் அனஹா” என்றான் பிரமோத். ஒரு சிறு புன்முறுவலை அவனுக்கு பதிலாய் தந்து விட்டு “பிரமோத் கூப்பிடதா சொன்ன… அவனோட பிரெண்ட்ஸ் வருவாங்கன்னு சொல்லவே இல்ல…” என்று மெதுவாக ஷீபாவின் காதைக் கடித்தாள் அனஹா.

“எனக்கேத் தெரியாது டி” என்று ஷீபா சொல்லும்போதே, “எனக்கு ரொம்ப பசிக்குது. ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரலாமா?” என்று சுதீஷ் கேட்டான். “சரி வா. நாங்க போய் வாங்கிட்டு வந்துடறோம்” என்றுக் கூறி சுதீஷுடன் சென்றான் பிரமோத்.

“அன்னைக்கு என் பிரெண்ட பத்தரமா ட்ரோப் பண்ணதுக்கு தேங்க்ஸ்” என்று ரோஹனிடம் கூறினாள் ஷீபா. “That’s ok” என்றுத் தோளைக் குலுக்கிக் கூறினான் ரோஹன்.

அப்போது ஷீபாவின் மொபைல் அலறியது. எடுத்து பேசியவள் “இதோ வரேன்…” என்றுக் கூறி வைத்துவிட்டு “பிரமோத் கால் பண்ணான். நம்ம ரெண்டுப் பேருக்கும் என்ன வாங்கறதுன்னுக் கேட்டான். போய் வாங்கிட்டு வந்துடறேன் அனஹா. பேசிட்டு இருங்க” என்று எழுந்துச் சென்றாள்.

“உங்க பிரெண்டுக்கு இருக்க courtesy கூட உங்களுக்கு இல்லையே…” என்றான் ரோஹன். “ஆங்…. என்னது?” என்றாள் அனஹா புரியாமல்.

“இல்ல உங்க பிரெண்டுக்குக் கூட அன்னைக்கு உங்கள ட்ரோப் பண்ணதுக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு தோனி இருக்கு. உங்களுக்கு சொல்லத் தோனலல்ல…” என்றான்.

“அன்னைக்கு நான் கூப்பிட கூப்பிட ஏன் நிக்காமப் போனீங்க? எதுக்காக நீங்க pay பண்ணீங்க?” என்றாள் அனஹா. “என் கூட பைக்ல வந்துருந்தா நீங்க பணமாக் குடுத்திருப்பீங்க? இல்லையே… ஆட்டோ நம்ம ஷேர் பண்ணிப் போனது. அதும் நான் உங்கள ட்ரோப் பண்ண தான் வந்தேன். திரும்பி அதே ஆட்டோல தான் மால்க்கு வந்தேன். அப்படி இருக்கப்ப நீங்க பாதில இறங்கி pay பண்ணா என்ன நினைப்பாங்க… தெரியாதவங்கக் கூட வந்துருக்கீங்கன்னு அந்த ஆட்டோ டிரைவர் நெனச்சுருப்பாரு. அதான் கெளம்ப சொன்னேன்” என்றான் ரோஹன்.

“எல்லாத்துக்கும் வெளக்கம் வெச்சுருக்கான். ஆனா இவன் சொல்றதும் கரெக்ட் தானே… ஒரு வேல இவன் நம்ம நெனைக்கற மாதிரி வழியறவன் கெடயாதோ…” என்று நினைத்து “ஒஹ்… thank you” என்றாள் சிரித்துக் கொண்டே.

ரோஹனின் போன் சிணுங்கியது. எடுத்து பேசியவன் “வாங்க போகலாம். சுதீஷ் தான் பேசினான். அவங்க கொஞ்சம் தூரமாப் போய்ட்டாங்களாம்” என்றுக் கூறி எழுந்தான்.

சுவாரஸ்யமாக கடலைப் பார்த்து நடப்பவனை கவனித்த அனஹா “உங்களுக்கு கடல் ரொம்பப் பிடிக்குமா?” என்றுக் கேட்டாள். கடலைப் பார்த்துக்கொண்டே “மழை வரப் போகுது” என்றான் ரோஹன்.

சட்டென்று மேலே நிமிர்ந்துப் பார்த்தாள் அனஹா. ரோஹன் “நீங்களா வந்து என்கிட்டப் பேசிட்டீங்களே… அதான்” என்றதும் அவனை முறைத்து வேறு புறம் பார்த்து நடந்தாள் அனஹா.

“எனக்கு கடல்னா ரொம்பப் புடிக்கும். ஈவ்னிங் டைம்ல மணல்ல உக்காந்து கடலை வேடிக்கப் பாக்க சொன்னா எவ்ளோ நேரம் வேணாப் பாப்பேன்” என்றான் ரோஹன் மென்னகையுடன்.

அவன் வெளிப்படையாகப் பேசுகிறான் என்பதுப் புரிந்தது அனஹாவிற்கு. அவன் முன்பு பேசியதுக் கோபத்தைக் கொடுத்தாலும் இப்போது அதை மறந்தாள்.

மற்ற மூவரும் இருக்கும் இடத்திற்கு அருகில் வரும்போது 2 சிறுவர்கள் ரோஹனுக்கும் அனஹாவிற்கும் இடையில் எதிர்பாராமல் ஓடியதால் தடுமாறி விழப் போனாள் அனஹா. அவளைப் பிடிப்பதற்காக அவளின் இடையை சுற்றி வளைத்துப் பிடித்தான் ரோஹன்.

அவன் கை இடையில் பட்டதும் கிரீச்சிட்டு அலறித் துள்ளி குதித்தாள் அனஹா. “அவள் விழாமல் இருக்கத்தானேப் பிடிச்சோம்… ஏன் இப்படி அலறுறா?” என்றுப் புரியாமல் பார்த்தான் ரோஹன்.

அவர்கள் அருகில் வந்த ஷீபா “அவளுக்கு அவளோட இடுப்புல யார் கை வெச்சாலும் கூசும்… தப்பா எடுத்துக்காத ரோஹன்” என்றுக் கூறி அனஹாவை அழைத்துச் சென்றாள்.

“என்னாச்சு?” என்றுக் கேட்ட பிரமோதிடமும் சுதீஷிடமும் “கீழ விழப் போன அதிர்ச்சில பயந்து கத்திட்டா” என்றுக் கூறி சமாளித்தாள் ஷீபா.

“இதையே அவன்கிட்டயும் சொல்லிருக்கலாம்ல?” என்று ஷீபாவிற்கு மட்டும் கேட்கும்படிக் கேட்டாள் அனஹா. அவளின் கோபம் புரிந்தது ஷீபாவிற்கு. “இப்போ என்ன சொன்னாலும் திட்டு விழும்…” என்று நினைத்து அனஹா கேட்டதுக் காதில் விழாதது போல் நகர்ந்து சென்றாள் ஷீபா.

“ஓஹோ மேடம்க்கு இப்படி ஒரு வீக்னெஸ் இருக்கா?” என்று கிண்டலாகக் கேட்டுக் கொண்டே அருகே வந்தான் ரோஹன். அவனைப் பார்த்து முறைத்த அனஹாவிடம் “சாரி நீங்க விழப்போனதால தான் புடிச்சேன்…” என்று உண்மையான வருத்தத்தோடுக் கூறி முன்னே சென்றான்.

“இவன் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரிப் பேசறானே…. இவன் உண்மைலயே நல்லவனா இருந்து நம்ம தான் தப்பா நெனைக்கறோமா? இல்ல இவன் வழியற கேரக்டேரா? இவனப் புரிஞ்சுக்கவே முடியலயே…” என்று தீவிரமாக யோசித்துக்கொண்டே நடந்த அனஹா, அவளுக்கு முன்னே தனக்கு முதுகுக்காட்டி நின்றுக்கொண்டிருந்த ரோஹன் மேல் மோதினாள்.

“சாரி”

“பரவால்ல சாப்பிடுங்க” என்று போப் கார்னை நீட்டினான் ரோஹன்.

“தேங்க்ஸ்” என்று சிரித்துக்கொண்டே பாப் கார்னை எடுத்த அனஹா, அவளை கண்டுக் கொள்ளாமல் மற்றவர்களுடன் பேசிய ரோஹனைக் கண்டு “நாம தான் தப்பா நெனச்சுட்டோம் போல…” என்று எண்ணினாள்.

எல்லோரும் பேசி அரட்டை அடித்துக்கொண்டிருந்த போதும் ஏனோ அனஹாவால் அதில் கலந்துக்கொள்ள முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து “இந்தாடி… உன்னோட போப் கார்ன்…” என்றுக் கடைக்காரனிடம் ஒரு பாக்கெட்டை வாங்கி நீட்டினாள் ஷீபா.

புரியாமல் விழித்துக்கொண்டே அதை வாங்கிய அனஹாவிடம் “என்னப் பாக்கறிங்க? இவ்ளோ நேரம் நம்ம சாப்பிட்டது என்னோட போப் கார்ன். இனி உங்களோட பங்க சாப்பிடலாம்…” என்றுக் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி விளக்கினான் ரோஹன்.

“அட பாவி… இப்ப தான நல்லவ்வ்வ்வ்வ்வான்னு நெனச்சேன்…” என்று ராகம் போட்டு மனதிற்குள் சொல்வதாக எண்ணி மெலிதாக முனு முனுத்தாள் அனஹா.

“ஒஹ்… அப்போ என்னப் பத்திக் கூட நெனைக்கறீங்களா?” என்றுக் கேட்டு அவள் கையில் இருந்த போப் கார்னை எடுத்து சாபிட்டான் ரோஹன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல…” என்று அவசரமாகக் கூறி அவளும் சிறிது கொறித்துவிட்டு “டைம் ஆச்சு… கெளம்பலாமா ஷீபா?” என்றுக் கேட்டாள்.

“போலாம்” என்றுக் கூறி, அப்போதும் ஏதோ மும்முரமாக ப்ரமொதோடும் சுதீஷோடும் பேசிக்கொண்டே முன்னேச் சென்றாள் ஷீபா.

“அப்படி என்னத்த தான் பேசறாங்களோ இவ்ளோ நேரமா…” என்று ரோஹனோடு நடக்க வேண்டி வந்ததால் எரிச்சல் பட்டாள் அனஹா.

“வீட்டுக்கு போய் என்ன பண்ணப் போறீங்க?”

“ஒன்னும் வேலை இல்ல. வெட்டியா தான் இருக்கணும்”

“எனக்கும் போர் தான். உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க”

“என்னது?????” நடப்பதை நிறுத்தி விட்டு ரோஹனைத் திரும்பிப் பார்த்தாள் அனஹா.

“இதுக்கு ஏன் அதிர்ச்சியாகறீங்க?” என்றுக் கூறி அவள் கையில் இருந்த மொபைலைப் பிடுங்காத குறையாக வாங்கி தன் நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்தான் ரோஹன்.

ஏதோ type செய்துவிட்டு “இந்தாங்க. என் நம்பரும் save பண்ணிட்டேன்…” என்றுக் கூறி மொபைலை அனஹாவிடம் நீட்டினான்.

அவசரமாக “என்னனு save பண்ணியிருக்கான்???” என்றுப் பார்த்தாள் அனஹா.

அவள் மொபைலை வேகமாக வாங்கியவுடன் “ரோஹன்_ஷீபா னு save பண்ணியிருக்கேன். உங்களுக்குப் புரியனும்ல…” என்று விளக்கம் வேறுக் கொடுத்தான் ரோஹன்.

அதற்குள் அவர்கள் சாலை அருகில் வந்திருந்தனர். முதலில் ஆட்டோப் பிடித்து ஏறிய ஷீபா உள்ளிருந்து “பை” என்றுக் கூறி கை அசைத்தாள்.

ஏனோ அனஹாவிற்கு ரோஹன் அன்றுக் கை அசைத்தது ஞாபகம் வந்தது.  அவளது ஆட்டோ பயணத்தின் போதும் அன்றைய நினைவுகளிலேயே இருந்தாள்.

வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் போதே அனஹாவின் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்தது. “அதுக்குள்ள வேலையக் காட்டிட்டான்… ச்சை….” என்று எரிச்சலோடு மொபைலைக் கைப் பையிலிருந்து எடுத்துப் பார்த்தாள் அனஹா.

“என்ன அனஹா….. ஏன் கைல மொபைல வெச்சு வெறிச்சுப் பாத்துட்டு வாசல்லயே நிக்கற? உள்ள வா….” என்று அவளின் அம்மாக் கூறிய பின்பு தான் “ஹான்…… ஒன்னும் இல்லமா…” என்றுக் கூறி தான் வெகு நேரமாக வாசலிலேயே நிற்பதை உணர்ந்து உள்ளே வந்தாள் அனஹா.

சாப்பிட்டு முடித்து தனதறைக்கு வந்த பிறகு கட்டிலில் அமர்ந்து யோசனையில் இருந்தாள் அனஹா. மறுபடியும் அவள் மொபைலிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை எடுத்துப்பார்த்தவள் “கில்லாடி தான்….. இவன் நம்ம நெனச்ச மாதிரி சாதாரண ஆள் கிடையாது….” என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

3

ரோஹனைப் பற்றி அனஹா யோசித்துக் கொண்டிருந்த நேரம் அவளுடையக் கை பேசிக்கு அழைப்பு வந்தது. அவள் எடுத்தவுடன் “மெசேஜ் பூஸ்டர், லோக்கல் கால் பூஸ்டர் ரெண்டும் உங்க நம்பருக்கு போட சொன்னேன். உங்களுக்கு மெசேஜ் வந்துடுச்சா? கடைல சொல்லணும்” என்றான் ரோஹன்.

“ம்ம்”

“ஓகே கொஞ்ச நேரத்துலக் கூப்பிட்றேன்” என்றுக் கூறி வைத்துவிட்டான்.

காதிலிருந்து எடுத்துக் கைப் பேசியை ஒரு முறைப் பார்த்தவள் “இவன் பெரிய இவன்…. இவனா கால் பண்ணிக் கேக்க வேண்டியதக் கேட்டுட்டு உடனே வெச்சுட்டான்…. இதுல கொஞ்ச நேரத்துலக் கூப்பிட்றேன் வேற…. போன் பண்ணட்டும்… பாத்துக்கறேன்…” என்றுப் புலம்பிக்கொண்டே அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தாள் அனஹா.

நடந்து நடந்து சோர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தாள். மணி 11 ஆகியது. மொபைலை நொடிக்கொருதரம் பார்த்தும் எந்தப் பயனும் இல்லை.

தூக்கமும் வரவில்லை அனஹாவிற்கு. பொறுத்தது போதும் என்று ரோஹனிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினாள்.

“குட் நைட்”

உடனே பதில் வந்தது. “இன்னும் தூங்கலையா?”

“தூங்க போறேன்”

…..

“நீங்க தூங்கலையா?”

“இல்ல. தூக்கம் வரல”

அனஹாவின் மொபைலில் அவளை அழைத்தான் ரோஹன்.

“அப்பறம் என்ன சாப்டீங்க?”

“போன் பண்ணா ஹலோ சொல்ற பழக்கம் இல்லையா? அப்ப பண்ணப்பையும் இப்படி தான் பேசினீங்க.”

“நேரடியா விஷயத்துக்கு வரக் கூடாதா?”

“ஹ்ம்ம்…….. என்னப் பேசணும் உங்களுக்கு? அதையும் நேரடியா சொல்லிட வேண்டியது தான?”

“எனக்கு இன்னைக்கு நீங்க போட்டிருந்த black skirt சாண்டல் கலர் டாப் புடிச்சுருந்துது.”

………..

“ஹலோ அனஹா???”

“2 தடவ பாத்தப் பொண்ணுக் கிட்ட இப்படி தான் பேசுவீங்களா?” சற்றுக் காட்டமாகவேக் கேட்டாள் அனஹா.

“இதுக்கு தான் நான் சாப்டீங்களாலேருந்து ஆரம்பிச்சேன். எல்லா விஷயத்தையும் நேரடியா சொல்ல முடியாது அனஹா. இப்போக் கூட நேரடியா விஷயத்த சொல்லுங்கன்னு நீங்க சொல்லாம இருந்திருந்தா நான் இதப் பத்தியேப் பேசிருக்க மாட்டேன்”

“ஒஹ்ஹ்… அப்போ நான் கேட்டா என்ன வேணா சொல்லுவீங்களா?”

“கண்டிப்பா சொல்லுவேன்….. அதுக்கு முன்னாடி நான் ஒன்னு கேக்கணும்”

“என்ன?”

“எனக்கு நீங்க வாங்க போங்கன்னு சொல்றது கஷ்டமா இருக்கு. நீ னு சொல்லவா?”

“முதல் தடவ ஒரு பொண்ணுக் கிட்ட போன்லப் பேசற மாதிரியாப் பேசறான்… இப்படிலாம் கேக்கறானே???” என்று முனு முனுத்தாள் அனஹா.

“உனக்கும் என்ன நீ வா போ ன்னு சொல்ல தான் comfortable ஆ இருக்குன்னு நெனைக்கறேன்… அப்போ அப்படியேப் பேசு அனஹா”

…………..

பேச்சை மாற்ற எண்ணிய ரோஹன், “உனக்கு ஷீபா ரொம்ப க்ளோஸ் பிரண்டா? எப்பயும் அவங்களோடையே சுத்துற?” என்றான்.

“அது என்ன ஷீபாவ மட்டும் அவங்கன்னு சொல்ற?” என்று சந்தேகம் கேட்டாள் அனஹா.

“ஒரு சிலர் கிட்ட தான் சீக்கிரம் பழகத் தோனும். நீ கூட தான் ஈசியா நீ ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்ட… அப்படி தான் இதுவும். சரி நீ இன்னைக்கு டவுட் மேல டௌட்டாக் கேட்டுட்டுருக்க…. நம்ம நாளைக்குப் பேசுவோம்……”

“நாளைக்குமா???”

“என்ன நீ….. பின்ன எதுக்கு இத்தனை பூஸ்டர் pack போட்டு விட்ருக்கேன்? நீ கொஞ்சம் தெளிவாகு… நான் நாளைக்குப் பேசறேன்…… குட் நைட் dolly……..” என்றுக் கூறி வைத்தான்.

“இவன் ஏன் இப்படி dolly dolly ன்னு உயிரை வாங்கறான்…” என்று மனதில் ரோஹனை திட்டிக்கொண்டேக் கைபேசியை அருகில் வைத்துப் படுத்தாள் அனஹா.

மெசேஜ் டோன் கேட்டு மொபைலை எடுத்துப் பார்த்தாள். “என்னையத் திட்டி முடிசுட்டன்னா தூங்கு டால்லி. குட் நைட் டியர்” என்று இருந்ததைப் பார்த்துக் கொஞ்சம் தூக்கி வாரி போட்டது அனஹாவிற்கு. “இவன் என்ன மனசில இருக்கறதப் படிக்கற வித்தைத் தெரிஞ்சவனா? இப்போ என்ன புதுசா டியர் வேற? ச்சே இது என்ன இம்சை…” என்று எரிச்சல் பட்டாள்.

மீண்டும் மெசேஜ் டோன் கேட்கவும், கோவமாக எடுத்துப் பார்த்தாள். “நான் எனக்கு ரொம்ப புடிச்சவங்கள இப்படி தான் கூப்பிடுவேன். பேர் சொல்லி பேசப் புடிக்காது. என் பக்கத்து வீட்டு 4 வயசு வித்யா எனக்கு ஏஞ்சல். 2 வயசு ஷிண்டு எனக்கு லிட்டில் சேம்ப். அப்பிடி தான் உன்னையும் சொல்றேன். dollyன்றது என்னப் பொருத்த வரைக்கும் ஒரு பேரு… அவ்ளோ தான். சோ ரொம்ப confuse ஆகாத. குட் நைட் டால்லி” என்று இருந்தது.

ஏனோ அதைப் படித்ததும் முன்பு இருந்தக் கோபம் கொஞ்சம் குறைந்தது அனஹாவிற்கு. “சரியான லூசு இப்படி வாய் ஓயாமப் பேசி படுத்தறான்…..” என்று நினைத்துக்கொண்டே உறங்கினாள்.

“நெஜமா டால்லின்றது ஒரு பேரு மட்டும் தானா?” என்று யோசித்த ரோஹன் சிரித்துக்கொண்டே உறங்கச் சென்றான்.

4

அடுத்த நாள் காலை எழுந்தது முதல் ரோஹனைக் குறித்தே யோசித்துக் கொண்டிருந்தாள் அனஹா. அவளுக்கு ஷீபாவுடன் பேச வேண்டும் என்றுத் தோன்றியது.

மாலை ஷீபாவுடன் கோவிலுக்குச் சென்ற அனஹா அன்றுக் கடற்கரையில் ரோஹன் அவளிடம் பேசியது முதல் அவன் போனில் பேசியது வரை அவளிடம் அனைத்தையும் கூறினாள்.

“அவன் ஏன் இவ்ளோப் பேசறான்? எனக்குப் புடிக்கல ஷீபா…. ஆனாத் தப்பா பேசற மாதிரியும் எனக்குத் தோனல. நான் என்னடிப் பண்ணட்டும்?”

“நீயே சொல்ற தப்பாப் பேசலன்னு. அப்பறம் என்ன அனஹா? ஏன் இப்பிடிக் கொழம்பற? உனக்கு அவனப் புடிக்கலன்னா சொல்லிடு…” என்றாள் ஷீபா.

“ம்ம்” என்றுத் தலைக் குனிந்துக் கூறிய அனஹாவால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சிறிது நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தவள் “போலாம் ஷீபா” என்றுக் கூறி எழுந்தாள்.

வீடு வந்து சேர்ந்து ரெப்ரெஷ் ஆகி கட்டிலில் அமர்ந்தவளை வரவேற்றது மெசேஜ் டோன். “ஆரம்பிச்சுட்டானா…..” என்று சலித்துக்கொண்டே எடுத்துப் பார்த்தவள் அது ஒரு விளம்பரச் செய்தி என்று அறிந்ததும் சிறு ஏமாற்றம் அடைந்தாள்.

“ஏன் நமக்கு இப்பிடித் தோனுது? அவன் பேசனும்னு எதிர்பாக்கறோமோ?” என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் மெசேஜ் டோன் ஒலித்தது.

“நீ என்னை நெனச்சியா?” என்றுக் கேட்டு ரோஹன் அனுப்பி இருந்தான்.

“இது என்னக் கேள்வி? இவன் ஏன் எப்பயுமே இப்படிப் பேச ஆரம்பிக்கறான்?” என்று நினைத்த அனஹா “இல்லை” என்று பதில் அனுப்பினாள்.

“எனக்கு பொர ஏறுச்சு… அதான் நீ நெனச்சியோன்னு கேட்டேன்” என்று அனுப்பினான் ரோஹன்

அனஹாவிற்கு பிடிப்பட்ட உணர்வு வந்தது. “இவனப் பத்தி நெனைக்க வேண்டாம்னு நெனச்சாலும் விட மாட்டான் போலயே…” என்று நொந்துக் கொண்டே “உனக்குப் பொர ஏறுச்சுன்னா நான் நெனச்சேன்னு அர்த்தமா?” என்று பதில் அனுப்பினாள்.

உடனே அவள் மொபைலிற்கு கால் செய்த ரோஹன், அனஹா அழைப்பை ஏற்றதும் “அப்போ நெனச்ச இல்ல???” என்றான்.

அனஹா “போன் எடுத்தா ஒரு வாட்டியாவது ஹலோ சொல்லேன் டா” என்றுக் கூறி அருகில் இருந்த தலையணையில் குத்தினாள்.

“டா வா???? அப்போ இவ்ளோ நேரம் என்னையத் திட்டிட்டிருந்தியா???” என்றுக் கேட்டான் ரோஹன்.

“அய்யய்யோ ஏன் இப்படிலாம் பேசறோம்? என்ன நெனைப்பான் நம்மளப் பத்தி…” என்று நினைத்துத் தன்னைத் தானே நொந்த அனஹா “சாரி நான் அப்படிப் பேசிருக்கக் கூடாது…” என்றாள் வருத்தத்துடன்.

“ஹே ஏன் இப்போ பீல் பண்ற… chill dolly…. இப்போ என்ன??? டா சொன்னதுக்கு வருத்தப்படறியா? பதிலுக்கு வேணா நான் உன்ன டி சொல்லிடறேன்…… ஓகே வா டி?” என்றான் ரோஹன் குதூகலத்துடன்.

“உன்ன……………. திருத்தவே முடியாது…………… நான் இப்போ பீல் பண்ணவே இல்ல போ டா………” என்றுக் கூறிக் கையில் இருந்தத் தலையணையைத் தூக்கி எறிந்தாள் அனஹா.

“இப்படியே இரு டால்லி…. நீ வருத்தப்படறது எனக்கு புடிக்கல” அவன் ஆழ்ந்த குரலில் சொல்லியதும் அனஹவிற்கு சிலிர்த்தது.

“ஏன் அமைதி ஆகிட்ட…. பேசு டி…….”

அவனின் இந்த குரல் அனஹாவை என்னவோ செய்ய, என்ன பதில் சொல்வதென்று சில நொடிகள் யோசித்தாள். “ம்ம்…… எனக்கு டி சொன்னா புடிக்காது…….” என்று அவன் பேச்சை நிறுத்த எதையோ சொல்லி வைத்தாள்.

அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. உண்மையில் அவன் டி என்று சொல்லும்போது ஏதோ உரிமையில் தன்னிடம் பேசுவது போல் தோன்றியது அனஹாவிற்கு.

“நான் இதுவரைக்கும் யாரையும் டி சொன்னதில்ல அனஹா….. யாரையுமே…. குட் நைட்” என்றான் ரோஹன்.

கொஞ்சம் திக்கினாலும் சமாளித்து “குட் நைட்” என்றுக் கூறி வைத்தாள் அனஹா. “நான் ஏன் இவன்கிட்ட மட்டும் பேச இவ்ளோ யோசிக்கறேன்? அவன் சொல்றதுக்கெல்லாம் கோவம் வரமாட்டேங்குது….. அப்படியே வந்தாலும் திட்டத் தோனல…..

ஐயோ எனக்கு என்ன ஆச்சு…… அவனோட அந்த குரல் ஏன் என்னை என்னமோ செய்யுது? அவன் கூடப் பேசற இந்த பத்து நிமிஷத்துக்காக ஏன் ஏங்கறேன்?” இப்படியே விடியும் வரை யோசித்தவள் அன்று உறங்கவே இல்லை.

ரோஹனும் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். “உண்மை தானே… நான் யாரையுமே டி ன்னு சொன்னதில்லையே….. அவ டிரஸ் பத்தியெல்லாம் கமெண்ட் சொல்றேனே….. எப்படி என்னால இவள்ட்ட இப்படிலாம் பேச முடியுது??”

“முதல்ல நீ எப்படி ஒரு பொண்ணுகிட்ட இவ்வளவு நேரம் பேசறேன்னு யோசி” என்று மனசாட்சி எடுத்துரைத்தது.

“எனக்கு பேசப் புடிச்சுருக்கு…. பேசறேன்…..” என்று அதற்கு சமாதானம் சொன்னவன் உதட்டில் உறைந்தப் புன்னகையுடன் உறங்கினான்.

என்ன தான் குழப்பங்களுடன் உறங்கினாலும் காலையில் எழுந்தவுடன் அவனின் “குட் மோர்னிங் டால்லி” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும் உதட்டில் தானாக ஒரு புன்னகை ஒட்டிக்கொண்டது அனஹாவிற்கு.

“குட் மோர்னிங். Have a nice day” என்று பதில் அனுப்பி விட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தாள்.

அவளின் பதிலை கண்டவனுக்கு ஏனோ இந்த நாள் இனிமையாக அமையும் என்றுத் தோன்றியது.

5

அந்த வார இறுதியில் ஷீபா அனஹாவை அழைத்தாள். “ஹலோ அனஹா என்னப் பண்ணிட்ருக்க?”

“காலைல எந்திரிச்சு சாப்டு தூங்கி, மறுபடியும் மதியம் சாப்டு தூங்கி இப்ப தான் எந்திரிச்சேன் ஷீபா… ரொம்ப டயர்டா இருக்கு…… ஆஆ………………” என்றுக் கொட்டாவி விட்டாள் அனஹா.

“இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல? சரிக் கெளம்பு வெளிலப் போலாம்”

“வெளிலயா???? எங்க பா???”

“பீச்க்கு”

பீச் என்றதும் அனஹாவிற்கு ரோஹனின் நினைவு வந்தது. “வெளிலனாலே பீச் தானா?” என்று சிரித்துக் கொண்டேக் கேட்டாள் அனஹா.

“நான் ஏற்கனவேக் கெளம்பிட்டேன் அனஹா…. சீக்கரம் கெளம்பு…. என்ன ரொம்ப நேரம் அங்க வெயிட் பண்ண வெக்காத” என்றுக் கூறி தொடர்பைத் துண்டித்தாள் ஷீபா.

அனஹா ஒரு முறை மெசேஜ் இன்பாக்ஸை ஓபன் செய்துப் பார்த்தாள். காலை ரோஹன் அனுப்பி இருந்த குட் மார்னிங் மெசேஜை மீண்டும் ஒரு முறைப் படித்தாள். தினமும் குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் மட்டும் இருவரும் அனுப்பிக் கொண்டனர்.

மொபைலை வைத்து விட்டு வேகமாகக் கிளம்பிச் சென்றாள். அங்குச் சென்ற பின் தான் தெரிந்தது, ஷீபா தனியாக வரவில்லை என்று. சுதீஷும் பிரமோதும் அவளுடன் அமர்ந்திருந்தனர். “இது என்ன? எப்பப் பாத்தாலும் வாலு மாதிரி…” என்று நினைத்தவளால் ரோஹனை மனமும் கண்களும் தேடுவதைத் தடுக்க முடியவில்லை.

அவர்களை நோக்கி நடந்த போது ப்ரமோத் கை அசைத்தான். அனஹா பதிலுக்கு கை அசைக்கும் முன் “டேய் உன்ன எப்போ வர சொன்னா இப்போ வர…” என்றான் ப்ரமோத். அனஹா திரும்பிப் பார்த்தாள்.

ரோஹன் சிரித்துக்கொண்டே “கெளம்பக் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என்றுக் கூறி அனஹாவின் பின்னால் நடந்து வந்துக் கொண்டிருந்தான்.

“இன்னும் மெதுவா நடக்க வேண்டியது தான??” என்று அனஹாவிற்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு அவளைக் கடந்து முன்னேச் சென்றான்.

அவனைக் கண்டதும் துள்ளிய மனம், அவன் இப்படி சொன்னதும் “நான் எப்படி நடந்தா இவனுக்கு என்னவாம்? இவனக் காணும்னுத் தேடிட்டே தான மெதுவா நடந்தேன். அதெல்லாம் இவனுக்கு எங்கத் தெரியும்?  பின்னாடியே வரானே… பாத்ததும் ஒரு ஹாய் சொல்றானா? ச்சே எதையாவதுப் பேசிக் கடுப்பேத்திடறான்…” என்று மனதுக்குள் பொருமிக்கொண்டே வேகமாக நடந்தவள் அவன் மீதே மோதி நின்றாள்.

“சாரி….. நான்… நான் வந்து…..” என்று அவள் பேசத் தடுமாறும்போதே மற்றவர்களைப் பார்த்து “கொஞ்ச தூரம் நடக்க்கலாமா டா…. எதுக்கு இப்படி உக்காந்தே இருக்கணும்” என்றான் ரோஹன்.

“அட போடா…. நீங்க ரெண்டு பேரும் இப்ப தான் வந்தீங்க…. உங்களுக்காக வெயிட் பண்றேன்னு நாங்க 3 பேரும் இவ்ளோ நேரம் சுத்திட்டே தான் இருந்தோம். நீங்க போயிட்டு வாங்க டா” என்றான் சுதீஷ்.

அனஹா ஏதோ சொல்ல வரும் முன் “சரி வா அனஹா” என்றுக் கூறி முன்னே நடந்தான் ரோஹன். “போயிட்டு வா டி… நாங்க இங்கயே இருக்கோம்” என்றாள் ஷீபா. இதற்கு மேல் என்ன சொல்வது என்றுத் தெரியாமல் அனஹாவும் நடக்க ஆரம்பித்தாள்.

“வா அனஹான்னுப் பெருசாக் கூப்பிட்டானே…. பின்னாடி வராளா இல்லையான்னாவதுப் பாக்கறானா?? இவ்ளோ வேகமா போய் எந்த ட்ரைன புடிக்கப் போறானாம்??”

“திட்டி முடிச்சுட்டியா டால்லி?” ரோஹனின் குரலைக் கேட்டதும் அப்படியே நின்றாள் அனஹா.

“ஹான்…. நான் ஒன்னும் திட்டலையே…”

“நீ என் பின்னாடி வருவன்னுத் தெரியும். அப்பறம் எனக்கு உன் கூட தனியா நடக்கணும்னு ஆசையா இருந்துது… அதான் அவங்ககிட்டேந்து சீக்கிரம் தள்ளி வரதுக்காக வேகமா நடந்தேன்” என்றுக் கூறியவன், “ட்ரைன் புடிக்கறதுக்காக இல்ல” என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.

“இப்படியா சத்தமா முனகுவோம்…” என்று மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டு “சாரி…” என்றாள் அனஹா.

“எதுக்கு?? அப்போ என் மேல வந்து மோதுனதுக்கா???” என்று இழுத்தான் ரோஹன். “என்ன நக்கலா? அப்போ நான் என்ன வேணும்னா வந்து இடிச்சேன்? கவனிக்காம தான?? அப்பயும் சாரி சொன்னேன் நீதான் அதக் காதுலையே வாங்கிக்கல” என்றாள் கோபமாக.

“எல்லாம் கேட்டேன் கேட்டேன்….. அறிவிருக்கா உனக்கு? நமக்குள்ள நடக்குற இந்த சீண்டலுக்கெல்லாம் சாரி கேப்பாங்களா??? அதும் இப்படி எல்லோர் முன்னாடியும்? நீ வேணுன்னு தான் வந்து இடிச்சன்னு எனக்குத் தெரியும். நாந்தான் அதக் கண்டுக்கலல்ல? அப்பறம் என்ன?” என்றுக் கூறிவிட்டு மீண்டும் வேகமாக நடந்தான் ரோஹன்.

அவன் பேசியதைக் கேட்டவளுக்குக் கோபம் தலைக்கு ஏறியது. “டேய் நில்லு டா…. நான் வேணுன்னு வந்து இடிச்ச்சனா?? உன் இஷ்டத்துக்குப் பேசிட்டே போற……” என்று பொரியத் துவங்கியவளை இடை மறித்து “இரு இரு… அதான் தெரியுதுல்ல….. ஏதோத் தெரியாம இடிச்சதுக்கு சாரி சொன்ன சரி. அப்பறமும் ஏன் அப்படி திக்குன? ஒவ்வொரு வாட்டி இடிக்கும் போதும் இப்படியே வருத்தபடற…. நீ guiltyஆ பீல் பண்ணக் கூடாதேன்னு தான் இப்படி பேசினேன்” என்றான் ரோஹன்.

இதற்கு முன் பீச்சுக்கு வந்தபோதும் அவன் மீதே வந்து முட்டிக் கொண்டதை சொல்கிறான் என்றுப் புரிந்தது அனஹாவிற்கு. “ரெண்டு தடவையும் தெரியாம தானே மோதினோம்… இனி ஒழுங்கா நேராப் பாத்து நடக்கணும்…” என்று முடிவு செய்தாள்.

அருகில் நடக்கும் ரோஹனைத் திரும்பிப் பார்த்தாள். சிறு புன்னகையுடன் கடலைப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தான். “எப்போப் பாத்தாலும் ஏன் சிரிச்சுட்டே இருக்க?” என்றாள் கோபம் கொஞ்சம் குறைந்தவளாக.

அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்து “நீ என் பக்கத்துல இருக்கறது அவ்வளோ சந்தோஷமா இருக்கு… அதனால…” என்றான் ரோஹன்.

இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் இவன் ஏன் இப்படி சொல்கிறான் என்றக் குழப்பமும் சேர முழித்துக்கொண்டு நின்றாள் அனஹா.

“ஏன் நின்னுட்ட? வா…” என்று முன்னே நடக்க ஆரம்பித்தான் ரோஹன். “இதுக்கு மேல நம்ம பேசாம இருக்கறதே நல்லது” என்று முடிவு செய்தவளாய் அமைதியாக நடக்க ஆரம்பித்தாள் அனஹா.

சிறிது தூரம் நடந்ததும் “நான் சொன்னதக் கேட்டு வெக்கப்படறியா? அமைதியா வர?” என்றான் ரோஹன்.

“என்ன?” என்று அதிர்ந்து அவன் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள் அனஹா.

“எதாவது பேசு டால்லி” என்றுப் புன்னகையுடன் கூறினான் ரோஹன்.

“சாயந்தரம் மணல்ல உக்காந்து கடலைப் பார்க்க புடிக்கும்னு அன்னைக்கு சொல்லிட்டு, இன்னைக்கு ஏன் ரோஹன் நடக்கலாம்னு சொன்ன?” என்றுக் கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டேக் கேட்டாள் அனஹா.

சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்த ரோஹன் “நீ இன்னைக்கு தான் என் பேர் சொல்ற அனஹா” என்றுக் கூறி அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே சிறிது நேரம் நின்றான்.

“பேர சொன்னதுக்கு ஏன் இந்த effect குடுக்கறான்? அவன மாதிரி நம்ம என்ன செல்லப் பேரா சொல்லி கூப்பிட்டோம்? இல்லையே…. அவன் பேரு தான… எல்லாரும் அப்படி தானக் கூப்பிடறாங்க… இவன் ஏன் இப்படிப் பாக்கறான்? என்னால ஏன் நோர்மலா இருக்க முடியல?” என்று யோசித்துக்கொண்டே அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தலைக் குனிந்தாள் அனஹா.

அவள் தலைக் குனியவும் தான், தான் அவளைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தான் ரோஹன். பார்வையைத் திருப்பி மெல்ல நடக்க ஆரம்பித்தான்.

“ஒரு பொண்ண இப்படி நேருக்கு நேர் நின்னு உத்துப் பாக்கறது தப்பு தான?” என்று யோசித்தவனுக்கு “நான் டால்லிய தான அப்படி பாத்தேன்” என்றுத் தோன்றியது.

அமைதியாக அவன் அருகில் நடந்த அனஹா அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள். முதலில் எதையோ யோசிப்பதற்கு அறிகுறியாக அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் தெரிந்தன. பின்பு முகம் தெளிந்து லேசான புன்னகை அரும்பியது.

“எனக்கு உன் கூட நடக்கறதுப் புடிச்சுருக்கு…” எங்கோப் பார்த்து நடந்துக்கொண்டே சொன்னான் ரோஹன்.

அவளால் அவன் முகத்தை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை இப்போது. அவளைத் திரும்பிப் பார்த்தவன் “அதனால தான் நடக்கலாம்னு சொன்னேன்” என்றான் மென்னகையுடன்.

இன்னும் சிறிது தூரம் மெளனமாக நடந்தபோதும் இருவருக்குமே அது பிடித்திருந்தது. மனம் நிம்மதியாய் இருப்பதாகத் தோன்றியது. அந்த மௌனத்தைக் கலைக்கவே இருவருக்கும் தோன்றவில்லை. அப்போது ரோஹனின் கைபேசி சிணுங்கியது. அதை எடுக்கும் அவசரத்தில் கை பட்டு ஸ்பீக்கர் ஆன் ஆகியது.

“இப்படியே இன்னும் கொஞ்ச தூரம் நடந்தீங்கன்னா ஊர் எல்லை வந்துடும் மச்சான்……” என்று சுதீஷ் கூறியவுடன் தான் இருவருமே சுற்றி கவனித்தனர்… வெகு தூரம் வந்துவிட்டதை.

“நீங்க ஒன்னும் தனியா வரல டா. உங்கக் கூட இன்னும் 3 இளிச்சவாய்ங்க வந்துருக்கோம்…” என்று மீண்டும் சிரித்துக் கொண்டேக் கூறினான் சுதீஷ்.

இருவருக்குமே தர்மசங்கடமாக இருந்தது. “டேய் திரும்பி தான் டா வந்துட்டு இருக்கோம்” என்றுக் கூறி வேகமாக நடக்குமாறு அனஹாவிற்கு சைகைக் காட்டி விட்டு அவனும் நடக்க ஆரம்பித்தான்.

“திரும்பி வந்துட்டு இருக்காங்கலாமாம்…..” என்று அந்த புறம் திரும்பி ப்ரமொதிடமும் ஷீபாவிடமும் கூறிய சுதீஷ், “நம்பிட்டேன் டா……” என்று சிரித்துக்கொண்டேக் கூறி வைத்தான். பிரமோதும் ஷீபாவும் சிரிக்கும் சத்தம் கூட போனில் கேட்டது.

6

“இவ்வளோ சொல்றேன்ல…. ஒரே ஒரு வாட்டி அலைல நின்னுட்டு போலாம் அனஹா… ப்ளீஸ் டி…” என்று கையைப் பிடித்து இழுத்து கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஷீபா.

“நீ நில்லு ஷீபா… நான் வரல…” என்றுக் கையை உருவப் போராடிக் கொண்டிருந்தாள் அனஹா.

இப்படியே இவர்கள் கடந்த பத்து நிமிடங்களாக மாறி மாறி கெஞ்சிக் கொண்டிருக்க ஒரு பெரிய அலை வந்து அனஹாவைத் தடுமாறச் செய்தது. ஷீபாவின் கையைப் பிடித்து சமாளித்து அதில் மூழ்காமல் தப்பித்தாலும் கழுத்து வரை நனைந்து விட்டிருந்தாள் அனஹா.

ஷீபாவிற்கு சங்கடமாக இருந்தது. “சாரி அனஹா. நான் சும்மா கால் நனைக்கலாம்னு தான் உன்னக் கூப்டேன்…. இப்படி ஆகும்னு நெனைக்கல டி. சாரி பா” என்று வருத்தப்பட்டாள்.

“பரவால விடு. நீ கூப்டப்பவே நான் வந்துருக்கலாம். வீட்டுக்குப் போலாம் ஷீபா” என்று வேகமாகக் கூறி சுற்றிப் பார்த்தாள் அனஹா.

ஷீபவிற்கும் அனஹாவின் சங்கடம் புரிந்து தான் இருந்தது. அலையில் நனைந்ததில் அவளது சிந்தெடிக் சுடிதார் அவள் உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது. சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று ஷீபாவுமே நினைத்தாள்.

“நாங்கக் கெளம்பறோம் பிரமோத்” என்றுக் கூறி மற்ற இருவரையும் பார்த்து தலை அசைத்து நடக்கத் துவங்கினாள் ஷீபா. மறந்தும் தலையை நிமிர்த்திப் பார்க்கவில்லை அனஹா.

“ஒரு நிமிஷம் நில்லுங்க. எப்படியும் நாங்களும் கெளம்பனும். கடைக்கு மட்டும் போயிட்டு வந்துடறேன். டேய் பிரமோத் வா டா” என்று அவனையும் இழுத்துக் கொண்டு வேகமாகச் சென்றான் ரோஹன்.

“இவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? ஒருப் பொண்ணு இப்படி அவசரமாக் கெளம்பறேன்னு சொன்னா ஏதாவது விஷயம் இருக்கும்னுப் புரிஞ்சுக்க மாட்டானா? அப்படி என்ன அவசரமா கடைக்குப் போகணும்?? அவன் தனியாப் போக வேண்டியது தானே?

அதுக்கு எதுக்கு நாங்க வெயிட் பண்ணனும்? இப்படி இங்க நிக்க வெச்சுட்டு போயிட்டானே… சுத்தி எத்தன பேரு இருக்காங்க… கடவுளே… ஆட்டோப் பிடிக்க இன்னும் எவ்வளவு தூரம் நடக்கனும்…” என்று யோசித்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

ஐந்து நிமிடங்களுக்குள் வந்தவனது கைகளில் கிட்டத்தட்ட ஆளுயர அட்டைப் போன்ற ஒன்று இருந்தது செய்தித்தாள் சுற்றி இருந்ததால் அது என்னவென்றுப் புரியவில்லை அனஹாவிற்கு.

“அனஹா இது உனக்கு என்னோட கிப்ட். ஒரு வால் ஹன்கிங்” என்று அவளிடம் அதை நீட்டினான் ரோஹன். அதை வாங்காமல் அவனை முறைத்து “இப்போ இது ரொம்ப முக்கியமா?” என்றாள் அனஹா.

அவள் அருகில் இன்னும் நெருங்கி வந்த ரோஹன், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “துப்பட்டாவப் பின்னாடி விரிச்சுப் போட்டு இத முன்னாடிப் பிடிச்சுட்டு நட” என்று பல்லைக் கடித்து கோபமாகக் கூறி, சற்று விலகி “கிப்ட் குடுத்தா வாங்கணும். இப்படி கேள்விக் கேக்க கூடாது” என்று சத்தமாகக் கூறினான்.

அவன் தனக்காக யோசித்து செய்திருக்கிறான் என்பதுப் புரிய அவள் கண்கள் கலங்கியது. “தேங்க்ஸ்” என்றுக் கூறி அவன் கையிலிருந்து அந்த வால் ஹான்கிங்கை வாங்கியவள் அவன் சொன்னபடியே செய்தாள்.

“டேய் நீ முன்னாடி நட டா. இவங்களுக்கு ஒரு ஆட்டோப் பிடி” என்று சுதீஷிடம் கூறிய ரோஹன், சுதீஷை அவர்களுக்கு முன் நடக்க வைத்தான்.

“அப்போ நீ வரலையா?” என்றுப் பார்வையாலேயேக் கேட்டாள் அனஹா. “போ வரேன்” என்பது போல் கண்களாலேயே பதில் சொன்னான் ரோஹன்.

“நான் இப்படி ஆகும்னு நெனைக்கல. சாரி டி” என்றுத் தான் செய்ததற்கு மீண்டும் வருந்தினாள் ஷீபா. “விடு ஷீபா… நீ ஒன்னும் வேணும்னு பண்ணலையே” என்று அவளை சமாதானம் செய்தாள் அனஹா.

“ஆனா ரோஹன் உனக்காக இவ்ளோ யோசிச்சு செஞ்சுருக்கானே”

திடுக்கிட்டுத் திரும்பினாள் அனஹா. “என்ன சொல்ற?”

“இந்த கிப்ட் எதுக்குன்னு எனக்கும் புரியுது அனஹா. எனக்கு கூட இது தோனல”

அவள் கையில் இருந்த வால் ஹாங்கிங்கை வருடிய அனஹா “ம்ம்… ஆரம்பத்துல எனக்கு அவனப் பத்தி இருந்த ஒபினியனே வேற…. ஆனா இப்ப… அவனப் பத்தி தப்பாவே நெனைக்கத் தோனல ஷீபா” என்றாள்.

“நீ அவன லவ் பண்றியா அனஹா?”

ஒரு முறை ஷீபாவைத் திரும்பிப் பார்த்த அனஹா இரண்டு நொடி அமைதியாக இருந்து விட்டு “புடிச்சுருக்கு… ஆனா லவ் பண்றனான்னுத் தெரியல…” என்றாள்

“கொஞ்சம் வேகமா நடங்க ரெண்டுப் பேரும். சுத்தி நெறைய ஆளுங்க இருக்காங்க. அதனால தான் சுதீஷ முன்னாடி நடக்க விட்டு நாங்க உங்களக் கொஞ்ச தூரத்துல பாலோ பண்ணோம். ஆனா எங்களால இதுக்கு மேல மெதுவா நடக்க முடியாது…” என்று அருகில் பின்னாலிருந்து வந்த ரோஹனின் குரலில் இருவரும் வேகமாக நடக்கத் துவங்கினர்.

