Poo13
Poo13
இரண்டு பெண்களும் தன்வியின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். வேறு யாருமல்ல, கௌதமின் அம்மாவும் சித்தியும். இரண்டு பேரின் உடைகளையும் பார்க்கும் போது எங்கோ போக ஆயத்தம் பண்ணிக் கொண்டவர்கள் போலத் தெரிந்தது.
“அதோ! தன்வி கார் வந்திடுச்சு, கிளம்பலாம்.” இளையவர் சொல்ல கௌதமின் அம்மாவும் எழுந்து கொண்டார். தன்வி காரிலிருந்து இறங்க பார்த்த இரண்டு பேரும் மலைத்துப் போனார்கள்.
பின்க் நிறத்தில் ஆங்காங்கே அடர்ந்த சிவப்பில் பெரிய பூக்கள் போட்ட சில்க் சேலைக் கட்டி இருந்தாள். ஒற்றைப் பின்னலில் கொஞ்சம் மல்லிகைப்பூ. சின்னதாக ஒரு பொட்டு.
“ஹேய் தன்வி! இப்பிடியா பார்ட்டிக்கு வரப்போறே?” அளவுக்கு மீறிய அதிர்ச்சியைக் குரலில் காட்டிக் கேட்டார் கௌதமின் அம்மா.
“ஆன்ட்டி… நான் பார்ட்டிக்கு வரலை.” தயங்கிய படி சொன்னாள் பெண்.
“ஏன்? என்னாச்சு?” இரண்டு பெண்களின் ஆச்சரியமும் இன்னும் தீர்ந்த பாடில்லை. தன்வியாவது பார்ட்டிக்கு வராமல் இருப்பதாவது! இது என்ன புதிதாக?
“இல்லை… நான் கௌதமைப் பார்த்துக்குறேன்.” தன்வி நிதானமாகச் சொல்ல பெரியவர்கள் இருவரும் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.
“எதுக்குடா? அதுக்குத்தான் நர்ஸ் இருக்காங்களே?” பெரியவரின் பதிலில் தன்வி இப்போது புன்னகைத்தாள். தான் எங்கே கௌதமைத் தவற விட்டிருக்கிறோம் என்று இளையவளுக்குப் புரிந்தது. பல்லவி என்ற புள்ளியால் ஏன் கௌதம் ஈர்க்கப்பட்டான் என்றும் தன்விக்குத் தெளிவாகப் புரிந்தது.
கௌதம் வாழ ஆசைப்படும் வாழ்க்கை வேறு. ஒரு மனைவியாக அவன் தன்னிடம் எதிர்பார்ப்பதும் வேறு. அவற்றை அவன் மனைவியாகக் கொடுப்பது தன் கடமை என்று புரிந்து கொண்டது பெண்.
தன்வி அதற்கு மேல் எதுவும் பேசாமல் கௌதமின் ரூமை நோக்கிப் போய் விட்டாள். பெரியவர்களும் அவளை அதிகம் வற்புறுத்தாமல் நகர்ந்து விட்டார்கள்.
கௌதம் அவன் ரூமில் படுக்கையில் சாய்ந்திருந்தான். பெரிதாகக் காயங்கள் எதுவுமில்லை. ஆனால் வாங்கிய அடியின் வலி இன்னும் உடம்பில் இருந்தது. கதவு அனுமதியின்றித் திறக்கப்படவும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான்.
“ஹேய் தனு! வா வா.” வாய் வரவேற்றாலும் அவன் கை எதையோ தேடியது. உடம்பில் வலி இன்னும் இருந்ததால் லூசாக இருந்த இரவு ஆடையையே அணிந்திருந்தான் கௌதம். தோள் பகுதியில் ஆடை லேசாக உறுத்தவும் மேலே அணிந்திருந்த ஷேர்ட்டை மட்டும் அகற்றிவிட்டு ஏசியின் குளிரை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருந்தான். ஆங்காங்கே உடலில் தெரிந்த எரிச்சலுக்கு அது இதமாக இருந்தது.
