idhayam – 15

அத்தியாயம் – 15

ரேவதியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவள் வெளியே அழைத்து ஆதி வரவில்லை என்றால் நேராக ஆபீஸ் வந்து அவனை அழைத்துச் செல்வாள்.

அன்று விடுமுறை நாள் என்பதால் ரேவதி வெளியே ஷாப்பிங் சென்று இருக்கும் நேரத்தில் சிந்துவை சந்திக்க வந்திருந்தான் சிவா. அவன் வந்தும் கீழே இருக்கும் மரத்தின் நிழலில் அமர சொல்லி மெசேஜை அனுப்பிவிட்டு வேகமாக படியிறங்கி அவனிடம் சென்றாள்.

அவளைக் கண்டவுடன், “ஹாய் சிந்து” என்றான் சிவா புன்னகையுடன்.

அவள் பதிலே சொல்லாமல் அவனின் அருகே அமர, “இன்னைக்கு என்ன கோபம்” என்று நேரடியாக பேச்சை தொடங்கினான்.

“உங்க தங்கச்சியை நீங்க கண்டிக்க மாட்டீங்களா” வந்ததும் வராததுமாக எரிந்து விழுந்தாள். அவள் எதற்காக தன் மீது கோபத்தை காட்டுகிறாள் என்று புரியாமல் திருதிருவென்று விழித்தான்.

ஒரு வழியாக தன்னை சுதாரித்து நிமிர்ந்தவன், “என்னாச்சு சிந்து” என்று அவளிடமே காரணத்தைக் கேட்டான்.

ரேவதி மெல்ல திசைமாறி பயணிக்க தொடக்கி இருந்தாள்.

அவள் முதல் மாதிரி இல்லாமல் இப்போது எல்லாம் அடிக்கடி வெளியே சுற்றுவதாக சிந்துஜா சிவாவிடம் கூறினாள். அவளும், ரேவதியும் ஒரே வயதுடையவர்கள் தான்.

சிந்துஜா படிக்க கொல்கத்தா வந்த விஷயம் தெரிந்தும் ரேவதி சென்னையிலிருந்து இங்கு வர அண்ணனின் காதலும் ஒரு காரணமே. இருவரின் இடையே சண்டை நடந்ததால் இருவரும் நிரந்தரமாக பிரிய வேண்டிய சூழல் உருவானபோது ரேவதிதான் அதை தடுப்பதற்காக சிந்துவுடன் கொல்கத்தா வந்தாள்.

அவள் கொல்கத்தா வந்தால் கண்டிப்பாக அவளின் பின்னோடு சிவாவும் வந்துவிடுவான் என்று கணக்கு போட்டு காய் நகர்த்தினாள். அவள் வந்து ஒரு வருடம் சென்றபின்னர் சிவாவும் அங்கே வந்துவிட இருவரின் இடையே நடக்கும் சண்டையை வேடிக்கைப் பார்த்தபடி ஒதுங்கி போக தொடங்கினாள்.

இருவரும் சண்டை போட்ட நாட்களை எல்லாம் மறந்து, கொஞ்ச இயல்பாக பேச தொடங்கிய சமயத்தில் தனக்கு கிடைத்த நேரத்தை கிஷோருடன் செலவழிக்க கற்றுக் கொண்டாள். ஆதியிடம் அவள் உருகி கரைந்தாலும் அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அவளுக்கு சலிப்பு தட்ட தொடங்கியது.

எப்போதும் அவள் வெளியே அழைத்தாலும் உடனே வருபவன் அவளை அந்த இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு கடமை முடிந்தது என்று சென்றுவிடுவான்.  அதில் எரிச்சலடைய தொடங்கிய நேரத்தில் காதல் என்று சொல்லிக்கொண்டு வந்த கிஷோரை தன் கைபொம்மையாக மாற்றிக்கொள்ள நினைத்து அவனோடு தினமும் பேச தொடங்கினாள்.

ஆதியிடம் அவள் அதிகம் பேசுவதில்லை என்றாலும் அவன் எந்தநேரம் எங்கே இருப்பான் என்ற தகவலை தெரிந்து வைத்துகொண்டு கிஷோருடன் ஊர் சுத்த துவங்கினாள் ரேவதி.

