UKU
UKU
காதலின் நினைவலைகள்…
நேற்றுவரை எதைஎதையோ தேடினேன்,
இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக…!
உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு,
இல்லையேல் நீயும் என்னுள் தொலைந்துவிடு…!
அவளிடம் பேச வேண்டும் என்று எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டாலும், அதற்கான சந்தர்ப்பம் எனக்கு ஏனோ அமையவே இல்லை. எப்பொழுதும் உறவுகளோடும் விளையாட்டுப் பிள்ளைகளோடும் சலசலத்துத் திரிபவளைத் தனிமையில் பார்க்கவே முடியவில்லை என்னால்.
வார்த்தை ஜாலம் காட்டிப் பேச்சில் மயக்கும் சாகசமெல்லாம் எனக்கு வராது என்பது தெளிவாக எனக்குத் தெரியும். அவளிடம் நான் பேச நினைப்பதுகூட அவளை நினைத்து உருகும் என்னை அவளுக்கு அடையாளம் காட்ட மட்டுமே.
அதற்குமேல் காதல் வார்த்தைகள் பேசவெல்லாம் நான் நினைக்கவில்லை. அது கண்ணியமாகவும் எனக்குத் தோன்றவில்லை. என் மனதில் முகிழ்த்துள்ள நேசத்தை அவளுக்குத் தெரியப் படுத்துவது மட்டுமே என் நோக்கம்.
எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பது உண்மைதானே… அமைதியை விரும்பும் என்னை அவளது கலகலப்பும் துறுதுறுப்புமே ஈர்த்தது. ஆனால் விளையாட்டுத் தனமாக இருப்பவள் என் நேசத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பும் இருக்கிறது.
எங்களுக்குள் ஏற்படப் போகும் திருமண பந்தம் இருபக்க உறவினர்களின் ஆசியோடு இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. எந்த விதத்திலும் யாரும் எங்களைத் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதில் என் கவனம் இருந்தது.
பெற்றவர் மூலம் பெண் கேட்பது என்பது வேறு. தானாக அந்தப் பெண்ணிடம் விருப்பத்தை தெரிவிப்பது என்பது வேறல்லவா?
மனதில் பலவித சிந்தனைகள் வலம் வந்தாலும், என்னை அவளுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணமும் விடாமல் எழுந்தபடி இருந்தது. இரவு படுக்கைக்கு வரும் வரை அவளைத் தனியாக பிடிக்கமுடியவில்லை. உண்ணவும் பிடிக்கவில்லை உறக்கமும் வரவில்லை. விசித்திரமான உணர்வுகள் மிகவும் புதிதாய் தோன்ற, இன்றைய நாளும் முடிவுக்கு வந்துவிட்டது.
இதோ… காலையில் இந்த ஊருக்கு வந்து இறங்கியதிலிருந்து, அவளைப் பார்த்ததிலிருந்து, இரவு அறைக்கு வந்தது வரை ஒருநாள் நிகழ்வுகளை எனது நாட்குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்… இன்றைய நாளை என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது.
உறக்கம் வராது என்று உறுதியாகத் தெரிந்த பின்னும் வேறு வழியின்றி படுக்கையில் சாய்ந்தேன். என் அறைக்கதவு தட்டப்பட்டது. யாரென்ற யோசனையோடு போய் திறக்க, அங்கே உற்சாகச் சிரிப்போடு என் மாமன்களும் அண்ணன்மார்களும் நின்றிருந்தனர்.
கூட்டமாய் வந்திருந்தவர்களைக் குழப்பமாய் நான் பார்க்க, “என்ன மாப்ள முழிக்கிற? எல்லாரும் தூங்கப் போயாச்சு. எங்க கச்சேரியை நாங்க ஆரம்பிக்கிறோம்” என்றபடி உள்ளே நுழைந்தவர்கள் அவர்களுக்கென நான் வாங்கி வந்திருந்த வெளிநாட்டு மதுவகையைக் கேட்க, புன்சிரிப்போடு எடுத்துக் கொடுத்தேன்.
அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளோடு வந்திருந்தவர்கள், தாமதிக்காமல் தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, அவர்களது அலம்பல்களை ரசித்தபடி அறையின் வாசலில் அமர்ந்து யாரும் வருகிறார்களா என்று பார்த்தபடி இருந்தேன்.
உற்சாக பானம் உள்ளே சென்றதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசில் அலப்பறையைக் கூட்ட, பார்த்திருந்த எனக்கு சிரிப்புதான் வந்தது.
