Poo03epi

Poo03epi

கோயிலிலிருந்து வந்த கையோடு இருவரும் பல்லவி வீட்டிற்குக் கிளம்பி விட்டார்கள். மறுவீட்டு விருந்து என்றபோதும் பெரிதாக எதுவும் செய்ய மாதவன் விடவில்லை. 

மறுவீட்டு விருந்திற்கு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் சீர் வரிசைகளோடு பெண்வீடு செல்வதுதான் அவர்கள் முறை. ஆனால் மாதவன் அதற்குப் பிடி கொடுக்கவில்லை. அன்றே வீடு திரும்பி விடுவது என்று அறிவித்து விட்டான். 

கல்யாணத்தின் போதும் அப்படித்தான். பெண் வீட்டு சீரென்று எதையும் அவன் பெற்றுக் கொள்ளவுமில்லை.

பல்லவியின் முகம் கொஞ்சம் சுருங்கிப் போனது. ஏனப்படி? அவர்கள் வீட்டில் நான் வந்து காலம் முழுவதுக்கும் வாழ வேண்டும். ஒரு நாள் அவர்கள் வீட்டில் அவன் தங்க மாட்டானாமா? லேசாகக் கோபம் கூட வந்தது.

“இன்னைக்கு நைட் எங்க வீட்டுல தங்கலாமே?” அவர்கள் ரூமிற்குள் வந்தவனிடம் லேசாக நூல்விட்டுப் பார்த்தாள். லேசான சிரிப்போடு அவன் நகரப் போனான்.

“உங்களைத்தான் கேட்டேன்.” இப்போது நின்றான் மாதவன்.

“ஏற்கனவே நிறைய வேலைப் பாக்கி இருக்கு பல்லவி.”

“இன்னைக்கு ஒரு நைட் தங்குறதால என்ன ஆகிடப் போகுது?” விடாமல் வாக்குவாதம் பண்ணிய மனைவியைப் பார்த்து எதையோ சொல்லாமல் தவிர்ப்பதைப் போல நின்றிருந்தான் கணவன்.

“எதையோ சொல்லத் தயங்குறீங்க. இல்லை… மறைக்கிறீங்களா?”

“உங்கிட்ட மறைக்க எங்கிட்ட எதுவுமே இல்லை பல்லவி. சில விஷயங்கள் மறைவா இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு.”

“பரவாயில்லை… சொல்லுங்க.”

“பிடிக்கலை பல்லவி.”

“எது? எங்க வீடா?”

“இல்லை… உங்கப்பா.”

“ஓஹ்… அவர் பெத்த பொண்ணை மட்டும் பார்த்த உடனேயே பிடிச்சுதோ?” அவள் கண்ணில் இப்போது குரோதம்.

“இதுக்குத்தான் இதைப்பத்திப் பேச வேணாம்னு சொன்னேன்.”

“அதான் ஒளிவு மறைவு இல்லைன்னு சொல்லிட்டீங்க இல்லை. அதுக்கப்புறமும் என்ன?” 

“பல்லவி… நேத்து நாம பேச ஆரம்பிச்சதுல இருந்து சண்டை மட்டும்தான் போட்டுக்கிட்டு இருக்கோம்.”

“இதைக் கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க யோசிச்சிருக்கணும்.” முகத்தை ஒரு தினுசாக வைத்துக் கொண்டு சொன்னாள் பெண். மாதவன் அதைப் பற்றி அதற்கு மேல் தர்க்கிக்கவில்லை.

“பொறுப்பில்லாத ஒரு மனுஷனை எனக்குப் பிடிக்கலை. அவ்வளவுதான். அந்த வீட்டுல அவரைத் தவிர்த்து இன்னும் மனுஷங்க இருக்காங்க. அவங்களையெல்லாம் எனக்குப் பிடிக்குது.”

“பொறுப்பில்லாத மனுஷனாவே இருந்துட்டுப் போகட்டும். ஆனா அவர் ஒரு நல்ல அப்பா. அதை ஞாபகம் வச்சுக்கோங்க.”

“பல்லவியோட அப்பா. அதுமட்டுந்தான் அவருக்கான மரியாதை.”

“இங்கப்பாருங்க…” பல்லவி ஆத்திரமாக ஏதோ சொல்ல ஆரம்பிக்க அவளருகில் வந்தான் மாதவன். வார்த்தைகள் பாதியிலேயே நின்றது பெண்ணுக்கு.

“உங்கப்பாவைக் குறைச் சொன்னா உனக்குப் பிடிக்காது, கோபம் வரும். எனக்கும் அது தெரியும். அதாலதான் அமைதியா இருந்தேன். விட்டுடு பல்லவி. இதை வெச்சு நமக்குள்ள இன்னொரு மனஸ்தாபம் வேணாம்.”

“உங்களுக்கு என்ன தெரியும் எங்கப்பாவைப் பத்தி?”

“எதுவும் தெரிய வேணாம். தெரிஞ்சுக்கவும் விரும்பலை. பல்லவியோட அப்பா. அது மட்டும் எனக்குப் போதும்.” சொல்லிவிட்டு அவன் நகரப் போக அவளுக்கு அவனை எப்படி நிறுத்துவதென்று புரியவில்லை.

‘ஆமாம்… இவனை எப்படி நான் அழைப்பது?’ அந்த இரண்டு நொடிகளுக்குள் அவள் மனது ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தி முடித்தது.

“ஏங்க! நான் உங்களை எப்படிக் கூப்பிடறது?” அந்தக் கேள்வியில் இப்போது அவன் கண்கள் மீண்டும் சிரித்தது. கதவிற்கு அருகில் நின்றபடியே திரும்பிப் பார்த்தான்.

“எப்படி வேணாக் கூப்பிடு.”

“பெயர் சொல்லிக் கூப்பிடட்டுமா?”

