காண்டீபனின் கனவு
‘ஓம் ஸுதர்ஸநாய வித்மஹே……………………….
மஹாஸ்வாலாய தீமஹி………………………………………
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’!!!!!
என்ற மந்திரம் அந்த இருளடைந்த பாதையில் கேட்டுக் கொண்டே இருந்தது. எங்கிருந்து வருகிறது இந்த பீஜ மந்திர ஒலி?
யார் ஜெபிப்பது? இங்கு மனிதனோ அல்லது மிருகமோ இல்லை வேறு எதுவோ இருக்க சிறிதும் வாய்ப்பில்லை. அப்படி ஒரு அமானுஷ்யம் நிறைந்த இடமாகத் தோன்றியது.
அதோ ஒரு ஒளிக்கீற்று! ஆம்.. மெல்ல மெல்ல என்னை நோக்கி வருகிறது. இல்லை, நான் அதை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன்.
எங்கே போகிறேன்? இந்த இடம் எனக்குப் புதிதல்ல. அங்கே தெரியும் அந்த சிறு புள்ளியாகிய ஒளியும் எனக்குப் புதிதல்ல. ஆனால் தினமும் அதைத் தான் நான் தொட முயற்சிக்கிறேன். முயற்சி இது வரை பலனளிக்கவில்லை.
இன்று நிச்சயம் அதை அடைந்தே தீர வேண்டும். நடந்தால் வேலைக்கு ஆகாது. ஓடு, ஓடு…. இன்னும் வேகமாக…வேகமாக.. போ… அதோ பார் அந்த ஒளி பெரிதாகிக் கொண்டே வருகிறது. அதாவது நீ அதை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்.
‘மூச்சு வாங்குகிறதே!’ இல்லை, உனக்குள்ளே இருக்கும் தேகசக்தி இதற்கெல்லாம் உன்னை சோர்ந்து போக விடாது. எங்கோ கேட்கும் தன் மனதின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஓடினான்.
“ஆமா… நான் தொடணும். அந்த ஒளிய நெருங்கனும். அப்போ தான் இந்த இடம் என்னனு தெரியும். எஸ்…கமான்..வீர்…ஃபாஸ்ட்..ஃபாஸ்டர்….”
“ஆ…” ஏதோ ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்தான்.
விழுந்ததில் பலமான அடி ஒன்றுமில்லை. கைகளால் அவ்விடத்தை தடவிப் பார்த்தான். வழு வழுப்பான சமதளம். ‘இத்தனை நேரம் கரடு முரடான பாதையில் தானே ஓடிக்கொண்டிருந்தோம்.’
“குக்கூ…குக்கூ….குக்கூ…” குயில் கூவியது.
‘இந்த இடத்தில் பறவையா…’
“ஓ..ஷிட்…டைம் ஆச்சு…மை ட்ரெய்நிங்!” பதட்டத்தில் மூச்சு வாங்க கண்களைத் திறந்தான்.
“ஊ…ஃ..ப்.. மறுபடியும் அதே கனவு.”தலையைச் சிலுப்பிக் கொண்டான் வீர் என்கிற வீரேந்திரன்.
“ஹே! சாம். எங்கடி போய்த் தொலைஞ்ச, எட்டு மணிக்கு எழுப்பி விட சொன்னா.. மணி ஒன்பதாகுது. ஆர்ச்சரி ட்ரெய்நிங் மிஸ் பண்ண மாட்டேன்னு உனக்குத் தெரியாது.” பக்கத்து பெட்டில் இன்னும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.
**
வீரேந்திரனின் தாத்தா ஒரு யோகி. மனைவி இறந்தபிறகு பிள்ளைகளோடு வாழ்ந்தாலும் தனக்குள்ளேயே ஒரு போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தார். எப்போதும் அமைதியே உருவாக இருப்பவர்.
வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. தோட்டம் ,வயல், பண்ணை என அனைத்தும் வைத்துக் கட்டிக் காப்பவர். எல்லாவற்றுக்கும் ஆட்கள் இருப்பதால், மேற்ப்பார்வை பார்ப்பதோடு சரி. மற்ற நேரங்களில் தன் பூஜையறையே கதியென்று கிடப்பவர்.