என் இரண்டாவது மதினியின் கணவர் அங்கே மேஜையின் மீது வைத்திருந்த எனது நாட்குறிப்பேட்டை எடுத்தவர், அதன் முதல் பக்கத்தைப் புரட்டியபடி,
“என்ன தம்பி டைரியெல்லாம் எழுதுவியா நீ? என்ன எழுதியிருக்க?” என்க,
அவரது கையில் என் டைரியைப் பார்த்ததும் தன்னைப்போல பதட்டம் வந்தது என்னுள். சற்று வேகமாகவே பாய்ந்து சென்று அவரிடமிருந்து டைரியைப் பறித்தேன். என்னுடைய செய்கை அவருக்கு வித்தியாசமாகப் பட்டிருக்க வேண்டும்.
“என்னப்பா வெடுக்குன்னு புடுங்குற. முக்கியமானது ஏதும் எழுதி வச்சிருக்கியோ?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணா. சும்மாதான்…” நான் டைரியை மெதுவாக என் பெட்டியில் பத்திரப் படுத்த,
“ஏன் மாப்ள? ஒன்னுமில்லாததையா இவ்வளவு பதட்டமா வாங்குன? இவ்வளவு பத்திரமா வைக்குற? மாப்ள ஏதும் காதல் விவகாரமாய்யா? பொண்ணு யாரு?”
“அதெல்லாம் எதுவுமில்லை மாமா. நீங்க சும்மாயிருங்க.” நான் சமாளிக்கப் பார்க்க, என் கடைசி மாமாவோ,
“இல்ல, காலையில ஊர்ல இருந்து மண்டபத்துக்கு வந்தப்ப இருந்த தெளிவு இப்ப உன் முகத்துல இல்லை. என்னவோ விஷயம் இருக்கு. சொல்றியா? உங்க அக்காவைக் கூப்பிட்டு விசாரிக்கச் சொல்லவா?” அவர் என்னை மிரட்டிப் பார்க்க,
“சொல்லுங்க… இப்பவே எங்க அக்காங்களைக் கூப்பிடவா? அவங்க என்னைய விசாரிக்கறதைவிட உங்களை நல்லாவே விசாரிப்பாங்க.” சற்று எகத்தாளமாகவே வந்தது என் குரல்.
என் கூற்றில் பதறிப் போனவர்கள்,
“என்ன மாப்ள பொசுக்குனு இப்படி சொல்லிப்புட்ட? நீபாட்டுக்கு அவங்களை கூப்பிட்றாத. எங்க சோலி முடிஞ்சு போகும்.”
“அது. அந்த பயம் இருக்கனும். அக்காங்ககிட்ட போய் தத்துபித்துன்னு எதுவும் உளறி வைக்கக்கூடாது. நேரம் வரும்போது நானே உங்ககிட்ட என்ன விஷயம்னு சொல்லுவேன். எனக்கு நீங்க எல்லாரும்தான ஹெல்ப் பண்ணனும்.”
“மாப்ள… அப்ப காதல் விவகாரம்தானா? யாருய்யா பொண்ணு? இங்க மாப்பிள்ளை வீட்டு ஆளா? யாருன்னு சொல்லுய்யா நாளைக்கே பொண்ணு கேட்டுடலாம். நமக்கு பொண்ணு தரமாட்டேன்னு யார் சொல்லுவா?” வெகுவாக மனமகிழ்ந்தவர்கள் கேள்விமேல் கேள்வியெழுப்ப, அகமும் முகமும் மலர்ந்த சிரிப்பையே பதிலாக்கினேன்.
“அதான… பார்க்க ஹீரோ கணக்கா இருக்குற புள்ள. கைநிறைய சம்பாதிக்கிற புள்ள. வெளிநாட்டுக்கெல்லாம் போய் வந்தாலும் ஒரு கெட்ட பழக்கம்கூட பழகாத நல்லபுள்ள. உனக்கு பொண்ணு தரக் கசக்குதோ? உன்னைப் பார்த்ததும் ஒத்துப்பாங்க.” ஒரு அண்ணன் சான்றிதழ் வழங்க,
“ஆமா சகலை நீங்க சொல்றது சரிதான்.” தன் சகலையின் கூற்றை ஆமோதித்த மற்றொரு அண்ணன்,
“நீ பொண்ணு யாருன்னு மட்டும் காட்டு. பேசி முடிக்க வேண்டியது எங்க வேலை.” என்று உறுதி கொடுக்க மனப்பாரம் சற்று நீங்கியது எனக்கு.
