Samaram Veesum Puyale – Full Novel
Samaram Veesum Puyale – Full Novel
சாமரம் வீசும் புயலே
1
கையில் இருந்த கேஸ் பைலை பார்த்தபடி எட்டி நடை போட்டாள் ஷிவானி. வெறுமனே பக்கங்களை புரட்டியவள் எதையும் ஆழ்ந்து படிக்கவில்லை. தினமும் நடந்து பழகிய தடம்… கவனம் வேறெதிலோ இருந்தபோதிலும் மிகச் சரியாய் தன் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.
“இப்போ எதுக்கு ரோஹித் நீ கத்துற?”
இப்படி கேள்வி கேட்டவள் தானும் கத்த தான் செய்கிறோம் என்பதை அறிவாளா?
நிசப்தமாய் இருந்த இடத்தில் சத்தமாய் கேட்ட பெண் குரல் ஷிவானியின் வேகத்தை சற்றே மட்டுப்படுத்தியது. அருகில் இருந்தது பேன்ட்ரி மட்டுமே…
சுற்றும் முற்றும் பார்த்தபோது அந்த காரிடரில் இரு பக்கமும் சிறிது தூரத்திற்கு ஆள் நடமாட்டம் எதுவும் தென்படவில்லை. பான்ட்ரியின் வாசலை நெருங்கி உள்ளே மெதுவாக எட்டிப் பார்த்தாள்.
கையில் அலைபேசியை வைத்து தனக்கு முதுகு காட்டி பேசிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் “எனி பிராப்லம் நீணா?” என்று மெல்லியக் குரலில் வினவினாள் ஷிவானி.
திடீரென்று அந்த அறையில் சப்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்த அந்த இளம் பெண் புன்னகையுடன் கண்களை சிமிட்டி “நத்திங் ஷிவானி” என்று இனிமையாகக் கூறி திரும்பி விட்டாள்.
மீண்டும் தனக்கு முதுகுக் காட்டி நின்றவளை விநோதமாகப் பார்த்த ஷிவானி “இப்போ இவ தான கத்துனா? அப்படி திரும்பி நின்னப்போ கத்துனவ… இப்படி திரும்பினதும் இவ்வளவு அமைதியா அழகா சிரிச்சுக்கிட்டே பேசுறா? ஒண்ணும் புரியலயே…” என்று புருவம் சுருக்கி உதட்டில் ஆள் காட்டி விரலால் தட்டியபடி தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்
அவள் தோளில் யாரோ தட்டவும் திடுக்கிட்டுத் திரும்பியவளின் முன் நின்றிருந்தாள் மோனிகா. “புரியாது… ஒண்ணுமே புரியாது… இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம வா… நம்ம வேலைய பார்ப்போம்…” ஷிவானியின் வருகைக்காகக் காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்தாள் மோனிகா.
“என்ன மோனிகா சொல்லுறீங்க? எனக்கு நீணா பண்ணதும் புரியல… நீங்க பேசுனதும் புரியல… எதையாவதுத் தெளிவா சொல்லுங்க…”
“எத சொல்லணும் ஷிவானி?” அவளிடம் கேள்விக் கேட்ட மோனிகா எதிரில் வந்த ஊழியரை பார்த்து புன்னகைத்தாள். பொறுமை இழந்த ஷிவானி அவள் முன்னால் வந்து நின்று வழியை மறித்து பேச ஆரம்பித்தாள்.
“நான் இங்க ஜாயின் பண்ணி ஒரு வாரம் தான் ஆகுது. ஆனா இந்த ஒரு வாரத்துல நிறைய தடவ நீணா கூட பேச வேண்டி வந்திருக்கு… சேர்ந்து ஒண்ணா வேலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை அமஞ்சிருக்கு…
எனக்குத் தெரிஞ்சவரைக்கும் நீணா ரொம்ப சாப்ட்… ரொம்ப அமைதி… அதிர்ந்து பேசமாட்டாங்க. இங்க வரவங்கக்கிட்ட அவங்க நடந்துக்குற விதத்த பார்த்து நானே நிறைய கத்துக்கிட்டு இருக்கேன்.
இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்க ஏன் அப்படி கத்தினாங்க? நீணா இவ்வளவு சத்தமா பேசுவாங்கன்னே எனக்கு இன்னைக்கு தான் தெரியும்… ஏதாவது ப்ராப்லமா மோனிகா?”
மோனிகாவிற்கு சிரிப்பு வந்தது. அதை அடக்கும் வழித் தெரியாமல் வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தாள். அமைதியாக இருந்த அந்த காரிடாரில், சற்று தொலைவில் அமர்ந்திருந்த சிலர் அவள் சிரிப்பொலியில் திரும்பி அவர்களைப் பார்த்தனர்.
பலர் கவனிக்கும் வகையில் மோனிகாவின் நடவடிக்கை இருக்கவும் ஷிவானி அவள் கை பற்றி வேகமாக அருகில் இருந்த காலியான அறை ஒன்றினுள் அழைத்து சென்று கதவை தாழிட்டாள்.
“மோனிகா ப்ளீஸ்… எதுக்கு சிரிக்குறீங்கன்னு சொல்லிட்டு சிரிங்களேன்…”
“இல்ல… நீ இப்போ சொன்ன எல்லாத்தையும் நானும் ஒரு காலத்துல சொல்லி இருக்கேன்…”
விழி விரித்து அவளைப் பார்த்த ஷிவானி “எனக்கு நீணா பத்தி அதிகம் தெரியாது… அதனால எனக்கு அவங்க பண்ணது புரியல. ஆனா நீங்களும் நீணாவும் பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆச்சே… ஒண்ணா படிச்சவங்கன்னுத் தெரியும். அப்பறம் எப்படி நான் சொன்னத நீங்க சொல்லியிருக்க முடியும்?” என்று மீண்டும் குழம்பினாள்.
தொண்டையை சரி செய்த மோனிகா “ஆமா… ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ் தான். சில நேரங்கள்ல நமக்கு ரொம்ப நெருக்கமா இருக்க மனுஷங்க, நம்ம கையிலயே இருக்க பொருள்… இதோட தன்மை நமக்கு தெரியுறதில்ல. அப்படி தான் நீணாவும்” என்றாள்.
அந்த வார்த்தைகளை சில நொடிகள் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து அதன் அர்த்தத்தை உள் வாங்க முயன்றாள் ஷிவானி. அவள் நிமிர்ந்தபோது மோனிகா அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மோனிகா நீணாவின் தோழி. தானோ அவர்களுடன் வேலை பார்க்க ஆரம்பித்து ஒரு வார காலமே ஆகியிருக்கிறது. பரிட்சயம் உண்டென்ற போதிலும் நெருக்கம் கிடையாது. அப்படி இருக்கையில் நீணா குறித்து மேலும் கேட்க விரும்பாமல் சிறு தலை அசைப்புடன் “சரி மோனிகா… போகலாம்…” என்றாள் ஷிவானி.
அவள் முகம் அப்போதும் தெளிவடையாமல் இருக்கவே ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றி “இப்போ உனக்கு ட்யூட்டி பாக்குற டைம் இல்ல… நீ ப்ரீ தான்னு தெரியும். உக்காரு ஷிவானி” எதிரில் இருந்த ஸ்டூலை கை காட்டி அருகில் இருந்த சேரில் சாய்ந்து அமர்ந்தாள் மோனிகா.
அவள் எதுவோ பேசப் போகிறாள் என்பதுப் புரிந்து ஷிவானி அவள் முகம் பார்க்க அவளின் ஆர்வம் உணர்ந்து ஒரு புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தாள் மோனிகா.
“நானும் நீணாவும் காலேஜூல ஒண்ணாப் படிச்சோம். எப்போவும் ஒண்ணாவே சுத்துவோம். நாங்க தர்ட் இயர் படிக்குறப்போ நடந்த ஒரு சம்பவம் எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் மாத்தி அமச்சிடுச்சு. அது எங்கள இன்னும் நெருக்கம் ஆக்கிடுச்சோன்னுக் கூட சில நேரங்கள்ல தோணும்…” பழைய நினைவுகளில் மூழ்கிப் போனாள் மோனிகா.
கிளாஸிற்கு நேரமாகியபோதும்… வகுப்பு துவங்கும் முன்பு முடிக்க வேண்டிய வேலைகள் சில இருந்தபோதும்… தான் செல்லும் வழி நெடுக இருந்த அழகை ரசித்தபடி கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள் மோனிகா.
பசுமையான புல்வெளியும் அடர்ந்த மரங்களுமாய் அந்த சூழலே ரம்மியமாகக் காட்சியளித்தது. பாடம், மதிப்பெண், பரீட்சை என்று எதையோ துரத்தும் நோக்கில் ஓடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இப்படி எதையும் நின்று நிதானமாய் ரசிக்கும் நேரம் கிடைப்பதில்லை.
அந்த ப்ளாக்கின் மீட்டிங் ஹாலை கடக்கும்போது மூடியிருந்த கதவின் வழியே “என்னால ஓகே சொல்ல முடியாது ரோஹித். இது ஒத்து வராது. விட்டுடுன்னு சொன்னாக் கேளு” என்றுக் கத்திய பெண் குரலைக் கேட்டுதும் அப்படியே நின்றாள்.
அது பரிச்சயப்பட்ட குரலாக தோன்ற வேகமாக மீட்டிங் ஹாலின் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள். அவள் கணிப்பு பொய்யாகவில்லை… உள்ளிருந்தது அவள் வகுப்பு மாணவர்கள். இன்னும் சொல்லப் போனால் அவளுடைய நண்பர்கள்.
நீணாவும் ரோஹித்தும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி எதிர் எதிரில் நின்றிருந்தனர். “என்னாச்சு நீணா?” என்றுக் கேட்டு மோனிகா அவள் அருகில் செல்ல அவளைக் கண்டதும் முறைப்பதை விடுத்து “ஒண்ணும் இல்ல மோனி” என்று சாதாரணமாகக் கூறினான் ரோஹித்.
“என்னாச்சு? ஏதாவதுப் பிரச்சனையா?”
உள்ளே வந்து தன் பின்னால் நின்ற ஹர்ஷாவை பார்த்ததும் மோனிகாவிற்கு “இவனும் நம்மள மாதிரி நீணா கத்துனத கேட்டுட்டு வந்திருப்பானோ?” என்றுத் தோன்றியது. ஹர்ஷா அவர்கள் நண்பன். வகுப்பு தோழன்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ஹர்ஷா” இப்போது நீணா புன்னகையுடன் பதில் கூறினாள்.
“இதே தான் ஹர்ஷா நானும் கேக்குறேன். ரெண்டு பேரும் ஒண்ணும் இல்லன்னு சொல்லுறாங்க…”
ரோஹித்தும் நீணாவும் இவர்களைப் பார்த்து அமைதியாக நின்றனர். அவர்கள் எதுவும் கூறப் போவதில்லை என்பதை உணர்ந்த மோனிகாவும் ஹர்ஷாவும் வேறெதுவும் கேட்காமல் ஹாலை விட்டு வெளியேறினர்.
ஹர்ஷா தலையசைத்து இங்கேயே இருக்குமாறு சைகை செய்யவும் மோனிகா பின் தங்க மற்ற இருவரும் முன்னே நடந்தனர். அமைதியாக தலை குனிந்து நடந்த இருவருக்கும் முன்னே செல்பவர்களை பற்றிய யோசனையே…
ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்த ஹர்ஷா திரும்பி அருகில் மோனிகாவை பார்த்தான்.
“என்ன மோனிகா யோசிக்குற?”
“ஒண்ணுமில்ல”
இரண்டடி நடந்ததும் ஹர்ஷாவை திரும்பிப் பார்த்தவள் “நீ என்ன யோசிக்குற?” என்றுக் கேட்க ஹர்ஷா தலையை இடமிருந்து வலமாக ஆட்டினான்.
சில நொடிகளுக்குப் பின் இருவரும் ஒருசேர “நீ…” என்று ஆரம்பித்தனர். முதலில் மோனிகா “நீ சொல்லு” என்றாள். ஹர்ஷா மறுப்பாக தலை அசைத்து “நீ சொல்லு… என்ன விஷயம்?” என்றான்.
“நீணா எதுக்கு அப்படி கத்துனா?”
“தெரியல…”
“நீணா என்னால ஒத்துக்க முடியாதுன்னு சொன்னாளே… அப்படின்னா?”
“தெரியல மோனிகா… நானும் அதான் யோசிக்குறேன்…” என்றுக் கூறி தாடையை தடவினான் ஹர்ஷா.
அவர்கள் எதுவும் சொல்லாமல் தாங்கள் மட்டும் யோசித்து எந்த பயனும் இல்லை என்றுணர்ந்த மோனிகா “சரி வா… அவங்களா சொன்னா பார்த்துக்கலாம்…” என்றுக் கூறி நடையின் வேகத்தைக் கூட்டினாள். ஹர்ஷாவும் வேகமாக நடக்க நால்வரும் கிட்டத்தட்ட ஒன்றாக வகுப்பறைக்குள் நுழைந்தனர்.
அவரவர் இடத்தில் அமர்ந்தபோது ஒரே ஒரு நொடி நீணாவும் ரோஹித்தும் முறைத்துக் கொண்டதை கவனித்துவிட்டனர். இதை அவர்களிடம் கேட்டாலும் சரியான பதில் வரப்போவதில்லை என்பது புரிந்து அமைதியாக இருந்தனர் ஹர்ஷாவும் மோனிகாவும்.
வகுப்புகள் துவங்கவும் நீணா கலகலப்பாக பேசினாள். வழக்கம்போல் அரட்டை அடித்தாள். மோனிகா ‘இவளா காலையில் கத்தியது?’ என்று யோசிக்கும் அளவிற்கு இருந்தன அவளது நடவடிக்கைகள்.
“நோட்ஸ் எழுதி… இன்டர்னல் அஸெஸ்மென்ட் எழுதி… செமஸ்டர் எக்ஸாமும் எழுதி… இப்படி எழுதி எழுதி விரல் எல்லாம் தேஞ்சு வெறும் எலும்பு மட்டும்தான் மிச்சம் இருக்கு… இல்ல மோனி?”
“சும்மா இரு நீணா… ப்ளீஸ்டி… ஏற்கனவே இவருக்கிட்ட மாட்டி திட்டு வாங்கியாச்சு. எதையாவது சொல்லிட்டு நீ சைலெண்டா உட்கார்ந்திருப்ப… நாந்தான் சிரிச்சு மாட்டுவேன்”
“நீ ஏன் மோனி சிரிக்குற? சிரிக்காம கேளு…”
“அதெல்லாம் எனக்கு வராது. அது எப்படி நீணா போர்ட பார்த்து எழுதிட்டே வாயே அசைக்காம பேசி எல்லாரயும் நக்கலடிக்குற?”
“அதெல்லாம் தனி கலை. ஒவ்வொரு ஸ்டூடென்ட்டும் தெரிஞ்சு வெச்சிருக்க வேண்டிய கலை. ஸ்கூல் காலேஜ் போய் வேற எத கத்துக்குறோமோ இல்லையோ… கண்ண தொறந்து வெச்சுட்டே தூங்குறதுக்கும் வாயசைக்காம பேசுறதுக்கும் கண்டிப்பா கத்துக்கணும்”
ஹர்ஷாவின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான்… கல்லூரியில் அவர்களுக்கு இருந்த சில வசதி குறைவுகளுக்காக ஸ்ட்ரைக் செய்ய வேண்டும் என்று ஒரு மாணவன் ஆவேசமாகக் கூறினான்.
ஹர்ஷா ரோஹித் உட்பட சில மாணவர்கள் அங்கே இருந்தனர். அனைவரும் ஒன்றும் பேசாமல் அமைதிக் காத்தாலும் அவர்கள் மனதிற்குள்ளும் ஆவேசம் இருக்கதான் செய்தது. ரோஹித் முன் வந்து அந்த மாணவனிடம் பேசினான்.
“இப்போ ஸ்ட்ரைக் பண்ணி மட்டும் என்ன ஆகப்போகுது? நமக்குதான் டைம் வேஸ்ட். பாடம் நடத்தலன்னாலும் செமஸ்டர் எக்ஸாம் வெக்கதான் போறாங்க. எக்ஸாம் ஒழுங்கா பண்ண முடியாம… அட்டெண்டன்ஸ் இல்லாம… கடைசியில கஷ்டப்படப் போறது என்னவோ நம்ம தான்.
அதுக்கு ஒழுங்கா அமைதியா நம்ம கிளாஸ்ல இருந்து நாலு பேரு மட்டும் போய் மேனேஜ்மென்ட்கிட்ட பேசுவோம். நம்மளோட கஷ்டத்த எடுத்து சொல்லுவோம். வேண்டியத கேப்போம். கண்டிப்பா கன்ஸிடர் பண்ணுவாங்க”
“அட போ ரோஹித்… எது நடந்தாலும் பேசுவோம் பேசுவோம்னு… நீங்களே யாராவது போய் பேசி பாருங்க. என்னதான் பண்ணுறாங்கன்னு நானும் பாக்குறேன்” அலுத்துக் கொண்ட அந்த மாணவன் நகர்ந்து சென்றுவிட்டான்.
மாலை கல்லூரி நேரம் முடிந்ததும் நீணா முன்னே சென்றுவிட மோனிகா வெளியே வந்தபோது “நீ எவ்வளவு தடவ கேட்டாலும் என் பதில் நோ தான் ரோஹித்” என்று அவள் கூறுவது தெளிவாகக் கேட்டது. அவர்கள் அருகில் செல்லலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் தயங்கி நின்றாள் மோனிகா.
“அதையும் பாக்கலாம்… நீ யெஸ் சொல்லுவ…” அவளை முறைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான் ரோஹித். தன் பின்னால் அரவம் கேட்டதும் திரும்பிப் பார்த்த மோனிகா ஹர்ஷாவை கண்டாள்.
“இவங்க ரெண்டுப் பேரும் என்ன பேசுறாங்க ஹர்ஷா?” என்று மோனிகா கவலையாகக் கேட்கவும் புருவ மத்தியில் முடிச்சு விழ “எதுக்கு ஒத்துக்குறத பத்தி பேசுறாங்க?” என்று பதிலுக்கு கேள்விக் கேட்டான் ஹர்ஷா.
“இப்போ எனக்கு டைம் ஆச்சு… நான் கெளம்புறேன் ஹர்ஷா. நாளையிலேருந்து இவங்கள நோட் பண்ணணும்”
“ம்ம்… நீ நீணாவ கவனி. நான் ரோஹித்த பாக்குறேன். பை மோனிகா”
வீட்டிற்கு செல்லும் நேரம் முழுவதும் மோனிகா தன் தோழியை குறித்தே யோசித்துக் கொண்டிருந்தாள். நீணாவை அவளுக்கு இந்த மூன்று ஆண்டுகளாகத் தெரியும். யாரையுமே புண்படுத்தக்கூடாது என்று எண்ணுபவள்.
அப்படிப்பட்டவள் எதற்காக இன்று ரோஹித்திடம் அவ்வாறு பேசினாள்? அதிலும் நீணாவின் கோப முகத்தை இன்று தான் மோனிகா பார்க்கிறாள். கவலைக்கிடையிலும் முகத்தில் புன்முறுவல் பூத்தது. “உனக்கு இவ்வளவு கோவம் வருமாடி?”
இது அனைத்தையும் யோசித்தபோது ஹர்ஷாவை பற்றிய நினைவும் மனதில் எழாமல் இல்லை.
“எப்படி ஹர்ஷாவும் என்ன மாதிரியே யோசிக்குறான்? நான் கேட்க நெனச்சதெல்லாம் அவனும் கேட்டானே…”
பைக்கில் செல்லும்போது மோனிகாவை பற்றி யோசித்த ஹர்ஷா முகம் மலர்ந்து புன்னகைத்தான். “எப்பயும் விளையாட்டுத்தனமா பேசுறவ… பிரண்ட்டுக்கு பிரச்சனைன்னதும் கவலைப்படுறாளே… அவளோட இந்த முகமும் நல்லா தான் இருக்கு.
ரோஹித் எதுக்கு நீணாகிட்ட அப்படி பேசினான்? அவனுக்கிருக்க பொறுமை வேற யாருக்கும் கிடையாதுன்னு நான் நெனச்சுட்டு இருக்கேன்…”
மறுநாள் காலை நீணாவின் அருகில் அமர்ந்து நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள் மோனிகா. வகுப்பறைக்குள் நுழைந்த ரோஹித் நேராக அவர்கள் அருகில் வந்து “ஹாய் நீணா… நான் கேட்டத பத்தி யோசிச்சியா?” என்று புன்னகையுடன் கேட்க “ஹாய்… அதான் நேத்தே சொல்லிட்டனே ரோஹித்…” என்று பதில் கூறினாள் நீணா.
ரோஹித் வேறு எதுவும் கூறாமல் தன் இடத்தில் சென்று அமர்ந்தான். மோனிகா இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள் ஹர்ஷா அப்போது வகுப்பறைக்குள் இல்லை என்பதை உணர்ந்து மொபைலை எடுத்து அங்கு நடந்தவற்றை அவனுக்கு சுருக்கமாக மெசேஜ் அனுப்பினாள்.
ஹர்ஷா மெசேஜை படித்து விட்டு “இவங்க நார்மலா பேசுற மாதிரி தெரியலயே… என்ன விஷயமா இருக்கும்?” என்று அனுப்பினான். மோனிகாவும் குழப்பத்தில் இருந்ததால் எதுவும் பதில் அனுப்பாமல் அப்படியே விட்டு விட்டாள்.
அன்று மாலை சற்றுத் தொலைவில் ரோஹித் நிற்பதைக் கண்ட நீணா “தோ வந்துடுறேன் மோனி…” என்றுக் கூறி வேகமாக சென்றாள். அவள் பேசத் துவங்கும் முன்னே “நாளைக்குப் பார்க்கலாம் நீணா… பை…” என்றுக் கூறி வேகமாக கிளம்பி விட்டான் ரோஹித்.
அவன் இப்படி யாரையும் புறக்கணிப்பவன் இல்லை என்பதை நன்கு அறிந்த ஹர்ஷா என்ன செய்வதென்றுத் தெரியாமல் விழித்தான். நீணா அவனைப் பார்த்து புன்னகையுடன் தலையசைத்து எதுவுமே நடவாததுப் போல் எதிர் திசையில் சென்று விட்டாள்.
ஹர்ஷா தான் குழம்பிப் போனான். மோனிகாவின் நினைவு வரவே உடனே மொபைலை எடுத்து அவளுக்கு அழைத்தான்.
“உனக்கு லேட் ஆகலன்னா காண்டீன் வரியா மோனிகா?”
“வரேன் ஹர்ஷா” என்றுக் கூறி வைத்து காண்டீன் நோக்கி நடந்தாள்.
தனக்கு முன்பே வந்துக் காத்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவளிடம் செல்லாமல் கவுண்டர் அருகில் சென்று இரண்டு காபி வாங்கி எடுத்து வந்து மோனிகாவின் எதிரில் அமர்ந்தான் ஹர்ஷா. அவனின் இந்த செயல் ஏனோ அவள் மனதில் சாரலடிக்க வைத்தது.
“தாங்க்ஸ்” கப்பை கையில் எடுத்தவள் தான் அறிந்தவற்றைக் கூற அவனும் தான் பார்த்தவற்றை கூறினான்.
இரண்டு நிமிட அமைதிக்குப் பின் மோனிகா மெல்ல தலையை நிமிர்த்தி “ஒரு வேல ரோஹித் நீணாகிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டானா?” என்றுக் கேட்டாள்.
“ச்ச ச்ச… அப்படி இருக்காது…” உடனே அதை மறுத்த ஹர்ஷா சில நொடி யோசனைக்குப் பிறகு “ஒரு வேல அப்படி இருக்குமோ?” என்றுக் கேட்டான்.
தன் முன் இருந்த கப்பின் விளிம்பில் விரலால் தேத்தவள் “அப்படியே இருந்தாலும் நீணா எதுக்கு மறுக்கணும்?” என்றாள்.
“அது அவ விருப்பம் மோனிகா… ஆனா ரோஹித் நல்ல பையன்”
இருவரும் தங்களுக்குள் யோசனையில் மூழ்கினர். வெளியே மெல்ல இருட்டத் துவங்கியது.
“இப்போ என்ன ஹர்ஷா பண்ணுறது?”
“லெட்ஸ் ஸீ… ரெண்டு நாள் என்ன பண்ணுறாங்கன்னு பாக்கலாம்… அப்பறமும் இவங்க சேருற மாதிரி தெரியலன்னா நம்ம ஏதாவது செஞ்சு சேர்த்து வெக்கலாம்”
ஹர்ஷாவின் பேச்சு தெளிவாக இருந்தது. மோனிகாவிற்கும் அதுவே சரியென்று பட “நாளைக்கு பாக்கலாம்…” என்றுக் கூறி கல்லூரியிலிருந்துக் கிளம்பினாள்.
மறுநாள் காலை வந்ததிலிருந்து நீணாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மோனிகா. ஹர்ஷா ரோஹித்தின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் இருவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இந்த பார்வைப் பரிமாற்றம் அன்று முழுவதும் தொடர்ந்தது.
முதலில் நீணாவை பார்த்துவிட்டுத் திரும்பி ஹர்ஷாவை பார்த்து “எதுவும் தெரிந்ததா?” என்றுக் கண்களால் வினவுவாள் மோனிகா.
ரோஹித்தை ஒரு பார்வைப் பார்க்கும்போதெல்லாம் திரும்பி மோனிகாவை பார்த்து அவளின் கேள்விக்கு தலையை அசைத்து விடையளிப்பான் ஹர்ஷா.
நேரம் செல்ல செல்ல ஹர்ஷாவிற்கு மோனிகா என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் என்றுப் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. ஹர்ஷா தன்னைப் பார்க்கிறானா என்றுத் தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டாள் மோனிகா.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சில நொடிகளிலேயே தங்கள் பார்வையைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தனர். ரோஹித் நீணாவை கவனிப்பதில் அவர்கள் கவனம் இருக்கவில்லை.
மாலை நீணாவுடன் செல்வதால் அவள் முன்னால் ஹர்ஷாவிடம் எதுவும் பேச விரும்பாமல் அவன் புறம் திரும்பி லேசாக தலை அசைத்து விடைப்பெற்று சென்றாள் மோனிகா. அவள் கண்களில் இருந்து மறையும் வரை நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
காலை வகுப்பறைக்குள் நுழையும்போது மோனிகாவின் அருகில் நீணா இல்லை என்றதும் வேகமாக அவளிடம் வந்த ஹர்ஷா ஒரு நொடி என்ன பேசுவதென்று யோசித்து “நீணா ஏதாவது சொன்னாளா?” என்றுக் கேட்டான்.
“இல்லையே…”
அமைதியாக செல்ல நினைத்த ஹர்ஷா சட்டேன்றுத் திரும்பி “அவங்க லவ் பண்ணா அது தப்புன்னு நெனைக்குறியா?” என்றுக் கேட்டான்.
“இல்ல இல்ல… ஒண்ணா இத்தன வருஷம் படிச்சிருக்கோம். ஒருத்தர பத்தி ஒருத்தருக்கு நல்லா தெரியும். ஈசியா புரிஞ்சுக்க முடியும். ரோஹித் – நீணா பொருத்தம் நல்லாயிருக்கும்”
அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் எதுவும் கூறாமல் தன் இருப்பிடம் சென்று அமர்ந்தான். அவன் ஏதாவது பதில் கூறுவான் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு அவனின் அமைதி மனதை வாட்டியது.
அதன் பின் பல முறை அவனை திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தாள். எதற்காக என்றே தெரியாமல் அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.
அவள் தன்னைப் பார்ப்பது ஹர்ஷாவிற்கும் தெரிந்தே இருந்தது. ஆனாலும் அவள் புறம் திரும்பாமல் தன் நண்பர்களுடன் பேச ஆரம்பித்தான். மோனிகா பார்க்காதபோது அவளை பார்க்கவும் தவறவில்லை.
2
காலை தன்னிடம் பேசிச் சென்றபின் தன் கண்களிலேயேப் படாமல் இருக்கும் ஹர்ஷாவை எண்ணி மோனிகாவிற்கு வருத்தமாக இருந்தது. ஒரு வேலை ஓடி ஒளிகிறானோ என்று கோபம் கூட வந்தது.
நேரம் ஆக ஆக அவனைக் காணும் ஆவல் அதிகரித்துக் கொண்டே இருக்க “கிளாஸ் பங்க் பண்ணிட்டு எங்க போனான்?” என்று அவள் யோசிக்கும் போதே அந்த நாளின் கடைசி வகுப்பின் பொது உள்ளே வந்தான் ஹர்ஷா.
அவனைக் கண்டதும் துள்ளிய மனதுடன் மாலையாவது அவனிடம் பேச வேண்டும் என்று அவள் நினைத்திருக்க கிளாஸ் முடிந்ததும் முதல் ஆளாய் கிளம்பிச் சென்றிருந்தான் ஹர்ஷா. அவள் அனுப்பிய மெசேஜ் எதற்கும் அவன் பதில் அனுப்பவில்லை.
ஹர்ஷாவிற்கு தான் எவ்வாறு உணர்கிறோம் என்றேப் புரியவில்லை. மோனிகாவை எதற்காக நேற்றிலிருந்து இத்தனை முறைத் திரும்பிப் பார்க்கிறோம் என்றெண்ணிக் குழம்பினான்.
தன் மனதின் குழப்பங்களை பற்றி அவனுக்கு யோசிக்க அவகாசம் தேவைப்பட்டதால் அவளுக்கு எந்த பதிலும் அனுப்பாமல் அன்று முழுவதும் அவளிடம் பேசும் சந்தர்ப்பத்தையும் தவிர்த்து வந்தான்.
அடுத்த நாள் காலை ஹர்ஷா வகுப்பறைக்குள் நுழைந்ததிலிருந்து அவன் இடத்தில் சென்றமரும் வரை அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த மோனிகா, அவன் தன் பக்கம் திரும்பவில்லை என்றதும் எழுந்து அவனருகில் சென்றாள்.
“ஏன் நேத்து எதுவும் சொல்லாமப் போயிட்ட?”
“பேசிட்டேன். கெளம்பிட்டேன்” விளக்கம் எதுவும் கொடுக்காமல் அமைதியாகவே பதில் கூறினான்.
இப்படி சொல்பவனிடம் அடுத்து என்ன பேசுவதென்றுப் புரியாமல் அவள் அமைதியாக நிற்க சிறிது நேரம் அவளையே உற்று நோக்கினான் ஹர்ஷா.
“ஏன் மோனிகா? நான் அமைதியா போனா உனக்கென்ன?”
“இல்ல… அது… அது வந்து… என்னமோ கஷ்டமா இருந்துது…”
உண்மையில் அவன் கேட்ட கேள்விக்கு அவளுக்கு விடைத் தெரியவில்லை. ஏன் என்று பலமுறை தன்னையேக் கேட்டுக் கொண்டாள்.
இவ்வளவு நேரம் அமர்ந்தபடியே அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து நின்றான். நேற்றிலிருந்து தான் யோசித்தது முடிவெடுத்தது என்று அனைத்தும் அவனுக்கு நினைவு வந்தன.
அவள் கண்களைப் பார்த்து “என் கூட இத்தன இயர்ஸ் படிச்சிருக்க… உனக்கு என்னைப் பத்தி தெரியும்… உன்னால என்ன புரிஞ்சுக்க முடியும்… நான் உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லி ப்ரபோஸ் பண்ணா அக்செப்ட் பண்ணுவியா மோனிகா?” என்றுக் கேட்டான்.
அவன் கூறியதைக் கேட்டு முதலில் அதிர்ந்து நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள். ஏனோ அவனின் பார்வையை சந்திக்க முடியாமல் சில நொடிகளிலேயே தலைக் குனிந்தவளின் கன்னம் சிவக்கத் துவங்கியது.
“ம்ம்” வெளிவராதக் குரலில் லேசாக தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள் மோனிகா.
ஷிவானி வாயைப் பிளந்து புருவம் உயர்த்தி கண்கள் விரிய மோனிகா கூறியதனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். மோனிகா அவள் கொடுத்த ரியாக்ஷனை பார்த்ததும் சிரித்துவிட்டாள்.
“எத்தன தடவ அந்த நாட்களப் பத்தி நானும் ஹர்ஷாவும் பேசியிருக்கோம்… அன்னைக்கு ஹர்ஷா எப்படி பீல் பண்ணான்னு அவன் சொல்லுறப்போ எல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும்.
இத நாங்க ரோஹித் நீணாகிட்ட சொன்னப்போ அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. அவங்களால தான் நாங்க சேர்ந்தோம்னுத் தெரிஞ்சதும் எங்கக்கூட இன்னும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டாங்க.
அவங்க அன்னைக்கு எதுக்கு சண்டப் போட்டாங்கன்னு எங்களுக்குத் தெரியாது… இன்னைக்கு வரைக்கும் தெரியாது… அவங்க உண்மையில சண்ட தான் போட்டாங்களான்னுக் கூடத் தெரியாது…
அதுக்கப்பறம் ரொம்ப நாள் கழிச்சு அவங்க லவ் பண்ணுறாங்கன்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டோம். ஆனா அவங்களுக்கு முன்னாடி நாங்க எங்க வீட்டுல பேசி… எங்களுக்கு கல்யாணம் ஆகி… தோ பாத்தியா? 8 மாசம்” மேடிட்டிருந்த தன் பெரிய வயிற்றை தடவிக் காண்பித்தாள் மோனிகா.
ஷிவானி ஏதோ கேட்க வந்து பின் அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.
அவளை முறைத்த மோனிகா “சிரிப்பா இருக்கா? நான் என்ன ஜோக்கா சொன்னேன்? அவங்க ரெண்டுப் பேருக்கிட்டயும் கேர்புல்லா இருக்கணும் தெரிஞ்சுக்கோ…
கூட இருக்க பிரண்ட்ஸ் லவ் பண்ண ஆரம்பிச்சா ‘நம்ம நம்மளோட மனச ரொம்ப பத்திரமாப் பாத்துக்கணும்… இல்லன்னா நமக்கும் ஆச வந்துடும்…‘ அப்படின்னு தான் நம்மளும் நெனைப்போம். ஆனா முடியாது. காதல் தொற்றுநோய் மாதிரி” என்றாள்.
“என்ன வேல பார்த்துட்டு என்ன பேச்சு பேசுற? நீயே இப்படி பேசினா மத்தவங்க ஏன் மோனிகா பேச மாட்டாங்க?”
இருவருமே ஒருமைக்குத் தாவியிருந்தனர். இத்தனை நாட்களாக அவர்களுக்குள் தோன்றாத நெருக்கம் இன்று உருவாகியது போல் இருந்தது.
“அதெல்லாம் அப்படிதான். நேரம் ஆகுது. வா போகலாம்”
“ரோஹித் லவ்வ நீணா எப்போ அக்செப்ட் பண்ணிக்கிட்டா?”.
“யாருக்குத் தெரியும்? ரோஹித் எப்போ ப்ரொபோஸ் பண்ணான்? நீணா எப்போ ஒத்துக்கிட்டா? எதுவும் தெரியாது. நாங்க கேட்டதில்ல. அதுக்கு அப்பறம் எங்களுக்கு அவங்களப் பத்தி யோசிக்க எங்க இருந்துது நேரம்?” லேசாக அசடு வழிந்தபடியே எழுந்தாள் மோனிகா.
ரிசெப்ஷனில் அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்து அருகில் இருந்த அறையின் கதவில் விரல் மடக்கி லேசாகத் தட்டி கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான் ரோஹித்.
“குட்டி பாப்பா இனிமே ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்… என்ன… பீவர் போச்ச்ச்…” இரு கைகளையும் விரித்து தலை சாய்த்து அழகாக புன்னகைத்தாள் நீணா.
அவள் எதிரில் குட்டி தேவதையாய் குண்டு குண்டு கண்களுடன் ஒரு பெண்ணும் அவளுடைய தாயும் அமர்ந்திருந்தனர். அவள் கூறிய விதத்தை ஒரு நொடி ரசித்தவன் “நீணா” என்று மெதுவாக அழைத்தான்.
அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் வேகமாக மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்த்தாள்.
“ஒஹ்ஹ்… 2 மினிட்ஸ்…”
ரோஹித் புன்னகையுடன் “ஓகே” என்றான்.
அருகில் இருந்த பேப்பரில் வேகமாக எழுதி அதை தாயிடம் கொடுத்து டேபிளின் டிராயரைத் திறந்து அதிலிருந்து ஒரு சாக்லேட் எடுத்து அந்த குட்டி பெண்ணின் கையில் கொடுத்தாள்.
அழகாக சிரித்து அதை வாங்கி “தான்கூ” என்றுக் கூறி தன் தாயுடன் அறையை விட்டு வெளியேறினாள் அந்த சிறுமி.
அறை வாசலில் கதவருகே நின்று இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹித். அவர்கள் சென்றதும் டேபிள் மேல் இருந்தவற்றை எடுத்து டிராயரினுள் வைத்துப் பூட்டி ஹான்ட் பேக் எடுத்து மாட்டிக் கொண்டு எழுந்தாள் நீணா.
ரோஹித்தின் அருகில் வந்து “போகலாம்” என்றுக் கூறியதும் அவன் அவளுக்காக கதவைத் திறந்துவிட இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். ரிசப்ஷனில் சொல்லிக் கொண்டு ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டாள் நீணா.
“கெளம்பியாச்சா நீணா? ரோஹித் எப்படி இருக்கீங்க?” என்றுக் கேட்டபடி அவர்களை நோக்கி வந்தார் லக்ஷ்மி.
“நல்லா இருக்கேன்…”
“வீட்டுக்கா? வரீங்களா? டிராப் பண்ணிடுறோம்…”
லக்ஷ்மி இவர்கள் வீட்டின் அருகில்தான் வசிக்கிறார். அவருடைய கணவர் வந்து அழைத்து செல்ல முடியாத நேரங்களில் ரோஹித் நீணாவுடன் செல்வது வழக்கம் என்பதால் நீணா அவரை தங்களுடன் வருமாறு அழைத்தாள்.
“இல்ல நீணா… லேட் ஆகும். நீங்க கிளம்புங்க. ஆனாலும் காலையில வரப்போ எந்த ஸ்மைலிங் பேஸோட வரீங்களோ அப்படியே நைட் வரைக்கும் எப்படி தான் இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கீங்களோ… குட் நைட்” என்றுக் கூறி அவர்களைக் கடந்து சென்றார் லக்ஷ்மி.
அவர்கள் வேலை பார்க்கும் வளாகம் பெரியது. அனைவரும் தங்கள் வாகனங்களை சுலபமாக எடுத்து செல்வதற்காக, முன்புறம் பொது பார்க்கிங்கும் பின் புறம் அங்கே வேலை செய்பவர்களுக்கான தனி பார்க்கிங் ஏரியாவும் இருந்தது.
கட்டிடத்தின் பின்புறம் நோக்கி நடந்தபோது நீணாவை ஓரக் கண்ணால் பார்த்து “அது என்ன எல்லா கொழந்தைங்களுக்கும் சாக்லேட் குடுக்குற? நெறைய ஸ்டாக் வெச்சிருக்கியா?” என்றுக் கேட்டான் ரோஹித்.
“ஒரு பீடியாட்ரீஷியன் (paediatrician) அவங்கக்கிட்ட வர எல்லா கொழந்தைங்களுக்கும் சாக்லேட் குடுக்கணும். அப்போ தான் கொழந்தைங்க டாக்டர்கிட்ட வந்திருக்கோம் அப்படிங்குற பயம் இல்லாம ஜாலியா இருப்பாங்கலாம்” என்றுக் கூறி சிறிது இடைவெளி விட்டு “அவங்க சிரிக்குறதப் பார்த்தா எனக்கு சந்தோஷமா இருக்குமாம்…” என்றாள் நீணா.
“ஓஹோ… யாரும்மா இப்படியெல்லாம் சொன்னா?”
வேகமாக பதில் கூற வாயைத் திறந்து அவனை ஒரு முறைப் பார்த்தவள் பின் நேராய் பார்த்து நடந்தபடியே “அது ஒரு கார்டியக் சர்ஜன் (cardiac surgeon)” என்றாள் அமைதியாக.
“ஓஹோ… அவருக்கு எப்படி உன்னப் பத்தித் தெரியும்?”
“என் ஹப்பிக்கு தெரியாதா என்னப் பத்தி…” என்று நீணா கூறவும் இருவருமே சிரித்தனர். காரின் அருகில் வந்து விடவே அவளுக்காக கதவைத் திறந்து விட்டான் ரோஹித்.
அவர்கள் தங்கியிருந்தது ஒரு கேட்டட் கம்யூனிட்டி. உள்ளே அப்பார்ட்மென்ட்ஸ், வில்லா, தனி வீடு, ரோ ஹவுஸ் என்று அனைத்து வகையறாக்களும் உண்டு. அது பொதுவான இடம் என்றபோதிலும் மருத்துவ நண்பர்கள் பலர் சேர்ந்து அங்கே வீடு வாங்கியதால் அந்த வளாகத்தினுள் ஒரு பகுதி மருத்துவர்கள் குடியிருப்பு போல் ஆகிவிட்டது.
தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு இருவரும் இறங்கி தங்களின் வில்லாவை நோக்கி நடந்தபோது வழியில் தென்பட்டவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே நடந்தனர்.
“என்ன டாக்டர் சார்… இன்னைக்கு லேட் ஆகிடுச்சுப் போல?” என்றக் குரல் கேட்டுத் திரும்பிய ரோஹித் “ஆமா அங்கிள். கொஞ்சம் வேலை ஜாஸ்த்தி” என்றுக் கூறி நடக்க ஆரம்பித்தான்.
அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள் அனைவருக்கும் நீணா ரோஹித் இருவரையும் நன்றாகத் தெரியும். அதிலும் அவர்கள் இருவரும் காலை வாக்கிங் செல்வதால் அந்த நேரத்தில் நடைப்பயிற்சிக்காக வரும் எல்லோரும் அவர்களுக்கு பரிட்சயமாயினர். இப்படி எதிரில் பார்க்கும்போது நலம் விசாரிப்பதும் புன்னகைப்பதும் வாடிக்கையாகிப் போனது.
நீணா தன்னிடம் இருந்த சாவிக் கொண்டு வீட்டைத் திறந்தாள். இருவரும் உள்ளே நுழைந்ததும் “குளிச்சுட்டு டீ போடுறேன் ரோஹித்…” என்றாள்.
“ஏன்? மேடம் குளிச்சுட்டு தான் டீ போடுவீங்களோ??? எனக்கு இப்போவே வேணும்”
கையிலிருந்த ஹான்ட் பாகையும் சில பைல்களையும் ஹாலில் இருந்த டேபிளின் மீது வைத்த நீணா அவனைத் திரும்பிப் பார்த்து “ஹாஸ்பிட்டல்லேருந்து வந்து அப்படியேவா கிச்சென்குள்ளப் போய் டீ போட முடியும்? குளிச்சுட்டு வந்துப் போட்டுத் தரேன் ரோஹித்…” என்றுக் கெஞ்சுதலாய் கூறினாள்.
ஷூவைக் கழட்டி அதனிடத்தில் வைத்து சோபாவில் வந்து அமர்ந்த ரோஹித் சாக்ஸை கழட்டி அருகில் வைத்து சாவதானமாய் நன்றாக சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டு அவளை நேராய்ப் பார்த்து “எனக்கு இப்போ வேணும்” என்றான்.
அவனை இரண்டு நொடிகள் அமைதியாய் பார்த்த நீணா தன் அருகில் டேபிளில் இருந்த தடிமனான புத்தகம் ஒன்றை கையில் எடுத்து அவனை நோக்கி வேகமாக நடந்தபடி “அப்படியே மண்டைலயேப் போட்டன்னா…” என்று அவன் தலையில் அடிப்பது போல் கையைத் தூக்கினாள்.
“ஏய் ஏய்… என்னாதிது?” அவள் செயலைப் பார்த்த ரோஹித் வேகமாக சோபாவிலிருந்து எழுந்தான்.
“அதான் குளிச்சுட்டு வரேன்னு சொல்லுறேன்ல… அப்பறமும் இப்போ இப்போன்னா?” மூச்சு வாங்க கைகளால் புத்தகத்தை ஏந்தியபடி நின்றாள் நீணா.
அவளை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தவன் “அப்போ சரி… நானே டீ போட்டுக்கறேன்” என்றுக் கூறி சமையலறை நோக்கி நடந்தான். கையிலிருந்த புத்தகத்தை மீண்டும் எடுத்த இடத்தில் வைத்து “போட்டுக்கோ போ…” என்றுக் கூறித் திரும்பி நடந்தாள் நீணா.
இரண்டடி சென்றதும் வேகமாகத் திரும்பி சமையலறை வாயிலை எட்டியிருந்த ரோஹித்தை பார்த்து “ஏய் நில்லு…” என்றுக் கத்தினாள்.
அவர்கள் வீட்டில் கிச்சென் மற்றும் டைனிங் ஹால் மட்டும் சற்றேத் தாழ்வானப் பகுதியில் கட்டப்பட்டிருந்தது. ஹாலிலிருந்து மூன்று படிகள் இறங்கி சென்றால் முதலில் டைனிங் ஹாலும் அதைக் கடந்து சென்றால் சமையலறையும் வரும்படியான ஒரு அமைப்பு. படிகளில் வேகமாக இறங்கி ஓடிச் சென்று அவன் முன்னால் நின்றாள் நீணா.
“வழிய விடு. அதான் நானே போட்டுக்குறேன்னு சொல்லிட்டேன்ல… நீ ஒண்ணும் எனக்கு டீ போட்டு தர வேண்டாம்” அவள் தோள் பற்றி அவளை நகற்ற முயற்சித்தான்.
“அய்யோடா… உனக்கு டீ போட்டுக் குடுக்குறேன்னு நான் எப்போ சொன்னேன்? குளிக்காம கிச்சென்குள்ள போகக்கூடாது…”
“நான் போவேன்…” அவளைத் தள்ளி விடுவதில் குறியாய் இருந்தான் ரோஹித்.
“நான் விட மாட்டேன். தள்ளாதடா… இது என் கிச்சென். இதுக்குள்ளக் குளிக்காம எல்லாம் போகக்கூடாது. விடு…” ஒரு கையை அவன் நெஞ்சில் வைத்துத் தள்ளி இன்னொரு கையால் அவள் தோளில் இருக்கும் அவன் கையை விளக்க முயன்றாள்.
“வீடே ரெண்டுப் பேருக்கும் சொந்தமாம்… இதுல கிச்சென் மட்டும் எப்படிடி உன்னோடதாகும்? நகரு முதல்ல…” என்றுக் கூறியவன் இரண்டு கைகளாலும் அவள் தோள் பற்றி அவளை தள்ளிக் கொண்டு சமையலறைக்குள் சென்றான்.
“கிச்சென்குள்ள ப்ப்… போ… போகக்கூடாது… சொன்னாக் கேளுடா………” அவனை விளக்கும் முயற்சியை கை விடவில்லை நீணா.
“கண்ணத் தொறந்து சுத்திப் பாரு… கிச்சென்குள்ள தான் நிக்குறோம்” இதற்கு மேல் அவளிடம் போராடத் தேவையில்லை என்று தன் கைகளை அவள் தோளிலிருந்து எடுத்து மார்புக்குக் குறுக்காகக் கட்டி நின்றான்.
திகைத்துப் போய் சுற்றிப் பார்த்தவள் ரோஹித்தை முறைத்தாள். அவள் சுதாரிக்கும் முன் மேடை மேல் ஒரு மூலையில் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த பால் பாத்திரத்தை எடுத்து “கேட்ச்” என்று சத்தமாகக் கூறி அவளை நோக்கித் தூக்கிப் போட்டான்.
பாத்திரம் தன்னை நோக்கி வரவும் அதுக் கீழே விழுந்து விடாமல் இருக்க அவசரமாக அதைப் பிடித்தாள் நீணா.
“சூப்பர்… இப்போ டீ போடு…” என்றுக் கூறியவன் அவள் இடுப்பை இரு கைகளாலும் பிடித்து அருகில் இழுத்தான்.
அவள் திமிருவதைப் பொருட்படுத்தாமல் அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டு அவளை விளக்கினான். அவன் விலகியதும் நீணா தலையில் கை வைத்துக் கண் மூடி நின்றாள்.
அவளை பார்த்து நமுட்டு சிரிப்புடன் வலது கையை பான்ட் பாக்கெட்டில் விட்டுத் திரும்பி நடந்தான் ரோஹித்.
“அது என்ன ஹாஸ்பிட்டல்லேருந்து வந்து குளிக்காம கிச்சென்குள்ளயேப் போக மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்குறது? அப்போ… நாளைக்கு எனக்கு ஒடம்பு சரி இல்லன்னு சொன்னாக்கூட குளிச்சுட்டு வந்து தான் கஞ்சி வெச்சுக் குடுப்பியா? ஒரு நாள் ரெண்டு நாள்னாப் பரவாயில்ல… தெனம் இதையே சொன்னா? இப்போ எப்படி குளிக்காம உள்ளப் போன?”
சோபாவில் கிடந்த தன்னுடைய உடமைகளையும் நீணா வைத்தவற்றையும் கையில் எடுத்துக் கொண்டு படுக்கையறை நோக்கி நடந்தான்.
கண்களைத் திறந்த நீணா தலையிலிருந்த கையை எடுத்து அடுப்பை ஒரு முறைப் பார்த்து உப்ப்ப்ப் என்று வாயைக் குவித்து பெருமூச்சு விட்டாள்.
சின்க்கின் அருகில் இருந்த ஹாண்ட் வாஷ் எடுத்து கைகளை நன்றாக சுத்தம் செய்து பால் பாத்திரத்தையும் ஒரு முறை கழுவி அடுப்பில் வைத்து பிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்துப் பிரித்து அதில் ஊற்றினாள்.
அவள் டீ தயாரித்து இரண்டு கப்புகளில் எடுத்துக் கொண்டுத் திரும்பிய நேரம் சமையலறை வாயிலில் ரோஹித் நின்றிருந்தான். அமைதியாக அவனை நோக்கி நடந்து வந்து ஒரு கப்பை அவனிடம் நீட்டினாள். அவளைப் பார்த்துக் கொண்டே அதை வாங்கியவன் அருகில் இருந்த பிரிட்ஜின் மீது வைத்தான்.
அவனைக் கண்டுக் கொள்ளாமல் நீணா டீ அருந்த கப்பை வாய் அருகில் எடுத்துச் சென்ற நேரம் “ஹே என்ன பண்ணுற? குளிக்காம எல்லாம் டீ குடிக்கக் கூடாது… ஹாஸ்பிட்டல்லேருந்து வந்தா குளிக்கணும் நீணா… தெனம் நீதான சொல்லுவ? குடு குடு…” என்றுக் கூறி அவள் கையில் இருந்த கப்பை டீ கீழேக் கொட்டி விடாமல் ஜாக்கிரதையாக வாங்கி பிரிட்ஜின் மீது வைத்தான்.
“ஒரு டீ கூட குடிக்க விட மாட்டியா? ஏன் இப்படிப் படுத்தற?” கப்பை அவன் கையிலிருந்து வாங்க முயன்றாள்.
“சொன்னாக் கேளு நீணா… குளி வா…” அவளை இரு கைகளிலும் தூக்கினான்.
“விடு ரோஹித்… எதுக்குத் தூக்கின?” என்றவளை குனிந்துப் பார்த்து “விடுன்னு சொல்லுறத இப்படி தான் சொல்லுவாங்களா? கழுத்த சுத்தி கைப் போட்டு… நல்லா வசதியா நெஞ்சுல சாஞ்சுக்கிட்டே??” என்றுக் கேட்டான்.
உடனே அவன் நெஞ்சிலிருந்து தலையை நிமிர்த்தி “விடுறியா இல்லையா?” என்றுத் திமிறியவளைக் குளியலறைக்குள் இறக்கி விட்டவன் அவள் திரும்பும் முன் கதவை இழுத்து வெளியில் தாழிட்டான்.
“கதவ திறடா…” கதவில் படப்படவென்று அடித்தவளைக் கண்டுக் கொள்ளாமல் “குளிச்சுட்டு வாடி…” என்றுக் கூறி சமையலறைக்கு சென்றான்.
ஒரு டீ கப்பை எடுத்து சிறிய தட்டுக் கொண்டு மூடி வைத்தவன் பிரிட்ஜின் மீதிருந்த மற்றொரு கப் டீயை எடுத்துப் பருக ஆரம்பித்தான்.
“டேய்… உள்ள தூக்கிட்டு வந்து விட்டியே… டிரஸ் எடுத்துக் குடுக்க மாட்டியா? எங்க இருக்க ரோஹித்? சீக்கிரம் வா… எவ்வளவு நேரம் உள்ளயே நிக்குறது?” குளியலறையிலிருந்துக் கத்திக் கொண்டிருந்தாள் நீணா.
“மனுஷன ஒரு டீ குடிக்க விடுறாளா? என்னா சவுண்டு…” புலம்பியபடிக் கழுவிக் கொண்டிருந்த டீ கப்பை மேடையில் கவிழ்த்து வைத்து விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தான் ரோஹித்.
“அதான் உள்ள துண்டு இருக்கும்ல… கட்டிட்டு வந்து நீயே எடுத்துக்க வேண்டியது தான?” குளியலறை வெளியில் நின்று சத்தமாகக் கூறினான்.
“டிரஸ் எடுத்துக் குடுக்க முடியுமா? முடியாதா?” நீணா மென்றுத் துப்பிய வார்த்தைகள் கதவின் வெகு அருகில் கேட்டன.
அவள் கதவில் சாய்ந்து நின்று தான் பேசுகிறாள் என்பதுப் புரிய ரோஹித்தும் கதவில் சாய்ந்து நின்று “டிரஸ் எல்லாம் எடுத்து குடுக்க முடியாது” என்றான்.
நீணா கையை மடக்கி கதவில் ஓங்கிக் குத்த அவள் குத்திய வேகத்தில் தன்னிச்சை செயலாக கதவை விட்டு சிறிது நகன்ற ரோஹித் “ஹேய்… இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…” என்றான்.
இரண்டு வினாடி அமைதிக்குப் பின் கதவின் தாழை நீக்கும் சத்தம் கேட்க குளியலறை வாயிலின் குறுக்கே கை வைத்து வழியை மறித்து நின்றான்.
வேகமாக கதவைத் திறந்தவள் அவன் கையை அலட்சியமாகத் தட்டி விட்டு கட்டிய துண்டுடன் சென்று கப்போர்டை திறந்து உடைகளை எடுத்து மீண்டும் அவனை கடந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
சுவரில் சாய்ந்து குளியலறையைப் பார்த்தபடி நின்றவன் அவள் வெளியே வரவும் “என்ன மேடம்கு கோபமா?” என்றுக் கேட்டான்.
அவனைத் திரும்பி முறைத்த நீணா “இப்படி டிரஸ் எடுத்துக் குடுக்காம விளையாடதன்னு எத்தன தடவ ரோஹித் சொல்லுறது?” என்றுக் கேட்டாள்.
“இப்போ என்ன ஆச்சு? அதான் துண்ட கட்டிட்டு வந்து நீயே டிரஸ் எடுத்துக்கிட்டல்ல?” புன்னகையுடன் கூறியவனைக் கண்டதும் நீணாவின் எரிச்சல் அதிகமானது.
“இப்படி செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு சிரிக்காத ரோஹித்…. பாக்கவேப் பத்திக்கிட்டு வருது…” இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டுக் கத்தினாள்.
“க-த்-தா-த” ஒவ்வொரு எழுத்தாக அழுத்தம் கொடுத்து அடிக் குரலில் கூறினான் ரோஹித்.
“ஐயோ இந்த வார்த்தையக் கேட்டா… அதுவும் நீ சொல்லுற பாரு… இப்படிக் கேட்டா எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா?” குரலை சற்றும் தாழ்த்தாமல் கூறினாள் நீணா.
“நீணா க-த்-தா-த” இப்போதும் அதேப் போல் கூறினான் ரோஹித்.
3
ரோஹித் நீணா கத்துவதை நிறுத்த சொன்னதும் அவனை முறைத்து அறையை விட்டு வெளியேறி சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அவள் அமைதியாக சென்றிருந்தால் ரோஹித் விட்டிருப்பானோ என்னவோ… அவள் முறைத்துவிட்டு செல்லவும் “இப்போ எதுக்கு முறைக்குற?” என்றுக் கேட்டு அவள் பின்னோடு வந்தான்.
சடாரென்று அவனைத் திரும்பிப் பார்த்தவள் “முறைக்கக் கூட எனக்கு உரிமை இல்லையா ரோஹித்?” என்றாள்.
“இப்போ எதுக்கு நீணா கத்துற?”
“நான் கத்துறனா?” நெற்றி சுருக்கி அவள் கேட்ட விதத்தில் கோபத்தின் சாயல் எட்டிப் பார்த்தது.
ரோஹித் ஏதோக் கூற வாயைத் திறக்கவும் வீட்டின் அருகில் பலமாக நாய் குறைக்கும் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது. இருவருமே சமையலறை விட்டு வெளியே செல்லத் திரும்பினர்.
நீணாவும் அவனுடன் வருகிறாள் என்பதை கவனித்தவன் அவள் கைப் பற்றி பிரிட்ஜ் அருகில் இழுத்துச் சென்று அதன் மீதிருந்த கப்பை எடுத்து அவள் கையில் திணித்து விட்டு வேகமாக வெளியேறினான்.
அவன் மீது கோபம் கொண்டிருந்த மனம்… அவன் பேசியவற்றைக் கேட்டு அயர்ந்திருந்த மனம்… இப்போது லேசாகிப் பறப்பது போல் இருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் புன்னகையில் விரிந்த உதடுகளை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஹாலிற்கு வந்து கதவின் அருகில் சென்ற ரோஹித் அதில் இருந்த சிறு துவாரத்தில் பொருத்தப்பட்டிருந்த லென்ஸ் வழியாக வந்திருப்பது யார் என்று எட்டிப் பார்த்தான்.
வெளியில் நின்றிருந்த நபரைக் கண்டதும் “ஷ்ஷ்ஷ்ஷஷ்…” என்ற நீண்டப் பெருமூச்சை வெளியேற்றி முகத்தில் செயற்கையாக ஒரு புன்னகையை ஒட்ட வைத்து கதவைத் திறந்தான்.
“ஹலோ டாக்டர்… வீட்டுல தான் இருக்கீங்களா? நீணாவும் வந்தாச்சா? சத்தத்தையேக் காணுமேன்னுப் பார்த்தேன்…”
வாயெல்லாம் பல்லாக இவ்வாறு கூறியவரைக் கண்டதும் பற்களை நர நரவேன்றுக் கடித்தவன் “வந்துட்டோம் அங்கிள். நீணா உள்ள தான் இருக்கா. இப்போ தான் வந்தோம். பேசிட்டு இருந்தோம்” என்றுக் கூறிய நேரம் நீணா அங்கே வந்தாள்.
“ஹலோ மிஸ்டர் சுந்தரேசன்… எப்படி இருக்கீங்க? பாத்தே ரொம்ப நாளாச்சு… நே…த்து நைட் வந்தவங்க… அதுக்கு அப்பறம் இப்போ தான் வரீங்க? ரொம்ப பிஸியா?”
ரோஹித் சிரிப்பை அடக்கப் பெரும்பாடுப் பட்டுக் கொண்டிருந்தான்.
“ஹா ஹா ஹா… நீணா… பிசி எல்லாம் இல்ல மா… உங்களுக்கு ஒரு லெட்டர் வந்துது. அதான் குடுக்கலாம்னு வந்தேன். கதவுக்கிட்ட வந்ததும் உள்ள சத்தமே இல்லையா? அதான்… நீங்க இருக்கீங்களோ இல்லையோன்னு…”
அசடு வழிந்தார் நரைத்தத் தலையுடன் கையில் ஒரு நாயை பிடித்தபடி நின்றிருந்த சுந்தரேசன்.
“ம்ம் ம்ம்…”
தலையை பலமாக ஆட்டிய நீணா ரோஹித்தின் அருகில் வந்து நின்று அவன் கைப் பற்றிக் கொண்டாள். லெட்டரை அவன் கையில் கொடுத்தவர் “அப்போ சரி… நான் போயிட்டு வரேன்…” என்றுக் கிளம்ப எத்தனித்தார்.
“மறக்காம நாளைக்கும் லெட்டர் கொண்டு வாங்க மிஸ்டர் சுந்தரேசன்… பை…” புன்னகையுடன் கூறியவள் கதவைத் தேவைக்கதிகமான வேகத்துடனே மூடினாள்.
“வேற வேலையேக் கிடையாது… பக்கத்து வீட்டுல இருந்துட்டு… எப்போப் பாரு இங்க என்ன நடக்குதுன்னுப் பார்க்குறதே வேலையா வெச்சுக்கிட்டுத் திரியுறாங்க… ச்சை… நம்ம லெட்டர் நமக்கு எடுத்துக்கத் தெரியாதா? அதான் எல்லா வீட்டுக்கும் தனித் தனியா லெட்டர் பாக்ஸ் வெச்சிருக்காங்களே…
இது ஒரு சொத்த லெட்டர்… இப்படி தினம் நூறு லெட்டர் வருது… அதான் டெய்லி காலையில லெட்டர் பாக்ஸ் பாக்குறோமே… அது தெரிஞ்சும் எப்படிதான் இப்படி தினம் ஒரு சாக்கு வெச்சு வந்து விசாரிப்பாங்களோ?.”
தலையில் அடித்துக் கொண்டுப் புலம்பியவளை சிரிப்புடன் பார்த்தான் ரோஹித்.
“நீ எதுக்கு இப்போ சிரிக்குற?”
“எனக்கு சிரிப்பு வருது சிரிக்குறேன்… சரி நைட்டுக்கு என்ன சமையல்?”
அவனை முறைத்து “உனக்கு எதுவும் கிடையாது போ…” என்றுக் கோபமாகக் கூறி ஹாலின் விளிம்பில் இருந்த படிகளின் மேல் படியில் சென்று அமர்ந்தாள்.
தன் கை விரல்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தவளை அலட்சியமாகப் பார்த்தவன் ஸ்டடி ரூமிற்குள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.
வீட்டில் படுக்கையறைகள் அல்லாமல் புத்தகங்கள் வைப்பதற்காகவே ஒரு சிறிய அறையை ஒதுக்கி வைத்திருந்தனர். அங்கே இருவரும் அமர்ந்து படிக்க வசதியாக இரண்டு தனி தனி டேபிள் சேர் போடப்பட்டிருந்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேல் படிப்பதில் மூழ்கியவன் தனக்குத் தேவையான மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் எடுத்து முடித்து நிமிர்ந்தபோது மணி ஒன்பதிற்கு மேல் ஆகியிருந்தது. டேபிள் மேல் இருந்த பொருட்களை ஒழுங்குப்படுத்தி அறையின் விளக்கை அணைத்து வெளியே வந்தான்.
கைகள் இரண்டாலும் கால்களைக் கட்டி, முகத்தை பக்கவாட்டில் திருப்பி முட்டியின் மீது வைத்து படியில் அமர்ந்திருந்த நீணா, ரோஹித் வெளியே வரவும் அவனையேப் பார்த்தாள்.
அவளை நோக்கி செல்ல ஒரு அடி எடுத்து வைத்தபோது அவனின் கைபேசி சிணுங்கவே சார்ஜில் இருந்ததை எடுத்து அழைப்பது யார் என்றுப் பார்த்தான்.
திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் வேகமாக அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் புன்னகையுடன் அழைப்பை ஏற்று காதில் வைத்து “ஹலோ” என்றுக் கூறி அவள் அருகில் அவளை உரசியபடி வந்தமர்ந்தான்.
நீணா நகர்ந்து அமர எத்தனிக்கவும் இடது கையால் அவள் தோளைச் சுற்றி கைப் போட்டு இழுத்துப் பிடித்து “உங்க மருமகளுக்கென்ன? நல்லா தான் இருக்கா… போன் பண்ணா பையனப் பத்தி விசாரிக்க மாட்டீங்களா? எப்போப் பாரு அவளையேக் கேக்குறீங்க?” என்றுக் கூறும்போதே அவன் கையிலிருந்த மொபைலை பறித்தாள் நீணா.
“எப்படி அத்தை இருக்கீங்க? ஏன் ரெண்டு நாளா போன் பண்ணல? மாமா நல்லா இருக்காங்களா?” என்று அவள் அடுக்கிக் கொண்டேப் போக “பாருடா… புருஷன்கிட்ட அந்த கத்துக் கத்திட்டு மாமியார்கிட்ட பம்முறத…” என்று ரோஹித் அவள் காதில் மெதுவாகக் கூறினான்.
அவன் அவ்வளவு அருகில் நெருங்கி வந்தமர்ந்ததும் நீணா அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் தோளை சுற்றிப் போட்டிருந்த கையை கழுத்தை சுற்றிப் போட்டு அவளை இன்னும் அருகில் இழுத்தபோது விழாமல் இருக்க அவன் மடி மீதே கையை ஊன்றி அமர்ந்தாள்.
ரோஹித் அவள் காதருகில் வந்து பேசியதும் அவனின் சூடான மூச்சுக் காற்றும், அவள் காது மடலில் அவன் உதடுகளின் தீண்டலும் அவளை சிலிர்க்கச் செய்தன.
இதற்கிடையில் அவள் கேட்டக் கேள்விகள் அனைத்திற்கும் ரோஹித்தின் தாய் மஞ்சு பதில் அளித்து முடித்திருந்தார்.
அதன் பின்பும் அவளிடமிருந்து பதில் இல்லாமல் போகவே காதில் வைத்திருந்த மொபைலை ஒரு முறை எடுத்துப் பார்த்தவர் “கட் ஆகலையே…” என்றுத் தனக்குள் கூறி “ஹலோ நீணா… இருக்குறியா கண்ணு?” என்று உரக்கக் கேட்டார்.
அந்த சில நொடிகள் கண்களை மூடி ரோஹித்தின் மீதே முழுதாக சாய்ந்து அமர்ந்திருந்தவள் மஞ்சுவின் குரலில் சுதாரித்து “ஹான்… அத்… அத்தை… இருக்கேன்… நான் இருக்கேன்… சொல்லுங்க எப்படி இருக்கீங்க?” என்று அவர் எவ்வளவு நேரமாக காத்துக் கொண்டிருக்கிறாரோ என்றப் பதட்டத்தில் வேக வேகமாக பேசினாள்.
ரோஹித் சத்தம் வராமல் சிரித்து அவளையேப் பார்த்தான். அவனிடம் இருந்து விலகி அமர நீணா செய்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.
அவள் விலக நினைத்த ஒவ்வொரு முறையும் ரோஹித் வேகமாக அவளை இழுக்கவும் அவன் மடி மீதே மீண்டும் வந்து விழுந்தவள் இனி தப்ப முடியாது என்பது நன்றாகத் தெரிந்ததும் அசையாமல் அவன் அருகிலேயே அமர்ந்தாள்.
“நீணா என்ன கண்ணு ஆச்சு? நல்லா இருக்குறியா? ஏங்கண்ணு குரலே இவ்வளவுப் பதட்டமா இருக்குது? ஏதும் பிரச்சனையா? அவன் உன்ன ஏதும் சொன்னானாக்கும்?” என்றுக் கேட்டார் மஞ்சு.
“அதெல்லாம் இல்லங்க அத்த… ஏதோ யோசனையில இருந்துட்டேன்… மச்சான் எதுவும் சொல்லல. பக்கத்துல தான் இருக்காங்க…” அவனை முறைத்தபடியேக் கூறினாள் நீணா.
“ஓஹ்… சரி நீணா… சும்மா தான் உங்கக்கிட்டப் பேசுறதுக்கு போன் போட்டேன்… ஒடம்பப் பார்த்துக்கோ கண்ணு… நேரத்துக்கு சாப்பிடு என்ன… சரி வெச்சுடவா?”
“சரிங்க அத்த…”
அவளின் இந்த “மச்சான்” என்ற அழைப்பு அவனுக்குப் பிடிக்கும். அவர்கள் ஊர் வழக்கப்படி கணவனை பெண்கள் அழைக்கும் முறை… இருவருமே சென்னையில் படித்து வளர்ந்தவர்கள் என்பதால் ஊர் வழக்கம் எல்லாம் ஊரோடு மட்டும் என்றாகிவிட்டது.
அவளுடைய பெற்றோர்கள் முன்னால், அவனுடைய பெற்றோர்கள் முன்னால் நீணா ரோஹித்தை “மச்சான்” என்றே அழைப்பாள். பொதுவாக அப்படி அழைப்பதை அவர்கள் ஊரில் ரோஹித்தும் கேட்டிருக்கிறான்.
ஆனால் திருமணத்திற்கு பின் முதல் முறை பெரியோர்கள் முன்னால் நீணா அவனை அப்படி அழைத்ததும் அடக்க முடியாமல் சிரித்துவிட்டான். போக போக அதுவே பழகி மனதிற்கு இதமாக இருந்தது.
என்னதான் சிறு பிள்ளைத்தனமாக சண்டை போட்டுத் திரிந்தபோதும் அவளின் இந்த அழைப்பைக் கேட்கும்போது ‘தான் அவளுடைய கணவன்’ என்ற எண்ணம் தோன்றி கர்வம் கொள்ள செய்யும்.
“கைய எடு முதல்ல…. மறுபடியும் போன் அடிக்குதுப் பாரு… எடு அத…. கைய எடு……….”
நீணாவின் குரலில் தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவன் மீண்டும் அடிக்கத் துவங்கியிருந்த மொபைலை பார்த்து “உங்கப்பா” என்றுக் கூறி அழைப்பை ஏற்று “சொல்லுங்க அங்கிள்…” என்றான்.
“நல்லா இருக்குறீங்களா? என்ற மக உங்கள கண் கலங்காம ஒழுங்காப் பார்த்துக்குறாளுங்களா?” என்றுக் கேட்டு சிரித்தார் தினேஷ்.
“நல்லா இருக்கேங்க அங்கிள்… நீணா பார்த்துக்காம வேற யாருங்க அங்கிள் பார்த்துக்கப் போறா? நீங்க எப்படி இருக்கீங்க? ஆன்ட்டி எப்படி இருக்காங்க?”
அருகில் அமர்ந்திருந்த நீணா நெளிவதை ஓரக் கண்ணால் ரசித்தபடியேதான் பேசினான். அவள் இடுப்பில் தன் விரல்களால் கோடு போட்டு அவளை இம்சித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் நெளிவாள் என்று தெரியாதா என்ன…
“அவள விட்டுக் குடுக்க மாட்டீங்களே… எப்படி இருக்குறா?”
“நல்லா இருக்காங்க அங்கிள்…” என்றவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
அவன் சற்றும் எதிர்ப்பாராத் தருணத்தில் அவனின் டீ ஷர்ட்டை இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்து அவன் இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள் நீணா.
“அப்பறம்… எப்போ இங்க வரீங்க? உங்களயெல்லாம் பார்த்தே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குதுங்க…”
தினேஷ் பேசுவதைக் கேட்ட ரோஹித் நீணாவிடமிருந்து விலக முயன்றான். அவனின் முயற்சியை உணர்ந்தவள் டீ ஷர்ட்டை விடுத்து அவன் கழுத்தை சுற்றி கைப் போட்டு இன்னும் அழுத்தமாக அவன் இதழ்களை மூடினாள்.
“ரோஹித்? லைன்ல இருக்குறீங்களா?”
ரோஹித் தன் பலம் மொத்தமும் திரட்டி நீணாவின் தோளை ஒற்றை கையால் பற்றித் தள்ளி விட்டு “சாரி அங்கிள்… சிக்னல் சரியா கிடைக்கல… சீக்கிரமே வரோம் அங்கிள்… ரெண்டுப் பேருக்கும் சேர்ந்த மாதிரி லீவ் கெடைக்கட்டுங்க… வரோம்” என்றான்.
எதையோ சாதித்துவிட்டக் களிப்பில் நீணா அவனையே பார்த்த வண்ணம் புன்னகையுடன் அமர்ந்திருக்க ரோஹித் அவளை தீ பார்வைப் பார்த்தான்.
“சரிங்க ரோஹித். வெச்சுறட்டுமா?” என்று தினேஷ் கேட்கவும் “சரிங்க அங்கிள்” என்றுக் கூறி காலை கட் செய்தவன் “அறிவில்ல?” என்று அடிக் குரலில் கத்தினான்.
“ஓஹ்… இருக்கே…” அலட்சியமாகக் கூறி எழுந்து படிகளில் இறங்கினாள் நீணா.
“ஏய்… கேட்டுக்கிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்குப் போற?” அவள் பின்னால் சென்று அவள் தோள் பற்றி வேகமாகத் தன் பக்கம் திருப்பினான்.
“எதுக்குக் கத்துற? நான் என்ன செஞ்சேன்?”
“உங்கப்பா என்ன நெனைப்பாங்க? லூசு மாதிரி எதுக்குடி அப்படி செஞ்ச?”
“என்ன நெனைப்பாங்க? உங்கம்மா என்ன நெனச்சாங்களோ அதையே தான் நெனச்சிருப்பாங்க… நீ செஞ்சா தப்பில்ல… நான் செஞ்சது மட்டும் தப்பா?” என்றுக் கூறித் திரும்பியவளைக் கைப் பற்றி நிறுத்தினான்.
“ஒளறாத… அம்மா எதுவும் நெனச்சிருக்க மாட்டாங்க. அதோட நான் ஒண்ணும் உன்ன பதில் பேச விடாமப் பிடிச்சு வெச்சில்லயே…”
“நீ எதுவுமே செய்யலையா?” அவனை மேலும் கீழும் பார்த்து நக்கலாகக் கேட்டாள் நீணா.
“நான் உன் காதுக்கிட்ட வந்து பேசுனதுக்கு நீ அப்படி பேசாம அமைதியா இருந்தா அதுக்கு நான் பொறுப்பாடி?” மீண்டும் அவன் குரல் உயர்ந்திருந்தது.
“கடைசியா தள்ளி விட்டியே… அதே மாதிரி முதல்லயேத் தள்ளி விட்டிருக்க வேண்டியது தான? நீ பேசாம இருந்ததுக்கு நான் பொறுப்பா ரோஹித்?” என்றுக் கேட்டவள் கையை அவன் பிடியிலிருந்து உருவிக் கொண்டாள்.
தன் மீதும் தவறிருப்பதால் அவள் பேசும் வார்த்தைகளை பொறுமையாகக் கேட்க வேண்டும் என்று அமைதியாக நின்றிருந்தான் ரோஹித். ஆனால் அவள் தன் கையை வெடுக்கென்று உருவிக் கொண்டதும் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.
“உன்ன ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு நெனச்சேன் பாரு… என் தப்பு…
நான் பிடிச்சுத் தள்ளுற வேகத்தில நீ விழுந்து படில இடிச்சுக்கிட்டா என்ன செய்யுறதுன்னு யோசிச்சேன் பாரு… என் தப்பு…
உங்கப்பா பேசுறத ஒரு காதுலக் கேட்டாலும்… அவரு லைன்ல காத்திருக்காருன்னுத் தெரிஞ்சாலும்… நீ கிஸ் பண்ணத ரசிச்சேன் பாரு… என் தப்பு தான்டி…
அப்பயேப் பிடிச்சுத் தள்ளி விட்டு ஓங்கி ஒண்ணு விட்டிருந்தா நீ இப்படியெல்லாம் பேசுவியா?” கண்களில் அனல் பறக்கக் கேட்டான் ரோஹித்.
“நீ அடிக்குற வரைக்கும் நான் வேடிக்க பார்த்துக்கிட்டு இருப்பேன்னு நெனைச்சியா?” பதிலுக்கு சூடாகவேக் கேட்டாள் நீணா.
“ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் நீ வாங்கத்தான் போற… அன்னைக்குத் தெரியும்… ஆனா என் கையால அடி வாங்கிடாத… செத்த்த்துடுவ….” என்றுக் கூறியவன் அவளின் கைகளை நொறுங்கும் அளவிற்கு இறுக்கிப் பிடித்திருந்தான்.
நீ என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள் என்பது போல் அவனைப் பார்த்து கையை முறுக்கி வளைத்து நெளித்து அவன் பிடியிலிருந்து உருவிக் கொண்டு சமையலறை நோக்கி நடந்தாள் நீணா.
“பேசிக்கிட்டே இருக்கேன்… என்னடி நீ பாட்டுக்குப் போற?”
சட்டென்று நின்று அவனைத் திரும்பிப் பார்த்து “என்ன செய்யணும்னு சொல்லுற? மணி இப்பயே ஒன்பதரை… நான் சமைக்க வேண்டாமா? உன் கூட நின்னுக் கத்திக்கிட்டே இருந்தா சாப்பாடு யாரு செய்வா?” என்று நிதானமாகக் கேட்டாள் நீணா.
“என்னமோ நான் உனக்கு ஹெல்ப் பண்ணாத மாதிரி பேசுற? தெனம் ரெண்டுப் பேரும் சேர்ந்து தான நைட் சமைக்குறோம்… இன்னைக்கு நீ மட்டும் அமைதியா சமைக்கப் போனா என்ன அர்த்தம்?” என்றவனின் குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.
கண்களை ஒரு முறை அழுந்த மூடித் திறந்தவள் “இப்போ உனக்கு என்னப் பிரச்சன? நான் உன்ன விட்டுட்டு சமைக்கப் போனதா? இல்ல எங்கப்பாக்கிட்ட பேச விடாம கிஸ் பண்ணதா?” என்றுப் பொறுமையாகக் கேட்டாள்.
“ஏய் என்னடி ஓவரா பேசுற? நீ செஞ்சக் காரியத்துக்கு இப்படி நின்னு பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன் பாரு… நீ ஏன் பேச மாட்ட? நகரு…”
அவள் இரு தோள்களிலும் கை வைத்துப் பிடித்துத் தள்ளி விட்டு சமையலறைக்குள் புகுந்துக் கொண்டான் ரோஹித்.
அவன் தள்ளிய வேகத்தில் விழாமல் இருக்க சுவற்றை பிடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு திரும்பிப் பார்த்தாள். ரோஹித் பிரிட்ஜிலிருந்து தேங்காய் எடுத்து அதை துருவுவதற்குத் தயார் செய்துக் கொண்டிருந்தான்.
“பேசுறதெல்லாம் பேசிட்டு… நல்லவன் மாதிரி தேங்கா துருவ போறியா?”
பல்லைக் கடித்து அவன் அருகில் சென்றவள் “நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்… குடு…” என்றுக் கூறி அவன் கையில் இருந்தத் தேங்காய் மூடியைப் பிடுங்கப் பார்த்தாள்.
“ஏற்கனவே கடுப்புல இருக்கேன்… பசி வேற வயித்தக் கிள்ளுது… போய்டு… இல்ல வாய்க்குள்ள விட்டு திருகிடுவேன்…”
கையிலிருந்த தேங்காய் துருவியை அவள் வாய்க்கு நேராக பிடித்து அவன் சுழற்றிக் காட்டிய விதமும், பசி என்று அவன் சொன்ன வார்த்தையும் நீணாவை அமைதியாக நகரச் செய்தன.