“கொன்னுடுவேன்!” வார்த்தைகளில் இருந்த காரம் முகத்தில் மருந்திற்கும் இருக்கவில்லை. பதிலைச் சொல்லிவிட்டு இப்போதும் சிரித்தான்.

“அப்படியா? பரவாயில்லை… அப்போ நான் ரெடியாகிறேன் மாதவன்.”

“அடிங்…” சொன்னவளை நோக்கி அவன் இரண்டெட்டு நடக்க கலகலவென்று சிரித்தபடி பாத்ரூமிற்குள் போய் ஒளிந்து கொண்டான் பல்லவி. மாதவன் முகத்தில் இப்போது மலர்ச்சியான சிரிப்பு. தலையை ஆட்டியபடி கீழே போய்விட்டான்.

பல்லவி வீட்டில் இருவருக்கும் நல்ல வரவேற்பு. ஆனால் தியாகராஜன் முகம்தான் சுண்டிப் போயிருந்தது. மாதவன் எதையும் கண்டு கொள்ளவே இல்லை. போனான், துளசியோடு கொஞ்ச நேரம் அவள் படிப்பைப் பற்றிப் பேசினான். மாமியார் பரிமாற உண்டான். சிறிது நேரம் ஓய்வெடுக்கவென்று மனைவி காட்டிய அறையில் படுத்துக் கொண்டான். மாலையில் காஃபி குடித்த கையோடு புறப்பட்டு விட்டான்.

“மாப்பிள்ளை… இன்னைக்கு இங்கத் தங்கிப் போகக் கூடாதா?” சரோஜா தயங்கியபடி கேட்கவும் அதற்கும் ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான். பல்லவிக்குக் கோபம் கோபமாக வந்தது. இருந்தாலும் அமைதியாக இருந்துவிட்டாள்.

அந்த ஸ்கோடா மாதவனின் ஊரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மனைவியின் முகத்தில் இருந்த அதிருப்தி கணவனுக்கும் புரிந்தது. எதுவும் பேசாமலேயே வந்தவன் இப்போது வாயைத் திறந்தான்.

“கோபமா இருக்கியா பல்லவி?”

“அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க? எல்லாமே உங்க மனசுப் பிரகாரந்தானே நடக்குது.”

“புரிஞ்சுக்கோ பல்லவி. உங்கப்பாவை எனக்கு எப்படிப் பிடிக்காதோ அதேமாதிரி உங்கப்பாக்கும் என்னைப் பிடிக்காது.”

“அதை அவர் உங்கக்கிட்ட வந்து சொன்னாரா?”

“சொல்லாமலேயே புரிஞ்சுது.”

“நீங்களா எதையாவது கற்பனைப் பண்ணிக்காதீங்க.”

“ஆயிரந்தான் இருந்தாலும் உங்கக்கா புருஷன் மாதிரி நான் இல்லைத்தானே?” சொன்னவனைச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் பல்லவி. 

என்ன மாதிரியான வார்த்தைகள் இவை? அக்கா ஜெயாவின் கணவர் மனோகர் மிகவும் நல்ல மனிதர்தான். மனைவியின் இரு தங்கைகளிடமும் மரியாதையாக நடக்கும் அன்பான அத்தான்தான். அதற்காக? அவரை விட எந்த வகையில் இவன் குறைந்து விட்டான்?!

“பேங்க்ல வர்க் பண்ணுறாரு. நல்லாப் படிச்சிருக்காரு. என்னதான் காசு பணம் இருந்தாலும் நான் வயக்காடுதானே பல்லவி? விவசாயிதானே… உங்கப்பாக்கு என்னை எப்படிப் பிடிக்கும்?”

‘அப்போ எனக்கு மட்டும் உன்னை எப்படிப் பிடிக்கும்னு நினைச்சே?’ நாக்கு நுனி வரை வந்த கேள்வியை அடக்கிக் கொண்டாள் பல்லவி. 

“உம்மனசுல இப்போ என்ன ஓடுதுன்னு எனக்குப் புரியுது பல்லவி. அந்த இடத்தில நான் கொஞ்சம் சுயநலமா யோசிச்சுட்டேன். உன்னை விட்டுக் குடுக்கத் தோணலைம்மா.” இடது கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி அவனது வலது கை இப்போது அவன் பிடரியைத் தடவியது. அவன் ஆசையைச் சொல்லும்போது அந்த முகத்தில் லேசாக ஒரு வெட்கம் வந்து போனது. பல்லவி அவனையே பார்த்திருந்தாள். 

தோற்றத்தில் கொஞ்சம் முரடன் போலத்தான் தெரிந்தான். இந்த இரண்டு நாட்களில் அவன் யாரிடமும் அதிகம் பேசி அவள் பார்க்கவில்லை. ஆனால் தன்னிடம் காட்டும் இந்த மென்மை?! மனைவி என்று வந்துவிட்டால் எல்லா ஆண்களும் இப்படித்தான் இருப்பார்களா? முகமூடி அங்கே தொலைந்து போகுமா? மென்மையைக் காட்டும் அதே மனைவியிடம் தங்கள் முரட்டுத்தனத்தையும் ஆண்கள் காட்டத் தவறுவதில்லை என்று அப்போது பல்லவிக்குத் தெரியாது.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. ஏன்? விவசாயின்னா என்னக் குறைச்சலா? அப்போ படிச்சவங்க மட்டுந்தான் உசத்தியா?” தன்னை அறியாமலேயே அவள் பேசிக் கொண்டிருக்க இடது கையால் இப்போது அவள் கரத்தைப் பற்றினான் மாதவன். முகம் முழுவதும் ஒரு பரவசம் தெரிந்தது.

ஆனால் பல்லவி தன் கரத்தை மெதுவாக இழுத்துக் கொண்டாள். மாதவனின் நெற்றி லேசாகச் சுருங்கிய போதும் விட்டுவிட்டான். அவளை எதற்கும் வற்புறுத்தவில்லை.

