ENV-5A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 5(1):

அடுத்த இரண்டு வாரம் உருண்டோடியது. அவளிடம் பேச அஜய் வருவான் என்று எதிர்பார்த்தாள் கவிதா. ஆனால் அவன் கண்ணில் படவே இல்லை. இவள் மனதில் அவன் முகமே அடிக்கடி வந்துகொண்டிருந்தது.

முடிவெடுத்தாள்… அவளே சென்று அவனிடம் பேச. அவன் எப்பொழுதும் போல் பயிற்சியில் இருந்தான்.

பூனை போல் எட்டிப்பார்த்தாள் கவிதா.

பாக்சர்’ருக்கே உரிய உடற்கட்டு. நல்ல உயரம். அகல விரிந்திருந்த தேகம். இறுகியிருந்த பைசெப்ஸ். வேர்வைப் பூத்திருக்க… கூரிய கண்களுடன் பாக்ஸிங் பேக்கை (boxing bag) முரட்டுத்தனமாகக் குத்திக்கொண்டிருந்தான்.

அவனின் அசைவுகளை மறைந்திருந்து ரசித்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் இவள் எட்டி எட்டிப் பார்ப்பதை அவனும் பார்த்துவிட்டான்.

மெதுவாக அவன் அருகே செல்லும்போது தலை லேசாகச் சுற்றுவதுபோல் இருக்க வழியிலேயே மயங்கிவிட்டாள்.

இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அஜய், பதறிக்கொண்டு அருகில் சென்றான்.

“ஹே என்னாச்சு எந்திரி… ஏய் எந்திரி…” என்று கத்த பதில் இல்லை. கன்னத்தைத் தட்டி “ஏய் கவி என்னாச்சு… எந்திரி கவி” என்று பதத்துடன் எழுப்ப முயற்சிக்க… அவள் எழும்பவில்லை.

ஏதோ தோன்ற அங்கிருந்து ஓடி அவனுடைய தண்ணீர் பாட்டில் எடுக்கச் சென்றான். அவள் மெதுவாக ஒற்றைக் கண் திறந்து பார்த்தாள். அவன் பதட்டமாகப் பாட்டில் எடுக்கச் சென்றிருந்தான்.

‘என்னயா கடுப்படிக்கற… மவனே… இவளோ பதட்டப்படறயே நீ… சரியில்லையே… அதுவும் கவி கவி’னு ஷார்ட் நேம் வேற’ என நினைத்துச் சிரிப்பை அடக்கிக்கொள்ள, அவன் பாட்டில் எடுத்துக்கொண்டு திரும்ப, சட்டென நேராகப் படுத்துக்கொண்டாள்.

அவன் திரும்பும்போது ஏதோ அசைவு அவளிடம் தெரிய, புருவத்தைச் சுருக்கினான்.

பின், ‘ச்ச… ச… இருக்காது… பாவம்’ என அவசரமாக அவள் பக்கத்தில் மண்டியிட்டு அவளைத் தூக்கி சரிவாக அவன் கால் மேல் சாய்த்துக்கொண்டான் தண்ணீர் தெளித்து, அவளுக்குத் தண்ணீர் கொடுக்க…

அவன் செய்த இந்தச் செயலில் நடித்துக்கொண்டிருந்த கவி, சற்று கூச்சமும், பதட்டமும் அடைய, மூடியக் கண்ணிமைக்குள் கண்மணிகள் அலைப்பாய்ந்தது.

தண்ணீர் தெளிக்க அவளின் முகத்தைப் பார்த்தவன், மூடிய கண்கள் அசைவதைப் பார்த்துவிட்டான்.

‘அடிப்பாவி… நடிக்கறயா… நீ fraud’டே தான்…’ அவளைக் கண்கள் அகல பார்த்தவனின் இதழ் புன்னகைத்தது. ‘என்கிட்டயேவா…’ என நினைத்துக்கொண்டு…

போன் பேசுவதுபோல் “ஹலோ… டேய்… கவிதா என்ன பாக்க வந்தா. திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா…” இரு நொடி மௌனம் காத்தான்… “தண்ணி தெளிச்சுப் பாத்துட்டேன் டா… எந்திரிக்க மாட்டேங்கறா…” சில நொடிகள் நிறுத்தினான்.

