Poo15

எதுக்கு நீங்க இப்ப இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறியள் பல்லவி?”

 

பிடிவாதம் இல்லை கவிதா, இது வலி.”

 

எனக்கும் உங்கட மனசு விளங்குது பல்லவி. அதுக்காக? இப்பிடியே நீங்க வாழ்க்கையைக் கடத்திட முடியுமோ? புருஷன்ட வீடென்டு ஒன்டு வந்தாலே பிரச்சினை வருதென்டுதானே அர்த்தம்? இது உங்களுக்கும் தெரிஞ்சுதானே இருக்கும்?” கேட்ட கவிதாவைப் பார்த்து பல்லவி புன்னகைத்தாள். 

 

இந்தச் சிரிப்புக்கு அர்த்தம் என்னவாம்?”

 

நீங்க சொன்ன மாதிரி என்னோட புகுந்த வீடு இருக்கல்லை கவிதா.” சொன்னவளை வியப்பாகப் பார்த்தாள் கவிதா.

 

நம்ப முடியலை இல்லை? ஆனாலும் அதான் உண்மை. எங்கக் கல்யாணம் என்னோட விருப்பத்தோட நடக்கலை. எங்க அப்பாவைத் தவிர வீட்டுல இருக்கிற அத்தனைப் பேரும் மாதவன் எனக்குப் பொருத்தமா இருப்பார்னு சொன்னாங்க. நானும் ஏதோவொரு நம்பிக்கையில தலையை ஆட்டிட்டேன்.”

 

அட! அப்போ உங்க கல்யாணத்துக்குப் பின்னால பெரிய கதை ஒன்டே இருக்குது போல?!” வாயைப் பிளந்த கவிதாவைப் பார்த்துச் சிரித்தாள் பல்லவி.

 

மேல சொல்லுங்கோ பல்லவி. அதுதான் கல்யாணம் நடந்துட்டுதுன்னு எனக்கும் தெரியும்தானே. பேந்து? எனக்கு சஸ்பென்ஸ் தாங்கேல்லை. ஃபர்ஸ்ட் நைட்ல மெல்ட் ஆகிட்டீங்களோ? உங்கன்ட மனுசன்தான் சும்மா ஜம்முன்னு இருக்காரே. இந்தப் பல்லவி அப்பிடியே மயங்கி, அத்தான்… என்டு கால்ல விழுந்திருப்பாங்க.” அபிநயத்தோடு சொல்லிவிட்டு கவிதா சிரிக்க பல்லவியும் சிரித்தாள்.

 

அதான் இல்லை.”

 

என்னது? இல்லையோ?‌”

 

ம்ஹூம்… இல்லை.”

 

அப்போ என்னதான் நடந்தது பல்லவி?”

 

அவங்கக் கூட சண்டைப் போட்டேன்.”

 

அடக்கடவுளே! ஃபர்ஸ்ட் நைட்ல சண்டையோ?!”

 

ம்… என்னோட இஷ்டம் இல்லாம என்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு திட்டினேன்.”

 

ஐயையோ! இதுவும் நடந்ததோ? கட்டாயப்படுத்தினவங்களோ?”

 

இல்லைத்தான்… இருந்தாலும் எனக்கு சண்டைப் போட கொஞ்சம் ஸ்ட்ரோங்கான காரணம் வேணுமே.”

 

சரியான வில்லி பல்லவி நீங்க.” கவிதா சொல்ல இப்போது இரு பெண்களுமே கிளுக்கிச் சிரித்தார்கள்.

 

பேந்து என்ன நடந்தது?”

 

சண்டையைப் போட்டுட்டு நான் தூங்கிட்டேன்.”

 

என்னது!? தூங்கிட்டீங்களோ!? அப்ப வேற ஒன்டும் நடக்கல்லையோ?” கவிதாவின் முகம் அஷ்ட கோணலாகியது.

 

ஹா… ஹா… இல்லை கவிதா.”

 

அடச்சீ! நல்லா ஏமாத்திப் போட்டியள் பல்லவி. நானும் பெரிசா ஒரு ரொமான்ஸ் வரப்போகுதுன்னு நினைச்சிட்டன்.”