*** 

அடுத்த நாளே அற்புதா வீட்டில் மணமக்களுக்குப் பெரிய விருந்து. காலையிலேயே பவானி மகள் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார். கூடமாட ஒத்தாசைப் பண்ண வேண்டும் என்று வாணியையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

மாதவனும் பல்லவியும் கிளம்பும்போது சோமசுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு போனார்கள்.

அற்புதாவின் கணவர் வழி ஜனக்கட்டு கொஞ்சம் அதிகம் போலும். வீடு முழுக்க ஜேஜே என்று இருந்தது. பல்லவிதான் கொஞ்சம் திணறிப் போனாள். போகுமிடமெல்லாம் இப்படித்தான் கூட்டம் வழிந்தது.

மணப்பெண்ணைப் பார்க்கிறோம் என்று ஒவ்வொருவராக வந்து எட்டி எட்டிப் பார்த்துவிட்டுப் போக அவளுக்கு என்னவோ போலிருந்தது. 

ஆனால் அற்புதா அவளை அருமையாகக் கவனித்துக் கொண்டார். தன்னை விட இளையவள் என்பதால் நீ, வா, போ என்று பேசினாலும் மரியாதையாக மதினி என்றுதான் இவளை அழைத்தார். அவர்கள் வழக்கம் அதுதானாம்.

“ரொம்ப அழகா இருக்கே மதினி. மாது கண் உன்னை விட்டு அங்கே இங்கே அசையுதா பாரேன்!” தூரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த தம்பியைக் கண்ணால் காட்டியபடி பேசினாள் அக்கா.

அற்புதாவிற்கு இருபது வயதிலேயே கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டார்கள். பன்னிரெண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. அது கூட இவளோடு அத்தை என்று ஒட்டிக் கொண்டது.

“ஜானவிக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருக்காம் மதினி. நேத்துல இருந்து ஒரே அத்தைப் புராணந்தான்.” அம்மா தன்னைப்பற்றி அத்தையிடம் சொல்லவும் அந்தக் குழந்தை அழகாக வெட்கப்பட்டது.

பல்லவியும் புன்னகைத்தவள் ஜானவியை அழைத்துத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள்.

“மாமா சொன்னாங்க உங்களுக்கு நிறைய கம்பியூட்டர் தெரியுமாம்.” இது ஜானவி. 

“ம்… கொஞ்சம் தெரியும் ஜானவி.”

“இல்லை அத்தை… நீங்க கம்பியூட்டர்ல ப்ரோக்ராம் எல்லாம் எழுதுவீங்கன்னு சொன்னாங்க. மாமா எனக்கு ஒரு கம்பியூட்டர் வாங்கிக் குடுத்திருக்காங்க. கொஞ்சம் பெரிய கிளாஸ் போனதும் நானும் அதெல்லாம் உங்கக்கிட்டக் கேட்டுப் படிக்கலாம்னு சொன்னாங்க அத்தை.”

“இதெல்லாம் எப்போடி நடந்தது? பார்த்தியா மதினி… இந்தக் கல்லுளிமங்கன் எங்கிட்ட உன்னைப் பத்தி ஒரு வார்த்தை பேசினதில்லை. அம்மாக்கிட்ட மூச்சே விடலை. இந்தப் பெரிய மனுஷிக்கிட்ட எவ்வளவு பேசி இருக்கான்!” அற்புதா வெகுவாக ஆச்சரியப்பட்டார்.

“மாது ரொம்பப் பேசமாட்டான் மதினி. சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். அம்மாக்கிட்டக் கூட ஜாஸ்தி பேசமாட்டான். அப்பாக்கு உடம்புக்கு முடியாமப் போனதுல இருந்துதான் இவ்வளவாவது பேசுறான். ஆனாப் பொறுப்பான புள்ளை.” எல்லோரும் கலைந்த பிறகு அமைதியான தனிமையில் தம்பி மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார் அற்புதா.

“மேல படிக்காம விவசாயத்துல இறங்கிட்டான். அது ஒன்னு மட்டுந்தான் எனக்கு இப்போக் கவலை. ஆனா அப்போ எங்க ஊர்ல டிகிரி முடிக்கிறதுதான் பெரிய படிப்பா இருந்துச்சு. அதால யாரும் அதைப் பெரிய குறையா நினைக்கலை. ஆனா இப்போ உன்னைப் பார்க்கும்போது தம்பியையும் நாம இன்னும் கொஞ்சம் ஊக்கப்படுத்தி இருக்கலாம்னு தோணுது.” இதற்கு என்ன பதில் சொல்வதென்று பல்லவிக்குத் தெரியவில்லை.

“ஏன் மதினி? நீ அதை ஒரு குறையா நினைக்கலேல்லை?” இப்போது பெண் திருதிருவென முழித்தாள்.

“அழகான பொண்ணு, படிச்சிருக்கே. டவுனுல வளர்ந்திருக்கே. உனக்கு என் தம்பியைப் புடிக்குமா?” அற்புதா குரலில் இப்போது கலக்கம்.

“கல்யாணத்துல கூட உம்முகம் அவ்வளவு சந்தோஷமா இருக்கலை. அம்மாக்கூட நேத்து எங்கிட்டப் பேசினாங்க. உங்களுக்குள்ள எதுவும் நடந்த மாதிரித் தெரியலைன்னு.” இப்போது திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பல்லவி.

“தப்பா எடுத்துக்காத மதினி. பெத்தவங்க இல்லையா? என்னைவிட அம்மாக்கு மாது மேலதான் பாசம் ஜாஸ்தி. இத்தனைக்கும் அவன் அம்மாக்கிட்ட எங்கிட்டப் பேசுற அளவுக்குக் கூடப் பேச மாட்டான். ஆனா அவனுக்கு என்னத் தேவைன்னு அம்மாக்கு சொல்லாமலே புரியும்.” அற்புதா தன்போக்கில் பேசிக் கொண்டிருந்தார்.