அவன் அனுமதி இன்றி யாரும் உள்ளே வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அப்படியே ஏதோ ஒரு மாகஸினைப் புரட்டியவாறு கட்டிலில் சாய்ந்திருந்தவன் தன்வியை அப்போது அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை.
உள்ளே வந்த பெண்ணும் திகைத்து நின்று விட்டாள். இது நாள்வரை அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே வந்தவள்தான். இன்று ஏதோ ஒரு உரிமையில் சட்டென்று வந்து விட்டாள். வந்த பிறகுதான் சங்கடப்பட்டுப் போனாள்.
ஆனால் கௌதமின் சங்கடம் அத்தனைத் தூரம் நீடிக்கவில்லை. தன்வியின் கோலத்தைப் பார்த்து மலைத்துப் போனான்.
“ஹேய் தனு! கார்ஜியஸ்!” அவன் பாராட்ட பெண்ணின் முகம் சேலையின் நிறத்திற்கு மாறியது.
“பார்ட்டிக்குப் போகலையா? அம்மாவும் சித்தியும் உனக்காக வெயிட பண்ணிட்டு இருந்தாங்களே?”
“இல்லை கௌதம்… போகலை.”
“ஏன்?” கேட்டவனின் குரலில் சுவாரஸ்யம் இருந்தது.
“எனக்கு… உங்கக்கூட…” அதற்கு மேல் அவள் பேசவில்லை. கௌதம் தன் கையைப் பெண்ணை நோக்கி நீட்ட அதைப் பற்றிக் கொண்டாள். அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வைப் பார்த்தான் கௌதம். அழகாக இருந்தாள்.
“தனு… ரொம்ப அழகா இருக்கே.” அந்த ஓரிரு வார்த்தைகளில் தன்வி முழுதாகக் கரைந்து போனாள்.
“கௌதம்! உங்களுக்கு இது பிடிச்சிருக்கா?”
“ரொம்ப.” அவன் சொல்ல அவள் முகத்தில் அப்படியொரு திருப்தி.
“எனக்காகவா?” அந்த ஒற்றைக் கேள்வியில் இன்று வரை அவள் முகத்தில் அவன் பார்த்திராத நாணத்தை முதல் முதலாகப் பார்த்தான் கௌதம்.
“எனக்கும் பிடிச்சிருக்கு கௌதம்.”
“அப்பிடியா?” அவன் அடிக்குரலில் லேசாகச் சிரிக்க தன்வியின் வெட்கம் இன்னும் அதிகரித்தது. அவன் இன்னும் அவளை அருகில் இழுத்துக் கொள்ள,
“கௌதம்.” என்றாள் தன்வி.
“சொல்லுடா.”
“ஒரு டீ ஷர்ட் போடலாமே.” சங்கோஜத்தோடு அவள் சொன்னதைக் கேட்ட கௌதம் வாய்விட்டுச் சிரித்தான்.
“போடலாமே.” வாய் மட்டும்தான் சொன்னது. சொன்னதை அவன் செய்யவில்லை. மேலும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“கௌதம்…”
“ம்…” அவன் குரலில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி தெரிந்தது.
“நான் உங்கக்கிட்ட ஒன்னு… சொல்லணும்.”
“சொல்லு தனு.”
“நீங்க கோபப்படக்கூடாது.”
“ஓ…”
“டென்ஷனாகக் கூடாது.”
“சரி, சொல்லு.”
“நான்… உங்களுக்குத் தெரியாம ஒரு விஷயம் பண்ணினேன்.”
“அப்பிடியா?”
“ஆமா…”
“என்னது?”
“அது… கௌதம்… வந்து…” தடுமாறிய பெண்ணின் முகத்தை நிமிர்த்தினான் கௌதம்.
“எங்கிட்ட உனக்கு என்ன தயக்கம் தனு?”
“தயக்கமில்லை… பயம்.”
“பயமா?”
“ஆமா.” இப்போதும் கௌதம் சிரித்தான்.
