pmepi

ஃபீனிக்சாய் மனம் (எபிலாக்)

 

ஜனனிக்கு, ஷ்ரவந்துடன் மனமொத்துப் போக நாளெடுத்தது.

ஏதோ உறுத்தல்.  அதனால் இயல்பாக கணவனோடு பேசினாலும், உடன் வசித்தாலும், புலனாகா இடைவெளி இருவருக்கிடையே இருக்கவே செய்தது.

தயக்கம், குற்றவுணர்வு தன்னிடம் அவளை நெருங்க விடவில்லை என்பதை ஷ்ரவந்த் புரிந்து கொண்டான்.

விலகி, விலகிப் போனவளை தனது சாமார்த்தியத்தால், இயல்பாக நடந்ததுபோல, இணைந்திருக்கும் நிஜங்களாக திட்டமிட்டு நடக்கச் செய்தான் ஷ்ரவந்த்.

எந்தச் சூழலிலும், பெண்ணுக்கு பழைய நினைவுகளை உண்டாக்கிடாமல் இருக்க, தன்னை விழிப்பாகவே வைத்துக் கொண்டான்.

புதிய நிகழ்வுகளைக் கொண்டு, பழையதை மறக்கச் செய்யும் வித்தை தெரிந்திருந்தது ஷ்ரவந்திற்கு.

பெரியவர்களுக்கு இருவரும் மனமொத்து இணைந்ததில் எல்லையில்லா சந்தோசமே.

வெளியூரில் வேலையில் இருந்தவளை மாற்றி வரும்படி ஷ்ரவந்த் கூறவில்லை.  அவளது போக்கில் இருக்கச் செய்திருந்தான். ஆனால் அவளது தாய் அதைக் கூறிக்கூறியே அலுத்துப்போய் விட்டுவிட்டார்.

“எல்லாம் மாப்பிள்ளை குடுக்கற இடம்டீ”

“புருசன் குடுத்த இடத்தைக்கூட பொண்டாட்டி அனுபவிக்கப் பொறுக்காத அம்மாவா இருக்க நீ”

“ஏன் சொல்லமாட்ட? பெத்த மனசு கிடந்து அடிச்சிக்கிட்டதுக்கு, அந்த ஆண்டவனாப் பாத்து வாழ்க்கைப் பிச்சை போட்டுருக்கான்.  ஆனா உனக்கு இன்னும் புத்தி வராம இருக்க”, என ஜனனியின் தாய் வசவுபாட

“இப்ப என்னாங்கற? எதுக்கெடுத்தாலும் என்னை நொட்டை சொல்லலனா உனக்குத் தூக்கமே வராதா?”, எனக் குரல் கம்ம நின்றவள்

“எனக்கு நீ அம்மாவா, இல்லை மாமியாவான்னு ஒரே சந்தேகமா இருக்கு”, என நகர்ந்தாள்.

பங்கஜம் மிகவும் ஜனனியோடு ஒத்துப் போய்விடுவார்.  ஆனால் ஜனனியின் தாயிக்கும், அவளுக்கும் அத்துணை முரண்பாடுகள்.

ஜனனியின் தாயிக்கு, அவர்களது குடும்பம் தற்போது தங்களோடு இருக்கும் வேளையில், தனது பெண் பொறுப்பாக இல்லையென்று அவர்கள் எதாவது கூறிவிட்டால் என்ன செய்வது என அவள் தவறும் இடங்களில் அதைக் சுட்டிக் காட்டுவார்.  அல்லது அதனை மாற்றிச் செய் எனக் கூறினால் ஜனனிக்கு இப்படிப்பட்ட சந்தேகம் வந்துவிடும்.

இருவரும் இணைந்து வாழத் துவங்கியதுமே, அந்த விடுதிக்குள் இருப்பதை விரும்பாது வார இறுதி நாளில் வரும்போது மட்டும் ஷ்ரவந்தின் வீட்டிற்கு சென்று தங்கிக் கொண்டார்கள்.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது எனும் விதி இங்கும் நிறைவேறத் துவங்கியிருந்தது.

தனது அருகாமையை விரும்பும் உள்ளம், அதற்கடுத்த கட்டத்திற்கு செல்லச் தயங்கியதை உணர்ந்தான்.

