pm6
pm6
நித்தமும் அவன் நினைப்புகள் உண்டாக்கிய களிப்புகள் ஏராளம்!
கனவுகள் மொத்தத்தையும், அவனுக்கு மட்டுமே குத்தகைக்கு விட்டுவிட்டேன்!
ஆனாலும் அவனை நேரில் கண்டு காதலைக் கூற தைரியம் வரவில்லை.
தவறாமல் தவிக்கவிட்டேன்!
தவித்தாலும், எனைத் தவிர்க்க எண்ணாத தயாளன்!
வாய்ப்பு கிட்டும்போது வாய்ப்பூட்டில்லாமல் வந்து பேசினான்.
முறுக்கிக் கொண்டேன். ஆனாலும் சிறுக்கி என் மீது கோபம் கொள்ளவில்லை. ஆனால் என்மேல் கிறுக்காக இருந்தான்
“நீயே என் ஆதாரம். ஆகவே என் தாரமாக வந்து விடு!”, என காணும்போதெல்லாம் கூறுகிறான்.
மறைமுக பதிலைக்கூட கூறாமல் தவிர்த்தேன். தவித்தேன்!
தவிப்புகள் சங்கடங்கள்!
சங்கடங்களை சகித்துக் கொண்டே சந்திப்புகளை நீட்டித்தான்.
பசிக்காமலேயே புசிக்கிறேன்!
மூன்று வருடங்களில், ஒவ்வொரு நாளின் தவிப்புகள்?
சளைக்காத உள்ளம் கொண்டிருந்தான்.
தமக்கையின் திருமணத்திற்கு அழைப்பிதழை கொடுக்கும் சாக்கில் அவனது தாயோடு வந்து சென்றான்.
அவனது தாயும், “நம்ம வீட்டு கல்யாணத்துக்கு எல்லாரும் குடும்பமா வந்திருந்து சிறப்பு செய்யணும்”, என்ற அன்பு கட்டளையோடு பத்திரிக்கை வைத்துச் சென்றார்.
ஊமைக்கொட்டானாக அவனும் நானும் கண்களாலேயே பேசிக் கொண்டதோடு சரி.
அதன் பிறகு, கல்யாண வேலைகள் அனைத்தும் முடிந்து ஒரு வாரம் கழித்து, புதிய நான்கு சக்கர வாகனத்தோடு வந்து கல்லூரி வாசலிலேயே மகிழ்ச்சியாக சந்தித்தான்.
அவனது தைரியம் எனக்குள் அச்சத்தைத் தந்தது.
தோழிகளை ஏமாற்றி, திசைமாற்றி தனித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகியிருந்தது.
பழகியிருக்கவில்லை அல்லவா. அதனால் வந்த பதற்றம் அது.
அச்சம் கொண்டதைக் கண்டு, “எதுக்குப் பயப்படற? வீட்டுல நம்மைப் பத்திப் பேசப் போறேன். எங்கம்மா நான் என்ன கேட்டாலும் மறுக்க மாட்டாங்க. எங்கப்பாதான் கொஞ்சம் தகராறு பண்ணுவாறு. எப்டியும் அவங்க ஒத்துழைப்போட சமாளிச்சுருவேன்!”, நம்பிக்கை வார்த்தை கூறினான்.
முதன்முதலாக நானும், “எங்க வீட்லஅஅ நானும் உங்களை விரும்பறதைப் பத்தி எதுவும் சொல்லிராதீங்க!”, என என்னையறியாமல் எனது காதலை அவனிடம் கூறிவிட்டேன்.
காதலை மறைமுகமாகத் தெரிவித்ததால், உள்ளம் கனிந்து உரிமையோடு கேட்டான். “உன் ஃபோன் நம்பர் தா”
தலையசைத்து மறுத்துவிட்டேன்.
வீட்டில் நினைத்த நேரத்தில் எல்லாம் அலைபேசியோடு அமர்ந்திருந்தால், பெருக்குமாறு மட்டுமே உடம்போடு பேசும்.
அதனால் முக்கிய அழைப்புகளை மட்டும் பெற்றோர் ஏற்று, என்னிடம் தருவர்.
அதற்குமேல் நானும் பெரியளவில் எதிர்பார்த்தது கிடையாது.
வருத்தமிருந்தாலும், அதை மறைத்து சொச்ச நேரத்தை, சொர்க்கம்போல எண்ண வைத்தான்.
முதன் முதலாய் மதுரை மல்லி, அவன் நேசத்தோடு எனது கூந்தலில்.
காதலன் வாங்கித் தந்ததால், இன்னும் மணம் கூட்டியது.
தலையில் சூட்டிய மலரை, இதயம் தொடும் வகையில் முன்னால் போட்டுக் கொண்டேன்.
அவனிருக்கும் இடம் அதுவல்லவா?
“பூ வச்சதும், அந்த கன்னம் சிவந்து இன்னும் அழகாத் தெரியற”
“சும்மா சொல்றீங்க”
“இதுல யாராவது பொய் சொல்வாங்களா?”