 

ரொமான்ஸ் எல்லாம் ஒன்னுமே இல்லை கவிதா. ஆனா… அன்பு, ஆதரவு, கனிவு எல்லாமே அந்த வீட்டுல எனக்குக் கிடைச்சுது.” இதுவரைக் கேலியாகப் பேசிக் கொண்டிருந்த கவிதா பல்லவியின் அந்தக் குரலில் அவள் கரத்தைத் தட்டிக் கொடுத்தாள்.

 

ஊர்ல பெரிய குடும்பம். மாதவன் எங்கிற பெயருக்கு அந்த ஊர்ல ஒரு தனி மரியாதை இருந்துச்சு. மாதவனோட பொண்டாட்டி எங்கிறதால அந்த மரியாதை எனக்கும் கிடைச்சுது. அதுல எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனா அதே மரியாதை அந்த வீட்டுலயும் எனக்குக் கிடைச்சுது.”

 

ஓ…”

 

எம் மாமியார் இவரோட ரொம்பப் பேசவே மாட்டாங்க. ஆனா இவர்னா அவங்களுக்கு உயிர், அது எனக்கு நல்லாவே தெரியும். அந்த மகனோட நான் இன்னும் வாழவே ஆரம்பிக்கலைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் எம்மேல பாசமா இருந்தாங்க.”

 

ரியலி? அவ்வளவு நல்லவங்களோ?”

 

ம்… இதையெல்லாம் எங்கிட்டச் சொன்னது யார் தெரியுமா? என்னோட நாத்தனார்.”

 

வாட்! குடும்பமே விக்ரமன் படத்துல வர்ற லாலாலாலாகுடும்பம் போல இருக்குது!”

 

ஆமா… எல்லாருமே புரிஞ்சு நடந்துக்கிட்டாங்க. எங்களுக்குள்ள ஒழுங்கான ஒரு புரிதல் இல்லைன்னும் அவங்களுக்குத் தெரியும். இருந்தும்… என்னை வெறுக்கலை… ஒதுக்கலை. எல்லாத்துக்கும் மேல மாதவன்.” பேசிக்கொண்டே போன பல்லவி இப்போது நிறுத்தி விட்டாள்.

 

மௌன ராகம் மோகன் தோத்துப் போயிட்டார் உங்க வீட்டுக்காரர்கிட்ட.”

 

அவங்கெல்லாம் இவர் பக்கத்துல கூட நிக்க முடியாது.” சட்டென்று சொன்னாள் பல்லவி.

 

ஓஹோ! அப்பிடியோ சங்கதி!” கவிதா மீண்டும் கேலியில் இறங்கிவிட்டாள்.

 

இதெல்லாம் நடந்த பிறகு உங்கன்ட ஐயாவோட கொஞ்சம் கொஞ்சமாப் பேசி… பழகி… நெருங்கி… பேந்து ம்… ம்ம்… ம்ம்ம்…” கவிதா ராகம் பாட பல்லவி சிரித்து விட்டாள். முகம் லேசாகச் சிவந்து போனது. ஆனால் மனதுக்குள் மாதவன் தன்னை முதல் முதலாக நெருங்கிய தருணம் நிழலாடியது. 

 

அதையெல்லாம் இந்தப் பெண்ணிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ன? அதன் பிறகும் நேரங்காலம் பார்க்காமல் அவன் தன்னை நெருங்கியதெல்லாம் படம் போல மனதில் ஓடியது.

 

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறி ஒரு கட்டத்துல சந்தோஷத்தோட உச்சத்துல இருந்தோம் கவிதா.”

 

“…………………”

 

யார் கண்ணு பட்டதுன்னு தெரியலை. அந்த சந்தோஷம் முழுசாத் தொலைஞ்சு போச்சு.”

 

இல்லை பல்லவி, அப்பிடிச் சொல்லாதீங்கோ. ஆண்டவன் எவ்வளவுக்கெவ்வளவு சோதிப்பாரோ அதே அளவுக்குக் கருணையும் காட்டுவார்.” கவிதா முந்திக்கொண்டு சொல்ல பல்லவி கசப்பாகப் புன்னகைத்தாள்.