இன்னும் பெண் யாரென்றே தெரியாமல் எனக்கு இவ்வளவு தூரம் சப்போர்ட் செய்பவர்கள், பூரணிதான் என் மனம் கவர்ந்தவள் என்று தெரிந்தால், என் திருமண நிச்சயத்தை நடத்திவிட்டுதான் ஓய்வார்கள் என்று தோன்றியது.
பூரணியிடம் என் மனதை எடுத்துக்கூறி அவளுக்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில், உடனடியாக பெண் கேட்டு நிச்சயம் செய்துவிடலாம் என்று உறுதியாக எண்ணிக் கொண்டேன்.
உற்சாகபானம் அளித்த உற்சாகத்தோடு, இந்த உற்சாகமும் சேர்ந்து கொள்ள சந்தோஷப் புலம்பல்களோடு அனைவரும் என் அறையிலேயே உறக்கத்திற்குச் சென்றனர்.
ம
னம் முழுவதும் சொல்ல முடியாத சந்தோஷம் பரவியதில், உறக்கம் சுத்தமாக தொலைந்து போக வெளியே பால்கனியில் நின்று நிலவை ரசிக்கலாம் என்று வந்தேன்.
மண்டப வாசலில் என் பூரணநிலவு தனியே நின்றிருக்கக் கண்டேன். ‘இவளென்ன இன்னேரத்தில் தனியே?’ மனம் யோசித்தாலும் என்னைமீறி கால்கள் அவளை நோக்கி நடைபோட்டது.
—அலையடிக்கும்.
உயிரின் வேட்டை…
நன்கு புலர்ந்த காலை பத்து மணி. ஓரளவுக்கு பரபரப்புடன் இருந்த அந்த சாலையில் இடைவிடாத போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. தான் நன்றாகவே எழும்பி முகம் காட்டிக் கொண்டிருந்த போதும், மக்களுக்கு பனி உறைத்த அளவுக்கு வெயில் உறைக்காததில் தோல்வியில் வெட்கம் கொண்டு மேகத்தில் முகம் மறைத்திருந்தான் கதிரவன்.
கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன் என்ற பெயர் பலகை பளிச்சென்று முகம் காட்டிக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தினுள் பலதரப்பட்ட மனிதர்கள் பலவகையான முகபாவங்களோடு காணப்பட்டனர்.
வாசலில் காவலுக்கு இருந்த காவலர் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருக்க, சற்று உள்ளே நுழைந்ததும் போடப்பட்ட இருக்கையில் பலர் உயரதிகாரியை பார்ப்பதற்கு வேண்டி அமர்ந்திருந்தனர்.
அவர்களைத்தாண்டி உள்ளே
செல்கையில் விஸ்தாரமான ஹாலில் இரண்டு மேஜைகள் போடப்பட்டு, வழக்கு பதிபவரும், முதன்மைக் காவலரும் அமர்ந்திருந்தனர். அங்கே ஓரமாகப் போடப்பட்ட பெஞ்சில் அன்று சந்தேகத்தின் பேரில் அழைத்து வரப்பட்ட குற்றவாளிகளை அமர வைத்திருந்தனர்.
வெகுவாக கசங்கிச் சோர்ந்த முகத்தோடு அவர்களில் ஒருத்தியாக அமர்ந்திருந்தாள் ஹரிணி. அமுதசுரபி போல கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தபடியே இருந்தது.
என்னைச் சுற்றி என்னதான் நடக்கிறது. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது. மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.
மீண்டும் அதே கொலைகாரனை நேற்றும் அவ்வளவு அருகாமையில் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை அவளால்.
‘கண்டிப்பாக டிஎஸ்பி ஜனார்த்தனன் சாரையும் அவன்தான் கொன்றிருக்க வேண்டும்’ எண்ணும் போதே மீண்டும் உடலில் நடுக்கம்.
இன்னுமே அந்த நடுக்கம் உடலில் மிச்சமிருந்தது. நேற்றிலிருந்து ஒரு பொட்டு உறக்கம் கண்ணைத் தீண்டாததில் கண்கள் இரண்டும் மிளகாய் பழம் போல எரிந்தது.
அருகில் அமர்ந்திருந்த கெச்சலான உருவம் கொண்ட பெண் பான்பராக் போட்ட வாயைத் திறந்து, “நீ எந்த ஏரியா?” என்று கன்னடத்தில் கேட்க, ஒரு நொடி என்ன கேட்கிறாள் என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தவள், புரிந்ததும் உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.