ஆட்டோவில் ஏறியதும் ரோஹனை திரும்பிப் பார்த்து தலை அசைத்த அனஹா ஷீபா கேட்டதை யோசிக்கத் துவங்கினாள்.

“என்ன டா நடக்குது இங்க?” என்ற சுதீஷின் கேள்வியில் சுய உணர்வுப் பெற்ற ரோஹன் “என்ன டா?” என்றுப் புரியாமல் கேட்டான்.

“டேய் நடிக்காத. நீ ஒரு பொண்ணுக்கு கிப்ட் வாங்கிக் குடுக்கறியா????” என்றான் ப்ரமோத்.

“நீ எதுக்கு அத வாங்கி குடுத்தன்னு எல்லாம் நாங்க கேக்கல. அது எங்களுக்கும் புரியுது. ஆனா உன் கிட்ட ஒரு சேஞ்ச் தெரியுதே… அது ஏன்? நீ அனஹா கூட இன்னைக்கு எவ்வளவு தூரம் நடந்துருக்க தெரியுமா? எவ்வளவு நேரம் பேசிருக்க தெரியுமா? உன் மனசுல என்ன டா இருக்கு?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

ஒரு முறை தலையைக் கோதி விட்டு புன்னகையுடன் “நீங்க சொல்றதும் உண்மை தான் டா. என்னமோ அவள எனக்குப் புடிச்சுருக்கு…. அவள அட்மைர் பண்றேன்…… அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னுத் தோனுது……” என்றான் ரோஹன்

“அவள லவ் பண்றியா?”

“தெரில ப்ரமோத்…….. யோசிக்கணும். சரி நான் கெளம்பறேன் டா” என்றுக் கூறி பைக் எடுத்துக் கிளம்பினான் ரோஹன்.

7

“ரீச்ட் ஹோம்” என்றக் குறுந்தகவல் வந்திருந்தது அனஹாவிடமிருந்து. “ஓகே டேக் கேர்” என்று அனுப்பிவிட்டு பைக்கை நிறுத்தி வீட்டிற்குள் சென்றான் ரோஹன்.

அதன் பிறகு ரோஹன் அனஹாவைத் தொடர்புக் கொள்ளவில்லை. “அவள் இப்போ இருக்க மன நிலைமைல நம்மப் பேசுனா சங்கடப் படுவா” என்று நினைத்தான் ரோஹன்.

ஆனால் அனஹா அவன் கால் செய்வான் என்று எதிர்பார்த்து மொபைலைக் கையிலேயே வைத்துக் கொண்டு அவன் வாங்கிக் கொடுத்த சுவரோவியத்தைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் வந்ததும் குளித்து உடை மாற்றி விட்டு முதல் வேலையாக அந்த சுவரோவியத்தைப் பிரித்துப் பார்த்தாள். பார்த்ததும் அவளுக்கு அது மிகவும் பிடித்துப் போனது. அவளுடைய அறையிலேயே சுவற்றில் அதை மாட்டி வைத்தாள்.

மாலை நேர வெயிலில் கடலின் பின்னணியில் சூரியனும் அதை ரசித்துக் கொண்டு மணலில் ஒரு பெண் அமர்ந்திருப்பது போல் இருந்தது அந்த ஓவியம்.

“அந்த அவசரத்துலயும் எப்படி அவனால இப்படி அழகா செலக்ட் பண்ண முடிஞ்சுது? நமக்குக் கூட அந்த இக்கட்டுல ஏதும் யோசிக்கத் தோனலையே… ஆனா அவன் நமக்காக யோசிச்சுருக்கானே. ஷீபாவும் இதே தான சொன்னா… நம்ம அவன லவ் பண்றோமா? தெரியல…. ஆனாக் கண்டிப்பா வெறுக்கல” என்று எண்ணி சிரித்துக் கொண்டாள்.

ரோஹன் விசிலடித்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் வந்ததும் உடை மாற்றக் கூடத் தோன்றாமல் படுக்கையில் விழுந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

“என்னமோ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவக் கூட பேசிட்டிருந்தா நேரம் போறதே தெரியல. அவக் கேட்ட மாதிரி எனக்கு கடலை உக்காந்து வேடிக்கைப் பாக்க தான் புடிக்கும். ஆனா அவப் பக்கத்துல இருக்கும்போது அவ கை புடிச்சுட்டு நடந்துகிட்டே இருக்கணும் போல இருக்கு”

திடீரென்று படுக்கையில் எழுந்து அமர்ந்தான் ரோஹன். “அவ கூட நடக்கணும்னு தொனுறதுக்கும் அவ கைப் புடிச்சு நடந்து போய்கிட்டே இருக்கணும்னு தொனுறதுக்கும் வித்யாசம் இருக்கோ? ஒரு வேல ப்ரமோத் கேட்ட மாதிரி அவள லவ் பண்ணறோமா?”

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் “ஆனா எந்த ரீசனுமே இல்லையே… எதப் பாத்து லவ் பண்ணறோம்? அவ கூடப் பேசணும்னுத் தோனுனது உண்மை தான். நம்மாலா போய் தான் பேசுனோம். அவக் கூட பேசப் புடிச்சுருக்கு. அவ பண்ணறதெல்லாம் அவளுக்கேத் தெரியாமப் பாத்து ரசிச்சுருக்கோம். அப்போ அவள ரசிக்கறோம். ஆனா லவ்???” என்று யோசித்தான்.

“உன்னோட கிப்ட் ரொம்ப அழகா இருக்கு ரோஹன். என்மேல நீ காட்டுன அக்கறைக்கு தேங்க்ஸ்” எத்தனை முறை இதை வாசித்தானோ அது அவனுக்கேத் தெரியாது. அவனுக்கு நன்றி சொல்லத் தோன்றியதால் அனஹா அனுப்பிய குறுஞ்செய்தி அது.

ஆனால் அதைப் படித்த அந்த நொடி என்னத் தோன்றியதோ “நான் என் டால்லிய லவ் பண்றேன்” என்று மனதில் ஓடியது ரோஹனிற்கு. “என் டால்லி” என்று வாய் விட்டுக் கூறினான். “Anything for you dear” என்று அனஹாவிற்கு பதில் அனுப்பினான்.

அதன் பிறகு மறந்தும் ரோஹன் அனஹாவைத் தொடர்புக் கொள்ளவில்லை. அனஹா அனுப்பும் குட் மோர்னிங், குட் நைட் மெசேஜ்களுக்கு பதில் அனுப்பியதோடு சரி.

இப்படியே மூன்று நாட்கள் சென்றிருக்க அன்று காலை அனஹாவைக் காண வேண்டும் என்று தோன்றியது ரோஹனிற்கு. “Shall we meet today?” என்று ஒருக் குறுந்தகவல் அனுப்பினான். அனுப்பிவிட்டு யோசித்தான். “இவக் கிட்ட மட்டும் எப்படி இப்படி நெனச்சதெல்லாம் பேச முடியுது?”

ஏனோ அனஹாவிற்குமே அவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. இத்தனை நாட்களாக அவனாக எந்த மெசேஜும் அனுப்பாததும், தனக்கு கால் செய்துப் பெசாததுமே அவளுக்கு என்னவோ போல் இருந்தது. இப்போது அவனே நேரில் சந்திக்கலாமா என்றுக் கேட்கவும் அனஹாவிற்கு சந்தோஷமாக இருந்தது.

ஆனால் அவர்களின் முந்தைய சந்திப்புகளில் ஷீபா அவளுடன் இருந்தாள். இப்போது தனியாக சந்திக்க வேண்டுமா என்று யோசித்தவள், “ஆமா ஷீபா இருந்து மட்டும் என்ன…. எப்படியும் நாங்க தனியாப் பேசற மாதிரி தான அமைஞ்சுது…

அதோட அன்னைக்கு அவன் செஞ்சது நம்ம மேல இருக்க அக்கறையால தானே….. நம்மள வந்து ட்ரோப் பண்ணப்பக் கூட நான் யோசிச்சேன்றதுக்காக பைக்ல வர சொல்லாம ஆட்டோல நம்மக் கூட வந்தானே….” என்று யோசித்து ஒரு முறை அவள் அறை சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த சுவரோவியத்தைப் பார்த்தாள்.

பின் புன்னகையுடன் சந்திக்க வேண்டிய நேரத்தையும் இடத்தையும் குறுஞ்செய்தியாக அனுப்பி, அவன் அந்த நேரத்தில் ப்ரீயா என்றும் கேட்டாள்.

அவள் அனுப்பியக் குருந்தகவலைப் பார்த்து புன்னகைத்து விட்டு “ஓகே டால்லி. Meet u in the evng” என்று பதில் அனுப்பினான் ரோஹன்.

8

மாலை முடிவு செய்த இடத்திற்கு ரோஹனிற்கு முன்பே வந்து காத்துக் கொண்டிருந்த அனஹா “இந்த இடம் உனக்கு ரொம்ப புடிச்சுப் போயிடுச்சா டால்லி? ஏன் இங்க மீட் பண்ணலாம்னு சொன்ன?” என்றுப் பின்னாலிருந்து வந்த ரோஹனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

அங்கு ரோஹனைக் கண்டதும் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு ஒருப் புன்னகையுடன் “போன்ல தான் ஹலோ சொல்றதில்ல…. நேர்லயும் இப்படி பயமுருத்தணுமா?” என்றாள்.

சிரித்துக்கொண்டே அவளை பார்த்தவன் “நான் இப்படி தான் டி பேசுவேன். கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லு. எதுக்கு இங்க வர சொன்ன?” என்றுக் கேட்டான்.

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்…… டி சொல்லாதன்னு சொன்னாக் கேக்க மாடேங்கறானே….. நம்ம ஏன் அவன இங்க வர சொன்னோம்? என்னமோ முதல் தடவ இந்த பீச்ல தானே அவன் கூட நல்லாப் பேச ஆரம்பிச்சோம்… இங்க தானே அன்னைக்கு அவன் கூடப் பேசிட்டே நடந்தோம்….. அதுப் புடிச்சு தானே அவன் மீட் பண்ணலாமான்னு கேட்டதும் இங்க வர சொன்னோம்…” என்று அமைதியாக தலைக் குனிந்து யோசித்துக் கொண்டிருந்தாள் அனஹா.

அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹன் “உனக்கு என் கூட பீச்ல நடக்கறது ரொம்பப் புடிச்சுருக்கா அனஹா?” என்றுக் கேட்டான்.

அதே குரல்… அவனின் இந்த ஆழ்ந்த குரலைக் கேட்கும் போதெல்லாம் அவளுக்கு சிலிர்த்தது. “ஐயோ போன்ல கேட்டதுக்கே தடுமாறினோமே…. இன்னைக்கு நேருல எப்படி சமாளிக்க……” என்று வேகமாக யோசித்து “அது……. அதெல்லாம்…. ஒன்னும் இல்ல….. கொஞ்ச தூரம் நடக்கலாமா?“ என்றாள்.

அதைக் கேட்டு சிரித்த ரோஹன் மெளனமாகத் திரும்பி நடந்தான். அனஹாவும் எழுந்து அவன் அருகில் நடக்க ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் நடந்தப் பின் “வா ஏதாவது சாப்பிடலாம்” என்று அங்கு இருந்தக் கடை ஒன்றிற்கு அனஹாவை அழைத்துச் சென்றான் ரோஹன். அவளை அந்தக் கடையின் முன் புறம் இடப்பட்டிருந்த டேபிள் ஒன்றில் அமரச் சொன்னான்.

அவன் சென்று 2 ஆப்பிள் ஜூஸ் வாங்கி வந்து அவளிடம் ஒன்றை நீட்டினான். அவள் எதிரில் அமர்ந்து கையில் ஒருக் கோப்பையை பிடித்துக் கொண்டே அவளைப் பார்த்தான். மும்முரமாக அந்தப் பழச் சாற்றை அருந்திக் கொண்டிருந்தாள் அனஹா.

“I love you”

புரை ஏறியது அனஹாவிற்கு. “ஹான்…….. என்னது………….” என்றாள் இருமல்களுக்கு இடையில் சமாளித்துக் கொண்டு. நாம் தான் தவறாக கேட்டிருப்போம் என்று நினைத்தாள்.

“I love you Anaha” அழுத்தமாக, புரியும்படி மீண்டும் சொன்னான் ரோஹன்.

அனஹா அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.

“இதை இவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ? அவளுக்கும் நம்மைப் பிடித்திருக்குமா?” என்பதை அறிய அவள் முகத்தையேப் பார்த்திருந்தான் ரோஹன்.

அவள் முகத்தில் கோபம் சிறிதும் இல்லை என்பதே அவள் தன்னை வெறுக்கவில்லை என்பதைக் கூற சற்று நிம்மதி அடைந்தான்.

ஆனால் காதலுக்கு அது மட்டும் போதாதே… அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறதா? தன்னை நேசிக்கிறாளா? என்பதை அறிய அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்து அசையாமல் அமர்ந்திருந்தான் ரோஹன்.

அனஹாவிற்கு என்ன யோசிப்பதென்றேத் தெரியவில்லை. ஷீபா கேட்ட போதுத் தெளிவாக சொன்னால் தான்… பிடித்திருக்கிறது ஆனால் காதல் இல்லை என்று. ஆனால் இப்போது ரோஹன் நேரடியாக கேட்கும் போது அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை.

ரோஹன் தன்னையேப் பார்ப்பதை உணர்ந்து “நா….. நான்….. எனக்கு தேர்…… நீ இப்படி…..” என்று திக்கித் தடுமாறினாள்.

“நீ இப்ப உடனே எதுவும் சொல்லணும்னு நான் எதிர்ப்பாக்கல dolly. 2 நாள் யோசிச்சு சொல்லு. போதும். அது வர நான் உன்ன தொல்ல பண்ண மாட்டேன்” என்று அழுத்தமாகக் கூறினான் ரோஹன்

………………. அப்போதும் அனஹாவிற்குப் பேச்சு வரவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

அவள் இப்படி அமைதியாக அமர்ந்திருப்பது, பதட்டப் படுவதுப் பிடிக்காமல் அவளை சகஜமாக்க “நான் சொன்னதக் கேட்டு நீ அமைதியா இருந்தா வெக்கப்படறன்னு அர்த்தமா?” என்றுக் கேட்டுப் புன்னகைத்தான் ரோஹன்

அவன் நினைத்தது போலவே அனஹாவும் சிறிது இயல்புக்குத் திரும்பினாள். “நான் ரெண்டு நாள் கழிச்சு சொல்றேன். போலாமா?”

“என்ன சொன்னா நம்ம வாயத் தொறப்போம்னு நல்லாத் தெரிஞ்சு வெச்சுருக்கான். இப்படிப் பொசுக்குன்னு சொல்லிட்டானே…… நமக்கும் புடிச்சுருக்கு தான்…. ஆனா காதல்? கல்யாணம்???” என்று யோசித்து ரோஹனை ஓரக் கண்ணால் பார்த்தாள் அனஹா.

“இப்போவும் அவன் கூட நடக்கறது நிம்மதியா இருக்கே. அதுக்காக 3 தடவப் பார்த்த ஒருத்தன் லவ் பண்ணறேன்னு சொன்னா எப்படி சரின்னு சொல்றது?” இப்படி இரு வேறு விதமாக யோசித்துக் கொண்டே நடந்தாள்.

“அவ இத எதிர்ப் பார்த்துருக்க மாட்டா தான். ஆனா ஏன் இவ்வளவு தடுமாறணும்? புடிச்சுருக்குன்னு சொல்லனும்… இல்ல புடிக்கலன்னு சொல்லணும்…. யோசிச்சு சொல்றேங்கறதயாவதும் தைரியமா சொல்ல வேண்டியது தான??? நான் எதிர்ப் பாக்கற மாதிரி தைரியமான பொண்ணு இல்லையோ இவ?” என்று குழம்பிக் கொண்டிருந்தான் ரோஹன்.

இருவருமேத் தங்களின் சிந்தனையில் இருந்ததால் அடுத்தவரை கவனிக்கவில்லை. அதற்குள் சாலையை அடைந்து விட்டிருந்தனர்.

“ஒகே பாய்” என்றான் ரோஹன். அப்போதும் ஏதோக் குழப்பத்தில் இருந்த அனஹாவின் முகத்தைப் பார்த்து அவனின் குழப்பம் இன்னும் அதிகரித்தது.

ரோஹனின் முகத்தை ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்த அனஹா வரவழைத்தப் புன்னகையுடன் “பை” என்றுக் கூறினாள். “இவனால எப்படித் தன்னோட காதல சொன்னதுக்கு அப்பறமும் இவ்வளவு இயல்பா இருக்க முடியுது?” என்று யோசித்து ஒரு ஆட்டோ பிடித்து வீடு நோக்கிப் பயணித்தாள்.

ரோஹன் தன் பைக்கை எடுத்துக் கொண்டுக் கிளம்பினான். அவனது கவனம் சாலையில் இருந்தாலும் அனஹாவைக் குறித்தே யோசித்துக் கொண்டிருந்தான்.

9

அன்று இரவே ஷீபாவை போனில் அழைத்து எல்லாவற்றையும் கூறினாள் அனஹா. ஷீபாவுமே ரோஹன் ப்ரொபோஸ் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் 1 நிமிட மௌனத்தில் தெரிந்தது.

“உனக்குப் புடிச்சுருக்குன்னு சொன்னியே அனஹா…”

“ஆமா புடிச்சுருக்கு. புடிச்சுருக்கறதுக்கும் சேர்ந்து வாழ்க்கப் பூரா வாழறதுக்கும் வித்யாசம் இருக்கே ஷீபா”

“இது நீ எடுக்க வேண்டியத் தீர்மானம் டி. இதுல நான் என்ன சொல்றது?”

“அவன் எப்படிப் பட்டவன்னு எனக்கு எதுமேத் தெரியாதே”

“ப்ரமோத் சொன்ன வரைக்கும் அவங்க செட்லையே ரோஹன் ரொம்ப ஒழுக்கமானவன். அதனால தான டி முதல் தடவையே அவன் கூட உன்னத் தனியா விட்டுட்டுப் போக நான் யோசிக்கல…”

“அன்னைக்கு எனக்காக தான் ஆட்டோல அவ்வளோ தூரம் வந்து விட்டுட்டு வந்தான். அது மட்டும் இல்ல அன்னைக்கு பீச்ல என் மேல அக்கறை எடுத்துப் பண்ணது……. எல்லாமேப் பிடிச்சு தான் இருக்கு…..”

“அவனப் பத்தி ஒரு மைனஸ் கூட நீ சொல்லல அனஹா” என்றுக் கூறி சிரித்தாள் ஷீபா.

அனஹா மெளனமாக இருக்கவே ஷீபா “இதுக்கப்பறம் நீ தான் முடிவெடுக்கணும்” என்றுக் கூறி வைத்தாள்.

மொபைலைக் கீழே வைத்த அனஹா ரோஹனை சந்தித்தது முதல் நடந்தவைகளை சிந்திக்கத் துவங்கினாள்.

அடுத்த நாள் மாலை ரோஹன் பிரமோத் வீட்டில் இருந்தான். “எதுக்கு டா என்ன அவசரமா வர சொன்ன? நிதிய சமாளிச்சுட்டு வரதுக்குள்ள நாக்குத் தள்ளிடுச்சு” என்றான் சுதீஷ்.

“வந்ததுலேந்து எதுவும் சொல்லாம இப்படி யோசிச்சிட்டு இருக்கறதுக்கு எதுக்கு டா இங்க வந்த? உங்க வீட்லயே உக்காந்து யோசிக்க வேண்டியது தான?” என்றுக் கூறி தண்ணீர் பாட்டிலை சுதீஷிடம் நீட்டினான் பிரமோத்.

“நான் அனஹாவ லவ் பண்றேன்னு அவக்கிட்ட நேத்து சொல்லிட்டேன் பிரமோத்”

“என்னது அனஹா….. ஏய் ச்சே ச்சே கருமம் புடிச்சவனே…… இப்படியா தண்ணிய மூஞ்சிலத் துப்புவ…….. உனக்குப் போய் தண்ணிக் கொண்டு வந்து குடுத்தேன் பாரு…” என்றுக் கூறி எழுந்தான் பிரமோத்.

“சாரி மச்சான். டென்ஷன் ஆகிட்டேன்……..” என்றுக் கூறித் தன் சட்டையில் சிந்தி இருந்தத் தண்ணீரை உதறினான் சுதீஷ்.

“போடாங்க…….”

“என்னது அனஹாவ லவ் பண்றியா? எப்பைலேந்து டா? அன்னைக்கு கேட்டப்ப யோசிக்கணும்னு சொன்னியே டா? அவ கிட்ட சொன்னியா? அவ என்ன டா சொன்னா? ஓகே சொல்லிட்டாளா?” என்று அடுக்கிக் கொண்டேப் போனான் சுதீஷ்.

“ம்ச்…. புடிச்சுருந்துது சொல்லிட்டேன். அவ எதுவும் சொல்லல டா. 2 நாள்ல சொல்றேன்னு சொல்லிருக்கா. ஆனா அத சொல்றதுக்கு அவ்வளோ தடுமாறுனா டா……

எனக்கு என்னமோ அவ என் டைப் இல்லையோ… நாந்தான் அவசரப்பட்டு சொல்லிடனோன்னுத் தோனுது டா……” என்றுத் தரையைப் பார்த்துக் கூறினான் ரோஹன்

ஏதோ சொல்வதற்கு வாய் திறந்த சுதீஷை சைகை செய்து நிறுத்திவிட்டு “சரி வா டா வாஷ் பண்ணிட்டு வரலாம். உன் சட்டைலயும் துப்பி வெச்சுருக்க” என்று அவனையும் இழுத்துக் கொண்டு உள்ளேச் சென்றான் பிரமோத்.

அறையினுள் வந்ததும் “நான் ஷீபாக்கு கால் பண்ணி அனஹா ஏதாவது சொன்னாலான்னுக் கேக்கறேன்…” என்றுக் கூறி ஷீபாவை தொடர்புக் கொண்டான் பிரமோத்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஹாலிற்கு வந்தவர்கள் “இப்போ என்ன டா பிரச்சனை?” என்றனர். “அது இல்ல டா… யாராவது ஏதாவது சொன்னா பதில் சொல்லக் கூடவா யோசிப்பாங்க??” என்று இழுத்தான் ரோஹன்.

“மாப்ள இப்போ அவளே வந்து உன் கிட்ட இப்படி திடீர்னு சொல்லி இருந்தா… அந்த ஷாக்லேந்து வெளில வரதுக்கே உனக்கு டைம் ஆகிருக்காதாடா?” என்றுக் கேட்டான் பிரமோத்.

“இதுல பொண்ணு பையன்னெல்லாம் கெடயாது. யாரா இருந்தாலும் இந்த விஷயத்துல உடனே ரியாக்ட் பண்ண மாட்டாங்க டா” என்றுப் பொறுமையாக விளக்கினான் சுதீஷ்.

“ஒரு வேல அவளும் உன்ன மாதிரியே யோசிச்சு மனசுக்குள்ள கொழப்பிக்கிட்டு இருந்த நேரம் நீ போய் சொன்னதும் என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சுருக்கலாம் இல்லையா?”

“நீ தேவ இல்லாம யோசிக்கிற டா. அவள உனக்கு புடிச்சு தான சொன்ன???”

“ஆமா டா புடிச்சுருக்கு” என்று சிரித்துக் கொண்டேக் கூறிய ரோஹன் பின்பு யோசனையாக “ஆனா……” என்று இழுத்தான்.

“இவன் சரி வர மாட்டான் டா” என்று அலுத்துக் கொண்டான் சுதீஷ்.

“டேய் ரொம்ப யோசிக்காம 2 நாள் கழிச்சு அவ என்ன சொல்றான்னு பாரு முதல்ல…” என்றுக் கூறினான் பிரமோத்.

“சரிடா நான் கெளம்பறேன்” என்றுக் கூறி வெளியேறினான் ரோஹன்

இரண்டு நாட்களாய் ரோஹனும் அனஹாவும் மற்றவரைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தனர். இரண்டு நாட்கள் கழித்து ரோஹன் மாலை வீட்டிற்குள் நுழையும்போதே “அப்படியே பைக்க நிறுத்திட்டு வா அண்ணா” என்று கூறிக் கொண்டே வந்தான் ரோஹனின் தம்பி.

“உனக்கு வெளில போணும்னா நீ போயிட்டு வா. நான் வரல” என்றுக் கூறி உள்ளேச் செல்ல எத்தனித்தான் ரோஹன்

“நம்ம எல்லோரும் தான் போறோம். கார் எடு சீக்கிரம்” என்றுக் கூறிக் கொண்டே அங்கே வந்தார் ரோஹனின் தந்தை.

“எங்கப்பா?”

“அட வா கண்ணா. கார் எடு” என்றுப் புன்னகையுடன் கூறி ரோஹன் முன் வந்து நின்றார் ரோஹனின் தாய்.

“எங்கம்மா போறோம்? அத சொல்லாம வா கார் எடுன்னா என்ன அர்த்தம்? டேய் ராஹுல் (Rahul) நீயாவது சொல்லுடா”

“நீ வந்தா என்னத்தான் கேப்பியாம்… நான் ஒளறிடுவேனாம்… அதனால என்ட சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

எரிச்சல் வந்தது ரோஹனிற்கு. “அப்படி எங்க போகணும்? வீட்ல ஒரு விஷயம் செய்யறதா இருந்தா என்ன கேக்காம செய்ய மாட்டாங்க. ‘ரோஹன் நீ சொல்லு. நீ சொன்னா சரியாய் இருக்கும்’னு சொல்ற அப்பா அம்மா இன்னைக்கு வாயேத் தொறக்க மாட்டேங்கறாங்க.

ராஹுல்கிட்டையும் சொல்லாம அப்படி என்ன ரகசியம்? முதல் தடவை என்ன மதிக்காம செய்யற இந்தக் காரியம் உருப்படாம தான் போகும் ச்ச……” என்று பொருமிக் கொண்டேக் காரை ஓட்டினான்.

10

ரோஹன் காரை செலுத்த, வழி சொல்லிக் கொண்டே வந்த அவனின் தந்தை ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தச் சொன்னார். ஒன்றும் புரியாமல் தந்தை சொல்வதனைத்தையும் அப்படியேச் செய்துக் கொண்டிருந்தான் ரோஹன்.

அனைவரும் இறங்கி அந்த வீட்டிற்குள் செல்லும் போது அங்கேக் கிடைத்த பலமான வரவேற்பும், வாஞ்சையுடன் ரோஹனை அவர்கள் விசாரித்த விதமும் அவனுக்கு அந்த வீட்டில் இருந்தவர்களை மிகவும் பிடித்துப் போனது.

ரோஹனின் பெற்றோர் மறந்தும் அவன் புறம் திரும்பவில்லை. ராஹுலும் ரோஹனைப் போலவே ஒன்றும் புரியாமல் குழம்பியே இருந்தான். அவனிடம் கேட்டும் பிரயோஜனம் இல்லை என்று அமைதியாக அமர்ந்திருந்தான் ரோஹன்.

அவர்கள் அவனைப் பொதுவாய் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே பிரமோதும் சுதீஷும் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களைக் கண்டவனுக்கு எதுவோ சந்தேகத்தைக் கொடுத்தது.

“நீங்க இங்க என்னடாப் பண்றீங்க?” என்று அருகில் அமர்ந்த நண்பர்களிடம் ரகசியமாகக் கேட்டான் ரோஹன்.

“அது………….” என்று சுதீஷ் ஆரம்பிக்கும் போது அங்குக் கேட்டக் குரலில் திரும்பிப் பார்த்தான் ரோஹன்

“வாம்மா ஷீபா” என்று அந்த வீட்டின் பெண்மணி வரவேற்க ஷீபா உள்ளே வந்தாள்.

“இவள் வீடோ இது?” என்றுக் குழம்பி, அவளைப் பார்த்து சிரிக்கவா? வேண்டாமா? என்று ரோஹன் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும்போதே “வா அனஹா. இது தான் எங்கப் பொண்ணு” என்று அனஹாவின் தாய் சொன்னதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் சிலையானான்.

இதுவரை ஸ்கர்ட் டாப், சுடிதாரில் மட்டுமேப் பார்த்திருந்தவள் இப்போது நேர்த்தியாக காட்டன் சில்க் புடவை உடுத்தி, தலையை பின்னலிட்டு, தோளில் ஹான்ட் பாக் மாட்டி உள்ளே வந்தாள்.

“இவக்கிட்ட ஏதோ வித்யாசம் தெரியுதே….. புடவைக் கட்டி இருக்கா தான்… அனாலும் அந்தப் பார்வை??? அந்த நிமிர்வு?? அவளும் என்னைப் பார்த்து அதிர்ச்சியாகித்தான் இருக்கா…… இருக்காதா பின்ன?” என்று யோசித்தான் ரோஹன்.

“ரோஹனா இது?? போர்மல் பாண்ட்டும் புல் ஹாண்ட் ஷர்ட்டும், நீட்டாக டக் இன் செய்து……. கண்ணாடி வேறு போட்டிருக்கிறான்…… முன்னாடி பார்த்தப்ப வசீகரமா தெரிஞ்சவன் இன்னைக்கு இப்போ கம்பீரமாத் தெரியறான்…..” என்று மனதிற்குள் அவனை அளவெடுத்தாள் அனஹா.

இருவருமேத் தங்கள் சிந்தனையில் இருந்தனர். சுற்றுப்புறத்தை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுத் திகைத்திருந்தனர்.

“டிரஸ் கண்ணாடி மட்டும் இல்லாம இவன் முகத்துல இன்னும் கூட ஏதோ வித்யாசம் தெரியுதே…… இப்போ இப்படி டிரஸ் பண்றான்னா அப்போ இத்தனை நாள் இருந்தது நடிப்போ?” இந்த எண்ணம் தோன்றியதும் அவனை நன்கு முறைக்க ஆரம்பித்தாள் அனஹா.

அவள் முறைப்பதைப் பார்த்த ரோஹன் “இத்தனை நாள் என்னை நிமிர்ந்துப் பாக்கறதுக்குக் கூட முடியல. இப்போ எல்லோர் முன்னாடியும் முறைக்க முடியுது……” என்று யோசித்தான். அவன் முகமும் இறுக்கமாக மாறியது.

அனஹா “யாரும்மா இவங்க??” என்றாள் கொஞ்சம் கோபமாக. வயதில் பெரியவர்களும் வந்திருப்பதால் அவளால் தன் கோபத்தை முழுதாகக் காண்பிக்க முடியவில்லை.

அவளின் இந்தக் கேள்வி ரோஹனை இன்னும் கடுப்பேற்றியது. “என்கிட்டப் பேசணும்னா மட்டும் வார்த்தத் தந்தி அடிக்குது… தெளிவா ஒரு பதில் சொல்லத் தெரியல… ஆனா வந்தவங்க முன்னாடியே இப்படி இவங்க யாருன்னுக் கேட்க முடியுமா?”

இப்போது அவளை நன்றாகவே அவனும் முறைத்தான். அவன் முறைப்பதைக் கண்டு இன்னும் கோபம் அதிகமாகியது அனஹாவிற்கு.

“உன்னைப் பொண்ணுப் பார்க்க வந்துருக்காங்க அனஹா”

“என்னது……” இருவரும் கிட்டத்தட்ட அலறியே விட்டனர்.

“ஒஹ்ஹ்… இதெல்லாம் அம்மையார் ஏற்பாடா? லவ் பண்ணறேன் நீயும் என்னை லவ் பண்ணறியான்னுக் கேட்டா என்கிட்ட பதில் சொல்றத விட்டுட்டு வீட்ல சொல்லிக் கல்யாணம் வரைக்கும் போயாச்சா?” என்று மனதிற்குள் கருவினான் ரோஹன். அவன் கைகளை இறுகப் பற்றி அமர்ந்திருந்தது அவன் கோபத்தை எல்லோருக்கும் சொல்லியது.

“லவ் பண்ணறேன்னு தான் திடீர்ன்னு சொன்ன… 2 நாள் டைம் கேட்டேன்ல… அதுக்குள்ள எதுக்கு வீட்டோட வந்துப் பொண்ணுக் கேக்கணும்? அப்படி என்ன அவசரம்? ஒருப் பொண்ணுக்கு புடிச்சுருக்கான்னுக் கூட தெரிஞ்சுக்க மாட்டியா?” என்று தலையைக் குனிந்து உள்ளே வெந்துக் கொண்டிருந்தாள் அனஹா.

பிரமோத் ஷீபாவைப் பார்த்தான். ஷீபா அனஹாவின் அம்மாவைப் பார்த்தாள். இவர்களின் பார்வைப் பரிமாற்றத்திலேயே அவர்களின் சங்கடத்தை உணர்ந்த ரோஹனின் தந்தைத் தானே அந்த மௌனத்தைக் கலைத்தார்.

“இது உங்க ரெண்டுப் பேருக்குமே அதிர்ச்சியா தான் இருக்கும். ஆனா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் குடுக்கணும்னு தான் ரெண்டுப் பேரோட வீட்லயும் இதப் பத்தி உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லல” என்றுக் கூறி சிறிது இடைவெளி விட்டார்.

முதலில் அவர் சொன்னதின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டது ரோஹன் தான். “அப்போ இவளுக்குமே இந்த ஏற்பாடுத் தெரியாதோ? நம்மளப் பார்த்ததும் கூட அதிர்ச்சியானாளே?” என்று சிந்தனையோடு அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

அவனின் யோசனையான முக பாவத்தைப் பார்த்தவளுக்கு அப்போது தான் அவனின் தந்தைக் கூறியதன் அர்த்தம் விளங்கியது. “இவனுக்கும் தெரியாதாமே… அப்பறம் எப்படி வீட்டில் தெரிஞ்சுது?” என்று யோசித்து அவளின் பெற்றோரைப் பார்த்தாள்.

“நாங்க ரெண்டு நாள் முன்னாடியே பேசிட்டோம் அனஹாம்மா…” என்று நேரடியாக அவளிடமேப் பேசினார் ரோஹனின் தந்தை.

இப்போது மீண்டும் அதிர்ச்சியாகி இருவருமேப் பெற்றோரை பார்ப்பதைத் தவிர்த்தனர். ஒருவரை ஒருவர் பார்த்து மீண்டும் முறைக்கத் துவங்கினர்.

“உங்க பிரண்ட்ஸ் சொல்லி தான் இந்த ஏற்பாடே செஞ்சுருக்கோம்” என்றுக் கூறினார் அனஹாவின் தந்தை.

“உங்க ரெண்டு பேரையுமே கல்யாணத்துக்கு சம்மதிக்க வெக்க நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஆனா இப்போ உங்களுக்கு கல்யாணத்துல சம்மதம்னுத் தெரிஞ்சதால நாங்க பேசி முடிவுப் பண்ணிட்டோம்” என்றார் ரோஹனின் தந்தை.

உடனேத் திரும்பி நண்பர்களைத் தீ பார்வைப் பார்த்தான் ரோஹன். “சனியனே இதுல நீ வேறக் கூட்டா? நான் இன்னும் முடிவெடுக்கலன்னு தான உன்கிட்ட சொன்னேன்…..” அனஹா பல்லைக் கடித்து கூறிக் கொண்டிருக்கும்போதே அவ்விடம் விட்டு நகர்ந்து அனஹாவின் தாயின் அருகில் சென்று நின்றுக் கொண்டாள் ஷீபா.

நண்பர்கள் மேல் இருந்தக் கோபமும் தன் இணையின் மீதேத் திருப்பினர் இருவரும். இப்படி முறைத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்த ராஹுல் “ஏதோ பிளான் பண்ணி தான் நடக்குது… ரெண்டு பேரோட பிரண்ட்ஸும் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணற மாதிரி தெரியல…….. நம்ம தான் எதாவது பேசணும்” என்று யோசித்து “ரெண்டுப் பேரும் தனியாப் பேசட்டுமே…” என்று இழுத்தான்.

“அதான் 2 நாளைக்கு முன்னாடியேத் தெளிவாப் பேசிட்டாங்களே” என்றுக் கூறி ரோஹனைப் பார்த்து கண் அடித்தார் அவனின் தந்தை.

இதைப் பார்த்த ராஹுல் யோசிக்கத் துவங்கினான். ஒரு முறை அனைவரின் முகத்தையும் சுற்றிப் பார்த்தான். பின் ரோஹனையும் அனஹாவையும் பார்த்தான்.

11

அனைவரின் முகத்தையும் பார்த்த ராஹுலிற்கு எதுவோப் புரிவது போல் இருந்தது. திடீர் பெண் பார்க்கும் படலம், ஏற்கனவேப் பெத்தவங்க பேசி வெச்சு செய்யறாங்க, 2 நாள் முன்னாடியே இவங்க ரெண்டுப் பேரும் பேசிட்டாங்கன்னு அப்பா சொல்றது……….. சட்டென ரோஹனின் பக்கம் திரும்பிய ராஹுல் “அண்ணா!!! லவ் பண்ணறியா??? நீயா???” என்றுப் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யமாகக் கேட்டான்.

“இவனெல்லாம் வெச்சுகிட்டு……. ஐயோ இப்படி எல்லோர் முன்னாடியும் கேக்கறானே…. எரும… இத வீட்டுக்குப் போய் கேட்டுத் தொலஞ்சுருக்க வேண்டியது தான?” என்று மனதிற்குள் புலம்பி நெளிந்தான் ரோஹன்.

ரோஹனின் மௌனமே விடைக் கூறி விட “அண்ணி!!!!!! கன்க்ராட்ஸ்!!! கை குடுங்க……..” என்று அனஹாவிடம் சென்று கையைப் பிடித்து குலுக்கினான் ராஹுல்.

இப்போது நெளிவது அனஹாவின் முறையானது. அவனின் அண்ணி என்ற அழைப்பு வேறு அவளுக்கு சிறிது வெட்கத்தைக் கொடுக்க “தேங்க்ஸ்” என்றாள் வெளி வராதக் குரலில்.

மீண்டும் ரோஹன் அருகில் வந்தமர்ந்த ராஹுல் “அப்பறம் என்ன…. அதான் அண்ணின்னு கூப்டதுக்கு ரெண்டு பேருமே எதிர்ப்பு சொல்லலையே……. அப்போ ரெண்டுப் பேருக்குமே ஓகே தான். சீக்கரம் கல்யாண ஏற்பாடு பண்ணுங்க” என்று இலவச அறிவுரை வேறு வழங்கினான்.

இருவருமே வேகமாக ஏதோ சொல்ல வாய் எடுத்தனர். அதற்குள் ரோஹனின் தாய் பேசத் துவங்கினார். “சாரி மா. தப்பா எடுத்துகாதம்மா. ராஹுல்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி. படப் படன்னு பேசுவான். மனசுல எதையும் வெச்சுக்க மாட்டான்”

“ஐயோ நீங்க எதுக்கு சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு…”

“பார்ரா…….. இப்போ மட்டும் டக்குன்னுப் பேச்சு வருது” என்று நினைத்து அனஹாவை ஒரு ஏளனப் பார்வைப் பார்த்தான் ரோஹன்.

அதைக் கேட்டு சிரித்தவர், “நீ வந்து வாழ போற வீட்டப் பத்தி உனக்கு சொல்ல வேண்டியது எங்கக் கடமை. இவன் உன் கிட்ட எங்களப் பத்தி என்ன சொன்னானோ தெரியாது…” எனும்போதே “இவன் என்னத்த சொன்னான்?” என்று மனதிற்குள் ரோஹனைத் திட்டி மீண்டும் அவனை முறைத்தாள் அனஹா.

“ரோஹன் அப்பா ரமேஷ் XXX கல்லூரியில் ப்ரிசிபலா வேலைப் பார்க்கிறார். நான் தீபா. ஹவுஸ் வைப். ராஹுல் பைனல் இயர் இன்ஜினியரிங் XXX கல்லூரியில் படிக்கறான். ரோஹன் பத்தி உனக்கேத் தெரிஞ்சுருக்கும்”

அனஹா இவ்வளவு நேரமும் ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். அப்படியாவது ரோஹன் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம் என்று…. அவரும் கை விடவே “இப்பயாவது சொல்றானாப் பாரு…” என்று அதற்கும் ரோஹனையே முறைத்தாள்.

“ரோஹன் XXX இன்ஜினியரிங் காலேஜில் ப்ரொபசராக இருக்கிறான்” என்று முதல் முறையாக வாயைத் திறந்தான் பிரமோத்.

“என்னது இவன் காலேஜில் ப்ரொபசரா??? ஒரு ப்ரொபசர் பண்ற வேலையா பண்றான் இவன்? ஆளும் மண்டையும்… அது எப்பேர்பட்ட ப்ரொபெஷன்? ச்ச…….” என்று அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் அனஹா.

“ஊர்ல இருக்க இன்ஜினியரிங் காலேஜ்ல பாதிய குடும்பத்துல ஆளுக்கு ஒன்னாக் குத்தகைக்கு எடுத்து வெச்சுருக்காங்க போல…..” என்றும் நினைத்தாள்.

“நீங்க ரெண்டுப் பேரும் ஒரே பீல்ட்ல வேலைப் பார்க்கறவங்கன்றதால தான் இந்த சம்மந்தம் எங்களுக்கு ரொம்பப் புடிச்சுது…” என்றுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் அனஹாவின் தந்தை.

அப்படியென்றால்??? அதிர்ந்து அவளைப் பார்த்தான் ரோஹன்.

“அனஹா XXX கல்லூரியில் அசிஸ்டன்ட் ப்ரொபசராக வேலைப் பார்க்கிறாள். நான் சுந்தர். PWD ல வேலைப் பார்க்கிறேன். என் மனைவி அனுக்ரஹா ஹவுஸ் வைப். உங்க அம்மா எப்படி என் பொண்ணுகிட்ட எல்லாம் சொன்னாங்களோ அதே மாதிரி நானும் சொல்லணும்ல… அதான் சொன்னேன் மாப்பிள்ளை”

“அடி பாவி என்கிட்டப் பேசவே இப்படி தந்தியடிக்கறியே….. நீயெல்லாம் காலேஜ்ல எப்படிப் பாடம் நடத்துவ??? வெளங்கிடும்…..” என்று யோசித்து அவளை முறைத்தான் ரோஹன்.

சுந்தரின் “மாப்பிள்ளை” என்ற அழைப்பில் இன்னும் கோபம் கூடியது அனஹாவிற்கு.

“சரி சம்மந்தி. நம்மப் பேசினபடியே இன்னும் ஒரு வாரத்துல நிச்சயமும், அடுத்த 2 வாரத்துல கல்யாணமும் வெச்சுடலாம்” என்றார் ரமேஷ்.

“நம்ம அன்னைக்குப் பேசி முடிவுப் பண்ணப்பையே மண்டபத்துக்கும் சொல்லிட்டோமே சம்மந்தி. உங்க யோசனையும் சரி தான். அன்னைக்கு சொல்லி இருக்கலன்னா அந்த மண்டபம் கெடைச்சுருந்துருக்காது…” என்றார் சுந்தர்.

மண்டபம் பேசி முடிக்கற அளவுக்கு போயாச்சா? என்றுத் திகைப்பாக இருந்தது இருவருக்கும்.

“அப்போ நாங்கக் கெளம்பறோம் சம்மந்தி. நிச்சயத்துக்கு டிரஸ் எடுக்கறதெல்லாம் நீங்க என் வீட்டுக்காரம்மாக் கிட்ட பேசிக்கோங்க. நமக்கு இந்த ஷாப்பிங் கொஞ்சம் அலர்ஜி…” என்றுக் கூறி எழுந்தார் ரமேஷ்.

“எனக்கும் அப்படி தான் சம்மந்தி. அதெல்லாம் அனுக்ரஹா தான் பாத்துக்கனும். சாப்பிட்டு போங்க சம்மந்தி” என்றார் சுந்தர்.

“அதான் எங்களுக்குப் பெரிய வேலையெல்லாம் குடுத்துருக்கீங்களே அண்ணா. நாங்க அதெல்லாம் முடிக்கனுமே. என்ன அண்ணி?” என்று அனுக்ரஹாவைப் பார்த்துக் கேட்டார் தீபா.

“ஆமாமாம்… அது எப்படி தான் கடைக்குப் போனும்னு சொன்னா மட்டும் வேலை வருமோ தெரியாது… நான் நாளைக்கு கூப்பிடறேன் அண்ணி. நாளைக்கேப் போய் நிச்சயத்துக்குத் தேவையானத எடுத்துடலாம்… கல்யாணத்துக்கு எடுக்கறப்பயாவது வருவீங்களா?” என்றார் அனுக்ரஹா, கோபம் சிறிது எட்டிப் பார்க்க.

“அதுக்கு நாங்க ரெண்டுப் பேருமே வருவோம். என்ன சம்மந்தி? இல்லன்னா நம்மலால சமாளிக்க முடியாது…” என்ற ரமேஷ் “வரோம்” என்றுக் கைக் கூப்பி வெளியே செல்லத் துவங்கினார்.

“எப்படி இவர்களால் நிறைய நாள் பழகியவர்கள் போல் இப்படி பேசிக் கொள்ள முடிகிறது?” என்று ரோஹனும் அனஹாவும் ஆச்சர்யப் பட்டனர். கிளம்பும்போது அவளிடம் தலை அசைத்து விடைப் பெற்றவன் அவளின் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டுக் கிளம்பினான்.

“அப்போ நாங்களும் கிளம்பறோம்…” என்றுக் கூறி வேகமாக ரோஹனின் குடும்பத்திற்கு முன் வெளியேறிச் சென்றனர் பிரமோதும் சுதீஷும்.

“எங்கடா போயிட போறீங்க…” என்று மனதுக்குள் கருவிக் கொண்டான் ரோஹன்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும் “என்னப்பா இதெல்லாம்? என்று ஆரம்பித்தவனை “எதுவா இருந்தாலும் வீட்டிலப் போய் பேசிக்கலாம் ரோஹன்” என்றுக் கூறி நிறுத்தி விட்டு காரில் ஏறி அமர்ந்தார் ரமேஷ்.

ரோஹானின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேச் சென்றதும் ஷீபாவின் பக்கம் திரும்பிய அனஹா “ஷீபா நீ….” என்று ஆரம்பித்தாள்.

“காலேஜிலேந்து நேரா உங்க வீட்டுக்கு வந்துட்டேன்டி. ரொம்ப டையர்டா இருக்கு… நான் கெளம்பறேன் அனஹா. வரேன் ஆன்டி… வரேன் அங்கிள்…” என்று வேகமாகக் கூறிப் பறந்து விட்டாள் ஷீபா.

“அனஹா சந்தோஷமா இருக்கியா இப்போ?”

இப்படிக் கேட்கும் தந்தையிடம் என்னவென்று கூறுவது?

“எங்களுக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்”

இது வேறயா அம்மா? என்ன பதில் சொல்லுவாள்? சிரித்துவிட்டு தனதறைக்குச் சென்று விட்டாள் அனஹா.

கிட்டத்தட்ட இதேப் போன்ற கேள்விகளை ரோஹனின் வீட்டிலும் கேட்டனர்.

…………

“எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டுப் புடிச்சுருக்கான்னு எதுக்கு கேக்கறீங்க?” என்று எரிச்சலுடன் கேட்டான் ரோஹன்.

