Puthu Kavithai 19

Puthu Kavithai 19

  • admin
  • February 6, 2020
  • 0 comments

19

கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ, சூட் ரூம்!

உறங்குவதற்காக மருத்துவர் இஞ்சக்ஷன் கொடுத்திருக்க, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மது. அவளுக்கு அருகில், அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் பார்த்திபன்.

அவளிருந்த நிலையை பார்த்திபனால் தாள முடியவில்லை. அத்தனை மென்மையான பூவை போன்ற பெண்ணை எப்படி இந்தளவு கசக்கி முகர மனம் வந்தது என்று புரியவில்லை. இந்த மாதிரியான மனநிலை எப்படி வரும் என்பதே புரியவில்லை அவனுக்கு!

அவளை பரிசோதனை செய்த பெண் மருத்துவர், “ரொம்ப நேரம் போராடி இருக்காங்க பார்த்திபன் சர். உடம்பெல்லாம் கன்றி போயிருக்கு. ரத்த காயம்… கைல பிராக்சர்… ஆனா இவ்வளவு தைரியமா அவங்களை காப்பாத்திகிட்டாங்க பார்த்தீங்களா… ஷீ இஸ் சான்ஸ்லெஸ்… இந்த தைரியம் தான் பொண்ணுங்களுக்கு வேணும்…” என்று கூற, மயக்கமாக இருந்தவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.

வேதனையாக இருந்தது.

உடல் முழுவதும் காயம். அந்தளவு அந்த இருவரிடமும் போராடியிருக்கிறாள் என்று எண்ணும் போது அவளது தைரியத்தை எண்ணி மெச்சவா? அலட்சியமாக இருந்து இப்படி சிக்கிக் கொண்டாயே என்று திட்டவா? இந்த மிருகங்கள் இருக்கும் உலகில் தான் இருக்கிறாய் பெண்ணே என்று இடித்துரைக்கவா?

என்னவென்று சொல்ல?

பார்த்திபனின் கண்களில் கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. முயன்று அடக்கிக் கொண்டான். கற்பை காப்பாற்றி கொள்ள இத்தனை காயங்களை தாங்க வேண்டுமா?

அவனுக்கு கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து நொறுக்க வேண்டும் போல தோன்றியது!

சுற்றியிருந்தவர்கள் தடுக்க தடுக்க அந்த இரண்டு பேரையும் அடித்து நொறுக்கி விட்டுத்தான் வந்திருந்தான். போர்வையொன்றை போர்த்தி ஷாலினியிடம் மதுவை ஒப்படைத்தவன், கமிஷனரை வைத்துக் கொண்டே இரண்டு பேரையும் மரண அடி அடித்திருந்தான். கமிஷனர் தான் அவனை தடுத்து இரண்டு பேரையும் மீட்டு கைது செய்து அழைத்து சென்றார்.

அப்போதும் சரி, இப்போதும் சரி பார்த்திபனுக்கு வெறி அடங்கவே இல்லை. மதுவை இந்த நிலைக்கு ஆளாக்கி படுக்க வைத்தவர்களை கொன்று போட வேண்டும் என்று தான் ஆத்திரம் வந்தது.

இன்னமும் நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறவில்லை. யாரிடமும் கூறும் தைரியம் வரவில்லை. தாயிடம் கூறலாம்… ஆனால் பேத்திக்கு ஏதாவது ஒன்றென்றால் உயிரையும் விட்டுவிடுவார் என்பது நிச்சயம். இந்த விஷயத்தை எப்படி அணுகுவார் என்று பார்த்திபனுக்கு புரியவில்லை.

தான் சற்று நிதானித்துக் கொண்டு தமக்கையை தான் அழைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அழைத்து சொல்லவும் தனக்கு தைரியம் வேண்டும் அல்லவா!

முந்தைய தினம் மது சஞ்சய்யை சந்திக்கவிருக்கும் விஷயத்தை ஷாலினி கூறிய போதே அவனது மனதுக்கு அது நல்லதாக படவில்லை. அதை தன்னிடம் மதுவாக கூறுவாள் என்று கொஞ்சமாக எதிர்பார்த்தான். ஆனால் அவளது இயல்புக்கு அதை தெரிவிக்க மாட்டாள் என்றும் தான் தோன்றியது. எதையும் தனியாக, தைரியமாக, தெளிவாக சந்தித்து விடுவாள் என்ற உறுதியும் அவனுக்கு இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை.

இரண்டு நாள் கழித்து சென்னையில் மேகநாதனை சந்திக்க வேண்டியிருந்தது. ஸ்ரீசைலத்தில் இருந்த அந்த பேப்பர் தொழிற்சாலை மெஷினரி ஸ்க்ராப்பை பார்த்திபன் வாங்கியிருந்த நிலையில், அதிலிருந்து ஹெச்எம்எஸ் இரும்பை தனியாக பிரித்து எடுக்கும் வேலைகள் காரமடையில் அவனது கண்காணிப்பில் தான் நடந்து கொண்டிருந்தது.

ரோலிங் மில்லை பொறுத்தவரை உயர் ரக ஹெச்எம்எஸ் இரும்பை மட்டுமே டிஎம்டி கம்பிகளுக்கு அவர்கள் உபயோகப்படுத்துவது. அதை விடுத்தால் இரும்பு தாது கொண்டு தயாரிப்பார்கள். அதன் தரம் அதிகம் ஆனால் உற்பத்தி விலையும் அதிகம் என்பதால், பொதுவாக பழைய இரும்பைக் கொண்டு தான் டிஎம்டி கம்பிகள் தயாரிப்பது. சில வகையான கியர்கள், மற்றும் பெல்லட்கள் மட்டுமே இரும்பு தாது கொண்டு தயாரிப்பார்கள், வலிமைக்காக வேண்டி!

அதனால் அவனது தொழிற்சாலைகளுக்கு ஹெச்எம்எஸ் இரும்புக்கான தேவை மிக அதிகம். ஸ்ரீசைலத்தில் வாங்கிய ஸ்க்ராப்பை மேகநாதன் தானே பிரித்துத் தருவதாக கூறினாலும் யாரையுமே பார்த்திபன் அப்படி நம்பிவிட மாட்டான். தனது கட்டுபாட்டில் தான் அத்தனையும் வைத்திருப்பது.

அந்த ஸ்க்ராப்பை வாங்கித் தந்த வகையில், மேகநாதனுக்கான கமிஷனை பார்த்திபன் அவருக்கு கொடுக்க வேண்டி இருந்தது. அடுத்ததாக உபயோகப்படுத்தபட்ட ரயில் தண்டவாளங்களும் இறக்குமதி ஆகியிருந்ததாக அவர் மூலமாக அவனுக்கு தெரிய வந்திருந்தது.

தண்டவாளங்கள் எப்போதுமே உயர் ரக ஹெச்எம்எஸ் என்பதோடு ஸ்க்ராப்களில் அனைத்து இரும்பு வகையும் கலந்திருக்கும். கழிவு அதிகம்! ஆனால் தண்டவாள ஸ்க்ராப்களில் கழிவு குறைவு என்பதால் அதன் தேவை அதிகம்.

அதையும் பேசி முடிப்பதற்காக பார்த்திபன் சென்னை வர வேண்டியிருந்தது.

இரண்டு நாள் கழித்து வர வேண்டியதை மாற்றி அன்று இரவே, நேரம் கடந்தாலும் காரில் புறப்பட்டுவிட்டான். மனம் சமநிலையில் இல்லை. மதுவாக சொல்லாவிட்டாலும், தான் சென்னையில் இருக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் தான் அப்போதே அவன் கிளம்பியதும்.

அதற்கேற்றார் போல ஷாலினி அவனுக்கு அழைத்து, ஷிவானி மதுவை அழைத்துக் கொண்டு ஏதோ ரிசார்ட்டுக்கு அழைத்து சென்றிருப்பதாக கூறியதுமே மனதுக்குள் எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்து விட்டது. உடனடியாக நுங்கம்பாக்கத்திலிருந்து அவன் புறப்பட்டும் விட்டான்.

கிட்டத்தட்ட ரிசார்ட்டை நெருங்க பத்து கிலோமீட்டர் இருக்கும் போது தான் அடுத்த வெடிகுண்டு பேசி வழியாக அவனை அடைந்தது.

“ராஷ்… என்னை விட்டுடு” மதுவிடமிருந்து வந்த காலை அவன் அட்டென்ட் செய்ய அது மதுவின் குரல் குரல் தான். ஆனால் நடுக்கத்தோடு யாரிடமோ பேச, பார்த்திபனுக்கு பகீரென்றது. எச்சரிக்கையாக பேச்சை கவனித்தான்.

“கடைசியா கேக்கறேன் மது… என்ன சொல்ற நீ?” என்று சஞ்சய் மிரட்டுவதும் கேட்க,

“இப்படி பிஹேவ் பண்ற உன்னை போயா லவ் பண்ணேன்? ஐ பீல் அஷேம்ட்…” என்று மது பதிலுரைப்பதும் கேட்டது.

“நீ என்ன வேண்ணா சொல்லிக்க மது… எனக்கு நீ வேணும்…” என்றவன், சற்று நிறுத்தி நிதானித்து, “என்ன… இப்ப ராஷ் கூட உன்னை ஷேர் பண்ணிக்க போறேன்… அவ்வளவுதான்…” என்று அந்த சஞ்சய் கூற, பார்த்திபனுக்கு நரம்புகள் அத்தனையும் தீப் பற்றியது போல இருந்தது.

“டேய் ****… வந்தா செத்தீங்கடா…” என்று இவன் காரை ஒட்டிக் கொண்டே கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு உறும, அது அவன்களுக்கு தெரிந்தால் தானே?

ஆனால் அத்தனையும் பார்த்திபன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அவர்கள் அறியவில்லை.

அதிலும், அந்த நேரத்திலும், மது, “எங்க பார்த்தி மாமா வந்தா செத்தீங்கடா…” என்று தன்னை ஊன்றுகோலாக பற்றிய போது என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

இருவரிடமும் போராடிக் கொண்டிருந்த மதுவின் போராட்டம் அத்தனையும் கேட்க நேரிட்டதை என்ன சொல்ல? ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.

அப்போதே அவளிருக்கும் இடத்திற்கு பறந்தாவது சென்று விட முடியாதா என்ற நினைவில் ஸ்டியரிங் வீலை குத்தினான்.

தான் செல்வதற்குள் மதுவுக்கு எதுவும் ஆகிவிட கூடாதே என்ற பயம் வேறு!

செல்பேசியை அவளிடமிருந்து கைப்பற்ற யாரோ முயலும் போது எதேச்சையாக இவனுக்கு கால் வந்ததா? அல்லது மதுவே செய்தாளா என்பதெல்லாம் அவனுக்கு தெரியாது. ஆனால், அந்த ட்ராஃபிக்கில் ரிசார்ட்டை அடைவதற்குள் லட்சம் முறை இறந்து பிழைத்து விட்டான், பார்த்திபன்.

அவன் என்ன ஹீரோவா… அல்லது மாய்மாலம் செய்பவனா? நினைத்த உடனே அந்த இடத்தில் பிரத்யட்சமாக?

சாதாரண மனிதன்… அவ்வளவே!

பேய் வேகத்தில் காரை ஓட்டி சென்று அந்த ரிசார்ட்டை அடைவதற்குள் அவனுக்கு தன்னுயிர் தன் கையில் இல்லை. போகும் வழியிலேயே கமிஷனருக்கு அழைத்து அவர்களையும் அங்கு வர சொல்லியிருந்தான். ஷாலினியையும் விடாமல் பேசியில் தொடர்ந்து கொண்டிருந்தான்.

ஆனால் மது இருந்த இடத்தை அடைவதற்குள் அவ்வளவு தவிப்பு… துடிப்பு!

அதிலும் மேலாடை கிழிக்கப்பட்டு, கதறிக்கொண்டு அவள் வந்ததை பார்த்த நொடியில் பார்த்திபனுக்கு உலகமே ஸ்தம்பித்து போய்விட்டது.

அந்த நேரத்தில் அவளை எப்படி காப்பது என்பதை தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லை. அவளது அந்த நிலையை யாருக்கும் காட்சிப் பொருளாக்கவும் விரும்பவில்லை.

அவளை அப்படியே தனக்குள் புதைத்துக் கொண்டு மற்றவர்கள் பார்வையிலிருந்து அவளை மறைத்தவன், கட்டிலிலிருந்த பெட்ஷீட்டை உருவி, அவளுக்கு போர்த்தி ஷாலினியிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அந்த இருவரின் பக்கமும் திரும்பினான்.

கொன்று போட்டுவிடும் ஆத்திரம் பொங்க, இருவரையும் பேயடி அடித்த பின்னரும் கூட கொந்தளிப்பு அடங்கவில்லை.

“முடிஞ்சா என்கிட்டே வீரத்தை காட்டுங்கடா…” என்று சொல்லி சொல்லி வெறி கொண்டு அவன் அடித்த போது சஞ்சய்யோ ரதீஷோ பெரிதாக எதிர்க்கமுடியவில்லை.

கமிஷனர் வந்து விலக்கிவிடும் வரை தன்னுடைய ஆத்திரம் அனைத்தையும் தீர்த்துக் கொண்டான்.

****

வலியில் லேசாக முனகியபடி மது திரும்பிப் படுக்க, முகத்தை தேய்த்து விட்டு எழுந்தவன், அவளை வசதியாக படுக்க வைத்தான்.

கதவு திறக்கும் சப்தம் கேட்க, நிமிர்ந்து பார்த்தான்!

வாயை பொத்தியபடி கண்களிலிருந்து கண்ணீர் வழிய நின்றிருந்தார் அவனது தமக்கை! உடன் அதிர்ச்சியின் விளிம்பில் வினோதகன்!

சற்று நேரத்துக்கு முன் தான் பானுமதிக்கு அழைத்து கூறியிருந்தான். அதிலும் முழுவதுமாக விஷயத்தை சொல்லவில்லை.

“மதுவுக்கு சின்ன ஆக்சிடென்ட் க்கா… கிரீம்ஸ் ரோட் அப்பல்லோ வரீங்களா?” என்று அமைதியாக அவன் கேட்ட பாங்கே என்னவோ பெரிய விஷயம் என்று தான் அவரை பதட்டப்பட வைத்தது.

“டேய் தம்பி… என்னடா? என்னாச்சு? அதுவும் நீ எங்க இங்க?” அதே பதட்டத்தில் குழப்பமாக பானுமதி கேட்க,

“அதெல்லாம் ஒன்னுமில்லக்கா… டென்ஷன் ஆகாத… ஜஸ்ட் சின்ன ஆக்சிடென்ட்… அவ போன்ல இருந்து கால் வந்துச்சு… அதான் நான் அட்டென்ட் பண்ணிருக்கேன். பயப்படாம அவரையும் கூட்டிட்டு வாக்கா… நான் இங்க தான் இருக்கேன்…” என்று பட்டும் படாமல் கூறிவிட்டு வைக்க, அடுத்த பத்தாவது நிமிடம் இருவரும் அங்கிருந்தனர்.

அதிலும் மதுவின் நிலையை பார்த்தப்பின் பானுமதியால் நிற்க கூட முடியவில்லை. மனமும் சரி, உடலும் சரி ஒரே நேரத்தில் செயலிழந்து போனது போலிருந்தது!

அதை காட்டிலும் மோசமான நிலையிலிருந்தார் வினோதகன்!

“என்னாச்சு பார்த்தி?” மகளை பார்த்தபடியே பார்த்திபனிடம் கேட்க, அவனோ பானுமதியை ஓரப்பார்வை பார்த்தபடி, விநோதகனை தனியாக வெளியே வரும்படி கண்ணைக் காட்டினான்.

கண்டிப்பாக தமக்கையால் தாள முடியாதென அவன் அறிவான்!

அவரும் பானுமதியை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற முயல,

“மதுப்பா… இங்கயே இருங்க…” என்று அவரிடம் கூறிவிட்டு, “இங்கயே சொல்லுடா தம்பி… எனக்கு மட்டும் தெரிய வேண்டாமா?” என்று பானுமதி கேட்க, அவரை வலியோடு பார்த்தான் பார்த்திபன்.

மதி ஒரு மாதிரியாக ஊகித்து இருந்தார். தாய்க்கு தெரியாதா? மகள் இருந்த நிலையை பார்த்தவருக்கு ஏதோ மிகத் தீவிரமான விஷயம் என்று புரிந்தாலும், தான் ஊகித்ததை உறுதி செய்து கொள்ள அவருக்கு துணிவில்லை. பார்த்திபன் ஆமென்று விட்டால் அதை அவரால் தாள முடியாது.

அவர் ஊகித்து இருந்த விஷயம் அவரை தள்ளாட செய்திருந்தது!

“இல்லக்கா… பெருசா ஒண்ணுமில்ல… பயப்படாத… அம்மாவும் வந்துருவாங்க…” என்று எதையோ கூறித் தப்பிக்க பார்த்தான்.

வர சொல்லிவிட்டவனால் அவ்வளவு எளிதாக தமக்கையிடம் மதுவுக்கு என்ன நேர்ந்ததென்பதை கூறிவிட முடியவில்லை.

தப்பிவிட்டாள் என்றாலும், தப்பிக்க அவள் கடந்து வந்த சித்ரவதைகளை கேட்டால் பெற்றவளின் மனம் வெம்பி விடாதா?

“இல்ல பார்த்தி…என்னாச்சுன்னு சொல்லு…” என்று பானுமதி பிடிவாதம் பிடிக்க, இருவரையும் ஆழ்ந்து பார்த்தவன், கைகளை கட்டிக் கொண்டு மதுவை பார்த்தான்.

அவளது கைக்கு அணைவாக தலையணையை இவன் வைத்திருக்க, அதை அணைத்தபடி நிர்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.

“ரேப் அட்டெம்ப்ட் மதிக்கா…” உணர்வுகளை துடைத்த குரலில் அவன் கூற, அதிகபட்ச அதிர்ச்சியில் நெஞ்சில் கைவைத்துக் கொண்டார் பானுமதி.

நிலையாக நிற்கவியலாமல் அருகிலிருந்த டேபிளை பிடித்துக் கொண்டார் வினோதகன்.

“என்னடா தம்பி சொல்ற?” தொண்டையை அடைத்தது அவருக்கு. வார்த்தைகள் வெளியே வரவில்லை. தன் கணவரை பற்றுகோலாக பற்றிக் கொண்டவரின், வயிற்றிலிருந்து ஏதோவொன்று பந்தாக மேலெழுந்து கேவலாக வெடித்தது.

“அக்கா… கண்ட்ரோல் யுவர்செல்ப்… இந்த நேரத்துல தான் நீ தைர்யமா இருக்கணும்… மதுவுக்கு நீ தானே தெம்பு கொடுக்கணும்?” என்று கேட்க, தன்னை தானே தொகுத்துத் கொண்ட பானுமதி, படுத்திருந்த மகளின் அருகில் அமர்ந்து அவளது நெற்றியை வருடி விட்டார்.

அழக் கூடாது என்று நினைத்தாலும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நிற்காமல் வழிந்து கொண்டே இருந்த கண்ணீரை அவ்வப்போது துடைத்துக் கொள்ள, தனித்து நிற்கவியலாமல் பார்த்திபனை பிடித்துக் கொண்டார் வினோதகன்!

“யார் மாப்ள? எவன் செஞ்ச காரியம் இது?” ஆரம்பகட்ட அதிர்ச்சி மாறி, கொலைவெறிக் கோபத்தோடு அவர் கேட்க,

“இவ டான்ஸ் மாஸ்டர் ரெண்டு பேரும் தான்…” அவர்கள் இருவருமா என்ற அதிர்ச்சியில் அவரால் பேச முடியவில்லை. எத்தனை முறை பார்த்திபன் மதுவை எச்சரிக்கை செய்திருப்பான்? அதை தானுமே அல்லவா அலட்சியப்படுத்தியது? மதுவின் இன்றைய நிலைக்கு காரணம் அவள் மட்டுமே இல்லை. அவனது வார்த்தைகளை மீற செய்த தானுமே தான் என்று உணர்ந்த போது அவரது தேகம் நடுங்கியது.

“அந்த காம்படீஷன்ல ஏதோ பிரச்சனை…” என்று பலவீனமாக அவர் இழுக்க,

“ம்ம்ம்ம்… ஆமா…” இறுக்கமாக கூறினான் பார்த்திபன்.

“அந்த சஞ்சய் யாரோ மினிஸ்டர் பையன்…” என்று அவர் தடுமாற,

“ம்ம்ம்… ஜெயச்சந்திரன் பையன்…” இன்னுமே கடினப்பட்டது முகம்!

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, வலியால் முகம் சுனங்க முனகிக் கொண்டே திரும்பிப் படுத்தாள் மது!

பார்த்து கொண்டிருந்த பானுமதிக்கும் வினோதகனுக்கும் உயிர் வாதித்தது.

அவசரமாக அவளை தாங்க முயன்ற பானுமதியை தடுத்த பார்த்திபன்,

“மதிக்கா… அவளை விடு… தூங்கறா…” என்று முடிக்க, கையாலாகாத பார்வையோடு அவனை வேதனையாக பார்த்தார் பானுமதி.

“பார்த்தி… வலில இருக்கா போல இருக்கே?” கண்ணீரோடு அவளது தலையை தடவியபடியே கேட்க, அவன் மெதுவாக தலையாட்டினான்.

“ம்ம்ம்… அப்யுஸ் பண்ணிருக்கானுங்க…” பல்லை நறநறவென கடித்தபடி கூற, பானுமதி வாயை பொத்தியபடி சப்தமில்லாமல் கதறினார். அதை பார்த்தவன் சற்று கோபமாக,

“ஏன் க்கா அழுகிற? அதான் தப்பிச்சுட்டால்ல… அவளே தைரியமா எதிர்த்து போராடி இருக்கா… நீங்க என்னன்னா இப்படி அழுதுட்டு இருக்கீங்க? அவளோட தைரியத்தை நெனச்சு நீங்க பெருமைப்பட வேண்டாமா?” நறுக்கென்று அடக்கப்பட்ட சினத்தோடு கேட்க, பளிச்சென்ற முகத்தோடு நிமிர்ந்தார்.

“பார்த்தி… அப்படீன்னா பாப்பாவுக்கு ஒண்ணுமாகலல்ல…” முகம் முழுக்க ஏக்கத்தை தேக்கி வைத்து அவர் கேட்க, ‘அட கடவுளே’ என்று தான் எண்ணத் தோன்றியது.

“ஒண்ணுமாகலைன்னா என்னன்னு கேக்கற?” என்று அதே கடினமான முகத்தோடு பார்த்திபன் கேட்க, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறினார் பானுமதி.

“சரி விடு மாப்ள…” என்றவர், சற்று நிம்மதியாக இருக்கையில் சாய்ந்தார் வினோதகன்.

“அப்படியே ஏதாவது ஆகியிருந்தாலும் அது ஜஸ்ட் ஆக்சிடென்ட் மதிக்கா. புரிஞ்சுக்க… ஆனா மது அந்த நேரத்துல கூட எவ்வளவு தைரியமா இருந்தா தெரியுமா?” என்று பார்த்திபன் கூறியதை கேட்டவர்களுக்கு உள்ளுக்குள் சற்று பெருமையாக கூட இருந்தது.

“ம்ம்ம் புரியுது பார்த்தி.. ஆனா இப்படி உடம்பெல்லாம் ரணமாகி கிடக்கறாளேடா…” என்று வேதனையாக அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே பார்த்திபனின் செல்பேசி அழைத்தது.

ஏதோ புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர, அவன் யோசனையாக அட்டென்ட் செய்தான்.

“ஹலோ… பார்த்திபன் ஹியர்…” என்றான் அழுத்தமாக!

“நான் ஜெயசந்திரன் பேசறேன் தம்பி…” என்ற மறுமொழியில் சற்று நிதானித்தான். கோபம் கரையை உடைக்கப் பார்த்தாலும், அதற்கு இது நேரமல்ல!

“சொல்லுங்க…” எவ்வளவுதான் முயன்றாலும் உறுமலாகத்தான் வார்த்தை வெளியே வந்தது.

“தம்பி… நான் மினிஸ்டர் ஜெயசந்திரன் பேசறேன்…” இன்னும் சற்று அழுத்தமாக அவர் கூற,

“சொல்லுங்கன்னு சொல்றேன்…” இவன் இன்னும் உறுமினான். “அதான் தெரியுதுன்னு சொல்றேன்ல… அப்புறம் என்ன இன்னும் மினிஸ்டர் மண்ணாங்கட்டி எல்லாம் ஜெயசந்திரன்?” அவனது அந்த வெடிப்பில் மறுபுறத்தில் ஜெயச்சந்திரன் நிதானமாக யோசித்தார்.

“தம்பி ரொம்ப கோபமா இருக்கீங்க…” என்று அவர் இழுக்க,

“சொல்ல வந்ததை சொல்லுங்க இல்லைன்னா போனை வைங்க…”

“இல்ல பார்த்தி… நம்ம தம்பி மேல நீங்க கொடுத்திருக்க கேஸை கொஞ்சம் வாபஸ் வாங்கணும்…” என்று தயக்கமாக அவர் கூற,

“முடியாது…” ஒற்றை வார்த்தையில் முடித்தான் பார்த்திபன். கோபமாக கொதித்துக் கொண்டிருந்தவனை இன்னும் கோபமாக பார்த்தார் பானுமதி. அவன் சஞ்சயின் தந்தையிடம் பேசிக்கொண்டிருப்பது தெரியும். அவரை கண்டால் கண்டந்துண்டமாக வெட்டி போடும் ஆத்திரம் கிளம்பியது.

“தம்பி உங்ககிட்ட ஒரு மரியாதைக்காகத்தான் கேக்கறேன். இப்பவே என்னால வெளிய கொண்டு வர முடியும். ஆனா உங்களை தாண்டி போற மாதிரி ஆகிற கூடாதுல்ல…” நல்லவரை போல பேசினாலும் அதில் தொனித்த மிரட்டலை அறியாதவனா அவன்.

“போய்த்தான் பாருங்க…” தன்னை மீறி என்ன செய்து விட முடியும்? பார்த்து விடலாம் என்ற ஆத்திரம் அவனுக்கு!

“தம்பி…”

“நான் ஏதாவது அசிங்கமா சொல்றதுக்குள்ள போனை வெச்சுடுங்க ஜெயசந்திரன்…” கொதித்தான். அந்த சூடு மறுபுறம் வரை தெறித்தது.

“தம்பி ஏதோ ஆசப்பட்டுட்டான்ப்பா… கேஸை வாபஸ் வாங்கிடுங்க… மது தான் என்னோட மருமக… இதை விட நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க பார்த்தி… நாம காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்…” நிதானமாக ஜெயசந்திரன் கூற, பார்த்திபன் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த மதுவை பார்த்தான்.

உறக்கத்தையும் மீறிய வலி தெரிந்தது அவளது முகத்தில்!

வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன்..

வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்..

உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்..

எழுதிய கவிதை என் முதல்வரி முதல் முழுவதும் பிழை

விழிகளின் வழி விழுந்தது மழை, எல்லாம் உன்னால்தான்..

இதுவா உந்தன் நியாயங்கள்..? எனக்கேன் இந்த காயங்கள்..?

கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்..

error: Content is protected !!