“அவசியமில்லை, நீ சொல்லு.”
“புரிஞ்சுக்குங்க கௌதம்.”
“சொல்லுடா…”
“கௌதம்… பல்லவி…” பயந்து பயந்து ஆரம்பித்தாள் தன்வி.
“ம்…” அவன் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது.
“பல்லவி எங்க இருக்காங்கன்னு எனக்குத் தெரியும்.”
“……………….”
“நான்தான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணினேன்.” மூச்சைப் பிடித்துக்கொண்டு அவசர அவசரமாகச் சொல்லிவிட்டுத் திகிலோடு கௌதமைப் பார்த்தாள் பெண். அவன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன்,
“தெரியும்.” என்றான் நிதானமாக.
“என்ன?!” இப்போது தன்வி திகைத்துப் போனாள். தன்னிடமிருந்து லேசாக விலகிய பெண்ணை கௌதம் இறுக்கிப் பிடித்தான்.
“கௌதம்!” தன்வியின் வார்த்தையிலிருந்து பெரிதாகச் சத்தம் வரவில்லை. ஒரு கையால் அவளைப் பிடித்திருந்தவன் மறு கையால் தன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
பழிவாங்கும் எண்ணம் இருந்தாலும் ஏதோவொரு மனிதாபிமானம் தூண்ட கௌதம் பல்லவியைத் தொடர ஆட்களை நியமித்து இருந்தான்.
அவள் வீடு அவளைப் புறக்கணித்த போதும் ஒரு கட்டத்தில் தன்வியின் கை பல்லவி புறமாக நீளுகிறது என்று தெரிந்த போது கௌதம் அந்தப் புள்ளியில் விலகி விட்டான். ஆனால் இப்போது அதைத் தன்னோடு இணைந்து நிற்பவளிடம் எப்படிச் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் அவகாசம் எடுத்துக் கொண்டவன்,
“ஏதோ ஒரு கட்டுக்கடங்காத கோபம் தனு… நான்…” பேசிக்கொண்டு போனவனின் வாயைத் தன் கையால் மூடித் தடுத்தாள் தன்வி.
“ஆ…” வாயை மூடிய அவள் விரல்கள் அவன் மூக்கிலும் பட அலறினான் கௌதம். நேற்று மாதவன் விட்ட குத்தில் கௌதமின் மூக்கின் மெல்லிய பாகங்கள் ரணப்பட்டிருந்தன.
“ஐயையோ!” பெண்ணும் பதறிப் போனாள்.
“சாரி கௌதம்.”
“இட்ஸ் ஓகே.” அவன் சற்று நேரத்தில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
“நம்ம ரெண்டு பேரையும் தவிர நாம இனி யாரைப் பத்தியும் பேச வேணாம் கௌதம். அதுலயும்… நீங்க வேற யாரையும் பத்திப் பேசுறதை என்னால தாங்க முடியலை.” உறுதியாக அவள் சொல்ல கௌதம் சிரித்தான்.
“நீங்க பண்ணின தப்பை நான் சரி செஞ்சேன் கௌதம்.”
“தப்பா?”
“ஆமா… தப்புத்தான். யாரோட சாபமும் நம்ம வாழ்க்கையைப் பாதிக்க வேணாம் கௌதம்.” சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்த தன்வி கௌதமின் முகத்தில் தோன்றிய குறும்பைக் கவனிக்கவில்லை.
“தப்புப் பண்ணுறதுன்னா என்னன்னு உனக்குக் தெரியுமா தனு?”
“நீங்க பண்ணினது தப்புத்தான்… யாரோட கண்ணீர்லயும் நம்ம வாழ்க்கை ஆரம்பிக்க வேணாம் கௌதம்.”
“திரும்பத் திரும்ப தப்புன்னு சொல்லாத தனு.” கௌதமின் விஷமச் சிரிப்பை இப்போதும் அவள் கவனிக்கவில்லை.
