Pokisha pezhai-1

இரவின் சிறைக் கைதியாய், அந்தப் பகுதியின் தெருக்கள் இருந்தன. ஓரிரு விளக்குக் கம்பங்கள், தன் ஒளிகொண்டு, இரவின் சிறையிலிருந்து அத்தெருக்களுக்கு விடுதலை வாங்கித் தர முயற்சி செய்தன.

இதோ அந்தத் தெருக்களைப் பற்றிய விவரங்கள்!

அத்தெருக்களின் ஓரங்களில் சிறு சிறு வீடுகள் மற்றும் கடைகள், இரண்டு மூன்று வண்டி உணவகம், வீட்டு வாசலில் இட்லிக் கடை வைத்திருக்கும் முதியவர், தண்ணீர் குழாயடியில் குடங்களுடன் காத்திருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், சரிசெய்ய ஆளில்லாமல் போன தெருவின் சாலைகள், அதிலும் ஆங்காங்கே சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருந்தன!

இதுபோன்ற நெருக்கடியான தெருக்கள் நிறைந்திருப்பதுதான் அப்பகுதியின் அடையாளம்!

அதில் ஒரு தெருவின் வழியே ‘கடனே என்று’ ஒரு இளைஞன் நடந்து வந்து கொண்டிருந்தான். பழகிய இடம் என்றாலும், சில இடங்களில் நின்று வேடிக்கைப் பார்த்தான். பின், திரும்பவும் சாலையின் மேடு பள்ளங்கள் பார்த்து நடக்க ஆரம்பித்தான்.

இப்படியே நடந்து வந்தவன், ஒரு பழைய கட்டிடத்தின் முன்பு வந்து நின்றான். நிமிர்ந்து பார்த்தான்.

சிறிய குண்டு பல்பு விளக்கு ஒளியில் தெரிந்த பெயர் பலகையில் லாட்ஜின் பெயர் எழுதியிருந்தது.

உள்ளே நுழைந்தான் இளைஞன். ‘வரவேற்பு’ எனப் பதாகை வைத்திருந்த மேசையின் அருகில் இருந்தவரிடம் போய் நின்று கொண்டு, ஏதோ வினவினான்.

“ஓ! அந்தப் பெரியவரா? ம்ம் மாடியில மூனாவது நம்பர் ரூம்” என்று, இளைஞனின் வினாவிற்கான விடை கொடுத்தார்.

நன்றிகள் நவின்று விட்டு, அழுது கொண்டிருந்த வரவேற்பு அறையின் வெளிச்சத்தில், அரைகுறையாகத் தெரிந்த படிகளில் ஏறத் தொடங்கினான்.

அறை எண் மூன்று வந்தது. இல்லை, அந்த இளைஞன் அறைக்கு முன்னால் வந்து நின்றான். அதன் கதவுகளைத் தட்டினான்.

கதவு திறக்கப்படவில்லை!

அவ்வளவு தூரம் நடந்து வந்த அலுப்பில், அசட்டையாகச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டே கதவைத் தட்டினான்.

சற்று நேரக் கதவு தட்டப்படும் ஓசைக்குப் பின்னராக, கதவு திறக்கப்பட்டது.

அந்த இளைஞனின் கண்களின் முன்னே ஒரு பெரியவரின் உருவம் நின்று கொண்டிருந்தது. இளைஞன் அவரை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உற்று நோக்கினான்.

இதோ அந்தப் பெரியவரின் சுய விவரங்கள்!

முழுவதும் நரைத்து இருந்த, தலை மற்றும் தாடி முடிகள். வெள்ளை நிறத்தில் பைஜாமா அணிந்திருந்தார். கண்களில் பெரிய அளவில் கண்ணாடி வேறு! அவரைப் பார்த்தாலே சொல்லிவிடலாம், ‘அவர் இந்தப் பகுதியில் வாழும் மனிதரல்ல’ என்று!

பெரியவரும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் அவனை உள்ளே அழைக்கத் தயங்கினார். அந்த இளைஞனும், பெரியவரின் தயக்கத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

தயக்கங்கள் தீர்ந்த பின்னர், “நீதான் ரோமியோ-வா?” எனக் கேள்வி கேட்டார் பெரியவர்.
அவரது கேள்வியே சொல்லியது ‘நீ ரோமியோ இல்லையே. அப்புறம் எதற்கு வந்தாய்?’ என்று!

