Poo04

அன்றைய பொழுது விடிந்தது முதல் இன்பமான மனநிலையில்தான் இருந்தாள் பல்லவி. இந்த ஒரு மாதகால வாழ்க்கை அவளுக்கு நிறையப் பாடங்களைக் கற்றுக் கொடுத்திருந்தது.

கிராமத்து மனிதர்கள் என்றால் அவள் மனதில் எப்போதும் தோன்றும் பிம்பம் ஒன்று இப்போது சுக்கு நூறாக உடைந்து போனது.

மாமனாரை எப்போதுமே அவளுக்குப் பிடிக்கும். ஆனால் மாமியாரையும் நாத்தனாரையும் ஏதோ வில்லிகளைப் பார்ப்பது போலத்தான் ஆரம்பத்தில் பார்த்திருந்தாள். அதற்கு நேர் மாறான அக்கறையை அவர்கள் காட்டிய போது பல்லவி முழுதாக அவர்கள் பக்கம் சாய்ந்து போனாள்.

நாத்தனார் இன்றைய யுவதி.‌ அவர் பரந்த மனதோடு நடப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் மாமியார்? பழங்காலப் பெண்மணி அல்லவா?

மகனோடு சமதையாக உட்கார்ந்து ஒரு வார்த்தை அவர் பேசி இதுவரை பல்லவி பார்த்ததில்லை. ஆனால் அவர் உலகமே அவள் கணவன்தான் என்று பல்லவிக்கு நன்றாகவே தெரியும்.

அந்த மகனோடு அவள் முழுதாக ஒரு வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று தெரிந்த போதும் தன்னைத் தாங்கிக் கொள்ளும் அந்தப் பெண்மணியை அவளுக்கு அவ்வளவு பிடித்தது.

அவர் செய்கைகளில் சில சமயம் கட்டிக் கொள்ளலாம் போலத் தோன்றும். செய்யவும் தவறமாட்டாள். அப்போதெல்லாம் பவானி சிரித்துக் கொள்வார்.

மாதவன்… அவனை என்ன சொல்வது?! அவனைச் சார்ந்து இருப்பவர்கள் அனைவரும் அவள் கண்களுக்கு அழகாகத் தெரிவதால் அவனைப் பிடிக்கிறதா? இல்லை… அவனோடு இருப்பதால்தான் இவர்களெல்லாம் அழகாக அவள் கண்களுக்குத் தெரிகின்றார்களா?

ஒன்றாக வாழத் தொடங்கிய இந்த ஒரு மாத காலத்தில் அவளை எந்தப் பொழுதிலும் அவன் சங்கடப்படுத்தியதில்லை. காயப்படுத்தியதில்லை. எப்போதும் அவள்தான் எகிறிக் குதிப்பாள். அவன் அமைதியாகக் கடந்து போய்விடுவான். 

பல்லவிக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த ஊரின் வசதியான வீட்டுப் பிள்ளை. எந்தக் குறையுமில்லாமல்தான் வளர்த்திருப்பார்கள். இருந்தாலும் அவளிடம் தணிந்து போவான். விட்டுக் கொடுப்பான்.

ஆரம்பத்தில் பல்லவி கணவன் மேல் கோபப் பட்டாலும் நாட்கள் செல்லச் செல்ல அந்தக் கோபம் காணாமற் போய்விட்டது. மெல்ல மெல்ல அவனைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தாள் பெண். அவள் மனது அவன்பால் சாய ஆரம்பித்திருந்தது.

அதற்குத் தூபம் போடுவது போல அமைந்து போனது ஜானவியின் விசேஷம். பவானியின் துணையோடு பட்டியல் போட்டுக்கொண்டு கணவனோடு கடை கடையாக ஏறி இறங்கினாள் பல்லவி. அவனோடு நேரம் செலவழிப்பது அத்தனை இதமாக இருந்தது.

அதிகம் பேசமாட்டான். பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டான். ஆனால் அவள் மீதான அவன் அக்கறை ஒவ்வொரு செய்கைகளிலும் தெறிக்கும். பல்லவிக்கு அதில் கொஞ்சம் பெருமைதான்.

விசேஷ நாளன்று அற்புதாவின் வீட்டிற்குக் காலையிலேயே மாதவன் குடும்பம் கிளம்பி விட்டது. சீர்வரிசைகள் சகிதம் இவர்கள் போய் இறங்கிய போது ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தது. தன் கணவன் எங்கு போனாலும் அங்கு கூடியிருக்கும் மனிதர்கள் அவனுக்குக் கொடுக்கும் மரியாதை பார்த்து வியந்து போவாள் பல்லவி.

