Rose – 14

download (74)-93fc01b1

Rose – 14

அத்தியாயம் – 14

அவனது வளமான எதிர்காலத்தை நினைத்து மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் மீனா. இத்தனை வருடமாக கணவன் – மகன் குடும்பம் என்று இருந்த பெண்மணி, முதல் முறையாக அந்த வட்டத்தைவிட்டு வெளியே வந்தார். தன் மகன் தன்னைப் புரிந்துகொள்ளும் நாள் வரும் என்ற எண்ணத்துடன், மீனா தொழிலை எடுத்து நடத்த நினைத்தார்.

தன் கணவன் நடத்தி வந்த பேக்டரியை போய் பார்வையிட்ட கையோடு, அந்த நிர்வாகத்தை சீர் செய்ய திறமையான பெண்மணி வேலைக்கு வேண்டும் என்று விளம்பரம் கொடுக்க போவதாக சொல்ல, “நம்ம சௌந்தர்யா ரொம்ப திறமையான பொண்ணு” என்றான் ஆனந்தன்.

ஏற்கனவே கணவனுக்கு பக்கபலமாக இருந்த மாதவியின் வழிகாட்டுதலும், சௌந்தர்யாவின் திறமையையும் வைத்து தொழிலை எடுத்து நடத்தினார் மீனலோட்சனி.

தனக்கு தெரியாத வேலையை கஷ்டப்பட்டு கற்றுகொண்டு, வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் நிறுவனத்தை மீட்டெடுக்கும் பணியில் தாய் இருப்பது தெரிந்தும் வெறுப்பைக் காட்டினான் யாதவ்.

தன்னுடைய எதிர்ப்பை உணவு பழக்கவழக்கங்களில் தொடங்கி அனைத்திலும் வெளிப்படையாகக் காட்டினான். மீனலோட்சனி அவன் மீது அக்கறை காட்ட, “என் வேலையை எனக்கு செய்ய தெரியும். உங்களுக்கு அந்த நிறுவனம்தானே முக்கியம். அதையே போய் பாருங்க” எடுத்தெறிந்து பேசினான்.

காலையில் வீட்டின் வேலையாட்கள் சாப்பாடு பரிமாற, தந்தையோடு இருந்த நாட்களில் பெற்றவர்கள் ஊட்டிவிட்டது நினைவு வந்து போனது. பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினால், மீண்டும் தனிமை அவனை ஆக்கிரமித்தது.

இந்நிலையில் சிவசந்திரன் மூலமாக அறிந்த அமெரிக்கா கலாச்சாரம் அவன் மனதில் விதையென்று விழுந்து விருச்சமாக வளர்ந்திருந்தது. தன்னுடைய வேலைகளைத் தானே செய்ய முடிவெடுத்த யாதவ், வேலையாட்களின் வேலை செய்யும்போது கவனிக்க தொடங்கினான்.

ஓரளவு தெரிந்து கொண்ட பிறகு அவர்களை வேலையைவிட்டு நிறுத்துவிட்டு, தன்னுடைய உடைகளைத் துவைப்பது, சமையல் செய்து சாப்பிடுவது, தோட்டத்தின் செடிகளைப் பராமரிப்பது என்று மொத்த வேலைகளையும் தானே செய்தான்.

பெற்றவர்கள் இல்லாத இல்லம் வெறும் கான்கிரீட் கட்டிடமாக உயிர்ப்பின்றி இருக்க, இரவு நேரங்களில் அனாதைபோல இருப்பது போன்ற எண்ணத்தை உருவாக்கியது.

அடுத்தடுத்து வந்த நாட்கள் இதுபோலவே செல்ல, சொந்த வீட்டிலேயே அவனுக்கு மூச்சு முட்டியது. அதற்கான முதல்படியாக சயின்ஸ் குரூப் எடுத்து அதில் முழு மூச்சாக தன கவனத்தைச் செலுத்தினான்.

மீனாவின் மனம் மகனுக்காக பரிதவிக்க, அந்நேரத்தில் அவரிடம் ஏதோ சொல்ல வந்த சௌந்தர்யா, “மேடம் என்னாச்சு!” தயக்கத்துடன் அழைக்க, உடனே நிமிர்ந்த மீனாவின் பார்வை அவளை மிரட்டியது.