‘அடேய்… நீ தண்ணியே ஊத்தலையே… பொய் சொல்றயா…’ கவிதா மனதில் நினைக்க, அவன் “டேய் நான் போய் எப்படி… அதெல்லாம் சினிமால தான் பாத்துருக்கேன்…” என்று நிறுத்தி அவள் முகம் பார்த்தான்.

கண்ணிமைகள் இன்னும் வேகமாகப் படபடத்தது. அதைக் கண்டவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘ஐய்யோ இவன் ஏதோ ப்ளான் பண்றான். கவி நீ நடிக்கறத அவன் கண்டுபிடிச்சுட்டான் போல. சமாளி…’ என்று யோசிக்கும்போது, அவன் பேச்சு முற்றிலுமாக நின்றிருந்தது.

‘ஐயோ ஏதாச்சும் பண்ணிடப்போறன்’ என நினைத்தவள் சட்டென முழித்து “ஏய் அஜய்… புளுகுமூட்டை… நீ தண்ணியே தெளிக்கல… ஏன் பொய் சொன்…” என்று அவனை நன்றாகக் கண்திறந்து பார்க்க, அவன் கையில் போன் இல்லை.

கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு, அவளைப் பார்த்துச் சிரித்தான்…

அவன் முகத்தில் தெரிந்த அந்தச் சிரிப்பு, அவளை நன்றாகவே தடுமாறச்செய்தது. அவள் முகத்தில் வெட்கமா? இல்லை பதட்டமா? என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் இதயம் வேகமாக அடித்தது.

அவன் மடியில் சரிந்திருப்பதை அப்போது உணர்த்த கவிதா, எழ எத்தனிக்க… அவன் அவள் எழுவதைத் தடுப்பதற்குத் தோள்பட்டையைப் பிடிக்க முயற்சிக்க… அவள் எழுந்தவேகத்தில், குறி தவறி, தோளில் இருந்த சுடிதாரை இழுத்துவிட்டுவிட்டான்.

இவன் பாக்சர் என்பதற்காக இவ்வளவு அழுத்தமாகவா இழுக்கவேண்டும். அவள் சுடிதார் பின்பக்கமாக இரண்டு இன்ச் கிழிந்துவிட்டது.

அவன் செய்த காரியத்தை உணர்தவன் “ஷீட்… சாரி கவி… நான் வேணும்னு பண்ணல” எழுந்து அவள் அருகில் சென்றவன் அவளைப் பார்க்க முடியாமல் திரும்பிக்கொள்ள, “லூசா நீ… நான் எப்படி க்ளாஸ்க்கு போக முடியும் இதோட” என்றாள் கோபமாக.

காதல் கிறுக்கு முற்றிவிட்டது. அவன் செய்த தவறுக்காகக் கோவப்பவில்லை. எப்படி இத்தோடு செல்வது என்று கோபித்துக்கொண்டாள்.

“ஐம் ஸாரி… நான் நெஜம்மா தப்பான எண்ணத்துல செய்யல… நான் வேணும்னா உன்ன ஹாஸ்டேல்க்கு கூட்டிட்டு போறேன். டிரஸ் மாத்திட்டு வந்துடலாமா?” என நிஜமாகவே செய்தத் தவறுக்காக வருந்தி கேட்க ‘சரி’ என்பது போல் தலையசைத்தாள்.

அவசரமாக அவன் அணிந்திருந்த பாக்ஸிங் வெஸ்டின் மேல் சட்டையை அணிந்துகொண்டு, அவள் பின்னே நடந்து சென்றான், கிழிந்தது யாரும் பார்த்துவிடக்கூடாதென்று.

பார்க்கிங் சென்றவுடன், அவன் தோழியை அழைத்தான். அவள் வந்து அவளின் ஷாலை கவிதாவுக்குத் தர, அதைப் போர்த்திக்கொண்டு, அவன் பைக்கில், அவன் பின்னே உட்கார்ந்து கொண்டாள்.

இருவரும் மற்றவரின் நெருக்கத்தை ரசித்தனர். “கவி…” என்றழைத்தவுடன், கவிதா “அஜய் நேரா போய் லெஃப்ட்’ல மெயின்ரோடு போ… நான் வழி சொல்றேன்”

“எனக்கு வழி தெரியும் இனி …” என்றான் பைக்கின் கண்ணாடிவழியே அவளைப் பார்த்துக்கொண்டு.