‘விதி தன்னைக் கொண்டு வந்து எங்கே யாருடன் அமர வைத்திருக்கிறது’ எண்ண எண்ண மனம் தாளவில்லை அவளுக்கு.
இரவு முழுவதும் உறங்காமல் பயத்துடன் ஹாஸ்டலில் இருந்தவளை காலையில் போலீஸ் தேடி வர, போலீசைப் பார்த்தவுடன் மேலும் எகிறிய பதட்டத்திலும் பயத்திலும் அவர்கள் கேட்ட இரண்டு கேள்விக்கும் ஏறுக்குமாறான பதிலைச் சொல்ல, இழுத்து வந்து இங்கு அமர வைத்து விட்டனர்.
நேற்று மாலை எங்கு சென்றிருந்தாய்? என்று கேட்டவுடன் பயத்தில் எங்குமே போகவில்லை என்று கூறியிருந்தாள். ஜனார்த்தனன் என்பவரைத் தெரியுமா? என்ற கேள்விக்கு எனக்குத் தெரியாது என்று கூறவும்,
வேறு கேள்வியே இல்லாமல் சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்து வந்துவிட்டனர்.
‘நேற்று அந்த மாலுக்குச் சென்றிருக்கவே கூடாது’ ஆயிரமாவது முறையாக எண்ணிக் கொண்டாள். ‘என்னால் பாவம் சுஜிக்கும் கஷ்டம்’ எண்ணியபடி மெல்ல நிமிர்ந்து சுஜியைப் பார்க்க,
சுஜியோ அங்கிருந்த முதன்மைக் காவலரிடம் கண்களில் பெருகி வந்த கண்ணீரைத் துடைத்தபடி மூன்று நாட்களாக நடந்த அனைத்தையும் கூறிக்கொண்டிருந்தாள்.
அவளுக்குத் துணையாக வந்து அருகே அமர்ந்திருந்த ஹாஸ்டல் வார்டனின் முகமும் வெகுவாக கவலையைத் தாங்கி இருந்தது. சுஜி மற்றும் ஹரிணியைப் பற்றி அவருக்கு எப்போதுமே நல்ல அபிப்ராயம் மட்டுமே.
இருவரும் ஹாஸ்டல் விதிமுறைகளை சரியாக பின்பற்றி நடப்பர். எந்தப் பிரச்சனைக்கும் போகாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் பிள்ளைகள். இத்தனை வருடங்களாக ஹாஸ்டல் நடத்தி வரும் அவருக்கு, இதுவரையில் இல்லாத வகையில் இந்தப் பிள்ளைகளைத் தேடி போலீஸ் வந்தது பேரதிர்ச்சியைத் தந்திருந்தது. ஆனாலும் ஹரிணி சுஜியைப் பற்றி நன்கு தெரியும் ஆகையால் சுஜிக்குத் துணையாக வந்திருந்தார்.
முதன்மைக் காவலரின் செவிகள் சுஜி கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் முகமோ எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இறுக்கமாகவே இருந்தது.
“சார், நிஜமா இதுதான் சார் நடந்தது. அவளுக்கு எதுவுமே தெரியாது சார். நடந்த இரண்டு கொலைக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை சார். ப்ளீஸ் சார்.” பரிதவிப்போடு கெஞ்சிக் கொண்டிருந்தாள் சுஜி. முதன்மைக் காவலர் விரைப்போடு அமர்ந்திருக்க, அருகே இருந்த பெண் காவலர்தான் பதில் கூறினார்.
“இங்க பாரும்மா, செத்தவரு சாதாரணமான ஆளு இல்ல இந்த சரக டிஎஸ்பி. ஆதாரம் இல்லாம உன் ஃபிரெண்டை இங்க கூட்டிட்டு வரலை. அவர் ஃபோனுக்கு கடைசியா உன் ஃபிரெண்டு நம்பர்ல இருந்துதான் ஃபோன் போயிருக்கு. உன் ஃபிரெண்டுதான் ஃபோன் பண்ணியிருக்கா. நேத்து நீங்க ரெண்டு பேரும் அந்த மாலுக்கு வந்தது சிசிடிவி கேமராவுல பதிவாயிருக்கு.
ஆனா டிஎஸ்பி செத்து கிடந்த கார் பார்க்கிங் பக்கமிருந்த சிசிடிவி கேமராவுல உன் பிரெண்டு மட்டும்தான் பதிவாயிருக்கா. காலையில நாங்க வந்து கேட்டப்ப அந்த மாலுக்கே நாங்க போகலைன்னு பொய் சொன்னது மட்டுமில்லாம ஜனார்த்தனன் சாரை யாருன்னே தெரியாதுன்னு வேற பொய் சொல்லியிருக்கா.
