RR10

ரௌத்திரமாய் ரகசியமாய்-10

 

அமரின்‌ கைகளில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்த சிந்து மெதுவாக அவனை திரும்பி பார்த்தாள். உணர்ச்சியற்ற முகம், இறுகிய தாடை, காரை‌ விரட்டுவதிலேயே குறியாக இருந்தான். 

 

அவளால் ஐந்து நிமிடம் கூடம் ஒரே மாதிரியாக அமர்ந்து இருக்க முடியவில்லை. அவனிடம் பேச்சுக் கொடுக்க முயன்றாலும் ‘ஷட் அப்’ ஒரே வார்த்தையில் இவளும் வாயை மூடிக் கொள்வாள். அவளுக்கே சலிப்பு தட்டியது.

 

எவ்வளவு நேரம் தான் அவளும் இப்படி அமைதியாகவே இருப்பது? பொறுமையிழந்தாள்.

 

“ஏய் தாமிராவை என்னடா செஞ்சீங்க? என்னை எங்கே கூட்டிட்டு போற?” பத்து தடவைக்கு மேல் இதே கேள்வியை கேட்டு விட்டாள். 

 

ஒரே ஒரு தடவை ”ஷட் அப்” என்றான் அவ்வளவே தான் அதன் பிறகு அவனிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. அவன் பாட்டிற்கு காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இன்னும் கடுப்பானாள் சிந்து.

 

தனது கைப்பையிலிருந்து ஒரு குட்டிக் கத்தியை தேடி எடுத்தாள். அதை அவன் பக்கமாக நீட்டி “இப்போ மட்டும் நீ பதில் சொல்லலை நடக்குறதே வேற”  கோபமாக கத்த ‘என்ன‌’ என்பது போல திரும்பினான்.

 

அவளது கையில் கத்தியை கண்டதும் ஒரே ஒரு நொடி தான் லேசான அதிர்ச்சியை காட்டின. அதுவும் பயத்தினால் அல்ல. அவளது கையில் கத்தியா? என்ற ரீதியில் தான். அதன் பின் உதடுகள் நக்கலாய் வளைந்தன. ஒரு கையால் ஸ்டியரிங்கை கையில் பிடித்துக் கொண்டான். மறு கணம் அவளது கையிலிருந்த கத்தியை‌ கைபற்றியிருந்தான்.

 

அவள் அதை எதிர்ப்பார்க்கவே இல்லை. அவனை மிரட்சியுடன் நோக்கினாள். அவனோ கேலியாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

 

“இதே கத்தியால உன்னை குத்தினா எப்படி இருக்கும்?” அந்தக் கேள்வியில் அவள் இதயம் துள்ளி அடங்கியது.

 

“அன்ட் இந்த மாதிரி சில்லியா ட்ரை பண்றதை விட்டு வாயை மூடிட்டு வந்தா உனக்கு நல்லது” அவளது கத்தியை அவளிடமே‌ நீட்டினான். அவளும் அதை வாங்கி கைப்‌ பையில் வைத்து விட்டு அமைதியாக சீட்டில் சாய்ந்து கொண்டாள்.

 

‘நீ இப்படி பயமுறுத்தினா நாங்க பயந்துருவோமா?’ உள்ளே பயம் இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் அடுத்த திட்டத்தை தீட்டினாள்.

 

கார் சிந்துவும் தாமிராவும் தங்கியிருந்த வீட்டின் தெருவின் பக்கம் திரும்பியது. காரின் வேகமும் குறைக்கப்பட்டது. விழித்துக் கொண்டாள். இது தான் சரியான தருணம் என எண்ணினாள். தனது கைப்பையிலிருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்து அவன் எதிர்பாராத நேரம் அவன் முகத்தில் ஸ்ப்ரே செய்து விட அவன் கண்கள் எரிந்தன. 

 

“ஏய்…” என்று கத்தியவன் அந்த நிலையிலும் நிதானமிழக்காமல் சடன் பிரேக்கிட்டு காரை நிறுத்த, அவள் கதவை திறந்து வெளியே பாய்ந்தாள். 

 

அவன் கண்கள் தந்த எரிச்சலில் கண்களை கசக்கிக் கொண்டே வேகமாக காரை விட்டு இறங்கினான். பெப்பர் ஸ்ப்ரேயின் தாக்கத்தில் சிவந்த கண்களை  விட ஆத்திரத்தில் இரு‌ மடங்காக சிவந்தது. தடுமாறி ஒரு நிலைக்கு வந்தான். காரை விட்டும் கீழே குதித்தவள் அவசரமாக எழுந்து ஓட எத்தனிக்கும் முன் அவள் கைச்சந்தை இறுக்கமாக பற்றி இழுத்தான் அமர்.