அன்று முழுவதும் கணவன் பக்கத்திலேயே நின்றிருந்தது அவள் மனதை வெகுவாகப் பாதித்திருக்கும் போலும். அவனை ஒட்டிக்கொண்டே திரிந்தாள். இனிப்பு வேண்டாம் என்று அவன் சொன்னபோது வேண்டுமென்றே அவன் உண்டதை வாங்கிக் கொண்டாள். அற்புதா வீட்டிலும் அவனில்லாமல் அவள் தங்கப் பிரியப்படவில்லை. கூடவே கிளம்பி வந்து விட்டாள்.

வந்ததும் வராததுமாக அவன் உரம் வாங்கக் கிளம்பியது அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஏன்? என்னோடு சிறிது நேரம் இவர் இருந்தால் குறைந்தா போய் விடுவார்? அன்று முழுவதும் அவன் அவள் கண் பார்வையில்தான் இருந்தான் என்பது மறந்து போனது பெண்ணிற்கு.

இரவு அவன் வீடு திரும்பும் வரைப் பொழுதை நெட்டித் தள்ளி இருந்தாள் பல்லவி. சில நேரங்களில் எரிச்சல் கூட வந்தது. இன்றைக்கென்று பார்த்தா அந்தப் பாழாய்ப்போன உரம் தீர்ந்து போகவேண்டும்! வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் பல்லவி. 

இரவு எட்டையும் தாண்டி விட்டது. அவன் இரவு உணவை வெளியே முடித்துக் கொள்வதாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. பவானியிடம் அதைப் போய்ச் சொன்னவள் தானும் உண்டுவிட்டு ரூமிற்கு வந்துவிட்டாள். 

இரவுக் குளியலை முடித்துவிட்டு நைட் ட்ரெஸ்ஸுக்கு மாறியவள் சிறிது நேரம் இதமான பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. கணவன்தான் வருகிறான் என்று தெரிந்த போது பல்லவிக்கு அவ்வளவு உற்சாகம். உடம்பெல்லாம் பரபரக்க அவன் வருகைக்காகக் காத்திருந்தாள் பெண்.

ஆனால்… ரூமிற்குள் வந்தவனின் முகத்தைப் பார்த்த போது பல்லவி திடுக்கிட்டுப் போனாள். இந்த இடைப்பட்ட கால வாழ்க்கையில் அவள் இவ்வளவு இறுக்கத்தை அவன் முகத்தில் பார்த்ததில்லை.

அதிகம் பேசாதவன்தான். உணர்ச்சிகளைச் சட்டென்று காட்டாதவன்தான். ஆனால் பல்லவி என்று வந்துவிட்டால் மாதவன் வேறாகிப் போவான். அந்த முகம் கனிவையும் இணக்கத்தையும் மட்டுந்தான் அவளிடம் காட்டும். 

உள்ளே வந்தவன் அங்கிருந்த மேசை மேல் அவன் கைகளிலிருந்த பொருட்களை வைக்க பவ்லவி அதை என்னவென்று பார்த்தாள். கண்கள் லேசாகச் சுருங்கியது. மனைவியையே பார்த்திருந்தான் மாதவன்.

பல்லவிக்கு முதலில் அவை என்னவென்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கடித உறையின் கலரும் டிசைனும் எங்கோ பார்த்தது போல இருந்தது. எழுந்து வந்தவள் அதை எடுத்துப் பார்த்தாள். கூடவே இரண்டொரு ஃபோட்டோக்கள். அனைத்திலும் பல்லவி. பல்லவியின் கண்கள் தெறித்துவிடும் போல அந்தப் பொருட்களைப் பார்த்தது. கொஞ்ச நேரம் அந்தப் பொருட்களையே வெறித்துப் பார்த்தவள் அந்தக் கடித உறைகளைச் சுக்கு நூறாகக் கிழித்தாள். மேசை மேலிருந்த போட்டோவை வெறிகொண்டவள் போல அவள் அடித்து வீச மாதவன் எதுவுமே பேசவில்லை. மனைவியின் செய்கைகளை நிதானமாகப் பார்த்திருந்தான்.

அப்படியே நிலத்தில் உட்கார்ந்த பல்லவி இப்போது அந்த ஃபோட்டோக்களை எடுத்து அதையும் அவள் கோபம் தீர மட்டும் சுக்கல் சுக்கலாகக் கிழித்தாள். மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியது பெண்ணிற்கு. கைகள் இரண்டாலும் தலையைத் தாங்கிய படி அவள் அப்படியே உட்கார டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான் மாதவன்.

