roja07

roja07
ரோஜா 7
நகரின் அந்தப் பிரபலமான ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் ஸ்கூட்டியை நிறுத்தினாள் மலர்விழி. மனம் முழுவதும் குழப்பங்கள் குவிந்து கிடந்தன. சத்யன் பார்க்க வேண்டும் என்று இவளை அழைத்திருந்தான். வழமையாக எப்போதும் அவன்தான் கடைக்கு வருவான். ஆனால் இன்று என்னமோ தெரியவில்லை, அவளை அழைத்திருந்தான்.
சத்யனை பெருமட்டிற்கு மலர் இப்போதெல்லாம் தவிர்ப்பது வழக்கம். ஆசைக் கொண்ட மனதை வேலைகளில் திருப்பி இருந்தாள். இருந்தாலும்… இரவு என்றொன்று தினமும் வரும். அதில் இந்த உறவு கண் சிமிட்டி விட்டுப் போகும். ஹெல்மெட்டைக் கழட்டி ஸ்கூட்டிக்குள் வைத்தவள் அந்த ஹோட்டலை ஒரு முறைப் பார்த்தாள். ரசனைக்குரியதாக இருந்தது. நூறு அறைகளாவது இருக்கும் என்று நினைத்துக் கொண்டே உள்ளே போனவள் ரிசப்ஷனில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“மிஸ்டர்.சத்யனைப் பார்க்கணும். வரச்சொல்லி இருந்தாங்க.”
“நீங்க மிஸ்.மலர்விழியா?”
“ஆமா.”
“வாங்க மேடம்.” ரிசப்ஷனைத் தாண்டி மலரை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள் அந்தப் பெண். வெளிப்புறத்தை விட உட்புறம் இன்னும் அழகாக இருந்தது. மெயின் பில்டிங்கைத் தாண்டி இன்னும் உள்ளே போக வெளிப்புறமாக ஸ்விம்மிங் பூல் இருந்தது. அதன் பக்கத்தில் நின்றபடி சத்யன் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். ஏதோ பேப்பர் ஒன்றை வைத்துக்கொண்டு விவாதிப்பதைப் பார்த்தாலே புரிந்தது, விஷயம் எத்தனை தீவிரம் என்று. ஆனாலும் இவளைப் பார்த்தவுடன் சட்டென்று அந்த மனிதரை அனுப்பிவிட்டு இவளிடம் வந்தான்.
“வாங்க மலர்.”
“முடிச்சுட்டே வாங்க சார். நான் வெயிட் பண்ணுறேன்.”
“இல்லையில்லை, நீங்க வாங்க.” அவளை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவன் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம்,
“இன்னொரு வன் அவருக்கு என்னை யாரு வந்தாலும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.” என்றான்.
“ஓகே சார்.”
“நீங்க வாங்க மலர்.” உள்ளே அழைத்துப் போனவன் ஓர் அறையைத் திறந்தான். அது அவன் கேபின் போலும்.
“உட்காருங்க மலர்.”
“ம்…” உட்கார்ந்த மலரின் விழிகள் அறையை நோட்டம் விட்டது. எல்லாம் நேர்த்தியாக இருந்தது. ஆனால் இந்த இடத்தை இன்னும் கொஞ்சம் ரசனைக்குரியதாக மாற்றலாம் என்றுதான் எண்ணத் தோன்றியது.
“பரவாயில்லை சொல்லுங்க.”
“சார்?”
“மனசுல ஏதோ ஓடுதே, அதைச் சொன்னேன்.” பிடிபட்ட உணர்வில் மலர் சிரித்தாள்.
“இல்லை… இந்த ரூம்ல கொஞ்சம் மாற்றங்கள் செஞ்சா இன்னும் அழகா இருக்கும்னு தோணிச்சு.”
“ஓ…”
“வித் யுவர் பர்மிஷன்…” அவள் சொல்லிவிட்டுத் தயங்க,
“ம்…” என்று சம்மதம் வழங்கினான் சத்யன். அங்கிருந்த ஃப்ளவர் வாஸில் இருந்த மலர்களை மெதுவாகத் தூக்கியவள் மலர்களைக் கொஞ்சம் உள்ளும் புறமுமாக இடம் மாற்றி வைத்தாள்.