“பொண்ணு இதுதான்னு மாது உன்னைக் காட்டினப்போ நானும் அப்பாவும் கொஞ்சம் யோசிச்சோம். இந்த சம்பந்தம் சரி வருமான்னு. ஆனா அம்மா ஒரு பிடியா நின்னுட்டாங்க. எம்புள்ளைக்கு அந்தப் பொண்ணைத்தான் புடிச்சிருக்கு. அவதான் இந்த வீட்டு மருமகள்னு.” பல்லவி இப்போது பெயருக்குச் சிரித்து வைத்தாள்.

பெண்கள் இருவரும் இப்போது அற்புதாவின் படுக்கை அறையில் இருந்தபடிதான் பேசிக் கொண்டிருந்தார்கள். எழுந்து போன பெரியவள் அங்கிருந்த கப்போர்டைத் திறந்து ஒரு வெல்வெட் பெட்டியை எடுத்து வந்தாள்.

“உனக்குன்னு நாங்க வாங்கினது மதினி. ஜானவிதான் செலெக்ட் பண்ணினா. நல்லா இருக்கா? உனக்குப் பிடிச்சிருக்கான்னு பாரேன்.” அற்புதா நீட்டிய பெட்டியில் அழகான சிவப்புக் கற்கள் பதித்த நெக்லஸ் ஒன்றிருந்தது.

“எதுக்குங்க இவ்வளவு காஸ்ட்லியா?”

“பின்னே? எந்தம்பி பொண்டாட்டிக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறேன் நான்!” நொடித்துக் கொண்டவர் அவரே தன் கையால் நெக்லஸை பல்லவியின் கழுத்தில் போட்டு விட்டார்.

“அடேங்கப்பா! உன்னோட நிறத்துக்கு சிவப்புக் கல்லு சும்மா மினுங்குது மதினி. தம்பிக்கிட்டச் சொல்லி உனக்கு வைரத்துல நெக்லஸ் வாங்கச் சொல்லணும். வைரம் இன்னும் மின்னுமாமில்லை? ஆனா எங்கிட்ட அந்தளவுக்கு வசதி இல்லை மதினி.” சொல்லிவிட்டு வெள்ளை மனதாகச் சிரித்த அற்புதாவிடம் வீழ்ந்தே போனாள் பல்லவி.

இவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள்! அண்ணன் தம்பி மனைவிமாரிடம் பொறாமைப்படும் எத்தனையோ சீரியல்களை அவள் அம்மா பார்த்து இவளிடம் புலம்புவதுண்டு. ஆனால் இங்கே என்ன நடக்கிறது? 

தன் மகன் மேல் அவ்வளவு பாசத்தைக் கொட்டும் அம்மா தான் அவர் மகனுக்கு ஒரு மனைவியாக நியாயம் செய்யவில்லை என்று தெரிந்த போதும் எத்தனை நாகரிகமாக நடந்து கொண்டார்.

பட்டிக்காடு, கிராமத்தான்… அவளுக்குள் இருந்த பிம்பம் லேசாக ஆட்டம் காண பல்லவியின் கண்கள் இப்போது லேசாகக் கலங்கியது. 

“ஐயையோ! எதுக்கு மதினி கண்ணு கலங்குது?” அற்புதா பதறிக் கொண்டிருக்கும் போதே அந்த ரூமிற்குள் நுழைந்தார் பவானி.

“என்ன அற்புதா நடக்குது இங்க?” கேட்ட பவானியின் குரலில் அவ்வளவு கோபம்.

“நான் ஒன்னும் சொல்லலைம்மா.” 

“நீ ஒன்னும் சொல்லாமத்தான் அந்தப் புள்ளைக் கண்ணு கலங்குதா? நாத்தனார் புத்தியைக் காமிக்கிறியா?”

“அட ஆண்டவா! இதென்னடா வம்பா இருக்கு! நான் உன்னோட மருமகளை ஒன்னுமே சொல்லலைம்மா. இங்கப்பாரு… எவ்வளவு ஆசையா நகையெல்லாம் வாங்கிப் போட்டிருக்கேன்.”

“ஒன்னுமில்லை அத்தை.” கண்களைத் துடைத்துக் கொண்ட பல்லவி லேசாகச் சிரித்தாள். அப்போதும் பவானிக்குச் சந்தேகம் தீரவில்லை. மகளை ஒரு தினுசாகத்தான் பார்த்தார்.

“அநியாயத்துக்கு இவங்க மாமியாரும் மருமகளும் நல்லவங்களா இருக்காங்களே! கடைசியில நான்தான் இப்போ வில்லியா?” அற்புதா வேண்டுமென்றே பிலாக்கணம் விரிக்க பல்லவி இப்போது வாய்விட்டே சிரித்து விட்டாள். மருமகளின் சிரிப்புப் பார்த்து பவானியும் புன்னகைத்தார்.

“நல்லாப் பார்த்துக்கோம்மா. உம்மருமக சிரிச்சுட்டா. ஆத்தீ… ஊரு உலகத்துல இல்லாத மருமகளை இல்லை எங்கம்மா கண்டுட்டா!”

“வாயை மூடு அற்புதா!‌ நான் என்ன பத்து ஆம்பிளைப் புள்ளையா பெத்து வச்சிருக்கேன்? உள்ளதும் ஒன்னு. எனக்கு எம்புள்ளைப் பொண்டாட்டி பெருசுதான்.” பவானி சொல்லி முடிக்க மாமியாரின் தோளில் சாய்ந்து கொண்டாள் பல்லவி. ஏனோ அந்த மனிதர்கள் இப்போது வேற்று மனிதர்களாகத் தோன்றவில்லைப் பெண்ணிற்கு.

“ம்… நடத்துங்க நடத்துங்க.” அற்புதா சொல்ல மூன்று பெண்களுமே இப்போது சிரித்தார்கள்.