குளியலை முடித்துக்கொண்டு அவன் வெளியே வந்த போதும் பல்லவி அதே கோலத்தில்தான் அமர்ந்திருந்தாள். மனைவியின் அருகில் வந்தவன் அவள் இரு தோள்களையும் பிடித்து எழுப்பி நிறுத்தினான். பல்லவி திடுக்கிட்டுப் போனாள். இத்தனை உரிமையாக இதுவரை அவன் அவளைத் தொட்டதில்லை.

மனைவியைத் தன் கை வளைவிற்குள் நிறுத்தியவன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான். இப்போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

“இது உண்மையா?” அந்த இரண்டு வார்த்தைகளில் பல்லவி தவித்துப் போனாள்.

“சொல்லு பல்லவி… இதெல்லாம் உண்மையா?” வெடித்து அழுதவள் ஆமென்பது போலத் தலையை ஆட்டினாள்.

“ஓ… நாந்தான் அன்னைக்கே கேட்டேனே பல்லவி. நீ அப்பவே எல்லாத்தையும் சொல்லியிருக்கலாமே? எதுக்கு மறைச்சே?”

“மறைக்கலை…” கேவினாள் பெண்.

“முதல்ல அழாதே. மறைக்கலைன்னா இதுக்குப் பேர் என்ன?”

“உங்களை அப்போதான்… எனக்குத் தெரியும்.”

“ம்… இந்த முட்டாளை நம்பி எதுவும் சொல்லத் தோணலை.”

“அப்பிடியில்லை…”

“வேறெப்பிடி பல்லவி? இப்பவும் சொல்லுறேன், அது உன்னோட கடந்த காலம். அதுல என்ன நடந்ததுன்னு நான் கேக்கப் போறதில்லை. இப்போ நீ இந்த மாதவனோட பொண்டாட்டி. அது மட்டுந்தான் எனக்குத் தெரியும். அதுதான் உண்மையும் கூட. அதுல எந்த மாற்றமும் இல்லை. ஆனா…” இதுவரை உறுதியாகப் பேசிக் கொண்டிருந்தவன் இப்போது லேசாகக் கலங்கினான். பல்லவி சடாரென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மாதவனின் கண்களில் இருந்தது என்ன? அவன் ஏற்கனவே ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டது போல இருந்தது அவனது பேச்சு. 

“அந்த கௌதம் என்னென்னமோ சொல்றானே பல்லவி.” பல்லவியின் கண்களில் இப்போது மீண்டும் கண்ணீர். மாதவன் தன் தொண்டையில் அடைத்ததை சிரமப்பட்டு விழுங்கினான்.

“இதுவரைக்கும் என் சுண்டுவிரல் கூட உம்மேல பட்டிருக்காதாம். அதை நீ அனுமதிச்சிருக்க மாட்டியாம்.”

“இல்லை…” மாதவன் சொல்லி முடித்தபோது பல்லவி தன் இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக்கொண்டு கிறீச்சிட்டிருந்தாள். ஆனால் மாதவன் கசப்பாகப் புன்னகைத்தான்.

“நீ இல்லைன்னாலும் அது உண்மைதானே பல்லவி?”

“இது நியாயம் இல்லை. இது நியாயமே இல்லைங்க. இத்தனை நாளும் வேணும்னா நீங்க இதைச் சொல்லி இருக்கலாம். ஆனா இன்னைக்கு… இன்னைக்கு உங்களுக்கு… உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். எம்மனசு என்னன்னு இன்னைக்கு உங்களுக்கு கண்டிப்பாப் புரிஞ்சுது.” பதறியபடியே பேசியவள் மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள். 

மாதவன் கொஞ்ச நேரம் நிதானமாக நின்றிருந்தான். முகம் கசங்கிப் போயிருந்தது. இன்றைக்கு முழுவதும் அவள் இணக்கமாகத்தான் இருந்தாள். அது அவனுக்கும் தெரியும். ஆனால்… முகத்தை இரு கைகளாலும் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.

“இப்பவும் சொல்றேன் பல்லவி. நடந்த கல்யாணம் நடந்ததுதான். அதுல எந்த மாற்றமும் இல்லை. உன்னை யாருக்கும் விட்டுக் குடுக்க என்னால முடியாது.”

“விட்டுக் குடுக்க நானும் சொல்லலையே. என்ன நடந்ததுன்னு…”

“வேணாம்! எனக்கு பழங்கதை எதுவும் வேணாம். இந்த நிமிஷம் இந்த மாதவன் மட்டுந்தான் உம்மனசுல இருக்கான்னு எனக்கு நீ ப்ரூஃப் பண்ணு பல்லவி. எனக்கு அது மட்டும் போதும்.” கணவனின் குரல் உறுதியாக வந்தது.