ஒரு மகன், ஒரு மகள் அவருக்கு. மகன் மோகன் மருமகள் வேதா. இவர்களின் ஒரே மகன் வீரேந்திரன்.
மகள் சுஜாதாவிற்கு தந்தையைப் பிரிய மனமில்லாததால், வீட்டோடு மாப்பிள்ளை வேண்டுமென தன் மனைவியின் தம்பி கிருஷ்ணனை மகளுக்கு மணமுடித்தார். இவர்களுக்கு பிறந்தவள் ஒரே மகள் சம்ரக்க்ஷா.
அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒன்றாக வாழ்கின்றனர். வீர் பிறந்து ஐந்து வருடங்கள் கழித்துத் தான் சம்ரக்க்ஷா பிறந்தாள்.
அத்தனை நாள் அவனையே அனைவரும் செல்லமாக வளர்த்தனர். சம்ரக்க்ஷா பிறந்த பிறகு அவளிடம் கவனம் திரும்ப, வீர் முகத்தை தூக்க ஆரம்பித்தான். அனைவரிடமும் கோபம் கொண்டான். சாபிடாமல் முரண்டு பிடித்தான்.
சுஜாதா தான் அவனை பழைய படி சமாதானம் செய்து, “நீ பெரியவன். நீ தான பாப்பாவ பாத்துக்கணும்” என அவன் கையில் குழந்தைப் பொறுப்பைக் கொடுக்க, அவனும் குழந்தைப் பருவத்திலிருந்து பெரிய மனிதனாக அப்போதே உணர ஆரம்பித்து விட்டான்.
இருந்தாலும் சம்ரக்க்ஷா வளர்ந்து நடக்க ஆரம்பிக்க சிறிது சிறிதாக வீருடன் போட்டிக்கு வந்தாள். அவன் என்ன வைத்திருக்கிறானோ அதுவே தனக்கும் வேண்டும் என்பாள்.
அவன் அவளைத் திட்டிக் கொண்டே இருப்பான்.
“என்கூட போட்டிக்கு வராத சாம்” என முறைக்க, சிறு வயதில் அவன் மிரட்டலுக்கு பயந்தவள், போகப் போக அவனைப் போலவே அவன் இல்லாத சமயத்தில் மற்றவர்களை மிரட்டுவாள்.
வீட்டில் சம்ரக்க்ஷாவின் ஆட்சி நடக்கும், வீர் இல்லாத சமயம்.
அவன் வந்துவிட்டாலோ அவள் ஒடுங்கிக் கொண்டிருந்தாள். அதுவும் சில காலம் தான். பிறகு அவனுக்கு ஈடாக அவளும் நடந்து கொள்ள ஆரம்பித்தாள்.
வயது ஆக ஆக இருவருக்கும் போட்டா போட்டி தான். அவன் பண்டிகைக்கு இரண்டு சட்டை எடுத்தால், இவளும் இரண்டு, அவன் வெளியில் சென்று சாபிட்டால், இவளும் அன்று வெளியிலேயே சாப்பிடுவாள்.
அவன் நண்பர்களோடு வெளியே சுற்ற, இவளும் தன் தோழிகளைக் கூட்டிக் கொண்டு வெளியே சுற்றுவாள்.
ஆனால் இருவருக்கும் வீடு என்பது மிகவும் பிடித்த ஒன்று. இப்போது வீட்டை விட்டு பல ஆயிரம் மையில்கள் கடந்து அமெரிக்காவில் இருந்தனர் இருவரும். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கடைசியில் இங்கு வேலைக்கு என்று அனுப்பினார் மோகன். அவனுக்குப் போட்டியாக இங்கேயே கல்லூரிப் படிப்பைத் தொடர அவனோடு வந்தாள் சம்ரக்க்ஷா.
“அப்பா, நான் தனியா கூட போறேன். ஆனா இந்த பிசாச என் கூட தள்ளிவிடாதீங்க.” வீர் பெட்டியை பேக் செய்து கொண்டே கத்தினான்.
“மாமா. என்னை நீங்க அனுப்பலானா வீரும் போகக் கூடாது.” சம்ரக்க்ஷா பிடிவாதமாக அமர்ந்தாள்.
