roja03

roja cp-6bf924fb

ரோஜா 3

வீடே அமைதியாக இருந்தது. எல்லோரும் கலைந்து போயிருந்தார்கள். கீர்த்தனாவின் திருமணம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பேசி முடிக்கத்தான் அன்று வத்சலா வீட்டில் எல்லோரும் கூடி இருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து சத்யன், ஞானபிரகாஷ் என அனைவரும் வந்து விட அந்த இடமே ஜே ஜே என்று இருந்தது. கூத்தடித்து விட்டுத்தான் எல்லோரும் கிளம்பி இருந்தார்கள். கட்டிலில் அமர்ந்திருந்த கணவரிடம் பால் க்ளாஸை நீட்டிய வத்சலா பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

“அக்கா இன்னைக்கு ஒரே அழுகைங்க.”

“ஏன்? என்னாச்சு?”

“சின்னண்ணாவை நினைச்சுத்தான்.”

“இப்ப அழுது என்ன பிரயோஜனம் வத்சலா. காலம் ரொம்பவே ஓடிப்போச்சே. இப்பக்கூட இந்த ஃபோட்டோ உன் கண்ணுல படலைன்னா என்ன ஆகியிருக்கும் சொல்லு?”

“ம்… நீங்க சொல்றதும் சரிதான்.”

“பாவம் ஞானம். நீங்க யாருமே அவருக்கு நியாயம் பண்ணலை.”

“நான் என்னங்க பண்ண முடியும்? இப்படி ஒரு விஷயம் நடந்ததே எனக்குத் தெரியாதே!”

“இல்லை… நீயும் அப்போ சின்னப் பொண்ணுதானே வத்சலா. இந்தக் காதல் கத்தரிக்கா சமாச்சாரமெல்லாம் உங்காதுல விழ வேணாம்னு உங்கப்பா நினைச்சிருப்பாராயிருக்கும்.”

“ஆமாங்க.” இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது லோகேந்திரனின் ஃபோன் அலறியது. காதுக்குக் கொடுத்தார் மனிதர்.

“அம்மா! சொல்லுங்கம்மா.” எதிர்ப்புறம் ரங்கநாயகி பேசிக் கொண்டிருந்தார்.

“எப்படி இருக்கேப்பா?”

“நல்லா இருக்கேம்மா.‌ என்ன இந்த நேரத்துல கூப்பிடுறீங்க? உடம்புக்கு ஒன்னும் இல்லையே?” மகனின் குரல் கொஞ்சம் பதறியது.

“அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா. நம்ம சத்யாவைப் பத்திப் பேசத்தான் கூப்பிட்டேன்.”

“ஏம்மா? அவனுக்கு என்ன ஆச்சு? ஆ ஊன்னா உடனே கிராமத்துக்கு ஓடி வந்தர்றான்.”

“ஏன்? அதுல உனக்கு ரொம்ப வருத்தம் போல இருக்கு?”

“வருத்தமெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. ஆனா நெத்தியில காயத்தோடல்ல வந்து நிக்குறான்.” 

“இளந்தாரிப் பசங்கன்னா அப்படித்தான். நானும் கோபப் பட்டேன்தான். என்னப் பண்ண முடியும் சொல்லு? அவனுக்கு உங்கப்பா உடம்பு. ரோட்டுல இறங்கி நடந்தா சும்மா ஜம்முன்னுல இருக்கான்!” ரங்கநாயகி பெருமைப் பேச லோகேந்திரன் வத்சலாவைப் பார்த்துச் சிரித்தார். மாமியார் பேசும் குரல் மருமகளுக்கும் கேட்டதால் அவர் முகத்திலுமே ஒரு இளநகைத் தோன்றியது.

“அதை விடுப்பா. நான் இப்போ கூப்பிட்டதே வேற ஒரு விஷயம் பேசத்தான்.”

“சொல்லுங்கம்மா.”

“ஏன் லோகேந்திரா? நம்ம சத்யாக்கு நான் நம்ம ஊர்லயே ஒரு பொண்ணு பார்க்கட்டுமா?” ஆசையாக ரங்கநாயகி கேட்க வத்சலாவின் முகத்திலிருந்த புன்னகையை யாரோ துடைத்துப் போட்டாற்போல இருந்தது.

