Pokisha pezhai – 10
Pokisha pezhai – 10
என்ன நடக்கிறது? யாரைக் காப்பாற்ற? என்ற மன நிலையில், ரோமியோ யோசிக்க முடியாமல் தவித்தான்.
நால்வரும் பயத்தின் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தனர்.
இடையிடையே அவர்களது விழிகள், அசூர வேகத்தில் வருகின்ற வெண்திரையைச் சந்தித்துவிட்டு வந்தன.
ஒரு சில நொடிகளிலேயே, ரோமியோ தன் மனதை சமநிலை படுத்திக் கொண்டு மூளைக்கு வேலை கொடுத்தான்.
அடுத்த இரண்டு வினாடிகளில்…
“தனம்” என்று அழைத்தான்.
‘என்ன?’ என்பது போல் கண்களால் கேள்வி கேட்டாள்.
“நான் சொல்றதைக் கேட்கிறியா?”
“சொல்லு”
“உன்கிட்டயும் என்கிட்டயும் காயின் இருக்கு. ஆனா அவங்க ரெண்டு பேருகிட்டயும் காயின் இல்லை”
‘என்ன சொல்ல வர்ற?’ என்கின்ற குழப்பங்களுடன் பார்த்தாள்.
“இங்கபாரு தனம், நான் உன்னோட கையை விடறேன். உன்கிட்ட இருக்கிற ஒரு காயினை எடுத்து, அந்தப் பக்கம் தூக்கிப் போடு” என்று படபடவென்று சொல்லி முடித்தான்.
இப்போது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் ‘இது சரிவருமா?’ என்ற தயக்கங்கள், அவளது முகத்தில் தெரிந்தன.
“வேற வழியில்லை தனம். ஆனா, பார்த்துப் போடு. காயின் கீழ விழுந்திடாம! அவனோட கைக்குக் கிடைக்கிற மாதிரி. சரியா?”
“ம்ம்ம் சரி ரோமியோ”
“நான், உன் கைய விடப் போறேன். ஆனா, நீ பின்னாடி போகக் கூடாது”
“போகமாட்டேன்”
ரோமியோ, தனத்தின் கரங்களைப் பிடித்து வைத்திருந்த தன் வலக்கரத்தை விட்டான். அடுத்த நொடி என்று கூட சொல்ல முடியாது, அதை விடக் குறைந்த கால அளவில், தன் ஸ்வீட் ஹார்ட்டை இரு கைகளாலும் ஏந்திக் கொண்டான்.
“ஸ்வீட் ஹார்ட்… ஸாரி… ஸாரி” என்று காதலில் கரைய ஆரம்பித்தான்.
மற்றொரு புறம்…
கைகள் நடுங்க, கால்கள் வெடவெடக்க, தனம் பைக்குள் இருந்த நாணயத்தை எடுத்தாள்.
“கரெக்டா பிடிச்சிரு” என்று கரகரத்தக் குரலில் சொல்லி, மைக்கேல் இருந்த பக்கம் தூக்கிப் போட்டாள்.
அவனும் பிடித்துக் கொண்டான்.
இதனிடையே வெண் திரை, மைக்கேலை நெருங்கும் தூரத்தில் வந்திருந்தன. ஆதலால் அந்தக் குளிரிலும், பயத்தினால் அவனது உடலெங்கும் வியர்வைகள்!
படபடக்கும் நெஞ்சோடு, கைகளில் நாணயத்தை வைத்துக் கொண்டு, தன் வலது காலை வைத்துப் பார்த்தான். அவனுக்கும் படிக்கட்டு வந்தது!
தனமும் மைக்கேலும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
“ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க” என்று ரோமியோ அவர்களை அழைத்து விட்டு, இறங்க ஆரம்பித்தான்
அதன் பின், நொடியளவு கூட தாமதிக்காமல் கடகடவென இறங்கினார்கள்.
அந்த வெள்ளைத் திரையானது, புல்வெளிப் பரப்பின் நுனி வரை வந்து ‘காதலனே’ என்று சொல்லி விட்டே ஓய்ந்தது.