“பின்ன நீதான் அந்தப் பொண்ணுகிட்டப் பேசுனியாம்…. பீச்சுக்கெல்லாம் கூட்டிட்டுப் போனியாம், அவகி……”

“ஐயோ அம்மா…. எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்” என்று வேகமாகக் கூறி விட்டு அங்கிருந்துப் படுக்கையறைக்குள் ஓடி விட்டான் ரோஹன்.

உள்ளே வந்த ரோஹன் “என் மானத்தை வாங்கி வெச்சுருக்கானுங்க… சும்மா விட மாட்டேன்டா உங்கள…” என்று மனதிற்குள் சூளுரைத்தான்.

12

ப்ரமொதிற்கும் சுதீஷிற்கும் அழைத்து அழைத்துக் களைத்துப் போனான் ரோஹன். “எடுக்க மாட்டானுங்களே……. அது எப்படி எடுப்பானுங்க…….” என்றுப் பல்லைக் கடித்தவன், இவர்களிடம் பேசித் தெளிவுப் பெறாமல் அனஹாவிடம் என்னவென்றுப் பேசுவது என்று யோசித்தான்.

நாளை நடத்தவிருக்கும் பாடத்திற்கு நோட்ஸ் எடுக்க வேண்டி இருந்ததால் ரெபர் செய்யத் துவங்கினான். அதில் கவனம் செலுத்தியப் பின் மனம் ஒருநிலைப் பட்டது.

அனஹாவால் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. “ஏமாத்தினானா??? எப்படி நாம் ஏமாந்தோம்??? இல்லையே… அப்படியும் சொல்ல முடியாதே… அப்பறம் எதுக்குப் பொண்ணுப் பாக்க வரணும்?

அன்னைக்கு பீச்ல என் கஷ்டத்தப் புரிஞ்சு உதவிப் பண்ணது… அவன் காதல் சொன்னது…. அது கண்டிப்பா பொய் இல்லை…” என்று யோசித்தவளுக்கு அன்று அவன் சொன்னதும், அவள் தடுமாறியதும், அவன் கண்களைப் பார்க்க முடியாமல் தவித்ததும் ஞாபகம் வந்தது.

இப்போதும் அவளுக்கு அதை நினைத்தால் ஜில்லிட்டது……. “வேண்டாம்… இப்போ எதையும் யோசிக்க வேண்டாம்…..” என்றுத் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள்.

நோட்ஸ் எடுத்து முடித்த ரோஹன் மீண்டும் ஒரு முறை ப்ரமோதிற்கும் சுதீஷிற்கும் அழைத்தான். இருவருமே அழைப்பை எடுக்கவில்லை. எரிச்சலடைந்த ரோஹன் கைபேசியை அருகில் வைத்துப் படுக்கையில் விழுந்தான்.

சரியாக அந்த நேரம் தீபா உள்ளே வந்தார். “ரோஹன்… நாளைக்கு லீவ் போடுறியா? நிச்சயத்திற்கு ட்ரெஸ் எடுத்துடலாம்…” என்றுக் கூறினார். “ம்மா ப்ளீஸ்… லீவ் எல்லாம் போட சொல்லாதீங்க… முடிக்க வேண்டிய சிலபஸ் நிறைய இருக்கு. இந்த வாரக் கடைசில போய் எடுப்போம்” என்றான்.

“சரி பா… அப்போ அனஹா வீட்டுல சொல்லிடவா?” என்று தீபா கேட்டதிற்கு “ம்ம்” என்று மட்டும் பதில் கூறினான் ரோஹன். தீபா அறையை விட்டு வெளியேறியதும் ஒரு நீண்டப் பெருமூச்சை வெளியேற்றியவன் “இந்த வீக்கெண்ட் குள்ள எப்படியாவதும் இவனுங்கள்ட பேசிடணும்…” என்று முடிவெடுத்து உறங்கினான்.

அனஹா கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். “ஐயோ இப்படித் தூக்கம் வராமப் பொலம்ப விட்டுட்டானே… ஷீபா எருமையும் இதுலக் கூட்டு… ச்சை… வீட்டுல நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்க? இப்போ ரோஹன் கிட்ட என்னன்னுப் பேசுவேன்?

அவனாவது எனக்கு போன் பண்ணி எல்லாத்துக்கும் காரணம் சொல்ல வேண்டியது தான? அவனுக்குமே இது எதுவும் தெரியாதாமே… நாளைக்கு முதல் வேலையா ஷீபா கிட்டப் பேசணும்… இதுங்க எல்லாம் சேர்ந்து என்னத்த செஞ்சு வெச்சுருக்குங்கன்னுத் தெரிஞ்சுக்கணும்….” என்று மனதிற்குள் நினைத்து மீண்டும் படுத்துத் தலை வரை இழுத்துப் போர்த்தினாள் அனஹா.

அடுத்த நாள் காலையே அனஹாவின் சித்தியும் அவர் பெண்ணும் வந்திறங்கி இருந்தனர். “அப்போ எல்லாமே முன்னாடியே பிளான் பண்ணி தான் செய்யறாங்க…..” என்று ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு.

“ஆனா இதெல்லாம் எப்போ நடந்துது??? நம்ம என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்???” என்றுக் குழம்பினாள்.

“ஹே கல்யாணப் பொண்ணு….. எப்படி டா இருக்க?” என்று ஆசையாக தலை வருடினார் சித்தி. பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு சித்தியிடம் மெதுவாக கேட்டாள் அனஹா “உங்களுக்கு எப்போ சித்தி தெரியும்? நேத்து தான் எல்லாம் பிக்ஸ் ஆச்சு???”

“அதெல்லாம் போன வாரமே உன் அம்மா சொல்லிட்டா டா. கல்யாண கலை வந்துடுச்சு அனஹா உன் முகத்துல…” என்றுப் பூரிப்புடன் கூறினார்.

“அதெல்லாம் இல்ல சித்தி…” அவர் முதலில் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த அனஹா அவர் பின்னால் சொன்னதைக் கேட்டு வெட்கம் மேலிட தலைக் குனிந்தாள்.

“ஏன்கா உன் கண்ணுக்கு நானெல்லாம் தெரிய மாட்டேனா?” என்று இடைப் புகுந்தாள் அனஹாவின் சித்திப் பெண்.

“போடி நீ பேசாத….. போன வாரம் எத்தன வாட்டி உனக்கு போன் பண்ணேன்…. எடுத்தியா?” என்று முகம் திருப்பினாள் அனஹா.

“ஐயோ சொன்னேன்லக்கா… ப்ராஜெக்ட் விஷயமா அலஞ்சேன்னு…” என்று அனஹாவின் தாடையைப் பிடித்துக் கெஞ்சினாள்.

இப்படியே இவர்கள் பேசிப் பேசி சமாதனம் ஆகி அனஹா கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள். கிளம்புவதற்கு முன் அவளிடம் வந்த அனுக்ரஹா “ரோஹன் அம்மா கால் பண்ணாங்க அனஹா… மாப்பிள்ளைக்கு லீவ் போட முடியாதாம். இந்த வீக்கெண்ட் நிச்சயத்துக்கு டிரஸ் எடுக்க போகலாம்னு சொன்னாங்க…” என்றார்.

“ஐயோ நிச்சயம் வரைக்கும் போயாச்சு… கல்யாணம்… கடவுளே… நெனச்சாலேத் தல சுத்துதே…” என்று மனதிற்குள் யோசித்த அனஹா “வரேன் மா” என்றுக் கூறி வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

அனஹாவால் என்ன முயன்றும் ஷீபாவிடம் பேச முடியவில்லை. காலை கல்லூரிப் பேருந்தில் வராமல் ஷீபா அவளின் வண்டியில் வந்திருந்தாள்.

“எப்படி எஸ்கேப் ஆகறான்னே கண்டுப் புடிக்க முடியலையே… போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறா… பிரேக், லஞ்ச் எப்பயும் கண்ணுல படல… அவ ப்ரீ ஹவர்ஸ்லக் கூட ஆளக் காணும். இவ்வளோப் பண்றவள எதுக்கு அவ வீட்டுக்கு மட்டும் போய் பாக்கணும்? அப்படி என்னப் பெரிய இவ அவ….” என்றுப் பொருமிக் கொண்டிருந்தாள் அனஹா.

இப்படியே அந்த வாரம் முழுவதும் ரோஹனும் அனஹாவும் எவ்வளவு முயன்றும் அவர்களின் நண்பர்களைப் பார்க்கக் கூட முடியவில்லை. இதுவே அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்திக் கொண்டிருந்தது.

கல்லூரியில் இதையே யோசிப்பவர்கள் வீட்டிற்கு வந்தாலோ கல்யாணம் நிச்சயமானதின் சந்தோஷத்தை வீட்டில் இருப்பவர்கள் கொண்டாடுவதைப் பார்த்து என்ன செய்வதென்றுப் புரியாமல் விழித்தனர்.

13

அந்த வார இறுதியில் நிச்சயத்திற்கு துணி எடுக்க அனஹா, அனுக்ரஹா, அவரின் தங்கையும், தங்கைப் பெண்ணும், தீபா, ரோஹன், ராஹுல், ரோஹனின் அத்தையும் கடைக்கு வந்திருந்தனர்.

அனஹாவை தூரத்திலேயேப் பார்த்து விட்ட ரோஹன் அவள் அழகில் மயங்கிதான் போனான். அனஹா சந்தனமும் சிவப்பும் சேர்ந்த காட்டன் சுடி அணிந்திருந்தாள். “dolly” என்று முனுமுனுத்தவன் “இப்போ நம்ம என்ன சொன்னோம்?? அவளை இப்படிப் பார்த்து ரசிக்கிறோமே…. அவகிட்ட லவ் பண்ணறேன்னு ஏற்கனவே சொல்லிட்டோமே……

இப்பயும் அவகூடப் பேசாம இருந்த இந்த ஒரு வாரம் நரகமா தான இருந்துது…… இப்போ அவளப் பார்த்ததும் மனசுல ஏதோ நிம்மதி வருதே…. அவளையேக் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு நெனச்சா எவ்வளோ சந்தோஷமா இருக்கு…. நாந்தான் வீணா மனசப் போட்டு குழப்பிக்கறேனோ?” என்று யோசித்து சிரிப்புடன் நின்றான்.

அனஹா ரோஹனை அருகில் வந்து தான் கவனித்தாள். கிரீம் கலர் பாண்டும் கருநீல நிற அறிக்கை சட்டையும் கண்ணாடியும் ‘ஹன்ட்சம்’ என்பதையும் தாண்டி ‘ஸ்மார்ட்’ என்று நினைக்க வைத்தது. ஒரு வாரமும் அவன் மீது இருந்த கோபம், தனக்கிருந்த குழப்பங்கள், சந்தேகம் எல்லாம் மறைந்து ஒருப் பரபரப்புத் தொற்றிக் கொண்டது அனஹாவை.

அவனையே பார்த்துக் கொண்டு வந்தவள் அவனை நெருங்க நெருங்க அது முடியாமல் தலை குனிந்துக் கொண்டாள்.

அனுக்ராஹா அவரின் தங்கையையும் தங்கிப் பெண்ணையும் ரோஹன் வீட்டாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ரோஹனின் அத்தையை அனஹாவின் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார் தீபா. “முதல்ல புடவை எடுத்துடலாம் அண்ணி. அதுக்கு தான் நேரம் ஆகும்” என்று தீபா கூறியதும் சரியென்று பட்டுப் புடவை பிரிவிற்கு சென்றனர் அனைவரும்.

“அப்பாத் தெளிவு இல்லைண்ணா? நம்மளக் கோர்த்து விட்டு எப்படி எஸ்கேப் ஆகிட்டாரு…. இருட்டுறதுக்குள்ள முடிச்சுடுவாங்களா?” என்று ராஹுல் ரோஹனின் காதைக் கடித்தான்.

“டேய் இது வீடு இல்ல… இப்போ எதாவது அம்மா காதுல விழுந்துது… இத்தனப் பேரு முன்னாடித் திட்டுவாங்க பரவால்லயா?” என்றுக் கேட்டு ஒரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தான் ரோஹன். அதன் பிறகு வாய் திறக்கவில்லை ராஹுல்.

ஆளுக்கு ஒரு கலர், ஒரு டிசைன் என்றுக் கூறிப் பிடித்ததைக் கண்ணாடி முன் வைத்துப் பார் என்று அனஹாவைப் பாடாய் படுத்தினர். அனஹாவிற்கே கொஞ்சம் பொறுமைப் போயிருந்தது. தன் தாயிடம் வாயைத் திறந்தால் தொலைத்து விடுவார் என்று நேரடியாக தீபவிடமே முறையிடச் சென்றாள். அவளுக்கு தீபாவை மிகவும் பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவர் அன்று அவளுடன் பேசியது தான்.

துணி எடுக்க எங்கே, எப்போது போகலாம் என்று கேட்பதற்கு அனுக்ரஹா தீபாவை போனில் அழைத்தபோது அனஹாவிடம் பேச வேண்டும் என்றுக் கூறி அவரே தான் பேசினார். தீபா “எனக்கு பொண்ணு இல்லம்மா. எனக்கொருப் பொண்ணு இருந்தா என்னெல்லாம் பண்ணிப் பாக்கணும்னு ஆசைபட்டேனோ… அது எல்லாம் உனக்கு பண்ணிப் பாக்க நெனைக்கறேன். எனக்காக நான் சொல்றதெல்லாம் செய்வியா அனஹா?” என்று சிறிதுத் தயங்கியே போனில் கேட்டார்.

அவர் கேட்ட விதமே அவரை மிகவும் பிடித்து விட்டது அனஹாவிற்கு. “கண்டிப்பா செய்வேன் ஆன்டி” என்றுக் கூறினாள்.

“அத்தைன்னே கூப்பிடு அனஹா” என்று சிரித்துக் கொண்டேக் கூறி வைத்தார் தீபா.

அவர் அன்று இவ்வாறு பேசியதே, தான் ஏதாவது சொன்னால் தனக்கு சப்போர்ட் செய்வார் என்று நம்பி “அத்தை எனக்கு நின்னு நின்னு கால் வலிக்குது. ப்ளீஸ்… நிச்சயத்திற்கு தானே… சீக்கிரம் எடுக்க சொல்லுங்க அத்தை. கல்யாணத்திற்கு எடுக்க வரப்போப் பொறுமையாப் பார்த்து எடுத்துக்கலாம்…” என்றுக் கெஞ்சினாள்.

அவளின் அத்தை என்ற அழைப்பில் அவர்களின் புறம் திரும்பிய ரோஹனிற்கு தன் தாயிடம் அவள் பேசிய விதம் ஏதோ நீண்ட நாள் பழகியவரிடம் உரிமையுடன் பேசுவதுப் போல் தோன்றியது. அதுவும் ஏனோ அவனுக்கு சந்தோஷத்தையேக் குடுத்தது.

“நல்ல பொண்ணு டா நீ… நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் 2 வாரம் தான் கேப் இருக்கு… அதுக்குள்ளத் திரும்பக் கடைக்கு அலையை முடியுமா? இன்னைக்கு மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து எடுக்க தான் வந்துருக்கோம்… முதல்ல நிச்சயப் புடவை எடுத்துட்டா அப்பறம் முகூர்த்தப் புடவைப் பார்க்கலாம்”

“அம்மாஆஆ” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அலறினான் ராஹுல்.

“என்னடா? என்னாச்சு? என்ன தம்பி பண்ணுது?” என்று அவனைச் சுற்றிப் பலக் குரல்கள் கேட்டன. கடையில் சிலரும் திரும்பிப் பார்த்தனர்.

இவை அனைத்தையும் கவனித்த் ராஹுல் “கொஞ்சம் ஓவரா போய்டுச்சு… சாரி… அம்மா என்னம்மா சொல்ற? கல்யாணத்துக்கும் இன்னைக்கே எடுக்க போறோமா? அதுக்கு தான் அப்பா வரேன்னு சொன்னாங்களே?” என்றான்.

“அறிவு இல்லையா உனக்கு? இப்படியா கடைல நாலுப் பேருப் பார்க்கற மாதிரிக் கத்தறது அதுக்கு? பேசாம உக்கார்ந்துரு…” என்று தீபா வசைப் பாடினார்.

“தேவையா உனக்கு? இதுக்கு தான் அமைதியா இருன்னு சொன்னேன்…” என்று அவன் காதைக் கடித்தான் ரோஹன்.

“அண்ணா அதுக்குன்னு எவ்வளவு நேரம் தான் இப்படியே உக்கார்ந்து வேடிக்கைப் பார்க்கிறது? நீயாவது அண்ணியை சைட் அடிச்சுகிட்ருக்க… எனக்கு போர் அடிக்குது”

“வாய மூடிட்டு இரு” என்றுக் கூறித் திரும்பி விட்டான் ரோஹன்.

ரோஹானும் அனஹாவுமேக் கூட தீபா கூறியதைக் கேட்டு சிறிது அதிர்ந்தனர். அனஹாவிற்கு இன்னும் எத்தனை நேரம் இப்படியே காட்சிப் பொருளாய் நிற்க வேண்டுமோ என்று அலுப்பாக இருந்தது. ரோஹனிற்கோ பெண்கள் பிரிவில் இவர்கள் பேசும் இழை, புட்டா போன்றப் புரியாத பாஷையை இன்னும் எவ்வளவு நேரம் கேட்பது என்று இருந்தது.

எப்படியோ நிச்சயப் புடவையை எடுத்தவர்கள், முகுர்த்தப் புடவையைக் கட்டிப் பார்த்து தான் வாங்க வேண்டும் என்று கடையில் வேலை செய்யும் பெண்ணை அழைத்துப் புடைவை அணிவது போலே ப்ளீட்ஸ் வைத்து அணிவித்துக் காண்பிக்கக் கூறினர்.

“நீ தானே அனஹா முகூர்த்தப் புடவை பொறுமையாப் பார்க்கலாம்னு சொன்ன?” என்று அனுக்ரஹா கூறியதும் சிரித்து விட்டான் ரோஹன்.

அனஹா அவனைத் திரும்பி முறைத்ததும், அமைதியாக வேறு புறம் திரும்பினான். சிறிது நேரம் பொறுத்த ரோஹன் அவள் படும் பாட்டைப் பார்த்து மனம் பொறுக்காமல் இத்தனை நேரம் அவளுக்கு வைத்துப் பார்த்து, உடுத்திப் பார்த்ததில் அவனுக்குப் பிடித்த 3 புடவைகளை கையில் எடுத்தான். “அம்மா எனக்கு இந்த மூனும் புடிச்சுருக்கு… இதுல எதையாவது ஒன்ன எடுங்க அத்தை…” என்று தீபாவையும் அனுக்ரஹாவயும் பார்த்துக் கூறினான்.

இவர்கள் அடித்தக் கூத்தில் நொந்து போயிருந்த அனஹா அது வரை எந்தப் புடவையையும் சரிவரப் பார்க்கவில்லை. ரோஹன் எடுத்து நீட்டியதில் ஒருப் புடவை அவளுக்கு மிகவும் பிடித்து விடவே, “நான் இத எடுத்துக்கறேன்…” என்றுக் கூறி அவன் கையில் இருந்து மெதுவாக அந்தப் புடவையை வாங்கினாள்.

அதை வருடிக் கொண்டே நின்றவளைப் பார்த்ததும் ரோஹனிற்குப் புரிந்துது… அது அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது என்று. அவள் இத்தனை வேகமாகத் தேர்வு செய்ததையும் குறித்துக் கொண்டான்.

அதன் பிறகு வேறு சில நிகழ்வுகளுக்கென புடைவைகளும் இரு வீட்டு நெருங்கிய உறவுகளுக்கென சிலதும் எடுத்து முடித்து எழுந்தனர்.

“அப்போ சாப்பிட போலாமா? மணி இப்போவே 3…” என்றான் ராஹுல்.

“ஒரு வழியா ஆண்களுக்கும் எடுத்துட்டா வேலை முடிஞ்சுடும். அதுக்கப்பறம் சாப்பிடலாம்”

“இல்லைன்னா லேட் ஆகிடும்”

“ஒரே கடைலயே முடிச்சுடலாம்” என்று ஆளுக்கு ஒன்று சொல்லி இவர்களை கண்டுக் கொள்ளாமல் ஆண்கள் பிரிவிற்கு சென்றனர். அனஹா, ராஹுல், ரோஹன் மூவரும் இது எப்ப தான் டா முடியும் என்று மெதுவாக அவர்கள் பின்னே நடந்தனர்.

அனஹாவும் தங்களுடன் சேர்ந்துப் பின்னே நடந்து வருவதை கவனித்த ராஹுல் “அண்ணி நீங்க ஏன் அலுத்துக்கறீங்க? இவ்வளவு நேரம் உங்களுக்கு தான எடுத்தாங்க? உங்களுக்கு ஷாப்பிங் பண்ண பிடிக்காதா?” என்றுக் கேட்டான்.

“காலெல்லாம் வலிக்குது. நான் பிரண்ட்ஸ் கூட அம்மா கூட ஷாப்பிங் பண்ணுவேந்தான்… ஆனா இப்படி இவ்வளவு நேரம் எடுத்துக்க மாட்டேன். மணிக்கணக்குல நாள் பூரா என்னால அலையை முடியாது. எனக்கு அது சுத்தமாப் புடிக்காது” என்று சோர்வோடுக் கூறினாள் அனஹா.

“அண்ணாத் தப்பிச்ச… அது எப்படி உனக்கேத்த மாதிரியே செலக்ட் பண்ணி இருக்க அண்ணிய?”

அப்போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரே தவிர ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

ரோஹன் அவனது உடையை நேர்த்தியாக தேர்வு செய்தான். ஆனால் சீக்கிரம் எடுத்தான். அதை தீபாவிடமும் அனுக்ரஹாவிடமும் காண்பித்து அவர்களின் சம்மதமும் பெற மறக்கவில்லை. அவனது தாயிடம் கேட்பது போலவே தன்னிடமும் கேட்டது மிகவும் பெருமிதமாய் இருந்தது அனுக்ரஹாவிற்கு.

ராஹுல் ரோஹைனையேத் தேர்வு செய்ய சொன்னான். பின்பு அவனின் தந்தைக்கும் அவனையே எடுக்க சொன்னார் தீபா.

“அப்படியே எங்க வீட்டில் எல்லோருக்கும் நீங்களே எடுத்துடுங்க மாப்பிள்ளை” என்றுக் கூறினார் அனுக்ரஹா.

“சரி அத்தை” என்று சிரித்துக் கொண்டேக் கூறியவன், மொத்தத்தையும் தேர்வு செய்து முடித்தான்.

வாங்கியது அனைத்தையும் இரு வீட்டாரும் பிரித்துத் தனித் தனியேப் பணம் கட்டி விட்டு வெளியே வந்த போது இருட்டி இருந்தது.

“கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்கணும்னா இப்படி விரதம் இருந்து தான் வாங்கணுமாண்ணா?” என்று நொந்துக் கொண்டான் ராஹுல்.

அவனைப் பார்க்கவும் பாவமாக இருந்தது ரோஹனிற்கு. அனஹாவும் சோர்ந்துக் காணப்பட்டாள்.

“சாப்பிட்டுக் கிளம்பலாம் அத்தை…” என்று அனுக்ரஹாவிடம் கூறிய ரோஹன் அருகில் இருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றான். எல்லோருமே நல்லப் பசியில் இருந்ததால் அமைதியாகவே உண்டு முடித்தனர்.

சாப்பிட்டு முடித்து வெளியே வந்தபோது “தனியாவா போகப் போறீங்க?” என்றான் ரோஹன். இத்தனைப் பெண்கள் தனியாக செல்ல வேண்டுமே என்ற கவலை அவனுக்கு. காலையில் தனியாக வந்தார்கள் தான்… ஆனால் இப்போது இருட்டியப்பின் அவர்களை ஆண் துணை இன்றி அனுப்ப மனம் இல்லை அவனுக்கு.

இன்று நாள் முழுவதும் ரோஹனுடன் இருந்து விட்டு இப்போதுப் பிரிந்து செல்ல வேண்டுமா என்று இருந்தது அனஹாவிற்கு. அன்று நாள் முழுவதும் ஒன்றாகவே இருந்தபோது வேறு எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை இருவருக்கும்.

“இல்லை ரோஹன் நான் கூட்டிட்டுப் போய்டுவேன்…” என்று வந்து சேர்ந்தார் சுந்தர். “எல்லாம் முடிஞ்சதும் கரெக்டா வந்துடுவீங்களே…” என்றுப் பல்லைக் கடித்தார் அனுக்ரஹா. அவர்கள் உணவகத்திற்கு வந்ததும் எல்லாம் முடிந்ததென்றால் அழைத்துச் செல்ல தான் வருவதாகக் கூறி அனுக்ரஹாவிற்கு போன் செய்திருந்தார் சுந்தர்.

“அண்ணா இப்பயாவது வந்தாரே. எங்க வீட்ல பாத்தீங்கல்ல… ஒரு போன் கூட பண்ணல…” என்றார் தீபா

“உங்களுக்கு துணைக்கு தான் இரண்டு பசங்களும் இருக்காங்களே சம்மந்தியம்மா??? அதான் சம்பந்தி நிம்மதியா இருப்பாரா இருக்கும்…” என்று சிரித்துக் கொண்டேக் கூறினார் சுந்தர்.

“அங்கிள் இப்போவே சப்போர்ட்டா?” என்ற ராஹுலிடம் “ஆமா… அப்ப தான நாள பின்னக் கூட்டு சேர யூஸ் ஆகும்……” என்றுக் கூறி சிரித்தார் சுந்தர்.

காரில் ஏறிக் கிளம்பியதும் யோசித்துக் கொண்டிருந்தாள் அனஹா. அலுப்பாக இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு இதம் பரவியது அனஹாவிற்கு. அவன் தன்னுடன் ஒரு வார்த்தை பேசவில்லை தான்.

ஆனால் அவள் கஷ்டபடுகிறாளே என்று புடவை தேர்வு செய்தது, அவள் முகம் வாடி இருப்பதைக் கண்டு சாப்பிட அழைத்துச் சென்றது, உண்ணும்போது “இன்னும் நகை மட்டும் தான் பாக்கி. நாளைக்கு அதையும் எடுத்துடணும்” என்று தீபா கூறியபோது அதற்கு அவள் முகம் போன போக்கைப் பார்த்து “அதெல்லாம் பெரியவங்க நீங்களே எடுங்கம்மா. அதுக்கெல்லாம் நாங்க எதுக்கு?” என்று அவளையும் சேர்த்தேத் தப்பிக்க வைத்தது என்று அவன் செய்த ஒவ்வொன்றிலும் அவள் மீதுத் தனக்கிருந்த அக்கறையைக் காட்டி விட்டான்.

அனஹா இன்னொன்றையும் யோசித்தாள். “அவன் நம்ம கூட மட்டும் இல்ல பொதுவாவே ரொம்ப கம்மியா தான் பேசினான். அப்பறம் எப்படி நம்மகூட அவ்வளோ அரட்டை அடித்தான்? வம்பிழுத்தான்?”

14

இரவுக் கட்டிலில் படுத்திருந்த ரோஹன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டிருந்தான். கலையில் அனஹாவிற்கு எந்தப் புடவை நன்றாக இருக்கும் என்றுப் பெரியவர்கள் அவளைக் கொடுமைப் படுத்தியதை நினைத்துப் பார்த்தான்.

“அவளுக்கும் மணிக்கணக்குல ஷாப்பிங் பண்ணப் பிடிக்காதமே….. ராஹுல் சொன்ன மாதிரி எனக்கேத்தப் பொண்ணு தான்…” என்று நினைத்து உதட்டில் உறைந்தப் புன்னகையுடன் உறங்கினான்.

அனஹாவிற்கு மிகுந்தக் களைப்பாக இருந்தது. காலையிலிருந்து நின்றதால் கால்கள் வலியெடுத்தன. அறைக்குள் வந்ததும் ரோஹன் வாங்கிக் கொடுத்திருந்த வால் ஹான்கிங்கைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு உறங்கினாள்.

காலை எழுந்தவள் குளித்து விட்டு முதல் வேலையாக முந்தைய தினம் எடுத்த புடவைகளை எடுத்துப் பார்த்தாள். அதிலும் ரோஹன் தனக்காக தேர்வு செய்த முகூர்த்தப் புடவையை எடுத்து வருடிப் பார்த்தாள்.

வீட்டில் யாரும் கவனிக்கிறார்களா என்றுப் பார்த்து விட்டு, சுற்றி யாரும் இல்லை என்றதும் அந்தப் புடவையை எடுத்துச் சென்று கண்ணாடி முன் நின்று அதைத் தன மேல் போட்டுப் பார்த்தாள்.

“எப்படி இவ்வளவு நல்லா செலக்ட் பண்ணுறான்? அவனுக்கு எடுத்த டிரஸ் எல்லாம் எவ்வளவு வேகமா செலக்ட் பண்ணுறான்? எத்தன பேருக்கு எடுத்தான்… ஆனா எவ்வளவு சீக்கிரம் எடுத்தான்…

ராஹுல் கூட சொன்னானே… அவனுக்கும் ஷாப்பிங் பிடிக்காதுன்னு… அப்போ பரவா இல்ல… ரெண்டுப் பேரும் சீக்கிரம் எடுத்திடுவோம்…” என்று யோசித்துக் கண்ணாடி முன் நின்று புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“அனஹா சாப்பிட வா…” என்ற அவளின் தாயின் அழைப்பில் நடப்பிற்கு வந்து வேகமாக அறையை விட்டு வெளியேச் செல்ல எத்தனித்தவள் தன மேல் இருந்த புடவையை கவனித்து அவசரமாக அதை மடித்து, எடுத்த இடத்தில் வைத்து விட்டு வெளியேச் சென்றாள்.

ரோஹன் வீட்டில் உறவினர்கள் வரத் துவங்கியதும் அவனுக்கும் நிற்க நேரமில்லாமல் வேலை இருந்தது. கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தால் இதை வாங்கி வா அதை வாங்கி வா என்று அவனைக் கடைக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார் தீபா.

“உன் கல்யாணம் எப்போண்ணா முடியும்? அம்மா அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி கடுகு வாங்கிட்டு வா… மிளகா வாங்கிட்டு வா னுத் தொரத்தி விட்டுக்கிட்டே இருக்காங்க… இந்த அப்பா எப்படி தான் இதுலேருந்தெல்லாம் எஸ்கேப் ஆகுறாங்கன்னேத் தெரியல…” என்று ராஹுல் தான் புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தான்.

இவ்வாறே நிச்சய நாளும் வந்தது. அனஹா அந்த மயில் கழுத்து நிற பட்டுப் புடவையில் அழகாக இருந்தாள். கருப்பு நிற பாண்டும் இளநீல நிறத்தில் முழுக்கை சட்டையிலும் ரோஹன் கம்பீரமாகத் தெரிந்தான்.

சடங்குகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது வந்து அருகில் அமர்ந்தனர் பிரமோதும் சுதீஷும். அவர்களைக் கண்டதும் “உங்கத் தெளிவா??? பப்ளிக்ல வந்து ஜாயின் அடிக்கறீங்க???” என்றுப் பல்லைக் கடித்தான் ரோஹன்.

“டேய் என் வேலையப் பத்தி உனக்கு தெரியாதா? ஒரு ரிப்போர்ட்காக வெளியூர் போய்ட்டேன்டா……. படு கிராமம் வேற……. டவரே இல்ல…” என்று வேகமாகக் கூறினான் பிரமோத்.

“நிதி ஊர்லேந்து வந்துட்டா டா…….. வந்ததும் சாமி ஆட ஆரம்பிச்சுட்டா… அவ எதுக்கு கோவபடறான்னு தெரியறதுக்கே 4 நாள் ஆச்சு மச்சான்…… அதுக்கப்பறம் அவள மல இறக்கி…….” என்று ராகம் பாடினான் சுதீஷ்.

ரோஹனின் முறைப்பில் இருவரும் வாயை மூடினர். இத்தனை நாள் தன் அழைப்புகளை எடுக்காததும் இல்லாமல் இப்போது கேள்விக் கேட்க முடியாத படி சபையில் வந்து அமர்ந்தத் தன் நண்பர்களை எண்ணி எரிச்சல் வந்தது அவனுக்கு.

பத்திரிகை வாசித்து முடித்ததும் ரோஹன் அனஹா இருவரின் கையிலும் மோதிரத்தைக் கொடுத்து அணிவிக்கக் கூறினார். முதல் முறை ரோஹனின் கையைப் பிடிக்கிறோம் என்று யோசித்த அனஹாவிற்கு சிலிர்த்தது. ரோஹனின் அவள் கையைப் பிடித்த போது பதட்டம் அடைந்தாள்.

அனஹாவின் கையில் மோதிரம் அணிவித்த போது அவள் கை சில்லிட்டிருந்ததை உணர்ந்த ரோஹன் அவளை நிமிர்ந்துப் பார்த்துக் கண்ணை மூடித் திறந்து அவள் கையை சிறிது அழுத்தினான். அதில் என்ன இருந்ததோ அதன் பிறகுக் கொஞ்சம் இயல்பாக இருக்க முடிந்தது அனஹாவால்.

இருவருமே யாரும் அறியாமல் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், மற்றவர் பார்க்கும்போது முறைப்பதும் என்றே அந்த நாள் முடிந்து விட்டது.

சரியாக மோதிரம் மாற்றும்போது தான் ஷீபா வந்து சேர்ந்தாள். அனஹாவின் அருகிலேயே உறவுப் பெண்கள் யாராவது அமர்ந்திருந்ததால் அவளால் ஷீபாவிடம் ஒன்றும் பேச முடியவில்லை. அதன் பின் ரோஹன் வீட்டார் கிளம்பும் முன்னே ஷீபா போயும் விட்டாள்.

“எதுக்கு இப்படி வரணும்? எதுக்கு இப்படி அவசரமா ஓடணும்? இவளுக்கு அப்படி என்ன என் கிட்ட பேசக் கூட நேரம் இல்லாமப் போயிடுச்சு? இருக்கட்டும் கவனிச்சுக்கறேன்…” என்று மனதிற்குள் ஷீபாவை வசைப் பாடினாள் அனஹா.

அன்று இரவு அனஹாவால் உறங்க முடியவில்லை. நிச்சயமும் முடிந்த இந்தத் தருவாயிலும் ரோஹன் தன்னுடன் பேச முயற்ச்சிக்கவில்லை என்பது உறுத்தியது அவளுக்கு. இதற்கு மேலும் பேசாதிருப்பது நல்லதல்ல என்று நினைத்தாள். அவளுக்கு அவனின் முந்தைய செயல்களுக்கான விளக்கம் தேவைப்பட்டது.

முதல் முறை தான் மெசேஜ் அனுப்பிய போது அவனேப் பேச்சை துவங்கினானே… அதே போல் இப்போதும் அனுப்புவோம் என்று யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள்.

மொபைலைக் கையில் எடுத்த போது அவனிடமிருந்தே மெசேஜ் வந்தது. அதில் வந்த “ரோஹன்_ஷீபா” என்ற பெயரைக் கண்டவளுக்குக் கோபம் எட்டிப் பார்த்தது.

அவன் சேவ் செய்தது தான்… இத்தனை நாட்கள் ஏதும் தோன்றியதில்லை. அவன் தன் காதலை சொல்லியப் பின் எந்தத் தொடர்பும் கொள்ளாததால் இந்தப் பெயரை அவள் பார்க்க நேரிடவில்லை. ஆனால் இப்போது???

வேகமாக அதை மாற்றி சேவ் செய்தாள். முதலில் “ரோஹன்_அனஹா” என்று டைப் செய்தவள், பின் ஒரு புன்னகையுடன் அதை “ரோஹன்_டால்லி” என்று மாற்றி டைப் செய்தாள். அதைப் படித்துப் பார்க்கவே இனித்தது அனஹாவிற்கு.

மெசேஜை ஓபன் செய்தவள் “குட் நைட்” என்றிருந்ததைப் பார்த்து “குட் நைட்” என்றுத் தானும் பதில் அனுப்பினாள்.

அதற்கு மேல் வெகு நேரம் விழித்திருந்தும் பலனில்லை. ரோஹன் எந்த பதிலும் அனுப்பவில்லை.

அன்று அவள் கை சில்லிட்டிருந்ததிலிருந்து அவள் எந்தளவு டென்ஷனில் இருக்கிறாள் என்பதை உணர்ந்த ரோஹன் அவளை தைரியப்படுத்தவே அவள் கையை அழுத்தினான்.

“என்ன தான் மொறச்சாலும் அவக் கஷ்ட்டப்படறதப் பாக்க முடியல… இன்னைக்கு அவப் பார்த்தப்பல்லாம் மோறைச்சோமே தவிர மத்த நேரத்துல நல்லா சைட் அடிச்சோமே?” என்று நினைத்த ரோஹனிற்கு சிரிப்பு வந்தது.

அதே சிரிப்போடு உறங்கிப் போனான். அனஹாவும் கையில் மொபைலைப் பிடித்துக் கொண்டே உறங்கி போனாள்.

அதன் பின் இருவருக்குமே வேலை, வீட்டில் விருந்தினர் என்று நேரம் இறக்கை கட்டிப் பறந்தது. திருமணத்திற்கென்று விடுமுறை எடுக்க வேண்டி இருந்ததால் முடிக்க வேண்டிய பாடங்கள், அதற்கான நோட்ஸ் என்று வேறு எதுவும் சிந்திக்க முடியாத அளவு வேலை பளு இருந்தது.

அவர்கள் திருமணம் ஞாயிறு அன்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. எனவே அந்த வார வியாழன் வெள்ளி மட்டும் அனஹா விடுமுறை எடுத்திருந்தாள். அதுவுமே அவளின் அம்மா திட்டி வற்புறுத்தியதால்…

ரோஹன் அதுவும் முடியாது என்று விட்டான்.  “அதான் ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு அப்பறம் 1 வாரம் லீவ் போடறோமே ம்மா… அப்பறம் என்ன? எனக்கு முடிக்க வேண்டிய சிலபஸ் நெறைய இருக்கு…” என்றுத் தீர்மானமாகக் கூறி விட்டான்.

விடுப்பு எடுத்து வீட்டில் இருந்த அன்று பார்லர் போவதும், கடைசி நேர ஷாப்பிங் என்றுப் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு எதையாவது வாங்க செல்வதுமாக இருந்தாள் அனஹா. வெள்ளி அன்று அதற்கும் வீட்டில் தடை விதிக்கப்பட்டது.

இன்றாவது ரோஹனைத் தொடர்புக்கொண்டு பேசலாம் என்றால் அவளது மொபைலில் கேம்ஸ் விளையாடுகிறேன் என்று குட்டீஸ் யாரவது பிடுங்கிச் சென்று விடுவர்.

அப்படியே அவர்கள் பின்னால் ஓடி, அவர்களிடம் கெஞ்சி மிரட்டி அதை வாங்கி வரும் நேரம் அவளைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருக்கும். அனஹா இதிலேயே நொந்து தலையில் கை வைத்து அமர்ந்து விடுவாள்.

15

ஞாயிறுக் காலை கல்யாண பரபரப்பில் மண்டபமே இயங்கிக் கொண்டிருக்க அழகியப் பொன் நிற சேலையில் தேவதையாக நடந்து வந்து ரோஹனின் அருகில் அமர்ந்தாள் அனஹா.

நொடிக்கொரு முறை அவளைத் தீண்டிப் பிரியும் பார்வையை அடக்கப் பெரும்பாடுப் பட்டான் ரோஹன். பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்த ரோஹனை அனஹாவும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

தாலியைக் கையில் வாங்கித் திரும்பிய ரோஹன் அனஹாவின் முகத்தில் சிறுப் பதட்டம் தெரிவதைக் கண்டு மெதுவாகக் கையை அவளருகில் எடுத்துச் சென்றுக் கொண்டே “அனஹா என்னைப் பாரு” என்றான். அவளும் நிமிர்ந்து அவனை நோக்கினாள்.

“நான் இருக்கேன்… பயப்படாத” என்று அவள் கண்களைப் பார்த்துக் கூறினான் ரோஹன். அனஹாவின் முகம் தெளிவடைந்தது. ஏனோ அந்த நேரத்தில் அவன் தன்னிடம் பேசியதே தைரியத்தைக் கொடுத்தது அனஹாவிற்கு.

சிறுப் புன்னகையுடன் அவன் முகத்தையேப் பார்த்தாள். அவனும் புன்னகைத்துக் கொண்டே அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

ரோஹனின் கையைப் பிடித்து அக்கினியைச் சுற்றி வந்தபோது பாதுகாப்பாக உணர்ந்தாள் அனஹா. சடங்குகள் முடித்து சாப்பிடும்போது போடோவிற்காக என்று அனஹாவிற்கு ஊட்டி விட்டது மிகவும் பிடித்தது ரோஹனிற்கு.

சிறிது நேரம் மண்டபத்திலேயே ஓய்வெடுத்தனர் அனைவரும். அன்று மாலை அதே மண்டபத்தில் ரிசெப்ஷன் இருப்பதால் களைப்பில் இருந்த அனைவரும் உறங்கி எழுந்தனர்.

மணமகள் அறையில் படுத்திருந்த அனஹா தாலியைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டேப் படுத்திருந்தாள். மணமகன் அறையில் இருந்த ரோஹன் காலையிலிருந்து அனஹாவைப் பார்த்து ரசித்ததை எண்ணிக் கொண்டிருந்தான்.

மாலை ரிசெப்ஷன் போது அனஹாவையும் ரோஹனையும் சுற்றி ஒருக் கூட்டமே நின்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த அனஹாவின் கல்லூரியில் அவளுடன் வேலைப் பார்க்கும் பெண்ணொருத்தி கிப்ட் குடுத்து விட்டு, கல்யாணத்தை விசாரிக்கிறேன் என்று ரோஹனை இடித்துக் கொண்டே இருந்தாள்.

ரோஹன் நெளிந்து நெளிந்து அனஹாவை ஒட்டி நின்ற பொழுது தான் அதை கவனித்தாள் அனஹா. ரோஹன் சிரிப்பு மாறாமல் பேசிக் கொண்டிருந்தானேத் தவிர அவனுக்கு அந்தப் பெண்ணின் இந்த செய்கைத் துளியும் பிடிக்கவில்லை என்பது நன்குப் புரிந்தது அனஹாவிற்கு.

அந்தப் பெண் எதற்காகவோப் பின்னால் திரும்பிய சமயம் அனஹாவின் கையைப் பற்றி இழுத்து இந்தப் பக்கம் நிற்க வைத்து விட்டு ரோஹன் அந்தப் பக்கம் வந்த அவனின் இன்னொரு நண்பனுடன் பேச ஆரம்பித்தான்.

அவன் பிடித்து நகர்த்தியதும் முதலில் திகைத்த அனஹா பின் அந்த பெண்ணிடம் பேசி அனுப்பி வைத்தாள். அதற்குள் அங்கு வந்த தீபா “அனஹா… நீ அந்த பக்கம் தான் நிக்கணும். அங்க நில்லுடா” என்று மீண்டும் அவர்களை மாற்றி நிற்க வைத்து விட்டுச் சென்றார்.

வந்திருந்த விருந்தினர் அனைவரும் விருந்து சாப்பிடச் சென்ற நேரம் மேடை ஏறிய பிரமோத், சுதீஷ், ஷீபா இவர்களைக் கண்ட ரோஹன் “என்ன மறுபடியும் 3 பேரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா?” என்று சிரித்துக் கொண்டேக் கேட்டான்.

“ஆமா இல்லன்னா யாரு எங்க ரெண்டுப் பேரையும் தனித் தனியா சமாளிக்கறது?” என்று பிரமோத் கூறியதும் “ஐயோ இவள இதுக்கு மேலயும் என்னால சமாளிக்க முடியாதுப்பா…..” என்று அலுத்துக் கொண்டாள் ஷீபா.

“ஏன்டா எந்த பொண்ணுக்கிட்டையும் சார்க்கு பேசத் தோனலையோ? அப்பறம் எப்படி டா சிஸ்டர் கிட்ட பேசின?” என்று நக்கலாகக் கேட்டான் சுதீஷ். அனஹாவிற்கு அவன் அப்படிக் கேட்டதும் ரோஹன் மேல் கோவம் வந்தது. “அப்போ என்ன சொல்ல வரான் இவன்???” என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

“ஐயோ அதுவாவது பரவால்ல பா……. கல்யாணமே வேணான்னு இவப் படுத்தினப் பாடு இருக்கே……” என்றுத் தலையைப் பிடித்துக் கொண்டாள் ஷீபா. “அப்பறம் எதுக்கு இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சா? அதனால தான் தாலிக் கட்டப் போனப்பையும் என்னமோ மாதிரி இருந்தாளா? அப்போ விருப்பமே இல்லாம தான் இந்தக் கல்யாணம் பண்ணிக்கிட்டாளா?” என்று யோசித்த ரோஹனின் முகம் இறுகியது.

இவர்களின் முக மாற்றத்தை முதலில் கவனித்தது பிரமோத் தான். அதற்கு மேலும் பேசப் போன சுதீஷையும் ஷீபாவையும் அடக்கி வேண்டாம் என்று எச்சரித்து விட்டு அவர்களை இழுத்துச் சென்றான்.

அதன் பின்னர் விழா முடியும் வரை அவர்களை கவனித்துக் கொண்டு இருந்தனர் மூவரும். ஒருவர் முகத்தை ஒருவர் காண நேரிட்டால் முறைப்பதும், பின் தீவிரமாக சிந்திப்பதும், சில சமயம் குற்ற உணர்வில் தலைக் குனிவதும் என இவர்கள் செய்வது அனைத்தும் மற்றவர்கள் பார்வையில் தப்பினாலும் இதையெல்லாம் நண்பர்கள் மூவராலும் உணர முடிந்தது.

அன்று இரவு ரோஹனின் வீட்டிற்கு வந்த இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் ரோஹன் வீட்டார். சாந்தி முஹுர்த்தம் 4 நாட்களுக்குப் பிறகு தான் என்று கூறிய பொழுது இருவரின் முகத்திலும் ஒரு நிம்மதிப் பரவியது.

ரோஹன் வீட்டிற்கு நண்பர்கள் மூவரும் வந்திருந்தனர். அவர்கள் இருவரையும் கண்ட ஷீபா “இவங்களே மனசு விட்டுப் பேசுவாங்களா?” என்று சந்தேகம் கேட்டாள்.

“அனஹா பேசினா தான் உண்டு… நாந்தான் சொன்னேனே ஷீபா… ரோஹனுக்கு சின்னக் குற்ற உணர்வு இருந்தாலும் அவன் பேச மாட்டான்…” என்றுக் கூறினான் பிரமோத்.

பிரமோதும் ஷீபாவும் தீவிரமாக யோசிக்கத் துவங்கினர். சிறிது நேரம் இருவரின் முகத்தையும் பார்த்த சுதீஷிற்குப் பொறுமைப் பறந்தது.

“டேய்… ஏன் டா இப்போ பீல் பண்றீங்க? இப்போ என்ன ரெண்டு பேரும் லவ் பண்ணி தானக் கல்யாணம் பண்ணி இருக்காங்க. அதா……”

“அய்யய்யோ லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணாங்கன்னு சத்தமா சொல்லாத….” என்று ஒரு பீதியுடன் திரும்பி ரோஹன் அனஹா அமர்ந்திருந்தத் திசையைப் பார்த்தாள் ஷீபா.