“எல்லாரும் சந்தோஷமா இருந்தாத்தான் நாமளும் சந்தோஷமா இருக்கலாம் கௌதம்.” அவள் பாட்டில் பேசிக் கொண்டிருந்தாள்.
“தப்புப் பண்ணுறதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? இப்ப நான் தப்புப் பண்ணிக் காமிக்கட்டுமா?” கேட்டபடி அவன் லேசாகக் கண்ணைச் சிமிட்டவும்தான் தன்விக்கு அவன் நோக்கம் புரிந்தது. பல்லவி என்றொரு பெண் அவனை விட்டு மாயமாக மறைந்து போயிருந்தாள்.
“வாட்?!” அதிர்ந்து போய் அவள் கேட்கும்போது கௌதம் அவள் இடது தோளில் கை வைத்திருந்தான். முகத்தில் குறும்பும் ஆசையும் போட்டி போட்டன.
“கௌதம்… வேணாம், கொன்னுடுவேன்!” அவள் மிரட்ட அவன் பலமாகச் சிரித்தான். தன்வியின் முகத்திலும் அவன் மலர்ந்த சிரிப்பைப் பார்த்து புன்னகைத் தவழ்ந்தது.
“பாவம்னு பார்க்கிறேன். இல்லைன்னா நானும் ரெண்டு அடி போடுவேன்.” அவள் செல்லமாக மிரட்டினாள்.
“அப்பிடியா? எங்க போடு பார்க்கலாம்.” இப்போது அவன் கை உண்மையாகவே அவள் சேலை முந்தானையை இழுத்தது. தன்வியும் உண்மையாக அவன் தோள் பட்டையில் ஒரு அடி போட்டாள் விளையாட்டாக.
“ஆ… அம்மா!” கௌதம் அலறினான்.
“ஐயையோ! சாரி கௌதம்… சாரி கௌதம்.” பதறிக் கொண்டு அவள் ஓடி வர அவளை வாகாக அணைத்தவன்,
“சாரிதான் எனக்கும் வேணும் தனு.” என்றான் சிரித்தபடி. அவன் சிலேடை அப்போதுதான் புரிந்தது தன்விக்கு.
“அடப்பாவி! உண்மையாவே வலிச்சுதுன்னு நினைச்சேன், எல்லாம் பொய்யா?”
“ஹா ஹா… ஆனா இப்போ உண்மையாவே தப்புப் பண்ணலாம் தனு.” அந்தக் குரல் கிறங்கடித்தது பெண்ணை.
“கௌதம்… வேணாம்…” எச்சரித்தாலும் அவள் குரலில் சிரிப்பே மிஞ்சிக் கிடந்தது.
அவன் ஆசைக்குக் கடிவாளம் போடுவதே பெரும் பாடாக இருக்க, அவன் நின்றிருந்த கோலத்தில் அவள் ஆசையைக் கட்டுப்படுத்தவும் அந்தக் கணம் திணறினாள் பெண்.
‘ஆடை ஏன் உன்மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது…
நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்…‘
******************
சுடிதாரின் ஷாலை நன்றாக இழுத்துக் கழுத்தை இன்னும் மூடிக் கொண்டாள் பல்லவி. மெல்லிய குளிரில் அந்தப் பச்சைத் தேயிலை வாசத்தை ஆழ்ந்து சுவாசிப்பது சுகமாக இருந்தது.
இங்கு வந்து நான்கைந்து நாட்கள் கடந்து போய்விட்டன. இதுதான் இனித் தனக்கான வாழ்க்கை என்று தெரிந்த பிற்பாடு அதனோடு ஒன்றிப் போகப் பழகிக் கொண்டாள் பெண்.
சில நேரங்களில் உடம்பில் ஒரு பாகத்தை இழந்தாற் போல வலிக்கும். மனம் கிடந்து விம்மும். எத்தனைத் தூரம் அழக்கூடாது கலங்கக் கூடாது என்று சங்கல்பம் செய்து கொண்டாலும் அவளையும் மீறி உடல் குலுங்க அழுவாள் பல்லவி.