திகைத்துப் பார்த்தாள் அவள். அவனுக்கு எப்படி வழி தெரியும் என்று யோசிப்பதா? இல்லை இனி… என்று அழைத்ததை யோசிப்பதா? சிந்தனைகள் பலவாறாகப் பறக்க…

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் இனி…” அவன் சொல்ல அவனைக் கண்ணாடிவழியே பார்த்தாள்.

“உன்ன ஃப்ரஸ்ட் டைம் பாத்தப்ப உன்னோட குறும்பு தனம் ரொம்ப அழகா இருந்துச்சு. என்கிட்டயே நீ என்னோட கேர்ள் ஃபிரன்ட்டானு கேட்கச்சொன்னப்ப, சிரிப்பு தான் வந்துச்சு”

“நார்மலா ராக்கிங் பண்ணா… ஒன்னா பயந்து சொல்றத செய்வாங்க இல்ல, நான் போய்க் காம்ப்லைன் பண்றேன்னு சொல்வாங்க. நீ பெருசும் படுத்தலை, பெருசாவும் எடுத்துக்கல… நீ பண்ணது க்யூட்டா இருந்துச்சு எனக்கு”

நிறுத்தி அவள் முகம் பார்த்தான். அவள் இதழோரம் புன்னைகையுடன், அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள் தன் முகமாற்றதைக் காட்டாமல்..

அவன் அவளின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுத் தொடர்ந்தான்…

“அப்பறம் அடுத்தநாள், நீ மேட்ச் பாக்க என் முன்னாடி வந்து நின்னப்ப, நான் பாத்தேன். நீ முந்தின நாள் என்கிட்ட பேசினது நியாபகம் வர, என்ன மறந்து உன்னயே பாத்துட்டு இருந்துட்டேன். விடுவானா அப்போனன்ட்… செம்ம அடி குடுத்துட்டான்”

“அப்பவும் உன்ன பாத்தேன். என்ன கவனிக்காம, நீ ஏதோ உனக்குள்ள பேசிட்டு இருந்த… என்ன பாக்கலன்னு கோவம்… ஏன் அந்த கோவம்னு எனக்கு தெரில… அப்போ இன்னொரு அடி வாங்கி ரத்தம் வர ஆரம்பிச்சுடுச்சு”

“சுதாரிச்சுட்டேன்… உன்ன பாத்துட்டு இருந்தா நான் கேம்ல கான்செண்ட்ரேட் பண்ணமுடியும்ன்னு தோணல. அதுதான் உன்ன போ சொன்னேன்… ஸாரி இனி.. உனக்கு எவளோ கஷ்டமா இருந்துருக்கும்ன்னு தெரியும்… ஐம் சோ ஸாரி” கெஞ்சலாகக் கேட்டான் கண்ணாடி வழியாக.

“ஹ்ம்ம். சரி சரி… இவளோ ஸாரி கேக்கற… உன்ன மண்ணிக்கறத பத்தி நான் யோசிக்கிறேன்… மேல சொல்லு” என்றாள் புன்னகையுடன்.

பதிலுக்குப் புன்னகைத்தவன் “அப்பறம் உன்ன பாக்க உன் க்ளாஸ்க்கு போனேன்… நீ இல்ல… ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. என்னால தான் நீ வரலனு தெரியும்…”

“அன்னிக்கி நைட் முழுசா தூங்கவே முடில. உன் ஞாபகமாவே இருந்தேன். உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு…”

“அப்போ திடீர்னு ஒன்னு தோணுச்சு… நான் ஏன் உன்னைப்பத்தி இவளோ யோசிக்கறேன்னு…”

“நீ என்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்க சொன்ன அந்தக் கேள்விக்கு எனக்கு பதில் கிடைச்சது… உன்கிட்ட ஏதோ ஒன்னு எனக்கு பிடிச்சுருக்கு, வெறும் ஃபிரன்ட்டா உன்ன நினைக்க முடியாதுன்னு…”

“இந்த பார்த்தவுடனே காதல் … இதெல்லாம் இதுவரைக்கும் எனக்கு வந்ததில்லை. பட் ஒரு குட்டி அட்ராக்ஷன் உன்மேல வந்துச்சு. ஒரு நூலிழை காதலாக்கூட இருக்கலாம்ன்னு தோணுச்சு” என அவன் சொன்ன போது அவள் மனம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.