“உங்க ரூம் கலருக்கு டார்க் கலர் ஃப்ளவர்ஸ் வெளியே இருக்கணும். லைட் கலர் ஃப்ளவர்ஸ் உள்ளே இருக்கணும். அப்போதான் பார்க்க அழகா இருக்கும். சாரி சார்… பழக்க தோஷம்.”
“ஹா… ஹா… ஐ லைக் இட் மலர்.” சத்தமாகச் சிரித்தவன் மலர்விழியை முதன்முறையாக ஆழ்ந்து பார்த்தான்.
ப்ளூ ஜீன்ஸும் சிவப்பு நிற டாப்பும் அணிந்திருந்தாள். மருந்திற்கும் மேக்கப் இருக்கவில்லை. நான் உழைக்கும் வர்க்கம் என்று சொல்லாமல் சொன்னது அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வை. ஆனால் நல்ல நிறமாக மூக்கும் முழியுமாக இருந்தாள். அழகாகத்தான் இருந்தாள், இருந்தாலும் அதை ஆராதிக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை போலும்.
‘இந்தப் பெண்ணை இத்தனை நாள் எப்படி நாம் கவனிக்காமல் போனோம்?!’
“சார்!” சட்டென்று கலைந்தான் சத்யா.
“என்னை எதுக்கு வரச்சொன்னீங்க சார்?” அந்தக் கேள்வியில் சத்யன் அழகாகப் புன்னகைத்தான்.
“அது உங்களுக்கே தெரியுமே மலர்.” இப்போது மலரின் வாய் அடைத்துப் போனது. அமைதியாக இருந்தாள்.
“எனக்கு உங்கக் கஷ்டம் புரியுது மலர். ஆனா… இனியும் காலங்கடத்துற அளவுக்கு அவங்க ரெண்டு பேரும் சின்னப்பசங்க கிடையாது இல்லையா?”
“நீங்க அங்கிள்கிட்டப் பேசினீங்களா?”
“யாரைக் கேக்குறீங்க? சின்ன மாமாவையா? உறவு முறைத் தப்பா இருக்கே மலர். அவர் எனக்குத்தான் மாமா.” அந்தக் குரல் நிதானமாகச் சொன்ன போது மலர் கிடந்து தவித்தாள். அவள் உடல்பாஷையைக் கவனித்த சத்யன் சட்டென்று எழுந்து வந்து அவளருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.
“மலர் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…” மேஜை மேலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவளிடம் நீட்டினான் சத்யா. ஏதோ மூச்சுக் காற்றுக்குத் தவிக்கும் மீன் போலத் தடுமாறினாள் மலர்.
“நாம பேசலாம் மலர். உங்களுக்கு எல்லா விதத்திலயும் ஹெல்ப் பண்ண நான் இருக்கேன். உணர்ச்சி வசப்படாதீங்க. ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்.”
“சத்யா…” அவளையும் அறியாமல் தன்னருகில் இருந்தவனின் கையைப் பற்றியவள் அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள்.
“சொல்லுங்க மலர்.” சத்யனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவளைப் புரிந்து கொண்டான்.
“எனக்கு நீங்க சொல்றது எல்லாம் புரியுது. நிதானமா யோசிச்சா… நீங்க சொல்ற முடிவுதான் சரி.”
“ம்…” பதறிப் பதறிப் பேசியவளின் கையில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான் சத்யன்.
“ஆனா… ஆனா என்னன்னு தெரியலை. தொண்டைக்குள்ள முள்ளு மாட்டின மாதிரி… என்னமோ ஒரு வலி. இல்லையில்லை… அது வலி இல்லை… எனக்குச் சொல்லத் தெரியலை சத்யா.”
“எனக்குப் புரியுது மலர்.”
“அப்பாவை எனக்குத் தெரியாது சத்யா. ஆனா நல்லவர்தானாம். குமுதா அத்தை சொன்னாங்க.”
“ம்…”
“ஆனா அம்மாவோட சந்தோஷமா இருந்தாரான்னு யாருக்கும் தெரியாது. அது அவங்க அந்தரங்கம் இல்லையா?”
“கண்டிப்பா.”
“அப்படியே அம்மா சந்தோஷமா வாழ்ந்திருந்தாலும் இப்போ இப்படியொரு சந்தர்ப்பம் வரும்போது அதை ஏத்துக்கிறதுல என்னத் தப்பு இருக்கு?”