“அம்மா…”

“ஏன் இழுக்கிறப்பா? நீதான் ஊரை விட்டுத் தூரமாயிட்டே. அடிக்கடி வரப்போக முடியமாட்டேங்குது. அவனாவது எங்கூட இருக்கட்டுமே?” இந்தக் கோரிக்கையில் கணவர் குடித்து முடித்திருந்த பால் கிளாஸைத் தூக்கிக் கொண்டு சட்டென்று எழுந்து போய்விட்டார் வத்சலா.

“இப்போ என்னம்மா அவசரம்? இன்னும் சத்யாக்கு இருபத்தைஞ்சு ஆரம்பிக்கலை. இப்பப் போய் கல்யாணம் பண்ணினா நல்லாவா இருக்கும்?”

“ஏம்பா? சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லதுதானே? பேரன் பேத்தின்னு நாலையும் பார்க்கலாம்ல?”

“அது சரிதான்…”

“ஏம்பா? உம்பொண்டாட்டி இதுக்கு சம்மதிக்க மாட்டாளா?” இந்தக் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வது. லோகேந்திரனின் நிலைக் கவலைக்கிடமாக ஆகிப்போனது. ஆம் என்றா சொல்ல முடியும்? 

“அதெல்லாம் இல்லைம்மா. ரொம்பச் சின்ன வயசாருக்கேன்னுதான் யோசிக்கிறேன்.”

“நாம என்ன நாளைக்கேவா கல்யாணம் பண்ணப் போறோம்? சும்மா பார்க்க ஆரம்பிப்போம். அது நடக்கிறப்போ அதுபாட்டுக்கு நடக்கட்டும்.”

“இதுக்கு சத்யா ஒத்துக்கணுமேம்மா?”

“அதெல்லாம் நான் கேட்டுட்டேன். சத்யா சம்மதிச்சுட்டான்.” இப்போது லோகேந்திரன் தலையில் கையை வைத்துக் கொண்டார்.

“பார்க்கலாம்மா, அவசரப் படாதீங்க.”

“சரிப்பா, எல்லாரையும் கேட்டேன்னு சொல்லு. வெச்சிடட்டுமா?”

“சரிம்மா, உடம்பைப் பார்த்துக்கோங்க.” ஃபோனை லோகேந்திரன் வைத்து சிறிது நேரத்திற்கெல்லாம் உள்ளே வந்தார் வத்சலா. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எதுவும் பேசாமல் அமைதியாக கணவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டார். லோகேந்திரனுக்கு லேசாகத் தலை வலித்தது.

“வத்சலா… அம்மா ஏதோவொரு ஆசையில கேட்டுட்டாங்க. அதுக்கு நீ ஏம்மா கோவிச்சுக்கிறே?” சமாதானமாகக் கேட்டார் மனிதர்.

“தூங்கலாங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.” மனைவியின் பதிலிலேயே அவள் கோபம் புரிந்தது அவருக்கு.

“நான்தான் அவங்கக் கூட இல்லை. பேரனாவது இருக்கட்டும்னு நினைக்கிறாங்க போல.” இப்போது சரேலென்று எழுந்து உட்கார்ந்தார் வத்சலா.

“நான் உங்கம்மாவை விட்டுட்டு இங்க இருங்கேன்னு உங்கக்கிட்டச் சொன்னேனா?”

“ஐயையோ! அப்படிச் சொல்லலைம்மா நான்.”

“பின்ன என்னங்க?”

“அவங்க ஆசை… வயசு போன காலத்துல சத்யா அவங்களோட இருக்கணும்னு ஆசைப்படுறாங்களோ என்னவோ?”

“கல்யாணம் பண்ணுற வயசா இப்போ அவனுக்கு?”

“அதை நானும் சொல்லிட்டேம்மா.”

“அப்போ விடுங்க அந்தப் பேச்சை. குடும்பத்துல ஒரு மனுஷன் ஒத்தையா நிக்குறாரு. அதைப் பார்த்துப் பார்த்து தினமும் நான் கண்ணீர் வடிக்கிறேன். நீங்க அதை யோசிக்காம முந்தாநாத்துப் பொறந்த பயலுக்குப் பொண்ணு தேடுறீங்க!”