 

எங்க போறதுன்னு தெரியாம நீங்க நின்ட நேரம் தன்வியை உங்கன்ட கண்ணுல அதே ஆண்டவர்தான் காட்டினவர் பல்லவி.” கவிதா நிதர்சனத்தைக் கூற பல்லவியின் தலை அதைத் தானாக ஆதரித்து ஆமென்றது.

 

உண்மைதான்.”

 

எல்லா கஷ்டத்துக்குப் பின்னாலயும் ஒரு நிரந்தர நிம்மதி இருக்கு பல்லவி. அதை மறந்து போயிடாதீங்கோ.”

 

நான் கேக்கணும்னு நினைச்சேன் கவிதா. தன்வி மேடமை உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

 

தன்வியின்ட அப்பாவுக்கு இங்க டீ எஸ்டேட் இருக்கு. அதுல என்ட அப்பாவோட அவருக்கு நல்ல பழக்கம். இந்த வீடு தன்வியின்ட கெஸ்ட் ஹவுஸ்தான். இங்க வந்தா அவியள் இங்கதான் தங்குவினம்.”

 

ஓ…” பல்லவிக்கு இந்தத் தகவல் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

 

பல்லவி என்டு ஒரு பிள்ளை வரும். எந்தக் குறையும் இல்லாம கொஞ்ச நாளைக்குப் பாத்துக் கொள்ளுங்கோ. வேற எந்தத் தகவலும் இப்போதைக்கு அந்தப் பிள்ளைக்குத் தேவையில்லை என்டு தன்வி சொன்னவா. அதாலதான் நானும் உங்கக்கிட்ட எதுவும் விபரமாச் சொல்லையில்லை பல்லவி.”

 

ஓ…”

 

தன்விக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. பல்லவிக்கு அது தெரியுமோ?”

 

இல்லை…” பல்லவி தடுமாறினாள்.

 

நீங்கள் எதுக்காக ஊருக்குப் போக ஏலா என்டு சொல்லுறியள் என்டு எனக்குத் தெரியும் பல்லவி. தன்வி இனி அதுக்கு இடம் குடுக்க மாட்டா என்டு எனக்கு நல்லாத் தெரியும். தன்வியோட நான் பேசினனான். சந்தோஷமா இருக்குறா. நீங்க கவலைப்படாம உங்கன்ட வாழ்க்கையை வாழுற வழியைப் பாருங்க பல்லவி.” 

 

கவிதா பேசப்பேச பல்லவி அமைதியாகி விட்டாள். அவள் முகத்தில் சிந்தனையின் சாயலைப் பார்த்த கவிதாவும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. நிதானமாகச் சிந்தித்து அவளே ஒரு முடிவிற்கு வரட்டும் என்று விட்டு விட்டாள்.

 

*********************

 

மாதவனும் பல்லவியும் நுவரெலியா வந்திருந்தார்கள். மீண்டும் ஒரு முறை இலங்கை வரவேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும் கவிதாவின் வற்புறுத்தலின் பேரில் இருவரும் கிளம்பி வந்திருந்தார்கள். இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் அதுவும் ஒன்று.

 

அப்போதும் பல்லவிக்கு நன்கு பிரசித்தமான கோயில்களுக்குப் போகவேண்டும் என்றுதான் ஆசை. அதை அவள் சொன்ன போது கவிதா பார்த்த பார்வையின் உஷ்ணம் தாங்காமல் வாயை மூடிக்கொண்டாள்.

 

உங்களுக்கு விசரே பல்லவி? இப்ப கோயில் ரொம்ப முக்கியமோ உங்களுக்கு? சாமி முக்கியம்தான். அதே சாமிதான் வீட்டுல இருக்கிற ஆசாமியையும் கவனிக்கச் சொல்லி இருக்கிறார், விளங்குதோ?’ அதோடு பல்லவி வாயை மூடியவள்தான். அதன் பிறகு கவிதா செய்த எந்த ஏற்பாட்டிற்கும் மறுப்புச் சொல்லவில்லை.