 

அவன்‌ பிடித்த பிடியில் அவள் கையே கழன்று விடும் போல வலித்தது. அவனிடமிருந்து விடுபட போராடினாள். அவன் விட்டால் தானே. ஏற்கனவே இவளது செய்கையால் கடுப்பில் இருந்தவன் இந்த செயலில் ஆத்திரமடைந்தான்.

 

“யூ ப்ளடி…” கை ஓங்கி பெருங்குரலெடுத்து கத்தியவனை கண்டவள் இதயம் சொடுக்கிவிடப்பட்டு, தறிகெட்டு துடித்தது. அதற்குள் சில மனிதர்களின் காலடிச்சத்தம் கேட்க, பட்டென அவன் பிடியை தளர்த்தினான். இல்லையெனில் அவள் கன்னத்தில் அறைந்திருப்பான்.

 

முயன்று தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். சிந்துவோ இன்னும் அதன் தாக்கத்திலிருந்து வெளி வரவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தரையை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

 

நெடிய பெருமூச்சொன்றை இழுத்து விட்டான். தெரு முனையில் தான் அவனது கார் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. எதற்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அங்கிருந்தே சிந்துவும் தாமிராவும் தங்கியிருந்த வீட்டின் பக்கம் பார்வையிட்டான். அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றிருந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டான்.

 

இந்நிலையில் வீட்டுக்குள் நுழைவது ஆபத்து. இந்நேரம் நிச்சயம் ருத்ரன் தப்பித்திருப்பான் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் எங்கே என்ற கேள்விக்கு விடை தெரியாது. அவர்களில் ஒருவன் இவர்களை கண்டாலும் அவ்வளவு தான். இவளை அருகில் வைத்துக்கொண்டு அவர்களுடன் போராடுவது முட்டாள் தனம்.‌ அவனது மூளை வேகமாக கணக்கிட்டது. 

 

அதற்குள் சிந்து அவனை நோக்கி நடந்து வர கீழிருந்த கல்லில் கால் தட்டுப்பட விழுந்தாள்.

 

“ஆஆ…” அவளது திடீர் அலறலில் திடுக்கிட்டு திரும்பினான். அதற்குள் இந்த அலறல் ஒலி தெருமுனையில் நின்றிருந்த ஒருவனது செவியில் விழுந்தது. 

 

கார் மறைவிலிருந்த அமர் பதட்டமானான். அவள் வாய் மீது விரல் வைத்து “ஷ்” என்று அமைதியாக இருக்கச் செய்தான். அவன் இவர்கள் இருந்த திசை நோக்கி வருவது தெரிந்தது. இந்த இடத்தை விட்டு கிளம்ப வேண்டும். 

 

பயந்து நடுங்கிக் கொண்டிருந்த சிந்துவை‌ நெருங்கி, அவளை மெல்ல காரில் ஏற்றி விட்டு பதுங்கி பதுங்கிச் சென்று தானும் காரில் ஏறினான். இப்போதே இங்கிருந்து கிளம்பி விடும் நோக்கில் காரை ஸ்டார்ட் செய்ய நேரம் அந்த இக்கட்டான சூழ்நிலையில்  கார் கூட அவனுக்கு எதிராக சதி செய்தது. அதற்குள் அந்த தடியன் காரை நெருங்கி விட்டான்.

 

மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்தான். பலனில்லை.‌ காருக்கு மிக அருகில் வந்தவன் இவர்ளை சந்தேகமாக நோட்டம் விட்டவன் அவர்களை வெளியே இறங்குமாறு சைகை‌ காட்டினான். உள்ளே இருப்பது யாரென்று அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. காரை விட்டு இறங்கினால் தெரிந்து விடும். அமைதி காத்தான். 

 

மீண்டும் கார் கண்ணாடியை தட்டி, 

“கீழே இறங்க சொல்றேன்ல” என்றான் சற்று காட்டமாக. அமர் அமைதியாக சிந்தித்தான். பதட்டமடையவில்லை. 

 

சிந்துவின் கைப்பையை அவளிடமிருந்து எடுக்க, அவனை முறைத்தாள். அதையெல்லாம் அவன் கண்டு கொள்ளவில்லை. அந்த பெப்பர் ஸ்ப்ரேயை கையிலெடுத்தான்.

 

‘ஐயோ இதை ஏன் அவன் எடுக்குறான் நம்ம மூஞ்சில அடிச்சி விட்ருவானோ?” மிரட்டசியுடன் அவனையே பார்த்திருந்தாள்.

 

“நான் காரை விட்டு இறங்கி இந்த ஸ்ப்ரேயை அடிச்ச அடுத்த செக்கன்  இந்தப் பக்கம் இறங்கி ஓடிடு” என்று அந்த திசையை கைகாட்டி கூற, ஏன் என்பது போல் முதலில் பார்த்தவள் அவன் கண்களில் தெரிந்த தீவிரத்தில் அதற்கு ஒத்துக் கொண்டாள்.