“என்ன… சொல்றீங்க?”

“நான் உன்னோட புருஷன்தானே பல்லவி?” 

“…………..”

“சொல்லு பல்லவி… நான் உம்புருஷன்தானே?” அவன் குரல் இப்போது லேசாக உயர்ந்தது.

“ஆமா…”

“அப்போ ஏன் நான் உன்னை விட்டுத் தள்ளி நிக்கணும்?” ஆணித்தரமாக வந்தது அவன் கேள்வி. பல்லவி விக்கித்துப் போனாள். இன்று முழுவதும் அவன் அருகாமைக்காக ஏங்கியவள்தான் அவள். இருந்தாலும் இப்போது மனது முரண்பட்டது. தங்கள் தாம்பத்தியம் இப்படியொரு சூழ்நிலையில் ஆரம்பிப்பதா?

“இந்த நிமிஷத்துக்காக இன்னைக்கு பூரா நான் எவ்வளவு கனவு வச்சிருந்தேன் தெரியுமா?” சொல்லிவிட்டு அவள் ஓவென்று அழ மாதவனும் கசப்பாகப் புன்னகைத்தான்.

“உன்னைப் பார்த்த நொடியில இருந்து இந்த நிமிஷத்துக்காக ஆசையை வளர்த்தவன் நான்.”

“அப்போ ஏங்க இப்பிடியெல்லாம்?” பல்லவி கதறினாள்.

“தெரியாது பல்லவி… நான் எப்பிடி உணர்றேன்னு எனக்கே தெரியாது. ஆனா உனக்கும் எனக்கும் இடையில யாரும் வரக்கூடாது.” இரும்பாக நின்றிருந்தான் அவன்.

“வரமாட்டாங்க.”

“அப்போ அதை எனக்கு ப்ரூஃப் பண்ணு.” அதையே திரும்பத் திரும்பச் சொன்னான்.

“ஐயோ ஆண்டவா!” வாய் விட்டுக் கதறிய மனைவியின் இடையில் கை வைத்தான் கணவன். பல்லவி அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அடங்கிப் போனாள். 

அவன் அழுத்தக்காரன் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் எத்தனைப் பிடிவாதக்காரன் என்று முதன்முதலாக அவளுக்குக் காட்டினான். இதுவரை அவளைச் சங்கப்படுத்தியே அறியாதவன் இன்று பல்லவியின் உணர்வுகளைச் சட்டைப் பண்ணாமல் முன்னேறினான். பணிவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை பெண்ணிற்கு.

“ப்ளீஸ்…” கெஞ்சிப் பார்த்தாள். அவன் செவிடனாகிப் போயிருந்தான். 

யாரிடம் எதை நிரூபிக்கிறோம் என்று அவனுக்குமே புரியவில்லை. இருந்தாலும் பெண்டாள்வது மட்டுமே இப்போது பிரதானமாகப் பட்டது மாதவனுக்கு. நினைத்ததை நடத்திவிட்டுத்தான் ஓய்ந்தான்.

***

காலையில் பல்லவி கண்விழித்த போது மாதவன் அங்கு இல்லை. நேரம் எட்டு மணி. எழுந்து கொள்ள மனமே இல்லாததால் அப்படியே கட்டிலில் படுத்திருந்தாள் பெண்.

எத்தனை அழகாக ஆரம்பித்த நாள். இரண்டு பேருமே நேற்றைய இரவிற்காக எவ்வளவு ஆசையாகக் காத்திருந்தார்கள். ஏனிப்படி ஆனது ஆண்டவா? மனதுக்குள் அழுதவள் காலைக் கடன்களை முடித்தாள்.

கணவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவளால். தன்னை வெறுத்து ஒதுக்கிவிடுவானோ என்று அவள் பதற, அவனோ இன்றுதான் உனக்கும் எனக்குமான வாழ்க்கையே ஆரம்பம் என்று நடத்திக் காட்டிவிட்டான்.

கத்தி மேல் நடப்பது போல இருந்தது பல்லவிக்கு. தான் இத்தனை நாளும் நினைத்ததைப் பேசியது போல இனிப் பேசக்கூட முடியாதோ! சண்டைப் போட்டு நாலு அடி அடித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவன் மௌனம்தான் அவளை அஞ்ச வைத்தது. அவன் மனதில் இப்போது என்ன இருக்கும்?

