pm10

pm10

ஃபீனிக்ஸ் – 10

 

“தேவையில்லாம எதுக்கு வரும்போது போகும்போது எதிர்ல வந்து வம்பு பண்றதோட, இப்ப வீடு வரை வந்திருக்கீங்க?”, என கடுமையாகவே கேட்டேன் அந்த அரை.. சாரி அவரிடம்.

எனது உயர்ந்த குரலைக் கண்டு, “ஷ்… மெதுவா!”, என அதட்டியவன், “உன்னைப் பாத்து பரவசப்படவோ, பம்மிகிட்டு தெரியவோ நான் ஷ்யாம் கிடையாது.  நீ சரினு சொல்லனும்னு வருசக்கணக்கா பொறுமையா, பைத்தியக்காரன் மாதிரி உன் பின்னாடியே தெரிஞ்ச அவன் மாதிரி நான் இல்லை! லிசன் மீ… அதுக்கான ஆளும் நாங்கிடையாது!”, என்று சட்டென்று கூறியதும் எனக்கும் கோபம் வந்திருந்தது.

“அப்ப அவம்பேருல நீ ஏன் திரியற?”

“ஹேஏய்.. அதுக்கு!”. முகம் சுளித்து யோசனையோடு கேட்டான்.

“உங்கிட்ட உண்மையில்லை!”

“உண்மையில்லைதான்.  டெத் சர்டிபிகேட் என் பேருல வாங்கிட்டாங்க! என் எல்லா ரெக்கார்ட்ஸ்ஸூம் போச்சு.  நான் சரியான பின்னதான் செத்தவன் வேற, இருக்கறவன் வேறன்னு வீட்டு ஆளுங்களுக்கு தெரிய வந்திச்சு!”, என இருகைகளையும் விரித்துக் காட்டி நிதர்சனம் உரைத்தான்.

“அதெப்படி!”, நம்பாத மனது அப்படிக் கேட்கச் சொன்னது.

“ஃபிரண்ட்ஸ் அடையாளம் தெரியாம பதட்டத்தில அப்டி மாத்தி அட்மிட் பண்ணிட்டாங்க, வீட்லயும் நடந்த களேபரம் அண்ட் அவன் போயிட்ட துக்கத்துல, எதையும் கவனிக்கலை!”

“அதுக்கப்புறம் தெரிஞ்சதும் மாத்திருக்கலாம்ல!”, எனது புத்திசாலித்தனத்தை அவனிடம் வித்தையாகக் காட்டினேன்.

“இப்ப உனக்கு என்ன பிரச்சனை!  அவம்பேர நான் யூஸ் பண்றதா? இல்லை நானா?”, பாயிண்டை பாயிண்டாப் பிடிச்சான் பாரு.

அத்தோட கொஞ்ச நேரம் நான் ஆஃப்.

பதில் கூறாமல் அமைதியாகிவிட்டேன்.

உண்மையில் எனக்கென்ன பிரச்சனை?  நானும் சற்று நேரம் யோசித்தேன். என்ன சொல்லவென்று!

“சொல்லு!”, எனை ஊக்கினான்.

“….” ‘வாயத் திறக்க நான் என்ன லூசா.  அப்டியே அவனை மேலிருந்து கீழாய், கீழிருந்து மேலாய் பார்த்தபடியே யோசித்தேன்’.

வித்தியாசம் ஒன்னுமே தெரியலை.  ரெண்டும் ரெண்டு ஆப்பை.  ரெண்டும் கழண்ட ஆப்பை.  ஒன்னு போயிருச்சு.  இன்னொன்னு என்னை வச்சுச் செய்யுது இப்ப! 

இதுதான் தோணித்து!

“நீ பேச மாட்டே!  இப்டியே ஊமையா இருந்தே ஒருத்தனை மொத்தமா சென்ட் ஆஃப் பண்ணிட்ட! அடுத்து அதுக்கு வேற ஆளு இல்லை!”, தீர்க்கமாக உரைத்தவன்

“உன்னைப் பத்தி ஷ்யாம் மூலமா தெரிஞ்சதால வந்து கேக்கறேன்!  அவ்வளவுதான்!  கல்யாணங்கறது உன் தனிப்பட்ட விருப்பம்.  அவனை நீ அக்சப்ட் பண்ணலைங்கறது தெரியும். அதான் எங்கம்மா கேட்டப்ப சரின்னு ஒத்துக்கிட்டேன்.  ஆனா என்னை நீ அவாய்ட் பண்றதைப் பாத்தா விசயம் உண்மைனு தோணுது!”, என்றவன்

தாடையை யோசனையாய் தடவியபடி, எனது முகத்தை ஆராய்ந்தபடியே பேசிக் கொண்டிருந்தான்.