 

அதை செயற்படுத்திடும் நோக்கில்  காரை விட்டும் அவன் இறங்க, மறு பக்கத்தில் அவளும் இறங்கி விட்டாள். அந்த கணமே அம்மனிதனின் முகத்தில் ஸ்ப்ரே செய்து விட‌, சிந்து அவன் காட்டிய திசையில் ஓடி விட்டாள். அந்த சூழ்நிலையை தனக்கும் சாதகமாக்கிக் கொண்டவன் அந்த தடியனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு அங்கிருந்து இருட்டுக்குள் ஓடி‌ மறைந்தான்.

 

***

இருட்டை வெறித்தபடி சிந்தனையில் மூழ்கியிருந்தான் ருத்ரன். முதலில் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். இத்தகைய பெரிய வனப்பகுதியை  விட்டு வெளியேறுவது கொஞ்சம் கடினம் தான். அடுத்தடுத்த திட்டங்களை வகுத்தவன் அமரை அழைத்து தகவல் வழங்கினான்.

 

அந்த அமைதியான இரவில் கோட்டான்களின் அலறலும் தூரத்தில் நரிகளின் ஊளைச்சத்தமும் மாத்திரமே. திடீரென்று அருகிலிருந்த புதரில் இருந்து ‘சர் சர்க்’ என்ற வித்தியாசமான சத்தம். சட்டென திரும்பி தாமிராவை பார்த்தான். அவளிடம் அசைவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்டவன் செவிகள் கூர்மையடைந்தன. சத்தம் வந்த திசையை உன்னிப்பாக கூர்ந்து கவனித்தான். அவன்‌ கைகள் அனிச்சை செயலாய் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவியது. 

 

முழு இடத்தையும் தன் பார்வை வட்டத்துக்குள் அடக்கியவன் பார்வையின் தீவிரம் கூடியது‌. எச்சரிக்கையாக மிக மிக எச்சரிக்கையாக மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தான். முழங்கையை மடக்கி துப்பாக்கியை பிடித்தவாறு அந்த புதரை மெல்ல நெருங்கினான். 

 

‘சரசர..‌சர்க்.. சர்க்..’ நடமாட்டம் தெரிந்தது. 

பதுங்கி பதுங்கி அந்த புதர் அருகே சென்றவன் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு அதிரடியாக புதரை விலக்கி நோட்டமிட அங்கு அவன் எதிர்ப்பார்த்த எதிரிகளோ ஆபத்தான விலங்குகளோ இல்லை. மாறாக ஒரு காட்டெலியின் நடமாட்டமே அது.

 

“உஃப்ஸ்…” நெடிய பெரு மூச்சோடு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கிருந்து திரும்பினான். அவளை மீண்டும் ஆராய்ந்தான். அவளிடமிருந்து வெளிவந்த சீரான மூச்சுக்காற்று ஆழ்ந்து உறக்கத்தில் இருப்பதை எடுத்துக் காட்டியது‌.

 

‘கிர் கிர் கிர்…’

 

அவள் அருகில் கீழே கிடந்த செல்ஃபோனின் வைப்ரேட் ஒலி. 

அவளது ஆழ்ந்த உறக்கம் கலைந்து விடுமென எண்ணி கைப்பேசியை எடுத்தாலும் ‘இந்த நேரத்தில் இவளுக்கு யார் அழைப்பது?’ என்ற ஐயத்துடனே அதை எடுத்துப் பார்த்தான்.

 

கம்பீரமான தோற்றத்துடன் முகம் நிறைந்த புன்னகையுடன் வாலிபன் ஒருவனது முகம்  ‘ரகு’ என்ற பெயர் தாங்கி திரையில் ஒளிர்ந்தது. அவனை பார்த்ததும் இதற்கு முன் ஒரு நாள் அடித்து விட்ட ஞாபகமும் சேர்ந்தே வந்தது.

 

நீண்ட நேரமாகியும் அழைப்பை ஏற்காததால் அது துண்டிக்கப்பட்ட மறு நிமிடம் ஒரு குறுந்தகவலும் வந்து சேர்ந்தது.

 

‘ஐ அப் ரியலி சாரி தாமிரா. உனக்கு என் மேல கோபம் இருந்தா எவ்வளவு வேணும்னாலும் திட்டு இப்படி பேசாம மட்டும் இருக்காதே ப்ளீஸ்’ திரையில் விழுந்த குறுந்தகவலை படித்தவனது முகம் சுருங்கியது.

 

இதுவரை தன் தோற்றம் குறித்து எண்ணிப் பார்த்ததில்லை. ரகுவை பார்த்ததும் ஏனோ சில வேண்டாத நினைவுகள் அவனை அலைக்கழித்தது. அப்போதிருந்த ருத்ரனுக்கும் தற்போதைய ருத்ரனுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். 