“அப்படி இல்லைம்மா…”

“பேசாமத் தூங்குங்க.” கறாராகச் சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டார் வத்சலா. அதற்கு மேல் கணவரைக் கடிந்து கொள்ளவும் முடியவில்லை. லோகேந்திரன் மிகவும் நியாயமான மனிதர். அதில் வத்சலாக்குக் கொஞ்சம் பெருமையும் உண்டு. இதுவே அக்கா கண்மணியின் கணவருக்கு இந்தக் குடும்பத்தின் மேல் அவ்வளவு அக்கறையெல்லாம் கிடையாது. சின்னண்ணாவின் விஷயத்தையும் லோகேந்திரனிடம் இலகுவாகப் பகிர்ந்தது போல அக்கா கணவரிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. இலகுவாகத் தீர்வும் காண இயலாது. 

ஆனால் லோகேந்திரன் மைத்துனரை இலகுவாகப் புரிந்து கொண்டார். அடுத்து என்ன என்று மனைவியோடு சேர்ந்து திட்டம் போட்டார். இந்த மனிதருக்காக எதையும் பொறுத்துக் கொள்ளலாம். வத்சலா நினைத்துக் கொண்டிருக்கும்போதே பக்கத்தில் மெல்லிய குறட்டைச் சத்தம் கேட்கவும் சிரித்தபடி கண்ணயர்ந்தார் வத்சலா.

***

மண்டபத்தில் அத்தனை பேரும் கூடி இருந்தார்கள்.‌ அன்றுதான் அலங்காரங்கள் அனைத்திற்கும் இறுதி முடிவு என்பது தீர்மானம் பண்ணி இருந்ததால் பெண்கள் அனைவரும் வந்திருந்தார்கள். வத்சலா தன் மகள் சஹானாவோடு வந்திருக்க, கண்மணி தனது மகளான மணப்பெண் கீர்த்தனாவோடு வந்திருந்தார். ஆண்கள் அத்தனை பேரும் வேலைகளைப் பங்கு போட்டுக்கொண்டு அவரவர் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். கீர்த்தனாவிற்கு எல்லாவற்றிற்கும் சத்யன் வேண்டும் என்பதால் அவன் இவர்கள் பின்னோடு அலைய வேண்டி இருந்தது. 

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே வந்தாள் மலர். அந்த இடமே நல்ல கலகலப்பாக இருந்தது. சத்யனின் குரல் உள்ளே நுழையும் போதே மலரின் காதுகளில் விழுந்தது. அவளை அறியாமலேயே ஒரு புன்னகை அவளைத் தொற்றிக் கொண்டது.

“அடடே! மலர்… வாம்மா… வா வா.” இவள் தலையைக் கண்டதும் ஓடிவந்து வரவேற்றார் வத்சலா.

“ஹலோ ஆன்ட்டி. எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேம்மா.” வத்சலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே மலரின் கண்கள் அங்கிருந்த அனைவரையும் பார்த்து ஒரு முறை சிரித்தது.

“குட் மார்னிங் மிஸ்டர்.சத்யன்.”

“குட் மார்னிங் மலர்.” மலரின் விழிகள் அவன் நெற்றியை உரசியது. அவள் பார்வை அவனுக்கு என்ன சொன்னதோ…

“கெட்டிங் பெட்டர்.” என்றான். மலர் சிரித்தது.

“இவங்கதான் எங்க கல்யாணப் பொண்ணு.” கீர்த்தனாவின் தோள்களில் கையைப் போட்டவன் தங்கையை அறிமுகப் படுத்தினான்.

“ஹாய்!” பரஸ்பரம் நட்பு பரிமாறிக்கொள்ளப்பட்ட அந்தச் சூழல் மலருக்குப் பிடித்திருந்தது. குடும்பமாகக் கூடி நின்று அவர்கள் வேலை செய்தது இதமாக இருந்தது. ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திய சத்யன் கடைசியாகத் தன் பெரியம்மாவை‌ அறிமுகப்படுத்தினான்.

“இவங்க மிஸஸ்.கண்மணி வரதன்.‌ கல்யாணப் பொண்ணோட அம்மா.” சத்யன் விளையாட்டாகச் சொல்ல அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள்.‌ ஆனால் கண்மணி நிதானத்தைத் தவற விட்டிருந்தார்.

“அம்மா எப்படி இருக்காங்க மலர்?” அந்தக் கேள்வியில் மலர் திடுக்கிட்டுப் போனாள். வத்சலாவுமே கொஞ்சம் ஆடிப்போனார்.