“நீயும் தான் டா” என அவளைக் கண்டு புன்னகைக்க,
வீர் அங்கிருந்த சிறு தலையணையை எடுத்து அவள் மேல் வீச, அதை லாகவமாகப் பிடித்து அவனுக்கு அழகு காட்டினாள்.
“ஏண்டி, நீயும் அவனும் ஒன்னா. எல்லாத்துக்கும் அவனோட போட்டி போடாத.” சுஜாதா அவள் காதைத் திருக,
“ஆ…வலிக்குது ..ம்மா.நான் போவேன். அவன் ஏன் தெரியுமா என்னை வரவேண்டானு சொல்றான்? அங்க போய் வித விதமா பொண்ணுங்கள சைட் அடிகலான்னு போறான். வரப்ப ஒரு வெள்ளக் காரிய தள்ளிட்டு வரப் போறான் பாருங்க. தாத்தா அன்னிக்கு ருத்ர தாண்டவம் ஆடப் போறாரு.” காதைத் தேய்த்துக் கொண்டே இந்த வார்த்தையை அவள் கூறவும் பதறிப் போன வேதா,
“நீ கண்டிப்பா போகணும் சம்மு. சுஜா, அவ கூட போனாதான் நமக்கு நிம்மதி” என சுஜாதாவிற்கும் மட்டும் புரியும்படி கண்ணசைத்தார்.
வேறு வழியின்றி, அண்ணியின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் ஒத்துக் கொண்டார் சுஜாதா.
“மோகன், மாமா யாத்திரை போயிருக்கார். அவர் வந்ததும் இவங்கள அனுப்பலாமே!” கிருஷ்ணன் மோகனிடம் சொல்ல,
“இல்ல மாமா. இப்போ விட்டா அவனுக்கு அந்த வேலை அமையாது. இது தான் சரியான நேரம். அப்பா கிட்ட நாம சொல்லிக்கலாம்.” எங்கோ பார்த்துக் கொண்டு வீரைக் கிளப்புவதில் குறியாக இருந்தார். அதில் வெற்றியும் பெற்றார்.
வீரும் சாமும் முறைத்துக்கொண்டே ஒன்றாக விமானம் ஏறினர். இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருக்கவே செய்தது.
***
அன்று சண்டே என்பதால் சம்ரக்க்ஷா அடித்தாலும் எழுந்து கொள்ள மாட்டாள். அவளுக்குத் தேவை என்றால் தவிர. கத்திக் கொண்டிருந்த வீர், எழுந்து அவசரமாகக் கிளம்பி வந்தான்.
இன்னும் அவள் கவுந்து படுத்திருப்பதைப் பார்த்ததும் எரிச்சல் வர,
“என் கழுத்தருக்கவே கூட வந்திருக்கா..”புலம்பிக் கொண்டே பாலை மட்டும் அவனில் வைத்து சூடு பண்ணி அருந்திவிட்டு, அவள் அருகில் சென்றான்.
“ஹே! சாம்… நான் கிளம்பறேன். வீட்டை லாக் பண்ணிட்டு போறேன். அட்லீஸ்ட் ரைஸ் மட்டுமாவது வச்சுடு. நேத்து செஞ்ச சாம்பர ஊத்தி சாப்டுக்கறேன்.பை….!!!” என அவள் காதின் அருகில் சென்று கத்தினான்.
அவள் அந்த சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.
“நாயே! ஏன் டா இப்படி கத்தி என்னை எழுப்புன..சண்டே கூட உனக்கு என்ன கிளாஸ் வேண்டி கிடக்கு. மாமாக்கு போன் பண்ணி சொன்னா நீ காலி. அதுவும் உன்னை ஆர்ச்சரி மட்டும் கத்துக்கவே கூடாதுன்னு சொல்லிருக்காரு. சொல்லட்டா அவர் கிட்ட.” எழுந்து அவனை மிரட்டிவிட்டு மீண்டும் நேராகப் படுத்துக் கொண்டாள்.
“யம்மா தெய்வமே! நீ தூங்கு. தெரியாம உன்ன சீன்டிட்டேன்.வாய தொறந்த… மவளே நீ பசங்கள சைட் அடிக்கறத அத்தைக்கு போன் பண்ணி சொல்ல வேண்டியது வரும்.” பதிலுக்கு மீண்டும் அவளை லாக் செய்தான்.