அந்த ஊரில் எங்கே செல்ல நினைத்தாலும் முதலில் ஆதிக்கு அழைத்து அவனை வரசொல்லி அடம்பிடிப்பாள். அவன் வரவில்லை என்று சொல்லிவிட்டால் உடனே கிஷோருடன் கிளம்பிவிடுவாள். இதெல்லாம் கவனித்து கொண்டிருந்த சிந்துவிற்கு அவளின் நடவடிக்கை சுத்தமாக பிடிக்கவில்லை.

‘ஆதியும் நானும் கல்யாணம் பண்ணிகொள்ள போகிறோம்’ என்று பார்ப்பவர்களிடம் கூறுபவள், ‘கிஷோர் தன்னை காதலிக்கிறான்’ என்று சொல்லாமல் அவனோடு சேர்ந்து ஊரையே வலம் வந்தாள். அவளை கண்டிக்க அங்கே ஆள் இல்லை என்ற எண்ணத்தில் அவள் மனம் போன போக்கில் செல்ல தொடங்கினாள்.

ரேவதியின் நடவடிக்கைகளை அவனிடம் ஒப்பித்துவிட்டு, “இதெல்லாம் நல்லது இல்ல சிவா. இவ பண்ற சேட்டையில் ஆதி அண்ணா பெயர் கெட்டு போயிரும் போல” கோபத்துடன் கூறினாள். அவள் சொன்னதையெல்லாம் நினைத்தபடியே அமைதியாக அமர்ந்திருந்தான் சிவா.

அவனுக்கு தெரியுமே ரேவதியின் புத்தி பற்றி. ஆனால் இப்போது தன் நண்பனின் பேரில் தவறு வந்துவிடுமோ என்று யோசித்தவன், “ம்ம் நீ சொல்வதை கொஞ்சம் யோசிக்கணும் சிந்து. ஆதி எவ்வளவு கஷ்டபட்டு இந்த நிலைக்கு வந்திருக்கான் தெரியுமா” என்று வருத்தத்துடன் கூறினான்.

“எனக்கு தெரிந்ததால் தான் சொல்றேன் சிவா..” என்றாள் அவளும் ஆதியை விட்டுகொடுக்காமல்.

“இனிமேல் ரேவதி எங்கே போனாலும் எனக்கு தகவல் சொல்லு மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்று அக்கறையுடன் கூறியவனை அவள் காதல் பார்வை பார்த்தாள்.

சிவா தங்கையை பற்றிய சிந்தனையில் இருக்க,  “ஆதி அண்ணா எப்படி இந்த நிலைக்கு வந்தாரு. அவரு ஏன் அதிகமாக பெண்களோடு பழகுவதில்லை. ஒரு வேலை அவருக்கு பெண்களை..” என்று அவள் சந்தேகமாக இழுக்கும்போது சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“நீ நினைக்கிற மாதிரி ஆதி இல்ல சிந்து. அவன் எப்போதும் சிரிச்சு சந்தோசமாக இருப்பான் காலேஜ் லைப்ல. இப்போ இடைபட்ட இந்த நாலு வருடத்தில் முதல் வருடம் நான் அவனோடு இல்ல. அப்போதான் அவனோட வாழ்க்கையில் என்னவோ நடந்திருக்கு.” என்று தெளிவான குரலில் கூறியவனை கூர்ந்து கவனித்தாள் சிந்து.

அவளின் பார்வை தன் மீது  நிலைப்பதை உணர்ந்த சிவா, “என்னிடம் அவன் இதுவரை அவனோட வாழ்க்கையில் என்ன நடந்தது என்று சொல்லவே இல்ல சிந்து” என்றபிறகுதான் அவள் அமைதியானாள்.

சிந்துஜாவிற்கு ஆதியின் மீது தனி பாசம் இருந்தது. ஒரு முறை அவளுக்கு அடிப்பட்டு ஹாஸ்பிட்டலில் தங்கியிருந்தபோது மஞ்சுளாவை அனுப்பி அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டது ஆதி தான்.