“அம்மாவை உங்களுக்குத் தெரியுமா ஆன்ட்டி?” இளையவள் கேட்ட பிறகுதான் தான் முட்டாள்தனமாகக் கேள்வி கேட்டிருக்கிறோம் என்று புரிந்தது கண்மணிக்கு.

“அது ஒன்னுமில்லை மலர்.‌ வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களான்னு கேக்குறதுக்கு பதிலா அக்கா இப்படிக் கேக்குது. பொண்ணுக்குக் கல்யாணம் கூடி வந்த நாள்ல இருந்து இப்படித்தான் பேசுது.” ஒருவாறு சமாளித்த வத்சலா பல்லைக் காட்டினார். சத்யனின் ஒற்றைப் புருவம் லேசாக ஏறி இறங்கியது.

“அவங்க கேட்டதும் ஒரு வகையில சரிதான் ஆன்ட்டி. வீட்டுல எனக்குன்னு இப்போ அம்மா மட்டும் தான் இருக்காங்க.” 

“ஓ…” வத்சலா ஏதோ புதிதாகத் தெரிந்து கொள்வது போல கேட்டுக் கொண்டார். அக்காவின் முகத்தைத் திரும்பிப் பார்த்த வத்சலா திடுக்கிட்டுப் போனார். கண்கள் இரண்டும் கலங்கிப் போக விட்டால் அந்த நொடியே அழுது விடுவார் போல நின்றிருந்தார் கண்மணி.

“நீங்க பேசிட்டு இருங்க. இதோ வந்திர்றோம்.” சொல்லிவிட்டுக் அவசர அவசரமாக அக்காவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சற்று அப்பால் போனார் வத்சலா. சத்யனின் விழிகள் எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தன.

“என்னக்கா பண்ணுறீங்க?”

“என்னால முடியலைடி வத்சலா.” வெடித்து அழுகின்ற தன் அக்காவை ஒரு இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தார் வத்சலா. 

“என்னக்கா?”

“நம்ம ஞானத்துக்கு பொறந்திருக்க வேண்டியவடி. என் தம்பி பொண்ணுடி அவ. யாரோ மாதிரி எனக்கு அம்மாவைத் தவிர வேற யாருமில்லைன்னு சொல்லுறப்போ…” கண்ணீரில் கரைந்தார் கண்மணி.

“சரிக்கா… நடந்தது நடந்து போச்சு. அதை நினைச்சு நினைச்சு அழுறதால என்ன பிரயோஜனம்?‌ நடக்க இருக்கிறதைப் பார்க்கலாம்கா.”

“இல்லை வத்சலா… நான் இப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன். என்னால இதையெல்லாம் தாங்க முடியலைடி. இதுல இப்போ ஞானம் வேற இங்க வர்றேன்னு சொல்லி இருக்கான்.” இதைச் சொல்லிவிட்டு இன்னுமொரு பாட்டம் அழுதார் கண்மணி.

“நீங்க இப்போ கிளம்பிப் போனா நல்லா இருக்காதுக்கா. பசங்கக் கேட்டா நான் என்ன சொல்றது?”

“என்னவாவது சொல்லிச் சமாளி வத்சலா. எம் புருஷன் கிட்ட இதெல்லாம் என்னால பேச முடியாதுடி. அழ மட்டும்தான் முடியும். ஆனா நீ அப்படி இருக்காதே. உம் புருஷனோட சேர்ந்து மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பாரு. இன்னும் காலம் கடத்தாத வத்சலா.” கண்ணீரோடு ஓட்டமும் நடையுமாகப் போகும் தன் சகோதரியை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார் வத்சலா. வெளியே இருக்கும் பிள்ளைகளிடம் இதை என்னவென்று விளக்குவது? ஆனால் அக்காவையும் குறைச் சொல்ல முடியவில்லை. இதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இருந்திருந்தால் முட்டாள் போல அந்தப் பெண்ணிடம் அவள் அம்மாவைப் பற்றிக் கேட்டிருப்பாளா?