படிக்கட்டுகளில் இறங்கி, மீண்டும் வண்ண வண்ண கூழாங்கற்கள் நிறைந்த பகுதிக்கு வந்து விட்டனர்.
*****
இனம்புரியாத உணர்வுகளுடன், தனமும் மைக்கேலும் அருகருகே அமர்ந்தனர்.
இருவருக்கும் நன்றாகவே மூச்சு வாங்கியது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
தனம் மைக்கேலின் தோள்களில் அடிக்க ஆரம்பித்தாள். பின் சலுகையாய் சாய்ந்து கொண்டே, “ரொம்ப பயந்துட்டேன் மைக்கேலு” என்றாள்.
அவன் ‘ஏன்?’ என்று கேட்கவில்லை. ஆனால் இதற்கு முன், அவள் அடித்த அடிகளுக்கும், தோள் சாய்ந்த நேரங்களுக்கும்… இன்றைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தான். இப்படியே இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே…
ரோமியோ இன்னும் ஸ்வீட் ஹார்ட்டை கையில் ஏந்திக் கொண்டே இருந்தான்.
“ஸாரி ஸ்வீட் ஹார்ட்” என்று மனம் கவர்ந்தவளிடம் மன்னிப்பு கேட்டான்.
“கீழ இறக்கி விடு ரோமியோ” என்றவள், இறங்குவதற்கு முயற்சி செய்தாள்.
“இப்போ எதுக்கு இந்தக் கோபம் ஸ்வீட் ஹார்ட்” என்றான், அவளை இறக்கி விடாமலும், இறங்க விடாமலும்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விடாதன்னு சொன்னேன். விட்ட… ஆனா இப்ப… ” என்று சொல்லி முடிக்கும் முன்பே…
ரோமியோ, அவளை இறக்கி விட்டான்.
“என்ன பேசுற? எதையும் எதையும் கம்பேர் பண்ற??”
“பின்ன… எவ்வளவு பயமா இருந்திச்சு தெரியுமா?”
“அந்த நேரத்தில வேற வழி தெரியல”
“அதுக்கு…??”
“இங்க பாரு! அவனுக்கு ஆபத்து. பார்த்துகிட்டு சும்மா இருக்கச் சொல்றீயா?”
அமைதியாய் இருந்தாள்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மைக்கேல், எழுந்து அவர்களின் பேச்சுக்கு இடையே வந்தான்.
“ஸாரி ரோமியோ. என்னாலதான உனக்கு இவ்வளவு பிரச்சனை” என்று மனம் வருந்திச் சொன்னான்.
“ம்ச்…டேய்! அவதான் புரியாம பேசுறானா… நீ வேற”
“ஸாரி சிஸ்டர்” என்று ஸ்வீட் ஹார்ட்டிடமும் மன்னிப்பு கேட்டான்.
“அய்யோ ப்ரோ, ஸாரி எதுக்கு?”
“என்னால…”
“போதும் விடுங்க” என்று ரோமியோ அவர்களது பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
இவர்கள் பேசுவதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தனம், தன் பையிலிருந்த புத்தகத்தை எடுத்து வந்து, ரோமியோவின் முன் நீட்டினாள்.
எந்தவித விதாண்டாவாதமோ தயக்கமோ இல்லாமல், “தேங்க்ஸ். டைம்முக்கு ஹெல்ப் பண்ணதுக்கு” என்றாள்.
அவனும் சிரித்துக் கொண்டே, புத்தகத்தை வாங்கிக் கொண்டான்.
தனம் சென்று விட்டாள்.
“ரோமியோ, நீ புக் பார்த்துட்டு சொல்லு” என்று சொல்லி, மைக்கேல் தனத்தை பின் தொடர்ந்தான்.
அவர்கள் சென்றவுடன்…
ஸ்வீட் ஹார்ட், மீண்டும் கோபம் கொண்டு முகத்தை வைத்திருந்தாள். காதலியின் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்தான்.