தோசை மாவை எடுத்து வைத்து அடுப்பில் கல்லை போட்டு சட்னி அரைப்பதற்கு அவனுக்கு உதவினாள்.
எப்போதும் அவர்கள் வீட்டில் இருந்தால் யாரேனும் ஒருவர் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்குமே தலை வெடித்து விடும்.
கடந்த சில நிமிடங்களாக பாத்திரங்களின் சப்தம் தவிர பேச்சு சத்தம் எதுவும் இல்லாமல் நீனாவிற்கு தலை வெடித்தது.
இப்போது அவள் பேசவும் முடியாது… கடுப்பில் இருக்கும் ரோஹித்தை பேச சொல்லவும் முடியாது… இரண்டும் வீண் பிரச்சனையில் முடியும்.
என்ன செய்வதென்று யோசித்தவள் அமைதியாக ஹாலிற்கு வந்து தன் மொபைலைத் தேடி எடுத்து மீண்டும் சமையலறைக்குள் வந்தாள். கல்லில் தோசையை ஊற்றியபடியே மொபைலில் எண்களை அழுத்தி விட்டு காதில் வைத்தாள்.
மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும் “மோனி சாப்பிட்டியா? மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிட்டியா? இந்த மாதிரி நேரத்துல கவனமா இருக்கணும்…” என்று அக்கறையாகக் கேட்டாள் நீணா.
மோனிகா ஒரு கைனகாலஜிஸ்ட் (gynecologist). நண்பர்களாய் இருந்தாலும் அவரவருக்குப் பிடித்ததை அவரவர் படித்தனர். ஹர்ஷா மட்டும் ரோஹித்துடன் சேர்ந்து கார்டியக் சர்ஜன் ஆகி விட்டான்.
“ஹே… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல? எனக்குத் தெரியாததா? வீட்டுல என்னைப் பார்த்துக்க பக்கத்துலயே ஹர்ஷா வேற இருக்கான்…”
அருகில் நின்றிருந்த ஹர்ஷாவை காதலாய் பார்த்து அவன் கழுத்தை சுற்றி கைப் போட்டு அருகில் இழுத்து தன் நெற்றியை வைத்து அவன் நெற்றியில் செல்லமாய் முட்டி “ஆனாலும் நீ தெனமும் போன் பண்ணிக் கேக்குற” என்றாள் மோனிகா.
“டாக்டர்னா மட்டும் எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிடுதா என்ன? சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கே…”
ரோஹித்தை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டேக் கூறிய நீணா “அதோட உன் மேல எனக்கு அக்கறை இல்லையா மோனி? ஹர்ஷா பக்கத்துல இருக்குறதால தான் என்னாலக் கொஞ்சம் நிம்மதியா இருக்க முடியுது…” என்றுப் புன்னகையுடன் கூறினாள்.
“சும்மாவே என்னை விட்டுட்டு எங்கயும் போக மாட்டான்… இப்போ எல்லாம் இப்படி அப்படி அசையறதில்ல… இவன் சர்ஜன் தான? ஏதாவது பிரச்சன ஆச்சுன்னா நெஞ்ச கிழிச்சு ஆபரேஷன் பண்ணுறவன் கொஞ்சம் கீழ இருக்க வயத்த கிழிக்க மாட்டானா என்ன? நீ ஒண்ணும் பயப்படாத நீணா…”
“ஒரு சர்ஜனோட வைப் மாதிரியா பேசுற? ஏதோ கசாப்பு கடக்காரன் பொண்டாட்டி மாதிரி பேசிக்கிட்டு… குடு இங்க…” ஹர்ஷா அவள் கையிலிருந்த மொபைலை வாங்கி “நான் பார்த்துக்குறேன் நீணா” என்றான்.
“ஆமாமா… பத்தாததுக்கு என் அம்மா வேற எங்க வீட்டுலயே வந்து தங்க ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகுது… சென்னையிலயே இருக்குறதால அப்பாவும் வீக்கென்ட் வந்திடுறாங்க…
இவங்க எல்லாரும் சேர்ந்து அத சாப்பிடு இத சாப்பிடுன்னு என்ன கொடுமப்படுத்துறது பத்தாதுன்னு நீ வேற ஏன்டி டெய்லி போன் பண்ணி ஏத்தி விடுற?”
மோனிகா உரக்க கத்தியதை கேட்டதும் சிரிப்புடன் “ஓகே குட் நைட்” என்றுக் கூறி வைத்தாள் நீணா.
அவள் பேசுவதையேக் கேட்டுக் கொண்டிருந்த ரோஹித அவள் அழைப்பைத் துண்டிப்பதற்காகவேக் காத்திருந்தது போல் அவள் அருகில் வந்து “யார குத்திப் பேசுற?” என்றுக் கேட்டு அவளைத் தன் பக்கம் திருப்பினான்.
அவனை முறைத்து அடுப்பை அணைத்தவள் ஒரு தட்டை எடுத்து தோசை வைத்து சட்னி ஊற்றி ஒரு சிறிய துண்டைப் பிய்த்து சட்னியில் நனைத்து ரோஹித்தின் வாயில் திணித்து “அது உனக்கேத் தெரியும்” என்றாள்.
“என்னடி ந…”
அவனை பேச விடாமல் அடுத்தடுத்து தோசையை அவன் வாயில் திணித்தவள் அவன் அவற்றை மென்று விழுங்கும் இடைவெளியில் தானும் உண்டு முடித்தாள். பசியின் காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் ரோஹித்தும் பேசாமல் அவள் தருவதை அமைதியாக சாப்பிட்டான்.
நீணா தட்டை வைத்து கைக் கழுவி விட்டுத் திரும்பவும் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து “எப்படி எப்படி… எங்களுக்கு எதுவும் தெரியாது… நீங்க சொல்லிக் குடுக்குறீங்களா?” என்றுக் கேட்டவன் அவள் வலது கைப் பற்றி இழுத்தான்.
அவன் மீது வந்து விழுந்தவள் நிமிர்வதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் அவள் கன்னத்தை இரு கைகளாலும் பற்றித் தன் முகத்தின் அருகில் கொண்டு வந்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான் ரோஹித்.
4
மெல்லிசையாய் ஒலித்த இனிய கிட்டார் (guitar) ஓசையில் கண்களை லேசாக திறந்துப் பார்த்தாள் நீணா. ரோஹித்தின் மொபைலில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது. கண்களை மூடி அவன் மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்திவிட்டு ஏஸியின் குளிருக்கு இதமாக போர்வையை கழுத்து வரை இழுத்து போர்த்தி தூங்க ஆரம்பித்தாள்.
காட்டு கத்தலாய் கத்திய ஆம்புலன்ஸ் சைரன் ஒலியில் இருவரும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தனர். “ஷப்பா…” நீணா தலையில் கை வைத்து அமர ரோஹித் அலறிக் கொண்டிருந்த அவள் மொபைலை எடுத்து அலாரத்தை நிறுத்தினான். சலிப்பாக மெத்தையில் இருந்து இறங்கப் போனாள் நீணா.
“படு நீணா… லேட்டா எந்திரிக்கலாம். நைட் லேட்டாதான தூங்குன?”
“இல்ல ரோஹித்… கிளம்பணும்”
அவள் கையைப் பிடித்திழுத்து படுக்க வைத்தவன் “பேசாம படு…” என்றுக் கூறி அவள் மீதே படுத்து உறங்க ஆரம்பித்தான். அவளுக்குமே மிகவும் களைப்பாக இருந்ததால் உடனயே உறங்கிப் போனாள்.
அரை மணி நேரம் கழித்து மீண்டும் நீணாவின் மொபைலில் சைரன் சத்தத்துடன் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.
“ரோஹித் எந்திரி. இதுக்குதான் சொன்னேன்… பாரு டைம் ஆகிடுச்சு. எந்திரிடா… என்னா வெயிட்டா இருக்கான்? டேய் தடிமாடு…”
அவனைப் புரட்டிக் கீழே தள்ளுவதற்குள் நீனாவிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. இவ்வளவிற்கும் ரோஹித் கண்ணைக் கூட திறந்துப் பார்க்கவில்லை.
“தூங்குறத பாரு… நல்லா கும்பக்கர்ணன் மாதிரி…”
அவன் போர்வையை உருவி மடித்து அவன் கைக்கு எட்டாதவண்ணம் டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் இருக்கும் சிறிய ஸ்டூலில் வைத்துவிட்டு ஏஸியின் குளுமையை அதிகப்படுத்தியப் பிறகே அவள் பல் தேய்க்க சென்றாள்.
குளிர் தாங்க முடியாமல் மெத்தையில் போர்வையைத் துழாவிய ரோஹித் அது கிடைக்கவில்லை என்றதும் எரிச்சலுடன் கண்களைத் திறந்துப் பார்த்தான்.
“போய் குளி போ…” அவன் முகத்தில் துண்டை விட்டெறிந்தவள் குளித்து வாக்கிங் செல்ல தயாராக ட்ராக் சூட்டில் இருந்தாள். இதற்கு மேல் தூங்க முடியாதென்று அவனும் எழுந்து குளியலறைக்குள் சென்றான்.
“ஒண்ணுக்கு ரெண்டு அலாரம் அடிச்சாலும் அசையுறதுக் கிடையாது…” தினப்படி அரங்கேறும் நாடகமிது… காலையில் முதலில் ரோஹித்தின் மொபைலில் மெல்லிசை ஒலிக்கும். அது அவன் அலாரம் டோன்.
நல்ல உறக்கத்தில் இருக்கும்போது மெதுவாக ஒலிக்கும் கிட்டார் இசைக்கெல்லாமா எழப் போகிறோம் என்ற எண்ணத்தில் அடுத்த பத்து நிமிடத்தில் நீணாவின் மொபைலில் சைரன் ஒலியை அலாரமாக வைத்திருந்தனர்.
ஒரு சில நாட்களில் மிகவும் சோர்வாக இருக்கும்போது இரண்டாவது அலாரத்தையும் அணைத்துவிட்டு தூங்க நேர்ந்தால் மீண்டும் எழுவதற்காக அரை மணி நேரம் கழித்து அதே சைரன் அலாரத்தை செட் செய்திருந்தனர்.
ஒரு சில நாட்களுக்கு தேவைப்படும் என்று இவர்கள் செய்த இந்த ஏற்பாட்டில் தான் தினம் துயில் எழுவதே…
நீணா மெத்தையை சரி செய்து, ஸ்டூலின் மீது அவள் வைத்த போர்வையை எடுத்து வந்து மெத்தையில் வைத்தாள். ரோஹித் குளித்து முடித்து வந்ததும் இருவருமாக வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
அவர்கள் வில்லாவின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் சாலை வழியாக சென்று அருகில் இருக்கும் பூங்காவை வட்டமடித்துவிட்டு வருவார்கள். இல்லையேல் அதற்கு எதிர் திசையில் சென்று அருகில் உள்ள குடியிருப்புகளை சுற்றி வருவார்கள்.
முதலாவது நீணாவின் விருப்பம். இரண்டாவது ரோஹித் கண்டறிந்த வழி.
“ரோஹித் நேத்து தான அந்த சைட் போனோம்? இன்னைக்கு பார்க் சுத்தி வருவோம்”
“இல்ல நீணா… பார்க் சுத்தி நிறைய பேரு நடக்குறாங்க. பிரீயாவே இல்ல… வா இன்னைக்கும் இப்படியே போவோம்”
“எனக்காக கொஞ்ச தூரம் வர மாட்டிய ரோஹித்?”
நான்கடி அவளுடன் நடந்தவன் “ஆன்… கொஞ்ச தூரம் நீ சொன்ன மாதிரி வந்துட்டேன். இப்போ வா இந்த சைட் போகலாம்” என்றான்.
“கொஞ்ச தூரம்னா இப்படி இல்ல ரோஹித்… அட்லீஸ்ட் பார்க் கிட்ட வரைக்கும் போகலாம்…”
“எனக்காக கொஞ்ச தூரம் வர மாட்டியா நீணா?” என்று ரோஹித் கேட்டதும் அவனை போலவே செய்தவள் “ம்ம்… நானும் கொஞ்ச தூரம் வந்துட்டேன். இப்போ வா பார்க்குக்கு போகலாம்” என்றாள்.
“சொன்னா கேளு நீணா…”
செக்குமாடு கூட ஒரே இடத்தை சுற்றி சுற்றி வரும். இவர்கள் இருவரும் கடந்த இருபது நிமிடங்களாக வாக்குவாதம் செய்தபடியே அவர்கள் வீட்டின் பக்கவாட்டில் இந்த கோடியிலிருந்து அந்த கோடிக்கும் அந்த கோடியிலிருந்து இந்த கோடிக்கும் நடந்துக் கொண்டிருந்தனர்.
“என்ன ரோஹித்? இன்னைக்கு வீட்டுக்கிட்டயே வாக்கிங்கா?” பின்னாலிருந்துக் கேட்ட பரமேஸ்வரனின் குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர். என்ன பதில் கூறுவதென்று அவர்கள் விழிக்க தானே பேச்சை தொடர்ந்தார் பரமேஸ்வரன்.
“லாங் வாக் போகாம… இப்படி ஷார்ட் டிஸ்டன்ஸ்ல குறுக்கும் நெடுக்கும் நடக்குறதுக்கு என்னமோ…… பேரு பாத்த ஞாபகம்… ரிட்டையர் ஆகி பத்து வருஷம் ஆச்சுல்ல… வர வர மறதி ஜாஸ்தி ஆகிடுச்சு.
நான் அத எழுதி கூட வெச்சேன். அது…. ஹான்… பெண்டுலம் வாக் (pendulum walk). சரிதான? உடம்புக்கு ரொம்ப நல்லதாமே? நானும் நாளையில் இருந்து ட்ரை பண்ணி பாக்குறேன். வரேன்…”
ரோஹித்தும் நீணாவும் “இது என்ன புது கதை?” என்று மனதில் தோன்றிய சந்தேகத்துடன் அமைதியாக இருக்க அவரே பேசி அவரே முடிவெடுத்து அவர் வழியே சென்றுவிட்டார் பரமேஸ்வரன்.
போகும் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் “ஹர்ஷா வீட்டுக்கு…” “மோனி வீட்டுக்கு…” என்று ஒரே நேரத்தில் ஆரம்பித்தனர்.
“வா போகலாம்…” என்றுக் கூறி ரோஹித் நடக்க அந்த வழியே தான் பரமேஸ்வரன் சென்றார் என்பதால் “இந்த பக்கம் போகலாம்” என்றாள் நீணா. அவனும் உடனே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
ஹர்ஷா வீடும் அதே கேட்டட் கம்யூனிட்டியின் உள்ளே தான் இருந்தது. பத்து நிமிட நடையில் வந்தடைய வேண்டிய அவர்கள் வீட்டை… பரமேஸ்வரனிற்கு பயந்து… எங்கே மீண்டும் அவர் கண்ணில் பட்டால் “பெண்டுலம் வாக்” குறித்து ஏதேனும் கேள்விக் கேட்பாரோ என்று அஞ்சி… சுற்றி வளைத்து இருபத்தைந்து நிமிடங்களில் வந்து சேர்ந்தனர்.
பால் கவரை எடுப்பதற்காக வெளியே வந்த மோனிகாவின் தாய் கல்யாணி வீட்டின் கேட்டை திறந்தவர்களை பார்த்ததும் “வாங்க வாங்க… எங்க ரெண்டு நாளா ஆளையே காணும்?” என்று அவர்களை வரவேற்றார்.
இருவருக்கும் வேர்த்து மூச்சு வாங்கியது. வீட்டின் உள்ளே வந்ததும் “கொஞ்சம் தண்ணி குடுங்க ஆன்ட்டி” என்றுக் கேட்டான் ரோஹித்.
கல்யாணி உள்ளே சென்றதும் தங்கள் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு ஹர்ஷாவும் மோனிகாவும் வந்தனர்.
“வாடா… இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டீங்க போல இருக்கு?”
ஹர்ஷா ரோஹித்துடன் அமர்ந்து பேச “டயர்டா இருக்கா மோனி?” என்றுக் கேட்டு அவளுடன் பேச ஆரம்பித்தாள் நீணா. கல்யாணி வந்து அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தார்.
“வாக்கிங் போறதும் நல்லது தான்…” கல்யாணி பொதுவாக சொல்ல நீணாவிற்கு புரை ஏறியது. ரோஹித்தை பார்த்தாள். அவன் சிரிப்பை அடக்கி கையில் இருந்த தண்ணீரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“பார்த்து நீணா…” மோனிகா அவள் தலையில் தட்ட “மெதுவா குடி மா…” என்றார் கல்யாணி.
“இல்ல ஆன்ட்டி… இப்போ சரியாகிடுச்சு“ என்ற நீணா பேச்சை மாற்றும் விதமாக “இன்னைக்கு என்ன சமையல்?” என்றுக் கேட்டாள்.
“ஏன்டி அத வேற ஞாபகப்படுத்துற? கொல்லுறாங்க… எங்கேந்து தான் இந்த ரெசிபி எல்லாம் கண்டுப் பிடிப்பாங்களோ?? எங்கம்மா தினம் படுத்துறாங்கன்னா வாரம் ரெண்டு நாள் மட்டும் வந்து உக்காந்துக்கிட்டு எங்கப்பா குடுக்குற இம்சை இருக்கே…..”
“போதும் ரொம்ப தான் அலுத்துக்காத… எதையுமே சாப்பிடுறதில்ல நீணா. ஒவ்வொரு வேலையும் வற்புறுத்தி சாப்பிட வெக்க முடியுமா சொல்லு? நீயெல்லாம் உன்கிட்ட வர பேஷண்ட்ஸ்கிட்ட வக்கனையா பேச மட்டும் தான் லாயக்கு…”
கல்யாணியை முறைத்த மோனிகா “பாரு ஹர்ஷா…” என்றுக் கூறி அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
“விடுங்க அத்த… சாப்பிட டைனிங் டேபிள்ல உக்காருவா இல்ல? அப்போ கவனிச்சுபோம்…”
ஹர்ஷாவும் தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றதும் மோனிகா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்தாள். இனி ஹர்ஷா அவளை கொஞ்சி சமாதானம் செய்து…
தாங்கள் இங்கே இருப்பது சரியில்லை என்றுத் தோன்ற “சரி ஆன்ட்டி நாங்க கிளம்புறோம்…” என்றுக் கூறி எழுந்தாள் நீணா. “ஹாஸ்பிட்டல்ல பார்ப்போம்” ரோஹித்தும் விடைப்பெற்றான்.
இம்முறை எப்போதும் செல்லும் பாதையிலேயே சென்று வீட்டை அடைந்தனர். நீணா குளிக்க செல்ல ரோஹித் அந்த பத்து நிமிடம் மீண்டும் உறங்கலாம் என்றெண்ணி சென்றுப் படுத்தான்.
அவன் எழுந்தபோது வீட்டினுள் கிட்டத்தட்ட ஓடிக் கொண்டிருந்தாள் நீணா. கொட்டாவி விட்டபடிக் குளிப்பதற்காக தோளில் துண்டைப் போட்டு மெதுவாக ஹாலை எட்டிப் பார்த்தவனைப் புயலெனக் கடந்து அறைக்குள் நுழைந்தாள்.
அவள் கையைப் பிடித்து நிறுத்தி “எதுக்கு இப்படி ஓடிக்கிட்டு இருக்க?” என்றுக் கேட்டான் ரோஹித்.
“ஏன் கேக்க மாட்ட நீ? காலையில எந்திரிச்சதே லேட்… வாக்கிங்கும் உருப்படியா போகல… வேலையெல்லாம் முடிச்சு கிளம்ப வேண்டாமா?”
அவளை நிதானமாக மேலிருந்து கீழ் வரைப் பார்த்த ரோஹித் “காலையில சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டியது தான?” என்றுக் கேட்டான்.
“கேப்படா கேப்ப… நைட் சண்டப் போட்டு முடிக்கவே பல மணி நேரம் ஆச்சு. அதுக்கு அப்பறம் கொஞ்ச ஆரம்பிச்சு… நீ என்னையத் தூங்க விட்டதே பாதி ராத்திரிக்கு மேல… காலையில அலாரம் அடிச்சதும் முழிச்ச என்னை எழுந்திரிக்க விட்டியா? அமுக்கிப் புடிச்சு ‘படு நீணா…… நைட் லேட்டா தான தூங்குன… லேட்டா எழுந்திரி’ னுப் படுத்துன…”
ரோஹித் முதலில் முகத்தை சீரியசாக வைத்து அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். கடைசியாக நீணா தான் கூறியதை பழித்து சொல்லிக் காட்டியதும் வாய் விட்டு சிரித்துவிட்டான்.
“ஹேய்… பாவமே… நைட் ஒழுங்கா தூங்கலயே… காலையிலயும் எதுக்கு சீக்கிரம் எழுந்திரிக்கணும்னு சொன்னா… ரொம்ப பேசுறடி. நீ எதுவும் சமைக்க வேண்டாம். காலையில பிரட் ஜாம் சாப்பிடலாம். கிளம்பு. இப்படி ஓடிக்கிட்டே இருக்காத” என்றவன் நீணாவை இறுக்கி அணைத்து விடுவித்தான்.
அவ்வாறே சாப்பிட்டுக் கிளம்பியவர்கள் அவரவர் பையை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தனர்.
ஹாலை அடைந்ததும் ரோஹித்தை ஒருமுறை பார்த்த நீணா கதவருகில் கீ ஸ்டாண்டில் மாட்டியிருந்த கார் சாவியை எடுக்க வேகமாக ஓடினாள்.
“நேத்து என்னை ஏமாத்திட்டு இப்படி தான சாவிய எடுத்து நீ கார் ஓட்டிட்டு வந்த? இன்னைக்கு நான் தான் டிரைவ் பண்ணுவேன்…”
தன் வாயாலேயே தனக்கான குழியை மிக ஆழமாகப் பறித்தாள் நீணா.
அவள் ஓட ஆரம்பித்ததுமே கார் சாவியை எடுப்பதற்காக ஓடுகிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
‘நேற்று நீ செய்ததற்கு இன்று பதிலுக்கு நான் செய்கிறேன்’ என்று அவள் சொன்னதும் உதட்டில் புன்னகை மறைந்து தாடை இறுக அப்படியே நின்றான்.
சாவியை கையிலெடுத்துத் திரும்பிப் பார்த்தவள் ரோஹித் நின்ற நிலையைப் பார்த்ததும் புருவம் உயர்த்தி என்ன என்றுக் கேட்டாள்.
“நேத்தும் இதே தான் பண்ண… நான் காதுக்கிட்ட வந்து பேசுனதுக்கு பதிலா என்னைப் பிடிச்சு இழுத்து கிஸ் பண்ணுறேன்னு பேச விடாமப் பண்ண… எதையுமே யோசிக்கவே மாட்டியா நீணா?” என்றுக் கேட்டவனின் குரலில் நீணாவிற்கு உள்ளுக்குள் சிலீரென்றது.
ரோஹித் இப்படி அமைதியாக அழுத்தமாகக் கேள்விக் கேட்கும்போதெல்லாம் அவர்களுக்குள் பெரிய வாக்குவாதம் வந்திருக்கிறது. ஒரு முறை சண்டையிட்டு காலையில் வெளியேக் கிளம்பி சென்றவன் மாலை தான் வீடு வந்து சேர்ந்தான்.
இப்போதும் அப்படி பெரிய பிரச்சனை எதுவும் வந்து விடக் கூடாதே என்று பயந்து “இத பத்தி தான் நேத்தே பேசி முடிச்சுட்டோமே ரோஹித்… இப்போ எதுக்குத் திரும்ப ஆரம்பிக்குற?” என்றுக் கேட்டு கதவைத் திறக்க அதில் கை வைத்தாள்.
“பேசல நீணா. இத நம்ம இன்னும் பேசி முடிக்கல”
மெதுவாகத் திரும்பி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ரோஹித் நின்ற இடத்தை விட்டு அசையாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நேத்து நீ தான ரோஹித் இத பத்தி பேசுறத நிறுத்துன? இப்போ எதுக்குத் திரும்ப ஆரம்பிக்குற?” தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்று அவனைக் கேள்விக் கேட்டாள்.
“சரி இப்போ பேசலாம். சொல்லு… எதுக்கு அப்படி செஞ்ச?”
அவளுக்கு எரிச்சலாக இருந்தது. நேற்று இரவு ஆரம்பித்த சண்டை… நேற்றே பேச ஆரம்பித்து… பாதியில் நிறுத்தி… முடிந்து விட்டதாக அவள் நினைத்த ஒன்றை காலை வேளையில் மருத்துவமனைக்கு கிளம்பும் நேரத்தில் மீண்டும் ஆரம்பிக்கிறானே என்றிருந்தது.
“எதுவா இருந்தாலும் ஈவ்னிங் பேசலாம் இப்போ வா…” என்றுக் கூறி கதவைத் திறந்தாள்.
வீட்டின் வெளியே ஒரு காலை வைத்துத் திரும்பிப் பார்த்தபோது ரோஹித் சிலை போல் நின்றிருந்தான்.
ஒரு ஆழ மூச்சை இழுத்து விட்டு “சாரி” என்றுக் கூறி வேகமாக வெளியே வந்தவள் நிற்காமல் காரை பார்க் செய்திருக்கும் இடம் நோக்கி நடந்தாள். பாதி தூரம் சென்ற பிறகு தான் வீட்டின் சாவி தன் கையில் இருப்பதை கவனித்தாள்.
அது ரோஹித்தின் சாவி. அவளுடையது அவள் கைபையில் இருந்தது. அதை தேடி எடுக்கும் பொறுமை இல்லாமல் முந்தைய தினம் அவன் ஹாலில் வைத்திருந்த அவனுடைய சாவியை எடுத்து பூட்ட நினைத்திருந்தாள். இப்போது இரண்டு சாவிகளும் அவள் கையில்…
நடப்பதை நிறுத்தி திரும்பிப் பார்த்தாள். ரோஹித் வீட்டின் வெளியே நின்று இவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஐயோ ஒழுங்கா வீட்டப் பூட்டிட்டு வந்திருக்கலாம்… இப்போ திரும்ப இவன்கிட்டப் போகணுமா?” மனதிற்குள் தன் தவறிற்கு வருந்தியபடியே அவனை நோக்கி மெல்ல நடந்தாள்.
அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் வேகமாக கதவைப் பூட்ட நினைத்தவளின் கைகள் லேசாக நடுங்கி சாவி அதன் துளைக்குள் நுழைய மறுத்தது. பதட்டம் அதிகரிக்க சாவியைத் திருப்பியவளின் கையிலிருந்து நழுவி அது ரோஹித்தின் காலடியில் விழுந்தது.
“சுத்தம்….. இன்னைக்கு நேரமே சரியில்ல…” தலையில் கை வைத்து நின்றாள் நீணா.
குனிந்து சாவியை கையில் எடுத்தவன் “இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டம்?” என்றுக் கேட்டு சாவியை கதவின் துவாரத்தில் நுழைத்தான்.
“நீ திட்டுவியோன்னு தான்…” வார்த்தைகள் வாயிலிருந்து வந்த அளவிற்கு சத்தம் வரவில்லை.
ரோஹித் அவளைத் திரும்பிப் பார்த்து “ம்ம்?? நான் திட்டுவேன்னு நீ பயப்படுறியா? நடிக்காதடி…” என்று புன்னகையுடன் கூறி சாவியை தன் பையினுள் வைத்தான்.
அவ்வளவு நேரம் தலைக் குனிந்து நின்றிருந்தவள் வெடுக்கென்று நிமிர்ந்தாள்.
“உன்கிட்ட எத்தன தடவ ரோஹித் சொல்லுறது? நடிக்காதன்னு சொல்லாத. கேக்கவேக் கேவலமா இருக்கு. என்ன வார்த்தை அது?” என்று உக்கிரமாகக் கேட்டாள்.
அவளை அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்து நடக்க ஆரம்பித்தவன் “உண்மை தான? நீ நடிக்குற தானடி?” என்றான்.
“ஏய்…… சொல்லாதன்னு சொல்லுறேன்ல? அப்படி சொல்லாத. எனக்குப் பிடிக்கல”
வார்த்தைகளை மென்றுத் துப்பி அவன் நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடையும் ஓட்டமுமாக அவன் பின்னால் சென்றாள்.
“நீ மட்டும் எனக்கு பிடிச்சதயே தான் செய்யுறியா? நேத்து நீ செஞ்சதுக் கூட தான் எனக்குப் பிடிக்கல…”
நீணாவிற்கு ஐயோ என்றிருந்தது. இதை இவன் விடவே மாட்டானா என்றுக் கத்த வேண்டும் போல் இருந்தது.
பதில் கூற முடியாமல் அமைதியாக நடந்தாள். இந்த இடைவேளையில் அவள் கையில் இருந்த கார் சாவியை அவள் அறியாமல் வாங்கி இருந்தான் ரோஹித்.
அவன் கார் கதவை திறந்தபோதும் சாவி பறிப்போனதை அவள் உணரவில்லை. அவள் அமைதியாக அமர அவனும் எதுவும் கூறாமல் உள்ளே அமர்ந்து சீட் பெல்ட்டை மாட்டினான்.
காரை எடுத்தவன் அவளின் அமைதிப் பிடிக்காமல் அவளை சீண்டி பேச வைத்தான். அவளை வம்பிழுத்து சண்டைப் போட வைத்தான்.
“இப்போவும் நீ அமைதியா இருக்குறதுக்கு என்ன அர்த்தம்?”
“ஒரு அர்த்தமும் இல்ல. நீ ரோட்ட பார்த்து வண்டி ஓட்டு”
“ஹேய்… சும்மா சொல்லாத… என்ன யோசிக்குற சொல்லு…”
“நான் எதுவுமே யோசிக்கல. நீ கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா?”
“ஒரு விஷயம் கவனிச்சியா நீணா? இன்னைக்கும் நாந்தான் கார் ஓட்டுறேன்…”
அப்போதுதான் அவனை திரும்பி பார்த்தாள் நீணா. எப்போதும் அவளே ஏமாந்து போவதாக தோன்றியது. “இல்லை… ஏமாற்றப்படுகிறோம்” என்று திருத்தி யோசித்தாள்.
“என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல? இது ஒரு சின்ன விஷயம். எனக்கும் கார் ஓட்ட ஆசையா இருக்கு. இருக்கிறது ஒரு கார்… வாரத்துல ஒரு நாளாவது என்னை டிரைவ் பண்ண விடுறியா?
தினம் எப்படியாவது என் கையிலேருந்து கார் சாவிய வாங்கிடுற… நானும் போனா போகுது போனா போகுதுன்னு பார்த்தா… ஒரு தடவையாவது எனக்கு விட்டுக் குடுக்குறியா?”
சிக்னல் ஒன்றில் கார் நின்றபோது அதை கவனிக்காமல் அவள் அவன் புறம் திரும்பி அமர்ந்து கைகள் இரண்டையும் ஆட்டி ஆட்டி பேசியதை அருகில் இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர்.
மூடியிருந்த ஏஸி காரின் வெளியே சப்தம் கேட்காவிட்டாலும் அவள் பேசிய விதத்தை பலரும் விநோதமாகப் பார்க்கவே முதலில் அவளை முறைத்து காரைக் கிளப்பியவன் “அசிங்கமா இல்ல? தெருவுல போறவங்க எல்லாம் வேடிக்க பார்க்குற அளவுக்கா நடந்துப்ப?” என்றுக் கேட்டு அவளை மேலும் கத்த வைத்தான்.
“நான் எதுவும் பண்ணல… அமைதியா உக்கார்ந்திருந்த என்னை யாரு பேசி கத்த வெச்சா? இப்போ கடைசில என் மானம் தான் போகுது. அதுக்கும் நீ என்னையே சொல்லுவியா?”
“நான் என்னமா பண்ணேன்? அமைதியா இருக்கியே என்ன யோசிக்குறன்னு கேட்டேன்… இது ஒரு குத்தமா?”
ஹாஸ்பிட்டல் வந்திறங்கி காரை பார்க் செய்து அவர்கள் செல்ல வேண்டிய பிரதானக் கட்டிடத்திற்கு வரும்வரை இவர்களின் இந்த சீண்டல்கள் தொடர்ந்துக் கொண்டே இருந்தன.
“எப்பயும் நீ எதுவுமே பண்ணதில்ல… நான் தான் எல்லாமே பண்ணுறேன்… தப்பு எல்லாமே என்னோடது தான்…”
கண்ணாடி கதவில் கை வைத்துத் தள்ளும்போது “எதுக்கு நீணா இப்போ கத்திக்கிட்டே வர?” என்றுக் கத்தினான் ரோஹித்.
கதவின் மறுபக்கம் ஹர்ஷாவை கண்டதும் “ஓகே நீணா… லஞ்ச்ல எனக்கு வெயிட் பண்ணாத. ஒரு சர்ஜரி இருக்குன்னு நேத்தே சொன்னேன்ல… சோ நீ சாப்பிட்டுடு. டேக் கேர். பை” என்றான்.
“பை” என்று அவனைப் பார்த்து புன்னகைத்தாள் நீணா. ஹர்ஷா அவளைப் பார்த்துத் தலை அசைத்து விட்டு ரோஹித்துடன் நடக்க ஆரம்பித்தான். அவர்கள் இருவரும் ஏதோ கலந்தாலோசித்துக் கொண்டே நடப்பதுத் தெரிந்தது.
தன் பகுதி நோக்கி நடந்த நீணா “கதவுக்கு அந்த பக்கம் இருந்த வரைக்கும் கத்திட்டு… கதவத் திறந்து ஹர்ஷாவ பார்த்ததும் ‘டேக் கேர் நீ……..ணா……‘ னுப் பொறுப்பா பேசிட்டு போறதப் பாரு…
இதுல நேத்தே சொன்னேன்ல வேற… நேத்து நீ எந்த சர்ஜரி பத்திடா சொன்ன? சண்ட போடவும் சமரசம் ஆகவும் தானே சரியா இருந்துது?” என்று மனதிற்குள் ரோஹித்தை வசைப் பாடிய வண்ணம் நடந்தாள்.
தன்னுடைய கேபின் அருகே வந்தவள் வெளியே ரிசப்ஷனில் ரிஜிஸ்டரை எடுத்து கையெழுத்திட்டு தான் ட்யூட்டி பார்க்க வந்த நேரத்தையும் அதில் குறித்து வைத்தாள்.
கேபினுக்குள் வந்ததும் கையிலிருந்தவற்றை டிராவை திறந்து அதில் வைத்து விட்டு வெள்ளை கோட்டை மாட்டிக் கொண்டு போனை எடுத்து முதல் பேஷண்ட்டை உள்ளே அனுப்புமாறு உத்தரவிட்டாள்.
தனக்கு எப்போதும் உதவியாக அங்கே இருக்கும் நர்ஸ் மேரியிடம் திரும்பி அவருடன் சில நிமிடம் பொதுவாக பேசினாள். உள்ளே வந்த ஒரு சுட்டி பையனை பார்த்ததும் மற்றவை அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒரு மருத்துவராய் செயல்படத் துவங்கினாள் நீணா.
5
கதவை இருமுறை தட்டி விட்டு உள்ளே நுழைந்த மோனிகாவை பார்த்ததும் அவசரமாக மணியைப் பார்த்தாள் நீணா. ஒன்றரை ஆகியிருந்தது.
எப்போதும் நீணாவும் மோனிகாவும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள். அதிலும் இப்போது மோனிகா கர்ப்பமாக இருப்பதால் சரியாக ஒரு மணிக்கு அவளுடைய அறைக்கு சென்று அவளை சாப்பிட அழைத்துவிடுவாள் நீணா.
இன்று தன்னால் மோனிகாவும் சாப்பிட நேரமாகிவிட்டதை எண்ணி, மணியை பார்க்காத தன் தவறிற்காக தலையில் அடித்துக் கொண்டு அணிந்திருந்த வெள்ளை கோட்டை கழற்றி சேரின் பின்னால் போட்டு சாப்பாட்டு டப்பாவை எடுத்து இருக்கையை விட்டு எழுந்தாள்.
“மேரி உங்களுக்கும் நேரம் ஆச்சில்ல? நீங்களும் சாப்பிட்டு வந்திடுங்க…” என்று நர்ஸிடம் கூறி கதவை நோக்கி நடந்தாள்.
“சாரி மோனி… இன்னைக்கு டைமே பார்க்கல… ஒரு குட்டிப் பொண்ணு மாத்திரை சாப்பிட படுத்தி எடுத்துட்டாடி… அவள சாப்பிட வெக்குறதுக்குள்ள தலைகீழா நின்னு தண்ணிக் குடிக்க வெச்சுட்டா… ஷ்ஷ்ஷ்… நான், அவ அம்மா, மேரி… மூணுப் பேரும் சேர்ந்து கூட சமாளிக்க முடியல…”
சற்று நேரத்திற்கு முன்னால் அவளுடைய அறையில் நடந்தவைகளை நினைவு கூர்ந்தாள் நீணா.
நிரோஷாவை பரிசோதித்து முடித்ததும் “நிரு பாப்பாக்கு பீவர் இருக்கு. நான் மெடிஸின்ஸ் எழுதி தரேன். இப்போ ஒரே ஒரு டேப்லட் மட்டும் போட்டுக்குவீங்களாம்… என்ன நிரு?” என்றுக் கேட்டு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதத் துவங்கினாள் நீணா.
அதுவரை வாயே திறவாமல் அமைதியாக அமர்ந்திருந்த நிரோஷா “ஊச்சி?” என்றுக் கேட்டாள்.
“ஊசி எல்லாம் வேணாம் நிரு… டேப்லட் மட்டும் சாப்பிட்டா போதும்…”
நீணா மேரியிடம் மாத்திரை எடுத்து வர சொன்னாள். அவர் அதை கவரிலிருந்து பிரிக்க நிரோஷாவின் தாய் அவர் கையிலிருந்த பையில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்தார்.
“நானு…” என்றுக் கூறி கையை நீட்டினாள் நிரோஷா.
“அவ கையில குடுங்க மேரி… அவளே போட்டுக்கட்டும்” என்று நீணா கூற மேரியும் மாத்திரியை கொடுத்தார்.
அதை இரண்டு நொடி உற்று பார்த்த நிரோஷா “பெச்ச்ச்சு…” என்றுக் கூறி மாத்திரியை நீணாவின் கையில் கொடுத்தாள்.
சிறிய போட்டு சைஸில் இருந்த மாத்திரியை பார்த்து “இதுவே பெருசா?” என்று நீணா நினைக்க “எப்பயும் டேப்ளட்ஸ் ஒடச்சுதான் குடுப்போம்…அந்த பழக்கத்துல சொல்லுறாப் போலருக்கு… நிரு மா… இது குட்டி டேப்லட் டா… பாருங்க…” என்றார் அவளின் தாய்.
“ம்ம்ஹும்… பெச்சு…” தான் கூறியதுதான் சரியென்று பிடிவாதம் பிடித்தாள் நிரோஷா.
வேறு வழியின்றி “ஒடைக்க முடியுதா பாருங்க மேரி…” என்றாள் நீணா.
மேரியும் ஒரு சிறிய காகிதத்தை மடித்து அதன் நடுவில் மாத்திரையை வைத்து பேப்பர் வெயிட் கொண்டு அடித்து உடைக்க முயன்றார்.
ஆனால் மாத்திரை தூள் தூளானது. மாத்திரை பெரிதாக இல்லையே… அதுவரை சந்தோஷம். பரவாயில்லை தூளாக இருந்தால் விழுங்குவது சுலபம் என்றெண்ணி “இந்தாங்க நிரு… தண்ணி ஊத்தி இது போட்டு முழுங்கிடுங்க பாக்கலாம்…” என்றாள் நீணா.
“இல்ல… குத்தியா…” அவளுக்கு என்ன வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்தாள் நிரோஷா.
நீணா பெருமூச்சு விட “என்கிட்ட குடுங்க…” என்றுக் கூறி நிருவின் தாய் உடைக்க முயன்றார். அவர் அடித்த வேகத்தில் மாத்திரை உடைவதற்கு பதிலாக எங்கோ தெறித்து விழுந்தது.
“வெரி ஸ்ட்ராங் லேடி” என்று நினைத்த நீணா “நான் ட்ரை பண்ணுறேன்…” என்றுக் கூறி முதல் வேலையாக அவர் கையிலிருந்து பேப்பர் வெயிட்டை வாங்கினாள்.
அவள் உடைத்த முதல் மாத்திரையும் தூள் தூளானது. நிமிர்ந்து நிரோஷாவை பார்த்தபோது அவள் தலையை இடமிருந்து வலமாக ஆட்டி வேண்டாம் என்றாள்.
“இது வேலைக்காகாது…” என்று நினைத்த நீணா மேஜை மீதிருந்த இரும்பு ஸ்கேல் ஒன்றை எடுத்து பேப்பர் உள் மாத்திரையை வைத்து அதை இரண்டாக அறுத்தேடுத்தாள்.
“உங்களுக்கு தான் மேடம் இதெல்லாம் தோணும்” பாராட்டுதலாக கூறினார் மேரி.
அவர் எப்போதும் நீணாவை “மேடம்” என்று அழைப்பது வழக்கம். இவளை விட வயதில் பெரியவர்.
நீணா எவ்வளவோ முறை பெயர் சொல்லி அழைக்குமாறு கூறியும் கேட்காததால் அதற்கு மேல் வற்புறுத்தாமல் அவர் இஷ்டம் போல் அழைக்க விட்டு விட்டாள்.
தான் கட் செய்த இரு சமமான துண்டுகளை பார்த்ததும் “படிச்ச படிப்பு வீண் போகல…” என்று எண்ணியவள் அவற்றை எடுத்து பெருமையுடன் நிரோஷவின் முன் நீட்டினாள்.
“ம்ம்ஹும்… குத்தியா?” என்று நிரோஷா சொல்ல முகத்தில் இருந்த புன்னகை மறைந்து இருள் சூழ்ந்தது.
“எப்பயும் மாத்திரையை நாலா ஒடச்சு குடுக்குறது பழக்கம்…” என்று அசடு வழிந்தார் அவளின் தாய்.
“உங்க பழக்கத்துல தீய வெக்க…”
வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் நினைத்த நீணா மீண்டும் அதே போல் மாத்திரியை கவனமாக வெட்டி நான்கு துண்டாக்கி நிமிர்ந்தபோது அந்த ஏஸி அறையிலும் அவளுக்கு வியர்த்திருந்தது.
“கொஞ்சம் தண்ணி குடுங்க மேரி” என்றுக் கேட்டு வாங்கி நிரோஷாவிற்கு முன்னால் அவள் தண்ணீர் பருகினாள்.
நான்கு துண்டுகளாக மாத்திரையை பார்த்ததும் தான் நிரோஷா அதை சாப்பிட ஒப்புக் கொண்டாள். நல்ல பிள்ளையாக அவள் அம்மா தந்த தண்ணீரைப் பருகி ஒவ்வொருத் துண்டாக வாயில் போட்டு விழுங்கினாள்.
வெளியே செல்லும்போது “பை” என்று சிரித்துக் கொண்டே கூறியவளை பார்த்ததும் நீணாவின் களைப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துப் போனது.
“அந்த போராட்டத்துல நேரம் ஆகிடுச்சு மோனி… நீ ஒரு போன் பண்ணி இருக்கலாமே? அட்லீஸ்ட் நீயாவது சாப்பிடப் போயிருக்கலாமே? எதுக்கு இவ்வளவு நேரம் வெயிட் பண்ண?” என்று நீணா கேட்டபோது அவர்கள் பான்ட்ரி அருகில் வந்திருந்தனர்.
“நல்லா தான்டி உன்ன வேல வாங்கியிருக்கா அந்த பொண்ணு… எதுக்கு இப்படி மூச்சு விடாமப் பேசுற? காலையில லேட்டா தான் சாப்பிட்டேன். எனக்கு பசி இல்ல. அதான் வெயிட் பண்ணேன். எனக்கும் ஒரு கேஸ் பார்க்க வேண்டி இருந்துது”
நீணாவிற்கு சமாதானம் கூறி ஷிவானி அமர்ந்திருந்த டேபிளில் சாப்பிட அமர்ந்தாள் மோனிகா.
எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து “ஹாய் ஷிவானி” என்றுக் கூறிப் புன்னகைத்து மோனிகாவின் அருகில் அமர்ந்தாள் நீணா.
“இப்போ சிரிக்குற இவ நிஜமா? இல்ல நேத்து கத்துன அவ நிஜமா? ஒண்ணுமேப் புரியலயே ஆண்டவா…” எதிரில் இருப்பவளைப் பார்த்து மனதிற்குள் எண்ணிய ஷிவானி “ஹாய்” என்றாள்.
ஷிவானி பீடியாட்ரீஷியன். நீணாவுடன் வேலையை பகிர்ந்துக் கொள்பவர்களில் அவளும் ஒருத்தி. முதலில் ஷிவானி இந்த மருத்துவமனையில் சேர்ந்தபோது நீணாவை மட்டுமே தெரியும்.
அவளின் தோழி என்ற முறையில் மோனிகா ஷிவானிக்கு அறிமுகம் ஆகியிருந்தாள். ஆனால் நேற்றிலிருந்து நிலைமை தலை கீழ் ஆகியிருந்தது.
இப்போது மோனிகா ஷிவானியின் தோழி ஆகியிருந்தாள். இத்தனை நாட்களில் நீணாவுடன் வேலை அல்லாது வேறு எதுவும் பேச வாய்ப்புக் கிடைக்காததால் ‘அவள் தன் கலீக் (collegue)’ என்ற ரீதியில் மட்டுமே நீணாவை பார்க்க முடிந்தது,
“ஹர்ஷாவும் பிஸியா மோனி?” என்று நீணா கேட்க ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள் மோனிகா.
ஹர்ஷா ரோஹித் இருவரும் எப்போதும் இவர்களுடன் மதிய உணவு சாப்பிடுபவர்கள் அல்ல. அவர்களுக்கு வேலை இல்லாத சில நாட்களில் அபூர்வமாக இவர்களின் உணவு நேரத்தில் பான்ட்ரி வருவதுண்டு. மற்றபடி அவர்கள் இருவரும் தினம் சேர்ந்து சாப்பிடுவதே கடினம் தான்.
ஷிவானியும் நீணாவும் என்ன வேலை இருந்தாலும் எப்படியாவது நேரத்தை ஒதுக்கி ஒன்றாக சாப்பிட்டு விட வேண்டும் என்று விரும்புவார்கள்.
கல்லூரியில் துவங்கிய பழக்கம் அது. வேறு எப்போதும் இப்படி அமர்ந்து பேச நேரம் கிடைப்பதில்லையே…
சாவதானமாக கதையடிக்காவிட்டாலும் அரக்கப் பறக்க சாப்பிட்டுக் கொண்டே ஏதாவது இரண்டொரு விஷயம் பேசி சிரிக்கும்போது இருவருக்குமே டென்ஷன் குறைந்து மனம் லேசாகும்.
காலை வாக்கிங் போகும்போது நீணாவும் ரோஹித்தும் மோனிகாவின் வீட்டிற்கு செல்வதுண்டு. ஆனால் அதிகப்படியாக பத்து நிமிடங்களில் கிளம்ப வேண்டியிருக்கும்.
ஹர்ஷாவும் ரோஹித்தும் அப்படியெல்லாம் ஒன்றாக சாப்பிட வேண்டும்… அமர்ந்து பேச வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அவர்கள் பேச்சு அநேகமாக மருத்துவ துறை சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.
வேறு ஏதேனும் பேச விரும்பினால் அவர்கள் வேலை பார்க்கும் ப்ளாக்கின் வெளியே இருக்கும் காண்டீன் சென்று அங்கு அமர்ந்து பேசுவார்கள்.
நீணாவும் மோனிகாவும் கல்லூரி தோழிகள். ஆனால் ஹர்ஷாவும் ரோஹித்தும் பள்ளி தோழர்கள். அப்போதிலிருந்து ஒன்றாக சுற்றித் திரிந்தவர்கள்.
“ஹே பிரைட் ரைஸ்… எனக்கு ரொம்ப பிடிக்கும்…”
ஷிவானி அவள் டப்பாவை திறந்ததும் ஆர்வமாக அதிலிருந்து ஒரு ஸ்பூன் சாதத்தை எடுத்து சாப்பிட்டாள் மோனிகா.
“நீயும் எடுத்துக்கோ நீணா… சாரி… எடுத்துக்கோங்க…”
மோனிகாவிடம் பேசும் பழக்கத்தில் இத்தனை நாள் மரியாதை கொடுத்து பேசிய நீணாவை ஒருமையில் பேசிவிட்டாள் ஷிவானி.
“இப்படியே பேசு ஷிவானி… நீயும் எங்களோட ஐக்கியம் ஆகிடு…”
நீணா கூறியதைக் கேட்டதும் ஷிவானிக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது.
“ஆரம்பிச்சுட்டா… ஷிவானி நீ இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ… இப்போவே சொல்லிட்டேன். எப்போ எந்த நேரத்துல என்ன பண்ணுவான்னே சொல்ல முடியாது”
ஷிவானியை எச்சரித்த மோனிகா அவளுடைய ப்ரைட் ரைஸ் மொத்தத்தையும் காலி செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுப்பட்டிருந்தாள்.
அவர்கள் பேச்சில் கவனமாக இருந்த ஷிவானிக்கு தனது கீரை சாதத்தை மோனிகா அவள் பக்கம் தள்ளிவிட்டது தெரியாமல் போனது.
என்ன சாப்பிடுகிறோம் என்றுக் கூட பார்க்காமல், கல்யாணி காலை வேளையின் அவசரத்திலும் கர்ப்பமாய் இருக்கும் மகள் மோனிகாவிற்காக பார்த்து பார்த்து செய்துக் கொடுத்த கீரை சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஷிவானி.
மூவரும் பேசி சிரித்து சாப்பிட்டாலும் வேகமாகவே உண்டனர். சாப்பிட்டு முடித்ததுமே “எனக்கு கொஞ்சம் வர்க் இருக்கு… நான் கிளம்புறேன்” என்றாள் ஷிவானி.
“ஓகே… பை…” என்று நீணா கூறித் திரும்பியபோது மோனிகா மெளனமாக தலைக் குனிந்து அமர்ந்திருந்தாள்.
அவள் முகமே அவள் ஏதோ பேச விரும்புகிறாள் என்பதை உரைத்தது. அவளுக்கு இருக்கும் ஒரே நெருங்கிய தோழி நீணா மட்டுமே… மோனிகாவை நன்கு புரிந்து வைத்திருப்பவள்.
அருகிலிருந்த கைபேசியை எடுத்து “மேரி… நான் வர இன்னும் 15 மினிட்ஸ் ஆகும். கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றுக் கூறி வைத்தாள்.
“சொல்லு மோனி” என்று நீணா கூறியதும் படப்படவென்று பேச ஆரம்பித்தாள் மோனிகா.
“உனக்கேத் தெரியுமில்ல நீணா? எனக்கு கரபான்பூச்சின்னா எவ்வளவு பயம்னு… நேத்து நைட் உன்கிட்ட பேசி முடிச்சதும் போன் வெச்சுட்டு ஹர்ஷா எழுந்து எனக்கு பால் எடுக்க கிட்சென் போனான். அங்க ஒண்ணு இருந்துதாம்… அதான் காக்ரோச்…”
முகத்தை அஷ்டக்கோனலாக வைத்து உடலை சிலிர்த்துக் கொண்டுக் கூறிய மோனிகாவை கண்டு நீணாவிற்கு சிரிப்பு வந்தது.
“அவன் அத அடிச்சு தூக்கிப் போட வேண்டியது தான? அத விட்டுட்டு அத தூக்கிட்டு வந்து என் கண்ணு முன்னாடி காட்டி கிட்சென்ல இருந்துதுன்னு சொல்லுறான்… பயந்துக் கத்தி எழுந்திரிச்சு சோபாக்குப் பின்னாடிப் போய் நின்னுட்டேன்.
நம்மளும் படிக்குறப்போ எதை எதையோ டைசெக்ட் பண்ணி இருக்கோம்… ஆனாலும் எனக்கு இது மேல இருக்க பயம் போகல…
செத்துப் போன காக்ரோச் பார்த்து எனக்கு எந்த பயமும் இல்ல நீணா… அவன் உயிரோட இருக்குறதக் கொண்டு வந்துக் காட்டுறான்.
நான் கத்துனத கேட்டு அம்மா பயந்து போய் ஹாலுக்கு வந்து பார்த்தாங்க. அவங்க முன்னாடி எதுவும் சொல்ல முடியாம சும்மா ‘பயந்துட்டேன்’னு மட்டும் சொன்னேன்.
அவங்களும் ‘இப்படியெல்லாம் கத்தாத… வேகமா எந்திரிக்காத’ன்னு என்ன திட்டி மொறச்சிட்டுப் போயிட்டாங்க… தேவையா எனக்கு இது?
எனக்கு பயம்னு தெரிஞ்சும் எதுக்கு நீணா இப்படி செய்யணும்? கேட்டா சும்மா விளையாடிப் பார்த்தேன்னு சொல்லுறான்… இப்படியெல்லாம் செய்யுறானே… அவனுக்கு என் மேல லவ்வே இல்லையா நீணா?”
கன்னத்தில் கை வைத்து அனைத்தையும் கேட்ட நீணா கடைசியாக மோனிகா கேட்டக் கேள்வியில் கையை மெல்ல உயர்த்தி நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள்.
“இப்போ என்ன நடந்துடுச்சுன்னு நீ இப்படியெல்லாம் யோசிக்குற? ஹர்ஷாக்கு உன் மேல லவ் இல்லையா? நெஜமா சொல்லு…”
நீணாவை பாவமாகப் பார்த்த மோனிகா “இருக்கு… அப்பறம் எதுக்கு இப்படியெல்லாம் பண்ணணும்?” என்றுக் கேட்டாள்.
“நீ ஓவரா யோசிக்குற மோனி. அவன் சொன்னான்ல… சும்மா விளையாட்டுக்கு செய்திருப்பான். இதுக்கெல்லாம் எதுக்கு பீல் பண்ணுற?” ஆதரவாக அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டாள் நீணா.
“சரி வா… போகலாம். இனி இப்படி யோசிக்கல… பேஷண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க” என்றுக் கூறி நீணாவை விட்டு விலகி எழுந்தாள் மோனிகா.
அவள் முகம் தெளிவடைந்திருப்பதைக் கண்டு நிம்மதியுற்ற நீணா “இனி இப்படி எதுவும் யோசிக்க மாட்டா” என்றெண்ணி அவளுடன் நடந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் “ஏன் நீணா… லவ் பண்ணுறப்பையும் சரி… கல்யாணம் ஆகி இத்தன நாள் ஆகியும் சரி… ஒரு தடவக்கூட உனக்கும் ரோஹித்துக்கும் சண்ட வந்ததா நீ சொன்னதே இல்லையே… உங்களுக்குள்ள சண்டையே வராதா?” என்றுக் கேட்டாள் மோனிகா.
“ம்ம்கும்… நாங்க சண்டப் போடாம இருந்துட்டா…….லும்…” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் “அப்படி சண்டயேப் போடாம யாராவது இருக்க முடியுமா மோனி?
அதெல்லாம் வரும். சரியாப் போயிடும். சரி முடிஞ்சா ஈவ்னிங் பார்க்கலாம். நைட் கால் பண்ணுறேன்” என்றுக் கூறி மோனிகாவிற்கு விடைக் கொடுத்து அனுப்பினாள்.
அறையில் வந்து அமர்ந்தவளுக்கு மாலை வரை வேறு எதையும் யோசிக்கக் கூட நேரமில்லாமல் போனது. தொடர்ந்து அடுத்தடுத்து அப்பாயின்ட்மென்ட்ஸ் இருந்தன.
மாலையானதும் சற்று நேரம் ஓய்வெடுத்தால் மட்டுமே அடுத்த வாண்டை சமாளிக்க முடியும் என்றுத் தோன்றியதாலும் அடுத்த அரை மணி நேரத்திற்கு எந்த அப்பாயின்ட்மென்ட்டும் இல்லாததாலும் தேநீர் அருந்த எண்ணினாள்.
“மேரி ஒரு கப் டீ மட்டும் எடுத்துட்டு வரீங்களா? உங்களுக்கும் எடுத்துட்டு வாங்க”
“உங்களுக்கு கொண்டு வரேன் மேடம்… நான் வெளியில போய் குடிக்குறேன் மேடம்… கொஞ்ச நேரமாவது காத்தாட நடந்துட்டு வரேன். உள்ளயே இருந்தா நமக்கு ஆகாது”
“என்ன சொன்னாலும் கேக்காதீங்க. மேடம் மேடம் னு… உங்க இஷ்டம் மேரி”
அவர் வெளியே சென்று டீ அருந்துவதற்கும், அவளை அழைக்கும் அழைப்பிற்கும் சேர்த்து பதில் கூறினாள் நீணா.
அவள் கூற வருவதுப் புரிந்தவராக “அதெல்லாம் அப்படி தான் மேடம் வருது… மாத்திக்குறது கஷ்டம்” என்றுக் கூறி சென்ற மேரி அடுத்த பத்து நிமிடங்களில் ஆவி பறக்கும் ஏலக்காய் டீயுடன் உள்ளே வந்தார்.
வாசனையே புத்துணர்ச்சியை தர கப்பை வாங்கிய நீணா “உங்க பையன் ஸ்கூல்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னீங்களே மேரி… என்னாச்சு? காலையிலிருந்து இருந்த வேலையில கேக்க மறந்துட்டேன்” என்றாள்.
“கூட படிக்குற பையன் கேக்காம இவனோட பாக்ஸ் எடுத்துட்டான்னு இவன் அவன அடிச்சுட்டானாம்… அதுக்கு அவன் கிளாஸ் மிஸ் கூப்பிட்டு சொன்னாங்க… நான் கூட ஸ்கூல்ல வர சொன்னாங்கன்னு என் பையன் வந்து சொன்ன்னதும் பயந்துட்டேன்…”
“பதிலுக்கு அந்த மிஸ் உங்க பையன அடிக்காம உங்களைக் கூப்பிட்டு சொன்னாங்களே… அதுவரைக்கும் சந்தோஷம்…”
“இப்போ எல்லாம் மிஸ்ஸுங்க அடிக்குறதில்ல மேடம்… பசங்கதான் அவங்கள மிரட்டுறாங்க… காலம் மாறிப் போச்சு…”
மேரி சிரிக்க நீணாவும் சிரித்து “அது என்னவோ உண்மை தான்… சரி நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க மேரி… இருபது நிமிஷம் கழிச்சு வாங்க… போதும்” என்றுக் கூறி அவரை அனுப்பி வைத்து நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து தேநீரை சுவைக்க ஆரம்பித்தாள்.
அவளது மொபைல் மெசேஜ் வந்ததற்கு அறிகுறியாக பீப் ஒலி எழுப்பவும் கப்பை டேபிள் மீது வைத்து விட்டு கைபேசியை எடுத்துப் பார்த்தாள். ரோஹித் மெசேஜ் அனுப்பியிருந்தான்.
காலையில் மருத்துவமனை வந்தப் பின் இப்போது தான் தன்னைத் தொடர்புக் கொள்கிறான் என்று எண்ணிய நீணா மெசேஜை ஓபன் செய்தாள்.
“என்னப் பண்ணுற?” என்றிருந்ததைப் பார்த்ததும் முகம் மலர அவனது எண்ணிற்கு கால் செய்தாள்.
உடனே அழைப்பை ஏற்ற ரோஹித் “என்னடி?” என்றுக் கேட்டான்.
இவன் தானே மெசேஜ் அனுப்பினான் என்று யோசித்தவள் “என்ன என்னடி? நீதான என்னப் பண்ணுறன்னுக் கேட்ட?” என்றாள்.
“என்ன பண்ணுறன்னு தான கேட்டேன்… அதுக்கு எதுக்கு கால் பண்ண?”
“டேய் என்ன விளையாடுறியா?” சற்றுக் குரலை உயர்த்திக் கேட்டாள் நீணா.
“நானா உன்னை கால் பண்ண சொன்னேன்?” அவன் சிரிக்கிறான் என்பது அவனது குரலிலேயேத் தெரிந்தது.
“உனக்குப் போய் கால் பண்ணேன் பாரு… என்ன சொல்லணும்” என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்தாள் நீணா.
வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்த ரோஹித் கதவுத் தட்டப்படும் ஒலியில் நிமிர்ந்து “யெஸ் கம் இன்…” என்றான்.
“எப்படி இருக்கீங்க ரோஹித்?” என்றுக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் டாக்டர் வெங்கட்.
“பைன் வெங்கட். உக்காருங்க… ட்ரிப் எப்படி போச்சு? கான்பெரன்ஸ் எப்படி இருந்துது? பெங்களூர் சுத்தி பார்த்தீங்களா?”
அவருக்கு கைக் கொடுத்து எதிரில் இருந்த இருக்கையை கை காட்டினான். வெங்கட் அதில் அமர்ந்து அவன் கேட்டக் கேள்விகளுக்கு பதில் கூற ஆரம்பித்தார்.
“கான்பெரன்ஸ் ரொம்ப யூஸ்புல்லா இருந்துது ரோஹித்… ஊர் சுத்தி பார்க்க நேரம் கிடைக்கல. மூணு நாளும் செம பிஸி… பேமிலிய கூட்டிட்டுப் போயிருந்தாலாவது இன்னும் ரெண்டு நாள் இருந்து சுத்தி பார்த்துட்டு வந்திருக்கலாம்…
வேலை இருக்குன்னு சொல்லி அவங்கள விட்டுட்டு போயிட்டேனா? ‘எப்போ வருவீங்க? இன்னும் ஒரு நாள் ஆகுமா? அப்பா சீக்கிரம் வர முடியாதா?’ன்னுக் கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க… பையனும் ரொம்ப தேடிட்டான் போல…”
புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த ரோஹித் “விடுங்க வெங்கட்… பையன் உங்கள ரொம்ப மிஸ் பண்ணியிருப்பான்… அதான் வர சொல்லியிருப்பாங்க…” என்றான்.
“ஹ்ம்ம்… அப்பறம் நாளைக்கு என் பையன் பர்த்டே பார்ட்டி இருக்கு ரோஹித். நம்ம ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ் சிலர் மட்டும் இன்வைட் பண்ணுறேன். நமக்கு இது ஒரு கெட் டுகெதர் மாதிரி தான்… நீங்களும் நீணாவும் அவசியம் வரணும்”
“ஷுர் வெங்கட். கண்டிப்பா வரோம்” என்றுக் கூறி தலை அசைத்து உறுதி அளித்தான் ரோஹித்.
“ஹஸ்பன்ட் அண்ட் வைப் ரெண்டுப் பேரும் எப்படி பா இப்படி எப்பயும் சிரிச்சுட்டு அமைதியா இருக்கீங்க? நம்மளுக்கு அந்தக் குடுப்பினை எல்லாம் இல்ல. எப்படா காதுக்கு ரெஸ்ட் கிடைக்கும்னுப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு. சரி நான் வரேன் ரோஹித். இன்னும் சிலரை இன்வைட் பண்ணணும்” என்றுக் கூறி எழுந்தார் வெங்கட்.
சிரித்தபடி மீண்டும் அவருக்கு கைக் குலுக்கி விடைக் கொடுத்தவன் மேஜை மேல் இருந்தத் தன் கைபேசியைப் பார்த்து இன்னும் பெரிதாக சிரித்து ரவுண்ட்ஸ் செல்வதற்காக ஸ்டெத்தை எடுத்து கழுத்தில் போட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
6
சுகமான இளங்காற்று வீச காலைப் பொழுதின் இனிமையை ரசித்தபடி அருகருகே நடந்தனர் ரோஹித்தும் நீணாவும்.
தினமும் நடக்கும் வழி… பார்த்துப் பழகிய இடங்கள்… அதே பரிட்சயமான முகங்கள்… இருந்தபோதிலும் ஒவ்வொரு நாளும் அனைத்தையும் புதியதாய் தெரியவைக்கும் இந்த விடியற்காலை நேரம்.
ரோஹித் கையை முறுக்கி சோம்பல் முறித்து கண்ணை கசக்கி கொட்டாவி விட்டான்.
“ஏன் ரோஹித் இப்படி தூங்கி வழியுற? எந்திரிச்சு எவ்வளவு நேரம் ஆச்சு? நடக்க ஆரம்பிச்சே ரெண்டு நிமிஷம் ஆகியிருக்கும். இன்னுமா உன் தூக்கம் போகல?”
“அதெல்லாம் போச்சு போச்சு… இது சும்மா…”
“சோம்பேறி…”
ரோஹித் நடையின் வேகத்தைக் குறைத்து நீணாவை திரும்பி பார்த்தான்.
“ஆமா… நீ அப்படியே பெரிய சுறுசுறுப்பு… போடி… இன்னைக்கு காலையில நான் தான் உன்ன எழுப்பி விட்டிருக்கேன். ஞாபகம் இருக்குல்ல?”
“ஒரு நாள் எழுப்பி விட்டுட்டு பெருசா பேசாத. தூங்குமூஞ்சி”
“குட் மார்னிங் ரோஹித். குட் மார்னிங் நீணா”
பின்னாலிருந்துக் கேட்டக் குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர். பரமேஸ்வரன் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். வாக்கிங் ஸ்டிக் சகிதம் ஒரு சால்வையை போர்த்தி மிடுக்குடன் நடந்து வருபவரை பார்த்ததும் இருவரும் புன்னகைத்து “குட் மார்னிங்” என்றனர்.
“என்ன இன்னைக்கு இந்த பக்கம் வாக்கிங் வந்துட்டீங்க? வீட்டுக்கிட்டயே நடக்கலையா?”
“ஒரு நாள் சண்டப் போடாம இருந்தா பொறுக்கலையா அங்கிள்?”
“இன்னைக்கும் சண்ட போடலன்னு பீலிங்கா அங்கிள்?”
ரோஹித்தும் நீணாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி யோசித்து அமைதியாக அவர் முகத்தையே பார்த்திருந்தனர்.
“ஆனா நான் என் வீட்டுக்கிட்டயே தான் நடக்குறேன்… பெண்டுலம் வாக். அக்கம்பக்கத்துல இருக்கவங்கள்டயும் சொல்லிட்டேன். அங்க பாருங்க…”
ரோஹித்தும் நீணாவும் அவருக்குப் பின்னால் பார்க்க அவரவர் வீட்டின் பக்கவாட்டில் இருந்த சாலையில் முந்தைய தினம் அவர்கள் நடந்தது போலவே குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தனர்.
ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் அல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை…
“அய்யய்யோ… ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டே ப்ராக்டீஸ் மாதிரி இப்படி எல்லாரும் ஒரே ரிதம்ல நடக்குறாங்களே… அந்த லாஸ்ட் வரைக்கும் தெரியுதே… ஒரு வேல அதையும் தாண்டி இருக்க வீடுங்களுக்கும் இந்த விஷயம் பரவியிருக்குமோ?”
ரோஹித் இவ்வாறு யோசிக்க நீணா வேறு விதமாக யோசித்தாள்.
“பரமேஸ்வரன் அங்கிள்….. நல்ல வேலை பண்ணி இருக்கீங்க… ஒரே நாள்ல எப்படி இத்தன பேருக்கு பரப்பி விட்டீங்கன்னு தான் புரியல… எத சொன்னாலும் மக்கள் நம்புவாங்க போலயே…”
ஒருவர் வந்து “இந்த வாக் போனா கொலஸ்ட்ரால் கண்ட்ரோல் ஆகி ஹார்ட் ப்ராப்ளம்ஸ் வராதாமே… உண்மையா ரோஹித்?” என்றுக் கேட்கவும் “வாக்கிங் போறது நல்லது தான்” என்றுப் பொதுப்படையாக பதில் கூறினான் ரோஹித்.
“நாங்க கிளம்புறோம் அங்கிள். கொஞ்ச தூரமாவது நடக்கணும்…” என்று நீணா கூற ரோஹித்தும் அவருக்கு தலை அசைத்து நடக்க ஆரம்பித்தான்.
நேற்று போல் இன்று அவர்களுக்கு சிரிப்பு வரவில்லை. மாறாக கவலையாக இருந்தது. அமைதியாக நடந்தனர்.
தாங்கள் மருத்துவர்கள் தான். அதற்காக நிற்பது நடப்பதைக் கூட அடுத்தவருக்காக செய்ய முடியுமா என்று யோசித்தனர்.
“ஹச்ச்” என்று தும்முவதை கூட தெரபி என்று சொல்லி தாங்களும் தும்மும் மக்களுக்கிடையில் அவர்கள் சராசரி மனிதர்களாய் வாழ்வது எங்கனம்?
மருத்துவம் படித்தது தங்களின் விருப்பத்திற்காக… பிறருக்கு சேவை செய்ய… தங்கள் வாழ்வையே இந்த சமுதாயத்திற்காக அர்ப்பணிக்க அல்லவே…
மருத்துவரை தெய்வமாய் பார்க்கிறோம். ஆனால் அவர்களுக்கும் பெர்சனல் லைப் என்ற ஒன்று இருப்பதை எப்போது மறந்துப் போனோம்?
அவர்களுக்கு சமுதாய பொறுப்பு இருக்கிறது. சமூகத்தின் மீது அக்கறை வேண்டும். ஆனால் பேசுவது சிரிப்பதை கூட யாரேனும் கவனிக்கிறார்களா என்று பார்த்து பார்த்து செய்ய முடியாதே…
வீட்டிற்குள் வந்ததும் நேரே குளிக்க சென்றனர். பரமேஸ்வரனின் தயவால் அன்று அந்த வீட்டில் அமைதி குடிக் கொண்டிருந்தது.
வழக்கம் போல் மருத்துவமனை வந்ததும் வேலையில் மூழ்கியவர்கள் மாலை ஆனதும் முந்தைய தினம் வெங்கட் அழைத்திருந்த அவருடைய மகனின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லத் தயாராயினர். ஷிவானி உள்பட…
அவளையும் வெங்கட் பார்ட்டிக்கு அழைத்திருந்தார். நீணா, மோனிகாவின் தோழி என்ற முறையில் ஷிவானி வெங்கட்டிற்கு அறிமுகம் ஆகியிருந்தாள்.
இல்லையென்றாலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவரையும் தெரியும்.
மருத்துவர்கள் என்றில்லாமல் உள்ளே நுழையும் போது கேட்டில் எந்த ஷிப்டில் எந்த வாச்மேன் நிற்பார் என்பது முதற்கொண்டு அவருக்குத் தெரியும். காரை நிறுத்தி நலம் விசாரித்துவிட்டு தான் உள்ளே வருவார்.
அவர் கேண்டீன் சென்றார் என்றால் உள்ளே சமையல் செய்பவர்கள் ஒவ்வொருவராக வந்துப் பார்த்து பேசிவிட்டு செல்வர்.
நடந்து செல்லும் வழியெங்கும் சிரித்தபடி யாருக்கேனும் கையசைத்துக் கொண்டே தான் நடப்பார். அவரை அறியாதவர்கள் அந்த மருத்துவமனையில் யாரும் இருக்க முடியாது.
இப்படிப்பட்ட மனிதர்கள் மிக அரிதாக நம் வாழ்வில் தென்படுவதுண்டு. பாரபட்சமின்றி எல்லோரோடும் நட்பு பாராட்டும் மனிதர்கள்.
நிஜத்தில் நேற்று வெங்கட் “இன்னும் சிலர இன்வைட் பண்ணணும்” என்றுக் கூறியபோதே “எப்படியும் மொத்த ஹாஸ்பிட்டலையும் கூப்பிடப் போறாரு… இதுக்கு ‘இன்னும் சிலர்’னு விளக்கம் வேற சொல்லிக்குறாரு” என்று நினைத்தான் ரோஹித். அவரைப் பற்றி வந்த சில நாட்களிலேயே அவன் புரிந்துக் கொண்டான்.
“ஷிவானி நீயும் எங்களோடயே வா” என்றழைத்தாள் நீணா.
இரவு வர எப்படியும் நேரம் ஆகும் என்பதால் ஹர்ஷாவை கார் எடுக்க வேண்டாம் என்று சொல்லி காலை அவனையும் மோனிகாவையும் தங்களுடன் காரில் அழைத்து வந்திருந்தான் ரோஹித்.
இப்போது ஷிவானியை மட்டும் தனியே விடப் பிடிக்காமல் அவளையும் தங்களுடன் அழைத்தாள் நீணா. அனைவரும் அவர்கள் ப்ளாக்கின் வெளியே நின்றிருந்தனர்.
“இல்ல நீணா… என் வண்டி இருக்கு. நான் அதுலயே வரேனே”
“வண்டி இங்கயே விட்டுடு ஷிவானி. நாங்களே உன்ன உங்க வீட்டுல விட்டுடுறோம்” என்றாள் மோனிகா.
“இல்ல மோனி… அப்பறம் நாளைக்கு காலையில வரது கஷ்டமா இருக்கும்… வண்டி வேணுமே… கால நேர டென்ஷன்ல பஸ் பிடிச்சு வரது பெரிய பாடு. நீங்க முன்னாடிப் போங்க… நான் பின்னாடியே வண்டில வந்துடுறேன்…”
“அட இது ஒருப் பிரச்சனையா? எங்க கார்ல நானும் ஹர்ஷாவும் தான? காலையில வர வழியில உங்க வீட்டுல வந்து பிக்கப் பண்ணிக்க சொன்னா ஹர்ஷா உன்னையும் வந்து கூட்டிட்டு வந்துடுவான். எங்களோடவே வந்துடு.
அத விட அவனுக்கு என்ன வெட்டி முரிக்குற வேலை இருக்கு? அப்படி இல்லன்னாலும் நீணா ரோஹித் இருக்காங்கள்ல? அவங்க வந்து கூட்டிட்டு வர மாட்டாங்களா? என்ன நீணா?”
“ம்ம் ம்ம்… ரோஹித்துக்கும் வேற ஒண்ணும் வெட்டி முரிக்குற வேலை இல்ல ஷிவானி… அதெல்லாம் பார்த்துக்கலாம். எங்களோடவே வா”
இரண்டடி தள்ளி நின்ற ரோஹித்தையும் ஹர்ஷாவையும் பெண்கள் கண்டுக்கொள்ளவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் கண்களுக்கு அந்த இருவரும் தெரியவே இல்லை.
“நம்ம மானத்த எப்படி கூவி கூவி விக்குறாளுங்க பாரு ரோஹித்”
“ஏன்டா நம்ம மத்தவங்கக்கிட்ட சொல்லும்போது எப்படி சொல்லுவோம்? ‘என் வைப்பும் நானும் ஒண்ணாதான் ஹாஸ்பிட்டல் வருவோம்’னு… இவளுங்க என்னமோ நம்ம டிரைவர் வேல பாக்குற மாதிரி இல்ல சொல்லுறாளுங்க?”
“கிட்டத்தட்ட அப்படித்தான்னு வெச்சுக்கோயேன்… அத கொஞ்சம் டீசெண்டா சொல்லித் தொலைக்கக் கூடாதாடா?”
“இன்னும் கொஞ்ச நேரம் விட்டோம்னா நிலைமை ரொம்ப மோசம் ஆகிடும்… கிளம்புவோம் வா”
ரோஹித் சொன்னதும் “சரி யாரோ ஒருத்தர் கூட்டிட்டு வரோம். இப்போ எங்களோடவே வாங்க ஷிவானி” என்றான் ஹர்ஷா.
அவனே நேரடியாக அழைத்தப் பின் மறுக்கத் தோன்றாமல் “சரி” என்றாள் ஷிவானி. உடனே “ஹே” என்று ஆர்ப்பரித்து அவளை இருப் புறம் இருந்துக் கட்டிக் கொண்டனர் நீணாவும் மோனிகாவும்.
“இப்போ அவ என்ன ரோஹித் சொல்லிட்டா? இந்தக் கத்துக் கத்துறாளுங்க?”
“கண்டுக்காத ஹர்ஷா… இதுங்க இப்படித்தான். வா நம்ம போய் கார் எடுத்துட்டு வருவோம்… நாங்க போய் கார் எடுத்துட்டு வரோம். நீங்க இங்கயே நில்லுங்க”
“ஆமாமா… நாங்க வேற எதுக்கு தெண்டமா நடந்துக்கிட்டு? நீ போய் எடுத்துட்டு வா ரோஹித்”
“பார்த்து போ ஹர்ஷா”
நீணாவும் மோனிகாவும் அக்கறையாய் சொன்னதைக் கேட்டு “போயிடலாம்டா… இன்னைக்கு புல் பார்ம்ல இருக்காளுங்க…” என்றுக் கூறிய ரோஹித் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
ரோஹித் காரை எடுக்க ஹர்ஷா முன் இருக்கையில் அவன் அருகில் அமர்ந்தான். “மெதுவாவே போ ரோஹித்”
“மோனி இருக்கான்னுத் தெரியும்டா… ஸ்பீடா போக மாட்டேன்”
ஹர்ஷா எப்போதும் வேகமாக கார் ஓட்டுபவன் அல்ல. அதிலும் மோனிகா கருவுற்றதிலிருந்து ரோட்டில் இருக்கும் சிறு கல்லை கூட கவனிப்பான்.
மேடுப்பள்ளங்களில் பார்த்துப் பார்த்து வண்டி ஓட்டுபவனிடம் “இன்னும் கொஞ்சம் வேகமா போ ஹர்ஷா… சின்ன பள்ளம் தான?” என்றுக் கூறுவாள் மோனிகா.
“ஒண்ணும் அவசரம் இல்ல… இப்போ வேகமா போய் என்னத்த சாதிக்கப் போறோம்? நான் இப்படிதான் போவேன்”
அவனுக்கு தன் மீதிருக்கும் அளவுக்கடந்த அக்கறை புரிந்து மோனிகாவும் அமைதியாகி விடுவாள்.
இன்று ரோஹித்தின் காரில் செல்வதால் ஹர்ஷாவிற்கு கொஞ்சம் பயம் இருந்தது. அவன் வேகமாக செல்பவன் இல்லை தான். “நானே டிரைவ் பண்ணுறேன்” என்றுக் கேட்டால் காரை அவன் கையில் கொடுத்து விடுவான் தான்.
ஆனால் ஹர்ஷா அதை விரும்பவில்லை. அப்படி செய்தால் அவன் மீது நம்பிக்கை இல்லை என்பது போலாகி விடும். இப்போது ரோஹித் கூறிய பதிலைக் கேட்டதும் நிம்மதியடைந்தான்.
பின் இருக்கையில் மோனிகாவை நடுவில் அமர வைத்து நீணாவும் ஷிவானியும் இருபுறமும் அமர்ந்தனர். காலை அவர்களுடன் வந்தபோதே மோனிகா வசதியாக அமர தலையணை இரண்டை எடுத்து வந்திருந்தான் ஹர்ஷா.
அவற்றை சரியாக வைத்து அவளை வசதியாக அமர வைத்தனர். தன் இருக்கையில் அமர்ந்தபடியே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.
“நாங்கப் பார்த்துப்போம் ஹர்ஷா. நீ திரும்பு… உனக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?”
நீணா ஹர்ஷாவை கிண்டல் செய்ய ஷிவானி இதுவரை அவனிடம் பேசி இராததால் அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
மெல்லியக் குரலில் “திரும்பிடுடா” என்று ரோஹித் எச்சரிக்க லேசான புன்னகையுடன் மோனிகாவை பார்த்துவிட்டுத் திரும்பி அமர்ந்தான் ஹர்ஷா.