 

அன்று முதல் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் நினைத்த உயரத்தை அடைந்த பின்பும் கூட அவன் மனதில் அமைதியில்லை. நிம்மதியில்லை. இன்னும் அவனது தேடலும் நிற்கவில்லை. சில நிமிடங்கள் ஏதோ யோசனையில் உழன்றிருந்தவன் தலையை சிலுப்பி தன்னிலைக்கு வந்தான்.

 

அனுமதியின்றி அடுத்தவர் செலஃபோனை ஆராய்வது நாகரிகமான செயலல்ல என்றாலும் அவன் மனம் அதற்கு எதிராக வேலை செய்தது. அவளது செல் எவ்வித ‘பாஸவேர்டுமின்றி இருப்பது அவனுக்கே ஆச்சரியம் தான்.

 

வோல் பேப்பரில் அவளும் அவளது பூனையும் இருக்கும் கோணத்தை கண்டதும் லேசான புன்முறுவல் தோன்றியது. அதன் பின் அவளது கேலரியை ஆராய்ந்திட எண்ணம் வந்தது. ஒரு நொடி தயங்கினாலும் மறு நொடி அதை புறந்தள்ளி விட்டு அதை தொடர்ந்தான்.

 

அந்நேரம் பார்த்து திடீரென தாமிராவிடம் அசைவு தெரிந்தது‌. அவன் ஒரு நொடி தடுமாறினாலும் அவளது செல்போனை தன் பாக்கெட்டுக்குள் போட்டு விட்டான்.

 

தூக்கம் கலைந்து பட்டென எழுந்து அமர்ந்து கொண்டாள். பதற்றத்துடன் எழுந்து அமர்ந்தவளை கண்டதும் தன்னுடைய கள்ளத்தனம் அகப்பட்டு விட்டதோ? என்று  மனம் தடுமாற்றம் அடைந்தான். அது ஒரே ஒரு கணம் தான். உணர்ச்சிகளை மறைக்கத் தெரிந்த அவனுக்கு இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. 

 

“ஐயோ சிந்துவுக்கு என்னாச்சு? அவ எங்கே இருக்கா? ஒண்ணும் பிரச்சினை இல்லையே?” எழுந்த வேகத்தில் கேட்டவள் கலக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

 

சிந்துவுக்கு என்னவானதோ? என தன் தோழியின் நிலை குறித்து பயந்தாள். ஏற்கனவே பிரச்சினைகளின் பிடியில் சிக்கியிருப்பவள் தன் தோழிக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கும் அவள் தான் பதிலளிக்க நேரிடும். 

 

“அவளுக்கு எதுவும் ஆகலை. ஷீ இஸ் ஆல்ரைட்” என்றான்.

 

“இப்போ எங்கே இருக்கா?” குழப்பமாக அவனை பார்த்தாள்.

 

அவனது பார்வை அவளது முகத்தில் கூர்மையாக படிந்தது.

 

“அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உன்னையும் அவளையும் உங்க இடத்துக்கு சேஃப்பா அனுப்பி வைக்க வேண்டியது என் பொறுப்பு. அவ இப்போ இங்கே தான் வந்துட்டு இருக்கா. போதுமா?” அவளது மிரட்சி பொங்கிய விழிகளை கண்டே பொறுமையாக எடுத்துச் சொன்னான். 

 

இந்த பொறுமை கூட அவனுக்கு புதிது. அவளின் கலக்கத்தை பயத்தை போக்கிடும் எண்ணத்திலேயே  செயற்பட்டான். அது ஏன் என்று அவனுக்கே தெரியாது. 

 

அவள் தற்போது இருக்கும் நிலை குறித்து அவளுக்கே குழப்பமாக இருந்தது. யாரென்றே தெரியாத ஒருவனுக்கு உதவி செய்ததுமில்லாமல் அவனை நம்பி இன்னும் அவனுடனே ஓடிக் கொண்டிருக்கிறாள். அதுவும் அவளுக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத ஒருவன். அடிக்கடி தன் தந்தையின் நினைவு வரும்போதெல்லாம் அவளுக்கு ஒரே கலக்கமாக இருந்தது. 

 

தன்னால் தன் தோழியும் தற்போது பிரச்சினைக்குள்‌ தள்ளி விட்ட தனது முட்டாள் தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள். 

 

 ***

 

சுற்றிலும் உயர்ந்த ராட்சத மரங்கள். வழிநெடுக புதர் மண்டிக் கிடந்தது. காட்டு முற்செடிகளும், கற்றாழை செடிகளும் எக்கச்சக்கமாய் வளர்ந்து நிறைந்து கிடந்தன. எங்கும் நிசப்தம்‌! காய்ந்த சருகுகளில் காலடி‌ எடுத்து வைக்கும் சத்தம் ‘சர்ர்க்க்க்… சர்ர்ர்க்க்…’ ஒலியையும் காட்டுத் தவளைகள் எழுப்பிய ‘க்கிர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…’ ஒலியையும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. 