கண்முன்னே தெரிந்த எதிர்காலம் தனக்குப் பல சவால்களை வைத்திருப்பது போலதான் தெரிந்தது வத்சலாவிற்கு. மூத்தண்ணாவை நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. அது வத்சலாவிற்கு நன்றாகவே தெரியும்.‌ தாயாக நின்று எல்லாவற்றையும் செய்ய வேண்டியவளே முதுகு காட்டி ஓடுகிறாள்.‌ ஒரு பெருமூச்சோடு வெளியே வந்தார் வத்சலா.

“பெரியம்மா எங்கேம்மா?” சத்யனின் வார்த்தை மட்டுமல்ல பார்வையும் வத்சலாவைக் கூர்மையாகத் தாக்கியது.

“கொஞ்சம் தலைவலிக்குதாம் சத்யா. அதான் அப்படியே கிளம்பிட்டாங்க.”

“நல்லாத்தானே சித்தி இருந்தாங்க.”

“ஆமா கீர்த்தி… என்னமோ தெரியலை. திடீர்னு கிளம்புறேன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.” வத்சலா தடுமாறவில்லை. எதுவானாலும் இனி நானேதான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற தைரியம் இப்போது வந்திருந்தது. இது எதுவும் புரியாத மலர்விழி மண்டபத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். கையிலிருந்த நாட் பாடில் அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் குறித்துக் கொண்டிருந்த பெண்ணை சத்யனின் கண்கள் ஆராய்ந்தது. மகனின் பார்வைப் போன திசையைக் கவனித்த வத்சலாவின் விழிகள் திடுக்கிட்டது. சத்யன் எல்லாம் இப்போது ஆட்டத்தில் நுழைவது அவருக்கு அவ்வளவு நல்லதாகத் தோன்றவில்லை. எனவே பேச்சை மாற்றினார்.

“கீர்த்தனா… எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா? எங்க, என்னென்ன வேணும்னு மலர்கிட்டச் சொல்லிட்டீங்களா?” வத்சலாவின் வார்த்தைகள் அப்போது அங்கே வேலை செய்தது. அதன்பிறகு எல்லோரும் வேலையில் கவனமாகி விட்டார்கள். தங்களது தேவைகளை சத்யாவும் கீர்த்தனாவும் சொல்ல மலர் அவற்றையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டாள். காலை ஆட்டியபடியே இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சஹானாவைப் பார்த்த போது மலருக்கு சிரிப்புத்தான் வந்தது.

“அப்போ நான் கிளம்பட்டுமா கீர்த்தனா? ஏதாவது மாற்றம் இருந்தா ஒரு ரெண்டு நாள்ல சொல்லிடுங்க. அதுக்கப்புறமா நான் ஃப்ளவர்ஸ் ஆர்டர் பண்ணணும்.”

“சரி மலர்.”

“உங்க பொக்கே, குட்டிப் பொண்ணுங்க பொக்கேஸ் எல்லாத்துக்கும் நான் பிக்சர்ஸ் கொண்டு வர்றேன். அதை இன்னொரு நாள் முடிவு பண்ணிக்கலாம்.”

“சரிங்க.” எல்லோரையும் பார்த்து ஒரு முறை தலையை ஆட்டியவள் கிளம்பப் போனாள். சரியாக அவள் கிளம்பும் நேரம் உள்ளே நுழைந்தார் ஞானபிரகாஷ். இந்த நொடிக்காகத்தான் அத்தனை நேரமும் காத்திருந்தார் வத்சலா.

ஞானபிரகாஷ்… நாற்பத்தைந்துகளில் இருந்தார். கட்டுமஸ்தான உடம்பு. ஆஜானுபாகுவான தோற்றம். வத்சலாவிற்கும் அவருக்கும் அத்தனை வயது வேறுபாடு கிடையாது. அனேகமாக இரண்டு மூன்றுதான் இருக்கும். உள்ளே வந்த மாமனைப் பார்த்த போது இளையவர்கள் மூவரின் முகமும் மலர்ந்து போனது. அந்த அம்மான் அத்தனைக் கலகலப்பான ஸ்நேகிதர், அவர்களைப் பொறுத்தவரை. 

“வாங்க மாமா.”