“இவப் பேசுனப் பேச்சுல நான் எவ்ளோக் கொழம்பிப் போயிட்டேன் தெரியுமா? அன்னைக்கு ராத்திரி ரமேஷ் போன் பண்ணப்போ ‘நீங்க எனக்கு வீட்ல பார்த்த மாப்பிள்ளை… ஆனா நம்மப் பேச ஆரம்பிச்சதுக்கு அப்பறம் என்ன ரொம்பப் புடிச்சுருக்கு… லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு சொன்னீங்க… அப்போ நம்மக் கல்யாணம் அரேஞ்ச்டா? லவ்வா?’ ன்னுக் கேட்டேன் தெரியுமா?” என்றுப் பாவமாகக் கூறினாள் ஷீபா.

“நீ இன்னுமா அதுலேந்து வெளில வரல? அவங்களுக்குக் கல்யாணம் ஆய்டுச்சு ஷீபா. நம்மப் பேசற சத்தமெல்லாம் பக்கத்துல இருக்கவங்களுக்குக் கூட கேக்காது… பயப்படாத” என்றுக் கூறி சிரித்தான் பிரமோத்.

“சரி இப்போ நம்ம தான் அவங்கள்ட பேசனும். இப்போ பேசுவோமா?” என்று சுதீஷ் கேட்டதும் “போ போ… உன்ன தான் காணும்னுத் தேடுறாங்களாம்………” என்று ராகம் இழுத்தான் பிரமோத்.

“போடா டேய்…… அன்னைக்கே என்னையக் கோத்துவிட்டு போனவன் தான நீ…….” என்று சிறுப் பிள்ளை போல் கூறினான் சுதீஷ்.

“அட நிறுத்துங்கப்பா…. நாளைக்கு ரெண்டு பேரும் அனஹா வீட்டுக்கு போயிட்டு நாளைக்கே பால் காய்ச்சி அவங்களோடப் புது வீட்டுக்குப் போய்டுவாங்க. அப்ப அவங்கக் கூடப் பேசலாம்” என்றாள் ஷீபா.

“சரி” என்று ஒத்துக் கொண்டனர் பிரமோதும் சுதீஷும். ரோஹனிடமும் அனஹாவிடமும் விடைப் பெறும் போது அவர்கள் முறைத்ததிலிருந்தேத் தெரிந்தது நாளை நன்றாக வாங்கிக்கட்டிக் கொள்ளப் போகிறோம் என்று.

16

அன்று இரவு தீபாவுடன் படுத்துக் கொண்டாள் அனஹா. “டயர்டா இருப்ப… தூங்கு அனஹா” என்று எதுவும் பேசாமல் அவரும் உறங்கினார். காலை முதல் நின்றுக் கொண்டிருந்தக் களைப்பில் அனஹாவும் உறங்கினாள்.

காலை எழுந்துக் குளித்து அனைவரும் கிளம்பி அனஹாவின் வீட்டிற்கு மரு வீட்டிற்காகச் சென்றனர். அங்கு வந்தது முதல் அனஹா அனுக்ராஹாவுடனேச் சுற்றினாள். சிறிது நேரம் பேசி விட்டு ரோஹனை அனஹாவின் அறையில் ஓய்வெடுக்குமாறுக் கூறினார் சுந்தர். பின்பு சுந்தரும் ரமேஷும் பேசத் துவங்கினர்.

அனஹாவின் அறைக்குள் நுழைந்த ரோஹன் அவள் தன் அறையை எவ்வளவு நேர்த்தியாக, அழகாக வைத்துள்ளாள் என்று வியந்து நோக்கினான்.

இங்கிருந்தே அவர்களது புதிய பிளாட்டிற்கு செல்வதாக முன்பே தீர்மானித்திருந்ததால் அங்குத் தங்குவதற்குத் தேவையான தன்னுடையப்  பொருட்களை ஒரு பையில் எடுத்து வந்திருந்தான்.

ஒருமுறை அனஹாவின் அறையை முற்றிலும் சுற்றி வந்தவன் அங்கிருந்த சிலப் பொருட்களை எடுத்து தன் பையில் பத்திரப் படுத்தினான்.

முந்தைய நாள் இரவு தான் தீபா ரோஹனிடம் பேசினார். “ஏன்டா நாளைக்கே புது வீட்டுக்கு போகணும்னு நெனைக்கற? அனஹா பாவம் பா… ஒரு நாள் அவங்க வீட்ல தங்கி இரு. அவளுக்கும் சந்தோஷமா இருக்குமில்ல??”

அன்னை சொல்வதும் சரி என்றேப் பட, “நமக்கும் அவகிட்ட உடனே பேச தேவ இருக்காது…” என்று யோசித்து சம்மதித்தான்.

கட்டிலில் அமர்ந்து அவளுடைய ஒரு புகைப் படத்தைக் கையில் வைத்துப்  பார்த்துக்  கொண்டிருந்தவன் அறையின் கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து நோக்கினான்.

அனஹா உள்ளே வந்தாள். “அம்மா சாப்பிட வர சொன்னாங்க…” என்று ரோஹனிடம் கூறினாள்.

தன் கையில் இருந்த புகைப் படத்தை மேசையில் இருந்த இடத்திலேயே வைத்து விட்டு “ம்ம் போலாம்…” என்றான் ரோஹன்.

அவன் அதைக் கீழே வைத்தாலும் அதில் இருந்துப் பார்வையை விளக்காமலே பதில் கூறியதை கவனித்தாள் அனஹா.

“இவன் கண்டிப்பா நடிச்சுருக்க முடியாது. நெஜமா தான் அன்னைக்கு லவ் பண்றேன்னு சொன்னானோ? ஆனா ரிசெப்ஷன் முடிஞ்சு சுதீஷும் பிரமோதும் பேசினதுல வேற ஏதோ இருக்கு……” என யோசித்தவள் அவன் இன்னுமும் தன் படத்தையேப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவன் கவனத்தை தன பக்கம் திருப்ப “எனக்காக எங்க வீட்ல 2 நாள் தங்கறதுக்கு தேங்க்ஸ்” என்றாள்.

“உனக்காக தங்கறேன்னு யாரு சொன்னா? அது என்ன 2 நாள்? இன்னைக்கு மட்டும் தான அம்மா சொன்னாங்க???” என்றுப் புரியாமல் கேட்டான் ரோஹன்.

“அத்தை சொன்னாங்க… நீங்க எனக்குக் கஷ்டமா இருக்கும்னு தான் தங்க ஒத்துக்கிடீங்கன்னு…. நாளைக்கு செவ்வாய் கிழமை… அதான் 2 நாள் தங்கிட்டு புதன் கிழமை புது வீட்டுக்கு போகலாம்னு அம்மா சொன்னாங்க….”

இரண்டு நொடி அனஹாவை அமைதியாகப் பார்த்த ரோஹன் “எனக்கு நீ இப்படி நிமிர்ந்து என் கண்ணப் பாத்துப் பேசறதுப் புடிச்சுருக்கு… ஆனா ஏன் திடீர்னு நீங்கனு சொல்ற??? எதுவும் மாறல அனஹா… எப்பயும் போலயேப் பேசு…” என்று அந்த “எதுவும் மாறல”வில் அழுத்தம் கொடுத்து சொல்லி புன்னகைத்து விட்டு அவளைத் தாண்டி வெளியேச் சென்றான்.

“இவன் இப்போ எதுக்கு இப்படி சொல்லிட்டு போறான்? நான் ஏன் நீங்கன்னு சொன்னேன்? ஒரு வேல புருஷன்னு மரியாத வந்துடுச்சோ?” என்று யோசித்தவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

அறையிலிருந்து வெளியே வந்த இருவருமே சிரித்த முகமாக வருவதை பார்த்தப் பெற்றோர்களுக்கு மனது நிறைந்தது.

காலை உணவை முடித்து விட்டு அனைவரும் கிளம்பி அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றனர். கோவிலில் இருந்த நேரம் முழுவதும் ஒருவரின் நடவடிக்கையை மற்றவர் கவனிப்பதிலேயே கழித்தனர்.

கோவிலிலும் சரி அதன் பின் வீட்டிற்கு வந்து இரவு உணவு உண்டு படுக்கப் போகும் வரையிலும் சுற்றி உறவினர் கூட்டம் இருந்ததால் இருவருக்கும் பேசிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைக்க வில்லை.

இவர்கள் இரண்டு தினங்களுக்குப் பின்னரே தங்களின் புது வீட்டிற்கு செல்ல போகின்றனர் என்று அனஹாவின் அன்னையிடம் இருந்து அறிந்த நண்பர்களும் காத்திருக்க முடிவு செய்தனர்.

புதனன்று காலை அனஹா புதிய பிளாட்டில் பால் காய்ச்சினாள். இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தவளிடம் “ஆந்த ரூம் பால்கனில செடிக்கு தண்ணி ஊத்திட்டு வா அனஹா” என்று கூறினான் ரோஹன்.

அவள் இருந்த பரப்பரப்பில் இப்போது எதற்கு இந்த வேலையை சொல்கிறான் என்றுக் கூட யோசிக்காமல் “ம்ம்” என்றுக் கூறி வேகமாக அங்கேச் சென்றாள்.

அங்கு எந்தச் செடியும் இல்லாததைக் கண்டு குழம்பித் திரும்பியவள் முன் நின்ற ரோஹன் “வீடு உனக்கு புடிச்சுருக்கா? கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த பிளாட் வாங்கறப்போ உன்ன கூட்டிட்டு வந்து காமிக்கணும்னு நெனச்சேன்.

ஆனா எனக்கு டைம் கிடைக்கல. உங்க வீட்ல இருந்த 2 நாளும் சுத்தி அத்தனப் பேரு இருக்கப்போ உன்னத் தனியா எப்படிக் கூட்டிட்டு வரதுன்னு தெரியல… சாரி… உன்ட முன்னாடியே காமிச்சுருக்கனும்” என்றான்.

“இதுக்கு எதுக்கு சாரி? எனக்கு இந்த அப்பார்ட்மென்ட்ஸ் ரொம்பப் புடிச்சுருக்கு. கீழ அந்த கார்டன் அழகா இருக்கு. எத்தன குழந்தைங்க அந்த பார்க்ல விளையாடிட்டு இருந்தாங்க… இந்த பிளாட்டும் ரொம்ப நல்லா இருக்கு…” என்று உண்மையான சந்தோஷத்துடன் கூறினாள் அனஹா.

அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே “சரி வா போகலாம்… வெளில எல்லாரும் தேடுவாங்க” என்றுக் கூறி முன்னேச் சென்றான் ரோஹன்.

மாலை மற்ற உறவினர்கள் கிளம்பிச் சென்று விட்டிருக்க அப்போது தான் வீட்டை மீண்டும் ஒரு முறை சுற்றி வந்தாள் அனஹா. மதியம் வந்து இறங்கிய வீட்டிற்கு தேவையான அத்யாவசியப் பொருட்கள் ஸ்டோர் ரூம் போல் இருந்த ஒரு சிறிய அறையில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

இரண்டுப் படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டில் மற்றொரு அறையில் அவளது தாயின் சிலப் பொருட்கள் இருப்பதைக் கண்டு குழம்பினாள். வெளியே வந்தவள் தாயைக் கண்டதும் “என்னம்மா… உன் திங்க்ஸ் இங்க இருக்கு?” என்று வினவினாள்.

“அதுவா மா… ரோஹன் தான் உனக்கு துணையா 2 நாள் தங்கி இருக்க சொல்லி கல்யாணத்துக்கு முன்னாடியே உன் அப்பாகிட்ட பேசி நீங்க வரும்போது என்னையும் கூட்டிட்டு வந்துட்டான்” என்றார் அனுக்ரஹா.

“அது என்னம்மா இத்தனை நாளும் மாப்பிள்ளை, அவங்க இவங்கன்னு சொல்லிட்டு இபோ பேர் சொல்லி பேசுற?” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் அனஹா.

“அது ரோஹன் சொன்னது டா… இப்படி கூப்பிட சொல்லி… நீ வா டீ குடி” என்று சிரித்துக் கொண்டேக் கூறி சமையலறையுள் சென்றார் அனுக்ரஹா.

“இவ்வளவு நடந்துருக்கு… நம்ம என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம்?” என்று யோசித்தவள் தாயின் பின்னேச் சென்று டீ குடித்தாள்.

வெளியே ஹாலிற்கு வந்த அனஹாவிடம் வந்த ரோஹன் “அனஹா உன்னோட திங்க்ஸ்லாம்….” என்று ஆரம்பித்தான்.

“இப்போதைக்கு நான் அம்மா ரூம்ல வெச்சுக்கறேன் ரோஹன்…” என்று அவசரமாக பதில் கூறினாள் அனஹா.

சிறிது நேரத்தில் ரோஹனின் குடும்பம் விடைப் பெற்றுச் சென்றனர். அனஹாவிடம் வந்த அவளின் தந்தை “நான் கெளம்பறேன் டா…” என்றுக் கூறியவுடன் அனஹா கண் கலங்கத் துவங்கினாள். “நீங்களும் அம்மா கூட இங்க இரண்டு நாள் இருங்க பா…” என்றாள்.

“நீ என்ன சின்ன பொண்ணா டா? இரண்டு நாளுக்கு அப்பறம் எப்படியும் நாங்கக் கிளம்பி தான ஆகணும்… அதோட எனக்கு ஆபீஸ் வேல விஷயமா வெளியூர் போக வேண்டிய வேல இருக்குடா.

உன்ன நல்லா தான் புரிஞ்சு வெச்சுருக்கான் ரோஹன்… நீ இப்படி அழுவன்னு சொல்லி தான் உன் அம்மாவை நான் திரும்பி வர வரைக்கும் இங்கத் தங்க சொன்னான்” என்றுக் கூறி சிரித்தார்.

தந்தைக் கூறியதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தவளின் கண்ணில் அங்கே கையை கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் ரோஹன் தெரிந்தான். அவள் தந்தைக் கிளம்பிச் சென்றதும் அனுக்ரஹா இரவு உணவைத் தயாரிக்க சென்று விட்டார்.

ஹாலில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்த ரோஹன் அருகில் சென்ற அனஹா “தேங்க்ஸ்… எனக்காக யோசிச்சு இவ்ளோ பண்ணதுக்கு…” என்று மெதுவாகக் கூறினாள்.

அவனும் புன்னகைத்துக் கொண்டே “இப்படியே சிரிச்சுக்கிட்டு இரு அனஹா. நீ அழுதா எனக்குக் கஷ்டமா இருக்கு…” என்று கூறிக் எழுந்து அறையினுள் சென்று விட்டான். அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்த அனஹா சென்று சமையலில் அன்னைக்கு உதவத் துவங்கினாள். பிறகு இரவு உணவை உண்டு அன்னையுடன் சென்றுப் படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் வாங்கி வைத்திருந்த பொருட்களை அடுக்கவே நேரம் சரியாக இருந்தது மூவருக்கும். எல்லாவற்றையும் அடுக்கி முடித்து நிமிர்ந்த பொது இரவாகியிருன்தது. சமைக்க வேண்டா என்றுக் கூறி விட்டு ரோஹான் சென்று ஹோட்டலிலிருந்து உணவு வாங்கி வந்தான்.

வெள்ளி அன்று மாலை சுதீஷ் பிரமோத் ஷீபா மூவரும் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வந்த நேரம் அனுக்ரஹா கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும் ரோஹனும் அனஹாவும் முறைக்கத் துவங்கினர். அனுக்ரஹா கிளம்பிச் சென்றதும் பேசத் துவங்கினர் மூவரும்.

17

பிரமோத் முதலில் பேச்சைத் துவங்கினான். “அனஹா இது உங்க பர்சனல் விஷயம் தான். உண்மையா சொல்லணும்னா இத ரோஹன் தான் உன் கிட்ட சொல்லணும்… ஆனா அவனுக்கு குற்ற உணர்வு இருக்கப்ப அவன் பேச மாட்டான். அதனால தான் நாங்க சொல்றோம்”

திரும்பி ரோஹனை பார்த்தாள் அனஹா. “அப்போ என்னமோ தப்புப் பண்ணிருக்கான். நம்ம கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன?” உள்ளே கோபம் பொங்கியது அவளுக்கு.

ஷீபா, “ரோஹன் இப்போ அனஹாவேத் தெளிவா இல்லாதப்போ அவளுக்கு இருக்க கொழப்பத்த சொல்லுவாளான்னு தெரில… அதனால நான் சொல்றேன்” என்று ரோஹணைப் பார்த்துக் கூறினாள்.

“அதான பார்த்தேன்… இவ என்னைக்கு எதத் தெளிவா யோசிச்சுருக்கா… இவளெல்லாம் எப்படி தான் பாடம் நடத்தறாளோ?” என்று யோசித்து அவளைப் பார்த்தான் ரோஹன்.

சுதீஷ், “உனக்கு முதல்ல ரோஹனோட கேரக்டர் தெரியணும் அனஹா. அவன் எங்களுக்கு காலேஜ் பிரண்ட். அப்போவே அவனுக்கு லெச்சரர் ஆகணும்னு ஆசை. அதுக்கேத்த மாதிரி M.E. படிச்சான். Phd பண்ணான். அதுக்கப்பறம் வேலை பாக்க ஆரம்பிச்சதும் அவனோட பேச்சு இன்னும் கொறஞ்சு போச்சு. முழு நேர டீச்சர் மா அவன்… எப்படி தான் குப்பக் கொட்டப் போறியோ???”

“டேய்….” என்று பல்லைக் கடித்த பிரமோத், “உன்னைய என்ன சொல்ல சொன்னா நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்க?” என்றான்.

“உண்மையதான டா சொன்னேன்” என்று அப்பாவியாகக் கேட்டான் சுதீஷ்.

“அப்படிப் பார்த்தா அனஹா கூட இத்தன நாள் நான் பிரண்டா இருந்ததுக்கே ஆச்சர்யப்படறவங்கலாம் இருக்காங்க… இவ ஒரே பொண்ணுங்கறதால வீட்ல செல்லம். ஆனா இவ ரொம்ப பொறுப்பு. அவ மட்டும் இல்ல அவள சுத்தி இருக்க எல்லாமே பெர்பெக்டா இருக்கணும் அவளுக்கு…” என்றாள் ஷீபா.

“ரோஹனோட அப்பா அம்மா எங்க ரெண்டுப் பேரையும் கூப்பிட்டு சொன்னாங்க… இவன் கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டேங்கறான்… எப்படியாவதுப் பேசிப் புரிய வைங்கன்னு… சரின்னு நாங்களும் எங்க வீட்ல மீட் பண்ணி இவன்டப் பேசினோம்” என்று நடந்தவற்றை கூறத் துவங்கினர் மூவரும்.

“நாங்க நேரடியாவே விஷயத்துக்கு வரோம் ரோஹன். உனக்குக் கல்யாணம் பண்ணிக்கறதுல என்னடா பிரச்சனை?” என்று ரோஹனிடம் கேட்டான் பிரமோத்.

“நீங்கல்லாம் இப்போக் கல்யாணம் பண்ணிட்டீங்களா? என்ட கேக்கறீங்க?” சற்று எரிச்சலாகவேக் கேட்டான் ரோஹன்.

“எனக்கு நிதி இருக்கா… பிரமோத்கு வீட்லப் பொண்ணுப் பாத்துட்டு இருக்காங்க… இப்போ சொல்லு” என்றான் சுதீஷ்.

“எனக்கு இந்த கூலர்ஸ் மாட்டிக்கிட்டு வண்டில வேகமாப் போய் சீன் விடறது, பொண்ணுங்ககிட்ட மணிக்கணக்குல பேசறது இதெல்லாம் புடிக்காது… எனக்கு போர்மல்ஸ் மட்டும் தான் போடப் புடிக்கும்….. நான் ஜாஸ்தி பேச கூட மாட்டேன்… என்னப் போய் எந்த பொண்ணுக்கு டா புடிக்கும்???” என்றுக் கூறி இருவரையும் ஏறிட்டுப் பார்த்தான் ரோஹன்.

“ஓஹோ… அப்போ உனக்கு உன் மேலயே நம்பிக்கை இல்லை… அப்படி தான?” என்றுக் கூறிய பிரமோதை எதிரில் அமர்ந்திருந்த சுதீஷும் ரோஹனும் புரியாமல் பார்த்தனர். ரோஹன் அறியாமல் சுதீஷின் காலைத் தட்டினான் பிரமோத்.

“ஆமா ஆமா… உனக்கு உன் மேல நம்பிக்க இல்ல…” என்று வேகமாகக் கூறிய சுதீஷ் சோபாவில் சற்றுப் பின்னால் நகர்ந்து அமர்ந்து ரோஹன் அறியா வண்ணம் “என்னடா?” என்று சைகை செய்தான்.

“இரு” என்று அவனுக்குக் கண்ணைக் காட்டி விட்டு “சொல்லு ரோஹன். இதெல்லாம் உனக்குப் பண்ண புடிக்காதா….. இல்லப் பண்ண வராதா???” என்று இழுத்து நக்கலாகக் கேட்டு விட்டு சுதீஷை பார்த்தான் பிரமோத்.

சுதீஷ் “ஓஹோ” என்று வாய் அசைத்துப் புரிந்து விட்டது என்றுத் தலை அசைத்து முன்னாள் தள்ளி அமர்ந்து அவனும் “சொல்லு டா” என்றான்.

“இதெல்லாம் பண்ணணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல” என்றுக் கோபமாகக் கூறினான் ரோஹன்.

“இப்போ எதுக்கு கோவப்படற? நம்மளோட இயலாமைய மறைக்க தான் நம்ம கோவப் படுவோமாம்…” என்றுக் கூறினான் சுதீஷ்.

“யாரு சொன்னா?” என்று இன்னும் எரிச்சலோடேக் கேட்டான் ரோஹன்.

“நிதி தான். நானும் அவக் கேள்விக் கேட்கிறப்போலாம் கோவப் படற மாதிரி பேசி நழுவிடலாம்னு நெனைப்பேன்…. இப்போ எதுக்கு கோவம் வருது உனக்கு? அப்போ நான் சொன்னது சரி தானன்னு கேட்டு என்னையே மடக்கிடுவா. அதனால…”

“அடங்குறியா? நீயும் உன் நிதி புராணமும்… டேய் அவன் சொல்றதும் கரெக்ட் தான். நீ சொல்லு உண்மைல உன்னால ஒருப் பொண்ணுகிட்ட 10 நிமிஷத்துக்கு மேல பேச முடியுமா?” என்று சவாலாகக் கேட்டான் பிரமோத்.

“என்னால பேச முடியாதுன்னு நான் சொல்லவே இல்லையே. ஆனா நான் செய்ய மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினான் ரோஹன்.

“ஏன்னா உனக்கு அதுத் தெரியாது… நான் ஒரு நாளைக்கு நிதிகூட எவ்ளோ நேரம் பேசறேன்னு தெரியுமா???” என்றுக் கேட்டான் சுதீஷ்.

“அப்போ உன்னால முடியும்னு காமி… ஒத்துக்கறோம்…” என்றான் பிரமோத்.

“டேய் அது ஒரு பெரிய விஷயமே இல்ல… என்னால முடியும்” என்று இப்போதும் உருதியாகவேக் கூறினான் ரோஹன்.

“சரிடா நாங்களும் பாக்கறோம் நீ எப்போ தான் ஒருப் பொண்ண லவ் பண்றேன்னு….” என்று சாய்ந்து அமர்ந்துக் கூறினான் பிரமோத்.

“என்னது லவ்வா??? டேய் என்ன வெளயாடறீங்களா?? நான் எப்போ லவ் பண்றேன்னு சொன்னேன்?” என்று அதிர்ச்சியானான் ரோஹன்.

“பிரமோத் சொல்றதும் சரி தான் டா… நாங்களும் பாக்கறோம்… நீ பெரிய இவனா இருந்தா நிதி மாதிரி ஒரு தேவதைய லவ் பண்ணி காமிடா பாப்போம்…” என்று ஒத்து ஊதினான் சுதீஷ்.

“நீ என்னைக்கு டா நிதிய எங்க கண்ணுல காட்டிருக்க? ஒரு போட்டோக் கூடக் காமிச்சதில்லயே டா??” என்று சுதீஷிடம் கேட்டான் பிரமோத்.

“அய்யய்யோ வாய விட்டோமே…” என்று யோசித்த சுதீஷ் “ஆ… அது வந்து… இப்போ அதுவாடா முக்கியம்??? டேய் உண்மைலயே தில்லு இருந்தா லவ் பண்ணி காமிடா பாக்கலாம்…” என்று ரோஹனின் புறம் திரும்பி அமர்ந்தான்.

“லவ் பண்றதுக்கு எதுக்குடா தில்லு… மனசு இருந்தா போதாதா?” என்று சிரித்துக் கொண்டேக் கேட்டான் ரோஹன்.

“ஆஹா சுதீஷ் பாத்தியா?? இப்போவே தேறிட்டான் டா…” என்று கிண்டல் செய்தான் பிரமோத்.

“அட போங்கடா… நான் கெளம்பறேன்…” என்றுக் கூறி சென்று விட்டான் ரோஹன்.

ரோஹன் கிளம்பிச் சென்றதும் “அவனக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைங்கன்னு தான அவங்க வீட்ல சொன்னாங்க… நம்ம எதுக்கு இப்போ அவன லவ் பண்ண சொல்லி ஏத்தி விட்டுக்கிட்டு இருக்கோம்?” என்றுப் புரியாமல் கேட்டான் சுதீஷ்.

“நானும் அவன் கிட்ட ஏன் டா கல்யாணம் வேணாம்னு சொல்றேன்னு தான டா கேட்டேன்… அவன் தான் டா சம்மந்தமே இல்லாம பைக்லப் போறதையும் பொண்ணுங்கக் கூடப் பேசறதையும் சொன்னான்…. சரி இவன் போற ரூட்லயேப் போவோம்னு என்னத்தையோ சொல்லிட்டேன் டா…” என்று புலம்பினான் பிரமோத்.

அவன் சொல்வதும் சரியே என்று யோசித்த சுதீஷ் தலையை ஆட்டி “சரி அடுத்து என்னப் பண்றது?” என்றுக் கேட்டான்.

“தெரில சுதீஷ். பாக்கலாம்” என்றுத் தரையைப் பார்த்துக் கூறினான் பிரமோத். அவனுக்குமே அடுத்து என்ன செய்வதேன்றுத் தெரியவில்லை.

இப்போது உடனே எதுவும் முடிவு செய்ய முடியாது என்றுப் புரிந்து “சரி டா நானும் கெளம்பறேன்” என்றுக் கூறி விடைப் பெற்றுச் சென்றான் சுதீஷ்.

18

அடுத்த நாள் ஒருத் துணிக் கடையில் ஷீபாவைக் கண்டான் பிரமோத். “நேத்து ஏன் வீட்டுக்கு வரல? அம்மா உனக்காக வெயிட் பண்ணாங்க”

“சாரி பிரமோத். நேத்து காலேஜ்லேந்து வரவே லேட் ஆய்டுச்சு… நாளைக்கு வரேன்னு ஆன்ட்டி கிட்ட சொல்லிடு. நேத்து அத சொல்ல தான் உனக்கு போன் பண்ணேன். ஆனா நீ எடுக்கவே இல்ல” என்று உண்மையான வருத்தத்துடன் கூறினாள் ஷீபா.

“அதுவா… நான் ரோஹன் சொல்லி இருக்கேன்ல… அவனக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வெக்க சொல்லி அவங்க வீட்ல சொன்னாங்க. அவன் கூடப் பேசிட்டு இருந்தோம்… ரொம்பக் கஷ்டம்…” என்றுப் பெரு மூச்சு விட்டான் பிரமோத்.

“ஐயோ… கல்யாணம்ற வார்த்தையக் கேட்டாலே எனக்கு அலர்ஜி ஆகுது பா… அந்தளவு ஒருத்தி என்ன படுத்தறா…” என்றுத் தலையைப் பிடித்துக் கொண்டாள் ஷீபா.

“ஒருத்தியா??? ஒருத்தனா?” என்றுக் கிண்டலாகக் கேட்டான் பிரமோத்.

“கிண்டல் பண்ணாத… நீ உன் கதைய முதல்ல சொல்லு… அப்பறம் நான் பொலம்ப ஆரம்பிக்கறேன்” என்றாள் ஷீபா.

“கடைல நின்னுகிட்டுக் கதை சொல்ல முடியாது… நாளைக்கு வீட்டுக்கு வருவ இல்ல… அப்போ சொல்றேன்” என்று சுற்றி ஒரு முறைப் பார்த்து விட்டுக் கூறினான் பிரமோத்.

“ஆமா அதுவும் சரி தான்… எனக்கும் நேரம் ஆச்சு… நாளைக்குப் பார்க்கலாம்” என்றுக் கூறித் தான் வாங்கியவற்றிற்கு பில் போடச் சென்றாள் ஷீபா.

அடுத்த நாள் ப்ரமோதின் வீட்டிற்குச் சென்ற ஷீபாவை வரவேற்ற ப்ரமோதின் தாய் “என்னமா… சீக்கிரம் கல்யாண சாப்பாடுப் போடப் போற போல?” என்றுக் கேட்டார்.

“அதுக்குள்ள அம்மா சொல்லிட்டாங்களா ஆன்டி? இன்னும் டேட் எதும் பிக்ஸ் ஆகல… அம்மா இந்த கவர் குடுக்க சொன்னாங்க ஆன்டி…” என்றாள் சிறிது வெட்கம் கலந்து.

“சரிம்மா பேசிட்டு இருங்க” என்றுக் கூறி அவள் கொடுத்த கவரை வாங்கிக் கொண்டு உள்ளேச் சென்றார்.

அவர் சென்றதும் பிரமோத்தின் எதிரில் அமர்ந்த ஷீபா “சொல்லு பிரமோத். என்ன பிரச்சனை?” என்றுக் கேட்டாள்.

நடந்தவற்றைக் கூறிய பிரமோத் “இப்போ சொல்லு… இவனெல்லாம் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறது?” என்று சலிப்பாகக் கேட்டான்.

“ஹ்ம்ம் கஷ்டம் தான்…”

“சரி நீ சொல்லு…”

“என் பிரண்ட் அனஹா இருக்காளே… அவ தான் பிரச்சன. அவளோட பெரியப்பாப் பொண்ணுக்கு இப்போ ஒரு மாசம் முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு. அவங்க வீட்லப் பார்த்த மாப்பிள்ளை தான்… ஆனா மாமியார் வீட்ல கல்யாணத்துக்கப்பறம் நெறைய சண்டை வர ஆரம்பிச்சுடுச்சு. வரதட்சனைக் கேட்டு அந்த அக்காவ ரொம்ப கொடுமப் படுத்தி இருக்காங்க. அவங்கப் புருஷனும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணல…

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கொற சொல்லித் திட்டி இருக்காங்க. இந்தப் பிரச்சன கொஞ்சம் பெருசா ஆகி ஒரு நாள் அந்த அக்கா கைல சூடு வெச்சு வீட்ட விட்டுத் தொரத்தற அளவுக்குப் போயிடுச்சு. அதுல அந்த அக்காவோட வீட்ல எல்லாரும் ரொம்ப ஒடஞ்சு போய்ட்டாங்க…. அப்போ அனஹாவோட அப்பாவும் அம்மாவும் தான் அவங்களுக்கு ஆறுதல் சொல்லி அதுலேந்து வெளில கொண்டு வந்தாங்க.

டெய்லி அனஹா வீட்ல அந்த அக்கா வீட்லேந்து வந்து பொலம்பறதையும், அவங்க வருத்தப் படறதையும் பாத்து இவளுக்கு என்னமோ அரேஞ்ச்ட் மரேஜ் மேல ஒரு பயம் வந்துடுச்சு. அவங்க வீட்ல நடந்த முதல் கல்யாணம் அது.

இதுப் பத்தாதுன்னு எங்க காலேஜ்ல எங்கக் கூட வேலப் பாக்கற ஒருத்திப் போன வாரம் தான் வீட்ட எதிர்த்துக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டா… அவக் கதை இன்னும் கொடுமை… ரெண்டுப் பேரும் ரொம்ப வருஷமா லவ் பண்ணாங்க. ரெண்டுப் பேரு வீட்லயும் ஜாதிப் பார்த்து ஒத்துக்கல. இவங்களும் எவ்வளவோப் போராடிப் பார்த்தாங்க… ஒன்னும் ஒத்து வரலன்னு வீட்ட விட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

அடுத்த நாளிலிருந்து ரெண்டுப் பேருக்கும் சண்டை தான். அவ எங்கக் கூடக் கொஞ்சம் நல்லா பேசுவா… அதனால எங்கக்கிட்ட பொலம்ப ஆரம்பிச்சா. ஒன்னும் பெருசா இல்ல… ஈகோ… ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் நீ தான் காரணம் நீ தான் காரணம்னு சொல்லித் தேவ இல்லாமப் பேச்சு வளர்த்து ஒரு நாள் அந்த அண்ணா அவள அடிச்சுட்டாங்கலாம். அதனால நான் விவாகரத்துப் பண்ணப் போறேன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா…” என்றுக் கூறி நிறுத்தினாள் ஷீபா.

“சரி இது எல்லாம் அனஹாவோட பிரச்சன இல்லையே. அப்பறம் என்ன?” என்றான் பிரமோத் குழப்பமாக.

“நம்மள சுத்தி ஆயிரம் நடக்கும் பிரமோத்… அதுல சில விஷயங்கள் நம்மள ரொம்ப ஆழமா பாதிக்கும். அந்த மாதிரி தான் இந்த ரெண்டு விஷயமும், அதும் கொஞ்ச நாள் இடைவெளில நடந்ததால அனஹாவ ரொம்ப பாதிச்சுருச்சு. இது கூடவே அவங்க வீட்ல அவளோடக் கல்யாணத்தப் பத்தி பேசினதும் அவளுக்கு பயம் வந்துடுச்சு…” என்று அன்று அனஹாவின் வீட்டில் நடந்ததை நினைவுக் கூர்ந்தாள் ஷீபா.

“ஷீபா எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறதா வீட்ல சொல்றாங்க ஷீபா… எனக்கு அரேஞ்ச்ட் மரேஜ்னா அக்கா மாதிரி ஆகிடுமோன்னு பயமா இருக்கு..” என்றுக் கூறிய அனஹாவின் குரலிலேயே அவளின் பயத்தின் அளவுத் தெரிந்தது ஷீபாவிற்கு.

“ஹே ஒருத்தருக்கு அமைஞ்சது சரி இல்லன்னா எல்லாருக்குமே அப்படி தான் ஆகுமா?”

“இல்லடி… தெனம் தெனம் பெரியப்பாவும் பெரியம்மாவும் இங்க பொலம்பறதக் கேட்டுட்டு தான் இருக்கேன். சில நேரம் எங்க அம்மாவும் அப்பாவும் தனியா உக்காந்து பேசிக் கவலைப்பட்டுக்குவாங்க…

அக்கா எப்படி இருப்பான்னுத் தெரியுமா? அவ ரொம்ப அமைதி தான்… ஆனா ஒரு எடத்துல உக்கார மாட்டா. எதாவது வேல செஞ்சுக்கிட்டே இருப்பா. இப்போ அவளோட ரூம விட்டு வெளில வரதே இல்லன்னு பெரியம்மா சொன்னாங்க டி… இதெல்லாம் பார்த்தப்பறம் எப்படி பயபடாம இருக்க சொல்ற?”

“சரி அனஹா. அப்போ யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ…” என்று அவளை திசைத் திருப்ப விளையாட்டாகக் கூறினாள் ஷீபா.

“வேணாம் ஷீபா. துளசி பொலம்பறத நீயும் தானக் கேக்கற? இத்தன வருஷம் லவ் பண்ணவங்க தான்… ஆனா எவ்வளவு சண்டை? இப்போ விவாகரத்து பண்ண போறேன்னு சொல்ற அளவுக்கு ரெண்டு பேருக்கும் ஒத்து போகல…”

“அனஹா நீ என்ன தான் சொல்ல வர? உனக்குக் கல்யாணத்து மேல நம்பிக்கை இல்லையா?”

“தெரியல ஷீபா… நான் பார்த்த அரேஞ்ச்ட் மரெஜும் சரி இல்ல… லவ் மரெஜும் சரி இல்ல… அப்பறம் எப்படி டி???”

“அந்த ரெண்டுக் கல்யாணத்துலயும் ஏதோ ஒருப் பிரச்சனை இருக்கலாம்… அத சரிப் பண்ணா அவங்க வாழ்க்கை அதுக்கப்பறம் நல்லா இருக்கும். அதுக்கும் உன் கல்யாணத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல அனஹா. வீணா உன்ன நீ கொழப்பிக்கற…”

“நான் தினமும் பாக்கறதும் கேக்கறதும் பொய் இல்லையே ஷீபா…”

“சரி வீட்லப் பார்த்துப் பண்ணி வெச்சக் கல்யாணத்துல மாமியார் வீட்ல பிரச்சன வந்துது… புருஷன் சப்போர்ட் பண்ணல… ஆனா துளசி விஷயத்துல அவ ஹஸ்பண்ட் சப்போர்ட் அவளுக்கு இருந்துதா இல்லையா? அதனால தான ரெண்டு பேரும் வீட்ட விட்டு வந்தாங்க?”

“வந்து சந்தோஷமாவா இருக்காங்க? எத்தனப் பிரச்சன? அவங்களுக்கு பாரேன்ட்ஸ் சப்போர்ட்டும் இல்ல…”

“அப்போ வீட்லப் பாக்கற பையனக் கல்யாணம் பண்ணிக்கோ அனஹா. நீ சொன்ன மாதிரி இப்படி பாரென்ட்ஸ் சப்போர்ட் இல்லாமத் தனியா இருக்க வேணாம் தான?”

“வீட்லப் பார்த்து விசாரிச்சு தான் எங்க அக்காவுக்குப் பண்ணி வெச்சாங்க… ஆனா என்ன ஆச்சு?”

“சரி அப்போப் பெத்தவங்க சம்மதத்தோட காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா?” என்று எப்படியும் அவளை சம்மதிக்க வைத்து விடும் நோக்கில் கேட்டாள் ஷீபா.

“இப்போ துளசிக்கு அவ பொறந்த வீட்லயோ புகுந்த வீட்லேந்தோ எந்த தொல்லையும் இல்லையே… அவங்க ரெண்டு பேரும் தான சண்டை போடறாங்க??”

ஷீபாவிற்கு ஆயாசமாக இருந்தது. உள்ள சாத்தியக் கூறுகள் அனைத்தையும் சொல்லிப் பார்த்தாயிற்று. அதற்கு மேல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. அந்த நேரம் அனுக்ரஹா அங்கே வரவும் இவர்களின் பேச்சு நின்றது. இதற்கு மேல் என்னப் பேச என்றுத் தெரியாமல் அங்கிருந்துக் கிளம்பினாள் ஷீபா.

“இப்போ சொல்லு பிரமோத்… உன் நிலைமை மோசமா? என் நிலைமை மோசமா?” என்று பிரமோதிடம் கேட்டாள் ஷீபா.

சிறிது நேரம் யோசித்த பிரமோத் “ஷீபா நான் ஒன்னு சொன்னா தப்பா நெனச்சுக்க மாட்டியே?” என்றுத் தயங்கியபடியேக் கேட்டான்.

“ரோஹனையும் அனஹாவையும் சேர்த்து வெச்சுடலாம்னு சொல்ல போறியா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் ஷீபா.

பிரமோத்  ஆம் என்பது போல் தலை அசைக்கவும் “என்ன வெளயாடுறியா?” என்று சிறிதுக் கோபமாகவேக் கேட்டாள் ஷீபா.

19

ஷீபாவின் கோபத்தைக் கண்ட பிரமோத் பொறுமையாக விளக்கத் துவங்கினான். “இங்க பாரு ஷீபா… உனக்கு ரோஹன் பத்தி எதுவும் தெரியாது. எனக்குத் தெரிஞ்சு அவன மாதிரி ஒரு பையன் கிடையாது. அவன் ஏதாவது சொன்னா எங்க வீட்ல அத அப்படியேக் கேப்பாங்கத் தெரியுமா? அப்போ அவங்க வீட்டப் பத்தி யோசிச்சுப் பாரு…

அவங்க நம்மளோட பிரண்ட்ஸ்… நம்ம ஒன்னும் ஸ்கூல் படிக்கற பசங்களயோ இல்ல காலேஜ்ல படிக்கற பசங்களயோ லவ் பண்ண வைக்கப் போறதில்ல… ரெண்டு பேரும் ஒரே ப்ரோபஷன் வேற… கண்டிப்பா ஒத்துப் போகும் ஷீபா…

ரெண்டுப் பேரு வீட்டிலயும் முதல்லப் பேசுவோம்… ஒத்து வந்தா சேர்த்து வைப்போம்… ஆனா இவங்க ரெண்டுப் பேரையும் சேர்த்து வைக்கணும்னா நம்ம தான் முட்டி மோதி ஏதாவது செய்யணும்…”

பிரமோத் பேசியதைக் கேட்ட ஷீபாவிற்கு தன் தோழிக்கு இப்படி ஒரு வரன் அமைவதில் சந்தோஷமாகவே இருந்தது. ஆனாலும் இது நடக்குமா என்று சிறுக்  கவலையும் தோன்றியது. “நெஜமாவே இது சரி வரும்னு சொல்றியா??? அவங்க வீட்டில எப்படி பேசறது???”

ஷீபா தன் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்ட மகிழ்ச்சி ப்ரமொதின் முகத்தில் தெரிந்தது. “ரோஹன் வீட்ல பேசறது நானும் சுதீஷும் பார்த்துக்குவோம். அனஹா வீட்ல பேசறதுக்கு உன் ஹெல்ப் வேணும். நீ தான் அவங்க வீட்டுல பேசி கேக்கணும்”

ப்ரமொதின் உறுதியைப் பார்த்த ஷீபவிற்கு நம்பிக்கை வந்தது. இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் என்று அவளும் ஆசைப் பட்டாள் . “கண்டிப்பா பிரமோத். நீ முதல்ல ரோஹன் வீட்ல பேசிட்டு சொல்லு… நான் அனஹாவோட போட்டோ உனக்கு மெயில் பண்ணறேன்”

“ம்ம்… நாங்க பேசிட்டு அவங்க ஓகே சொன்னா ரோஹன் போட்டோ உனக்கு மெயில் பண்ணறேன்” என்றான் பிரமோத்.

அவர்கள் பேசி முடிவெடுத்த நேரம் ப்ரமொதின் தாய் அங்கே வந்தார். அவரிடம் சொல்லிக் கொண்டுக் கிளம்பினாள் ஷீபா. கிளம்பும் முன் “உன் கல்யாணம் பிக்ஸ் ஆனதுக்குக் கண்டிப்பா பெரிய ட்ரீட்டா தரணும் ஷீபா…” என்றான் பிரமோத்.

“நம்மளோட இந்த திட்டம் மட்டும் சக்சஸ் ஆகட்டும்… உண்மைலயே ரொம்பப் பெரிய ட்ரீட் குடுக்கறேன்…” என்றுக் கூறி சிரித்து விட்டு வெளியேறினாள் ஷீபா.

“இப்போ எதுக்குடா என்ன அவசரமா வர சொன்ன? எங்க போறோம்?” என்று அடுத்த நாள் மாலை ப்ரமோதுடன் காரில் செல்லும்போது கேட்டான் சுதீஷ்.

எதுவும் சொல்லாமல் உடனேக் கிளம்பி வா என்று மட்டும் கூறி சுதீஷை அழைத்திருந்தான் பிரமோத். பிரமோத்தின் வீட்டிற்கு வந்து என்ன விஷயம் என்றுக் கேட்டவனிடம் போகும் வழியில் கூறுவதாகக் கூறி அவசரமாகக் கிளம்பினான் பிரமோத். சுதீஷிற்கு பொறுமை போய்க் கொண்டிருந்தது.

காரை செலுத்திக் கொண்டே நேற்று நடந்தவற்றைக் கூறி, தற்போது ரோஹனின் பெற்றோரிடம் பேசுவதற்காக செல்வதாகக் கூறினான் பிரமோத். சுதீஷிற்கு ரோஹானின் தந்தையுடன் பேசுவதை நினைத்தால் சிறிது கலக்கமாகவே இருந்தது. திரும்பி பிரமோதைப் பார்த்தான். அவனும் டென்ஷனாக காரை ஓட்டவும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

ரோஹனின் வீட்டிற்குச் சென்ற போது அங்கே தீபாவும் ரமேஷும் மட்டுமே இருந்தனர். ரோஹனும் ராஹூலும் இல்லாத சமயமாகப் பார்த்து தான் இவர்கள் அங்கு வந்திருந்தனர்.

ரமேஷிடம் பேசுவதைத் தவிர்த்து தீபாவிடம் நேரடியாக “ஆன்டி இது என் பிரண்டோட பிரண்ட் போட்டோ. இந்தப் பொண்ணு உங்களுக்குப் பிடிச்சுருந்தா ரோஹனுக்கு பேசலாம் ஆன்டி” என்றுக் கூறி அவர் கையில் தன் மொபைலில் இருந்த அனஹாவின் போட்டோவைத் தந்தான்.

அனஹாவின் பெற்றோர் குறித்து ஷீபா தன்னிடம் கூறிய விவரங்களை ரமேஷிடம் கூறினான் பிரமோத். அனஹாவின் போட்டோவை பார்த்தவுடன் பிடித்துவிட்டது தீபாவிற்கு. மேலும் அவளின் குடும்பத்தைப் பற்றி அறிந்துக் கொண்டவர்கள் தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.

“எங்களுக்கு இந்த இடம் ரொம்பப் பிடிச்சுருக்கு பிரமோத். எங்களுக்கு முழு சம்மதம்… பொண்ணு வீட்டுலப் பேசிட்டு சொல்லுங்க…” என்று அனைத்தையும் கேட்டுக் கொண்ட ரமேஷ் கூறினார்.

“இவர் புடிச்சுருக்குன்னு சொல்லி என்னப் பண்ண… இவருப் பையனுக்குப் புடிக்கணுமே… ஏற்கனவே அவன் பேசுறது ஒன்னும் புரிய மாட்டேங்குது… இந்த பிரமோத் எப்படி இவ்வளோ கான்பிடண்டா இத்தன வேலைப் பார்க்குறான்???” என்று யோசித்து ப்ரமொதைத் திரும்பிப் பார்த்தான் சுதீஷ்.

ப்ரமொதிற்கோ முதல் படித் தாண்டி விட்டதாக எண்ணி மகிழ்ச்சியாக இருந்தது. “இதே மாதிரியே உங்க பையனும் சம்மதம் சொன்னா நல்லா தான் இருக்கும்…” என்று அவனுமே யோசித்தான்.

ரோஹனின் வீட்டிலிருந்து வெளியே வந்த சுதீஷும் பிரமோதும் ஷீபாவை தொடர்புக் கொண்டு விஷயத்தைக் கூறி அனஹாவின் பெற்றோரிடம் பேசுமாறு கூறினர்.

மீண்டும் காரில் செல்லும் போது சுதீஷ் பேச்சைத் துவங்கினான். “எல்லாம் சரி… இப்போ எப்படியும் அனஹா வீட்லயும் ஒத்துக்கிட்டா இவங்க ரெண்டு பேரையும் எப்படி சரிக்கட்டறது? ஷீபா சொன்னத நீ சொன்னப்போ எனக்கேத் தல சுத்திடுச்சு… இந்த விஷயத்துல ரெண்டு பேரும் ரொம்பத் தெளிவ்வ்வ்வ்வா இருக்காங்க…”

வண்டியை ஓட்டிக் கொண்டே “அதான் லவ் பண்ண சொல்லி அவன உசுப்பி விட்டுருக்கோம்ல… அப்படியே கண்டின்யு பண்ணிட வேண்டியது தான்…” என்றான் பிரமோத். எப்படியும் இந்தக் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது அவனுக்கு.