“தப்பில்லைடா.”
“என்னோட புத்திக்கு எல்லாமே தெளிவாப் புரியுது சத்யா. ஆனா நிதர்சனம்னு வரும்போது…”
“ம்…”
“இதுவே இன்னொருத்தர் வீட்டுல நடந்து எங்கிட்ட அபிப்பிராயம் கேட்டிருந்தா… இதுலென்ன தப்பிருக்கு, தாராளமாப் பண்ணலாமேன்னுதான் சொல்லி இருப்பேன். ஆனா… அதுவே என்னோட வீடுங்கிறப்போ…”
“புரியுது மலர்.”
“உங்களுக்குத் தெரியாது சத்யா. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறமா நானும் அம்மாவும் போன முதல் ஃபங்ஷன் உங்க வீட்டுக் கல்யாணம்தான்.”
“ஏனப்படி மலர்!?”
“நம்ம சமூகம் அப்படி. ஒரு பொண்ணுக்குப் புருஷன் இல்லைன்னா அதோட அவ வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி கூட அவ பூ வெச்சிருப்பா, பொட்டு வெச்சிருப்பா. ஆனா புருஷனோடேயே அது எல்லாம் போயிடணுன்னு நினைப்பாங்க, காயப்படுத்துவாங்க.”
“ம்…”
“நான் சின்னப் பொண்ணா இருக்கும் போது ஆசையா அம்மாவை வெளியே போகக் கூப்பிடுவேன். அம்மாவும் எனக்காக வருவாங்க. ஆனா என்ன நடக்கும்னு தெரியாது. வீட்டுக்கு வந்து அம்மா அழுவாங்க. எதுக்குன்னு அப்போப் புரியலை. அம்மா அழுவாங்கன்னே அதுக்கப்புறம் நான் வெளியே போகக் கூப்பிட மாட்டேன்.” கண்களில் நீர் திரள மலர் பேசிக் கொண்டிருந்தாள். சத்யனின் கை அவளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தது.
“இதான் நம்ம சமுதாயம் சத்யா. இந்த சமுதாயத்துல நீங்க சொல்றது எல்லாம் சாத்தியமாகுமா? நாங்க எவ்வளவு கேவலப்பட வேண்டிவரும் தெரியுமா?”
“எல்லாமே தெரியும் மலர். அதுக்காக? அப்படியே இருந்திர முடியுமா? சமுதாயத்துக்குப் பயப்பட்டுக்கிட்டு நியாயமான விஷயங்களை எதுக்கு மறுக்கணும் மலர்?”
“உங்களுக்குப் புரியலை சத்யா. அம்மா இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க.”
“அது எங்க மாமா தலைவலி. அதைப்பத்தி நான் கவலைப் படலை. எனக்கு இப்போப் பிரச்சனையே நீங்கதான் மலர்.”
“நானா? நான் என்னப் பண்ணினேன்?”
“நல்லா யோசிச்சுப் பாருங்க. இந்தப் பேச்சை எடுத்தாலே உங்கம்மா சொல்லப்போற முதல் காரணம்… மலர்.”
“ஏன்? நான் சம்மதம் சொல்லிட்டாப் பிரச்சனை தீர்ந்து போயிடுமே.”
“அது இல்லைம்மா… இப்படியெல்லாம் நடந்தா நாளைக்கு எம் பொண்ணு வாழ்க்கை என்னத்துக்கு ஆகும்னு கேப்பாங்க.”
“எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கேன்?”
“அப்படியில்லை, நாளைக்கு உங்களுக்கொரு கல்யாணம் நடந்தா போற இடத்துல இதால பிரச்சனைகள் வரும்னு சொல்லுவாங்க.”
“ஓ… ஆனா எனக்கு அந்த மாதிரி ஐடியாவே இல்லையே.”