 

மாதவனுக்கும் கவிதாவிற்கும் இடையில் அழகானதொரு நட்பு உருவாகி இருந்தது. கல்மிஷம் இல்லாமல் பழகும் அந்தப் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது!

 

அத்தோடு தனக்கு சாதகமாகவே அனைத்தையும் அந்தப் பெண் திட்டமிடுவது அவனுக்கும் புரிந்திருந்ததால் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். இல்லாவிட்டால் பல்லவியோடு போராட அவனால் முடியாதே.

 

கண்டியிலிருந்து நுவரெலியா செல்ல தனியாக ஒரு வாகனத்தை ஏற்பாடு பண்ணி இருந்தாள் கவிதா. இரண்டு நாட்கள் தங்க இருவருக்கும் ஹோட்டலும் புக் பண்ணி இருந்தாள். ட்ரைவரே நல்ல கைட் என்பதால் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.

 

தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே தூரத்தில் தெரிந்த யூகலிப்டஸ் மரங்களை ரசித்தபடி அவர்கள் பயணம் இனிதாக ஆரம்பித்திருந்தது. ஊசி முனை வளைவுகளில் தெரிந்த பள்ளத்தாக்குகளை கணவனின் முழங்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி ரசித்துக் கொண்டிருந்தாள் பல்லவி.

 

பச்சைப் பசேலென பார்க்கும் இடமெல்லாம் அழகு. பாறைகளும் குன்றுகளும் அதனிடையே மெல்லிய கீற்றாய் வழிந்தோடிய சின்னஞ்சிறிய நீரோடைகளும் கண்களை மூட விடவில்லை. 

 

காட்டுப் பூக்கள் ஆங்காங்கே தலைக் காட்டி தங்கள் அழகையும் விருந்து வைத்தனை. சுற்றிவர ஈரம் கலந்த காற்றில் லேசான பச்சை வாசம். 

 

ஓரிடத்தில் பாறைகளுக்கு நடுவே நீரூற்று சற்று அதிகமாக இருக்கவும் வாகனத்தை நிறுத்தச் சொன்னாள் பல்லவி. மாதவனுக்குக் கூட அந்த இடம் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. சாலையோரம் வழிந்த நீர் அவர்கள் பாதையையும் நனைத்திருந்தது.

 

பார்க்க மட்டுமல்லாது அந்த நீரோடையின் சலசலப்பு காதுக்கும் இன்ப நாதமாக இருக்கவே கணவனின் தோளில் சாய்ந்து கொண்டு சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டாள் பல்லவி. அந்த நிமிடமே இறந்து போய்விடக் கூடாதா என்பது போல ஒரு சுகம் அவள் உடலை ஆக்கிரமித்தது. 

 

மாதவனின் அணைப்பு லேசாக இறுகவும் கண்களைத் திறந்து பார்த்தாள் பெண். அவன் முகத்தில் எப்போதும் போல இப்போதும் அந்தக் கார்முகில் வண்ணனின் மாயச் சிரிப்பு! பல்லவி விலகிக் கொண்டாள்.

 

சிலுசிலுவென்ற அந்த நீரோடையில் கால்நீட்டி நனைத்தாள். பாசிபடர்ந்த அந்தப் பாறைகளின் நடுவே துலக்கி வைத்தாற் போல ஓரிரு இடங்கள் தென்பட அதன் வழுவழுப்பைக் கை நீட்டி அனுபவித்தாள்.

 

கவனம் பல்லவி, வழுக்கிடப் போகுது.” மாதவன் எச்சரித்து முடித்த போது அங்கு இரண்டு குரங்குகள் வந்துவிட அதற்கு மேல் அவர்கள் அங்கு தாமதிக்கவில்லை.

 

பாதைகள் வளைவும் நெளிவுமாக இருக்க மேலே ஏற ஏறக் குளிர் லேசாக ஆரம்பித்தது. மழையின் சிலுசிலுப்பும் லேசாக இருக்கவே சுற்றிவர லேசாக இருள் பரவ ஆரம்பித்துவிட்டது. எல்லாம் கவிதாவின் ஏற்பாடுதான். 