அவரின் தயக்கதிற்குப் பிறகு வந்த கேள்வியின் அர்த்தம் புரிந்த இளைஞன், “நான் ரோமியோவோட ஆளு” என்று கெத்தாகப் பதில் தந்தான்.

அந்தப் பதிலில் பெரியவருக்குப் பெரிதாக உடன்பாடில்லை. இருந்தும், “ம்ம் சரி, உள்ளே வா” என்றார், மூப்பின் காரணமாக முரண்டு பிடித்தக் குரலில்.

பெரியவர் அசமந்தமாக நடந்து சென்று, அவ்வறையின் ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

அந்த இளைஞன் நாற்காலிக்கு முன்னே இருந்த சிறிய மேசையின் அருகில் வந்து நின்றான்.

அச்சிறிய அறையின் ஒற்றை ஜன்னல் வழியே கசிந்த விளக்கொளி, தன் ரெக்கைகளைத் தூக்கிச் சுற்றமுடியாமல் சுற்றும் காத்தாடி, பாடவதியான ஒரு கட்டில் மெத்தை. அப்பறம் இந்தப் பெரியவர் அமர்ந்திருக்கும் நாற்காலி மற்றும் மேசை. இதுதான் அவ்வறையின் விவரங்கள்!

“சொல்லுங்க. நீங்கதான கூப்பிட்டிங்க?” – இளைஞன்.

“நான் ரோமியோவைப் பார்க்கணும். அவன்கிட்டதான் பேசணும்”

“நீங்க என்ன சொல்றீங்களோ, அதை அப்படியே ரோமியோகிட்ட போய் சொல்லிடுவேன். சொல்லுங்க” என்ற இளைஞனின் உடல்மொழியே சொன்னது, அவன் ரோமியோவின் விசுவாசி என!

அவனை ஒரு நிமிடம் உற்று நோக்கினார். பின்னர், வெள்ளைத் தாடியைத் தேய்த்து விட்டுக்கொண்டே சிந்தித்தார்.
கடைசியில், “இது முக்கியமான விசயம். எல்லார்கிட்டயும் சொல்ல முடியாது” என்று மறுத்துவிட்டார்.

“எதுக்காகன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்?” என்று இளைஞன் கெஞ்சினான்.

மேசையின் மேலிருந்த புத்தகத்தைப் பார்த்தபடியே இருந்தார், பெரியவர்.

“ப்ளீஸ். முழுசா சொல்ல வேண்டாம். கொஞ்சமாவது சொல்லுங்க” – இளைஞன்.

மனம் இறங்கி வந்து, “ஒரு புதையல் பத்திப் பேசணும்” என்று சாந்தமாகச் சொல்லிவிட்டு, பெரியவர் எழுந்து கொண்டார்.

“புதையலா??” என்று சத்தமாகச் சொல்லி, வாய் பிளந்து நின்றான்.

“ம்ம், ரோமியோ அதை எடுத்துத் தருவானானு கேட்கணும்”

“…. ”

“சீக்கிரமா ரோமியோவைக் கூட்டிட்டு வா. இல்லைன்னா நான் வேற ஆள பார்த்துக்கிறேன்”

ரோமியோ இதற்கு ஒத்துக் கொள்வானா? என்று தெரியவில்லை. ஆனாலும் இளைஞனுக்குப் புதையல் ஆசை வந்தது. எனவே, “வேற ஆளு யாரு?” என்று கேட்டான்.

“மைக்கேல்”

‘மைக்கேலா?’ என யோசித்தவன், “இல்லை வேண்டாம். இதோ… நான் போய் ரோமியோவைக் கூட்டிட்டு வரேன்” என்று திரும்பினான்.

“ஒரு நிமிஷம்”

“என்ன?”

“சீக்கிரம் வரைலைன்னா, நான் மைக்கேல்கிட்டதான் உதவி கேட்பேன்”

“நான் சொல்றேன்ல, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நான் ஓடிப்போய்
ரோமியோவோட வரேன்” என்று அறைக் கதவு நோக்கி விரைந்தான்.

“ஓடிப்போய்னா?? வர்றப்போ நடந்தா வந்த??” என்று இளக்காரமாகக் கேட்டார்.

‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்துவிட்டு, அறையை விட்டு வெளியே வந்தான். நடைக்கூடப் பகுதிக்கு வந்தவன், ரோமியோவின் அலைபேசிக்கு அழைப்பை விடுத்தான்.

ஆனால் ரோமியோ அலைபேசியை எடுக்கவில்லை. இரண்டு மூன்று முறை முயன்றும், பலனில்லை.

‘வேறு வழியில்லை’ என நினைத்து, கடகடவென படிகளில் இறங்கி ரோமியோ வீட்டை நோக்கி வேகமான எட்டுக்களுடன் நடந்தான்.

அந்த இளைஞன் நடந்து செல்லும் போது, அவனின் எண்ணமெல்லாம் புதையல் பற்றியே இருந்தது.

ரோமியோ வீடு…

அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும், ஒன்று கூரை வேயப்பட்டதாக இருக்கும், இல்லையெனில் தகரம் வைக்கப்பட்டதாக இருக்கும்.

கொஞ்சம் வசதி என்றால், பெரிய உயரமில்லா கான்க்ரீட் கூரைகள் கொண்டு கட்டப்பட்ட, இரு அறைகள் கொண்ட வீடாக இருக்கும். ரோமியோவின் வீடு இந்தப் பிரிவின் கீழ் வரும்.

மூச்சிரைக்கும் வேகத்தில் நடந்து வந்த இளைஞன், வீட்டிற்குள் நுழைந்தான்.

வீட்டின் அறையில் கிடந்த வயர் கட்டிலில் மற்றொரு இளைஞன் அமர்ந்து, அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டியில் புதுப் பாடல்கள் பார்த்துக் கொண்டிருந்தான்.

நுழைந்த இளைஞன்-1, “ரோமியோ எங்கடா?” என்று அவசரமாக இளைஞன்-2-டம் கேட்டான்.

“ரூம்லதான் இருக்கான். என்னடா?? என்ன விஷயம்?” – இளைஞன்-2.

“ரோமியோகிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” – இளைஞன்-1.

“ஓ! அந்த ஆளப் போய் பார்த்தியா??”

“ஆளு கீளுன்னு சொல்லாத. அவர் பெரியவர்” – புதையல் என்ற சொல், இளைஞன்-1-யை இப்படிப் பேசவைத்தது.

எதுவும் புரியாததால், இளைஞன்-2 மீண்டும் தன் கவனத்தைப் புதுப் பாடல்கள் மேல் செலுத்திக்கொண்டான்.

இளைஞன்-1, அந்த வீட்டின் மற்றொரு அறையின் கதவை நோக்கி நடந்தான். வேகவேகமாக கதவைத் தட்டினான்.

“மெதுவா தட்டுடா திட்டப் போறான்” – இளைஞன்-2.

“போடா! அவசரம் புரியாம” என்று எரிச்சல் கொண்டான் இளைஞன்-1.

“என்ன அவசரம்?” – இளைஞன்-2.

“அதை ரோமியோகிட்டதான் சொல்லணும்” என்றான் இளைஞன்-1, திறக்கப்படாத கதவுகளைத் தட்டிக்கொண்டு நின்றபடியே!!

ஒரு கட்டத்தில் பொறுமை போனதனால், தட்டுவதை நிறுத்திவிட்டு இளைஞன்-2 உட்கார்ந்திருக்கும் வயர் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டான்.

இளைஞன்-2 சிரித்தான்.

‘ச்சே’ என்று மீண்டும் எரிச்சல் கொண்டான் இளைஞன்-1. எனினும் ரோமியோ கதவு திறப்பதிற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

இவர்கள் தேடிடும் ரோமியோ, கதவின் மறுபுறம் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறான்? கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் கதையின் நாயகன் அவன்தானே!!

கதவின் மறுபுறம் ரோமியோ என்ற வாலிப வயதுக்காரன், சுவரை நோக்கி நின்று கொண்டிருந்தான். என்ன செய்கிறான் என்று தெரியும் முன்னர், யாரிவன்? என்ற கேள்விக்கான விடை வேண்டும். இதோ ரோமியோவின் சுய விவரங்கள்!!

பெயர் : ரோமியோ
வயது : காதலிக்க ஏற்ற வயது.
எடை : 75 கிலோ… மூளையைச் சேர்த்தால் எடை இருமடங்காகக் கூடுமோ?!
குறிக்கோள் : பணம் சம்பாரிப்பது.