 

முன்னால் வேக எட்டுக்களுடன் நடந்து செல்லும் அவனது ராட்சத தோற்றத்தை பார்க்க, அவளுக்கே கொஞ்சம் பயமாய் தான் இருந்தது. அவனோ தன்னை பின்தொடர்ந்து ஒரு ஜீவன் வருவதை சிறிதும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. பார்வையை சுழல விட்டபடி முன்னோக்கி நடந்து சென்றான் அவன்.

 

கோட்டான்களின் வித்தியாசமான அலறலும், தூரத்தில் நரிகளின் ஊளையும் அந்த சூழ்நிலைக்கு ஓர் அமானுஷ்ய எஃபெக்ட்டை கொடுக்க, எதற்கும் அஞ்சாதவளுக்கே உள்ளே குளிரெடுத்தது. இவளை ஒரு பொருட்டாக கருதாமல் செல்லும் அவனை  திட்டிக்கொண்டே அவன் வேகநடைக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடையை தொடர்ந்தாள்.

 

‘கடவுளே! இந்த நடு ராத்திரியில் அதுவும்  நடு காட்டில இவன் கிட்டே போய் கோர்த்து விட்டுருக்கீயே… உனக்கே நல்லா இருக்கா? இந்த காட்டுல எங்க பார்த்தாலும் பயமா இருக்கே. பேச்சுத் துணைக்கு கூட வர்றானா இடியட்.’

 

“ஆஆஆஆ…” 

 

அலறல் ஒலியை கேட்டு திரும்பினான் அவன். கால் தடுக்கி கீழே விழுந்திருந்தாள் சிந்து. 

 

“ஸ்ஸ்… ஆ…” கீழே விழுந்தவள் எழ முடியாமல் தடுமாறினாள்.

 

“சீக்கிரம் எழுந்து வா” அவன் பாட்டுக்கு நடந்தான்.

 

கீழே விழுந்தவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவன் சென்ற விதத்தில் இத்தனை நேரம் அவள் இழுத்துப் பிடித்திருந்த கோபம் காற்றில் பறந்து போனது.

 

“ஏய்… நில்லு, இங்கே ஒருத்தி கீழே விழுந்து  கால் அடிபட்டு எழ முடியாம இருக்கா. கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல? அட்லீஸ்ட் என்னாச்சு ஏதாச்சான்னு ஒரு வார்த்தை கேட்டியா? கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லாம போற‌. நீயும் மனுஷன் தானா?” காலை பிடித்தவாறு தரையில் அமர்ந்தபடியே கத்தினாள்.

 

அவன் நடை தடை பட்டது. திரும்பி வந்து அவளை ஒரு நொடி வெறித்துப் பார்த்தான்.

 

“சினிமால வர்ற மாதிரி நீ விழுறப்போ எல்லாம் தாங்கி பிடிக்க என்னால முடியாது” எரிந்து விழுந்தான்.

 

“விழுறப்போ எல்லாம் தாங்கி பிடிக்க நீ  ஹீரோவும் இல்லை” சளைக்காமல் பதிலடி கொடுத்தாள்.

 

“உன்னை…” அடுத்த நொடி அவள் இடையை பற்றி தூக்கி அருகிலிருந்த பெரிய மரத்தின் வேரின் மீது அமரச் செய்தான்.

 

இந்தச் செயல் அவள் கொஞ்சம் கூட எதிர்பாராத ஒன்று‌. அவன் அவளிடை பற்றி  தூக்கியது அவளுக்கு ஒரு மாதிரியானது. 

 

அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இயந்திரம் போல் அவன் வேலையில் கண்ணாயிருந்தான். அவளது பாதனியை கழற்றி அவள் பாதத்தை பிடித்து இடவலமாக திரும்பினான்.

 

“ஆஆஆஆ…” காடே அதிர கத்த, அவளை முறைத்தான் அவன்.

 

“சும்மா ஏன் முறைக்குற? கால் வலிச்சது அதனால தான் கத்தினேன். உனக்கு வந்தா தான் தெரியும்” 

 

அவன்‌ ஒன்றும் பேசவில்லை.

 

“கெட் அப்” ஒற்றை வார்த்தையோடு திரும்பினான்.

 

“ஆஆஆஆ…” மீண்டும் அலறல் ஒலி. 

 

கடுப்பானான் அமர். இம்முறை திரும்பவில்லை. 

 

“கால் வலிக்காது. மரியாதையா வாயை மூடிக்கிட்டு எழுந்து வா” கடித்த பற்களுக்கிடையில். 

 

“ஆஆஆஆ…ஆஆ…” மீண்டும் அதே அலறல்.

 

“ஏய்… உன்னை…” என்று எரிச்சலுடன் கோபமாக திரும்பினான்.

