Pokisha pezhai – 11

அடுத்து செல்லக் கூடிய இடத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதும், தனமும் ரோமியோவும் எழுந்து கொண்டனர்.

ரோமியோ திரும்பி, “ஸ்வீட் ஹார்ட், வா போகலாம்” என்றான். அவளும் வந்து அவனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினாள். அதைத் தவிர, ரோமியோ வேறு எதுவும் பேசவில்லை.

இவர்கள் பின்னால் தனமும் மைக்கேலும் தனித்தனியே நடந்து வந்தனர்.

புத்தகத்தை மூடி வைத்தப் பின், வானவில் வெளிச்சமானது மறைந்து விட்டது. ஆனால் அச்சிறு பேழைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக, இன்னும் சுற்றிக் கொண்டே வந்தன. அதிலிருந்த வந்த சொற்ப ஒளியில் நடக்க ஆரம்பித்தனர்.

கடைசிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்ற ஒன்றே போதுமானதாக இருந்தது, அவர்கள் சோர்வின்றி நடக்க!

அதை விட வண்ண வண்ண மணல்களில் நடப்பது மிகவும் சுகமாகவும், வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது.

சிறிது தூரத்திலே, பாதையில் மாற்றம் தெரிந்தது. முதல் மாற்றமாய் நடக்க ஏதுவாக வெளிச்சம் வந்தது. அது ஊதா நிறத்தில், அதாவது நீலமும், கருஞ் சிவப்பும் கலந்த நிறத்தில் இருந்தது.

நடக்கையில் அடர் பழுப்பு நிற கடினமான பாறைகள் காலில் கீழே உள்ளன என்று உணர்ந்தனர். அதன் மேல் சிறிய சிறிய செடிகள் இருந்தன. அவை அனைத்தும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. மேலும் அதில் பஞ்சுமிட்டாய் வர்ணத்தில் மலர்கள்.

‘மரம் எங்கே?’ எனச் சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள். அந்த இடத்தில இல்லை என்றதும், மேலும் சற்று தூரம் நடந்தார்கள்.

கண்களில் தென்பட்டது, தேடி வந்த மரம்!! கத்திரி பூ நிறத்தில் நல்ல கரடு முரடான அடிமரம் மற்றும் கிளைகள் கொண்டிருந்தது. இதிலும் இலைகளே இல்லை. ஆனால் மலர்கள் இருந்தன. அதுவும் ஐங்கோண வடிவ மலர்கள்! ரோஜா பூ வர்ணத்தில்!

‘ஊஃப்’ என்று சொல்லி தனமும் ரோமியோவும் தங்களது பைகளைப் பொத்தென்று கீழே போட்டனர்.

“இதுல எங்க தேட?” – ரோமியோ.

“அதான் எனக்கும் தெரியலை” – தனம்.

“சரி… மரத்தில ஏறலாம், என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்” என்று ரோமியோ விறுவிறுவென்று சென்றான்.

ஸ்வீட் ஹார்ட்டிற்கு, ‘ரோமியோ ஏன் எதுவும் பேசாமல் செல்கிறான்?’ என்று தெரியாமல் முழித்தாள்.

சட்டென அவளைத் பார்த்தவன்…

“ஸ்வீட் ஹார்ட், இங்கே இரு. நான் போயிட்டு வந்திடுவேன்” என்றான்.

“ம்ம்ம்” என்றவள் முகம் ஓரளவு தெளிவானது.

மறுபுறம்…

தனம், ‘மரம் எப்படி ஏற?’ என்பது போல் மலைப்புடன் நின்று கொண்டிருந்தாள்.

“தனம்”

“ம்ம்ம்”

“தனம்”

“என்னன்னு சொல்லு?”

“இந்த தடவை நான் போய் தேடவா?”

“எதுக்கு?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு. அப்பவாது உனக்குப் புரியும்ல என்னோட லவ்”

“நம்பலாமா??”

“சத்தியமா தனம்! என்னைய நம்பு. நான் உன்னைத்தான் லவ் பண்றேன்”

“நான் அதைக் கேட்கல. காயின் எடுத்து தருவியா?”

“ம்ம்ம், கண்டிப்பா”

“எனக்கும் முடியல. அதனால நீயே போய் எடு” என்று மைக்கேலை அனுப்பினாள்.