வேலை :
ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருக்கின்றான். கட்சிப் பணிகள், அதாவது தோரணம் கட்டுவது, கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, இன்னபிற சில்லறை வேலைகள் செய்து வருகின்றான். இதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

முறையான படிப்பறிவு இல்லாததால், இப்படியொரு வாழ்க்கை. இருந்தும் இணையத்தின் உபயமாக அறிவை வளர்த்துக் கொண்ட நல்ல திறமைசாலி. அதனால் ஆங்கிலப் புலமை உண்டு!

இப்பொழுதெல்லாம் உள்ளூர் அரசியல் தலைகளுக்கு மேடைப் பேச்சுக்கான உரையை எழுதிக் கொடுப்பான். சொல்ல வருவது என்னவென்றால் தமிழ் புலமையும் உண்டு!

இது வேலை வாழ்க்கைப் பற்றியக் குறிப்பு.

காதல் வாழ்க்கை??
சுருக்கமாகச் சொல்லிவிடலாம், காதலும் காதல் சார்ந்த இடமும் ரோமியோ!!

ரோமியோவின் உலகமே, அவனது முன்னாள் நின்று கொண்டிருக்கும், அந்த இளம் பெண்தான். ‘ஸ்வீட் ஹார்ட்’ என்று ரோமியோவால் ஆசை ஆசையாக அழைக்கப்படுபவள்.

யாரிந்த இளம் பெண்?? என்ற கேள்விக்கான விடை வேண்டும். இதோ அந்த ஸ்வீட் ஹார்ட்டின் சுய விவரங்கள்!!

பெயர் : ரோமியோவின் ஸ்வீட் ஹார்ட்
வயது : ரோமியோவால் காதலிக்க ஏற்ற வயது.
எடை : ரோமியோ, அடிக்கடி ஏந்திழையை ஏந்திக்கொள்ள ஏதுவான எடை.
விலாசம் : ரோமியோவின் இதயம்.
குறிக்கோள் : ரோமியோவைக் காதலிப்பது.

ஸ்வீட் ஹார்ட்டைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், காட்டாறு கடலில் கலந்து தன் தன்மை இழப்பது போல், ரோமியோவின் காதலில் கரைந்து தனக்கென்று எந்த ஒரு தனித்துவமும் இல்லாமல் வாழ்கிறாள்.

அதிகம் பயப்படுவபவள்! அதைவிட அதிகமாக வெட்கப்படுபவள்!!

ரோமியோவின் இலக்கே பணம் சம்பாரிப்பதுதான். அதுவும் எதற்காக?? தன் ஸ்வீட் ஹார்டிற்காக அரண்மனை போன்ற ஒரு வீடு கட்ட வேண்டும். அதில், அவன் காதலித்து கரம் பிடித்தவளுக்கு, ராணி போன்ற வாழ்க்கையைத் தர வேண்டும்.

ஆம்! காதலித்தப் பெண்ணையே கரம் பிடித்த அதிர்ஷ்டசாலி, இந்த ரோமியோ!! ஒரு ஆறு மாத காலத்திற்கு முன்னால், தன் ஸ்வீட் ஹார்ட்டைத் திருமணம் செய்து வைக்கும்படி காதல் கோரிக்கையுடன் அன்னையின் முன்னே வந்து நின்றான்.

இந்தப் பெண் ‘யாரென்று?’ அவரும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. ‘தன் கடமை இது’ என்று நினைத்த தாய், முறைப்படி மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

அதன்பின் உலக வாழ்க்கைக்கு ரோமியோவின் தாயார் உடல் ஒத்துழைக்காததால், இரு மாதங்களுக்கு முன்னர் அவரது உயிர் பிரிந்தது.

அன்னையின் மறைவிற்காகச் சில நாட்கள் மிகவும் வருந்தினான். ஒரு மாதத்திற்குப் பின், அந்த துக்கத்திலிருந்து மீண்டு வந்து, கட்சி வேலைகளிகளும் காதல் வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

சரி! இப்பொது கதையின் நாயகன் மற்றும் காதலின் நாயகன் ரோமியோ என்ன செய்து கொண்டிருக்கின்றான் என்ற கேள்விக்கு வரலாம்!!