 

பல்லவி… ஈவ்னிங் வெளிக்கிட்டாப் போதும். அப்பதான் அங்க போய்ச் சேரேக்குள்ள ஒரு ஏழு எட்டு மணியாகிடும். ரொமாண்டிக்கா இருக்கும் தெரியுமோ!கவிதா கண்ணடித்துச் சொன்னபோது உண்மையிலேயே பல்லவி விழுந்து விழுந்து சிரித்தாள். இப்போது அதை நினைத்த போது பல்லவிக்குச் சிரிப்புத்தான் வந்தது.

 

என்ன சிரிப்பு?” மாதவனின் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் பெண். கவிதா சொன்னதை அவனிடம் சொன்னபோது அவனுமே சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்பு ஏதோ ரசித்துச் சிரித்தாற்போல இருந்தது பல்லவிக்கு.

 

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் போலும். அதன் அமைப்பு அப்படித்தான் தெரிந்தது. வெளியே பெரிதாக மரங்கள் சூழ்ந்திருக்க மஞ்சள் ஒளியைக் கக்கியபடி இருந்த விளக்கு வெளிச்சத்தில் அந்த இடமே சுந்தரமாக இருந்தது.

 

காரை ட்ரைவர் பார்க்கிங்கில் விட ஒரு ஊழியர் வந்து இவர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டார். வந்து சேர்ந்துவிட்டதாக கவிதாவிற்கு ஒரு மெஸேஜ் அனுப்பிவிட்டு இருவரும் உள்ளே போனார்கள்.

 

கட்டடம் மட்டுமல்ல, அங்கிருந்த அனைத்துமே ஆங்கிலேயர் பாணியைப் பின்பற்றி அமைக்கப் பட்டிருந்தன. தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்த தம்பதியினர் மலைத்துப் போனார்கள். 

 

பல்லவி மலைத்தது சில நொடிகள்தான். அதன்பிறகு பக்கென்று சிரித்து விட்டாள். மாதவனும் புன்னகைத்தான். அவன் முகத்தில் குறும்பு நர்த்தனம் ஆடியது. 

 

ஐயே! போதுமே!” கணவனின் கன்னத்தை லேசாக நிமிண்டியவள் பாத்ரூமிற்குள் போய்விட்டாள். மாதவன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான்.

 

ரோஜா இதழ்கள் பரப்பியிருக்க அந்த வெள்ளைப் படுக்கை அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது. ரூமை புக் பண்ணியிருந்த கவிதா வேண்டுமென்றே தேனிலவுத் தம்பதிகள் என்று குறிப்பிட்டிருந்தாள். அதனால் ஏற்பாடு பலமாகவே இருந்தது.

 

அந்த மெல்லிய ரோஜா இதழ்களைக் கையால் தடவிக் கொடுத்தான் மாதவன். மனம் முழுவதும் சொல்ல முடியாத இன்பமொன்று அவனை லேசாக அழுத்தியது. இந்தப் பெண் பக்கத்தில் இருந்தாலே என் பொழுதுகளெல்லாம் எப்படி இத்தனை இன்பமாக மாறிப் போகின்றன?!

 

அந்த மடல்களை அள்ளி முகர்ந்து பார்த்தான். அதன் மென்மை மட்டுமல்ல, வாசமும் கூட அவளைத்தான் ஞாபகப் படுத்தியது. அள்ளிய மலர்களை அவன் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் போதே பாத்ரூம் கதவு திறந்தது.

 

வெந்நீரில் லேசாக ஒரு குளியல் போட்டுவிட்டு அந்தப் புதுக் கைத்தறிச் சேலையைக் கட்டிக்கொண்டு வந்தாள் பல்லவி. கையிலிருந்த இதழ்களை வேண்டுமென்றே அவள் மீது மென்மையாக வீசினான் மாதவன்.

 

ஏங்க… என்னங்க பண்ணுறீங்க?” சிணுங்கிய மனைவியைப் பார்த்துச் சிரித்தவன்,

 

சேலை… புதுசா என்ன?” என்றான்.

 

ம்… நல்லா இருக்கா?” ஆவலாகக் கேட்டாள் மனைவி.