 

அவள் அமர்ந்திருந்த மர வேருக்கு மிக அருகில் ஓர் பாம்பு. அதை பார்த்து தான் எழுந்து வராமல்  பயத்தில் அலறிக் கொண்டிருந்தாள்.

 

சிறிதும் தாமதிக்கவில்லை. அனிச்சை செயலாய் அவன் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவினான்.

 

‘டுமீல்’ அந்தப் பாம்பு சிதறியது‌. 

 

அதிர்ந்து விழித்தாள் சிந்து‌.  தாமாகவே அவள் கால்கள் அவனை நோக்கி ஓடின. ஒரு வித பயத்துடன் அந்த துப்பாக்கியையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் தன்னையும் துப்பாக்கியையுமே பார்ப்பதை உணர்ந்தவன் மீண்டும் அதை இருந்த இடத்திலேயே வைத்து விட்டான்.

 

ஆனாலும் அவள் அவனையே பார்த்தபடி இருந்தாள்.

 

“என்ன?”

 

“அநியாயமா அந்த வாயில்லா ஜீவனை கொன்னுட்டியே?” அவனுடன் மல்லுக்கு நின்றாள் அவள்.

 

“அப்போ பாம்பு கடிச்சு செத்துப் போறீயா?” எரிந்து விழுந்தான்.

 

அவளுக்கு பகீரென்றது. ‘ஐயோ பாம்பு கடிச்சு நுரை தள்ளி சாகனுமா?’ 

 

“சாரீஈஈஈஈஈ…” என வாயை காது வரை இழுத்து சமாளித்து வைத்தாள்.

 

***

அமர் செல் சிணுங்கியது. அதை காதுக்கு கொடுத்தவன் ஒரு சில நிமிடம் பேசி விட்டு திரும்பினான்.

 

“வா போகலாம் சந்து…” அவளை அழைத்தான். அவள்‌ அசையவில்லை. மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்து நின்றாள்.

 

“சந்தூஊஊஊ…உன்னை தான்”  முறைத்தான் அவன்.

 

அவளோ அது அவளுக்கே அல்லாதது போல்  அங்கேயும் இங்கேயும் பார்வை சுழல விட்டபடி தோரணையாய் நின்றிருக்க, அவனுக்கோ அவளை ‘பளார் பளார்’ என அறைந்து தள்ளி விடும் வேகம்.

 

ருத்ரனுக்காக தான் இத்தனை பொறுமை காத்தான். 

 

“ஏய்ய்ய்ய்…”

 

“என்ன ஏய்…? உனக்கு எத்தனை தடவை சொல்லிட்டேன் என் பேரு சந்து இல்லை‌ சிந்து. சி-ந்-து  புரிஞ்சதா?”

 

“உனக்கு யாரு சந்து பொந்துன்னு பெயர் வைக்க சொன்னா இடியட்” சீறினான்.

 

“உனக்கு‌ யாரு அமர், நில்லு, ஓடு ன்னு பெயர் வைக்க சொன்னா?” அவன் கேட்ட அதே தோரணையில் சத்தமாக வினவ, அவன் முகம் சற்று திகைப்பை காட்டியது.

 

அதற்கு மேல் அவளை திட்டவோ, மிரட்டவோ தோன்றவில்லை. பதிலுக்கு பதில் அவனிடம் வாயாடும் அவள் சுவாரஸ்யமாக தெரிந்தாள்.

 

அவள் முகத்தை ஒரு கணம் உற்று நோக்கினான்‌. 

 

‘ஆத்தி சுட்டுத் தள்ளிடுவானோ? அவளுக்குள் உதறல் எடுத்தாலும் விரைப்பாய் நின்று கொண்டிருந்தாள்.

 

“லெட்ஸ் கோ. சி-ந்-து” அவள் பெயரில் அழுத்தம் கொடுத்துக் கூறி விட்டு வேகமாக திரும்பி நடந்தான்.

 

‘இந்த அண்டர்டேக்கர் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்க எனக்கே இப்படின்னா… அந்த மொட்டை மான்ஸ்டர் கிட்ட சிக்கியிருக்க அந்த வாயில்லாப் பூச்சி கதி?’ தன் தோழியின் நிலையை எண்ணியபடி அவனை பின் தொடர்ந்தாள்.

 

சிறிது தூரம் அவள் அமைதியாக நடந்து சென்றாள். அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை. வேகமாக நடந்து செல்லும் அவனுடன் சேர்ந்து நடந்திடும் நோக்கில் பாதி ஓட்டமும் நடையுமாக சென்றாள்.

 

‘பனமரத்துக்கு வாரிசா இருப்பானோ? இவ்வளவு ஹைட்டா இருக்கானே. சின்ன வயசுல என்ன சாப்பிட்டு இருப்பான்? அப்புறமா இவங்கிட்ட அந்த டவுட்டை கேட்டு க்ளியர் பண்ணிக்கலாம். இப்போ கேட்டா இந்த ஜிராஃப் என்னை திட்டும்’ பேச யாருமின்றி தனக்குள்ளே பேசிக் கொண்டு நடந்தாள் அவள்.

 

***

 

“உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்களை ஏன் துரத்துறாங்க? அப்படி என்ன தப்பு செஞ்சீங்க?” இந்தக் கேள்வியை அவனிடம் பல தடவை கேட்டு விட்டாள் தாமிரா.

 

“தவறு அந்த பக்கமும் இருக்கலாம்” என்றான் வெறுமையாக.

 

அவனது கூற்றில் உள்ளம் தெளிந்தவளாய் அவனருகில் அமர்ந்தாள்.

 

“என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும். ப்ளீஸ் இதுக்கு மேலேயும் நீங்க எந்த தப்பும் செய்ய வேண்டாமே” என்று படபடக்க கூறிவிட்டு அவன் துப்பாக்கியை பார்த்தாள்.

 

அதன் அர்த்தம் அவனுக்கு புரியாமல் இல்லை. தன் நலன் கருதும் இவள் அவனுக்கு புதிதாக தெரிந்தாள். அவனுள் ஓர் இதம் பரவுவதை உணர்ந்தான். ஒன்றும் பேசாது கண்களில் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அவளிடமே தன் பார்வையை பதித்திருந்தான்.

 

தொடர்ந்து, “என் அப்பாவுக்கு இன்ஃபோர்ம் பண்ணலாம். அவர் கண்டிப்பா உதவி பண்ணுவாரு” இந்த சிக்கலில் இருந்து அவனை காத்திடும் நோக்கில் தான் கூறினாள்.

 

“நோ நீட். தேவையில்லாத விஷயத்தில நீ தலையிடாதே” அவன் முகம் கடுகடுவென்று இருந்தது.

 

இத்தனை நேரம் இருந்த இணக்கமான சூழ்நிலை முற்றிலும் மாறிப்போனது. அவன் முகம் படுபயங்கரமாக மாறியிருந்தது. அவள் என்ன கூறி விட்டாள் என இவ்வளவு கோபம்? அதற்கு மேல் அவனுடன் பேச முடியாமல் அவனது கோபம் தடுத்தது.

 

அதற்கு மேல் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. எங்கோ வெறித்தபடி இருவரும் அமைதியாக இருந்தனர். திடீரென்று அமைதியை கலைக்கும் விதமாக காய்ந்த சருகுகள் மிதிபடும் சத்தம். முன்பு போல ஏதேனும் காட்டு விலங்குகளாக இருக்கக்கூடும் என எண்ணினான். ஆனால் அந்த சத்தம் இப்போது அவர்கள் இருந்த பகுதிக்கு அருகில் கேட்டது.

 

அவனது மூளை எச்சரிக்கை உணர்வுக்குத் தாவியது. சட்டென எழுந்தவன், சத்தம் வந்த திசையை நோட்டம் விட ஆரம்பித்தான். இப்போது அந்தச் சத்தம் அவனுக்கு தெளிவாக கேட்டது. அது மனித காலடிச் சத்தம் என உறுதி செய்து கொண்டான். அவனது புலன்கள் அனைத்தும் கூர்மையாகின. 

 

தாமிராவை அங்கிருந்த மறைவான பகுதியில் மறைந்திருக்கச் செய்தான். அவன் மெல்ல முன்னேறினான். துப்பாக்கியை கையில் எடுத்தவன் மிக நிதானமாக கவனமாக அடியெடுத்து வைத்தான். ‘சர சர் சர்’ என்ற காலடிச் சத்தம் அவனை நெருங்கியது. அவனும் அதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

 

எதோ இரண்டு உருவத்தின் அசைவு அவன் கண்களில் விழுந்தது. இப்போது அந்த உருவம் அவன் இருந்த திசை நோக்கி முன்னேற உறுதி செய்து கொண்டவன் புதர் மறைவிலிருந்து திடீரென்று வெளிப்பட்டு வந்தவனை தாக்க முற்பட அவன் சுதாரித்து கொண்டான்.

 

“ஏய் ஏய் ருத்ரா… நான் தான் அமர்” என்று அவனை தடுத்து நிறுத்தினான் அமர். அங்கு சிந்துவும் நின்றிருப்பதைக் கண்டான்.

 

“சிந்து…” அதற்குள் மறைந்திருந்த தாமிரா பாய்ந்து ஓடி வந்து சிந்துவை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

 

“ஹேய் தாமிரா யூ ஆல்ரைட்…” என‌ அவளை தேற்ற முயன்றாள்.