“ப்ராக்டிகலா யோசிங்க மலர். உங்கம்மா அதுக்கு சம்மதிப்பாங்களா? உங்கம்மாவுக்காகத்தான் நீங்களே இப்படியொரு முடிவை எடுத்திருப்பீங்க. அந்த நிலைமையே மாறும் போது நீங்கக் கல்யாணம் பண்ணிக்கத்தானே வேணும்?” மலருக்கு என்னப் பேசுவது என்று புரியவில்லை. கல்யாணத்தை மறுப்பதற்குக் காரணம் அம்மா மட்டும் இல்லை என்று அவனிடம் எப்படிச் சொல்வது? மலர் தலைகுனிந்து அமைதியாக இருந்தாள்.
“மலர்… நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“ம்?” சாதாரணமாக ஏதோ அவன் கேட்கின்றான் என்ற தோரணையில் மலர் ‘ம்’ என்றாள். சத்யனுக்குச் சிரிப்பு வந்தது.
“மலர்… என்னை நிமிர்ந்து பாருங்க. நான் என்ன சொன்னேன்னு உங்களுக்குப் புரிஞ்சுதா?”
“என்ன சார்? என்னக் கேட்டீங்க?”
“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்.”
“என்ன?!” மலர் இப்போது எழுந்து நின்றுவிட்டாள். ஆனால் சத்யா பிடித்திருந்த அவள் கையை விடாமல் இழுத்து உட்கார வைத்தான்.
“மலர் டென்ஷன் ஆகாதீங்க. நான் சொல்றதைக் கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ர்ரை பண்ணுங்க.”
“என்ன… சார்…”
“இங்கப் பாருங்க மலர், உங்கம்மாவோட ஒரே தயக்கம் இப்போ நீங்கதான். அதுக்கு ஒரு வழி பண்ணிட்டா வேற ஒரு பிரச்சனையும் இல்லையே?”
“அதுக்காகக் கல்யாணம்?”
“ஏன் மலர்? நான் பார்க்க அவ்வளவு மோசமாவா இருக்கேன்?”
“சார்!” ஒரு நிமிடம் தன்னருகில் இருப்பவனை ஆழமாகப் பார்த்தாள் மலர். அந்தப் பார்வை சத்யனின் உயிர் வரை ஊடுருவிச் சென்றது. பிடித்திருந்த அவள் கையை அவனை அறியாமலேயே இன்னும் கொஞ்சம் அழுத்திப் பிடித்தான்.
“மலர்!”
“எங்கம்மாவுக்கு ஒரு நல்லது நடக்கணுங்கிறதுக்காக நீங்க எதுக்கு சார் இவ்வளவு பெரிய தியாகம் பண்ணணும்?”
“ஹேய் மலர்! அப்படியெல்லாம் இல்லை. அப்படிப் பார்த்தா என்னோட மாமாவுக்கும்தான் நல்லது நடக்கப் போகுது.”
“அதைத்தான் சொல்றேன். இதுக்காகவெல்லாம் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணணும்னு அவசியம் இல்லை சார்.”
“அப்படியில்லை மலர், புரிஞ்சுக்கோங்க.”
“சாரி சார். நான் கிளம்புறேன்.” அவள் கிளம்புவதற்கு ஆயத்தம் பண்ணினாள்.
“மலர்!” இப்போது சத்யனின் குரல் அதட்டலாக வந்தது.
“உக்காரு, உக்காருன்னு சொல்றேன் இல்லை.” அவன் ஒருமைக்குத் தாவி இருந்தான்.
“நான் எப்ப இருந்தாலும் கல்யாணம் பண்ணித்தானே ஆகணும்?”
“அதுக்காக?” இப்போது மலரின் குரலில் கோபம் இருந்தது. அந்தக் கோபத்தை சத்யன் சுவாரஸ்யமாகப் பார்த்தான்.
“நீங்க எப்ப இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணும் எங்கிறதுக்காக இப்போ எங்கழுத்துல தாலியைக் கட்டுவீங்களா?”
“புரியலை மலர்.”
“உங்களுக்குப் புரியாது சார். கல்யாணம் என்ன உங்களுக்குக் கேலிக் கூத்தாப் போச்சா?”
“ஐயையோ! அப்படி இல்லைம்மா.”
“வேற எப்படி சார்? உங்கக் காரியங்களை நடத்திக்கிறதுக்கு நான் பகடைக் காயா?”
“மலர்… வார்த்தைகளை அவசரப்பட்டு விடாதே. உன்னை நான் பகடைக் காயா நினைக்கலை. அப்படி நினைச்சா இங்க பாதிக்கப் படப்போறது நானும்தான்.”