கார் கிளம்பியதும் “ஹே உனக்கு அந்த ஷீலா தெரியும் தான?” என்று ஆரம்பித்தாள் மோனிகா.
“எந்த ஷீலா?”
“என்ன நீணா ஷீலாவ போய் எந்த ஷீலானுக் கேக்குற?”
“அது இல்ல மோனி… ரெண்டு ஷீலா இருக்காங்களே” என்று நினைவுப் படுத்தினாள் ஷிவானி.
“ஒஹ்ஹ்… சாரி மறந்துட்டேன்… என் கன்ஸல்டேஷன் ரூம் பக்கத்துல இருப்பாளேடி அவ… உனக்கும் தெரியும்ல ஷிவானி?”
“ம்ம்… தெரியும் தெரியும்…”
“சொல்லு சொல்லு…”
ஷிவானியும் நீணாவும் ஆர்வமாக கதைக் கேட்க “அவ…” என்று ஆரம்பித்து கதையளக்க ஆரம்பித்தாள் மோனிகா.
மருத்துவமனையில் இருந்து வெங்கட்டின் வீடு முக்கால் மணி நேர கார் பயணத்தில் இருந்தது. சிறிது தூரம் வரை ட்ராபிக்கில் செல்ல வேண்டும். அதன் பின் ஒரு ஸ்மூத் டிரைவ்.
ரோஹித் முதலில் வாகன நெருசலில் வண்டி ஓட்டியபோது இவர்கள் பேச்சை முழுதாக கவனிக்கவில்லை. ஆனால் ஹர்ஷாவிற்கு வேறு வழி இல்லையே… அவர்கள் பேச்சை கேட்டவண்ணம் அமர்ந்திருந்தான்.
ட்ராபிக் எல்லாம் கடந்து வந்ததும் அவர்கள் பேச்சு ரோஹித்தின் கவனத்தையும் ஈர்த்தது. இரண்டு நிமிடங்கள் பொறுமையாகக் கேட்டவன் பெருமூச்சொன்றை வெளியேற்றினான்.
ஹர்ஷாவை அவன் திரும்பிப் பார்க்க ஹர்ஷா காரில் இருந்த ம்யூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தான். ஏற்கனவே அதன் ஒலி கம்மியாக இருக்கவும் அதை மேலும் குறைக்காமல் அமைதியாக அமர்ந்து பாட்டை ரசித்தனர் இருவரும்.
“ஹர்ஷா… அந்த பாட்ட ஆப் பண்ணேன் ப்ளீஸ்… பேசுறதே காதுல கேக்கல…”
“இந்த கத்துக் கத்தியும் கேக்கலையா நீணா?” என்று ரோஹித் கேட்டதும் அவனை முறைத்தாள் நீணா.
“ஆப் பண்ணு ஹர்ஷா. நாங்க பேசுறோம்ல” என்றாள் மோனிகா.
“இன்னைக்கு வேற வழி இல்ல… தப்பிக்க முடியாதுப் போலருக்கே…” என்று முணுமுணுத்தபடி பாட்டை நிறுத்தினான் ரோஹித்.
ஹர்ஷாவின் காதில் அது விழுந்துவிட ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்ப்பதுப் போல் திரும்பி சிரித்துக் கொண்டிருந்தான்.
பெண்களின் பேச்சு அதன் பின் எந்தத் தடையும் இன்றித் தொடர சிறிது தூரம் சென்றதும் இடதுக் கையை ஸ்டியரிங்கிலிருந்து எடுத்து ஆள் காட்டி விரலை காதுக்குள் விட்டு வேகமாக ஆட்டி ஹர்ஷாவை பார்த்தான் ரோஹித்.
அவனோ தன் வலதுக் கை உள்ளங்கையால் காதை பொத்தி மிக வேகமாக ஆட்டி “முடியல” என்று வாயசைத்துக் கூறி தலையை இடமிருந்து வலமாக ஆட்டினான்.
அவர்களை மேலும் சோதிக்காமல் வெங்கட்டின் வீடும் வந்தது. அவருடையது தனி வீடு. அளவில் மிகப் பெரியதும் கூட.
இதற்கு முன்பே சிலமுறை இதுப் போன்ற பார்ட்டிகளுக்கு அவர் அழைத்தபோது இங்கு வந்திருக்கிறார்கள். அவரின் வீட்டின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்தும் இருக்கிறார்கள்.
“அவருக்கு இருக்க சொத்துக்கு அவரு வேல பார்க்கணும்னே அவசியம் இல்லை… அஞ்சு தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம்”
அவர்கள் மருத்துவமனையில் பொதுவாக இப்படி ஒரு பேச்சு உண்டு.
“இது என்னோட திருப்திக்காக” என்று சிரித்துக் கொண்டேக் கூறுவார் வெங்கட்.
காரை வீட்டின் முன் ஓரமாக நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கினர். ரோஹித் காரை லாக் செய்துவிட்டு ஹர்ஷாவுடன் நடக்க பெண்கள் மூவரும் தங்கள் பேச்சைத் தொடர்ந்தபடியே பின்னால் வந்தனர்.
“டேய் இன்னுமாடா முடிக்கல? ஷப்பா… எப்படிதான் நிறுத்தாம வளவளன்னு பேசுறாங்களோ சாமி… கேக்குற நமக்கே டயர்ட் ஆகுது…”
“விடு ஹர்ஷா… ஏதோ நம்மள படுத்தாம இருந்தா சரி… புதுசா வேற ஒருத்திய கூட்டு சேத்துருக்காளுங்க… இந்த நேரத்துல நம்ம ஏதாவது சொன்னோம்னு வையி…”
“ஆமாமா… பயங்கர எக்சைட்டடா இருக்காளுங்க… எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இருக்கணும் பா…”
வீட்டின் வாசலில் நின்றிருந்த வெங்கட் இவர்களை வரவேற்றார். அவர் அருகில் நின்றிருந்த அவரது மனைவி சுஹாசினி புன்னகைக்க “வாங்க சுஹா… நம்ம உள்ளப் போகலாம். இது ஷிவானி” என்றுக் கூறி நீணாவும் மோனிகாவும் அவரை தங்களுடன் அழைத்து சென்றனர்.
அடிக்கடி வெங்கட்டின் வீட்டிற்கு வந்திருந்ததாலும் வேறு பொது இடங்களிலும் கண்டு பேசிப் பழகியிருந்ததாலும் உரிமையுடன் சுஹாசினியை அழைத்து பேசிக் கொண்டே உள்ளே சென்றனர்.
“தெய்வங்களா? ஏன்பா இவ்வளவு லேட்டா வரீங்க? இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா? பக்கத்துலயே நின்னு ‘இது ரெடியா? அது வந்துடுச்சா?’னு கேள்வியா கேட்டா என்னதான் பண்ணுறது?
நல்ல வேல உள்ள கூட்டிட்டுப் போனாங்க… எப்படிடா அனுப்புறதுன்னு தான் நானும் யோசிச்சுட்டு இருந்தேன்… நம்மளும் எல்லாம் பார்த்து பார்த்துதான் செய்யுறோம்… அப்படியும் நம்ம மேல நம்பிக்க வர மாட்டேங்குது…”
“பாவம் இவரும் மாட்டிட்டு முழிச்சிருக்காரு…” என்று ஹர்ஷா ரோஹித்தின் காதை கடிக்க “ஒலகத்துல எல்லா புருஷனும் பாவம் தான்டா” என்றான் அவன்.
“என்ன சாப்பிடுறீங்க?” என்று வெங்கட் கேட்க “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் வெங்கட். என்ன வேலை இருக்குன்னு சொல்லுங்க. நாங்க பார்த்துக்குறோம்” என்றான் ரோஹித்.
இந்தக் கேள்வி ரோஹித் ஹர்ஷா என்றில்லை… வெங்கட்டின் வீட்டிற்கு வரும் அனைவரும் அவரிடம் கேட்பது வழக்கம். அவர் வீட்டு விசேஷம் என்று தான் அழைப்பார். ஆனால் அது ஒரு சாக்கு மட்டுமே.
அவர்களுக்கு தெரியும் தங்களுக்கு ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காகவே அவர் இதுப் போன்ற பார்ட்டி அரேஞ்ச் செய்து அழைக்கிறார் என்று. அதனால் அனைவரும் அவருடைய வேலையைப் பங்கு போட்டுக் கொள்வர்.
வெங்கட் கூறியதை செய்ய இருவரும் சென்றுவிட பெண்கள் ஓரிடத்தில் அமர்ந்தனர். சுஹாசினி சிறிது நேரம் பேசிவிட்டு வேலை இருப்பதாகக் கூறி எழுந்து சென்றுவிட்டார்.
“உங்களுக்கு தெரியுமா? நேத்து ஹர்ஷா என்ன திட்டிட்டான். அவன் சீக்கிரம் தூங்க சொன்னான். நான் பாட்டு கேட்டுட்டே இருந்தேன். அம்மாவும் போய் படுத்துட்டாங்க…
கொஞ்ச நேரம் கழிச்சு லைட்` ஆப் பண்ணான். அப்பயும் நான் பாட்டு கேட்டுட்டே இருந்தேனா ‘அறிவே இல்லையா மோனி? எத்தன தடவ சொன்னாலும் கேக்க மாட்டியா?’னு கேட்டுட்டான்…
எனக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு… அழுகையா வந்துடுச்சு… இத ஒழுங்கா சொன்னா நான் கேக்க மாட்டேனா? இப்படி கத்தணுமா?”
“எல்லா ஆம்பளைங்களும் அப்படிதான் மோனிகா… உனக்கும் ஹர்ஷாவுக்கும் சண்டையே வராதுன்னு நெனச்சேன்… ஹர்ஷா இப்படி கத்துவானா? தினம் இப்படிதான் சண்ட வருமா? அப்பறம் என்னாச்சு?”
ஷீலா கேட்டதும் மூவரும் திரும்பி அவளைப் பார்த்தனர். அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தாள். அவளும் அவர்களுடன் அதே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர். இவ்வளவு நேரமாக காரில் அவளைக் குறித்துதான் பேசிக் கொண்டிருந்தனர்.
மோனிகா எப்போதும் ஹர்ஷாவை பற்றி நீனாவிடம் மட்டும்தான் கூறுவாள். இப்போது ஷிவானியும் அவளுக்கு நெருக்கம் ஆகியிருந்ததால் அவள் முன்பு பேச தயக்கம் இருக்கவில்லை. ஆனால் அதை ஷீலா கேட்பாள் என்று அவள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.
“என்ன ஷீலா ஆச்சு?” என்று அவள் அருகில் அமர்ந்திருந்தவள் கேட்கவும் “மோனிகாவுக்கும் ஹர்ஷாவுக்கும் சண்டையே வராதுன்னு நம்ம நெனச்சோம்ல? அப்படியெல்லாம் இல்ல போலருக்கு… இவங்க தினம் சண்டப் போட்டுட்டு தான் இருக்காங்கப் போலருக்கு” என்றாள் ஷீலா.
நீணாவிற்கு கோவம் வந்தது. “மைன்ட் யுவர் வர்ட்ஸ் ஷீலா. அவங்க சண்டப் போட்டத நீ பார்த்தியா?” என்று அவள் கேட்க “அடுத்தவங்கள பத்தி தப்பா பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சமாவது யோசிக்கணும் ஷீலா” என்றுக் காட்டமாகக் கூறினாள் ஷிவானி.
மோனிகா முகம் சுருங்கி அமர்ந்திருக்க அவளை கையைப் பிடித்து எழுப்பி சிறிது தூரம் தள்ளி இருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்து சென்றாள் ஷிவானி. நீணா ஷீலாவை முறைத்து அவர்களுடன் சென்றாள்.
“விடு மோனி… அவ இப்போ என்ன சொல்லிட்டா? அவ ஏதோ உளறுனா அதக் கேட்டு நீ டென்ஷன் ஆவியா?” என்றுக் கூறி ஷிவானி அவளை சமாதானம் செய்ய முயன்றாள்.
“உனக்கும் கொஞ்சம் அறிவு வேணும் மோனி. நீ என்ன சின்னப் புள்ளையா? நீ பேசுறது உன் பெர்சனல் விஷயம். எங்கக்கிட்ட ஷேர் பண்ணுற ஓகே. நாங்க அத வெச்சு உன்ன ஜட்ஜ் பண்ணப் போறதில்ல… இத வெளில யாருக்கிட்டயும் சொல்லப் போறதும் இல்ல.
ஆனா மத்தவங்க அப்படியா? ஒரு விஷயம் பேசும்போது… அதுவும் அது நம்ம குடும்ப விஷயமா இருக்குறப்போ சுத்தி யார் இருக்கா? யாருக்கிட்ட சொல்லுறோம்? எல்லாத்தையும் பார்த்து பேசணும் மோனி.
எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க… நீ சொல்லுறத நாலு பேரு கேட்டு உனக்கு உண்மையா அட்வைஸ் பண்ணா ரெண்டு பேரு ஷீலா மாதிரி பின்னாடி போய் நீ சொன்னதையே மாத்தி சொல்லி கேவலமா பேசதான் செய்வாங்க.
அதுலயும் ஷீலா அங்க இருக்கான்னு நீ கவனிச்சிருக்க வேண்டாமா? நானும் பார்க்காம இருந்துட்டேன்… ச்ச… இவ்வளவு நேரம் அவளப் பத்தி நீதானடி கார்ல சொல்லிட்டு வந்த?
இவளுக்கு இப்படி மத்தவங்க பேமிலி மேட்டர்ஸ் பத்தி தப்பா பேசுறதே வேலையா இருக்குன்னு… டாக்டர் லக்ஷ்மி திட்டி விட்டாங்கன்னு சொன்னியே? நீயும் இப்போ அவள திட்டி விட்டிருக்கணும் மோனி.
அப்போதான் இவள மாதிரி ஆளுங்க அடங்குவாங்க. நாலு பேருக்கிட்ட நல்லா வாங்கணும்…
இப்போ நீ முகத்த தூக்கி வெச்சிருந்தா அவ பேசுனது உண்மைன்னு ஆகிடும். சிரி மோனி. நார்மலா இரு. ஆனா இனி பேசும்போது அக்கம்பக்கம் பார்த்து பேசு…”
நீணா பேசியவற்றைக் கேட்டதும் மோனிகாவிற்கு தன் தவறு புரிந்தது. ஷிவானியுமே அவற்றை கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.
“இனிமே இந்த தப்ப பண்ண மாட்டேன் நீணா” என்றுக் கூறிய மோனிகா அதன் பின் வழக்கம் போல் சிரித்து பேசினாள்.
இடையில் ஹர்ஷா அவளுக்கு ஜூஸ் கொண்டு வந்துக் கொடுக்க அருகில் நின்ற ரோஹித்திடம் “எனக்கு ஜூஸ் எல்லாம் கிடையாதா?” என்றுக் கேட்டாள் நீணா.
“நீ பேசுறத கேட்டுக் கேட்டு எனக்குதான் எனர்ஜி எல்லாம் போச்சு… நான் போய் ஜூஸ் குடிக்கப் போறேன்…”
“டேய் நான் அப்படி என்ன பேசுறேன்?”
“அய்யய்யோ… நீ பேசவே இல்லையா? யப்பா… நிறுத்தாம பேசுறடி…”
யாரும் அறியாவண்ணம் அவன் கையில் கிள்ளினாள் நீணா. வலித்தாலும் முகத்தில் அதைக் காண்பிக்க முடியாமல் அமைதியாக நின்றான் ரோஹித்.
“போலாமா ரோஹித்?” என்று ஹர்ஷா கேட்க “வரேன் நீணா” என்றுக் கூறியவன் அவள் செய்தது போலவே யாரும் அறியாவண்ணம் அவள் கையில் கிள்ளி சென்றான்.
7
கார் நின்றதும் ரோஹித்தின் அருகில் அமர்ந்திருந்த ஹர்ஷா வேகமாக இறங்கிப் பின் கதவைத் திறந்து மோனிகா இறங்க உதவினான். மறுப்பக்கக் கதவைத் திறந்து இறங்கிய நீணா முன் இருக்கையில் அமர்வதற்காக காரை சுற்றி வந்தாள்.
“ஏய் எங்க உள்ள உக்காரப் போற? ரெண்டுப் பேரும் மரியாதையா உள்ள வந்துட்டுப் போங்க…” என்று மிரட்டினாள் மோனிகா.
“ஆமா நீணா…” என்றுக் கூறிய ஹர்ஷா குனிந்து “டேய் வாடா…” என்று ரோஹித்தை அழைத்தான்.
ரோஹித் ஒரு முறை நீணாவை பார்த்து விட்டு காரிலிருந்து இறங்கி அதை லாக் செய்து மற்றவர்களுடன் வீட்டை நோக்கி நடந்தான்.
நேரம் இரவு பதினொன்றைக் கடந்திருந்தது. வெங்கட்டின் வீட்டிலிருந்துக் கிளம்பி ட்ராபிக்கில் மெதுவாக ஊர்ந்து வந்து ஷிவானியின் வீட்டில் அவளை இறக்கி விட்டு தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வர இவ்வளவு தாமதமாகி விட்டது.
“நாளைக்கு காலையில கிளம்பும்போது மோனிகாவ கால் பண்ணி சொல்ல சொல்லுறேன் ஷிவானி. நாங்க வந்து உங்கள பிக்கப் பண்ணிக்குறோம்…”
ஷிவானி அவள் வீட்டில் இறங்கியபோது அவளை மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்து வரும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டு அவளிடம் இவ்வாறு கூறியிருந்தான் ஹர்ஷா.
மோனிகாவின் தாய் கல்யாணி எப்படியும் உறங்கியிருப்பார் என்றுத் தெரியும். பெல் அடித்து அவரை எழுப்ப ஹர்ஷா முன்னால் செல்ல மோனிகா நீணாவின் கையைப் பிடித்து மெதுவாக நடந்தாள்.
“இது கூட நல்லா இருக்குல்ல நீணா… வெங்கட்கு தான் தாங்க்ஸ் சொல்லணும். அவரு பையன் பர்த்டே பார்ட்டின்னாலும் நம்மளுக்கெல்லாம் ரிலாக்ஸ் பண்ண கொஞ்சம் டைம் கெடச்ச மாதிரி… பிரண்ட்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ண மாதிரி இருந்துது…”
“ஆமா மோனி… இப்படி எந்த பங்க்ஷனும் இல்லன்னா நம்ம எல்லாம் எங்கேருந்து ஒண்ணா கூடப் போறோம்…”
தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்த கல்யாணி கதவைத் திறந்து “ரொம்ப நேரம் ஆகிடுச்சோ?” என்றுக் கேட்க “ஆமா அத்த… நீங்க போய் படுங்க… நாங்கப் பார்த்துக்குறோம்” என்றான் ஹர்ஷா.
“சாப்பிட்டீங்களா மோனி?”
“சாப்பிட்டோம் மா… நீங்க போய் தூங்குங்க…”
அதற்கு மேல் கல்யானியாலும் விழித்திருக்க முடியும் என்றுத் தோன்றாததால் “சீக்கிரம் தூங்குங்க… காலையில எழுந்திரிக்கணும். ஏதாவது குடிச்சுட்டுப் போங்க ரோஹித். நாளைக்குப் பார்க்கலாம் நீணா” என்றுக் கூறி அவருடைய அறைக்குள் சென்றுவிட்டார்.
“அவள முதல்ல உட்கார வை நீணா… வெங்கட் வீட்டுலயே அதிக நேரம் நின்னுட்டா…” என்று ரோஹித் கூறியதும் மோனிகாவை சோபாவில் அமர வைத்தாள் நீணா.
ஹர்ஷா கார் சாவியை வாங்கி ஓடிச் சென்று காரிலிருந்த சிறிய தலையணைகளை எடுத்து வந்து அவள் வசதியாக சாய்ந்து அமர உதவியவன் கைபிடியில் அவள் தோளில் கை போட்டு அமர்ந்துக் கொண்டான்.
சிறிது நேர அரட்டைக் கச்சேரிக்குப் பின் “ஏதாவதுக் குடிக்குறீங்களா ரெண்டுப் பேரும்?” என்று ஹர்ஷா கேட்க “இப்போ தானே புல்லா சாப்பிட்டோம். எதுவும் வேணாம்…” என்றாள் நீணா.
“தண்ணி மட்டும் குடுடா…” என்றுக் கேட்டான் ரோஹித்.
ஹர்ஷா எழுந்ததும் “நான் டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்…” என்றுக் கூறி எழுந்தாள் மோனிகா. அவள் கை பிடித்து அறை வாசல் வரை அழைத்து சென்றவன் தண்ணீர் எடுக்க சமையலறைக்குள் சென்றான்.
இருவரும் ஹாலை விட்டு சென்றதும் நீணாவின் கைபேசி சிணுங்கியது.
அதை எடுத்தவள் “சொல்லு அண்ணா… எப்படி இருக்க?” என்றாள்.
“நல்லா இருக்கேன்டா… நீ எப்படி இருக்க?” என்று பதிலுக்குக் கேட்டான் நீணாவின் சகோதரன் அஜய்.
“நான் நல்லா இருக்கேன் அண்ணா…”
“வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களாம்மா?”
ரோஹித்தை பார்த்துக் கொண்டே “ரோஹித் நல்லா இருக்கான் அண்ணா…” என்றாள் நீணா.
ரோஹித் இது எதுவும் காதில் விழாதவன் போல் கையில் மாத இதழ் ஒன்றை வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தான்.
“அப்பறம்டா… வேற ஏதாவது ஸ்பெஷல் உண்டா?”
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ஸ்பெஷல் எல்லாம் எதுவும் இல்லண்ணா… நேத்து ஏதோ இருந்துது… இன்னைக்கு இல்லை…” என்றுக் குறும்பாகக் கூறினாள்.
அஜய்கு தேவையானத் தகவல் கிடைத்து விட்டதில் முகம் மலர்ந்து “சரிமா… அப்பறம் பேசுறேன்… பை” என்றுக் கூறி வைத்தான்.
நீணாவிற்கு தெரியும் அமெரிக்காவில் இப்போது அதிகாலை என்று. அவளும் வேறு எதுவும் பேசாமல் வைத்தாள்.
அவள் மொபைலை கைபையில் வைப்பதைப் பார்த்த ரோஹித் “என்னவாம் உன் அண்ணனுக்கு? அமெரிக்கால போர் அடிக்குதாமா?” என்று நக்கலாகக் கேட்டான்.
“ம்ம்கும்ம்… துணைக்கு ரோஹித்த அனுப்ப முடியுமான்னுக் கேட்டான்… போறியா?” என்று அவனைப் போலவே நக்கலாகக் கேட்டாள் நீணா.
அவளை முறைத்து “நேத்து ஏதோ ஸ்பெஷல்னு சொன்னியே… என்னதது?” என்றுக் கேட்டான்.
“அது அவனுக்குத் தேவையானத் தகவல்…” என்றுக் கூறி சிரித்தாள் நீணா.
“அதான் என்னன்னுக் கேக்குறேன்…”
“ம்ம்… நேத்து என் நாத்தனார் லத்திகா பேசுனான்னு அவனுக்கு வேற எப்படி சொல்லுறது?”
“ம்ம்ச்ச்… என் தங்கச்சியையும் உன் அண்ணனையும் சேர்த்து வெச்சு பேசாதன்னு எத்தன தடவ சொல்லுறது?”
“ஆமாமா… நான் தான் பேசுறேனாக்கும்? நேத்து லத்திகா ‘அப்பறம் அண்ணி… அப்பறம் அண்ணி’ னு பத்து தடவக் கேட்டது எதுக்குன்னு எங்களுக்குத் தெரியாதா…” என்று முனுமுனுத்தாள் நீணா.
ரோஹித் ஏதோக் கூற வாய் திறந்தபோது ஹர்ஷாவும் மோனிகாவும் வந்து சேர்ந்தனர். ரோஹித் அமைதியாக ஹர்ஷா கொடுத்த நீரை வாங்கிப் பருகினான்.
இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினர். வீட்டு வாசல் வரை வந்து வழியனுப்பி உள்ளே வந்தனர் ஹர்ஷாவும் மோனிகாவும்.
“டயர்டா இருக்கா மோனி? இன்னைக்கு ரொம்ப நேரம் நின்னுட்டடா…” என்றுக் கரிசனையாகக் கேட்ட ஹர்ஷாவின் கழுத்தை சுற்றி கைப் போட்டு வளைத்துத் தன் அருகில் இழுத்தாள் மோனிகா.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல… நீ தான் அப்பப்போ ஜூஸ் கொண்டு வந்துக் கொடுத்து என்னை உக்கார சொல்லிட்டே இருந்தியே…”
கல்லூரியில் நட்பாய் பழகி தோழியாய் இருந்த ஒருத்தி… காதல் என்று சொன்னபோது அதை ஏற்று காதலியாய் காதலாய் மாறிய ஒருத்தி… மணம் முடித்தப்பின் தனக்கு தாயாய் உருமாறிய ஒருத்தி…
இப்போது தன் கருவை சுமந்துத் தன் கண்களுக்குக் குழந்தையாய் தெரிபவளை கை வளைவில் இருத்தி வைத்திருப்பது ஏதோ உலகையேத் தன் கைகளுக்குள் அடக்கியதுப் போன்ற உணர்வைக் கொடுத்தது ஹர்ஷாவிற்கு.
“என்ன ஹர்ஷா அப்படிப் பார்க்குற?” என்ற மோனிகாவின் கேள்விகக்கு மௌனமாய் தலை அசைத்தான்.
அவளுக்கும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றுத் தோன்ற அப்படியே அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் முகம் பார்த்து அமைதியாக நின்றாள்.
சில நிமிடங்கள் அப்படியேக் கழிய “படுக்கலாம் மோனி… நீ ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்…” என்றுக் கூறிய ஹர்ஷா அவன் கையணைப்பிலேயே அவளைப் படுக்கையறைக்கு அழைத்து சென்று மெத்தையில் அமர்த்தினான்.
பின்புதான் நினைவு வந்தவனாக “இரு மோனி. 5 மினிட்ஸ். வெந்நீர் வெச்சு எடுத்துட்டு வரேன். ரொம்ப நேரம் நின்னிருக்க. கால் வீங்கியிருக்கும்” என்றுக் கூறி வேகமாக அறையை விட்டு ஓடினான்.
“மெதுவா ஹர்ஷா” என்றுக் கத்திய மோனிகா புன்னகையுடன் “என்ன சொன்னாலும் கேக்க மாட்டான்” என்று நினைத்துக் கொண்டாள்.
கையில் வெந்நீர் குவளையுடன் வந்தவன் அதை குளியலறையுள் எடுத்து சென்று குளிர்ந்த நீர் கலந்து மிதமான சூட்டில் இருந்த நீரை வாலியில் எடுத்து வந்தான். மோனிகாவை அதனுள் காலை வைக்க சொல்லி ஒரு துணிக் கொண்டி ஒத்தடம் கொடுத்தான்.
சூடான நீர் தந்த இதத்தை விட ஹர்ஷாவின் கவனிப்பு தந்த இதத்தில் தன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனின் தலை கோதினாள் மோனிகா.
சிறிது நேரம் கழித்து “போதும் ஹர்ஷா. படுக்கலாம்” என்று அவள் கூற அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வந்து அவள் படுக்க உதவினான்.
“வர வர நான் சொல்லுறதையே நீ கேட்க மாட்டேங்குற… இன்னைக்கு அவ்வளவு சொல்லியும் உட்காரல… நான் குடுத்த ஜூஸயும் ஒழுங்காவேக் குடிக்கல மோனி நீ…”
“அதெல்லாம் என்னை நீ பார்த்துக்குவ… வா வந்துப் படு…”
விளக்கை அணைத்து விட்டு ஒருக்களித்துப் படுத்திருந்த மனைவியின் பின்னால் படுத்து அவள் வயிற்றை சுற்றிக் கை போட்டு “குட் நைட்…” என்றுக் கூறி அவள் பின்னங்கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான் ஹர்ஷா.
அவன் அணைப்பு தந்த சுகத்திலும் அன்று வழக்கத்திற்கு அதிகமான நேரம் நின்ற களைப்பினாலும் உறங்க ஆரம்பித்தாள் மோனிகா.
காரில் அமர்ந்திருந்த நீணா அடிக்கடி ரோஹித்தின் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள். ஹர்ஷாவின் வீட்டில் நடந்த அவர்கள் வாக்குவாதம் இன்னும் முற்றுப் பெறாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது அவளுக்கும் புரிந்தே இருந்தது.
இந்த விஷயத்தில் அவனை சமாளிப்பதும் சமாதானம் செய்வதும் கடினம் என்றுத் தோன்றவே அவன் முகத்திலிருந்து எதையாவதுக் கண்டறிய முடியுமா என்றுப் பார்த்தாள்.
ம்ம்ஹும்ம்…. அப்படி ஒரு பேச்சு நடந்ததற்கான அறிகுறி எதுவும் அவன் முகத்தில் தென்படவில்லை.
“ரொம்பக் கஷ்டம்…” என்று அவள் முணுமுணுக்க கார் பார்கிங்கில் வண்டியை நிறுத்திய ரோஹித் “என்ன?” என்றுக் கேட்டான்.
தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கி கதவைத் திறந்து இறங்கினாள் நீணா.
அவள் இறங்குவதையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஸ்டியரிங் மீதுத் தாளம் போட்டுத் தன் பக்கக் கதவைத் திறந்து இறங்கி ரிமோட் மூலம் காரை லாக் செய்தான்.
வீட்டை நோக்கி நடந்து செல்லும்போது ரோஹித் அமைதியாக வருவதுப் பிடிக்காமல் அவனை சீண்ட எண்ணி அவன் தோளில் இடித்து விட்டு முன்னே சென்றாள் நீணா.
சிறிதுத் தடுமாறியவன் திரும்பிப் பார்த்தபோது அவள் முன்னே சென்றிருந்தாள். ரோஹித் நடையின் வேகத்தைக் கூட்டி அவளை நெருங்கி அவள் தோளில் இடித்தான்.
அவன் பலமாகவே இடிக்கவும் தடுமாறி அருகில் இருந்த சுவற்றைப் பிடித்து நின்றாள் நீணா. அவள் நிமிர்ந்தபோது ரோஹித் முன்னால் நடந்து செல்வதுத் தெரிந்தது.
இரவு வெகு நேரம் ஆகியதால் சுற்றி ஒருவரும் இல்லை. அந்த காரிடரில் வெளிச்சமும் கம்மியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு “வரேன்டா…” என்றுக் கூறி அவனை நோக்கி ஓடினாள்.
அவள் ஓடி வருவதுத் தெரிந்ததும் வேகமெடுத்து ஓட ஆரம்பித்தான் ரோஹித். அவனை விடாமல் துரத்திச் சென்று வீட்டின் அருகே வரும் சமையம் அவனை நெருங்கியவள் ஒரு கையால் அவன் முடியை கொத்தாகப் பிடித்து இழுத்து மறு கையால் அவன் தலையில் இரண்டு அடிகளை வைத்தாள்.
அவளை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் ரோஹித் சிரித்துக் கொண்டே வீட்டைத் திறக்க உள்ளே நுழைந்து ஹாலின் விளக்குகளை எரிய விட்டு சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள் நீணா.
ரோஹித் அவள் அருகில் அமர்ந்து சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களைக் கழட்டி அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான்.
சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அருகில் இருந்த கைபையில் இருந்து மொபைலை எடுத்து மெசேஜ் டைப் செய்ய ஆரம்பித்தாள்.
“இந்த நேரத்துல எதுக்கு லத்திகாவுக்கு மெசேஜ் அனுப்புற?”
சட்டேன்றுக் குனிந்து “எப்படிப் பார்த்தான்?” என்ற சந்தேகத்தொடு அவன் முகம் பார்த்தாள்.
ரோஹித் கண் மூடிப் படுத்திருக்கவும் “எமகாதகன்… இதெல்லாம் மட்டும் கரெக்டா தெரிஞ்சு வெச்சுருப்பான்…” என்று மனதிற்குள் அவனை செல்லமாகத் திட்டி தன் வேலையைத் தொடர்ந்தாள்.
வெடுக்கென்று எழுந்தமர்ந்த ரோஹித் “கேட்டுட்டே இருக்கேன்… பதில் சொல்லாம நீ பாட்டுக்கு மெசேஜ் டைப் பண்ணா என்ன அர்த்தம்?” என்றுக் கோபமாகக் கேட்டு அவள் கையிலிருந்த மொபைலை பிடுங்கினான்.
அனுப்ப வேண்டிய அனைத்தையும் டைப் செய்து முடித்திருந்த நிலையில் அவன் மொபைலை வாங்கியதும் “ஏய்… அது என் மொபைல்… குடுடா…” என்றுக் கத்தி அவன் கையில் இருந்த மொபைலைப் பறிக்க வந்தாள்.
சோபாவில் இருந்து எழுந்து கையை தலைக்குப் பின்னால் எடுத்து சென்றவன் “க-த்-தா-த” என்று அழுத்திக் கூறினான்.
தன் இரு கைகளால் காதுகளை இறுக்கமாக மூடியவள் “நீ இப்படி சொல்லாத… ப்ளீஸ்…” என்றாள்.
ரோஹித் அவளை அமைதியாக முறைக்க நீணாவும் சளைக்காமல் அவனைப் பார்த்தாள்.
அவன் அசந்த நேரம் சட்டென்று அவன் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கி படுக்கையறை நோக்கி ஓடி செல்லும்போதே தான் டைப் செய்து வைத்திருந்த மெசேஜை லத்திகாவிற்கு அனுப்பி விட்டாள்.
ரோஹித்திற்கு கையிலிருந்த மொபைல் பறிக்கப்பட்டது அவள் ஓட ஆரம்பித்தப் பிறகு தான் உரைத்தது.
“நில்லுடி… சிக்குன செத்த… ஓடாதன்னு சொல்லுறேன்ல… நீணா…” என்றுக் கத்திக் கொண்டே அவள் பின்னால் வேகமாக நடந்தான்.
அவன் பின்னால் வருவதுத் தெரிந்ததும் ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினாள். அவள் வேகமாக ஓடவும் தானும் அவள் வேகத்திற்கு ஈடுக் கொடுத்து ஓட ஆரம்பித்தான்.
“கிட்ட வராத… அப்பறம் கத்தி ஊரக் கூட்டிடுவேன்…”
“ஹான்… கத்துடி பார்க்கலாம்…”
இருவரும் கட்டிலின் இரு மருங்கில் நின்று ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.
ரோஹித் வலதுப் பக்கமாக நகர்ந்து நீணாவை நெருங்க முயல அவள் அவனின் இடதுப் பக்கமாக ஓட ஆரம்பித்தாள்.
ரோஹித் அவள் ஓடியப்பக்கம் வரவும் எதிரில் அவனைப் பார்த்து “ஆஆஆ”வென அலறிக் கட்டிலின் மேலேறினாள் நீணா.
“எதுக்குடி கத்துற?” என்றுக் கேட்டுத் தானும் கட்டிலின் மேல் தாவி ஏறினான் ரோஹித்.
அவ்வளவு தான் இருவருக்குமேத் தெரியும். அடுத்த நொடி இருவரும் தரை மட்டத்தில் நின்றிருந்தனர்.
ஒன்றும் புரியாமல் திகைத்து சுற்றிப் பார்க்க அவர்கள் ஏறி குதித்த வேகத்தில் அந்த மரக் கட்டிலின் ஒரு பக்க கால் முறிந்து சரிந்திருந்தது. அதிர்ந்துப் போய் என்ன நடந்தது என்பதை நினைவில் கொண்டு வர முயன்றனர்.
“அடிப்பாவி… கட்டிலையே ஒடச்சுட்டியாடி… குண்டுப் பூசணி?” என்று வாயில் கை வைத்துக் கேட்டான் ரோஹித்.
மெத்தையை விட்டுத் தரைக்கு வந்த நீணா “நான் ஏறுனப்போ ஒண்ணும் உடையல… நீ ஏறுனதும் தான்டா உடைஞ்சுது தடிமாடு…” என்றாள்.
“வீட்டு வாசல்ல வெச்சு புருஷன் தலையில அடிச்ச… வீட்டுக்குள்ள வந்ததும் கட்டில ஒடச்சுட்ட…”
“டேய்… நான் எதுவும் பண்ணல… நீதான் குதிச்ச…”
“ஓவரா பேசாத… போய் துடப்பம் எடுத்துட்டு வா… கூட்டி விட்டு எல்லாத்தையும் ஒதுக்குவோம். இன்னைக்கு நைட் கெஸ்ட் ரூம்ல தூங்கலாம். கார்பெண்டர்கு காலையில போன் பண்ணி சொல்லிடுறேன்…”
அடுத்து செய்ய வேண்டியவற்றை அடுக்கிக் கொண்டேப் போனான் ரோஹித்.
அவன் கூறியதுப் போல் உடைந்து சிதறியிருந்த மரத் துகள்களை கூட்டித் தள்ள ஆரம்பித்த நீணா “நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க… வந்து மெத்தையப் பிடி… ஓரமா எடுத்து வெப்போம்…” என்று அதட்டினாள்.
“மேல ஏறி ஜங்குன்னு குதிச்சு கட்டிலையும் ஒடச்சுட்டு… சவுண்ட் குடுக்கறியா?” என்றுக் கேட்ட வண்ணம் நீணா பிடித்திருந்த மெத்தையின் மறுப்பக்கம் சென்றுப் பிடித்துத் தூக்கினான்.
“யாரு??? நான் ஜங்குன்னு குதிச்சு ஒடஞ்சுதா?” என்றுக் கேட்ட நீணா தன் பக்க மெத்தையைக் கீழேப் போட்டாள்.
“ஆமாடி… அதுக்கு என்னங்குற இப்போ?” என்றுக் கேட்டு தன் கையில் இருந்த மெத்தையின் பகுதியை கீழே வீசினான் ரோஹித்.
“முதல்ல ரூம கிளீன் பண்ணி எடுத்து வெப்போம்… அப்பறமா நம்ம சண்டைய வெச்சுக்கலாம்… பிடி…” என்றுக் கூறி நீணா அறையை சுத்தம் செய்வதில் இறங்க அப்போதும் அவர்களால் அமைதியாக சுத்தம் செய்ய முடியவில்லை. ஒரு வழியாக அனைத்தையும் முடித்து அறையை விட்டு வெளியே வந்தனர்.
கையைக் கழுவிய பின் விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்கென ஒதுக்கி வைத்திருந்த படுக்கை அறையினுள் நுழைந்தாள் நீணா. ஏற்கனவே ரோஹித் அங்கிருந்த மெத்தையில் படுத்திருந்தான்.
வேகமாக ஓடிச் சென்று அவனை இடித்துத் தள்ளி நெருக்கிப் படுத்தவள் அவன் போர்த்தியிருந்தப் போர்வையை உருவித் தானும் போர்த்திக் கொண்டாள்.
“ஏய்… இந்த கட்டிலையும் ஒடச்சுடாத… போய் வேற போர்வை எடுத்துட்டு வாடி… தள்ளிப் படு… எதுக்கு இப்படி நசுக்கற?”
காதுக் கேளாதவள் போல் அவனுக்கு முதுகுக் காட்டிப் படுத்தாள் நீணா.
“உயிர வாங்கு…”
முனங்கியபடியே படுத்தவன் சட்டென்று எழுந்தமர்ந்து “எதுக்குடி லத்திகாவுக்கு மெசேஜ் பண்ண? உங்கண்ணன் என்ன கேட்டான்? என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க எல்லாரும்?” என்று வருசையாகக் கேள்விகள் கேட்டான்.
“அய்யய்யோ… மறந்துட்டான்னு நெனச்சோமே… கரெக்டா ஞாபகம் வெச்சுக் கேட்குறானே…” என்று மனதிற்குள் பதறியவள் அசையாமல் படுத்திருந்தாள்.
“எப்போக் கேள்விக் கேட்டாலும் பதில் சொல்லுறதுக் கிடையாது… எந்திரி முதல்ல…” என்ற ரோஹித் அவள் தோள் பற்றித் திருப்பினான்.
“என்ன ரோஹித் உன் பிரச்சனை? எதுக்கு நடு ராத்திரியிலக் கத்திக்கிட்டு இருக்க? எதுவா இருந்தாலும் நாளைக்கு காலையில பேசலாம். தூங்கு ஒழுங்கா…” என்று எப்படியாவது அவன் வாயை மூட வேண்டும் என்ற எண்ணத்துடன் கூறினாள்.
“தூங்குறதா??? இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவுத் தெரியாம நானும் தூங்க மாட்டேன்… உன்னையும் தூங்க விட மாட்டேன்…”
“நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகணுமா வேண்டாமா?” என்று நீணா கேட்ட அடுத்த நொடி “அதெல்லாம் ஒண்ணும் போக வேண்டாம்… நீ சொல்லு” என்றான் ரோஹித்.
“நைட் எப்போ கேட்டாலும் இப்படி தான் சொல்லுவ… ‘அதெல்லாம் ஒண்ணும் போக வேண்டாம்… லீவ் போட்டுக்கலாம்’னு. நானும் உன்னைய நம்பி கண்ணு முழிப்பேன்.
ஆனா காலையில அலாரம் அடிக்குறதுக்கு முன்னாடி முழிச்சு ‘நீணா லேட் ஆச்சு… லஞ்ச் ரெடி பண்ணு’ னு சொல்லி என்னை எழுப்பி விட்டுடுவ…” என்று மனதிற்குள் கருவினாள்.
“என்ன லுக்கு?”
விட மாட்டான் என்று நன்கு புரிய அவன் எதிரில் எழுந்தமர்ந்தாள்.
“அஜய்கு லத்திகாவ பிடிச்சுருக்கு… லத்திகாவுக்கும் அஜய் இஷ்டம் தான்… ரெண்டுப் பேரும் இன்னும் நேரடியா எதையும் பேசிக்கல… என்கிட்டயும் எதுவும் நேரடியா சொல்லல… நானா கண்டுப்பிடிச்சேன்… அதா…..ன்…”
“எனக்கு இதுலக் கொஞ்சம் கூட சம்மதம் இல்ல நீணா. இந்த விஷயத்த இத்தோட விட்டுடு. இது நடக்காது. ஒத்து வராது. சரியா வரும்னுத் தோணல…”
ரோஹித் அடுக்கிக் கொண்டேப் போக “ஏன்டா ஆரம்பத்துலயே வாய வெக்குற? நடக்கும். எனக்குப் பிடிச்சுருக்கு. என் நாத்தனாருக்கும் அண்ணனுக்கும் நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்…” என்று உறுதியுடன் கூறினாள் நீணா.
“அதுக்கு உன்னை விட்டா தானடி?”
“நீ என்னடா விடுறது?” என்றுக் கேட்கும்போதே அவன் கழுத்தை நெரிப்பது போல் பிடித்து மெத்தையில் சாய்த்துப் படுக்க வைத்து அவன் மீதுப் படுத்திருந்தாள் நீணா.
“விட மாட்டேன்டி… நீ தள்ளிப் போ…” என்றுக் கூறி அவளைத் தன் மீதிருந்து சரிக்க முயன்றான் ரோஹித்.
“தூங்கப் போறியா இல்லையா?” என்றுக் கேட்டவள் அடுத்து ரோஹித் வாயைத் திறந்துக் கத்தும் முன் தன் இதழ்களால் அவன் இதழ்களை மூடினாள்.
8
ஹாஸ்பிட்டல் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி நீணாவும் ரோஹித்தும் இறங்கியபோது ஹர்ஷா, மோனிகா, ஷிவானி அங்கிருப்பதைக் கண்டனர். “நான் உடனே போயாகணும். பை” என்றுக் கூறி வேகமாக சென்றுவிட்டாள் ஷிவானி.
சொன்னது போலவே காலையில் ஹர்ஷா அவளை அவர்கள் காரில் அழைத்து வந்திருந்தான். அவளுக்கு ஒரு அவசர வேலை இருந்ததால் உடனேயே அங்கிருந்து சென்றுவிட்டாள்.
“டேக் கேர் நீணா… பை” என்றுக் கூறி ஹர்ஷாவின் அருகில் சென்றான் ரோஹித்.
மோனிகா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றாள். ஹர்ஷா ஒரு நீண்டப் பெருமூச்சை வெளியேற்றி ரோஹித்துடன் இணைந்து முன்னே நடந்தான்.
இவர்கள் இருவரின் நடவடிக்கைகளையும் மனதில் குறித்துக் கொண்ட நீணா மெதுவாக மோனிகாவுடன் நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது தூரம் அமைதியாக வந்தவள் “ஹர்ஷா ஏன் நீணா இப்படி இருக்கான்?” என்றுக் கேட்டாள்.
“காலையிலயே ஏதோ பஞ்சாயத்துப் போலயே…” என்று நினைத்த நீணா “என்னாச்சு?” என்றுக் கேட்டாள்.
“காலையில பால் கொண்டு வந்து குடுத்துக் குடிக்க சொன்னான். எனக்கு என்னமோ இன்னைக்கு அத பார்த்தாலேப் பிடிக்கல. வேண்டாம்னு சொன்னேன். அவன் விடாம குடி குடின்னு சொல்லிட்டே இருந்தான். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.
உடனே ‘இதக் கூட செய்ய மாட்டியா? எல்லாத்துக்கும் உன்கிட்டக் கெஞ்சணுமா’னு கத்திட்டான். எனக்கு அழுகையே வந்துடுச்சு நீணா. நீயே சொல்லு… இப்படியெல்லாம் சண்டப் போட்டா நான் என்ன தான் செய்யட்டும்?” என்று அழுது விடுபவள் போல் கேட்டாள் மோனிகா.
“அடிப்பாவி…… சண்டைன்னா என்னன்னுத் தெரியுமா? வீட்டுக்குள்ள நுழையும்போதே கத்த ஆரம்பிச்சு… கோவம் தலைக்கேறி… காட்டுக் கத்துக் கத்தி… கைக்கலப்பாகி… முடியப் பிடிச்சுப் பிச்சுக்கிட்டு… ஜங்கு ஜங்குன்னு குதிச்சு… ஆனானப்பட்ட மரக் கட்டிலையே ஒடச்சு… அப்பறமும் அடங்காம… ஹம்ம்ம்ம்… கடைசியாக் கட்டிப் பிடிக்கும்போதுக் கூட ‘என்னையவா கத்துன’னு……..”
“நீணா ஏன் அமைதியா இருக்க?” என்று மோனிகா கேட்டவுடன் தன் சிந்தனையிலிருந்து வெளி வந்த நீணா “ம்ம்… ஹான்… அது… என்ன மோனி இதெல்லாம்… சின்ன விஷயம் தான?
ஹர்ஷா உண்மையிலயேக் கோவப்பட்டிருபான்னு நினைக்குறியா? உன் நல்லதுக்கு தானே சொன்னான்? இப்போ அவன் முகம் பார்த்தியா? எப்படி வாடிப் போய் இருந்துது…” என்றுப் பொறுமையாக எடுத்துக் கூறினாள்.
“ம்ம் பார்த்தேன்… ஈவ்னிங் அவன்கிட்ட பேசுறேன். சரி நீணா லஞ்ச்ல பார்க்கலாம்…” என்றுக் கூறி ஹர்ஷாவை பற்றிய சிந்தனையுடன் சென்றாள் மோனிகா.
அன்று அதிசயமாக ரோஹித்தும் ஹர்ஷாவும் மதிய உணவு நேரத்தில் பேஷண்ட்ஸ் யாரையும் பார்க்க நேராமல் ஓய்வாக இருந்ததால் பேன்ட்ரிக்கு வந்தனர்.
ஏற்கனவே அங்கிருந்த நீணாவும் மோனிகாவும் அவரவர் லஞ்ச் பாக்ஸை திறந்து அதை அவனில் வைத்து சாப்பாட்டை சூடு செய்துக் கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்தவர்களைக் கண்டதும் ஆச்சரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் டப்பாவுடன் ஆளுக்கு ஒரு டேபிளில் சென்று அமர்ந்து ரோஹித்தும் ஹர்ஷாவும் அவர்கள் சாப்பாட்டை சூடு செய்து எடுத்து வரும் வரைக் காத்திருந்தனர்.
ரோஹித் நீணாவின் எதிரில் அமர்ந்து அவளை முறைக்க ஹர்ஷா மோனிகாவின் எதிரில் அமர்ந்து அவளை பாவமாகப் பார்த்தான்.
மோனிகா உணவைத் தொடாமல் அமர்ந்திருந்தாள். ஹர்ஷா அவள் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் வரை அப்படியே அமர்ந்திருந்தவள் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
ஹர்ஷா அவள் வலது கை மீது தன் இடது கையை வைத்து “சாரி மோனி…” என்றான். அப்போதும் மோனிகா அமைதியாக இருக்க “உன் ஹெல்த்த நீ பார்த்துக்கணும்னு தான் அப்படி சத்தம் போட்டுட்டேன்… சாரிடா…” என்றான்.
“பரவாயில்ல ஹர்ஷா… நானும் ஒழுங்கா பால குடிச்சிருக்கணும். இன்னைக்கு அத குடிக்கவேப் பிடிக்கல… அதான் வேணாம்னு சொன்னேன். இனிமே இப்படி பண்ண மாட்டேன்… அதுக்கு ஏன் நீ முகத்த இப்படி வெச்சிருக்க? எனக்கு என்னமோ மாதிரி இருக்கு…”
சுற்றும் முற்றும் பார்த்து யாரும் தங்களை கவனிக்கவில்லை என்றதும் சாதத்தை ஸ்பூனில் எடுத்து அதை அவன் வாய் அருகில் எடுத்து சென்றாள்.
ஹர்ஷா காலையிலிருந்து அவளின் முகம் பார்த்து, அவள் தன்னுடன் பேச மாட்டாளா என்று ஏங்கினான். அதற்கு பலனாக தான் சத்தம் போட்டதற்கு தன்னை மன்னித்ததும் அல்லாமல் அவளுடைய சிறு செயலால் அவன் மீதான அவளுடைய காதலையும் வெளிப்படுத்தியதும் நெகிழ்ந்துப் போனான்.
புன்னகையுடன் மோனி கொடுத்ததை வாங்கிக் கொண்டான். அவனும் பதிலுக்கு அவளுக்கு ஊட்டினான். ஆனால் அவளைப் போல் மற்றவர்கள் கவனிக்கிறார்களா என்றெல்லாம் பார்க்காமல் ‘என் மனைவிக்கு நான் ஊட்டுகிறேன்’ என்று உரிமையுடன் ஊட்டினான்.
நீணாவும் ரோஹித்தும் சாப்பாட்டில் கை வைக்காமல் ஒருவரை ஒருவர் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். முதலில் ரோஹித் ஒரு அலட்சிய பாவனையுடன் சாப்பிட ஆரம்பித்தான்.
“இங்க ஒருத்தி சாப்பிடாம உட்கார்ந்திருக்கேன்… சாப்பிடுன்னு ஒரு வார்த்தை சொல்லுறானா… அவன் பாட்டுக்குக் கொட்டிக்குறான்… எனக்கென்ன… நானும் சாப்பிடுவேன்…” என்று மனதிற்குள் அவனை திட்டி சாப்பிட ஆரம்பித்தாள் நீணா.
தான் சாப்பிட சொல்லி வாயைத் திறந்தால் அதையே சாக்காக வைத்து வாக்குவாதத்தை துவங்குவாள் என்றுத் தெரிந்தே அமைதியாக சாப்பிட ஆரம்பித்தான் ரோஹித். அவன் நினைத்ததுப் போலவே அவளும் சாப்பிட தனக்குள் சிரித்துக் கொண்டான்.
ரோஹித் இரண்டு வாய் சாப்பிட்டதும் கையை நீட்டி நீணாவின் டப்பாவிலிருந்து ஒரு ஸ்பூன் சாதத்தை எடுத்து சாப்பிட்டான்.
ஒரு நொடியில் நிகழ்ந்து விட்ட அவனின் இந்த செயலால் திகைத்துப் போனாள் நீணா. அவள் அவனை கோபமாக நிமிர்ந்துப் பார்க்க அவன் குனிந்தபடி சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.
நீணா ஒரு வாய் சாப்பிட்டதும் மீண்டும் அவள் டப்பாவிலிருந்து எடுத்து சாப்பிட்டான் ரோஹித். அவள் கடுப்புடன் நிமிர்ந்தபோது அவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டுக் குனிந்துக் கொண்டான்.
‘நீயே சாப்பிடு’ என்பது போல் தன் டப்பாவை அவன் புறம் வேகமாக நகர்த்தினாள். அவன் அதை இன்னும் அருகில் இழுத்து வைத்து இரண்டு லஞ்ச் பாக்ஸிலிருந்தும் மாறி மாறி எடுத்து சாப்பிட்டான்.
சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள் “நீ மட்டும் கொட்டிப்பியா? நானும் சாப்பிடுவேன் டா” என்று மனதிற்குள் கூறி ரோஹித்தின் பாக்ஸை தன் பக்கம் நகர்த்தி சாப்பிட ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் அந்த டப்பாவிலிருந்தும் எடுத்து சாப்பிட்டான் ரோஹித்.
டப்பாக்கள் இடம் மாறி இடம் மாறி கடைசியில் யாருடைய பாக்ஸ் யார் கையில் என்றுத் தெரியாமல் இருவரும் சாப்பிட்டு முடித்தனர். இரண்டும் ஒரே போல் உள்ள பாக்ஸ் என்பதால் பார்ப்பவருக்கு இவர்கள் மாற்றி உண்பதுத் தெரியாமல் போனது.
தங்கள் உணவை முடித்துக் கொண்டு மோனிகாவும் ஹர்ஷாவும் அவர்கள் அருகில் வந்தனர் “எப்படிடா இவ்வளவு அமைதியா சாப்பிடுறீங்க? எங்களப் பாரு… வந்ததிலிருந்து பேசிக்கிட்டே இருக்கோம்..” என்றுக் கூறி மோனிகாவின் தோளில் கை போட்டு வளைத்துக் கொண்டான் ஹர்ஷா.
ரோஹித்தும் நீணாவும் அழகாகப் புன்னகை செய்தனர்.
கிளம்பும்போது “நீணா கார்பெண்டர் இந்த வீக்கென்ட் தான் வர முடியும்னு சொல்லிட்டார். சனிக்கிழமை வருவார். அன்னைக்கு முடிஞ்சா லீவ் எடு. ஈவ்னிங் ஒரு கேஸ் பார்க்கணும். நீ மோனிகாவ கூட்டிட்டுப் போய் அவங்க வீட்டுல விட்டுட்டுப் போயிடு. நான் ஹர்ஷா கூட வந்துடறேன்” என்றுக் கூறி பான்ட் பாக்கெட்டில் இருந்து கார் சாவியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“ஒஹ்ஹ்… சரி ரோஹித்… நைட் சாப்பிடாம இருக்காத… பை”
“ஈவ்னிங் என் கூட நீ வர மாட்டியா?” என்று ஹர்ஷாவிடம் கேட்டாள் மோனிகா. அந்தக் குரலில் இருந்த ஏக்கம் ஹர்ஷாவை வதைத்தது.
அவள் தலையைக் கோதியபடியே “நைட் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துடறேன்டா… நீ நீணா கூட போ என்ன?” என்றுக் கூறி அவளை சமாதானம் செய்ய முயன்றான் ஹர்ஷா.
ரோஹித்தும் நீணாவும் ஒரே நேரத்தில் தொண்டையை செருமி தாங்கள் அங்கு இருப்பதை உணர்த்தினர்.
“என்ன? நான் என் பொண்டாட்டிய கொஞ்சி முடிச்சுட்டு தான் வருவேன். நீங்க ரெண்டுப் பேரும் கிளம்புங்க…” என்று ஹர்ஷா கறாராகக் கூறவும் “நடத்துடா நீ…” என்றுக் கூறி ரோஹித் வெளியேற சிரித்துக் கொண்டே அவன் பின்னால் சென்றாள் நீணா.
பான்ட்ரி விட்டு வெளியே வந்ததும் “சாப்பாட்டுல உப்புக் கொஞ்சம் கம்மி” என்றுப் போகிறப் போக்கில் கூறி நீணாவின் முறைப்பைப் பெற்றுக் கொண்டான் ரோஹித்.
“என்ன மோனி? ஏன் இப்படி சோகமா முகத்த வெச்சுக்குற? ஈவ்னிங் சர்ஜரி, நைட் லேட்டா வரது… இதெல்லாம் ஒண்ணும் புதுசு இல்லையேடா… அப்பறம் என்னம்மா?”
“காலையிலிருந்து உன்கிட்ட ஒழுங்காவே பேசல… நைட்டும் நீ லேட்டா வருவ… அப்பறம் எப்ப நான் உன்கிட்ட பேசுறது?”
ஹர்ஷா அவள் கேட்ட விதத்தில் சிரித்து விட்டான். “நாளைக்கு காலையில நிறைய பேசலாம் சரியா?”
ம்ம் என்றுத் தலை அசைத்தவளின் நெற்றியில் தன் நெற்றியை முட்டி “பை” என்றுக் கூறி சென்றான் ஹர்ஷா.
அன்று இரவு ரோஹித் வீட்டிற்கு வந்து சேரும்போது மணி இரண்டரை ஆகி இருந்தது. வீடு நிசப்தமாக இருக்க கெஸ்ட் ரூமை எட்டிப் பார்த்தான். நீணா அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
“தூங்கும்போது மட்டும் தான்டி நீ பேசாம இருக்க…” என்று வாய் விட்டுக் கூறி சிரிப்புடன் குளிக்க சென்றான்.
பசி எடுத்ததால் பிரிட்ஜிலிருந்து ப்ரெட்டை எடுத்து சாப்பிட்டவனுக்கு காலையில் கார்பென்டரை அழைத்து பேசியது நினைவு வந்தது.
“மணி… வீட்டுல கட்டில் கால் முறிஞ்சுடுச்சு. நீங்க இன்னைக்கு வந்து அது கொஞ்சம் பார்த்துக் குடுக்க முடியுமா?”
“இன்னைக்கு பிஸி சார்… வேலையிருக்கு… இன்னா சார்? போன மாசம் தான் ஷோகேஸ் கதவு ஒடஞ்சுதுன்னு சரி பண்ண கூப்பிட்டீங்க… இந்த மாசம் கட்டில் ஒடஞ்சுடுச்சுன்னு சொல்லுறீங்க? ரெண்டு பேரு தான சார் இருக்கீங்க?”
“அது… வீட்டுல ஷோகேஸ் கதவு திறந்து வெச்சு கிளீன் பண்ணிட்டு இருந்தாங்க போல… நான் தான் பாக்காம வேகமா வந்து இடிச்சு லேசா விரிசல் விட்டுடுச்சு. அதான் நீங்க வந்தப்பயே சொன்னேனே மணி? எனக்கும் தோள்பட்டையில அடி பட்டிடுச்சுன்னு…
நேத்து வீட்டுக்கு கெஸ்ட் வந்திருந்தாங்க. சின்ன பசங்க ஏறி விளையாடி கட்டில் ஒடச்சுட்டாங்க மணி… சீக்கிரம் வந்து சரி பண்ணி குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். எப்போ வரீங்க?”
“இந்த வாரம் புல்லா வேல இருக்குது சார்… சனிக்கிழமை வரேன்”
தன் நினைவுகளில் இருந்து மீண்டு வந்த ரோஹித் தலையை உலுக்கி கையில் மீதமிருந்த ப்ரெட் துண்டை வாயில் அடைத்தான்.
“இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கும்னு தான் இந்த மாதிரி ஒடஞ்சதெல்லாம் சரி பண்ண இங்க உள்ளுக்குள்ளயே இருக்க கார்பெண்டர் கூப்பிடாம வெளியில இருந்து கூப்பிடுறோம். அவரே இவ்வளவு கேள்விக் கேட்குறாரே…
இந்நேரம் செக்யூரிட்டி கிட்ட சொல்லி கார்பெண்டர் வர சொல்லியிருந்தா ‘நேத்து வீட்டுக்கு எந்த சின்ன பசங்க வந்தாங்க?’னு கேட்டிருப்பாங்க… செக்யூரிட்டிக்கு தெரியாதா யார் வந்தா போனான்னு…
போன மாசம் இவ மேல இருக்க கோவத்துல திறந்திருந்த ஷோகேஸ் கதவ ஓங்கி அடிச்சு சாத்துனதுல அது விரிசல் விட்டுக்கும்னு நான் என்ன கண்டேன்? நம்ம கைக்கு அவ்வளவு பவரா இருக்கு???
கட்டில் ஒடஞ்சுது சரி… மெத்தை இருந்ததால அடிப்படாம தப்பிச்சோம்… நல்ல வேல டைனிங் டேபிள் ஒடயல. ஹைட்டும் ஜாஸ்தி… மெத்தையும் கெடயாது… நேத்து அத நெனச்சு தான் எனக்கு நிம்மதியா இருந்துது… ஹம்ம்ம்ம்….”
கெஸ்ட் ரூமிற்கு வந்தவன் அங்கிருந்த சிறியக் கட்டிலில் முக்கால் பாகத்தை ஆக்கிரமித்து நீணா படுத்திருப்பதைக் கண்டான்.
“நேத்து நம்ம இப்படி படுத்ததுக்கு தான் சண்டைக்கு வந்தா… இவ மட்டும் எப்படிப் படுத்திருக்காப் பாரு…”
அவள் மீது பாதி உடலை சரித்து அவளை இறுக்கி அணைத்த வண்ணம் உறங்கினான் ரோஹித்.
அடுத்த நாள் காலை எழுந்ததிலிருந்து மீண்டும் போராட்டம் தொடங்கி ஒரு வழியாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
பதினோரு மணியளவில் ரவுண்ட்ஸ் சென்றுக் கொண்டிருந்த ரோஹித்தை வழியில் நிறுத்தினார் அவனின் சீப் டாக்டர் மெய்யப்பன்.
ரோஹித் இனி அவனே ஒரு அறுவை சிகிச்சையை தலைமைப் பொறுப்பிலிருந்து செய்யலாம் என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறான் என்றால் அவனின் இந்த வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் மெய்யப்பன்.
“சொல்லுங்க டாக்டர்”
“இந்த வீக்கென்ட் நீ ப்ரீயா ரோஹித்? எங்க வீட்டோட நாங்க மருதமலை போறோம். நீங்களும் வரீங்களா?”
அவர் கூப்பிட்டு மறுக்க முடியாது தான். ஆனால் நீணாவிடம் கேட்க வேண்டுமே. பதில் சொல்லாமல் சங்கடமாக அவரைப் பார்த்தான்.
மெய்யப்பன் சிரித்துக் கொண்டே “கால் ஹர்” என்றார்.
‘எப்படி இவரால் சொல்லாமலேயே எல்லாவற்றையும் புரிந்துக்கொள்ள முடிகிறது?’ என்று வியந்தபடியே மொபைலை எடுத்து நீணாவை அழைத்தான். ரிங் போய் கொண்டே இருந்ததேத் தவிர அவள் எடுக்கவில்லை.
மெய்யப்பன் தன் முகத்தையேப் பார்த்துக் கொண்டு நிற்கவும் அவள் அழைப்பை ஏற்காதது இன்னும் அதிக கோபத்தைக் கொடுத்தது.
அவள் ஏதேனும் முக்கிய வேலையாய் இருக்கக்கூடும் என்று ஒரு மனம் கூறினாலும் இவ்வளவுப் பெரிய மனிதரை காக்க வைக்கிறோம் என்ற எண்ணமேப் பிரதானமாய் தோன்றியது.
“ஷீ மஸ்ட் பீ பிஸி… ஈவ்னிங் கேட்டு சொல்லு ரோஹித்” என்றுக் கூறி கையிலிருந்த கேஸ் பைலைப் புரட்டிக் கொண்டே நகர்ந்தார் மெய்யப்பன்.
“அப்படி என்ன பிஸி?” என்றுக் கடுப்பான ரோஹித் ஜூனியர் ஒருவனை அழைத்து அவனிடம் மீதமிருந்த இரண்டு பேஷன்ட்டை பரிசோதித்து கேஸ் ஷீட்டில் குறிப்பெழுத சொல்லி விட்டு அவளைக் காணச் சென்றான்.
அவள் அறையில் நீணா இல்லை. “மேடம் இல்லையே சார். ஒரு பொண்ணோட ஸ்கேன் ரிப்போர்ட் பார்க்கப் போயிருக்காங்க. ஏதாவது சொல்லணுமா சார்?”
“இல்ல மேரி. நானே போய் பார்த்துக்குறேன்…”
ஸ்கேன் சென்டரில் இருந்த அட்டெண்டர் “டாக்டர் இப்போ தான் அந்த பேஷன்டையும் அவங்க பேரன்ட்ஸயும் கூட்டிட்டு கீழ போனாங்க…” என்றார்.
வேகமாக வெளியே வந்தவனைத் தடுத்து நிறுத்தியது அவனது அலைபேசி. ஹர்ஷா அழைத்திருந்தான்.
எடுத்தவுடன் “ரோஹித் உனக்காக தான் வெயிட்டிங். எங்க இருக்க? இன்னைக்கு வெங்கட் நமக்கு பிரீப் குடுக்கறதா சொல்லி இருந்தார் இல்ல…” என்று அவன் கூறியதும் தான் அவனுக்கு நினைவு வந்தது.
நெற்றியைத் தேய்த்து “சாரிடா… மறந்துட்டேன். தோ வந்துடறேன்” என்றுக் கூறி நடையின் வேகத்தைக் கூட்டினான்.
நேரம் போவதுத் தெரியாமல் ஹர்ஷாவும் ரோஹித்தும் வெங்கட்டுடன் தங்கள் மருத்துவமனையில் வாங்கவிருக்கும் புதிய உபகரணம் குறித்து பேசி விவாதித்ததில் மாலை ஆனது.
அது வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவிருக்கும் ஒரு நவீன உபகரணம் என்பதாலும் அதன் மதிப்பு சில கோடிகளைக் கடந்து சென்றதாலும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பயன்பாடுகள் குறித்தும் அலசி ஆராய்ந்தனர்.
அவர்கள் பேசி முடித்து அந்த கருவியை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுத்து மருத்துவமனை நிர்வாகிகளிடத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ரிப்போர்ட் தயார் செய்து எழுந்தபோது ரோஹித்திற்கு மீண்டும் நீணாவின் நினைவு வந்தது.
அறையை விட்டு வெளியே வந்ததும் நேராக அவளைக் காணச் சென்றான். அவள் சிறிது நேரத்திற்கு முன்னால் தான் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றாள் என்றத் தகவலை சொல்லி விட்டு நர்ஸ் மேரி வெளியே சென்றதும் ஓங்கி சுவற்றில் குத்தியவன் வலித் தாங்காமல் கையை உதறிக் கொண்டே வேகமாக காரிடாரில் நடந்தான்.
“வீட்டுக்குப் போறதா இருந்தா சொல்லிட்டுப் போக வேண்டியது தான?”
இந்த எரிச்சல் இரவு எட்டு மணிக்கு வீட்டின் வாசலில் நின்று அழைப்பு மணியை அடிக்கும் வரைத் தொடர்ந்தது.
கதவைத் திறந்த நீணா காலையில் அணிந்திருந்த உடையிலிருந்து வேறு உடைக்கு மாறி வெளியே செல்லத் தயாராக இருந்தாள்.
குழப்பமாக அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவனின் கண்களில் சோபாவின் அருகில் இருந்த லெதர் பேக் பட்டது.
“கான்பெரன்ஸ் ரோஹித். கோயம்பத்தூர்ல. வெள்ளி, சனி ரெண்டு நாள். அம்மா வீட்டுலத் தங்கிப்பேன். சண்டே நைட் கிளம்பி வந்துடறேன்” என்றுத் தகவல் கூறினாள் நீணா.
ரோஹித் அமைதியாக நின்றான். “போகட்டுமா?”
அதற்கும் பதில் இல்லை என்றதும் “சொல்லு ரோஹித் போகட்டுமா?” என்று மீண்டும் கேட்டாள் நீணா.
அவளை உருத்து விழித்தவன் “இத தான் செய்யப் போறேன்னு முடிவுப் பண்ணிட்டு என்கிட்டக் கேட்காத… இன்பார்ம் பண்ணாத… கேட்டுட்டு அப்பறம் நான் சரின்னு சொல்லுற வரைக்கும் அதயே திரும்ப திரும்ப கேட்காத” என்றுக் கூறி வேகமாக உள்ளே சென்றுவிட்டான்.
குளித்து முடித்து வந்த ரோஹித் இந்நேரத்தில் எப்படிப் போவாள் என்றுத் தோன்றவே ஹாலிற்கு வந்தான். நீணா தலையை கைகளில் தாங்கிப் பிடித்து சோபாவில் அமர்ந்திருந்தாள்.
“எப்படிப் போவ?”
“கால் டாக்ஸி சொல்லி இருக்கேன். இப்போ வந்துடும். பஸ்ல புக் பண்ணியிருக்கேன்”
ரோஹித் படிகளில் இறங்கி சமையலறை நோக்கி செல்வதைக் கண்டதும் சோபாவிலிருந்து எழுந்து “காலையில நீ என்னை பார்க்க வந்தன்னு மேரி சொன்னதும் உனக்கு கால் பண்ணேன். நீ எடுக்கல.
ரோஹித் இப்படி திடீர்னுக் கிளம்பிப் போற மாதிரி இது வர எத்தனையோ சிச்சுவேஷன் வந்துருக்கு. இப்போ எதுக்கு ஓவரா ரியாக்ட்…” என்று நீணா கூறும்போதே கடைசி படியில் நின்று அவளைத் திரும்பிப் பார்த்து போதும் என்று கைக் காட்டினான்.
வெளியே டாக்ஸி வந்து விட்டதற்கு அறிகுறியாக ஹார்ன் சப்தம் கேட்கவே அமைதியாக படி ஏறி வந்து அவள் பையை கையிலெடுத்து கதவைத் திறந்து வெளியே சென்றான். நீணா வேறு வழியின்றி ஹான்ட் பேகை மாட்டிக் கொண்டு அவன் பின்னால் சென்றாள்.
கார் கண்ணை விட்டு மறையும் வரை வெளியில் நின்ற ரோஹித் வீட்டின் உள் வந்து கதவைத் தாழிட்டு அதற்கு மேல் ஒரு அடியும் எடுத்து வைக்காமல் அப்படியே கதவில் சாய்ந்து நின்றான்.
காலையிலிருந்து நீணா போன் எடுக்காததால் அவள் மீது கோபம் இருந்தது. அவளைத் தேடி அலைந்தபோது அதுவே அவள் முகம் காணும் ஏக்கத்தை அவன் மனதில் விதைத்திருந்தது.
வீட்டிற்குள் வந்து அவளைக் கண்டபோது இறுக்கி அணைக்கும் ஆவல் எழுந்தது. ஆனால் வெளியே செல்லத் தயாராக இருந்த அவளின் தோற்றமும் அவள் பையும் அவனைப் பித்துப் பிடிக்க வைத்தது.
எதுவும் பேசாமல் அவளை அனுப்பி வைத்துவிட்டான். ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் அவள் இல்லாத இந்த வீட்டில் இருக்க வேண்டுமே… அந்த நினைப்பே கசந்தது.
வேறு எதுவும் செய்யத் தோன்றாமல் அமைதியாக அறைக்குள் சென்றான். நீணா தலைக்கு வைத்து உறங்கிய தலையணையை எடுத்து இறுக்கி அணைத்தபடியே எப்போது உறங்கினான் என்றேத் தெரியாமல் உறங்கிப் போனான்.
அடுத்து ஒரு நாளை ஓட்டுவதற்கே படாத பாடுப்பட்டான் ரோஹித். காலை அவள் இல்லாமல் வாக்கிங் செல்லப் பிடிக்கவில்லை. வீட்டிலேயே அமர்ந்து பேப்பர் படித்தான்.
வழக்கத்தைவிட சீக்கிரமாகவே மருத்துவமனை புறப்பட்டு சென்றான். மெய்யப்பனிடம் நீணா சென்றதைக் கூறி அவருடன் மருதமலை வர இயலாததைக் கூறினான்.
மருத்துவமனையில் இருந்தவரை வேலைகளை இழுத்துப் போட்டு செய்தவன் இரவில் வீடுத் திரும்பியதும் சாப்பிடக் கூடத் தோன்றாமல் அப்படியே சென்றுப் படுக்கையில் விழுந்தான்.
இரண்டு நாட்களாக நீணாவைக் கட்டியணைத்து உறங்கிய அதே சிறியக் கட்டில்… நேற்றே அவள் புறப்பட்டு சென்றதும் மிகவும் சிரமப்பட்டு தாமதமாக உறங்கியவனுக்கு இன்று அதுவும் முடியாமல் போனது.
காலை விழித்தவன் மருத்துவமனை செல்லும் நோக்கம் சிறிதும் இல்லாமல் வீட்டை சுற்றி வந்தவனின் கண்களுக்கு எங்கும் நீணாவே தெரிந்தாள்.
நீணா கான்பெரன்ஸில் பிஸியாக இருந்ததால் ரோஹித்திற்கு அழைத்து பேசவில்லை. வந்து சேர்ந்துவிட்டதாக மெசேஜ் அனுப்பியதோடு சரி.
அவள் தாய் வீட்டில் இருப்பதால் பாதுகாப்பைப் பற்றியக் கவலையில்லை. ஆனால் அவனை கொல்லாமல் கொல்லும் அவள் நினைவுகளைத் தடுக்கும் வகையறியாமல் தடுமாறினான்.
சில மணி நேரங்கள் இலக்கின்றி வீட்டை சுற்றியவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் மருத்துவமனைக்கு அழைத்து விடுப்புக் கூறினான். ஹர்ஷாவை அழைத்து பேசியபோது அவன் சிரித்துக் கொண்டே செய்த கேலிகளை சமாளித்தான்.
எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கிளம்பிய நேரம் அவன் மொபைல் அடித்தது. “சார் நான் கார்பென்டர் பேசுறேன். இன்னும் ஒரு மணி நேரத்துல வீட்டுக்கு வரலாங்களா? வீட்டுல தான இருக்கீங்க?” என்றுக் கேட்டவரிடம் “இல்ல இப்போ வராதீங்க. நானேக் கூப்பிடுறேன்” என்றான் ரோஹித்.
“அடுத்த வாரம் புல்லா பிஸி சார். இப்போவே வந்துக் கட்டில சரிப் பண்ணிடுறனே…” என்று இழுத்தார் அவர்.
“போயா யோவ்… பொண்டாட்டியே பக்கத்துல இல்லையாம்… கட்டில சரிப் பண்ணித் தனியாப் படுத்து உருளவா?” என்று வாய் வரை வந்ததை விழுங்கி “பரவால்ல… நான் கூப்பிடுறேன்” என்றுக் கூறி அவர் பதிலை எதிர்ப்பார்க்காமல் வைத்தான்.
ஷோல்டர் பேகை எடுத்து மாட்டிக் கொண்டு வீட்டைப் பூட்டி வெளியே வந்து ஆட்டோ பிடித்துப் பேருந்து நிலையம் வந்தான் ரோஹித். உள்ளே சென்றுப் பேருந்திற்குக் காத்திருக்கும் பொறுமையில்லாமல் வெளியே வந்த ஒரு பேருந்தில் ஓடிச் சென்று ஏறினான்.
9
ரோஹித் கோயம்பத்தூரை அடைந்தபோது இரவு மணி எட்டாகியிருந்தது. தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரின் பரப்பரப்பிற்கு சிறிதும் குறைவின்றி பரப்பரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது அவ்வூர்.
பேருந்து நிலையத்தில் இறங்கியவன் உடனே ஒரு ஆட்டோ பிடித்து நீணாவின் வீட்டின் முன் வந்து இறங்கினான்.
வெளி கேட்டை திறந்துக் கதவருகில் சென்று பெல் சுவிட்சில் கை வைத்த நேரம் “இப்போ உள்ளப் போனதும் எதுக்கு வந்திருக்கேன்னு சொல்லுறது?” என்ற அதி முக்கியமானக் கேள்வி அப்போது தான் அவன் மனதில் தோன்றியது.
“அய்யய்யோ… நேரா இவ வீட்டுல வந்து நின்னுட்டு இப்போ என்ன காரணம் சொல்லுறது? பேசாம ஈரோட்டுக்கு நம்ம வீட்டுக்குப் போயிட்டு காலையில கோயம்பத்தூர் வந்திருக்கலாமோ?
இன்னும் ஒரு நாளா? நம்மளால முடியாது சாமி… இப்போவே மண்டக் காஞ்சுப் போச்சு. இதுக்கும் மேல அவள பார்க்காம இருக்க முடியாது. முடியவே முடியாது. எதுக்கு வந்தேன்னு சொல்லுறது?”
ரோஹித் தீவிரமான யோசனையில் இருந்தான். அவன் மனதில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் எதற்கும் அவன் விடையை யோசிக்கும் முன் தினேஷ் வீட்டின் கதவைத் திறந்தார்.
எங்கோ வெளியில் செல்வதற்காகக் கிளம்பியவர் கதவைத் திறந்து அவனைக் கண்டதும் அதிசயித்து “வாங்க வாங்க ரோஹித்… உள்ள வாங்க…” என்று அவன் தோளில் கை போட்டு உள்ளே அழைத்து செல்வதாக எண்ணிக் கிட்டத்தட்ட இழுத்து சென்றார்.
“ஐயோ இவரு பார்த்துட்டாரே… அய்யயோ உள்ள வேற இழுத்துக்கிட்டுப் போறாரே… இப்போ எதுக்கு வந்தேன்னு சொல்லணுமே… யோசி யோசி… இப்போன்னுப் பார்த்து எதுவும் தோண மாட்டேங்குதே…
ஆண்டவா… ஏதாவது சொல்லணும்… எப்படியாவது சமாளிக்கணும்… மூல களிமண்ணா மாறிடுச்சுப் போலயே… ஒரே ஒரு ஐடியா கூட மண்டைல உதிக்க மாட்டேங்குதே…” என்று பலமாக யோசித்தவாரே அவருடன் உள்ளே வந்தான்.
ஹாலில் தரையில் அமர்ந்துத் தன்னை சுற்றி நிறைய புத்தகங்களையும் பேப்பர்களையும் பரப்பி வைத்து ஏதோ குறிப்பெழுதிக் கொண்டிருந்தாள் நீணா. பார்க்க ஏதோ ஸ்கூல் படிக்கும் பெண் வீட்டில் அமர்ந்து ஹோம்வர்க் எழுதுவதுப் போல் தோன்றியது.
ரோஹித்திற்கு அவளை பார்த்த நொடி இரண்டு நாட்களாகத் தான் தவித்தத் தவிப்பு… ஏங்கிய ஏக்கம்… அனுபவித்த வேதனை… அத்தனையும் மொத்தமாக முடிவுக்கு வந்தது போல் இருந்தது.
“ப்ரீதா யாரு வந்துருக்காங்கப் பாரு… என்ன ரோஹித் திடீருன்னு? நீங்க வரதா நீணா சொல்லவே இல்லையே…” என்று தினேஷ் கேட்க துளியும் யோசிக்காமல் “பிரண்ட் கல்யாணம் அங்கிள்” என்று நீணாவை விட்டுப் பார்வையை விளக்காமல் கூறினான்.