மனது முழுவதும் மாதவனுக்காக ஏங்கும். ஒரு நொடியாவது அவனைப் பார்த்துவிட மாட்டோமா என்று தவிக்கும். ஆனால், அவன் நலன் ஒன்று மட்டுமே தனக்கு முக்கியம் என்பதால் அத்தனையையும் மறைத்துக்கொண்டு புன்னகைக்கப் பழகிக் கொண்டாள் பல்லவி.
அதிகாலையிலேயே விழித்துக் கொள்வாள். அலாரம் இல்லாமலேயே தலதா மாளிகை அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது.
அதன் பிறகு சுடச்சுட ஒரு டீயைப் பருகிவிட்டு ஒரு ஷாலோடு வெளியே உலாக் கிளம்பி விடுவாள். அந்தச் சின்னச் சின்னக் குன்றுகளில் வளர்ந்து நிற்கும் தேயிலைச் செடிகளுக்குள் கால் ஓயும் வரை நடப்பாள். இப்போதெல்லாம் அங்கு வேலைச் செய்யும் பெண்கள் கூட இவளுக்கு நன்கு பரீட்சயம் ஆகிப் போனார்கள்.
வீட்டை நெருங்கும்போது ஏதோ பேச்சுக் குரல்கள் கேட்பது போல இருந்தது பல்லவிக்கு. அவள் காலை நடையை முடித்துக்கொண்டு வரும்போது எப்போதும் கவிதா எழுந்து விடுவது வழக்கம்தான். ஆனால் இன்று யாரோடு பேசுகிறது பெண்? யார் இந்த நேரத்தில் வந்திருப்பது?
உள்ளே வந்த பல்லவி ஏதோ சொர்க்கத்தில் தடுக்கி வீழ்ந்தது போல ஆனந்தப்பட்டு நின்று விட்டாள். தேனடை ஒன்று முழுதாக அவள் மீது கவிழ்ந்து அவள் உடம்பு முழுவதையுமே இனிப்பாக மாற்றி இருந்தது.
எப்போது பார்ப்போம் எப்போது பார்ப்போம் என்று அவள் ஏங்கித் தவித்துக் கிடந்த நொடி அப்போதே அவள் கைகளில் தவழ்ந்து நின்றது.
பேச மறந்து நின்றது அவள் மட்டுமல்ல, அவனும்தான். இமைக்க மறந்து மாதவனும் அவளையே பார்த்திருக்க, சுய நினைவோடு நின்றிருந்த கவிதா ஒரு புன்சிரிப்போடு உள்ளே போய் விட்டாள்.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தார்களோ! பல்லவி சூழ்நிலையின் வீரியத்தை உணர்ந்து கொண்டாள். இதுவரை அவள் முகத்தில் கொட்டிக் கிடந்த காதல் மறைந்து இப்போது கோபம் குடியேறியது.
“எங்க வந்தீங்க?” அந்த இரண்டே வார்த்தைகளில் மாதவன் திடுக்கிட்டுப் போனான். இதுவரை அவன் அருந்திக் கொண்டிருந்த தேவாமிர்தத்தை யாரோ கொட்டிக் கவிழ்த்தது போல உணர்ந்தான். இனிய கானத்தின் நடுவே ஒரு அபஸ்வரம் ஒலித்தது போல இருந்தது அவன் மனைவியின் கேள்வி.
“அதான் தெளிவா எழுதி இருந்தேனில்லை, என்னைத் தேடாதீங்கன்னு.” சூடாக அவள் கேட்க இப்போது மாதவனுக்கும் கோபம் வந்தது. கவிதா போன திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தவன்,
“உள்ள போய் பேசலாமா?” என்றான். அவள் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றிருக்கவும் அவன் கோபம் இன்னும் அதிகரித்தது.
“நம்ம ரெண்டு பேர் பஞ்சாயத்தும் ஊர்ல இருக்கிற அத்தனைப் பேருக்கும் தெரியணும்னு அவசியமில்லை.” அவன் கோபத்தை சற்றும் மதிக்காமல் பல்லவி விடுவிடுவென்று உள்ளே செல்ல மாதவன் கண்களை ஒரு முறை இறுக மூடித் திறந்தான்.