இருபத்திநான்கு மணி நேரமும் ‘இலக்கு… இலக்கு’ என்று இருப்பவன். அவ்வாறு இலக்கைப் பற்றிச் சிந்திக்காத நேரங்களில் எல்லாம், தன் ஸ்வீட் ஹார்டின் இதழ்களில் குடி கொண்டு, அவளது இதயத்திடம் காதலை வாடகையாகக் கொடுத்துக் கொண்டு, குடியுரிமைச் சட்டத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட வாழ்க்கை வாழும் ‘இதழ் குடியுரிமைக்காரன்’, இந்த ரோமியோ!!

இப்பொழுது அவள் இதயத்திற்கு வாடகைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றான்! ஆதலால் தட்டும் கதவுகள் திறக்கப்படவில்லை!!

கிடைக்கும் தனிமைகளிலெல்லாம் இதயத்தையும் இதழ்களையும் பரிமாறிக்கொண்டு, திருமணக் கூண்டுக்குள் சிக்கிக் கொண்டாலும், சுகந்திரமாகப் பறக்கும் காதல் பறவைகள், அவர்கள் இருவரும்!

சற்று நேரங்கள் காதலில் கரைந்த பின்னர், ரோமியோவின் காதலி, தன் காதலன் காதல் நெஞ்சத்தில் கைகள் வைத்து, அவனைத் தள்ளி நிறுத்த முயற்சித்தாள்.

மறுஜென்மத்திற்கானக் காதலையும் சேர்த்துக் கண்களில் வழியவிட்டு, அவள் அதரங்களுடன் சேர்த்து எழுதியிருந்த தன் அதரங்களை பிரித்தெழுதி, மந்தகாசப் புன்னகை புரிந்தான் ரோமியோ.

இன்னும் காதலியைத் தன் கையணைப்பிலே நிறுத்திக் கொண்டு, ‘இன்னுமொரு முறை, காதலியே’ என்று கண்களால் காதல் மொழியில் பேசினான்.

இதழ் அணைப்புகள், ரோமியோவின் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று!! இதயத்திற்கு நல்லது என்றும் நினைப்பவன்!!!

“புரியலை ரோமியோ??” என்றாள் இனிப்பான குரலில் ரோமியோவின் இதயம் கவர்ந்தவள்.

“ஹலோ! ஒன்ஸ்மோர் கேட்டேன்”

பளிச்சென்று வெட்கப்பட்டுச் சிரித்தாள், ரோமியோவின் ஸ்வீட் ஹார்ட்.

அவளது வெட்கத்தினால், தன்னுள் வெகுண்டெழுந்து காதலில், மீண்டும் இதயத்திற்கு வாடகைக் கொடுக்க இஷ்டப்பட்டான்.

“போதும் ரோமியோ” என்றவள், ஒரு கரத்தால் அவன் இதழையும் மறு கரத்தால் அவனது இதயத்தையும் பிடித்து தள்ளி நிறுத்தினாள்.

“வி ஆர் செலிப்ரட்டிங் அவர் பிரெஷ் லவ்” என்றான் கைகள் இரண்டையும் காற்றில் விரித்தபடி!

“ஆறு மாசமா இதேதான் சொல்லிக்கிட்டு இருக்க” என்றாள், தன் இதயத்தின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, சுவரில் சாய்ந்து நின்றபடி!

“அறுபது வயசானாலும் இதேதான் சொல்லுவேன்” என்றான் ஆயுள் முழுவதுமிற்குமான அன்புடன், அந்த வாலிபக் காதலன்.

‘அப்படியா?’ என்பது போல் அவனைத் தலை நிமிர்ந்து பார்த்தவள், “அறுபது வயசில உன்னோட லவ் பழசாயிடும்” என்றாள்.

அவளது இதயத்திற்கு அரணாக இருந்த கரங்களைப் பிரித்துவிட்டு, இஷ்டமாக இறுக்கி அணைத்துக்கொண்டவன், “காதலுக்கெல்லாம் எக்ஸ்பிரி டேட் உண்டா ஸ்வீட் ஹார்ட்??” என்று, அவளது காதிற்குள் சென்று காலவரையற்ற காதல் பொழிந்தான்.