“ஸ்வீட் ஹார்ட்”
“சொல்லு”
“கொஞ்ச நேரம் அவங்க ரெண்டு பேரையும் மறந்திடலாமா?”
புரியாமல் பார்த்தாள்.
“ஸ்வீட் ஹார்ட்! லெட்ஸ் செலிபிரேட் அவர் பிரெஷ் லவ்” என்று இரு கைகளையும் காற்றில் விரித்தபடி கூறினான்.
“ஒண்ணும் வேண்டாம்” என்று அவனது கைகளைத் தட்டிவிட்டு மறுத்தாள்.
இதுவரை வெட்கப்பட்டு காதலைக் கொண்டாடியவள், இக்கணம் காதலன் மீது கொண்ட கோபத்தில் விலகினாள்.
இந்த இடத்தில் ரோமியோ ஒரு ‘இதழ் சமாதனக்காரன்’ என்ற பெயரை அடைய முடியாமல், இழந்து நின்றான்.
“வேண்டாமா? ம்ம், வருத்தப்பட போற” என்று சிரித்தான்.
“பரவால்ல” என்று சொல்லி, அவளும் சிரித்தாள்.
விளையாட்டாய் ஒரு சண்டையா??
“சரி, போ” என்று சொல்லி, புத்தகத்தை எடுத்தான்.
கையில் நாணயத்தை வைத்துக் கொண்டு, ரோமியோ புத்தகத்தை திறந்தான். முந்தைய கட்டத்தின் பக்கங்கள் எரிய ஆரம்பித்தன.
ஏற்கனவே பார்த்தது என்றாலும், மீண்டும் பார்க்கும்போது ஸ்வீட் ஹார்ட் பயந்தாள்.
எரிந்து முடிந்த பின், அடுத்த கட்டத்தின் பக்கத்தில் மயில் பீலியை வைத்தான். அது இப்படி எழுதிக் காட்டியது…
‘அடுத்தக் கல் நாணயம் வானவில் இருட்டில்”
வாசித்துக் கொண்டான்.
“ரெயின்போ எப்படி இருட்டா இருக்கும் ரோமியோ?”
“தெரியலையே ஸ்வீட் ஹார்ட்”
“அப்புறம்.. ”
இப்படிப் பேசிக் கொண்டே, இருவரும் எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள்.
மைக்கேலும் தனமும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
தனம் எதுவும் கேட்கவில்லை, இருந்தும் அடுத்து தேட வேண்டிய இடத்தைப் பற்றிச் சொல்லிவிட்டே ரோமியோ நடந்தான்.
மீண்டும் நடக்க ஆரம்பித்தார்கள்…
நிகழ்ந்து முடிந்த சம்பவங்கள் அவர்களின் வேகத்தை குறைத்திருந்தது. உயிர் பயம் அவர்களது உத்வேகத்தை அசைத்துப் பார்த்திருந்தது.
அதே கூழாங்கற்களின் மீது பயணம் இருந்தது. என்னவொன்று, சாம்பல் நிற ஒளியில் மாற்றம் ஏற்படுவது போல் இருந்தது. மாற்றம் என்றால் வேறு எந்த ஒரு நிறத்திற்கும் மாறவில்லை. இருக்கும் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டே போனது.
இருந்தும் நடந்தார்கள்.
சற்று நேரத்தில் இந்தப் பகுதிகள் இரவை நெருங்கின்றனவோ என்கின்ற ரீதியில் இருள் சூழ்ந்து இருந்தன.
இதுவரை கற்கள் மீது நடந்து வந்த உணர்வை, இப்போது அவர்களது கால்கள் உணரவில்லை. பாதங்கள், ஏதோ நெருநெருவென்று தன்மையை உணர்ந்தன.
நின்றுவிட்டார்கள்!