 

ம்…”

 

கண்டி டவுன்ல வாங்கினோம். இங்க இதுமாதிரி ஹான்ட்லூம் சாரீஸ் ரொம்ப அழகா இருக்குங்க. அதையும் ஒரு தினுசா இங்க இருக்கிற சிங்கள மக்கள் கட்டுறாங்க தெரியுமா?”

 

ம்… நானும் கவனிச்சேன்.”

 

நாளைக்கு நான் அதேமாதிரி உங்களுக்குக் கட்டிக் காட்டுறேன் பாருங்க.”

 

ஓஹோ! மேடமுக்கு இப்போ அதெல்லாம் தெரியுமா? நான் பொண்டாட்டியைக் காணலையேன்னு அங்க பைத்தியக்காரன் மாதிரி அலைஞ்ச திரிஞ்சிருக்கேன். நீங்க இங்க கூலா ஷாப்பிங் பண்ணி என்ஜாய் பண்ணியிருக்கீங்க!” பல்லவியின் முகம் இப்போது லேசாக வாடிப் போனது.

 

ஏய்! நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்டா.”

 

இல்லைங்க… வேணும்னுதான் போனேன். எல்லாத்தையும் மறக்கணும். முக்கியமா உங்களை மறக்கணும்.” சொன்னவளின் கண்கள் கலங்கிப் போனது. மாதவன் எதுவும் பேசவில்லை. டவலை எடுத்துக்கொண்டு குளிக்கப் போய்விட்டான். பல்லவி துளிர்த்த கண்ணீரை விழுங்கிக் கொண்டாள்.

 

இரவு உணவு மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது. எல்லா இடங்களிலும் ஆங்கிலேயரைப் பின்பற்றியவர்கள் சாப்பாட்டில் மட்டும் தாய்நாட்டை விட்டுக் கொடுக்கவில்லை.

 

நன்றாகப் பொன்னிறமாக வறுத்த கோதுமை மாவில் தேங்காய்ப் பூ சேர்த்து மணக்க மணக்க குழாய் புட்டு, மட்டன் குழம்பு, சிக்கன் ஃப்ரை, தேங்காய் பால், காரசாரமாக ஒரு தேங்காய் சம்பல் என உணவு சூப்பராக இருந்தது. குளிர் அதிகமாக இருந்ததாலோ என்னவோ நன்றாகப் பசிக்கவும் பல்லவியே அன்று ஒரு பிடி பிடித்தாள்.

 

சாப்பிட்டு முடித்துவிட்டு ஸ்வெட்டரை மாட்டிக்கொண்டு இருவரும் வெளியே கிளம்பி விட்டார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்திலேயே ஒரு ஏரி இருப்பதாக கூட வந்த ட்ரைவர் சொல்லவும் பொடி நடையாகக் கிளம்பினார்கள். 

 

அத்தனை தூரத்தில் இருக்கவில்லை என்பதால் குளிரையும் பொருட்படுத்தாது பல்லவியும் தைரியமாக வந்துவிட்டாள். ஆனால் மாதவனின் கை வளைவை விட்டு நகரவில்லை. வானில் பூரண நிலா பவனி வர ஏரியின் பரப்பு ஒளி வெள்ளமாக மிதந்து கொண்டிருந்தது. 

 

அமைதியே அந்த இடத்தை வியாபித்திருக்க அதைக் குலைக்க மனமில்லாதவர்கள் போல இருவரும் மௌனித்து நின்றிருந்தார்கள். 

 

இரண்டு மேகக் கூட்டம் வெள்ளி நிலவை மறைக்க பல்லவியின் விழிகள் வானத்தையே பார்த்திருந்தன.

 

நிலவை மேகம் மறைச்சிடுச்சுங்க.” அவள் சொல்லவும் மாதவனும் அதே நிலவைப் பார்த்தான்.

 

அது நிலா பல்லவி. அதை யாராலயும் மறைக்க முடியாது.”

 

இப்போக் காணலையே!”

 

கொஞ்ச நேரந்தான் பல்லவி. தன்னை மூடின மேகத்தைத் தூக்கித் தூரப் போட்டுட்டு அந்த நிலா இப்போ ஜம்முன்னு வெளியே வரும் பாரு.” 