அவள் குணமான பிறகு, ‘நீங்க ஏன் இப்படி செஞ்சீங்க’ என்று கேட்டதற்கு, “உன் என் சொந்த தங்கையாகத்தான் நினைக்கிறேன் சிந்து. அதனால் தான் நான் இதெல்லாம் செஞ்சேன்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அவளின் தலையை பாசத்துடன் வருடிக் கொடுத்தான்.

அன்றிலிருந்து ஆதி அவளுக்கு அண்ணனாகி போனான். சிவாவுடன் அவள் பேசவும் அவனே காரணமானான். சிவா – சிந்து இருவருக்கும் காதலில் எந்த ஒரு தடையும் இல்லை. இருவருமே ராஜாவீட்டு கன்னுகுட்டிகள். பணம் வேண்டுமென்ற அளவிற்கு அவர்கள் செலவு செய்ய இருவரின் வீட்டிலும் அனுமதி இருந்தது.

ஆனாலும் சிவாவிடம் அவள் இயல்பாக பேச மறுத்தது மட்டும் இல்லாமல் அவனின் காதலை புறக்கணித்ததும் சிவா கொஞ்சம் கொஞ்சமாக திசைமாறி செல்வதைக் கண்டு அவன்தான் சிந்துவிடம் பேசி அவளுக்கு புரிய வைத்தான். அதன்பிறகுதான் சிவாவும் – சிந்துவும் இயல்பாக பேசிக்கொள்ள தொடங்கினர்.

“ரேவதி ஏன் இப்படி நடந்துக்கிற” என்று காரணம் புரியாமல் குழம்பினான் சிவா. அவனுக்கு இப்போது தங்கையை நினைத்து வெகுவாக கவலைபட்டான். அதுவும் சிந்து அவளைப்பற்றி சொன்னதை நினைத்தபடி அவன் அமர்ந்திருந்தான்.

சிந்துவும் அவளைப்பற்றிய சிந்தனையில் தான் இருந்தாள். ஆனால் இவளின் மனம் ஆதியை எண்ணிக் கலங்கியது. அவனுக்கு எந்தவிதமான கெட்ட பெயரும் இவளால் வந்துவிடுமோ என்று தனக்குள் சிந்தித்தபடி அமர்ந்திருந்தாள்.

இப்படி ஏதேதோ நினைத்தபடி இருவரும் வெகுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். சிவாவிற்கு தங்கையைவிட ஆதியின் மீதான நம்பிக்கை அதிகமாக இருக்கவே, ‘இனிமேல் இவளால் ஆதிக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கணும் என்றால் சீக்கிரமே இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் வேலையை பார்க்கணும்’ என்ற முடிவிற்கு வந்தவன் அதற்கான வேலைகளைத் தொடங்கினான்.

அதன்பிறகு வந்த நாட்கள் இயல்பாகவே சென்றது.

சிந்து சொன்னது போலவே ரேவதியின் நடவடிக்கையில் மாறுதலை உணர்ந்த சிவா உடனே பிளைட் பிடித்து சென்னைக்கு சென்றுவிட்டான்.

அன்று ஆபீஸ் லீவ் நாள் என்பதால் ரகுபதி வீட்டில் இருந்தார். அவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது வாசலில் ஏதோ நிழலாட கண்டு நிமிர்ந்தவர், “சிவா என்னப்பா சொல்லாமல் கொள்ளாம வந்திருக்கிற” என்று அவனை வரவேற்றவர், “விமலா சிவாவுக்கு காபி எடுத்துட்டு வா” என்றார்

“சித்தப்பா எப்படி இருக்கீங்க” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் அவரின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்

எந்தவிதமான தகவலும் இல்லாமல் நேரடியாக வந்த அண்ணனின் மகனைப் பார்த்தும், “என்ன திடீர்ன்னு வந்திருக்கிற? எப்போ கொல்கத்தாவில் இருந்து வந்த” அவனை விசாரித்தார்.