அப்பகுதி அஞ்சன இரவு போல் ஆகிவிட்டிருந்தது! சூழல் அமைதியின் உச்சத்தைத் தொட்டது. அடுத்த அடி எடுத்து வைக்கவே இயலாத அளவிற்கு இருட்டு. அதற்கு மேல் நடப்பது சிரமம் என்று தெரிந்தது.
“இன்னும் கொஞ்ச தூரம் நடந்து பார்க்கலாமா?” – தனம்.
“எப்படிப் போறது? இவ்ளோ இருட்டா இருக்கே?” – மைக்கேல்.
“ஆனா… புக்ல வானவில் இருட்டுன்னு இருந்திச்சு. இப்போ இருட்டு மட்டும்தான இருக்கு. வானவில் வரணும்ல” – ரோமியோ.
“சரி போகலாம்” – தனம்.
அடுத்து ஒரு பத்து அடி எடுத்து வைத்திருப்பார்கள், அதில் ஐந்து மறை தடுமாறினார்கள். இதற்கு மேல் நடக்க வேண்டாம் என முடிவெடுத்து, நின்றுவிட்டார்கள்.
“ரோமியோ, என்ன இது… இவ்வளவு இருட்டா இருக்கு? ரொம்ப பயமாருக்கு” – ஸ்வீட் ஹார்ட்.
“பயப்படாத” என்று, ஏற்கனவே பிடித்திருந்த அவளது கையை மேலும் இறுகப் பற்றி நின்றான்
“ஆனா இதுல எப்படித் தேட முடியும்?” – மைக்கேல்.
“ரொம்பக் கஷ்டம்” – தனம்.
“ஏதாவது நடக்கும் வெயிட் பண்ணுங்க” என்று ரோமியோ சொன்னதால், காத்திருக்கத் தொடங்கினர்.
சற்று நேரம் கடந்தது..
தூரத்திலிருந்து சிறு கீற்று போல் ஒளி வருவதற்கான அடையாளம். மெது மெதுவாக அது வருகின்ற பாதையை பார்த்திருந்தனர்.
காரிருளைக் கலைக்கும் அந்த ஒளிக் கீற்று, அவர்களை நெருங்கி வந்தது.
ஆனால் பக்கத்தில் வந்த பொழுது, அது வெறும் ஒளி மட்டுமல்ல என்று தெரிய வந்தது.
அவைகள் கைக்கு அடக்கமான சிறு சிறு பேழைகள்.
அவைகள்! ஆம், அவைகள்தான்!!
ஒன்று மட்டும் வரவில்லை, அந்த இடத்திற்கு ஓரளவிற்கு வெளிச்சம் பாய்ச்சும் எண்ணிக்கையில் வந்திருந்தன.
இவற்றின் வடிவங்கள், ‘பொக்கிஷப் பேழை’ புத்தகம் இருந்த பேழையைப் போன்றிருந்தது.
ஒவ்வொரு பேழையின் வெளிப்புறமும், சமமான ஏழு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் வானவில்லின் வரிசையில் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
மேலும் அந்தந்த பாகங்கள், அந்தந்த வண்ணத்திலான ஒளியை கீழ்நோக்கி அனுப்பிக் கொண்டிருந்தது. இதுபோல் ஒவ்வொரு சிறிய பேழையும், ஏழு வர்ண ஒளியை வீசிக்கொண்டிருந்தது.
அந்தப் பேழைகள் சுற்றிக் கொண்டிருந்த இடம் மட்டுமே வெளிச்சம் பரவியது!! அதைத் தவிர்த்து, மற்ற இடங்களில் இன்னும் இருளே!
ஆச்சரியம் ஒரு கண்ணில், அதிர்ச்சி ஒரு கண்ணில் என்ற ரீதியில் நால்வரின் பார்வையிருந்தன!
அவர்களுக்குப் புரிந்து விட்டது, இந்தப் பேழைக்குள்தான் இந்தக் கட்டத்திற்கான நாணயம் இருக்கிறது என்று தெரிந்தது.