இப்படி ரோமியோ ‘ஸ்வீட் ஹார்ட்’ என்று அழைப்பது எப்படி இருக்குமென்றால்?? அவனது இதயம் இருக்கும் இடத்தில இருந்து வெளியே வந்து, இதழ்களில் நின்று கொண்டு… இதனை இயம்பிவிட்டு, மீண்டும் இருக்கும் இடம் சென்று இயங்கச் செல்லும்!!

மெல்ல அவனை விலக்கி நிறுத்தியவள், “அப்பவே கதவைத் தட்டுனாங்க ரோமியோ” என்று மென்மொழி பேசினாள் மெல்லிடை உடையவள்.

“சோ வாட் ஸ்வீட் ஹார்ட்” என்றான் காதல் நாயகன் ரோமியோ.

“ம்ப்ச் போதும் ரோமியோ, வா வெளியே போகலாம்” என்று கண்டிப்புடன் சொல்லி, அவனை அழைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

அறையின் வெளியே…

இளைஞர்கள் இருவரும் இன்னும் புது பாடல்களில் லயித்து இருந்தனர்.

இந்த இளைஞர்கள் இருவரும் ரோமியோவின் உடன்பிறப்பு போன்றவர்கள். கட்சித் தொண்டனாக ரோமியோ வேலை செய்யும் வேளைகளில், அவனுக்கு உதவியாக இருப்பார்கள்.

உறவு என்று சொல்லிக்கொள்ள ரோமியோவைத் தவிர அவர்களுக்கு யாருமில்லை. இவ்விருவரும் ரோமியோவின் நம்பிக்கைக்கு உரியவர்கள்.

இந்த இரு இளைஞர்கள் மற்றும் தன் ஸ்வீட் ஹார்ட் என்று மூவரையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் பொறுமைசாலியும், இந்த ரோமியோ!

“எப்படா வந்த?” என்று கேட்டுக்கொண்டே ரோமியோவும் வயர் கட்டிலில் வந்து அமர்ந்தான்.

“அப்பவே வந்துட்டேன்” – இளைஞன்-1.

“அந்த ஆளப் போய் பார்த்தாச்சா?” – ரோமியோ.

“ஆளுன்னு சொல்லாத, அவனுக்கு கோபம் வரும்” என்றான் தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தத்தைக் குறைத்தபடியே இளைஞன்-2.

“ஏன்டா? அங்கே அப்படி என்ன நடந்துச்சு?” – ரோமியோ.

“ரோமியோ நான் அவரைப் பார்த்துட்டேன். ஆனா அவரு உன்னைத்தான் பார்க்கணும்னு சொல்லறாரு” – இளைஞன்-1.

“ஏன்? உன்கிட்ட பேச மாட்டாரா?”

“பேசினாரு?”

“என்ன பேசினாரு?”

“ஏதோ புதையல்னு சொல்றாருடா??” – இளைஞன்-1.

“புதையலா??” – இளைஞன்-2.

“ஆமா” – இளைஞன்-1.

“புதையலா?? என்ன புதையல்? எங்கே இருக்கு?” – ரோமியோ.

“அதெல்லாம் சொல்லலை. ஆனா அதை நீதான் எடுத்துத் தரணும்னு சொல்றாரு. நீ போய் அவரைப் பாருடா” – இளைஞன் -1.

“டேய்! இது என்ன சாதாரண வேலையா?”

“நான் சாதாரண வேலைன்னு சொல்லலை. ஆனா டிரை பண்ணிப் பார்க்கலாமே” – இளைஞன்-1.

“சும்மா இரு! எதுலயாவது போய் மாட்டிகிட்டு முழிக்கவா”

“அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம். முதல அவரைப் போய் பாரு. என்ன சொல்லறாருன்னு கேளு. அதுக்கப்புறம் முடிவெடு” – இளைஞன்-1.

“இது கரெக்ட்” – இளைஞன்-2.

‘யாரிவர்? புதையலை எடுத்து வர தன்னை ஏன் அழைக்க வேண்டும்? என்ன செய்ய?’ என்ற குழப்பங்களுடன் யோசித்தான் ரோமியோ.

“யோசிக்காத ரோமியோ!” – இளைஞன்-2.

“கண்டிப்பா யோசிக்கனும். யாரு அவரு? அவர் சொல்றது உண்மையா? பொய்யா? இதனால நமக்கு ஏதாவது பிரச்சனை வருமா? அப்படின்னு நிறைய யோசிக்க வேண்டியதிருக்கு” – ரோமியோ.