Moஅவரை சந்திக்கதான் நீங்க அந்த மாலுக்குப் போயிருக்கீங்கன்னு அவரோட தங்கச்சியே சொல்லிட்டாங்க. ஆனா அங்க என்ன நடந்ததுன்னு உன் ஃபிரெண்டுதான் சொல்லனும்.”
“மேடம், நிஜமா நாங்க எங்க பிரச்சனைய சொல்லி அவர்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னுதான் அவரை மீட் பண்ண போனோம் மேடம். அவர் வர லேட் ஆனதாலதான் அவர் ஃபோனுக்கு கால் பண்ணி பேசினோம். அவர் அந்த மாலுக்கு வந்துட்டேன்னு எங்ககிட்ட பேசினதுதான் கடைசி.
அதுக்கப்புறம் நாங்க வெயிட் பண்ணி பார்த்துட்டு அவருக்கு மறுபடி கால் பண்ணப்ப, அவர் ஃபோனையே எடுக்கலை. நிஜமா அவரை அதுக்கு முன்னாடி நாங்க பார்த்ததுகூட கிடையாது. என்ன செய்யறதுன்னு புரியாம அவரோட ஃபோட்டோவை கூட எங்க ஃபிரெண்டுகிட்ட கேட்டு வாங்கிகிட்டுதான் அவரை தேடிப் போனோம்.”
“அப்ப ஏன் காலையில உன் ஃபிரெண்டு பொய் சொன்னா? அதுவுமில்லாம ஜனார்த்தனன் சார் தங்கச்சிகிட்டயும் ஏதோ இன்டர்வியூ எடுக்கனும்னு பொய் சொல்லிதான் அப்பாயிண்மென்ட் வாங்கியிருக்கீங்க.”
“காலையில போலீசை பார்த்த பதட்டத்தில அவ பயந்து போய் அப்படி சொல்லிட்டா மேடம். ஜனார்த்தனன் சார் தங்கச்சி ரேணு எங்க ஃபிரெண்டுதான். ஆனாலும் ஹரிணியோட பிரச்சனை அவளுக்குத் தெரிய வேணாமேன்னுதான் நாங்க இன்டர்வியூன்னு சொல்லி அப்பாயிண்மென்ட் வாங்கினோம்.”
“இங்க பாரும்மா. இன்னும் கொஞ்ச நேரத்துல இன்ஸ்பெக்டர் வந்துடுவாரு. அவர்கிட்ட இதையெல்லாம் சொல்லுங்க. அதுவரை நீங்க அமைதியா போய் உட்காருங்க.”
எவ்வளவு எடுத்து சொல்லியும் நம்ப மறுப்பவர்களைச் சோர்ந்த முகத்தோடு பார்த்த சுஜியும் வார்டனும் மௌனமாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
சற்று நேரத்துக்கு முன்பு ஹாஸ்டல் வந்து ஹரிணியை போலீஸ் விசாரணை நடத்த அழைத்து வரவுமே, ஹரிணியின் தந்தைக்கு அழைத்து நடந்தது அனைத்தையும் அழுகையோடு கூறிவிட்டாள் சுஜி.
பதட்டத்தின் உச்சிக்கே போன அவளது தந்தை முன்பே இந்த விஷயங்களை ஏன் எங்களிடம் கூறவில்லை என்று வெகுவாக கடிந்து கொண்டதோடு, உடனடியாக வருவதாகவும் கூறி வைத்தார்.
‘இதுவரை வெறும் விசாரணைக்கு என்றே கூறியிருக்கின்றனர். எப்ஐஆர் எதுவும் போட்டுவிட்டால் அவளது படிப்பு பாதிக்கப்படும்’ என்று எதைஎதையோ எண்ணிக் கலங்கியபடி இருந்தாள் சுஜி. ஆரம்பத்திலேயே ஹரிணியின் பெற்றவர்களிடம் பிரச்சனையை சொல்லாத மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டது மனது.
ஹரிணியுமே அதை எண்ணிதான் மிகவும் நொந்து போயிருந்தாள். பெரியவர்களிடம் விஷயத்தைக் கொண்டு போகாமல் தானாக எதையோ செய்யப் போய் இப்படி வந்து உட்கார்ந்து இருப்பது அவமானமாக வேறு இருந்தது. வந்து அரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனாலும் கூனிக் குறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.
அப்பொழுது அந்த போலீஸ் ஸ்டேஷன் முன்பு பொலீரோ ஜீப் ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து புயலைப் போன்றதொரு வேகத்தோடு இறங்கினான் சரண். உடன் அவனது தந்தையும் ராகுலும் வந்திருக்க, அதன் பிறகு அங்கு காட்சிகள் விரைவாக மாறின.
அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் அங்கு வந்திருக்க, அவருக்கு நடந்தவற்றையும் ஹரிணியைப் பற்றிய விபரங்களையும் எடுத்துக் கூறிய பிறகு அடுத்த ஐந்தாவது நிமிடம் ஹரிணியை அழைத்துக் கொண்டு அனைவரும் வெளியே வந்திருந்தனர்.
ஹரிணியும் சுஜியும் முன்தினத்திலிருந்தே ஒன்றுமே சாப்பிடாமல் சோர்வோடு இருந்ததை அவர்களது முகமே அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. அருகில் இருந்த ஹோட்டலுக்குப் போகலாம் என்று தீரன் கூற, அதை மறுக்கவில்லை யாரும். உயர்தரமான அந்த ஹோட்டலினுள் தனி அறையில் சென்று அமர்ந்தவர்கள் அவரவர்க்குத் தேவையானவற்றை ஆர்டர் செய்த பிறகு பேசத் துவங்கினர்.
ஹரிணி தன் எதிரே அமர்ந்திருந்த சரணைப் பார்த்து கலவையான உணர்ச்சியோடும் குழப்பத்தோடும் யோசித்தபடி இருக்க, சுஜியோ பெரும் நன்றியோடு பார்த்திருந்தாள். அன்றும் என்னைக் காப்பாற்றியது இவர்தானே. சரணையே விழியெடுக்காமல் ஹரிணி பார்த்திருக்க, சரணுமே அவளை ஆறுதலாகப் பார்த்திருந்தான்.
அவனுக்குள் பெரும் குற்றவுணர்ச்சியும் இருந்தது. முதலிலேயே தான் ஹரிணியை சந்தித்துப் பேசியிருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம். குறைந்தபட்சம் நேற்றாவது அவளுடன் பேசியிருக்க வேண்டும். அவனுடைய பணிகளை முடித்துவிட்டு வருவதற்கே அவனுக்கு வெகுநேரமாகிவிட, அதற்குமேல் சென்று அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் மறுநாள் பேசிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டான்.
அதுமட்டுமில்லாமல், ஹரிணி சென்ற மாலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதாகவும் அதைப் பார்த்து ஹரிணி பயந்து விட்டதாகவும் ராகுல் கூறிய போது, அவளை பாதுகாப்பாக ஹாஸ்டலுக்கு அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தான். ஆனால் அந்த அதிகாரியைப் பார்க்கதான் அவள் மாலுக்கே சென்றாள் என்பது அந்த நேரம் ராகுலுக்கோ தனக்கோ தெரியாததால் ஹரிணிக்கு இப்படி பிரச்சனைகள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை அவர்கள்.
காலையில் ராகுல் ஃபோன் செய்து ஹரிணியை லோக்கல் போலீஸ் பெண் காவலர் டிஎஸ்பி ஜனார்த்தனன் கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்கிறார் என்றும் அவரிடம் ஹரிணிக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கிறது என்றும் ராகுல் கூறிய போது, மிகவும் நொந்து போனான். உடனடியாக தனது தந்தையிடம் விபரத்தைப் பகிர்ந்தவன், அவரையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்து ஹரிணியை மீட்டு கொண்டுவந்த பிறகுதான், ௮வனுக்கு சுவாசமே ஒழுங்காயிற்று.
ஹாஸ்டல் வார்டனுக்குமே அவர்களுடைய பதவியையும் அதிகாரத்தையும் பார்த்து பெரும் மரியாதை வந்திருந்தது.
“சார், உங்க உதவியை மறக்கவே முடியாது சார். ரொம்ப நன்றி சார்.” பரவசத்தோடு நன்றி கூறியவர், ஹரிணிக்கும் அவர்களுக்கும் இடையேயான ரிலேஷன்சிப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டி மெதுவாக, “சார், உங்களுக்கு ஹரிணியைப் பற்றி யாரு சார் சொன்னது? ஹரிணியை எப்படி தெரியும்?”