“அதுதான் எதுங்குங்கிறேன்?” கேட்டவள் முகத்தை அப்புறமாகத் திருப்பிக் கொண்டாள். சத்யனின் முகத்தில் மீண்டும் புன்னகை அரும்பியது.
“எதுக்கு இவ்வளவு கோபம் மலர்? நமக்கு முன்னால இருக்கிற சிக்கலுக்கு இதைவிட நல்ல தீர்வு இல்லை. அதோட… மலரை வேணாம்னு சொல்ல எந்தக் காரணமும் இருக்கிறதா எனக்குத் தெரியலை.” இதை அவன் சொன்னபோது பெண் அவனைச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
“மலருக்கு என்னைப் பிடிக்கலைனா இந்த யோசனையை விட்டுடலாம்.” அவன் நிதானமாக அவன் நிலையைச் சொன்னான். இப்போது மலருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
“அப்படியில்லை… கல்யாணம்னா அங்க லவ் இருக்கணும். யார் யாருக்காகவோ கல்யாணம் பண்ணிட்டுப் பின்னாடி தப்புப் பண்ணிட்டோம்னு நீங்க யோசிக்கக் கூடாதில்லையா?”
“இல்லை மலர். நமக்கு இன்னும் நிறைய வயசிருக்கு. அம்மா அப்பா பார்த்துக் கல்யாணம் பண்ணி வெச்சிருந்தாலும் அதுல லவ் இருக்காதுதானே? ஆனா எத்தனை பேரு அப்படி வாழ்க்கை அமைஞ்சும் அன்னியோன்யமா வாழுறாங்க. அதேமாதிரி நமக்குள்ளயும் லவ் வரும். எனக்கு அதுல நிச்சயமா நம்பிக்கை இருக்கு.” மலர் அமைதியாகிவிட்டாள். நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தாலும் வாசல் தேடி வந்திருப்பது அவள் ஆசைப்பட்ட வசந்தம். அதை அணைத்துக் கொள்ளத்தான் அவள் மனம் ஆவல் கொண்டது.
“மலர்…”
“எனக்கு என்ன சொல்றதுன்னு புரியலை சார்.”
“சாரில்லை… சத்யா. சம்மதம் சத்யான்னு சொல்லு மலர்.” அந்தக் குரலில் தவித்துப் போய் அண்ணார்ந்து பார்த்தாள் மலர். ஒரு பொழுது அவனை நினைத்து ஏங்கியது நினைவு வந்தது.
“என்னாச்சு மலர்? எது உன்னைத் தடுக்குது?”
“உங்க வீட்டுல இதுக்குச் சம்மதிக்க மாட்டாங்க சார்.”
“அப்போ உனக்குச் சம்மதம். எங்க வீடுதான் பிரச்சனையா?”
“அது…” மலர் விழித்துக்கொண்டு நிற்க எழுந்து நின்ற சத்யன் அவளையும் கைப்பிடித்து எழுப்பினான். அவளருகில் இன்னும் நெருங்கி வந்தவன் அவள் நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்தான்.
“கஷ்டமாவோ இல்லை அருவருப்பாவோ இருக்கா மலர்?” இல்லை என்பதுபோல் இடம் வலமாக அவள் தலை ஆடியது.
“இது போதும் மலர். நமக்குள்ள இப்ப ஒரு பிடிப்பில்லைன்னாலும் வெறுப்பும் இல்லை. காலப்போக்குல நமக்குள்ள நீ சொன்ன லவ் தானா வரும். புரியுதா?”
“உங்களுக்கு… என்னை…”
“மலரை எனக்குப் புடிக்கும். லவ் இருக்கான்னு தெரியலை. ஆனா… இப்படியொரு யோசனை மலர் இடத்துல வேற ஒரு பொண்ணு இருந்திருந்தா சட்டுன்னு வந்திருக்குமாங்கிறது சந்தேகம்தான்.” அந்தப் பதிலில் மலர் தலையைக் குனிந்து கொண்டாள்.