அத்தனை நேரம் யோசித்தும் பதட்டம் மட்டுமே எஞ்சியிருக்க… அவளை பார்த்ததும் அவனால் மறு யோசனையின்றி தெளிவாக பதில் சொல்ல முடிந்தது.
காதல் பொய்யுரைக்க கற்றுத் தருமோ? சில நேரங்களில் அதுவும் கை கொடுக்குமோ?
கல்யாணம் செய்ய ஆயிரம் பொய்களை சொல்லலாம் என்றால் காதலிக்க நூறு பொய்யாவது சொல்லலாமோ?
காதலித்து திருமணமும் செய்துக் கொண்ட தன் மனைவியை பார்க்க பத்தாயிரம் போய் கூட சொல்லலாம் என்று அந்த நேரத்தில் ரோஹித்திற்கு தைரியமூட்டியது அவனுடைய மனசாட்சி.
நீணா இன்னும் எழக் கூட இல்லை. ரோஹித்தை பார்த்ததுப் பார்த்தபடி சிலையென அமர்ந்திருந்தாள்.
சமையலறையிலிருந்து அவளின் தாய் ப்ரீதா எட்டிப் பார்த்து “மாப்பிள்ளை… வாங்க வாங்க… எப்போ வந்தீங்க? நல்லா இருக்குறீங்களா? நீணா சொல்லவே இல்லையே…” என்றுக் கூறி குனிந்து நீணாவை பார்த்தவர் அவள் இன்னும் தரையில் அமர்ந்திருக்கவும் “ஏய் எந்திரிடி… வந்தவங்கள வாங்கன்னுக் கூடக் கூப்பிடாம நீ பாட்டுக்கு உட்கார்ந்திருக்கற?” என்று அவளை அதட்டினார்.
நீணா தன் மடியில் இருந்தவற்றைக் கீழே வைத்து விட்டு மெல்ல எழுந்தாள். ஆனால் வாயை திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.
“நல்லவேளை மாப்பிள்ளை நீங்க வந்தீங்க… நாளைக்கு கிருத்திகை… கோவிலுக்குப் போகோணும் ஸ்பெஷல் அர்ச்சனை செய்துட்டு வரோணும்னு சொல்லிக்கிட்டே இருந்தேனுங்க… நீங்களும் வந்துட்டீங்க… காலையில…..”
ப்ரீதா பேசிக் கொண்டேப் போக அது எதுவும் ரோஹித்தின் காதுகளில் விழவில்லை. ஏதோ வருடக்கணக்கில் பிரிந்திருந்தவளைப் பார்ப்பதுப் போல் நீணாவின் முகத்தையேப் பார்த்தான்.
“வந்ததும் ஆரம்பிச்சுட்டாங்க… இவங்கள வெச்சு எப்படி தான் இந்த மனுஷன் இத்தன வருஷம் குப்பக் கொட்டுனாரோ? நீ எப்படிடி நீணா செல்லம் இவங்களுக்கு பொண்ணா பொறந்த? நல்லவேள நீ இவங்கள மாதிரி இல்ல.
காலையிலிருந்து சாப்பிடல… வயத்துக்குள்ளிருந்து சவுன்ட் எல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு. இவங்கப் புராணத்த எப்போ முடிச்சு… எப்போ சாப்பாடுப் போடுவாங்களோ???”
இப்படியாக இருந்த ரோஹித்தின் எண்ணவோட்டத்தைக் கலைத்தது தினேஷின் அதட்டலானக் குரல்.
“வந்தவங்கள வாங்கன்னுக் கூப்பிடாம உட்கார்ந்திருக்குறன்னு உன்றப் பொண்ண மட்டும் விரட்டுன? இப்போ நீ மட்டும் வந்தவங்களுக்கு சாப்பாடுப் போடாம நின்னு வளவளன்னு பேசிக்கிட்டு இருக்குற? போ போய் ஏதாவது ரெடி பண்ணு” என்றவரை நன்றியுடன் பார்த்து “தெய்வம் அங்கிள் நீங்க” என்று மானசீகமாக அவருக்கு நன்றி கூறினான்.
“தோ ரெடி பண்ணிடுறேனுங்க…” என்றுக் கூறி சமையலறைக்குள் விரைந்தவர் உடனேயே வெளியே வந்து “மாப்பிள்ளை உங்க பிரண்ட் கல்யாணம்னு சொன்னீங்கல்ல… பத்திரிகை இருந்தாக் கொஞ்சம் காமிங்க மாப்பிள்ளை…
என் சித்தியோட ஓரகத்திப் பொண்ணு வயத்துப் பேத்திக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்குதுங்க… பத்திரிகை மாடல் தேடுறாங்க… எதுவும் சரியா அமைய மாட்டேங்குது…
நீங்கக் குடுத்தா இந்த மாடலையும் அவங்கக்கிட்டக் காமிப்பேனுங்க. பாவம் என்ற சித்தப்பா தனி ஆளா இதுக்காக அலையுறாருங்க…” என்று ப்ரீதா நிறுத்தாமல் பேச “இன்விடேஷனா??? அதுக்கு நான் எங்கப் போக?
எங்கயாவதுப் போய் ஒரே ஒரு இன்விடேஷன் அடிக்க சொல்லி கையோட வாங்கிட்டு வரலாம்னா இவங்க இப்போவேக் கேக்குறாங்களே…” என்று மிரட்சியுடன் அவரைப் பார்த்தான் ரோஹித்.
இவ்வளவு நேரம் தனக்குத் தெரியாமல் எந்த நண்பனின் திருமணத்திற்கு வந்திருக்கிறான் என்று யோசித்துக் குழம்பிய நீணாவிற்கு இப்போது அவனின் முகத்தைப் பார்த்ததும் புரிந்துப் போனது.
“மகனே உடான்ஸ் விட்டுட்டு வந்துருக்கியா? உனக்கெல்லாம் என் அம்மா தான்டா சரியான ஆளு… சமாளி ராசா சமாளி…”
கணவனை இக்கட்டிலிருந்துக் காக்க வேண்டியவள் அவன் படும் அவஸ்த்தையை ரசித்தபடி கை கட்டி நின்றாள்.
“பிரண்ட் கல்யாணத்துக்கு அவசியம் பத்திரிக்கைக் கொண்டு வரோணுமாக்கும்? அதெல்லாம் ஹாஸ்பிட்டலுக்கு வந்துக் குடுத்துருப்பாங்க. ஹாச்பிட்டலயே வெச்சுட்டு வந்துருப்பாங்க.
நீ முதல்ல போய் டிபன் எடுத்து வை….” என்று தினேஷ் கூறியதும் “இந்த வீட்டுல நான் வாயே திறந்துடக் கூடாதே…” என்று முனகியபடி உள்ளே சென்றார் ப்ரீதா.
“அங்கிள் நீங்க இதெல்லாம் தெரிஞ்சுப் பண்ணுறீங்களா… தெரியாமப் பண்ணுறீங்களான்னுத் தெரியல… ஆனா தெய்வம் அங்கிள் நீங்க…” என்று அவருக்கு மீண்டும் மானசீகமாக நன்றியுரை ஆற்றினான் ரோஹித்.
பையை நீணாவின் அறையில் வைத்து அவன் குளித்து முடித்து வரும் வரை நீணா அவன் கண்களில் தென்படவில்லை. சமையலுக்கு உதவியாக ப்ரீத்தாவுடன் நின்றிருந்தாள்.
அங்கு சென்று அவரை சமாளித்து அவளை அழைத்து வரும் தைரியம் இல்லாததால் வெளியே வந்து தினேஷின் எதிரில் அமர்ந்தான் ரோஹித்.
அவர்களை சாப்பிட அழைக்க வந்த நீணா “என்ன மாமனாரும் மருமகனும் ஒண்ணுக் கூடிட்டீங்களா? இனி கையிலப் பிடிக்க முடியாதே…” என்றுக் கூறி தினேஷ் அமர்ந்திருந்த சோபாவின் கைபிடியில் சென்றமர்ந்தாள்.
“என் மருமகனுக்கு என்னக் கொறச்சல்? தங்கம் கண்ணு…” என்று தினேஷ் கூறவும் சிரிப்புடன் “ஆமாம்… மாப்பிள்ளையும் தங்கம் மாப்பிள்ளை வீடும் தங்கம் தான். பேசாம அண்ணனையும் கட்டிக் குடுத்து அனுப்பிடுங்க…” என்றாள்.
அவ்வளவு நேரம் சாய்ந்து அமர்ந்து தந்தை மகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ரோஹித் சட்டென்று முதுகுத் தண்டு விறைக்க நிமிர்ந்தான்.
“வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்” என்று ப்ரீதா அழைக்கவும் நீணாவை திரும்பியும் பார்க்காமல் எழுந்து சென்றான்.
சாப்பாடுப் பரிமாறும்போது நீணா அவன் தட்டில் வைத்த ஸ்வீட்டைத் தொடாமல் ஒதுக்கி வைத்து மற்றவற்றை சாப்பிட்டான் ரோஹித்.
இதை கவனித்தவள் தான் அவன் தட்டில் வைக்கும் எதையும் அவன் தொடப்போவதில்லை என்றுணர்ந்து அவனுக்கு பரிமாறுவதைப் பெற்றவர்கள் அறியாவண்ணம் நாசுக்காகத் தவிர்த்தாள்.
சாப்பிட்டவுடன் “கொஞ்ச நேரம் மாடியில நடந்துட்டு வரேன்… நீங்கத் தூங்குங்க…” என்றுக் கூறி மாடிக்கு சென்றான் ரோஹித்.
நீணாவிற்கு அவன் வந்ததிலிருந்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்பது உறுத்தியது. அவன் மறந்திருந்த ஒரு விஷயத்தை நினைவுப்படுத்தி விட்டோமோ என்ற பயம் வேறு.
ப்ரீதாவிற்கு சிறிது நேரம் உதவி விட்டு அவர் படுக்க சென்றதும் வீட்டை விட்டு வெளியே வந்து மெல்ல படியேறி மாடிக்கு சென்றாள்.
நிலவை ரசித்தபடி ஒரு மூலையில் தனக்கு முதுகுக் காட்டி நின்றவனைக் கண்டதும் பயம் மறந்து இரண்டு நாட்களாக அவனிடம் பேசக்கூட நேரம் இல்லாமல் தவித்தது நினைவு வர ஓடிச் சென்று அவனைப் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள்.
அவள் வருவாள் என்றுத் தெரியும். வந்தால் அவள் பேசியதற்கு கேள்விக் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் அவள் அணைத்ததும் அவ்வளவு நேரம் இருந்த கோபம் மறந்து அவள் அணைப்பில் கண் மூடி லயித்திருந்தான் ரோஹித்.
நீணாவும் பேசவில்லை. அந்த அமைதியான சூழலை மாற்ற அவனும் விரும்பவில்லை.
தன் மார்புக்குக் குறுக்காக இருந்த அவள் தளிர் விரல்களை மெல்ல வருடினான். நீணா கண் மூடி அவன் அகன்ற முதுகில் கன்னம் வைத்து வாகாக சாய்ந்து நின்றாள்.
தான் கூற வந்த சமாதானம் அவளுக்கு மறந்தது. தான் கேட்க நினைத்த கேள்விகள் அவனுக்கு மறந்தது. சில்லென்ற அந்த இரவு நேரத்தில் இருவரது நெருக்கமும் மனதை மயிலிறகாய் வருடிச் சென்றது.
ரோஹித் மெல்லத் திரும்பி கைபிடி சுவரின் மீது சாய்ந்து நின்றான். இப்போது நீணா அவன் மார்பில் முகம் வைத்து அவன் கழுத்தைச் சுற்றி கைப் போட்டுக் கொண்டாள். ரோஹித் அவள் இடையை சுற்றி வளைத்து அவள் உச்சந்தலையில் கன்னம் வைத்து அணைத்துக் கொண்டான்.
நிமிடங்கள் கரைந்தாலும்… உடலின் பாரம் குதிகாலில் அழுத்தி வலியை ஏற்படுத்தினாலும்… எங்கே தான் அசைந்தால் அடுத்தவர் விலகி விடுவாரோ என்று பயந்தவர்களாய் இருவரும் அப்படியே நின்றனர்.
நேரம் ஆவதை உணர்ந்து மனமே இல்லாமல் அவளை தன்னிடம் இருந்து மெல்ல விளக்கினான்.
“கீழப் போகலாம் நீணா… லேட் ஆயிடுச்சு… தேடுவாங்க…” என்று ரோஹித் கூறவும் சரியென்று தலையசைத்து அவன் இடது கையோடு அவள் வல கை விரல்களைக் கோர்த்தபடி நடக்க ஆரம்பித்தாள்.
படிகளில் இறங்க ஆரம்பித்ததும் இருவரும் சேர்ந்து இறங்க முடியாத அந்த இடைவெளியில் நீணாவின் தோளில் கை போட்டு அணைத்தபடி இறங்கினான் ரோஹித்.
அவர்கள் கீழே வந்தபோது வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. நீணா அவன் பிடியிலிருந்து விலகி பூட்டையும் சாவியையும் எடுத்து உள் கேட்டைப் பூட்டி ஹாலின் கதவை மூடித் தாழிட்டாள்.
வீட்டில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு ஹாலில் சிறிய இரவு விளக்கு மட்டும் எரிந்துக் கொண்டிருந்தது. மணி பதினொன்றாகியதால் தினேஷும் ப்ரீதாவும் உறங்கி விட்டிருந்தனர்.
ரோஹித் அந்த இரவு விளக்கையும் அணைத்துவிட்டு அவள் கையைப் பிடித்து இருட்டிற்கு கண்களைப் பழக்கப்படுத்திக் கொண்டு மெல்ல அவள் அறை நோக்கி நடந்தான்.
அறை வாயிலுக்கு வந்ததும் இரவு உணவிற்கு முன் தான் பேசியதற்கு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை என்பது நீணாவிற்கு நினைவு வந்தது.
அவன் கையை இறுகப் பிடித்து அவனை முன்னேற விடாமல் தடுத்தவள் “ரோஹித் நம்ம இன்னும் பேசவே இல்லையே…” என்று ரகசியமாகக் கூறினாள்.
அறை உள்ளேயும் நீணாவின் முகத்தையும் இரண்டு முறைப் பார்த்தவன் “அப்பறமா பேசலாம்” என்று அவளைப் போலவே ரகசியமாகக் கூறி அவளை அறைக்குள் இழுக்க முயன்றான்.
“இரு இரு… நான் நைட் சொன்னேன்ல…” என்று நீணா வர மறுக்கவும் அவள் கையை விடுத்து தன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து அந்த கும்மிருட்டில் தான் முறைப்பதை அவளுக்கு உணர்த்த முயன்றான் ரோஹித்.
அவனிடமிருந்து பதில் இல்லாமல் போகவே “அதான் ரோஹித்… நீ அப்பா கூட பேசிட்டு இருந்தப்போ… வந்துக் குளிச்சுட்டு… ஹால்ல…” என்று அவனுக்கு நினைவுப்படுத்த முயன்றாள்.
“அதெல்லாம் இருக்கட்டும் நீ வா… அப்பறம் பேசிக்கலாம்…” என்று அவளை அறைக்குள் தள்ளிக் கொண்டு செல்ல முயன்றான்.
சத்தமாகக் கத்தவும் முடியாமல் ரகசியமானக் குரலிலேயே “ஹே… சொல்லுறதக் கேளுடா… அப்போ நான் சொன்னேன்ல…” என்று அதிலேயே நின்றாள் நீணா.
“ரெண்டு நாளா பார்க்காம காஞ்சுப் போய் வந்திருக்குறவன பேசியேப் படுத்துறாளே… ராத்திரி பதினோரு மணிக்கு… அதும் பெட்ரூம் வாசல்ல நிக்க வெச்சு தான் இதெல்லாம் பேசணுமா?” என்று நினைத்து நொந்தான் ரோஹித்.
“சாரி ரோஹித்… தெரியாம பேசிட்டேன்…” என்று நீணா கூறவும் “சாவடிக்குறாளே…….. சாரி சொல்லுற நேரத்தைப் பாரு… ம்ம்ஹும்ம்ம்… இதுக்கு மேல விட்டா இவ விடிய விடிய விளக்கம் குடுப்பா…” என்று நினைத்தவன் அவளை நெருங்கி தன் இரு கைகளிலும் அப்படியே தூக்கினான்.
“ரோஹித் என்னப் பண்ணுற? நான் பேசி முடிச்சு…” ரோஹித் நடப்பதை நிறுத்தி அவன் பிடி இறுகுவதை உணர்ந்தவள் பேசுவதை நிறுத்தினாள்.
“நம்ம காலையில பேசலாமா?” என்று நீணா கேட்டபோது அவளை கட்டிலருகே இறக்கி விட்டிருந்தவன் “ஒஹ்ஹ்ஹ்… பேசலாமே… வ்வ்வ்வவா…” என்றுக் கூறி மெத்தையில் அவளைத் தள்ளினான்.
“ரெண்டு நாளா ரொம்ப மிஸ் பண்ணியா?”
அவள் முகத்தில் முத்த ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்து “ஏன் நீ மிஸ் பண்ணலையா?” என்று பதிலுக்குக் கேட்டான்.
“இல்லையே…” என்று நீணா தலையை ஆட்டவும் “நடிக்காதடி…” என்று சிரிப்புடன் கூறினான் ரோஹித்.
“ஆரம்பிச்சுட்டியா நீ? நடிக்காதன்னு சொல்லாதன்னு எத்தன தடவ சொல்லுறது… ஏன்…” என்று நீணா கூறும்போதே “உனக்கு இதெல்லாம் கேட்குறதுக்கு வேற நேரமேக் கிடைக்கலையா? ஏன்டி பேசியேக் கொல்லுற மனுஷன?” என்றுக் கேட்டு அவள் மூச்சுக்கும் திணறும் வண்ணம் தன் இதழ்களால் அவள் இதழ்களை அழுந்த மூடினான் ரோஹித்.
நல்ல உறக்கத்தில் இருந்தவனது தூக்கம் அதிகாலையில் அறைக்கு வெளியேக் கேட்ட சுப்பிரபாத சத்தத்தில் கலைந்தது.
“ஏய்… உங்கம்மா ஏன்டி இப்படிப் படுத்துறாங்க?” என்றுக் கேட்டபடி இடதுக் கையால் நீணாவின் முகத்தில் துழாவி எதையோத் தேடினான்.
“டேய் தூங்க விடுடா…” அவன் கையைத் தட்டி விட்டாள் நீணா.
தூங்க முயன்றவனின் தூக்கத்தை மீண்டும் கலைத்தது வெளியேக் கேட்ட மணியோசை.
தான் கவிழ்ந்துப் படுத்திருந்த தலையணையை எடுத்து தலையை சுற்றி இரண்டு காதுகளையும் இறுக அடைத்து “ஐயோ……. எப்படிடி உங்கப்பா இன்னும் உங்கம்மாவ டிவோர்ஸ் பண்ணாம இருக்காங்க?” என்றுக் கடுப்புடன் கேட்டான் ரோஹித்.
விருட்டென்று எழுந்தமர்ந்த நீணா “காலங்காத்தால என்ன பேச்சு இது? ஒழுங்காத் தூங்கு…” என்றுக் கூறி ஒரு அடி வைத்து அவன் முதுகிலேயே தலை வைத்து அவன் மீது சுகமாகப் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
“நீணா……. இன்னுமாக் கண்ணுத் தூங்குறீங்க? கோவிலுக்குப் போகோணும்னு சொன்னேனில்ல… லேட் ஆகுதுப் பாரு… குளிச்சுட்டுக் கிளம்புங்க…” என்று பலமாக கதவுத் தட்டும் ஓசையில் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவள் தலையில் அடித்து “இந்த அப்பா ஏன் இன்னும் இந்த அம்மாவ டிவோர்ஸ் பண்ணாம இருக்காங்க?” என்றுப் புலம்பியபடி எழுந்துச் சென்று கதவைத் திறந்தாள்.
தலையை மட்டும் வெளியில் நீட்டி “என்னம்மா? எதுக்கு இப்போ அர்த்த ராத்திரில இப்படிக் கத்திக்கிட்டு இருக்க?” என்று கோபமாகக் கேட்டாள்.
“விடியற்காலை நாலு மணி உனக்கு அர்த்த ராத்திரியாக்கும்?”
சப்தம் கேட்டு அங்கு வந்த தினேஷ் “அடடடடா…. நான் குளிச்சுட்டு வரதுக்குள்ள எதுக்கு அவள எழுப்பின? அதான் சொன்னேனில்ல… மாப்பிள்ளையும் அவளும் இன்னைக்கு அவங்க பிரண்ட் கலியாணத்துக்குப் போவாங்கன்னு…” என்றார்.
“ஆமாம்மா… நானும் மச்சானும் கலியாணத்துக்குப் போறோம்…” என்றுக் கூறி தலையை உள்ளிழுத்து கதவை சாத்தி தாழிட்டாள் நீணா.
கட்டிலில் ஏறி மீண்டும் ரோஹித்தின் முதுகில் அவள் படுத்தபோது கண்களைத் திறவாமலே “தெய்வம்டி உங்க அப்பா…” என்றான்.
“ஆமாமா… ஹெட்லைன்ஸ்ல சொன்னாங்க… தூங்குடா…” அவனை இறுக்கி அணைத்து நீணா முதலில் தூங்கிப் போனாள். ரோஹித்தும் அந்த சுகமான சுமையுடன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான்.
சில மணி நேரங்களுக்குப் பின் கண் விழித்தவன் “நீணா… கல்யாணத்துக்குப் போறோம்னு சொல்லி வெச்சுருக்கோம்… சும்மாவாவது எங்கயாவது வெளிலப் போயிட்டு வரலாம் எந்திரிடி…” என்றான்.
“ஏன் நீ எந்திரியேன்… எப்போப் பாரு முதல்ல என்னையவே எழுப்பு…”
“அப்படி இல்லடி செல்லம்… நீ எந்திரிச்சு… ஹீட்டர் ஆன் பண்ணி வெச்சுட்டு… குளிச்சுட்டு… அப்படியே ஈரத் தலையோட என்னை வந்து எழுப்பினேன்னா… கண்ணு முழிக்கும்போதே எவ்வளவு பிரஷா இருக்கும் தெரியுமா?”
“கொய்யால… உனக்கு ஹீட்டர் போட்டு வெந்நீர் வெலாவி வெக்குறதுக்கு நான் முதல்ல எந்திரிக்கணுமா? அதுக்கு என்ன அழகா பிட்ட போடுறடா நீ… நடக்காது மகனே…
நீ முதல்ல எந்திரிச்சு… ஹீட்டர் போட்டு… குளிச்சுட்டு… அப்படியே ஒரு காபியும் போட்டு எடுத்துட்டு வந்து… ‘நீணா டார்லிங் வாங்க குளிக்கலாம்’னு சொல்லி… என்னை கையில தூக்கிட்டுப் போய் பாத்ரூம்ல இறக்கி விட்டன்னா… காலையிலயே எவ்வளவு ரெப்ரெஷிங்கா இருக்கும் தெரியுமா?”
“கொஞ்சம் விட்டா என்னடி புருஷன்னு துளி கூட மரியாதை இல்லாம ஓவரா தான் பேசுற?” என்றுக் கேட்டபடி எழுந்து மெத்தையில் முட்டியிட்டு அமர்ந்த ரோஹித் “பாத்ரூம்ல கொண்டுப் போய் விடணுமா? விட்டுட்டாப் போச்சு…” என்றுக் கூறி நீணாவை கையைப் பிடித்து எழுப்பி அவள் கத்துவதைப் பொருட்படுத்தாமல் குளியலறைக்குள் இழுத்துச் சென்றான்.
தப்பி செல்ல முயன்றவளை அணைத்துப் பிடித்து ஷவரைத் திறந்து விட்டான். சில்லென்ற நீர் மேலேப் பட்டதும் இன்னும் அதிகமாகத் திமிறினாள்.
“இப்போ ரெப்ரெஷிங்கா இருக்கா? என்னென்ன பேசுற நீ?” என்று ரோஹித் கேட்டதும் அவனை முறைத்தாள் நீணா.
“அறிவில்லையா ரோஹித் உனக்கு? இப்படி பச்சத் தண்ணில நிக்க வெக்குற?” என்று அவள் கத்தவும் “ஏய்… கண்ணத் தொறந்துப் பாரு… நானும் தான் உன்னோட சேர்ந்து நின்னு நனையுறேன்… போடி முதல்ல வெளில…” என்று கர்ஜித்து அவளைப் பிடித்துக் குளியலறை வெளியேத் தள்ளி கதவை வேகமாகத் தாழிட்டான்.
ஷவரின் அடியில் நின்றவன் அப்போதும் கோபம் குறையாமல் கையை மடக்கி சுவற்றில் குத்தினான். வெளியேத் தள்ளப்பட்ட நீணா அசையாமல் அப்படியே நின்றாள். ரோஹித் குளித்து முடித்து அங்கிருந்தத் துண்டை சுற்றிக் கொண்டு வெளியே வந்தான்.
ஈரம் சொட்ட சொட்ட நின்று நீணா அவனை முறைக்கவும் “என்ன முறைக்குற?” என்றுக் கேட்டு அவளைப் பிடித்து உள்ளேத் தள்ளினான். கதவை சாத்தி விட்டு தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து உடையை எடுத்து அணிந்துக் கொண்டான்.
நீணா குளித்து முடித்து வெளியே வந்தபோது கட்டிலில் அவளுக்கான உடைத் தயாராக இருந்தது.
“பிடிச்சுத் தள்ளி விட்டதும் இல்லாம… நீ எடுத்து வெச்ச டிரெஸ்ஸ தான் நான் போடணுமா? முடியாது போடா…”
தன் பையை திறந்து சில நிமிடங்கள் அதனுள்ளிருந்த உடைகளை ஆராய்ந்து தனக்குப் பிடித்த வேறு உடையை எடுத்து அணிந்தாள். வேண்டுமென்றே நிதானமாக தயாராகி தாமதமாக வெளியே வந்தாள்.
ரோஹித் எப்போதோ தயாராகிவிட அவள் வருவதற்காக ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தவன் நீணாவின் அறை வாசலை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவனுக்கு பொறுமை முற்றிலுமாக பறந்து சென்றிருந்த நேரம் நீணா கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவள் இன்னும் ஒரு நிமிடம் தாமதமாக வந்திருந்தாலும் அங்கே அடுத்த போர் ஆரம்பமாகியிருக்கும்.
தினேஷும் ப்ரீதாவும் இவர்களை உள்ளே வைத்துப் பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றிருந்தனர். ரோஹித் செய்தித்தாளை மடித்து வைத்து எழுந்து அங்கிருந்த மற்றொரு சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து தினேஷின் பைக்கை வெளியே எடுத்தான். நீணா அமைதியாக அவன் செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
10
ஹர்ஷா ஜூஸரை கழுவி வைத்து கையில் ஜூஸ் அடங்கிய கிளாஸை எடுத்துக் கொண்டு சமையலறை விட்டு வெளியே வந்தான். இடுப்பு வலி காரணமாக தரையில் அமர்ந்திருந்தாள் மோனிகா.
அவளைச் சுற்றி தலையனைகள் வைத்து அரண் அமைத்து அவள் சவுகரியமாக உட்கார்ந்து டீ வீ பார்க்க வழி செய்துவிட்டே ஜூஸ் போட சென்றிருந்தான்.
அவள் அருகில் கீழே அமர்ந்து அப்பிள் பழச்சாற்றைக் கொடுத்தான். அதை வாங்கியவள் அவன் வாயருகே எடுத்து சென்று “நீ பர்ஸ்ட் குடி…” என்றாள்.
“ஹேய்… இது உனக்கு தான் மோனி… குடிடா… எனக்கு வேண்டாம்”
“ம்ம்ஹும்ம்… நேத்து நைட் நீ வீட்டுக்கு வந்தப்போ மணி மூணு… அம்மா ரெண்டு நாள் வீட்டுக்குப் போயிட்டதால காலையிலயும் எனக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணுறேன்னு சீக்கிரமே எழுந்துட்ட… நீயும் கொஞ்சம் குடி ஹர்ஷா…” என்று வற்புறுத்தி அவனுக்கு புகட்டினாள் மோனிகா.
திடீரென்று ஹர்ஷா மெல்ல புன்னகைக்க ஆரம்பித்துப் பின் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தான். வாயில் ஜூஸ் இருந்ததால் அவனால் சிரிக்கவும் முடியவில்லை… வந்த சிரிப்பை அடக்கும் வகையறியாது திணறியவனுக்கு இறுதியில் புரை ஏறியது.
மோனிகாவும் சிரிப்புடன் அவன் தலையில் மெல்லத் தட்டி “மெதுவா ஹர்ஷா…” என்றாள்.
“நீயும் அத தான் நெனச்சியா?” என்றுக் கேட்டவன் அவளைத் தோளோடு அணைத்து மீண்டும் சிரித்தான்.
அவன் நெஞ்சில் வலிக்கா வண்ணம் குத்தி “அப்போ நான் எவ்வளவுத் தவிச்சுப் போனேன்னுத் தெரியுமா?” என்றுக் கேட்டவளின் குரலில் இழையோடிய லேசான வருத்தத்தை இனம் கண்டுக் கொண்டான் ஹர்ஷா.
“அத எதுக்கு மோனி இப்போ யோசிக்குற? மறந்துடு… சரி ரொம்ப நேரமா இப்படி உட்கார்ந்திருக்கியே… தூங்கு மோனி… இல்லன்னா இடுப்பு இன்னும் வலிக்கும்…”
“தூக்கம் வரல. நான் உன் மடியில படுத்து டீ வீ பார்க்குறேன்…” என்றுக் கூறியது மட்டும் அல்லாமல் அவன் மடியில் தலை வைத்துப் படுக்கவும் செய்தாள் மோனிகா.
சிறிது நேரம் வரை விழித்திருந்தவள் தன்னை அறியாமல் உறங்கிப் போனாள். ஹர்ஷா டீ வீ பார்ப்பதை விடுத்து அவளின் முகத்தை ஆசையுடன் பார்த்தான். அவள் கன்னத்தை மெல்ல வருடியவனின் நினைவுப் பின்னோக்கி சென்றது.
திருமணத்திற்குப் பின் ஹர்ஷாவும் மோனிகாவும் தற்போது வேலைப் பார்க்கும் மருத்துவமனையில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்திருந்த சமயம் அது. காலையில் ஒன்றாகக் கிளம்பிச் சென்று இரவு எந்நேரம் ஆனாலும் ஒன்றாகத் திரும்பி வருவதன் சுகமே அலாதியானது.
அப்படி ஒரு நாள் அறுவை சிகிச்சை ஒன்றை செய்ய வேண்டி வந்ததால், ஹர்ஷா மோனிகாவை மாலை அவள் ட்யூட்டி முடிந்ததும் வீட்டிற்குக் கிளம்பி செல்ல சொன்னான்.
மூன்று வாரங்களாக இரவு சிறிது நேரம் தாமதமானாலும் காத்திருக்க சொல்லி அவளையும் தன்னுடனே அழைத்து செல்வான் ஹர்ஷா. இன்று அவளை மட்டும் தனியேப் போக சொன்னதும் மோனிகாவின் முகம் சுருங்கித் தொங்கி விட்டது.
“கண்டிப்பா நான் போய் தான் ஆகணுமா?” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டுக் கேட்பவளுக்குப் பொறுமையாக விளக்கி பதில் சொல்லியே ஓய்ந்துப் போனான்.
ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து கால் டாக்ஸிப் பிடித்து அனுப்பும்போதும் “இங்க பாரு மோனி… எனக்காக வெயிட் பண்ணாத… ஒழுங்கா சாப்பிட்டுத் தூங்கு… நான் வர எர்லி மார்னிங் ஆகிடும்… முழிச்சுருக்காத…” என்று நூறாவது முறையாகக் கூறி வழியனுப்பி வைத்தான்.
வீட்டை அடைந்த மோனிகா அலுப்புத் தீர குளித்தாள். சமயலறைக்கு சென்றவளுக்கு எதுவும் சமைக்கத் தோன்றவில்லை.
“ஆமா என்னத்த என் ஒருத்திக்கு மட்டும் சமைக்குறது… பேசாம பால சூடு பண்ணிக் குடிச்சுட்டுப் படுத்துட வேண்டியது தான்…” என்று முடிவெடுத்து பாலை காய்ச்சி அருந்தினாள்.
ஹாலில் அமர்ந்து தங்கள் மருத்துவமனையில் வெளியாகும் மாதாந்திர ரிப்போர்ட்டைப் புரட்டிக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கினோம் என்றேத் தெரியாமல் சோபாவில் அமர்ந்தபடியே உறங்கிப் போனாள்.
அதிகாலை 4.30 மணிக்கு வீட்டிற்குள் வந்த ஹர்ஷா ஹாலில் உறங்குபவளை பார்த்ததும் அவள் தனக்காகக் காத்திருந்து அப்படியே உறங்கி விட்டதாக எண்ணினான்.
“அவ்வளவு சொல்லியும் என் பேச்சக் கேக்கல…” என்று நினைத்தவன் அவளைத் தூக்கி சென்று படுக்கையில் கிடத்தினான்.
ஹர்ஷா வந்ததோ தன்னைத் தூக்கி சென்றுப் படுக்க வைத்ததோ எதையும் உணராமல் நன்றாக உறங்கினாள் மோனிகா. ஒரு வேளை அவள் அப்பொழுதே விழித்திருந்தால் பிரச்சனை வராமல் இருந்திருக்கும்.
தனக்காக நீண்ட நேரம் கண் விழித்துக் காத்திருந்ததால் தான் இப்போதுத் தான் தூக்கி வந்ததுக் கூடத் தெரியாமல் உறங்குகிறாள் என்று எண்ணினான் ஹர்ஷா.
காலையில் அவன் எழுந்து சமையலறைக்கு வந்தபோது மோனிகா டிபன் செய்துக் கொண்டிருந்தாள். அன்று அவர்களுக்கு விடுமுறை.
மருத்துவத் துறையில் மருத்துவர்களுக்கு விடுமுறை தினம் என்ற ஒன்று மிகவும் அரிதானது. அவர்கள் வேலை செய்யும் மருத்துவமனையில் ஷிப்ட் மூலம் மருத்துவர்களை வரவழைத்து அனைவருக்கும் வாரம் ஒரு நாள் விடுமுறை வருமாறுப் பார்த்துக் கொண்டனர்.
அப்போதும் ஏதேனும் எமர்ஜென்சி கேஸ் என்றால் போன் மூலம் தொடர்புக் கொண்டு அழைப்பதும் உண்டு. நேரம் காலம் பார்க்காமல் பிறருக்காக சேவை செய்வதிலும் ஒரு ஆத்ம திருப்தி. அதை விரும்பி ஏற்று செய்யும் போது மன நிறைவும் கிடைக்கிறது.
மோனிகாவை பார்த்த ஹர்ஷாவிற்கு இரவு அவள் சோபாவில் உறங்கிய கோலம் நினைவில் வந்தது.
“ஏன் மோனி நேத்து எனக்காக வெயிட் பண்ண?”
“இல்லையே… நான் வெயிட் பண்ணலையே…” என்று வேலையை கவனித்தபடியே விடையளித்தாள் மோனிகா.
ஹர்ஷா எழுந்து விட்டானே… இன்னும் சமையல் வேலை முடியாமல் இருக்கிறதே… அவனுக்கு சாப்பாடுப் போட வேண்டுமே என்று அவள் நினைக்க… தான் கேட்டக் கேள்விக்கு தன்னைத் திரும்பியும் பாராமல் அலட்சியமாக பதில் சொல்கிறாள் என்று அவன் நினைத்தான்.
குளித்து முடித்து துண்டால் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தவன் அருகில் வந்த மோனிகா “சாப்பிட வா ஹர்ஷா…” என்றாள்.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம்…” என்றுக் கூறி துண்டைக் கொடியில் உலர்த்தப் போனான் ஹர்ஷா.
அவன் பின்னால் சென்றவள் “ஏன் வேணாம்? நைட் எப்போ வந்தியோ? வந்து சாப்பிடு ஹர்ஷா…” என்றுக் கெஞ்சினாள்.
“நைட் நான் வந்ததுக்கூடத் தெரியாம தூங்கின… அப்படி யாரு உன்னை எனக்காக வெயிட் பண்ண சொன்னது?”
“வெயிட் பண்ணேனா? ஹேய் அதான் சொன்னேன்ல… நெஜமா நான் உனக்காக முழிச்சுக் காத்திருக்கல ஹர்ஷா. புக் படிச்சுட்டு இருந்தேனா… அப்படியேத் தூங்கிட்டேன்…”
“இத நான் நம்பணுமா? சரி சொல்லு… சாப்பிட்டியா?” என்று அவன் கேட்டதும் தடுமாறிய மோனிகா தலைக் குனிந்து “இல்ல…” என்றாள். அவளை முறைத்த ஹர்ஷா ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வைத்து அமர்ந்தான்.
“சாப்பிட வா ஹர்ஷா…” என்று அவள் மீண்டும் அழைக்க “நானும் புக் படிக்கப் போறேன் மோனிகா… சாப்பாடு வேண்டாம்…” என்றான். அவனை எப்படி சமாதானம் செய்வதென்று யோசித்து கையை பிசைந்தபடி நின்றாள்.
வீட்டின் அழைப்பு மணியின் ஓசைக் கேட்டதும் அவனை விடுத்து ஹாலிற்கு சென்று கதவைத் திறந்தாள். அங்கே அவளின் பெற்றோரைக் கண்டதும் ஏனோ அழுகை வர ஓடி சென்று அவள் தாயை இறுக்கி அணைத்து கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
மகள் வீட்டிற்கு வருவதை சொல்லாமல் வந்து நின்றால் அவள் முகத்தில் தோன்றும் மலர்ச்சியைக் கண்டு மகிழலாம் என்று வந்தவர்களுக்கு மோனிகா இப்படி அவர்களை வாசலிலேயே நிற்க வைத்து அழ ஆரம்பித்ததும் பதட்டம் தோன்றியது.
“என்னடாம்மா? என்னமா ஆச்சு?” என்றுக் கேட்ட கல்யாணிக்கும் மோனிகா பதில் கூறவில்லை “என்ன மோனி? ஹர்ஷா எங்கமா?” என்றுக் கேட்ட பிரபாகரையும் அவள் நிமிர்ந்துப் பார்க்கவில்லை.
லேசானக் கேவலுடன் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவளை அணைத்தபடியே வீட்டின் உள்ளே வந்தார் கல்யாணி.
அவர்கள் வீட்டின் உள்ளே வரவும் கதவைத் திறக்க சென்ற மோனிகாவை காணாமல் அறையிலிருந்து ஹர்ஷா வெளியே வரவும் சரியாக இருந்தது.
கல்யாணியை அணைத்து அழுதுக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவர்களை திடீறேன்றுப் பார்த்ததால் ஆச்சரியப்படுவதா? இல்லை அழும் மனைவியைப் பார்த்து அதிர்வதா? இல்லை பெரியவர்கள் முன் தங்கள் பிரச்சனை இப்படி வெளியேத் தெரிய நேர்ந்துவிட்டதே என்று பதறுவதா? இப்படி பலவாறாக யோசித்துக் கலவையான முக பாவத்துடன் நின்றான் ஹர்ஷா.
“என்ன ஹர்ஷா எப்படி இருக்கீங்க?” என்றுக் கேட்டு அவன் அருகில் வந்தார் பிரபாகர். சட்டென்று சுதாரித்தவன் “நல்லா இருக்கேன் மாமா… வாங்க உட்காருங்க… அத்தை நீங்களும் வந்து உட்காருங்க…” என்று அவர்களை அமரச் செய்தான்.
சில நொடிகள் சங்கடமானதொரு அமைதி நிலவியது. மோனிகாவே முதலில் பேச ஆரம்பித்தாள்.
“அம்மா… உனக்குத் தெரியுமா… நைட் ஹர்ஷா லேட்டா வந்தான்… ஹால்ல உக்காந்து புக் படிச்சுட்டே நான் தூங்கிட்டேன்… அதுக்கு இவன்… இவன்… எதுக்கு எனக்காக முழிச்சுருந்தன்னுக் கேட்டுத் திட்டுறான மா…”
கல்யாணி ஒரு நிமிடம் என்ன கூறுவதென்றுப் புரியாமல் விழித்தார். பிரபாகருக்கு லேசாக சிரிப்பு வந்தது.
ஹர்ஷாவின் நிலையோ வீட்டை விட்டு வெளியே ஓடிச் சென்று அங்கிருக்கும் பெரிய தூணைக் கட்டிக் கொண்டு நங்கு நங்கென்று முட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
“எதையாவது சொல்லி சமாளிப்போம்னு இல்லாம… அப்படியே ஒப்பிக்குறாளே… இவள விட்டா இங்க நடக்குற எல்லாத்தையும் டெலிகாஸ்ட் பண்ணிடுவாப் போலயே… இவ வாய மூடி ஆகணுமே…”
எதை சொல்லி சமாளித்துப் பேச்சை மாற்றுவது என்றுத் தீவிரமாக யோசித்தான்.
“நீ நைட் சாப்பிடாமத் தூங்குனதுக்கு ஏன் சாப்பிடலன்னுக் கேட்டேன் மோனி… அதுக்கு இப்படி அழணுமா?” என்று மெல்லக் கேட்டவனை வேகமாகத் திரும்பிப் பார்த்தவள் “ம்ம்… ஆமாம்மா… நைட் நான் என் ஒருத்திக்கு மட்டும் சமைக்கணும்… சோம்பேறியா இருந்துதுன்னு சமைக்காம விட்டுட்டேன்…
அப்பயும் வெறும் வயித்தோடப் படுக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியாதா? அதுக்கு தான் பால் மட்டும் காய்ச்சிக் குடிச்சேன்… இவன் இதக்கூட பொறுமையா கேட்காம ‘நீ சாப்பிடல… நானும் சாப்பிட மாட்டேன்’னு ரூம்ல போய் உட்கார்ந்துக்கிட்டான்…” என்றாள்.
“ஐயோ இவ வாய மூடுறேன்னு நானே எடுத்துக் குடுத்துட்டேன் போலயே… இதுக்கு மேல விட்டா மானத்தக் கப்பலேத்திடுவா…” என்று நொந்த ஹர்ஷா “மோனி அவங்க ட்ராவல் பண்ணி வந்துருக்காங்க… முதல்ல அவங்களுக்கு சாப்பாடு எடுத்து வை. ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்று அதட்டினான்.
“இப்படி தான்மா…” என்று ஆரம்பித்த மகளை என்ன செய்தால் தகும் என்பதுப் போல் பார்த்த கல்யாணி “சரி சரி… நீ கதையெல்லாம் அப்பறம் சொல்லு….. நல்ல வெயில்ல வந்தது… முகம் ந்மட்டும் கழுவிட்டு வரேன்… நீங்க ரெண்டுப் பேரும் இன்னும் சாப்பிடாம இருக்கீங்க…” என்றுக் கூறி எழுந்தார்.
தாயை அறைக்குள் விட்டு வந்த மோனிகா அவர் கடைசியாக சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தாள். ‘ஹர்ஷா இன்னும் சாப்பிடாமல் இருக்கிறான்’ என்பது மட்டுமே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
எப்படியாவது அவனை முதலில் சாப்பிட வைக்க வேண்டும் என்றெண்ணி சமையலறைக்குள் சென்றாள். சாப்பாடுத் தயாராக இருக்கிறது தான். ஆனால் இப்போதுப் பெற்றோர்களை விடுத்து ஹர்ஷாவை அமர வைத்துப் பரிமாறினால் அது நன்றாக இருக்காது என்றுப் புரிந்தது.
சிறிது நேரம் சமையலறையை சுற்றி வந்தவளின் கண்களில் ஆப்பிள் படவே “ஜூஸ் போட்டுக் கொடுக்கலாம்” என்று முடிவு செய்தாள்.
தயாராக இருந்த காலை உணவும் அவளுக்கும் ஹர்ஷாவிற்கும் மட்டுமே போதுமானதாக இருக்கும். எப்படியும் வேறு ஏதாவது சமைக்க வேண்டும் என்று அதையும் செய்ய ஆரம்பித்தாள்.
“மோனி இங்க வாம்மா…” என்று கல்யாணி குரல் கொடுக்கவும் எல்லாவற்றையும் அப்படியேப் போட்டு விட்டு அங்கே விரைந்தாள்.
“மோனி மா… பொங்கல் வருதில்லையா… அதான் உனக்கும் மாப்பிள்ளைக்கும் டிரஸ் எடுத்துக் கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தோம். சாப்பிட்டு முடிச்சதும் ஒரு தட்டு எடுத்துக் கொடும்மா…” என்றார் பிரபாகர்.
“சரி பா… இன்னும் கொஞ்ச நேரத்துல டிபன் ரெடி பண்ணிடுறேன்…” என்று மோனிகா கூற “நான் வந்து செய்யுறேன் மோனி… நீ எதுவும் செய்யாத” என்றார் கல்யாணி.
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் மா…” என்றவள் ஹாலை கடந்து செல்லும்போது சோர்வுடன் அமர்ந்திருந்த ஹர்ஷாவை கண்டாள்.
பசியால் தான் அவன் அப்படி வாடிப் போய் இருக்கிறான் என்றுத் தெரிந்தது. “ஐயோ இந்த அம்மா வேற… இப்போ தான் கூப்பிட்டு இதெல்லாம் சொல்லணுமா? பொறுமையா வந்து சொன்னா தான் என்னவாம்?”
மோனிகா கையில் பழச்சாற்றுடன் சமையலறை விட்டு வெளியே வந்தபோது ஹர்ஷாவின் அருகில் பிரபாகர் அமர்ந்திருந்தார். கையில் இருப்பதோ ஒரு க்ளாஸ்.
“ச்ச… எல்லாருக்கும் சேர்த்துப் போட வேற பழமும் இல்ல… இப்போ இத எப்படி அப்பா முன்னாடி ஹர்ஷா கையில கொடுக்குறது?” என்று தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தாள்.
இப்போது எப்படியாவது இதை அவனுக்குக் கொடுத்தே ஆக வேண்டுமே என்ற சிந்தனையோடே பிரபாகர் எழுந்து செல்கிறாரா என்று எட்டிப் பார்த்தபடி சமையலை கவனித்தாள்.
அவள் எதிர்ப்பார்த்தபடி பிரபாகர் எழுந்து உள்ளே சென்ற சமயம் அடுப்பை அணைத்து விட்டு ஓடி வந்த மோனிகா “சாரி ஹர்ஷா… நைட் நெஜமா நான் பால் குடிச்சுட்டு தான் படுத்தேன்…” என்றுக் கூறி ஜூஸை அவன் வாயருகே எடுத்துச் சென்றாள்.
யாரவது வந்து விடுவார்களோ என்று அறை வாயிலைப் பார்த்தபடியே “நீ சாபிடலன்னதும் எனக்கு எவ்வளவுக் கஷ்டமா இருந்துதுத் தெரியுமா?” என்றுக் கேட்டுத் திரும்பியவள் அதிர்ந்தாள்.
மொத்த ஜூஸையும் ஹர்ஷாவின் மேல் கொட்டி இருந்தாள்.
அறை வாயிலைப் பார்த்தபடி அவள் கைகளை ஆட்டி ஆட்டி ஜூஸை புகட்ட முயல ஹர்ஷாவும் முடிந்த வரை நகர்ந்து அதைப் பருக முயன்றான். ஆனால் ஒரு கட்டத்தில் அவள் க்ளாஸை வேகமாக சாய்க்கவும் மொத்தமும் அவன் மீதேக் கொட்டியது.
திரு திருவென்று விழித்துக் கொண்டிருந்த மோனிகாவைப் பார்க்க சிரிப்பாக இருந்தது.
“இதான் நீ ஜூஸ் குடுக்கற லட்சணமா? கிளீன் பண்ணு எல்லாத்தையும்…” என்றுக் கூறி எழுந்தவன் மீண்டும் ஒரு குளியலைப் போட்டு சாப்பிட அமர்ந்தான்.
இன்று இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு மோனிகாவை பார்க்க பார்க்க அவள் மீதான காதல் அதிகரித்தது. நான் சாப்பிடாமல் இருந்தால் இவள் தாங்கமாட்டாள் என்ற எண்ணம் அவனுக்கு தித்தித்தது.
மெல்ல அவள் முடி கோதி குனிந்து அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். மோனிகாவிடம் அசைவு தெரியவும் லேசாக தட்டிக் கொடுத்து அவளை உறங்க வைத்தான்.
பைக்கில் வெகு நேரமாக ஊரைச் சுற்றி வந்த ரோஹித் நீணாவின் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தான். வீட்டிலிருந்துக் கிளம்பியப் பின் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை இருவரும்.
எங்கு செல்கிறோம் என்றும் கூறாமல், இலக்கில்லாமல் சுற்றித் திரிபவனை எண்ணி நீணாவிற்கு எரிச்சல் வந்தது.
“எங்கயாவது போயிட்டு வரலாம்னு சொல்லிட்டு இப்போ எங்க ரோஹித் கூட்டிட்டுப் போற?”
“கொஞ்ச நேரம் பேசாம வா நீணா… தொனத்தொனங்காத…”
“யாரு? நானா? போடா… இனி உன்கிட்டப் பேச மாட்டேன்”
வீராப்பாக கூறிவிட்டாலும் அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. இப்போதென்றில்லை… அவர்கள் வீட்டிலும் இப்படிதான். கோபம் வரும்போதெல்லாம் “பேச மாட்டேன் போ” என்றுக் கூறுவாள்.
ஐந்து நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ரோஹித்திடம் வருவாள். அப்போதும் அவனிடம் சமாதானமாகப் பேச மனம் வராமல் வம்பு வளர்த்து அவனை கத்த வைப்பாள்.
இப்போதும் ஏதாவதுக் கூறி அவனை பேச வைக்க எண்ணி “ஆமா… நீ உங்க வீட்டுக்குப் போகணும்னு சொல்லவே இல்ல? நம்ம ஈரோட்டுக்கு போகப் போறதில்லையா? இப்படியே சென்னை போயிடுவோமா?” என்றுக் கேட்டாள்.
ம்ம்ஹும்ம்… அவள் கேட்டது காதில் விழாததுப் போல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான் ரோஹித்.
“ஓவரா தான் பண்ணுற” என்று நினைத்தவள் “திரும்பிப் போறதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டியா? எப்போ போகப் போற?” என்றுக் கேட்டாள்.
“அதெல்லாம் ஒண்ணும் புக் பண்ணல. நீ பேசாம வா…”
அதற்கு மேல் நீணா வாயை திறக்கவில்லை. வெயில் அதிகமாக இருக்க, ரோஹித்திற்கு வண்டி ஓட்டுவது எரிச்சலாக இருந்தது. நீணா வேறு கேள்விக் கேட்கவும் இப்போது அவளுடன் வாக்குவாதம் செய்யும் மனநிலை இல்லாததால் அவளை அலட்சியம் செய்து வந்தான்.
முழுதாக ஒன்றரை மணி நேரத்திற்கு பின் மார்கெட் பக்கம் வண்டியை செலுத்தியவன் ஒரு கடையின் முன் நிறுத்தினான்.
“போய் தேங்காய் வாங்கிட்டு வா…”
“இப்போ எதுக்கு ரோஹித் தேங்கா?”
“சொன்னத செய்… ஒரு தேங்காய் வாங்கு…”
அவனை முறைத்தபடியே சென்று தேங்காய் வாங்கி வந்தாள்.
மீண்டும் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தியவன் “வெத்தல பாக்கு வாங்கு நீணா” என்றான்.
“எதுக்குன்னு கேட்டா சொல்லவாப் போறான்? எனக்கென்ன? எத வாங்க சொன்னாலும் வாங்குறேன்… இவ்வளவு நேரமா எங்கப் போறோம்னு சொல்லாம சும்மா ஊர சுத்திக் காமிச்சுட்டு இப்போ அதிகாரம் வேற…”
வாங்கி வந்த வெத்தலை பாக்கை அவனிடம் நீட்டினாள். அதைக் கண்டுக் கொள்ளாமல் “பக்கத்து கடையில மஞ்சள் குங்கும பாக்கெட் இருக்கு பாரு… அதுல சின்ன பாக்கெட் ஒண்ணு மட்டும் வாங்கு…” என்றான். எரிச்சலுடன் அதையும் வாங்கி வந்தாள் நீணா.
சிறிது தூரம் சென்றவன் ஒரு கிப்ட் ஷாப்பின் முன் வண்டியை நிறுத்தி இறங்கி உள்ளே சென்றான்.
வேறு வழி இல்லாமல் நீணாவும் அவன் பின்னே சென்றாள். தேடித் தேடி அலசி ஆராய்ந்து… கைக்குள் அடங்கும் அளவு ஒரு குட்டி பிள்ளையார் பொம்மையைத் தேர்வு செய்தான் ரோஹித்.
“கிப்ட் பேக் பண்ணணுமா சார்?” என்று கடை ஊழியர் கேட்டபோது “இல்ல வேண்டாம். பில் போடுங்க” என்றுக் கூறி பணம் செலுத்தி அதைப் பெற்றுக் கொண்டான்.
வெளியே வந்து நீணாவின் கையில் அந்த கவரை கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தான். “நீயும் எப்போதான் பேசுறேன்னு பாக்குறேன்டா” என்று நினைத்து அமைதியாக அவன் பின்னால் அமர்ந்தாள்.
சிறிது தூரத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியவன் “இறங்கு நீணா…” என்றான்.
நீணா இறங்கி அவன் அருகில் வந்து அவனைப் புரியாமல் பார்க்கவும் அவள் கையில் இருந்த கவர் அனைத்தையும் வாங்கியவன் முதலில் பிள்ளையார் பொம்மையை எடுத்து நீணாவின் கையில் கொடுத்து “ஹான்ட் பேக்ல வெச்சுக்கோ. இது உனக்குதான்” என்றான்.
பின் தேங்காயை எடுத்து கிப்ட் ஷாப்பில் கொடுத்த அடர் சிவப்பு நிறத்தில் சிறிய பொன்னிற பூக்கள் போட்டிருந்த கவரில் போட்டான்.
வெற்றிலையை சுற்றியிருந்த வாழை நாரை அவிழ்த்து பாக்கு, மஞ்சள், குங்குமத்துடன் சேர்த்து அதையும் அந்த கவரில் போட்டான்.
கையில் மிச்சமிருந்த கவர்களையும் வாழை நாரையும் சுருட்டி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசினான்.
கிப்ட் கவரை முகத்தின் முன்னால் தூக்கி பார்த்தவன் நீணாவின் கையில் கொடுத்து “ம்ம்… தாம்பூலப் பை ரெடி…” என்று அலட்சியமாகக் கூறினான்.
விழிகள் வெளியேத் தெறிக்கும் அளவிற்கு அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் நீணா.
“சீக்கிரம் உட்காரு… வீட்டுக்குப் போகலாம்”
“எங்க வீட்டுல ஒண்ணும் நம்மள சந்தேகப்பட மாட்டாங்க…” என்று வீர்ராப்புடன் கூறி அவன் பின்னால் அமர்ந்தாள்.
“அங்கிள் எதுவும் கேட்க மாட்டாங்க…” என்றபடி வண்டியைக் கிளப்பினான் ரோஹித்.
“அப்போ எங்கம்மா கேட்பாங்கன்னு சொல்லுறியா?” என்றுக் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் வண்டியை நீணாவின் வீடு நோக்கி செலுத்தினான்.
11
ரோஹித் பைக்கை நிறுத்தியதும் இறங்கி வண்டியை உள்ளே நிறுத்த கேட்டை திறந்து விட்ட நீணா அவனையே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வண்டியை பூட்டி விட்டு இறங்கியவன் பைக்கின் மறு பக்கம் நின்றவளைப் பார்த்துக் கண்ணடித்து விட்டுத் திரும்பி நடந்தான்.
“இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல…” என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாலும் அவளால் புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. கைபையை இறுகப் பற்றி தலை குனிந்து அவன் பின்னே நடந்தாள்.
கதவின் அருகே வரும்போது அவள் இடுப்பில் நறுக்கென்றுக் கிள்ளி, கத்த முடியாமல் நெளிபவளை ஓரக் கண்ணால் பார்த்து ரசித்தபடியே தினேஷிடம் சென்றவன் பைக்கின் சாவியை அவரிடம் கொடுத்தான்.
“கல்யாணம் நல்லா நடந்துதா?” என்று அவர் கேட்க “நல்லபடியா நடந்துது அங்கிள்” என்றான் ரோஹித்.
ஹாலில் சத்தம் கேட்கவும் அடுக்களையிலிருந்து வெளியே வந்த ப்ரீதா “மாப்பிள்ளை… அந்த கல்யாணத்துல தாம்பூலப் பை கொடுத்தாங்களா? என்னோட சித்தியோட…” என்று ஆரம்பிக்கவும் நீணாவை பார்த்து “சொன்னேன்ல?” என்றுத் தலையசைத்தான் ரோஹித்.
“அம்ம்ம்ம்மா… பேசாம இருக்க மாட்ட? இந்தா தாம்பூலப் பை…” கையிலிருந்த கவரை அவரிடம் நீட்டினாள் நீணா.
“பேரு எதுவும் போடலையா? ஆனா கவர் ரொம்ப கிராண்டா நல்லா இருக்கே… இன்னைக்கே அவங்கக்கிட்டக் காட்டிட்டா அவங்க பார்த்து முடிவுப் பண்ணிக்குவாங்க…”
கவரை ஆராய்ந்தவர் தன் போக்கில் பேசியபடியே சமையலறைக்குள் சென்று மறைந்தார். தினேஷும் எழுந்து அறைக்குள் சென்றுவிட, அங்கே நின்றால் ரோஹித் மேலும் ஏதாவதுக் கேட்டு கிண்டல் செய்வானென்று அவசரமாக அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள் நீணா.
மதிய உணவின்போது “ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்குறீங்க… ஒரு ரெண்டு நாள் தங்கிட்டுப் போங்களேன்…” என்று உணவைப் பரிமாறிக் கொண்டேக் கூறினார் ப்ரீதா.
ஏற்கனவே நீணாவுடன் சரியாகப் பேச முடியவில்லை… நினைத்த நேரத்தில் கொஞ்ச முடியவில்லை… குறைந்தப்பட்சம் சரிவர சண்டைக் கூட போட முடியவில்லை என்று கவலையில் இருந்தான் ரோஹித்.
எப்போதடா இங்கிருந்துக் கிளம்புவோம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ப்ரீதா இவ்வாறுக் கேட்கவும் அதிர்ந்தான்.
“இல்லை… வேலை இருக்கு… நாங்கக் கிளம்பியாகணும்…” என்று அவன் கூற “நீ வேணா போ ரோஹித்… நான் மட்டுமாவது ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்…” என்று சாப்பிட்டுக் கொண்டேக் கூறினாள் நீணா.
“இவளெல்லாம் எனக்கு பொண்டாட்டி… ச்சை… வெளில சொல்லவே வெட்கமா இருக்கு… இப்படியாடி எல்லார் முன்னாடியும் பேசுவ? உன்னயெல்லாம் கட்டிக்கிட்டு…”
இப்படியாக சென்ற ரோஹித்தின் யோசனையை “அதெல்லாம் சாப்பிட்டு முடிச்சு பேசிக்கலாம்… நீ முதல்ல ஒழுங்காப் பரிமாறு…” என்ற தினேஷின் குரல் கலைத்தது. அதன் பின் யாரும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்தனர்.
உச்சி வெயில் வேளையிலும் இதமான குளிர்காற்று வீச வீட்டின் முன் விஸ்தாரமாக இருந்த போர்ட்டிகோவில் போடப்பட்டிருந்த மூங்கில் நாற்காலிகளில் சென்று அமர்ந்தனர் தினேஷும் ரோஹித்தும்.
காலையில் கோவிலுக்கு சென்றதால் படிக்காமல் விட்ட செய்தித்தாளை தினேஷ் படிக்க உள்ளிருந்து கையோடு எடுத்து வந்த ஒரு வார இதழை புரட்ட ஆரம்பித்தான் ரோஹித்.
“எப்போ ரோஹித் சென்னை கிளம்புறீங்க?” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் தினேஷ்.
நிமிர்ந்து அவரைப் பார்த்தான் ரோஹித். செய்தித்தாளில் முகத்தைப் புதைத்திருந்தார். அவனும் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தபடியே “நைட் கிளம்பணும் அங்கிள்…” என்றான்.
“ம்ம்… டிக்கெட் ஏதும் எடுத்து வெச்சிருக்குறீங்களா?”
“பஸ்ல புக் பண்ணிருக்கேன் அங்கிள்… ட்ரெயின் கிடைக்கல…”
“இப்போ டிக்கெட் இல்லைன்னு சொன்னா ‘அதான் புக் பண்ணலையே… ரெண்டு நாள் தங்கிட்டுப் போங்க’னு சொன்னாலும் சொல்லுவாங்க… இப்படியே மெயிண்டையின் பண்ண வேண்டியது தான்…
இதுக்கு மேல நம்மளால தாக்குப்பிடிக்க முடியாது பா… எப்படியும் அங்கிள் டிக்கெட் காமிக்க சொல்லிக் கேக்க மாட்டாங்க… நீணா அம்மாவ மட்டும் சமாளிக்கணும்…” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
“அப்படியா சரி… ப்ரீதா ரொம்ப நாளா அவ அக்கா வீட்டுக்குப் போகோணும்னுக் கேட்டுக்கிட்டு இருக்குறா… நான் கூட அவள அங்க நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி இருக்கேன் ரோஹித். நாங்களும் காலையிலக் கிளம்பணும்…” என்றார் தினேஷ்.
“ப்ரீதாவ இங்க இருக்க விட்டா அப்பறம் ‘பொண்ணையும் மாப்பிள்ளையையும் தங்கிட்டுப் போக சொல்லுங்க’ன்னு என்ற தலைய உருட்டுவா… உள்ளப் போனதும் முதல் வேலையா ‘நாளைக்கு அக்கா வீட்டுக்குப் போகலாம்’னு சொல்லி அவள சரிக் கட்டி வெக்கோணும்… அப்போ தான் இவங்கள இன்னைக்குக் கிளம்ப விடுவா…” என்று மனதிற்குள் கணக்குப் போட்டார் தினேஷ்.
கையில் ஒரு சாக்லேட்டை வைத்து சாப்பிட்டபடியே அங்கு வந்த நீணா “மச்சான்… நைட் நீங்கக் கிளம்பறதுக்கு டிக்கெட் புக் பண்ணலையே எப்படிப் போவீங்க? கிடைக்குற பஸ்ல ஏறிப் போயிடுவீங்களா? சீட் கிடைக்குமா?” என்றுக் கேட்டாள்.
ரோஹித் தலையை குனிந்து கண்களை இறுக மூடித் திறந்தான். “புக் பண்ணியாச்சு நீணா… ரெண்டுப் பேருக்கும் சேர்த்து…” என்றான் அழுத்தமாக.
அவள் பின்னாலேயே பாதி சமையலில் கையில் கரண்டியுடன் வந்த ப்ரீதா “ஏனுங்க… அதான் இவங்க டிக்கெட் எதுவும் போடலயாமேங்க… ரெண்டு நாள் இருந்துட்டுப் போக சொன்ன தான் என்னவாம்?” என்று தினேஷிடம் கேட்டார்.
கையிலிருந்த செய்தித்தாளை மடித்தபடியே “அதான் நம்ம நாளைக்கு உன்ற அக்கா வீட்டுக்குப் போயிடுவோமே ப்ரீதா… அப்பறம் இவங்கள இருக்க சொல்லி மட்டும் என்னப் பண்ணப் போற?” என்றார் தினேஷ்.
“நம்ம எங்கங்க அக்கா வீட்டுக்குப் போறோம்?” என்று ப்ரீதா கேட்கவும் “அதெல்லாம் போறோம்… அதான் கலையில சொன்னேனில்ல? நீ போய் சமையல கவனி… நீணா போ… போய் ஊருக்குக் கிளம்ப பேக் பண்ணுற வழியப் பாரு…” என்று இருவரையும் அதட்டினார் தினேஷ்.
நீணாவும் ப்ரீதாவும் தினேஷையும் ரோஹித்தையும் விநோதமாகப் பார்த்து விட்டு உள்ளே சென்றனர்.
தலையில் அடித்துக் கொண்டு “ஷ்ஷ்ஷ்ஷ்…” என்றுப் பெருமூச்சு விட்டார் தினேஷ். “நீங்க அடிச்சுக்கிட்டீங்க… உங்கள மாதிரி என்னால வெளிப்படையா அடிச்சுக்க முடியலயே அங்கிள்…” என்று மானசீகமாக அவரிடம் கூறி உள்ளே எழுந்து சென்றான் ரோஹித்.
இரவு கிளம்பும் வரை நீணாவை முறைத்துக் கொண்டே இருந்தவன் அவள் பேச வந்தாலும் அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
காலை தங்களின் சண்டைக்குப் பின் இன்னும் தங்களுக்குள் பேசிக் கொள்ளவே இல்லையே என்று வருந்திய நீணாவிற்கு அவனிடம் சென்று நின்றபோதெல்லாம் தன்னை அலட்சியம் செய்த ரோஹித்தை காணக் கோபம் வந்தது.
“போயேன்… நீ பேசலன்னா நானும் பேச மாட்டேன்…” என்று சிலுப்பிக் கொண்டுக் கிளம்ப ஆரம்பித்தாள்.
“நைட் சாப்பிட்டுக் கிளம்புங்க” என்றுக் கூறிய தினேஷிற்கு “இல்ல அங்கிள்… பஸ் டிக்கெட் ஈவ்னிங் 6 மணிக்கு… சீக்கிரம் கிளம்பியாகணும்” என்று சமாதானம் கூறி வேகமாகக் கிளம்பினான் ரோஹித்.
“இந்த நேரத்துக்குக் கிளம்பினா நடு ராத்திரில சென்னைல போய் நிக்கணும்… எதுக்கு இவன் இப்படி அன்டைம்ல போக நினைக்குறான்?” என்று யோசித்தபடியே தான் எடுத்து வந்திருந்த பையை கையில் எடுத்தாள்.
“நான் போய் ஆட்டோ பிடிச்சுட்டு வரேன்” என்றுக் கூறி சென்ற தினேஷ் தெருமுனையில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் அவர்களுக்கு பழக்கமான டிரைவரை அழைத்து வந்தார்.
ஆட்டோ வந்ததும் பெரியவர்களிடம் விடைப்பெற்று முதலில் ரோஹித் சென்று அமர்ந்துக் கொண்டான். நீணா வந்து அமர்ந்ததும் ஆட்டோப் புறப்பட்டு பஸ் ஸ்டான்ட் வந்து சேர்ந்தது.
இறங்கியதும் சுற்றி பஸ்ஸை தேடியவனைப் பார்த்து “எந்த பஸ்ல போகப் போறோம்?” என்றுக் கேட்டாள் நீணா.
“அப்படியே சுத்திப் பாரு… எந்த பஸ் காலியா இருக்கோ ஏறி உக்காந்துக்கலாம்…”
“அப்போ டிக்கெட் புக் பண்ணல தான? ஏன்டா இப்படி இருக்க? எங்க வீட்டுக்கு வரதுக்கு சொன்ன காரணம் பொய்… கல்யாணத்துக்குப் போறேன்னு சொல்லி ஊர் சுத்துனது பொய்…
தாம்பூல பைங்கறப் பேருல வீட்டுலக் குடுத்தோமே ஒரு கவர்… அது பொய்… ஊருக்குக் கிளம்பணும் வேலை இருக்குன்னு சொன்னது பொய்… அதுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன்னு சொன்னதுப் பொய்…”
நீணா இவ்வளவும் பேசி முடித்த நேரம் காலியாக இருந்த ஒரு பேருந்தைத் தேடி அதில் ஏறி இருவரின் பேக்கையும் மேலே வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
ரோஹித் அமைதியாக இருந்தான். அவன் எதற்கும் பதில் கூறாததால் நீணா ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அதிக நேரம் அங்கே நிற்காமல் சீக்கிரமேக் கிளம்பியது பேருந்து. சில நிமிடங்களில் மீண்டும் தான் கேட்க நினைத்தக் கேள்விகளை அவனிடம் கேட்க எண்ணி அவன் புறம் திரும்பினாள் நீணா.
ரோஹித் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். நீண்டப் பெருமூச்சொன்றை வெளியேற்றி அவளும் கண் மூடி உறங்க ஆரம்பித்தாள்.
நடு இரவில் சென்னை வந்து சேர்ந்தனர். முன்பே கால் டாக்ஸி சொல்லி வைத்திருந்தான் ரோஹித். அவர்கள் இறங்கியதும் தயாராக இருந்த வாகனத்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டைத் திறந்து உள்ளே வந்ததும் கையிலிருந்த நீணாவின் பையை கீழே வைத்து தோளில் மாட்டியிருந்த தன் பையை கழட்டி வீசி விட்டு கதவை தாழ் போட்டுத் திரும்பியவளை ஆவேசமாக இழுத்தணைத்தான் ரோஹித். நீணா திணறி அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.
அவள் முயற்சியை அடக்கும் விதமாக மேலும் இறுக்கிப் பிடித்து முகம் முழுவதும் முரட்டுத்தனமாக அழுந்த முத்தமிட்டவாறே “ரெண்டு நாளா உன்ன பாக்காம இருக்க முடியலன்னு தான் பிரண்ட் கல்யாணம்னு சொல்லி உங்க வீட்டுக்கு வந்தேன்…
வீட்டுக்குள்ள இருந்தா உன் பக்கத்துல இருக்க முடியலன்னு தான் பைக்ல உன் கூட ஊர் சுத்துனேன். அந்த பிள்ளையார் பொம்மை… உனக்கான கிப்ட்…
இதுக்கு மேலயும் அங்க இருந்தா உன்கிட்ட… உன் பக்கத்துல இருக்க முடியாதுன்னு தான் சீக்கிரம் கூட்டிட்டு வந்தேன்…” என்றான்.
பலம் கொண்ட மட்டும் முயன்று அவன் முகத்தை தன் முகத்திலிருந்துப் பிய்த்தெடுத்து அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் நீணா.
மெலிதாக புன்னகைத்தவன் “ஐ மிஸ்ட் யூ” என்றான் மென்மையாக.
“இவ்வளவும் ப்ளான் பண்ணி தான் பண்ணியா?”
ஆச்சரியமாகக் கேட்டவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்தவன் அவளை அணைத்தபடியே மெல்ல நடக்க ஆரம்பித்தான்.
“இது மட்டும் ப்ளான் பண்ணி பண்ணல… இன்னைக்கு நைட் கிளம்பினா நாளைக்கு காலையில தான் வந்திருப்போம்.
வந்ததும் ஹாஸ்பிடல் கிளம்பணும். அப்பறம் இப்படி உன்னை ஹக் பண்ண நாளைக்கு நைட் வரைக்கும் வெயிட் பண்ணணும். அதான் இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பி நடு ராத்திரிலயே வீட்டுக்கு வர மாதிரிப் பாத்துக்கிட்டேன்.
ட்ராவல் செஞ்சது டயர்டா இருக்கு… ராத்திரிலக் கண்ணு முழிக்க முடியலன்னு நீ சாக்கு சொல்லக் கூடாதுப் பாரு… அதுக்கு தான் பஸ்ல ஏறுனதும் நான் தூங்கிட்டேன். நீயும் பேசாமத் தூங்கிட்ட…” என்று அவன் கூறி முடித்தபோது கட்டிலின் அருகில் இருந்தனர்.
ரோஹித்தின் முகத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நீணா, காலில் கட்டில் இடித்து இருவரின் நடையும் நின்றுப் போகவே சுற்றிப் பார்த்தாள்.
“நம்ம ரூம்ல கட்டில் இன்னும் சரி பண்ணலையா?”
அவன் கெஸ்ட் ரூமிற்குள் தன்னை அழைத்து வந்திருப்பதை கவனித்தவள் இரண்டு நாட்கள் ஆகியும் கட்டில் சரி செய்யப்படவில்லையா என்று அறிந்துக் கொள்ள விரும்பிக் கேட்டாள்.
“பொண்டாட்டி இல்லாத வெறும் கட்டில் எனக்கு வேண்டாம்” என்று அவள் மூக்கோடு மூக்கு உரசி மிக மெல்லியக் குரலில் கூறினான் ரோஹித்.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள் “ஏன்டா நீ என்னை வந்துப் பார்க்க ரெண்டு நாள் ஆச்சு?” என்று அழுதபடியே அவன் நெஞ்சில் அடிக்க ஆரம்பித்தாள்.
அவளின் கேள்வியிலும் செயலிலும் ரோஹித் என்ன சொல்வதென்றுப் புரியாமல் நின்றான். அவளும் தன்னை தேடியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
அடிப்பதை நிறுத்தி நீணா அவன் முகத்தைப் பற்றி அருகில் இழுத்து அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டாள். அவ்வளவு நேரம் சிலையென நின்றவன் அவள் முத்தமிடவும் சுதாரித்து அவள் துவங்கியதை அவன் முடித்து வைத்தான்.
விடியும் தருவாயில் தன் கையணைப்பில் உறங்கியவளின் கன்னத்தில் உதடு வைத்து தேய்த்து “நீணா… நீ…ணா… எந்திரி…” என்று அவளை எழுப்ப முயன்றான்.
“தூக்கம் வருது ரோஹித்… டிஸ்டர்ப் பண்ணாத…” திரும்பி அவனுக்கு முதுகுக் காட்டிப் படுத்தாள்.
கண்ணைத் திறவாமலேயே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளை மேலும் இறுக்கி அணைத்து “ஹ்ம்ம்… கிளம்பணும் எந்திரி நீணா… எனக்கு டீ மட்டும் போட்டுக் குடு ப்ளீஸ்டி…” என்றுக் கெஞ்சினான்.
“ம்ம்” என்று மட்டும் கூறி அவன் அணைப்பில் இன்னும் சுகமாக உறங்க ஆரம்பித்தாள் நீணா.
சற்று நேரத்தில் இருவரின் தலைக்கும் நடுவில் தலையணைக்கு அடியில் இருந்த மொபைலில் அலாரம் அலற வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தனர்.
”எதுக்குடா இவ்வளவு சத்தமா அலாரம் வெச்ச?” என்றுக் கத்தினாள் நீணா.
“ஏய் நான் எங்க நைட் அலாரம் வெச்சேன்? அது உன் மொபைல்டி… முதல்ல அத எடுத்து ஆப் பண்ணு…” என்று பதிலுக்குக் கத்தினான் ரோஹித்.
எதிர் எதிரில் மண்டியிட்டு அமர்ந்து இருவரும் முறைத்துக் கொண்டனர். தலையணைகளை களைத்துப் போட்டு மொபைலை தேடியெடுத்து அலாரத்தை நிறுத்தினாள் நீணா.
“அதான் முழிச்சுட்டல்ல… போய் டீ போடு போ…” என்று ரோஹித் கடுப்புடன் கூறவும் “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிக் கெஞ்சுன… இப்போ என்னமோ அதிகாரம் பண்ணுற?” என்றாள் நீணா.
“அப்போ ஒழுங்காக் கெஞ்சுனப்போவே எந்திரிச்சுருக்கணும். காலங்காத்தால மனுஷன் தூக்கத்தக் கெடுத்துக்கிட்டு….” என்றபடியேக் குளியலறைக்குள் சென்றான்.
“ச்சை… எழுந்திரிக்கும்போதே போராட்டம் தானா?” என்று அலுத்துக் கொண்ட நீணா தங்கள் அறையில் இருந்த மற்றொரு குளியலறைக்குள் சென்றாள்.
பயணம் செய்தது களைப்பாக இருக்கும் என்று நினைத்த ரோஹித் “இன்னைக்கு வாக்கிங் வேணாம்” என்றான். “நானும் அதான் சொல்ல வந்தேன்” என்றுக் கூறிய நீணா சமையலறைக்குள் சென்றாள்.
சிறிது நேரத்தில் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து “இந்தா…” என்று வேண்டா வெறுப்பாக டீயை நீட்டியவள் தானும் ஒரு பேப்பரை கையிலெடுத்து அவன் அருகில் அமர்ந்தாள்.
சில நிமிடங்கள் அமைதியாகக் கழிய “அங்கிள்கு லத்திகா அஜய் பத்தி என்னத் தெரியும்?” என்று மெதுவாகக் கேட்டான் ரோஹித்.
அதிர்ந்து போய் செய்தித்தாளிலிருந்து தலையை நிமிர்த்தியவள் “என்ன தெரியும்னா? புரியல…” என்றாள்.
“அன்னைக்கு நீ ஏதோ சொன்ன? உன் அண்ணனையும் எங்க வீட்டுக்கு அனுப்பறதப் பத்தி… அதுக்கு அங்கிளும் அனுப்பிடலாம்னு சொன்னங்க… அப்போ இது எல்லாத்துலையும் அங்கிளும் கூட்டா?” என்று அவளை தீர்க்கமாகப் பார்த்துக் கேட்டான்.
“இங்கப் பாரு ரோஹித்… அஜய் என்ன நெனைக்குறான்… லத்திகா என்ன முடிவுல இருக்கா… இது எதுவும் எனக்கே முழுசாத் தெரியாது. நானா ஒரு கெஸ் பண்ணி வெச்சுருக்கேன். இதுல எங்கேந்து என் அப்பா வந்தாங்க?
அவங்களுக்கு எதுவும் தெரியாது. அன்னைக்கு ஏதோ விளையாட்டுக்கு நான் உன்னை வம்பிழுக்கவும் உனக்கு சப்போர்ட் பண்ண உன்னையும் உன் வீட்டையும் பத்திப் பெருமையாப் பேசுனாங்க.
நானும் சும்மா சொன்னேன் அஜய் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்னு. அதுக்கு அப்பா சரின்னு சொன்னாங்க. அவ்வளவு தான். இதுல இதுக்கு மேல பேச எதுவும் இல்லை…”
“நான் மறுபடியும் சொல்லுறேன் நீணா… இது ஒத்து வராது… எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்ல… விட்டுடு… தேவ இல்லாம அவங்க ரெண்டுப் பேரு மனசையும் சேர்த்துக் கெடுக்காத…” என்றுத் தீர்மானமாகக் கூறினான் ரோஹித்.
நீணா பதில் கூற ஆரம்பித்தபோது அவளின் மொபைல் அடிக்கவே ரோஹித் தன் அருகில் இருந்ததை எடுத்துப் பார்த்தான். அழைப்பது அஜய் என்றதும் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசினான்.
“சொல்லுங்க அஜய்… எப்படி இருக்கீங்க?” என்று ரோஹித் கேட்டதும் “நல்லா இருக்கேன் மச்சான்…” என்றான் அஜய்.
நீணாவும் ரோஹித்தும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்தனர்.
அஜய்யும் சரி… ரோஹித்தும் சரி… எப்போதும் “மாப்ள” “மச்சான்” என்று உறவுமுறை சொல்லி அழைத்து பேசுபவர்கள் அல்ல. அதை இருவருமேத் தவிர்த்து விடுவர்.
பெயர் சொல்லி அழைப்பவர்கள். இன்று அஜய்யின் “மச்சான்” என்ற அழைப்பே வித்தியாசமாகப்பட்டது இருவருக்கும்.