“ஹரிணி எங்க ரிலேட்டிவ்தான்ம்மா. அவங்க அப்பா ஃபோன் பண்ணியிருந்தார். அதுவுமில்லாம…” சற்று தயக்கத்தோடு ஹரிணியைப் பார்த்தவர், “கலெக்டர் கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்ததிலிருந்து ஹரிணியோட பாதுகாப்புக்காக அவளுக்குக் காவலா ராகுலை நியமித்திருந்தேன். ஹரிணியை விசாரிக்க பெண் காவலர் ஹாஸ்டல் வந்த போதே தகவலை எங்களுக்குத் தெரிவித்துவிட்டான் ராகுல்.”
தீரன் கூறியதைக் கேட்ட ஹரிணிக்கு ராகுல் தன்னைப் பின்தொடர்ந்ததன் காரணம் புரிந்தது. ஆனால் தனக்கு இவ்வளவு செய்யும் இவர்கள் யார் என்னும் கேள்வி அவளுக்குள்.
உறவினர் என்று தீரன் சொன்னாலும் அவளுக்கோ அவர்களை முன்னே பார்த்த நினைவுகூட இல்லையே என்று எண்ணியபடி இருந்தாள்.
மெதுவாக சுஜியிடம் அன்றும் விபத்து நடக்காமல் தன்னைக் காப்பாற்றியது இவர்தான் என்றுகூற, சுஜிக்கு புரியாத பல விஷயங்கள் புரிவது போல இருந்தது.
சுஜிக்கு நேற்றைய தினத்தில் அவ்வளவு பதட்டத்திலும் தங்களுக்கு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்து பாதுகாப்பாக ஹாஸ்டல் செல்ல சொன்னது ராகுல்தான் என்பதும் நினைவுக்கு வந்தது. நேற்றைய பதட்டத்தில் அவன் யார் என்று ஆராயத் தோன்றவில்லை. இன்று ஓரளவுக்கு நடந்தவை அனைத்தும் புரிய வந்தது.
அந்த நேரத்தில் தீரனின் அலைபேசி இசைத்தது. எடுத்துப் பார்த்தவர்,
“ஹரிணியோட அப்பாதான்.” என்றுகூறியபடி அவரோடு பேசி ஹரிணியை வெளியே அழைத்து வந்துவிட்ட தகவலைக் கூறி அவரைச் சமாதானப்படுத்தி, ஹரிணியின் கைகளில் ஃபோனைக் கொடுத்தார்.
“இந்தாம்மா. உங்கப்பா வந்துகிட்டு இருக்காராம். உன்கிட்ட பேசனும்னு சொல்றார்.” கனிவோடு அலைபேசியை நீட்ட, அதை வாங்கி தனது காதில் வைத்துத் தந்தையின் குரலைக் கேட்டதும், அதுவரையில் அடங்கியிருந்த அழுகை கரையுடைத்தது.
“அப்பா… சாரிப்பா…” என்பதைத் தாண்டி எதுவுமே பேசமுடியாமல் அப்படி ஒரு அழுகை. பெற்றவர்களை பதற வைத்து வருந்த வைத்து விட்டோமே, தேவையில்லாத சிக்கலில் சிக்கி அவர்களுக்கு மனவருத்தம் கொடுத்துவிட்டோமே என்று அழுகைதான் வந்தது. அவளை வெகுவாக சமாதானப் படுத்தியவர்.
“உனக்கு ஒரு பிரச்சனைன்னா அப்பா பார்த்துகிட்டு இருப்பேனாடா? பயப்படாம தைரியமா இரு. இன்னும் நான்கு மணி நேரத்துல நானும் அம்மாவும் அங்க இருப்போம். தீரன் சார் நமக்கு சொந்தம்தான். அவர்கூடப் போ. அவங்க வீட்ல இருடா. நாங்க அங்க வந்துடறோம்.”
தந்தையின் பேச்சில் சற்று தைரியம் வர, சரி என்று கூறியவள், தன் தாயிடமும் பேசிய பிறகு அலைபேசியை தீரனிடம் நீட்டினாள். உணவை உண்டு முடித்ததும் வார்டன் விடைபெற்றுக் கொள்ள, சுஜியும் ஹரிணியும் தீரன் மற்றும் சரணுடன் அவர்களது வீட்டிற்கு சென்றனர். உடன் ராகுலும் சென்றான்.
திலகவதிக்கும் தகவலைச் சொல்லியிருந்ததில் அவர் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார். வீட்டுக்குள் நுழையும் போதே வாஞ்சையோடு வரவேற்ற அவரது முகம் மட்டும் லேசாக பரிட்சையமானது போலத் தோன்றியது.