“இன்னொரு விஷயம் மலர். எங்க வீட்டுல உண்மையை என்னால சொல்ல முடியும், புரிஞ்சுக்குவாங்க. ஆனா உங்கம்மாக்கிட்டச் சொல்ல முடியாது. அவங்களைப் பொறுத்த வரை இது லவ் மேரேஜா இருக்கட்டும். நானும் மலரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணுறோம். அதால கல்யாணம் பண்ணிக்கப் போறோம். இப்போ மலர் பத்தின எந்தக் கவலையும் அவங்களுக்கு இருக்காது. அவங்க வாழ்க்கையைப் பத்தி அவங்க சுதந்திரமா முடிவெடுக்கலாம்.” அவன் இலகுவாகத் திட்டங்களை வகுத்துக்கொண்டு போனான்.
மலர்விழி அமைதியாக அமர்ந்திருந்தாள். சட்டென்று முடிவெடுத்து அனைத்திற்கும் ஆமென்று தலையாட்டி விடலாம்தான். தான் ஆசைப்பட்ட வாழ்க்கை. முளையிலேயே கருகிப் போன காதல். ஆனால் எதுவோ ஒன்று அவளைத் தடுத்தது.
“ரொம்ப யோசிக்காதே மலர். நான் சொல்றதைக் கேளு. எல்லாம் நல்லதாவே நடக்கும். நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும் எப்படிப் போகுமோன்னு கவலைப்படாதே. அது ரொம்பவே சிறப்பா இருக்கும். மாமாவும் அத்தையும் பார்த்து சந்தோஷப்படுற மாதிரி நாம ரெண்டு பேரும் நல்லா வாழுவோம். சரியா?” சத்யன் பேசப்பேச புன்னகவராளிக்கு மயங்கும் பாம்பு போல தலையாட்டினாள் மலர்விழி.
***
“உள்ள வா லேகா.” ஏகத்திற்குத் தயங்கிய பெண்ணை வற்புறுத்தி அழைத்தார் ஞானபிரகாஷ். மனிதருக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. பின் என்னதான் சொல்வது? வீட்டிற்கு ஒரு முறை வா என்று அழைத்தது அவ்வளவு பெரிய குற்றமா? முதலில் அவ்வளவு மறுப்பு. எப்படியோ சம்மதிக்க வைத்தால் நானாக வருகிறேன் என்று ஒரு பாட்டு.
அவர் குத்துக்கல் போல இருக்கும் போது எப்படி அந்தப் பெண்ணைத் தனியே விடுவது? இவ்வளவு காலமும் எப்படியோ… ஆனால் இனி அது நடக்காது!வீட்டிற்கு வந்து உன்னை அழைத்துப் போகிறேன் என்று சொன்னதிற்கு முழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் சித்ரலேகா. ஆஃபீஸுக்கு ஆட்டோவில் வருகிறேன், அங்கிருந்து போகலாம் என்று சொல்லி வந்தவரை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். இதற்கே இப்படித் தயங்கும் பெண்ணை எப்படிக் கல்யாணம் வரைக் கொண்டு வருவது என்று மனிதருக்குப் புரியவே இல்லை.
அந்த ரேஞ்ச் ரோவரை விட்டிறங்கிய சித்ரலேகா சுற்றுமுற்றும் பார்த்தார். லேசாக கிராமிய மணம் கமழ்ந்த சூழல். பெரிய வீடு. வீட்டிற்கு முன்னால் நல்ல விசாலமான தோட்டம். நான்கைந்து தென்னை மரங்கள் குலை குலையாகக் காய்த்தபடி நின்றிருந்தன. வீட்டின் முன் வாசலே பெரிதாக மர வளைவு வைத்துப் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. சித்ரலேகாவிற்கு ஞானபிரகாஷின் பின்புலம் எல்லாம் பெரிதாகத் தெரியாது.
காலேஜ் படிக்கும் காலத்தில் தன்னிடம் காதல் சொன்ன வாலிபனை பிடித்திருந்தது. ஏற்றுக் கொண்டார். அது தவிர வேறெதையும் அவர் பார்க்கவில்லை, ஆராயவில்லை. கண்ணியத்தைப் பார்வையில் கூடக் காட்டிய அந்த இளைஞனை அவருக்குப் பிடிக்கும், அவ்வளவுதான். ஆனால் இப்போது இந்த வீட்டைப் பார்த்த போது மலைப்பாக இருந்தது.