ஷ்ரவந்தின் செயலால், பட்டும்படாமல் இருந்தவனது பக்கம், அவள் விரும்பாமலேயே நெருங்கி வரத் துவங்கினாள்.

அதற்குரிய அவகாசத்தை கர்ணன்போலக் கொடுத்தான்.

பெண்ணும் ஒரு காலகட்டத்திற்குமேல், ஷ்ரவந்தின் கைப்பாவையான நாளும் வந்தது.

இனிய தாம்பத்தியமானாலும், இழைதல் குறைவே! ஆனாலும், நுண்ணிய உணர்வுகளின் வசம் கட்டுப்பட்டு, தாம்பத்தியத்தின் வலிமையினால் வசந்தமாகவே வாழ்வைத் துவங்கி அதன்போக்கில் வாழத் தளைப்பட்டனர்.

 

இரண்டு ஆண்டுகளுக்குப்பின்…

யஷ்வந்த், யதுநந்த் எனும் இருமகன்கள் பிறந்திருந்தனர்.

பெரியவர்கள் மாறி, மாறி பார்த்துக் கொள்ள, வழமைபோல பெண் அவளது பணியில் கவனம் செலுத்துகிறாள்.

ஷ்ரவந்த் எனும் கண்ணியவானின் காருண்யம், அன்பின் பலனாக ஒரே பிரசவத்தில் இரு மகன்களைப் பெற்றுத் தந்து அனைவரையும் இரட்டை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாள் ஜனனி.

பெண் சூலுற்றது முதல் அனைவரும் தாங்கினர்.

பெண்ணுக்கு சந்தோசமான தருணம்.

தனக்குள் இறுகி, மருகியிருந்தவளுக்குள், துன்பங்கள் அருகிய வேளை.

ஈன்றெடுத்தவளை, இதமாய் தாங்கிக் கொண்டான் கணவன்.

குழந்தைகளை பெரும்பாலும் பெரியவர்களே கவனித்துக் கொண்டனர்.

ஒன்பது மாதங்கள் குழந்தைகளை வீட்டிலிருந்தே கவனித்துக் கொள்வதற்காக விடுப்பில் இருந்தவளுக்கு, வாழ்வின் இன்பம் அனைத்தும் கிட்டிய நிறைவு. அதன்பின்னே இடமாறுதலோடு அதே ஊரில் பணியைத் துவங்கியிருந்தாள்.

பணிக்குச் செல்லத் துவங்கியது முதல் மாற்றாந் தாய்போல மகன்களுக்கு மாறியிருந்தாள்.

மகன்களுக்கும் வயது இரண்டாகியிருந்தது.

மகன்களை மாமியாரும், தாயாரும் கவனித்துக் கொள்ள, அலுவலகத்திற்கு வழமைபோல சென்று வந்தாள்.  பெரும்பாலும் குழந்தைகள் ஜனனியைத் தேடாது.

“என்னங்க!”

“என்னங்க!”, என மனைவியின் குரல் வந்த அறைக்குள், இருபுறமும் தோள்களில் மகன்கள் தொற்றியிருக்க வந்து நின்றபடியே ஷ்ரவந்த் கேட்க

“அவங்களை பெரியவங்கட்ட விடுங்க.  எனக்கு வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க!”

“வந்திட்டேன்!”, என வெளியில் சென்று மகன்களை இருவரது தாய்மார்களிடம் இறக்கி விட்டுவிட்டு அறைக்குள் வந்து “என்ன ஜனனி?”, என வந்தவன் பின்னே தொடர்ந்து வந்த இருவாண்டுகளும் வாயில் விரலை வைத்தபடியே தந்தையின் கைலியை ஆளுக்கொரு புறமாய் வந்து பிடித்திருந்தார்கள்.

இருவரும் தூக்கும்படி தந்தையிடம் செய்கை செய்ய

ஷ்ரவந்த் சிரித்தபடியே, “இன்னும் என்னனு சொல்லலை”, என்றபடியே “நீ ரொம்ப யோசிச்சிட்டே இருந்தா, இன்னிக்கும் நீ சீக்கிரமா கிளம்பனும்னு நினைச்சது நடக்காது”, என்றபடியே மகன்களை மீண்டும் பழையபடி தூக்கிக் கொள்ள

திரும்பி நோக்கியவள், “எல்லாரும் அவங்களைத்தான் கவனிக்கறீங்க.  என்னை யாருமே இப்ப கண்டுக்கறதே இல்லை”, என ஜனனி புலம்ப