ரோஹித் “ம்ம்…” என்று மட்டும் கூறினான்.
“மச்சான்… அப்படியே வந்து கதவத் திறந்து விட்டீங்கன்னா வீட்டுக்குள்ள வருவேன்…” என்று அஜய் கூறியதும் நீணா சட்டென்று எழுந்தேவிட்டாள். ரோஹித்தும் அதிர்ந்தான்.
“எந்த வீடு அஜய்?”
“உங்க வீடு தான் மச்சான்… உள்ள தான இருக்கீங்க?” என்று உற்சாகமாகக் கேட்டான் அஜய்.
ரோஹித்தும் செய்தித்தாளை வைத்துவிட்டு எழுந்து காலை கட் செய்து நீணாவை திரும்பிப் பார்த்தான்.
“ம்ஹும்ஹும்ம்ஹும்… சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுடா…” என்று அசுர வேகத்தில் தலையை ஆட்டினாள்.
ரோஹித் மெல்ல நடந்து சென்று கதவைத் திறக்க அங்கே இரண்டுப் பெரிய ட்ராலிகளுடன் முகமெல்லாம் பல்லாக நின்றுக் கொண்டிருந்தான் அஜய்.
“அடப்பாவி சண்டாள அண்ணா… கொஞ்சமாவது அறிவிருக்காடா உனக்கு? இப்படியாடா சொல்லாமக் கொள்ளாம வந்து நிப்ப?
இன்னைக்கு தான் இவன் உங்க விஷயத்தப் பத்தி ஏதோ கொஞ்சம் அமைதியா பொறுமையா பேசுறான்… அப்படியே ஏதாவது பிட்ட போடலாம்னு நெனச்சேன்… அதுக்குள்ள இப்படிப் பொட்டி சட்டியோட வந்து நிக்குறியே… வரவன் முன்னாடியே சொல்லிட்டு வர மாட்டியா?
இப்போ நீ எதுக்கு வந்துருக்கன்னு எனக்கேத் தெரியாதே… இவன் ஏதாவதுக் கேட்டா எப்படி சமாளிப்பேன்?
நீயாவது லத்திகாவ லவ் பண்ணுறேன்னு வாயத் துறந்து என்கிட்ட சொன்னியா? ம்ம்ஹும்… அதுவும் இல்லை… நானா சிந்திச்சு செயல்பட்டுக்கிட்டு இருக்கேன்…
இந்த நேரத்துல நீ மட்டும் அப்படி எதுவும் இல்லன்னு சொன்னா ‘அப்போ இதெல்லாம் உன் ஏற்பாடா?’னு என்னைக் கேள்விக் கேட்டேக் கொன்னுடுவானே…
இந்த லத்திகா பொண்ணாவது சொல்லுச்சா? ம்ம்கும்… பையன் நீயே வாயத் தொறக்கல… அவள சொல்லிக் குத்தமில்ல…” என்று மூச்சை இழுத்துப் பிடித்து சிலையென நின்று யோசித்துக் கொண்டிருந்தாள் நீணா.
அஜய்யை வரவேற்க வேண்டும் என்பதை கூட மறந்து அவனையே வெறித்துக் கொண்டிருந்தான் ரோஹித்.
அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் அவனை தாண்டி பெட்டிகளுடன் உள்ளே வந்தான் அஜய். உரிமையுடன் உள்ளே வந்தான் என்பதுதான் அவன் செயலுக்கு இன்னும் சரியாகப் பொருந்தும்.
அதற்கு மேல் வாயிலில் நின்று என்ன செய்ய என்று நினைத்து கதவைத் தாழிட்டான் ரோஹித்.
“உட்காருங்க…” என்று சோபாவை கைக் காட்டினான்.
இருவரும் அமர்ந்தனர். வீட்டில் மையான அமைதி நிலவியது. நீணா நின்ற இடத்தை விட்டு அசையவே இல்லை. அவள் சிலையாகவே மாறியிருந்தாள்.
ரோஹித்தும் அஜய்யும் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து அஜய் “நான்…” என்று ஆரம்பித்தபோது வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
அவன் அருகில் அமர்ந்திருப்பதை விட நகர்ந்து செல்வது மேல் என்றெண்ணிய ரோஹித் வேகமாக எழுந்து சென்று கதவைத் திறந்தான்.
“எப்படி அண்ணா இருக்க?” என்றுக் கேட்ட லத்திகா பெரிதாக புன்னகைத்தாள்.
“அட கூமுட்டைங்களா… ரெண்டுப் பேரும் எனக்கு ஆப்படிக்குறதுக்கே இப்படி ஒண்ணா வந்தீங்களா?” என்று நினைத்த நீணா தலையில் அடித்துக் கொண்டாள்.
12
அனைவரும் பார்த்து வியக்கும்படி அலங்கரிக்கப்பட்டு உறவினர்கள் கூட்டமும் நண்பர்கள் கூட்டமும் நிரம்பி வழிந்த அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் முன் நின்ற காரிலிருந்து இறங்கினான் அஜய்.
பெண் வீட்டார் சார்பாக மணப்பெண்ணின் அண்ணன் சென்று மாப்பிள்ளையை அழைக்க வேண்டும் என்று யாரோ சம்பிரதாயங்களை விளக்கிக் கூற ரோஹித் நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றி வாசலுக்கு சென்று அஜய்யை அழைத்தான்.
ரோஹித் என்னவோ வாயைத் திறந்துக் கூட அழைக்காமல் தலையை மட்டும் பலமாக அசைத்து தான் அவனை உள்ளே அழைத்தான். ஆனால் அஜய் புன்சிரிப்புடன் முன்னே வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டான்.
“உனக்கு ஏன்டா என் மேல திடீர்னு இப்படி பாசம் பொங்குது?” என்று எண்ணியபடியே, அனைவரின் முன்பும் கையை விடுவித்துக் கொள்ளும் வகை அறியாமல் அவனுடன் சேர்ந்து நடந்தான் ரோஹித்.
வீடியோ எடுப்பவர் வேறு மெதுவாக நடந்து வரும்படிக் கூற வாசலிலிருந்து மண்டபத்தின் உள்ளே செல்ல வேண்டிய 20 அடிகளை 20 நிமிடங்களில் கடக்க வேண்டியதாயிற்று.
எதிர்ப்பட்டவர்கள் விசாரித்தபோது புன்னகையுடன் பதில் கூறினாலும் ரோஹித்தின் கையை மட்டும் இறுகப் பற்றியிருந்தான் அஜய்.
“கல்யாணம் பேசி முடிச்ச அன்னையிலேருந்து ‘பொண்ணோட அண்ணன கூப்பிடுங்க’ன்னு ஆளாளுக்குக் கூவுனீங்களேடா… இன்னைக்கு ஒருத்தனும் என்னைக் கூப்பிட மாட்டேங்குறீங்களே…
இவன் வேற கைய விட மாட்டேங்குறான். பிடியைக் கொஞ்சம் தளர்த்துனா எஸ் ஆகி ஓடிடலாம்னுப் பார்த்தா… இப்படி உடும்புப் பிடியால்லப் பிடிச்சு வெச்சுருகான்…
பாவம் லத்திகா… எப்படி தான் சமாளிக்கப் போறாளோ? லத்திகா… அவளால வந்தது தான் இவ்வளவும். போயும் போயும் இவனையா செலக்ட் பண்ணணும்?”
ரோஹித் இவ்வாறெல்லாம் யோசித்தான் என்றுப் பிற்காலத்தில் அந்த கல்யாண வீடியோவை பார்க்கும் யாரும் யூகிக்கக் கூட முடியாத அளவிற்கு அமைதியாய், அஜய்கு போட்டியாக அழகாக புன்னகைத்தபடி நடந்து வந்தான்.
மண்டபத்தின் மாடியில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த நீணா தற்செயலாக வாசலில் கூட்டத்தை கவனித்து சற்றேக் குனிந்து என்ன நடக்கிறது என்றுப் பார்த்தாள்.
“அய்யய்யோ… இவனுங்க ரெண்டுப் பேரையும் யாரு இப்போக் கோர்த்து விட்டான்னுத் தெரியலயே… ஆண்டவா… கைக்கலப்பாகாம இருக்கணும்…” என்று மேல் நோக்கிக் கும்பிட்டாள்.
அந்தப் பக்கம் வந்த ப்ரீதா “அட ஏன் கண்ணு உன்ற அண்ணன் கல்யாணம் முடிவானதுலேருந்து வானத்தப் பாத்துக் கும்பிடுப் போட்டுக்கிட்டே இருக்குற? அதெல்லாம் உன்ற அண்ணன் கல்யாணம் நல்லபடியா நடக்கும்” என்றார்.
அவரை நிதானமாகத் திரும்பிப் பார்த்த நீணா “என் அண்ணன் கல்யாணம் நடக்கும்… உன் பொண்ணு கல்யாணம் தான் மா நிலைக்குமாத் தெரியல…” என்று எண்ணி “நீங்க போய் அப்பாக்கிட்ட வேற ஏதாவது வேணுமாக் கேளுங்கம்மா…” என்றாள்.
ப்ரீதாவை அனுப்பி வைத்து விட்டுத் திரும்பியவளின் அருகில் ஒரு சிறுவன் வந்து “சித்தி உங்கள சித்தப்பா மேடைக்குக் கூப்பிடுறாங்க…” என்றுக் கூறியதும் “சரிடா… நீ ஓடாம மெதுவா போ…” என்று அவனிடம் கூறி படிகளில் இறங்கினாள்.
மணமேடையை நெருங்கிய நீணா “அடக் கடவுளே… எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்குப் பாரு… ஏண்ணே இப்படிப் பண்ணுற?” என்று மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள்.
மேடையில் மணமக்களுக்கென அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகளுள் ஒன்றில் அமர்ந்திருந்த அஜய் அருகில் நின்றிருந்த ரோஹித்தின் கையை இன்னும் விடாமல் பற்றியிருந்தான்.
நீணா ரோஹித்திடம் வந்ததும் அவள் காதருகில் குனிந்தவன் “உங்க அண்ணன என் கைய விட சொல்லு… கடுப்பெத்திக்கிட்டு இருக்கான்…” என்று புன்னகை மாறா முகத்துடன் கூறினான்.
“புரியுது… புரியுது…” என்று எண்ணியபடியேக் குனிந்து “டேய் அஜய்… சின்னப் புள்ள மாதிரி ரோஹித் கைய ஏன்டா புடிச்சுக்கிட்டு உக்காந்திருக்க? லத்திகா வருவா… அவ கைய கெட்டியாப் பிடிச்சுக்க…” என்றாள்.
“ஏன் நீணா???” என்றுப் பாவமாகக் கேட்டான் அஜய்.
“நீ நேரங்காலம் தெரியாம பாசத்த பொழிஞ்சுத் தள்ளு… அவன் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி வீம்புப் பிடிக்கட்டும். ரெண்டுப் பேரும் சேர்ந்து நல்லா வாங்குறீங்கடா என் உயிர… பதினஞ்சு நாளா இதே போராட்டமாப் போச்சு…” என்று மனதிற்குள் பொருமியபடி நிமிர்ந்தாள் நீணா.
அவளை முறைத்த ரோஹித் தன் கையைப் பிடித்திருந்த அஜய்யின் கையைப் பார்த்தான். அவளை காக்கவென்றே அங்கு வந்த ஒருவர் “பொண்ணோட அண்ணன டைனிங் ஹால்ல கூப்பிடுறாங்க…” என்றார். மனமே இல்லாமல் ரோஹித்தின் கையை விட்டான் அஜய்.
நீணா அப்பாடா என்று பெருமூச்சு விட்ட நேரம் அவள் கையைப் பற்றி இழுத்தான் ரோஹித். “டேய் எனக்கு வேலை இருக்கு… லத்திகாவ ரெடிப் பண்ணணும். விடு ரோஹித்” என்று மெல்லக் கூறினாள் நீணா.
அதை சட்டை செய்யாமல் “ஏன்டி… உங்கண்ணனுக்கு புதுசா என் மேல பாசம் வந்துடுச்சோ? நம்ம கல்யாணத்த இவன் மட்டும் தானடி முழு மூச்சா எதிர்த்தான்? லவ் மேரேஜ்ல பெத்தவங்கள சம்மதிக்க வெக்குறதேக் கஷ்டம். அவங்கள எப்படியோ நம்ம பேசி சரிக் கட்டுன நேரத்துல இவன் வந்து அந்த குதி குதிச்சான்… இப்போ மட்டும் என்னவாம்? என்னவோ கையவே விட மாட்டேங்குறான்?” என்றுக் கேள்விகளை அடுக்கினான்.
ரோஹித்தின் கோபம் நியாயமானது தான். அவன் சொல்வதனைத்தும் முற்றிலும் உண்மை என்பதால் என்ன சமாதானம் கூறுவதென்றுத் தெரியாமல் விழித்தாள் நீணா.
எதிரில் தென்பட்டவர்களைப் பார்த்துத் தலையசைத்து புன்னகைத்தபடியே இருவரும் டைனிங் ஹால் வந்து சேர்ந்தனர்.
“அவன் ஏதோ தங்கச்சி மேல இருக்க பாசத்துல கொஞ்சம் கோபமா பேசிட்டான். அதான் இப்போ…” என்ற நீணாவை இடையிட்டு “ஹம்ம்ம்ம்… அவன் தங்கச்சி லவ் பண்ணா கசக்குது… அவன் லவ் பண்ணா மட்டும் இனிக்குதோ?
அன்னைக்கு அவன் ஒரு அண்ணனா பேசுனான்னா… இன்னைக்கு நானும் அண்ணன் தான். இது என் தங்கச்சி கல்யாணம். நானும் பேசுவேன்…” என்றான் ரோஹித்.
“கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு ஏன்டா இப்படி டெய்லி என்னை டார்ச்சர் பண்ணுற?”
“என் தங்கச்சி லவ் பண்ணித் தொலைச்சுட்டாளே… அப்பறம் எனக்கும் உங்கண்ணனுக்கும் வித்தியாசம் வேண்டாம்?”
டைனிங் ஹாலில் ஒரு மூலையில் நின்று உரையாடிக் கொண்டிருந்தவர்களின் அருகில் வந்த ரோஹித்தின் தந்தை சிவராமன் “இங்க என்ன செய்யுறீங்க ரெண்டுப் பேரும்?” என்றுக் கேட்டார்.
“ஸ்வீட் இன்னும் ரெடி ஆகல…” என்று ஒரே குரலில் கூறினர் இருவரும். “அதாங்கபா கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம்…” என்றான் ரோஹித்.
“சரி சரி… நான் வாசலுக்குப் போறேன்…” என்றுக் கூறி நகர்ந்தார் சிவராமன்.
டைனிங் ஹாலிற்குள் நுழையும் போது இவர்களைக் கடந்து சென்ற சமையல்காரர் ஒருவர் ஸ்வீட் மட்டும் தான் இன்னும் தயார் ஆகவில்லை என்று போனில் கூறி சென்றதை இருவருமே கவனித்திருந்தனர்.
“இப்படி ஒரே மாதிரி சமாளிக்க மட்டும் தெரியலன்னா இந்நேரம் நம்ம பொழப்பு நாறியிருக்கும்” என்றான் ரோஹித்.
கையில் இருந்த கைக்குட்டையால் அவன் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்த நீணா உள்ளே சென்று ஒரு குவளையில் குளிர்ந்த நீர் வாங்கி வந்து அவனைப் பருக சொன்னாள்.
அவன் நீரைப் பருக “இங்கப் பாரு ரோஹித்… இது நம்ம லைப் இல்ல. அவங்க டிசிஷன்ல குறுக்க வர நமக்கு எந்த அதிகாரமும் இல்ல. அஜய் பண்ணது ரொம்பத் தப்பு. அத நான் என்னைக்கும் நியாயப்படுத்த மாட்டேன். அதுக்காக இப்போ நம்ம பதிலுக்கு ஏதாவது செஞ்சா நம்ம வீட்டு பொண்ணோட லைப்பும் அப்பெக்ட் ஆகும்” என்று பொறுமையாக எடுத்துக் கூறினாள்.
அவள் கையில் டம்ப்ளரை கொடுத்த ரோஹித் “இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா?” என்றுக் கேட்டு பந்தியை கவனிக்க சென்றான்.
“அப்படியே டம்ப்ளர மண்டைலயேப் போட்டேன்னா… எல்லாம் தெரியும்னா அப்பறம் எதுக்குடா என்னை இப்படிப் படுத்தி எடுக்குற?”
மனதிற்குள் புலம்பி புலம்பி அலுத்துப் போனவள் வேகமாக டம்ப்ளரை உள்ளே சென்றுக் கொடுத்துவிட்டு லத்திகாவை அலங்கரிக்க சென்றாள்.
அஜய்யும் லதிகாவும் ரோஹித் வீட்டிற்கு வந்த அன்று நடந்தது இது தான்…
அஜய், லத்திகா, ரோஹித் மூவரும் மூன்று திசையில் அமர்ந்திருக்க, நடு நாயகமாக நின்று என்ன நடக்கப் போகிறதோ என்று யோசித்துக் கலங்கிக் கொண்டிருந்தாள் நீணா.
“நான் இந்தியா வரத யாருக்கிட்டயும் சொல்லாம சர்ப்ப்ரைஸா இருக்கட்டும்னு தான் வீட்டுல கூட சொல்லாம யூ எஸ் லேருந்துக் கிளம்பி வந்தேன். நேத்தே சென்னை வந்துட்டேன். பிரண்ட் வீட்டுலத் தங்கி இருந்தேன்” என்றான் அஜய்.
“அப்போ எப்படி லத்திகா கரெக்டா வந்தா? உன்கிட்ட அவ நம்பரும் இல்லையே? நீங்க ரெண்டுப் பேரும் நம்பர கேட்டு வாங்குறதுக்கு யோசிச்சுட்டு தானடா என் கிட்ட மறைமுகமா விசாரிச்சுக்குறீங்க?” என்று யோசித்துக் குழம்பினாள் நீணா.
“எனக்கு இங்க ஒரு பிரண்ட் ரிசப்ஷன் இருக்குண்ணா… முந்தாநேத்து சொல்லி இருந்தேன்ல? ஈவ்னிங் நீ ப்ரீயா? என்னைக் கூட்டிட்டுப் போக முடியுமா?” என்றுக் கேட்டாள் லத்திகா.
அவர்களை ஒரு முறை பார்த்த ரோஹித் “ம்ம் சரி… கூட்டிட்டுப் போறேன்” என்று லத்திகாவிடம் கூறி எழுந்தான்.
வீட்டில் இவர்கள் இருக்க, தாங்கள் வேலைக்குக் கிளம்பி சென்றால் நன்றாக இருக்காது என்றெண்ணி மருத்துவமனைக்கு அழைத்து தனக்கும் நீணாவிற்கும் விடுப்புக் கூறினான்.
அன்று முழுவதும் வீட்டில் ஏதோ ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. யாரும் யாருடனும் சகஜமாக பேச முடியாமல்… ஆளுக்கொரு அறையில் முடங்கி… ஒருவர் முகத்தை ஒருவர் எதிரில் காண நேரிட்டால் அவசரமாக விலகி நடந்தனர். இதில் நீணா தான் பெரிதும் தவித்துப் போனாள்.
ரோஹித் முன்பு லத்திகாவையோ தன் அண்ணனையோ விசாரிக்கவும் முடியாமல் ரோஹித்தின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் முடியாமல் முடிந்த வரை சமையலறையிலேயே ஒடுங்கி விட்டாள். லத்திகாவும் அவளுடன் நின்று சமையலுக்கு உதவினாள்.
இடையில் லத்திகா குளிக்க சென்ற நேரம் சமையலறைக்குள் நுழைந்தான் ரோஹித். அருகில் வந்து நின்றவனைத் திரும்பிப் பார்க்காமல் தாளித்துக் கொண்டிருந்தாள் நீணா.
“இப்போ எதுக்கு நீணா நீ இவ்வளவு அமைதியா இருக்க?”
“ஒண்ணுல்ல…” என்று சாதாரணமாகக் கூறினாள் நீணா.
“அப்போ ஏதாவது பேசு…”
“நான் என்ன பேச? நீ ஏன் அமைதியா இருக்க?”
“இல்லையே…”
“அப்போ அதே மாதிரி தான் நானும் அமைதியா எல்லாம் இல்ல…”
“என்னடி திமிரா?” என்று ரோஹித் கோபமாகக் கேட்கவும் “எனக்கு ஒண்ணும் திமிரு இல்ல… நான் திமிராவும் எதுவும் பேசல…” என்றாள் நீணா.
“இப்படி எல்லாம் ஓவரா பேசுன டிவோர்ஸ் பண்ணிடுவேன் ஜாக்கிரதை…” என்று மிரட்டினான் ரோஹித்.
குளித்து முடித்து வந்த லத்திகாவின் காதிலும் தண்ணீர் குடிப்பதற்காக வந்த அஜய்யின் காதிலும் ரோஹித்தின் கடைசி வாக்கியம் மட்டும் மிகச் சரியாகக் கேட்டது. இருவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அதற்கு மேல் நீணா எதுவும் பேசாமல் முறைத்துக் கொண்டு நிற்கவும், உள்ளே இருந்த வேறு எந்த சத்தமும் வராததால் லத்திகாவை அமைதியாகத் தன்னுடன் வருமாறு சைகை செய்து நகர்ந்தான் அஜய்.
அஜய் லத்திகாவை விரும்புகிறான். நீணாவின் திருமணத்தில் அவளை பார்த்ததிலிருந்து வந்த காதல் அது. இதுவரை அவளுடன் நேரடியாக பேச சந்தர்ப்பம் அமைந்ததில்லை. லத்திகாவிற்கும் அப்படியே.
இம்முறை இந்தியா வரும்போது தன் மனதில் இருப்பதை அவளிடம் எப்படியாவதுக் கூறிவிட வேண்டும் என்று எண்ணினான். லத்திகாவும் நீணாவின் வீட்டிற்கு வருவாள் என்று அவன் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.
இருப்பினும் அவளிடம் எப்படி சென்று என்ன பேசுவதென்று யோசித்துக் கொண்டிருந்தவனின் காதில் ரோஹித்தின் வாக்கியம் விழ… அருகில் லத்திகாவும் இருக்க… அதை அவளும் கேட்க… இதற்கு மேலுமா அவனுக்கு பேச விஷயம் வேண்டும்?
அன்று மாலை தோழியின் வரவேற்பிற்கு லத்திகா ரோஹித்துடன் கிளம்பிச் சென்றதும் நண்பன் ஒருவனைப் பார்த்து விட்டு வருவதாகக் கூறி அஜய் வெளியேக் கிளம்பிச் சென்றான்.
“ரோஹித் இல்லாத நேரம் உன்கிட்டயாவது பேசலாம்னு நெனச்சேன். நீயும் போயிட்டியா? என்ன முடிவுல தான்டா இருக்கீங்க ரெண்டுப் பேரும்?” என்றுப் புலம்பியபடியேத் தனக்கு மட்டும் இரவு உணவுத் தயாரித்தாள் நீணா.
முதலில் ரோஹித் ஏன் அப்படி கூறினான் என்று நீனாவிடம் விசாரிக்க நினைத்த அஜய் அவர்கள் சிரித்து பேசுவதைக் கண்டதும் நிம்மதியுடன் அன்றிரவே கோயம்பத்தூர் கிளம்பி செல்ல மறுநாள் அதிகாலையில் லத்திகா ஈரோட்டிற்கு கிளம்பினாள்.
அவளை பேருந்தில் ஏற்றி விட்டு வந்த ரோஹித் வேறு எதுவும் கேட்டு விடக்கூடாது என்பதற்காக சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ பேசினாள் நீணா.
மருத்துவமனையிலும் எந்த வேலையும் ஓடாமல் பதட்டமாகவே இருந்தது. எவ்வளவு நாள் தான் இந்த விஷயம் பேசாமல் தள்ளிப் போடுவது? அத்தோடு ரோஹித்துடன் முழுதாக ஒரு நாள் சரிவர பேசவில்லை என்பது நெருடலாக இருக்க அலைபேசியை எடுத்து ரோஹித்தை அழைத்தாள்.
அன்று மதியம் அவளுக்கு எந்த அப்பாயின்ட்மெண்டும் இல்லை. ஒரு மணி நேரம் மட்டும் வெளியே எங்காவது சென்று பேசி முடிவெடுக்கலாம் என்று எண்ணியே அவனை அழைத்தாள். ரோஹித்தும் அவளுடன் பேச விரும்பியதால் சரியென்று ஒப்புக் கொண்டான்.
காரை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்தவன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடியே “பொண்ணுங்க ஏன்டி எப்போப் பாரு பீச்சுக்கு போகணும்னு உயிரை எடுக்குறீங்க?” என்றான் எரிச்சலாக.
அவனைத் திரும்பிப் பார்த்த நீணா “இட்ஸ் அ கர்ள் திங் (It’s a girl thing)… சொன்னா உனக்குப் புரியாது…” என்றாள்.
“அடிச்சேன்னா செவுலுப் பேந்துக்கும்… மொட்ட வெயில்ல சுடு மணல்ல நடக்க விட்டுட்டு டயலாக் வேற…”
“அய்யய்யோ… என்னமோ சொல்லிக் கடுப்பேத்திட்டோம் போல…” என்று யோசித்த நீணா அதன் பின் அமைதியாக இருந்தாள்.
இருவரும் இலக்கின்றி சிறிது தூரம் நடந்தனர்.
“போதும் நீணா… ஹாஸ்பிடல் போலாம். வெயில் தாங்கல…” என்று ரோஹித் கூறியதும் திரும்பி காரை நோக்கி நடந்தனர்.
“பேசாம எங்கயாவது ரெஸ்டாரன்ட் போய் பொறுமையா உக்காந்து பேசி இருக்கலாம்…” என்ற எண்ணம் மிக மிக சீக்கிரமாக மருத்துவமனை வந்தடைந்த போது நீணாவிற்குத் தோன்றியது.
உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு “ச்ச இல்ல… இவன் அப்போ மட்டும் கத்தாம இருந்திருந்தா நம்ம ஒழுங்கா பேச வந்த விஷயத்த பேசி இருப்போம்… எல்லாம் இவனால வந்தது…” என்று ரோஹித்தை வசைப் பாடினாள்.
அன்றிரவு கிளம்பும் சமயம் ரோஹித் அவளை அழைக்க வந்தான். இருவரும் சேர்ந்து பார்கிங் வரை அமைதியாக நடந்தனர். காரை எடுத்தவுடன் “ரோஹித் நம்ம கொஞ்சம் பேசணும். வீட்டுக்குப் போய் பேசலாம். நேத்துலேருந்து உன்கிட்ட சரியாவே பேசல” என்றாள் நீணா.
“ஆமா… நேத்துலேருந்து நீதான் என்ன கண்டாலே ஏதோ பேய பார்த்த மாதிரி ஓடி ஒளியுற…”
என்ன தான் ரோஹித் கிண்டலாகக் கூறினாலும் அவள் பேசாதது அவனை வருத்துகிறது என்பதை உடனேயேப் புரிந்துக் கொண்டாள் நீணா.
“ச்ச… இனி எதுக்காகவும் இவன் கூட பேசாம இருக்கக் கூடாது… பாவம் நேத்துலேருந்து எவ்வளவு கஷ்டப்ட்டானோ? ஏன் நமக்குமே எவ்வளவுக் கஷ்ட்டமா இருந்துது? அஜய் எல்லாம் உன்னால தான்டா… காலையிலிருந்து போன் பண்ணுறேன் எடுக்குறியா? ஊருக்குப் போனதுலேருந்து எந்தத் தகவலும் சொல்லல…”
தன் போக்கில் யோசித்துக் கொண்டே இருந்த நீணா கார் நின்று விட்டதை உணர்ந்து ஹான்ட் பாகை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.
“நீணா அஜய் லத்திகா பத்தி நீ என்ன நினைக்குற?” என்று ரோஹித் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பியவள் எதற்காக இப்போது இப்படி நேரடியாகக் கேட்கிறான் என்று யோசித்தாள்.
அவள் யோசனையைக் கலைத்தது அவளின் கைபேசியின் அழைப்பு. காரில் அவள் இறங்கும்போது மறந்து வைத்து விட்டு வந்ததை ரோஹித் எடுத்து வந்திருந்தான்.
தன் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்தவன் அழைப்பது அஜய் என்றதும் எதோத் தோன்ற ஸ்பீக்கரை ஆன் செய்து நடந்தபடியே “பேசு” என்று நீணாவிற்கு சைகை செய்தான்.
அவளை பேச விடாமல் “நீணா… கெஸ் வாட்(Guess what)??? லத்திகா ஓகே சொல்லிட்டா…” என்று அஜய் குதூகலிக்கவும் “அடப்பாவி எப்போடா அவக்கிட்டக் கேட்ட? அய்யய்யோ இவன் வேற இதக் கேக்குறானே…” என்று நினைத்து ரோஹித்தின் முகத்தைப் பார்த்தபடியே எதுவும் பேசாமல் நடந்தாள் நீணா.
அவன் முகத்தில் சலனமே இல்லாமல் அமைதியாக இருந்தான்.
“அப்பாக்கும் அம்மாக்கும் கூட ஓகே நீணா…” என்று அஜய் சொன்னதும் “என்னாது??? அப்பா அம்மாக்கிட்ட வேற பேசிட்டியா?? எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்கடா…” என்று நினைத்தவள் மெதுவாக ரோஹித்தின் கையைப் பற்றினாள்.
ரோஹித் பதிலுக்கு அவள் கையைப் பற்றவும் இல்லை உதறவும் இல்லை.
“லத்திகாவோட அப்பா அம்மாக்கிட்ட பேசணும்” என்ற அஜய் இரண்டு நொடி அமைதிக்குப் பின் “அதுக்கு முதல்ல ரோஹித் கிட்ட சம்மதம் வாங்கணும்” என்றான்.
என்ன சொல்வதென்றுத் தெரியாமல் விழித்தாள் நீணா.
“அதுக்கு தான் நீணா அப்பாவையும் அம்மாவையும் அங்க அனுப்பி வெச்சுருக்கேன்…” என்று அஜய் சொன்னதும் நீணா நின்றே விட்டாள்.
தங்கள் வீட்டின் முன் ஒரு பையுடன் நின்றுக் கொண்டிருந்தனர் ப்ரீதாவும் தினேஷும்.
“டேய் உனக்கு என்னடா அப்படி அவசரம்?” என்று முதல் முறையாக அஜய்யிடம் பேசினாள் நீணா. கத்தினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது… நீயும் சேர்ந்து தான் எனக்காக ரோஹித் கிட்ட பேசணும். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துட்டு நைட் குள்ள எனக்கு கால் பண்ணு…” என்றுக் கூறி அழைப்பைத் துண்டித்தான் அஜய்.
“பண்ணுறதெல்லாம் பக்கித்தனம்… இதுல நைட்குள்ள முடிவுத் தெரிஞ்சுக்கணுமாம்… வந்து சேருதுங்க எனக்குன்னு…” நீணாவால் எல்லாவற்றையும் மனதிற்குள் மட்டுமே நினைக்க முடிந்தது.
“வாங்கப்பா… வாங்கம்மா…” என்று அவர்களை அழைத்தவள் வீட்டை திறந்தாள். ரோஹித் தலையசைத்தானே தவிர வாயை திறக்கவில்லை.
உள்ளே சென்று அமர்ந்ததும் நலம் விசாரிக்க ஆரம்பித்தார் தினேஷ்.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி தான அங்கிள் அங்கிருந்து வந்தோம்? நல்லா இருக்கோம். லத்திகா அஜய் கல்யாணத்துல எனக்கு சம்மதம். நானே அப்பாக்கிட்ட பேசுறேன். நீங்க ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க. சாப்பிடலாம்” என்றுக் கூறி அனைவரையும் அதிசயிக்க வைத்த ரோஹித் தினேஷையும் ப்ரீதாவையும் கெஸ்ட் ரூமிற்குள் அனுப்பினான்.
முதல் நாள் இவர்கள் வீட்டில் இருந்ததால் கார்பென்டரை அழைத்துத் தங்கள் அறை கட்டிலை சரி செய்திருந்தனர். அவர்கள் உள்ளே சென்றதும் நீணாவை முறைக்க ஆரம்பித்தான் ரோஹித்.
13
முகூர்த்த நேரம் நெருகியதும் கெட்டி மேளம் முழங்க லத்திகாவின் கழுத்தில் தாலியை கட்டினான் அஜய்.
மணமக்களுக்குப் பின்னால் நின்ற ரோஹித் “எப்படியோ உங்கண்ணன் சாதிச்சுட்டான்…” என்று நீணாவின் காதில் கூற “சும்மா இரு ரோஹித்… சுத்தி எத்தனப் பேரு இருக்காங்கப் பாரு…” என்று அவனை எச்சரித்து மணமேடையிலிருந்து இறங்கினாள்.
திருமணம் முடிந்ததும் கிளம்பும் உறவினர்களை பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் இறக்கிவிட வேன் ஏற்பாடு செய்திருந்தான் ரோஹித். அதை சரி பார்க்க மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.
வழியில் சிவராமனை பார்த்தபோது “பந்திய கொஞ்சம் கவனிச்சுக்கோங்கபா…” என்று அவரிடம் கூறினான்.
அனைவரும் மேடை ஏறி பரிசுப் பொருட்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். ரோஹித்தின் தங்கை திருமணம் என்ற முறையிலும் நீணாவின் அண்ணன் திருமணம் என்ற முறையிலும் தங்கள் மருத்துவமனையிலிருந்து நெருங்கிய நண்பர்களை அழைத்திருந்தனர்.
ரோஹித் வெளியில் சென்றுவிட்டதால் நீணா அவர்களை கவனிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டாள்.
இடையில் ஒருமுறை அவளை அருகில் அழைத்த அஜய் “ரோஹித் எங்கம்மா? நான் கொஞ்சம் பேசணும்…” என்றான்.
“வெளியில வேலையா இருக்கான். கூட்டம் கொஞ்சம் குறையட்டும் கூப்பிடுறேன் அஜய்…” என்றாள் நீணா.
அண்ணனாக வந்து ரோஹித்திடம் பேச வேண்டும் என்றுக் கூறியதில் அவளுக்கு ஆச்சரியம். சில நாட்களாகவே அவனின் செயல்கள் அனைத்தும் புரியாத புதிராகவே இருந்தன.
“இல்ல… இங்க வேண்டாம். நான் தனியா பேசணும்” என்று அஜய் கூறியதும் சரி என்று மட்டும் தலையை ஆட்டினாள் நீணா.
மோனிகாவும் ஹர்ஷாவும் வந்தபோது சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். லத்திகாவிற்கு அவர்கள் முன்பே அறிமுகமானவர்கள் என்பதால் அவளும் அதில் இணைந்துக் கொண்டாள்.
கடைசியாக ஷிவானி வந்து பரிசுப் பொருளைக் கொடுத்ததும் அவளை சாப்பிட அழைத்து செல்வதாகக் கூறி அவளுடன் டைனிங் ஹாலிற்கு வந்தாள்.
ரோஹித்தும் மற்ற வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அங்கே வந்தான். அவனை கண்டதும் அவசரமாக அவனிடம் வந்த நீணா “என் கூடக் கொஞ்சம் வாயேன்…” என்றுக் கூறி அவன் கைப் பற்றி மாடிக்கு அழைத்துச் சென்றாள்.
அவள் தங்கியிருக்கும் அறைக்குள் வந்து வேகமாக கதவைத் தாழிட்டாள். “என்ன நீணா? ஏதாவதுப் பிரச்சனையா?” என்றுப் பதட்டத்துடன் கேட்டான் ரோஹித்.
இல்லை என்றுத் தலையாட்டியவள் ஜக்கில் இருந்த நீரை எடுத்துப் பருகினாள். பின் அவனை நிமிர்ந்துப் பார்த்து “அஜய் உன்கிட்டப் பேசணும்னு சொல்லுறான் ரோஹித்” என்றாள் நிதானமாக.
அவன் ஏதோக் கூற வாய் திறக்கவும் “ப்ளீஸ் ரோஹித்… எனக்காக பேசேன்… இப்போ அவன் லத்திகாவுக்கும் ஹஸ்பன்ட். ப்ளீஸ்…” என்றுக் கெஞ்சினாள்.
“அவனுக்காக ஒண்ணும் நீ என்கிட்டக் கெஞ்சணும்னு அவசியம் இல்ல நீணா… ஹ்ம்ம்… பேசுறேன்…” என்று அவன் கூறியதும் ஓடி வந்து அவனை இறுக அணைத்தவள் “தான்க் யூ…” என்றுக் கூறி அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.
“கன்னத்துல மட்டும் தானா?” என்று ரோஹித் தலை சாய்த்துக் கேட்கவும் “ஆமா ஆமா… கன்னத்துல மட்டும் தான். இதுக்கு மேலப் போனா என்ன ஆகும்னு எனக்குத் தெரியும். சரி கீழ எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க. நான் போறேன்” என்று வேகமாகக் கூறி அவன் பிடியிலிருந்து நழுவினாள் நீணா.
அவள் திரும்பி நடக்கவும் அவள் கைப் பற்றித் தடுத்தவன் “சரி நீ குடுக்க வேண்டாம்… நான் குடுக்கறேன்…” என்றுக் கூறி அவளை நெருங்கினான்.
“யாராவது வந்து கதவத் தட்டினா என்னப் பண்ணுவ ரோஹித்? ப்ளீஸ் நான் போறேன்…”
“கிஸ் தானே பண்ணப் போறேன்? கதவத் தட்டினா என்ன? திறந்திடலாம்…”
அவள் “இல்ல…” என்று ஆரம்பிக்கவும் தன் இடது கை ஆள் காட்டி விரலை அவள் உதட்டின் மீது வைத்து “ஷ்ஷ்ஷ்… நீ தான் டைம் வேஸ்ட் பண்ணுற…” என்றான்.
நீணா அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். ரோஹித் அவளை இடையோடு சேர்த்தணைத்து அவள் முகத்தை வெகு அருகில் கொண்டு வந்து முத்தமிடாமல் அவளையேப் பார்த்துக் கொண்டு நின்றான்.
அவன் மூச்சுக் காற்று தன் முகத்தில் மோத வெகு அருகில் அவன் முகத்தைப் பார்த்த நீணாவால் அதற்கு மேல் அவனின் பார்வையை சந்திக்க இயலவில்லை.
அவன் கழுத்துக்குப் பின்னால் பின்னியிருந்தத் தன் கைகளை இன்னும் இருக்கி அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டாள். சில நிமிடங்களுக்கு அவள் உதடுகளைத் தனதாக்கிக் கொண்டு அவளை விடுவித்தான் ரோஹித்.
நீணா விலகியதும் “நான் கிஸ் பண்ணலப்பா… இப்போ நீ தான் கிஸ் பண்ண…” என்றுக் கூறி சிரிப்புடன் அறையை விட்டு வெளியேறினான். அவனை திட்ட நினைத்தாலும் முடியாமல் புன்னகையுடன் திரும்பிக் கொண்டாள்.
கணக்குகள் யாவையும் சரி பார்த்து செட்டில் செய்தப் பின் மண்டபத்தை காலி செய்து நேராக ரோஹித்தின் வீட்டிற்கு வந்தனர். வீடே நிரம்பி வழிந்தது. மாலை ஆக ஆக மிக முக்கிய உறவுகள் மட்டும் தங்கியிருக்க மற்றவர்கள் கிளம்பிச் சென்றனர்.
ரோஹித்தும் அப்போது தான் ஓய்வாக ஹாலில் அமர்ந்தான். அவனை கண்டதும் நீணாவிற்கு கண்ணைக் காட்டினான் அஜய்.
லத்திகா இதை கவனித்து விட்டு “என்ன அஜய்?” என்று அவனிடம் கேட்டாள்.
“நான் உங்கண்ணன் கிட்டப் பேசப் போறேன்…” என்றுக் கூறியதும் அவள் கலவரமாக நீணாவை பார்த்தாள்.
“என்னை ஏன் பார்க்குற? காலையிலிருந்து நானும் பீதில தான் சுத்திட்டு இருக்கேன்” என்று மெதுவாக அவளிடம் கூறினாள் நீணா.
“எதுக்கு அஜய்?” என்று லத்திகா அவனிடமே மீண்டும் கேட்க “பேசணும் லத்திகா…” என்று மட்டும் கூறினான்.
“நீ மாடிக்கு போ அஜய். நான் ரோஹித்த அனுப்பி வைக்குறேன்…” என்று அவனிடம் கூறியதும் யாரும் கவனிக்காத வண்ணம் எழுந்து மாடிக்குச் சென்றான்.
நீணா ரோஹித்தின் அருகில் சென்றமர்ந்து “அஜய் மாடில உனக்காக வெயிட் பண்ணுறான்…” என்றாள்.
அவளை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தவன் அமைதியாக மாடிக்கு சென்றான்.
சமையலறைக்குள் செல்ல நினைத்த நீணா தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு லத்திகாவின் கையைப் பற்றி “அம்மா நானும் லத்திகாவும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கோம்… தேடாதீங்க…” என்று சமையலறை நோக்கிக் குரல் கொடுத்தாள்.
“எங்க அண்ணி?” என்று லத்திகா கேட்டதும் “அப்படி என்ன தான் இவங்க ரெண்டுப் பேரும் பேசுறாங்கன்னுக் கேட்கதான். வா வா…” என்றுக் கூறி அவள் கைப் பிடித்து மாடி படிகளில் இழுத்துச் சென்று மேல் படியில் போய் நின்றாள் நீணா.
“ஒட்டுக் கேக்குறது தப்பில்லையா அண்ணி?” என்று லத்திகா கேட்டதும் நீணா “ஹான்… தப்பு… தா… இல்லல்ல… நம்ம ஒட்டுக் கேட்க வரல. இவங்க பாட்டுக்கு அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டா? விளக்கி விடணும்ல… அதான்…” என்றுக் கூறி சமாளித்தாள்.
சில நொடிகளுக்கு எந்த பேச்சுக் குரலும் கேட்காமல் அமைதியாக இருக்கவும் குழம்பிய நீணா மெல்ல தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தாள். ரோஹித்தும் அஜய்யும் இரு துருவங்களாக கையைக் கட்டி நின்றிருந்தனர்.
மீண்டும் படியில் வந்து நின்றவள் தலையில் அடித்துக் கொண்டு “போஸ் குடுக்கறதுக்கா வந்தாங்க?” என்றாள் எரிச்சலாக.
“அவங்க ரெண்டுப் பேரும் எதுவும் பேசாம இப்படியே இறங்கி வந்துட்டாக் கூட நல்லா தான் அண்ணி இருக்கும்…” என்று லத்திகா கலக்கத்துடன் கூற “இவ நமக்கு ஆறுதல் சொல்லுவான்னு நெனச்சு கூடவேக் கூட்டிட்டு வந்தா… இப்படி பயம் காட்டுறா?” என்று நினைத்துக் கொண்டாள்.
அஜய் ரோஹித்தின் புறம் மெல்லத் திரும்பினான். எங்கோ வெறித்துக் கொண்டிருந்தவனிடம் “சாரி ரோஹித்…” என்றான்.
ரோஹித் அவனைத் திரும்பிப் பார்த்து “எதுக்கு அஜய்?” என்று அமைதியாகக் கேட்டான். அவனால் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்துக் கொண்டான்.
அடுத்தவர் பெயர் சொல்லி பேச ஆரம்பித்திருப்பதை இருவருமே உணரவில்லை. இல்லை அப்படி வெளியில் காட்டிக் கொள்ளவில்லையோ?
சில நொடிகள் மௌனமாய் இருந்த அஜய் “எல்லாத்துக்கும்… உன்னோட கல்யாணத்துல நான் செஞ்சதுக்கு… உன்னை முதல் முதல்லப் பார்த்தப்போ நான் பேசுனதுக்கு…” என்றான் மெல்லியக் குரலில்.
“இப்போ நீ எங்க வீட்டு மாப்பிள்ளை அஜய். நீ சாரின்னு சொன்னா ‘பரவாயில்ல விடு’ னு சொல்லுறதத் தவிர எனக்கு வேற வழி இருக்கா அஜய்?” என்று நிதானமாகக் கேட்டான் ரோஹித்.
அஜய் சட்டென்று நிமிர்ந்து ரோஹித்தின் முகம் பார்க்கவும் அவன் மெதுவாக நடந்து சென்று கைபிடி சுவற்றில் சாய்ந்து நின்றான்.
“இல்ல ரோஹித்… அன்னைக்கு ஒரு அண்ணனா என் தங்கச்சி வாழ்க்கையைப் பத்தின பயம்…” என்று அஜய் அவசரமாகத் தன் பக்கத்து நியாயத்தை விளக்க ஆரம்பித்தான்.
அவனை இடையிட்ட ரோஹித் “அண்ணனா என்ன பயம் அஜய்? உன் தங்கச்சி மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? அவ செலெக்ஷன் சரியானதா இருக்கும்னு உனக்கு யோசிக்கத் தோணலையா? லவ் மேரேஜ்னு சொன்னதும் எதிர்க்க மட்டும் தான் தோணுச்சா?
உன் தங்கைய விடு. உன் அப்பா அம்மா ஒத்துக்கிட்டாங்களே… அப்போ அவங்க யோசிக்காமயா அவங்களோட பொண்ணு வாழ்க்கைய முடிவுப் பண்ணுவாங்க? உனக்கிருக்க அக்கறை அவங்க பொண்ணு மேல அவங்களுக்கு இருக்காதா?” என்றுக் கேட்கவும் அஜய் மீண்டும் தலை குனிந்துக் கொண்டான்.
அவன் அமைதியாக இருக்கவும் ரோஹித்தே தொடர்ந்தான். “நீ அமேரிக்காலேருந்துத் திரும்பி வந்தன்னைக்கு என்ன நடந்துதுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? அன்னைக்கு நான் உங்க வீட்டுல இருந்தேன். உங்கப்பாக்கிட்ட பேசுறதுக்காக. கல்யாண தேதிக் குறிக்குறதப் பத்திப் பேசுறதுக்காக…
நீ வீட்டுக்குள்ள வந்ததும் என்ன செஞ்ச? என்னமோத் தெருவுலப் போற பொறுக்கியக் கூப்பிட்டு உட்கார வெச்சு பேசுற மாதிரி ‘உனக்கு எங்க வீட்டுல உட்கார்ந்து பேச என்னத் தகுதி இருக்கு? வெளில போடா’ னுக் கத்தின”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நீணாவின் கண்கள் தாமாகக் கலங்கத் துவங்கின. லத்திகா அவள் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டதும் “ஒண்ணுமில்ல…” என்று புன்னகையுடன் கூறி அவள் கண்ணீரை மறைத்தாள்.
“எனக்கு எந்தத் தகுதி இல்லன்னு அப்படி கத்தின அஜய்? உன்ன விட வசதியான வீட்டுலப் பிறந்தவன் தான் நானும்.
இன்னும் கொஞ்ச நாள்ல சர்ஜனா ப்ராக்டீஸ் பண்ணப் போறேன்… நல்லா சம்பாதிக்கப் போறேன்… என்னால நீணாவ வெச்சுக் காப்பாத்த முடியும்னு நம்பிக்கை வந்ததுக்கு அப்பறம் தான் உங்க வீட்டுல பேசவே செஞ்சோம்.
அன்னைக்கு நீ அப்படி கத்துனது என்னை எவ்வளவு கூனிக் குறுக வெச்சுதுத் தெரியுமா? காதலிச்சது மட்டும் தான் என்னோடத் தப்பா? அதுக்காகவா அப்படிக் கேவலப்பட்டு நிக்க வெச்ச?
அன்னைக்கு மட்டும் உங்கப்பா உன்னை அடக்காம நின்னு வேடிக்கைப் பார்த்திருந்தா எனக்கு எப்படி இருந்திருக்கும்னுக் கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா?”
“அன்னைக்கு எனக்கு உன்னைப் பத்தி எதுவுமேத் தெரியாது ரோஹித். நீணா அப்போ தான் படிச்சு முடிக்கப் போற நேரம்… வீட்டுல எனக்கு போன் பண்ணி அவக்கூடப் படிக்குற பையன விரும்பறான்னு சொன்னதும் எனக்கு முதல்ல பயம் தான் வந்துது.
படிக்குற வயசுல லவ் பண்ணுறேன்னு சொல்லி கல்யாணம் பண்ணி… கடைசியில ரெண்டுப் பேருக்கும் ஒத்து வராம டைவர்ஸ்ல போய் நின்ன என்னோட பிரண்ட்ஸ் நிறையப் பேர நான் பார்த்திருக்கேன்.
என் தங்கச்சி வாழ்க்கையும் அப்படி ஆகிட்டா?? அத என்னாலத் தாங்கிக்கவே முடியாது ரோஹித்.
நீணா உன்னை விரும்பறதா சொன்னதும் அவக்கிட்ட பேசிப் புரிய வைக்கலாம்னு நெனச்சேன். அதுக்காக தான் அவசரமா இந்தியா கிளம்பி வந்தேன்.
ஆனா வீட்டுல உன்னைப் பார்த்ததும் நிலமை கை மீறிப் போயிடுமோங்குற பயத்துல தான் உன்னை அப்படி பேசிட்டேன். ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ரோஹித்” என்று விளக்கம் அளித்தான் அஜய்.
அவனை அமைதியாகப் பார்த்த ரோஹித் “அன்னைக்கு உன் தங்கச்சி படிக்கும்போது லவ் பண்ணான்னா… இன்னைக்கு என் தங்கச்சிய நீ எப்போ அஜய் லவ் பண்ணியிருக்க?
5 வருஷமா லவ் பண்ணவக்கிட்ட பேசி… புரிய வெச்சு… கல்யாணத்த நிறுத்தி… எங்க ரெண்டுப் பேரையும் பிரிக்க உன்னால முடியும்னு நீ நெனச்ச சரி…
என் தங்கச்சி உன்கிட்ட ஒழுங்கா பேசி இருப்பாளா? எத்தனை வருஷமா லவ் பண்ணுறீங்க நீங்க ரெண்டுப் பேரும்? என் கெஸ் கரெக்ட்னா கடைசியா நீங்க என் வீட்டுலப் பார்த்துக்கிட்டப்ப தான் உங்க காதல சொல்லியிருப்பீங்க…
லத்திகா கிட்ட பேசி என்னாலப் புரிய வெச்சிருக்க முடிஞ்சிருக்காதா? உங்களைப் பிரிச்சுருக்க முடிஞ்சுருக்காதா?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்டான்.
அஜய் அதிர்ந்து ரோஹித்தை பார்த்தான். உடனேயே அதிர்ச்சி விலகி அவனைக் கூர்மையாகப் பார்த்து “நான் உன்கிட்ட ஒண்ணு மட்டும் கேட்கணும் ரோஹித்” என்று அவன் கூறியதும் “கேளு” என்றான் ரோஹித்.
“உனக்கு என்னை நீணாவோட அண்ணனா தெரியும். என் குடும்பத்தைப் பத்தித் தெரியும். என்னைப் பத்தித் தெரியும்.
ஒருவேளை நான் யாருன்னேத் தெரியாத மூணாவது மனுஷனா இருந்திருந்தா…” என்றுக் கூறி சிறிது இடைவெளி விட்டவன் “லத்திகா லவ் பண்ணுறேன்னு சொன்னதும் சம்மதிச்சிருப்பியா?” என்றுக் கேட்டான்.
ரோஹித்தால் உடனடியாக “சம்மதம் சொல்லியிருப்பேன்” என்றுக் கூற முடியவில்லை. அவன் சொல்லியிருக்கவும் முடியாது என்பது நிச்சயமாகத் தெரியும். பதில் சொல்ல தடுமாறினான்.
“அண்ணி போதும் அண்ணி… இவங்க தேவயில்லாம பேசி ஒருத்தர ஒருத்தர் காயப்படுத்திக்குறாங்க. என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியல அண்ணி…” என்றுக் கூறி மாடிக்கு செல்ல முயன்ற லத்திகாவை கையைப் பிடித்துத் தடுத்த நீணா “அவங்க பேசட்டும் லத்திகா… இன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சிடட்டும்” என்றாள்.
ரோஹித் சில நொடி அமைதிக்குப் பிறகு “உடனே சொல்லி இருக்கலன்னாலும் ஒழுங்கா விசாரிச்சு அந்த பையனப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டதும் சரின்னு தான் அஜய் சொல்லியிருப்பேன்” என்றான்.
“அத தான் ரோஹித் நானும் சொல்லுறேன்… விசாரிச்சிருந்தா நானும் சரின்னு சொல்லி இருப்பேன். எனக்கு அந்த டைம் எங்க வீட்டுல குடுக்கலையே…
திடீர்னு ஒரு நாள் கால் பண்ணி நீணா லவ் பண்ணுறான்னு சொன்னாங்க. ரெண்டாவது நாளே மறுபடியும் கால் பண்ணி கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறதா சொன்னாங்க.
என் நிலமைய யோசிச்சுப் பாரு ரோஹித்… எனக்கு எவ்வளவு டென்ஷன் இருந்திருக்கும்?
அந்த டென்ஷனோட வீட்டுக்கு வந்தப்போ வீட்டுல உன்னைப் பார்த்ததும் கத்திட்டேன். என்ன தான் இருந்தாலும் உன்னை நான் அப்படி கத்தினது தப்பு தான் ரோஹித். அதை நான் நியாயப்படுத்த மாட்டேன்.
அதுலயும் நீ இப்போ சொல்லுறப்போ தான் அது உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு இன்னும் நல்லா புரியுது. சாரி ரோஹித். ரியல்லி வெரி சாரி. என்னை மன்னிப்பியா?” என்று உருக்கமாகக் கேட்டான் அஜய்.
“உனக்கும் எனக்கும் 2 வயசு தான் அஜய் வித்தியாசம். நீ மட்டும் அன்னைக்கு யோசிக்காம அப்படி கத்தலன்னா இன்னைக்கு நம்ம ரெண்டுப் பேரும் எவ்வளவு க்ளோஸா இருந்திருக்கலாம்? அதுவும் இன்னைக்கு நீ என் தங்கைக்கு மாப்பிள்ளை…
நம்ம அப்படியா இருக்கோம்? ஒருத்தருக்கு ஒருத்தர் உறவுமுறை சொல்லியும் பேசாம… பேர் சொல்லிக் கூட பேசாம… தேவையா இது? ஆனா நீ சொல்லுறப்போ உன் நிலமையும் புரியுது…”
சந்தோஷம் பொங்க “புரிஞ்சுக்கிட்டதுக்கு தாங்க்ஸ் ரோஹித்…” என்றுக் கூறி அஜய் கையை நீட்ட “நீயா வந்து என்கிட்ட பேசுனதுக்கு தாங்க்ஸ் அஜய்” என்றுக் கூறி அவனை அணைத்துக் கொண்டான் ரோஹித்.
“என்ன அண்ணி? அவ்வளவு தானா???” என்று லத்திகா கேட்க “அடியேய்… இதுக்கே எனக்கு உசுருப் போய் உசுரு வந்திருக்கு… அவ்வளவு தானாவாம்… வா அவங்க முன்னாடிப் போய் நிப்போம்” என்றுக் கூறி முன்னே நடந்தாள் நீணா.
அஜய்யின் தோள் வழியாக ரோஹித் தான் முதலில் இவர்களை கவனித்தான். “வருதுங்க ரெண்டும்” என்று அவன் கூறவும் “யாரு?” என்றுப் புரியாமல் கேட்டு அவனை விடுவித்துத் திரும்பிப் பார்த்தான் அஜய்.
“என்ன சமாதானம் ஆகிட்டீங்கப் போல?” என்றுக் கேட்டு ரோஹித்தின் இடையை சுற்றி கைப் போட்டு நின்றுக் கேட்டாள் நீணா.
“தாங்க்ஸ்” என்று லத்திகா கூறவும் அவள் தோளில் கைப் போட்டு புன்னகைத்தான் அஜய்.
லத்திகா வெட்கத்துடன் நெளியவும் “அங்கப் பாருடி… என் தங்கச்சி தான் என் மாப்பிள்ளையைப் பிடிச்சு வெச்சுருக்கா… நீ என்னமோ நான் தோள்ல கைப் போட்டதுக்கே நெளியுற?” என்றான் அஜய்.
“உன் தங்கச்சியக் காமிச்சு என் தங்கச்சியக் கெடுக்காத மச்சான்… அவளாவது நல்ல பொண்ணா இருக்கட்டும். ஏய் விட்றி…” என்றுக் கூறி நீணாவை விளக்க முயன்றான்.
“பேசாம இருக்க மாட்ட? சரி வாங்கக் கீழப் போகலாம்” என்றுக் கூறி அவனை அணைத்தபடியே படிகளில் இறங்கினாள் நீணா.
அன்றிரவு ரோஹித், நீணா, சிவராமன், மஞ்சு இன்னும் சில உறவினர்கள் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டனர்.
எல்லோரும் உறங்கிய சமயம் நீணாவின் புறம் திரும்பிய ரோஹித் “இதுக்கு தான் 5 பெட்ரூம் வில்லா வாங்கலாம்னு சொன்னேன்… கேட்டியா? இப்போப் பாரு இடம் பத்தாம மேல வந்து படுக்க வேண்டியதாப் போச்சு…” என்றுப் புலம்பினான்.
“ஏன்?? ஒரு கல்யாண மண்டபத்த வாங்கி நம்ம ரெண்டுப் பேரு மட்டும் குடி இருக்கலாமே… ஆளப் பாருடா… இன்னைக்கு ஒரு நாள் தான? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என்றாள் நீணா.
பொய்க் கோபத்துடன் நேராகத் திரும்பிப் படுத்தவன் “ம்ம்கும்… உங்கண்ணன் மட்டும் கீழ பர்ஸ்ட் நைட் கொண்டாடுவான்… நான் மட்டும் பக்கத்துலயே பொண்டாட்டிய வெச்சுக்கிட்டு ஸ்டார்ஸ் கவுன்ட் பண்ணிட்டு இருக்கணுமா?” என்றான்.
“டேய்…… அவனுக்கு இன்னைக்கு தான்டா கல்யாணம் ஆச்சு…” என்றுக் கூறி நீணா சிரிக்கவும் போர்வையை முகத்தில் போட்டு மூடி உறங்க ஆரம்பித்தான் ரோஹித்.
14
காலை பத்து மணி வாக்கில் மணமக்களுடன் விருந்தினர்கள் அனைவரும் கோயம்பத்தூருக்கு கிளம்பி செல்ல புயலடித்து ஓய்ந்தது போல் இருந்த வீட்டை ரோஹித்தும் நீணாவுமாக சேர்ந்து ஒழுங்குப்படுத்தினர்.
கல்யாணத்திற்காக அதிக நாள் விடுப்பு எடுத்ததால் அன்றும் விடுப்பு எடுக்க முடியாதென்று மதியத்திற்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாயிற்று.
அங்கு சென்றப் பிறகு இருவருக்கும் வேறு எதையும் யோசிக்க நேரம் இல்லாமல் போனது. இரவு புறப்படும் சமயம் ரோஹித் நீணாவை அழைக்க அவள் அறைக்கு வந்தான்.
அவர்கள் இருவரையும் கண்ட லக்ஷ்மி “நீணா உன் அண்ணனுக்கு கல்யாணமா? உனக்கு கல்யாணமா? உங்க ரெண்டுப் பேரையும் பார்த்தா தான் புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி இருக்கீங்க…” என்றுக் கூறி சிரித்து விட்டுச் சென்றார்.
தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்த ரோஹித்தின் புறம் திரும்பிய நீணா “வாட்?” என்றுக் கேட்கவும் உதட்டைக் கடித்து தலையை இடமிருந்து வலமாக ஆட்டி முன்னே நடக்க ஆரம்பித்தான் ரோஹித்.
அவனின் இந்த செய்கை வித்தியாசமாகப்பட வேறெதுவும் கேட்காமல் அமைதியாக அவனுடன் நடந்தாள்.
வீட்டிற்குள் வந்ததும் முதல் வேலையாக இருவரும் குளிக்கச் சென்றனர். இரவு உணவைத் தயார் செய்தபோதும் ஒன்றும் பேசாமல் அவ்வபோது தன்னைப் பார்த்துக் கொண்டே நிற்கும் ரோஹித்தின் பார்வை நீணாவிற்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
சாப்பிட்டு எழும் வரை தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள். அவள் சமையலறை விளக்கை அணைத்து விட்டு வெளியே வந்தபோது ரோஹித் அவர்கள் அறை வாசலில் கை கட்டி நின்று அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அடி மேல் அடியெடுத்து வைத்து அவனருகில் மெல்ல நடந்து வந்தவள் “அஜய்கிட்ட பேசுனதுக்கு தாங்க்ஸ் ரோஹித்” என்று மெல்லியக் குரலில் கூறினாள்.
“இதுக்கு தான் ஸ்லோ……… மோஷன்ல நடந்து வந்தியா?” என்று அவன் கேட்டதைக் கண்டுக் கொள்ளாமல் “அவன் செஞ்சது எல்லாத்தையும் மறந்துட்டு நீ அவன்கிட்ட பேசுவேன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்ல…” என்று உருக்கமாகக் கூறினாள்.
“மணி என்னன்னுப் பார்த்தியா? இப்போ இந்த ஸ்பீச் தேவையா?” என்று ரோஹித் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்கவும் “யூ ஆர் ரியல்லி கிரேட் ரோஹித்…” என்றாள் நீணா.
“ஏன்டி படுக்கப் போற நேரத்துல பெட்ரூம் வாசல்ல நிக்க வெச்சு பேசியே உயிர வாங்குற?”
“வீட்டுக்குள்ள வந்ததும் பேச வேண்டாமேன்னு… ரிலக்ஸ்டா இப்போ பேசுறேன்…”
“வீட்டுக்குள்ள வந்ததும் பேச வேண்டாம் நீணா. அதுக்காக இவ்வளவு நேரம் இருந்துதுல்ல… இப்படி தூங்கப் போகும்போது தான் இதெல்லாம் பேசணுமா?” என்று கோபத்தை அடக்கியக் குரலில் கேட்டான் ரோஹித்.
“இல்ல… இத்தன நாள் பிரச்சனைய நீ அஜய்கூட பேசி…” என்ற நீணா அவன் முகத்தில் தெரிந்த மாறுதலால் பேச்சை பாதியில் நிறுத்தினாள்.
“இப்போ நீயா உள்ள வந்தீன்னா சேதாரம் கம்மியாகும்… நான் தூக்கிட்டுப் போனேன்னு வை…” என்றுக் கூற வந்ததை முடிக்காமல் பாதியில் நிறுத்தி அவள் முகம் பார்த்தான் ரோஹித்.
“நம்ம இத அப்ப்ப்ப்பறமா பேசலாமா?” என்றுக் கேட்டு அவன் பதிலுக்காகக் காத்திராமல் வேகமாக அறைக்குள் ஓடினாள் நீணா.
“மனுஷன எப்படியெல்லாம் சோதிக்குறதுன்னு ஒரு அளவு வேணாம்…” என்றபடி அறைக்குள் வந்தவன் அவள் தன்னைக் காக்க வைத்ததற்கு தண்டனையும் கொடுத்தான். ஆனால் அதை அவள் விரும்பியே ஏற்றுக் கொண்டாள்.
ஒரு வாரம் உருண்டோடிய நிலையில் காலை ரோஹித்தின் கைபேசிக்கு அழைத்தான் அஜய்.
“சொல்லு அஜய்”
“நாங்க நாளைக்கு அங்க வந்துடுவோம் ரோஹித். நாளன்னைக்கு பிளைட். ஞாபகப்படுத்த தான் கூப்பிட்டேன்…”
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு அஜய். லத்திகா இப்போவே அழ ஆரம்பிச்சுருப்பாளே…” என்றுக் கூறி சிரித்தான் ரோஹித்.
“சிரிப்பா இருக்கா உனக்கு? ஏன்டா… நான் என்ன உன் தங்கச்சிய கடத்திட்டாப் போகப் போறேன்? இவ எதுக்குடா இப்படி ஒப்பாரி வெக்குறா?? இவ அழறதப் பார்த்தா பேசாம இவள இங்கயே விட்டுட்டுப் போயிடலாமான்னுக் கூடத் தோணுது…”
அஜய்யின் அருகில் நின்றிருந்த லத்திகா அவன் கையிலிருந்து மொபைலை பிடுங்கி “அதெல்லாம் நான் ஒண்ணும் அழல அண்ணா… நானும் அவங்கக் கூடயேப் போறேன்…” என்று மூக்கை உறிஞ்சியபடியேக் கூறினாள்.
“அத சிரிச்சுட்டே சந்தோஷமா சொல்லு… இல்லன்னா அவன் உன்னை இங்கயே விட்டுட்டுப் போயிடுவான் பார்த்துக்கோ…” என்று மிரட்டலாகக் கூறினான் ரோஹித்.
“ம்ம்கும்… நீங்களே ஐடியா குடுப்பீங்கப் போல…” என்று லத்திகா நொடித்துக் கொள்ள “அதானே… என் நாத்தனார யாருப்பா அதுக் கஷ்டப்படுத்துறது?” என்றுக் கேட்டு மொபைலை ரோஹித்திடமிருந்து வாங்கினாள் நீணா.
“அஜய் நீ வா… நம்ம வேற போன்ல தனியா பேசலாம்… இங்க ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கு…” என்று ரோஹித் கத்தவும் “ஆமாடா… ஒரே இம்சைங்களா இருக்கு மச்சான்… நான் நீணா மொபைல்ல கூப்பிடுறேன் இரு…” என்று பதிலுக்கு கத்தினான் அஜய்.
“ரெண்டுப் பேரும் எங்க காத செவிடாக்காம அப்படித் தள்ளிப் போய் என்ன பேசணுமோ பேசித் தொலைங்க…” என்று நீணா எரிச்சலாகக் கூற “ஆமா அண்ணி… என் காதும் போச்சு…” என்று அவளுக்கு ஒத்து ஊதினாள் லத்திகா.
“நேரம் தான்டி…” என்ற அஜய் லத்திகாவின் மொபைலை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். நீணாவின் மொபைலிலிருந்து அவனுக்கு அழைத்தான் ரோஹித்.
“சொல்லு அஜய் என்ன விஷயம்?”
ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்த அஜய் “நெஜமாவே எனக்குக் கஷ்டமா இருக்குடா… லத்திகா நேத்துலேருந்து அழுதுட்டு இருக்கா…
என்னால இங்க இருக்க முடியாது ரோஹித். அட்லீஸ்ட் இங்க வேற வேலை தேடுற வரைக்கும். அதுக்கு இன்னும் எத்தனை நாள் ஆகும்னுத் தெரியாது.
அது வரைக்கும் என்னால அவள இங்க விட்டுட்டுப் போக முடியாது. அவ இல்லாம என்னால அங்கத் தனியா இருக்க முடியாது மச்சான்…” என்றுப் புலம்ப ஆரம்பித்தான்.
“இப்போ எதுக்குடா அவள இங்க விட்டுட்டுப் போறேன்னு சொல்லி நீயா கெளப்பி விடுற? அவ அப்படி எதுவும் சொன்னாளா? இல்லல்ல… அவ உன்கூட வருவா. நீ தனியா எல்லாம் போக மாட்ட.
பொண்ணுங்கன்னா அப்படி தான்டா… அதெல்லாம் நீ அங்கக் கூட்டிட்டுப் போய் பாரு… எங்களயெல்லாம் யாருன்னுக் கேப்பா… இதுக்குப் போய் நீ இவ்வளவு பீல் பண்ணுறியா?
போடா… போய் அவ கூடயே இரு. அவ கூட நிறைய பேசு. உன்கூட அங்க வந்தா அவ பாதுகாப்பா இருப்பான்னுப் புரிய வை. அடிக்கடி இங்க வரலாம்னு சொல்லி சமாதானம் பண்ணு.
இதெல்லாம் விட்டுட்டு என்கிட்ட பொலம்பி என்ன ஆகப் போகுது?” என்று பொறுமையாக எடுத்துக் கூறினான் ரோஹித்.
“என் நேரம்டா… உன்கிட்டல்லாம் பேச்சு வாங்கணும்னு இருக்கு…” தலையில் அடித்துக் கொண்டான் அஜய்.
“அப்பறம்? பொண்ணோட அண்ணனா… பொறுப்பா… நான் அவளுக்கு எடுத்து சொல்லுவேன்னுப் பார்த்தியாக்கும்…
அந்த கதையெல்லாம் இங்க நடக்காதுடி… நீ தான லவ் பண்ண? நீ தான கட்டிக்கிட்ட? இனி அவ உங்க வீட்டு பொண்ணு பா… எதுனாலும் நீதான் பேசித் தீத்துக்கணும்…”
“நல்லா கழண்டுக்கறடா…” என்று நக்கலாகக் கூறி சிரித்தான் அஜய்.
“பின்ன… இவங்க எல்லாம் எப்போ அழ ஆரம்பிப்பாங்கன்னேத் தெரியாது… அந்த வாட்டர் பால்ஸ் எல்லாம் நம்மளால க்ளோஸ் பண்ண முடியாது சாமி… ஏன்… இப்போ உன் தங்கைய சமாதானம் பண்ண சொன்னா நீ பண்ணுவியா மச்சான்?” என்று ரோஹித் கேட்டதும் “அய்யய்யோ அவளயா?” என்று அலறினான் அஜய்.
“தெரியுதுல்ல… அவனவன் சுமைய அவனவன் தான் ராசா சொமக்கணும்…”
அஜய் பெருமூச்சு விடவும் பேச்சை மாற்றும் விதமாக “எல்லாம் பேக் பண்ணியாச்சா?” என்றுக் கேட்டான் ரோஹித்.
“அய்யய்ய… நாங்களே பேசி முடிச்சுட்டோம். நீங்க இன்னுமா முடிக்கல? ஓவரா தான் போறீங்க ரெண்டுப் பேரும். டேய் அண்ணா… எங்களுக்கு ஹாஸ்பிட்டல்கு டைம் ஆச்சு… மீதிய நைட் பேசிக்கோங்க…” என்றுக் கத்தி ரோஹித்தின் கையில் இருந்த மொபைலை வாங்கி காலை கட் செய்தாள் நீணா.
அவள் செய்கையில் எரிச்சலடைந்த ரோஹித் “ஏய் அறிவிருக்காடி? அவனே இப்போ தான் ஏதோ கொஞ்சம் நல்லா பேச ஆரம்பிச்சிருக்கான்… திஸ் இஸ் டூ மச் நீணா…” என்றுக் கத்தினான்.
“டைம் ஆச்சு… வா சீக்கிரம்… இதெல்லாம் ஈவ்னிங் பேசிக்கலாம்…” என்றுக் கூறி கைபையை எடுத்துக் கொண்டு கதவருகில் சென்றாள் நீணா.
ரோஹித் கார் சாவியை கையில் எடுத்து அவளை கண்டுக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே சென்றான்.
“கோவமாக்கும்?? இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்ல…” என்று நினைத்து வீட்டைப் பூட்டி பார்கிங் நோக்கி நடந்தாள் நீணா.
அவள் காரில் அமர்ந்த நேரம் அவன் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
ரோஹித் “ம்ம் சரிடா… இன்னும் 20 நிமிஷத்துல அங்க இருப்போம்…” என்றுக் கூறி வைக்கவும் “யாரு?” என்றுக் கேட்டாள் நீணா.
அவளைத் திரும்பிப் பார்த்தவன் ஒரு அலட்சிய பாவத்துடன் காரை கிளப்பினான்.
“கேக்குறேன்ல யாருடா போன்ல?”
ரோஹித் காது கேளாதது போல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
கையை நீட்டி அவன் சட்டையை இரண்டு விரலால் இழுத்தபடி “யாரு போன்ல? யாரு போன்ல?” என்றாள் நீணா.
“மண்டைக்குள்ள வண்டு கொடயுற மாதிரி இருக்கு… ஒரு பத்து நிமிஷம் வாய மூடுறியா நீ? எப்போப் பாரு தொனத்தொனன்னு… உயிர வாங்காதடி…”
அவன் கத்த ஆரம்பித்தபோது அவனை வெறித்துப் பார்த்த நீணா அவன் கத்தி முடித்ததும் நேராக அமர்ந்து சாலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
ரோஹித் ஹர்ஷாவின் வீட்டின் முன் காரை நிறுத்தியதும் நீணாவிற்கு புரிந்தது… அவன் ஹர்ஷாவோடு தான் பேசினான் என்று.
இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க ஹர்ஷாவும் மோனிகாவும் வந்து பின் இருக்கையில் அமர்ந்தனர்.
“குட் மார்னிங்” என்றுக் கூறி புன்னகைத்தான் ஹர்ஷா.
ரோஹித் காரை எடுத்ததும் “என்ன மோனி… அமைதியா இருக்க?” என்றுத் திரும்பி அமர்ந்து அவளிடம் கேட்டாள் நீணா.
மோனிகா எதுவும் கூறாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள். நீணா கேள்வியாக ஹர்ஷாவை பார்த்தாள். ரோஹித்தும் கண்ணாடி வழியே அவனை தான் பார்த்தான்.
“நேத்து நைட் டின்னருக்கு வெளியிலப் போகலாம்னு சொல்லி இருந்தேன். ஆனா ஈவ்னிங் கார் கொஞ்சம் மக்கர் பண்ணுச்சுன்னு சர்விஸ் பண்ணக் குடுக்க வேண்டியதாப் போச்சு.
சரி லேட் ஆனாலும் பரவாயில்ல டாக்ஸில போகலாம்னு சொன்னா இவ கேக்கல… நேத்துலேருந்து இப்படி தான் பேசாம இருக்கா…” என்று இருவருக்கும் விளக்கினான் ஹர்ஷா.
முந்தைய தினம் இரவு போட்ட சண்டையை இன்று தங்களிடம் இவ்வாறு விளக்கிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவர்கள் வந்து காரில் ஏறும் நொடிவரை தாங்கள் போட்ட சண்டையை சிறிதும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருக்கிறோமே என்று யோசித்த நீணாவும் ரோஹித்தும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
ஏனோ இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. ரோஹித் வாய் விட்டே சிரிக்கவும் நீணாவும் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தாள். ஹர்ஷா இருவரையும் குழப்பமாகப் பார்க்க மோனிகா அவனை பார்த்தாள்.
பொறுக்கமுடியாமல் “என்னாச்சு உங்க ரெண்டுப் பேருக்கும்?” என்றுக் கேட்டேவிட்டாள் மோனிகா.
“ஒண்ணுமில்ல…” என்றுக் கூறி சிரிப்பை அடக்க முயன்று முடியாமல் மீண்டும் சிரித்தாள் நீணா.
“பாரு… உன்னால தான் நம்மள கிண்டல் பண்ணுறாங்க… எதுக்கு சண்டப் போடுற?” என்று பொய் கோபத்துடன் ஹர்ஷா கேட்க “நான் ஒண்ணும் சண்டப் போடல… நீ என் செல்லம்…” என்றுக் கூறி அவன் கையை அணைத்து நெருங்கி அமர்ந்தாள் மோனிகா.
ரோஹித்தும் நீணாவும் சிரிப்பைக் கட்டுப்படுத்தி கண்ணாடி வழியே அவர்களைப் பார்த்தனர். ஹர்ஷா அவன் தோளில் சாய்ந்திருந்த மோனிகாவின் தலை மீதுத் தன் தலையை வைத்து அமர்ந்திருந்தான். அவர்களைப் பார்த்து நெகிழ்ந்த ரோஹித் திரும்பி நீணாவை பார்த்தான்
நீணா ஒரு முறை பின்னால் திரும்பிப் பார்த்தாள். ஹர்ஷாவும் மோனிகாவும் தங்கள் உலகத்தில் இருப்பதை உறுதி செய்துக் கொண்டு ரோஹித்தைப் பார்த்து உதடு குவித்து சத்தமில்லாமல் ஒரு முத்தத்தைக் காற்றில் பறக்க விட்டாள். ரோஹித் புன்னகையுடன் காரை மருத்துவமனை வளாகத்தினுள் செலுத்தினான்.
“இப்படியே ஓரமா நிறுத்து ரோஹித். நாங்க ப்ரேக்பாஸ்ட் சாப்பிடல… காண்டீன் போயிட்டு வரோம்” என்று ஹர்ஷா கூற ரோஹித்தும் காரை நிறுத்தினான். ஹர்ஷா முதலில் இறங்கி மோனிகா இறங்க உதவினான்.
பார்க்கிங் வந்து காரை நிறுத்திய ரோஹித் இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தான். தன் பக்க கதவைத் திறக்க முயன்ற நீணாவிற்கு அதை அவன் சென்ட்ரல் லாக் மூலம் பூட்டி வைத்திருப்பதுத் தெரிந்தது.
“கதவத் திற ரோஹித்…” என்று அவள் கூற சுற்றி ஒரு முறைப் பார்த்தவன் சட்டென்று நீணாவின் புறம் திரும்பி அமர்ந்து அவள் கழுத்தின் பின்னால் கைக் கொடுத்து அவள் முகத்தில் அருகிலிழுத்து அவள் இதழில் முத்தமிட்டான்.
இதை சற்றும் எதிர்ப்பாராத நீணா முதலில் தடுமாறி பின் அவளும் அவனுக்கு இசைந்துக் கொடுத்தாள். சில வினாடிகள் தொடர்ந்த அவர்களது முத்தத்தை ரோஹித்தே முடித்து வைத்தான்.
அவன் விலகி அமர்ந்ததும் “எதுக்கு இது?” என்றுக் கேட்டாள் நீணா.
“இதுவா??? காலையில போட்ட சண்டைக்கு…” என்றுக் கூறி சிரித்தான் ரோஹித்.
அவள் அவனை அடிக்க கை ஓங்கவும் கதவைத் திறந்து வெளியே இறங்கினான். நீணா அவனை முறைத்துக் கொண்டேத் தன் பக்கக் கதவைத் திறந்து காரிலிருந்து இறங்கினாள்.
“அறிவிருக்கா உனக்கு?”
“இருந்தா உன்னை ஏன்டி லவ் பண்ணப் போறேன்? சீக்கிரம் வந்து சேரு…” என்றுக் கூறி முன்னே நடந்தான் ரோஹித்.
“காலையில அந்த திட்டு திட்டுன… இப்போ மட்டும் இப்படி இழுத்துப் பிடிச்சு கிஸ் அடிக்குற?” என்றுக் கேட்டுக் கொண்டே அவனுடன் நடந்தாள் நீணா.
“என் பொண்டாட்டி நான் கிஸ் பண்ணுவேன்… அதுக்கெல்லாம் நான் யாருக்கிட்டயும் கேட்கத் தேவையில்ல… போ… போய் வேலையப் பாரு… முடிஞ்சா லஞ்ச் சேர்ந்து சாப்பிடலாம்…” என்றுக் கூறித் தன் கேபின் இருக்கும் பகுதியை நோக்கி நடந்தான் ரோஹித்.
“கொஞ்சமாவது மதிக்குறானா? அவன் பாட்டுக்கு திட்டுறான்… அவன் பாட்டுக்கு கிஸ் பண்ணுறான்…” என்று யோசித்தவள் புன்னகையுடன் மேரிக்கு காலை வணக்கம் கூறினாள்.