***

ஒரு மாதம் கடந்து போயிருந்தது. நாட்கள் நகர்ந்திருந்தாலும் அவர்கள் உறவில் எந்த முன்னேற்றமும் வந்திருக்கவில்லை. பல்லவி மாதவனோடு நன்றாகப் பேச ஆரம்பித்திருந்தாள். எப்போதுமே அவள் பேச அவன் கேட்பதுதானே வழமை. 

இருந்தாலும்கூட அந்தப் பேச்சு பெரும்பாலும் வாக்குவாதமாக, இல்லையென்றால் சண்டையாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அவள் பேச்சில் ஒரு இணக்கம். சில நேரங்களில் நான் உன் மனைவி என்ற உரிமைக்கூட இருக்கும்.

மாதவன் அந்தப் பொழுதுகளிலெல்லாம் மகிழ்ந்து போவான். இணக்கம் காட்டுபவள் இணைய வரமாட்டாள். 

ஒருவேளை மாதவன்தான் அவளைச் சரியாகக் கையாளவில்லையோ!? எவ்வளவு பேசினாலும் சிரித்தாலும் என்னிடம் நெருங்காதே என்று கண்ணுக்குத் தெரியாத கோடு ஒன்றைத் தன் மனைவி போடுவது போலவே உணருவான் கணவன்.

அது அவன் பிரமையா இல்லை அவள் சாமர்த்தியமா என்று சத்தியமாக மாதவனுக்குப் புரியவில்லை. எது எப்படியோ… மனைவியை நெருங்க வழி தெரியாமல் திண்டாடினான் காளை.

வீட்டில் அத்தனைப் பேரோடும் உறவு பாராட்டினாள். தான் சகஜமாகப் பேசியிராத அம்மாவோடு வாய் ஓயாமல் பேசினாள். அப்பாவைக் கேட்கவே வேண்டாம். முதல் நாளன்றே அவரோடு பேச அவளுக்கு அவ்வளவு கதை இருந்ததே.

வாரம் இரு முறை மகளோடு வரும் அற்புதாவும் இணைந்து விட்டால் வீடு இரண்டு படும். ஜானவியைத் தன் கணவனின் ஆஃபீஸ் அறைக்கு அழைத்துக் கொண்டு போய் கம்பியூட்டர் கிளாஸ் வேறு நடந்தது. அத்தைக் கேட்டால் ஜானவி உயிரைக் கூடக் கொடுக்கத் தயார்.

ஒரு மாதத்திற்கு முன்பு பல்லவி என்றால் யாரென்றே தெரியாத அந்த வீட்டின் அச்சாணி இப்போது அதே பல்லவிதான். சோமசுந்தரமும் பவானியும் கூட அவ்வப்போது இந்த இளம் பெண்களோடு சேர்ந்து சிரிப்பார்கள்.

ஹாலில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்கும் தன் மனைவியை தன் ஆஃபீஸ் ரூமிலிருந்தபடி பார்த்து ரசித்துக் கொள்வான் மாதவன். பார்வைக்கு மட்டுமே இப்போது விருந்து வைத்தாள் பாவை.

அன்று விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் மாமியாரின் சத்தம் கேட்கவும் சட்டென்று விழித்தாள் பல்லவி.

“பல்லவி… பல்லவிம்மா…” பவானி கீழேயிருந்து அழைப்பது கேட்டது. மாதவன் புரண்டு படுத்தான். 

“பல்லவி… அம்மா கூப்பிடுறாங்க. என்னன்னு பாரு.” தூக்கக் கலக்கத்தில் கணவன் சொல்ல எழுந்து வெளியே வந்தாள் பெண். நைட் ட்ரெஸ்ஸோடு கீழே போக மனமில்லாமல் மாடிப் படிக்கட்டில் தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள்.

“அத்தை… கூப்பிட்டீங்களா?”

“என்னால மேல ஏற முடியாது. நீ கொஞ்சம் கீழ வாம்மா.”

“அத்தை… நான்…”

“பரவாயில்லை… நான் மட்டுந்தான் இருக்கேன். வா பல்லவி.” வாய் முழுவதும் சிரிப்பாக மாமியார் அழைக்க என்னவோ நல்ல சேதிதானென்று நினைத்து படிகளில் இறங்கினாள் பல்லவி.

“எம்மருமக வந்த நேரம்! இந்த வீட்டுக்கு எல்லாமே அதிர்ஷ்டந்தான்!” நீட்டி முழக்கிய பவானி பல்லவியின் வாயில் சக்கரையைத் திணித்தார்.

“ஐயோ அத்தை! நான் பல்லுக்கூட விளக்கலை.”

“பரவாயில்லை விடும்மா. நம்ம ஜானவி பெரிய மனுஷி ஆகிட்டாளாம். இப்பத்தான் அற்புதா ஃபோன் பண்ணினா பல்லவி.” பவானியின் குரலில் அத்தனைப் பூரிப்பு.

“அப்படியா அத்தை?” 

“ஆமாம்மா. தம்பி எந்திரிச்சுட்டானா?”

“இன்னும் இல்லத்தை.”

“பரவாயில்லை… எழுப்பிச் சொல்லும்மா. எல்லா வேவையும் நீதான் முன்னே நின்னு பண்ணணும் பல்லவி.”

“ஜமாய்ச்சுடலாம் அத்தை. நீங்கக் கவலையே படாதீங்க.” சொன்னவளுக்குள்ளும் மகிழ்ச்சி இப்போது பொங்கியது.

சும்மாவே ஜானவிக்கும் அவளுக்கும் இடையே அப்படியொரு பிணைப்பு. அத்தோடு இப்போது தாய்மாமன் மனைவி என்ற பதவியும் சேர்ந்து கொள்ள பல்லவி கிடுகிடுவென்று மேலே போனாள்.

“பல்லவி… என்னவாம்? எதுக்கு அம்மா கூப்பிட்டாங்க?”

“அது உங்க அக்கா…” சொல்ல ஆரம்பித்த பிறகுதான் இதை எப்படி இவனிடம் சொல்வதென்றத் தயக்கம் வந்தது.