இப்படியொரு வரவேற்பை நிச்சயம் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. முகத்தை இரு கைகளாலும் அழுந்தத் துடைத்தவன் அவளைப் பின் தொடர்ந்து உள்ளே போனான். உணர்ச்சிகளைப் பெரும் பாடுபட்டு அடக்கிக் கொண்டிருந்தான் மாதவன். அத்தனையையும் சுக்கு நூறாக்கியது பல்லவியின் சுடு சொற்கள்.
“இப்போ எதுக்கு இவ்வளவு தூரம் தேடிக்கிட்டு வந்திருக்கீங்க? நான்தான் தெளிவா சொல்லி இருந்தேனில்லை. அதைக் கண்டுக்காம இப்பிடி வந்து நின்னா என்ன அர்த்…” மேலே அவளைப் பேச விடாமல் மாதவனது கரம் பெண்ணின் கழுத்தை நெரித்தது.
“என்னப் பண்ணுறீங்க?” பேச முடியாமல் திணறிய போதும் அவள் வாய் ஓயவில்லை. அவனை நோக்கி அம்புகளாகப் பாய்ந்தது அவள் சூடான வார்த்தைகள்.
“போதும் நாம வாழ்ந்து கிழிச்சதுன்னுதானே நான் கிளம்பி வந்தேன். திரும்பத் திரும்ப வந்து இப்பிடி நின்னா நான் யாரைன்னு பார்க்கிறது?” மாதவனின் பிடி இன்னும் அதிகரித்தது. ஆனாலும் பல்லவி சளைக்கவில்லை.
“ஏதோ கேவலமான பிறவியைப் பார்க்கிறாப்போல எங்க வீட்டுலயும் உங்க வீட்டுலயும் பார்க்கிறாங்க. உங்களுக்கு நான் பொருத்தமில்லைத்தான்.” அதற்கு மேல் பல்லவி பேசவில்லை. பேச மாதவனும் இடம் கொடுக்கவில்லை. அவன் தாபம் அத்தனையையும் அவள் இதழ்கள் மீது காட்டி இருந்தான்.
பல்லவி விடுபட எவ்வளவோ முயன்று பார்த்தாள். ஆனால் முடியவில்லை. கிடைக்காதா கிடைக்காதா என்று அவள் ஏங்கிய சுகம் கிடைக்கும் போது எத்தனை நேரம்தான் அவளாலும் பொய்யாக நடிக்க முடியும்?
ஒரு கட்டத்தில் அந்த சுகத்தைப் பெண்ணும் சேர்ந்தே அனுபவிக்க ஆரம்பித்தாள். ஆனால் அதற்கு அவன் இடம் கொடுக்கவில்லை. ஒரே வீச்சாகத் தன் கைகளுக்குள் நெகிழ்ந்து நின்றவளை அருகிலிருந்த கட்டிலில் தள்ளினான். வேரறுந்த மரம் போல வீழ்ந்தாள் பல்லவி.
“என்ன? ஆடிப்பார்க்குறியா?” மாதவனின் குரல் சத்தமில்லாமல் சீறியது.
“என்ன நினைச்சுக்கிட்டு இருக்க உம்மனசுல? மாதவன்னா இளிச்சவாயன்னா? கொன்னுடுவேன்டி.” அவள் முகத்துக்கே நேரே குனிந்து அவன் கர்ஜிக்க பல்லவி வெருண்டு போனாள்.
“யாரைக் கேட்டுக்கிட்டு இத்தனையும் பண்ணின? எவ்வளவு தைரியம் இருந்தா இவ்வளவு தூரம் என்னை விட்டுட்டுக் கிளம்பி வந்திருப்ப.” கோபம் கொப்பளிக்க அவன் அவளைக் கொன்று விடுவது போல நின்றிருந்தான்.
“என்னடி பண்ணிடுவான் அவன் என்னை? கொன்னுடுவானா? என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியாதா? பெரிய இவளா நீ? தியாகம் பண்ணுறீங்களோ? உன்னைத் தொலைச்சிட்டு எனக்கு மட்டும் என்னடி அங்க மிஞ்சிக் கிடக்கு?” வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழ ஒரு எல்லைக்கு மேல் பல்லவி விசும்ப ஆரம்பித்தாள்.
“ஆழாத! இந்த நாடகம் போடுற வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே.” அவன் பேசப் பேச பல்லவியின் விசும்பல் இன்னும் அதிகரித்தது.
“சொன்னாக் கேக்க மாட்டியா நீ! என்னைக் கொலைகாரன் ஆக்காதே பல்லவி.”
“ஆமா! என்னைக் கொல்லத்தான் இவ்வளவு தூரம் ஃப்ளைட் புடிச்சு வந்தீங்களாக்கும்!” கண்களைத் துடைத்தபடி ஒரு சண்டைக்கு அவள் ஆயத்தமாக இரண்டு கைகளையும் இடுப்பில் குத்திக்கொண்டு அவளை வினோதமாகப் பார்த்தான் மாதவன்.
“ரெண்டு வார்த்தை நீங்க கோபமாப் பேசிட்டா நாங்க பயந்திடுவோமோ? அதுக்கு வேற ஆளைப் பாருங்க.” முகத்தை வெடுக்கென்று திருப்பினாள் பல்லவி.
“உன்னை விட்டுட்டா?” சரசமாகக் கேட்டபடி அவன் கைகளை விரிக்க அதற்குள் மின்னல் வேகத்தில் புகுந்து கொண்டாள் பெண். அத்தோடு நின்று விடாமல் இப்போது ஓவென்று அழ ஆரம்பித்திருந்தாள். மாதவனின் கண்களும் கலங்கிப் போனது.
“அழாத பல்லவி.” அவன் கனிவாகச் சொல்ல அவள் அழுகையும் அணைப்பும் இன்னும் அதிகரித்தது.
“பல்லவீ…” வெளியே கவிதாவின் குரல் கேட்க இருவரும் சட்டென்று விலகினார்கள்.
“டீயைக் குடிச்சிட்டு பேந்து ரெண்டு பேரும் சண்டையைக் கன்ட்டினியூ பண்ணுங்கோ.” கவிதாவின் குரல் கேலியாக வர பல்லவி சிரித்தாள். மாதவன் முகத்திலும் புன்சிரிப்பு அரும்பியது.
ரூமை விட்டு இரண்டு பேரும் வெளியே வர கேலிச் சிரிப்போடு நின்றிருந்தாள் கவிதா. கையில் ட்ரே இருந்தது. அவள் டீயை நீட்ட இருவரும் எடுத்துக் கொண்டார்கள்.
“கவிதா…”
“ஐயையோ! பல்லவி, என்னோட காதுல எதுவும் விழேல்லை, நான் எதையும் கேக்கவும் இல்லை சரியோ? பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோன்னு படிச்சிருக்கிறன். ஆனா இங்க ரெண்டு பேர் கூடினதைப் பார்த்தா… அப்பா சாமி!” மேலே வானை நோக்கிக் கையிரண்டையும் விரித்த கவிதா பலமாகச் சிரித்தாள். மாதவன் கூட பக்கென்று சிரித்து விட்டான்.
“டீயைக் குடிச்சிட்டு நீங்க கன்ட்டினியூ பண்ணுங்கோ. நான் கடை வரைக்கும் போயிட்டு வர்றேன்.” கவிதா வெளியேற சட்டென்று பல்லவியும் வெளியே வந்தாள்.
“கவிதா, கொஞ்சம் இருங்க. இதோ நானும் வர்றேன்.” சொல்லிவிட்டு உள்ளே போகப்போன பல்லவியைப் பிடித்து நிறுத்தினாள் கவிதா.
“பல்லவி! லூசா நீங்க?”
“கவிதா? என்ன…”
“வந்த நேரத்துல இருந்து அந்த மனுஷன் கண்ணு உங்களைத்தான் தேடி அலைஞ்சுது. வெளியே நடக்கப் போயிருக்கீங்கன்னு சொன்னதுல இருந்து வாசலையே பார்த்தபடி இருந்தவங்கள். நீங்க என்னடான்னா வந்ததும் வராததுமா சண்டைப் போடுறியள்.”
“இல்லை கவிதா…”
“இப்போ எங்க கிளம்பிட்டியள்?”
“நீங்க தனியா கிளம்புறீங்களே, நானும் துணைக்கு வர்றேன்.”
“ஏன்? என்னைக் காக்கா தூக்கிக் கொண்டு போயிடுமென்டோ நீங்க துணைக்கு வரப்போறியள்?”
“கவிதா?”
“அடிப் பின்னிடுவேன். போயி நாலு நல்ல வார்த்தை உங்கன்ட மனுசன்கிட்ட சந்தோசமாப் பேசுங்கோ. நான் சமையலைப் பார்க்குறேன். போங்கோ பல்லவி.” ரகசியக் குரலில் கவிதா திட்டிவிட்டுப் போக பல்லவியின் கண்கள் நனைந்தது.
“என்ன? நல்ல மண்டகப்படியா?” வீட்டினுள் வந்தவளிடம் மாதவன் கேலியாகக் கேட்க அவனை முறைத்துப் பார்த்தவள் கிச்சனுக்குள் போனாள்.
“என்ன பண்ணப்போறே பல்லவி?”
“உங்களுக்குப் பசிக்குமே.”
“இல்லை, பசிக்கலை.” சொன்னவனிடம் கேட்க நிறையக் கேள்விகள் முட்டி மோதியது பெண்ணின் மனதில். ஆனாலும் அமைதியாக இருந்தாள். குறிப்பாக பவானியின் மனநிலையைப் பற்றி அவளுக்கு அறிய வேண்டி இருந்தது. அவள் எதையோ தன்னிடம் கேட்க விளைவதை உணர்ந்து கொண்ட மாதவன் மனைவியைத் தன் புறமாகத் திருப்பினான்.
“என்ன?”
“இல்லை… அத்தை…” பல்லவி பேச்சை ஆரம்பிக்க மாதவனின் முகம் கடுகடுத்தது.
“பல்லவி ப்ளீஸ்… என்னைத் திரும்பத் திரும்பக் கோபப்படுத்தாத.”
“என்னாச்சுங்க?”
“அத்தை உன்னை அடிச்சாங்களா?”
“அது…”
“எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு…”
“ஆங்… உங்க அத்தைக்கு ஆத்திரம் வந்து அறைஞ்சா நாங்க சும்மா விட்டுருவமா? தைரியம் இருந்தா எம் புருஷன் இங்க இருக்கும் போது எம் மேல கை வைச்சுப் பாருங்கன்னு சொல்லிட்டோமில்லை!” பெருமைப் பேசிய மனைவியைக் காதலாகப் பார்த்தான் மாதவன். கை இயல்பாக அவளை அருகே இழுத்தது.
“கிராமத்துப் பண்ணையாரே! இது உங்க வீட்டு மாடியறை இல்லை. தெரிஞ்சவங்க வீடு. கொஞ்சம் அடக்கியே வாசிங்க.”
“அப்பிடியா?” அவள் பேச்சிற்காக வேண்டியே அவளிடம் இப்போது வம்பு வளர்த்தான் கணவன்.
“வாய்தான்டி உன்னை வாழ வைக்குது.” வெளியே தேயிலைப் பறித்துக் கொண்டிருந்த பெண்களின் கண்களில் படாத இடத்துக்கு அவளை இழுத்துக் கொண்டவன் அவள் திணறத் திணற முத்தமிட்டான். மாதவனின் பல்லவி மயங்கிப் போனாள்.
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை… கொஞ்சம் தா…