“ஏன் கண்டுக்காம?”, எனும் போதே, இருவரது தாய்மார்களும் ஆளுக்கொரு பேரனை ஷ்ரவந்தின் கையிலிருந்து வாங்கிக் கொண்டு, “ஒன்பதே முக்காலாயிருச்சு.  இன்னும் ஆபிஸ்கு கிளம்பல.  இதுல இன்னும் யோசனையா நிண்டா இன்னிக்கு ஆபிஸ் போனமாதிரிதான்”, என ஜனனியின் தாய் மகளிடம் கூறிவிட்டு அகல, தினந்தோறும் இதே பிரச்சனையை எப்படிச் சமாளிக்க எனப் புரியாமல் ஜனனி திண்டாடுகிறாள்.

“எல்லாருக்குமா இப்டி ஹெல்புக்கு ஆள் இருக்காங்க.  உனக்கு மட்டும் எல்லாம் செய்ய ஆள் இருந்தும், எதுக்குடீ லேட்டாகுது”, என்றபடியே மனைவியிடம் நெருங்கினான் ஷ்ரவந்த்.

“வாட்டர் கேன், லன்ச் இதெல்லாம் கொஞ்சம் எடுத்து வச்சிட்டு, என்னை கொண்டு போயி ஆபிஸ்ல விட்ருங்களேன்”, என்றாள் கிளம்பிய வண்ணம்.

“அதெல்லாம் ஆச்சு.  ஆச்சு”, என்றபடியே, “இதுதான் அந்த ஹெல்பா”

“ஆமாங்க.  உங்கட்ட வேற என்னத்தைக் கேக்கப் போறேன்”, எனச் சலித்தபடியே வந்தவளை அழைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான்.

ஜனனிக்கு, எதையும் துரிதமாகச் செய்து பழக்கமில்லாததால், அனைத்திலும் தாமதம்.

மகன்களைக் கவனிப்பதைக் காட்டிலும், அவள் கிளம்பி பணிக்குச் சென்று வருவதே பெரிய வேலையாக இருந்தது.

ஜனனியின் தாய்தான் அவ்வப்போது, “காசு பணத்துக்கு என்ன குறைவாவா இருக்கீங்க.  பேசாம வேலைய விட்டுட்டு, புள்ளைங்களைப் பாத்திட்டு வீட்டுலயே இரு.  எல்லாம் மாப்பிள்ளை பாத்துக்குவாறு”, என இலகுவாகக் கூறிட

வீவீ என தாயிடம் சண்டைக்கு நின்றிருந்தாள் ஜனனி.

ஷ்ரவந்தோ அவனின் தாயோ அதைப்பற்றி கருத்துகளை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

விடுதியோடு இருந்த இடத்தில் தனி சுற்றுச் சுவருடன் கூடிய வீட்டை, பெண் சூலுற்றதுமே ஒத்திக்கு பேசி, குடி போயியிருந்தார்கள்.

ஜனனியின் வசதிக்காக அவ்வாறு செய்திருந்தான் ஷ்ரவந்த்.

நடக்கத் துவங்கிய இரு இளஞ்சிங்கங்கள் இரண்டும், அசந்த நேரம் விடுதிக்குள் நுழைந்துவிடும்.

மாலை வேளையில் விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு இருவரோடும் நன்றாக பொழுது போகும்.

ஷ்ரவந்த் தனது அலுவலகப் பணியோடு, ஜனனியையும், அவ்வப்போது அவனைத் தேடும் மகன்களோடும் இனிதே வாழ்க்கையை நகர்த்துகிறான்.

வருடந்தோறும், இருவரும் ஒருமித்து வாழத் துவங்கிய நாளையே திருமண நாளாகக் கொண்டாடி வருகின்றனர்

ஜனனி அதை இணைந்து வாழத் துவங்கியபோது கூறியதோடு சரி.  ஒவ்வொரு ஆண்டும் நினைவில் வைத்து அதை கொண்டாடுகிறானோ இல்லையோ, மறவாது மனைவிக்கு பட்டுப்புடவை ஒன்றை எடுத்துத் தருவதை வாடிக்கையாக்கியிருந்தான்.