“ம்ம்… அப்ப்ப்ப்ப்ப்பறம்… எனக்கென்னமோ நம்பிக்கை இல்ல…” என்று பிரமோதைத் திரும்பிப் பார்த்துக் கூறினான் சுதீஷ்.

அவனை முறைத்து விட்டு வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான் பிரமோத். ப்ரமொதின் வீட்டில் இறங்கி தன்னுடைய பைக்கை எடுத்த சுதீஷிடம் “பாசிடிவ்வா யோசி மச்சான்…” என்றான் பிரமோத். “எங்கேந்து டா… அன்னைக்கு அவன் பேசுனதக் கேட்டல்ல… எந்த தைரியத்துல நீ இவங்க ரெண்டு பேரு வீட்டுலையும் பேசுறியோ… எதாவது சொதப்புச்சு… மகனே டின்னு கட்டிடுவாங்க…” என்றான் சுதீஷ்.

“உன் வாயிலேருந்து நல்ல வார்த்தையே வராதே… கெளம்பு நீ முதல்ல…” என்றுக் கூறி வேகமாக தன் வீட்டினுள் சென்றான் பிரமோத். “எல்லாம் பேசுவ டா… கடைசில ரோஹன் கிட்ட பேச சொல்லி என்னைய தான் கோர்த்து விடப் போறன்னு இப்போவே எனக்கு நல்லாத் தெரியுது… கடவுளே… இந்த கல்யாணம் மட்டும் நல்ல படியா நடந்துடுச்சுன்னா…” என்று நினைத்து இரண்டு நொடி யோசித்தவன் “நான் உடனே நிதிய கல்யாணம் பண்ணிக்குறேன் பா…” என்று வேண்டிக் கொண்டு வண்டியை எடுத்தான். பத்தடி சென்றதும் “இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமா?? ச்ச வேணாம்… பிரமோத்கு நல்ல பொண்ணாப் பார்த்து உடனேக் கல்யாணம் பண்ணி வெக்குறேன் பா…” என்று வேண்டுதலை மாற்றி வேண்டிக் கொண்டான்.

நினைத்தது போலவே அனஹாவின் பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். சுந்தர் கேட்டதெல்லாம் ஒன்று மட்டுமே… “ஷீபா உனக்கேத் தெரியும். என் அண்ணன் பொண்ணுக்கு நாங்கப் பார்த்து விசாரிச்சுப் பண்ணி வெச்சது சரியா அமையல… இந்த எடத்துல அப்படி எதுவும் வராம இருந்தாப் போதும் மா…”

“கண்டிப்பா அப்படி எதுவும் ஆகாது அங்கிள்” என்றாள் ஷீபா. “பையன் முகத்தைப் பார்த்தாலேத் தெரியுது…” என்றுக் கூறினார் அனுக்ரஹா. அவருடைய சம்மதம் அவர் முகத்திலேயேத் தெரிந்தது.

அனஹாவின் வீட்டிலிருந்துக் கிளம்பித் தன வீட்டிற்கு வந்த ஷீபா ப்ரோமோதை தொலைப்பேசியில் அழைத்து எல்லாவற்றையும் கூறினாள்.

“ரெண்டு வீட்டுலையும் பேசியாச்சு பிரமோத். இனி அடுத்து என்ன செய்யுறது?” என்றுக் கேட்டாள் ஷீபா. “ரெண்டு பேரு வீட்டுலையும் நேர்ல பார்த்துப் பேசட்டும் ஷீபா. இப்போ வரைக்கும் அவங்கக்கிட்ட பிரண்ட்ஸ் நம்ம தான் பேசி இருக்கோம்… பெரியவங்கப் பார்த்துப் பேசுறது தான் சரி…” என்றான் பிரமோத்.

“ஆமா பிரமோத். அவங்கப் பேசட்டும். நான் அனஹா வீட்டுல என்னைக்கு எப்போப் பெசுறதுன்னுக் கேட்டு சொல்லுறேன்” என்றுக் கூறி வைத்தாள் ஷீபா. அனஹாவின் வீட்டில் சொன்ன தேதியில் இரு வீட்டாரையும் சந்தித்துப் பேச வைத்தனர் நண்பர்கள்.

அனஹாவின் வீட்டிற்கே ரோஹனின் பெற்றோரை அழைத்துச் சென்றனர். இரு வீட்டாரும் பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின் தங்களின் குடும்பம் குறித்துப் பேசிக் கொண்டனர். அவர்களுக்குப் பூரணத் திருப்த்தி உண்டாகியது.

“எங்க எல்லாருக்கும் சம்மதம் தான் பா… ஏன் இத ரோஹன் அனஹாவுக்கு தெரியாம செய்யறீங்க? இது வரைக்கும் இப்படி ஒருப் பேச்சு வார்த்தை நடக்கறதே ரெண்டு பேருக்கும் ஏன் சொல்லல?” என்றார் ரமேஷ்.

“கெட்டுது போ” என்று சுதீஷ் முனுமுனுத்து விட்டு “அது வந்து அங்கிள்… ரெண்டுப் பேருமே கல்யாணத்துக்கு சம்மதிக்காம ரொம்ப யோசிக்கறாங்களா… அதான்… முதல்ல நாங்க பேசி… அவங்கள சரி பண்ணி….ரூட் போட்டு….” என்றுத் தடுமாறியவன் ” அய்யயோ ஒளற ஆரம்பிச்சுட்டேன்… சமாளி டா…” என்று ப்ரமொதின் காதைக் கடித்தான்.

“உன்னை யாருடா இப்போ வாயத் தொறக்க சொன்னா???” என்றுப் பல்லைக் கடித்த பிரமோத் “அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம் அங்கிள்… அவங்களுக்கு ஒரு சின்ன சர்பிரைஸ்” என்றுக் கூறி சமாளித்தான்.

இன்னும் சிறிது நேரம் தங்களின் வேலைக் குறித்தும் கல்யாணம் குறித்தும் பேசிக் கொண்டிருந்தனர். “இவங்க எப்படியோ ஓகே ஆயிட்டாங்க இல்ல…” என்று மெதுவாகக் கூறினாள் ஷீபா. “இனி தான் நம்ம எல்லா வேலையும் பண்ணணும்” என்றான் பிரமோத்.

அனஹாவின் வீட்டிலிருந்துக் கிளம்பி வெளியே வந்தவுடன் “நீங்க ரெண்டு பேரும் எங்கக் கூடயே வாங்க பா… கொஞ்சம் பேசணும்” என்றுக் கூறி முன்னே சென்றார் ரமேஷ்.

“இப்போ எதுக்கு டா நம்மள வர சொல்றாரு? என்ன பேசணும்?” என்றுப் புரியாமல் கேட்டான் சுதீஷ்.

“ம்ம்… நீ ஒளறுனல்ல… அதுக்கு விசாரிக்க ஆபீஸ் ரூம்க்கு கூப்பிடறாரு… அவர் காலேஜ் பிரின்சிபால் டா. இந்நேரம் நம்ம ஏதோ மறைக்கறோம்னு கண்டுப் புடிச்சுருப்பாரு” என்றுக் கடுப்பாகக் கூறினான் பிரமோத்.

அதைக் கேட்டதும் கலவரமான சுதீஷ் “இவர சமாளிக்க முடியாதே… இப்போ என்ன பண்ணப் போற?” என்று ப்ரமொத்திடம் கேட்டான்.

“நல்லா வருது எனக்கு வாய்ல… உன்ன யாரு அப்போ பேச சொன்னா?” என்றுக் கோபமாகக் கேட்டு விட்டுத் தனது காரை எடுத்தான் பிரமோத்.

20

ரோஹனின் வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கி பிரமோத் உள்ளேச் சென்றான். காரை விட்டு இறங்கியதும் ஒரு நிமிடம் நின்று “உள்ளப் போய் நம்ம வாயத் தொறக்காம இருந்தாப் போதும்… மத்ததெல்லாம் பிரமோத் பார்த்துப்பான்…” என்றுக் கூறி தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டான் சுதீஷ்.

அவர்கள் நினைத்ததுப் போலவே ரமேஷ் பேசத் துவங்கினார். அவர்கள் இருவரையும் அமர வைத்து நேரடியாக அவர்களைப் பார்த்து “ஏன் இத ரோஹன் கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்றீங்க? அப்படி என்னப்பா சர்ப்ரைஸ்?” என்றுக் கேட்டார்.

பதட்டத்தில் “அது வந்து அங்கிள்… ரோஹன் எங்கக்கிட்ட வந்து சொன்னதால…” என்று ஆரம்பித்து “அய்யய்யோ பேசக் கூடாதுன்னு நெனச்சொமே… போச்சே…” என்று யோசிச்சு வேகமாக ப்ரமோத்தை திரும்பிப் பார்த்தான் சுதீஷ்.

“ரோஹன் என்னபா சொன்னான்?” என்றுக் கேட்டார் ரமேஷ். “ஐயோ இதுவும் இவரு காதுல கரக்டா விழுந்துடுச்சே…” என்று மனதிற்குள் நினைத்து பயந்தான் சுதீஷ்.

சுதீஷ் பயத்துடன் திரும்பிப் பார்த்த நேரம் அவனை முறைத்து விட்டு “அது… உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல அங்கிள்… ரோஹன் அனஹாவை லவ் பண்ணறான். அவன் உங்ககிட்ட சொல்ல யோசிக்கறான்… அதான் நாங்க அவனுக்குத் தெரியாம இந்த ஏற்பாடெல்லாம் பண்ணறோம்…” என்றான் தயங்கியவாரே.

பிரமோத் கூறியதைக் கேட்டு “என்னது” என்பது போல் அதிர்ச்சியாகித் திரும்பிப் பார்த்தான் சுதீஷ். தீபா “அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்ப நீயாவது சொல்லி இருக்கலாமே சுதீஷ்?” என்றுக் கேட்டார்.

தீபாவின் கேள்வியில் அவர் பக்கம் திரும்பி விழித்த சுதீஷ் “ஆண்ட்டி… அது வந்து…” என்று இழுத்து மனதிற்குள் “நான் மட்டும் என்ன ஆன்டி தெரிஞ்சுக்கிட்டேவா சொல்லாம இருந்தேன்?” என்று அவருடன் பேசினான்.

சுதீஷ் பதில் கூறாததைக் கண்டுக் கொள்ளலாமல் “என் பையன் லவ் பண்ணறான்னா நம்பவே முடியல… எப்படியோ… கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானே அதுவே போதும்” என்றுக் குதூகலித்தார் தீபா.

இவர்கள் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரமேஷ் “நான் ஒன்னும் காதலுக்கு எதிரி இல்ல பா… இத என் கிட்ட சொல்ல என்ன தயக்கம்? ஆனா இது அனஹா வீட்டிலயும் தெரியணும்…” என்று சிரித்துக் கொண்டேக் கூறி விட்டு எழுந்துச் சென்று விட்டார்.

அவர் எழுந்துச் சென்றதும் இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றி “தப்பிச்சேன்டா சாமி…” என்று மனதிற்குள் நிம்மதி அடைந்த பிரமோத் தீபாவின் பக்கம் திரும்பி “ஆண்ட்டி அனஹா வீட்டுல நீங்க தான் பொறுமயா இத எடுத்து சொல்லணும்” என்றான்.

முதலில் சிறிது யோசித்தாலும் “சரி பா. நாங்க பார்த்துக்கறோம்” என்றுப் புன்னகையுடன் கூறினார் தீபா.

“சரி ஆன்டி நாங்கக் கிளம்புறோம்…” என்றுக் கூறி பிரமோத் எழுந்ததும் தானும் எழுந்தான் சுதீஷ்.

ரோஹனின் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ப்ரமோத்திடம் “எதுப் பண்றதா இருந்தாலும் சொல்லிட்டுப் பண்ணு டா… ஒரு நிமிஷம் எனக்கே ஷாக் ஆய்டுச்சு… ரோஹன் லவ் பண்ணறான்னு சொன்னப்போ….” என்று நெஞ்சில் கை வைத்துக் கூறினான் சுதீஷ்.

அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்த பிரமோத் “நீ தான் ஒத்து ஊதுவல்ல… அதையே எப்பயும் ஊது…” என்றான்.

“அதான் நிதி என்ன சொன்னாலும் ஊதி ஊதி பழகிடுச்சே…” என்று முனகிய சுதீஷ் “எதுக்கு அப்படி சொன்ன?” என்று ப்ரமோத்தைப் பார்த்துக் கேட்டான்.

அதைக் கேட்டுக் கடுப்பான பிரமோத் “அவர்க்கிட்ட போய் வேற என்ன சொல்ல சொல்ற? ரெண்டுப் பேரையும் சேர்த்து வைக்க இனிமே தான் நாங்க பாடு படணும்னா?” என்றான்.

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் மாமா வேல தான டா பாக்கப் போறோம்…. என்னென்ன அனுபவிக்கணுமோ? சரி இப்போ என்ன செய்யப் போறோம்?” என்றுக் கேட்டான்.

காரில் ஏறுவதற்காக கதவைத் திறந்த பிரமோத் சுதீஷின் இந்தக் கேள்வியில் கதவை அறைந்து சாற்றி விட்டு “தொர யோசிக்கவே மாட்டீங்களோ??? எப்போப் பாரு ‘அடுத்து எண்ணப் பண்ணப் போறோம் பிரமோத்’னு என்னையவேக் கேக்குற?

நீ மட்டும் ஒளராம இருந்துருந்தா அவர்க்கிட்ட தேவ இல்லாம இவ்வளவு பொய் சொல்லி இருக்கவே வேண்டாம்… ரோஹன் எனக்கு மட்டுமா பிரண்ட்? உனக்கும் தான?

அவங்க ரெண்டுப் பேரையும் லவ் பண்ண வெக்கணும்… நீ தான லவ் பண்ணற? நானா லவ் பண்ணறேன்??? எதாவது ஐடியா குடு…” என்றுப் பொரிந்துத் தள்ளினான்.

“தேவ இல்லாம இவனக் கடுப்பேத்திட்டோம் போலயே… ஓவராக் கொந்தளிக்குறானே… அவன் சொன்ன மாதிரி ரோஹன் நமக்கும் பிரண்ட் தான? நம்ம ஏதாவது செஞ்சு தான் ஆகணும்… இல்லன்னா இவன் நம்மளத் தூக்கிப் போட்டு மிதிச்சுடுவான்…” என்று தலைக் குனிந்து யோசித்தான் சுதீஷ்.

பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக நிமிர்ந்து ப்ரமோத்திடம் “நாளைக்கு ரோஹன XXX மால்க்கு வர சொல்லு. மத்தத நான் பார்த்துக்கறேன்” என்றான்.

“அங்க வர சொல்லி எண்ணப் பண்ணப் போற?” என்று சந்தேகமாகக் கேட்டான் பிரமோத்.

“ஐயோ அவசரத்துக்கு ஐடியா தோன மாட்டேங்குதே… எனக்கே இவ்வளவு தான் டா இப்போதைக்குத் தெரியும்… படுத்துறானே…” என்று மனதிற்குள் புலம்பிய சுதீஷ் “அதெல்லாம் நீ வர சொல்லு… மத்தத அங்க வெச்சுப் பார்த்துக்கலாம்…” என்றான்.

“இவன நம்பி ஏதாவது செய்யப் போய் அது சிக்கலாயிடுச்சுன்னா என்னப் பண்ணுறது… ஆனா இப்போதைக்கு நமக்கும் வேற வழி இல்ல… இவன் எதையாவது ஆரம்பிச்சு வெக்கட்டும்… அப்பறம் வழக்கம் போல நம்ம எதையாவது செஞ்சு முடிச்சு வெச்சுடலாம்…” என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் பிரமோத்.

ப்ரமொதின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த சுதீஷ் “தெளிஞ்சுட்டான்… இனி இவனே யோசிச்சு எதுனாலும் சமாளிச்சுக்குவான்… நம்ம தைரியமா களத்துல எறங்கிட வேண்டியது தான்…” என்று நினைத்து நிம்மதியானான்.

அங்கிருந்தே ரோஹனை அழைத்த பிரமோத், அவன் எடுத்ததும் “டேய் நாளைக்கு காலைல 11 மணிக்கு XXX மால்கு வந்துடு… நானும் சுதீஷும் அங்க வெயிட் பண்ணிட்டு இருப்போம்…” என்றுக் கூறினான்.

“எதுக்கு அங்கப் போறோம்?” என்று ரோஹன் கேட்டவுடன் “அது இந்த பன்னாடைக்கு மட்டும் தான் தெரியும்…” என்று மனதிற்குள் எண்ணி சுதீஷை ஏற இறங்க ஒரு முறைப் பார்த்து விட்டு “நீ வா டா…” என்றுக் கூறி தொடர்பைத் துண்டித்தான்.

காரில் ஏறி அமர்ந்து “ஏதாவது சொதப்பன… மகனே செத்த…” என்றுக் கூறி காரைக் கிளப்பினான் பிரமோத்.

“சிக்குனா தான டா…” என்று மனதிற்குள் நினைத்து “அதெல்லாம் ஒன்னும் ஆகாது…” என்றுக் கூறினான் சுதீஷ்.

பிரமோத்தின் வீட்டிற்கு வந்ததும் “நான் எதுக்கும் ஷீபாக்கு கால் பண்ணி ரோஹன் வீட்டுல நடந்தத சொல்லிடுறேன். அனஹா வீட்டுல ஏதாவதுப் பிரச்சன ஆனா அவ தான் சமாளிக்கணும்” என்றுக் கூறி ஷீபாவின் எண்ணிற்கு அழைத்து போனை ஸ்பீக்கரில் போட்டான் பிரமோத்.

ஷீபா எடுத்ததும் “ஷீபா அனஹா வீட்டுல சுதீஷ் கொஞ்சம் உளறுனான்ல… அங்கிள் எங்களக் கூப்பிட்டு எதுக்கு ரோஹன் கிட்டயும் அனஹாக் கிட்டயும் மறைக்குறீங்கன்னுக் கேட்டாரு… அதுக்கும் இவன் உளறிக் கொட்டி… கடைசில அவங்க ரெண்டுப் பேரும் லவ் பண்ணுறாங்கனு சொல்லிட்டேன் ஷீபா…” என்றான் பிரமோத்.

“என்னது லவ் பண்ணுறாங்கன்னு சொல்லிட்டியா? ஆனாலும் உனக்கு தைரியம் தான் பிரமோத்… இவங்க ரெண்டுப் பேரும் இன்னும் மீட் பண்ணதுக் கூட இல்லையே… அவங்க வீட்டுல பேரன்ட்ஸ் பாட்டுக்கு போய் இவங்க ரெண்டுப் பேருக்கிட்டையும் கேட்டா என்ன ஆகும்னு யோசிச்சியா?” என்றுப் படப் படத்தாள் ஷீபா.

“அய்யய்யோ… இத நம்ம யோசிக்கவே இல்லல?” என்றுக் கூறி தலையில் கை வைத்தான் சுதீஷ்.

அவன் தலையில் ஒரு அடி வைத்து விட்டு “அது தான் சர்ப்ரைஸ்னு சொல்லி இருக்கோம்ல… சோ கேக்க மாட்டாங்க. அனஹா வீட்டுல இந்த விஷயம் சொல்ல சொல்லி இருக்கேன். அவங்க ஏதாவதுக் கூப்பிட்டுக் கேட்டாங்கன்னா சமாளிச்சுக்கோ…” என்றான் பிரமோத்.

“இங்க இவளையே சமாளிக்க முடியல… சுதீஷ் இனி நீ வாயத் தொறந்த…” என்றுக் கோபமாக ஆரம்பித்தாள் ஷீபா.

“இனி சத்தியமா நான் பேசவே மாட்டேன்… போதுமா?” என்றான் சுதீஷ். “இனி பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்றுக் கடுப்பாகக் கேட்டான் பிரமோத். “இதுக்கு மேல ஏதாவது பிரச்சன வந்தா சுதீஷ் நீ தான் சமாளிக்கணும். நான் வெக்குறேன்” என்றுக் கூறி தொடர்பைத் துண்டித்தாள் ஷீபா.

“ஆஹா ஊரே நம்ம மேல கொலை வெறில இருக்காங்களே… இதுக்கு மேலையும் நம்ம வாயத் தொறந்தா தர்மடி விழும் போலயே…” என்று மெதுவாகக் கூறிய சுதீஷ் நாளை என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கத் துவங்கினான்.

போனை வைத்து விட்டுத் திரும்பிய ஷீபா எதிரில் நின்ற அனஹாவைப் பார்த்து அதிர்ச்சியாகி “நீ எப்போ வந்த?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“இப்போ தான்… ஏன்?” என்றாள் அனஹா.

சற்றேப் பதட்டம் குறைந்தவளாக “ஒன்னும் இல்ல… என்ன விஷயம் சொல்லு…” என்றாள் ஷீபா. “வா காண்டீன் போலாம்… பசிக்குது…” என்றாள் அனஹா.

“வா வா… எனக்கும் தல வலிக்குது…” என்றுக் கூறி வேகமாக முன்னேச் சென்றாள் ஷீபா.

21

“யாருக்கு டா டிரஸ் எடுக்கப் போறோம்?” என்றுக் கேட்டுக் கொண்டே அந்த பெரிய துணிக் கடைக்குள் நுழைந்தான் ரோஹன்.

“உனக்கு தான்… என்னமோ அன்னைக்கு பெருசா சவால் விட்டல்ல… லவ் பண்ணிக் காமிக்கறேன்னு…. முதல்ல உன் கெட்டப்ப மாத்து… அப்பறம் பாக்கலாம்….” என்று ஏளனமாகக் கூறினான் சுதீஷ்.

“அன்னைக்கு ஏதோ விளையாடறீங்கன்னு நெனச்சேன்… இப்போ எதுக்கு என் கெட்டப்ப மாத்தணும்??” என்று சிறிதுக் கோபமாகவேக் கேட்டான் ரோஹன்.

“பாத்தியா பிரமோத்… இவன் மறுபடியும் கோபப்படறான்?? நான் சொல்லல… இவனுக்கு வித்யாசமா டிரஸ் கூட எடுக்கத் தெரியாது டா… இவன் எங்க இவனுக்கேத்தப் பொண்ண செலக்ட் பண்ணி… அவ… ”

“வேணாம்… நீ பேசறது உண்மை இல்லன்னு உனக்கேத் தெரியும்…”

“அப்போ எடு…”

“எடுக்கறேன் டா…” என்று அவனை முறைத்த ரோஹன் ப்ரமோதிடம் “இதுக்கெல்லாம் நீயும் கூட்டா?” என்றான்.

“அவனுக்கு அவன் சொன்னது தப்புன்னு ப்ரூவ் பண்ணிக் காமி…” என்று பிரமோதும் சுதீஷிற்கு ஒத்து ஊதினான்.

ரோஹன் ட்ரெஸ் எடுக்க அந்தப் பக்கம் சென்றதும், பிரமோத் ஷீபாவை அழைத்தான். “ஷீபா இவங்க ரெண்டுப் பேரையும் மீட் பண்ண வெக்கணும். ஏதாவது ஐடியா குடு…”

“இந்த சண்டே நானும் அனஹாவும் XXX ஷாப்பிங் மால் போறதா இருக்கோம். உங்களால அங்க வர முடியுமா?”

“சரி. 11 மணி ஓகே வா?”

“ஓகே. நான் மேல இருக்க புட் கோர்ட் வந்துட்டு உனக்கு மெசேஜ் பண்றேன்” என்றுக் கூறி வைத்தாள் ஷீபா.

“நான் இதெல்லாம் பில் போட்டுட்டு வரேன்” என்று இவர்களிடம் கூறிச் சென்றான் ரோஹன்.

“அதுக்குள்ள இவ்ளோ எடுத்துட்டானா? செமயா செலக்ட் பண்றான்ல?” என்று சுதீஷிடம் கேட்டான் பிரமோத். ஷீபாவுடன் பேசும் போது ரோஹன் என்னென்ன வாங்குகிறான் என்று தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இவன் எடுத்திருக்க எல்லாமே குதர்க்கமா இருக்கு டா. ஆனா டீசென்டாவும் இருக்கு. அவன் எடுக்காம விட்ட அந்த ப்ளூ டி ஷர்ட்டும் ரெட் டி ஷர்ட்டும் நான் நாளைக்கு வந்து எடுத்துடுவேன் டா. இவ்வளவு நல்லா எடுப்பான்னு தெரியாமப் போச்சே?”

அதற்குள் ரோஹன் அங்கு வந்துவிட “சரி நாங்கக் கிளம்புறோம். வர ஞாயிறு அன்னைக்கு 11 மணிக்கு இங்கத் திரும்ப மீட் பண்ணலாம்” என்றுக் கூறிய பிரமோத் வேகமாக சுதீஷின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுக் கடையை விட்டு வெளியே வந்தான்.

“இப்போ எதுக்கு பிரமோத் என்ன இப்படி இழுத்துட்டுப் போற?”

“அவன் ஏதாவது கேட்கறதுக்கு முன்னாடி அங்கேந்து வரணும்னு தான்… என்னப் பண்றான்னு திரும்பிப் பாரு…”

திரும்பி கடையின் கண்ணாடி வழியே ரோஹனை பார்த்த சுதீஷ் “அவன் கைல இருக்கப் பைகளையும் நம்மளையும் மாத்தி மாத்திப் புரியாமப் பார்த்துட்டு இருக்கான்” என்றான்.

“இது போதும்… அவனுக்கு முழுசா எதுவும் புரியக் கூடாது…” என்றுக் கூறி அங்கிருந்து சுதீஷுடன் வெளியேறினான் பிரமோத்.

முன்பே முடிவு செய்திருந்தபடி ஞாயிறன்று அந்த ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தனர் அனஹாவும் ஷீபாவும். உள்ளே நுழைந்ததும் “ஷீபா ஒழுங்கா நம்ம பேசின மாதிரி சாயந்தரம் வந்துருக்கலாம்ல? எதுக்கு இப்படி இந்த வெயில்ல வரணும்? என்னால முடியல பா…” என்றுக் கேட்டாள் அனஹா.

“இதையே எத்தன வாட்டிக் கேப்ப அனஹா? அதான் சொன்னேன்ல நான் ஈவ்னிங் ரமேஷ் பாக்கப் போறேன்னு…” என்றுக் கூறினாள் ஷீபா. அனஹா அங்கிருந்தக் கடைகளை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்.

ஷீபா மனதிற்குள் “அன்னைக்கு ரமேஷ் கூட பேசி முடிச்சு கனவு காண்ற நேரத்துல பிரமோத் போன் பண்ணான். ஏதோ ஞாபகத்துல அவன்கிட்ட காலைல பதினோரு மணின்னு டைம் மாத்தி சொல்லிட்டேன்… அத அவன் ரோஹன்கிட்ட வேற சொல்லிட்டான்… நான் என்ன டி செய்யறது??” என்று நினைத்துக்கொண்டாள்.

கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே “சரி முதல்ல எங்கப் போகலாம்?” என்று ஷீபாவிடம் கேட்டாள் அனஹா.

“புட் கோர்ட் போகலாம் அனஹா”

“என்னது உள்ள நுழைஞ்சதும் புட் கோர்ட் போகவா? என்னடி ஆச்சு உனக்கு?”

“ஹான்… அது வந்து… அது… நான் காலைல சாப்பிடல டி. சண்டே …சோ எந்திரிச்சதே லேட். நீ தான வெயில் தாங்கலன்னு சொன்ன… நீயும் எதாவது ஜில்லுன்னு குடியேன்…”

“சாப்பிடலையா? ஏன்டி சாப்டாம வந்த? சரி வா போகலாம்”

மேலே செல்லும்போதே ப்ரமோதிற்கு தாங்கள் வந்துவிட்டதாக மெசேஜ் அனுப்பினாள் ஷீபா. அங்கே சென்று உணவு வாங்கும்போது அவனும் வந்து சேர்ந்தான்.

“ஹாய் ஷீபா எப்படி இருக்க? பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?”

“ஹாய் பிரமோத். நல்லா இருக்கேன் நீ நல்லா இருக்கியா? இது என் பிரண்ட் அனஹா. இது பிரமோத். எங்க பாமிலி பிரண்ட். என் கூட ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சான்”

இருவரும் பரஸ்பரம் ஹாய் கூறி புன்னகைத்தனர். “என்ன வாங்க போறீங்க? நான் சேர்த்து வாங்கிடறேன்…” என்றுக் கூறினான் பிரமோத்.

“நாங்க தான் பிரமோத் க்யூல நிக்கறோம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு… நாங்களே வாங்கறோம்” என்றாள் ஷீபா.

“என் கூட இன்னும் ரெண்டு பிரண்ட்ஸ் வராங்க” என்று கூறிக்கொண்டே மெசேஜ் டைப் செய்யத் துவங்கினான். “அவங்களுக்கும் சேர்த்து வாங்கணும்…” என்றுக் கூறி இரண்டு குளிர்பானங்களின் பெயர்களையும் ஒரு பர்கர் வகையையும் சொல்லி ஷீபாவை வாங்கச் சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவள் திரும்பும் முன் மொபைலைப் பார்க்குமாறு சைகை செய்தான். எடுத்து பார்த்தவள் அதில் “நீ சீக்கிரம் கெளம்பற மாதிரி உனக்கு ஏதாவது குடிக்க வாங்கிக்கோ. அவளுக்கு பர்கர் வாங்கு” என்றிருந்தது.

“ஐயோ இப்போ தான இவகிட்ட நீ ஜில்லுன்னு குடி நான் சாப்பிடறேன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தேன்… இதுக்கு வேறக் கேள்விக் கேப்பாளே? ச்ச… இத முன்னாடியே யோசிச்சுருக்கணும்…” என்று மனதில் நினைத்து நொந்துக் கொண்ட ஷீபா எல்லாவற்றையும் வாங்கினாள்.

மூவரும் சென்று ஒரு பெரிய டேபிளில் அமர்ந்தனர். வாங்கியதை வைத்து விட்டு அனஹா எதுவும் கேட்கும் முன் ப்ரமோதுடன் பேசத் துவங்கினாள் ஷீபா.

“யாரு பிரமோத் வராங்க?”

“ரோஹனும் சுதீஷும்…” என்று கூறித் திரும்பியவன் அங்கே ரோஹனைக் கண்டதும் கை அசைத்து இவர்கள் அமர்ந்திருந்த டேபிலிற்கு வர சொன்னான்.

அவன் வந்து அமர்ந்ததும் அறிமுகம் செய்து வைத்து பேசத் துவங்கினர். ஷீபாவும் ப்ரமோதும் தான் பேசினார்கள் என்றாலும், மற்ற இருவரையுமே கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சுதீஷும் வந்து சேர்ந்தான்.

பிரமோத் தனக்கு போன் வந்திருப்பதாக எழுந்துச் சென்றுப் பேசிவிட்டு வந்து, தன் பணி நிமித்தம் இப்போது கிளம்பியாக வேண்டியக் கட்டாயம் இருப்பதாகவும், தான் போகும் இடத்திற்கு ஒரு பெண் துணை தேவை என்றும் கூறி ஷீபாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்துக் கிளம்பினான். இருவரும் கீழே வந்து இவர்களைப் பார்க்கும்படியான இடத்தில் நின்றுக் கொண்டனர்.

“என்ன பிரமோத்? ரோஹன் அனஹா பத்தி எதுவுமேக் கேக்கல?? சரி நீயும் சுதீஷும் என்ன வேலப் பார்க்கறீங்கன்னு நான் சொன்னா, ரோஹனோட வேலையப் பத்தி அனஹா கேப்பான்னு நெனச்சா… அவளும் ரியாக்ஷன் கட்டல??? என்ன பண்ணறது??”

“அவசரப் படாத ஷீபா. இப்போ தான முதல் தடவப் பார்க்கறாங்க…”

சிறிது நேரத்தில் அங்கு சுதீஷும் வந்தான். “உன்ன அவங்க கூடக் கொஞ்ச நேரம் இருக்க சொன்னேன்ல டா? அட்லீஸ்ட் அவங்களப் பேச வெச்சுட்டு கெளம்புன்னு சொன்னேன்ல? அதுக்குள்ள உன் மேனேஜர் கூப்பிட்டாருன்னு சொல்லி எந்திரிச்சு வந்துட்ட?” என்று சற்று எரிச்சலாகக் கேட்டான் பிரமோத்.

“நாசமாப் போச்சு… கூப்பிட்டது நிதி டா… என்ன வர சொல்லி இருக்கா… நான் கெளம்பறேன்டா. ஈவ்னிங் பாப்போம்…” என்றுக் கூறி வேகமாகச் சென்று விட்டான் சுதீஷ்.

சுதீஷ் சென்ற பின் சிறிது நேரம் ரோஹனையும் அனஹாவையும் கவனித்துக் கொண்டிருந்த பிரமோத் “ரெண்டுப் பேருமேப் பேசற மாதிரியேத் தெரியலயே… இப்போ என்ன செய்யறது???” என்று யோசனையாகக் கூறித் திரும்பிய போது அருகில் ஷீபா இல்லாததைக் கண்டு சுற்றிப் பார்வையை சுழல விட்டான்.

சிறிதுத் தள்ளி நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள் ஷீபா. பேசி முடித்து விட்டு பிரமோத்தின் அருகில் வந்து “ப்ரோமோத்… இப்போ ரமேஷ் இங்க பக்கத்துல தான் இருக்காங்களாம்… என்னால வர முடியுமான்னு கேட்டாங்க… இதுக்கப்பறம் நீ பார்த்துப்பல்ல???” என்று இழுத்தாள்.

“சரி நீ கெளம்பு ஷீபா” என்று கூறியது தான் தாமதம்… ஷீபா சிட்டாகப் பறந்து விட்டாள். பிரமோத் ஒரு முறை தலையை உலுக்கிக் கொண்டான்.

“லவ் பண்ணுற பிரண்ட், அது பையனா இருந்தாலும் சரி… பொண்ணா இருந்தாலும் சரி… கூட கூட்டிட்டு வரக்கூடாது… எப்போ அத்துக்கிட்டு போகுங்கன்னு சொல்லவே முடியாது…” என்று வாய்விட்டேப் புலம்பினான் பிரமோத்.

அவனைக் கடந்துச் சென்ற ஒருவன் “கரெக்ட் பாஸ்” என்றுக் கூறி சிரித்துவிட்டு சென்றான். பிரமோதும் சிரித்தாலும் “இப்படி தனியா நின்னு பொலம்ப விட்டுட்டானுங்களே…” என்று நொந்து மீண்டும் அவர்களைப் பார்த்தான்.

ரோஹனும் அனஹாவும் எழுந்து வெளியே செல்லப் போவதை கவனித்தவன் இன்னும் நகர்ந்து அவர்கள் கண்ணில் படாத வண்ணம் மறைந்து நின்றான்.

வெளியேச் சென்றவர்கள் ஆட்டோப் பிடித்து ஏறி சென்றவுடன் சற்றுக் குழம்பினான். “இவன் பைக்ல தான வந்தான்… எதுக்கு ஆட்டோலப் போறாங்க??” என்று யோசித்தவன் ரோஹன் திரும்பி வரும் வரை அங்கேயேக் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தான்.

ஒரு மணி நேரம் அங்கிருந்த கடைகளை சுற்றி வந்தான். “என்ன வாங்குரதுன்நேத் தெரியாம இப்படி சுத்தி சுத்தி வந்தா பைத்தியம் தான் பிடிக்குது…” என்று யோசித்தவன் மணியைப் பார்த்தான்.

“இப்போ போனா சரியா இருக்கும்…” என்று நினைத்து பார்கிங் ஏரியாவிற்குச் சென்றான். சிறிது நேரத்தில் அங்கே வந்த ரோஹன் அவனுடைய பைக்கை எடுத்துச் சென்றுவிட்டான்.

22

அன்று மாலை ப்ரமோதின் வீட்டிற்கு வந்திருந்தனர் சுதீஷும் ஷீபாவும். “கடைசில என் வீட்ட இப்படி சதியாலோசனைக் கூடமா மாத்திட்டீங்களே டா…” என்று சிரித்துக் கொண்டேக் கூறிய பிரமோத் அன்றுக் காலை அவன் பார்த்தவற்றை இருவரிடமும் கூறினான்.

“எதுக்கு டா பைக்ல போகாம ஆட்டோலப் போனாங்க?? அத விடு… இன்னைக்கு அவனப் பார்த்தியா டா நீ??? ஆளே எப்படி மாறிட்டான்… முடிய ஹைலைட்லாம் பண்ணிருக்கான்டா…” என்று ஆச்சர்யமாகக் கூறினான் சுதீஷ்.

“நானும் இத எதிர்பார்க்கல சுதீஷ். நம்ம ஏதோ சும்மா அவன உசுப்பேத்த டிரெஸ்ஸிங் ஸ்டைல் மாத்த சொன்னா… இவன் இப்படி மாறுவான்னு யாருக்கு டா தெரியும்???”

“நான் கூட அன்னைக்கு அவன் ஏதோ ஒன்னு ரெண்டு டிரஸ் எடுப்பான்… அப்படியே அத ஆட்டயப் போட்டுடலாம்னு நெனச்சேன் டா… அவன் அத்தன எடுத்ததும் விட்டுட்டேன்…”

“தூ”

“நீ துப்பரியா??? மானங்கெட்டவனே… எங்க டா என் ஐ – பாட்?? கடைலேந்து நேரா உங்க வீட்டுக்கு வந்து உன்கிட்ட காமிச்சது என் தப்பு… குடு கேட்டுட்டுத் தரேன்னு வாங்கினவன் இன்னைய வரைக்கும் என் கண்ணுலயே காட்டல…” என்றுப் பொருமினான் சுதீஷ்.

இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் ஷீபா. அதைக் கண்ட பிரமோத் “சரி சரி… நம்ம இதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்… ஷீபா… அனஹா உனக்கு ஏதும் போன் பண்ணாலா?” என்றான்.

“ரோஹன் கூட்டிட்டு வந்து விட்டதா சொன்னா. அவன் கூட பைக்ல வர மாட்டேன்னு இவ சொன்னாளாம். அதான் ஆட்டோல போயிருக்காங்க”

“ஏன் அப்படி சொன்னா?” என்றான் சுதீஷ்.

“அது எப்படி பார்த்ததும் ஒருத்தன் கூட பைக்ல போவா??” என்று அதற்கு பதில் கூறிய பிரமோத், “இப்போ அது பிரச்சனை இல்ல. இவங்களத் திரும்ப மீட் பண்ண வெக்கணும்.

என்னால தான இன்னைக்கு நீங்க வெளிலப் போற பிளான் ஸ்பாயில் ஆச்சு… அதனால நானே உங்க ரெண்டுப் பேரையும் திரும்ப வெளிலக் கூப்பிட்டேன்னு சொல்லி பீச்க்கு கூப்பிடு ஷீபா…” என்றான்.

“நீ சொல்றது உனக்கே சொதப்பலா இல்ல? நீ எதுக்கு அனஹாவக் கூப்பிடறன்னு அவக் கேக்க மாட்டாளா?” என்றான் சுதீஷ்.

“அத நான் பார்த்துக்கறேன் சுதீஷ். எப்படியாவதுக் கூட்டிட்டு வந்துடறேன்” என்றுக் கூறினாள் ஷீபா.

பிரமோத் கூறியதுப் போலவே அனஹாவை சம்மதிக்க வைத்து அழைத்து வந்திருந்தாள் ஷீபா. பீச்சில் சந்தித்தவர்கள் இருவருக்கும் தனியேப் பேச வாய்ப்பளிக்கவே ஒருவர் பின் ஒருவராக எழுந்து சென்றனர்.

சிறிது தூரத்திலிருந்து அவர்களை கவனித்த சுதீஷ் “ரெண்டுப் பேரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க… ஆனா இவங்க எந்த அளவுக்குப் பேசறாங்கன்னுத் தெரியலயே…” என்றான்.

ரோஹன் அனஹாவின் போப் கார்னை சாப்பிட்டதையும் அதன் பின் அனஹா ரோஹனின் போப் கார்னை சாப்பிட்டதையும் கண்டவர்கள் தங்களுக்குள் அர்த்தமுள்ளப் பார்வைப் பரிமாற்றம் செய்துக்கொண்டனர்.

அன்று ரோஹன் தனக்கு கால் செய்ததாக அனஹா கூறியதும் அதை ப்ரமோதிடம் கூறினாள் ஷீபா. “சரி இப்போதைக்கு பேசட்டும் ஷீபா… பாக்கலாம்… இந்த வாரம் திரும்ப பீச்ல மீட் பண்ணலாம். ஆனா தற்செயலா நம்ம சந்திச்சுக்கிட்ட மாதிரி இருக்கட்டும்” என்று கூறி வைத்தான்.

உடனே சுதீஷை அழைத்து “சுதீஷ்… அவன் அனஹாவோட நம்பர் வாங்கி போன் பண்ணிப் பேசிருக்கான் டா…” என்றான் பிரமோத்.

“என்னது அதுக்குள்ளயா??? என்ன டா இவன் இந்த ஸ்பீட்ல போறான்??”

“அவன் தான் அன்னைக்கே சொன்னானே… எனக்கு இதெல்லாம் தெரியும்… ஆனா செய்ய புடிக்காதுன்னு…”

“தேவ இல்லாம ஒரு சிங்கத்த சொரிஞ்சு விட்டுட்டோமோ? அடுத்து என்ன டா?”

“தெரியல டா… அவங்க ரெண்டுப் பேரையும் மீட் பண்ண வெக்கப் பிளான் போட்ட வரைக்கும் தான் நம்ம யோசிச்சது… இப்போ நடக்கற எல்லாமே அவன் தான் செய்யறான்… என்ன நெனைக்கறான்னு கெஸ் பண்ண முடியல சுதீஷ்…”

“கண்டிப்பா நம்மக்கிட்ட சொன்னதுக்காக அவன் ஒருப் பொண்ணுக்கிட்டப் போய் பேசுவான்னு எனக்குத் தோனல பிரமோத்… அடுத்த தடவ இவங்கள இன்னும் நல்லா நோட் பண்ணணும்” என்றுக் கூறி வைத்தான் சுதீஷ்.

அடுத்து பீச்சில் சந்தித்தவர்கள் வெகு தூரம் பேசிக்கொண்டே நடந்ததைக் கண்டனர். “அப்படி என்ன டா குசு குசுன்னு பேசிக்கறாங்க??” என்றான் சுதீஷ்.

“வேணுன்னா பின்னாடியேப் போய் கேளேன்…” என்றாள் ஷீபா.

“அதையும் தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி செஞ்சனே… போய் வாட்டர் பாட்டில் வாங்கறப்போ அவங்கப் பின்னாடி தான் நின்னேன்… அவங்க நான் வந்ததக் கூட கவனிக்கல… அவங்க என்ன பேசறாங்கன்னும் கேக்கல…”

சுதீஷை ஏற இறங்கப் பார்த்தாள் ஷீபா. “என்னப் பாக்குற? தோ நிக்குறானே… இவன் ஏதோ ஒருக் குருட்டு தைரியத்துல இதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கான்… அவங்க ரெண்டுப் பேரும் ஏதாவது சொதப்புனாங்க… அவங்க வீட்டுலப் போய் பேசுன நம்மள தான் மொத்துவாங்க… ஞாபகம் இருக்கட்டும்… எதுக்கும் நீயும் என்னை மாதிரியே அவங்கள க்ளோஸா வாட்ச் பண்ணு…” என்றுக் கூறினான் சுதீஷ்.

அவன் கூறியதைக் கேட்ட பிரமோதும் ஷீபாவும் தலையில் அடித்துக் கொண்டனர். “சரி விடுங்க… நானே அந்த வேலையைப் பார்த்துக்கறேன்…” என்று அப்போதும் அசராமல் கூறினான் சுதீஷ்.

இன்னும் சிறிது நேரம் அங்கேயேக் காத்திருந்தவர்கள், நேரம் ஆவதால் ரோஹனை போனில் அழைத்துத் திரும்பி வருமாறுக் கூறினார்.

“விட்டா இவங்க நம்ம கூட வந்ததையே மறந்துடுவாங்க போல…” என்று சிரித்துக்கொண்டேக் கூறினான் சுதீஷ்.

“இன்னைக்கு அவன்ட நேரடியா கேட்டுடலாம் சுதீஷ். என்ன தான் சொல்லுறான்னுப் பாக்கலாம்” என்றான் பிரமோத்.

அவன் அனஹாவிற்காக யோசித்து அவளுக்கு அந்த வால் ஹாங்கிங் வாங்கித் தந்ததை மூவருமே குறித்துக் கொண்டனர். அங்கிருந்துக் கிளம்புகையில் ரோஹனிடம் அனஹாவை விரும்புகிறாயா என்றுக் கேட்டனர் இருவரும்.

“தெரியல” என்று ரோஹன் கூறியதைக் கேட்டவர்கள் இதன் பிறகு தாங்கள் இதில் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. இனி அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர்.

ஷீபாவும் அனஹா தன்னிடம் கூறியவற்றை கூறி, “எனக்கென்னவோ அவளுக்கு ரோஹனை ரொம்பப் புடிச்சுருக்குன்னு நெனைக்கறேன். இல்லன்னா அவ இப்படி அவன் கூட பேச மாட்டா…” என்றாள்.

திடீரென்று ரோஹன் பிரமோதின் வீட்டிற்கு வந்து அனஹாவிடம் ப்ரொபோஸ் செய்து விட்டதாகக் கூறியதும் சிறிது அதிர்ந்து விட்டனர் ப்ரோமோதும் சுதீஷும். அப்போதும் “அவ ஏன்டா இவ்வளவு தெனறணும்? தைரியமா பதில் சொல்லி இருக்க வேண்டியது தான??? எனக்கு என்னமோ அவசரப்பட்டு சொல்லிட்டனோன்னு தோனுது” என்றதும் பயம் வந்தது அவர்களுக்கு.

ரோஹனிடம் ஏதோக் காரணம் சொல்லி அவனை ஹாலிலேயே அமரச் செய்து எழுந்து அறையினுள் சென்றவர்கள் உடனே ஷீபாவை அழைத்தனர். “ஷீபா அனஹா உன் கிட்ட ஏதாவது சொன்னாளா?”

“என்ன ப்ரோமொத் இது? ரோஹன் ப்ரொபோஸ் பண்ணி இருக்கான். இப்போ தான் அவ சொன்னா…” என்றுக் கூறிய ஷீபாவும் அதிர்ச்சியில் தான் இருந்தாள்.

“அது தான் எங்களுக்கும் புரியல… அவன் இங்க தான் இருக்கான். அவ என்ன சொன்னா? சீக்கிரம் சொல்லு… கோவமா இருக்காளா?”

“இல்ல பிரமோத்… அவக் கோபப்படற மாதிரித் தெரியல… நாந்தான் அன்னைக்கே சொன்னேனே… அவளுக்குப் புடிச்சுருக்குன்னு… ஆனா திடீர்ன்னு சொன்னதாலக் கொழப்பத்துல இருக்கா. இது உன் லைப் நீ தான் முடிவெடுக்கணும்னு சொல்லி வெச்சுட்டேன்”

“சரி நான் பார்த்துக்கறேன்” என்றுக் கூறி வைத்த பிரமோத் “இவன இப்படியே விட்டா வேலைக்கு ஆக மாட்டான் டா… சீக்கரம் ரெண்டுப் பேரு வீட்டிலயும் பேசிக் கல்யாணத்த முடிக்கணும்” என்றான்.