கசிந்த வந்த வெளிச்சத்தில், கீழே தெரிந்த இடத்தைப் பார்க்க முற்பட்டனர். சரியாகாத் தெரியவில்லை. விட்டுவிட்டனர்.
தேடுதல் ஆரம்பித்தது.
மைக்கேலும், ஸ்வீட் ஹார்ட்டும் அமர்ந்து கொண்டனர். தனமும் ரோமியோவும் தயாராக இருந்தனர்.
பறந்து கொண்டிருக்கின்ற பேழைகளைப் பிடிக்கச் சென்றனர். சில நேரங்களில் தலைக்கு மேலே, கண் முன்னே எனப் பறந்தன. ஆனால் பல நேரங்களில் கைக்கு எட்டாத தூரத்தில் பறந்தன.
இருவரும் எதற்கும் தயாராக நின்றனர்!
தலைக்கு மேல் பறந்ததை, அண்ணாந்து பார்த்துப் பிடிக்க முற்படுகையில்… அதிலிருந்து வீசிய ஒளியானது பல்லாயிரம் மடங்காக மாறிக் கண்களைப் பொசுக்கும் அளவிற்கு சூடு கொடுத்தது.
கிட்டத்தட்ட, கதிரவனைக் கண்களின் கருமணியாக வைத்துப் பார்த்தது போல் ஒரு உணர்வு!
எனினும் தங்களைத் தேற்றிக் கொண்டு, அடுத்த முறை முயற்சிக்கலாம் என்று நினைத்து நம்பிக்கையாக இருந்தனர்.
ரோமியோ, தன் தலைக்கு மேல் பறந்த பேழையைப் பிடிக்க தலை நிமிர்த்தினான்.
அவ்வளவுதான்!
‘ஆ’ என அலறி, உள்ளங்கைகளைக் கொண்டு கண்களை மூடி அமர்ந்து விட்டான், ரோமியோ.
“என்னாச்சு ரோமியோ?” என்று பரிதவிப்புடன் ஸ்வீட் ஹார்ட் கேட்டு, எழுந்து வரப் போனவளை,
“நீ வராத நான் பார்த்துக்குவேன்” என்று சொல்லித் தடுத்து விட்டான்.
கண்களின் எரிச்சலைத் தாங்கிக் கொண்டு தேடல் தொடர்ந்தது. அத்தோடு, இருவரது அலறல்களும் அவஸ்தைகளும் தொடர்ந்தன.
ஒரு கட்டத்தில் தனத்தின் அலறலைப் பொருக்க முடியாமல், “தனம் நீ வா நான் தேடறேன்” என்றான்.
“வெயிட் பண்ணு” என்றவள் வார்த்தையில் இருந்த எரிச்சலும் வலியால் வந்த எரிச்சலும் சமமாக இருந்தது.
நிமிர்ந்து பார்க்கப் பார்க்க பேழையில் இருந்த ஒளியைக் காண முடியாமல் கண்களை மூடி மூடி அமர்ந்தனர்.
ஒரு கட்டத்தில், கண்ணின் வலி தாளாமல்… ரோமியோ, “டேய் மைக்கேல்! என்னோட பேக்ல இருந்து புக் எடுத்துப் பாறேன்டா”
“அது எதுக்கு??” – தனம்.
“அதுல எதுவும் போட்ருக்கான்னு பாருடா”
“எப்பவும் காயின எடுத்தப் பிறகுதான புக் ஹெல்ப் பண்ணும்”
“பார்க்கத்தான சொல்றேன்”
ஸ்வீட் ஹார்ட், “பாருங்க ப்ரோ” என்று பையிலிருந்த புத்தகத்தை எடுத்து மைக்கேலிடம் தந்தாள்.
மைக்கேல் புத்தகத்தைத் திறந்தான். கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல், அந்தக் கட்டத்திற்கானப் பாகத்தை எடுத்தான்.
தேடுபவர்கள் தேடலை நிறுத்திவிட்டனர். என்ன நடக்கப் போகிறது என்று புத்தகத்தையும் மைக்கேலையும் கவணிக்க ஆரம்பித்தனர்.