நான்காவது ஆண்டு நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டு துவங்க இருக்க, மனைவிக்கு பட்டுப்புடவை, மகன்களுக்கு புது ஆடை என வாங்கி வந்து நீட்டியவனிடம்

“என்னங்க இப்ப விசேஷம்”, எனக் கேட்கிறாள் ஜனனி.

தீபாவளி, வருசப்பிறப்பு என்றில்லாமல் எப்போதுமே பட்டாடை என்பதால், ஜனனிக்கு இந்த அன்பளிப்பு எதனால் என்பது புரியவில்லை.

இங்கு எல்லாம் உல்டா.

அதற்காக ஷ்ரவந்த் கோபம் கொள்ளவில்லை. ஜனனியைத் தெரிந்தவனாதலால், “சும்மா வாங்கணும்னு தோணுச்சு.  அதான்”, என நகர்ந்திருந்தான்.

அலவலகப் பணிக்கு மத்தியில், எதையுமே மனதில் இருத்திக் கொள்ளத் தோன்றாமல் ஓடுகிறாள் ஜனனி.

ஜனனிக்கு எந்தளவு ஒரே விசயத்தை எண்ணி, மன அழுத்தத்தோடு சில ஆண்டுகளைச் செலவிட்டாளோ, அதற்கு முற்றிலும் மாறாக எதையும் அலட்டிக் கொள்ளாமல், அலுவலகம், வீடு, குழந்தைகள் என மேம்போக்கான நிலையில் வாழப் பழகிக் கொண்டாள்.

அதனால் நினைவுறுத்தல்கள் எனும் நிலையிலிருந்து தன்னை மாற்றிக் கொண்டதால், இயல்பாக ஷ்ரவந்தோடு இணக்கமாக இருக்க முடிந்தது.

ஷ்ரவந்த் அதைப் புரிந்து கொண்டு, ஜனனி, யஷ்வந்த், யதுநந்த் எனும் மகன்களோடு, இல்லறத்தை இனியாகவே ரசித்து வாழ்கிறான்.

ஜனனியின் தந்தை விடுதியை கவனித்துக் கொள்ள, பேரன்களை இரு தாய்மார்களும் கவனித்துக் கொள்கின்றனர்.

விடுதி சார்ந்த இதர பணிகளுக்கு தனித்தனியாக ஆட்களை நியமித்து இருந்தனர்.

குறிப்பிட்ட நாளும் வந்திட, மாலையில் மனைவிக்கு அழைத்திருந்தான் ஷ்ரவந்த்.

“இன்னிக்கு வெளியே போகலாமா?”

“இன்னிக்கா?” என சற்று நேரம் லைனில் இருந்தபடியே யோசித்தவள், “இன்னிக்கு சான்சே இல்லைங்க.  இங்க இன்னும் வேலை முடியல”, என ஜனனி கூறியதும்

“சரி. நான் பசங்களை கூட்டிட்டு வெளிய போயிட்டு வரேன்”, என வைத்திருந்தான்.

வீட்டிற்கு வந்தவளுக்கு விசயம் எதுவும் தெரியாமல் வினவிட, “உன்னையெல்லாம்…”, என தலையில் அடித்துக் கொண்ட தாய் விசயத்தைப் பகிர்ந்ததும், அறைக்குள் அடைந்து கொண்டாள்

கணவன் வரும்வரை காத்திருந்து, மகன்களின் மகிழ்ச்சியில் திளைத்து, இருவரும் அறைக்குள் வந்திட “ஏன் எங்கிட்ட சொல்லவே இல்லை”, என கணவனிடம் சண்டைக்கு நிற்கிறாள் ஜனனி.

“என்னத்தை சொல்லலை!”, என மனைவிடம் வந்து நிற்க

“அம்மாதான் சாயந்திரம் ஆபிஸ் விட்டு வந்ததும், இன்னிக்கு கோவிலுக்கு போகலையான்னாங்க.  அப்பத்தான் என்ன விசேசம் கோவில்லன்னு கேட்டேன்.  ஒரே திட்டு.  நான் திட்டு வாங்கறதுல உங்களுக்கு அப்டியென்ன சந்தோசம்.  அன்னைக்கே இதுக்குத்தான் ட்ரெஸ் வாங்கினேனு சொல்லியிருந்தா இப்டி ஆகியிருக்குமா? சரி அன்னிக்குத்தான் சொல்லலை.  இன்னிக்காது விசயம் இதுதான்னு சொல்லியிருக்கலாம்ல”, என பிலுபிலுவென சண்டைக்கு நிற்க