“வாங்க அண்ணா.” அந்தக் குரல்களுக்குப் பதிலாகச் சிரித்த ஞானப்பிரகாஷ் மலர்விழியைக் கண்ட மாத்திரத்தில் அப்படியே நின்றார். அவர் உடம்பிற்குள் மின்சாரம் பாய்ந்தாற்போல இருந்தது. சின்னண்ணனின் ரியாக்ஷனைப் பார்த்துக் கொண்டிருந்த வத்சலா சுற்றுப்புறத்தை மறந்து போனார். அவரைத் தவிர்த்து இன்னுமொரு ஜோடி விழிகள் மாமனைத் துளைப்பதை அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை.

“மாமா… இவங்கதான் மலர்விழி. நம்ம கீர்த்தனாக்கா கல்யாணத்துக்கு ஃபுல் பூ அலங்காரம் பண்ணப்போறது இந்தப் பூதான். சீச்சீ… மலர்தான்.” சொல்லிவிட்டு சஹானா சிரிக்க மலரும், கீர்த்தனாவும் கூடச் சிரித்தார்கள். ஆனால் ஞானபிரகாஷ் சிரிக்கவில்லை. அந்த இளம்பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் திகைப்பூண்டை மிதித்தவர் போல ஸ்தம்பித்து நின்றிருந்தார்.

‘பிரகாஷ்.’ அவர் காதுக்குள் யாரோ அழைப்பது போல ஒரு குரல் கேட்டது.

“அப்போ நான் கிளம்புறேன் ஆன்ட்டி.”

“சரிம்மா… கண்டிப்பா எங்க கீர்த்தனா கல்யாணத்துக்கு நீயும் உங்கம்மாவும் வரணும். நாங்க எல்லாரும் ரொம்பவே எதிர்பார்ப்போம்.” அந்த ‘அம்மா’ வில் ஒரு அழுத்தம் கொடுத்தார் வத்சலா. கடைக்கண்ணால் அண்ணனை நோட்டம் விட்டார்.

“சரி ஆன்ட்டி… ட்ர்ரை பண்ணுறேன். அம்மா அப்படி சட்டுன்னு எங்கேயும் போக மாட்டாங்க.”

“அதெல்லாம் முடியாது. நான் வீட்டுக்கே வந்து பத்திரிகை வெப்பேன். கண்டிப்பா வரணும்.”

“சரி ஆன்ட்டி.” சிரித்தாள் மலர். கேட்பது சத்யனின் அம்மா ஆகிற்றே. கரும்பு தின்னக் கூலியா?! பெண்கள் இருவரும் மலரோடு பேசிய படி வெளியே போக சத்யன் மாமாவை ஒரு ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்தான். அவர் கல்லுப் போல உறைந்து நின்ற தோற்றம் அவனை என்ன பண்ணியதோ சட்டென்று அவனும் வெளியேறி விட்டான். வத்சலா தன் சின்னண்ணனையே பார்த்தபடி இருந்தார். வாழ்க்கை அவருக்கு விதித்திருந்த கசப்பை விழுங்க மனிதர் மிகவும் சிமப்பட்டுக் கொண்டிருந்தார்.

“அண்ணா!” அந்தக் குரலில் ஞானபிரகாஷ் திடுக்கிடவில்லை. நிதானம் இப்போது அவரிடம் மீண்டிருந்தது.

“வத்சலா…” 

“இப்போவாவது பேசுங்கண்ணா.”

“அந்த மலர்… மலர்விழி…”

“கேளுங்க.”

“அந்தப் பொண்ணு யாரு?”

“யாரா இருக்கும்னு நினைக்கிறீங்க?”

“லேகா… சித்ரலேகாவோட பொண்ணா?”

“ஆமா…” 

“வத்சலா! நிஜமாவா? நிஜமாவா சொல்றே?!” ஞானபிரகாஷின் குரலும் முகமும் விம்மி வெடித்தது. ஆனாலும் அதை வத்சலா ரசிக்கவில்லை. இதில் அண்ணா புளகாங்கிதப்பட என்ன இருக்கிறது என்றுதான் தோன்றியது.

“வத்சலா… என்னால நம்ப முடியலை… லேகாக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா?”

“உங்களுக்கும் இப்படியொரு பொண்ணு குடும்பம்னு இருந்திருக்கணும் இல்லைண்ணா?” அந்த வார்த்தைகளில் ஞானபிரகாஷ் நிறையவே நிதானித்தார். தங்கையின் பேச்சில் நியாயம் இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

“எல்லாருக்கும் எல்லாத்தையும் ஆண்டவன் விதிச்சிட மாட்டான் வத்சலா.” என்றார் எங்கோ பார்த்தபடி.