“சொல்லும்மா…‌ அற்புதாக்கு என்ன?”

“அது… வந்து…”

“என்னாச்சு?”

“ஜானவி…” பேச்சை முடிக்காமல் முகம் சிவந்த மனைவியும் அவள் இதழோரம் ஒட்டியிருந்த சக்கரையும் கணவனுக்கு விஷயத்தைச் சொல்லின.

“ஓ… புரியுது.” ஒரு மென்னகையோடு சொன்னான் மாதவன். பல்லவிக்கு அவன் பேச்சு நடவடிக்கை என அத்தனையும் எப்போதும் இதமாகத்தான் இருந்திருக்கிறது. இவனுக்கு என்னைச் சங்கடப்படுத்தவே தெரியாதா?

“என்ன சிரிப்பு?” கட்டிலில் உட்கார்ந்த படி காலை ஆட்டிக்கொண்டு அவள் சிரிக்க அவன் முகத்திலும் அது பிரதிபலித்தது.

“இல்லை உங்கம்மா சொன்னதை நினைச்சு சிரிச்சேன்.”

“என்னவாம்?”

“இந்த வீட்டுல என்ன நல்லது நடந்தாலும் எப்படிங்க உங்கம்மா அதோட என்னைக் கொண்டு வந்து ஜாயின் பண்ணிடுறாங்க?” இப்போது உண்மையில் மாதவனும் வாய்விட்டுச் சிரித்தான். இருவரும் கொஞ்ச நேரம் சிரித்தார்கள்.

“எங்கம்மாக்கிட்டயும் இதையேதான் அன்னைக்குச் சொன்னேங்க.”

“ம்… அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”

“உனக்குப் புரிஞ்சாச் சரின்னு சொன்னாங்க.” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் பல்லவி. மாதவன் சிரித்தான். கல்யாணத்தன்று கூட இதைத்தானே சரோஜா சொன்னார்.

“அம்மாவைப் பத்தி நல்லது சொன்னவங்க மகனைப்பத்தி ஒன்னுமே சொல்லலையா?”

“ஆமா… சொன்னாங்க சொன்னாங்க. சுரக்காய்க்கு உப்பில்லைன்னு. சீக்கிரமா எந்திரிச்சு குளிங்க. உங்கக்கா வீட்டுக்குப் போகணுமாம். அத்தை சொல்லச் சொன்னாங்க.” கட்டிலிலிருந்து எழுந்து கூந்தலைக் கொண்டைப் போட்டபடி பாத்ரூமிற்குள் போகும் மனைவியையே பார்த்திருந்தான் மாதவன். மனதும் அவள் பின்னோடு போனது.

***

ஹாலில் உட்கார்ந்து கொண்டு லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தாள் பல்லவி. மாதவனும் அவளோடுதான் அமர்ந்திருந்தான். பவானி அறிவுரைகள் வழங்கியபடி வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.‌ மகன் இருக்கும் இடத்தில் பெரிதாக அமரமாட்டார் பவானி.

“அத்தை இவ்வளவு சாமானும் போதுமா?”

“போதும்மா, இதை நீங்க வாங்குங்க. பவுனாப் போடுறதை மாமா பார்த்துக்குவாங்க.”

“ஏனத்தை? தாய்மாமன்தானே இப்போ சீர் பண்ணணும்?”

“இதுக்கே ரொம்ப செலவாகும்மா. அதோட உங்க மாமா ஜானவிக்குன்னு ஏற்கனவே பவுன் வாங்கி வெச்சிருக்காங்க.”

“ஓஹ்!” என்றபடி பல்லவி கணவனைப் பார்க்க அவன் முகத்தில் சிரிப்பிருந்தது. ‘என்ன?’ என்பது போலக் கண்களால் மனைவியிடம் கேள்வி கேட்டான்.

“இல்லைங்க… ஜானவிக்கு நாமளே ஏதாவது ஜுவல்ஸ் வாங்கலாம்னு நினைச்சேன்.”

“வாங்கலாமே.”

“ஆனா அத்தை மாமாக்கிட்ட இருக்குன்னு சொல்றாங்களே?”

“அதை ஜானவி கல்யாணத்துக்குப் போடட்டும்.” சுலபமாக அவன் சொல்ல இப்போது மனைவி புன்னகைத்தாள்.

“அத்தை… உங்க பையனே சொல்லியாச்சு. புதுசா ஏதாவது வாங்கலாம். எனக்கு ஜானவிதான் செலக்ட் பண்ணினாளாம். இப்போ ஜானவிக்கு நான் செலக்ட் பண்ணுறேன்.” 

“சரிம்மா.” இது பவானி.

“உங்கக்காக்கு உள்ளதும் ஒரு பொண்ணு.”

“நீ முடிவே பண்ணிட்டியா?” மனைவி பேச்சை முடிக்கும் முன்பாகக் கேட்டான் மாதவன். சட்டென்று பவானி அப்பால் நகர்ந்து விட்டார். அதற்கு மேல் அங்கே அவர் நிற்கவில்லை.

“எதை?”

“அற்புதாக்கு ஜானவி மட்டுந்தாங்கிறதை.”

“ஓஹ்…” என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பல்லவி தடுமாற அவள் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு மாதவன் சிரித்தேவிட்டான்.

விசேஷம் இனிதாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாய்மாமன் என்ற வகையில் மாதவன் எல்லாவற்றிற்கும் முன்னிறுத்தப்பட அவனின் சரிபாதியாக அனைத்திற்கும் கூட நின்றாள் பல்லவி. 

பட்டுப்புடவை தன்மேல் உரச கூட நின்று சம்பிரதாயங்கள் செய்த மனைவி அவனை வெகுவாகச் சோதித்தாள். அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையும் அவனைப் பதம் பார்த்தது.

