pm3

ஃபீனிக்ஸ் – 3

 

போகப் போக புரிந்தும், புரியாமல்!

அவனது செயல்கள் அனைத்தும் புதிதாய், புரியாத புதிராய்!

ஒருவரல்லவோ! சந்தேகம்… மழைக்கு முளைத்த விதைபோல துளிர்விட்டிருந்தது!

சாந்தமாக… கண்கள் சந்தித்தலில் சிந்திப்புடன்…! அதுவே சிரிப்புடன்! நெருக்கம் கூட்டியது அடுத்த பரிமாணத்தில்!

கலியுகக் கண்ணனாக… ஆனால் தவிர்த்த, தவிக்கவிட்ட சந்திப்புகள்…! பார்வையாலேயே தள்ளி நிறுத்தியது! இது வேறு பரிமாணம்!

இருவேறு பரிமாணம் தந்தது ஒருவரல்ல!

சாந்தம், காந்தமாக எனை ஈர்த்தது!

காந்தம், பாந்தமாக மனதோடு பொருந்திப் போனது!

அவனது பந்தாயில்லாத அன்பில், கருணையும் பிறந்திருந்தது!

சிலருக்கு வெட்டரிவாளோட கிடா மீசை வச்சிக்கிட்டு திரியறவனைப் பிடிக்கும், சிலருக்கு அமைதியா இருக்கிறவனைப் பிடிக்கும்.  சிலருக்கு தாங்கறவனைப் பிடிக்கும்… இப்படி இன்னும் பல வகைகள் இருந்தாலும், எனக்கு அவனது சாந்த சொரூபம் பிடிச்சிருந்தது.

சின்ன, பெரியதிரை கதாநாயகன்களைப் போன்றதொரு வசியமான தோற்றம்.

விஜய், அஜித்,…. இப்டி இன்னைக்கு சிவகார்த்திகேயன்னு பாத்துப் பழகின மனசுக்கு, பச்சக்குன்னு ஒட்டிக்கற மாதிரியான பழக்கமான காந்தமாக இழுத்த முகம்!

பாக்கப் பாக்கப் புடிக்கற முகம்னா அதெல்லாம் எனக்கு ஒத்துவராது.  பாத்தவொடனே புடிக்கற முகமா இருந்ததால, விட மனசில்ல!

அதனைக் காட்டிலும், உடை, பாவனை, நேர்த்தியில் தேர்ந்த அவனது  பண்புகள், விளக்காமலேயே எனக்குள் விளங்கியது.

வசியம் செய்தவனிடம், வசமாக மாட்டிவிடாமல் இருக்க, பெற்றோரை நினைவு கூர்ந்தேன்.

கண்டிப்பும், கறாரும் கண்ணிலே விரலைக் கொண்டு ஆட்டிய நிழல் செய்கையில் சுதாரித்தேன்.

சுதாரித்த உள்ளம் அன்று முதல் புதிதாக அவதரித்ததை அறியாமல் போனேன்!

அடுத்தடுத்த சந்திப்புகள், எந்த சந்தர்ப்பத்தையும் எதிர்நோக்காது தானாகவே அமைந்தது!

 

சந்தித்த வேளையில், சிந்திக்காமல் என்னிடம் தந்துவிட்டான் அவனை என்பதை அடுத்து வந்த சந்திப்புகளில் கண்டு கொண்டேன்.

பருவம் கர்வம் கொண்டது!

மேனி, முப்பத்து முக்கோடி தேவர்கள் நின்று ஆசிர்வதித்தது போன்று சிலிர்த்தது!

சிலிர்த்த மேனியின் மனம் சிதறினாலும், பதறினாலும், அதைப் படம்போட்டுக் காட்டிக் கொள்ளாமல், கட்டுக்கோப்பாக காத்து நின்றேன் எனது உணர்வுகளை!

குழம்பி நின்றவனை, மேலும் குழம்பச் செய்து, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் சந்திப்புகளில் சாதூர்யமாக அகன்றிருந்தேன்.

எத்துணையோ ஆண்களைக் கடந்திருந்த எனக்குள் கடத்தியிருந்தான் அவனது நினைவுகளை!