கீழே இறங்கிப் போனாள் பெண். பவானி சமையற்கட்டில் காலை உணவிற்கு ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். மாமியாரைப் பார்க்கவே அவளுக்கு என்னவோ போலிருந்தது.

“அத்தை… கொஞ்சம் தூங்கிட்டேன்.”

“அதெல்லாம் இருக்கிறதுதான். இந்தாம்மா காஃபி, போய்க் குடி.” சமயோசிதமாக பவானி நடந்து கொள்ளவும் ஹாலிற்கு வந்தாள் பல்லவி. ஆஃபீஸ் அறையிலும் அவனில்லை. எதிர்த்தாற் போல வந்த வாணியின் குறும்புப் புன்னகையில் இவள் சங்கடப்பட்டுப் போனாள். பவானிக்கு என்ன தோன்றியதோ… மருமகளின் முகத்தில் தெரிந்த குழப்பம் அவரையும் கவலைக்குள்ளாக்கியது. அதன்பிறகு பல்லவியை ஓரிடத்தில் உட்கார விடாமல் சின்னச் சின்னதாக வேலைகள் கொடுத்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பல்லவியும் வேலைகளில் மும்முரமாகிப் போனாள்.

“பல்லவி!” அந்தக் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் பல்லவி. மாடியிலிருந்து மாதவன்தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“பல்லவி… நீ என்னன்னு போய்ப் பாரு, தம்பி கூப்பிடுறான்.”

“எப்போ அத்தை வந்தாங்க?”

“இப்பத்தானேம்மா மேல போனான். நீ பார்க்கலை?”

“இல்லையே!”

“சரி சரி, போய் என்னன்னு கேளும்மா.” பவானி சொல்லவும் கொஞ்சம் தயங்கியபடியே மாடி ஏறினாள் பெண். பவானியின் நெற்றி லேசாகச் சுருங்கியது.

பல்லவிக்கு நடைத் தளர்ந்தது. கால்கள் பின்னிக்கொள்ள துவண்டு போய் தங்கள் ரூமிற்கு வந்து சேர்ந்திருந்தாள். கணவனைப் பார்க்கவே கொஞ்சம் பயமாக இருந்தது. இவள் உள்ளே வரவும் நிதானமாகக் கதவை நோக்கி வந்தவன் தாழ்பாள் போட்டான். 

பல்லவி திடுக்கிட்டுப் போனாள். இவன் என்னப் பண்ணுகிறான். மனைவியின் மருண்ட விழிகளை அவன் கண்டு கொள்ளவே இல்லை. நெருங்கி வந்தவன் பெண்ணை அணைத்துக் கொண்டான்.

“என்… என்ன இது?”

“ஏன் பல்லவி?”

“இந்த நேர… கீழே அத்தை மாமா… எல்லாரும் இருக்காங்க.” வார்த்தைகள் அவளிடம் சடுகுடு விளையாடின. இருந்தாலும் சொல்லி முடித்துவிட்டாள். என்ன சொல்லி என்ன பிரயோஜனம். கேட்க வேண்டியவன் கேட்கவில்லையே!

“நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்களேன்.”

“பல்லவி!” ஒரு அதட்டல் மட்டுமே போட்டான் மாதவன். அத்தோடு மனைவி அடங்கிப் போனாள். இப்போது அவனோடு எதிர்த்து வார்த்தையாட அவளுக்குத் தைரியம் இருக்கவில்லை.

மதிய உணவிற்கு மகன் கீழே வந்த பிறகும் மருமகள் வரவில்லை என்ற போதே பவானிக்கு ஏதோ இடித்தது. காலையிலிருந்து பல்லவியின் முகத்தில் குழப்பம் மட்டுமே நிறைந்திருந்ததை அவரும் கவனித்திருந்தார்.

“வாணி! போய் ஐயாக்குப் பரிமாறு.” இது அவ்வப்போது நடபெறுவதுதான் என்பதால் வாணியை அனுப்பினார் பவானி. ஆனால் மாதவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“சின்னம்மாவை வரச்சொல்லு வாணி.” 

“சரிங்கய்யா.” வாணி மேலே மாடிக்கு வந்தபோது பல்லவி வானத்தை வெறித்தபடி நின்றிருந்தாள். தூக்கிக் கட்டிய கொண்டையிலிருந்து நீர்த்துளிகள் வடிந்து கொண்டிருந்தன.

“பல்லவிம்மா!” திடுக்கிட்டுத் திரும்பினாள் பெண்.

“ஐயா உங்களைக் கூப்பிடுறாங்க.”

“இதோ வர்றேன் வாணி.”