நீணா சில குழந்தைகளைப் பார்த்து முடித்து அடுத்து வேறு அப்பாயின்ட்மென்ட் இல்லாததால் வெளியில் சென்று சிறிது நேரம் நடந்து விட்டு அப்படியே அங்கு சிகிச்சைக்காக குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரிவிற்கு சென்றுப் பார்த்து வரலாம் என்றுக் கிளம்பினாள்.
முதலில் பான்ட்ரிக்கு சென்று தேநீர் அருந்தியவள் காரிடாரில் நடக்க ஆரம்பித்தாள். அவள் சிறிது தூரம் சென்றதும் அவளை நோக்கிப் பதட்டத்துடன் ஓடி வந்தாள் ஷிவானி.
கோட் பாக்கெட்டில் விட்டிருந்தத் தன் கைகளை எடுத்து ஷிவானியின் கையைப் பிடித்து “என்னாச்சு ஷிவானி?” என்றுக் கேட்டாள் நீணா.
“நீணா… உன்ன பார்க்க தான் வந்தேன்… அங்க… ஒரு… என் கூட வாயேன்… ப்ளீஸ்…” என்றுக் கூறி அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் அவள் கையைப் பிடித்து இழுத்து சென்றாள் ஷிவானி.
ஏதோ அவசரம் என்பது மட்டும் புரிய அவளுடன் விரைந்தாள் நீணா. ஷிவானியின் கேபினுள் நுழைந்தபோது அங்கே இருந்த பெட்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி வலிப்பு வந்து வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்ததும் ஷிவானியின் கையை உதறிய நீணா பெட்டை சுற்றி நின்றிருந்தவர்களை விளக்கி அந்த சிறுமியின் அருகில் சென்றாள்.
“சுத்தி எல்லாரும் நிக்காதீங்க… நர்ஸ் பேஷண்டோட பாரென்ட்ஸ் முதல்ல வெளியில அனுப்புங்க…” என்று வருசையாகக் கட்டளை இட்டவள் அந்த குழந்தையின் நிலையை ஆராயத் துவங்கினாள்.
அருகில் நின்ற ஷிவானி “ஒரு இன்ஜெக்ஷன் போட்டேன் நீணா… போட்டதும் இப்படி…” என்றுக் கூறி மருந்தின் மொத்த விவரத்தையும் கூற ஆரம்பித்தாள்.
அந்த சிறுமியை பரிசோதித்துக் கொண்டே அவள் கூறுபவற்றை காதில் வாங்கியவள் அதற்கு மாற்று மருந்து என்ன தர வேண்டும் என்று யோசித்து அதை நர்ஸிடம் எடுத்து வரக் கூறினாள் நீணா.
அரை மணி நேர போராட்டத்திற்குப் பின் அந்த சிறுமி அமைதியாகத் தூங்க ஆரம்பித்தாள். பெருமூச்சொன்றை வெளியேற்றி வேகமாக அறையை விட்டு வெளியில் வந்த நீணா அவளின் பெற்றோரை உள்ளே அழைத்து வருமாறுக் கூறினாள்.
அவர்கள் பதட்டத்துடன் வந்ததும் முதலில் குழந்தையை கைக் காண்பித்தாள். அப்போது தான் அவர்களுக்கு நிம்மதி ஆனது.
ஒரு மருந்தின் பெயரை சொல்லி “இது உங்க பொண்ணுக்கு அலர்ஜி ஆகுமா?” என்றுக் கேட்டாள் நீணா.
“ஆமா டாக்டர்… முன்னா…” என்று அவள் தாய் கூற ஆரம்பிக்கவும் “கொஞ்சமாவது அறிவிருக்காங்க? இப்போ வந்து ஆமான்னு சொல்லுறீங்க?
அவ சின்னக் கொழந்த… அவளுக்கு இதெல்லாம் சொல்லத் தெரியுமா? பாரென்ட்ஸ் நீங்க தான் இதெல்லாம் டாக்டர்கிட்ட சொல்லணும்.
மெடிஸின் ப்ரிஸ்க்ரைப் பண்ணுறதுக்கு முன்னாடி இன்ஜெக்ஷன் போடுறதுக்கு முன்னாடி அலர்ஜி ஏதாவது இருக்கான்னு கேட்குறோமா இல்லையா?
ஒரு வேலை ரெகுலரா எங்கக்கிட்டயே கொழந்தைய காமிச்சா கேஸ் ஷீட்லயே அவங்க ஹிஸ்டரி பார்த்துத் தெரிஞ்சுப்போம். இல்லன்னா நீங்க சொல்லாம எங்களுக்கு எப்படிம்மாத் தெரியும்? குழந்தை உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்திருந்தா என்னப் பண்ணுவீங்க?” என்றுப் பொரிந்துத் தள்ளினாள் நீணா.
15
நீணா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் அந்த சிறுமியின் பெற்றோர் தலை குனியவும் அவளுக்கு இன்னும் எரிச்சல் அதிகமானது.
“கொழந்தைங்கறது ஒரு வரம். எத்தன பேரு கொழந்தையே இல்லாம ட்ரீட்மென்ட்கு இங்க வராங்கன்னுத் தெரியுமா? நீங்க என்னடான்னா இவ்வளவு அலட்சியமா இருக்கீங்க…
இதே இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆகி இருந்தா… இனிமேலாவது எல்லாத்தையும் ஞாபகம் வெச்சு பழகுங்க…” என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி விட்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அவளுடனே வந்த ஷிவானி “தாங்க்ஸ் நீணா. நீ செஞ்சது எல்லாம் கரெக்ட். இந்த ப்ரொஸீஜர் எனக்கும் தெரியும். ஆனா ஏனோ அந்த நேரம் நீ என் பக்கத்துல இருக்கணும்னுத் தோணுச்சு. அதான் உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டியதாப் போச்சு. தாங்க்ஸ் அகைன்” என்றாள்.
“ஐ கேன் அண்டர்ஸ்டான்ட் ஷிவானி. பார்த்துக்கோ. நான் வரேன்” என்று புன்னகையுடன் கூறினாள் நீணா.
மன உளைச்சல் அதிகமாக இருக்க உடனே ரோஹித்தை காண வேண்டும் போல் இருந்தது. தன் கேபினிற்கு செல்லாமல் அவன் கேபின் இருக்கும் பகுதி நோக்கி சென்றாள்.
வெளியே ரிசப்ஷனில் கேட்டபோது ரோஹித் அன்றைய (பர்ஸ்ட் ஹாபின்) காலை நேரத்தின் கடைசி பேஷண்டை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அது முடிந்தால் அவன் ரவுண்ட்ஸ் செல்வான் என்றும் கூறினார்கள். அவனுக்காகக் காத்திருக்க முடிவு செய்து அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் நீணா.
இருபது நிமிடம் கழித்து வெளியே வந்தவன் அவளை அங்குப் பார்த்ததும் விழி விரித்தான். அவள் முகம் எதுவோ சரி இல்லை என்று உணர்த்த “கம்…” என்று மட்டும் கூறி நடக்க ஆரம்பித்தான்.
I.C.U. அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்ததும் நடப்பதை நிறுத்தி “என்னடா?” என்றுக் கேட்டு நீணாவின் காதோர முடியை ஒதுக்கி விட்டான் ரோஹித்.
நீணா தன் எதிரில் நின்றவனது தோள் மீது தலையை மட்டும் சாய்த்து அமைதியாக நின்றாள். முழுதாக இரண்டு நிமிடம் கரைந்ததும் நிமிர்ந்தவள் “ஈவ்னிங் பார்க்கலாம்…” என்றுக் கூறி சென்றாள்.
அவளுக்குத் தேவைப்பட்டது அவளின் மனபாரத்தை குறைக்க அந்த இரண்டு நிமிடமும்… அவளின் சுமையை இறக்கி வைக்க தன் தோளும்… ரோஹித் இதை எண்ணி புன்னகையுடன் I.C.U.வினுள் நுழைந்தான்.
மதிய உணவு இடைவேளையின் போது நீணா தனக்கு செய்த உதவிக் குறித்து மோனிகாவிடம் கூறினாள் ஷிவானி.
“அவ யாரு…” என்றுக் கேட்டு சிரித்தாள் மோனிகா.
“யாரோ காலையில மூஞ்சியத் தூக்கி வெச்சுட்டு இருந்தாங்க… இப்போ சிரிக்குறாங்க பா…” என்று ஷிவானியிடம் ஜாடையாகக் கூறினாள் நீணா.
ஷிவானி புரியாமல் பார்க்கவும் “நேத்து நைட் என்னை டின்னர்கு வெளிலக் கூட்டிட்டுப் போகலன்னு ஹர்ஷா கூட சண்டப் போட்டேன். காலையில அத இவக்கிட்ட சொன்னதுக்கு இப்போ ஓட்டுறா… போடி வேலையப் பார்த்துட்டு… நீயும் ரோஹித்தும் ஒரு நாள் எங்கக்கிட்ட பஞ்சாயத்துக்கு வந்து நிப்பீங்க வேணாப் பாரு… ஹ்ம்ம்…” என்றாள் மோனிகா.
ஷிவானி சிரிக்க ஆரம்பித்தாள். “உனக்கு சிரிப்பா இருக்கா? இருடி… சீக்கிரம் உன்னையும் எவன் தலையிலயாவது கட்டி வெச்சு உன்னையும் எங்க சங்கத்துல சேர்த்து ஓட்டுறோம்…” என்றாள் நீணா.
கையை தலைக்கு மேலே தூக்கி கும்பிட்ட ஷிவானி “ஐயோ… வேணாம்பா… இன்னும் கொஞ்ச நாளாவது நான் நிம்மதியா இருக்கேன்…” என்று சிரிப்பினூடேக் கூறினாள்.
அப்போதும் விடாமல் மோனிகாவும் நீணாவும் ஷிவானிக்கு மாப்பிள்ளைப் பார்ப்பதைக் குறித்து பேசியே அவளை சிவக்க வைத்தனர்.
ரோஹித் ஒரு பேஷண்ட்டின் ரிப்போர்ட்டை வாங்கி அதை ஆராய்ந்துபடி நடந்துக் கொண்டிருந்தான்.
“ரோஹித்…” என்று அழைத்து அவன் அருகில் வந்தார் வெங்கட்.
“சொல்லுங்க வெங்கட்…”
“இந்த ஃப்ரைடே நம்ம ஹாஸ்பிட்டலோட 15th ஆனிவர்சரி வருது. இந்த வாட்டி எல்லாருக்கும் ‘டே ஆப் (day off)’ வேணும்னுக் கேட்டிருக்கேன். தீம் பார்க் போகலாம் ரோஹித். எல்லாருக்கும் மெயில் பண்ணுறேன் இன்னைக்கு ஈவ்னிங்குள்ள…
பட் போன தடவ ரெண்டுப் பேரு மெயில் பார்க்காம விட்டதால வர முடியாமப் போயிடுச்சு. அதான் நேருல எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கேன்”
ஹர்ஷாவும் அங்கு வரவே “டோன்ட் வர்ரி ஹர்ஷா… மோனிகாவுக்கு ஸ்ட்ரைன் ஆகாத மாதிரிப் பார்த்துக்கலாம். அவங்களுக்கு ஓகே னா கூட்டிட்டு வாங்க” என்று அவனிடமும் கூறினார் வெங்கட்.
அவர் நகர்ந்து சென்றதும் “கெட் டூகெதர், அவுட்டிங்னாலே இந்தாளு தான்டா கரெக்ட்…. மனுஷன் எப்படி தீயா வேலை செய்யுறாருப் பாரு…” என்றுக் கூறி சிரித்தான் ஹர்ஷா.
“அவரும் இல்லன்னா நம்ம நெலமைய யோசிச்சுப் பாரு… மெக்கானிக்கல் லைப் ஆகிடும் ஹர்ஷா…” என்றுக் கூறிய ரோஹித் கையிலிருந்த ரிப்போர்ட் குறித்து அவனிடம் பேசத் துவங்கினான்.
அன்று இரவு சமைத்துக் கொண்டிருக்கும்போது வெங்கட் கூறியதை நீணாவிடம் கூறினான் ரோஹித்.
“இந்த மாதிரி ஐடியா எல்லாம் அவருக்கு மட்டும் தான் வரும்…”
“ஆமாமா…” என்றுக் கூறி பின்னாலிருந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“நான் சமைக்கவா வேணாமா?”
“நீ உன் வேலையப் பாரு நீணா…” தன் பிடியை இன்னும் இறுக்கினான் ரோஹித்.
“விடுடா… இப்படி நின்னா எப்படி சமைக்குறது?” அவன் பிடியைத் தளர்த்த முயன்றாள்.
“நீ ஓவரா பண்ணன்னா சமைக்கவே வேண்டாம்னு குண்டுக்கட்டாத் தூக்கிட்டுப் போயிடுவேன்… ஒழுங்கா வேலையப் பாரு… நாளைக்கு காலையில அஜய் லத்திகாவ வழியனுப்ப ரெண்டுப் பேரு வீட்டுல இருந்து எல்லாரும் வந்துடுவாங்க. அப்பறம் நான் நெனைச்சாலும் இப்படியெல்லாம் நிக்க முடியுமா? ரெண்டு நாள் தள்ளி இருந்து தான வேடிக்கப் பார்க்கணும். அதுக்கு தான் இப்போ இப்படி…”
“அது எப்படிடா எல்லாத்துக்கும் ஒரு காரணம் வெச்சிருக்க?”
“நீ ஏன்டி இதெல்லாம் மைன்ட் பண்ற?”
“நீ என்னைய தான பிடிச்சிருக்க? அப்பறம் எப்படி மைன்ட் பண்ணாம இருக்குறது?” இப்படியே வாக்குவாதம் செய்து சாப்பிட்டு முடித்து அவர்கள் உறங்குவதற்கு அன்றும் நள்ளிரவைத் தாண்டியது.
காலை இரு வீட்டாரும் வந்திறங்கியதும் வீடு நிரம்பி வழிந்தது. அன்று ரோஹித்தால் விடுப்பு எடுக்க முடியாததால் அவன் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றான். நீணா லத்திகாவுடனே இருந்தாள்.
காலை உணவு வேலைகள் எல்லாம் முடிந்ததும் லேசான விசும்பலுடன் தன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த லத்திகாவை இழுத்துக் கொண்டு வீட்டின் பின்னால் சென்றாள் நீணா.
ஏற்கனவே அங்கு அஜய் நின்றுக் கொண்டிருந்தான். அவன் அங்கு இருப்பதும் நல்லது தான் என்று எண்ணியவள் லத்திகாவை அவன் அருகில் நிறுத்தி “என்னடி பிரச்சன உனக்கு? எதுக்கு இப்படி கண்ணக் கசக்கிட்டேத் திரியுற? இவன் ஏதாவது கொடுமப் படுத்துறானா? சொல்லு… மண்டைய ஓடச்சுடுவோம்…” என்றாள்.
லேசான சிரிப்புடன் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் லத்திகா. “அடிப்பாவி… சீக்கிரம் வாயத் தொறந்து சொல்லுடி… இல்லன்னா இவ நெஜமாவே மண்டைய உடச்சாலும் உடைப்பா…” என்று அலறினான் அஜய்.
அதை பார்த்து இன்னும் பெரிதாக சிரித்த லத்திகா அவன் நெஞ்சிலேயே வாகாக சாய்ந்துக் கொண்டாள்.
“அடங்கப்பா… இத பார்க்கவா உன்னை இங்கக் கூட்டிட்டு வந்தேன்? ரோஹித் பக்கத்துல இருந்தாலாவது பதிலுக்கு ஏதாவது செஞ்சு வெறுப்பேத்தலாம்… ஏய் லத்திகா… ஒழுங்கா சொல்லப் போறியா இல்லையா?”
“எனக்கு உங்கள எல்லாம் விட்டுட்டுப் போகணும்னு நெனைச்சா கஷ்டமா இருக்கு…”
“டேய் அண்ணா… போடுடா மொத்த குடும்பத்துக்கும் டிக்கெட்ட…” என்று நீணா கத்தவும் “எதுக்கு? என்னை மொட்ட அடிக்கணும்னு ப்ளானா? ஹே அம்மா தாயே லத்திகா… உனக்கு என் கூட வரதுக்கு கஷ்டமா இருந்தா இங்கயே இரு…” என்றான் அஜய்.
“ச்ச… உன் செலவுல அமெரிக்காவ சுத்திப் பாக்கலாம்னு நெனைச்சா நடக்காதுப் போலயே…” என்று அலுத்துக் கொண்ட நீணா “சரி அப்போ நீ இங்கயே எங்கக் கூட இருந்திடு லத்திகா…” என்று அவளிடம் கூறினாள்.
“ம்ம்ஹும்…” என்று வேகமாக தலையை ஆட்டி அஜய்யின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்டாள் லத்திகா.
“தெரியுதுல்ல? அப்போ ஒழுங்கா அழாம இரு… உன்னைப் பார்த்து அத்தையும் அழுதுட்டு இருக்காங்க… நீங்க ரெண்டுப் பேரும் அழறதப் பார்த்து சம்பந்தமே இல்லாம எங்கம்மாவும் அழறாங்க… இன்னும் நான் மட்டும் தான்டி பாக்கி…” என்று நீணா கூறி முடித்தபோது அங்கே மஞ்சுவும் ப்ரீதாவும் வந்தனர்.
“என்னமா மாநாடு இங்க?” என்று மஞ்சு கேட்க “ஏங்கண்ணு அழுவுற?” என்றுக் கேட்டு மூக்கை உறிஞ்சினார் ப்ரீதா.
“மா… மாமியாரா லட்சணமா மெரட்டி உருட்டாம… இப்படி அழுவுற? அசிங்கமா இல்ல?” என்றுக் கேட்டாள் நீணா.
“சும்மா இரு நீணா…” என்றுக் கூறி அவள் தோளை சுற்றி கையைப் போட்டு நின்றார் மஞ்சு.
“பாரு என் மாமியார் என்னை எப்படிக் கொஞ்சுறாங்கன்னு…” என்று நீணா பெருமையாகக் கூறவும் “ஏன்??? நாங்கல்லாம் கொஞ்சமாட்டமாக்கும்… நீ தள்ளுடா…” என்று அஜய்யை ஒரே தள்ளாகப் பிடித்துத் தள்ளி விட்டு லத்திகாவை அணைத்துக் கொண்டார் ப்ரீதா.
“உனக்கு ஏன்டி இந்த நல்ல எண்ணம்? ச்ச… பொலம்புறதுக்கு கம்பனி கொடுக்க என் மச்சானும் கூட இல்ல…” என்று அலுத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டான் அஜய்.
மஞ்சுவும் ப்ரீதாவும் என்னென்ன பேக் செய்திருக்கின்றனர், அங்கே சென்றால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று லத்திகாவிற்கு நிறைய அறிவுரைகள் வழங்கினர்.
இரவு ரோஹித் வீடு வந்து சேர்ந்தபோது லத்திகா சிரிப்புடன் வலம் வருவதைப் பார்த்து அதிசயித்தான்.
“எல்லாம் உன் பொண்டாட்டி பண்ண வேலை…” என்று மெல்ல அவன் காதில் கூறிச் சென்றான் அஜய்.
விமான நிலையத்தில் எல்லோரையும் பிரிந்து உள்ளே சென்றபோது கூட லத்திகா கண் கலங்காத வண்ணம் பார்த்துக் கொண்டாள் நீணா.
ரோஹித் நீணாவின் கையை விடவே இல்லை. அவன் பிடி இறுக இறுக தங்கையை பிரியப் போகும் அவனின் மனநிலை அவளுக்கு நன்குப் புரிந்தது.
அவர்களை வழியனுப்பி விட்டு காரில் வந்தமர்ந்த போது அவன் கண்கள் லேசாகக் கலங்கி இருப்பதை கண்டுக் கொண்ட நீணா “நான் டிரைவ் பண்ணுறேன்…” என்றுக் கூறி அவனை மாறி அமர வைத்தாள்.
வீடு வந்து சேர்ந்ததும் கிடைத்த தனிமையில் நீணாவை கட்டியணைத்து அழுதே விட்டான் ரோஹித்.
“அவ கல்யாணத்தன்னைக்கு கூட இவ்வளவுக் கஷ்டமா இல்லடி… நெனைச்சப்போப் பார்த்துக்கலாம்னு தைரியம் இருந்துது. இப்போ என்னால முடியல நீணா…” என்றுப் புலம்பியவனை சமாதானம் செய்துப் படுக்க வைத்தாள்.
நன்றாக உறங்கியவனின் அருகில் அமர்ந்து தலை கோதியவளின் கண்ணிலிருந்துக் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அவசரமாக அதை புறங்கையால் துடைத்தவள் “இந்த அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து என்னையும் ஒப்பாரி வைக்க வெச்சுடுச்சுங்க…” என்று நினைத்து முகம் கழுவி வந்துப் படுத்தாள்.
வெள்ளியன்று காலை ரோஹித்தும் நீணாவும் கிளம்பி ஹர்ஷாவின் வீட்டிற்கு வந்தனர். அன்று அவர்கள் தீம் பார்க் செல்லும் நாள். அங்கிருந்து அவரவர் காரில் இரண்டு ஜோடிகளும் ஒன்றாகப் புறப்பட்டனர்.
“இவ்வளவு அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ணிட்டு கடைசில வெங்கட் வரலன்னு நெனைச்சா கஷ்டமா இருக்கு…” என்றாள் நீணா.
சாலையில் கவனமாக இருந்த ரோஹித் “ஹ்ம்ம்… யாராவது ஒருத்தர் ஹாஸ்பிடல்ல இருந்து தான ஆகணும்? அதான் நான் இருக்கேன்னு அவர் சொல்லிட்டு என்னையும் ஹர்ஷாவையும் அனுப்பிட்டாரு. அவரோட வைப் பையன் வருவாங்க நீணா” என்றான்.
“ஹேய்… உங்களோட அந்த வானர பிரண்ட் இன்னைக்கு வரானா இல்லையா?” என்று நீணா கேட்கவும் சிரித்த ரோஹித் “வரான் வரான்…” என்றான்.
சரியாக அந்த நேரம் அவன் மொபைலிற்கு கால் வந்தது. அதை எடுத்து பேசிய நீணா “சொல்லு ஹர்ஷா…” எனவும் “மோனிகா பேசுறேன்டி… அந்த வைபவ் வரானா இல்லையான்னு ஹர்ஷா கேட்க சொன்னான்…” என்றாள் மோனிகா.
“வரானாம்…”
“கஷ்டம்டி… சரி வெக்குறேன்…” என்று மோனிகா கூறவும் அவளுக்கு எதுவும் சிரமம் இருக்கிறதா என்று விசாரித்து விட்டு வைத்தாள் நீணா.
தீம் பார்க் சென்றடைந்ததும் வாயிலில் இவர்களுக்காகக் காத்திருந்தான் வைபவ். ஷிவானியும் இருந்தாள்.
வைபவ்வை கண்டதும் ரோஹித்தும் ஹர்ஷாவும் ஓடி சென்று அணைத்துக் கொண்டனர்.
“அவுட்டிங்குக்கு பிரண்ட்ஸ் அண்ட் பாமிலி கூட்டிட்டு வரலாம்னு சொன்னாலும் சொன்னாங்க… ஸ்கூல் பிரண்ட்னு இந்த வைபவ்வ போய் வர சொல்லிட்டாங்க…” என்று அலுத்துக் கொண்டாள் மோனிகா.
“இவங்க மூணுப் பேரும் சேரவேக் கூடாதுன்னு நம்மளும் எவ்வளவு ப்ளான் பண்ணாலும் எப்படியாவது மீட் பண்ணிடுறாங்க பா…” என்றுத் தன் பங்கிற்கு நீணா புலம்ப ஷிவானி அவர்களை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உள்ளே சென்றதும் ஹர்ஷா எந்த ரைடிலும் ஏறாமல் மோனிகாவிற்கு துணையாக அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான். அவளுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுப்பது, பழங்கள் வாங்கிக் கொடுப்பதென்று அவளை கவனித்துக் கொண்டான்.
வைபவ் ரோஹித் நீணாவுடனே சுற்றினான். ஷிவானி நீணாவுடன் இருக்க விரும்பியதால் அவளும் அவர்களுடன் இணைந்துக் கொண்டாள்.
நண்பர்கள் இருவரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க நீணாவிற்கும் பேச்சுத் துணைக்கு ஆள் தேவைப்பட்டது. ரைடில் செல்லும்போது மட்டும் ரோஹித்துடன் அமர்ந்துக் கொண்டாள்.
நீனாவிற்கு எரிச்சல்… மனம் முழுவதும் எரிச்சல்… என்றோ ஒரு நாள் தான் இப்படி மருத்துவமனைக்கு விடுப்பு எடுத்து வெளியே செல்கிறார்கள். அப்போதும் நண்பன் என்று ஒருவனை உடன் அழைத்து வந்து அவனுடனேயே நேரம் செலவழிக்கும் ரோஹித்தின் மீது கோபம் வந்தது.
அதனாலேயே ரைடில் செல்லும்போதெல்லாம் அவனை வைபவ்விடமிருந்து பிரித்து அழைத்து வந்தாள்.
ஷிவானி வைபவ்வுடன் செல்வதை பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை. அது நீணாவிற்கு சற்று நிம்மதியை அளித்தது.
இப்படியே இரண்டு மணி நேரம் சென்றிருக்க மோனிகாவின் அருகில் வந்தமர்ந்து “ஹர்ஷா நீங்க ஏதாவது ஒரு ரைட்லயாவதுப் போயிட்டு வாங்க… இங்க வந்ததுலேருந்து மோனிகாவோடயே தான இருக்கீங்க… நான் பார்த்துக்குறேன்…” என்றாள் ஷிவானி.
“இல்ல ஷிவானி… பரவாயில்ல… நான் இங்கயே இருக்கேன்…”
“எனக்கும் டயர்டா இருக்கு ஹர்ஷா… நீ போ… நானும் இங்க இருந்து இவளப் பார்த்துக்குறேன்…” என்று நீணா கூறியதும் ஆண்கள் மூவரும் அடுத்த ரைடிற்கு சென்றனர்.
அவர்கள் தொலைவிற்கு சென்று விட்டதை உறுதி செய்துக் கொண்ட ஷிவானி “எத்தன நாளா என்னை இப்படி பழி வாங்க நெனைச்சீங்க?” என்று மோனிகாவையும் நீணாவையும் பார்த்துக் கேட்டாள்.
நீணா “என்னாச்சு?” என்றுக் கேட்க இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த மோனிகா ஷிவானியை புரியாமல் பார்த்தாள்.
“எதுக்கு என்னை அந்த வைபவ் கூட அனுப்பி வெச்சீங்க?” என்று கோபமாகக் கேட்டாள் ஷிவானி.
“இல்ல ஷிவானி… நான் ரோஹித் கூடப் போனதால… உனக்கு அப்ஜெக்ஷன் எதுவும் இல்லைன்னுக் கேட்டுட்டு தான…” என்று சொல்லத் தடுமாறினாள் நீணா.
“காதுல ரத்தம் வருதுத் தெரியுமா?” என்று காதை ஒற்றை விரலால் தொட்டுக் காண்பித்தாள் ஷிவானி. மோனிகா லேசாக சிரிக்க ஆரம்பித்தாள்.
“இப்படியா பேசுவாங்க??? பேசிக்கிட்டே இருக்கான்… வாய மூடவே மாட்டானா? சரி பேசுறது தான் பேசுறான்… அடுத்தவங்க பதில் சொல்லவாவது விடணும்ல… அட பதில் சொல்ல வேண்டாம்… அடுத்தவங்க அவன் பேசுறதக் கேட்குறாங்களா இல்லையான்னாவது கவனிக்கணும்ல…
ஷ்ஷ்ஷ்ஷ்… எதுவும் கெடயாது… இப்படியா வெண்கல பாத்திர கடைக்குள்ள யானை பூந்த மாதிரி லொட லொட லொட லொடன்னு நிருத்தாம பேசுவாங்க… நானும் அவன் பக்கமேத் திரும்பாம இருந்துப் பார்த்துட்டேன்… ம்ம்ஹும்… அப்பயும் நிருத்தலயே…
ஒரு ஸ்டேஜ்ல இவன் இம்ச தாங்காம பேசாம அந்தரத்துலேருந்து கீழ குதிச்சிடலாமான்னு ஆகிடுச்சு… நிப்பாட்டுறியா இல்லையான்னு அவனப் பிடிச்சுத் தள்ளி விட்டுடலாமான்னு யோசிச்சேன் தெரியுமா?”
இடையில் பேச வந்த நீணாவையும் மோனிகாவையும் கண்டுக் கொள்ளாமல் தரையைப் பார்த்துத் தன் போக்கில் புலம்பித் தள்ளி விட்டாள் ஷிவானி. அவள் நிமிர்ந்தபோது கண்ணில் நீர் வர சிரித்துக் கொண்டிருந்தனர் இருவரும்.
“சிரிப்பா இருக்கா?”
“நீ… நீயும் ஒரு நாள் பொலம்புவன்னு சொன்னோம்ல… பாரு நடந்துடுச்சா? உனக்கு அவன் தான் சரியான ஆளு… ஓகேனா சொல்லு இப்போவே பேசி முடிவுப் பண்ணிடலாம்…” என்றாள் நீணா.
“ஐயோ சாமி… இனிமே இங்கேருந்து கிளம்புற வரைக்கும் என்னை அவன் கூட தனியா விட்டீங்கன்னா உங்க கூட இனி பேசவே மாட்டேன் பார்த்துக்கோங்க…”
மதியம் சாப்பிடும்போது வட்ட வடிவில் இருந்த டேபிளில் அமர வேண்டி வந்ததால் ஷிவானியின் ஒரு புறம் நீணாவும் மற்றொரு புறம் வைபவ்வும் அமர்ந்தனர். அப்போதும் விடாமல் வலவலத்துக் கொண்டிருந்தவனின் அருகில் பாவமாக அமர்ந்திருந்த ஷிவானியை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு உணவருந்தினர் நீணாவும் மோனிகாவும்.
ரோஹித் என்னதான் நண்பர்களுடன் பேசி சிரித்தாலும் அவன் மனம் நீணாவை தேடியது. அவள் அருகில் இருக்க ஆசைப்பட்டான்.
நீச்சல் குளத்தில் குளித்து முடித்ததும் பசியெடுத்த சமயம் ஹர்ஷாவும் வைபவ்வும் ஸ்நாக்ஸ் வாங்க செல்ல அவர்களிடமிருந்து நழுவி நீணாவின் அருகில் வந்தான்.
அவன் தலையை துவட்டியபடியே வர அவள் மீது தெறித்த நீர் துளிகளை துடைத்தபடி “ஏய் தண்ணி தெறிக்குது” என்றாள் நீணா. “அப்படியா?” என்றுக் கேட்டு அவளை அணைத்து வேண்டுமென்றே தலையை வேகமாக ஆட்டினான் ரோஹித்.
“விடு ரோஹித்… யாராவது பார்க்கப் போறாங்க…” என்று நீணா கூறும்போதே அவர்கள் அருகில் வந்த ஹர்ஷாவும் மோனிகாவும் “பப்ளிக் பப்ளிக்” எனவும் ரோஹித்தை பிடித்துத் தள்ளி அவனை முறைத்தாள்.
“இப்போ எதுக்குடா வந்தீங்க?” என்றுக் கேட்டு அவர்களுடன் பேச ஆரம்பித்தான் ரோஹித். ஆனால் நீணாவிற்கு அது பெருத்த அவமானமாகப் பட்டது. அடுத்தவர் முன்னிலையில் கணவன் மனைவியாகவே இருந்தாலும் இப்படி கட்டியணைத்து நின்றது அவளை கூச செய்தது.
மீண்டும் வீடுத் திரும்பும் வழியில் “எதுக்கு வபைவ் வர சொன்னீங்க? பாவம் ஷிவானி மாட்டிக்கிட்டு முழிச்சா…” என்றாள் நீணா.
“அவன் எங்க பிரண்ட்… நாங்க வர சொல்லுவோம்… உனக்கென்ன வந்துச்சு? எதுக்கு காலையிலிருந்து இதயேக் கேட்குற?”
“ஷிவானி எங்க பிரெண்ட்… அப்போ நான் கேப்பேன்…”
அதில் துவங்கிய வாக்குவாதம் வீடு வந்து சேரும் வரைத் தொடர்ந்தது. வீட்டிற்குள் நுழைந்ததும் கதவை தாழிட்ட ரோஹித் “எதுக்கு இப்படி வாய மூடாம பேசிட்டே இருக்க?” என்றுக் கேட்டு அவள் வாயை தனதால் மூடினான். நீணா திமிர அவளை அப்படியே படுக்கையறைக்குள் இழுத்துச் சென்றான்.
16
காலை எழுந்தது முதல் நீணாவை படுத்திக் கொண்டிருந்தான் ரோஹித். அன்று அவன் பங்கேற்க வேண்டிய கருத்தரங்கம் ஒன்று இருந்தது. சமையலை முடித்து கையில் தேநீருடன் ஓய்வாக சிறிது நேரம் சோபாவில் அமர்ந்தாள்.
ரோஹித் மூன்று நான்கு முறை அவளை கடந்து சென்றான். நீணாவின் பொறுமை பறக்க “எவ்வளவு நேரம்டா இப்படி சட்டயோடயே திரியுவ?” என்றுக் கேட்டாள்.
“இருடி… பேன்ட் எங்க வெச்சேன்னு தெரியல… அத தான் தேடிட்டு இருக்கேன்…” அவளை திரும்பிப் பாராமல் கூறி சோபாவில் இருந்த சிறு சிறு குஷன்களை எடுத்துப் பார்த்து தேடினான் ரோஹித்.
தலையில் அடித்துக் கொண்டு எழுந்து சென்று படுக்கையறையில் இருந்த கப்போர்டை திறந்தாள். அவன் அன்று அணிய வேண்டிய பேன்ட் மேல் தட்டில் இருந்தது.
“டேய்… வாடா இங்க…” என்று அவள் அங்கிருந்தே கத்தவும் “இருடி…” என்றுக் கூறி தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்துக் கொண்டிருந்தான் ரோஹித்.
“இவன வெச்சுக்கிட்டு…” கையில் பேன்டுடன் வந்தவள் அதை அவன் மேல் வீச “ஹே தாங்க்ஸ் நீணா… எங்க இருந்துது?” என்றுக் கேட்டபடியே அதை அணிந்துக் கொண்டான். நீணா அவனை முறைத்தவாரே சமையலறைக்குள் சென்றாள்.
சாப்பிட அமர்ந்தபோதும் ஏதோ பைலை வைத்து படித்துக் கொண்டே அவன் சாப்பாட்டில் கவனம் இல்லாமல் இருக்கவும் தட்டில் இருந்த அவன் கையை தட்டி விட்டு அவளே அவனுக்கு ஊட்டி விட்டாள்.
அவளுக்கும் தெரியும் இந்த கான்பெரன்ஸ் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று… எத்தனை நாட்களாக இதற்காக தன்னை தயார் செய்துக் கொண்டிருக்கிறான்.
அவன் சாப்பிட்டு எழுந்ததும் அதே தட்டில் தனக்கு உணவை எடுத்துப் போட்டு அவசரமாக சாப்பிட்டு முடித்தவள் காரை தானே ஓட்டுவதாகக் கூறி அவனிடமிருந்து சாவியை வாங்கினாள்.
வீட்டை விட்டு வெளியே செல்ல எத்தனித்த ரோஹித்தின் கைப் பற்றி இழுத்த நீணா அவனை ஒரு முறை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு வேறு எதுவும் தேவையாய் இருக்கவில்லை. புன்னகையுடன் அவள் கைப் பற்றி வெளியே வந்தான்.
ஹர்ஷாவை கேள்விக் கேட்டு துளைத்துக் கொண்டிருந்தாள் மோனிகா. “உனக்கு எப்போ கான்பெரன்ஸ் முடியும்? எத்தன மணிக்கு வெளில வருவா? இன்னைக்கு லஞ்சும் நீ என் கூட சாப்பிட மாட்டியா?”
காலை எழுந்தது முதல் இப்படி சிறுபிள்ளை போல் கேள்விக் கேட்டு தன் பின்னாலேயே சுற்றித் திரிபவளைப் பார்க்க ஹர்ஷாவிற்கு சிரிப்பதா அழுவதா என்றேத் தெரியவில்லை.
“என்ன மோனி இது? உனக்கு தெரியாதா? ஈவ்னிங் தான் முடியும்…” என்று பொறுமையாக அவன் கூற “தெரியும்… ஈவ்னிங் வரைக்கும் உன்னப் பார்க்காம உன் கூட பேசாம எப்படி இருப்பேன்?” என்றாள் மோனிகா.
அவளை தன்னுடன் சேர்த்தணைத்து சில நிமிடங்கள் அமைதியாக நின்றான் ஹர்ஷா. நேரமாவதை உணர்ந்தவள் “சரி வா போகலாம்… நான் தனியா இருந்துப்பேன்…” என்றுக் கூறி அவனிடமிருந்து விலகினாள்.
“நீயே ஒரு டாக்டர்… என் ட்யூட்டி பத்தியும் உனக்கு தெரியும். ஆனாலும் இப்படி அடம் பிடிக்குறியே… கஷ்டம் தான்…” என்று நினைத்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு “வா” என்றுக் கூறி வெளியே வந்தான்.
ரோஹித்தும் ஹர்ஷாவும் பிஸியாக இருக்க மோனிகாவை சரிவர கவனித்துக் கொள்ளும் பொறுப்பை நீணா ஏற்றுக் கொண்டாள். மதிய உணவு இடைவேளையின் போது வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தவளை மருத்துவமனை பூங்காவில் நிழலாய் இருந்த இடத்தில் வாக்கிங் அழைத்துச் சென்றாள்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்ததும் மோனிகாவிற்கு மனம் லேசாகியது. அதன் பின் சாதரணமாக சிரித்து பேசினாள். இதைக் கண்ட ஷிவானி “யார எப்படி சமாளிக்கணும்னு கரெக்டா தெரிஞ்சு வெச்சுருக்க” என்றுக் கூறி அவளிடமிருந்து ஒரு அடியை வாங்கிக் கொண்டாள்.
மாலை மோனிகாவை அவள் வீட்டில் விட்ட நீணா, இப்போது வீட்டிற்கு சென்றால் தானும் தனியாகத் தான் இருக்க வேண்டும் என்பதால் அவளுடன் சிறிது நேரம் அவள் வீட்டில் இருந்தாள்.
கல்யாணி அளித்த இரவு உணவை இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டு முடித்ததும் மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை கொடுத்து விட்டு கல்யாணியிடம் சொல்லிக் கொண்டுக் கிளம்பினாள் நீணா.
ஆலோசனை கூட்டம் முடித்து வெளியே வந்ததும் வெங்கட் ரோஹித்திற்கு கைக் கொடுத்து “ஸ்பீச் ரொம்ப நல்லா இருந்துது ரோஹித். அசத்திட்டீங்க…” என்று பாராட்டி விட்டு சென்றார்.
அவர்கள் அருகில் வந்த மெய்யப்பன் “வெல் டன் பாய்ஸ்” என்று ரோஹித்திடமும் ஹர்ஷாவிடமும் கூறி ரோஹித்திடம் “கங்க்ராட்ஸ் ரோஹித்…” என்றுக் கூறி கைக் கொடுத்தார்.
“ஹர்ஷா நீ கிளம்புடா… மோனிகா தனியா இருப்பா”
“ஆமாடா… நீயும் சீக்கிரம் கிளம்பிடு. இப்போவே மணி 11…”
ஹர்ஷா புறப்பட்டதும் ரோஹித் அவனுடைய கேபினுள் வந்து அமர்ந்தான். இன்று அவன் ஆற்றிய சொற்பொழிவிற்கு அவனை பாராட்டாதவர்கள் பாக்கி இல்லை. மெய்யப்பன் அனைவர் முன்னிலையிலும் பாராட்டியது மட்டுமல்லாமல் வெளியில் வந்து தனியாகவும் கை கொடுத்து பாராட்டியது எதையோ பெரிதாக சாதித்துவிட்ட உணர்வை தந்தது. மனம் நிறைந்திருந்தது.
உடனே இதை நீணாவுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கவே மொபைலை கையில் எடுத்தான்.
பிறகு “நேர்ல சொல்லணும்… அது தான் நல்லா இருக்கும்” என்று யோசித்து மொபைலை பாக்கெட்டில் வைத்து தன் பையை எடுத்துக் கிளம்பத் தயாரானான். சரியாக அந்த நேரம் பரப்பரப்புடன் உள்ளே வந்தார் மெய்யப்பன்.
“ரோஹித்… எமெர்ஜென்சி… க்விக்…” என்றுக் கூறி ஓடியவரின் பின்னால் பையை கீழே போட்டு விட்டு ஓடினான் ரோஹித். ஆபரேஷன் தியேட்டர் தயாராகிக் கொண்டிருந்தது. பேஷன்ட் யாரும் உள்ளே இல்லை. அவனுக்குப் புரிந்தது.
அப்படி என்றால் தங்கள் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஏதோ ஒரு பேஷண்ட்டை அழைத்து வர சென்றிருக்க வேண்டும். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முன்னேர்பாடாக அறுவை சிகிச்சைக்கு அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
ரோஹித்தும் விரைந்து செயல்பட்டான். அம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்ததும் அங்கு விரைந்தவன் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த மனிதரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி மாற்ற உதவி அவருக்கு தேவையான முதல் உதவியை செய்தபடி ஸ்ட்ரெச்சரின் அருகிலேயே ஓடி வந்தான்.
உடன் இருந்த நர்ஸ் மற்றும் ஜூனியர் டாக்டர்களுக்கு அடுத்து செய்ய வேண்டியவற்றை கட்டளையிட்டான். பேஷன்ட் அவனிடம் சிகிச்சை பெறுபவர் என்பதால் அவரின் மெடிக்கல் ஹிஸ்டரி அறிந்தவன்.
தியேட்டர் உள் செல்வதற்கு முன் அவன் கை பிடித்துத் தடுத்தார் மெய்யப்பன்.
“நீ தான் இந்த ஆபரேஷன்கு சீப் சர்ஜன். நான் உள்ள உன் கூட இருப்பேன். ஆனா எந்த டிசிஷனும் எடுக்க மாட்டேன். எந்த இன்ஸ்ட்ரக்ஷனும் குடுக்க மாட்டேன். திஸ் வில் பீ யுவர் பர்ஸ்ட் அபீஷியல் சர்ஜரி” என்றுக் கூறி அவனிடம் ஒரு விண்ணப்பத்தை நீட்டினார்.
“டாக்டர்…. இப்போ இது… என்னால முடியுமா?” என்றுத் தடுமாறினான் ரோஹித். அவன் தோளில் இரண்டு முறை பலமாகத் தட்டியவர் விண்ணப்பத்தை அவன் கையில் திணித்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றார்.
ரோஹித் ஸ்தம்பித்து நின்றது ஒரு நொடி தான். தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் ஆபத்தானது என்றுப் புரிந்து அவசரமாக விண்ணபத்தில் இரண்டு மூன்று இடங்களில் கையொப்பமிட்டு விரைந்து உள்ளே சென்று பேஷன்ட்டின் நிலையைப் பரிசோதித்தான். மயக்க மருந்து கொடுக்கும் முன்னரே அவரின் இதயத் துடிப்பு வெகுவாகக் குறையத் துவங்கியது.
அதை கவனித்த ரோஹித் மயக்க மருந்து கொடுப்பதைத் தடுத்து “டீபிப்ரிலேஷன் (defibrillation)” முறையில் அவரின் இதயத் துடிப்பின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தான். விரைந்து செயல்பட்டு “டீபிப்ரிலேட்டார் (defibrillator)” மூலம் இதயத்தின் இரு மருங்கிலும் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்தான்.
சட்டென்று இதயத் துடிப்பு அதிகரிப்பது போல் இருந்தது. ஆனால் இரு முறை ஷாக் கொடுத்தவுடன் மானிட்டரில் விட்டு விட்டு ஏறி இறங்கிய குறியீடுகள் அனைத்தும் அவன் மூன்றாவது முறை ஷாக் கொடுக்கும் முன் முற்றிலுமாக நின்றுப் போயின.
விடாமல் இன்னும் இரு முறை ஷாக் கொடுத்தவன் அவர் நெஞ்சில் கை வைத்து அழுத்திப் பார்த்தான். மானிட்டரில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஒரு நொடி அவன் இதயம் நின்றுப் போனதாக உணர்ந்தான். அவன் தோளில் கை வைத்த மெய்யப்பன் தலையை இடமிருந்து வலமாக ஆட்டினார்.
ரோஹித்தால் அப்போதும் நம்ப முடியவில்லை. பத்து நிமிடத்திற்கு முன்னால் கண் விழித்திருந்தவர்… இப்போது சுவாசம் நின்ற நிலையில் தன் முன்னால் கிடக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவனாய் அவரையே வெறித்துக் கொண்டிருந்தான்.
அடுத்து செய்ய வேண்டிய ப்ரோசீஜர் அனைத்தையும் அங்கிருந்தவர்களுக்குக் கூறிய மெய்யப்பன் அவன் கை பற்றி கதவருகில் அழைத்து வந்தார். “வெளில அவங்க ரிலேடிவ்ஸ் கிட்ட சொல்லிடு ரோஹித்” என்று அவர் கூறியதும் தான் அவனுக்கு உணர்வு வந்தது.
“நானா? நீங்க சொல்லுங்க டாக்டர் ப்ளீஸ்… ஐ கான்ட்” என்றுக் கூறி தலைக் குனிந்தான். “நீ தான் ரோஹித் சர்ஜெரி பண்ண. இட்ஸ் யுவர் ட்யூட்டி” என்றுக் கூறி கதவைத் திறந்துவிட்டார் மெய்யப்பன். அணிந்திருந்த பச்சை மேலங்கியைக் கழட்டியபடி வெளியே வந்தான்.
அவனைக் கண்டதும் பேஷன்ட்டுடன் வந்தவர்கள் அனைவரும் எழுந்து அவன் அருகில் வந்தனர். முன்னால் நின்றதென்னவோ அவரின் மனைவி தான். அவரை பார்த்தபடியே நின்றான் ரோஹித்.
அவனுக்கு இறந்தவரின் மெடிக்கல் ஹிஸ்டரி மொத்தமும் நினைவிற்கு வந்தது. அத்தனையும் மருத்துவ பெயர்கள்… இப்போது உள்ளே செய்த ப்ரோசீஜர் அனைத்தும் கண் முன் தோன்றி மறைந்தன. அதை அவனால் அவர்களுக்குப் புரியும்படி விளக்கவும் முடியும். ஆனால் அவன் சொல்ல வேண்டியது இது எதையும் இல்லையே…
“எப்படி டாக்டர் இருக்காரு?” என்று அவர் கேட்டதும் தன் தாயின் வயதையொத்த அவரின் தோளை பற்றி உலுக்கி “உங்க புருஷன் எறந்துட்டாரு” என்று கத்த வேண்டும் போல் இருந்தது.
“அம்மா அமைதியா இருங்க…” என்றுக் கூறி அவரை நகர்த்தி விட்டு “அப்பாக்கு என்னாச்சு டாக்டர்?” என்று அவரின் மகன் கேட்கவும் “சாரி. எங்களால எதுவும் பண்ண முடியல” என்று தனக்கேக் கேட்காத குரலில் கூறினான் ரோஹித்.
புடவை முந்தானையால் வாயைப் பொத்தி அமைதியாகக் கதற ஆரம்பித்த அவரின் மனைவி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார். ஒரு நர்ஸ் வந்து அவரின் மகனிடம் “ஹாஸ்பிட்டல் சார். அதிகம் சத்தம் இல்லாமப் பார்த்துக்கோங்க….” என்று நாசுக்காகக் கூறி சென்றாள்.
எதை பார்க்க வேண்டும்? கணவர் இறந்ததற்கு அழாமல் இருக்க முடியுமா? ஆனால் மருத்துவமனை சூழல் என்ற ஒன்றும் உள்ளதே. இப்படி மாறி மாறி யோசித்த ரோஹித் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தான். மெய்யப்பன் கூறியது நினைவு வந்தது. “இது என்னோட முதல் சர்ஜரி…”
மெய்யப்பன் வந்து அவனருகில் அமர்ந்து “குட் ஜாப்” என்றுக் கூறி அவன் தோளில் தட்டினார். அவரை புரியாமல் நிமிர்ந்துப் பார்த்தான் ரோஹித்.
“வா… டீ குடிப்போம்” அவன் பதிலை எதிர்ப்பார்க்காமல் எழுந்து முன்னே நடந்தார்.
ரோஹித்தும் அமைதியாக அவர் பின்னால் நடந்தான். மேலங்கியை கழட்டி கையை நன்றாக சுத்தம் செய்தவர் மருத்துவமனை வளாகத்தின் பின் புறம் பூங்காவின் அருகில் இருந்த காண்டீன் சென்றார்.
இருவருக்கும் டீ வாங்கி அவன் கையில் ஒரு கப்பை கொடுத்தவர் காண்டீன் உள்ளேயே அமராமல் பூங்காவில் நடக்க ஆரம்பிக்க அவனும் கப்பை வெறித்தபடியே அவருடன் நடந்தான்.
“நீ பொணத்தப் பார்த்துருக்கியா ரோஹித்?” என்றுக் கேட்டவரை விநோதமாகப் பார்த்தவன் “படிக்குறப்போ எத்தனையோ பார்த்திருக்கேன். தெரிஞ்சவங்க சாவு வீட்டுல பார்த்திருக்கேன்” என்றான் அமைதியாக.
“ம்ம்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ பார்த்ததும் டெட் பாடி தான ரோஹித்? எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுற?’ என்று மெய்யப்பன் கூற நின்று விட்டான் ரோஹித்.
“அவரு உயிரோட இருந்தாரு டாக். நான் செஞ்ச முதல் சர்ஜெரி… சர்ஜெரியே செய்யலையே… என்னால அவரை காப்பாத்த முடியலயே…
ரெண்டு மாசமா அவர எனக்கு தெரியும் டாக். ஒருத்தர முதல் தடவ பார்க்கும்போது தான் அறிமுகம் இல்லாதவங்களா இருப்பாங்க. இத்தன நாள்ல அவரோட மெடிக்கல் கண்டிஷன் மட்டும் இல்ல… பேமிலி பத்திக் கூட எனக்கு தெரியும். நான் ஒழுங்கா முயற்சி எடுக்கலயோன்னுத் தோணுது டாக். ஐ பீல்… ஐ பீல் கில்ட்டி”
ரோஹித்திற்கு மனதில் இருந்த அனைத்தையும் கூறி முடித்தப் பிறகு மனம் லேசானதாகப்பட்டது. மெய்யப்பன் மெலிதாக சிரித்து மீண்டும் நடக்க ஆரம்பித்தார். ரோஹித் தேநீர் பருகியபடி உடன் நடந்தான்.
“பேஷண்டோட பெர்சனல் லைப் பத்தித் தெரிஞ்சுக்குறது தப்பில்ல ரோஹித். அவங்களோட வாழ்க்கை முறைப் பத்தித் தெரிஞ்சுக்க அது உதவியா இருக்கும். அவங்களோட க்ளோஸா சிரிச்சு பேசுறது மூலமா அவங்க நோயாளி… டாக்டர் பார்க்க வந்துருக்காங்க அப்படிங்குற பீல் கம்மிப் பண்ண முடியும்.
அதுக்கும் மேல நம்ம என்ன செய்ய முடியும் ரோஹித்? அவங்களுக்கு மருத்துவம் பார்க்குறப்போ மருத்துவரா மட்டும் தான் செயல்படணும். அவங்கள பேஷன்டா மட்டும் தான் பார்க்கணும். இப்படி எமோஷனல் அட்டாச்மெண்டோட அவங்களுக்கு எப்படி வைத்தியம் பார்க்க முடியும்?
இன்னைக்கு பேஷன்ட் வீட்டுல இருந்துக் கிளம்பும்போதே ஆம்புலன்ஸ்ல போயிருந்த டாக்டர் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பட் அவங்க பேமிலில கேட்டுக்கிட்டதால கடைசி முயற்சியா தான் ஆபரேஷன் ஏற்பாடு செஞ்சேன். தெரிஞ்சு தான் இந்த சர்ஜெரி உன்னை செய்ய சொன்னேன்.
நம்ம செய்யுற எல்லா சர்ஜெரியும் சக்சஸ் ஆகாது ரோஹித். பேஷண்டோட டெத் அவங்கள சார்ந்தவங்கக் கிட்ட சொல்லுற தைரியம் நமக்கு இருக்கணும். இதுவும் ஒரு பாடம் தான். காலேஜ்ல சொல்லிக் குடுக்காத அனுபவ பாடம். இனி நீ நிறைய சாதிப்ப ரோஹித். நிம்மதியாப் போய் தூங்கு. குட் நைட்” என்றுக் கூறி வேகமாக சென்று விட்டார் மெய்யப்பன்.
ரோஹித்திற்கு எல்லாம் தெரிந்தே தன்னை இதில் இழுத்து விட்டிருக்கிறார் என்று முதலில் அவர் மீது சிறிது கோபமும் வருத்தமும் இருந்தது. ஆனால் அவர் கூறியவற்றை பொறுமையாக யோசித்துப் பார்த்தான். அது எவ்வளவு உண்மை என்றுப் புரிந்தது.
மிச்சம் இருந்த தேநீரைப் பருகி விட்டு மருத்துவமனை உள்ளே வந்தவன் அறுவை சிகிச்சை செய்த மருத்துவராக முடிக்க வேண்டிய பார்மாலிட்டீஸ் அனைத்தையும் முடித்து தன் கேபினிற்குள் வந்தான்.
மணி 1.45 ஆகியிருந்தது. “இந்த நடு ராத்திரியில இப்படி ஒரு கீதா உபதேசம் எனக்குத் தேவ தான்…” என்று நினைத்து சிரித்தவன் வேகமாக வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.
அந்த நள்ளிரவு நேரத்திலும் கதவைத் தட்டிய சில நொடிகளில் வந்து திறந்தாள் நீணா. உள்ளே நுழைந்ததும் கையிலிருந்த பையை அப்படியேக் கீழேப் போட்டு விட்டு தூக்கக் கலக்கத்தில் சோர்ந்துக் காணப்பட்டவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“இன்னைக்கு நாள் எப்படிப் போச்சு?” என்றுக் கேட்டு அவன் தோளில் சாய்ந்து அவன் கழுத்தை சுற்றி இறுக்கிப் பிடித்து நின்றாள் நீணா.
ரோஹித் எதை சொல்வதென்றுத் தடுமாறினான். தனக்குக் கிடைத்த பாராட்டையா? இல்லை இன்று தான் தலைமை பொறுப்பில் இருந்து அறுவை சிகிச்சை செய்ததையா? இல்லை சிகிச்சைப் பலனின்றி ஒரு உயிர் தன் கையில் போனதையா?
“ஹ்ம்ம்… நல்ல போச்சு…” என்றுக் கூறி அவளை மேலும் இறுக்கிக் கொண்டான். “என்னடா? என்னாச்சு?” என்றுக் கேட்டு அவனிடமிருந்து விலக முயன்றாள் நீணா.
“ஒண்ணும் இல்ல… பேசாம இரு”
“இல்ல… எதுவோ சரி இல்ல… என்ன ஆச்சுன்னு சொல்லு”
“அதான் எதுவும் இல்லன்னு சொல்லுறேன் இல்ல… பேசாம இரேன் நீணா” என்று கெஞ்சுதலாகக் கூறினான் ரோஹித்.
அவனிடமிருந்து விடாப்பிடியாக நகர்ந்து சென்றவள் “என்னன்னு சொல்லு ரோஹித். ஏதாவது பிரச்சனையா? ஏன் என்னமோ மாதிரி இருக்க?” என்றுக் கேட்டாள்.
“கொஞ்ச நேரம் வாய மூடுறியா? அதான் எதுவும் இல்லன்னு சொல்லுறேன்ல? என் கையால அடி வாங்கிடாத… செத்த்த்துடுவ…” என்று கடுப்பாகக் கூறி அவளை மீண்டும் அணைக்க முயன்றான்.
“என்ன விஷயம்னு சொல்லு ரோஹித்”
“ஒண்ணும் இல்ல ஒண்ணும் இல்ல ஒண்ணும் இல்ல… சொன்னா புரியாதா?” என்று கத்தி அவளை பிடித்து அருகில் இழுத்து அவள் உதட்டில் முரட்டுத்தனமாக முத்தமிட்டான்.
நீணா திமிறி விலக நினைக்கவும் அவளை அப்படியே தோளில் தூக்கியவன் “வாய மூடு. எதுவும் பேசிடாத… இல்லன்னா இப்போ இருக்க வெறில கடிச்சு கொதறிடுவேன்…” என்று அவளை எச்சரித்தபடியே படுக்கையறைக்குள் சென்றான்.
மெத்தையில் அவளைக் கிடத்தியவுடன் “ஹே என்னாச்சு?” என்று மீண்டும் துவங்கினாள் நீணா.
“மனுஷியாடி நீயெல்லாம்? உன்கிட்ட போய் பொறுமையா பேசிட்டு இருக்கேன் பாரு…” என்று கோபமாகக் கூறி மெத்தையில் அவள் மீதே விழுந்தான் ரோஹித்.
17
எப்போதும் போல் அதிகாலை அலாரம் அடித்ததும் கண்ணை மெல்லத் திறந்துப் பார்த்தாள் நீணா. ரோஹித் அவசரமாக மொபைலை தேடி எடுத்து அலாரத்தை நிறுத்தி அதை தலையணைக்கு அடியில் வைத்து அருகில் படுத்திருந்தவளை ஒரு கையால் திருப்பி அவள் தலையை நெஞ்சில் வைத்துக் கொண்டான்.
“நேத்து என்ன நடந்துதுன்னுக் கேட்க மாட்டியா?” என்று அவள் முடிக்குள் விரல் விட்டு அலைந்தபடி அவன் கேட்க “எதுக்கு? அத கேட்டதுக்கு தான் நைட் என்னை அந்த பாடுப் படுத்தி வெச்சியே…” என்று அவனிடமிருந்து விலக முயன்றாள்.
அவளை அசைய விடாமல் இறுகப் பிடித்தவன் “நேத்து என்னோட ஸ்பீச் கேட்டுட்டு அங்க இருந்த எல்லாரும் அவ்வளவு பாராட்டினாங்க. டாக்டர் மெய்யப்பன் வந்து தனியா பார்த்து பாராட்டிட்டுப் போனாரு…
முதல்ல உனக்கு போன் பண்ணி சொல்லலாம்னு நெனச்சேன். அப்பறம் நேர்ல வந்து சொல்லணும்னுத் தோணுச்சு. கிளம்பினப்போ ஒரு எமர்ஜென்ஸி கேஸ் நீணா. டாக்டர் என்னை சர்ஜரி செய்ய சொன்னாரு தெரியுமா… என்னோட முதல் சர்ஜரி. ஆனா அதுக்கு முன்னாடியே…” என்றுக் கூறியவன் முந்தைய நாள் இரவின் தாக்கத்தால் அமைதியாக இருந்தான்.
நீணா நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க தொண்டையை சரி செய்துக் கொண்டு “என்னால எதுவும் செய்ய முடியல நீணா. வெளில இருந்த அவரோட ரிலேடிவஸ் கிட்ட என்னையே சொல்ல சொல்லிட்டாரு. இருக்கறதுலயே கொடுமையான விஷயம் பேஷன்ட்டோட டெத்த கன்வே பண்ணுறது தான்.
எனக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. அப்பறம் டாக்டர் நிறைய பேசினாரு. அவரு சொன்னதெல்லாம் கேட்டதுக்கு அப்பறம் நார்மல் ஆகிட்டேன்” என்றுக் கூறி முடித்தான் ரோஹித். முழுதாக இரண்டு நிமிடங்கள் அமைதி நிலவியது அந்த அறையில்.
“இதெல்லாம் நேத்து நான் கேட்டப்போவே சொல்லி இருக்கலாமே ரோஹித்?”
அவளை எழுப்பி அமர வைத்தவன் தானும் அவள் எதிரில் அமர்ந்து அவள் கைகள் இரண்டையும் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான்.
“நேத்து வீட்டுக்கு வரும்போது நான் கொஞ்சம் தெளிவா தான் இருந்தேன். ஆனா நீ வந்து என்னாச்சுன்னு கேட்டப்போ எனக்குத் திரும்ப மண்டைக்குள்ள என்னென்னவோ ஓட ஆரம்பிச்சுடுச்சு. கஷ்டமா இருந்துது. எத்தன தடவ சொன்னேன் அமைதியா இருன்னு…
கொஞ்ச நேரம் எதுவும் பேசாம இருந்திருந்தா நானே எல்லாததையும் சொல்லி இருப்பேன் நீணா. அத விட்டுட்டு நொய் நொய்னு கேள்விக் கேட்டா… எரிச்சல் வருமா வராதா?” .
“ஆமா… உன் முகத்தப் பார்த்ததுமே ஏதோ சரி இல்லையோன்னுத் தோணுச்சு… அதோட நீ ஹக் பண்ணப்போவும் வித்தியாசம் தெரிஞ்சுது. என்ன ஆச்சோ என்னப் பிரச்சனையோன்னுத் தெரிஞ்சுக்கக் கேட்டேன். அதுக்கு அந்த கத்து கத்தி… நைட் எப்படி பீகேவ் பண்ணத் தெரியுமா?”
“போடி போடி… நீயும் தான் அங்கங்க பிராண்டி வெச்சுருக்க… வாய மூடுன்னு சொன்னப்போவேக் கேட்டிருக்கணும்… அத விட்டுட்டு என்னைக் கொற சொன்னா?” என்றுக் கேட்டு எழுந்துக் குளியலறைக்குள் சென்றான் ரோஹித்.
“செஞ்சது எல்லாத்தையும் செஞ்சுட்டு… ஒரு சாரி சொல்லுறானா? எப்படி பேசிட்டுப் போறான்…” என்று அவனை கரித்துக் கொட்டியபடி எழுந்து போர்வையை மடிக்க ஆரம்பித்தாள் நீணா.
அவன் என்ன தான் சமாதானம் கூறியிருந்தாலும் ஏனோ முந்தைய தினம் தோன்றியிருந்த கோபம் அவள் மனதை விட்டு மறையவே இல்லை. அமைதியாக காலை வேலைகளை செய்து முடித்தாள்.
சாப்பிட அமரும் வரை நீணா எதுவும் பேசவில்லை என்றதும் “என்ன மேடம்? ரொம்ம்ம்ப அமைதியா இருக்கீங்க?” என்றுக் கேட்டான் ரோஹித்.
“இப்போ என்ன வேணும் உனக்கு?”
“நிமுந்துப் பாருடி…” என்றுக் கூறி டேபிளின் அடியில் காலை நீட்டி அவள் காலில் உதைத்தான்.
“டேய்… பேசாம சாப்பிட மாட்ட? எப்போப் பாரு என்னை சீண்டுறதே தான் உனக்கு வேலையா? அடங்கவே மாட்டியா? எரும… இப்போ எதுக்குடா ஒதச்ச?” என்று கத்தி அவனை போலவே காலை நீட்டி அவன் காலில் உதைத்தாள் நீணா.
“அப்படி தான்டி ஒதைப்பேன்… நீ என் பொண்டாட்டி…” என்றுக் கூறி அவள் காலில் மீண்டும் உதைத்து தட்டுடன் எழுந்தான் ரோஹித்.
“பொண்டாட்டின்னா ஒதைப்பியா? அதுக்கு தான் கல்யாணம் பண்ணியாடா?”
சமையலறை வாயிலில் நின்ற ரோஹித் “ம்ம்கும்… உன்ன கட்டிக்கிட்டதுக்கு பேசாம ஒரு ஒவன் (oven) ஒரு வாஷிங் மஷின் வாங்கி வெச்சுருந்தாப் போதும்… வேல மிச்சமாகி இருக்கும்… சச்சச்ச… தப்புப் பண்ணிட்டேன்…” என்றுக் கூறி உள்ளே சென்றான்.
தட்டுடன் விருட்டென்று எழுந்த நீணா “வாங்கிக்கோயேன்… இப்போ யாரு வேணாம்னு சொன்னா? நானாவது நிம்மதியா இருப்பேன்…” என்றுக் கூறி சின்க்கில் தட்டு கழுவிக் கொண்டிருந்தவனை இடித்துத் தள்ளி விட்டுத் தன் தட்டை கழுவினாள்.
“நிம்மதியா இரு… போ… அதுக்கு எதுக்கு என்னைத் தள்ளி விடுற?” என்றுக் கேட்டு அவளைத் தள்ளி விட்டு தட்டை மீண்டும் கழுவ ஆரம்பித்தான். “இது என் கிட்சென்… தள்ளுடா…” என்று அவள் கூறியதும் அவளைப் பிடித்துத் தள்ளி விட்டு சிரித்தபடியே சமையலறை விட்டு வெளியே ஓடினான் ரோஹித்.
விழாமல் சமாளித்து அருகில் இருந்த ஷெல்பை பிடித்து நின்றவள் “என்ன தள்ளி விட்டுட்டுப் போகுது… தடி மாடு…” என்று முனகியபடியே வெளியே வந்தாள். ரோஹித் ஷூ மாட்டிக் கொண்டிருக்க அவசரமாக அறைக்குள் சென்றவள் லேசாக ஒப்பனை செய்து கைபையை எடுத்து ஹாலிற்கு வந்தாள்.
அவன் நிமிரும் முன் ஓடிச் சென்று கார் சாவியை எடுத்தவள் “வெவ்வே வெவ்வே…” என்று அவனுக்கு பழிப்புக் காட்டினாள். “என்ன??? இது பெரிய சாதனையாக்கும்? போடி…” என்று அலட்சியமாகக் கூறி தன் பையை எடுத்து தோளில் மாட்டினான்.
“என்ன இப்படி சொல்லுறான்?” கையிலிருந்த சாவியையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவள் “இந்தா… நீயே ஓட்டு…” என்றுக் கூறி சாவியை அவனிடம் தூக்கிப் போட்டாள். “என்னாலல்லாம் ஓட்ட முடியாது” சாவியை அவள் மீது விட்டெறிந்து வீட்டை விட்டு வெளியே வந்தான் ரோஹித்.
“முடியாதாம்ல… பெரிய இவன்…” அவனை திட்டிக் கொண்டே வீட்டைப் பூட்டி அவன் பின்னால் பார்கிங் வரை நடந்தாள் நீணா. அவள் காரை எடுக்க அருகில் அமர்ந்து வேண்டும் என்றே இரு கைகளையும் தலைக்கு பின்னால் கொடுத்து சாய்ந்து அமர்ந்து “அப்பாடா… ப்ரீயா உக்கார்ந்து வரலாம்…” என்றான்.
அவன் மீது வந்த கோபத்தை கியர் மீதுக் காண்பித்தாள் நீணா. வாய்க்குள் ஏதோ முனகியபடியே வண்டி ஓட்டியவளை ஓரக் கண்ணால் பார்த்து ரசித்து சிரித்தபடியே அமர்ந்திருந்தான் ரோஹித்.
மருத்துவமனைக்குள் காரை நிறுத்தி இறங்கியவள் கதவை அறைந்து சாத்தி விட்டு அவனை திரும்பியும் பார்க்காமல் விறு விறுவென்று நடந்து செல்ல “போடி போ… நைட் கவனிச்சுக்குறேன்…” என்று நினைத்து புன்னகையுடன் உள்ளே வந்தான்.
மோனிகாவும் ஷிவானியும் தன் கன்சல்டிங் ரூம் முன்னால் நிற்பதை அதிசயமாகப் பார்த்து “என்ன காலையிலயே இந்த பக்கம்?” என்றுக் கேட்ட நீணாவின் கை பிடித்து அவள் அறைக்குள் இழுத்துச் சென்றனர் இருவரும்.
“கர்ள்ஸ் டே அவுட் (Girls day out) நீணா… யோசிச்சுப் பாரு…” என்று சிறுப் பிள்ளை போல் குதித்தாள் ஷிவானி. “செம ஜாலியா இருக்கும்டி…” என்றுக் கூறி மோனிகா தன் பெரிய வயிற்றைத் தூக்கி இப்படியும் அப்படியும் திரும்ப “ஹே… பாத்துடி… இப்படி ஆடாத…” என்று எச்சரித்தாள் நீணா.
“போ நீணா… அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… சூப்பரா இருக்கும்டி… நம்ம மூணுப் பேரு… அப்பறம் டாக்டர் வெங்கட்டோட வைப் சுஹாஸினி வராங்க. ஷிவானி பிரண்ட் ஒருத்தி இவ கூடவே ஜாயின் பண்ணாளே… மேகலா… அவளும்… எங்க வீட்டுல தான் ப்ளான். ஹஸ்பன்ட், பாய் பிரண்ட் யாரா இருந்தாலும் தொரத்தி விட்டுட்டு நம்ம மட்டும் நைட் ஸ்டே டி…”
“அவங்களத் தொரத்தி விடுறதுல உனக்கென்ன மோனி இவ்வளவு சந்தோஷம்?”
“போ நீணா… நமக்குன்னு ஒரு டைம் வேண்டாமா? என்னை மாதிரி கல்யாணம் ஆகலன்னாக் கூட பரவாயில்ல… உங்கள மாதிரி கல்யாணம் ஆனவங்க எப்போ தான் பிரண்ட்ஸ் கூட ஆட்டம் போடுறது? அதுக்கு தான் இந்த ஏற்பாடு…” என்று பெருமையுடன் கூறினாள் ஷிவானி.
அவர்களின் சந்தோஷம் நீணாவையும் தொற்றிக் கொள்ள “என்னைக்கு?” என்று ஆர்வமாகக் கேட்டாள். “நாளன்னைக்கு… ஈவ்னிங் ஹாஸ்பிட்டல்லேந்து அப்படியே எங்க வீட்டுக்குப் போயிடலாம்… ஹர்ஷாவ உங்க வீட்டுக்குத் தொரத்தி விட்டுடலாம்… நெக்ஸ்ட் டே லீவ்… சோ அன்னைக்கு ஈவ்னிங் வரைக்கும் நம்ம டைம் தான்…” என்றுத் திட்டத்தை விளக்கினாள் மோனிகா.
உடனே நீணாவும் ஒப்புக் கொண்டாள். நேரம் ஆவதால் மதிய உணவின் போது மீண்டும் இதுக் குறித்து பேசலாம் என்றுக் கூறிக் கிளம்பினர். உடனே ரோஹித்தை அழைத்து இதை கூற எண்ணி மொபைலை கையில் எடுத்தாள் நீணா.
பின் “வேணாம்… எதுக்கு சொல்லணும்? காலையில எப்படி எல்லாம் வெறுப்பேத்தினான்? ஈவ்னிங் தான் சொல்லுவேன்…” என்று யோசித்து மொபைலை உள்ளே வைத்தாள். மதிய உணவு இடைவேளையின் போதும் இத்திட்டத்தை எப்படி செய்யலாக்குவது, அந்த ஒரு நாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று நிறைய பேசினார்.
தன் கேபினிற்கு வந்தவளுக்கு தோழிகளுடன் இவ்வளவு பேசி இருக்கிறோம் ஆனால் ரோஹித்திடம் எதுவும் கூறவில்லையே என்றக் குற்றவுணர்வு எழவே அவன் மொபைலிற்கு கால் செய்தாள். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாலை கூறலாம் என்று விட்டு விட்டாள் நீணா.
முந்தைய தினம் நடந்த கான்பெரன்ஸ் சம்பந்தமாக பிஸியாக இருந்தான் ரோஹித். மாலை நீணாவை கிளம்பி செல்லுமாறு மெசேஜ் மட்டும் அனுப்பி இருந்தான். அவளும் காரை எடுத்துக் கிளம்பினாள்.
இரவு எட்டரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தான் ரோஹித். அவன் உடல் களைத்து மனம் சோர்ந்திருந்தது. நீணாவோ தோழிகளுடன் செலவிடப் போகும் அந்த நாளை எண்ணி உற்சாகத்துடன் இருந்தாள்.
உள்ளே நுழைந்தவனின் கையிலிருந்து பையை வாங்கி அறைக்குள் வைத்து விட்டு வெளியே வந்தாள்.
ரோஹித் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடி இருக்க அவன் அருகில் வந்தமர்ந்தவள் “ரோஹித் உனக்கு ஒண்ணுத் தெரியுமா? நாளன்னைக்கு எங்களுக்கு கர்ள்ஸ் டே அவுட். நானு, மோனி, ஷிவானி, சுஹாஸினி, அப்பறம் ஷிவானி பிரண்ட் மேகலா…
எல்லாரும் மோனி வீட்டுல… நெக்ஸ்ட் டே ஈவ்னிங் வரைக்கும் நாங்க மட்டும் தான்… ஜாலியா… ஐயோ… நெனச்சுப் பார்த்தாலே எப்படி இருக்குத் தெரியுமா?” என்று கன்னத்தில் கை வைத்து கண்களில் கனவு மின்னக் கூறினாள். ரோஹித் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.
அவன் கைகளைப் பற்றி “சூப்பரா இருக்கும்ல ரோஹித்? நான் போகவா?” என்றுக் கேட்டாள். அவள் கைகளிலிருந்து தன் கைகளை உருவிக் கொண்டவன் “உன் இஷ்டம்…” என்றுக் கூறி எழுந்து அறையை நோக்கிச் சென்றான்.
“நீ எதுவும் சொல்ல மாட்டியா ரோஹித்? நான் போகவா வேண்டாமான்னு தான உன்கிட்டக் கேட்குறேன்?”
வேகமாகத் திரும்பி அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தின் முன்னால் குனிந்து “ஒரு விஷயம் இத தான் செய்யப் போறேன்னு முடிவுப் பண்ணிட்டு என்கிட்ட வந்து செய்யவான்னுக் கேட்காத… அப்படிக் கேட்டுட்டு நான் சரின்னு சொல்லுற வரைக்கும் என் உயிர வாங்காத…” என்றான்.
ரோஹித் இதைக் கூறுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை தான். ஆனால் அவள் முகத்தின் முன்னால் குனிந்து அவன் கூறிய விதமும், அவன் குரலும் அவளை சிலையாக மாற்றி இருந்தன.
“அப்படி என்னக் கேட்டுட்டேன்? ஒரு நாள் நான் என் இஷ்டத்துக்கு தனியா இருக்கேன்னு தான கேட்டேன்? ஒண்ணு சரின்னு சொல்லணும்… இல்ல போகாதன்னு சொல்லணும்… அத விட்டுட்டு இப்படி மிரட்டிட்டுப் போறான்… எப்பயும் இவனுக்கு நான் பயந்துட்டே இருக்கணுமா? முடியாது. நான் போக தான் போறேன். இன்னைக்கு இத நான் இவன்கிட்டத் தெளிவா சொல்லாம விடப் போறதில்ல” என்று முடிவெடுத்தவள் எழுந்து அறைக்குள் சென்றாள்.
குளியலறைக்குள் கேட்ட சத்தத்தில் அவன் உள்ளே இருப்பதை உறுதி செய்துக் கொண்டு கதவின் அருகில் நின்று “ரோஹித் இப்போ என்ன உன் பிரச்சன?” என்றுக் கத்தினாள்.
ஷவரை திறந்து விட்டு மிதமான சூட்டில் வந்த நீரின் அடியில் அலுப்புத் தீர கண்களை மூடி அமைதியாக நின்றிருந்த ரோஹித்தின் காதுகளில் நீணாவின் குரல் நாராசமாய் வந்து விழுந்தது.
நீண்டதொரு பெருமூச்சை விட்டு கண்களைத் திறந்து அமைதியாக நின்றான். “நான் நாளன்னைக்குப் போக தான் போறேன்…” என்று மீண்டும் கத்தினாள். “உன் இஷ்டம் போறதுன்னா போன்னு தான நானும் சொன்னேன்?” என்று பதிலுக்கு கத்தி சோப்பை குழைத்து உடலில் தடவ ஆரம்பித்தான்.
“அது என்னப் போறதுன்னா போ… உன்கிட்ட போகவான்னு தான கேட்குறேன்? அதுக்கு பதில் சொல்லு…”
மீண்டும் ஷவரின் அடியில் நின்றவன் இரண்டு கைகளையும் தலையில் வைத்து கண்களை மூடினான்.
கதவில் எட்டி உதைத்து “பதில் சொல்லுடா…” என்று அவள் கத்தவும் வேகமாக ஷவரை மூடி விட்டு அவசரமாக அங்கிருந்த துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு கதவைத் திறந்தான் ரோஹித்.
தலை முதல் பாதம் வரை நீர் சொட்ட அவள் முன் நின்றவன் “என்னடி பிரச்சன உனக்கு? ஹான்… எதுக்கு இப்படி கத்திக்கிட்டே இருக்க? அதான் போறதுன்னா போன்னு சொல்லிட்டேன்ல? இதுக்கு மேல என்ன சொல்லணும்னு எதிர்ப்பார்க்குற?” என்று கோபமாகக் கேட்டான்.
நீரின் அடியில் நீண்ட நேரம் நின்றிருந்ததால் சிவந்திருந்த அவன் கண்கள் கோபத்தினால் மேலும் சிவந்தன. நீணா அவனதுத் தோற்றத்தைக் கண்டு அரண்டதென்னவோ ஒரு நொடி தான். “போகவா? வேண்டாமா? ஏதாவது ஒண்ணு சொல்லு…” என்றாள் வீம்பாக.
நிதானமாக அவளைப் பார்த்தவன் “போகாத…” என்றுக் கூறி கப்போர்டை திறந்து மாற்றுடையை எடுத்தான். நீணா அவனை முறைத்து விட்டு வேகமாக ஹாலிற்கு சென்று எப்போதும் அவள் அமரும் படியில் அமர்ந்தாள். எப்படியும் அவன் தண்ணீர் குடிக்க இந்த படிகளைத் தாண்டி தான் சமையலறைக்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்காகக் காத்திருந்தாள்.
அவள் நினைத்தது போலவே வந்த ரோஹித் படிகளில் இறங்கி அவளைக் கடந்து செல்கையில் எழுந்து “இப்போ எதுக்கு என்னைப் போக வேண்டாம்னு சொல்லுற? எல்லாமே உன் இஷ்டத்துக்கு தான் செய்யணுமா? நெனச்சா திட்டுவ… நெனச்சா கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணுவ… என்ன தான் நெனச்சுட்டு இருக்க உன் மனசுல?” என்று கோபமாகக் கேட்டாள்.
தான் என்ன கூறினோம் இவள் என்ன கூறுகிறாள் என்றுப் புரியாமல் அவளைப் பார்த்தவன் “உன் இஷ்டத்துக்கு என்னவோ பண்ணுன்னு சொல்லிட்டேன்ல… ஆள விடு…” என்றுக் கூறித் திரும்பிப் பார்க்காமல் கிட்செனுள் சென்று பிரிட்ஜை திறந்து பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்தினான். குளிர்ந்த நீர் உள்ளே செல்ல செல்ல அவன் மனமும் அமைதியுற்றது.