“சரி, நீ யோசிச்சி முடிவெடு. ஆனா உடனே அவரைப் போய் பாருடா. அவர்கிட்ட நீ கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் கேளு”

ரோமியோ அரை மனதுடன், “ம்ம்ம்” என்றான்!

“புதையல் மட்டும் கிடைச்சா, உனக்கு உன்னோட ஆசை நிறைவேறும். நாங்க ரெண்டு பேரும்கூட செட்டில் ஆகலாம்.” – இளைஞன்-2.

அந்த ‘உன்னோட ஆசை’ என்பது காதலிக்காக அரண்மனை போன்ற வீடு கட்டுவது என்பதால், புதையல் மீது ஒரு சிறு ஆசை வந்தது.

“ரோமியோ” – இளைஞன்-1.

“ம்ம்ம், சரிடா. கொஞ்ச நேரம் கழிச்சுப் போய் பார்க்கிறேன்”

“லேட் பண்ணாம இப்பவே போ ரோமியோ”

“ஏன்?”

“இல்லைன்னா, மைக்கேல்கிட்ட சான்ஸ் போயிடும்”

“மைக்கேல்கிட்டயா??”

“ஆமா, அவர்தான் சொன்னாரு. உன்னால முடியலைன்னா மைகேல்கிட்டதான் ஹெல்ப் கேப்பாராம்”

“யார்டா இவரு?? என்னைப் பத்தி தெரிஞ்சதே எப்படின்னு தெரியலை. இதுல மைக்கேல் பத்தி வேற தெரிஞ்சிருக்கு. எப்படி?”

“அதை அவர்கிட்டயே போய்க் கேளு”

“ச்சே! இந்த மைக்கேல் இங்கயும் வர்றானா??” – இளைஞன்-2.

“ஆமாடா! கட்சி வேலை செய்யறதுலதான் போட்டி போட்றான்னு நினைச்சா, இதுலயும் வர்றான்” – இளைஞன்-1.

ஆம்! ரோமியோவும் மைக்கேலும் ஒரே கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள். கட்சியின் சில்லறை வேலையே வாங்குவதில் இருவருக்கும் சிறுசிறு போட்டி உண்டு.

“மைக்கேல கூட சமாளிச்சிடலாம்டா. ஆனா அவன்கூட வருவாளே ஒருத்தி, அவளைச் சமாளிக்கச் சத்தியமா முடியாது” என்று உண்மை பேசினான் ரோமியோ.

“யாரு? அந்த தனலெட்சுமியா??” – இளைஞன்-2.

“ம்ம், அவளேதான்” – ரோமியோ.

“அதான் சொல்றேன் ரோமியோ, சீக்கிரமா போ! அதுவும் கெத்தா போய் இறங்கணும்” – இளைஞன்-1.

“ஏன்டா?”

“அவரைப் பார்த்தா, நம்ம ஏரியா மாதிரி தெரியலை”

“சரி, அதுக்கு”

“நான் நடந்து வந்தேன்னு சொன்னதுக்கு வேற, என்னைய ஒரு மாதிரி பார்த்தாரு”

“அப்படியா??! ” என்று சொல்லி ரோமியோ யோசித்தான். பின், “சரிடா… நடந்து போக வேண்டாம். ஆட்டோக்குச் சொல்லு. அதுலயே போயிடலாம்” என்றான்.

“சூப்பர்டா” என்று எழுந்து, இளைஞன்-1 ஆட்டோ பிடிக்கச் சென்றான்.

இது போன்ற உரையாடல்கள் எதிலுமே ரோமியோவின் ஸ்வீட் ஹார்ட் கலந்து கொள்ள மாட்டாள். அவள் அப்படித்தான். ரோமியோவைத் தவிர யாரிடமும் பெரிதாகப் பேசிப் பழக்கம் இல்லாதவள்.

இளைஞன்-1 ஆட்டோ பிடித்து வந்தான். ரோமியோவும், அவனது ஸ்வீட் ஹார்ட்டும் வெளியே வந்தனர். அவர்கள் இருவரைக் கண்டதும் ஆட்டோகாரர் இறங்கினார்.

ரோமியோ, இளைஞன்-1டம், “நீ வீட்டைப் பார்த்துக்கோடா. நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வர்றோம்” என்றான்.