*****

தேடுவதற்காக மைக்கேல் வருவதைப் பார்த்த ரோமியோ, “என்னடா நீ வர்ற?” என்று கேட்டான்.

“தனத்துக்குப் பதிலா நான்தான் தேடப் போறேன்”

“ஓ!” என்றதோடு ரோமியோ நிறுத்திக் கொண்டான்.

இருவரும் கத்திரி பூ நிறத்திலிருந்த மரத்தில் ஏறினார்கள். பெரிய பெரிய கிளைகள். அடுத்த நொடியே ஒரு ஆச்சர்யம் நடந்தது. மரத்தின் ஒரு மலரைத் தவிர, மற்ற எல்லா மலர்களும் கீழே உதிர்ந்தன.

சற்றுத் தள்ளி நின்றவாறு, விழிகள் விரிய பெண்கள் இருவரும் இதைப் பார்த்தனர்.

பெரிய பெரிய கிளைகள். இலைகளே இல்லாதாதல் தேடுதல் மிக எளிதாக இருக்கும் என நினைத்து வந்தவர்களுக்கு, இது மிகப் பெரிய வியப்பை ஏற்படுத்தியது.

இனி அந்த ஒற்றை ரோஜா வர்ண மலர்தான், அவர்கள் இருவரது இலக்கு என்றாயிற்று! அதில்தான் நாணயம் இருக்கும் என நம்பினர்.

சரசரவென கிளைகளில் ஊர்ந்து, அந்த மலர் இருக்கும் இடம் செல்லும் போது, அது வேறொரு உச்சிக் கிளையில் சென்று உட்கார்ந்து கொண்டது!

நகரும் மலர் போல!!

‘இது வேறயா?’ என்பது போல், மைக்கேலும் ரோமியோவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்

ஒவ்வொரு கிளைக்கும் மாறி மாறிப் போய், மலரை எடுக்க முயன்றார்கள். அவர்களைவிட பத்து மடங்கு வேகத்தில், அந்த மலரும் இடத்தை மாற்றிக் கொண்டே சென்றது. மேலும் மேலும் உயரத்திற்குச் சென்றார்கள்.

கடைசியில், இருவருக்கும் சற்று நேர ஓய்வு தேவைப்பட்டது! மைக்கேல் ஒரு எல்லையிலும், ரோமியோ மற்றொரு எல்லையிலும் அமர்ந்தனர். மூச்சுத் திணறியது. தலை சுற்றியது. கண் இருட்டியது.

ஏன்? என்று புரியாமல் ரோமியோ கீழே பார்த்தான். தரையே தெரியவில்லை. மேலே பார்த்தான். வெகு நாட்களுக்குப் பிறகு வானம் தெரிந்தது!

இதற்கு சந்தோஷப்படவா? இல்லை அத்தகைய உயரத்தில் அமர்ந்திருக்கிறோம் என்று அச்சம் கொள்ளவா? இப்படிப்பட்ட மனநிலையில்தான் ரோமியோ இருந்தான்.

அக்கணம் அவனது மூளைக்குள், ‘இதற்கு என்ன அர்த்தம்?’ என்று கேள்வி வந்து நின்றது.

ரோமியோ, மூச்சிரைக்க உட்கார்ந்திருந்த மைக்கேலை அழைத்தான்.

“என்னடா?” – மைக்கேல்.

“மரம் வளர்ந்துக்கிட்டே போகுதோ?”

“ஏன் கேட்கிற?”

“கீழே எதுவுமே தெரியலை. மேல வானம் தெரியுது பாரு”

ரோமியோ சொன்ன பிறகே, மைக்கேல் அன்னாந்து ஆகாயம் பார்த்தான். வெண்ணிற மேகங்கள் தேர் போல மிதந்து போவது தெரிந்தது.

“நீ சொல்றது கரெக்ட் ரோமியோ”

இருவருக்கும் மலரைத் தேடிய மும்முரத்தில், மரத்தின் வளர்ச்சியைக் கண்டு கொள்ள இயலவில்லை.

‘இன்னும் உயரம் செல்ல வேண்டுமா?’ என்று மைக்கேல் நினைக்கையில், மீண்டும் ரோமியோவிடமிருந்து ஒரு அழைப்பு.

“மைக்கேல்”

“என்ன ரோமியோ?”

“உனக்கு பின்னாடி பூ இருக்குடா”

“பூவா?”