‘அட பாயிண்ட்டுக்கு பிறந்த பைத்தியமே!  இப்டி நச்சு நச்சுனு நெத்தில அடிக்கற மாதிரி உண்மை பேசுனா நான் என்னடா செய்வேன்! மிடில! இதுக்குமேலயும் எதாவது சொன்னா அழுதுருவேன்!’, மனம் அலுத்தது.

பதில் பேசாமல் தேங்கினேன்.  எதையாவது சொல்லப்போக, வினையாக வந்துவிடக்கூடாதே என்கிற முன் எச்சிரிக்கைதான்.

“அதுக்காக பிடிக்காத உன்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ற ஐடியாவெல்லாம் எனக்கு எப்பவுமே இல்லை!”, என்றவனது அலட்சிய வார்த்தைகளில் நான் தேங்கி அவனது முகம் காண,

“ஒரே உருவ ஒற்றுமை எங்களுக்குள்ள இருந்தாலும், உன் பார்வையில என்னைப் பாக்கும்போது வெறுப்பையும், அவனைப் பாக்கும்போது அது இல்லாததையும் நானே கவனிச்சிருக்கேன்!”

‘இவ்வளவு ஷார்ப்பா நீ இருந்திருக்க வேணாம்’, மனம் ஓலமிட்டது.  அவன் விடாமல் தொடர்ந்தான், “..அதை நாந்தான் ஒரு முறை ஷ்யாம் புலம்பும்போது சொன்னேன்.  சோ நீ அவங்கிட்ட லவ் புரொப்போஸ் பண்ணலைன்னாலும் நான் கெஸ் பண்ணது சரியாதான் இருந்திருக்கு.  அவனும் அந்த ஹோப்போடதான் இருந்தான்.  அப்பறம் என்னன்னவோ வந்தது. பட் இப்டி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கலை!”, என்றவன், சிகையை இரு கைகளாலும் மேலிருந்து கீழாக தடவிக் கொண்டவன், கண்களை இறுக மூடித் திறந்து என்னை நோக்கினான்.

நிறுத்தி, எனது முகத்தைக் கூர்ந்து நோக்கியபடியே, “என்ன நான் சொல்றது உண்மையா?”

“…”, அப்போதும் மௌனமாக இருந்தேன்.

“…அதுக்காக பழங்காலத்துல மாதிரி அவனையே நினைச்சிட்டு நீ தனியா இருக்கறதை என்னால சரின்னு சொல்ல முடியலை.  இது சினிமேட்டிக்கா இருக்கறமாதிரி தோணுது”, தோளைக் குலுக்கி அவன் கூற

‘உங்கிட்ட வந்து நான் ஒப்பீனியன் கேட்டேனா? ஏன் ஒட்டகமே!  போயி உன் வேலை எதுவோ அதப் பாப்பியா’, மனம் சொன்னது, நேரில் கூற இதயக்குழிக்கு அத்தனை தைரியம் இருக்கவில்லை.

தொடர்ந்தான். “ரியல் லைஃப்ல இதெல்லாம் சரியா வராது.  எங்கம்மாவே ஆரம்பத்தில ரொம்ப புலம்பினாங்க! ஒரு மாசத்துக்கு மேல சாப்பாடு இல்லாம கிடந்தாங்க! ஆனா  இப்பல்லாம் அவனைப் பத்தி பேசறதே இல்லை.  அதுக்காக எங்கம்மாவுக்கு அவன்மேல பாசமே இல்லாம இருந்தாங்கன்னோ, இல்லை அவனை மறந்திட்டாங்கன்னோ சொல்ல முடியாது.  இதுதான் நிதர்சனம்னு ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் கடந்து வந்திட்டாங்க!

அதுபோல உனக்கும், மனசை வேற எதுலயாவது திசை திருப்பினா, இதுல இருந்து வெளிய வர வாய்ப்பிருக்கு!  அதற்கான வாய்ப்பை நீ குடுக்காதமாதிரி இருக்கு!  இப்ப நீ எடுத்திருக்கிற முடிவு சரின்னு தோணுனாலும், இன்னும் சில வருசத்துக்குப் பின்ன கடந்துபோன நாளை நினைச்சு வருத்தப்படற நிலைகூட வரலாம்.

அன்பு, பாசம், காதல் எல்லாம் மனுச வாழற காலத்திலதான் நம்ம உணர்வுகளோட வாழும்.  செத்துட்டா அது கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சி, மறந்திருவோம்.

அதனால, ஆரம்பத்தில இருந்த உன் மனநிலை மாறி நீ வேறொரு நிலைக்கு வரும்போது, தனிமை மட்டுந்தான் மிஞ்சும்.  அப்ப உனக்கு தனிமை இனிமையா இருக்காது!  கொடுமையா இருக்கும்!

சோ, நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு! உங்க பேரண்ட்ஸ்ஸூக்கும் நீ ஒரே பொண்ணுதான்.  அவங்களும் உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப்படறாங்கனு உனக்கும் தெரியும்.

அவனை நினைச்சதைத் தவிர, பேசவோ, இல்லை வேற எதையும் செய்யாத நீ, உனக்கு கொடுத்திருக்கிறது, ரொம்ப கொடுமையான தண்டனை!”, என நிறுத்தியவன்

“ஓரளவு எங்கிட்ட எல்லா விசயத்தையும் ஷேர் பண்ணிக்குவான்.  அவன் மலேசியா போற ஒன் மந்த் முன்ன நான் அப்ராட் போயிருந்தேன்!”, என்றவன்

“அதுக்கு முன்ன வரை என்ன நடந்ததுங்கறது எனக்கும் தெரியும், அதுக்கப்புறமா என்ன நடந்தது, ஏன் அவன் மலேசியா போனான்னு ஒன்னுமே புரியலை!”, என்று யோசனையாக கூறிவிட்டு

“அப்டி நான் கெஸ் பண்றது உண்மைனா! நீ கொடுத்திருக்கிற இந்தத் தண்டனை உனக்கு அவசியமா? இல்லையானு நீ முடிவு பண்ணு?

வருசங்கடந்து வருத்தப்படறதுல எந்தப் பிரயோசனமும் இல்லை!”, என நீண்டதொரு உரையை நிகழ்த்தியவன் அப்படியே பதிலுக்கு காத்திராமல்,

“நீயா எங்கூட வந்தா வாழ எந்தத் தடையுமில்லை.  உனக்குப் பிடிக்கலைன்னா பிரிஞ்சரதா இருந்தாலும் எனக்கு ஓகேதான்!”, என என் பதிலுக்குக் காத்திராமல் அறையிலிருந்து அகன்றிருந்தான்.

அவன் கூறிய அனைத்தும் அறிவுக்கு புரிந்தது!

அரைவேக்காடா அவன்?

புத்தனா சித்தனா?

இவன் வேற லெவல்!

அலுத்துக் கொண்டது உள்ளம்!

உலகம் புரிந்தவன்!

ஆனாலும் அவனைச் சிலாகித்த மனம் வேறு எதையும் சிந்திக்க மறுத்தது.

நிச்சலன உறக்கத்தில் மட்டுமே எந்த நினைவுகளுமின்றி இருந்தேன்.

பொழுது புலரும்போது, ஷ்யாமின் மறைந்திருத்த நினைவுகள் பூதகரமாக வெளிவருவதை தடுக்க முனையவில்லை. தற்போது உடன் ஷ்ரவந்தின் பேச்சுகளும் வந்து மூளையை சலவை செய்கிறது.

ஒரு வாரம் அமர்ந்து தொடர்ச்சியாக ஷ்ரவந்த் என்னிடம் பேசினால், மாறினாலும் மாறிவிடுவேனோ எனுமளவிற்கு பேசுகிறான்.

பயம் வந்துவிட்டதோ?

மனம் அவன் பக்கமாய்ச் சென்றுவிடுமோ? காதலுக்கு அநியாயம் செய்து விடுவேனோ?

உள்ளம் ஏனோ பதைபதைப்பாய்…

அதனால் ஷ்ரவந்தை, அவனது பேச்சை, நினைவுகளை பிடிவாதமாக ஒதுக்குகிறேன்.

மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்திய கதைதான் என்னது!

மனம் ஷ்யாமின் நினைவுகளோடு, வேறு எந்தக் குறையையும் உணராததாய்!

ஆனாலும் ஷ்யாமிற்கு நியாயம் கேட்ட மனதிற்கு நானே நியாயம் செய்யும் முடிவுடன், ஷ்ரவந்தை, அவன் பேசியதை நினைவலையில் இருந்து ஒதுக்கி, புறம் தள்ளி வைத்தேன்.

பெற்றவர்களின் கண்ணீருக்கும் கரையவில்லை!

சொல்லுக்கும் செவி சாய்க்கவில்லை!

அப்படியே தொடர்ந்தது வாழ்வு!

பணி மட்டுமே துணையானது!

வருடங்கள் சென்றது.

சேமிப்புகள் இடமானது!

இடம் விடுதியானது!

“ஃபீனீக்ஸ் மகளிர் விடுதி!!”

விடுதியின் தேவைகள் பற்றி அறிந்திருந்தமையால், பெரியவர்களின் நமுப்பை நமுத்துப் போகச் செய்ய தாயின் பெயரில் இடம் வாங்கித் துவங்கியிருந்தேன்.

ஆதரவற்ற, மணவாழ்வில் நாட்டமில்லா பணிக்குச் செல்லும் பெண்களுக்காக மட்டும் என பிரத்தியேக உரிமையோடு அவ்விடுதி தொடங்கப்பட்டது.

அதில் எனது தாய், தந்தை இருவரும் மேற்பார்வையாளர்கள்.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகும் ஓடியாட முடியாத நிலையில் இருந்த எனது தந்தைக்கு, ஆறுதலாகவும், பொழுதுபோக்காகவும் விடுதி மேற்பார்வை செய்வது அமைந்தது என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்தில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஷ்யாமின் தந்தையின் மறைவிற்குப் பின், அவனது தாயும் அவ்விடுதிக்கு விருப்பத்தோடு வந்து தஞ்சமடைந்திருந்தார்.

அவரின் ஒரே வருத்தம். ஷ்ரவந்த் மறுமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததுதான்.

ஆம்! இருவரும் மனமொத்த ஒப்புதலோடு, திருமணத்தை ரத்து செய்து பிரிந்திருந்தோம்.

எவ்வளவோ நான் மறுத்தும் தஞ்சமடைந்திட்ட ஷ்ரவந்தின் தாயாரை அவர்களோடு தங்கிக் கொள்ள அனுமதித்திருந்தனர்.

எனது பெற்றோருக்கும் அவரின் சங்கடங்கள் புரியாமல், புரிந்ததுபோலும்!

சம்பந்தி என உறவுமுறை கொண்ட அன்போடுடனான அழைப்புகள் காதில் கேட்டது!

அவ்வப்போது அரைவேக்காட்டை அதாவது ஷ்ரவந்தை வேறு திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தல்கள் தொடர்ந்தது!

எனக்கும் சந்தேகம் வந்தது, ‘ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறான்?’

சந்திக்கும் வாய்ப்புகளை இருவருமே ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

சந்திப்புகள் அதன்பின் நிகழவேயில்லை!

தாயைக் காண எப்போதேனும் விடுதிக்கு வந்து செல்வதை அறிந்தேன்.

ஆனாலும் சந்திக்க எண்ணவில்லை!

அவனும் அப்படி என்னை அணுகவில்லை!

மூவரின் கவனிப்பில் விடுதி செம்மையாக செயல்படுகிறது.

வாரமொருமுறை நானும் விடுதிக்குச் சென்று, இரண்டு நாள்கள் தங்கி பணிக்குத் திரும்புகிறேன்.

நல்ல மாறுதல் மனதில். பலதரப்பட்ட பெண்களைக் கண்ணுறும்போது எனக்கு நேர்ந்தது ஒன்றுமேயில்லை எனத் தோன்றுகிறது.

இன்னும், எங்களுக்குப்பின் உனக்கென ஒரு உறவு வேண்டும் என பெற்றவர்கள் நச்சரிக்கிறார்கள்.

நச்சரிப்புகள் தொடர்கதை. நாளும் புதுக்கதையாய்!

அதற்கென்று நல்ல உற்ற உறவாக இந்த விடுதி என்னுடைய இறுதிக் காலத்தில் அமையும் என்று சொல்லி ஆரம்பித்தாலும், இன்னும் அவர்கள் அதை விடுவதாக இல்லை.

அரைகுறையாக இருந்த என்னை முழுமையாக மாற்றியவன், எனை இறுதிவரை வாழ வைக்கமாட்டானா?

இன்னும் ஷ்யாம், ஷ்யாம் எனும் ஜபத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை!

அவனின் நினைவு எனக்கு உறுதுணையாக இராதா?

உண்மை அறிந்து கொண்டாலும் உள்ளத்தைப் பகிர இயலவில்லை!

அமைதியாக மறுத்து விடுகிறேன்.

பெரியவர்களின் பேச்சைக் கேட்டு கேட்டு மனமும் மறத்துவிட்டது!

பணியின்றி இருக்கும் நொடிகள் அவனுக்கு சொந்தமானது!

அதுபோலவே சில நாள்கள் சென்றது!

வாழ்க்கையும் பழகிவிட்டது.

அனைத்தையும் மாற்றிக் கொள்ள இயன்ற என்னால் அவனின் நினைவுகளிலிருந்து முற்றிலும் மீள இயலவில்லை.

மீள நானும் விரும்பவில்லை!

மனம் வழமைபோல ஷ்யாமின் நினைவுகளை நோக்கி!

காதலைச் சொல்ல தைரியமில்லை!

காதலன் மரணித்ததால் மரத்திருந்த மனதில் அனைத்தும் சாத்தியாமானது!

துவளாமல், துடிப்போடு இயங்கச் செய்யும் அவனது நினைவுகள் எமது பொக்கிசம்!

துவளாமல் இறுதிவரை துடிப்போடும், அவன் நினைப்போடும் வாழ்ந்திருப்பேன்!

இதே நினைவோடு விடுதிக்கு வார இறுதியில் வந்த எனக்கு விடுகதையும் அதற்கான விடையும் காத்திருந்தது.

————————

 

Leave a Reply

error: Content is protected !!