 

வருமா?”

 

வரும்… வரணும்.” அவன் அழுத்திச் சொல்லவும் இப்போது அவள் புன்னகைத்தாள்.

 

போகலாங்க, குளிருது.” நேரம் செல்லவும் இருவரும் திரும்பி வந்து விட்டார்கள். ரூம் மிதமான வெப்பத்தில் இதமாக இருந்தது. வெளியே இருந்த குளிருக்கு அந்த வெப்பம் சுகமாக இருக்க ஜன்னலோரம் போய் நின்று கொண்டாள் பல்லவி. பின்னோடு மாதவன் வருவது புரிந்தது.

 

இது நம்ம வீட்டு மாடியறை இல்லைதான், இருந்தாலும்…” அவள் தோளிரண்டில் கைகளை வைத்தவன் அவளைத் தன் புறமாகத் திருப்பினான்.

 

இங்கயும் நான் அடக்கி வாசிக்கணுமா?” அன்று அவள் சொன்ன அதே வார்த்தைகளைத் திருப்பிக் கேட்டான் கணவன்.

 

நான் சொன்ன உடனேயே நீங்க கேட்டுட்டுத்தான் வேற வேலைப் பார்ப்பீங்க.”

 

பல்லவி… இது நியாயமில்லை. நீ சொன்னதை அன்னைக்கு நான் கேக்கலையா?”

 

யாரு? நீங்க?”

 

அடியேய்! நீ என்னை நல்லவன்னு ஒத்துக்கவே மாட்டியா?”

 

அதுக்கு நீங்க நல்லவனா இருக்கணுமே.”

 

அடிப்பாவி! தமிழ் பொண்ணாடி நீ? கட்டின புருஷனையே கெட்டவன்னு சொல்லுறியே.”

 

கெட்டவன் மட்டுமில்லை, பக்கா ரௌடி.”

 

ஓஹோ!” அவன் கரம் அவள் இடையை மெல்ல வளைத்தது.

 

நான் சொல்லலை.” அவள் அவனைக் கேலி பண்ணவும் மாதவன் வாய்விட்டுச் சிரித்தான். முகத்தில் அசடு வழிந்தது.

 

சாரி பல்லவி… இதுக்கு மேல முடியாதுடி.” அந்த ஏகாந்தத்தை இருவருமே ரசித்தார்கள், ருசித்தார்கள். இதுவரை அமைதியாக நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் இளமை இப்போது கட்டவிழ்ந்து களியாட்டம் போட்டது.

 

பல்லவி இந்த உலகத்தையே மறந்து போனாள். இந்த உலகத்து மாந்தரெல்லாம் அவள் எண்ணத்தை விட்டு எங்கோ தொலைந்து போனார்கள். சிந்தை முழுவதும் அவள் நாயகன் மட்டுமே நிறைந்திருந்தான்.

 

நிறைவான அமைதியில் இருவருமே மௌனித்திருந்தார்கள். மாதவனின் கை அவள் கலைந்திருந்த கூந்தலை வருடிக் கொடுத்தது. மஞ்சத்தின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்த ஒன்றிரண்டு ரோஜா இதழ்களைப் பொறுக்கி அவள் தாமரை முகத்தின் மேல் போட்டான்.

 

பல்லவி…”

 

ம்…”

 

எப்போ ஊருக்குக் கிளம்புறோம்?” அவன் மீண்டும் ஆரம்பித்தான். ஆனால் அவள் எதுவும் சட்டென்று பேசவில்லை.

 

ஏய்! உன்னைத்தான் கேக்குறேன்? எப்ப போகலாம்?”

 

உங்களுக்கு எப்பத் தோணுதோ அப்ப போகலாம்.” சொன்ன மனைவியை இழுத்து அவன் மார்பின் மேல் போட்டுக் கொண்டான் மாதவன்.

 

உனக்குப் பிடிக்காதது எதுவும் நடக்காது பல்லவி. உன்னை நான் விட்டுக் குடுப்பேனா?”