“ம்ம்ம், அதை எடுத்துப் பாரு. அதுக்குள்ளதான் காயின் இருக்கு”

மைக்கேல் லேசாகத் திரும்பிப் பார்த்தான். சற்றுத் தள்ளி பூ இருந்தது தெரிந்தது.

“போ… போய் எடுடா?” என்று ரோமியோ அழுத்திச் சொன்னான்.

“எனக்கு இதுக்கு மேல போக பயமா இருக்கு ரோமியோ. நீவேணா வந்து எடுத்துக்கோ” என்று மைக்கேல் இறங்க ஆரம்பித்தான்.

ரோமியோவிற்கு வியப்பாக இருந்தது.

“மைக்கேல் நில்லுடா?” என்று சொல்லிப் பார்த்தான்.

மைக்கேல் நிற்கவில்லை.

“மைக்கேல் ஏன் இப்படிப் பண்ற?” என்று சற்று சத்தமாகவே கேட்டான்.

மைக்கேல் இறங்குவதிலே முனைப்புடன் இருந்தான்.

‘இதற்கு மேல், என்ன செய்ய?’ என நினைத்து, ரோமியோ தன் பக்கத்திலிருந்து, அந்தக் கிளைக்குப் போனான். மெது மெதுவாக ஊர்ந்து பூவின் அருகில் சென்றான். அதைத் துரத்த வேண்டாம் என நினைத்து, ‘என்ன செய்தால்?’ நாணயம் கிடைக்கும் என யோசித்தான்.

பின், “பொக்கிஷப் பேழை, கடைசி கல் நாணயம்” என்று சொல்லிப் பார்த்தான்.

ஜங்கோண வடிவ பூ, ஒவ்வொரு மடலாக விரிந்தது! உள்ளே வெள்ளை கல் நாணயம் இருந்தது. எடுத்துக் கொண்டான்.

‘நாணயம் கிடைத்த’ சந்தோசத்துடனும், ‘மைக்கேல் ஏன் இப்படிச் செய்தான்?’ என்ற சந்தேகத்துடனும் ரோமியோ கீழே இறங்கி வந்தான்.

அவர்கள் இருவரும் தரையில் கால் வைத்ததும், அடுத்த மாயம் நிகழ்ந்தது!

உதிர்ந்த பூக்களெல்லாம் தரையிலிருந்து பறந்து சென்று, மரத்தின் மேல் ஒட்டிக் கொண்டன!

*****

கீழே வந்ததும், தனம் மைக்கேலைப் பார்த்து, “காயின் கிடைச்சதா?” என்று கேட்டாள்.

“எனக்கு கிடைக்கல. ரோமியோவுக்குத்தான்” என்றான் வருத்தமாக!

“ஓ! சரி விடு. யாருக்குச் சாவி கிடைக்கப் போகுதோ, அவங்கதான் லக்கி” என்று சொல்லி, விட்டுவிட்டாள்.

தனக்காக மைக்கேல் தேடப் போனதே தனத்திற்குப் பெரிய விடயமாகத் தோன்றியது. ஆதலால் நாணயம் கிடைக்காதது, அவளுக்கு வருத்தமளிக்கவில்லை.

ஆனால் மைக்கேல் ஒரு மாதிரி கலங்கி நின்று கொண்டிருந்தான்.

அதைக் கண்ட தனம், “விடு மைக்கேலு” என்று தோள்களில் அடித்து சிரித்தாள்.

மைக்கேலும் சிரித்து வைத்தான்.

மற்றொரு புறம்…

கீழே இறங்கியதிலிருந்து, ரோமியோ மைக்கேலை சந்தேகத்துடனே பார்த்திருந்தான்.

“ரோமியோ” – ஸ்வீட் ஹார்ட்.

“ஆங் ஸ்வீட் ஹார்ட்!” என்று அழைத்து, “நீயும் தனமும் முன்னாடி போய்கிட்டு இருங்க. நாங்க பின்னாடி வர்றோம்” என்றான்.

“எதுக்கு ரோமியோ? எல்லோரும் சேர்ந்தே போகலாமே??” – ஸ்வீட் ஹார்ட்.

“அதான…” – தனம்.

“ஒரு அஞ்சு நிமிஷம்… போங்களேன்” என்று அவர்களை அனுப்புவதிலே முனைப்பாக இருந்தான்.