திரையரங்கே திணறும் தடையற்ற ஓட்டம் எனது நினைவுகளில், மனங்களில்! அவனது உருவம் அகக்காட்சியாய்!

உணர்வுகளையும் கண்களின் வழியே கடத்த அவன் முற்பட, பார்வையைத் தழைத்து, அதைத் தற்காலிகமாக தடைசெய்தேன்.

தொய்வு கல்வியில், ஆய்வு காதலில்!

டீனேஜ் செய்த ஹார்மோன் சாகசத்தின் மிச்சம் சொச்சம் அவனின் நினைவுகள் என் நெஞ்சோடு உறைந்து கலந்திருந்தது!

கடும் வெம்மை காலத்திலும் உறைந்தவை கரையவில்லை!

நினைத்திருப்பான் அவன்மீது எனக்கு கருணையில்லை என்று!

போகட்டும்! போகட்டும்!

கருணை, உயிரைப் பரிசாய்க் கேட்கும்!

நேந்து கொள்ளாத கோவிலுக்கு எனது வீட்டாரால் அவன் பலிகடாவாக நேரிடும் என்பதை அறியாதவன்!

அவனை வாழ்நாளின் துணையாக யாசிக்க, அவனுக்காக யோசிக்கிறேன்!

பேருந்தில் தொடர்ந்த சந்திப்புகள்! அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறாத சந்திப்பாய் நீண்டது.

உறக்கமும் உணர்வும் கலைந்தாலும், உறவுகள் கலக்கவில்லை!

பதினெட்டில் அடியெடுத்து வைத்தபோது, வாக்களிக்க மட்டுமன்றி, அவனுக்கு வாக்கப்படவும் வைக்கப்பட்ட தேர்தலை முதன் முறையாகச் சந்தித்தேன்.

ஒரு வருடத்திற்குப்பின் அசட்டு துணிச்சல் வந்ததோ?

தைரியம் தந்த உந்துதலில் பேசத் துவங்கியிருந்தான்!

“நீங்க எந்த காலேஜ்?”

‘தெரிஞ்சும் தெரியாதமாதிரி என்னயா கேள்வி? ஹி..ஹி..ஹி’ மனதோடு மட்டுமே எனது பதில்கள்.

‘ஜனனி! ஐயோ பாவம் அவனுக்குக் கேக்கலை!’ அதில்தான் எனக்கு எத்தனை வருத்தம்! சோகங்களாய்!

“நீங்க எந்த ஏரியா?”

மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். ஏரியா தெரிந்து வீட்டுப் பக்கமா வந்தால், வெற்றிலை பாக்கு வைத்து வா என்றா வரவேற்பார்கள்.  அது அத்தனை எளிதில் நடக்கவே நடக்காது.

“யு லுக் லைக் பிரெட்டி!”

‘அப்டியா…!’ மனம் மட்டுமல்லாது, நானும் வானில் இறக்கையின்றிப் பறந்தேன்.

“என்னை உங்களுக்குப் பிடிக்கலையா?”

‘அச்சச்சோ.. உங்களுக்கு ஏன் இந்த டவுட்?’

“ஏம் பேசமாட்டீங்கறீங்க?”

‘பேசுனா…! எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திருமே! அதுவும் சுபமா இருக்கும்னு கண்டிப்பா சொல்லவே முடியாதே!’, பயம் வந்து பயமுறுத்தியது.

“சும்மா சொல்லுங்க மனசுல உள்ளதை!”

‘சொல்லிருவேன்!  ஆனா அதனால வர விளைவை நெனச்சா…! வேணானு தோணுது!’

“நீங்க வேணானு சொன்னா உங்களை டிஸ்ட்ரப் பண்ண மாட்டேன்!”

பூகம்ப அதிர்ச்சி எனக்குள்.

‘வேணானா…! உன்னை வேணானு சொல்லிட்டா அப்புறம் எனக்கெதுக்கு இந்த வாழ்க்கை!’, என் பிதற்றலை உணராமல் பிதற்றினான்.