கேளிக்கை வீட்டின் இதமான சூழ்நிலை, மனதை மயக்கும் ரம்மியமான இசை, கூடவே உரசிக்கொண்டு திரியும் தன் கைப்படாத புத்தம் புது மனைவி… மாதவன் தன்னைக் கட்டுப்படுத்த வெகுவாகச் சிரமப்பட்டான். 

போதாததற்கு அங்கிருந்த பெரியவர்கள் வேறு அவன் மனைவியைப் பாராட்டிப் பேசினார்கள். டவுனில் வளர்ந்த பெண் இந்தக் கிராமத்தோடு எப்படி ஒன்றிப் போவாளோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்திருக்கும் போலும். ஆனால்… அவர்களின் கவலையைப் பொய்யாக்கிவிட்டு கிராமத்தோடு ஒன்றிப்போன பல்லவி அவர்களுக்கு ஆச்சரியமாகக் காட்சியளித்தாள்.

“பொண்ணுப் பரவாயில்லை மாதவா! எல்லாரையும் அனுசரிச்சுப் போறா.” பெரியவர்கள் சொல்லச் சொல்ல மாதவன் வானத்தில் பறந்தான்.

சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் பல்லவியும் ஓரிடத்தில் ஓய்ந்து அமர்ந்தாள். ஜானவி பட்டுப் புடவை கட்டி அலங்காரம் பண்ணி பெரிய மனுஷி போல இருந்தாள்.

பெரிய பெரிய பூந்தி லட்டுக்களை சின்னச் சின்னத் தட்டுகளில் வைத்துப் பரிமாறிக் கொண்டிருந்தார் ஒரு பெண். என்னவோ தன் அக்காவிடம் கேட்க உள்ளே வந்த மாதவனிடமும் ஒரு தட்டை நீட்டினார் பெண்.

“இல்லைக்கா… என்னால இவ்வளவு ஸ்வீட் சாப்பிட முடியாது. எனக்கு வேணாம்.”

“என்னத் தம்பி நீங்க? தாய்மாமன்… நீங்க ஸ்வீட் எடுக்காம வேற யாரு எடுக்கப்போறா?”

“என்னால சாப்பிட முடியாதுக்கா.”

“முடியலைனா அங்கக் குடுக்கிறது. சரிபாதின்னு எதுக்கு இருக்கா?” அந்தப் பெண் கண்ஜாடையில் பல்லவியைக் காட்டவும் அங்கிருந்த பெண்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

“குடுக்கச் சொல்லுங்களேன் உங்கத் தம்பியை. நாங்க என்ன வேணாம்னா சொல்லிட்டோம்.” சொன்னது வேறு யாருமல்ல. பல்லவியேதான். மாதவன் திகைத்துப் போனான்.

“அதான் சொல்லிட்டாங்க இல்லை… எடுத்துக்கோங்க தம்பி.” அந்தப் பெண் மீண்டும் வற்புறுத்தவும் மாதவன் தட்டை எடுத்துக் கொண்டான். கண்கள் அவனது அழகான ராட்சசியையே வட்டமிட்டது.

“சாப்பிடுங்க தம்பி.” அவன் ஒரு கடி கூடக் கடித்திருக்க மாட்டான். சட்டென்று வந்த பல்லவி அவன் கையிலிருந்த தட்டை வாங்கிக் கொண்டாள். இப்போது ஆச்சரியத்தையும் தாண்டி மாதவனின் கண்கள் மனைவியை ஆழம் பார்த்தது. இவை எதையும் பொருட்படுத்தாமல் கணவன் கடித்துக் கொடுத்திருந்த லட்டைச் சுவைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள் பல்லவி.

“ஏன்? உங்க தம்பி எச்சில் பண்ணினா நாங்க சாப்பிடமாட்டோமா என்ன?” கெத்தாகக் கேட்டுவிட்டு பல்லவி ஒரு பார்வைக் கணவனைப் பார்க்க மாதவன் வீழ்ந்தே போனான்.

“அப்படிப் போடு அருவாளை!” பெண்கள் கூட்டமாகச் சிரிக்க வந்த வேலையை மறந்து வெளியே போய்விட்டான் மாதவன்.

என்ன பண்ணுகிறாள் இந்தப் பெண்!‌ விளையாட்டாகப் பண்ணுகிறாளா… இல்லே உண்மையிலேயே அவள் மனம் கனிந்திருக்கிறதா? ஆனால் இன்று முழுவதும் அவள் ஒரு இணக்கமான மனநிலையில் இருப்பது போல்தான் தோன்றியது மாதவனுக்கு.

“மாது…”

“சொல்லுக்கா.”

“இன்னைக்கு நீங்க எல்லாரும் இங்கயே தங்குங்களேன்.”

“அப்பாக்கு அது ஒத்துவராதுக்கா.”

“அப்போ நீயும் பல்லவியும் இருக்கலாமில்லை.”

“அப்பாவைத் தனியா விடமுடியாது. வேணும்னா பல்லவி இருக்கட்டும்.”

“அப்படியா சொல்றே?” இவர்கள் இருவரையும் காணவும் அங்கே வந்தாள் பல்லவி.

“மதினி… இன்னைக்கு நீ எங்க வீட்டுல தங்குறியா?” ஆசையாகக் கேட்டார் அற்புதா.

“அதெப்படி? அத்தையும் மாமாவும் அங்கத் தனியா இருப்பாங்களே?” மனைவி சொல்ல மாதவனின் கண்கள் பளிச்சிட்டன.

“இல்லையில்லை மாது போறானாம். ஆனா உன்னை இங்க இருக்கச் சொல்லிட்டான்.” 

“இல்லை… அது சரிவராது. உங்கத் தம்பி தங்கினா நானும் இருக்கேன். இல்லைன்னா நானும் வீட்டுக்கே போறேன்.” கறாராகச் சொன்னவள் உள்ளே போய்விட்டாள்.

“என்ன மாது இப்படிச் சொல்றா? யாராவது எங்கூட இருங்களேன்.”