“சரி” என்று தனம் நடக்கத் தொடங்கினாள்.

இன்னும் ஸ்வீட் ஹார்ட் நின்று கொண்டே இருந்தாள்.

“ஸ்வீட் ஹார்ட்!! நீ தனம் கூட போ. நான் கொஞ்ச நேரத்தில வர்றேன்” என்று அழுத்திச் சொன்னான்.

ஸ்வீட் ஹார்ட்டோ, ‘ரோமியோவுக்கு என்னாச்சு? ரொம்ப நேரமாவே நல்லா பேசலையே?’ என்று யோசித்துக் கொண்டே, தனத்தின் பின்னே நடக்க ஆரம்பித்தாள்.

பெண்கள் இருவரும் சென்ற பின்,

ஆராயும் பார்வைகள் கொண்டு, ரோமியோ மைக்கேலை பார்த்தான்.

“என்ன ரோமியோ? எதுக்கு இதெல்லாம்? நாமளும் அவங்களோட போயிருக்கலாமே?” என்ற மைக்கேல் ரோமியோவின் பார்வையைத் தவிர்த்தான்.

“நீ ஏன்டா எனக்கு விட்டுக் கொடுத்த?”

“ஐயோ! அப்படியெல்லாம் இல்லை ரோமியோ” என்று மழுப்பினான்.

“எனக்குத் தெரியாதா? பின்னாடி இருக்கிற பூவை போய் எடுக்க முடியாதா?”

“அது… அது…”

“எதுக்குன்னு சொல்லு மைக்கேல்? இல்லைன்னா நான் தனத்துகிட்ட சொல்லிடுவேன்”

“ரோமியோ அப்படி எதுவும் செஞ்சிடாதடா”

“அப்போ சொல்லு”

“அது வந்து…” என்று தயங்கினான்.

“நான் தனத்தை கூப்பிடறேன்” என்று போகப் போனவனின் சட்டையைப் பிடித்து மைக்கேல் நிறுத்தினான்.

ஆனாலும் பேசாமல் நின்றான்.

“சொல்லு மைக்கேல்??”

“சொல்றேன். நீ என்னோட உயிரைக் காப்பாத்தினேல?”

“ஆமா… அதுக்காகவா?” என்று ரோமியோ ஆச்சரியமாகக் கேட்டான்.

“ம்ம்ம், அதோட போன தடவை புக் உன்னோடது. காயின் உனக்குத்தான் கொடுத்திருக்கணும். ஏன்? நீ நினைச்சிருந்தா, காயின என்கிட்டருந்து வாங்கியிருக்கலாம். ஆனா நீ தனத்துக்கு விட்டுக் கொடுத்த. சரிதான?” என்று கேள்வி கேட்டு நிறுத்தினான்.

“ம்ம்ம்”

“எனக்கு உங்க ரெண்டு பேரையும் பிடிக்கும். என்னால முடிஞ்சது ஆளுக்கு ஒரு கட்டத்தில ஹெல்ப் பண்ணிட்டேன். இனி சாவியை எடுக்கிறது உங்க சாமர்த்தியம்” என்று முடித்தான்.

தனக்கும் மைக்கேலுக்கும் சிறு சிறு போட்டிகள் உண்டு. ஆனால் தனத்திடம், தான் காட்டிய எதிர்ப்பை, மைக்கேலிடம் காட்டியதில்லை என்று ரோமியோவுக்குத் தெரியும்.

இங்கு வந்த பிறகு ரோமியோவின் மனம், மைக்கேலை ஒரு நல்ல நண்பனாகவே உணர ஆரம்பித்தது.

அதை உறுதி படுத்துவது போல் இருந்தது, மைக்கேலின் இந்தச் செய்கை!

“ரோமியோ… தனத்துக்கு இது தெரிய வேண்டாம். தெரிஞ்சா அவ்ளோதான்” என்று கெஞ்சினான்.

“….”

“இப்போதான் கொஞ்சம் இறங்கி வந்து பேசறா… அதான்டா சொல்லிடாத”

ரோமியோ சிரித்துக் கொண்டே, “ம்ம்ம், சரி சரி வா. சொல்ல மாட்டேன்” என்று சொல்லித் திரும்பும் போது, அங்கே தனம் நின்றிருந்தாள்.

இருவருக்கும் அதிர்ச்சி!

error: Content is protected !!