போர்வைக்குள் இருந்த அவள், ஒரு நொடி பயந்தாலும்…
“சரி சரி ரைஸ் கூட சூடா ரசமும் வைக்கறேன். போய்ட்டு வா” என சமாதனம் பேசினாள்.
அடுத்த நொடி அவன் அங்கு இல்லை. அவனுக்குப் பிடித்த ஆர்ச்சரி அகடமிக்குச் சென்று விட்டான்.
அவனை அது மட்டும் கற்றுக் கொள்ளக் கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தார் அவன் தந்தை.
அவன் படிக்கும் போதே இயற்பியல் மீதும் கம்பியூட்டர் மீதும் மோகம். அடுத்தவர் வீட்டின் வைஃபை பாஸ்வோர்டை ஐந்தே நிமிடத்தில் எடுத்துக் கொடுக்கும் அளவிற்கு திறமைசாலி.
அதேபோல இயற்பியல் பாடத்தில் எப்போதும் அவன் தனி நாட்டம் காட்டுவான். தூரத்தில் ஒருவன் வரும்போதே அவன் எந்த அளவு தூரத்தில் இருக்கிறான். எத்தனை நிமிடத்தில் இங்கு வந்தடைவான் என்பது முதற்கொண்டு கச்சிதமாக கூறும் ஆற்றல் பெற்றிருந்தான்.
இதெல்லாம் முதலில் பெருமையாக நினைத்திருந்தார் மோகன். அவரது தந்தை, அதாவது வீரேந்திரனின் தாத்தா சில குடும்பப் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைக்கும் வரையில் தான் அந்தப் பெருமை நிலைத்தது.
அதன் பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது.
அவனது திறன், வேகம். ஆற்றல் என அனைத்தும் மோகனுக்குக் கசந்தது. அவன் ஒரு மக்குப் பிள்ளையாக பிறந்திருக்கக் கூடாதா என்று கூட நினைத்தார்.
தனக்குத் தெரிந்தது வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று தந்தையிடம் வாக்குறுதி பெற்றிருந்தார்.
“நான் வாக்குத் தவறினா என் உயிர் போகற நாள் நெருகிடுச்சுன்னு அர்த்தம்” என்றார் மோகனின் தந்தை.
அப்பாவின் பேச்சு மோகனுக்கு வருத்தத்தை தந்தாலும், அவரது காலம் முடிந்துவிட்டது, வாழ்ந்து முடித்துவிட்டார். இனி வருங்காலம், பிள்ளையின் எதிர்க்காலம் பற்றி தான் கவலைப் பட வேண்டும் என மனதைத் தேற்றிக் கொண்டார்.
தாயின் மறைவுக்குப் பிறகு, எல்லாமாகவும் இருந்து வளர்த்த தந்தை, மோகனுக்குப் பெரிது தான். ஆனாலும் அவர் எப்போது இந்த விஷயத்தை வீரேந்த்ரனிடம் கூறி விடுவாரோ என்றே பயந்திருந்தார்.
வீரா, தாத்தாவின் செல்லப் பேரன். அவனுக்கு நுணுக்கமாக சில விஷயங்களை அவர் சொல்லிக் கொடுத்திருந்தார். “ஒரு விஷயத்தை வெற்றிகரமாக முடிக்க என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பதை விட, எதைச் செய்தால் அது தோற்றுப் போகும் என்பதையும் சேர்த்து கவனி, அப்போ தான் நீ சுலபமா அதைப் பெற முடியும்” என்பார்.
ஒரு கடினமான பசில் ஒன்றைக் கொடுத்து அவனை சால்வ் செய்யச் சொல்வார். தோட்டத்திற்குச் சென்றால், தென்னை மரங்களில் சரியாக தேங்காயை குறி பார்த்து அடிக்கச் சொல்வார்.
பத்து காய்களில் குறிப்பிட்டு ஒரு காயைக் காட்டி, அதை மட்டும் அடிப்பது, தூரத்தில் புள்ளியாக இருக்கும் ஆட்களை அடையாளம் கண்டு பிடிப்பது என்று அவனது பார்வையை கூர் தீட்டி வைத்தார்.
தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தால் அவனுக்குப் பொழுது போவதே தெரியாது. புதுப் புது விஷயங்களை அவனுக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
வீரேந்திரனுக்குத் தெரியாமல் அவனைப் பல வழிகளில் தயார் படுத்தி இருக்கிறார் என்பது அவனே அறியாத ஒன்று.
அதற்குக் காரணம் ,அவர் தனது அறையில் வைத்துப் பூஜை செய்து வரும் நீலக்கல், வீரேந்திரன் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது தான். அதைப்பற்றி இன்னும் அவனிடம் சொல்லாமல் மறைத்தே வைத்திருந்தார்.
இந்த விஷயத்தை ஒரு நாள் மோகனிடம் சொன்ன பிறகு மோகனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. அதனாலேயே தன் தந்தை யாத்திரைக்கு சென்ற பிறகு, வீரேந்திரனை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டார்.
தாத்தா சொல்லிக் கொடுத்த எதையும் செய்யக் கூடாது. குறிப்பாக குறி பார்த்து எரியும் எந்த ஒரு காரியத்தையும் அவன் விளையாட்டாகக் கூட செய்யக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
இவர்கள் வெளிநாடு சென்று ஒரு வருடம் முடிந்துவிட்டிருந்தது. யாத்திரைக்குச் சென்ற அவனது தாத்தாவும் இன்னும் வரவில்லை. போன் செய்தால், நலமாக இருக்கிறேன். வரும் போது வருவேன் என்று சொல்லி வைத்துவிடுவார். அவர் ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என்று மோகனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது. இருந்தும் தந்தை வெளியில் எதுவும் சொல்லாத வரையில் நிம்மதியடைந்தார். குறிப்பாக வீராவிடம்!
அவர் சொல்லாமலே வீரா பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பது பாவம் மோகன் அறியவில்லை.
***
“ஹே! கமான். லெட்ஸ் ஸ்டார்ட், வீர் இஸ் ஹியர்.” வெள்ளைக் காரன் ஒருவன் வீர் வருவதைப் பார்த்து வில் அம்புகளை வரிசையில் வைத்தான்.
ஐந்து பேர் வரிசையாக நிற்க, முதலில் நின்றவன் வீரா.
அங்கே தெரிந்த மானிட்டரில் முதலில் பெயர்களை பதிவு செய்யவேண்டும். அதில்தான் அம்பு எறிவதில் யார் எத்தனை புள்ளிகள் பெற்றார்கள் என்று காட்டும்.
அனைவரும் தங்களின் பெயர்களைப் பதிவு செய்ய, வீர் தனது பெயரை அங்கே டைப் செய்தான். அப்போது தனது தாத்தாவை நினைத்துக் கொண்டான். அவர் சிறு வயதில் அப்பயிற்சி செய்ததாகக் கூறியதிலிருந்து அவனும் இதில் ஆர்வம் காட்டினான்.
வழக்கமாக தனது புனைப் பெயரைத் தான் இது போன்ற இடங்களில் உபயோகிப்பான்.
ஒவ்வொரு முறை அப்பெயரை அவன் உபயோகம் செய்யும் பொழுதும், வெற்றி அவனுக்குத் தான்.
ஏனெனில் அது அவனது தாத்தாவின் பெயர். அவனுக்கு அவன் தாத்தா தன் பெயரையே வைத்தார். அவர் பெயரைச் சொல்லி அழைக்க முடியாது என்பதால் வீரேந்திரன் என்றே அழைத்தனர்.
அவர் மட்டும் அவனை தன் பெயரிலேயே அழைப்பார்.
“காண்டீபன்!!!”
“எனது மூளையானது பிரபஞ்சத்தில் இருந்து ஒரு பெறுதல் மட்டுமே, அறிவு,வலிமை மற்றும் உத்வேகம் ஆகியவற்றைப் பெறும் ஒரு மையம் இருக்கிறது. இந்த மையத்தின் ரகசியங்களில் நான் ஊடுருவவில்லை. ஆனால் அது எனக்குத் தெரியும்.”
– – நிகோலா டெஸ்லா