“ச்ச… அவ தான் வீம்புப் புடிச்சு கத்துறான்னா… நம்மளும் கூட சேர்ந்து கத்தணுமா? ஹாஸ்பிட்டல்ல இருந்த டென்ஷன அவக்கிட்டப் போய் காமிச்சுட்டோமே… இவளும் சும்மா இருக்காளா? ஒரு தடவ சொன்னா கேட்குறதுக் கிடையாது. எதையாவது முடிவெடுத்துட்டு நம்மளப் படுத்த வேண்டியது…” என்று யோசித்து இன்னும் சிறிது தண்ணீரைப் பருகினான்.
நீணாவின் மனம் தீக்கங்காய் கனன்றுக் கொண்டிருந்தது. “நேத்து எப்படி எல்லாம் நடந்துக்கிட்டான்… கேட்டா நான் ஓவரா பேசுனேன்னு சொன்னான்… இவன் நெனப்பு தான் என்ன? இவன் இஷ்டத்துக்கு எப்போ நினைக்குறானோ அப்போ திட்டுவான்… உடனே வந்து கட்டிப்பிடிச்சா நானும் எதுவும் பேசாம இருக்கணும்…
இன்னைக்கு என்ன கேட்டேன்? போகவா வேணாமான்னு அவன்கிட்ட பெர்மிஷன் தான கேட்டேன்? இவன மீறியா நான் போனேன்? இல்லையே… இதுக்கு எதுக்கு இப்படி பேசிட்டுப் போறான்? எது சொன்னாலும் செஞ்சாலும் பொறுத்துப் போவேன்னு நெனப்பா?” என்று மனதிற்குள் கொதித்துக் கொண்டிருந்தாள்.
“முதல்ல அவள சமாதானம் செய்யணும். பாவம் அவளும் ஹாஸ்பிட்டல்லேருந்து டையர்டா வந்திருப்பா… நான் வேற கத்தி கடுப்பேத்திட்டேன்…” என்று எண்ணியபடி பாட்டிலை பிரிட்ஜில் வைத்து விட்டு வெளியே வந்தான் ரோஹித். அவன் உள்ளே சென்றபோது நின்றிருந்த அதே மேல் படியில் நின்று அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் நீணா.
அவளைக் கண்டதும் கண்களை மூடித் திறந்து தன் கோபத்தை முழுதாகக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவள் அருகில் வந்து “ஓகே… இப்போ என்ன? மோனி வீட்டுக்குப் போகணுமா? போயிட்டு வா… சரியா?” என்றுக் கூறி தன் வலது கரம் நீட்டி அவள் கை பற்ற முயன்றான்.
அவசரமாக கையை நகற்றிப் பின்னால் நகர்ந்தவள் “இப்போ மட்டும் எதுக்கு கொஞ்சுற?” என்றுக் கேட்டாள். மீண்டும் எட்டிப்பார்த்த கோபத்தை அடக்கி “ஹே நான் எங்க கொஞ்சுனேன்? ஓஹ்ஹ் நான் கொஞ்சணும்னு ஆசையா? அதுக்கு தான் இந்த முறைப்பா? சரி வா கொஞ்சுறேன்…” என்று விளையாட்டாகக் கூறி அவளை அணைக்க முயன்றான்.
அருவருப்பாக அவனைப் பார்த்து “ச்சீ தொடாத…” என்று கத்தினாள் நீணா.
“நீணா…”
“எல்லாமே உன் இஷ்டம்… எதையாவது என் பேச்சக் கேட்டு செஞ்சிருக்கியா? நான் உனக்கு முக்கியமே இல்ல… ஏன் இன்னைக்கு வரைக்கும் என் அப்பாவ கூட அங்கிள் னு தான கூப்பிடுற? என் வீட்டையும் மதிக்குறதில்ல…”
“நீணா போதும்…”
“அஜய் கல்யாணம்… உன் தங்கச்சிக்கும் தான பிடிச்சிருந்துது? ஆனா எவ்வளவு கெஞ்ச விட்ட?”
“நீணா வேணாம்…”
“சின்ன சின்ன விஷயத்துல கூட நீ எனக்கு விட்டுக் குடுக்கலையே… வாக்கிங் எந்த பக்கம் போணும்ங்கறதிலிருந்து எல்லாமே உன் இஷ்டம். என் ஆசைக்கு என்ன செஞ்ச? கார் கூட ஓட்ட விடுறதில்ல…”
கண்களை இறுக மூடினான் ரோஹித்.
“என்ன எப்பயாவது பேச விட்டிருக்கியா? வாய தொறந்தாலே கிஸ் பண்ணா?”
ரோஹித் முடியை அழுந்தக் கோதினான்.
“கட்டுன பொண்டாட்டின்னா நீ எப்போ தொட்டாலும் வாய மூடிட்டு இருப்பான்னு நெனப்பா? இப்படி வேற எவக்கிட்டயாவது செஞ்சு பாரு அப்போ தெரியும்…”
பற்களை அழுந்தக் கடித்து இரண்டு கை விரல்களையும் இறுக மூடியும் கோபம் கட்டுக்குள் வராமல் வலது கரம் நீட்டி நீணாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ரோஹித். அவன் அடித்த வேகத்தில் மேல் படியில் நின்றிருந்தவள் தடுமாறி மூன்று படிகளையும் தாண்டிக் கீழே சென்று நின்றாள்.
“என் பொண்டாட்டி என் சரி பாதி… அவளுக்கு மரியாத குடுக்காமக் கீழ்த்தரமா நடத்தணும்னு என்னைக்கும் நான் நெனச்சதில்ல… அப்படி நினைக்குறவன் மிருகம்டி… என்னைக்காவது ஒரு நாள் உனக்கு சுத்தமா விருப்பம் இல்லன்னு தெரிஞ்சு உன்ன நான் வற்புறுத்தி இருக்கேனா?
மனுஷ ஜென்மம்னா கொஞ்சமாவது யோசிக்கணும்… இப்படி அடுத்தவங்க மனசப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம பேசுற நீயெல்லாம்….” என்றுக் கூறி நிறுத்தியவன் வேகமாகத் திரும்பி நடந்து வழியில் இருந்த சோபாவை பலம் கொண்ட மட்டும் எட்டி உதைத்து அறைக்குள் சென்று கதவை அறைந்து சாற்றினான். பிரமை பிடித்தது போல் சிலையென அதிர்ந்து நின்றாள் நீணா.
18
“பிரண்ட்ஸ்… நம்ம எல்லாரும் காலேஜ் ஜாயின் பண்ணி ஒரு மாசம் ஆகிடுச்சு… இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுன்னா படிப்பத் தவிர வேற எதப் பத்தியும் யோசிக்க நேரம் இல்லாமப் போயிடும். சோ நம்மளப் பத்தி நாம தெரிஞ்சுக்க இதான் கரெக்ட் டைம். எல்லாரும் சேர்ந்து எங்கயாவது அவுட்டிங் போகலாம்.
இந்த சண்டே ப்ளான் பண்ணலாம். எங்கப் போகலாம்னு உங்களோட சஜஷன்ஸ் சொல்லுங்க. நாளைக்குள்ள சொல்லிட்டா எல்லா அரேஞ்ச்மென்ட்ஸும் பண்ணிடலாம்” என்றுத் தன் கணீர் குரலில் கூறி வகுப்பறை முன்னே ஆசிரியர்கள் நின்று பாடம் நடத்தவென்று போர்டின் அருகே இருந்த சிறிய மேடையிலிருந்து இறங்கினான் ரோஹித்.
அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த மாணவர்களின் இடையில் இப்போது சலசலப்பு உண்டாகியது. ஊர் சுற்றப் போகும் மகிழ்ச்சியில் சிலர்… வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து செல்லும் ஆனந்தத்தில் சிலர்… வீட்டில் அனுமதிக் கேட்க வேண்டுமே என்ற பயத்தில் சிலர்… எங்கே செல்லலாம் என்ற ஆலோசனையில் சிலர்…
இப்படி எந்த பிரிவிலும் சேர்க்க முடியாதபடி “இப்போ எதுக்கு இந்தத் தேவ இல்லாத ப்ளான்?” என்றுக் கேட்டாள் நீணா. அவள் அருகில் அமர்ந்திருந்த மோனிகா அவளை விநோதமாகப் பார்த்து “ஏன்டி? எல்லாரும் சேர்ந்துப் போனா நல்லா இருக்கும் நீணா… இப்படி சான்ஸ் எல்லாம் அடிக்கடி கிடைக்காதே… உனக்குப் பிடிக்கலையா? நீ வர மாட்டியா?” என்றுக் கேட்டாள்.
அவள் முகம் வாடுவது பொறுக்காமல் “ஹேய்… பிடிக்காமலாம் இல்ல மோனி… நானும் வருவேன்… அதுக்கு எதுக்குடி முகத்த இப்படி வெச்சிருக்க?” என்றுக் கேட்டு அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள் நீணா. உடனேப் பளிச்சென்று புன்னகைத்து “எங்கடி போகலாம்?” என்றுக் கேட்டாள் மோனிகா.
“அதையும் நாளைக்கு அவனே சொல்லுவான்… ஏன் அவசரப்படுற?” என்று சிரிப்புடன் கூறினாள் நீணா. இவர்களின் இந்த உரையாடலை அப்படியே ரோஹித்திடம் ஒப்பித்திருந்தாள் காருண்யா, ரோஹித்தின் பள்ளித் தோழி, மோனிகா நீணாவின் பின்னால் அமர்ந்திருப்பவள்.
“எல்லாரும் வந்து எங்கப் போறோம்னுக் கேட்டா… இவ என்ன ஏன் போறோம்னுக் கேட்குறா? விடு… பாக்கலாம் இவளும் வரளான்னு…” என்றுக் கூறிச் சென்றான் ரோஹித். அவனுடன் நடந்த ஹர்ஷா “கிளாஸ் மொத்தமும் சேர்ந்துப் போகணும்டா… ஒருத்தர் வரலன்னாலும் நல்லா இருக்காது… நம்ம வேணா அந்த பொண்ணுகிட்டப் பேசி பார்க்கலாமா?” என்றுக் கேட்டான்.
“டேய் விடுடா… அதெல்லாம் வருவா. அதான் காருண்யா சொன்னாலே… அவ பிரண்ட் வரதுக்கு ரெடியா இருக்கான்னு. அவளே இவளக் கூட்டிட்டு வந்துடுவா” என்று ரோஹித் கூற இருவரும் சிரித்தபடி நடந்தனர்.
மாலை கிளாஸ் முடிந்த சமயம் ரோஹித்திடம் ஒவ்வொருவராக வந்து அன்று முழுவதும் தாங்கள் யோசித்த இடங்களைத் தெரிவித்தனர்.
ஒரு பேப்பரில் கிறுக்கலாக சிறியக் குறிப்புகள் பல எழுதி அதை காட்டி ஹர்ஷாவுடனும் இன்னும் சில மாணவர்களுடனும் பேசிக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தனர் மோனிகாவும் நீணாவும். நீணாவை பார்த்ததும் காலை காருண்யா கூறியதனைத்தும் நினைவிற்கு வந்தது.
மோனிகா “ஹாய்” எனவும் “ஹாய்… சொல்லுங்க” என்றான் ரோஹித்.
“இவளுக்கு இந்த வீக்கென்ட் கொஞ்சம் வேலை இருக்காம்… அவ வீட்டுக்கு கெஸ்ட் வராங்களாம்… அதனால நம்ம நெக்ஸ்ட் வீக்கென்ட் போலாமான்னுக் கேட்க வந்தோம்”
நீணாவை பார்த்து புன்னகையுடன் “ஏன் அத அவங்க சொல்ல மாட்டாங்களா?” என்றுக் கேட்டான் ரோஹித்.
நீணா “நெக்ஸ்ட் வீக்கென்ட் போக முடியுமா? இந்த வீக்கென்ட் என்னால வர முடியாதுன்னு நினைக்குறேன்” என்றாள் பட்டென்று.
ஹர்ஷாவிற்கு எரிச்சலாக வர அவன் பேச வாய் திறக்கவும் “நான் என் பிரண்ட்டுக்கு பதிலா பேசக் கூடாதுன்னா அப்போ நீங்களும் உங்க பிரண்ட்டுக்கு பதிலா பேசக் கூடாது” என்றாள் மோனிகா. மேலும் எரிச்சலாகி அவளைத் திரும்பிப் பார்த்தான்.
மோனிகா அழகாக புன்னகைத்தபடி நிற்கவும் “சரிங்க மேடம்” என்று கை கட்டி லேசாகக் குனிந்து நின்றுக் கூறினான். அவன் செயலைப் பார்த்து சிரித்தபடியே “என் பேர் மோனிகா. நீங்க?” என்று அவள் கேட்க “ஹர்ஷா” என்றுக் கூறி சிநேகமாய் புன்னகைத்தான்.
அவர்களையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹித் நீணாவின் புறம் திரும்பி “இது நம்ம சேர்ந்துப் போற ப்ளான் நீணா. எல்லாருக்கும் இந்த வாரம் வேலை இருக்காதுன்னு சொல்ல முடியாது. ஆனா அவங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு வரேன்னு சொல்லி இருக்காங்க. இப்போ உங்க ஒருத்துக்காக ப்ளான் மாத்தணுமா? நீங்களே சொல்லுங்க…” என்றான்.
“புரியுது ரோஹித். நான் வர ட்ரை பண்ணுறேன். நாளைக்கு சொல்லவா?”
அவள் இறங்கி வந்துப் பேசுவதாக நினைத்து “ஹப்பா ஒத்துக்கிட்டா” என்று சந்தோஷமாக மோனிகா கூற, நீணாவின் குரலில் இருந்த எரிச்சலைக் கண்டுக் கொண்ட ரோஹித் “உங்க இஷ்டம்” என்றுக் கூறி நகர்ந்தான்.
“நான் பேசி இருந்தா இந்நேரம் கோபப்பட்டிருப்பேன். ரோஹித்கு இருக்க பொறுமை யாருக்கும் வராது” என்று தான் புதியதாய் நட்பு பாராட்டிய மோனிகாவிடம் நண்பனைப் பற்றி பெருமையாகக் கூறினான் ஹர்ஷா. ஆனால் ரோஹித்தின் குரலில் இருந்த அலட்சியம் நீணாவை எரிச்சல் அடையச் செய்ததை அவன் அறியான்.
அன்றிரவு ஹாஸ்டல் அறையில் படுத்திருந்த ரோஹித் நீணாவை குறித்து தான் யோசித்துக் கொண்டிருந்தான். “அத்தனப் பேரு வரேன்னு சொல்லியிருக்காங்க… இவ ஒருத்திக்காக எல்லாத்தையும் மாத்தவாம். ஒண்ணு வரேன்னு சொல்லணும்… இல்ல வர முடியாதுன்னு சொல்லணும்… அது என்ன வர முடியாதுன்னு நினைக்குறேன்?
எந்த முடிவா இருந்தாலும் உடனே சொல்ல வேண்டியது தான? நாளைக்கு சொல்லுறாளாம்… நாளைக்கு மட்டும் என்ன சொல்லுவா… வர முடியாது சாரின்னு சொல்லுவா” என்று யோசித்தவாறே உறங்கிப் போனான்.
காலை வகுப்பிற்குள் வந்ததுமே நேராக ரோஹித்திடம் வந்த நீணா “என்னால நீங்க சொன்ன மாதிரி இந்த வாரம் வர முடியாது ரோஹித். சாரி” என்றாள். ஏதோக் கூற வந்துப் பின் அமைதியாகி தலையை மட்டும் அசைத்தான் ரோஹித்.
“என்ன சொல்லு…”
“ஒண்ணும் இல்ல… மத்தவங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ண முடியாத… பண்ணத் தெரியாத…” என்றுக் கூறி நிறுத்தினான். அவனை எரித்து விடுவதுப் போல் பார்த்த நீணா “எல்லாரும் நான் சொன்னத தான் கேட்கணும்… நான் சொல்லுறபடி தான் நடக்கணும்னு நீ நினைக்குறப்போ…” என்று அவனைப் போலவே வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தி அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்தாள்.
“என்னடி விட்டா ஓவரா பேசுற?”
“யாருடா ஆரம்பிச்சா? நீயா நானா?”
ஹர்ஷாவும் மோனிகாவும் அவர்கள் அருகில் வந்தனர். “என்ன காலையிலயே ரெண்டுப் பேரும் பயங்கர டிஸ்கஷன்ல இருக்கீங்க?” என்றாள் மோனிகா.
புன்னகையுடன் “ஒண்ணும் இல்ல மோனி… இந்த வீக்கென்ட் வரேன்னு சொன்னேன்” என்று அவசரத்தில் மாற்றிக் கூறி விட்டாள் நீணா. “ஹேய் சூப்பர்டி… எங்க நீ வர மாட்டியோன்னு நெனச்சேன்” என்றுக் கூறி அவளைக் கட்டிக் கொண்டாள் மோனிகா.
அதன் பிறகே தான் கூறியதை யோசித்த நீணா மோனிகாவின் தோள் வழியே ரோஹித்தை பார்த்தாள். கீழுதட்டை பற்களால் கடித்து சிரிப்பை அடக்கி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மெத்தையின் அருகில் தரையில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த ரோஹித் பழைய நினைவுகளில் இருந்து வெளியே வந்தான். “ஒரு வேலை முதல் கோணல் முற்றும் கோணலாகி விட்டதோ?” என்று மனதில் தோன்றிய எண்ணத்தை தூர வீசி எரிந்து நிமிர்ந்தான்.
“அன்னைக்கும் அவ அளவுக்கு அதிகமா தான் பேசுனா… ஆனா அப்போ வராத அளவுக்கு கோவம் இப்போ ஏன் வந்துது?” வலது கையை முகத்திற்கு நேராகக் கொண்டு வந்து உள்ளங்கையை வெறித்துப் பாத்தான் ரோஹித். “அடிச்சேனா? என் நீணாவையா? எப்படி முடிஞ்சுது என்னால?” கண்களை இறுக மூடி அதே கையால் தன் தலை முடியை அழுந்தக் கோதினான்.
தரையில் கை ஊன்றி எழுந்து நின்று அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்தவனின் பார்வை மெத்தையின் அருகில் அவர்களின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தில் வந்து நிலைத்தது.
முகம் கொள்ளா சிரிப்புடன் நின்றிருந்தாள் நீணா. அவள் அருகில் மனம் நிறைந்த புன்னகையுடன் தெரிந்தத் தன் முகத்தைப் பார்த்ததும் வேக மூச்சுக்களுடன் போட்டோவின் அருகில் வந்தான்.
“என் நிம்மதியேப் போச்சு…” என்று கத்தி போட்டோவை கவிழ்த்து வைத்தவன் அப்படியும் கோபம் அடங்காமல் அருகில் இருந்த பேணாவை தூக்கி விட்டெறிந்தான். மூச்சு வாங்க தரையில் கிடந்த பேணாவை வெறித்தவன் மெத்தையில் சென்று அமர்ந்தான்.
“ச்ச… எப்படிப்பட்ட வார்த்த… கொஞ்சமாவது அறிவிருக்கணும். என்ன பேசுறோம் யார்க்கிட்ட பேசுறோம்னுக் கொஞ்சம் கூட யோசிக்காம… இதெல்லாம் ஒரு… மனுஷியா அவ… காட்டியிருக்கணும்… மிருகத்தனமா நடக்குறதுன்னா என்னன்னுக் காட்டி இருக்கணும்… அத விட்டுட்டு…
அவ சொன்ன மாதிரி அவளப் புரிஞ்சுக்காம நடந்துக்குறதுன்னா எப்படின்னு நல்லாக் காட்டி இருந்திருக்கணும்… அப்போ இப்படி எல்லாம் பேசத் தோணி இருந்திருக்காதுல்ல… வாய மூடிட்டு அடங்கிப் போயிருப்பா… என் தப்பு தான்… என் தப்பு…” அலைபாயும் பார்வையுடன் கால்களால் தாளம் போட்டபடியே யோசித்துக் கொண்டிருந்தான் ரோஹித்.
தலை வலிப்பதுப் போல் இருக்கவும் அப்படியேப் பின்னால் சாய்ந்து மெத்தையில் படுத்தான். ஒரு கையால் முடியை கோதி இழுத்துப் பிடித்து மறு கையால் இரு கண்களையும் மூடித் தன்னை சமன்படுத்த முயன்றான்.
நீணா நடப்பிற்கு வர சில நிமிடக் காலம் தேவைப்பட்டது. அறை கதவையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களை மூடி உதடுகளை பற்களிடையில் மடக்கிக் கடித்தாள். முழுவதுமாக மடக்க முடியவில்லை… கன்னம் வலித்தது. இடது கையை உயர்த்தி கன்னத்தை லேசாக வருடினாள்.
அதற்கே சுரீரென்ற எரிச்சல் தோன்றி முகம் சுருக்க வைத்தது. முகத்தை சுருக்கினாலோ இன்னும் அதிகமாக வலித்தது. கன்னம் காது கழுத்து அனைத்திலுமே வலியை உணர்ந்தாள். வலித் தெரிந்தப் பிறகு கண்கள் குளம் கட்ட ஆரம்பித்தன. கண்ணீர் வழிந்து கன்னத்தில் விழுந்தபோது மேலும் எரிந்தது.
மெத்தையில் இருந்து எழுந்த ரோஹித் அறை கதவைப் பார்த்தான். “இன்னும் ஏதாவது நல்லா நாலு வார்த்த உரைக்குற மாதிரிக் கேட்டுட்டு வந்திருக்கணும்…” என்று யோசித்தவன் பல்லைக் கடித்தபடி வேகமாக எழுந்து கதவின் அறுகே சென்று அதே வேகத்தில் அதைத் திறந்து வெளியே வந்தான்.
நீணாவை பார்த்தவனது நடையின் வேகம் குறைந்தது. திகைத்துப் போனவனாய் அடி மேல் அடி எடுத்து வைத்து அவள் அருகில் போக பயந்தவன் போல் மெதுவாக ஹாலின் படிகளை நோக்கி நடந்தான். கண்களில் நீர் வழிய நின்றிருந்தவளின் கன்னத்தில் ரோஹித்தின் கை தடம் அப்பட்டமாய் பதிந்திருந்தது.
அவன் வந்ததென்னவோ அவளை கேள்விக் கேட்க தான்… ஆனால் இப்போது பேச்சு வராமல் அவளையேப் பார்த்தபடி மேல் படியில் நின்றான். அவன் படியின் அருகில் வந்தப் பிறகு தான் அவனை கவனித்தாள் நீணா. ரோஹித் இரண்டாவது படியில் கால் வைக்க நீணா அவனை சுட்டேரிப்பதுப் போல் பார்த்து கன்னத்தில் வழிந்த கண்ணீரை வேகமாகத் துடைத்தாள்.
கை பட்டதால் தோன்றிய எரிச்சலில் “ஸ்ஸ்ஸ்…” என்று முகம் சுளித்து நொடியில் அதையும் சமாளித்து வேகமாக படிகளில் ஏறி அறைக்குள் சென்றுவிட்டாள்.
எதுவும் செய்யத் தோன்றாமல் ரோஹித் படியில் அமர்ந்தான். அவள் மீதான கோபம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவள் கன்னத்துக் காயமும் அவள் வேதனையும் மட்டுமே இப்போதுப் பிரதானமாய் தெரிந்தது.
ஒரு நொடி தான் செய்வதறியாது அமர்ந்தான். சட்டென்று எழுந்து பிரிட்ஜை திறந்து அதிலிருந்து ஐஸ் கட்டிகளை எல்லாம் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, ஒரு சிறிய டவலையும் எடுத்துக் கொண்டு விரைந்தான். அறை வாசல் வரை வந்தவனால் அதற்கு மேல் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியவில்லை.
கையில் இருந்தவற்றைப் பார்த்துக் கொண்டே சில நொடிகளைக் கடத்தியவன் ஒரு முடிவுடன் உள்ளே நுழைந்தான். நீணா முகத்தைத் திருப்பிக் கொண்டு மெத்தையில் அமர்ந்திருக்க அருகில் இருந்த டேபிளில் ஐஸ், டவல் இரண்டையும் வைத்துத் திரும்பி நடந்தவன் பாத்ரூம் கதவுத் திறக்கும் சத்தம் கேட்கவும் தயங்கி நின்று மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்.
அவன் எடுத்து வந்திருந்த டவலை பாத்ரூம் அருகில் இருந்த அழுக்கு துணிகள் போட்டு வைக்கும் கூடையுள் போட்டவள் கிண்ணத்தில் இருந்த ஐஸ் கட்டிகளை குளியலறையுள் கொட்டினாள். பின் ரோஹித்தை கண்டுக்கொள்ளாமல் அவனைக் கடந்து வெளியேச் சென்றாள்.
அவள் பின்னோடு வந்தவன் பிரிட்ஜில் வேறு ஐஸ் கட்டி எதுவும் இல்லாததால் அவள் மீண்டும் ஐஸ் ட்ரேயில் தண்ணீர் ஊற்றி வைப்பதைக் கண்டான். “ஐயோ… மொத்தத்தையும் எடுக்காமயாவது இருந்திருக்கலாம்… இது ஐஸ் ஆக எவ்வளவு நேரம் ஆகும்… அது வரைக்கும் எப்படி வலி தாங்குவா? ச்ச… இப்படியா காட்டான் மாதிரி அடிக்குறது…
ரத்தம் கட்டி… கன்னமே எப்படி இருக்கு… எவ்வளவு வலிக்குதோ? வலியக் கூட வெளில சொல்ல மாட்டேங்குறாளே… உடனே ஏதாவது செய்யலைன்னா இது இப்போதைக்கு சரி ஆகாதே… அப்படி என்ன வீம்பு இவளுக்கு? நான் எடுத்துட்டு வந்தத தொட மாட்டாளா? போடி… வலியோடவேக் கெட… எவ்வளவு நேரம்னு நானும் பார்க்குறேன்…” என்று மனதில் நினைத்து அமைதியாக ஹாலிற்கு வந்தான்.
நீணா மீண்டும் அறைக்குள் புகுந்துக் கொண்டாள். நேரம் கடந்துக் கொண்டே இருந்ததேத் தவிர அவள் வெளியே வரவே இல்லை. “இந்நேரம் ஐஸ் ப்ரீஸ் ஆயிருக்குமே… இவ இன்னும் சாப்பிடக் கூட இல்ல… மணி பத்துக்கு மேல ஆச்சு…
இப்போ ஐஸ் எடுத்துக் கொண்டுப் போய் குடுத்தாலும் கொட்டிடுவாளே… பரவாயில்ல நான் கொண்டுப் போறதக் கொட்டிட்டு அவளே வந்து மீதிய எடுத்துக்கட்டும்…” என்று முடிவு செய்து இரண்டுக் கட்டிகளை மட்டும் எடுத்துச் சென்று அவள் அருகில் வைத்தான் ரோஹித்.
அவன் நினைத்ததுப் போலவே செய்தாள் நீணா. அவன் எடுத்து வந்ததை கொட்டி விட்டு டைனிங் ஹாலிற்கு வந்து பிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டி ஒன்றை எடுத்து டவலில் வைத்து சுற்றினாள்.
அவள் கன்னத்தில் ஐஸை வைப்பதும் பின் முகத்தை சுளித்து அதை உடனே எடுப்பதும் மீண்டும் வைப்பதுமாய் இருக்க ஹாலில் அமர்ந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ரண வேதனையாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து அவள் பிரிட்ஜை விட்டு நகர்ந்து சமையலறையுள் சென்று விட ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவன் கண்ணை விட்டு மறைந்தாள்.
“இவ்வளவு நேரமா என்னத்த செய்யுறா?” ரோஹித்தின் பொறுமை பறந்துக் கொண்டிருந்தது. வேகமாக டைனிங் ஹாலிற்கு வந்தவள் கையில் இருந்த ஹாட் பாக்ஸை மேஜை மீது வைத்து விட்டு அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அவள் செல்வதற்காகவேக் காத்திருந்தவன் வேகமாக எழுந்து இருந்த மூன்று படிகளையும் ஒரேத் தாவில் தாண்டி குதித்து டேபிள் அருகில் சென்று ஹாட் பாக்ஸை திறந்துப் பார்த்தான். உள்ளே ஆவி பறக்கும் நூடில்ஸ் இருந்தது.
அது அவனுக்காக… அவ்வளவு வலியிலும்… அவன் மீது கோபம் இருந்தபோதும்… அவனுடைய நீணா அவனுக்காக செய்து வைத்தது.
ரோஹித்திற்கு தொண்டை அடைக்க கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. ஏதோ பல நாள் பட்டினிக் கிடந்தவன் போல அவசரமாக அங்கிருந்த தட்டை எடுத்தவன் கரண்டியை சுற்றித் தேடி, ஒன்றும் கண்ணில் படாமல் ஹாட் பாக்ஸை அப்படியே தட்டில் கவிழ்த்து, உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதையும் மறந்து நின்றபடியே நூடில்ஸை அள்ளி வாயில் அடைத்தான்.
நாக்கு சுட்டு மேலண்ணம் வெந்ததையும் பொருட்படுத்தாமல் மொத்தத்தையும் சாப்பிட்டு முடித்தான். மனம் நிறைந்திருந்தது… ஆனால் லேசாகாமல் கனத்துப் போனது.
“அடிச்சிருக்கக் கூடாது… தப்புப் பண்ணிட்டேன்… என் புத்திய…” என்று யோசித்தவன் அடுத்த நொடியே “அவ பேசுனது ரொம்ப அதிகம்… என்ன கோவமா இருந்தாலும் அத வெளிப்படுத்துற விதம்னு ஒண்ணு இல்ல… அவ சொன்ன வார்த்தைய இனி ஆயுசுக்கும் அவ நெனச்சாலும் மாத்தி வெக்க முடியுமா?” என்று நினைத்து கோபம் கொண்டான்.
யோசித்து யோசித்து சோர்ந்துப் போய் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். “நெஜமாவே நான் அப்படி மிருகம் மாதிரியா நடந்திருக்கேன்? அவளுக்குப் பிடிக்காதப்போ முடியாதப்போ அவள இறுக்கி ஹக் பண்ணதுக் கூட இல்லையே… ஏன் நீணா? ஏன் என்னைப் பத்தி இப்படி நெனச்சுட்ட? நான் அவ்வளவுக் கேவலமானவன் இல்லடி…”
மனம் மரத்துப் போன நிலையில் தலைக் குனிந்து அமர்ந்திருந்தவன் கை காய்ந்து வெகு நேரம் ஆகி விட்டதை உணர்ந்து எழுந்தான். தட்டையும் ஹாட் பாக்ஸையும் கழுவி வைத்து விட்டு சமையலறை விளக்கை அணைத்து படுக்கையறைக்குள் வந்தான். நீணா உறங்கி இருந்தாள்.
அவள் கன்னச் சிவப்பு சற்றேக் குறைந்திருந்தது. அவள் அருகில் படுத்து அதைப் பார்த்துக் கொண்டேத் தூங்கும் தைரியம் தனக்கில்லை என்றுத் தோன்றவே ஹால் சோபாவில் வந்துப் படுத்தவன் எப்போது உறங்கினோம் என்றேத் தெரியாமல் உறங்கிப் போனான்.
பேப்பர் கசங்கும் ஒலி எங்கோ தூரத்தில் கேட்பதுப் போல் இருக்க மெல்ல கண் விழித்துப் பார்த்த ரோஹித் எதிர் சோபாவில் நீணா அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கவும் அவசரமாக மணிப் பார்த்தான். 6.30 ஆகியிருந்தது.
எழுந்துச் சென்று பல் விளக்கிக் குளித்து மருத்துவமனைக்கு செல்லத் தயாராகி வெளியே வந்தான். டைனிங் டேபிளில் முந்தைய தினம் இரவு போலவே நீணா அவனுக்கு உணவு எடுத்து வைத்திருந்தாள்.
19
ரோஹித் டைனிங் ஹாலை அடைந்து அதன் மீதிருந்த ஹாட் பாக்ஸை திறந்தான். உள்ளே சூடாக தோசையும் ஹாட் பாக்ஸின் அருகில் ஒரு பவுலில் சட்னியும் இருந்தது. நீணா சாப்பிட்ட தட்டும் இருந்தது.
இன்று தன்னால் சாப்பிட முடியும் என்றுத் தோன்றவில்லை. இருப்பினும் சாப்பிடாமல் வைக்கவும் மனம் வரவில்லை. டேபிளில் அமர்ந்து முந்தைய தினம் போல் அவள் சாப்பிட்ட தட்டிலேயே உணவை பரிமாறி நிதானமாக சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிட்டு முடித்து எழுந்தவனுக்கு புதிதாக ஒரு சந்தேகம் வந்தது “ஒரு வேல என் கூட கார்ல வரமாட்டேன்னு சொல்லிடுவாளோ?” கை கழுவிக் கொண்டிருந்தவன் வெகு நேரமாக வீட்டில் எந்த சத்தமும் கேட்காததால் அவள் கிளம்பிச் சென்றுவிட்டாளோ என்ற பதட்டத்தில் ஹாலிற்கு ஓடி வந்தான்.
நீணா அங்கில்லை என்றதுமே மனம் அதிகமாக பதைக்கத் துவங்கியது. கடைசி நம்பிக்கையாக மெல்ல அறைக்குள் சென்றுப் பார்த்தான். நீணா உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் கன்னத்துக் கோடுகள் இன்னும் முற்றிலும் மறையாமல் ரோஹித்தை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தன.
தலையில் கை வைத்து “இத எப்படி மறந்தேன்? இதோட எப்படி ஹாஸ்பிட்டல் வருவா? லீவ் சொல்லியிருப்பா… இப்போ நான் போகவா? இல்ல லீவ் போட்டு இவ கூட இருக்கவா?” என்று யோசித்துக் குழம்பினான்.
சில நிமிடங்கள் அவளையேப் பார்த்திருந்தவன் “நான் இருந்து கவனிச்சுக்கிட்டாலும் இவ அத ஏத்துக்கப் போறதில்லன்னு நேத்தேத் தெரிஞ்சுப் போச்சு. இனி லீவ் போட்டு என்ன?” என்று நினைத்து வீட்டைப் பூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.
காரை விட்டு இறங்கியதும் “இன்னைக்கு ஏதோ ரொம்ப தூரம் வந்த மாதிரி இருக்கு… தெனம் வீட்டுல இருந்து வரதுதானே? நீணா இல்லாமையும் தனியா எத்தன நாள் வந்திருக்கோம்?” என்று யோசித்தபடியே தன் அறைக்கு வந்து அமர்ந்தவன் கதவு தட்டப்படும் ஓசையில் நிமிர்ந்து “கம் இன்” என்றான்.
உள்ளே நுழைந்த ஹர்ஷா “என்னடா ஆச்சு உனக்கு? கூப்பிட கூப்பிட காது கேட்காதவன் மாதிரி நீ பாட்டுக்குப் போற?” என்றான்.
“நம்ம அளவுக்கதிகமா யோசிக்குறோமோ? ச்ச இப்படி அடுத்தவங்க கவனிக்குற அளவுக்கு இனி நடந்துக்கக் கூடாது…” என்று முடிவெடுத்த ரோஹித் “ஒண்ணும் இல்லடா… நம்ம டாக்டர் மெய்யப்பன் கூட பேசுனதப் பத்திதான் நேத்துல இருந்து யோசிச்சுட்டு இருந்தேன். சாரி நீ கூப்பிட்டத கவனிக்கல… வா உட்காரு…” என்று முன்னால் இருந்த இருக்கையைக் காட்டி ஹர்ஷாவை அமர சொல்லி அவனுக்கு அதை விரிவாக விளக்கினான்.
ஹர்ஷா சென்றப் பிறகு நினைவு முழுவதும் நீணாவையே சுற்றி வர நேரத்தை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தான் ரோஹித். பள்ளியில் கடைசி மணி அடிக்க காத்திருக்கும் மாணவனை போல் மாலை 6 மணி ஆவதற்காகக் காத்திருந்தான்.
காரை விரட்டியவனுக்கு காலையில் தூரமாக தெரிந்த பயணம் இப்போது விரைவிலேயே ஒரு முடிவுக்கு வந்ததாகப்பட்டது.
வீட்டில் விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தன… எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன… வீட்டில் இருந்த ஒரே வித்தியாசம் – அமைதி.
படுக்கையறையில் நீணா இருக்கக்கூடும் என்றுத் தோன்ற ஷூவை கழட்டிவிட்டு ஆவலாக அறை வாயிலை பார்த்தான். அவன் சற்றும் எதிர்ப்பாரா விதமாக சமையலறையிலிருந்து வெளியே வந்து படிகளில் ஏறினாள் நீணா. ஆனால் அங்கே ஒரு உருவம் நிற்பதை உணர்ந்ததாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை.
அவளின் இந்த செயல் ரோஹித்தின் கோபத்தை கிளறிவிட்டது. “கண்டுக்காம போறா… நேத்தும் இப்படிதான் நான் எடுத்துட்டு வந்த ஐஸ் எதையும் தொடாம இருந்தா…”
அவளை குற்றம் சாட்டிய மனம் “ஆமா… இது நம்ம எப்பயும் பண்ணுறதுதானே… ஏன் அன்னைக்கு அவ அம்மா வீட்டுல இருந்தப்போகூட அவ மேல கோவம்னு அவ வெச்ச ஸ்வீட்ட தொடாம இருந்தோமே…” என்று அவளுக்கு வக்காலத்து வாங்கவும் செய்தது.
இப்படியே அவளை குற்றம் சாட்டியும் அவளுக்கு சாதகமாகவும் யோசித்தே சோர்ந்துப் போனான் ரோஹித். குளித்து வந்தவன் டி வீ பார்க்கும் ஆர்வம் இல்லாமல் ஏதாவது படிக்கலாம் என்று ஸ்டடி ரூமினுள் வந்தான். நீணா அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து ஏதோ குறிப்பெழுதிக் கொண்டிருந்தாள்.
கிட்டத்தட்ட இருபத்திநான்கு மணி நேரம் கழித்து அவளுடன் ஒரே அறையில் இருப்பதற்கான வாய்ப்பு…
முதலில் வெளியே சென்று விடலாம் என்று யோசித்தவன் பின் மனதை மாற்றிக் கொண்டு அங்கிருந்த மற்றொரு மேஜை நாற்காலி அருகில் சென்றான். ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து குத்துமதிப்பாக அதன் நடு பக்கத்தை விரித்து அமர்ந்தவனின் பார்வை நீணாவிடமே இருந்தது.
இப்போதும் அவளிடம் அதே அலட்சியம். அவளிடம் சிறு அசைவு தெரிந்தாலும் குனிந்து புத்தகத்தை பார்ப்பான் ரோஹித். அந்த அறையில் அவள் அமர்ந்திருந்த ஒரு மணி நேரமும் அவனின் செயல் யாவையும் ஏதோ திருட்டுத்தனமாக ஒரு பெண்ணை பார்ப்பது போன்றே இருந்தது.
அவள் எழுந்து சென்று வெகு நேரம் கழித்து அவன் வெளியே வந்தபோது நீணா உறங்கியிருந்தாள். உணவு தயாராய் இருந்து. சாப்பிட்டு முடித்து அறைக்குள் வந்தவன் இப்போது நீணாவின் கன்னத்தில் அவன் அடித்ததற்கான எந்த சுவடும் தெரியவில்லை என்றதும் தைரியமாக சென்று அவள் அருகில் அமர்ந்தான்.
வேகமாக தலையணை ஒன்றை எடுத்து இருவருக்கும் நடுவில் வைத்து “எனக்கு என் மேல நம்பிக்க இல்லப்பா…” என்று வாய்விட்டேக் கூறியவன் பின் “இவ பேசுன பேச்சுக்கு…” என்று நினைத்து தலையணையை எடுத்து அதன் இடத்திலேயே வைத்தான்.
அவன் இப்படியே பல முறை தலையணையை இடம் மாற்றிக் கொண்டிருக்க நீணாவிடம் அசைவு தெரிந்தது. சட்டென்று படுத்து கண்களை மூடியவன் காலை வரை கண்களை திறக்கவே இல்லை.
அடுத்த ஒரு நாளிலேயே நொந்து போனான் ரோஹித். நீணா வீட்டிற்குள் எப்போதும் போல் வேலைகள் செய்தாள். தன்னுடன் காரில் மருத்துவமனைக்கு வர மாட்டாளோ என்று அவன் நினைக்க அமைதியாக வீட்டைப் பூட்டி விட்டு அவன் அருகில் நடந்து வந்து காரில் அமர்ந்துக் கொண்டாள். அவன் பக்கம் மறந்தும் திரும்பவில்லை.
மருத்துவமனையில் அன்று முழுவதும் அவள் அவன் கண்களில் படவே இல்லை. அவளுடன் சாப்பிடுவதற்காகவே மதியம் தன் வேலைகளை விரைந்து முடித்துக் கொண்டு வந்தான். ஆனால் நீணா அதற்குள் சாப்பிட்டு சென்றுவிட்டதாக மோனிகா கூறினாள்.
இரவு கார் பயணத்தின் போதும் அதே அமைதி. வீட்டிற்குள் வந்ததும் நீணா உடை மாற்ற அறைக்குள் சென்றுவிட ரோஹித் தலையை இரு கைகளிலும் தாங்கி சோபாவில் அமர்ந்தான்.
“இவ பேசுனா மண்டைக்குள்ள வண்டு கொடையுது… பேசலன்னா மண்ட வெடிக்குது… ஏன்டி என் உயிர வாங்குற?” என்று மானசீகமாக அவளிடம் கேள்வி கேட்டு கண்களை மூடினான்.
அருகில் நிழலாட கண்களை திறந்துப் பார்த்தவனின் முன்பு ஒரு கப்பில் டீயை வைத்தாள் நீணா. அவள் இன்னும் உடை மாற்றியிருக்கவில்லை. அப்படியென்றால் தான் அமர்ந்திருந்த நிலையை பார்த்தவுடன் நேராக சமையலறையுள் சென்றுவிட்டாளா?
“எனக்கு ஒடம்பு சரி இல்லன்னு சொன்னாக் கூட குளிச்சுட்டு வந்து தான் கஞ்சி வெச்சுக் குடுப்பியா?”
அன்றொரு நாள் இதற்காக அவளிடம் வாக்குவாதம் செய்தது நினைவு வந்து அவளை நிமிர்ந்துப் பார்த்தான். கப்பை டேபிள் மீது வைத்துத் திரும்புகையில் ஒரே ஒரு நொடி அவனை முறைத்துவிட்டு சென்றாள் நீணா.
“இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல…” என்று நினைத்து சூடான தேநீரை பருகியவன் எழுந்து குளிக்கச் சென்றான். அவன் வெளியே வந்தபோது நீணா உறங்கிக் கொண்டிருந்தாள்.
“அடிப்பாவி அதுக்குள்ள தூங்கிட்டியா? சாப்பிட்டாளா இல்லையா?” வேகமாக டைனிங் ஹாலிற்கு சென்றுப் பார்த்தான். எல்லாம் தயாராக இருந்தது. கூடவே அவள் சாப்பிட்ட தட்டும்…
நீணா வெறும் வயிற்றுடன் உறங்கவில்லை என்பது நிம்மதியை தந்தாலும் மீண்டும் தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டுமே என்று நினைத்து வெறுப்பாக இருந்தது.
இரவு அருகில் உறங்கும் மனைவியையே பார்த்தவன் “இப்படியே எத்தன நாளைக்கு இருப்ப நீணா?” என்று அவளிடம் கேட்டான். அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
சிறிது நேரம் கண்களை மூடி படுத்திருந்தவன் வேகமாக மெத்தையில் எழுந்தமர்ந்தான். “அப்படி என்னடி வீம்பு உனக்கு? பாக்கலாம்டி… என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும். அமா… தூங்கிக்கிட்டு இருக்கவக்கிட்ட வாய் கிழிய பேசி மட்டும் என்ன பிரயோஜனம்? நாளையிலேருந்து பாருடி… பாரு…”
மெத்தையில் தலையணைகளை எல்லாம் எடுத்துப் பார்த்து தேடியவன் தான் தேடியது எங்கும் கிடைக்காமல் இறுதியாக நீணாவின் தலையணை மட்டுமே எஞ்சியிருக்க ஒரு நொடி “வேண்டாம்” என்று யோசித்து பின் ஆழ மூச்சை எடுத்து அவள் தூக்கம் கலையாமல் அவள் தலையை தூக்கிப் பிடித்து தலையணைக்கு அடியில் இருந்த இரண்டு மொபைலையும் எடுத்தான்.
தன் கையில் ஏந்தியிருந்த அவள் முகத்தை இமைக்க மறந்து பார்த்தவன் மெல்ல அவள் தலையை தலையணையில் வசதியாக வைத்துவிட்டு அப்படியே அமர்ந்திருந்தான்.
“உப்ப்ப்… ச்ச்… இப்போ எதுக்கு நமக்கு கையெல்லாம் நடுங்குது? இதுக்கே இப்படின்னா நாளையிலிருந்து எப்படி இவள சமாளிக்குறது? ம்ம்ஹும்… தைரியமா இருக்கணும் ரோஹித்.
முதல்ல இந்த அலாரம் டோன் மாத்தணும். காலங்காத்தால இப்படியா அலற விடுவாங்க?” தனக்குப் பிடித்த ஒரு பாடலை அலாரம் டோனாக வைத்தவன் அதன் ஒலியை குறைத்து வைக்கவும் மறக்கவில்லை. இருவரின் கைபேசியிலும் அதையே மாற்றி வைத்தான்.
அவசரமாக கட்டிலில் இருந்து இறங்கி குறுக்கும் நெடுக்கும் நடந்து பல விஷயங்களைக் குறித்து யோசித்து நிறைய தீர்மானங்களை எடுத்தான். அதன் பிறகே மனம் நிம்மதியடைய மீண்டும் நீணாவின் அருகில் படுத்து உறங்கினான்.
நல்ல உறக்கத்தில் இருந்தவனை மெல்லிசையாய் ஒலித்த அலாரம் எழுப்பியது. புன்னகையுடன் கண்களை திறந்துப் பார்த்தவன் அருகில் நீணா இல்லாததை கண்டு வேகமாக எழுந்தான். குளியறையில் இருந்து வந்த சத்தத்தில் அவள் இவனுக்கு முன்பே எழுந்துவிட்டதுப் புரிந்தது.
இன்னும் ஒலித்துக் கொண்டிருந்த அலாரத்தை நிறுத்தி “பாட்டு ஒண்ணுதான் கொறச்சல்” என்று அலுத்துக் கொண்டபடியே விருந்தினர் அறைக்கு சென்று குளித்துத் தயாராகி வந்தான்.
வாக்கிங் உடையுடன் வீட்டைப் பூட்டி வெளியே வந்ததும் பார்க் இருக்கும் திசையை நோக்கி நடந்தவன் சிறிது தூரம் சென்றப் பின்பு தான் நீணா உடன் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்பதை கவனித்து நின்றுத் திரும்பிப் பார்த்தான். அவள் வீடுகளின் ஊடே நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
முதலில் அவளை புறக்கணித்து மேலும் இரண்டடி நடந்தவன் தனியாக நடக்கும் விருப்பமில்லாமல் ஓடி சென்று அவள் அருகில் நடக்க ஆரம்பித்தான். “உனக்கு பார்க் சுத்தி நடக்கதான பிடிக்கும்?” தொண்டை வரை வந்த கேள்வியை “அவ பேசாதப்போ நான் மட்டும் என்னத்துக்கு பேசணும்?” என்று நினைத்து கேட்காமல் விட்டான்.
ஹர்ஷாவின் வீட்டருகில் வந்தபோது அவன் மோனிகாவுடன் வெளியே நின்றுக் கொண்டிருந்தான். “குட் மார்னிங்” என்றுக் கூறிய நீணாவின் குரலை இரண்டு நாட்களுக்குப் பின் கேட்கும் ரோஹித் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
“குட் மார்னிங். ரோஹித் இன்னைக்கு மோனிக்கு செக்கப் இருக்கு. நான் கொஞ்சம் லேட்டா வருவேன்டா… உன்னாலக் கொஞ்சம் சீக்கிரம் போக முடியுமா?” என்று ஹர்ஷா கேட்க “அது நீணா கையில தான் இருக்கு. அவ தான சமைச்சு ரோஹித்தையும் ரெடி பண்ணணும்…” என்றாள் மோனிகா.
“ஹே போடி… நீ மெதுவா வா ஹர்ஷா. ரோஹித் ரெடி பண்ண வேண்டியது என் பொறுப்பு. என்ன ரோஹித்?” என்று அவனிடம் கேட்ட நீணாவை பார்த்து வாய் பிளந்து நின்றான் ரோஹித். “ம்ம்” என்று தலையை மட்டும் தான் ஆட்ட முடிந்தது அவனால்.
வீட்டின் உள்ளிருந்து கல்யாணி வந்து “சம்பந்தியம்மா பேசுறாங்க… மோனி வா” என்றழைக்க “அம்மா பேசுறாங்க போல… சரிடா பாக்கலாம்” என்றுக் கூறி மோனிகாவுடன் உள்ளே சென்றான் ஹர்ஷா.
திரும்பி நடந்தபோது ரோஹித்தை உற்சாகம் தொற்றிக் கொண்டது. நீணா பேசிவிட்டாள்… தன்னிடம் பேசிவிட்டாள்… இதை விட வேறு என்ன வேண்டும்?
“நம்ம என்னென்னமோ ப்ளான் பண்ணோம்… கடைசியில அலாரம் மாத்தி வெச்சு எழுந்திரிச்சதுக்கே அவ மனசு மாறிட்டாளா?” என்று நினைத்தவன் நிமிர்ந்துப் பார்த்தபோது நீணா அவனை விட்டு பத்தடி முன்னே சென்றிருந்தாள்.
“யோசிச்சுட்டே மெதுவா நடந்துட்டோம் போல” நடையின் வேகத்தைக் கூட்டி அவள் அருகில் சென்று பேசுவதற்கு வாயை திறந்தான். அவளோ எதிர் திசையில் வேடிக்கைப் பார்த்தபடியே வேகமாக நடந்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ சந்தேகம் தோன்ற அப்படியே நின்றான் ரோஹித். நீணா அதை கவனித்ததாகக் கூட தெரியவில்லை… விடுவிடுவென்று நடந்து சென்றுவிட்டாள். தலை குனிந்து அவ்விடத்திலேயே சிறிது நேரம் நின்றவன் முகம் பளிச்சிட நிமிர்ந்தான். “அப்போ ஹர்ஷா மோனிகா முன்னாடி என்கிட்ட பேசுவியா?”
அன்றைய கார் பயணமும் அமைதியாக செல்ல “இதுக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டுறேன்…” என்று சொல்லிக் கொண்டவன் காலை ஹர்ஷா வரும்வரை பொறுமையாகக் காத்திருந்தான். அவன் வந்ததும் மோனிகாவை குறித்து விசாரித்துவிட்டு “ஹர்ஷா நீயும் மோனியும் பேசாம நாளையிலிருந்து எங்கக்கூடவே கார்ல வந்துடுங்களேன்…” என்றான்.
“ஹே உனக்குத் தெரியாதா? மோனி இன்னையோட லீவ் எடுக்கப் போறா… ரெண்டுப் பேர் வீட்டுலயும் ஒரே திட்டு. இன்னும் எதுக்கு அவ ஹாஸ்பிட்டல் போகணும்னு… நீணா சொல்லலையா?”
ரோஹித்தின் முகம் காற்று போன பலூன் போல் சுருங்கிவிட்டது. “சொன்னாடா… டேட் மறந்துட்டேன்… பேசாம நீ கார் வீட்டுல விட்டுட்டு எங்களோட வந்துடுடா. ஏதாவது எமேஜென்சின்னா அவங்களுக்கு தேவைப்ப்படும்ல?”
“அப்படி ஏதாவதுன்னா நம்ம காம்பவுண்ட் உள்ளயே அம்புலன்ஸ் இருக்குடா. நான் வீட்டுக்கு சீக்கிரம் போகணுமே… அதுக்கு எனக்கு கார் வேணும் ரோஹித்”
அவன் சொல்வதும் சரிதான். தன் சுயநலத்திற்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்த ரோஹித் “ஓகேடா… பார்த்துக்கோ. கிளம்புறதுக்கு முன்னாடி நான் மோனி கிட்ட பேசுறேன்” என்றுக் கூறி தன் கன்சல்டேஷன் ரூமினுள் வந்தமர்ந்தான்.
அடுத்து வந்த பேஷன்ட்டின் பெயரை பார்த்ததும் அவன் முகம் மீண்டும் பிரகாசமானது… “லக்ஷ்மி”. அந்த பேஷன்ட் சென்றதும் மொபைலை எடுத்து டாக்டர் லக்ஷ்மியின் எண்ணிற்கு அழைத்தான்.
“ரோஹித்… நானே உங்களுக்கு கால் பண்ணணும்னு நெனச்சுட்டு இருந்தேன். என் ஹஸ்பன்ட் ஒரு மீட்டிங்க்காக பேங்களூர் போறாங்க ரோஹித். இன்னைக்கு ஈவ்னிங் கெளம்பிடுவாங்க. இவங்க எங்க போனாலும் கார் எடுத்துட்டுப் போயிடுறாங்க நான் உங்கள தொந்தரவு செய்ய வேண்டியதா இருக்கு. சாரி… இப் யூ டோன்ட் மைன்ட் ரெண்டு நாள் என்னை டிராப் பண்ண முடியுமா?”
“கடவுள் நல்லவங்கள என்னைக்கும் கை விடமாட்டார்” என்று மனதிற்குள் எண்ணிய ரோஹித் “நோ ப்ராப்ளம் டாக்டர். நைட் நாங்க கிளம்பும்போது கால் பண்ணுறேன்” என்றுக் கூறி வைத்தான். அவன் மனத்திரையில் கார் பயணத்தின்போது பழையபடி அவனுடன் வளவளத்துக் கொண்டு வரும் நீணா வந்துப் போனாள்.
இன்று எப்படியும் அவளுடன் மதிய உணவை சாப்பிட வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் முடித்தவன் பான்ட்ரிக்கு சென்றான். மோனிகா இன்றுடன் லீவில் செல்கிறாள் என்பதால் ஷிவானியும் நீணாவும் சோகத்தில் இருக்க மோனி அவர்கள் இருவருக்கும் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நிலைமை இப்படி இருக்கையில் ரோஹித் எங்கிருந்து பேசி சிரிப்பது? அவனும் அமைதியாக சாப்பிட்டு எழுந்து வந்துவிட்டான்.
இரவு பார்க்கிங்கிலிருந்து காரை எடுத்து வந்தவன் மருத்துவமனை வாயிலில் லக்ஷ்மியுடன் நின்றிருந்த நீணாவை ஆர்வமாகப் பார்த்தான். ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டே வந்தவள் லக்ஷ்மியுடன் பின் இருக்கையில் அமர்ந்துவிட்டாள். ரோஹித் அதையும் பொறுத்துக் கொண்டான்.
ஆனால் வீடு வந்து சேரும் வரை அவனைக் கண்டுக் கொள்ளாமல் வாயையும் மூடாமல் இருவரும் பேசிக் கொண்டே வர அதை தான் அவனால் தாங்க முடியாமல் போனது.
20
நீணா சமைத்துக் கொண்டிருக்க அங்கு செல்லலாமா வேண்டாமா என்று வெகு நேரம் யோசித்த ரோஹித் “தினம் சேர்ந்து தான சமைக்குறோம்? நேத்து ஏதோ பயமா இருந்துது அதனால கிச்சென் உள்ளப் போகல… இன்னைக்குப் போகலாம்“ என்று முடிவெடுத்து சமையலறை நோக்கி நடந்தான்.
“இன்னைக்கு மட்டும் பயம் போயிடுச்சாக்கும்?“ என்ற மனசாட்சியின் கேலி அவன் காதுகளில் விழவே இல்லை. உள்ளே நுழைந்ததும் என்ன செய்வதென்றுப் புரியாமல் சில நொடிகள் நின்றான்.
மெதுவாக அடுப்பின் அருகில் சென்று நீணா என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாள் என்றுப் பார்த்தவன் அவள் நகர்ந்து செல்லும் நேரம் அடுப்பில் இருப்பதைக் கிளருவதும் அவள் அருகில் வந்தால் இரண்டடி தள்ளி ஒதுங்கி நிற்பதுமாக இருந்தான்.
சில நிமிடங்களிலேயே அது அவனுக்கு அலுத்துவிட வேகமாக வெளியே வந்து படிகளில் அமர்ந்து ஓங்கி தலையில் அடித்துக் கொண்டான். “எப்பயும் சமையலுக்கு ஹெல்ப் பண்ணுற மாதிரி எதையாவது பண்ண வேண்டியது தான? அத விட்டுட்டு இப்படி இங்க உக்காந்துப் புலம்பினா மட்டும் எல்லாம் சரியாகிடுமா?“
அவன் சிந்தனையைக் கலைத்தது வீட்டின் அழைப்பு மணி. ரொஹித் எழும் முன் நீணா அவனைக் கடந்துச் சென்று கதவை திறந்தாள். வெளியே நின்றிருந்தவரைப் பார்த்ததும் கண்களை இறுக மூடித் திறந்து “சொல்லுங்க அங்கிள்“ என்றாள்.
“உங்களுக்கு லெட்டர் வந்திருந்துது நீணா. நான் கொஞ்ச நாளா ஊருல இல்ல… இன்னைக்கு தான் வந்தேன். நீங்க வீட்டுக்குள்ள இருந்தா சத்தமே வரதில்ல… ஹஹஹா… உள்ள தான் இருக்கீங்களா? ரோஹித் இல்ல?“ என்றுக் கேட்டார் சுந்தரேசன்.
அவ்வளவு நேரம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ரோஹித் படியிலிருந்து எழுந்து கதவருகில் சென்று நீணாவின் தோளில் கை போட்டு “இருக்கேன் மிஸ்டர் சுந்தரேசன். அப்போவே வந்துட்டோம். குக் பண்ணிட்டு இருந்தோம். லெட்டர் தான? குடுங்க. அதோட இன்னொரு விஷயம் மிஸ்டர் சுந்தரேசன்… நாங்க டெய்லி எங்களோட லெட்டர் பாக்ஸ் செக் பண்ணிட்டு தான் இருக்கோம். சோ நீங்க இப்படி சிரமப்படாதீங்க“ என்றுக் கூறி செயற்கையாய் புன்னகைத்தான்.
“ஓகே அங்கிள் குட் நைட்“ என்று நீணா கூற “குட் நைட் மா“ என்ற சுந்தரேசன் திரும்பி நடக்க ஆரம்பித்தார். அவள் தோளிலிருந்து கையை எடுத்து கதவை மூடி தாழிட்டு “திருந்தாத ஜென்மங்க“ என்று முனுமுனுத்தபடியே அறைக்குள் சென்று விட்டான் ரோஹித்.
அவன் செல்வதையே பார்த்த நீணா இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றி சமையலறையுள் புகுந்துக் கொண்டாள். கட்டிலில் அமர்ந்திருந்ததும் “இவரு டெய்லி வந்தாக் கூட நல்லா இருக்கும் போலயே… அவசரப்பட்டு வராதீங்கன்னு சொல்லிட்டோமோ?“ என்று நீணா மீது போட்டிருந்த தன் கையை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
அவனின் கைபேசி அழைக்க எடுத்துப் பார்த்தவன் லத்திகாவின் பெயரை கண்டதும் ஆன் செய்து “சொல்லு மா… எப்படி இருக்க?“ என்றுக் கேட்டான். “நான் நல்லா இருக்கேன் அண்ணா…“ என்றவள் அமெரிக்கா குறித்து அடுத்த அரை மணி நேரத்திற்கு பலதும் கூறினாள். அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்பது இதிலிருந்தே தெரியா ரோஹித் நிம்மதியடைந்தான்.
லத்திகாவின் கையிலிருந்து போனை வாங்கிய அஜய் “அம்மா தாயே இது லோக்கல் கால் இல்ல…“ என்றுக் கூறி “எப்படி ரோஹித் இருக்க?“ என்றுக் கேட்டான்.
“எப்படியோ அவள சமாளிச்சுட்டப் போலருக்கு… இத்தன நாளா போன் பண்ணாதப்பயே நெனச்சேன். நான் சொன்ன மாதிரியே எங்கள எல்லாம் மறந்துட்டாளா?“
கிண்டலாகக் கேட்டாலும் அந்த கேள்வியில் இருந்த வருத்தம் அஜய்யை வருத்தியது. தானாவது போன் செய்து பேசியிருக்க வேண்டும் என்று நினைத்தவன் “அப்படியெல்லாம் இல்லடா… இவ பேசுனாலே உங்கள பத்திதான் பேசுறா… இங்க செட்டில் ஆக கொஞ்சம் டைம் ஆயிடுச்சு. அதான் கூப்பிட முடியல“ என்றான்.
“ஹேய் நீங்க சந்தோஷமா இருந்தா எங்களுக்கும் சந்தோஷம் தான் அஜய்“ என்றவன் திடீரென்று அந்த ஆசை தோன்ற “நீணா கிட்ட பேசுறியா? கூப்பிடவா?“ என்றுக் கேட்டான். “இல்ல ரோஹித். இன்னைக்கு ஈவ்னிங் அவக்கிட்ட பேசிட்டோம். உன்கிட்ட பேச தான் கூப்பிட்டேன். வெச்சிடவா?“
ரோஹித் ஒரு நொடி அமைதிக்கு பின் “சரி அஜய்“ என்றுக் கூறி வைத்தான். நீணா தன்னை சாப்பிட அழைப்பாள் என்றுக் காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே எஞ்சியது. அவள் சாப்பிட்டு வந்து படுத்துவிட்டாள்.
வேறு வழியின்றி டைனிங் ஹாலிற்கு வந்தவன் “தெனம் இவ சாப்பிட்ட தட்டுல சாப்பிடுறது ஒண்ணு மட்டும் தான் மிச்சம்… எல்லா வீட்டுலையும் பொண்டாட்டி தான புருஷன் தட்டுல சாப்பிடுவாங்க? நம்ம நெலம இப்படி ஆயிடுச்சே…“ என்று புலம்பியபடியே சாப்பிட்டு எழுந்தான்.
அடுத்து வந்த இரண்டு நாட்களில் சுத்தமாக அவனைக் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் நீணாவை பார்க்க எரிச்சல், கோபம், தன்னிரக்கம், இயலாமை என்று பல உணர்ச்சிகள் தோன்றி ரோஹித்தை அலைக்கழித்தன.
“அமைதியா போற கார் ட்ரைவையும் நான் தான் கெடுத்துக்கிட்டேன். டாக்டர் லக்ஷ்மி கூட இருந்தா இவ என்கூட பேசுவான்னுப் பார்த்தா… ஹ்ம்ம்… டிரைவர் வேலை பார்க்க விட்டுட்டா…“ அவனை மேலும் சோதிக்காமல் லக்ஷ்மியின் கணவரும் வந்துவிட அதன் பின் காரிலும் அமைதி.
இதற்கு மேல் என்ன செய்வதென்று யோசித்துக் குழம்பியவனை காப்பாற்றவென்றே வந்து சேர்ந்தார் டாக்டர் மெய்யப்பன். “ரோஹித் அன்னைக்கு நாங்க குடும்பத்தோட மருதமலை போற ப்ளான் டிராப் ஆயிடுச்சு. இந்த வீக்கென்ட் போறோம். நீணாவும் நீயும் ப்ரீயா?“
சந்தோஷமாக உடனே ஒப்புக் கொண்டான் ரோஹித். ஆனால் அவன் எதிர்ப்பார்த்த எதுவும் நடக்கவில்லை. மெய்யப்பன் அவரின் மனைவி, மகள், மகன் குடும்பத்தினருடன் ஒரு காரிலும் ரோஹித் நீணா தங்கள் காரிலும் மருதமலைக்கு சென்றனர்.
கோயிலில் நீணா பெண்களுடன் சென்று விட ரோஹித் மெய்யப்பனின் மகனுடனும் மருமகனுடனும் சேர்ந்து அவர்கள் வீட்டு நான்கு பிள்ளைகளை மேய்க்கும் வேலையை ஏற்றுக் கொண்டான்.
ஓடி ஓடி களைத்து ஓரிடத்தில் அமர்ந்தவன் “ஷப்பா…. முடியலடா சாமி… இதுக்கு பேசாம வீட்டுலயே இவ மூஞ்சிய பார்த்துட்டு இருந்திருக்கலாமே… எப்படியாவது பேசிட மாட்டோமான்னு ஒரு நப்பாசையில வந்ததுக்கு இந்த குட்டி பிசாசுங்க பின்னாடி நல்லா ஓடுறேன்…“ என்று பெருமூச்சு விட்டு தண்ணீர் அருந்தினான்.
எப்போதடா அங்கிருந்துக் கிளம்புவோம் என்றாகிவிட்டது. இரவு வீட்டிற்குள் வந்ததும் உணவை கூட மறந்து படுக்கையில் விழுந்தவன் காலை பத்து மணியாகியும் எழவில்லை. அவனின் மொபைல் ஒலிக்க கண்களை திறக்க முடியாமல் அருகில் துழாவி அதை எடுத்து காதில் வைத்தான்.
“ரோஹித் அப்பா பேசுறேன்“ சிவராமனின் குரலில் மெத்தையில் எழுந்தமர்ந்து “சொல்லுங்கப்பா“ என்றான். “இந்த மாசம் செக்கப் இருக்குது ரோஹித். நானும் அம்மாவும் சென்னை வரலாமுன்னு இருக்குறோம். நாளைக்கு காலையில வந்துடுவோம் பா… உங்களுக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லையே?“
ரோஹித்தின் மனம் வேகமாக கணக்குப் போட்டது. “வீட்டுக்கு வெளியில தானடி என்னை இப்படி சுத்தவிட்ட? இப்போ என் அப்பா அம்மா முன்னாடி என்ன பண்ணுறன்னு பாக்கலாம்“
“சரிங்க பா… வாங்க. பஸ் ஸ்டாண்ட் வரணுமாங்க பா?“
“வேணாம் ரோஹித்… வெச்சுடுறேன்“
உடனே இதை நீணாவிடம் கூற வேண்டும் என்று நினைத்தவன் எழுந்து வீடு முழுவதும் அவளை தேடினான். அவள் எங்கும் இல்லை என்றதும் மொபைலை எடுக்கப் போனவன் கண்களில் கார் சாவி தென்பட்டது.
அவளுக்கு அழைத்தாலும் பேசுவாளா என்றுத் தெரியாதபோது எதற்கு அழைக்க வேண்டும் என்று நினைத்து மருத்துவமனைக்கு கிளம்பினான். நேராக தன் அறைக்கு செல்லாமல் அவளை காணும் ஆவல் அதிகரிக்க நீணாவுடைய அறை அருகில் சென்றவன் உள்ளேயிருந்து பொருட்கள் கீழே விழுந்து உருளும் சப்தம் கேட்க ரிசப்ஷனில் விசாரிக்க கூட இல்லாமல் வேகமாக கதவை திறந்துப் பார்த்தான்.
ஒரு சிறுவன் அவளுடைய மேஜைக்கு அடியில் ஒரு கோடியில் அமர்ந்திருக்க மறு கோடியில் மண்டியிட்டு குனிந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் நீணா. மேரியும் அந்த சிறுவனின் பாட்டியும் அவள் அருகில் நின்று குனிந்து “இங்க வா“ என்று அவனை அழைத்தனர்.
அவனோ தலையை இடமிருந்து வலமாக ஆட்டி மறுத்தான். ரோஹித்தை கண்ட மேரி “டாக்டர்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்… ஊசிய பார்த்ததும் ஓட ஆரம்பிச்சுட்டான். பாவம் இவங்க வயசானவங்க ஓட முடியல. நானும் மேடமும் தான் இவ்வளவு நேரம் தொரத்துனோம். டேபிள் மேல எல்லாம் ஏறி ஓடுறான். விழுந்துடுவானோன்னு பயமாயிருக்கு“ என்று முறையிட்டார்.
நீணாவின் கோலம் சிரிப்பை வரவழைத்தாலும் அமைதியாக அந்த சிறுவனிடம் சென்றான் ரோஹித். டேபிள் மீது தன் உடைமைகளை வைத்து விட்டு அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து “உன் பேரென்ன?“ என்றுக் கேட்டான்.
…
“உனக்கு சாக்லேட் வேணுமா?“
இதற்கு மட்டும் வேகமாக தலையை ஆட்டினான் அந்த சிறுவன். அவனை அப்படியே கையில் தூக்கிய ரோஹித் டேபிளை சுற்றி வந்து டிராயரை திறந்து அதிலிருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து கொடுக்கும்போதே நீணாவிற்கு கண்ணை காட்டினான். சிறுவனின் கவனம் சாக்லேட் மீதிருக்க அவனறியாமல் ஊசியை குத்தினாள் நீணா.
உடனே அவன் அழ ஆரம்பிக்கவும் “ஊசி போட்டாச்சே… அவ்வளவுதான்… சாக்லேட் சாப்பிடலாமா?“ என்றுக் கேட்டு அதை பிரித்து அவன் வாயில் சிறிய துண்டை ஊட்டினான். அழுகையை நிறுத்தி அவன் சாக்லேட்டை சாப்பிட ஆரம்பிக்க நீணா அவசரமாக ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதி அவனுடைய பாட்டியின் கையில் கொடுத்தாள்.
“ரொம்ப தாங்க்ஸ்“ என்று ரோஹித்திடம் கூறி அவன் கையிலிருந்து தன் பேரனை வாங்கிக் கொண்டு அவர் கிளம்ப நீணாவின் பக்கம் திரும்பினான் ரோஹித். மேரி அருகில் இருப்பதால் புன்னகையுடன் அவனை பார்த்தாள்.
“இப்போ மட்டும் இளி…“ மனதிற்குள் அவனை திட்டியவன் “நாளைக்கு அப்பாவும் அம்மாவும் வராங்களாம். செக்கப் இருக்கு. ரெண்டு நாள் இருப்பாங்கன்னு நெனைக்குறேன்“ என்றான்.
முகத்தில் சட்டென்று கலவரம் தோன்ற அதை மறைத்துக் கொண்டு “ஓகே ரோஹித். நான் அத்தைகிட்ட ஒரு தடவ பேசிடுறேன்“ என்றாள். அவனோ அவள் முகத்தையே கூர்ந்து நோக்கிவிட்டு வேறெதுவும் கூறாமல் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
இருக்கையில் வந்தமர்ந்த நீணா பதட்டத்தில் இருந்தாள். “அத்தையும் மாமாவும் வந்தா எப்படி பேசாம இருக்க முடியும்?“ அவள் முகத்தில் தெரிந்த சோர்வை பார்த்து “டீ எடுத்துட்டு வரவா மேடம்? களைச்சுப் போயிட்டீங்க“ என்றார் மேரி.
அவளுக்கும் இப்போது ஏதாவது சூடாக அருந்த வேண்டும் என்றுத் தோன்ற “எடுத்துட்டு வாங்க மேரி. அப்படியே இன்னும் பதினஞ்சு நிமிஷத்துக்கு யாரையும் உள்ள அனுப்ப வேண்டாம்னு சொயல்லிடுங்க“ என்றாள்.
ரோஹித்தின் மனம் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. “இத்தன நாளா அவ முகத்துல தெரியாத பயம் இப்போ தெரியுதுன்னா அப்போ அதுக்கு என்ன அர்த்தம்? கண்டிப்பா அவளால பேசாம இருக்க முடியாதுன்னு பயப்படுறாளா?“
ரோஹித் மிகவும் எதிர்ப்பார்த்த… நீணா வரவே கூடாதென்று எண்ணிய அடுத்த நாளும் அழகாய் விடிந்தது. அழைப்புமணியின் ஓசை நீணாவை திகிலடைய செய்ய ரோஹித்திற்கு புது உற்சாகத்தை அளித்தது. மஞ்சுவும் சிவராமனும் வந்திறங்கினர். அவர்கள் வந்த நொடியிலிருந்து ரோஹித் ஜபிததேல்லாம் இதை தான்… “கூப்பிடு கூப்பிடு“
வழக்கம்போல் அவன் பக்கமே திரும்பாமல் மஞ்சுவுடன் பேசிக் கொண்டிருந்தாள் நீணா. சிறிது நேரத்தில் அவர்கள் விருந்தினர் அறைக்குள் சென்றுவிட அவள் காலை உணவை தயாரிக்கச் சென்றாள். “இன்னும் எவ்வளவு நேரம்னு பாக்குறேன்டி… கூப்பிடு நீணா“
குளித்துவிட்டு வந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சிவராமனின் அருகில் நல்ல பிள்ளையாக அமர்ந்தான் ரோஹித். மஞ்சுவும் அடுக்களையில் நீணாவிற்கு உதவ செல்ல சிறிது நேரத்தில் “அவங்கள சாப்பிட வர சொல்லு நீணா“ என்ற தாயின் குரல் கேட்டதும் ரோஹித் பரப்பரப்பானான்.
நீணா தயங்கி தயங்கி அவர்கள் அருகில் வந்தாள். “சாப்பிட வாங்க மாமா“ என்று அவள் கூறவும் செய்தித்தாளை மடித்து வைத்துவிட்டு எழுந்தார் சிவராமன். ரோஹித் அசையவில்லை என்றதும் “மச்சான் சாப்பிட வாங்க“ என்றவள் சிறிதும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
“யெஸ்ஸ்ஸ்…“ வேகமாக எழுந்து கை கழுவ சென்றவன் சந்தோஷ மிகுதியில் இரு முறை குதித்தேவிட்டான். பின்னால் நின்றிருந்த சிவராமன் அவனை விநோதமாகப் பார்ப்பதை வாஷ் பேசினின் மேல் மாட்டியிருந்த கண்ணாடியில் பார்த்ததும் அமைதியாக தலை குனிந்தபடி சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
ஸ்வீட் டப்பாவை எடுத்து நீணாவின் கையில் கொடுத்த மஞ்சு “அவங்க சாப்பிடுவாங்களா தெரியல கண்ணு… கேட்டுட்டு வை“ எனவும் அதை வாங்கி வெளியில் வந்தவள் சிவராமனின் அருகில் சென்று “ஸ்வீட் சாப்பிடுறீங்களா மாமா?“ என்றுக் கேட்டாள். “எனக்கு இப்போ வேணாம் மா. அவன்கிட்ட கேளு“ என்றவர் சாப்பாட்டில் கவனமானார்.
ரோஹித் நிமிர்ந்தும் பார்க்கவில்லை என்றதும் “மச்சான் உங்களுக்கு?“ என்றுக் கேட்டாள். உடனே தட்டை நீட்டியவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. நீணாவின் முகத்தில் தான் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
அவன் தட்டில் ஒரு பீஸ் ஸ்வீட்டை வைத்தவள் அவன் புன்னகைப்பதை பார்த்து டப்பாவை அப்படியே கவிழ்க்க எத்தனித்தாள். “மா இன்னைக்கு ஸ்வீட் தான் காலையில சாப்பாடா?“ என்று ரோஹித் சத்தமாகக் கேட்கவும் டப்பாவை மூடி எடுத்துக் கொண்டு வேகமாக சமையலறையுள் ஓடி விட்டாள் நீணா.
கையில் பொங்கலுடன் வந்த மஞ்சு “அதான் இட்லி சாம்பாரெல்லாம் இருக்குதுல்ல? அப்பறம் என்ன இப்படி கேட்குற?“ என்றுக் கேட்டு அவன் தட்டில் கொஞ்சம் பொங்கலையும் வைத்துச் சென்றார்.
மருத்துவமனைக்கு கிளம்பும்போது பெற்றோரையும் உடன் அழைத்துச் சென்றனர். தாய் தந்தைக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை மாஸ்டர் செக்கப் செய்ய வேண்டும் என்பது ரோஹித்தின் கட்டளை. மகனின் வார்த்தையை மீற முடியாமல் அவர்களும் தவறாமல் சென்னை வந்துவிடுவர்.
காலை நேரம் ரோஹித் அவர்களுக்கு துணையாய் இருக்க மதியம் நீணா வந்து அவர்களுடன் இருந்தாள். சாப்பிட்டு முடித்து வந்தவள் மஞ்சுவிடம் விசாரிக்க “அவன் இன்னும் சாப்பிடல நீணா. அவன போய் சாப்பிட சொல்லு“ என்றார். “நீங்களே சொல்லுங்க அத்தை. நீங்க சொன்னா கேப்பாங்க“
அவள் ‘மச்சான்‘ என்பதை தவிர்த்து தன்னிடம் பேசுவதையும் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டதை ரோஹித் குறித்துக் கொண்டான். “நான் கிளம்புறேன் மா… வரேன் பா“ என்றவன் அவளை திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தான்.
மாலை கொஞ்சம் முன்னதாகக் கிளம்பி அவர்களை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். அன்றிரவே கிளம்ப வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் சிவராமன்.
“காட்டுல வேலை இருக்குது பா… தண்ணி பாயச்சலன்னா பயிரெல்லாம் வாடிடும். இன்னைக்கு ஒரு நாளைக்கு மோட்டார் போட ஆள் சொல்லி வெச்சுட்டு வந்திருக்கேன். போயாகணும்“ என்று முடிவாக சொல்லிவிட்டார்.
இரவு அவர்களை பேருந்து நிலையத்தில் விட்டு வருவதாகக் கூறி சென்றவன் திரும்பி வரும் வழி முழுவதும் யோசித்துக் கொண்டே வந்தான். “அப்பா அம்மா வந்தா அவங்க முன்னாடி பேசுவான்னு பார்த்தா அவங்க முன்னாடியும் பேசுறத அவாயிட் பண்ணிட்டா… ஈவ்னிங் வீட்டுக்கு வந்ததுலேருந்து ஒரு வார்த்த பேசல.
நானும் அவங்க முன்னாடி பேசுவா இவங்க முன்னாடி பேசுவான்னு தேவையில்லாம எங்கெங்கயோ அளஞ்சுட்டேன். இனிமே யாரையும் நம்பப் போறதில்ல. கூட்டத்துல இருந்தாதான? நாளையிலிருந்து என்ன செய்யுறன்னு பாக்குறேன்.
நாளைக்கு என்ன நாளைக்கு? இப்போவே உன்கிட்ட பேசுறேன்டி… இதுக்கும் மேல உன்ன விட்டு வெச்சா நீ ரொம்ப தான் பண்ணுற“ முடிவெடுத்தப் பின் கார் வேகமெடுத்தது.
ரோஹித் வீட்டினுள் நுழையும்போது நீணா படுக்கையறை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள். சோபாவில் வந்தமர்ந்தவன் “நீணா நான் உன்கிட்ட பேசணும்“ என்றான். சட்டென்று நடையின் வேகம் குறைந்தாலும் மீண்டும் வேகமாக சென்றாள்.
“நான் பேசணும் நீணா“ அவன் குரலும் அதன் தொனியும் அவளை மேலும் முன்னேற விடவில்லை. ஒரு முடிவுடன் திரும்பி வந்து அவன் எதிரில் சோபாவில் அமர்ந்தாள்.
“சொல்லு நீணா. என்ன உன் பிரச்சனை?“
அவனை புரியாமல் பார்த்தவள் முகம் இறுக “உனக்கு தெரியாதா? செஞ்சது எல்லாம் நீ செஞ்சுட்டு… எனக்கு என்ன பிரச்சனன்னுக் கேட்குற?“ என்றாள்.