சிரித்தபடியே மனைவியை தன்னோடு அணைத்துக் கொண்டவன், “இதுக்கா இவ்வளவு டென்சன்.  இப்ப என்னாயிருச்சு.  நாளைக்குகூட புது சாரிய கட்டிட்டு கோவிலுக்குப் போனாப்போச்சு”, என சமாளிக்க

“நீங்க எப்டி என்னை அண்டர்ஸ்டான் பண்ணிக்கிறிங்க.  ஆனா எங்கம்மா…”, என தலையில் கை வைத்து தாங்க முடியவில்லை எனச் செயலில் காட்டியவள், “எனக்கு நீங்க ரொம்ப இடம் குடுத்துத்தான் நான் இப்டி பொறுப்பில்லாம போயிட்டேன்னு உங்க மாமியார் என்னை ரொம்பத் திட்டுறாங்க. பேசாம நாம நம்ம வீட்டுக்கே போயிருவோமா!”, என கணவனிடம் கேட்க

“அதுக்கென்னடா போயிட்டா போச்சு”, என்று சிரித்தான் ஷ்ரவந்த்.

இது அடிக்கடி நடக்கும் விசயம். அதனால் ஜனனி பேசுவதை பெரிதாகவே எடுத்துக் கொள்ளமாட்டான்.

“அப்ப நம்ம தம்பிகளை யாரு பாத்துப்பா அங்க”, என யோசித்தவளை, அதிகம் யோசிக்க விடாமல், தன் அணைப்பில் வேறுலகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான் ஷ்ரவந்த்.

அனைத்தையும் சமாளிக்க ஷ்ரவந்த் இருப்பதால், ஜனனிக்கு எந்தத் தலைவலியும் இல்லை.

ஜனனியின் தாயிக்கு வேறு வழியில்லை. இப்படி ஒரு மகளைப் பெற்றதால் இறுதிவரை மகளோடு மல்லுக்கட்டல்கள் தொடர்ந்தால்தானே, ஜனனியின் மாமியார் வாயைத் திறவாது இருப்பார்.

இனி எல்லாம் அவர்களின் வாழ்வில் சுகமே!

வணக்கம்.

………….

கதை தோன்றிய தருணம்…

இருபத்தெட்டு வயது பெண்ணுக்கு பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம்.

நல்ல பொருத்தம்.

திருமணத்திற்கான எந்த அழைப்பும் வரவே இல்லை.

விசாரித்தபோது…

பத்தாண்டு காதல். அரசுப் பணிக்காக காதலன் முயல… காதல் காத்திருந்திருக்கிறது.

தேர்வில் வெற்றி பெற்றதும், காதலனோடு நிச்சயம் நடந்திருக்கிறது.

வரனின் அரசுப்பணி அனைவரிடமும் சிலாகிக்கப்பட்டிருக்கிறது.

அரசுப்பணியில் உள்ள வரனுக்கு பெண் தர முண்டிய கூட்டம்.

நிச்சயம் முடிந்ததை அறிந்தும் கூட்டம் குறையவில்லை. பேரங்கள் நடத்திருக்கிறது. மணமகனுக்கு பேராசை வந்திருக்கிறது.

அளவற்ற பணமும், பொருளும், வீடும் வரதட்சனை கேளாமலேயே தர முண்டியடித்த சமூகம்.

முடிவு, மணமகன் காதலித்தவளை மறுத்து ஒதுக்கிவிட்டான்.

அதிக சொத்து, வரதட்சனை தரக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தாயிற்று.

 

பெண் தற்போது புதிய பணி தேடி விண்ணப்பித்திருக்கிறாள்.

இனி பணி கிடைத்து, பணம் சேர்த்து, வரன் கிடைத்து….. (வேறோரு வரனோடு திருமணத்திற்கு அப்பெண் தற்போது சம்மதிக்குமா தெரியவில்லை)

சமூகம் விதைத்த இந்த விதையினால் மனம் கனமாகிப் போக, எனது மனதினுள் இந்தக் கதைக்களம் உருவாகிற்று.

அறிவுரையெல்லாம் யாரு சொன்னாலும், இங்க கேக்க ஆளில்லங்க…