“நீங்கதான் இப்ப சொன்னீங்களே”, என நாணத்தோடு குனிந்த என், தாடை தொட்டு நிமிர்த்தி
“கொல்ற நீ”, என்ற அவனது வார்த்தைகள் என்னைக் கொன்றது.
“காதல்போல சுகமாக இம்சை ஒன்று உண்டா உலகில் என்றால்… நிச்சயம் நான் இல்லை என்பேன்”
அவனுக்குள்ளும் சந்தோசம் குமிழிட்டதைக் கொண்டாட, அவனது வாகனத்தில் அழைக்க, மறுத்து மனதார மனம்விட்டு பேசி, மலைப்போடு வீட்டிற்கு கிளம்பினேன்.
பிரிய மனமில்லாமல் பிரிந்த இரு உள்ளங்கள், வரப்போகும் நன்னாளை தங்களுக்கானதாக மாற்றிக் கொள்ளப் போராட எண்ணி, உத்வேகத்தோடு பிரிந்தது.
சந்தோசத்தை பகிர்ந்து கொண்டவனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல், எனக்குள் சந்தோசம் குமிழிட்டதை மறைத்திருந்தேன்.
தவிப்போடு நின்றதைக் கண்டாலும், காணாததுபோல வந்துவிட்டேன்.
விரைவில் நல்ல செய்தியோடு, குடும்ப சகிதம் வருவதாக உறுதி கூறிச் சென்றிருந்தான்.
அந்த நன்னாளுக்காக நானும் காத்திருக்கத் துவங்கினேன்.
இனி அனைத்தும் சரியாகிவிடும்.
எண்ணங்கள் அனைத்தும் ஈடேறிவிட்டால், நம்மை யாராலும் அசைக்கவே இயலாது.
ஆனால் அசைத்துப் பார்க்கவும் விடியல் வந்தது.
காத்திருப்பு நீண்டது.
நான் தவிக்கும் நாளும் விரைவில் வந்தது!
தொழில் நிமித்தமாக அவனை மலேசியாவிற்கு அனுப்பி வைத்திருந்தார் அவனது தந்தை.
இந்த விசயத்தை பிறர் வழி நான் அறிந்து கொள்ளவே பத்து நாள்கள் கடந்திருந்தது.
கடத்திய மனிதர், என்னையும் அவனோடு சேர்த்துக் கடத்தியிருந்தால் புண்ணியமாவது கிட்டியிருக்கும்.
இதை அறியாமல் பேருந்து பயணத்திலும், எனது வீட்டிலும் அவனது வரவை எதிர்நோக்கி நான்!
எனை தொடர்பு கொள்ள இயலாதநிலையில் அவன்!
‘அலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கலாமோ’ என்று ஒரு எண்ணம், அடுத்து, ‘அதைக் கொடுத்திருந்தால் வேறு ஏதேனும் வம்பு வந்திருந்தால்…’ என என்னையே முறைப்படுத்தினேன்.
காணாத நாள்கள் அனைத்தும் விடியல் தராததாகவே சென்றது.
மனம் வாடியதால்,முகத்திலும் மாற்றங்கள் வந்து போனது.
கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?
ஒன்றா, இரண்டா இதுபோன்ற சந்தோசத்தைத் தொலைத்த நாட்கள்?
அப்டி இப்டினு ரெண்டு வருசத்தை ஓட்டிட்டாருங்க அவங்கப்பா! ரொம்பக் கல்நெஞ்சம்!
நெஞ்சம் தவித்த தவிப்பில், நெருப்பில் வெந்த இதய ரணத்தோடு வலம் வந்தேன்.
‘ஆனா அந்த ரெண்டு வருசத்தை இருபது வருசம்போல கடந்தேன். அந்தக் கஷ்டத்துல, இந்த காதலே வராம இருந்திருக்கலாம்னு கண்ணீர் வடிச்சேன். பசி, தூக்கம் எல்லாத்தையும் மறந்து போனேன். கொடுமையான நாள்கள் அது. எந்தக் காதலர்களுக்கும் அந்த நிலை வரக்கூடாதுங்க’
படிச்சு முடிச்சாச்சு. ரொம்ப யோசிச்சு, கோச்சிங் கிளாஸ்ல போயி சேந்துட்டேன்.
படிப்பைக் காரணம் காட்டி திருமணத்தைத் தவிர்த்தேன். வராததை வந்ததாக விடாமல் தொடர்கிறேன்.
வழமைபோல கோச்சிங் வகுப்பிற்குள் நான்! எனது நினைவு முழுக்க அவன்!
எனக்குள்ள இருந்த சோகத்தில இளைச்சு துரும்பாகிட்டேன்!
எறும்பு ஊர்ந்து மலையும் தேஞ்சதுபோல, அவன் நினைவு மனதில் ஊர, ஊர உடம்பு தேயுதோ?
இளைச்சதை வீட்ல மட்டுமில்லாம, பாக்க வர வரனெல்லாம் இளக்காரமா பேச ஆரம்பிச்சாச்சு!
இன்னிக்கு வருவானா? நாளைக்கு வருவானானு எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சினது.