“தெரியாம தான் கேட்குறேன். நான் என்ன செஞ்சேன்?“
அவனை எரித்து விடுவது போல் முறைத்தாள் நீணா. “என்ன அடிச்சது உனக்…“
“அதுக்கு அப்பறம் வருவோம். வேற?“
“இது இது தான்… இப்போ சொல்லுற பத்தியா? பேசலாம்னு கூப்பிட்டது நீ. ஆனா நீ பேசாம என்கிட்ட என்ன பிரச்சனன்னு கேட்ட. பைன். நான் சொல்ல ஆரம்பிச்சா அத கேட்கவாவது செய்யுறியா? நீ என்ன நெனைக்குறியோ அத நான் பேசணும்னு எதிர்ப்பார்க்குற பாரு… இதான் பிரச்சனை“
பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் “அடிச்சது பத்தி நான் தான் சொல்லணும். அதுல நீ பேச எதுவும் இல்ல. அதனால தான் அத இப்போதைக்கு பேசாதன்னு சொன்னேன். நீ பேசுனத பத்தி பேசு நீணா. அதுல தான எல்லாம் ஆரம்பிச்சது“ என்றான்.
“எனக்கு நீ செய்யுறது பிடிக்கல“
“எது பிடிக்கல?“
“எல்லாம்“
“இப்போ உன்கிட்ட உக்காந்து பொறுமையா பேசுறது கூடவா?“
“நீ பேச வேண்டியதெல்லாம் பேசிட்டு என்ன பேச விடாம ஹக் பண்ணி கிஸ் பண்ணுறது பிடிக்கல“
“நீ சொல்ல வரத நான் கேட்காம இருந்ததில்ல… எப்பயும். அப்பறம் ஹக் பண்ணுறது கிஸ் பண்ணுறது என்னோட லவ்வ நான் வெளிப்படுத்துற விதம்“
“அன்ப காட்ட ஆயிரம் வழி இருக்கு ரோஹித்“
21
“அன்ப காட்ட ஆயிரம் வழி இருக்கு ரோஹித்” கழுத்து நரம்புகள் புடைக்க நீணா கத்தவும் அவளை தீர்க்கமாகப் பார்த்தான் ரோஹித்.
“க-த்-தா-த”
“ஸ்டாப் இட் ரோஹித். நான் கத்தல. அது உனக்கும் தெரியும். நம்ம பேசுறது வீட்டுக்கு வெளியில கூட கேக்காது. அதனால தான சுந்தரேசன் அங்கிள் நம்ம வீட்டுக்கிட்ட வந்து நின்னு நம்ம பேசுறது ஏதாவது கேட்டுடாதான்னு தினம் பார்க்குறாரு”
“என்ன சண்டையா இருந்தாலும் வெளில சத்தம் கேக்குற அளவுக்கு நம்ம ரெண்டுப் பேருமே கத்துனதில்ல. ஒத்துக்குறேன். நான் கத்தாதன்னு சொல்லுறது நீ போடுற சத்தத்த இல்ல. உன்னோட இந்த டோன்… அத மாத்து. கோவமா பேசாத”
இரண்டு நொடி அமைதியாக அவனை பார்த்தவள் “சரி… கத்தல. நான் சொன்னதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல”
“சரி அன்ப எப்படி வேணா வெளிப்படுத்தலாம். சோ ஷோ மீ”
“புரியல”
“உனக்கு இன்னும் 24 மணி நேரம் டைம் தரேன். மணி இப்போ பத்தரை ஆகுது. நாளைக்கு நைட் பத்தரைக்குள்ள நீ என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கன்னு எனக்கு காமி”
“ஓகே” வேகமாக எழுந்து இரண்டடி நடந்தவளை “நில்லு. நான் இன்னும் முடிக்கல” என்ற ரோஹித்தின் வார்த்தைகள் தடுத்து நிறுத்தின. நீணா அவனைத் திரும்பிப் பார்க்கவும் “நீ என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கன்னு எனக்கு காமிக்கணும்… ஆனா உன் மூச்சு காத்து கூட என் மேல படக்கூடாது” என்றவன் படுக்கையறைக்குள் சென்றுவிட்டான்.
“இத தான நானும் சொன்னேன்? புதுசா என்னத்தையோ சொல்லிட்டுப் போற மாதிரி பில்ட்டப் குடுக்குறான். பார்த்துட்டே இருடா”
நீணா படுக்கையறைக்குள் வந்தபோது ரோஹித் குளித்துக் கொண்டிருந்தான். அவள் மெத்தையில் அமர்ந்து தீவிர யோசனையில் இருக்க குளியலறையிலிருந்து வெளியே வந்தவன் டேபிள் மீதிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
சிறிது நேரம் கழித்தே அவன் அறையில் இல்லையென்பதை கவனித்தவள் வேகமாக எழுந்து வெளியே வந்தாள். அவன் ஹாலிலும் இல்லையெனவும் ஸ்டடி ரூமை திரும்பிப் பார்த்தாள். விளக்கு எதுவும் எரியவில்லை. விருந்தினர் அறையில் இருந்து வந்த வெளிச்சத்தில் கதவருகில் சென்றாள்.
ரோஹித் அங்கிருந்த கட்டிலில் படுத்து தான் எடுத்து வந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். நீணா அறை வாசலிலேயே நிற்க சில நொடிகள் கழித்து நிமிர்ந்துப் பார்த்தவன் புருவம் உயர்த்தி “என்ன?” என்றுக் கேட்டான்.
தலையை மட்டும் அசைத்து தங்கள் அறைக்குள் வந்தவளுக்கு அவனின் செயல் மனதை பிசைந்தது. எவ்வளவு வாக்குவாதம் செய்தபோதும் ஏன் சண்டை போட்டு இத்தனை நாட்களாய் பேசாமல் இருந்தபோதும் இருவரும் இப்படி தனித் தனியே உறங்கியதில்லை.
மெத்தையில் சுருண்டுப் படுத்தவளுக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை. வெகு நேரம் ஒன்றும் யோசிக்கத் தோன்றாமல் படுத்திருந்தவள் பின் மீதமிருக்கும் நேரத்தில் தனது நேசத்தை அவனுக்கு எப்படி உணர்த்துவது என்று பலவாறாக யோசித்தாள்.
நேரம் கழித்து உறங்கியதால் அலாரம் அடித்தது தெரியாமல் தூங்கிய நீணா திடுக்கிட்டு எழுந்தாள். ரோஹித்தையும் எழுப்ப வேண்டும் என்று நினைத்து விருந்தினர் அறைக்கு ஓடியவள் அவன் அங்கில்லை என்றதும் மற்ற அறைகளில் தேடி விட்டு சோர்ந்து போய் சமையலறைக்குள் வந்தாள்.
பால் காய்ச்சி வைத்திருந்தான். “என்ன விட்டுட்டு வாக்கிங் போயிட்டானா?” மனம் சோர்ந்துப் போக மீண்டும் படுக்கையறைக்கு வந்து மெத்தையை சரி செய்து குளிக்கச் சென்றாள். நேற்று இரவிலிருந்து ரோஹித்தின் நடவடிக்கைகள் அவளை வருத்தியது மட்டுமல்லாமல் யோசிக்கும் திறனையும் மழுங்கடித்திருந்ததால் மேற்கொண்டு என்ன செய்வது என்றுப் புரியாமல் தவித்தாள்.
“இப்படியே உக்காந்திருந்தா சரி வராது. அவன் இதெல்லாம் வேணும்னுப் பண்ணுறான். நான் தோர்த்துப் போக மாட்டேன்” தனக்குத் தானேக் கூறிக் கொண்டவள் வேகமாக எழுந்து சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.
அவள் சமையலை முடித்து வெளியே வந்த சமயம் ரோஹித் பையை தோளில் மாட்டி ஹால் கதவை திறந்து வெளியே சென்றான். வேகமாக அவன் பின்னால் ஓடியவளுக்கு அவன் வாடகை காரில் ஏறி செல்வது தெரிந்தது. கதவின் அருகில் இருந்த டேபிளின் மீது கார் சாவி தென்பட வெறி பிடித்தவள் போல் அதை தள்ளிவிட்டவள் அந்த டேபிளின் மீதே இரு கைகளையும் ஊன்றி தலையை தாங்கி நின்றாள்.
எவ்வளவு நேரம் அப்படியே நிற்க முடியும்? கார் ஓட்டி செல்ல துளியும் விருப்பமில்லாமல் முதல் வேலையாக கால் டேக்ஸி புக் செய்தாள். செய்த சாப்பாட்டை சாப்பிட பிடிக்கவில்லை. வீணாக்கவும் மனமில்லை. “பேசாம நம்ம பேக் பண்ணி எடுத்துட்டு போய் அவனுக்கு குடுத்தா என்ன?” அவனுடைய டப்பாவை எடுத்து காலை உணவையும் சேர்த்து பேக் செய்தாள்.
மருத்துவமனைக்கு வந்ததும் தன் அறையில் தனது பொருட்களை வைத்து விட்டு ரோஹித்தின் சாப்பாட்டு டப்பாவுடன் அவன் அறை நோக்கி நடந்தவளின் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. “இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன்? டப்பாவ குடுத்துட்டு வந்துடலாம். ம்ம்ஹும்… ஏதாவது பேசணுமே? ஐயோ இப்பன்னு எதுவும் தோண மாட்டேங்குதே…”
அவள் ரிசப்ஷனில் விசாரித்தபோது ரோஹித் இப்போது ப்ரீ என்றுக் கூறி உடனே அவளை உள்ளே செல்ல அனுமதித்தனர். “இவங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொன்னாலாவது ஏதாவது யோசிக்கலாம். இப்படி பொசுக்குன்னு உள்ளப் போக சொல்லிட்டாங்களே…”
மெல்ல கதவை திறந்து எட்டிப் பார்த்தாள். “அய்யய்யோ கதவத் தட்ட மறந்துட்டோம். பரவாயில்ல… வந்தது வந்தாச்சு” என்று உள்ளே நுழைந்தவள் ரோஹித் அவளையே பார்த்துக் கொண்டிருக்கவும் “இவன் ஏன் இப்படி பார்க்குறான்?” என்று நெளிந்து கையில் இருந்த டப்பாக்களை டேபிள் மீது வைத்தாள்.
அவனாக ஏதாவது கேட்பான் என்று எதிர்ப்பார்த்து நிமிர்ந்தவள் அவன் அப்போதும் அமைதியாகப் பார்க்கவும் “வந்து… ப்ரேக்பாஸ்ட்… லஞ்ச்… நீ… வேலையிருக்கு பை” என்றுக் கூறி வெளியே ஓடி வந்துவிட்டாள். “உப்ப்” என்று மூச்சு வாங்குபவளை ரிசப்ஷனில் இருந்த பெண் விநோதமாகப் பார்க்க தோளில் கிடந்த வெள்ளை கோட்டை மாட்டும் சாக்கில் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
“இப்படியா பார்ப்பான்? வாயிலேருந்து வார்த்தையே வர மாட்டேங்குது. யப்பா சாமி… நம்மளால முடியாது பா” முதல் முறை ரோஹித் இப்படி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபோது தான் முதன் முதலாய் அவன் முன் தன் இயல்பை தொலைத்து அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் ஓடினாள் நீணா.
அடுத்தடுத்து பேஷண்ட்ஸ் உள்ளே வர ஒரு மருத்துவராய் செயல்பட்டாலும் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. “மேடம் உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று மேரி கேட்டபோது அவளால் அசடு வழிய சிரிக்க மட்டுமே முடிந்தது.
மதிய உணவு இடைவேளையின் போது ரோஹித் தன்னுடன் சாப்பிட வருவானா என்று ஆவலாக காத்திருந்தவள் “பேசாம நம்மளே போய் கூப்பிட்டா என்ன? வேணாம் வேணாம்…” என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தாள்.
ரோஹித் வந்தான். எப்போதும் போல் அவள் எதிரில் அமர்ந்து சாப்பிட்டான். நீணா ஒவ்வொரு முறையும் பேச வாய் திறந்து பின் தலை குனிந்து சாப்பிடும் அவன் முகத்தை பார்த்ததும் வாயை மூடி சாப்பிடுவாள். சாப்பிட்டு முடித்ததும் “கிளம்புறப்போ கால் பண்ணுறேன்” என்றான் ரோஹித்.
சரியென்று தலையை அசைத்தவள் இப்போதாவது பேச வேண்டும் என்று “சாப்பிட்டியா?” என்றுக் கேட்க “ம்ம்” என்று பதில் கூறி எழுந்து சென்றான். “அட ச்ச… கேக்குறதுக்கு வேற கேள்வியே இல்லையா? இப்படியா லூசு மாதிரி கேப்ப? மணி இப்போவே ஒண்ணாச்சு. இன்னும் 9 மணி நேரத்துல ஏதாவது செஞ்சாகணும். நைட் கார்ல பேசலாம்”
இரவு அவனுடன் பேச நினைத்ததையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து மனதில் ஒத்திகை பார்த்தவள் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்தாள். “ரெண்டுப் பேருமே கார் எடுத்துட்டு வரல… போச்சு… கால் டேக்ஸில உட்கார்ந்து என்னத்த பேச?”
நேரில் பேசுவது தான் இந்த பாடாய் இருக்கிறதென்று அவனுக்கு மெசேஜ் அனுப்பத் தீர்மானித்தாள். தீவிரமாய் யோசித்ததன் பலனாய் அடுத்து ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதும் போது மாத்திரையின் பெயருக்கு பதிலாய் ரோஹித் என்று எழுதி அதை அடுத்தவர் கவனிக்கும் முன் மெல்ல கிழித்துப் போட்டாள்.
என்னென்னமோ யோசித்து மொபைலை கையில் எடுத்தவள் டைப் செய்வதும் பின் அதை டெலீட் செய்வதுமாய் நேரத்தைக் கடத்தி கடைசியாய் “ஐ லவ் யூ” என்று அனுப்பினாள். “ஷ்ஷ்ஷ்… இத அனுப்புறதுக்கே இவ்வளவு திணற வேண்டியிருக்கே…”
அதற்கு அவன் எந்த பதிலும் அனுப்பவில்லை. இரவு கிளம்பும் முன் கால் செய்து டேக்ஸி வந்துவிட்டதாக மட்டும் கூறினான். 7 மணிக்கு கால் டேக்ஸியில் வரும்போது ரோஹித் வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வர நீணா அவனை பார்த்துக் கொண்டே வந்தாள். வீடு வந்து சேரும்போது மணி 8.
பேச வேண்டும்… அவனிடம் ஏதாவது பேச வேண்டும்… எதையாவது செய்து அவனுக்கு தன் அன்பை உணர்த்த வேண்டும்… தீவிரமாக யோசித்தவளுக்கு அந்த ஐடியா தோன்றியது. “கேக் செய்யலாம். ரோஹித்துக்கு நம்ம செய்யுற கேக் பிடிக்கும். நம்ம தான் டைம் இல்லன்னு அடிக்கடி செய்யுறதில்ல. இன்னைக்கு எப்படியாவது அவன இம்ப்ரெஸ் பண்ணணும்”
கையில் இருந்த அனைத்தையும் அப்படியே சோபாவில் போட்டுவிட்டு சமையலறையுள் ஓடினாள். கையை சுத்தம் செய்தவள் கேக் செய்ய ஆரம்பித்தாள். ரோஹித் குளித்து முடித்து வந்து ஹாலில் அமர்ந்தான். ஒரு மணி நேரம் கழித்து கேக்கின் நறுமணம் காற்றில் கலந்து வந்து அவனை கண்களை மூடி ரசிக்க வைத்தது.
அதற்கு மேல் அவன் கவனம் டீ வீயில் இல்லை. எழுந்து சென்று பார்ப்போமா என்று நினைத்தவன் அவளே வந்து கூப்பிடட்டும் என்று அமர்ந்திருந்தான். அவனில் இருந்து கேக்கை எடுத்த நீணா கிரீம் கொண்டு அதை அழகாக அலங்கரிக்கத் துவங்கினாள். அரை மணி நேரமாக குனிந்து வேலை பார்த்தவள் கழுத்தும் முதுகும் வலிக்க நிமிர்ந்து கேக்கை பார்த்தாள்.
“ஹைய் சூப்பரா இருக்கு” அவளுக்கே அவள் செய்திருந்தது மிகவும் பிடித்திருந்தது. கடைசியாக அதில் ஏதாவது எழுத வேண்டும் என்றுத் தோன்ற “டூ மை டியரெஸ்ட் ஹப்பி” என்று க்ரீமால் எழுதி முடித்தபோது அவளுக்கு திருப்தியாக இருந்தது.
“எத்தன நாள் கழிச்சு ரோஹித்துக்காக நான் செய்யுற கேக்…” மனதில் பொங்கிய சந்தோஷத்துடன் கிரீம் பைப்பை மேடை மீது வைக்க திரும்பியவள் கை பட்டு மேடையின் விளிம்பில் இருந்த கேக் கீழே விழுந்தது. சரி செய்யவே முடியாதபடி கவிழ்ந்து விழுந்து சிதறியிருக்கும் கேக்கை வெறித்தபடி நின்றாள் நீணா.
ரோஹித்தின் மொபைல் ஒலிக்க அதை எடுத்துப் பார்த்தான். ப்ரீதா அழைத்திருந்தார். நல விசாரிப்புகளுக்குப் பின் “நீணா இல்லைங்களா மாப்பிள்ளை?” என்று அவர் கேட்க “தோ தரேன்” என்றுக் கூறி எழுந்து சமையலறை வாசலுக்கு வந்தான்.
நீணா நின்ற கோலமும் கேக்கும் கண்ணில் பட ஏதோ கூற வந்தவன் பின் ப்ரீதா லைனில் காத்திருப்பதால் “உங்கம்மா பேசணுமாம்” என்று மெதுவாகக் கூறி மொபைலை நீட்டினான். நிமிர்ந்துப் பார்த்தவளின் கண்கள் குளம் கட்டியிருந்தது.
வேக மூச்சுக்களுடன் அவன் அருகில் ஓடி வந்தவள் மொபைலை நீட்டியிருந்த அவன் கையை தட்டிவிட்டு அவன் கழுத்தை சுற்றி இறுக்கி அணைத்து “கேக் தட்டிவிட்டுட்டேன் ரோஹித்” என்று அழ ஆரம்பித்தாள்.
காலை கட் செய்து மொபைலை பிரிட்ஜின் மீது வைத்த ரோஹித் அமைதியாக நின்றான். சில நொடிகள் அழுதுக் கொண்டிருந்தவள் ரோஹித் அவளை அணைக்கவில்லை என்பதை உணர்ந்து மேலும் அழுகை போங்க அவனை இன்னும் இருக்கியணைத்து பெரிதாக அழ ஆரம்பித்தாள்.
“நான் தோத்துட்டேன். உன்ன எவ்ளோ லவ் பண்ணுறேன்னு என்னால உனக்கு சொல்ல முடியல ரோஹித். நான் தோத்துட்டேன்… எனக்குத் தெரியல…”
தன் போக்கில் புலம்ப ஆரம்பித்தவளின் முதுகில் வலது கையால் இரு முறை தட்டினான். “கேக் கீழ போட்ட சரி… உன் பக்கத்துலயே உன் மொபைல் இருக்கு. நீ இத உன் பெஸ்ட் பிரெண்ட் மோனிக்கு கால் பண்ணி சொல்லியிருக்கலாம். ஏன்… இப்போ உங்கம்மா பேசுறாங்கன்னு சொன்னனே… அவங்கக்கிட்ட சொல்லியிருக்கலாம். என்கிட்ட ஆறுதல் தேடுறியே இத விடவா உன் அன்ப நீ எனக்கு புரியவைக்க முடியும்?”
தன் பிடியை சற்று தளர்த்தி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். இப்போதும் அவன் அவளை அணைக்கவில்லை. அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
“அன்னைக்கு நீ பேசுன வார்த்த பெருசு நீணா… என்னென்ன சொன்னன்னு ஞாபகம் இருக்கா? என்னால மறக்க முடியலயே…”
நீணா ரோஹித்தை விட்டு ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றாள்.
“உனக்கு நான் எந்த இம்பார்ட்டன்ஸும் குடுக்கறதில்லையா நீணா?”
“சாரி ரோஹித்”
“உங்கப்பாவ முதல் தடவ காலேஜ்ல பார்த்தப்போ அங்கிள்னு தான் கூப்பிட்டேன். உன்ன லவ் பண்ணுறேன்னு சொல்லி அவங்கள்ட பேசுனப்போவும் அங்கிள்னு தான் கூப்பிட்டேன். கல்யாணத்துக்கு அப்பறம் திடீர்னு அத மாத்தி மாமான்னு என்னால கூப்பிட முடியலன்னு சொன்னப்போ ‘உனக்கு எப்படி கூப்பிடத் தோணுதோ கூப்பிடு’னு சொன்னவ நீ தான்”
“ஐ அம் சாரி ரோஹித்”
“அஜய் பேசுனது ரொம்ப அதிகம் நீணா. அத அவ்வளவு சீக்கிரம் மறந்து மன்னிக்குற பக்குவம் எனக்கில்ல. அதனால தான் அவன லத்திகாவோட சேர்த்து வெச்சு பேசாதன்னு சொன்னேன். அவங்க விரும்புறாங்கன்னு அவங்கள நம்ம வீட்டுல அன்னைக்கு பார்த்தப்போவே தெரிஞ்சுக்கிட்டேன்.
ஒரு அண்ணனா என் தங்கச்சிக்காக அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இல்லன்னு சொல்லல. ஆனாலும் நீ அவனுக்காக என்கிட்டக் கெஞ்சுறது பிடிக்கல நீணா. எங்கள நெனச்சு நீ ரொம்ப பீல் பண்ண… அது வேண்டாம்னு தான் அவன்கிட்ட பேசுனேன்”
“நான் பேசுனது தப்பு தான் ரோஹித். ப்ளீஸ் மன்னிச்சுடு”
“அப்பறம் என்ன சொன்ன… உன் சின்ன சின்ன ஆசைய கூட நான் நிறைவேத்துறதில்லையா?”
“ரோஹித் ப்ளீஸ் போதும்…”
“காலையில வாக்கிங் போறது கொஞ்ச நேரம் உன்கூட நிம்மதியா பேசுறதுக்காக நீணா. அதனால தான் பார்க் சுத்தி நடக்காம வேற பக்கம் கூட்டிட்டு போறேன்…”
“தெரியும் ரோஹித்… சாரி… சாரி…”
“கார் உனக்கு ஓட்ட பிடிக்கும்… ஆனா என்கிட்ட சண்டப் போட்டு சாவிய பிடுங்கி ஓட்ட தான் பிடிக்கும். முந்தாநேத்து நான் தூங்கிட்டு இருந்தேன். கார் எடுத்துட்டுப் போயிருக்க வேண்டியதுதான? இன்னைக்கு காலையில சாவிய வெச்சுட்டு தான போனேன்? கார்ல வந்திருக்க வேண்டியது தான? ஏன் கால் டேக்ஸி பிடிச்சு வந்த?”
“நான் பேசுனது எல்லாமே தப்பு தான்… கோவத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசிட்டேன்… சாரி…”
“கோவத்துல என்ன வேணா பேசுவியா நீணா? கடைசியா சொன்னியே… நீ…”
“ரோஹித் ப்ளீஸ்… தயவு செஞ்சு எதுவும் சொல்லாத… நான் தான் தப்பா பேசிட்டேன்… சாரி சாரி சாரி…” தன் இரு கைகளால் காதுகளை இறுக மூடினாள் நீணா.
ரோஹித் அமைதியாக நின்று அவளையே பார்க்கவும் கைகளை மெல்ல விளக்கியவளின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்துக் கொண்டே இருந்தது.
“உன் லவ்வ எனக்கு புரிய வெக்க நீ சொன்ன ஆயிரம் வழியில ஒண்ணு கூட இன்னைக்கு உனக்கு கை குடுக்கல… நானும் ஒத்துக்குறேன். உன்ன தொடாமயும் என்னால என்னோட அன்ப வெளிப்படுத்த முடியும்.
ஆனா எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. உன்ன பார்க்கும்போதெல்லாம் கட்டிப் பிடிக்கணும்னு தோணுற இந்த பீல் பிடிச்சிருக்கு. இது தப்பா கூட இருக்கலாம். ஆனா நான் இத மாத்திக்க விரும்பல… மாத்திக்கவும் மாட்டேன். அதுக்காக நான் கேவலமானவன் கடயாது நீணா.
உன்ன நான் பேசவே விடுறதில்லன்னு சொல்லுற… அந்த நேரம் பேசினா சண்ட வரும்னு தெரிஞ்சா நான் உன்ன பேச விட மாட்டேன் தான். ஆனா அதுக்கப்பறம் நீ சொல்ல வந்தத நான் கேட்காம இருந்ததில்லையே…
நான் பண்ண தப்பு உன்ன அடிச்சது. அடிச்சிருக்கக் கூடாது. சாரி சொல்லி அத சரி பண்ண முடியாது. ஆனா சாரி நீணா… ரியலி வெரி சாரி. இனி என்னைக்கும் எந்த சூழ்நிலையிலயும் அப்படி நடக்கவே நடக்காது”
நீணாவின் கேவல் அதிகரிக்க முகத்தை மூடிக் கொண்டு பெரிதாக அழ துவங்கினாள். அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் வேகமாக அறைக்குள் வந்தான் ரோஹித். அவன் கண்களில் முதலில் பட்டது அன்று கவிழ்த்து வைத்த அவர்களது திருமண புகைப்படம் தான். அதை கையில் எடுத்துப் பார்த்தவனுக்கு நீணா முதல் முறை அவன் முன்னால் அழுதது நினைவு வந்தது.
கல்லூரியின் மூன்றாம் ஆண்டின் போது வகுப்பில் இருக்கும் அனைவரும் ஒரே போல் உடை (செட் டிரஸ்) அணிந்து வரலாம் என்று முடிவெடுத்தனர். பெண்களின் சார்பாக நீணாவும் ஆண்களின் சார்பாக ரோஹித்தும் கலந்தாலோசித்து என்ன நிறத்தில் உடை அணியலாம் என்று தீர்மானிக்க வேண்டும்.
நீணா பச்சை நிறத்தில் அணியலாம் என்றுக் கூற ரோஹித் நீல நிறத்தில் அணியலாம் என்றுக் கூறினான். இருவருமே விட்டுக் கொடுக்காமல் பேச இரண்டு நாட்களாக அவர்களது வாக்குவாதம் நீண்டுக் கொண்டே சென்றது.
“கிரீன் எல்லா பசங்களுக்கும் செட் ஆகாது நீணா. பொண்ணுங்களுக்கு ப்ளூ போடுறது நல்லா தான் இருக்கும். நம்ம ப்ளூ போடலாம்… ஓகே சொல்லு”
“என்னால ஓகே சொல்ல முடியாது ரோஹித். இது ஒத்து வராது… விட்டுடுன்னு சொன்னா கேளு…” என்று நீணா கூற அவளை முறைத்தான் ரோஹித். அப்போது மோனிகாவும் ஹர்ஷாவும் வர அவர்கள் பேச்சு தடைப்பட்டது.
அதன் பிறகும் அவர்களுக்குள் இதுக் குறித்து கருத்து வேறுபாடு இருந்தாலும் மோனியும் ஹர்ஷாவும் அவர்களை கவனிப்பது போல் இருக்க தனிமையில் மட்டும் பேசிக் கொண்டனர்.
இரண்டு நாள் கழித்து எல்லோருடைய உடைக்கும் துணி எடுக்க மொத்தமாக ஆர்டர் கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் இருவரும் மாலை சந்தித்தனர். ஆனால் பேசாமல் அமைதிக் காத்தனர்.
“நீணா ப்ளீஸ் புரிஞ்சுக்கோ… எல்…”
“என்ன ரோஹித் புரிஞ்சுக்க? நான் தான் சொல்லுறேன்ல… போன வருஷமும் நம்ம சீனியர்ஸ் இதே ப்ளூ தான் போட்டாங்க. நம்மளும் அதையே ஏன் போடணும்?”
“நீணா நா…”
“நம்ம வித்தியாசமா கலர் சூஸ் பண்ணலாம். கிரீன் நல்லா தான் இருக்கும். நீ வேணும்னா பசங்கள்ட கேட்டுப் பாரு. யாரும் வேணாம்னு சொல்ல மாட்டாங்க…”
தான் சொல்ல வருவதை கவனியாமல் நீணா பேசிக் கொண்டேப் போக கோபத்துடன் சட்டென்று அவள் அருகில் சென்று தன் இரு கைகளால் அவள் கன்னங்களை ஏந்தினான்.
அவள் பேச்சை நிறுத்தி தான் பேசுவதை அவளைக் கேட்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோட செய்த செயல் அவனுடைய பேச்சையும் முற்றிலுமாக நிறுத்தியிருந்தது. நீணா திகைத்து நிற்க ரோஹித்தால் என்ன முயன்றும் அவன் கைகளை விளக்க முடியவில்லை.
22
ரோஹித் தன் கைகளில் ஏந்தியிருந்த நீணாவின் முகத்தையேப் பார்க்க அவன் கைகளை விளக்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாமல் அவளும் அவனையே வெறித்தாள். சில நொடிகளிலேயே அவன் கோபம் மொத்தமும் காணாமல் போய் விட இப்போது அவன் முகம் நிர்மலமாய் ஆனது.
அவனையே இமைக்க மறந்து பார்த்த நீணாவின் கண்களில் கண்ணீர் நிறையத் துவங்க ‘தன்னால் அவள் அழுகிறாள்’ என்பது மட்டும் உரைத்து மனமே இல்லாமல் கைகளை மெல்ல விளக்கினான் ரோஹித். அப்போதும் தான் செய்தது தவறாக இருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.
கண்ணீர் கன்னங்களில் வழிந்து உருண்டோட வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள் நீணா. ரோஹித் அந்த நொடி முடிவெடுத்தான்… “இனிமே இவ வாழ்க்கையில என்னைக்கும் அழவேக் கூடாது”
திருமண புகைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் கனத்துப் போயிருந்தது. “என்னைக்கும் நீ அழக் கூடாதுன்னு நெனச்சேன்… நானே உன்ன அழ வெக்குற மாதிரி செஞ்சுட்டியே நீணா…” மனம் வெறுத்துப் போக அப்படியே கட்டிலில் கவிழ்ந்துப் படுத்தவன் உறங்கிப் போனான்.
நீணா இன்னும் அழுதுக் கொண்டிருந்தாள். “எப்படியெல்லாம் பேசிட்டேன்? என் தப்பு தான்… எல்லாமே என் தப்பு தான்… அவன் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? அப்போக் கூட என் கிட்ட பேசணும்னு எவ்வளவு முயற்சி பண்ணான்? அதையும் நான் அலட்சியம் பண்ணேனே… அவனுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்?
நான் பேசுனதுல ஒண்ணுக் கூட உண்மை இல்லையே… எல்லாமே ஏதோ ஒரு கோவத்துல அவன காயப்படுத்தணும்னு பேசினது தானே… அப்படி என்ன கோவம் எனக்கு? அன்னைக்கு அவன் என் பேச்ச கேட்காம முரட்டுத்தனமா நடந்துக்கிட்டான்னா? அதுக்கு நான் தானே காரணம்? நான் மட்டும் அவன் வாய மூடுன்னு சொன்னப்போ அமைதியா இருந்திருந்தா…
எத்தனையோ நாள் நம்மள எதிர்த்து அவன் பேசுனப்போ நம்மளும் இப்படி தானே நடந்துக்கிட்டோம்? இதெல்லாம் இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்? நீ பேசுறத எப்போ நான் கேக்காம விட்டிருக்கேன்னுக் கேட்டானே? சண்ட வராம இருக்க தான் உன்ன பேச விடாம செஞ்சேன்னு தெளிவா சொன்னானே… இதெல்லாம் ஏன் நம்ம யோசிக்கவே இல்ல? அவ்வளவு முட்டாள்தனமா அப்படி என்ன கோவம் நமக்கு?”
எவ்வளவு யோசித்தாலும் ரோஹித்திற்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை கூட நீணாவால் கண்டறிய முடியவில்லை. அலசி ஆராய்ந்து கண்டறிந்த தவறுகளையும் அவன் மீது சுமத்த மனம் வரவில்லை. போதும். இதற்கு மேலும் சண்டையை வளர்த்த வேண்டாம் என்று எண்ணினாள். அவனுடன் பேசாமல் இருக்க முடியவில்லை என்பதே உண்மை காரணம்.
அவன் அடித்ததற்கும் அவன் மன்னிப்பு கேட்டுவிட்டான். டைனிங் டேபிளில் அமர்ந்து தலை கவிழ்ந்து ‘இனி என்ன?’ என்று யோசித்தவளுக்கு ஒன்றும் பிடிப்படவில்லை.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ எழுந்து அறைக்குள் சென்றவள் ரோஹித் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டதும் அவனை எழுப்பவா வேண்டாமா என்ற யோசனையோடே முகம் கழுவ சென்றாள். அவள் அறைக்குள் வந்தபோது ரோஹித் வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். ஏனோ அதைக் கண்டவளுக்கு அவன் தன்னை விட்டு தூரமாக செல்வது போல் தோன்றியது.
சட்டை பட்டனை போட்டுக் கொண்டிருந்தவனை அழைக்க வாயை திறந்தவள் என்ன பேசுவதென்று தெரியாமல் வாயை மூடிக் கொண்டாள். அவன் அறையை விட்டு வெளியேறவும் “அவனா வந்து அவ்வளவு பேசினான்… இதுக்கப்பறமும் நம்ம பேசாம இருக்குறது சரியில்ல” என்று முடிவெடுத்து அவன் பின்னோடு சென்றாள்.
“போகாத ரோஹித்…”
அவளை திரும்பிப் பார்த்தவன் புருவம் சுருக்கி “இல்ல நீணா…” என்று ஏதோ கூற வந்தான்.
“போகாதன்னு சொல்லுறேன்ல? எங்கயும் போகாத…”
“நான் போய்…” அதற்கு மேல் பேச விட்டால் அவன் தன்னை விட்டு விலகி விடுவான் என்றுத் தோன்ற ஓடி சென்று அவனை இருக்கியணைத்து அவன் இதழ்களை தனதால் மூடிக் கொண்டாள். ரோஹித் முதலில் திணறி பின் அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.
சில நிமிடங்களுக்குப் பின்னரே அவனை விடுவித்தவள் “நான் பேசுனது தப்பு தான். சாரி. அதான் நெறைய சாரி சொல்லிட்டேன்ல? நான் சொன்னதெல்லாம் மனசார சொல்லலன்னு உனக்கும் தெரியும் தான? அப்பறமும் எதுக்கு என்ன விட்டுப் போற?” என்றுக் கேட்டாள்.
“ஹே இல்ல… நான் எங்க…”
“டேய்… நானும் பொறுமையா சொல்லிக்கிட்டே இருக்கேன்… திரும்ப திரும்ப இல்ல இல்லன்னுக்கிட்டு…” என்றவள் அவன் சட்டை காலரை இரு கைகளாலும் கொத்தாகப் பிடித்து அறை வாயில் வரை இழுத்துச் சென்றாள். சுவற்றில் கை வைத்து உள்ளே வராமல் அவளை எதிர்த்து நின்ற ரோஹித் “நான் சொல்லுறத கேளு நீணா… சாப்பாடு வாங்…” என்று மீண்டும் பேச முயன்றான்.
“இப்போ நீயா உள்ள வந்தா சேதாரம் கம்மியாகும்…” என்று இடுப்பில் கை வைத்துக் கூறியவளை பார்த்ததும் கையை கட்டி நின்றவன் “சரி தான்… நான் அடிச்சதுல இப்படி மாறிட்டியா? சரித்திரம் திரும்புகிறது மாதிரி நான் பேசுன எல்லா வார்த்தையையும் நீ பேசுற… நான் குடுத்த எல்லா ரியாக்ஷனும் நீ குடுக்குற…” என்றான்.
“அதெல்லாம் காலையில ஆராய்ச்சி பண்ணலாம்” என்றவள் அவனையும் சேர்த்துத் தள்ளிச் சென்று மெத்தையில் விழுந்தாள்.
காலை கண் விழிக்கும்போதே மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பியிருந்தது. தன்னையேப் பார்த்துக் கொண்டிருக்கும் ரோஹித்தின் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து குளிக்கச் சென்றாள். அவனும் குளித்து வந்ததும் இருவருமாக டீ போட சமையலறைக்கு சென்றனர். ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை. தரை முழுவதும் எறும்பு…
“தட்டி விட்ட கேக்க கிளீன் பண்ணலையா நீணா?”
“அதுக்கெல்லாம் எங்கடா நேரம் இருந்துது? கேக்குறான் கேள்வி…” என்றவள் தரையை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினாள். ரோஹித்தும் உதவ அரை மணி நேரத்தில் எல்லாம் சரி செய்து டீ போட்டாள்.
“லேட் ஆயிடுச்சு… இதுக்கு மேல வாக்கிங் போக வேண்டாம்” என்று அவன் கூறியதும் “நானும் அத தான்டா சொல்ல வந்தேன்” என்றுக் கூறி தேநீரை பருகியவள் சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“ரோஹித் இனிமே நான் உன்ன வாங்க போங்கன்னு மரியாதையா பேசுறேன்”
“என்னது??? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எப்பயும் போலவே பேசு”
“இல்ல ரோஹித். வாடா போடா னு பேசி பேசி தான் தேவையில்லாம அளவுக்கதிகமா பேசுறனோன்னு எனக்கு டவுட். அதனால உன்ன… இல்ல உங்கள இனி மரியாத குடுத்தே பேசுறேன் மச்சான்…”
அவளின் ‘மச்சான்’ என்ற அழைப்பில் ஒரு நொடி மனம் குளிர்ந்தாலும் “வாங்க போங்கன்னு பேசுறதா? ம்ம்ஹும் நல்லா இருக்காது” என்று நினைத்து மனதை மாற்றிக் கொண்டு “வேணாம் நீணா” என்றான்.
“நான் முடிவு பண்ணிட்டேன். இனி இப்படி தான் பேசுவேன். கப் குடுங்க”
அவள் எழுந்து செல்லவும் “அப்போ நானும் இனிமே மரியாதை குடுத்தே பேசுறேன். எனக்கும் அடிக்கத் தோணாது பாருங்க…” என்றபடி அவள் பின்னால் சென்றான் ரோஹித். “சகிக்கல” என்று நீணா கூறவும் “நீங்க பேசுறதும் அப்படி தான் இருக்கு. நானும் முடிவுப் பண்ணிட்டேன்” என்றவன் கப்பை அவள் கையில் இருந்து வாங்கி கழுவினான்.
‘என்னவோ செய்துக் கொள்ளட்டும்’ என்று நினைத்த நீணா சமையலை கவனிக்க முந்தைய தினம் நினைத்துப் பார்த்தது யாவும் ஞாபகம் வர அவள் அருகில் வந்து “நான் உங்ககிட்ட ப்ரபோஸ் பண்ணது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்றுக் கேட்டான். புன்னகையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள் நீணா.
“நீங்க எங்க ப்ரபோஸ் பண்ணீங்க?”
“அதுவும் வாஸ்தவம் தான். ஹர்ஷா மோனி இல்லன்னா நம்ம சேர்ந்திருக்கவே மாட்டோம்… அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுவாங்கன்னு நான் நெனச்சுக் கூட பார்க்கல”
“ஒரு கலருக்காக நம்ம அடிச்சுக்கிட்டதப் பார்த்துட்டு பேச போய்… கடைசியில ‘நாங்க லவ் பண்ணுறோம்’ னு வந்து நின்னாங்களே… ஹைய்யோ ஹைய்யோ… அத எப்படிங்க மச்சான் மறக்க முடியும்? இந்த விஷயம் மட்டும் அவங்களுக்குத் தெரிஞ்சுது அவ்வளவு தான்…”
“ம்ம்கும்… அவங்க லவ் பண்ணுறாங்கன்னு சொன்னப்போ நான் உங்கள திரும்பிப் பார்த்தனே… அப்போ நீங்க என்ன நிமுந்துப் பார்க்க முடியாம தல குனிஞ்சு நின்னீங்களே… அந்த நிமிஷம் நான் உன்ன லவ் பண்ணுறத உணர்ந்துட்டேன் நீணா. அவங்க போனதுக்கப்பறம் உன் கைய பிடிச்சுட்டே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேன்? ஆயுசுக்கும் அப்படியே இருந்துடணும் போல இருந்துச்சுடி… அன்னைக்கு சொல்லாதத இன்னைக்கு சொல்லுறேன்… ஐ லவ் யூ…”
“லவ் யூ ரோஹித்…”
“…”
“முதல் நாள் நீ என் கன்னத்த பிடிச்சு நின்னப்போ அழுகையா வந்துது. நீ பார்த்த பார்வைய என்னால தாங்கவே முடியல… அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் அது மாறல ரோஹித். உடனே அங்கிருந்து ஓடிட்டேன்… ஆனா ஹாஸ்டலுக்கு வந்தப்பறம் ‘ஏன்டா என்ன போக விட்ட?’ன்னு உன் மேல தான் கோவம் வந்துது…”
“அடிப்பாவி… நான் என்னடி தப்பு பண்ணேன்? நீ அழுத… என்னாலதானோன்னு ஒரு கில்ட்டி பீல். அதான் போக விட்டேன்”
“தெரியும்… ஆனாலும் நான் உன் மேல தான் கோவப்படுவேன். இப்போ இல்ல… எப்பயும்… அதெல்லாம் நீ தாங்கி தான்டா ஆகணும். அது உன் விதி. இப்போ சொல்லுறத கேளு… அடுத்த நாள் மோனி வந்து ‘உங்களால தான் நாங்க சேர்ந்தோம்’னு சொன்னப்போ ‘நம்ம ஏன் இன்னும் சேரல?’னு தான் முதல்ல தோணுச்சு.
இப்படி யோசிக்குறது தப்போன்னு நான் குழம்பிட்டு இருந்தப்போ தான் நீ என் கைய பிடிச்ச… ஏதோ ஒரு நிம்மதி… நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்டன்னு… அதுக்கப்பறம் என்ன தான் சண்டப் போட்டாலும் என்னமோ உரிமையா சண்ட போடுற மாதிரி தோணும்.
படிப்பு முடிஞ்சதுக்கப்பறம் என் வீட்டுல வந்து பேசுறேன்னு நீ சொன்னப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துது தெரியுமா? ஆனா நடுவுல அஜய் பேசுனது ரொம்ப வருத்தமா இருந்துது.
அதையெல்லாம் பெருசா எடுத்துக்காம உன் முடிவுல நீ ஸ்ட்ராங்கா இருந்து பாரென்ட்ஸ் கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணியே… அதுக்கப்பறம் என்ன சண்டை வந்தாலும்… எவ்வளவு கோவம் இருந்தாலும்… என்னால உன்ன விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்க முடிஞ்சதில்லடா.”
“நீணா…”
“ம்ம்…”
“இப்படியே வாடா போடான்னே பேசுடி”
அவன் ஏதோ கூற வருகிறான் என்று ஆர்வமாகக் கேட்டவள் ரோஹித் இதைக் கூறவும் சிரித்துவிட்டாள். “போய் தொல…”
“ஹே நீ ‘மச்சான்’னு கூப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் தான்… ஆனா அதெல்லாம் ஊருக்குப் போறப்போ கூப்பிட்டுக்கோ… இங்க என் பக்கத்துல இப்படி இருக்கப்போ…” என்றவன் அவளை அணைத்து “டா போட்டே பேசு” என்றான்.
“அன்னைக்கு அடிச்சுட்டு நீ ஹாஸ்பிட்டல் கிளம்பிப் போனதுக்கப்பறம் மோனிக்கு கால் பண்ணி கர்ள்ஸ் டே அவுட் என்னால வர முடியாதுன்னு சொன்னப்போக் கூட எனக்கு உடம்பு சரியில்லன்னு பொய்யான காரணம் தான் சொல்லத் தோணுச்சு”
உடனே ரோஹித்தின் முகம் வாடிவிட்டது. அவள் கன்னத்தை வருடியபடி “சாரி நீணா… எவ்வளவு கோவம் இருந்தாலும் நான் அடிச்சிருக்கக் கூடாது…” என்றான்.
“நீ அடிக்குற அளவுக்கு நானும் பேசியிருக்கக் கூடாதுடா… நான் பேசுனதும் அதிகம். முதல்ல உன் மேல கோவம் மட்டும் தான் இருந்துது… அப்பறம் பொறுமையா யோசிச்சப்போ என் மேல இருக்க தப்பும் புரிஞ்சுது. என்ன தைரியத்துல அடிச்ச? அன்னைக்கு சொன்னியே ‘என் பொண்டாட்டி நான் ஒதைப்பேன்’னு அப்படி நெனன்ச்சு அடிச்சியா?”
ரோஹித் சிரிக்கவும் அவனை முறைத்து “அப்போ அப்படி தான நெனச்ச? அடிச்சாலும் உன்ன விட்டுப் போக மாட்டேன்னு?” என்றுக் கேட்டாள்.
“’என் பொண்டாட்டி என் இஷ்டம்’ னு நான் சொல்லுறதுக்கு அர்த்தம் வேற நீணா. சின்ன கொழந்தைங்கள்ட ஒரு பொம்மைய குடுத்தா… அதுலயும் அந்த பொம்ம அந்த கொழந்தைக்கு ரொம்ப பிடிச்சுப் போயிட்டா அத யாரையும் தொடக் கூட விடாம கைக்குள்ளயே வெச்சு பொத்தி பொத்தி பார்த்துக்கும் தெரியுமா? அதே நேரம் கோவம் வந்தா அந்த பொம்மைய தான் எடுத்து அடிக்கவும் செய்யும்.
நீ எனக்கு சொந்தம்… எனக்கு என்ன நடந்தாலும் அத நான் உன்கூட மட்டும் தான் ஷேர் பண்ணணும்னு நெனப்பேன். உன்ன பத்திரமா பார்த்துக்குற பொறுப்பு என்னோடது மட்டும் தான்னு தோணும்… என் சந்தோஷம் என் துக்கம் எல்லாத்தையும் உன்கிட்ட காமிக்குறப்போ என் கோவத்த மட்டும் நான் வேற எங்க போய் காமிக்க முடியும் சொல்லு…
அதுக்காக அடிக்குற உரிமை எனக்கில்ல… அடிச்சிருக்கக் கூடாது. சாரிடி…”
நீணாவின் கண்கள் கலங்கிவிட அவனை இருக்கியணைத்துக் கொண்டாள். “நான் பேசுனது ரொம்ப தப்பு ரோஹித். சாரி. நான் உன்ன விட்டுட்டுப் போயிடுவேன்னு உனக்குத் தோணவே இல்லையா?”
“முதல்ல அந்த பயம் நெறயவே இருந்துது. உன் கன்னத்துல என் கை பதிஞ்சதப் பார்த்தப்போ மூச்சே நின்னுடுச்சு. எங்க என்ன விட்டுப் போயிடுவியோன்னு நெனச்சேன். அப்பறம் நீ எனக்காக சமைச்சு வெச்சப் பாரு… அப்போவே தெரியும். என்ன கோவமா இருந்தாலும் நீ என்ன விட்டுப் போக மாட்டேன்னு.
அதோட நீ சாப்பிடலன்னா நானும் சாப்பிட மாட்டேன்னு தெரிஞ்சு நீ சாப்பிட்ட தட்ட கழுவாம டேபிள் மேலயே வெச்சிட்டு போனியே… அப்போவே உனக்கு என் மேல இருக்க அக்கறை கொறையலன்னு தெரிஞ்சுது. தினம் நீ சாப்பிட்டத் தட்டுல தான் நானும் சாப்பிட்டேன் தெரியுமா?
சண்டப் போட்டாலும் என் கூடவே கார்ல வந்தியே அப்போவே எனக்கு நம்பிக்க வந்துடுச்சு. உனக்கு என் மேல இருக்க லவ் என்னைக்கும் போகாதுன்னு. அந்த தைரியத்துல தான் உன்ன பேச வெக்க என்னென்னமோ செஞ்சு… ஒவ்வொரு தடவையும் உன்கிட்ட பலப் வாங்குனேன்…”
நீணா அவன் முகத்தை நிமிர்ந்து ஆச்சரியமாகப் பார்த்து “இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு எதுக்காக உன் அன்ப எனக்கு காமின்னு சொன்ன?” என்றுக் கேட்டாள்.
“ம்ம்கும்… நீ சரியான தத்தி… அப்போவே இதெல்லாம் யோசிச்சிருந்தா தேவையில்லாம ஒரு நாள் வேஸ்ட் ஆகியிருக்காது. நீ எங்க உருப்படியா யோசிச்ச?”
அவன் நெஞ்சில் இரண்டு அடிகளை வைத்தவள் “ஆனா நேத்து கேக் விழுந்ததும் எவ்வளவு கஷ்டமா இருந்துது தெரியுமா ரோஹித்? அவ்வளவு அழகா இருந்துது” என்றாள்.
“அதுக்கென்ன? இன்னைக்கு செஞ்சுட்டாப் போச்சு… நானும் ஹெல்ப் பண்ணுறேன். இப்போ டைம் அச்சு… சீக்கிரம் கிளம்பு” என்றவன் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு அவளை விடுவித்தான்.
இரண்டடி நகர்ந்து சென்றவளின் கையை பிடித்து நிறுத்தி “வீட்டுல என் கூட பேசாம இருந்தாலும் மத்தவங்க முன்னாடி உன் கோவத்த காட்டாம இருந்தியே… ஏன் நீணா?” என்றுக் கேட்டான்.
“நீ கூட தான் மத்தவங்க முன்னாடி என் மேல கோவப்பட்டதில்ல…”
புன்னகையுடன் அவள் கையை விடுவித்தான் ரோஹித். இமைக்காமல் அவனை இரண்டு நொடி பார்த்த நீணா
“என் கோபமும் அழுகையும் என் பலகீனங்களாம்…
அதை உன் முன்னால் மட்டுமேக் காட்ட விழைகிறேனடா…”
என்றுக் கூறி வேகமாக அறையை நோக்கி நடந்தாள்.
“அப்போ நாங்களும் அப்படிதானடி நெனப்போம்… பெருசா கவிதை சொல்லுறா…” ரோஹித் சத்தமாய் சொன்னதைக் கேட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்து சிரித்தவள் அறைக்குள் சென்று மறைந்தாள்.
அன்று மருத்துவமனை செல்லும் வழியில் “நம்ம யோகா பண்ணலாமா நீணா? கோவம் கண்ட்ரோல் ஆகும். உடம்புக்கும் நல்லது” என்றான் ரோஹித். நீணா உடனே ஒப்புக் கொள்ள அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதில் அடுத்த இரண்டு நாட்கள் சென்றன.
இந்த இரண்டு நாட்களில் நடந்தவைகளை மறந்து இருவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தனர். தங்களுக்குள் இனி எந்த சண்டையும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.
அதிகாலை 4.30 மணிக்கு அலாரம் அடிக்க ஒரே நேரத்தில் எழுந்தனர் ரோஹித்தும் நீணாவும். அவசரமாக கட்டிலில் இருந்து இறங்கியவள் ரோஹித் கண்ணைக் கசக்கி சோம்பல் முறித்து படுக்கையிலிருந்து எழும் முன் போர்வையை மடித்து மெத்தையில் போட்டு விட்டு குளியலறை நோக்கி ஓடினாள். இருவரும் ஒரே சமயத்தில் குளியலறை கதவில் கை வைத்து ஒருவரை ஒருவர் நிமிர்ந்துப் பார்த்தனர்.
நீணா “நீ போ ” என்றுக் கூறி கையை எடுத்துக்கொள்ள “இல்ல நீ போ. நான் கெஸ்ட் ரூம்ல போய் ப்ரஷ் பண்ணிட்டு வரேன்” என்றுக் கூறி குளியலறை உள்ளேச் சென்று பிரஷில் பேஸ்ட்டைப் பிதுக்கி எடுத்துக் கொண்டு அவளை நிமிர்ந்துப் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான்.
அவனின் ஒவ்வொரு அசைவையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அமைதியாக சென்று காலைக் கடன்களை முடித்தாள்.
முகத்தை பூத் துவாலையால் துடைத்துக் கொண்டே வெளியே வந்தவளின் கண்களில் முகத்தில் இருந்தத் தண்ணீர் எல்லாம் வடிந்துத் தாடையில் சொட்ட அறையின் உள்ளே வந்த ரோஹித் தென்பட்டான்.
கையில் இருந்த துண்டை அவன் முன் நீட்ட அவளைப் பார்த்துக் கொண்டே அதை வாங்கிய ரோஹித் முகத்தைத் துடைத்தபடியே பிரஷை கப்போர்டில் வைத்தான்.
நீணா தன் பின்னாலேயே நிற்பதை உணர்ந்து “நான் யோகா மேட் எடுத்துட்டு வரேன். நீ போ” என்றான். முந்தைய இரவே விருந்தினர் அறையை தாங்கள் உபயோகிக்காமல் வைத்திருப்பதால் அங்கே அமர்ந்து யோகா செய்யலாம் என்று முடிவெடுத்து முடிந்தவரை கட்டிலையும் மற்றப் பொருட்களையும் நகற்றி இடம் ஒதுக்கி வைத்திருந்தான் ரோஹித்.
நீணா அந்த அறையினுள் சென்ற சமயம் “இந்தா” என்றுக் கூறி அவள் கையில் ஒரு யோகா மேட்டை கொடுத்து அவளைக் கடந்துச் சென்றான். கையிலிருந்ததைப் பார்த்தவள் “என்னதிது?” என்றாள்.
“என்ன?”
“எனக்கு எதுக்கு பிங்க் கலர் குடுக்குற? எனக்கு ப்ளூ வேணும்” என்று அவன் கையிலிருந்ததைக் காட்டிக் கேட்டாள் நீணா.
“எனக்கு ப்ளூ வேணும்னு சொல்லிதான அன்னைக்கு நெட்ல ஆர்டர் பண்ணேன். ஒழுங்கா அதப் பிரிச்சு அதுலப் பண்ணு” என்றவன் அழகாக பேக் செய்யப் பட்டிருந்த மேட்டை எப்படிப் பிரிப்பது என்று ஆராயத் துவங்கினான்.
“நானும் அன்னைக்கே எனக்கு கிரே கலர் வேணும்னு சொன்னேனா இல்லையா?”
“அதான் கிரே கலர் இல்லன்னு சொன்னேன்ல… ‘அப்போ வேற ஏதாவது கலர் ஆர்டர் பண்ணு’ன்னு சொல்லிட்டு இப்போ வந்து எதுக்குப் பிரச்சன பண்ணுற நீணா?” என்றுக் கேட்டவனின் குரல் சிறுகச் சிறுக உயர்ந்துக் கொண்டே வந்தது.
“ஏதாவது ஒரு கலர் ஆர்டர் பண்ண சொன்னா உன்னை யாரு பிங்க் ஆர்டர் பண்ண சொன்னது? லைட் கலர்னா அழுக்குத் தெரியும்… எனக்கு அதுக் குடு…” என்றுக் கூறி அவன் கையிலிருந்ததைப் பிடுங்க வந்தாள் .
“ஏன் அத நான் யூஸ் பண்ணா மட்டும் அழுக்குத் தெரியாதா? பசங்களுக்கு ப்ளூ பொண்ணுங்களுக்கு பிங்க்… கேள்விப்பட்டதில்ல? நான் குடுக்க மாட்டேன் போடி…” என்றுக் கூறி இரண்டடிப் பின்னால் நகர்ந்தான் ரோஹித்.
“எனக்கு இது வேணாம்… அதுதான் வேணும்… ” என்றவள் கையில் இருந்த மேட்டால் அவன் தலையில் அடித்தாள். “எதுக்குடி அடிக்குற? இந்தா நீயே ரெண்டையும் வெச்சு உருளு போ…” என்றுக் கூறி அவள் பின்னால் அடித்து கையிலிருந்த மேட்டை அங்கிருந்த கட்டிலில் வீசி எரிந்து அறையை விட்டு வெளியேறினான்.
“எனக்கும் ஒண்ணும் தேவையில்ல… நீயே வெச்சுக்கோ…” அவனைப் போலவே கையிலிருந்த மேட்டை கட்டிலில் விட்டெரிந்து அவனை இடித்துத் தள்ளிக் கொண்டு அறையிலிருந்து வெளியே வந்தாள் நீணா .
ஒரு நாள் முழுவதும் யோசித்து நெட்டில் தேடி ஆர்டர் செய்து அது வருவதற்காக இரண்டு நாட்கள் காத்திருந்து வாங்கிய இரண்டு யோகா மேட்டுகளும் கேட்பாரற்று சீண்டுவாரின்றி மெத்தையில் கிடந்தன.
23
எட்டு மாதங்களுக்கு பிறகு…
ட்ராக் சூட்டில் நடந்துக் கொண்டிருந்த ரோஹித்தும் நீணாவும் எதையோ சுவாரஸ்யமாய் கலந்தாலோசித்துக் கொண்டே நடந்தனர். பூங்காவை சுற்றி நடக்கலாம் என்று நீணா இப்போதெல்லாம் சொல்வதில்லை.
“அன்னைக்கு நம்ம எடுத்த அந்த பிங்க் சுடி போடு நீணா”
“ஹாஸ்பிட்டலுக்கு அத எப்படி ரோஹித் போட்டுட்டு வருவேன்? ஈவ்னிங் அங்கேருந்தே தான வெங்கட் வீட்டுக்குப் போறோம்?”
“இல்ல வீட்டுக்கு வந்துட்டு தான் போவோம். ஹர்ஷாவையும் மோனியையும் நம்ம தான் கூட்டிட்டு போகணும்”
“ஹய் அப்போ மனீஷும் வருவானா?”
“அவங்கள கூட்டிட்டுப் போனா அவங்க பையன் வர மாட்டானா? அப்படி என்ன உனக்கு மனீஷ் மேல அவ்வளவு பாசம்?”
“எனக்கு குட்டி புள்ளைங்கன்னா பிடிக்கும் போடா… அதுக்கு தான பீடியாட்ரீஷியன் ஆனேன்?” என்றவள் சில நொடி அமைதிக்குப் பின் “அது தெரிஞ்சு நீ தான என்ன படிக்க சொன்ன? அப்பறம் எதுக்கு இப்படி கேக்குற?” என்றாள்.
“அப்போ நம்ம பெத்துக்கலாம்”
“ஓஹ்ஹ்ஹ்… நான் ரெடி” என்றவள் சிரிப்புடன் வேகமாக வீடு நோக்கி ஓட ரோஹித் “நிஜமாவா நீணா?” என்றுக் கேட்டு அவளை துரத்தினான்..
வழியில் தென்பட்ட பரமேஸ்வரன் “என்ன இன்னைக்கு வாக்கிங்கு பதிலா ஜாக்கிங்கா?” என்றுக் கேட்கவும் “அதெல்லாம் ஒண்ணுமில்ல அங்கிள்” என்றுக் கூறி புன்னகையுடன் மெல்ல நகர்ந்து சென்றனர்.
சிறிது தூரம் சென்றதும் “அடடடா… புருஷன் பொண்டாட்டிய ஓடி பிடிச்சுக் கூட விளையாட விட மாட்டாங்கப் போலயே… நீ ஓடுடி செல்லம்… நான் துரத்துறேன்” என்று ரோஹித் கூற “இவரு போய் நாளையிலிருந்து எல்லாரையும் ஓட சொல்லப் போறாரு… யார் கண்டா? பொண்டாட்டி முன்னாடி ஓடணும் புருஷன் பின்னாடி ஓடணும் அதுதான் நல்லதுன்னு சொன்னாலும் சொல்லுவாரு” என்றுக் கூறி சிரித்தாள் நீணா.
வீடு வந்து விட ரோஹித் கதவை திறந்தான். இருவரும் குளித்து சாப்பிட்டு தயாராகி ஹாலிற்கு வந்ததும் நீணா அவனை தள்ளிவிட்டு ஓடிச் சென்று கார் சாவியை எடுத்தாள். “இங்க பாரு நீணா… நேத்து தான் நீ டிரைவ் பண்ண. இன்னைக்கு நான் டிரைவ் பண்ணுவேன்னு சொன்னேன்ல? குடுடி சாவிய…”
“அதே தான் இன்னைக்கும் சொல்லுறேன்… நாளைக்கு நீ டிரைவ் பண்ணு” என்றவள் அவனைக் கண்டுக் கொள்ளாது வீட்டை பூட்டி வெளியே வந்தாள். மருத்துவமனை வந்து சேரும் வரை தொடர்ந்த அவர்களது வாக்குவாதம் ஹர்ஷாவை கண்டதும் நின்றது.
“ஓகே நீணா… என்னால லஞ்ச் வர முடியாது. ஈவ்னிங் பாக்கலாம். டேக் கேர்” ஹர்ஷாவுடன் நடந்து செல்லும் ரோஹித்தின் முதுகை பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள் நீணா.
“இதே பொழப்பா போச்சு… எப்போப் பாரு ‘டேக் கேர் நீ-ணா’ னு சொல்லிட்டுப் போக வேண்டியது” என்று அவனை திட்டிய மனம் “அவன டிரைவ் பண்ண விடாம கார் கீ எடுத்தது நம்ம தப்பு தான? பரவாயில்ல… அப்படி தான் செய்வேன்… அவனால என்ன செய்ய முடியும்? என் புருஷன் என் இஷ்டம்… ஹ்ம்ம்” என்று திமிராகவும் யோசித்தது.
முகத்தில் அரும்பிய புன்னகையுடன் “குட மார்னிங் மேரி” என்றுக் கூறியவள் இருக்கையில் அமர்ந்து குட்டீஸ்களை சமாளிக்க தன் மனதை தயார் செய்தாள். முதலாவதாய் வந்த சுட்டி பெண்ணை பார்த்ததும் காலையில் ரோஹித் கூறியது நினைவு வர முகத்தில் தோன்றிய செம்மையை மறைக்கப் பெரும்பாடுப் பட்டாள் நீணா.
மதிய உணவு இடைவேளையின் போது ஷிவானியுடன் அமர்ந்து அரட்டையடித்தாள். மோனிகா இல்லாத இந்த எட்டு மாதங்களில் அவர்கள் இன்னும் நெருங்கி விட்டனர். கிளம்பும்போது “ஈவ்னிங் உங்க வீட்டுலேருந்து பிக்கப் பண்ணிக்குறோம் ஷிவானி. நைட் லேட் ஆகும். நீ வண்டியில வந்தா தனியா போகணும்” என்றாள் நீணா.
“எதுக்கு நீணா தேவையில்லாம ரோஹித்த அலைய வெக்குற?”
“அதெல்லாம் வெட்டியா தான் இருக்கான். வருவான். ஹர்ஷா மோனியும் எங்களோட தான் வருவாங்க”
“அப்போ மனீஷ்?” ஷிவானியின் ஆர்வம் நீனாவிற்கு சிரிப்பை வரவழைத்தது. அவளுக்கும் மனீஷ் மீது பிரியம் ஜாஸ்தி. “அவனும் தான்டி. அதுக்கு தான் எங்களோட வான்னு சொல்லுறேன்”
“ஓகே ஓகே… நான் வரேன்”
மாலை வீடு வந்து சேர்ந்ததும் ரோஹித் கூறிய பிங்க் நிற சுடிதாரையே அணிந்து தயாரானாள் நீணா. இருவருமாக ஹர்ஷாவின் வீட்டிற்கு வர காரை நிறுத்தியதும் போட்டிப் போட்டு உள்ளே ஓடியவர்கள் மனீஷை ஒன்றாய் தூக்கினர்.
“நாங்களும் இங்க தான் இருக்கோம்” என்ற ஹர்ஷாவின் குரலில் திரும்பிய ரோஹித் “ஒஹ்ஹ்… இந்தா கார் சாவி. போய் வண்டிய எடு” என்றான். அவனை முறைத்து காரில் அமர்ந்த ஹர்ஷா ஸ்டார்ட் செய்ய பின்னால் அமர போன மோனிகாவை தடுத்து “நீ போய் அவன் பக்கத்துல முன்னாடி உக்காரு. நாங்க மனீஷ பார்த்துக்குறோம். நீ வா ரோஹித்” என்றுக் கூறி பின்னால் அமர்ந்தாள் நீணா.
“இதெல்லாம் அநியாயம்டி. இன்னொருத்தி இருக்காப் பாரு. அவளும் இப்படி தான் பண்ணுறா” என்று மோனிகா புலம்பியபடி முன்னால் அமர “சொல்ல மறந்துட்டேனே… ஷிவானி வீட்டுல போய் அவள பிக்கப் பண்ணிக்கணும்டா” என்றான் ரோஹித்.
“நேரம்” என்றவன் காரை கிளப்ப மனீஷை யார் மடியில் அமர வைப்பது என்பதில் ரோஹித்திற்கும் நீணாவிற்கும் சண்டை வந்தது. அவர்கள் மாறி மாறி மனீஷை பிடுங்கி விளையாட இதை கார் கண்ணாடியில் பார்த்த மோனிகா கலவரமாகி “டேய்… என் பையன என்ன பண்ணுறீங்க?” என்றுக் கேட்டாள்.
உடனே நெருங்கி அமர்ந்து இருவரின் மடியிலும் அவனை அமர்த்தி “ஒண்ணுமில்லையே” என்று ஒரே குரலில் கூறினர். “பாரு உன் பையன் எவ்வளவு அழகா சிரிச்சுட்டு இருக்கான்?” என்று நீணா கேட்டதும் அவனை கொஞ்ச ஆரம்பித்தான் ரோஹித்.
ஷிவானியின் வீடு வந்ததும் ஹர்ஷா காரை நிறுத்த வேகமாக ஓடி வந்து கதவை திறந்தவள் “ரோஹித் நீ பின்னாடி போய் உக்காந்துக்கோ ப்ளீஸ்” என்று அவனிடம் கெஞ்சினாள். இந்த இடைப்பட்ட நாட்களில் ஹர்ஷாவும் ரோஹித்தும் அவளுக்கு நண்பர்கள் ஆகியிருந்தனர்.
நீணா கை கொட்டி சிரிக்க ஹர்ஷா கண்ணாடி வழியாக வாய் பொத்தி சிரித்து மோனிகாவின் தோள் சுற்றி கை போட மனமே இல்லாமல் மனீஷை ஷிவானியிடம் கொடுத்துவிட்டு ரோஹித் இறங்கி காரின் கடைசிக்கு சென்று அமர்ந்தான். சிறிது தூரம் சென்றதும் ஹர்ஷா சாலையின் ஓரம் காரை நிறுத்த அவர்கள் அருகில் வந்தான் வைபவ்.
“நேரே முன் இருக்கையருகில் வந்தவன் “ஹே நீ போய் மனீஷ பாரு. நான் என் பிரெண்ட் கிட்ட பேசணும்” என்றுக் கூறி மோனிகாவை பின்னால் அனுப்பி வைத்தான். “இவன் வரான்னு சொல்லவே இல்ல” என்று ஹர்ஷாவை முறைத்த மோனிகா காரை விட்டிறங்கி பின்னால் சென்று அந்த கடுப்பில் “ஹே நீ போய் உன் புருஷன் பக்கத்துல உக்காருடி” என்று நீணாவை பின்னால் அனுப்பினாள்.
தன் அருகில் வந்தமர்ந்த நீணாவின் தோள் மீது கை போட்டு ரோஹித் சிரிக்க மனீஷை விட்டு வந்த கடுப்பில் அவன் கையை தட்டிவிட்டாள் நீணா. அதன் பின் வெங்கட்டின் வீடு வந்து சேரும் வரை வைபவ் வாயை மூடவில்லை.
வெங்கட்டின் திருமண நாள் விழா. இடையில் ஒரு முறை வைபவை ரோஹித் ஹர்ஷாவுடன் வெளியில் சந்தித்தவர் அவனுக்கும் நண்பர் ஆகியிருந்தார். அவர் தான் அவனை விழாவிற்கு அழைத்தது.
காரிலிருந்து இறங்கியதும் மோனிகாவின் கையில் இருந்து மனீஷை வைபவ் வாங்கி அவனை கொஞ்சியபடி உள்ளே செல்ல ஷிவானிக்கு ஏமாற்றமாக இருந்தது. “நல்லா வேணும்டி உனக்கு. இவ்வளவு நேரமா என் பையன என் கையிலயே குடுக்காம என்ன பாடு படுத்தின?” என்று மோனிகா கேட்கவும் “இப்பயும் நான் போய் கொஞ்சுவேன் போடி” என்று சிலிர்த்துக் கொண்டவள் வைபவ்வின் பின்னால் சென்றாள்.
“ஹாய் வைபவ்”
குரல் கேட்டு திரும்பியவன் “ஹாய் ஷிவானி. எப்படியிருக்கீங்க?” என்றுக் கேட்டான். “நல்லாயிருக்கேன்” என்றவளின் பார்வை மனீஷிடமே இருக்க புன்னகையுடன் அவனை தருவதற்காக கையை நீட்டினான் வைபவ். அவனை ஆச்சரியமாகப் பார்த்தவள் மனீஷை வாங்கிக் கொண்டு அமைதியாக நடக்க வைபவ் அவளை விட்டு விலகி செல்லாமல் அவளுடனே நடந்தான்.
விழா துவங்கி ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரோஹித்திடம் வந்த நீணா “எனக்கு ஜூஸ் எடுத்துட்டு வந்து தரியா ரோஹித்? அங்க ரொம்ப கூட்டமா இருக்கு. நடந்து நடந்து காலெல்லாம் வலிக்குது வேற…” என்றாள். உடனே சென்று ஜூஸ் எடுத்த் வந்து கொடுத்தான் ரோஹித்.
“ஸ்ட்ரா வேணும்” என்றவளை முறைத்து “திரும்ப அவ்வளவு தூரம் போக முடியாது நீணா. நீ என்ன சின்ன கொழந்தையா? அப்படியே குடி” என்றான்.
“முடியாது எனக்கு ஸ்ட்ரா வேணும். அது இருந்தா தான் குடிப்பேன்”
“ரொம்ப பண்ணேன்னா இங்கயே டிவோர்ஸ் பண்ணிட்டுப் போயிடுவேண்டி”
ஒரு மணி நேரமாய் அருகருகில் நடந்தாலும் ஷிவானியும் வைபவ்வும் ஒன்றுமே பேசவில்லை. ஷிவானிக்கு அமைதியான இந்த வைபவ் புதியவனாய் தெரிந்தான்.
வைபவ் அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று தான் நினைத்தான். காரில் அவ்வளவு நேரமாய் வளவளத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது பேச எந்த விஷயமும் கிடைக்காதது அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது.
நடந்து நடந்து களைத்து போனவர்கள் ஜூஸ் அருந்துவதற்காக அங்கே வர… அவர்கள் காதில் ரோஹித் கூறியது கணக்கச்சிதமாய் விழ… இதற்கு மேலுமா வைபவ்விற்கு பேச விஷயம் வேண்டும்.
“என்ன இப்படி சொல்லுறான்?” என்றுக் கேட்ட ஷிவானியை அமைதியாய் தன்னுடன் வருமாறு சைகை செய்து ரோஹித் நீணாவை விட்டு தள்ளிச் சென்றான் வைபவ்.
வெகு நேரமாய் மனீஷை காணாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மோனிகா. சுஹாசினியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவள் கண்கள் மகனையே தேடி அலைந்தன. சுகாசினியை வெங்கட் அழைக்க அவர் நகர்ந்துச் சென்றதும் ஹர்ஷாவை தேடிச் சென்றாள். “மனீஷ் எங்க?”
“வைபவ் வெச்சிருப்பான்”
“வைபவ் எங்க?” என்று பொறுமை இழந்து கேட்ட மோனிகாவை பார்க்க ஹர்ஷாவிற்கும் பாவமாக இருந்தது. “வா தேடி பார்க்கலாம்” என்றவன் அவள் கையை பிடித்து நடந்தான். ஒரு மரத்தின் அடியில் சேரில் அமர்ந்து ஷிவானி மனீஷிற்கு பீடிங் பாட்டிலில் இருந்த நீரை புகட்டிக் கொண்டிருக்க அவள் அருகில் அமர்ந்திருந்த வைபவ் அவளையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹர்ஷாவும் மோனிகாவும் அவர்கள் அருகில் வந்தபோது ஜூஸை ஸ்ட்ராவில் உறிஞ்சியபடி ரோஹித்தொடு நீணாவும் வந்து சேர்ந்தாள். “வைபவ்வா இது? அமைதியா உக்காந்திருக்கான்?” என்று மோனிகா ஹர்ஷாவின் காதை கடிக்க “அததான் நானும் யோசிக்குறேன்” என்றான்.
நீணா குழப்பமாக ரோஹித்தை பார்க்க அவனும் அதே போல் அவளைப் பார்த்தான். அவர்கள் அருகில் வந்தப் பிறகும் ஷிவானி நிமிராமல் அமர்ந்திருக்க புன்னகையுடன் எல்லோரையும் பார்த்த வைபவ் “ஐ லவ் ஹர்” என்றான் தெளிவாக.
எல்லோரும் அதிர்ந்து ஷிவானியை பார்க்க அவள் இன்னும் தலையை குனிந்து அமர்ந்தாள். “அய்யய்யோ… நீயும் கவுந்துட்டிய்யா? இவனப் பத்தி உனக்கு என்னடி தெரியும்?” என்று மோனி கேட்க “அதெல்லாம் தெரியும். அன்னைக்கு ஜெயன்ட் வீல்ல போனப்பயே எல்லாத்தையும் சொன்னாங்க” என்றாள் ஷிவானி.
மோனிகா ஏதோ கேட்கப் போக கை நீட்டி அவளை தடுத்த நீணா “ஜெயன்ட் வீல் ஒரு சுத்து சுத்துரதுக்குள்ள இவனோட மொத்த சரித்திரத்தையும் சொல்லக் கூடிய ஆளு தான்டி இவன். அதனால அவன் என்ன சொன்னான்னு மட்டும் கேட்டுடாத” என்றாள்.
மோனிகா அமைதியாகிவிட சேரில் இருந்து எழுந்த வைபவ் “எல்லாம் உங்களால தான்டா… நீ எதுக்குடா நீணாவ டைவர்ஸ் பண்ண போறேன்னு சொன்ன?” என்று மிரட்டலாகக் கேட்டான். “அதெல்லாம் சும்மா வைபவ். பாரு நாங்க சண்டையெல்லாம் போடல” என்ற ரோஹித் நீணாவை தோளோடு அனைத்துக் கொண்டான்.
“நீங்களுமாடா?” என்பது போல் வைபவ்வையும் ஷிவானியையும் பார்த்த ஹர்ஷா திரும்பி ரோஹித் நீணாவை முறைக்க மோனியும் அவர்களை தான் முறைத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் நீணாவின் கையில் இருந்த காலி கிளாஸை மும்முரமாய் ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.
ஷிவானியிடம் திரும்பிய மோனி “அடுத்த மாசம் மேரேஜ் இன்விட்டேஷன் அனுப்புடி” என்றாள். “அடுத்த மாசமே எப்படி மோனி?” என்று ஹர்ஷாவும் ரோஹித்தும் கேட்கும்போதே “நாளைக்கே எங்க வீட்டுலேருந்து பொண்ணு பார்க்க அவ வீட்டுக்குப் போயிட்டு அப்படியே டேட் பிக்ஸ் பண்ணிடலாம்னு இருக்கேன்” என்றான் வைபவ்.
“டேய்” என்று ஒரே குரலில் ஹர்ஷாவும் ரோஹித்தும் கூற “பின்ன? உங்க பிரெண்ட் உங்கள மாதிரி தான இருப்பான்?” என்றாள் மோனி. “நீங்க ரெண்டுப் பேரும் நம்ம படிச்சிட்டு இருந்ததால விட்டு வெச்சீங்க… இல்லன்னா நீங்களும் இவன மாதிரி தான இருந்திருப்பீங்க?” என்று நீணா கேட்க “அதுக்கு ஏன்டி செல்லம் இப்படி மானத்த வாங்குற?” என்றுக் கேட்டு அவளை அங்கிருந்து அழைத்து சென்றான் ரோஹித்.
“நீ மட்டும் இங்க இருந்து என்ன செய்ய போற? மனீஷ் தூக்கிட்டு வா” என்ற ஹர்ஷா மோனிகாவை அழைத்துச் சென்றான். மீண்டும் தனித்து விடப்பட ஷிவானியையே பார்த்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்தான் வைபவ்.
வீடு வந்து சேர்ந்த ரோஹித்தும் நீணாவும் சோர்ந்துப் போயிருந்தனர். சோபாவில் அமர்ந்தவர்கள் சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிதாக புன்னகைக்கத் துவங்கி பின் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர்.
“வைபவ் ஷிவானி சேருறதுக்கும் நம்ம தான் காரணமா?”
“நீ வேற ரோஹித்… ஒரு ஸ்ட்ரா பிரச்சனையினால அவங்க சேர்ந்திருக்காங்க”
சிரித்து ஓய்ந்தப் பின் ரோஹித் அமைதியாய் நீணாவை பார்க்க அவளின் சிரிப்பும் காணாமல் போய் தலை குனிந்து அமர்ந்தாள். “அது ஏன் நீணா நீ இப்படி திடீர்னு அமைதியாகிடுற?”
“அதான் சொன்னனே… முதல் தடவ நீ இப்படி பார்த்ததுலேருந்து இப்போ வரைக்கும்… நீ இப்படிப் பார்த்தா என்னால நார்மலா இருக்க முடியாது”
“அப்படி என்ன பார்த்தேன்? இப்படி அமைதியா உன்ன நான் பார்த்ததே இல்லையா?”
“அமைதியா பார்க்கிறது வேற… ஆனா நீ இப்போ பார்க்கிறது வேற…”
ரோஹித் புன்னகையுடன் அவளை இழுத்தணைத்துக் கொண்டான். நீணா அமைதியாக அவன் நெஞ்சில் தலை வைத்து அமர்ந்திருந்தாள்.
“நாளைக்கு அங்கிள் ஆன்ட்டி வராங்க. அவங்களுக்கு செக்கப் இருக்கு”
“ம்ம்… ஞாபகம் இருக்கு”
“அவங்க முன்னாடி இப்படியெல்லாம் உட்கார முடியாதே… இன்னைக்கே இதெல்லாம் அனுபவிச்சுக்க வேண்டியது தான்”
சட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் “இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல?” என்றாள். சிரிப்புடன் அவள் கன்னம் பற்றி அருகில் இழுத்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டவன் அவளுக்குள் தொலையத் துவங்கினான்.
மெல்ல அவனை விளக்கி எழுந்தவள் “நைட் நூடுலஸ் தான் செய்யப் போறேன்” என்றுக் கூறி சமையலறை நோக்கி நடந்தாள். “எனக்கு தோசை வேணும்”
“மாவு இல்ல போடா… நூடுல்ஸ் தான் செய்ய முடியும்”
“என்னடி ஓவரா பேசுற?” என்றவன் சோபாவில் இருந்த சிறிய குஷனை தூக்கி அவள் மீது எறிந்தான். “அப்படி தான்டா பேசுவேன்” என்றவள் இருந்த எல்லா குஷனையும் தூக்கி அவன் மீது சரமாரியாக எரியத் துவங்கினாள்.
எல்லாவற்றையும் தட்டிவிட்டவன் அவள் கை பிடித்து இழுத்து சிறிது நேரத்திற்கு முன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் இதழ் முத்தத்தை தொடர்ந்தான்.
முற்றும்