“நான் நல்லா இருக்கேன் சித்தப்பா..” என்றவன் புன்னகைக்க விமலா காபியுடன் வந்தார்.

“சிவா ரேவதி எப்படி இருக்கிற? இந்த வருடத்துடன் கல்லூரி முடிய போகுது இல்ல. இனிமேல் இங்கே வந்துவிடுவாளா?” என்று மகளைப் பற்றிக் கேட்டதும் சட்டென்று அவனின் முகம் மாறியது.

அவன் மெளனமாக அமர்ந்திருக்க கணவன் – மனைவி இருவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக்கொண்டு, “என்னாச்சு சிவா? ஏன் அமைதியாக இருக்கிற” என்று விமலா மகனிடம் விசாரித்தார்.

“சித்தி நம்ம ரேவதி முன்ன மாதிரி இல்ல” என்று தொடங்கிய சிவா கொல்கத்தாவில் நடந்த விஷயங்களை அவர்களிடம் கூறினான். அவன் சொல்லும் வரையில் பொறுமையாக கேட்டு முடித்த ரகுபதி, “நம்ம ஆதி நல்ல பையன் தானே அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாமே” என்றார் எதார்த்தமாக.

“இல்ல சித்தப்பா நீங்க நினைக்கிற மாதிரி ஆதி இல்ல” என்றவனை அவர் கேள்வியாக புருவம் சுருக்கிவர், “நீ என்ன சொல்ற” என்று கேட்டார்.

“சித்தப்பா அவன் ஒரு பெண்ணை ஐந்து வருடமாக காதலிக்கிறான். அவாங்க இருவருக்கும் இடையே ஏதோவொரு பிரச்சனை அது தான் ஐந்து வருடமாக பிரிந்து இருக்கிறான்” என்று சிவா தனக்கு தெரிந்த சில விஷயங்களை அவரிடம் பகிர்ந்தார்.

அவர் சிந்தனையுடன் அமர்ந்திருக்க, “ஆதியோட வாழ்க்கை நம்ம பொண்ணால் வீணாக போக வேண்டாம். நம்ம வேற இடத்தில் அவளுக்கு நல்ல ஒரு பையனாக பார்த்து சீக்கிரமே திருமணத்தை முடித்துவிடலாம்” என்று விமலா தெளிவாக கூற அவருக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

அவர்கள் இருவரும் ரேவதிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை தேட தொடங்கினர். சிவாவும் அவர்களோடு இணைந்து அவளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினான்.

இதெல்லாம் அறியாத ரேவதி தன் போக்கில் சென்று கொண்டிருந்தாள். அவன் நிறுவனத்தில் மும்பரமான வேலையில் இருக்கும்போது ஆதியின் கைபேசி சிணுங்கியது. ரேவதி தான் அழைத்திருப்பது என்றது, “ஹலோ சொல்லு” என்றான்.

“ஆதி நம்ம இருவரும் வெளியே போயிட்டு வரலாமா?” என்று தயங்கி தயங்கி கேட்டாள்.

“ஏன் இன்னைக்கு எங்கே போகணும்” என்ற ஆதிக்கு அவளை வெளியே அழைத்து செல்வது எரிச்சலாக இருந்தபோது நண்பனுக்கு கொடுக்க வாக்கிற்காக அமைதியாக இருந்தான்.

“இல்ல நாளைக்கு அப்பா அம்மாவிற்கு கல்யாண நாள். அதன் அவங்களுக்கு பிரசண்ட் பண்ண ஏதாவது வாங்க போலாம்னு உன்னைக் கூப்பிட்டேன்” அவள் காரணத்தை கூறிட ஆதியும் வருவதாக ஒப்புக் கொண்டான்.

ஆதிக்கு நாளுக்கு நாள் வேலை அதிகமாக ரேவதி அடிக்கடி அழைத்து வெளியே கூப்பிடுவது அவனுக்கு பேரும் தொல்லையாக இருந்தது. சிவாவிடம் இரண்டு மூன்று முறை அதைபற்றி கூறினான்.