“அக்கா!” உள்நோக்கி மனிதர் குரல் கொடுக்க சித்ரலேகா ஆச்சரியமாகப் பார்த்தார்.
“தனியா இருக்கேன்னு சொன்னீங்க?”
“இல்லையே, வேலைக்கு ஆளுங்க இருக்காங்கன்னு சொன்னேனே?”
“ஓ…”
“சாவித்திரி அக்கா!” மீண்டுமொரு முறை அவர் சத்தமாக அழைக்க,
“இதோ வர்றேன் தம்பீ!” கூவியபடி ஒரு பெண், அறுபதுகளின் தோற்றத்தில் வந்து சேர்ந்தார். கைகளில் ஆரத்தி.
“பிரகாஷ்! என்ன இது?”
“முதல்முதலா வீட்டுக்கு வர்றே. இருக்கட்டுமே லேகா.” கெஞ்சிய அந்த முகத்தை எரிச்சலாகப் பார்த்தார் சித்ரலேகா.
“இது மாதிரியெல்லாம் இனிக் கோமாளித்தனம் பண்ணினா நான் வரவே மாட்டேன் சொல்லிட்டேன்.”
“சரிம்மா… சரி சரி. கோபிச்சுக்காதே.” அந்த அக்கா ஆரத்தி எடுக்க உள்ளே அழைத்துப் போனார். உள்ளே நுழைந்ததுமே பெரிதாக ஃப்ரேம் பண்ணிய ஃபோட்டோ. ஞானபிரகாஷின் அப்பாவும் அம்மாவும் இருப்பது. பிரேக் அடித்தது போல நின்றுவிட்டார் சித்ரலேகா. இதயம் படபடவென அடித்துக்கொண்டது.
“அது வெறும் ஃபோட்டோதான். இதுக்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.” ஆதரவாகச் சொன்னவர் அங்கிருந்த சோஃபாவைக் காட்டினார். சித்ரலேகா அமர்ந்து கொண்டார். எதிரிலிருந்த சுவரில் ஒரு துப்பாக்கி, இரண்டு தந்தங்கள் என வரிசையாகத் தொங்கவிடப் பட்டிருந்தன.
“எல்லாத்துக்கும் லைசென்ஸ் இருக்கு.” பெண்ணின் பார்வை புரிந்து வந்தது பதில்.
“அது சரி… ஆனாப் பார்க்கப் பயமால்ல இருக்கு.”
“அப்படியா என்ன?!”
“ம்…” சொல்லிக் கொண்டிருக்கும்போதே காஃபி பலகாரம் வந்தது. சித்ரலேகா வாங்கிக் கொண்டார்.
“சாவித்திரி அக்கா, அன்னைக்கு லேகா வீட்டுக்குப் போயிருந்தேன். மீன் குழம்பு வச்சிருந்தா, சூப்பர்! இன்னைக்கு நம்ம வீட்டுச் சாப்பாட்டை நீங்க சும்மா அசத்தணும் சரியா?”
“சரி தம்பி.” சிரித்தபடி அந்தப்பெண் நகர சித்ரலேகா சங்கடமாக ஞானபிரகாஷைப் பார்த்தார்.
“இப்போ எதுக்கு பிரகாஷ் இதெல்லாம்?”
“உன்னை எங்கூட எவ்வளவு நேரம் இங்க வெச்சுக்க முடியுமோ அவ்வளவு நேரம் தாமதப்படுத்த என்னாலான முயற்சி லேகா.” அந்தப் பேச்சைக் கவனிக்காதவர் போல எழுந்து போனார் சித்ரலேகா. பழைய காலத்து ‘க்ராமொ ஃபோன்’ ஒன்று இருந்தது. அதன் வேலைப்பாட்டில் கவரப்பட்டவர் ஒரு புன்னகையோடு அதை ரசித்துப் பார்த்தார். எழுந்து வந்த ஞானபிரகாஷ் என்ன நினைத்தாரோ, அதில் இருந்த ரெக்கார்டை இயக்க பாடல் வந்தது.
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா… அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா…
‘அவர்கள்’ திரைப்படப் பாடல். சித்ரலேகா பாடல் வரிகளில் ஸ்தம்பித்துப் போனார். ஞானபிரகாஷின் கூரிய பார்வைப் பெண்ணைத் துளைத்தது.