“சரிடா” என்று இளைஞன்-1 உள்ளே சென்று விட்டான்.

ரோமியோ ஆட்டோக்காரரைப் பார்த்துச் சிரித்தான்.

ஆனால் அவர் சிரிக்கவில்லை, மாறாக “ரோமியோ” என்றார்.

“சொல்லுங்கண்ணா”

“கொண்டு போய்விட்ட பிறகு, நான் கட்சி ஆளு… கவுன்சிலர் ஆளுன்னு சொல்லிக் காசு கொடுக்காமப் போகக் கூடாது” என்றார் கறாராக.

சிரித்துக் கொண்ட ரோமியோ, தன் சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்துக் காட்டி, “போதுமா?” என்றான்.

“சரி ஏறு” என்று சொல்லி ஆட்டோவில் ஏறினார்.

“ஏறு ஸ்வீட் ஹார்ட்” என்றான் ரோமியோ.

“நான் எதுக்கு ரோமியோ?”

“நீயில்லாம எப்படி?”

“நான் வந்து என்ன செய்யப் போறேன், சொல்லு?”

“நீ ஒன்னும் செய்ய வேண்டாம். என் கூட வந்தா போதும். யூ ஆர் மை லக்கி சார்ம். பேசாம வா” என்று அவளை ஆட்டோவில் ஏறச் செய்தவன், தானும் ஏறிக்கொண்டான்.

ஆட்டோக்காரர் ஆட்டோவைக் கிளப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார்.

“அண்ணா, ஏதாவது பாட்டுப் போடுங்க”

“அதெல்லாம் முடியாது ரோமியோ”

“அதான் காசு கொடுக்கப் போறேன்ல… போடுங்கண்ணா”

‘சம்மதம்’ என்பதற்கு அறிகுறியாக ஆட்டோக்காரரும் பாட்டு போடப் போனார்.

“அண்ணா” என்று, மீண்டும் அவரை தொந்தரவு செய்தான்.

“என்ன ரோமியோ?”

“கொஞ்சம் லவ் சாங்க்ஸ். ஓகேவா” என்று கண்களைச் சுருக்கிக் கெஞ்சிக் கேட்டான்.

ரோமியோவின் காதல் வெளிப்பாடுகள், ஆரம்பத்தில் அந்தப் பகுதி மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது பரிட்சயமாகிப் போனது.

எனவே, அவனது காதல் அலப்பறைகளை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

நேயர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது.
ஆட்டோ கிளம்பியது.

காதல் பாடல்கள் ஆட்டோவிலிருந்து கிளம்பி, ஆகாயத்தின் காற்றில் மிதக்க ஆரம்பித்தது. காதலர்கள் இருவரும், இலவச மெட்டு கிடைத்த சந்தோஷத்தில் கனவு உலகின் ‘டூயட் சாங்’ காட்சிக்குச் சென்றுவிட்டனர்.

அந்தக் கனவுலகப் பாடல் முடிந்த பின்னர், தங்கும் விடுதிக்கு ஆட்டோ வந்து சேர்ந்தது.

பணம் கொடுத்துவிட்டு, தன் ஸ்வீட் ஹார்ட்டுடன் ஆட்டோவிலிருந்து இறங்கியவன், தங்கும் விடுதியின் வரவேற்பு பகுதியில் சொல்லிவிட்டு மாடி ஏறினான்.

மூண்றாவது எண் அறை, அதாவது அந்தப் பெரியவர் தங்கியிருந்த அறையின் கதவு லேசாகத் திறந்து கிடந்தது. உள்ளே சென்றான். அங்கே அவன் கண்டது!

பெரியவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்! மைக்கேலும் தனலெட்சுமியும் கட்டிலில் அமர்ந்து இருந்தனர்!!

அவர்களைக் கண்டதும், அதிலும் குறிப்பாகத் தனலெட்சுமியைக் கண்டதும், ‘அதற்குள் இவள் இங்கு எப்படி? இவள் புதையல் எடுத்து வர ஒத்துக் கொண்டாளா? தான், இந்த வாய்ப்பை நழுவ விட்டோமா?’ எனப் பல கேள்விகள் ரோமியோவின் மனதில் தோன்றியது.

ஏனென்றால் கதையின் நாயகி மற்றும் மைக்கேலின் மாமா மகளான தனலெட்சுமி அப்படி!