வீட்டின் வெளிப்புறம் இருந்த லானும் அதில் போடப்பட்டிருந்த ஊஞ்சலும் மனதைக் கவர்வதாய் இருந்தது. அந்நியமாய் அடுத்தவர் வீட்டுக்கு வந்தது போல இல்லாமல் சூழ்நிலை சற்று இதமாகவே இருக்கவும், ஹரிணியின் உள்ளம் சற்று சகஜ நிலைக்கு வந்திருந்தது.
திலகவதியும் தீரனும் ஹரிணியின் மனநிலையை லேசாக்க அவளோடு நன்கு பேசிக் கொண்டிருந்தனர்.
“என்னைத் தெரியுதா?” என்ற திலகவதியின் கேள்விக்கு உதட்டை லேசாகப் பிதுக்கியிருந்தாள். சுற்றி வளைத்த உறவுமுறையைக்கூறி நான் உன் அம்மாவுக்கு அத்தை மகளாக்கும் என்னை நீ அத்தையென்று கூப்பிடு என்று கூறியபோது, எப்போதோ பார்த்த திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்து இதழ்களில் புன்னகை வர வைத்தது.
ஆறு மாதங்களுக்கு முன்பு அவளது மாமன் மகள் திருமணத்தில் பார்த்ததாகக் கூறியபோது, அன்னை அவரை அறிமுகப்படுத்தியது லேசாக நினைவுக்கு வந்தது. அதன்பிறகு அவரோடு பேசுவது சற்று இலகுவாக இருந்தது.
தன் கையால் தயாரித்த தேநீரைத் தந்து உபசரித்த சரணை சற்று சிநேக பாவத்தோடு பார்த்துக் கொண்டாள் ஹரிணி. அன்று காப்பாற்றியதற்கு இவருக்கு நான் நன்றிகூட சொல்லவில்லையே என்று எண்ணிக் கொண்டாள்.
“ஜர்னலிசம் படிக்கிற நல்லா தைரியமா இருக்கறதில்லையா? ராகுலைப் பார்த்து பயந்து போய் அன்னைக்கு கார்ல அடிபடப் பார்த்தன்னு சரண் சொன்னான்” என்று திலகவதி வருத்தப்பட, அவளுக்கு முன் சரண் பதிலைக் கூறினான்.
“அம்மா. ஜர்னலிசம் அவளோட ஆர்வத்துல படிக்கிற படிப்பு. ஆனா அன்னைக்கு இருந்த சூழ்நிலையில ராகுலைப் பார்த்து பயந்தது அவளோட இயல்பும்மா. படிப்புக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. அதுக்காக அவ எல்லா விஷயத்துக்கும் பயப்படற பொண்ணும் இல்லை.”
சரண் கூறியதை ஆமோதித்த சுஜி,
“நிஜம்தான் சார். ஹரிணி தைரியமான பொண்ணுதான். அன்னைக்கு இருந்த சூழ்நிலையாலதான் அவ பயந்துட்டா. நேற்று நாங்க ரெண்டு பேருமே பயந்துட்டோம்.”
நேற்று நடந்த நிகழ்வை எண்ணி இருவருக்குமே சற்று உடல் சிலிர்த்தது. ஹரிணி சற்று ஆசுவாசமடையும் வரை அமைதியாக இருந்த தீரன் சற்று நேரம் கழித்து,
“ஹரிணி… உனக்கு எந்த பிரச்சினையும் வரவிடமாட்டோம். நீ பயப்படத் தேவையில்லை. மூன்று நாட்களுக்கு முன்னாடி கலெக்டர் கொலையை நேரில் பார்த்ததிலிருந்து நேற்று மாலை நடந்த நிகழ்வு வரை எல்லாமே எங்களுக்கு சொல்லும்மா.
முன்னாடியே உன்கிட்ட வந்து பேசியிருந்தா இன்றைய நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம். ஆனா நீ கொஞ்சம் பயத்திலிருந்து வெளிய வரனும்னுதான் நாங்க அமைதியா இருந்தோம்.
கலெக்டர் கொலைக்கு முக்கியமான ஐவிட்னஸ் நீ. அந்த வழக்கு விசாரணையை பார்த்துக்கறது சரண்தான். பயப்படாம தெளிவா நடந்தது அத்தனையும் எங்ககிட்ட சொல்லும்மா.”
சரணையும் தீரனையும் பார்த்தவள், மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளைச் சொல்லத் துவங்கினாள்…
— வேட்டை தொடரும்.
.