“சரிம்மா.” வாணி கீழே போய்விட பல்லவிக்குத் தலை வேதனையாகிப் போனது. இந்தக் கோலத்தில் எப்படிக் கீழே போவது? ஏன் இந்த மனிதன் இதையெல்லாம் புரிந்து கொள்ள மறுக்கிறான்? தனிக்குடித்தனம் பண்ணுவதாக நினைப்பா இவனுக்கு!

சிந்தனைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு கீழே வந்தாள் பல்லவி. சாப்பிடாமல் நாளிதழ் ஒன்றைப் புரட்டியபடி இவளுக்காகக் காத்திருந்தான் மாதவன். பவானி இந்த நாடகத்தை மௌனமாகப் பார்த்திருந்தார்.

பல்லவி பரிமாறிய பின்புதான் சாப்பிடவே ஆரம்பித்தான் கணவன். இப்படியெல்லாம் இதற்கு முதல் அவன் நடந்ததில்லை. அன்றொரு நாள் அற்புதா வந்திருந்த போது ஜானவிக்கு இவள் ஏதோ கம்பியூட்டரில் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க அன்று அற்புதாதான் பரிமாறினார். எதுவும் பேசாமல் உண்டுவிட்டுக் கிளம்பி விட்டான். ஆனால் இன்று தலைகீழாக எல்லாம் இருந்தது.

சாப்பிட்டு முடித்துவிட்டுக் கையை அலம்பியவனிடம் துண்டை நீட்டினாள் பல்லவி. அவளை ஒரு பார்வைப் பார்த்தவன் அவள் சேலைத் தலைப்பில் கையைத் துடைத்துவிட்டுப் போய் விட்டான். பல்லவி தடுமாறிப் போனாள்.

வாணிக்கு வெளியே வேலை ஒன்றைக் கொடுத்து அவளை அப்புறப்படுத்திய பவானி தானே வந்து டைனிங் டேபிளைக் க்ளீன் பண்ணினார். ஒரு கண் மருமகள் மேலேயே இருந்தது. ரூமிற்குள் போய் டவலை எடுத்து வந்தவர்,

“பல்லவி… இங்க வந்து உக்காரு.” என்றார். ஏதேதோ நினைவுகளில் சுழன்று கொண்டிருந்த பல்லவிக்கு அப்போதுதான் சுற்றுப்புறம் நினைவு வந்தது.

“அத்தை?” அவள் கேள்வியாகப் பார்க்கவும் கிச்சனுக்குள் அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தார். ஈரத்தோடு அள்ளி முடிந்திருந்த கூந்தலை அவிழ்த்து விட்டவர் அதைத் துவட்ட ஆரம்பித்தார். பல்லவிக்குக் கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. கொஞ்ச நேரம் தன்னைக் கட்டுப்படுத்திப் பார்த்தவள் அது முடியாமற் போகவே அத்தையின் இடையைக் கட்டிக்கொண்டு விசும்பினாள். பவானியின் கைகள் மருமகளின் தலையை வருடிக் கொடுத்தது.

“எதுக்கு இந்த அழுகை பல்லவி? இது எல்லார் வீட்டுலயும் நடக்கிறதுதானே?” அவளை ஆறுதல் படுத்தச் சொன்னாலும் பவானிக்கு எங்கோ உதைத்தது. மாதவனா? தன் மகனா? அழுத்தக்காரன்தான். ஆனாலும் இங்கிதம் தெரிந்தவன். மனைவியைச் சங்கடப்படுத்துவது போல அவன் நடந்துகொள்கிறானா? மாட்டானே!

“பல்லவி… ஏதாவது பிரச்சனையா உங்களுக்குள்ள?” அத்தை கேட்கவும் இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள் பெண்.

“ஐயையோ! என்னம்மா? என்ன ஆச்சு?” பவானி பதறிப் போனார். அதற்கு மேல் பல்லவி தன் பிரியமான அத்தையிடம் எதையும் மறைக்கவில்லை. மனதிலிருந்த அத்தனையையும் கொட்டிவிட்டாள். பவானி கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்துவிட்டார்.

“அத்தை…”

“இதையெல்லாம் தம்பிக்கிட்டச் சொல்லேன் பல்லவி.”

“சொல்ல விட்டாத்தானே அத்தை. உன்னோட கடந்த காலம் எனக்குத் தேவையில்லைன்னு சொல்லியே என்னோட வாயை அடைச்சிர்றாங்க.”