 

சேச்சே! நான் அப்பிடிச் சொல்லலைங்க. நான்… எனக்கு…” அவள் தடுமாறினாள்.

 

நான் கொஞ்ச நாள் எங்க வீட்டுல இருக்கட்டுமா?”

 

எதுக்குடா?”

 

அம்மா அப்பாக்கூட கொஞ்ச நாள் இருக்கேனே.” மனைவியின் பேச்சில் சிறிது நேரம் யோசித்தான் மாதவன்.

 

முதல்ல நம்ம வீட்டுக்குப் போகலாம். அதுக்கப்புறமா நானே உன்னை உங்க வீட்டுல கொண்டுப் போய் விடுறேன், சரியா?”

 

ம்…” அப்போதும் மனைவியின் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி இல்லை என்பதை மாதவன் கவனிக்கத் தவறவில்லை. இருந்தாலும் அவனால் இந்த நிலைமையில் மனைவிக்கு விட்டுக் கொடுக்க முடியவில்லை. 

 

சில கால தாமதங்கள் உறவுகளுக்குள் பெரிய விரிசலை உண்டு பண்ணி விடும் என்பதை அவன் நன்கு அறிவான். பல்லவியின் குடும்பத்தைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. ஆயிரம்தான் இருந்தாலும் அவர்கள் பல்லவியைப் பெற்றவர்கள். பல்லவியோடு அவர்கள் கடுமையான முறையில் நடந்து கொண்டிருந்தாலும், அது அவர்களது நிஜமான முகமில்லை. அந்த இடத்தில் தனது அம்மா இல்லாதிருந்தால் அவர்கள் நடவடிக்கை வேறுமாதிரித்தான் இருந்திருக்கும்.

 

ஆனால் தனது குடும்பம்? பல்லவியைப் பற்றிய அவர்களது நிலைப்பாடு என்ன? எந்த அளவிற்கு அவர்களுக்கு உண்மைத் தெரியும்

 

தங்கள் இருவருக்கும் இடையிலான எந்த அந்தரங்கமும் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிவதை அவன் விரும்பவில்லை. ஆனால் அவன் அனுமதியில்லாமலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

 

பல்லவியை யாரும் தவறாக நினைப்பதை மாதவனால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் தவறு செய்திருந்தாலும் அவன் நிலைப்பாடு அதுதான். அப்படியிருக்க, தவறே செய்யாதவளை அவன் எப்படி விட்டுக் கொடுப்பான்.

 

அதுக்குள்ள ஐயா தூங்கிட்டீங்களா?” மனைவியின் குரல் அவனைக் கலைத்தது.

 

இல்லைடா.”

 

அப்ப என்ன யோசனை?” மனதில் ஓடுபவற்றை இப்போது அவளிடம் பேச அவன் விரும்பவில்லை. பேச்சை மாற்றினான்.

 

என்னை விட்டுத் தூரமா ஓடிவந்த இந்தப் பல்லவிக்கு இன்னும் கொஞ்சம் தண்டனைக் குடுக்கலாமான்னு யோசிக்கிறேன்.”

 

அடடா! அப்போ இவ்வளவு நேரமும் நீங்க பல்லவிக்குக் குடுத்தது தண்டனையா?” அவள் கிளுக்கிச் சிரித்தாள்.

 

ஆமா… இன்னும் முடியலை, மீதம் இருக்கு பல்லவி.”

 

ஐயையோ! ஆளை விடுங்க சாமி.” அவனிடமிருந்து அவசரமாக விலக முயன்றவளை மீண்டும் தன் கை வளைவிற்குள் இழுத்துக் கொண்டான்.

 

அவ்வளவு சீக்கிரமா உன்னை இந்த மாதவன் விட்டுடமாட்டான் பல்லவி.” கணவனின் வார்த்தைகளில் பல அர்த்தங்கள் தொனித்தது பல்லவிக்கு. அவள் கண்கள் லேசாகக் கலங்க, அந்த நனைந்த இமைகளை தன் இதழ்களால் ஒற்றினான் மாதவன்.

 

முத்தத்திலே பல வகையுண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு…

 

இப்படியே என்னைக் கட்டிக்கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு…