Roja Poonthottam 15

ரோஜா 15

தன் கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்த மலர்விழி சிரமப்பட்டுக் கண்களைப் பிரித்தாள். அதற்குள் விடிந்து விட்டதா என்ன?

“சத்யா… விடிஞ்சிருச்சா?” அவள் குரலில் அவ்வளவு சோர்வு.

“இல்லைடா, இப்போதான் அஞ்சு மணி.”

“என்ன? அஞ்சு மணியா? அப்போத் தூங்காம நீங்க என்னப் பண்ணுறீங்க?”

“தூக்கம் வரலைடா.” சொன்னவனை முழுதாகக் கண்களைத் திறந்து பார்த்தாள் மலர். இரவின் மீதங்கள் மனதில் முட்டி மோத மலரால் அவனை எதிர்கொள்ள இயலவில்லை. ஆனால் அவனோ அவளோடு நெடுநாள் குடும்பம் நடத்தியவன் போல இலகுவாக இருந்தான்.

“என்னாச்சு சத்யா?”

“நீ அன்னைக்குக் கேட்டதுதான் எனக்கு ஞாபகம் வருது மலர்?”

“நான் என்னக் கேட்டேன்?”

“அத்தையும் மாமாவும் இல்லைன்னா என்னைத் திரும்பிப் பார்த்திருக்க மாட்டீங்களான்னு கேட்டியே.” இப்போது மலருக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இவன் அதை மறந்து விடமாட்டானா?

“சாரி… ஏதோ தெரியாமக் கேட்டுட்டேன்.”

“இல்லை மலர். அந்தக் கேள்வி எவ்வளவு நியாயமானதுன்னு எனக்கு இப்போப் புரியுது.”

“விடுங்க சத்யா.”

“இல்லைம்மா… நான் உன்னைக் குறைச் சொல்லலை. கிராமத்துலயே பசுமையைத் தேடினவன் பட்டணத்துப் பைங்கிளியை எப்படி மிஸ் பண்ணினேன்?” சொல்லிவிட்டு அந்த அதிகாலை வேளையில் மனைவியின் கையால் அடி வாங்கினான் சத்யா.

“கொழுப்பா? சுத்திவர அத்தனைப் பொண்ணுங்களை வச்சுக்கிட்டு ஒவ்வொருத்திக்கிட்டயும் உன்னைக் கட்டிக்கிறேன், உன்னைக் கட்டிக்கிறேன்னு அள்ளி விடுறீங்க. எவ்வளவு தைரியம் இருக்கணும்?”

“ஏய் மலர்!” மனைவியின் கைகளைத் தடுத்து நிறுத்தியவன் இப்போது சிரித்தான்.

“சும்மாக் கேலிக்குப் பேசுறதை யாராவது சீரியஸா எடுத்துப்பாங்களா? நீ சட்டுன்னு எழுந்து உள்ளப் போனதும் எல்லாருக்கும் ஒரு மாதிரியா ஆகிப் போச்சுத் தெரியுமா?”

“சாரி சத்யா. நானும் அதை யோசிக்கலை. ஏதோ ஒரு கோபத்துல எழுந்து போயிட்டேன். ஆனா அதுக்கப்புறமா சங்கடமா இருந்துச்சு. ஆனா அந்தப் பொண்ணுங்க எல்லாத்தையும் மறந்துட்டு இயல்பாப் பேசினாங்கத் தெரியுமா?”

“அதான் நம்ம ஊருப் பொண்ணுங்க. குணத்துல தங்கம்டா. இனிமே நாம இங்க அடிக்கடி வரணும் மலர். அப்போ உனக்கு எல்லாம் பிடிபடும்.”

“ம்… சத்யா, இன்னைக்குக் கிளம்புறோமா? இல்லை நாளைக்குக் கிளம்புறோமா?”

“ஏன் மலர்? கஷ்டமா இருக்கா?”

“இல்லையில்லை. கஷ்டமெல்லாம் இல்லை. நான் ரொம்ப என்ஜாய் பண்ணுறேன். இந்தப் புடவைக் கட்டுறதுதான்…” அவள் லேசாகச் சிணுங்க அவனும் புன்னகைத்தான்.

“அப்போ இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பலாம் மலர்.”

“இல்லை சத்யா, நாளைக்கேப் போகலாம். அதுக்கப்புறம் நீங்க…” மலர் வார்த்தைகளை முடிக்கவில்லை. சத்யன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“மாமாவைப் போகச் சொல்லட்டுமா மலர்?”

“ம்ஹூம்… வேணாம் வேணாம்.”

“என்னால உன்னை விட்டுட்டு ரெண்டு வாரமெல்லாம் இருக்க முடியாது மலர்.”

“ரெண்டு வாரம்தானே சத்யா. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். டெய்லி ஃபோன் பண்ணுங்க.”

“ஏய்! புரிஞ்சுதான் பேசுறியா? என்னால முடியாது மலர்.” சொல்லிவிட்டு அவளை முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டு அந்தச் சங்குக் கழுத்திற்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

“எனக்குக் கஷ்டமா இருக்கு மலர். என்னன்னு சொல்லத் தெரியலை.”

“என்ன சத்யா?”

“நான் உன்னை மிஸ் பண்ணி இருப்பேன்ல மலர்? உனக்குள்ள இப்படி ஒரு எண்ணம் வரலைன்னா நாம ரெண்டு பேரும் சேர்த்திருக்கவே மாட்டோமில்லை மலர்?” அதன்பிறகு விடியும்வரை சத்யன் இப்படியே புலம்பிக் கொண்டிருந்தான்.

மலர் எதுவும் பேசாமல் அவன் தலையைக் கோதிக் கொடுத்தாள். அவளை இழந்திருப்போமோ என்று அவன் கிடந்து தவிப்பது அவளுக்கு விளங்கியது. அந்தத் தவிப்பு அவளுக்கான தேடல் என்று நினைத்தபோது பெண்ணுக்கும் இனிக்கத்தான் செய்தது.

அவனை இன்னும் கொஞ்சம் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டாள் மலர். குழந்தை போல அவளோடு ஒட்டிக்கொண்டு உறங்கிப் போனான் சத்யன்.

அதேவேளை…

சித்ரலேகா லேசாகக் கண்விழித்துப் பார்த்தார். இருள் பிரிந்திருந்தது. ரூமிற்குள் மெல்லிய வெளிச்சம் பரவவும் எழுந்து உட்கார்ந்தார். சோஃபாவில் ஞானபிரகாஷ் நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவரை ஒரு கணம் பெண்ணின் கண்கள் வருடியது.

கல்லூரி நாட்களில் பெண்கள் அத்தனைப் பேரும் மதிக்கும் ஒரு நபர் இந்த ஞானபிரகாஷ். மரியாதையான பையன் என்றுதான் பேராசிரியர்களே சொல்வார்கள். வசதியான வீட்டுப் பிள்ளையும் கூடத்தான் என்பது இப்போதுதான் சித்ரலேகாவிற்குத் தெரிகிறது.

வாட்டசாட்டமான ஆண்மகன். தன்னைக் காதல் பார்வைப் பார்த்தபோது சித்ரலேகா மயங்கிப் போனார். அந்த மயக்கம் அன்றைக்கு வராமல் போயிருந்தால் இந்த மனிதர் இன்றைக்குப் பிள்ளைக் குட்டி என்று சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்.

ஒற்றைப் பனைப் போல யாருமில்லாமல் பெற்றவர்களே பாரபட்சம் பார்க்கும் அளவிற்கு தங்கள் காதல் அவரைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. கல்யாணம் பண்ணி இருந்தால் இப்போது மலரைப் போல இவருக்கும் கல்யாண வயதில் குழந்தைகள் இருந்திருக்கும்.

மனதின் கசப்பு வாயிலும் தெரிந்தது பெண்ணுக்கு. பாத்ரூம் போகலாம் என எண்ணியவர் மெதுவாக எழுந்தார். அவரிடம் அசைவு தெரிந்ததுதான் தாமதம் ஞானபிரகாஷ் எழுந்து உட்கார்ந்தார்.

“லேகா…”

“ஒன்னுமில்லை பிரகாஷ் நீங்க தூங்குங்க.”

“என்ன வேணும்?”

“பாத்ரூம் போகணும்.”

“வெயிட் பண்ணு.” எழுந்தவர் குமுதா அனுப்பியிருந்த பேக்கில் இருந்து பிரஷ்ஷை எடுத்து அதில் பேஸ்ட் வைத்து நீட்டினார். கப்போர்டில் இருந்து டவலை எடுத்து நீட்டப் பெண் வாங்கிக் கொண்டது.

“அக்காவைக் கூப்பிடவா? இல்லைத் தனியா மேனேஜ் பண்ணிக்குவியா?”

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை பிரகாஷ். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்குங்க.”

“இல்லைம்மா, இதுவே போதும். காஃபி சொல்லட்டுமா?”

“ம்…”

“காய்ச்சல் இருக்கா?” கேட்டவர் பெண்ணின் நெற்றியில் புறங்கையை வைத்துப் பார்த்தார். சூடு தெரியவில்லை. ஆனால் முகத்தில் சோர்வு தெரிந்தது.

“பார்த்துப் போ லேகா.” சொன்னவர் பாத்ரூம் வரை வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.

“நான் பார்த்துக்கிறேன் பிரகாஷ்.”

“கவனம், டயர்டாத் தெரியுறே. ரொம்ப நேரம் தண்ணியில நிக்கக் கூடாது சரியா?” அந்தக் கரிசனத்தில் பெண்ணுக்குக் கண்ணைக் கரித்தது. ஆனாலும் மறைத்துக் கொண்டார்.

“நான் இப்பவே போய் காஃபி கொண்டு வர்றேன். சூடாக் குடிச்சாத் தெம்பா இருக்கும்.” பரபரப்பாக வெளியே போகும் மனிதரைப் பார்த்துக் கசப்பாகப் புன்னகைத்துக் கொண்டார் சித்ரலேகா. ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவர் இல்லை.

சித்ரலேகா பாத்ரூமை விட்டு வெளியே வந்தபோது இவருக்காகவே காத்திருந்தது போல நின்றிருந்தார் ஞானபிரகாஷ்.

“என்ன பிரகாஷ்?”

“காஃபியும் பிஸ்கட்டும் இருக்கு. குடிச்சிட்டு மாத்திரையைப் போடட்டாம். சாவித்திரி அக்கா சொன்னாங்க.”

“காஃபி மட்டும் போதும் பிரகாஷ்.”

“இல்லையில்லை. வெறும் வயித்துல மாத்திரைப் போடக் கூடதாம். ஒரு பிஸ்கட்டாவது சாப்பிடணும்னு அக்கா சொன்னாங்க. அதுக்குள்ள அவங்க இட்லி பண்ணிடுவாங்களாம்.” பரபரப்பாக பிரகாஷ் பேசிக் கொண்டிருக்க அவரையே பார்த்திருந்தார் சித்ரலேகா.

“என்ன லேகா?”

“சாவித்திரி அக்காக்கிட்ட நான் யாருன்னு சொல்லி இருக்கீங்க?” கேள்வி நிதானமாகத்தான் வந்தது.

“வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து ஒரு வேளைச் சாப்பாடு போடுறது ஓகே. ஆனா ரூம் வரைக்கும் கூட்டிட்டு வந்துத் தங்க வைக்கிறது ஓகே இல்லை பிரகாஷ்.” இப்போது ஞானபிரகாஷ் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். இதற்குப் பதில் சூடாக அவர் நுனி நாக்கு வரை வந்தது. ஆனாலும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.

“லேகா… இது என்னோட வீடு. சாவித்திரி அக்கா என் வீட்டுல வேலைப் பார்க்கிறாங்க. நான் அவங்களுக்குச் சம்பளம் குடுக்கிறேன்.‌ ஆஃப் கோர்ஸ்… அவங்களை என் அக்கா மாதிரித்தான் நான் பார்க்குறேன். அவங்க நல்லது கெட்டதுல எல்லாம் நான் கூட இருப்பேன். அதுக்காகவெல்லாம் என்னோட ஒவ்வொரு செய்கைக்கும் அவங்களுக்கு நான் விளக்கம் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை லேகா.”

“அந்த சாவித்திரி அக்கா நீங்களும் நானும் வாழுற இந்தச் சமூகத்துல ஒரு அங்கம்தானே பிரகாஷ்?”

“கண்டிப்பா, இல்லேங்கலை. இந்த சமூகத்து மேல‌ எனக்கு அக்கறை இருக்கு லேகா. என்னைச் சுத்தி இருக்கிறவங்களோட பார்வை, பேச்சு எல்லாம் என்னைப் பாதிக்கும். ஆனா… என்னோட நியாயமான ஆசைகளுக்கும் விருப்புகளுக்கும் இந்தச் சமூகம் தடையா இருக்கும்னா அந்த இடத்துல நான் முரண்படுவேன்.”

“பேசுறதுக்கு எல்லாமே சுலபம்தான் பிரகாஷ்.”

“இல்லேன்னு சொல்லலை. ஒரு ஹோட்டல் மட்டும் இருக்கும் போது இதேமாதிரி இன்னும் நாலு உருவாக்கணும்னு நினைச்சப்போ மலைப்பாத்தான் இருந்துச்சு. மலேஷியா வரைக்கும் போறது கனவு போலத்தான் தெரிஞ்சுது. ஆனா இன்னைக்கு அத்தனையும் நடந்திருக்கு. ஆயிரம் தடைகள் வந்துச்சு. ஆனா இன்னைக்கு எங்க அத்தனைப் பேரோட ஆசையும் கனவும் நிறைவேறி இருக்கு லேகா.”

“நல்லாப் பேசுறீங்க பிரகாஷ்.”

“தொழில் பண்ணுறேன் இல்லைம்மா. அதான். பழகிப் போச்சு.” காஃபியும் பிஸ்கட்டும் உள்ளே இறங்கியிருக்கக் காலிக் கோப்பையை வாங்கினார் ஞானபிரகாஷ்.

“போடவேண்டிய டேப்லெட்டைப் போடு லேகா.”

“பிரகாஷ்… நான் எப்போ வீட்டுக்குப் போறது?”

“போகலாம்டா, என்ன அவசரம்? குமுதாவோட அத்தைக்கு உடம்புக்கு முடியலையாம்.”

“அவங்களுக்கு ஆஸ்த்மா ப்ராப்ளம் உண்டு. அடிக்கடி இப்படி ஆகும்.”

“ஓ… இப்போதான் குமுதா ஃபோன் பண்ணிப் பேசினா. எப்படி இருக்கேன்னு கேட்டா. ஓகேன்னு சொன்னேன். பார்த்துக்கோங்க அண்ணான்னு சொன்னா. சொந்தக்காரங்க வீட்டுல இருக்கிற மாதிரி நினைச்சுக்கக் கூடாதா லேகா? அங்கப் போய் தனியா இருந்து என்னப் பண்ணப் போறே? இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட எனக்கு நீ தரக்கூடாதா?” இதற்கு என்ன பதில் சொல்வதென்று சித்ரலேகாவிற்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் அடிக்கடி மௌனியாகத்தான் இருக்கிறார்.

சற்று நேரத்திற்குப் பிறகு புடவையை மட்டும் மாற்றிக்கொண்டு கீழே இறங்கி வந்தார் பெண். குளிப்பது அத்தனை உசிதமாகத் தோன்றவில்லை.

“வாங்கம்மா.” வாய் நிறையப் புன்னகையோடு வரவேற்றார் சாவித்திரி அக்கா.

“இப்போ எப்படி இருக்கு? இன்னும் காய்ச்சல் இருக்கா?” கேட்டபடி சித்ரலேகாவின் நெற்றியைக் கன்னத்தைத் தொட்டுப் பார்த்தார்.

“காய்ச்சல் இல்லைக்கா. ஆனா உடம்பு வலிக்குது.”

“நல்லா ரெஸ்ட் எடுத்தாச் சரியாப் போயிடும். பொண்ணுக் கல்யாணம் இப்போத்தானே முடிஞ்சிருக்கு. எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்கிட்டுப் பண்ணி இருப்பீங்க. உடம்பு, மனசு ரெண்டும் சோர்ந்து போயிருக்கும். அதான் காய்ச்சல் வந்திருக்கு.”

“இருக்கலாம் க்கா.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஞானபிரகாஷ் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்தார்.

“அக்கா… பசிக்குது.”

“இதோ… கொண்டு வர்றேன் தம்பி.” என்ற சாவித்திரி சமையற்கட்டிற்குள் போக ஞானபிரகாஷ் சித்ரலேகாவைப் பார்த்தார்.

“நீ ஏம்மா நிக்குறே? உக்காரு சாப்பிடலாம்.”

“ம்…” பெண்ணும் உட்காரப் பெரியவர் பரிமாறினார்.

“என்னக்கா? இட்லிதானா?”

“ஆமா தம்பி. காய்ச்சலுக்கு இட்லிதான் குடுக்கணும். லேசா செரிமானம் ஆகுமில்லை.”

“ஐயையோ! நீங்க பிரகாஷுக்குத் தேவையானதைப் பண்ணிக் குடுங்கக்கா.”

“அதெப்படிம்மா? குடும்பத்துல ஒருத்தருக்கு உடம்புக்கு முடயலைன்னா எல்லாரும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும். மத்தியானத்துக்கும் இப்படித்தான்.” இந்தப் பேச்சில் சித்ரலேகா கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தார்.

“அப்போ நான் மதியத்துக்கு ஹோட்டல்ல பார்த்துக்கிறேன்.” என்றார் ஞானபிரகாஷ் சிரித்தபடி.

“பார்த்தீங்களா சித்ரா. தம்பி எப்படிப் பேசுதுன்னு?”

“இல்லைக்கா, நீங்க எப்பவும் பண்ணுற மாதிரியேப் பண்ணிடுங்க.”

“அதெல்லாம் முடியாது. இன்னைக்கு வெறும் ரசம் சாதம்தான். தம்பி பாவமேன்னு வேணும்னா உருளைக்கிழங்கு வறுவலும் அப்பளமும் பொரிக்கிறேன். தம்பி எங்கச் சாப்பிடுறார்னு நானும் பார்க்கிறேன்.” இப்போது சாவித்திரி அக்காவுமே சிரித்தார்.

“லேகா… ஒரு இட்லியை எவ்வளவு நேரந்தான் சாப்பிடுவே? இன்னும் வைங்கக்கா.”

“கொஞ்சம் பொறுமையா இருங்க தம்பி. காய்ச்சல் வந்த வாய் இல்லையா? அவ்வளவு சீக்கிரத்துல சாப்பிட முடியாது. ஆறுதலா சாப்பிடட்டும். லேகா லேகான்னு மூச்சுக்கு முன்னூறு தடவைச் சொன்னாப் போதாது. ஆறுதலா அனுசரணையா இருக்கணும்.” சாவித்திரி சொல்ல இப்போது சித்ரலேகாவின் கை அந்தரத்தில் நின்றது.

“சாப்பிடும்மா.” இதமாக வற்புறுத்தினார் சாவித்திரி. இப்போது இளையவளுக்குக் கண்கள் கலங்கியது. சாவித்திரி ஒரு புன்னகையோடு சித்ரலேகாவின் தலையைத் தடவிக் கொடுத்தார்.

“சாவித்திரிக்கா!”

“சொல்லுங்க தம்பி.”

“லேகாவுக்கு இப்போப் பிரச்சனையே நீங்கதான்.”

“அப்படியா?” ஞானபிரகாஷின் பேச்சில் சித்ரலேகா திடுக்கிட்டாலும் சாவித்திரி சிரித்தார். அந்த வீட்டில் அத்தனை காலம் வேலைச் செய்பவருக்கு அந்த மனிதரைப் பற்றித் தெரியும்தானே.

“ஆமா… சாவித்திரி அக்காக்கிட்ட நான் யாருன்னு சொல்லி இருக்கீங்கன்னு கேட்டா. ஒருவேளை வீட்டுக்குக் கூப்பிட்டு சாப்பாடு போடுறது ஓகேயாம். ஆனா ரூம் வரைக்கும் கூட்டிட்டு வர்றது ஓகே இல்லையாம்.”

“சித்ரா சொல்றதும் சரிதானே தம்பி.”

“சரியாப்போச்சு! அப்போ நீங்களும் எனக்கு எதிரியா?”

“இல்லையா பின்னே? இத்தனை நாளுந்தான் ஒத்தையா நின்னீங்க. இப்போதான் உங்க லேகா வந்துட்டாங்க இல்லை. அப்போச் சட்டுப் புட்டுன்னுத் தாலியைக் கட்டியில்லைக் கூட்டிட்டு வந்திருக்கணும்?” இலகு போல பெரியவர் சொல்ல சித்ரலேகா தவித்துப் போனார். இப்போது ஞானபிரகாஷ் இளைய பெண்ணை ஒரு தினுசாகப் பார்த்தார்.

“உலகம் ரொம்ப முன்னேறிடுச்சுக்கா. எங்கே… ஒரு சிலருக்குத்தான் அது புரியவே மாட்டேங்குதே.”

“சரி சரி சாப்பிடுங்க. சித்ரா… இன்னும் ஒரேயொரு இட்லி சாப்பிடும்மா.”

“போதும் க்கா.”

“இல்லைம்மா… கொஞ்சம் சாப்பிடு. ரொம்ப சோர்வாத் தெரியுற சித்ரா.” சாப்பிட்டு முடித்துவிட்டு சித்ரலேகாவை வீட்டிற்குப் பின்புறமாக இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார் ஞானபிரகாஷ். தென்னை மரங்கள் ஒரு சீரான இடைவெளியில் நடப்பட்டுப் பராமரிக்கப் பட்டிருந்தன. அவற்றிற்கிடையில் மிளகுக் கொடி படர்ந்திருந்தது.

நல்ல செம்மண் நிலம். சூழத் தென்னைமரங்கள் விதானம் அமைத்திருந்ததால் சூரியன் வந்தபிறகும் அந்த இடம் குளிர்ச்சியாகத்தான் இருந்தது. அங்கிருந்த பாறையில் பெண் உட்காரத் தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டார் ஞானபிரகாஷ்.

“பிரகாஷ்!”

“சொல்லு லேகா.”

“உங்க மனசுல என்ன இருக்கு?”

“எம்மனசைத்தான் அன்னைக்கே உங்கிட்டச் சொல்லிட்டேனே லேகா.”

“ஓ… அப்போ அதுல நீங்க உறுதியா இருக்கீங்க அப்படித்தானே?”

“அதுல என்ன சந்தேகம் உனக்கு?”

“புரிஞ்சுக்கோங்க பிரகாஷ். ஒரு காலத்துல நாம காதலிச்சோம். இல்லேங்கலை, ஆனா அது முடிஞ்சு போன கதை. எப்போ என்னோட வாழ்க்கையில மலரோட அப்பா வந்தாரோ அன்னைக்கே அந்தக் காதலை நான் மறந்துட்டேன். அவருக்கு ஒரு நல்ல வைஃபாத்தான் நான் இருந்தேன்.”

“உன்னோட கடந்த காலத்தைப்பத்தி நான் எதுவுமே கேக்கலையே லேகா. எனக்குத் தேவை உன்னோட ஒரு வாழ்க்கை, அதுவும் இப்போ நிகழ்காலத்துல.‌ எதிர்காலத்தைப் பத்திக்கூட நான் கவலைப்படலை.” சித்ரலேகா இப்போது பெருமூச்சு விட்டார்.

“உங்களுக்கு நான் எப்படிப் புரிய வைப்பேன் பிரகாஷ். என்னோட நிலைமையில இருந்து யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கொரு வைஃப் இருந்து அவங்க இறந்து போய்… மலர் வயசுல ஒரு பொண்ணும் இருக்கும்போது நான் வந்திருந்தா? நீங்க என்னப் பண்ணி இருப்பீங்க பிரகாஷ்?” இப்போது உண்மையிலேயே ஞானபிரகாஷ் தடுமாறினார்.

“நீங்க அத்தனைப் பேரும் என்னோட நன்மைக்குத்தான் பேசுறீங்க. எனக்கும் அதெல்லாம் நல்லாவேப் புரியுது. ஆனா… இது மனசு சம்பந்தப்பட்டது பிரகாஷ். என்னால எதையும் ஏத்துக்க முடியலை.”

“மலரோட அப்பாக்குத் துரோகம் பண்ணுறோம்னு நினைக்கிறியா லேகா?” ஞானபிரகாஷ் கேட்க அவரைத் தீர்க்கமாகப் பார்த்தார் பெண். மனிதரும் சளைக்காமல் பதில் பார்வைப் பார்த்தார். இப்போது பெண்ணின் தலை இடம் வலமாக ஆடியது.

“அப்போ என்னதான் பிரச்சனை உனக்கு? இந்த ஊரும் உலகமும்தான் உன்னோட பிரச்சனைன்னா மறைக்காமச் சொல்லு. உனக்கு எங்கப் பிடிக்குதோ அங்கப் போய் வாழலாம். மலரைப் பத்தி இனி நீ கவலைப்படத் தேவையில்லை லேகா. அவளுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. இப்போ நீ உன்னையும் என்னையும் பத்தி மட்டும் கவலைப்படு.”

“பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா எல்லாம் முடிஞ்சுதுன்னு நான் இருந்தேன். நீங்க இனித்தான் எல்லாம் ஆரம்பம்னு சொல்றீங்க பிரகாஷ்.”

“அப்படித்தான் விதிச்சிருக்கும் போது என்னப் பண்ணுறது லேகா?”

“இப்போ நான் என்னப் பண்ணணும்னு நீங்க எதிர்பார்க்குறீங்க பிரகாஷ்?”

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் லேகா.”

“பண்ணி?”

“இதென்ன கேள்வி?”

“பதில் சொல்லுங்க.”

“அதுக்கப்புறம் என்னப் பண்ணணும்னு நீ சொல்லு லேகா. என்னோட ஆசையை அன்னைக்கே நான் சொல்லிட்டேன். அதுக்கு நீ சம்மதிச்சா நான் சந்தோஷப்படுவேன். எனக்கு நீ எம் பக்கத்துல இருக்கணும். உன்னோட ஒரு வாழ்க்கை வாழணும்.”

“நான் எங்கிறது எது? என்னோட மனசா? உடம்பா பிரகாஷ்?” சித்ரலேகா கேட்க இப்போது ஞானபிரகாஷின் கண்கள் சுருங்கியது.

“நீ எங்கிறது… உடம்பு, மனசு ரெண்டுந்தானே லேகா?” ஞானபிரகாஷ் பெண்ணையேப் பார்த்துக் கூர்மையாகச் சொல்ல சித்ரலேகாவின் தலைத் தானாகக் குனிந்தது. இப்போது ஞானபிரகாஷ் பெண்ணின் அருகில் போனார்.

“லேகா! என்னைப் பாரு.” அவர் சொன்னது நடக்கவில்லை. பெண்ணின் முகத்தை தன் இரு உள்ளங்கைகளுக்கும் தாங்கி உயர்த்தினார் மனிதர்.

“புருஷனாவே நினைச்சிருந்த இந்த பிரகாஷைத் தூக்கிப்போட முடிஞ்ச உன்னால, ஏன் லேகா அதே பிரகாஷை இப்போ புருஷனா ஏத்துக்க முடியலை?”

“முடியலையே பிரகாஷ்!”

“அப்போ… தாலிங்கிற ஒரு வார்த்தை உன்னைக் கட்டிப்போடுமா லேகா? என்னைக்கோ மலரோட அப்பாக் கட்டின அந்தத் தாலிக்கு நீ குடுக்கிற மரியாதைதானே இது. அதே தாலியை உன்னோட கழுத்துல நான் கட்ட எவ்வளவு நேரமாகும் லேகா? இந்த வீட்டுல இருக்கிற பூஜையறையில அந்த ஆண்டவனைச் சாட்சியா வச்சு மூனு முடிச்சைப் போட எனக்குத் தெரியாதா லேகா? அதை வேணாம்னு நீ சொல்லிடுவியா?”

“போதும் பிரகாஷ்.” இப்போது சித்ரலேகாவுமே உடைந்து அழுதார்.

“எனக்குப் புரியலை லேகா. உனக்குக் கிடைச்ச வாழ்க்கை உன்னைச் சந்தோஷத்தோட உச்சத்துல நிறுத்தியிருந்தாக்கூட நீ பேசுறதைக் கொஞ்சமாவது என்னால ஏத்துக்க முடியும். அதுவும் இல்லைங்கிறப்போ எது உன்னை எம்பக்கத்துல வரத் தடுக்குது?” சித்ரலேகா இப்போது பேசவில்லை.

“உன்னை நான் நிறையக் கஷ்டப்படுத்திட்டேன். என்னையும் தாண்டி நிறைய விஷயங்கள் நடந்து போச்சு. அன்னைக்கிருந்த குடும்பம், சூழ்நிலை, வயசு… என்னெல்லாமோ நடந்து போச்சு. ஆனா இன்னைக்கு எந்தத் தடையும் இல்லை. நீ பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பிராயச்சித்தமா உன்னை என்னோட உள்ளங்கைல வச்சுத் தாங்கணும்னு ஆசைப்படுறேன். உன்னை நீயே கண்ணாடியில பாரு. பூ இல்லாமப் பொட்டு இல்லாம…” ஏதோ கசப்பை விழுங்குவது போல இப்போது நெஞ்சைத் தடவிக் கொண்டார் ஞானபிரகாஷ்.

“இதெல்லாம் மாறணும் லேகா. நாம ஆசைப்பட்ட வாழ்க்கையை நாம வாழணும் லேகா. உன்னை ராணி மாதிரி நான் பார்த்துக்கணும். மலருக்குப் பொறக்கப் போறது நம்மளோட பேரக்குழந்தைங்க. அவங்களை நீயும் நானும் சேர்ந்து வளர்க்கணும். கோடி கோடியா சம்பாரிச்சு வெச்சிருக்கேன். அது எல்லாத்தையும் உனக்காகவும் மலருக்காகவும் செலவழிக்கணும். சரின்னு சொல்லு.” ஞானபிரகாஷ் இறைஞ்சி நிற்க சிலைப் போல அமர்ந்திருந்தார் சித்ரலேகா.