 

திடீரென்று எங்கிருந்தோ துப்பாக்கிச் சத்தம் மூவரும் அதிர்ந்தனர். தாமிரா சிந்துவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

 

ருத்ரனும் அமரும் அந்த இடத்தை சுற்றி நோட்டம் விட்டனர்.

 

“ருத்ரா நாம இங்கிருந்து கிளம்புறது தான்‌ நல்லது” என்றான் அமர். ருத்ரனுக்கும் அதுவே சரியெனப்பட்டது. ஆண்கள் இருவருமாக நொடிக்குள் திட்டமொன்றை வகுக்க தோழிகள் இருவரும் புரியாமல் குழம்பிப் போய் நின்றிருந்தனர்.

 

“நீங்க ரெண்டு பேரும் இந்த வழியா இப்படியே வேகமா ஓடுங்க. ஹரி அப்” சமதரையான அந்த வழியை சுட்டிக் காட்ட அவர்கள் இருவரையும் அவசர படுத்தினான்.

 

“அப்போ நீங்க?” பதற்றத்துடன் ருத்ரனிடம் கேட்டாள்.

 

“நீங்க ரெண்டு பேரும் இந்த இடத்தை விட்டு கிளம்புங்க” பற்கள் நறதறுக்க சிந்துவை முறைத்தான் அமர்.

 

‘அவ கேள்வி கேட்டதுக்கு என்னை முறைக்குறானே இவன். சரியான லூசு’ என இந்த தருணத்திலும் சிந்து, அமரை மனதால் திட்டினாள்.

 

அதெல்லாம் தாமிராவின் பார்வையில் பதியவில்லை. “நீங்க?” என்று கேள்வியாக ருத்ரனையே பார்த்திருந்தாள்.

 

இந்த நேரத்திலும் தன்னை பற்றி யோசிக்கும் அவள் கண்களை ஊன்றிப் பார்த்தான். கண்கள் கலங்கியிருந்தன.  தனக்காக கவலைப்படுகிறாள் என்று புரிந்தது.

 

“நான் உன் பின்னாடி தான் இருப்பேன். ஓகே” மென்மையாக கூறினான். அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.

 

“ரன்…” என்ற அவனது கட்டளையில் சிந்து, தாமிராவை இழுத்துக் கொண்டு ஓட, தாமிரா ருத்ரனையே திரும்பி திரும்பி பார்த்தபடியே ஓடி மறைந்தாள்.

 

ஓடிக் கொண்டே இருக்கிறாள். அமைதியில்லாத ஓட்டம். ஓய்வில்லாத ஓட்டம். எத்தனை நாள் தான் இப்படி ஓட முடியும்? இதற்கு மேலும் ஓட முடியாதவளாய் அவளுக்கு மூச்சு வாங்கியது. சிந்துவுக்கும் அதே நிலை தான்.

 

இருள் அப்பியிருந்த அப்பகுதியை ஒரு வித அச்சத்துடன் இருவரும் நோட்டம் விட்டனர். நீண்ட நேரமாகியும் வருவதாக சொன்ன இருவரும் வரவில்லை. அந்த இடமே வெறுமையாக காட்சியளித்தது. மிரட்சி பொங்கிய முகத்துடன் அந்த இடத்தைச் சுற்றி பார்த்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. இந்த இடத்தின் அமானுஷ் அமைதி வேறு பயத்தை கிளப்பியது.

 

இதற்கு மேல் எந்தப் பக்கம் போவதென்று இருவருக்கும் தெரியவில்லை. அடர்ந்தும் இருண்டும் போயிருந்த வனத்துள் சிந்துவின் செல்போன் டார்ச்சின் வெளிக்கீற்றை தவிர வேறு எந்த வெளிச்சமும் இல்லை. சிந்து, தாமிராவை நெருங்கி அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

 

தங்களை வேண்டுமென்றே நடுக்காட்டில் தவிக்க விட்டு விட்டார்களோ? என்றே சிந்துவுக்கு தோன்றியது‌. இதை தாமிராவிடம் கூறினாள்.

 

“உளறாதே சிந்து. அப்படி தனியா விட மாட்டாங்க. அவர் எனக்கு ப்ராமிஸ் பண்ணி இருக்காரு. கண்டிப்பா வருவாரு ஆனா இவ்வளவு நேரம் ஆகுதுன்னா அவருக்கு ஏதும் ஆகி இருக்குமோனு தான் பயமா இருக்கு” அவளது முகம் வெளிறி கண்களில் கலவரம் கூடியது‌. 

 

“அவங்க மேல இவ்வளவு நம்பிக்கை வேண்டாம் தாமிரா. இவங்க எல்லாம் அதுக்கு அப்பாற்பட்டவங்க” தன் தோழியை எச்சரிக்கும் விதமாக சற்று கறாராக கூற தாமிராவின்  கவனமோ அவர்கள் கடந்து வந்த பாதையின் மீதே கலக்கத்துடன் பதிந்து இருந்தது.

 

*********