சட்டென புத்தகத்தின், விரித்து வைத்தப் பக்கத்திலிருந்து வானவில் வர்ணத்தில் ஒளி பாய்ச்சி அடிக்கப்பட்டது.
இக்கணம் அவர்களால் சூழலின் அடையாளத்தைப் பார்க்க முடிந்தது.
முதலில் பார்த்தது தரையிலிருந்த அதிசயத்தைதான்.
குருத்து மணல்கள்! அதுவும் வானவில் போன்று ஏழு வண்ணங்களாலான குருத்து மணல்கள்.
இருள் விலகியதில், அவர்களது முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியின் ரேகைகள்.
ஸ்வீட் ஹார்ட் கொஞ்சம் மணலைக் கையில் எடுத்துப் பார்த்தாள். நிறம் மாறவில்லை. அவளது உள்ளங்கையில் வானவில். என்ன ஒன்று! அள்ளி எடுத்ததால் நிறங்கள் ஒன்றோடொன்று கலந்து போயிருந்தன!
“ஸ்வீட் ஹார்ட்! அதைக் கீழே போடு” என்று ரோமியோவிடமிருந்து உத்தரவு வந்தது.
அவன் சொல்படி கீழே போட்டாள். சட்டென்று, கலந்து போயிருந்த மண்ணின் நிறங்கள், வானவில்லின் சரியான வரிசைப்படி மாறிக் கொண்டன.
அதைக் கண்ட தனம், மொத்தமாக தன் கைகளில் மணலை அள்ளினாள். பின் கைகளை மூடிக் கொண்டு நன்றாக மணலைக் குலுக்கி, கீழே போட்டாள்.
மாயம்! கீழே போடப்பட்ட மணல்கள் வானவில்லின் நிறங்கள் வரிசையில் தங்களை அடுக்கிக் கொண்டன.
ஆச்சரியம் கொண்டு மீண்டும் ஸ்வீட் ஹார்ட் மணலை எடுத்து விளையாடினாள்.
இப்படி இரு பெண்களும் விளையாடிக் கொண்டிருக்கையில்…
தீடீரென்று பறந்து கொண்டிருந்த ஒரு பேழை மட்டும், மைக்கேல் திறந்து வைத்திருத்தப் புத்தகத்திலிருந்து வரும் ஒளிக் கற்றையின் பாதையில் வந்து நின்றது.
மற்ற மூவரும் அப்படியே அசையாமல் நின்றனர். பயத்தில் மைக்கேலின் கண்கள் அகன்று விரிந்து, ‘என்ன செய்வதென்று?’ தெரியாமல் இருந்தான்.
தனம் அவன் அருகில் செல்லப் போனதை, ரோமியோ தடுத்து விட்டான். பயந்து போய் எழுந்து வரப் போன ஸ்வீட் ஹார்ட்டையும் ‘அங்கேயே இரு’ என்று சைகை செய்தான்.
மேலும், மைக்கேலிடம் ‘எடுத்து, திறந்து பார்’ என்று கண்களால் பேசினான்.
சற்று தைரியம் கொண்டு, மைக்கேல் தன் கண்கள் முன் காற்றில் நின்று கொண்டிருந்தப் பேழையை எடுத்துக் கொண்டான். ஏழு வண்ணங்களில் ஒளி வீசிக் கொண்டிருந்த பேழையை திறந்தான்.
ஓரளவிற்கு நான்கு பேரும் எதிர்பார்த்ததுதான். கல் நாணயம்!
சந்தோஷம்! அனைவரின் முகத்திலும்!
மைக்கேலும் ஸ்வீட் ஹார்ட்டும் எழுந்து விட்டனர்.
தனத்தைப் பிடிக்க முடியவில்லை. ஓடிச் சென்று மைக்கேலிடம் போய் நின்று, ‘நாணயத்தைக் கொடு’ என்பது போல் கை நீட்டினாள்.