‘அவளால் உனக்கு எந்த பிரச்சனையும் வராதுடா.அப்படியே வந்தாலும் நான் அவளை கவனிச்சுக்கிறேன். ப்ளீஸ் நீ அவளை வெளியே கூட்டுட்டு போட’ என்று சொல்லிவிட்டான் அதன்பிறகு ஆதி ரேவதியைப் பற்றி சிவாவிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டான். அவள் எப்போது வெளியே அழைத்தாலும் அவளை கொண்டுபோய் அந்த இடத்தில் விட்டுவிட்டு சென்றுவிடுவான்.

அவள் பேசிமுடித்து போனை வைத்து, “ஏன் ரேவதி ஆதித்யா நீ லவ் பண்றீயா” என்று கேட்டபடி அங்கிருந்த படுக்கையில் அமர்ந்தபடி அவளிடம் உண்மையை வாங்க தூண்டில் போட்டாள்.

“ஆமா” என்றதும், “அப்புறம் எதுக்கு நம்ம கிஷோர் வந்து காதலை சொன்னதும் அக்சப்ட் பண்ண” என்று கேட்டதற்கு அங்கிருந்த சேரில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தாள்.

“கிஷோர் ஆதியைவிட அழகாக இருந்தான். அப்புறம் நிறைய பணம்  இருக்கு. ஆதியை கல்யாணம் பண்ணின அவன் வேலையை பார்க்கத்தான் போவான். கிஷோரை கல்யாணம் பண்ணின வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்” என்றாள் சாதாரணமாக.

“அப்போ ஆதியின் நிலை” என்று அவள் கேள்வியாக நிறுத்திட, “அவனுக்கு என்ன பிரச்சனை? வேற ஏதாவது  பொண்ணாக பார்த்து கல்யாணம் பண்ணிக்குவான்” கைகளில் தூசு தட்டுவது போல கூறினாள்.

ரேவதியிடம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் இருப்பதைக் கண்டு, “ஆன ரேவதி ஒன்னு சொல்லவா. நீ ஆதியை உண்மையாக லவ் பண்ணிருந்தா மற்ற ஆண்கள் உன் கண்ணுக்கு அழகாக தெரிய மாட்டாங்க. ஜெஸ்ட் டைம் பாஸ்க்கு அவனோட சுத்திட்டு இருக்கிற” என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் சொன்னதையெல்லாம் நினைத்து அவள் வருத்தப்படவே இல்லை. ரேவதிக்கு அது பற்றி எந்த கவலையும் இல்லை. அவளைப் பொறுத்தவரை தன்னிடம் யார் மாட்டினாலும் வன் நல்ல பணமுள்ள பணக்காரனாக இருந்தால் அவனை கல்யாணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட நினைத்தாள்.

அதற்கெல்லாம் ஒரே காரணம் ரகுபதி மட்டுமே. அவர் நேர்மையான மனிதர் என்றே சொல்லலாம். தன்னிடம் சொத்து எவ்வளவு இருந்தாலும் அதை நேர்மை இல்லாத மனிதர்களிடம் ஒப்படைக்க அவர் தயாராக இல்லை. அதிலும் ரேவதியின் இரட்டை புத்தி தெரிந்ததும் உயிலை மாற்றி எழுதுவிட்டார்.

இந்த விஷயம் அறிந்தபிறகு தான் ரேவதியும் பாதை மாறி செல்ல துவங்கினாள். ஒருவர் நல்லவராக இருப்பது பணத்தை சம்பாரிக்கும் போது நாலு நல்லவர்களையும் சம்பாரித்த காரணத்தினால் அவர் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் அவர் அவராகவே இருக்கிறார்.

சிலருக்கு கோடி கோடியாக பணம் இருந்தாலும் அது பற்றவில்லை என்று பணத்தை தேடி ஓடும் வழியில் தவறு செய்து அதற்கான தண்டனையையும் அனுபவிக்கின்றனர். மேலே சொன்னதில் ரகுபதி முதல் ரகம் என்றால், அவரின் மகள் ரேவதியோ அதில் இரண்டாம் ரகம்!

செல்போன் சிணுங்கி அவளின் சிந்தனையைக் கலைத்தது.