காதலுக்கு மரியாதை போன்ற படத்தையெல்லாம் பாத்து நான் ஒரு ஃபார்முல இருக்கறது அவனுக்குத் தெரியலை!

“ஏன் நேத்து வரலை? உடம்புக்கு என்ன?”

‘உடம்புக்கு வந்தாதான் லீவு போடணுமா?  நல்லா யோசிக்கிறீங்க!  சித்தி, சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தாங்க… அதான்!’

“யாருக்கும் பயப்படறீங்களா?”

‘பெரிய இவருன்னு நினப்பு, எல்லாத்தையும் எதித்துகிட்டு பிருத்விராஜ் கணக்கா வந்து அல்லாத்தையும் அடிச்சுத் துவம்சம் பண்ணிட்டு, அலேக்காத் தூக்கிட்டுப் போயிருவாரு!’, என மனம் கேலி செய்தாலும், ‘ஆமான்னுதான் சொல்லணும்.  ஆனா அதை சொல்லக்கூட எனக்குப் பயம்?’

“என்னை ஏங்க உங்களுக்குப் பிடிக்க மாட்டுது?”

‘என்னா வார்த்தை சொல்லிட்டீங்க! யாரு அப்டிச் சொன்னா?’, கோபமே வந்துவிட்டது.  எனது கோபத்தை தப்பாகப் புரிந்து கொண்டான்.

“என்னைப் பாத்தா பாவமா இல்லையா?”

‘என்னைப் பாத்தா உனக்கு எப்டித் தெரியுது? ஒரேடியா கேள்வியா கேட்டுக் கொல்லுற’

“கொஞ்சம் மனசு வைக்கலாம்ல!”, கெஞ்சும் குரலில் கேட்டான்.

‘குழம்பு வைக்கறமாதிரி என்ன கேள்வி இது? மனசு வச்சதாலதான நீ பேசுற எல்லாத்தையும் இதயத்தில ரெக்கார்ட் பண்ணிட்டே வரேன்.  அதைத் திருப்பி மனசுக்குள்ள போட்டுப்போட்டு என் பொழுதப் போக்குறேன்’, வெளியில் வழமைபோல ஊமை வேசம் ஆனால் எனக்குள் ஆவேசம்.

“உங்களை நல்லா பாத்துப்பேங்க!”

‘நானும் பாத்துப்பேன், கல்யாணத்துக்கப்புறமா!’

“உங்களுக்கு ஃபோட்டோஜெனிக் ஃபேஸூங்க!”

‘ரொம்ப டேங்ஸ்!’ வெட்க மேகங்கள் சூழ்ந்து கொண்டது என்னைச் சுற்றி.

‘நீங்களுந்தான் ரொம்ப மேன்லியா…! அம்சமா இருந்து என்னை துவம்சம் பண்றீங்கோ! இன்னும் என்னென்னவோ சொல்லத் தோணுது.  ஆனா சொல்ல வெக்க வெக்கமா வருது!’, நான் வழிந்தது எனக்கே ரொம்ப அதிகமாகத் தோன்றியது.

“நீங்க ரொம்ப அமைதியா?”

என்ன பதில் சொன்னேன்?

‘எல்லாத்தையும் என்னவோ சத்தமா சொல்லிக் கிழிச்ச மாதிரி, என்னவொரு பில்டப்புன்னு நீங்க என்னை ஏசுறது கேக்குது, வேற வழியில்லை எனக்கு’

‘உம்மேல.. சாரி உங்கமேல எனக்கு அம்புட்டு இஷ்டம்.  ஆனா பாருங்க. அதைச் சொல்லக்கூட பயமா இருக்கு.  சரினு நான் சொன்னா இதே மாதிரியே நீங்க அமைதியாவா இருப்பீங்க’, எனது கேள்விகள் என்னோடு.  அவனது ஆராய்ச்சி என் முகத்தோடு!

இது நிச்சயமாய் ஒரு தலைக் காதலல்ல!

“உன்னைப் பத்திக் கொஞ்சம் சொல்லேன்”, ஏக்கமாக அவன்…

பதில் கூறினேனா?

————————