“ஓ… கடந்த காலத்தைப் பத்திக் கவலைப்படலைன்னா எதுக்கு…” அதற்கு மேல் பவானியும் பேசவில்லை. இது அவர்கள் கணவன் மனைவியின் அந்தரங்கம். இதில் நான் கருத்துச் சொல்வது தவறு என்று புரிய மௌனமாகி விட்டார்.

“அவசரப்படாத பல்லவி. கொஞ்சம் பொறுத்துப் போ. அவன் மனசு ஏதோ ஒரு வகையில காயப்பட்டிருக்கணும். அமைதியாகுவான். அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ. இப்போ யாரு என்ன பேசினாலும் அத்தனைக் கோபமும் உம்மேலதான் திரும்பும். ரொம்ப கௌரவம் பார்க்கிற ஆளு.” பவானி தன்னால் முடிந்த அளவு பல்லவியைத் தேற்றினார்.

இருந்தாலும் மனதிற்குள் பாரம் ஒன்று ஏறி உட்கார்ந்தாற் போல இருந்தது. பல்லவியிடமிருந்து இப்படியொரு விஷயத்தை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

இதுவரை வாழ்க்கையை ஆரம்பித்திருக்காத மகன் இப்போது ஆரம்பித்திருக்கிறான் என்றால் மனைவியைக் கைவிடும் நோக்கம் அவனுக்கில்லை. அந்த நினைவே அவருக்குத் தெம்பளித்தது.

***

தன் பக்கத்தில் அசைவை உணரவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் பல்லவி. பவானியுடன் பேசிவிட்டு சிறிது நேரம் கண்ணயர்ந்து இருந்தாள்.

“என்னாச்சு?” இது மாதவன்.

“இல்லை… பயந்துட்டேன்.” புடவைத் தலைப்பைச் சரிசெய்த படி கட்டிலை விட்டு அவசர அவசரமாக எழுந்தாள் பல்லவி. 

“உக்காரு பல்லவி.”

“இல்லை… நான்…” அவள் தடுமாறினாள். கட்டிலை விட்டு எழுந்தவன் மனைவியின் அருகில் போனான். இவன் அருகில் வரவும் சட்டென்று அவள் கால்கள் இரண்டடி பின்னே போயின. மாதவன் முகம் இப்போது அவ்வளவு வருத்தத்தைக் காட்டியது. அவள் முகத்தைக் கையில் ஏந்திக் கொண்டான்.

“ஏன் பிடிக்கலையா?” அந்தக் குரலில் அத்தனைக் கனிவு. அந்த நொடி பல்லவி உடைந்தாள். வெடித்து அழுதவள் அவன் மார்பில் வீழ்ந்து ஓவென்று கதறினாள். மாதவனின் கண்களும் கலங்கிப் போனது. அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“உன்னை நான் ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டேன் பல்லவி. முதல்முறை பார்த்தப்பவே மனசு சொல்லிடுச்சு… இவதான் உனக்கானவ மாதவான்னு. நீ கேட்டியே… ஒரு வார்த்தை கல்யாணத்துக்கு முன்னாடி எங்கிட்டப் பேசினீங்களான்னு. பேசியிருக்கலாம்… அது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. ஆனா நான் பேசப்போய் என்னை நீ வேணாம்னு சொல்லிட்டின்னா?” அவன் நிறுத்தவும் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னால அதைத் தாங்க முடியாது. எப்பிடியோ உன்னை என்னோட வட்டத்துக்குள்ள கொண்டு வரணும். அவ்வளவுதான் அப்போ தோணிச்சு. கொண்டு வந்துட்டேன். உன்னை எப்படியும் சரி பண்ணலாங்கிற நம்பிக்கை இருந்துச்சு.” இப்போது ஒரு பெருமூச்சு விட்டான் மாதவன்.

“ஆசைப்பட்ட மனசுக்குள்ள ஆயிரம் ஆசைகள் இருந்துச்சு. உன்னோட நான் வாழப்போற வாழ்க்கையைப் பத்தி நிறையக் கனவுகள் இருந்துச்சு. அதுக்கான நேரம் இன்னும் சரியா அமையலைன்னுதான் அமைதியா இருந்தேன். ஆனா…”

“ஆனா என்ன?” இப்போது பல்லவி வாய் திறந்தாள்.

“நீ எனக்கு இல்லையா பல்லவி?” கண்கள் கலங்கக் கணவன் கேட்டபோது பல்லவி உடைந்து போனாள்.