ஆனாலும் ஊமை நாடகம் தொடர்ந்தது.
ஆனா அதுல என் பங்கு மட்டுமே தெரிஞ்சுது. அவனைத் தெரிஞ்சிக்கற வாய்ப்பு எனக்கு கிடைக்கலை.
கோச்சிங் வகுப்பு எனக்குள் இளைப்பாறலான இடமாகிப் போனது.
இரண்டு வருடங்கள்… எழுநூற்று இருபது நாட்கள்.
முழுவதுமாகக் கடந்தபின், எதிர்பாரா நன்னாளில் நல்லதொரு செய்தி எனை வந்து எட்டியது.
வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், ஊருக்கு அவன் திரும்பியதை செவி வழிச் செய்தியாக அறிந்தேன்.
ஒரே ஆரவாரம்! எதிர்பார்ப்பு!
கண்ணாடி முன் நீண்ட நாளுக்குப்பின் தவம் கிடந்தேன்.
தவிப்பின் நீளமும், எனது அங்கத்தின் அலங்கோலமும் கண்டு நானே பதறிப் போனேன்.
ஆனாலும், அதைச் சரிசெய்ய மெனக்கெட்டேன்.
மனதில் உண்டான சந்தோசம் உடலெங்கும் மிளிர்ந்ததோ?
எங்கேடா? எப்படா என்னைப் பாக்க வருவ? ஏக்கங்கள் ஏக்கர் கணக்கில்!
பித்துப்பிடித்தாற்போல அங்குமிங்கும் குட்டிபோட்ட நாய்போல அலைந்தேன்.
கண்ணில் தென்படவேயில்லை.
வந்த பிறகும், ஏன் வந்து எனைக் காணவில்லை!
தகுதிக்கேற்ற வரன் கடந்த ஆண்டுகளில் வந்தும், இவனை நினைத்துக் கொண்டு, எதாவது சாக்கு சொல்லி தட்டிக் கழித்து வந்திருந்தேன் தப்பித்து!
அவன்மேல் கொண்ட பித்து தெரியாமல், தெளியாமல் அவஸ்தையில் தொடர்ந்திருந்தன நாள்கள்.
வந்து வாரமாகியும் அவனைக் காணவில்லை.
நிழலைக்கூடக் காணோம்.
அரைவேக்காடு தம்பி ஒருத்தன்! புல்லட் பாண்டி கணக்கா வண்டியில ஏக ரவுசு பண்ணுவான். அவனையும் காணவில்லை!
நண்பர்களோடு சுற்றுலா சென்றிருந்ததாக அறிந்தேன்.
ஆண்கள் எத்துணை நெருங்கிய உறவுகள் வந்தாலும், நட்புகளை ஒதுக்குவதில்லை, விட்டு ஒதுங்குவதில்லை என்பதை அறிந்திருந்தேன்.
எங்கு சென்றிருக்கிறான் என அறிந்துகொள்ள ஆசையிருந்தாலும், சென்று கேட்டால் தப்பாகிவிடுமே!
யாரிடம் கேட்க?
பொறுத்தது பொறுத்தாயிற்று. இன்னும் இரண்டொரு நாள்கள் தானே, பொறுப்போம் என எனக்குள் தைரியம் கூறிக் கொண்டேன்.
‘கேளாமலேயே அவனே வந்து அனைத்தையும் சொல்வான் கேடி!’ என இறுமாந்திருந்தேன்!
உள், வெளி என எந்த நாட்டிற்குள் சென்றாலும், காதலனைக் காணாத நாள்கள் ஒரே மாதிரியாகத்தானே அமையும்.
கசப்பாகவே சென்றது!
பரபரப்பும், பதட்டமும் ஒருங்கே சேர நாள்கள் சென்றது.
வீடு திரும்பும் வழியில் அவனது வாசலில் கூட்டம்.
‘பெரியவர்கள் யாருக்கோ உடலுக்கு பிரச்சனைபோல!’, என அவனைத் தேடிய விழிகளோடு கடந்தேன்.
விழிகளில் அகப்படாதவனை தேடிக் களைத்திருந்தன கண்கள்.
வீட்டிற்கு வந்ததும், தாயிடம் விசாரித்தேன்.
கேட்டதும், உலகம் இருண்டு போனது!
‘ஆக்சிடெண்டாம்! ரெண்டு பேரையும் ரொம்ப சீரியசா அட்மிட் பண்ணிருக்காங்கலாம்!’
தடுமாறியதை மறைக்க தடுமாற்றம் வந்தது!
அனைத்தும் நின்றுபோனது போன்ற மாயத் தோற்றம்.
மீளவே இயலாத நிலைக்குச் சென்று, மீள முயன்றேன்.
அன்று முழுவதும் இறைவனோடும், அவன் நினைவுகளோடும் கலந்திருந்தேன்.
உயிர்ப்பிச்சை கேட்டு ஊமையாக பிரார்த்தித்தேன்!
அனைத்திலும் வெற்றி கண்டவன், சிகிச்சையிலிருந்து மீண்டானா?
மீளாது போனால் வாழாது இதயம்!
————————