“அவசரப்படாத பிரமோத்… இது அவங்க லைப்… கொஞ்சம் டைம் குடு…”

“இல்ல டா ரெண்டுப் பேருக்கும் புடிச்சுருக்கு… ஆனா தேவ இல்லாததெல்லாம் யோசிக்கறாங்க… நீ வா” என்றுக் கூறி வெளியே வந்துப் பேசி ரோஹனை அனுப்பி வைத்தான்.

அதன் பின் இரு வீட்டாரிடமும் பேசிப் பெண் பார்க்க சென்றனர். அன்று இவர்களின் வேலைக் குறித்து அவர்கள் வீட்டில் சொல்லியதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி ஆனதிலிருந்து, இவர்கள் எதையும் இன்னும் முழுதாகப் பேசிக் கொள்ளவில்லை என்று உணர்ந்தனர்.

பின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. ரோஹனும் அனஹாவும்  எப்படியும் தங்களிடம் கோபமாக இருப்பார்கள் என்றுத் தெரிந்தே அவர்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். நிச்சயத்தன்றும் வெகு நேரம் அங்கு இல்லாதவாறு கிளம்பிச் சென்றனர். ஆனால் அது திருமணத்தன்று முடியாமல் போனது.

23

       திருமணத்தன்றுக்  காலை மாப்பிள்ளை அறையில் நுழைந்த ப்ரமோதையும் சுதீஷயும் முறைக்கத் துவங்கினான் ரோஹன். பின் ஏதேதோ சமாதானம் சொல்லி அவனை சரி செய்தனர் இருவரும்.

“ரோஹன்… சீக்கிரம் இந்த வேஷ்டி சட்டைய மாத்திட்டு வந்துடு… நான் கொஞ்ச நேரத்துல உன்னை வந்துக் கூப்பிடுறேன்…” என்றுக் கூறி ரமேஷ் ரோஹனின் கையில் ஒரு தாம்பூலத் தட்டை கொடுத்து விட்டுச் சென்றார்.

“சரி பா…” என்றுக் கூறி அதை வாங்கியவன் அவர் சொன்னபடியே உடை மாற்றினான். பிரமோதும் சுதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று அவர்களுக்குள் தயக்கம் இருந்தது. ரோஹனே முதலில் பேச ஆரம்பித்தான்.

சிறிது நேர அமைதிக்குப் பின் நண்பர்கள் அருகில் கட்டிலில் அமர்ந்திருந்த ரோஹன் “பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா??? எப்படி இருக்கணும் தெரியுமான்னு??? அடிக்கடி சொல்வியே, அத காலேஜ்ல கேக்கறப்பலாம் நானும் என்னென்னமோக் கற்பனப் பண்ணுவேன் டா.

அதனால தான் அம்மா எந்தப் பொண்ணக் காமிச்சாலும் ஏதோ ஒன்னுக் கொறயற மாதிரி இருக்கும்… வேண்டாம்னு சொல்லிடுவேன்” என்றான் சுதீஷைப் பார்த்து.

“ஆமான் டா சொல்லுவேன்… ஆனா அப்படி சொல்லுறப்பலாம் நிதிய நெனச்சு தான் டா சொன்னேன்…” என்றுக் கனவில் மிதந்துக் கொண்டேக் கூறினான் சுதீஷ்.

அவன் கூறியதைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்த பிரமோதும் ரோஹனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்க்கொண்டனர். “அப்போ நிதிய காலேஜ் படிக்கும் போதிலேந்து லவ் பண்ணறல்ல?” என்றான் பிரமோத்.

“ஆமான்டா…” என்றுக் கூறிய சுதீஷ் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “இ… இல்ல டா… அவள நான் வேலைக்கு சேர்ந்ததுக்கு அப்பறம் தான் பார்த்தேன்… நான்… ஐயோ விடுங்க டா… டேய் வலிக்குது டா…” என்றுக் கூறிக் கொண்டே அறையை சுற்றி ஓடத் துவங்கினான்.

“செத்த டா மகனே நீ… இத்தன நாள் உன் ஆள தான் எங்க கண்ணுலக் காட்டல… அட்லீஸ்ட் உண்மையான லவ் ஸ்டோரியாவது சொன்னியா டா நீ?” என்றுக் கேட்டுத் துரத்தினான் பிரமோத்.

“நிதி மாதிரி இருக்கணும்னு இவன் அப்போவே சொல்லி இருந்தா நான் இவ்வளவுக் கொழம்பி இருப்பேனா டா??? இந்த பன்னாடை என்னென்ன சொல்லி இருக்கான்?” என்று ரோஹன் துரத்தி அடித்தான்.

ஒருக் கட்டத்திற்கு மேல் மூச்சு வாங்க ஓய்ந்து அமர்ந்தனர் நண்பர்கள் மூவரும். “என்னா அடி அடிக்குறீங்க டா…” என்று முதுகைப் பிடித்து நெளிந்துக் கொண்டிருந்தான் சுதீஷ்.

அப்போது ரமேஷ் வந்து “ரோஹன் வா சீக்கிரம்… அய்யர் கூப்பிடுறார்” என்றுக் கூறினார். “நீங்க போங்க டா… நான் பின்னாடியே வரேன்…” என்றுக் கூறினான் பிரமோத். சரி என்றுக் கூறி சுதீஷும் ரோஹனும் சென்றனர்.

மணமகள் அறையினுள் தயங்கியபடியே நுழைந்தாள் ஷீபா. அவளைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அனஹா. அவளுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்த ப்யூடிஷியன் அணைத்தையும் முடித்து நகர்ந்துச் சென்றார்.

அனஹாவின் முகத்தைப் பார்க்கத் தயங்கிய படியே “சாரி டி” என்று மெதுவாகக் கூறினாள் ஷீபா.

அனஹா “என்கிட்டப் பேசாத ஷீபா. அப்படி என்ன நான் பண்ணிட்டேன்? எதுக்கு இப்படி என் கண்ணுலயேப் படாம ஓடி ஒளிஞ்ச?” என்றாள் கோபமாக.

“நீ எதுவும் பண்ணல அனஹா… இது நீ எடுக்க வேண்டிய தீர்மானம்… அதான் நீ தனியா யோசிக்கணும்னு… உன்ன விட்டு கொஞ்சம் தள்ளி இருந்தேன்…”

“அத என்கிட்ட சொல்லி இருக்கலாமே ஷீபா… எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துதுத் தெரியுமா?” என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினாள் அனஹா.

ஒரு வேலை தான் அவளுடன் பேசாததுத் தப்போ என்றுத் தோன்றியது ஷீபாவிற்கு. அனஹா தானே சிந்தித்து இந்தக் கல்யாணம் குறித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காகவே அவளுடன் பேசுவதைத் தவிர்த்தாள் ஷீபா.

அதை விட அவளிடம் பேசினால் எங்கேத் தங்களின் திட்டம் குறித்து உளறி விடுவோமோ என்று பயந்தே அனஹாவை சந்திப்பதைத் தவிர்த்திருந்தாள் ஷீபா.

“சாரி அனஹா. நானும் ரமேஷ் கூட பேசறதால கொஞ்சம் பிஸி பா. அடுத்த மாசம் கல்யாணம் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. நேத்து தான் பேசினாங்க. உன் கிட்ட தான் முதல்ல சொல்றேன்”

“ஹே கன்க்ராட்ஸ்… ரொம்ப சந்தோஷம் ஷீபா…” என்று உண்மையான மகிழ்ச்சியோடுக் கூறினாள் அனஹா. “தேங்க்ஸ் டி…” என்று சிறு வெட்கத்துடன் கூறி சிரித்தாள் ஷீபா.

“இந்த பாலக் குடி அனஹா…” என்றுக் கூறி அவள் கையில் ஒரு க்ளாஸைக் கொடுத்தார் அனுக்ரஹா. “உனக்கும் கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சா ஷீபா? ரொம்ப சந்தோஷம் மா…” என்று ஷீபாவை வாழ்த்தினார்.

“தேங்க்ஸ் ஆன்டி…” என்றுக் கூறி சிரித்தாள் ஷீபா. அனஹா அவர் கையில் காலி கோப்பையைக் கொடுக்கவும் அவர் நகர்ந்துச் சென்றார். ஏதோ யோசனையாகத் தலையைக் குனிந்த அனஹா “எனக்கு இன்னுமேக் குழப்பமா தான் இருக்கு ஷீபா…” என்றாள்.

“அய்யய்யோ… எதுக்கு பயந்து இவக் கூட இத்தன நாள் பேசாம இருந்தோமோ அதையே ஆரம்பிக்கறாளே…” என்று யோசித்தவள் “இன்னும் என்ன அனஹா குழப்பம்?? இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணமே முடிஞ்சுடும் அனஹா…” என்றாள்.

“இல்ல… இது அரேஞ்ட் மரேஜ் தான… ரோஹன் வீட்டில எல்லோரும் எப்படி இருப்பாங்கனுத் தெரியல அதான்… அக்காவுக்கு நடந்த மாதிரி எதுவும் நடந்தா???”

“எதுக்கு டி இப்படி யோசிக்கற?? ஆன்டி உன்கிட்ட எவ்வளவு நல்லா பேசினாங்க??? அதோட ரோஹன் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணானே அப்போ இது லவ் மரேஜ் தான…” என்றுக் அனஹாவிடம் கூறினாள் ஷீபா.

மெல்ல தன் மொபைலை எடுத்து “பிரமோத் கம் டு அனஹாஸ் ரூம்” என்று ப்ரமோத்திற்கு மெசேஜ் செய்தாள்.

“அப்படின்னா என் கூட சண்டப் போட்டுப் பிரியனும்னு சொல்லுவாங்களா?? இது லவ் மரேஜ் தான?”

“ச்ச அப்படியெல்லாம் இல்ல… ரோஹன் உன்கிட்ட இதுவரைக்கும் கோபப்பட்டுருக்கானா? உங்க வீட்டுக்கு வந்துப் பொண்ணுப் பார்த்து தான இந்த கல்யாணம் நடக்குது… அப்போ இது எப்படி லவ் மரேஜ் ஆகும்?” என்று அனஹாவிற்கு சமாதானம் கூறினாள் ஷீபா.

“பிரமோத் கம் இம்மீடியட்லி” என்று மீண்டும் ப்ரமோதிற்கு மெசேஜ் அனுப்பினாள்.

“அப்படின்னா இப்போ நல்லாப் பேசறவங்க இதுக்கப்பறம் மாறிட்டா என்ன செய்யறது??”

சற்றே எரிச்சல் அடைந்த ஷீபா “அதுக்காக இப்போக் கல்யாணத்த நிறுத்தப் போறியா?” என்றுக் கேட்டு விட்டு “ஐயோ நானே ஐடியா குடுத்துட்டனே…” என்றுப் பதறி “SOS” என்று ப்ரமோதிற்கு மெசேஜ் அனுப்பினாள்.

ஷீபா கூறியதைக் கேட்டு லேசாகப் புன்னகைத்த அனஹா “ச்ச இல்ல ஷீபா… அப்படி எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னாப் பொண்ணுப் பார்க்க வந்தப்பயே சொல்லி இருப்பேன்…

நிச்சயமே நடந்துருக்காது… அதையெல்லாம் விட்டுட்டு இப்போ எதுக்கு நிறுத்தனும்?” என்றுக் கூறியதை கேட்டதும் தான் மூச்சே சீரானது ஷீபாவிற்கு.

ஷீபா அனுப்பிய மெசேஜ்களை சற்றுத் தாமதமாக தான் படித்தான் பிரமோத். சுதீஷை துரத்தி, அடித்து களைத்து அமர்ந்தபோது எல்லாவற்றையும் படித்தவன் ரோஹனையும் சுதீஷயும் மணவறைக்கு அனுப்பிவிட்டு வேகமாக ஓடிச் சென்று அனஹாவின் அறை முன் நின்றான்.

“என்ன?” என்றுப் பதறியவனிடம் “ஒன்னும் இல்லை நீ போ” என்று சைகை செய்துக் கூறினாள் ஷீபா. “போ டி…” என்பதுப் போல் கையை நீட்டி வாயசைத்து சொல்லி முறைத்துவிட்டுச் சென்றான் பிரமோத்.

இதுவரைக் கூறிய மூவரும் நிமிர்ந்து அனஹாவையும் ரோஹனையும் கண்டனர். அவர்களது முக பாவங்களிலிருந்து ஒன்றும் கண்டறிய முடியவில்லை மூவராலும்.

24

சிறிது நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது. யார் முதலில் பேசுவதென்று ஒருவரை ஒருவர்ப் பார்த்துக் கொண்டனர் நண்பர்கள் மூவரும். ரோஹனும் அனஹாவும் தங்களின் சிந்தனையில் இருந்தனர்.

ஒரு முறை ஷீபாவையும் சுதீஷையும் பார்த்த பிரமோத் “எப்படி டா ஹைலைட் பண்ணிட்டு காலேஜ் போன?” என்றுத் தன் அதி முக்கியமான சந்தேகத்தைக் கேட்டான்.

தலையைக் குனிந்தபடியே ஏதோ யோசனையில் இருந்த ரோஹன் “அது… நான் எப்பயும் சீவர சைடு சீவாம மாத்தி சீவி செஞ்சேன் டா…” என்றான்.

ரோஹன் அவ்வாறுக் கூறியதும் அவனைத் திரும்பிப் பார்த்த அனஹாவிற்கு அவன் முகத்தில் இத்தனை நாள் இருந்த வித்தியாசம் புரிந்தது. முன்பு வேறு பக்கம் வகிடு எடுத்திருந்தான். எல்லாமே நடிப்போ என்று யோசித்தவள் முகத்தில் எதையும் காட்டாமல் தலைக் குனிந்து அமர்ந்தாள்.

மீண்டும் எல்லோரும் அமைதியாக இருந்தனர். பின் சுதீஷ் பேசத் துவங்கினான். “இதெல்லாம் நீங்கக் கல்யாணத்துக்கு முன்னாடியேப் பேசி இருப்பீங்கனு நெனச்சோம்… ஆனா ரிசப்ஷன் அன்னைக்கு ரெண்டுப் பேரும் மொறச்சுக்கிட்டு நின்னதப் பார்த்தா அப்படித் தோனல. அதான்… நாங்க செஞ்சத நாங்களே சொல்லலாமுன்னு…”

“நீங்க உங்க பிரண்ட்ஸ்க்கு நல்லதுப் பண்ணனும்னு நெனச்சு செஞ்சீங்க… பரவாயில்லை… ஆனா இதுக்கப்பறம் இது எங்க லைப்… எதுவா இருந்தாலும் நாங்க எங்களுக்குள்ளப் பேசி சரி செஞ்சுக்குவோம்…” என்றுக் கூறிய அனஹாவைப் பார்த்து அதிசயித்தான் ரோஹன்.

அவன் கூற எண்ணியதுமே இது தான். ஆனால் இதையெல்லாம் கேட்டப் பிறகு அவள் கோபம் கொள்வாள் என்று எதிர்ப்பார்த்தவனுக்கு அவள் இது எங்கள் பிரச்சனை… நீங்கள் தலையிட வேண்டாம் என்றுத் தெளிவாகக் கூறியது சிறிது நிம்மதியையேத் தந்தது.

ரோஹன் அனஹாவின் முகத்தையேப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். மூவரும் ரோஹனை பார்த்தனர். நண்பர்கள் தன் பதிலுக்காய்க் காத்திருப்பதுப் புரிந்து அவர்கள் பக்கம் திரும்பி “நாங்கப் பார்த்துக்கறோம்…” என்று மட்டும் கூறினான்.

சரியாக அந்த நேரம் கோவிலுக்குச் சென்றிருந்த அனுக்ரஹா உள்ளே நுழைந்ததால் அந்தப் பேச்சை அத்துடன் முடித்தனர். அனுக்ரஹாவுடன் சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினர் மூவரும்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும் “ஏதும் பிரச்சன வராதுல்ல?” என்றுக் கேட்டாள் ஷீபா. “நம்ம சொல்ல வேண்டிய எல்லாத்தையும் சொல்லியாச்சு ஷீபா…” என்றான் சுதீஷ். “அவங்கப் பேசிக்குறதுல தான் இருக்கு…” என்றுக் கூறி காரை எடுத்தான் பிரமோத்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்த அனஹா எழுந்துத் தன் தாயுடன் தங்கியிருந்த அறையினுள் சென்றாள். அவள் உள்ளேச் சென்றதும் ரோஹனிடம் வந்த அனுக்ரஹா “ரோஹன் அம்மா சொல்லியிருப்பாங்க… இன்னைக்கு…” என்று சொல்லத் தயங்கியவரிடம் “சொன்னாங்க அத்தை… டைமும் சொன்னாங்க…” என்றுக் கூறி தனதறைக்குச் சென்றான் ரோஹன்.

அறையினுள் வந்தவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒன்றும் புரியவில்லை. இப்போது இருக்கும் நிலையில் முதல் இரவு வேறா என்று நினைத்தவன் வேறு எதையும் யோசிக்காமல் குளிக்கச் சென்றான்.

வெகு நேரம் ஷவரைத் திறந்து விட்டு அதன் அடியில் நின்றவனுக்கு ஏதோ பாரம் குறைந்து மனம் லேசாவதுப் போல் இருந்தது. தான் செய்தவற்றை முதலிலிருந்து யோசித்துப் பார்த்தான்.

அனுக்ரஹா அறையினுள் நுழைந்ததும் அனஹாவால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மெத்தையில் அமைதியாக அமர்ந்திருந்தாள். கல்யாணம் நிச்சயம் ஆன பிறகாவது தாங்கள் ரோஹனின் பெற்றோரை சந்தித்ததை தன் பெற்றோர் தன்னிடம் கூறியிருக்க வேண்டும் என்று எண்ணினாள்.

அமைதியாக அவருடையப் புடவையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார் அனுக்ரஹா. தன்னிடம் எல்லாவற்றையும் மறைத்த அவருடன் இனி இந்த அறையில் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தாள் அனஹா.

அனுக்ரஹா பேச்சைத் துவங்குவதற்காக “அனஹா…” என்றழைத்து அவள் புறம் திரும்பினார். அனஹா அவர் அழைப்பதைக் கண்டுக் கொள்ளாமல்  வேகமாக எழுந்து அறையை விட்டு வெளியேறினாள்.

நேரே சென்று ரோஹன் இருந்த அறையில் நுழைந்துக் கதவைத் தாழிட்டாள். அப்போது தான் குளித்து விட்டு வந்த ரோஹன் அவளைப் பார்த்தான். கோபமாகக் கதவில் சாய்ந்து நின்றவள் நிமிர்ந்துப் பார்த்த போதுதான் தான் ரோஹனின் அறைக்குள் வந்திருப்பதைக் கண்டாள்.

என்ன சொல்வதென்றுத் தெரியாமல் “சாரி… நான் உன் ரூம்குள்ள..” என்றுத் தயங்கியவளைப் பார்த்துக் கொண்டே கப்போர்டைத் திறந்து ஒரு துண்டை எடுத்து நீட்டி “குளிச்சுட்டு வா. இது நம்ம ரூம்” என்று அவள் கண்களைப் பார்த்துக் கூறினான். அனஹா துண்டைக் கையில் வாங்கியதும் தன் கையில் இருந்த துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டே வெளியேறினான் ரோஹன்.

அவள் கோபமாக அறையினுள் நிற்பதைக் கண்ட ரோஹன் தன் மீது தான் கோபம் என்று எண்ணினான். ஆனால் அதன் பின் அவள் பேசியதை வைத்துப் பார்க்கும்போது அது தன் மீதானக் கோபம் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டான்.

வெளியே வந்தவனிடம் அனுக்ரஹா “அனஹா அதுக்குள்ள…” என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே “நான் பார்த்துக்கறேன் அத்தை. அவளுக்குக் குளிச்சுட்டு மாத்திக்க டிரஸ் எடுத்துக் குடுங்க” என்றான்.

அவர் வேகமாகச் சென்று ஒரு கவரினுள் அவள் மாற்ற வேண்டிய உடைகளை எடுத்து வைத்து வெளியே வந்து ரோஹனிடம் நீட்டினார். அவர் கொடுத்தக் கவரை வாங்கி அறைக்குள் சென்றவன் அனஹா கொஞ்சம் கூட நகராமல் அப்படியே நிற்பதைக் கண்டான்.

தான் குளித்தபோது மனம் லேசாகித் தெளிவாக யோசிக்க முடிந்தது போல் அனஹாவும் குளித்தால் அவளுடைய மனக் குழப்பங்கள் குறையும் என்றெண்ணியே அவளையும் குளிக்க சொல்லி இருந்தான். கவரை பெட்டில் வைத்து விட்டு  “போய் குளி” என்றுக் கூறிவிட்டு வெளியேச் சென்றான்.

அவன் சொல்லியதும் தன்னுணர்வுப் பெற்ற அனஹா திரும்பி அவன் செல்வதையேப் பார்த்தாள். சில நொடிகள் அமைதியாகக் கையில் இருந்தத் துண்டை வெறித்துக் கொண்டு நின்றாள். பின் ரோஹன் மெத்தையில் வைத்து விட்டுச் சென்ற கவரை எடுத்துக் கொண்டுக் குளியலறைக்குள் சென்றாள்.

வெகு நேரம் குளித்து முடித்து அனஹா வெளியே வந்த போது ரோஹன் கையில் ஒரு கிளாஸ் பாலுடன் உள்ளே வருவதைக் கண்டாள். அவனைக் கண்டதும் அவனுடன் இப்போதைக்குப் பேசும் எண்ணம் இல்லாமல் வேகமாகச் சென்று படுத்துக் கொண்டாள் அனஹா.

கதவைத் தாழிட்டு விட்டு நிதானமாக அவள் படுத்திருந்த பக்கம் மெத்தை அருகில் வந்து நின்றான் ரோஹன். “இப்போ எவ்வளவு சொன்னாலும் நீ சாப்பிட மாட்டேனுத் தெரியும். இந்த பாலைக் குடிச்சுட்டுப் படு அனஹா…” என்றுக் கூறி க்ளாஸை அவளிடம் நீட்டினான்.

அவளுக்குமேப் பசித்தது. அதிகமாக யோசித்ததால் சோர்வாகவும் உணர்ந்தாள். அதோடுத் தன்னை சரியாகப் புரிந்து வைத்து, தான் இப்போது சாப்பிட மாட்டேன் என்றுத் தெரிந்து ரோஹன் பாலைக் கொடுத்ததும் ஆறுதலாக இருந்தது அனஹாவிற்கு.

மெல்ல எழுந்து மெத்தையில் அமர்ந்தவள் அவன் கையிலிருந்த பாலை அமைதியாக வாங்கிப் பருகத் துவங்கினாள். அப்போது தான் அவளுக்குப் புரிந்தது. குனிந்து தான் அணிந்திருப்பதுப் புடவை என்பதையும் கண்டாள்.

வேகமாக எழுந்து நின்று “ரோஹன் இது…” என்று அவள் கூறத் துவங்கியவுடன் திரும்பி அவளைப் பார்த்தவன் “இத என்னால தடுக்க முடியல… சாரி. தேவ இல்லாம வீட்டுல இருக்கவங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்… அதான்…

ரெண்டுப் பேருக்குமே யோசிக்கறதுக்கு நெறைய இருக்கு… என்ன கேட்கணும்னுக் கூட இப்போ நமக்கு தெளிவாத் தெரியாது. ரொம்ப நேரம் முழிச்சுருக்காத… குட் நைட்” என்றுக் கூறிப் புன்னகைத்து விட்டு பால்கனி கதவைத் திறந்து அங்கேச் சென்றான்.

அவன் சென்றதும் அனஹா கையிலிருந்தப் பாலைப் பார்த்தாள். அதில் ரோஹனின் அக்கறை மட்டுமேத் தெரிந்தது. வேகமாக அதைப் பருகி விட்டு க்ளாஸை மெத்தையின் அருகிலிருந்த டேபிளில் வைத்தாள்.

“எப்படி இவனால இவ்வளவு ஈசியா வீட்டில இருக்கவங்கள சமாளிச்சு என்னையும் சமாதானப் படுத்த முடியுது? இப்போ என்னக் கேக்கணும்னுக் கூட நமக்குத் தெரியாது… உண்மை தான? இவ்வளவையும் இவன் எப்போ யோசிக்குறான்?

நமக்குப் பால் கொண்டு வந்துக் குடுத்தானே… அவன் சாப்பிட்டிருப்பானா? எப்படியும் அம்மா சாப்பிட சொல்லி இருப்பாங்க… இந்த அம்மா ஏன் இப்படிப் பண்ணாங்க? நம்மக் கிட்ட எதையும் சொல்லவே இல்ல…” என்று யோசித்தவளின் சிந்தனை மீண்டும் ரோஹனிடமே வந்து நின்றது.

“இவன் நம்மக்கிட்ட காதல சொன்னதுக் கூடப் பொய்யோ? டிரஸ் மாத்தி… ஹேர் ஸ்டைல் மாத்தி… எல்லாமே நடிப்போ?” என்றுத் தோன்றிய நொடி மனதில் தோன்றிய வலியை உணர முடிந்தது அவளால்.

இன்று நண்பர்கள் மூவரும் கூறியவற்றை மீண்டும் ஒரு முறை எண்ணிப் பார்த்தாள். வெகு நேரம் கட்டிலில் அமர்ந்து தன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்த அனஹாவிற்கு சோர்வாக இருந்தது. அவள் படுக்கச் செல்லும் போது உள்ளே வந்தான் ரோஹன்.

விளக்கை அணைக்காமல் கட்டிலில் அவள் அமர்ந்திருந்த விதமே இன்னும் அவள் யோசித்து முடிக்கவில்லை என்பதைக் கூறியது. ஒரு முறை அவளை நிமிர்ந்துப் பார்த்தான் ரோஹன்.

“இன்னும் தூங்கலையா?”

“தூங்கப் போறேன். குட் நைட்” என்றுக் கூறிப் படுத்தாள் அனஹா.

இப்போதுப் படுத்தாலும் எப்படியும் தூக்கம் வராது என்றுத் தோன்றியது அனஹாவிற்கு. எப்படியும் ரோஹனும் இதே மெத்தையில் தன் அருகில் தான் படுப்பான் என்ற எண்ணமே அவளுக்குத் தூக்கம் வராமல் செய்தது.

ரோஹன் படித்துவிட்டு வைத்திருந்தப் புத்தகங்கள் சில டேபிளில் சிதறிக் கிடந்தன. அவற்றை எடுத்து ஒழுங்குப் படுத்தி வைத்தான். பின் விளக்கை அணைத்து விட்டு வந்து மெத்தையின் மறுப் பக்கத்தில் படுத்தான் ரோஹன்.

அருகில் உறங்கும் அனஹாவின் முகத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிப் போனான். அவன் பார்ப்பதை உணர்ந்திருந்த அனஹா இயல்பாகக் கண்ணை மூடிப் படுத்திருக்க மிகவும் சிரமப் பட்டாள்.

சில நிமிடங்களிலேயே ரோஹன் உறங்கி விட்டதுத் தெரிந்ததும் கண்களைத் திறந்தாள் அனஹா. அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.

எங்கே நன்றாக உறங்கினால் தூக்கத்தில் அவன் மீது இடித்து விடுவோமோ என்ற பயத்திலேயேக் கண்கள் சொருகிய போதெல்லாம் விழித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“இவனுக்கு அந்தக் கவலை எல்லாம் இல்லையா? எவ்வளவு நிம்மதியாத் தூங்குறான்? தூங்குறவன் அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துத் தூங்க வேண்டியது தான?

கண்ண மூடுனா அவன் நம்மலயேப் பார்க்குற மாதிரி வேற தோனித் தொலைக்குது ச்சை… என்ன இம்சை இது?” என்று யோசித்துப் புரண்டுப் புரண்டுப் படுத்தவள் தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.

அவள் திரும்பிப் படுத்த போதெல்லாம் ரோஹனிற்கும் சில சமயம் உறக்கம் கலைந்தது. அரைத் தூக்கத்தில் கண்களை லேசாகத் திறந்துப் பார்த்தவன் “அவ என் பக்கத்துல தான் இருக்கா…” என்ற எண்ணம் தோன்றவே நிம்மதியாக மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

25

காலை கண் விழித்த அனஹா அருகில் ரோஹன் இல்லாததைக் கண்டு வேகமாக எழுந்தாள். பல் விளக்கி ரெப்ரெஷ் செய்து விட்டு வெளியே வந்தபோது ரோஹன் ஹாலில் அமர்ந்து டீ வீ பார்த்துக் கொண்டிருந்தான்.

சமையலறையுள் சென்ற அனஹாவால் அவளுடைய தாயுடன் சரியாகப் பேச முடியவில்லை. அவர் கேட்டக் கேள்விகளுக்கும் ஓரிரண்டு வார்த்தைகளில் பதிலளித்தவள் அவரை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

இரவு அவர் மீதிருந்தக் கோபம் சிறிதும் குறையவில்லை அவளுக்கு. இப்போது அவர் எதுப் பேசினாலும் எரிச்சல் அடைந்தாள். அவரும் ஒன்றும் புரியாமல் அவள் கையில் டீ கொடுத்தார்.

சிறிது நேரம் இதையெல்லாம் ஹாலில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ரோஹன். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்து தங்கள் அறையினுள் சென்று “அனஹா” என்று அவளை அழைத்தான்.

அனஹா குடித்துக் கொண்டிருந்த டீயை அவசரமாக விழுங்கி கப்பை கழுவப் போட்டு விட்டு அறையினுள் சென்றாள். உள்ளே வந்தவளிடம் “எதுக்கு அத்தைக்கிட்ட இப்படி நடந்துக்கற?” என்று நேரடியாகக் கேட்டான் ரோஹன்.

அவனை நிமிர்ந்துப் பார்த்து “அவங்க என்னோட அம்மா” என்றாள் அமைதியாக.

“உன் அம்மா தான். ஆனா அவங்கள இங்க வந்துத் தங்க சொல்லி கூட்டிட்டு வந்தது நான். இது ஒன்னும் உங்க வீடு இல்ல அனஹா… அவங்களுக்கு இது எவ்வளவு தர்ம சங்கடமா இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தியா?

இப்போ மாமாவும் ஊர்ல இல்ல. நீ இப்படி அவங்களோடப் பேசாம இருக்கங்கறதுக்காக அவங்களாலக் கிளம்பி வீட்டுக்கும் போக முடியாது.

அவங்க இங்க வந்தது நான் கூப்பிட்டதுக்காக… எனக்கு நீ மரியாதைக் குடுக்கறதா இருந்தா அவங்ககிட்ட ஒழுங்காப் பேசு” என்று அமைதியாகவேக் கூறினான் ரோஹன்.

ஆனாலும் அவனின் குரலில் எட்டிப் பார்த்தக் கோபம் அனஹாவிற்குப் புரிந்தது. தாயுடன் தான் பேசாமல் இருந்தால் அவருக்கு எவ்வளவுக் கஷ்ட்டமாக இருக்கும் என்பதையும் உணர்ந்தாள்.

அதிலும் பெண் வீட்டில் திருமணத்திற்கு பின் வந்துத் தங்கியிருப்பவருக்கு இது சங்கடமாக இருக்கும் என்று விளங்கியது. தான் செய்தத் தவறும் புரிந்தது.

“அவங்க உன்னோட பாரென்ட்ஸ் கிட்ட முன்னாடியேப் பேசினதை என் கிட்ட சொல்லவே இல்லை. நான் அவங்கக் கிட்ட இது வரை எதையும் மறைச்சதில்லை ரோஹன். அவங்க இப்படி செஞ்சது எனக்குக் கஷ்டமா இருந்துது… அதான்…” என்றுத் தன் செயலுக்கான விளக்கம் கொடுத்தாள் அனஹா.

ரோஹன் அவளை ஆழமாகப் பார்த்து “நம்ம மீட் பண்ணது… நான் உன்கிட்ட போன்லப் பேசினது… எதையும் நீ மறச்சதில்லையா?” என்றான் நிதானமாக.

அனஹா பதில் சொல்லாமல் தலைக் குனிந்தாள். அவன் கேட்டதில் இருந்த உண்மை சுட்டது.

அவள் தாடையை பற்றி நிமிர்த்தி “அத்தைக்கிட்ட பேசு அனஹா. காலைலேந்து அவங்க ரொம்ப வருத்தப்படறாங்கனு அவங்க முகத்துலயேத் தெரியுது. எனக்காக… ப்ளீஸ்…” என்றான் ரோஹன்.

சரி என்றுத் தலை அசைத்து வெளியேச் சென்றவள் அதன் பின் அனுக்ராஹாவுடனே சுற்றித் திரிந்தாள்.

இவ எப்போ டா நம்ம சட்டயப் புடிச்சு கத்தப் போறான்னு நம்ம பயந்துக்கிட்டிருந்தா… இவ என்ன இப்படிப் பேசுறா?” என்றுக் குழம்பினான் ரோஹன்.

ரோஹனிடம் வேறு எதுவும் பேசாமல் அனுக்ரஹா சொல்பவற்றை செய்துக் கொண்டும் அவருடன் பேசி சிரித்துக் கொண்டும் இருந்தாள் அனஹா. இரவு அறைக்குள் வந்தவள் “குட் நைட் என்று மட்டும் கூறி விட்டு அமைதியாகப் படுத்து உறங்கி விட்டாள்.

அடுத்த நாள் ஞாயிறன்று விடியலிலேயே வந்து விட்டார் சுந்தர். கையில் பையுடன் வந்தவரைப் பார்த்ததும் அனஹாவிற்குப் புரிந்தது… அவர் வீட்டுக்குக் கூடப் போகாமல் நேரே இங்கு வந்திருப்பது.

வந்த உடனேயே சுந்தர் அனுக்ரஹாவை அழைத்து செல்வதாகக் கூறினார். அனுக்ராஹாவும் தன் பொருட்களை எடுத்து வைக்கத் துவங்கினார். ரோஹன் ஏதாவதுக் கூறுவான் என்று அவனைப் பார்த்தாள் அனஹா. அவன் சுந்தருடன் பேசிக் கொண்டிருந்தான்.

அனுக்ரஹா கிளம்புவதைக் கண்ட அனஹாவிற்கு பெற்றோரைப் பிரியப் போகும் சோகம் தொற்றிக் கொண்டது. “ஈவ்னிங் போங்கப்பா… இப்போ தான வந்தீங்க?” என்று தந்தையிடம் கூறினாள். அவர் சொன்னால் அம்மாவும் தன்னுடன் மாலை வரை இருப்பார் என்ற எண்ணத்தில் கூறினாள்.

“இல்ல மா நாளையிலேருந்து நீங்க ரெண்டுப் பேரும் காலேஜ் போகணும். இன்னைக்கு ஒரு நாள் ரெண்டுப் பேரும் கொஞ்சம் ரிலக்ஸ்டா இருங்க… இத்தன நாள் ரோஹன் சொன்னதுக்காக தான் அம்மாவ இங்க இருக்க விட்டேன்…” என்றுக் கூறி விட்டார் சுந்தர். சாப்பிட்டு செல்லுமாறு எவ்வளவு சொல்லியும் அதையும் அவர் கேட்கவில்லை.

அவர்கள் சென்ற போது மணி 7 ஆகி இருந்தது. சமையலறையில் டீ போட்டுக் கொண்டிருந்தாள் அனஹா. கையில் அன்றைய செய்தித்தாளுடன் ஹாலிற்கு வந்த ரோஹன் அனஹாவை பார்த்ததும் ஏதோ ஒரு பாடலை விசிலடித்தான்.

பின் அவள் டீ எடுத்து வந்து கொடுத்த பொழுதும் காலை உணவு நேரத்திலும் கூட அவளைப் பார்க்கும்போதெல்லாம் விசிலடித்துக் கொண்டிருப்பவனை விநோதமாக பார்த்தாள் அனஹா.

அதை அவன் உணர்ந்து செய்யவில்லை… தன் போக்கில் விசிலடித்துக் கொண்டிருக்கிறான் என்றுப் புரிந்தது அவளுக்கு. சாப்பிடும்போதும் இருவருமே ஏதோ முக்கிய வேலைப் பார்ப்பதைப் போல தட்டில் இருந்து கண்களை அகற்றாமல் சாப்பிட்டு எழுந்தனர்.

அனஹா இல்லாத வேலையை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் சாக்கில் சமையலறையிலேயே இருந்தாள். மதிய உணவிற்கு தயார் செய்துக் கொண்டேப் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.

மதியம் ரோஹன் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சிப் பார்த்துக் கொண்டிருந்தான். அனஹா வந்து “சாப்பிடலாம் ரோஹன்” என்றுக் கூறியதும் “இங்க எடுத்துட்டு வந்துடறியா? டீ வீ பார்த்துட்டே சாப்பிடறேன்…” என்றுக் கூறினான் ரோஹன்.

சரி என்றுக் கூறி அனஹாவும் எல்லாவற்றையும் ஹாலில் எடுத்து வந்து சோபாவின் எதிரில் இருந்த டீபாயில் வைத்தாள். ரோஹன் தானே எடுத்துப் போட்டு சாப்பிட்டான். தனக்குத் தேவையானவற்றை தட்டில் போட்டு நிமிர்ந்தபோது தான் அனஹா தொலைக்காட்சியைப் பார்த்தாள்.

அது ஒரு ஆங்கில சேனல். அதில் ஒரு பெரிய திமிங்கலத்தை கிழித்து அதன் உறுப்புகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்டவள் முகம் சுளிக்க அதை கவனித்த ரோஹன் ரிமோட்டை அவளிடம் கொடுத்து “மாத்திக்கோ…” என்றான்.

அவன் ரிமோட்டை நீட்டியதும் அவனை ஒரு முறை ஆச்சரியமாகப் பார்த்தாள் அனஹா. ரோஹன் முகத்தில் எதுவும் காட்டாமல் சாதரணமாக தான் கூறினான். அவள் அதை வாங்கி ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருந்தாள். சாப்பிட்டுக் கொண்டே “நீ நான்-வெஜ் சமைக்க மாட்டியா?” என்றுக் கேட்டான் ரோஹன்.

“சமைப்பேன். நானும் இப்படி வெட்டறதயெல்லாம் பார்த்துருக்கேன். ஆனா இது ரொம்ப பயங்கரமா இருக்கு… சாப்பிடறப்ப இதெல்லாம் என்னாலப் பார்க்க முடியாது” என்று டீ வீ பார்த்துக் கொண்டேக் கூறினாள் அனஹா.

பின் ஏதோ ஒரு ஹிந்தி சேனலில் main  hoon  naa படம் ஓடிக் கொண்டிருந்தது. ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு அதைப் பார்த்துக் கொண்டே சாப்பிடத் துவங்கினாள் அனஹா.

அப்போது அதில் ஷாருக் சுஷ்மிதாவைக் கண்டவுடன் பாட்டு பாடத் துவங்குவார். என்ன முயன்றும் அவரால் அதை நிறுத்த முடியாது. அதற்காக மன்னிப்புக் கேட்க போகும்போதும் இதுவேத் தொடரும்.

முதலில் அந்தப் படத்தில் ஈடுபாடில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த ரோஹன் இதைக் கண்டதும் சாப்பிடுவதை மறந்து ஆர்வமாக அந்தக் காட்சியைப் பார்த்துத் தன்னையறியாமல் விசிலடிக்கத் துவங்கினான்.

சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்த அனஹா வேகமாக டீ வீயை அணைத்துவிட்டு எழுந்தாள். அவள் ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு எழுந்த வேகத்தில் அதை எடுத்து மீண்டும் டீ வீயை உயிர்ப்பித்தவன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஓஹோ… நமக்குப் புடிச்ச பொண்ணப் பார்த்தா பாட்டுப் பாடத் தோனுமா? அதனால தான் காலையிலிருந்து அனஹாவைப் பார்க்கறப்போ எல்லாம் நம்ம விசிலடிக்கறோமோ?” என்று யோசித்தவன் திரும்பிக் கிட்செனில் தட்டு கழுவிக் கொண்டிருந்த அனஹாவைப் பார்த்தான்.

சிரித்து விட்டு மீதம் இருந்த உணவை வேகமாக சாப்பிட்டு முடித்து தட்டை போட்டு விட்டுக் கைக் கழுவினான். அனஹா சாப்பிட்டவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவள் முகத்திலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்று அறிய முயன்றுத் தோற்றுக் கொண்டிருந்தான் ரோஹன்.

அனஹாவிடம் எப்படியும் பேச வேண்டும் என்று வெகு நேரமாக யோசித்து “முதல்ல கல்யாணத்தப் பத்தி இருக்க இவளோடக் கொழப்பத்தத் தீர்க்கணும்” என்று முடிவெடுத்து அடுக்களை வாசல் வரைச் சென்றான்.

வாசலில் நிழலாடுவதை உணர்ந்து அனஹா திரும்பிப் பார்க்கவும் ரோஹன் என்ன செய்வதேன்றுத் தெரியாமல் விழித்தான். பின் மேடை மீதிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு வெளியே வந்தான்.

நேராகப் படுக்கை அறைக்குள் சென்று “அட ச்ச… 30 40 பேரு முன்னாடி நின்னு கிளாஸ் எடுக்க சொன்னா எந்த தயக்கமும் வர மாட்டேங்குது… 100 பேரு முன்னாடி செமினார் எடுக்கறது ஒரு பெரிய விஷயமாத் தெரிய மாட்டேங்குது…

இவ ஒருத்தி முன்னாடி நின்னுப் பேசுறதுக்கு இப்படி பயந்து சாகுறமே…” என்று மனதிற்குள் புலம்பி தலையை அழுந்தக் கோதி அறைக்குள் வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் “பேசி தான் ஆகணும்…” என்று நினைத்து எல்லா வேலையும் முடித்து கிட்செனிலிருந்து வெளியே வந்த அனஹாவின் முன் வந்து நின்றான்.

26

அனஹாவின் முன்னால் வந்து நின்று விட்டானேத் தவிர சட்டென்று என்னப் பேசுவதென்றுத் தெரியவில்லை ரோஹனிற்கு. “அனஹா உனக்கு நம்மக் கல்யாணம்… உனக்கு இப்போ… குழப்பம் இருக்குனுத் தெரியும்…

முதல்ல நீ தெளிவா யோசிக்கணும்… இல்லல்ல சில விஷயம் நீ புரிஞ்சுக்கணும்… உங்க அக்காவோ துளசியோ… அவங்க லைப் அப்படி ஆயிட்டா உன் லைப் அப்படி ஆயிடும்னு நீ பயப்படக் கூடாது…

நான் உன்கிட்ட லவ் பண்ணறேன்னு சொன்னேன் தான்… ஆனா எங்க வீட்டிலேருந்து வந்துப் பொண்ணுக் கேட்டாங்கல்ல… அதனால இது லவ் மரேஜ்னு சொல்லிட முடியாது… ஆனா நீ…”

சிறிது நேரம் ரோஹனைப் புரியாமலேயேப் பார்த்துக் கொண்டிருந்த அனஹா, அவன் கூற வருவது ஒன்றும் விளங்காமல் விழித்தாள். பின் ரோஹன் நிறுத்துவதாகத் தெரியாததால் தானேப் பொறுமை இழந்துப் பேச ஆரம்பித்தாள்.

“இப்போ எதுக்கு இப்படி உளறுற ரோஹன்…? நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு… நீ என்னோட ஹஸ்பன்ட்… நான் உன்னோட வைப்… இதுல என்ன சந்தேகம் உனக்கு???” என்று அலட்சியமாகக் கூறி அவனைத் தாண்டிச் சென்றாள்.

“அஅஅஅஅடிடிடிடிபாபாபாபாவிவிவிஈஈஈ…” என்று வாய் விட்டேக் கூறி விட்டான் ரோஹன். அதைக் கேட்டு அனஹா திரும்பி அவனைப் பார்த்து வாய் பொத்தி சிரித்ததும் கோபமே வந்த விட்டது ரோஹனிற்கு.

அதன் பின் அவளை முறைத்துத் தங்கள் அறைக்குள் சென்றான் ரோஹன். சிறிது நேரத்திற்குப் பின் தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தவன் எதிரே வந்த அனஹாவை முறைத்தான். அவளும் பதிலுக்கு முறைத்தது இன்னும் எரிச்சலானது அவனுக்கு.

“ராத்திரி பூராத் தூங்காம இவளுக்கு எப்படிப் புரிய வைக்கலாம்னு யோசிச்சு… தயங்கித் தயங்கி இவ கிட்டப் போய் பேசுனா… இவ என்னமோ நான் ஏன் கொழம்பறேனு கேட்டுட்டுப் போறா?” என்று மனதிற்குள் பொருமினான்.

மீண்டும் அறைக்குள்ளேயே வந்தவனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுப் புரியவில்லை. “நிஜமாவே நம்ம கரெக்டா தான் பெசுனோமா? இல்ல அவ சொன்ன மாதிரி நம்ம தான் தேவ இல்லாமக் குழப்பிக்கிட்டு இருக்கோமா?” என்றுத் தன் மீதே சந்தேகம் வந்தது அவனுக்கு.

ரோஹனிற்கு இன்னொன்றும் புரிந்தது. “இப்போ அவளுக்குப் புரிய வைக்கணும்னுப் பதட்டத்துல நம்மப் பேசுனோம். அதனாலத் தெளிவாப் பேசாமத் தயங்கி தானப் பேசுனோம்… ஆனா அவ??? எவ்வளவுத் தெளிவாப் பேசுறா???

இதுக்கு முன்னாடி அவப் பேசவேத் தயங்கறானு நம்ம நெனச்சது தப்போ? ஒரு வேல வெக்கப் பட்டு அப்படிப் பேசினாளா?” என்று யோசித்தவன் முகம் பிரகாசமானது.

அந்த எண்ணம் தோன்றியதும் வேகமாக அறையை விட்டு வெளியே வந்த ரோஹனின் கண்களில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு தரையைப் பார்த்து உதட்டில் உறைந்தப் புன்னகையுடன் அமர்ந்திருந்த அனஹா தெரிந்தாள்.

அவளை அந்நிலையில் பார்த்ததும் தன்னையறியாமல் “டால்லி” என்று அழைத்தான் ரோஹன். வெகு நாட்களுக்குப் பின் கேட்கும் அந்த அழைப்பும் அவனது அந்தக் குரலும் அனஹாவை வேகமாக எழச் செய்தது.

அருகே இருந்த சுவரில் சாய்ந்த ரோஹன் வா என்று கண்களால் சைகை செய்தான். புத்தகத்தை சோபாவில் வைத்து விட்டு அவன் எதிரில் வந்து நின்ற அனஹாவின் தோளைத் தன் இருக் கைகளால் பிடித்து அவளை அருகில் இழுத்தான்.

தனக்கிருக்கும் சந்தேகத்தை அனஹாவிடம் கேட்டு விட வேண்டும் என்று நினைத்த ரோஹன் அவள் கண்களைப் பார்த்து “நீ எதுக்காக இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? உன் வீட்டுல சொன்னதுக்காகவா டால்லி?” என்றுக் கேட்டான்.

அனஹாவும் ரோஹனை நேராய்ப் பார்த்து இல்லை என்றுத் தலை ஆட்டினாள். “எனக்கு உன் மேல நம்பிக்க இருக்கறதுனால… இல்லன்னா உன்னக் கல்யாணம் பண்ணிக்கவோ… என் அப்பா அம்மாவ விட்டு வரவோ சம்மதிச்சுருக்க மாட்டேன்” என்றாள் அழுத்தமாக.