“உன்னைப் பத்தி அத்தனையும் அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்கு ஒன்னுமே தெரியலையே. ஒரு தாலியைக் கட்டிட்டா அவ உனக்கு சொந்தமாகிருவாளான்னு கேட்டானே. நியாயந்தானே? வெறும் தாலி மட்டுந்தானே உன்னை எனக்குச் சொந்தமாக்கி இருக்கு.” பல்லவி எதற்கும் இப்போது பதில் சொல்லவில்லை. அவனைப் பேசவிட்டு அமைதியாகக் பார்த்திருந்தாள்.

“உங்கிட்ட நான் நடந்துக்கிற முறைத் தப்புன்னு எனக்கும் புரியுது பல்லவி. ஆனா நான் அப்பிடி நடக்கிறப்போ பல்லவி எனக்கு மட்டுந்தான் சொந்தம்னு இந்த உலகத்துக்கே நான் சொல்ற மாதிரி ஒரு திருப்தி வருது பல்லவி.” அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள் பெண்.

அவன் மனம், அதிலிருக்கும் காயம் இப்போது புரிந்தது பெண்ணுக்கு. குற்றம் அனைத்தும் அவள் மேல்தான். அதைப் போக்கிக் கொள்ளும் கடமையும் இப்போது அவளுக்குத்தான் இருக்கிறது. கணவனைக் கொஞ்சம் புரிந்து கொண்ட போது தைரியம் வந்தது. 

“உங்களுக்கு காஃபி கொண்டு வரட்டுமா?” இயல்பாக அவள் கேட்க அவனும் தன்னை இப்போது மீட்டுக் கொண்டான். 

“வயல்ல வேலை நடக்குது பல்லவி. நான் சீக்கிரமாப் போகணும்.”

“இதோ…” சட்டென்று முகத்தைக் கழுவியவள் கீழே போய் விட்டாள். வாணி அப்போதுதான் தயார் பண்ணி வைத்திருந்த வடையை தட்டில் வைத்தவள் காஃபியும் போட்டுக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தாள். மாதவனும் முகம் கழுவிக்கொண்டு வத்தவன் உண்டு முடித்துவிட்டுக் கிளம்பி விட்டான். 

அன்றைக்கு இரவும் கணவன் வீடு திரும்ப வெகு நேரமானது. நேற்றைக்குப் போல ஒரு குறுஞ்செய்தி மட்டுமே வந்திருந்தது. வீடு வரத் தாமதமானால் அவன் இரவு உணவை வெளியே முடித்துக் கொள்வதுதான் வழக்கம். பவானியை அதிக நேரம் கண்விழிக்க அவன் விடுவதில்லை.

இரவு உணவை முடித்துக் கொண்ட பல்லவி குளியலை முடித்துவிட்டு சாதாரண ஒரு பட்டுப்புடவையை உடுத்திக் கொண்டாள். அன்று வாணியிடம் சொல்லி அந்தப் பெண் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாகக் கொஞ்சம் பூ கட்டிக் வைத்திருந்தாள். 

மாதவன் வருவதற்கு முன்பாக லேசாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டவள் பூவையும் வைத்துக் கொண்டாள். அவன் பைக் சத்தம் கேட்கவும் கீழே இறங்கி வந்தாள் பல்லவி. வீடே அமைதியாக இருந்தது. பெரியவர்கள் உறங்கி இருந்தார்கள்.

கதவை மனைவி திறக்க அதை எதிர்பார்க்காத மாதவன் திடுக்கிட்டுப் போனான். கூடவே அவள் நின்றிருந்த தோற்றம்! அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. பல்லவி இதமாகப் புன்னகைத்தவள் எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் போய் விட்டாள்.

கையில் பால் கிளாஸோடு அவர்கள் ரூமிற்கு அவள் வந்தபோது கணவனின் கண்கள் அவளைக் கேள்வியாகப் பார்த்தது. குளியலை அப்போதுதான் முடித்திருந்தான். பல்லவி அவன் கண்கள்கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. அவன் பாலைக் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள். 

அவன் முன்னுச்சி மயிர் லேசாக நனைந்திருக்க தன் புடவைத் தலைப்பால் அதை உரிமையாகத் துவட்டி விட்டாள். மாதவன் அந்தச் செய்கையிலேயே முழுதாகக் காலியாகிப் போனான்.

துவட்டி முடித்தவள் அந்த முகத்தைத் தன்னருகே இழுத்து முழுவதும் முத்தம் பதித்தாள். மாதவன் கிறங்கிப் போனான். மனைவி அத்தோடு நிறுத்த விரும்பவில்லை என்று தெரிந்த போது கள்ளுண்ட வண்டாகிப் போனான்.

அவர்கள் தவறவிட்ட தலையிரவு அன்று அங்கு அழகாக அரங்கேறிக் கொண்டிருந்தது!