“விடுக்கா… இன்னொரு வாரம் போனதும் நீ அங்க நம்ம வீட்டுக்கு வந்திடு.” சுலபமாகத் தீர்வு சொன்னவன் காரிற்குப் போய்விட்டான்.

இவளுக்கு என்ன ஆனது இன்று?! கருணைக் காட்டுவது காலமா? கன்னியா?

எல்லா விசேஷமும் நிறைவுற்றிருக்க ஒரு நான்கு மணி வாக்கில் கிளம்பி விட்டது மாதவன் குடும்பம். அப்பாவால் தனியாகச் சமாளிக்க முடியாது என்று அம்மாவும் புறப்பட்டு விட்டார். 

வீட்டிற்குப் போன கையோடு மாதவனுக்கு ஏதோவொரு கால் வரக் கிளம்பிவிட்டான்.

“இப்பத்தானே வந்தீங்க, அதுக்குள்ள போகணுமா?” மனைவியின் முகத்தில் தெரிந்த ஏக்கம் மாதவனை அங்கிருந்து நகரவிடாமல் கட்டிப் போட்டது. அவள் கண்களையே சில நொடிகள் பார்த்தபடி நின்றிருந்தான். பெண்ணும் இமைக்க மறந்து கணவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

“உரம் தீர்ந்து போச்சாம். இனித்தான் டவுனுக்குப் போய் வாங்கிட்டு வரணும்.”

“ஓஹ்… அப்போ வர லேட்டாகுமா?”

“ஏன்… சீக்கிரமா வரணுமா?” அந்தக் கேள்விக்குள் ஆயிரம் அர்த்தங்கள். பல்லவி எதுவும் பேசவில்லை. தலையைக் குனிந்தபடி திரும்பி நடக்கப்போனாள். ஆனால் மாதவன் விடவில்லை. அவள் கையைப் பிடித்திருந்தான். 

அவர்கள் இருவரும் நின்றிருந்தது வீட்டின் வரவேற்பறை. வீட்டிற்குள் நுழையும்போதே அழைப்பு வந்ததால் மாதவன் அங்கேயே நின்று விட்டான். பல்லவியும் அவனுடன் தாமதிக்க பெரியவர்கள் உள்ளே போய்விட்டார்கள்.

பெண் இப்போது படபடத்துப் போனாள். மிரண்ட விழிகள் சுற்றும்முற்றும் அவசரமாக யாரும் இருக்கிறார்களா என்று ஆராய்ந்தது. மாதவன் கண்களில் இப்போது புது சுவாரஸ்யம் பிறந்தது.

மனைவி கைகளை இழுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்றே அந்தச் சின்ன மணிக்கட்டை இன்னும் இறுக்கிப் பிடித்தான். அவளின் அழகான அவஸ்தையைப் பார்க்க அவனுக்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது. அவள் அணிந்திருந்த வளையல்களோடு சில நொடிகள் விளையாடினான் மாதவன்.

“கைய விடுங்க…” அவள் கெஞ்சினாள். ஆனால் அவனுக்கு அது கொஞ்சலாக இருந்ததிருக்கும் போல. மறுகையால் அவன் கையைத் தன் கையிலிருந்து விலக்கியவள் கணவனை நிமிர்ந்தும் பார்க்காமல் மாடிப் படிகளுக்குப் போனாள்.

விலகி வந்தவளுக்கு அவன் விலகிப் போவதுவும் பிடிக்கவில்லை. படியேறியபடியே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். திருமணமான நாளிலிருந்தே காதல் பார்வைப் பார்த்தவன். இவள் சீறிய பொழுதுகளிலெல்லாம் கூட சிந்தாமல் சிதறாமல் அனைத்தையும் தாங்கிக் கொண்டவன்… இப்போதிவள் சிணுங்கும் போதா சும்மா இருப்பான்!

அங்கேயே நின்றிருந்தான் மாதவன். தலையைக் கோதியபடி போகும் மனைவியையே பார்த்திருந்தவன் விழிகளில் அத்தனைப் போதை.

மாடிக்கு வந்த பல்லவி ரூமிற்குள் போகாமல் பால்கனிக்கு வந்தாள். அவள் அங்குதான் வருவாள் என்று அவனும் எதிர்பார்த்திருப்பான் போலும். காரின் கதைவைத் திறந்து வைத்துக்கொண்டு உள்ளே ஏறாமல் மாடியையே பார்த்திருந்தான்.

அழகானதொரு இரவுக்காய் அந்த இரு உள்ளங்களும் ஏங்கி நின்றன. இரவும் வந்தது. மாதவனும் வீடு திரும்பி இருந்தான். ஆனால் அவன் முகம் மட்டும் என்றைக்கும் இல்லாத இறுக்கத்தைக் காட்டியது.

தன்னை ஆவலே வடிவாகக் காத்திருந்த மனைவியின் முன்பாக ஒருசில பொருட்களை வைத்தான் மாதவன். ஒன்றிரண்டு கடித உறைகள், சில ஃபோட்டோக்கள்.

கேள்வியாகப் பார்த்த பல்லவி ஃபோட்டோவை உற்று நோக்கினாள். கண்கள் தெறித்துவிடும் போல விரிந்தது. கணவனை அண்ணார்ந்து பார்த்தாள். அந்த முகத்தில் அத்தனை வலி!

ஏனென்றால்… ஃபோட்டோவில் இருந்தது பல்லவி. தனியாக அல்ல… கௌதமோடு. ஐஸ்கிரீம் பார்லரில் சிரித்தபடி கௌதமோடு இருந்த பல்லவி. அந்த ப்ளாக் ஆடி மேல் கௌதமோடு சாய்ந்து நின்றிருந்த பல்லவி. செல்ஃபி ஒன்றிற்கு கௌதமோடு இணைந்து போஸ் கொடுத்திருந்த பல்லவி!

இரவு வந்தது… ஆனால் உறவு தொலைந்து போயிருந்தது.

நறும் பூவே… நீ – நல்லை அல்லை!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!