அதே நேரத்தில் இன்னொரு கையும் நீட்டப்பட்டிருந்தது. அது ரோமியோவின் கரம்!
மைக்கேல், ‘மறுபடியும் பிரச்சனையா?’ என்று மனம் நொந்து கொண்டான்.
“கொடு மைக்கேலு” என்று தனம் கேட்டே விட்டாள்.
“இல்லை தனம்…” என்று இழுத்து தயங்கினான்.
“சிஸ்டர் புக் ரோமியோகிட்டதான இருந்தது. ஸோ காயினும் அவனுக்குத்தான” என்று ஸ்வீட் ஹார்ட் வாய் திறந்தாள்.
தனம் மைக்கேலின் முகத்தைப் பார்த்தாள். ஸ்வீட் ஹார்ட் சொன்ன வார்த்தைகளைத்தான் மைக்கேலின் முகம் பிரதிபலித்ததோ?
இப்போது இருவரும் நீட்டிய கரத்தை எடுத்துக் கொண்டனர்.
“எனக்கு கொடுக்க மாட்டியா?” என்று தனம் கோபம் கொண்டாள்.
தன் நிலையை நினைத்து, மைக்கேல் அவஸ்தையாக உணர்ந்தான்.
“ஏதாவது ஹெல்ப் பண்றியா மைக்கேலு?? ஏன் இப்படி இருக்க?” – தனம்.
“மைக்கேல், புக் காயின் ரெண்டையும் அவகிட்டேயே கொடுத்திருடா” என்றான் அதுவரை எதுவுமே பேசாமல் நின்ற ரோமியோ.
“ரோமியோ.. ” – மைக்கேல்.
“விடுடா” என்றவன், “ஸ்வீட் ஹார்ட் வா” என்று அவளை அழைத்துச் சென்றான்.
அவர்கள் சென்றதும்…
“தனம்”
“பேசாத. உன் மேல செம்ம கோபத்தில் இருக்கேன்” என்றவள், புத்தகத்தையும் நாணயத்தையும் வாங்க மறக்கவில்லை.
இதற்கிடையில்…
சற்று தள்ளி தனியாக வந்த ரோமியோவும் ஸ்வீட் கார்டும்…
காதலன் இமைகளை நீவியபடியே, “கண்ணு ரொம்ப வலிக்குதா ரோமியோ” என்றாள் காதலி!
“அதெல்லாம் இல்லை” என்றான், மூடிய இமைகளின் மேல், காதலி விரல்களால் வழியும் இதத்தை உணர்ந்தவாறே!
“என்ன காயின விட்டுக் கொடுத்திட்ட? உனக்கு கஷ்டமா இல்லையா?”
“போன தடவை நீ எனக்கு ஹெல்ப் பண்ணமாதிரி, இந்த தடவை மைக்கேல் அவளுக்கு ஹெல்ப் பண்ணிருக்கான். அவ்வளவுதான்”
ஒளியால் காதலன் விழியில் ஏற்பட்ட வலிகளுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டே தனத்தையும் மைக்கேலையும் பார்த்தாள்.
“அந்தப் பொண்ணு வந்ததுல இருந்து சிஸ்டர் ரொம்ப மாறிட்டாங்கள? ”
“ம்ம்ம், அப்படித்தான் தெரியுது”
“எனக்கென்னமோ அவங்க மைக்கேல் ப்ரோ-வ லவ் பண்றாங்கன்னு தோணுது”
“நமக்கெதுக்கு அது…”
“கரெக்ட்தான். ஆனா இதுல ஒரு விஷயம் எனக்கு சந்தோஷம்”
“உனக்கென்ன சந்தோஷம்?”
“எல்லா இடத்துக்கும் வந்தவுடனே நீதான போய் சுத்திப் பார்ப்ப”
“ஆமா” என்று சொல்லி, இமைகளிலிருந்து அவளது விரல்களைப் பிரித்து எடுத்தான்.
“நல்லவேளை போன தடவை நீ போகாம, மைக்கேல் ப்ரோ போனாங்க” என்று சிரித்தாள்.