அதைக் கேட்ட ரோஹனின் முகம் மலர்ந்தது. அனஹாவின் தோளில் தன் கைகளை மாலையாக்கி போட்டு அவளை இன்னும் அருகில் இழுத்துக் கொண்டான். அனஹாவும் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் அவனின் மார்பில் தன் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டாள்.

“ஒருப் பொண்ணு ‘உன்ன நம்பி வந்தேன்’னு சொல்றது ஒரு ஆணுக்கு எந்தளவு கர்வத்தக் குடுக்கும்னு உனக்குத் தெரியுமா டால்லி?” என்றுக் கேட்டவனின் குரலில் அளவிட முடியாத ஏதோ ஒன்று இருந்தது.

அது மகிழ்ச்சியா… காதலா… பெருமையா… இல்லை அவன் சொன்னது போல் கர்வமா… பிரித்தறிய முடியவில்லை அனஹாவால். அவன் முகத்தையேப் பார்த்திருந்தவள் “ஆனா எனக்கு சில சந்தேகம் இருக்கு” என்றாள்.

“கேளு” என்று கூறியவனின் குரல் கனிந்திருந்தது.

“நீ எதுக்காக இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? உன் பிரண்ட்ஸ் கிட்ட தோத்துடக் கூடாதுன்னா?” என்று அவனைப் போலவேக் கேட்ட அனஹாவின் முகத்தில் வருத்தம் இழையோடியது.

அதற்கு மேல் அவன் முகத்தைக் காண முடியாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். சில நொடிகள் கழிந்தப் பின்னும் அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“ஐ லவ் யூ”

அனஹா இதை சற்றும் எதிர்ப் பார்த்திருக்கவில்லை. அன்றும் இதையே தான் சொன்னான் ஆனால் அன்று அவளால் சுற்றுப் புறம் கருதி அவளை சமன் செய்ய முடிந்தது.

ஆனால் இன்று… அவனின் மனைவியாய்… அவனின் கை வளைவில் இருந்தவளுக்கு அவளின் கன்னச் சிவப்பை மறைக்க முடியவில்லை. உதட்டை கடித்து மீண்டும் தலைக் குனிந்துக் கொண்டாள்.

“நான் அவங்களுக்காக சொன்னேன்னு நெனைக்கிறியா? அப்பறம் எதுக்கு என் மேல நம்பிக்கை இருக்குனு சொன்ன? நான் சொன்னது எல்லாமேப் பொய் இல்ல அனஹா…” என்று வருத்தத்துடன் கூறினான் ரோஹன்.

சட்டென்று நிமிர்ந்த அனஹா ரோஹனை முறைத்து “வித்யா, ஷிண்டூ இவங்க உனக்கு ஏஞ்செல், லிட்டில் சாம்ப் இல்ல? இவங்க ரெண்டுப் பேரும் உனக்குப் பக்கத்து வீட்டுல இருக்காங்க இல்ல?” என்றுக் கோபமாகக் கேட்டாள்.

“அய்யய்யோ அதுக்குள்ளக் கண்டுப் புடிச்சுட்டாளா? இப்போ தான் நல்லாப் போயிக்கிட்டிருக்குனு நெனைச்சேன்…” என்று மனதிற்குள் நொந்தவன் “எ… எனக்குத் தல வலிக்குது அனஹா… டீ… டீ போட பால் இல்லல்ல… நான் கீழப் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என்று வேகமாகக் கூறி அவளை விடுவித்து அறையினுள் நுழைந்தான்.

“டேய் நில்லுடா… எங்க ஓடுற? பதில் சொல்லு…” என்று அவன் பின்னோடு சென்றாள் அனஹா. “எனக்கு முதல்ல டீ வேணும் அனஹா…” என்றுக் கூறிய ரோஹன் பர்ஸ் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

“நீ என்கிட்டப் பொய்யே சொல்லலையா?” என்றுக் கேட்டு விடாமல் அவன் பின்னால் வந்தாள் அனஹா. அவள் கேட்பது எதையும் காதில் வாங்காமல் வேகமாகக் கதவைத் திறந்து வெளியேச் சென்றான் ரோஹன்.

“எப்படியும் இங்க தான வரணும்…” என்று அனஹா கத்தியதுக் காதில் விழுந்து. “ஆமா எப்படியும் இப்போத் திரும்பி இவ முன்னாடி தானப் போய் நிக்கணும்…” என்று மனதில் நினைத்துக் கலங்கினான் ரோஹன்.

27

லிப்டில் கீழே வந்த ரோஹன் ஒரு நெடியப் பெருமூச்சை இழுத்து விட்டான். “இவ இப்படி எல்லாத்தையும் தெளிவாப் பேசுறாளே? எப்படி அதுக்குள்ளக் கண்டுப் புடிச்சா?

எப்போக் கண்டுப் புடிச்சானு வேறத் தெரியலயே…” என்று யோசனையோடேக் கடைக்குச் சென்றுத் தேவையானவற்றை வாங்கி வந்து மீண்டும் அவன் பிளாட்டின் முன் நின்றிருந்தான் ரோஹன்.

மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவனுக்கு அனஹா கிட்செனில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதுத் தெரிந்தது. அமைதியாக சமையலறையுள் நுழைந்து மேடை மேல் வாங்கி வந்ததை வைத்து விட்டுத் திரும்பியவனிடம் “என்னால டீ போட முடியாது” என்றுக் கூறி வெளியேறினாள் அனஹா.

“போட வேணாம் போ டி… நானேப் போட்டுக்குவேன்…” என்று அவள் முதுகைப் பார்த்துக் கூறினான் ரோஹன். ஒரு முறை நின்றுத் திரும்பி அவனை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்து விட்டு சென்று அவர்களது அறைக்குள் புகுந்துக் கொண்டாள் அனஹா.

ஒரு முறை கிட்சனை சுற்றித் தன் பார்வையை சுழல விட்ட ரோஹன் தலையை அழுந்தக் கோதினான். “அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாதப்போ… அம்மா வீட்ல இல்லாதப்போலாம் சமைச்சதில்லையா??? ஒரு டீ தான… போட முடியாதா என்ன?” என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்.

உடனேயே “அப்போ நான், ராஹுல், அப்பா 3 பேரும் சேர்ந்து தான் செய்வோம். அதுலயும் அப்பா காய் நறுக்கித் தருவாங்க… ராஹுல் மசாலா அரைச்சுத் தருவான்… எல்லாத்தையும் வாங்கிக் கிண்டுனது மட்டும் தான் நம்ம…

அடுப்பக் கூடப் பத்த வெக்காம ‘நானும் சமைக்கறேனு’ வந்து நின்னு எல்லாத்தையும் வேல வாங்கிட்டு… இப்போ டீ போடணும்னா எப்படிப் போடறது?” என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டான். எப்படியோ ஒவ்வொரு டப்பாவாகத் திறந்துப் பார்த்து அனைத்தையும் கண்டுப் பிடித்து ஒரு வழியாக டீயைக் கொதிக்க வைத்தான்.

அறைக்குள் செல்வதாக பாவனை செய்த அனஹா உடனேயே வெளியே வந்து ஒளிந்து நின்று ரோஹன் என்ன செய்கிறான் என்றுப் பார்த்தாள். அவன் முதலில் கிட்செனை நான்கு முறை சுற்றி சுற்றிப் பார்த்ததிலிருந்தே அவளுக்கு தெரிந்தது… இவனுக்கு ஒன்றும் சமைக்கத் தெரியாது என்று.

ரோஹனின் செயல்கள் அனைத்தையும் கஷ்ட்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கவனித்துக் கொண்டிருந்த அனஹா, ரோஹன் டீயை அடுப்பிலிருந்து இறக்கிய சமயம் வேகமாகத் திரும்பிச் சென்றுத் தங்கள் அறையின் பால்கனியில் நின்றுக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் அவளிடம் வந்து ஒரு கப்பை நீட்டினான் ரோஹன். அவன் தனக்கும் சேர்த்து டீ போடுவான் என்று அனஹா நினைக்கவில்லை. கப்பை வாங்காமல் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள். “அது எப்படி நான் மட்டும் குடிப்பேன்னு நெனச்ச?” என்றுக் கேட்டுப் புன்னகையுடன் நின்றான் ரோஹன்.

“ஆமாமா… உனக்கு மட்டும் எதாவது ஆகிட்டா? டீ போடறதுக்கு எதுக்குக் கிட்சன சுத்திப் பார்த்த?” என்று நக்கலாகக் கேட்டாள் அனஹா.

அவளை முறைத்து விட்டு அங்கே இருந்த சேரில் அமர்வதற்காகத் திரும்பி நடந்தவன் “ச்ச… மானமேப் போச்சு…” என்றுக் கண்களை இறுக மூடித் திறந்துத் தலையை லேசாக ஆட்டி மெலிதாக முனு முனுத்தான்.

அவன் எதிரில் சுவரில் சாய்ந்து நின்ற அனஹா ஒரு வாய் குடித்ததும் டீ நன்றாக இருக்கவும் “தேங்க்ஸ். டீ உண்மைலயே நல்லா இருக்கு…” என்றாள். ஒரு மென்னகையை அவளுக்கு பதிலாகக் கொடுத்தான் ரோஹன்.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக அருந்தினர். அனஹா ரோஹன் வரும் முன் அங்கு நின்று யோசித்ததை அவனிடம் கூற ஆரம்பித்தாள். “எனக்கு இந்த பால்கனில நெறைய செடி வெக்கணும் ரோஹன்… அப்பறம் இங்க ஒரு பிரம்பு ஊஞ்சல் மாட்டணும்… கூடை மாதிரி…” என்று கனவில் மிதந்துக் கூறிக் கொண்டிருந்தாள்.

“கூடை மாதிரின்னா ஒருத்தர் தான உட்கார முடியும்… நான் அதுல உட்கார்ந்துட்டேன்னா அப்பறம் நீ எங்க உட்காருவ???” என்று வருத்தமாகக் கேட்டான் ரோஹன்.

வேறு ஏதோ சிந்தனையில் இருந்த அனஹா “நான் உன் மடில உட்கார்ந்துப்பேன்” என்று வேகமாகக் கூறிவிட்டு “சொல்றத கேளு… எனக்கு இங்க ரெட் ரோஸ் வெக்கணும்… அப்பறம்…” என்றுக் கூறித் திரும்பியவள் ரோஹன் கண்களில் குறும்புடன் தன்னையேப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு அப்போதுதான் தான் கூறியதை நினைவுக் கூர்ந்தாள்.

செய்வதறியாதுத் தன் கையிலிருந்த கப்பைப் பார்த்தவள் “கழுவிட்டு வரேன்” என்றுக் கூறி அவன் கையில் இருந்த கப்பையும் பிடுங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பால்கனி கதவருகில் சென்றதும் “நில்லு டால்லி” என்றுக் கூறி சேரிலிருந்து எழுந்தான் ரோஹன். அவனின் “டால்லி” என்ற அழைப்பில் மீண்டும் ஏதோ நினைவு வந்தது போல் “நான் அப்போக் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலயே?” என்றாள் திரும்பி நின்று.

“என்ன சொல்லணும்?”

“வித்யா ஷிண்டூ உங்கப் பக்கத்து வீட்டுப் பசங்களா?” என்றுக் கையைக் கட்டிக் கொண்டுக் கேட்டாள் அனஹா.

“ஏன் கேட்கற?”

“ஏன்னா உங்க வீட்டுக்கு ஒரு சைட் வயசான கப்பிளும் இன்னொரு சைட் ஒரு நியூலி மாரிட் கப்பிளும் தான் இருக்காங்க… கல்யாணம் முடிஞ்சு உங்க வீட்லத் தங்கி இருந்த அன்னைக்குப் பார்த்தேன்”

“எனக்கு உன்ன அப்படி தான் கூப்பிடப் புடிச்சுருக்கு டால்லி… நான் இது வர யாருக்கும் செல்லப் பெயர் வெச்சதில்ல… உன்ன முதல் தடவ அந்த ஷாப்பிங் மால்லப் பார்த்தப்போ நீ வேடிக்கப் பார்த்துக்கிட்டே அசையாம உட்கார்ந்திருந்த… அப்படியே டால் மாதிரி… அதான் டால்லி…” என்று கூறி அவளைத் தாண்டி அறையினுள் சென்றான் ரோஹன்.

அவளைத் திரும்பிப் பார்த்து “முதல் தடவப் பார்த்ததும் உன்ன அப்படிக் கூப்பிட்டா நீ திட்டுவனுத் தெரியும்… அதான் உன்ன சமாளிக்கக் கொஞ்சம் கதை சொன்னேன்… புரிஞ்சுதா டால்லி…” என்றுக் கூறி சிரித்துவிட்டு அவள் கையில் இருந்த இரு காப்புகளையும் வாங்கிக் கொண்டுக் கிட்சென் நோக்கி வேகமாகச் சென்றான் ரோஹன்.

“அன்னைக்கும் என் வாய மூடிட்டான்… இன்னைக்கும் பேச விடல” என்று யோசித்தவள் சென்று முகம் கழுவி வந்தாள். துடைக்கத் துண்டை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தபொழுது தான் தன்னுடைய உடைமைகள் அனைத்தும் மற்றொரு அறையில் இருப்பது நினைவு வந்தது அனஹாவிற்கு.

அப்போது உள்ளே நுழைந்த ரோஹன் அலமாரியின் முன் ஈர முகத்துடன் அனஹா நிற்பதைக் கண்டு “துண்டு அந்த சைட் இருக்கு டால்லி. நீ உன்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்து வந்து இங்க அடுக்கிடு…” என்றான்.

“ஆரம்பிச்சுட்டியா நீ மறுபடியும் டால்லி டால்லினு?”

“ஹே… கல்யாணத்துக்கப்பறம் இத்தன நாள் நீ என்ன சொல்வியோனு பயந்துக்கிட்டுக் கூப்பிடாம இருந்தேன்… அதான் இன்னைக்குக் காரணம் சொல்லிட்டேன்ல… எனக்கு உன்ன அனஹானுக் கூப்பிடலாம் புடிக்கல டி” என்றுக் கூறி விட்டு குளியலறைக்குள் சென்றான்.

“டி சொல்லாதனு சொன்னாக் கேக்குறானா…” என்றுப் புலம்பிக் கொண்டே சென்றுத் தன் உடைமைகளை எடுத்து வந்து கப்போர்டில் அடுக்கத் துவங்கினாள் அனஹா. “எவ்வளவு நீட்டா அடுக்கி வெச்சுருக்கான். கரெக்டா எல்லா ஷெல்ப்லயும் பாதி எடம் விட்டு அடுக்கியிருக்கான்” என்று யோசித்துக் கொண்டே அடுக்கியவள் திரும்புகையில் ரோஹனை முதன் முதலில் பார்த்தபோது அவன் அணிந்திருந்த அந்த பச்சை நிற டி ஷர்ட் அவள் கண்களில் பட்டது.

அதைப் பார்த்ததும் அவள் கைத் தானாக அந்த டீ ஷர்ட்டை வருடத் துவங்கியது. சிறிது நேரம் அதை வருடியவள் கப்போர்டை மூடப் போன போது மேல் தட்டில் அவளுடைய தலையணை இருப்பதை கவனித்தாள். தன் வீட்டில் இருந்தபோது அவள் உபயோகித்த தலையணை அது. எக்கி அதைக் கையில் எடுத்தவள் அப்போது தான் அறையை முற்றிலும் கவனித்தாள்.

அவளுடைய போட்டோ 3, 2 சுவரில் மாட்டியும் ஒன்று படுக்கைக்கு அருகிலிருந்த டேபிளிலும் இருந்தன. அதன் அருகிலேயே அவள் வீட்டுப் படுக்கையறை டேபிளில் வைத்திருந்த புத்தர் சிலை இருந்தது. அவள் ஏதோ பாதி கிறுக்கி வைத்திருந்த நோட்பாட் ஒன்றும் பேனாவும் கூட இருந்தன.

இதையெல்லாம் பார்த்து ஆச்சர்யப் பட்டவள் அப்போது அறையினுள் நுழைந்த ரோஹனிடம் “இதெல்லாம் எப்போ எடுத்துட்டு வந்த?” என்றாள். அவள் விழி விரித்துக் கேட்ட விதத்தை ரசித்தவன் “உனக்கு சர்ப்ரைஸ் குடுக்க தான்… உங்க வீட்டுல உன் ரூம்ல தானத் தங்கினேன்.

உன் திங்க்ஸ் எல்லாத்தையும் நீ முதலேயே பாக் பண்ணிட்டேனு  சொன்ன. இதெல்லாம் இருந்தா உனக்கும் புது எடத்துல இருக்க ஒரு பீல் இருக்காதுல்ல… அதான்” என்று சிரிப்புடன் கூறினான் ரோஹன்.

“நமக்காக இவ்வளவு யோசிச்சுருக்கானா?” என்று நினைத்தவள் “தேங்க்ஸ்” என்றாள். “இதுவரைக்கும் எத்தன தேங்க்ஸ் சொல்லிட்ட??? பரவா இல்லை விடு… அப்பறம்ம்ம்…” என்று இழுத்தவன் அவள் அருகில் வந்து நின்று “உனக்கு அந்த டி ஷர்ட் ரொம்பப் புடிச்சுருக்கா?” என்றான் கண்களில் குறும்பு மின்ன.

அவன் கேட்ட விதத்தில் “ஐயோ பார்த்துத்தானா?” என்று நினைத்து ஒரு முறை அதைத் திரும்பிப் பார்த்த அனஹா அவசரமாக “அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்றாள். ரோஹன் சிரித்து விட்டு “சரி வா சாப்பிடலாம்” என்றுக் கூறி முன்னே நடந்தான்.

“அதுக்குள்ளயா? என்ன சாப்பிட?”

“ஈவ்னிங் ஸ்நாக்ஸ். பால் வாங்கப் போனப்ப வாங்கிட்டு வந்தேன்”

டைனிங் டேபிளில் ஏற்கனவே இரு தட்டுகளில் கொறிப்பதற்கு வாங்கி வந்ததை எடுத்து வைத்திருந்தான் ரோஹன். இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

“ப்ளம் கேக் வாங்கிருக்க வேண்டியது தான ரோஹன்? நான் ப்ளைன் கேக் அவ்வளவா சாப்பிட மாட்டேன்” என்று சாப்பிட்டுக் கொண்டேக் கூறினாள் அனஹா.

அவளைத் திரும்பிப் பார்த்த ரோஹன் “எனக்கு ப்ளம் கேக் புடிக்காது டால்லி… அடுத்த தடவைலேந்து அதையும் சேர்த்து வாங்கறேன்” என்றான்.

….

….

இவ்வாறே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் இருவரின் விருப்பு வெறுப்புகளைப் பற்றித் தெரிந்துக் கொண்டனர்.

28

“ஐயோ மணி 7 ஆச்சு… தோச மாவுத் தீந்துடுச்சு… நான் சப்பாத்திப் போடறேன்…” என்றுக் கூறி எழுந்தாள் அனஹா.

“ரெண்டு மணி நேரமாவா பேசிக்கிட்டு இருந்தோம்???” என்று ஆச்சர்யமாகக் கேட்ட ரோஹன் எழுந்து “நானும் உனக்கு கிட்சென்ல ஹெல்ப் பண்றேன் டால்லி… ஒரு டீ போடறதே எவ்வளவுக் கஷ்டமா இருக்கு…” என்றுக் கூறித் தலையை ஒரு முறைக் குலுக்கி விட்டு “அப்போ நீ சமைக்க எவ்வளவு கஷ்டப் படுவ? வா நானும் ஏதாவது செய்யறேன்” என்று அவளோடு நடந்தான்.

அனஹா அவன் கூறிய விதத்தில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு மனதிற்குள் “ஒரு டீக்கு இந்தப் பாடா?” என்று நினைத்துக் கொண்டாள். அவள் அமைதியாக கிட்செனுள் நுழையவும் அவள் பின்னோடுச் சென்றான் ரோஹன்.

ஒரு முறை என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்குத் தேவையானவற்றை எடுத்து மேடையில் அடுக்கினாள் அனஹா. காய்களை எடுப்பதற்காக டைனிங் ஹாலிற்கு அனஹா வந்த போது ரோஹனும் பின்னால் வந்தான்.

“இப்போ எதுக்கு ரோஹன் என் பின்னாடியே வர?” என்று சிரித்துக் கொண்டேக் கேட்டவள் “சரி நீ காரட் கட் பண்ணு நான்…” என்று ஆரம்பித்தாள்.

ரோஹான் அவசரமாக “எனக்கு காரட் கட் பண்ணத் தெரியாது டால்லி…” என்றுக் கூறினான். அவன் முகத்தில் தெரிந்தப் பதட்டத்தில் இருந்தே அவனுக்கு எதையுமே கட் பண்ணத் தெரியாது என்றுப் புரிந்தது அனஹாவிற்கு.

வேறு என்ன வேலை சொல்லலாம் என்று யோசித்து “அப்போ நான் இஞ்சி பூண்டு தோல் சீவித் தரேன்… மிக்சில போட்டு…” என்றுக் கூற ஆரம்பித்தாள்.

“ஐயோ எனக்கு மிக்சினா பயம்…. நீ எல்லாத்தையும் ரெடி பண்ணிக் குடு நான் சமைக்கறேன்…” என்று எப்போதும் தான் செய்யும் வேலை அதுவே என்பது போல் கூறினான் ரோஹன்.

இடுப்பில் கை வைத்த அனஹா “அதுக்கு டைம் ஆகும். அதுக்கு நான் எல்லாத்தையும் ரெடி பண்ணனும்… அது வர நீ போய் ஹால்ல உக்காரு” என்று சமையலறையின் வாசலைக் கைக் காட்டினாள்.

“அய்யய்யோ வெளிலப் போக சொல்லுறாளே…” என்று மனதிற்குள் பதறிய ரோஹன் அவசரமாக அவள் மேடை மீது எடுத்து அடுக்கியிருந்தப் பொருட்களை ஆராய்ந்து “இல்லல்ல நான் வேணுன்னா… நான் வேணுன்னா மாவுப் பெசயறேன்…” என்றுக் கூறினான்.

சரி என்றுத் தலையை ஆட்டிவிட்டு அவனிடம் ஒரு பௌலில் கோதுமை மாவும் ஜக்கில் தண்ணீரும் எடுத்துக் கொடுத்தாள் அனஹா.

குருமாவுக்கு தேவையான அனைத்தையும் தயார் செய்துவிட்டு திரும்பியபோது ரோஹன் பௌலில் விரல்களால் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஒரு நொடி ரோஹனை பார்த்த அனஹாவிற்கு மீண்டும் சிரிப்பு வந்தது. “என்ன செய்யற?” என்றாள் மெதுவாக.

“மாவு சேரவே மாட்டேங்குது டால்லி… நானும் எவ்வளவு நேரமாப் பெசயறேன்…” என்று அதையே சீரியசாக ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

“நீ சேர்த்தா தான சேரும்?” என்று நினைத்தவள் “நீ கொஞ்சம் தள்ளு…” என்றுக் கூறி அவன் கையிலிருந்து பௌலை வாங்கித் தண்ணீர் விட்டு மாவை பிசையத் துவங்கினாள்.

அவள் செய்வதைப் பார்த்தவன் “ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்… புரிஞ்சுடுச்சு… விடு விடு… நானே செய்யறேன்…” என்று அவளை வலுக்கட்டாயமாகப் பிடித்து நகர்த்தி விட்டு பிசைந்து முடித்தான் ரோஹன்.

“அடுத்து நான் வேணுன்னா சப்பாத்தித் தேய்க்கவா?” என்று கேட்டவனைப் பார்த்து “வேணாம் வேணாம்…” என்று அலறினாள் அனஹா. “இன்னும் அதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ?” என்று யோசித்தவள் “நீ வேணுன்னா குருமாப் பண்ணு” என்றாள்.

“ஏன் டால்லி… நாளைக்கு காலேஜ் போகப் போறியா? இல்ல இன்னும் ரெண்டு நாள் லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கப் போறியா?” என்றுக் கேட்டான் ரோஹன். “இல்ல ரோஹன். போய் தான் ஆகணும்” என்றுக் கூறினாள் அனஹா.

அனஹாவிடம் கேட்டுக் கேட்டு ரோஹன் குருமா செய்து முடித்த நேரம் அவள் சப்பாத்திகளைத் தயாரித்திருந்தாள். எல்லாவற்றையும் டைனிங் ஹாலில் வைத்து சாப்பிட்டு முடித்தனர்.

“எனக்குக் கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டியதிருக்கு. நீ தூங்கணும்னா தூங்கு” என்றுக் கூறினான் ரோஹன்.

“இல்ல ரோஹன்… எனக்குமே வேல இருக்கு” என்றுக் கூறி கையில் தேவையானப் புத்தகங்களுடன் அமர்ந்தாள் அனஹா.

ரோஹன் அவளைத் தொந்தரவு செய்யாமல் ஹாலில் சென்று அமர்ந்து நோட்ஸ் எடுக்க ஆரம்பித்தான். இருவருமே தேவையான நோட்ஸ் எடுத்து முடித்து உறங்கினர்.

அடுத்த நாள் காலைக் குளித்துக் கிளம்பிக் கொண்டிருந்த ரோஹன் “உன் காலேஜ் தாண்டி தான் நான் போகணும். நான் ட்ரோப் பண்ணிடறேன்” என்றுக் கூறினான். “வேணாம் ரோஹன். நான் காலேஜ் பஸ்லயே போயிடுவேன். பஸ் பீஸ் கட்டிட்டு எதுக்கு வேஸ்ட் பண்ணணும்?” என்று மறுத்து விட்டாள் அனஹா.

அதற்கு மேல் வற்புறுத்தாமல் ரோஹனும் அமைதியாக சாப்பிட்டுக் கிளம்ப்பிச் சென்றான். அனஹா அவன் சென்றப் பின் வீட்டைப் பூட்டிக் கொண்டு பஸ் ஸ்டாப் வரை நடந்துச் சென்று கல்லூரிப் பேருந்தில் ஏறிச் சென்றாள்.

திருமணம் முடிந்து இன்று தான் முதல் நாள் கல்லூரி வருகிறாள் என்பதால் உடன் பணிப் புரிபவர்கள் சிலர் அனஹாவை கேலி செய்த போது சிரித்து சமாளித்தாள்.

அன்றுக் கல்லூரியில் ஷீபாவைக் கண்ட அனஹா எப்போதும் போல் பேசினாள். அதுவே ஷீபாவிற்கு நிம்மதியாக இருந்தது. அவளும் அனஹாவின் திருமணம் குறித்து எதுவும் பேச்செடுக்கவில்லை. எங்கே அதைப் பற்றிப் பேசினால் கோபம் கொள்வாளோ என்று பயந்தாள்.

மாலை அவர்கள் கல்லூரிப் பேருந்து ஒரு சிக்னலில் நின்ற போதுப் பின்னாலிருந்த இரு மாணவிகள் பேசுவதுக் கேட்டது அனஹாவிற்கு.

“ஹே அங்க பாருடி… ஆளு சூப்பரா இல்ல…”

“யாரடி சொல்ற?”

“சைட்ல பாரு… அந்த பைக்ல உக்காந்துருக்கவன்…”

“ஆமா டி… ஸ்மார்டா இருக்கான்…”

“பேசாம எறங்கி அவன் கிட்ட லிப்ட் கேட்டுப் போயிடலாமானு யோசிக்கறேன்…” என்று அந்தப் பெண் கூறும்போதே சிக்னல் விழுந்து பேருந்து நகரத் துவங்கியது.

“ஐயோ போறானே போறானே…”

“சும்மா இருடி… கத்தாத…” என்று அவளை அடக்கினாள் மற்றொரு பெண்.

பேருந்தை விட்டு இறங்கிய அனஹா வேக நடையுடன் தங்கள் அபார்ட்மெண்ட்ஸ் நோக்கி நடந்தாள். தன்னிடம் இருந்த சாவிக் கொண்டு வீட்டைத் திற்றந்தபோது ரோஹன் ஹாலில் அமர்ந்து ஷூ கழட்டுவதைக் கண்டாள்.

“நாளைலேந்து நீயே என்ன ட்ரோப் பண்ணிடு” என்று அவனிடம் கூறிவிட்டு “கொஞ்சமாவது அறிவு இருக்கணும்… இப்படியா யாருன்னேத் தெரியாதவங்கக் கூட பைக்ல போவேன்னுப் பேசுவா?? அவ மட்டும் என்கிட்ட மாட்டட்டும்…” என்றுத் தன் போக்கில் கூறிக் கொண்டே அறையினுள் சென்றாள் அனஹா.

அவளை விநோதமாகப் பார்த்த ரோஹன் ஷூவை எடுத்து ராக்கில் வைத்துவிட்டு அறையினுள் நுழைந்தான். கட்டிலில் அனஹாவின் அருகில் அமர்ந்து “என்னாச்சு? எதுக்கு இவ்வளவுக் கோவம்?” என்றான் தன்மையாக.

“இன்னைக்கு உன்னப் பார்த்தேன். நீ சிக்னலுக்காக நிக்கறப்போ ஹெல்மெட் கழட்டி முகம் தொடச்சுட்டு இருந்த… உன்னப் பார்த்துட்டு என் பின்னாடி உக்காந்துருந்த ரெண்டுப் பொண்ணுங்க என்னமா ஜொள்ளு விடறாளுங்க? ஒருத்தி என்னடான்னா எறங்கி உன்கூடவே பைக்லப் போகணும் போல இருக்குனு சொல்றா…” என்றுப் பொரிந்தாள் அனஹா.

அமைதியாக சிறிது நேரம் அவளைப் பார்த்த ரோஹன் “காலைல நான் கூப்பிட்டப்ப வராம இப்போ எவளோ என் கூட பைக்லப் போகணும்னு சொன்னதுக்காக என் கூட வரேன்னு சொல்ற?” என்றுக் கேட்டான்.

“காலைல நீ கூப்பிட்டப்போ எதுக்குத் தேவ இல்லாம காசு வேஸ்ட் பண்ணணும்னுத் தோனுச்சு… அதான் பஸ்ல போறேன்னு சொன்னேன். அதுக்காக உன்ன யாருக்காகவும் விட்டுக் குடுக்க முடியாது ரோஹன்” என்றுத் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டுக் கூறினாள் அனஹா.

லேசானக் குறும்புப் புன்னகையுடன் அவளைப் பார்த்த ரோஹன் அவள் தலையைப் பிடித்து ஆட்டி “கூட்டிட்டுப் போறேன்… அதுக்கு எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற? ரெப்ரெஷ் பண்ணிட்டு எனக்கு ஒரு டீ போட்டுக் குடு டால்லி… தல வலிக்குது…” என்றுக் கூறிக் குளிக்கச் சென்றான்.

29

சமைத்தவற்றை எடுத்து டைனிங் டேபிளில் அடுக்கினாள் அனஹா. அமைதியாகவே சாப்பிட்டு எழுந்தான் ரோஹன். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு சமையலறை விட்டு வெளியே வந்த அனஹாவிடம் “வா வெளிலப் போகலாம்…” என்றான் ரோஹன்.

“இந்த நேரத்துலயா? எங்க ரோஹன்? டிரஸ் மாத்தணுமா??? டயர்டா இருக்கு…” என்றாள் அனஹா. இப்போது தான் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வந்த களைப்பு அவளுக்கு. நாளை கல்லூரி செல்ல வேண்டும் என்பதால் சீக்கிரம் உறங்க வேண்டும் என்று எண்ணி இருந்தாள்.

ரோஹன் வெளியே செல்ல வேண்டும் என்றதும் உடை மாற்றித் தயாராகி… இப்போது சென்றால் எப்போதுத் திரும்பி வருவோம் என்றும் தெரியாதே என்று யோசித்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.

அனஹாவின் எதிரில் நின்று அவளிடம் பேசிக் கொண்டிருந்த ரோஹன் அவள் கேட்டதும் அவளை விட்டு ஓரடித் தள்ளி நின்று அவளை மேலிருந்துக் கீழ் வரை ஒரு முறைப் பார்வையால் அளந்தான் ரோஹன்.

“இந்த ஸ்கர்ட் டாப் நல்லா தான் இருக்கு…” என்றுக் கூறி அவள் பதிலை எதிர்ப் பாராமல் முன்னே நடந்தான். அப்போது தான் அனஹா கவனித்தாள்… அவனுமே வீட்டில் அணியும் ட்ராக் பாண்டும் டி ஷர்டும் தான் அணிந்திருந்தான்.

10 மணிக்கு எங்கே அழைத்து செல்கிறான் என்று யோசனையோடே அவனைத் தொடர்ந்தாள் அனஹா. பிளாட்டைப் பூட்டி விட்டு லிப்டில் கீழே வந்ததும் அவள் கையை பிடித்து நடந்தான் ரோஹன்.

“உக்காரு”

“நெஜமாவா?”

“உக்காரு டி”

சிறுப் பிள்ளை போல் ஊஞ்சல் ஆடும் மனைவியைப் பார்த்துக் கொண்டே பக்கத்தில் இருந்த மற்றொரு ஊஞ்சலில் அமர்ந்தான் ரோஹன். அனஹா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறாள் என்பது அவள் முகத்தில் இருந்தேத் தெரிந்தது.

அவள் பக்கம் தலையை மட்டும் திருப்பி “நீ அடிக்கடி மாடி பால்கனில நின்னு இந்த பார்க்கையும் ஊஞ்சலையும் வேடிக்கப் பார்க்கறதப் பார்த்தேன்… அதான்… ஹாப்பி?” என்று சிரிப்போடுக் கேட்டான் ரோஹன்.

ரோஹன் சொன்னதைக் கேட்ட அனஹா முதலில் விழி விரித்துப் பார்த்தாள். “என்னை இவ்வளவு கவனிச்சுருக்கானா?” என்று ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

பின் வேகமாக ஊஞ்சலை விட்டு எழுந்து வந்து அவன் முகம் பற்றி நெற்றியில் இதழ் பதித்தாள். தான் செய்தது அப்போது தான் உரைத்தது. திரும்பி வந்த வேகத்தில் சென்று ஊஞ்சலில் அமர்ந்து ஆடத் துவங்கினாள்.

“எனக்… எனக்காக யோசிச்சு ஒவ்வொரு விஷயமும் செய்யறதுக்கு தேங்க்ஸ்… ரோ… ரோஹன்” என்றாள் தலைக் குனிந்தபடி.

அவள் எழுந்ததும் புரியாமல் பார்த்தான் ரோஹன். அவள் எதிரில் வந்து நின்று தன் முகம் பற்றிய போது ஏதோ ஒரு வித நிம்மதி மனதில் பரவுவதாகத் தோன்றியது அவனுக்கு.

அவளுடைய அந்தத் திடீர் முத்தத்தில் கண்களை மூடி அவளின் ஸ்பரிசத்தை அனுபவித்தான். மீண்டும் அவள் பேச ஆரம்பித்ததும் தான் கண்களைத் திறந்தான். ஊஞ்சலின் சங்கிலியை இறுகப் பற்றி அவள் பேசத் தடுமாறுவது அவனுக்குப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.

பேசி முடித்ததும் கூட அவள் சங்கிலியை இறுகப் பற்றியே அமர்ந்திருந்தாள். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. மேலும் சில நிமிடங்கள் அவளைக் கண்டு ரசித்தான் ரோஹன்.

பின் அவளை சகஜமாக்க எண்ணி “கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு எவ்வளவுக் கொழப்பம் இருந்துது… ஷீபா சொன்னாங்களே?? அப்பறம் எப்படி அன்னைக்கு நான் உன்கிட்ட பேச வந்தப்போ ‘எனக்கெல்லாம் எந்தக் கொழப்பமும் இல்லை’ங்கற ரேஞ்சுலப் பேசுன?” என்றுக் கேட்டான்.

விளையாட்டாகக் கேட்பது போல் கேட்டான் ரோஹன். ஆனால் எவ்வளவு யோசித்தும் அவனுக்குப் புரியாத விஷயம் இது. அவன் எதிர்ப் பார்த்தது போலவே அவனுடைய இந்தக் கேள்வியில் அனஹா திரும்பி அவனைப் பார்த்தாள். பின் தலைக் குனிந்துப் பேசத் துவங்கினாள்.

“அக்காவோட லைப் அப்படி ஆனத நெனச்சு வீட்டுல எல்லோரும் வருத்தப் பட்டதப் பார்த்தப்போ மாமியார்னா கொடுமக்காறங்கனு நெனச்சேன். இதுக்கு பேசாம யாரையாவது லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாம்… அட்லீஸ்ட் நம்மளப் புரிஞ்ச ஒருத்தர் கூட வாழறப்போ அவங்க சப்போர்ட் நமக்குக் கெடைக்கும்னுத் தோனும்.

ஆனா துளசி கதையக் கேட்டப்பறம் என்ன தான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணாலும் நம்மளப் புரிஞ்சு நடந்துக்க மாட்டாங்களோனு பயம் வந்துச்சு…

நம்மள சுத்தி நடக்கறது நமக்கும் நடந்துடுமோங்கற பயம்… கல்யாணத்துக்கு முன்னாடியே முதல் தடவ அத்தை கிட்ட பேசறப்போவே அவங்க என்னை எவ்வளவுப் பாசமாப் பார்த்துக்குவாங்கன்னுத் தெரிஞ்சுடுச்சு.

புடவை எடுக்கப் போறப்போ எனக்காக என் அம்மாக்கிட்டயும் அத்தைக்கிட்டையும் பேசி சீக்கரமா புடவை எடுத்தது… நகை எடுக்க நான் தேவ இல்லன்னு சொல்லித் திரும்ப என்ன அலையை விடாமப் பண்ணது… இதுலேந்தே நீ எனக்காக எந்த சிட்டுவேஷன்லையும் சப்போர்ட் பண்ணுவனு தைரியம் வந்துச்சு.

அத விட அன்னைக்கு பீச்ல என் மேல நீ காட்டுன அக்கறைப் புடிச்சுது. கல்யாணத்தன்னைக்கு எல்லாப் பொண்ணுங்களுக்கும் வர ஒரு டென்ஷன் தான் எனக்கும். அந்தப் பதட்டத்துல தான் ஷீபாக்கிட்ட ஏதோ ஒளறுனேன்…

ஆனா அதுகூட தாலிக் கட்டறப்போ நான் இருக்கேன்னு நீ சொன்னதுக்கப்பறம் போய்டுச்சு…” என்று நீளமாகப் பேசி முடித்து ரோஹனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

ரோஹன் ஆடுவதை நிறுத்தியிருந்தான். அவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தவன் அங்கே வந்த செக்யுரிடியின் குரலில் திரும்பிப் பார்த்தான். “சார் நீங்களா? நான் கூட வேற யாரோன்னு நெனச்சேன்… ரௌண்ட்ஸ் வந்தேன் சார்… மணி 11.30  ஆகுது… இந்த நேரத்துக்கு மேல இங்க…”

“கெளம்பிட்டோம்…” என்றுக் கூறி எழுந்து நின்று அனஹாவைப் பார்த்தான் ரோஹன். அனஹாவும் ஊஞ்சலை விட்டு எழுந்தாள். அமைதியாகவே நெற்றியை தடவிக்கொண்டு அவர்களது பிளாட் வரை வந்தான் ரோஹன்.

ப்ளாட்டைத் திறந்து உள்ளே நுழைந்ததும் அறைக்குச் செல்ல எத்தனித்த அனஹாவின் கையைப் பிடித்து நிறுத்தினான் ரோஹன். அவள் திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

அவள் கையை இறுக்கமாகப் பற்றி அவளை மெல்ல அருகில் இழுத்தான் ரோஹன். அனஹாவிற்கு ஒன்றும் புரியாவிடினும் அவன் அருகில் சென்றாள். ஒரு நொடி அவளை ஆழமாகப் பார்த்த ரோஹன் குனிந்து அவள் இதழில் முத்தமிட்டான்.

முதலில் மென்மையாக இதழொற்றியவன் பின் அவள் தலைக்குப் பின் கைக் கொடுத்து அவள் முகத்தை இன்னும் அருகில் இழுத்து அழுத்தமாக அவன் இதழைப் பதித்தான்.

அனஹா முதலில் திகைத்து, பின் அந்த முத்தத்தில் கரைந்தாள். இறுதியில் ஏதோ ஒருப் பதட்டம் அவளைத் தொற்றிக் கொண்டது.

அவளை விடுவித்த ரோஹன் அவள் காதோர முடியை ஒதுக்கி விட்டு “போய் படு… டைம் ஆச்சு. குட் நைட்” என்றுக் கூறி ஹாலில் டீ வீ யைப் போட்டு அமர்ந்தான்.

ஒரு நொடியும் தாமதிக்காமல் விட்டால் போதும் என்று வேகமாக அறைக்குள் ஓடுபவளை ஓரக் கண்ணால் பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டான் ரோஹன்.

அறைக்குள் வந்த அனஹாவிற்குப் படப்படப்பு அடங்குவதாய் இல்லை. ஒரு முறை உதட்டை தடவிப் பார்த்து வெட்கப் புன்னகை சிந்தினாள். பின் போர்வையை இழுத்துத் தலை வரை மூடிப் படுத்தாள். சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட்டாள்.

சிறிது நேரம் டீ வீ பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன். கண்கள் என்னவோ அதை வெறித்துக் கொண்டிருந்ததேத் தவிர அவன் மனதில் அவன் கண்டக் காட்சிகள் எதுவும் பதியவில்லை.

ஒரு முறை அனஹா இன்றுப் பேசியதை எண்ணிப் பார்த்தான். “அவ சொன்னது எல்லாமே உண்மை தானே… எவ்வளவுத் தெளிவா யோசிச்சுருக்கா…” என்று மனதிற்குள் அவளைப் பாராட்டிக் கொண்டான்.

அனஹா பேசியதை யோசித்த ரோஹனிற்குக் கூடவே அவள் உதட்டின் மென்மையும் ஞாபகம் வந்தது. சிரித்துக் கொண்டே டீ வீயை அணைத்து விட்டு சென்றுப் படுத்தான். அருகில் உறங்கும் அனஹாவையேப் பார்த்துக் கொண்டு உறங்கினான்.

30

ரோஹனுடன் பைக்கில் செல்வது உற்சாகமாக இருந்தது அனஹாவிற்கு. காலை எழுந்தது முதல் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கப்போர்டின் முன் யோசனையாக நிற்பவளைப் புரியாமல் பார்த்தான் ரோஹன்.

கிட்செனுள் சென்று சமையலை கவனிப்பதும், பின் அவசரமாக வந்து புடவைகளை ஆராய்வதுமாக இருந்தாள் அனஹா. ரோஹான் குளித்து முடித்து வந்து கால் மணி நேரம் ஆன போதும் அனஹா இன்னும் குளிக்கச் செல்லாததைக் கண்டு “மணி என்னத் தெரியுமா? குளிக்கப் போ டால்லி…” என்று அதட்டினான்.

“எந்த புடவைக் கட்டுறதுனு ஒரே கண்ப்யூஷனா இருக்கு ரோஹன்… அப்பாக் கூடப் போறப்போ சுடிதார் போட்டு தான் போயிருக்கேன்… ரெண்டு சைடும் காலப் போட்டு உக்காந்துடுவேன்…

இப்போ புடவைக் கட்டி உன் பின்னாடி உக்காரணும்… வழுக்காத மாதிரி ஏதாவது…” என்றுத் தன் போக்கில் யோசித்துக் கொண்டேப் பேசினாள் அனஹா. “இது வேறயா? எனக்கு என்னத் தெரியும் புடவைப் பத்தி எல்லாம்…” என்று யோசித்த ரோஹன் அனஹாவின் அருகில் வந்து நின்றான்.

ஒரு முறை அனஹாவின் புடவைகள் அனைத்தையும் ஆராய்ந்தவன் அவனுக்குப் பிடித்த வண்ணப் புடவையைக் கைக் காட்டி “இது?” என்றான். “இதுவா….” என்று யோசனையாகக் கூறினாள் அனஹா.

வேறொருப் புடவையைக் காண்பித்து “அப்போ இது?” என்றான் ரோஹன். அனஹா அந்தப் புடவைக்கும் அதேப் போல் ராகம் பாடினாள். “ஏ போடி… எதைக் காட்டுனாலும் இதுவா இதுவா னா… உனக்கு இன்னும் பத்து நிமிஷம் டைம்… மரியாதையாக் குளிச்சுட்டுக் கிளம்பு…” என்றுக் கூறித் தலை சீவச் சென்றுக் கண்ணாடி முன்னால் நின்றுக் கொண்டான்.

அவனை ஒரு முறைத் திரும்பிப் பார்த்து முறைத்த அனஹா வேகமாக ஒருப் புடவையை எடுத்துக் கொண்டுக் குளிக்கச் சென்றாள். அனஹா குளித்து முடித்துத் தயாராகி வந்தபோது ரோஹன் டைனிங் டேபிளில் அனைத்தையும் எடுத்து வைத்து அவளுக்காகக் காத்திருந்தான்.

அனஹா அமைதியாகவே சாப்பிட்டு எழுந்தாள். பைக்கில் அமர்ந்து செல்லும்போது ஏதோ ஒரு வித உற்சாகம் தொற்றிக் கொண்டது அவளை. கல்லூரியில் அவள் இறங்கிய சமயம் அங்கே அவளுடன் பணி புரியும் பேராசிரியர்கள் சிலர் வரவும் ரோஹனை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

“ரோஹன்… என்னோட ஹஸ்பன்ட்…” என்றுக் கூறியவள் “ஹஸ்பன்ட்” என்று மனதிற்குள் இன்னும் ஒரு முறைக் கூறிப் பார்த்தாள். இது வரை யாரிடமும் இப்படிக் கூற சந்தர்ப்பம் அமையாததால் இப்போது அதுப் புதிதாகத் தோன்றியது அவளுக்கு.

எல்லோருடனும் அவர்கள் கேட்டக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிப் பேசிக் கொண்டிருந்த ரோஹனைக் கண்டாள். “இவன் என்னுடையவன்” என்ற கர்வம் தோன்றியது அவளுக்கு. புன் சிரிப்புடன் அவனிடம் விடைப் பெற்றுக் கல்லூரிக்குள் சென்றாள் அனஹா.

மாலை லாப் முடித்து வர சிறிதுத் தாமதம் ஆகும் என்பதால் அதை ரோஹனிடம் தெரிவிக்க கைப் பேசியை எடுத்தாள். அவன் எண்ணைத் தேடி எடுத்தபோது அவன் பெயரை “Rohan_Dolly” என்று சேவ் செய்து வைத்திருப்பது நினைவு வந்தது.

அந்தப் பெயரை ஒரு முறை வருடி விட்டு அதை மாற்றி “Hubby” என்று சேவ் செய்துக் கொண்டாள். பின் ரோஹனை அழைத்து “ரோஹன் நீ காலேஜ் வந்துட்டனா ஒரு 5 மினிட்ஸ் மட்டும் வெயிட் பண்ணு… லேப் இப்போ தான் முடிஞ்சுது… பேக் எடுத்துட்டு வந்துடறேன்…” என்றாள்.

“சரி… அவசரமில்ல… பொறுமையா வா” என்றுக் கூறி வைத்தான் ரோஹன். வெளியேக் காத்திருந்து அனஹாவை அழைத்து வந்தான். மழைப் பெய்யும் போல் இருந்தது. அனஹா அந்த குளிர்ந்தக் காற்றை ரசித்து அனுபவித்துக் கொண்டு ரோஹனின் பின்னால் அமர்ந்திருந்தாள்.