“எப்பவுமேவா அண்ணா?”

“புரியலை…”

“அப்போ விதிக்கலை சரி, ஒருவேளை இப்போ விதிச்சிருந்தா?”

“ஏய்! என்ன பேசுறே நீ? லேகா புருஷன் நல்லாத்தானே இருக்கார்? அவருக்கு ஒன்னும் ஆகலையே?” பதைபதைத்த அண்ணனைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்தார் வத்சலா.

“இந்தப் பொண்ணுக்கு அஞ்சு வயசா இருக்கும் போது போய்ச் சேர்ந்துட்டாராம்.” 

“என்ன?!” அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தார் சின்னவர்.

“எங்கண்ணா ஒருத்தி நல்லா வாழணும்னு அவர் வாழ்க்கையைத் தொலைச்சிட்டு நின்னிருக்கார். கடைசியில பார்த்தா அந்த ஒருத்தி கூட அவ வாழ்க்கையை நல்லா வாழலியே.” இப்போது வத்சலா வெடித்து அழுதார்.

“வத்சலா…” ஞானபிரகாஷின் குரல் தழுதழுத்தது. 

“பேசாதீங்கண்ணா. இப்படித்தான் முட்டாள் மாதிரி இருப்பீங்களா?”

“என்னை வேற என்னப் பண்ணச் சொல்றே?”

“அதான் காதலிக்கத் தெரியுதில்லை. வக்கணையாத் தோள்ல கைப்போட்டு ஃபோட்டோ எடுக்கத் தெரியுதில்லை. அப்போத் தூக்கிட்டுப் போய் தாலியைக் கட்ட வேண்டியதுதானே?”

“எப்படிம்மா? வீட்டுல எனக்குப் பின்னால‌ ஒரு பொண்ணு பொறந்திருக்காளே? கல்யாண வயசுல வேற நிக்குறா. நான் பண்ணுற ஒரு சின்னக் காரியமும் அவ வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கிடும் எங்கிறப்போ நான் என்னம்மா பண்ண முடியும்?” இப்போது வத்சலா விக்கித்துப் போனார். நெஞ்சை எதுவோ பண்ணியது.

“அண்ணா!”

“அப்பா கண்டிப்பா முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதோட நின்னிருந்தாக் கூடப் பரவாயில்லை. அவங்க வீட்டுக்குப் போய் அவங்களோட சண்டை வளர்த்து… அடுத்த முகூர்த்தத்திலேயே அவங்க பொண்ணுக்குக் கல்யாணத்தை முடிச்சு வெச்சுட்டாங்க. இதுக்கு நடுவுல என்னால என்னப் பண்ண முடியும்? அது போதாததுக்கு நல்ல மாப்பிள்ளை ஒன்னு வந்திருக்குன்னு உனக்கும் உடனேயே கல்யாணம் வச்சுட்டாங்க. நான் எந்தப் பக்கம் போவேன் வத்சலா? அப்போ எனக்குமே ரொம்பச் சின்ன வயசு. உக்காந்து அழக்கூட முடியலை.” வத்சலா கேவிக் கேவி அழுதார் இப்போது.

“அதுக்கப்புறமும் என்ன ஏதுன்னு நீங்க விசாரிக்கலையேண்ணா?”

“காதலிச்ச வரைக்கும்தான் அவ என்னோட லேகா. அதுக்கப்புறம் அவ இன்னொருத்தனோட பொண்டாட்டி. பின்னாடியே தேடிக்கிட்டுப் போகச் சொல்றியா?”

“ஐயோ ஆண்டவா! இதுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? அவங்களும் வாழாம நீங்களும் வாழாம இது என்ன மாதிரியான விளையாட்டு?” இப்போது கசப்பாகப் புன்னகைத்தார் ஞானபிரகாஷ். பெண்கள் இருவரும் மலரை வழியனுப்பி விட்டு உள்ளே வர கண்களைத் துடைத்துக் கொண்டார் வத்சலா. இவர்கள் பின்னோடு வந்த சத்யன் முகத்தில் மட்டும் குழப்பத்தின் சாயல். ஆனால் அதற்குள் பெரியவர்கள் சுதாரித்திருந்தார்கள்.