“ஏன்?” என்றவன் சிரிக்கவில்லை.
“இல்லைன்னா அந்தப்பொண்ணு உன் கையைப் பிடிச்சிக்கிட்டு நின்றுக்கும். அப்புறம் என்னெல்லாமோ பேசி…” என்று மேலும் தொடரப் போனவளை…
“நிறுத்து… நீ என்ன சொல்ல வர்ற??” என்றவன் குரல் மாறியிருந்தது.
“அது…”
“நான் அந்தப் பொண்ண… அப்படிக் கூப்பிட்டிருப்பேன்னு சொல்ற. கரெக்டா? ” என்று சந்தேகமாகத் கேட்டான்.
ஸ்வீட் ஹார்ட் மௌனமாக நின்றாள்.
“ஸோ அப்படித்தான் நினைச்சிருக்க” என்றவன் குரல், காதலி மேல் கோபம் கொண்டிருந்தன.
“இல்லை ரோமியோ”
“இப்பெல்லாம் நீ பேசுறதே சரியில்லை??” என்று கடிந்து சொல்லிவிட்டு நகர்ந்தான்.
‘தப்பா பேசிவிட்டோமோ?’ என்று குழம்பிப் போய் நின்றாள், ஸ்வீட் ஹார்ட்.
*****
ரோமியோ… மைக்கேலையும் தனத்தையும் கடந்து செல்லும் பொது, தனம் பேசுவது அவன் காதில் விழுந்தது.
“என்னைய லவ் பண்றேன்னு சொன்ன. ஆனா யாரோ ஒரு பொண்ணப் பார்த்து ‘காதலியே’-ன்னு கூப்பிடற??” – தனம்.
“இல்லை தனம்”
“உன் இடத்தில நான் இருந்து என்னைய யாராவது அப்படிச் சொல்லச் சொன்னா… கண்டிப்பா சொல்ல மாட்டேன்” என்று கடிந்து சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
சற்று தூரம் நடந்து சென்று, தனம் அமர்ந்து கொண்டாள். வழக்கம் போல புத்தகத்தை திறந்தாள்.
சில நொடிகள் பின்…
அவளது முகம் மாறியது. அதனை ரோமியோ கண்டு கொண்டான்.
“என்னாச்சு?” – ரோமியோ.
“இங்கே வாயேன்”
அவனும் வந்து அமர்ந்தான்.
புத்தகத்தில்…
‘கடைசி கல் நாணயம், ஆரம்பித்த இடத்தில்’ என்று எழுதியிருந்தது.
“ஹே! லாஸ்ட் ஸ்டேஜ் வந்தாச்சா?” என்ற அவனது குரலில் அத்தனை சந்தோஷம்.
“ஆமாம். ஆனா இதுக்கு என்ன அர்த்தம்?” என்று புத்தகத்தின் வாசகத்தை காண்பித்தாள்.
“ஸ்டார்ட் பண்ண இடத்துக்குப் போகணுமோ?”
“ச்சே. அந்தப் பெரியவர் சொன்னாருல, எந்த இடத்திலேயும் பின்னால போகக் கூடாதுன்னு”
“ஓ! மறந்திட்டேன்”
இருவரும் யோசித்தார்கள்.
“தனம், நீ பர்ஸ்ட் காயின எங்க எடுத்த?”
“ம்ம்ம், ஒரு மரத்தோட பொந்ததுல”
“அப்போ லாஸ்ட் காயினும், அதே மாதிரி ஒரு மரத்திலதான் இருக்கும்”
“ஓ! சூப்பர். இது கொஞ்சம் ஈஸிதான்”
“அது, அங்க போனாத்தான் தெரியும்”
இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.
****
தன் அன்பனுடன் காதலைக் கொண்டாடியவளும், அத்தை மகள் மீது காதல் கொண்டவனும் ‘என்ன தவறு செய்கின்றோம்?’ எனப் புரியாமல் தவித்தனர்.