வழியில் தென்பட்ட ஒரு பஜ்ஜிக் கடையைப் பார்த்ததும் அவளுக்கும் சூடாக பஜ்ஜி சாப்பிட வேண்டும் போல் இருந்தது. “ரோஹன்” என்றழைத்தாள். வாகன நெருசலில் கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ரோஹனின் காதில் அனஹாவின் அழைப்பு விழவில்லை. இதில் ஹெல்மெட் வேறு அணிந்திருந்தான்.

ரோஹனின் பின்னால் அமர்ந்திருந்த போதும் சற்றுத் தள்ளியே அமர்ந்திருந்தாள் அனஹா. தான் அழைத்தது அவன் காதில் விழவில்லை என்றதும் மெதுவாக அவனை நெருங்கி அமர்ந்து அவன் தோள் தொட்டு “ரோஹான்” என்றழைத்தாள்.

ரோஹன் “சொல்லு” என்றுக் கூறி லேசாக ஒரு முறைத் திரும்பிப் பார்த்தான். அனஹா அவனை நெருங்கி அமர்ந்தபோதே அவனின் முழு கவனமும் சாலயிலிருந்துத் திரும்பி அவளின் புறம் சென்று விட்டது. அவன் தோள் பற்றி அவள் அவனின் பெயரை சொன்னபோது ஏதோ வானில் பறப்பதாக உணர்ந்தான்.

“ஏதாவது ஒரு கடைல நிறுத்து… பஜ்ஜிப் போடறதுக்கு மிளகாய் வாங்கிக்குறேன்… சாப்பிடணும்னு ஆசையா இருக்கு” என்றுக் கூறினாள் அனஹா. ரோஹான் தலையை மட்டும் ஆட்டினான்.

சொன்னதுப் போலவே ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தி பைக்கிலேயே அமர்ந்திருந்தான் ரோஹன். அவன் காத்திருக்கிறான் என்பதற்காகவே வேகமாகத் தேவையானவற்றை வாங்கி வந்தாள் அனஹா.

மீண்டும் பைக்கில் அமர்ந்தபோது ரோஹனை நெருங்கி அமராவிட்டாலும் விலகியும் அமரவில்லை அனஹா. “காலைல பின்னாடி உக்காரவே யோசிச்சா… இப்போப் பழகிடுச்ச்கிப் போல…” என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டான் ரோஹன்.

வீட்டின் உள்ளே நுழைந்த ரோஹன் குளிக்கச் செல்ல அனஹா நேராகக் கிட்செனுள் சென்றாள். வாங்கி வந்தப் பொருட்களை மேடை மீது வைத்து விட்டு முகம் மட்டும் கழுவி வந்து பஜ்ஜிக்குத் தேவையானவற்றைத் தயார் செய்தாள்.

அடுப்பில் எண்ணெய்யைக் காய வைத்துக் காத்திருந்த போது ஏனோ முந்தைய தினம் ரோஹன் கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது அனஹாவிற்கு. அதை யோசித்துக் கொண்டே நின்றவள் எண்ணெய் காய்ந்ததை கவனிக்கவில்லை.

குளித்து முடித்து வந்த ரோஹன் எண்ணெய் சட்டியில் லேசாக புகை வருவதைக் கண்டான். புன்னகையுடன் அதன் முன் நின்றிருந்த அனஹாவைப் பார்த்ததும் அவளிடம் சொல்வதற்காக திரும்பினான்.

அனஹா கல்லூரியில் இருந்து வந்து உடை மாற்றாததால் புடவையில் இருந்தாள். முந்தியை எடுத்து சொருகியதால் தெரிந்த அவள் இடையைக் கண்ட ரோஹன் கண்களில் குறும்பு மின்ன அவள் பின் சென்று நின்றான்.

ஒருக் கையால் அவள் இடையை இறுக்கமாகப் பிடித்தவன் அவள் கத்துவாள் என்றுத் தெரிந்து மறு கையால் அவள் வாயை மூடினான். அருகில் சூடான எண்ணெய் இருப்பதால் அவளை சிறிதுப் பின்னால் இழுத்து அவள் காதருகேக் குனிந்து “அடுப்புக் கிட்ட நின்னு கனவுக் காணாத டால்லி…” என்றுக் கூறி அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து அவளை விடுவித்துச் சென்றான்.

சில நொடிகள் கழித்து சுய உணர்வுப் பெற்ற அனஹா டைனிங் ஹாலில் நின்றுத் தண்ணீர்க் குடித்துக் கொண்டிருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள். அதன் பின் தான் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டாள் அனஹா. பர பரவென்று இடுப்பைத் தேய்த்து விட்டவளுக்கு இடுப்பில் அவன் தீண்டியதால் ஏற்பட்டக் குருக்குருப்பு அடங்குவதாய் இல்லை.

அடுப்பை அணைத்து விட்டுச் சென்றிருந்தான் ரோஹன். மீண்டும் அதைப் பற்ற வைத்து பஜ்ஜிகளைப் பொரித்தெடுத்தாள். ஒரு தட்டில் அவனுக்காக சிலவற்றை எடுத்து வைத்தவள் ஹாலில் அமர்ந்திருந்த ரோஹனின் முன் வந்து நின்றாள்.

“சாப்பிடு” என்றுக் கூறித்  தட்டை அவனிடம் நீட்டினாள். அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டேத் தட்டைக் கையில் வாங்கினான் ரோஹன். “இவன் சிரிக்குறதே சரி இல்லையே…” என்று யோசித்த அனஹா வேகமாகத் திரும்பி சமையலறை நோக்கி நடந்தாள்.

“இவப் பேசாம நின்னிருந்தாலாவது விட்டுருக்கலாம்… இப்படி பயந்து ஓடி இன்னும் சும்மா இருந்த நமக்கு ஐடியா குடுக்குறாளே…” என்று மனதிற்குள் நினைத்த ரோஹான் தட்டைக் கீழே வைத்து விட்டு எழுந்து அனஹாவின் பின்னால் சென்றான்.

சத்தமில்லாமல் அவள் இடுப்பில் கில்லி விட்டு அனஹா அலறுவதைப் பொருட்படுத்தாமல் “நீ சாப்பிடலையா டால்லி?” என்றுக் கேட்டுக் கொண்டேச் சென்றுக் கைக் கழுவினான். இடுப்பைத் தேய்த்துக் கொண்டே நெளிபவளைப் பார்க்க சிரிப்பாக இருந்தது அவனுக்கு.

அவனை முறைத்த அனஹா “எல்லாம் இந்த ஷீபாவால வந்தது… இப்படியா இவன்கிட்ட இதெல்லாம் சொல்லுவா? முதல்ல இந்தப் புடவைய மாத்தணும்…” என்று மனதிற்குள் புலம்பியவாறேச் சென்று உடை மாற்றினாள்.

அறையை விட்டு வெளியே வந்த அனஹாவைக் கடந்து செல்லும்போது “டிரஸ் மாத்திட்டப் போல?” என்றுக் கேட்டு அவள் இடுப்பின் அருகில் கையைக் கொண்டு வந்தான் ரோஹன். “ஐயோ விடு…” என்றுக் கத்திக் கொண்டே ஓடினாள் அனஹா.

அவள் சத்தமாகவேக் கத்தினாள். அதைக் கேட்ட ரோஹன் “ஏய் ஏன்டி இந்தக் கத்துக் கத்துற? வெளிலக் கேக்கும்… என்ன நெனைப்பாங்க… இனிமே கிள்ளல மா… போ… போய் சாப்பிடு…” என்றுக் கூறி அறையினுள் சென்றான்.

“யப்பா… இனி இவக்கிட்ட இப்படி விளையாடக் கூடாது… வெளில யாராவதுக் கேட்டா என்னை தான் தப்பா நெனைப்பாங்க…” என்று தீர்மானித்தான் ரோஹன். அவன் மீண்டும் வருகிறானா என்று அரை வாசலைப் பார்த்துக் கொண்டே பஜ்ஜிகளை உள்ளேத் தள்ளிக் கொண்டிருந்தாள் அனஹா.

அன்றும் கீழே அழைத்துச் சென்றான் ரோஹன். ஊஞ்சலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது மனம் லேசாவதாக உணர்ந்தாள் அனஹா. ரோஹன் ஏதேதோப் பேசினான்… ஏதேதோ கேட்டான்… அனஹாவால் இன்று அவன் அளவிற்கு இயல்பாக இருக்க முடியவில்லை.

அவன் ஏதாவதுக் கேட்டாள் அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்ப்பதும் பின் தலைக் குனிந்துக் கொண்டே பதில் சொல்வதுமாக இருந்தாள். நேற்று போல் செக்யுரிட்டி வந்துக் கூறும் வரை அங்கே அமர வேண்டாம் என்று 10.30 மணிக்கு எழுந்து மேலே வந்தனர்.

“நம்ம இவ்வளவுப் பேசுவோமா? இவக்கிட்ட மட்டும் மணிக்கணக்கா எப்படிப் பேச முடியுது? பிரண்ட்ஸ் கூட இருக்கறப்போக் கூட அமைதியாக் கேட்டுட்டு தான இருப்போம்?” என்று யோசித்த ரோஹனிற்கு ஏனோ அந்த நினைப்பே இனித்தது.

31

அடுத்த நாள் மாலை வீட்டிற்கு வந்த அனஹா மிகவும் சோர்ந்துக் காணப்பட்டாள். “ஏன் டால்லி டல்லா இருக்க?” என்று அவளைக் கல்லூரியின் வெளியேப் பார்த்தபோதே ரோஹன் கேட்டான். “ஒன்னும் இல்ல… போலாம்…” என்றுக் கூறி பைக்கில் அமர்ந்துக் கொண்டாள் அனஹா.

வீட்டிற்குள் வந்ததிலிருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்தான் ரோஹன். இரவு உணவிற்குத் தயார் செய்தவள் சரியாக சாப்பிடவும் இல்லை. “பசிக்கல ரோஹன். போதும்” என்றுக் கூறி எழுந்து விட்டாள். ரோஹனால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை.

இரவு சீக்கிரமே சென்றுப் படுத்தவள் ரோஹன் அறைக்குள் வந்தபோது மெலிதாக முனகிக் கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு கையிலிருந்தப் புத்தகத்தை டேபிளில் வைத்து விட்டு அவள் அருகில் சென்றுப் பார்த்தான் ரோஹன்.  அனஹா நல்ல உறக்கத்தில் இருப்பது போல் இருந்தது. ஆனால் முனகுவதை நிறுத்தவில்லை.

அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். அவள் உடல் அனலெனக் கொதித்துக் கொண்டிருந்தது. பதறிய ரோஹன் அவளை எழுப்ப முயன்றான். இரு முறை அழைத்தும் லேசாக அவள் கன்னத்தைத் தட்டியும் எந்தப் பயனும் இல்லை.

அவள் சாப்பிட வேறு இல்லை என்பது நினைவிற்கு வந்தது. வேகமாக பர்சை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு அருகில் இருந்த கடைக்குச் சென்று ப்ரெட் வாங்கி வந்தான் ரோஹன்.

அனஹாவை லேசாக உலுக்கி எழுப்பினான். அவள் கண் விழித்ததும் மெதுவாக அவளைத் தூக்கி அமர வைத்து “டாக்டர்ட போலாமா டால்லி?” என்றுக் கேட்டான். அனஹா தலையசைத்து மறுத்தாள்.

“ரெண்டு நாள் கீழ பனில உக்கர்ந்தது தான். சரியாப் போய்டும்” என்று கூறியவள் ரோஹன் தான் ஊட்டி விடுவதாக எவ்வளவுக் கூறியும் மறுத்து விட்டாள். “அதெல்லாம் வேண்டாம் ரோஹன். நான் சாப்பிட்டுக்கறேன்” என்றுக் கூறி அவன் கையிலிருந்து ப்ரெட்டை வாங்கிக் கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டாள்.

அவளுக்கு மாத்திரைக் கொடுத்து, இரவு வெகு நேரம் விழித்திருந்து, அவளுக்கு நெற்றியில் பத்து போட்டு, அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான் ரோஹன். கண் விழிக்கும்போதெல்லாம் ரோஹன் அருகில் அமர்ந்திருப்பதைக் கண்ட அனஹா “எனக்கு ஒன்னும் இல்ல… நீ தூங்கு… எனக்காக கஷ்டப் படாத” என்று கூறிக் கொண்டே இருந்தாள்.

இரவு வெகு நேரம் கழித்தே உறங்கினான் ரோஹன். காலையில் விழித்தபோது அனஹா எழுந்து அமர்வதைக் கண்டான். வேகமாக எழுந்து அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான். ஜுரம் குறைந்திருந்தது.

“காலேஜ் போக வேண்டாம். லீவ் போட்டுடு. ரெஸ்ட் எடு” என்றுக் கூறி கட்டிலை விட்டு இறங்கினான் ரோஹன். “ம்ம்” என்று மட்டும் கூறினாள் அனஹா. அவளுக்கும் இன்றுக் கல்லூரிக்குச் செல்ல முடியும் என்றுத் தோன்றவில்லை.

“நானும் போகல…” என்றுக் கூறிக் குளியலறைக்குள் செல்லப் போனவனை “இல்ல ரோஹன். நீ போ. நான் பார்த்துக்குவேன்” என்று அவசரமாகக் கூறித் தடுத்தாள் அனஹா. அவள் முகம் சிறிது தெளிந்திருப்பதைப் பார்த்ததால் சரி என்றுக் கூறி விட்டுக் குளிக்கச் சென்றான் ரோஹன்.

அவளுக்கு தேவையான உணவை வாங்கி வைத்துவிட்டேக் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றான். வேலா வேலைக்கு போன் செய்து அவள் சாப்பிட்டு விட்டாளா என்றுக் கேட்டுக் கொண்டான். மாலை அவன் வரும்போது அனஹா முற்றிலுமாகத் தேறி இருந்தாள். அதைப் பார்த்த பின்பே ரோஹனிற்கு நிம்மதி ஆனது.

இரவு சமையலறையுள் நுழைந்தவளைக் கண்ட ரோஹன் “நான் வெளில வாங்கிட்டு வந்துடறேன் டால்லி… இப்போ எதுக்கு நீ சமைக்கப் போற?” என்றுக் கேட்டான். “எனக்கு இடியாப்பம் சாப்பிடனும் போல இருக்கு டா… ப்ளீஸ்… நானே செய்யறேன்… காலையிலேந்து சும்மா உக்காந்து போர் அடிக்குது… ப்ளீஸ் டா” என்றுக் கெஞ்சினாள் அனஹா  .

அவள் ‘டா’ என்றதும் ஆச்சர்யப் பட்ட ரோஹன், அவள் அதை உணர்ந்து சொல்லவில்லை என்பதைக் கண்டுக் கொண்டான். அவள் கெஞ்சியதும் மறுக்க முடியாமல் “சரி… அப்போ நான் ஹெல்ப் பண்ணறேன்” என்றுக் கூறி அனஹாவைத் தாண்டி சமையலறையுள் நுழைய முற்பட்டான் ரோஹன்.

“அய்யயோ  வேண்டாம்” என்று அலறி அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள் அனஹா.

திரும்பி அவளை முறைத்த ரோஹான் “ஆரம்பத்துலேருந்து நான் எப்போ ஹெல்ப் பண்ணறேன்னு சொன்னாலும் ஏன் இப்படி அலறுற?” என்று சிறிதுக் கோபமாகவேக் கேட்டான்.

“பின்ன???? அன்னைக்கு நீ மாவுப் பெசயவே அர மணி நேரம் ஆச்சு. இன்னொரு நாள் டீ ல சக்கரைக்கு பதிலா அஜின மோட்டோ கலந்த… வுவ்வ எப்படி உப்பு கரிச்சுது தெரியுமா??

கூட்டுக்குக் கொதிக்க வெச்ச பருப்புல பீன்ஸ் போட சொன்னா பக்கத்துல இருந்த சாம்பார்லக் கொட்டுன… அத பீன்ஸ் சாம்பாரா மாத்தி அந்த பருப்ப என்னப் பண்ணறதுனுத் தெரியாம சாம்பார்க்கு வெச்சுருந்த முள்ளங்கிய அதுல போட்டு… ச்சை காம்பினேஷனா அது???

கரம் மசாலாக்கும் ரசப் பொடிக்கும் வித்யாசம் தெரியாம அன்னைக்கு சிக்கன் கர்ரிப் போச்சு… இதுல ‘சிக்கன்ல காரம் பத்தல… வேற ஏதோ கூடுதலா இருக்கு’னு கமெண்ட் வேற… ஷ்ஷ்ஷ்ஷ்…”

இது அனைத்தையும் தலையைக் குனிந்து டைனிங் டேபிளில் சிந்தியிருந்தத் தண்ணீரில் கோலம் போட்டுக் கொண்டே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் ரோஹன்.

அவள் கொஞ்சம் இடைவெளி விட்டதும் “வீட்டுல இருக்கறது ரெண்டு பேரு…. இதுல நீ எப்போப் பாரு கிட்சென்ல நிப்ப… நான் மட்டும் தனியா ஹால்ல டீ வீ பாக்கணும்னா போர் அடிக்குது போடி…” என்று சிறு பிள்ளைப் போலக் கூறினான்.

ரோஹன் கூறியது சிரிப்பை வர வழைத்தது அனஹாவிற்கு. சிரித்து விட்டு சமையலறையுள் நுழைந்து மேடையில் சிறிது இடத்தை ஒதுக்கியவள் “இங்க வந்து உக்காரு. நான் சமைக்கறேன்… நீ பேசிட்டிரு…. ஓகே வா?” என்றாள்.

வேகமாகத் தலை ஆட்டி விட்டு மேடை மேல் ஏறி அமர்ந்தவன் தன் கல்லூரி நாட்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்தான். அவளும் நடு நடுவே பேசிக் கொண்டே சமையலை முடித்தாள்.

அடுத்து வந்த நாட்களில் அனஹா சமையலறையில் நுழைந்ததும் பின்னால் சென்று மேடையில் ஏறி அமர்ந்துப் பேசத் துவங்கி விடுவான் ரோஹன்.

வார இறுதியில் ரோஹனுடன் அமர்ந்து டீ வீ பார்த்துப் பொழுதைக் கழித்தாள் அனஹா. ஞாயிறு அன்று மாலை அனஹாவிடம் வந்த ரோஹன்  “டால்லி எனக்குத் தல வலிக்குது. ரிவிஷன் எக்ஸாம் பேப்பர்ஸ் கரெக்ட் பண்ணனும். மறந்துட்டேன்…

என்னால இப்போ கான்சென்ட்ரெட் பண்ண முடியும்னுத் தோனல… உனக்கு Special electrical machines  பேப்பர் தெரியுமா? உன்னாலக் கரெக்ட் பண்ண முடியுமா?” என்று தலையைப் பிடித்துக் கொண்டேக் கேட்டான்.

“தெரியும் ரோஹன். நான் கரெக்ட் பண்ணறேன். உனக்கு டாப்லெட் ஏதாவது வேணுமா?” என்றுக் கேட்டு அவன் அருகில் வந்தாள் அனஹா.

“இல்ல… தல வலிக்கு நான் டாப்லெட் போட மாட்டேன். டீ போட்டுக்கறேன். பேப்பர்ஸ் என் பாக்ல இருக்கு… எடுத்துக்கோ” என்றுக் கூறி டீ போடச் சென்றான் ரோஹன்.

அனஹா அறைக்குள் சென்று அவன் பேக்கைத் திறந்தாள். ஒரு பண்டில் பேப்பர் இருந்தது. அதைக் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அதனுடனே வினாத்தாளும் இருந்தது.

ஏற்கனவே க்வெஸ்டின் பேப்பரில் வினாக்களுக்கு அருகில் முக்கிய பாயிண்டுகளும் அந்தக் கேள்விக்கான பதிலுக்கு ரெபர் செய்ய வேண்டிய பேஜ் நம்பரும் எழுதி வைத்திருந்தான் ரோஹன்.

அவன் பேக்கிலிருந்தேத் தேவையானப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு மெத்தையில் அமர்ந்தாள் அனஹா. விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தவள் யோசனையில் இருந்தாள்.

“அன்னைக்கு ஜூரம் வந்து அவ்வளவு முடியாம இருந்தப்போ அவன் நமக்காகக் கஷ்டப் பாடறானேனு நெனச்சு எந்த உதவியும் கேக்காம இருந்தோம்… ஆனா அவன்??? ஒரு தல வலிக்கு ‘என்னால முடியல… எனக்காக செய்யறியா?’னு உரிமையாக் கேக்கறான். நம்மளால ஏன் அப்படி இருக்க முடியல?”

கையில் இரண்டுக் கப்புடன் அறைக்குள் நுழைந்த ரோஹன் ஒன்றை அனஹாவின் கையில் கொடுத்து விட்டு பால்கனிக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியேச் சென்றான்.

அவன் செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்த அனஹாவிற்கு “இவனால எப்படி இவ்வளவு இயல்பா இருக்க முடியுது? நம்ம என்ன தான் இவன் கூடப் பேசினாலும் ஏன் நம்மளால அவன் அளவுக்கு உரிமை எடுத்துக்க முடியல?” என்றக் கேள்விகள் மனதில் எழுந்தன.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த ரோஹன், அனஹா இன்னும் டீயைக் குடிக்காமல் கையில் வைத்திருப்பதைக் கண்டு “குடி டால்லி… நான் கொஞ்ச நேரம் படுக்கறேன். ஒரு மணி நேரம் கழிச்சு எழுப்பு” என்றுக் கூறி கையில் இருந்தக் கப்பை டேபிளில் வைத்துக் கட்டிலின் மறு பக்கம் படுத்தான்.

ஒருப் பெருமூச்சை வெளியேற்றிய அனஹா சூடான தேநீரைப் பருகி விட்டு விடைத்தாள்களைத் திருத்தத் துவங்கினாள். ஆனால் மனதிற்குள் நிறையக் கேள்விகள் எழத் துவங்கின.

இந்த யோசனை அந்த வாரம் முழுவதும் தொடர்ந்தது. அனஹா மனதில் நினைக்கும் அனைத்தையும் அவனிடம் கூறி விடுவாள்… கேட்டு விடுவாள்… ஆனால் இது… அவள் யோசித்துத் தெளிவுப் பெற வேண்டிய விஷயமாகத் தோன்றியதால் ரோஹனிடம் எதுவும் கேட்கவில்லை.

32

வெள்ளியன்று வழக்கத்தை விட சீக்கிரமே உறக்கம் வருவதாகக் கூறிப் படுத்தான் ரோஹன். அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் ஒரு புத்தகத்தை வாசித்த அனஹா தானும் சென்று உறங்கினாள்.

நல்ல உறக்கத்தில் இருந்தவளின் காதுகளில் “ஹாப்பி பர்த்டே டால்லி” என்றுக் கேட்கவும் முதலில் “ம்ம்” என்றுத் திரும்பிப் படுத்தவள் பின் அவன் கூறியது மூளையை எட்டியதும் கண் விழித்து அவனைப் பார்த்தாள். சிரிப்புடன் மீண்டும் வாழ்த்தினான் ரோஹன்.

“தேங்க்ஸ். உனக்கு எப்படி தெரியும்?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் அனஹா.

“பொண்டாட்டிப் பொறந்த நாள் கூடத் தெரியலனா எப்படி? எந்திரிச்சு வா…” என்றுக் கூறி அவள் கைப் பிடித்து எழுப்பியவன் அவளை பால்கனி கதவருகில் அழைத்துச் சென்று “தொறந்து பாரு” என்றான்.

அவனை ஒரு முறைப் பார்த்து விட்டுக் கதவை திறந்தவள் விழி விரித்து சுற்றி ஒரு முறைப் பார்த்தாள். தன் அருகில் சிரிப்புடன் நிற்பவனை ஒரு முறை ஆச்சர்யமாகப் பார்த்தவள் மீண்டும் பால்கனியை சுற்றி பார்வையை சுழல விட்டாள்.

வேகமாகத் தன் பக்கம் திரும்பியவளிடம் “உன் தேங்க்ஸ் கேட்டு கேட்டு போர் அடிச்சுடுச்சு டால்லி” என்று அலுத்துக் கொள்பவன் போல் கூறினான் ரோஹன்.

இல்லை என்பது போல் தலை ஆட்டியவள் அவன் அருகில் வந்து அவன் தோள் பிடித்து லேசாக எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். “இனிமே இப்படியே தேங்க்ஸ் சொல்லு…” என்று ரோஹன் கூறியதும் வெட்கப்பட்டுப் பார்வையைத் திருப்பியவள் “இத்தன ரோஸ் செடி எப்போ வாங்கிட்டு வந்த? எப்படி எனக்குத் தெரியாம இங்கக் கொண்டு வந்து வெச்ச?” என்றாள்.

“இன்னைக்கு மதியம் வந்து எல்லாத்தையும் செஞ்சேன். இந்த பெரிய ஸ்விங் தூக்கிட்டு வந்து மாட்டறதுக்கு தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துது”

அனஹாவிற்கு என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை. பால்கனி உள்ளே அடி எடுத்து வைத்தவளின் பாதம் படிந்தது மெத்தென்றிருந்த புல் தரையில். எத்தனை ரோஜா செடிகள்… அதும் எத்தனை நிறங்களில்… எல்லாம் நேர்த்தியாக ஸ்டான்ட்களில்… மேலே தொங்கும்படி சில செடி வகைகளும்…

செடிகள் வைத்திருந்த ஸ்டான்டெல்லாம் கூட அழகாக இருந்தன. நான்கு தொட்டிகள் வைக்கும்படி வளைந்து படி போல், ஒரு மரத்தில் கிளை போல் என்று அதையும் பார்த்து பார்த்து வாங்கியிருக்கிறான்…. எல்லாமே நிலவொளியில் மிக அழகாகத் தெரிந்தன. எல்லாவற்றையும் விட அந்த ஊஞ்சல்…

அருகேச் சென்று அதை வருடியவள் அதில் அமரப் போன நேரம் அவளைப் பிடித்து இழுத்து தான் அமர்ந்து அவளை தன் மடியில் அமர வைத்துக் கொண்டான் ரோஹன். முதலில் என்ன நடந்தது என்று தன்னை சுற்றிப் புரியாமல் பார்த்தவள் அவன் மடியில் அமர்ந்திருப்பதை உணர்ந்ததும் “விடு ரோஹன்… யாராவது பார்த்திடப் போறாங்க…” என்றுக் கூறி எழ முயற்ச்சித்தாள்.

“ஆமா இந்த அர்த்த ராத்திரில எல்லாருக்கும் இது தான் வேலையா? பேசாம உக்காரு…” என்று அவள் கைப் பிடித்து அதட்டியவன் “நாந்தான் அன்னைக்கேக் கேட்டேனே… நீ எங்க உக்காருவனு…” என்றான்.

அதன் பின் அமைதியாக அமர்ந்து அவன் கை விரல்களோடு விளையாடத் துவங்கினாள் அனஹா.

“என்ன சைலென்ட் ஆகிட்ட?”

“நீயா என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டியா?”

“என்ன சொல்லணும் டால்லி? நீ எதுக் கேட்டாலும் நான் பதில் சொல்லியிருக்கேன். நீ என்கிட்ட ஒரு விஷயம் கேக்கத் தயங்கற அளவுக்கு நான் நடந்துக்கறேனா?”

அவன் இவ்வாறுக் கேட்டதும் திரும்பி அவன் முகம் பார்த்தவள் “எதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி வித்யாசமா இருந்த?” என்றுக் கேட்டாள்.

“உனக்கு வித்யாசமா டிரஸ் பண்ணத் தெரியாதுன்னு பிரமோதும் சுதீஷும் தான் ஓவராப் பேசுனாங்க… எங்க மூனு பேருல சுதீஷ் கொஞ்சம் funky யா டிரஸ் பண்ணுவான்… அவனுக்கே நான் டிரஸ் செலக்ட் பண்ணிக் குடுத்துருக்கேன். அப்படி இருக்கப்போ என்னப் பார்த்து இப்படி சொன்னா???

அது ஒரு மாதிரி… எப்படி சொல்றது… என் ஈகோவ ஹுர்ட் பண்ணற மாதிரி பேசவும் நானும் வீம்புக்குனு டிரெஸ்ஸிங் ஸ்டைல் மாத்தினேன். அதுக்கப்பறம் எனக்கு அந்த சேஞ்ச் புடிச்சுது. அதனால பிரண்ட்ஸ மீட் பண்ணப் போகைல அப்படியே டிரஸ் பண்ணேன்”

அதுவரை அவன் முகம் பார்த்தவள் திரும்பி அவன் மேல் நன்றாக சாய்ந்து அமர்ந்து மீண்டும் அவன் விரல்களோடு விளையாட ஆரம்பித்தாள். இப்போது அவனோடு சேர்ந்து அவளும் காலால் லேசாக ஊஞ்சலை ஆட்டினாள்.

அவள் தன் மீது சாய்ந்ததும் அவன் கன்னத்தை அவளின் கன்னத்தின் மீது வைத்துகொண்டான் ரோஹன். அவள் அமைதியாக இருக்கவும் “நீ அன்னைக்கு என் பிரண்ட்ஸ் சொன்னதுக்காகதான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியானுக் கேட்டப்போ நான் இதெல்லாம் சொல்ல வந்தேன்…

ஆனா நீ வித்யா ஷிண்டு யாருன்னுக் கேட்டதும் எங்க நீ கோபப்பட்டு அடிச்சிருவியோனு பயந்து ஓடிட்டேன். அதுக்கப்பறம் நீயா இதக் கேட்டா சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்” என்றான்.

இதைக் கேட்டதும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “இப்போக் கோவப்பட்டுப் புடிக்கலன்னு சொன்னா டிவோர்ஸ் பண்ணிடப் போறியா?” என்று கேட்டவளை அதிர்ந்து நோக்கினான் ரோஹன். “இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியல? நீ எனக்கு அவ்வளவு பயப்படறியா?” என்றாள் அலட்சியமாக.

“ஆமா… இல்லையா பின்ன?” என்றுக் கூறியவன் அவளை மீண்டும் தன் மீது சாய்த்து அவளின் இடக்கையை தன் வலக்கையோடும், வலக்கையை இடக்கையோடும் விரலோடு விரல் கோர்த்து “எனக்கு நீ கோபப் படுவியோனு பயம்… என்கிட்டப் பேசாம இருந்துடுவியோனு பயம்… என்ன வெறுத்துடுவியோனு பயம்…” என்றான் அமைதியாக.

“இப்போ மட்டும் இதெல்லாம் சொல்லுற? பயம் போயிடுச்சா?”

“ம்ம்… முழுசா இல்லனாலும் நீ என்ன வெறுக்க மாட்டேங்கற நம்பிக்க இருக்கு… வா உள்ளப் போகலாம்” என்று அவளை எழுப்பி உள்ளே அழைத்து சென்றவன் பால்கனி கதவை சாத்தி விட்டு விளக்கை போடப் போனவளைத் தடுத்து மொபைல் வெளிச்சத்தில் மெத்தையின் அருகில் அழைத்துச் சென்றான்.

அங்கே டேபிளில் இருந்த ஒரு கேக்கின் மதிதியில் பெரிய மொட்டு போன்ற காண்டில் இருந்தது. அதன் திரியில் அவன் நெருப்பு பொருத்தியதும் அது தாமரை போல் விரிந்து அதனுள்ளே இருந்த சிறு சிறு மெழுகு வர்த்திகள் எரிந்தன. அதிலிருந்து மெல்லிய இசையும் வெளி வந்தது.

அவளிடம் ஒரு பிளாஸ்டிக் கத்தியைக் கொடுத்து வெட்ட சொன்னான். “ஹாப்பி பர்த்டே மை டியர் டால்லி” என்று எழுதியிருந்த அந்த கேக்கை வெட்டி ஒரு சிறியத் துண்டை ரோஹனிற்கு ஊட்டினாள் அனஹா. அதை உண்டவன் அவனும் அதே போல் ஒரு சிறியத் துண்டை அவளுக்கு ஊட்டினான்.

“உனக்கு என் மேல சந்தேகம் இல்லையா? நான் நடிக்கறனோன்னு?” என்றுத் திடீறேன்றுக் கேட்டான் ரோஹன். “முதல்ல இருந்துது. பொண்ணு பார்க்க வந்தப்போ உன்னோட டிரஸ், நீ ப்ரொபஸ்ஸர்னு சொன்னது… எனகென்னமோ நீ நடிச்சியோ… நான் ஏமாந்துட்டனொன்னு தோனுச்சு. கோபம் வந்துது.

கல்யாணம் வரைக்கும் நீ எனக்கு போன், மெசேஜ் பண்ணாதது இன்னும் வருத்தமா இருந்துது. ஆனாப் பொறுமையா உக்காந்து யோசிச்சப்போ உன்னோட டிரெஸ்ஸிங் ஸ்டைல் வேணா மாறியிருக்கலாம்… நீ அதுவரைக்கும் சொன்ன, பேசின எந்த விஷயமும் பொய்னு தோனல.

ரிசெப்ஷன் அன்னைக்கு அந்த பொண்ணு உன்கிட்ட நின்னுப் பேசுனதுக்கு நீ நெளிஞ்சப்போ உன் கேரக்டர் புரிஞ்சுது. கல்யாணத்துக்கு அப்பறம் எங்க வீட்டுல தங்கனது… அம்மாவ என்கூட தங்க வெச்சது… இப்படி எல்லாமே எனக்காக யோசிச்சு செஞ்சது புடிச்சுது.

நீ இவ்வளவு செஞ்சதுக்கு அப்பறமும் உன் பிரண்ட்ஸ்காக தான் லவ் பண்ணனு நெனைக்க முடியல… அன்னைக்கு இத கன்பார்ம் பண்ணிக்கதான் உன்கிட்ட கேட்டேன். அது சரி… அது என்ன எப்பப் பாரு என்னையே கேள்விக் கேக்கற? நீ எதுவும் சொல்ல மாட்டியா?”

மெலிதாக சிரித்தவன்  பேசத் துவங்கினான். “பொண்ணுங்கக் கூட நான் அதிகம் பேச மாட்டேன் டால்லி. I feel shy… உன்ன முதல் தடவப் பார்த்தப்பவே உன் மேல ஒரு அட்ராக்ஷன்… உன் கூட ரொம்ப நாள் பேசிப் பழகன ஒரு பீல்….

உன்கூட நெறைய பேசணும் உன்கூடவே இருக்கணும்னு தோனுச்சு… அதனால தான் உனக்கு அத்தன பூஸ்டர் பேக் போட்டு விட்டேன்… ஆனா உன்கிட்டக் கூட என்னப் பேசறதுன்னுத் தெரியல… ஒவ்வொரு தடவ உன்ன நேர்லப் பார்த்தப்பையும் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா…

நீ மட்டும் தான் என் உலகம்னுத் தோன ஆரம்பிச்சுது. எனக்கு நீ என் கூடவே இருக்கணும். பொண்ணுப் பார்க்க வந்தன்னிக்கு தான் நீ இவ்வளவு தைரியமா பெசுவனுத் தெரிஞ்சுது… அப்போ நெனச்சேன்… உன்ன இன்னும் கொஞ்சம் சீண்டியிருக்கலாம் னு… ஹ்ம்ம்…” என்றுப் பெருமூச்சு விட்டான் ரோஹன்.

“ஏன்” என்றுப் புரியாமல் கேட்டவளிடம் “ஆமா… இவ்வளவு தைரியமான பொண்ணு நான் ப்ரோபோஸ் பண்ண அன்னைக்கு வெக்கபட்டு தான என்கிட்ட பதில் சொல்லத் தெனருன” என்றுக் கூறி சிரித்தவனின் கையில் கிள்ளினாள் அனஹா.

“ஹே உண்மைல தான் டி” என்றுக் கூறியவன் மீண்டும் தொடர்ந்தான்.

“எப்போ நம்ம என்ன வேலப் பாக்கறோம்னுகூட நமக்குத் தெரியலன்னு தெரிஞ்சுச்சோ அன்னைக்கு, நமக்குள்ள எந்த ஒரு வருத்தமோ உறுத்தலோ இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்காக தான் இத்தன நாள் எடுத்துக்கிட்டேன்.

இப்போ அதெல்லாம் இல்லன்னுத் தோணுது. அந்த பால்கனி கார்டன்…  என்கிட்ட நீ முதல் தடவை ஆசப் பட்டு கேட்டதை நிறைவேத்திட்டேன் அப்படிங்கற திருப்தியும் எனக்கு இருக்கு… ஐ லவ் யூ”

ரோஹனின் பேச்சில் அனஹா தன் மனதில் இருந்த குழப்பங்கள் சந்தேகங்கள் அனைத்தும் மறைந்ததாக உணர்ந்தாள். அந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தில் அதனருகில் நின்றிருந்த ரோஹனின் பாதி முகம் மட்டுமேத் தெரிந்தது. அவனின் ஒற்றைக் கண்ணில் தெரிந்தக் கரையில்லா காதலையும் காமத்தையும் அனஹாவால் உணர முடிந்தது.

அங்கே உருகியது மெழுகு வர்த்தி மட்டுமல்ல… அவனது பார்வையில் இவளும் தான். அனஹாவை அணைத்து அவளின் இதழில் முத்தமிட்டான் ரோஹன்.

33

“மணி பத்தாச்சு எந்திரிக்கலையா?” என்று ரோஹன் கேட்டதும் கண் விழித்துப் பார்த்தாள் அனஹா. தன் மேல் கை போட்டு கண்களை மூடி அருகில் படுத்திருக்கும் ரோஹனைக் கண்டதும் “நைட் தூங்க விட்டியா நீ? போய் டீ போட்டு எடுத்துட்டு வா… எந்திரிக்கறேன்…” என்றுக் கூறி மீண்டும் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தாள்.

சிரித்துக் கொண்டே எழுந்தவன் அவள் கூறியபடியே டீ கப்புடன் வந்து மீண்டும் அவளை எழுப்பினான். அப்போதும் எழாமல் திரும்பிப் படுத்தவளின் அருகில் அமர்ந்து “அத்தை இதோட 7 தடவ கால் பண்ணிட்டாங்க… இப்பவும் நீ எடுக்கலன்னா இவ்வளவு நேரம் என்ன பண்ணனு கேப்பாங்க… பரவால்லயா?” என்றான் ரோஹன்.

வேகமாக எழுந்து அமர்ந்தவள் “அத்தன வாட்டி கால் பண்ணாங்களா? கேக்கவே இல்ல?” என்றுக் கூறித் தன் மொபைலைத் தேடி எடுத்தாள். “நைட் ரெண்டுப் பேரோட மொபைலும் சைலென்ட்லப் போட்டேன்” என்றுக் கூறி ஒருக் கப்பை அவள் கையில் திணித்தான்.

அவனை முறைத்து விட்டு அனஹா போன் செய்து அனுக்ரஹாவுடனும் சுந்தரிடமும் பேசி முடித்து வைத்த சமயம் தீபா அழைத்து வாழ்த்தினார். ரமேஷும் ராஹுலும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.

எல்லோரிடமும் பேசி முடித்துக் கட்டிலை விட்டு எழுந்தவளைப் பார்த்து “நைட் இந்த கேக் எடுத்து பிரிட்ஜ் உள்ள வேச்சுருக்கலாம்ல? பாரு எவ்வளவுப் பெரிய கேக்…” என்றுக் கண்களில் குறும்பு மின்னக் கேட்டான் ரோஹன்.

“ஆமா… நீ எங்க விட்ட??? ஏதோ நீ……..ளமாப் பேசுன. அப்பறம் கிட்ட இழுத்து…” என்று அவள் கூறும்போதேக் கட்டிலில் இருந்து எழுந்து அவள் அருகில் வந்து இழுத்தணைத்தான் ரோஹன். அவன் முகத்தை இவ்வளவு அருகில் பார்த்தவளின் பேச்சுத் தடைப் பட்டது “இழுத்து… கி… அது… அப்பவும் சும்மா இல்லாம… நீ… நீ தான…” என்றுத் தடுமாறினாள்.

“எந்த கேள்விக் கேட்டாலும் இப்படி கட கடனு பதில் சொல்லாத டால்லி. நீ இப்படி பதில் சொல்லத் தெனறுறது எவ்வளவு நல்லா இருக்குத் தெரியுமா?” என்றுக் கூறி அவள் இதழில் இதழ் பதித்து அவளை விடுவித்துக் குளிக்கச் சென்றான்.

சிறிது நேரத்தில் பிரமோத், சுதீஷ், ஷீபா மூவரும் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் ரோஹனைக் கேள்வியாகப் பார்த்த அனஹாவிடம் “நாந்தான் இன்வைட் பண்ணேன்” என்றான் ரோஹன்.

அவளுக்கு கிபிட் கொடுத்து விஷ் செய்தனர் மூவரும். லஞ்ச் ஹோம் டெலிவரி செய்யப் பட்டது. அதுவும் ரோஹனின் ஏற்பாடு என்றுப் புரிந்தது அனஹாவிற்கு. அதை வாங்கிக் கிட்செனுள் எடுத்துச் சென்றாள் அனஹா. மூவரிடமும் சொல்லிவிட்டு எழுந்து அவள் பின்னால் சென்றான் ரோஹன்.

“உனக்கு அவங்க மேல கோபமா டால்லி?”

“இங்கப் பாரு ரோஹன்… அவங்க என்ன தான் நமக்குத் தெரியாம சில விஷயம் செஞ்சாலும் நம்ம நல்லதுக்கு தான் செஞ்சாங்க…”

“அத தான் டால்லி நானும் சொல்ல வ…”

“அவங்க இல்லன்னா நம்ம மீட் பண்ணி இருக்கவே முடியாது…”

“ஆமா அதா…”

“அவங்க மேல நம்ம கோவத்தயெல்லாம் காட்டக்கூடாது…”

“கண்…”

“இப்போ அவங்க நம்ம வீட்டுக்கு வேற வந்துருக்காங்க…”

கையை மார்புக்குக் குறுக்காகக் கட்டி அமைதியாக அனஹாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன்.

“சொல்லப் போனா நம்ம அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்…”

….

“என்ன? அதனால அவங்களோடப் பேசு… சரியா?”

அவள் முகத்தையேப் பார்த்து எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான் ரோஹன்.

“என்னாச்சு?”

அவள் முகத்துக்கு நேராக கையை ஆட்டி “போடி டீச்சர் அம்மா…” என்றுக் கூறி சமையலறையை விட்டு வெளியேச் சென்றான்.

அவன் அவ்வாறுக் கூறிச் சென்றதும் ஒரு நிமிடம் திகைத்து நின்றவள் “டீச்சர் அம்மாவா??? அப்போ இவன் வாத்தியார் இல்லையா? எங்க அவன்…” என்று அவனைத் தேடிச் சென்றாள்.

உணவை டைனிங் டேபிளில் அடுக்கிக் கொண்டிருந்தவனிடம் “டேய் நான்…” என்றுப் பொரிய ஆயத்தம் ஆனாள். சட்டென்று அவளை இறுக்கி அணைத்தவன், “நான் சொல்ல வரதையும் கேளு… இப்படி நீ மட்டும் பேசாத… சரியா?” என்று அவள் காதில் கிசு கிசுப்பாகக் கூறியவன் அப்படியே அவள் காதில் அழுந்த முத்தமிட்டு விடுவித்தான்.

அவன் விடுவித்ததும் மலங்க மலங்க விழித்து சரி என்றுத் தலை ஆட்டினாள் அனஹா. பின் இருவருமாக சேர்ந்து உணவை டேபிளில் அடுக்கினர்.

அவர்கள் உள்ளேச் சென்றதும் “இவங்கள பார்த்தா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்காங்கனு தோனுது…” என்றான் சுதீஷ்.

“ஆமா டா. அடுத்து எப்படியும் ஷீபாவோட கல்யாணம் தான்…” என்று பிரமோத் கூறியதும் வெட்கப்பட்டு சிரித்தாள் ஷீபா.

“உன் கல்யாணம் எப்போ மச்சான்? நிதி என்ன சொல்றா?” என்று சுதீஷிடம் கேட்டான்.

“ம்ம்கும் சொல்றா அவ… ஏன்டா நீ வேற??? உனக்கு எப்போடா கல்யாணம்?”

“பார்த்துட்டு தான் இருக்காங்க…” என்று பிரமோத் கூறும்போதே சாப்பிட அழைத்தனர் அனஹாவும் ரோஹனும்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் கிண்டலும் கேலியுமாகக் கழிந்தது. மறக்காமல் தாங்கள் இணைய காரணமாக இருந்ததற்கு நன்றி கூறினார் ரோஹனும் அனஹாவும். அங்கிருந்துக் கிளம்பிய பொழுது தாங்கள் செய்தது அவர்களின் நன்மைக்கு தான் என்ற நம்பிக்கை வந்தது மூவருக்கும்.

மாலை எங்காவது வெளியே செல்லலாம் என்று ரோஹன் கூறியதும் பீச்க்கு போகலாம் என்றுக் கூறினாள் அனஹா. சரி என்றுக் கூறி ரோஹன் குளித்து வந்த நேரம் அவனுடைய கப்போர்டில் இருந்த உடைகளை ஆராய்ந்து ஒரு மஞ்சள் நிற ரவுண்டு நெக் டி ஷர்டும் வெளிர் நீல நிற ஜீனும் எடுத்து அவனிடம் நீட்டினாள் அனஹா.

அவளைப் புரியாமல் பார்த்தவனிடம் “போர்மல்ஸ் போடறப்போ ஸ்மார்டா தெரியற… காஷூவல்ஸ்ல ஹன்ட்சமா தெரியற… உனக்கு ரெண்டுமே நல்லா இருக்கு பப்பி. அப்பப்போ இப்படி டிரஸ் பண்ணு… எனக்கு இதுவும் பிடிச்சுருக்கு…” என்றுக் கூறி உடையை அவன் கையில் திணித்து விட்டுக் குளிக்க சென்றாள் அனஹா.

“பப்பி… இதுக் கூட நல்லா தான் இருக்கு…” என்றுக் கூறி சிரித்தான் ரோஹன். குளித்து முடித்து தயாராகி வந்தவள் ரோஹனை ஒரு முறை மேலும் கீழும் பார்த்து விட்டு அவன் கைப் பற்றி டிரெஸ்ஸிங் டேபிள் முன் அழைத்துச் சென்றாள்.

அவன் முடியை மாற்றி சீவியவள் “இப்போ ஓகே” என்றுக் கூறியவுடன் கண்ணாடிப் பார்த்தான் ரோஹன். அவள் வகிட்டி மாற்றி சீவியிருப்பதைக் கண்டவன் “இனிமே கலரிங்கும் பண்ணவா?” என்று நக்கலாக கேட்டான்.

“பண்ணு… நல்லா தான் இருக்கு… ப்ரொபஸர்னா இப்படியெல்லாம் டிரஸ் பண்ணக் கூடாதா?” என்றுக் கேட்டு விட்டு அறையை விட்டு வெளியேச் சென்றாள் அனஹா.

கடற்கரையில் சிறிது நேரம் அமைதியாக நடந்தவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்தனர். அவன் மீது சாய்ந்துக் கொண்டாள் அனஹா.  அவளைத் தோளோடு அணைத்தவாறு அமர்ந்தான் ரோஹன்.

இருவரின் மனமும் ஆழ் கடலின் அமைதியை ஒத்திருந்தது.

 

முற்றும்

 

 

 

error: Content is protected !!