“நான் உனக்கு மேடமா? சும்மா பெயர் சொல்லியே கூப்பிடுன்னு எவ்வளவு முறை சொல்றேன்” மீனா கண்டிப்புடன் கூற, அவளும் சரியென்று தலையசைத்தாள்.

“இப்போ என்னாச்சு மீனா? எதுக்காக இவ்வளவு சோகமாக இருக்கிற?” அவளின் வருத்தத்திற்கான பின்னணி என்னவென்று சௌந்தர்யா விசாரிக்க, யாதவ் பற்றிய விஷயங்களைத் தோழியிடம் பகிர்ந்தாள்.

“யாதவ் மீது எனக்கு அக்கறை இல்லையா? நான் மட்டும் தொழிலை எடுத்து நடத்தாமல் போஇருந்தால், எஸ்டேட் விற்று கடன் அடைத்துவிட்டு நடுரோட்டில் தான் நின்றிருக்கணும்” மீனா கூற, அவளின் பேச்சியில் இருந்த நியாயம் சௌந்தர்யாவிற்கு புரியவே செய்தது.

அவள் படித்தது நிர்வாகம் சார்ந்த படிப்பு, இன்றுவரை மீனா சமாளிக்கும் சவால்களை நினைத்தபடி மெளனமாக நின்றிருக்க, “தெரியாத தொழிலைக் கற்றுகொண்டு முன்னேறுவது எவ்வளவு கஷ்டம்னு எனக்குதான் தெரியும்” பெருமூச்சுடன் மீண்டும் இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

“பிள்ளை மட்டும் போதும்னு முடிவெடுத்தால், நாளை அவன் விரும்பிய படிப்பையும் என்னால் கொடுக்க முடியாது. அவனோட வளமான எதிர்காலத்தைவிட, எனக்கு வேற எதுவும் முக்கியமாக தெரியல. கோகுல்நாத் குடும்பம் நடுரோட்டில் நிற்கிறது என்பதைவிட, இந்த நிலை எவ்வளவோ மேல்!” என்று புன்னகைத்த மீனாவின் பின்னோடு இருக்கும் வருத்தம் சௌந்தர்யாவைப் பாதித்தது.

“கட்டாயம் ஒருநாள் யாதவ் உன்னைப் புரிஞ்சிக்குவான் பாரு” தைரியம் சொன்ன சௌந்தர்யா தன் வேலையைக் கவனிக்க சென்றாள்.

இந்நிலையில் காலாண்டு விடுமுறை வரவே, அதை அமெரிக்காவில் சென்று கழிக்க விரும்பினான் யாதவ். தன் மகனின் முகம் பார்த்த மனதைப் படித்த மீனலோட்சனி, அவனை அங்கே அனுப்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய, அடுத்த நாளே பயணம் உறுதி செய்யப்பட்டது.

நீண்ட பயணம் இனிதே முடிவடைய நியூயார்க் நகரில் தரையிறங்கியது விமானம். அவன் விரும்பிய அமெரிக்கா மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தான். புதிய தேசத்தில் அறிமுகம் இல்லாத மனிதர்களின் சிநேகமான புன்னகை, அவர்களது அணுகுமுறை அனைத்தும் கண்டு அவன் முகம் பிரகாசமானது.

அவனைக் கடந்து சென்ற மனிதர்களின் முகங்களில் மருந்துக்கும் சோகத்தின் சாயலைக் காண முடியவில்லை. உதடுகளில் புன்முறுவலோடு வலம் வரும் அவர்களை நினைத்து திகைத்துப் போனான் யாதவ்.

 ராம்குமாரின் மொத்த குடும்பமும் காத்திருக்க கண்டு, “ராம்” என்ற அழைப்புடன் ஓடிச்சென்று நண்பனை ஆரத்தழுவி தன் சந்தோசத்தை வெளிப்படுத்தினான். பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பிறகு, அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த மூன்று மாதமான நடந்த நிகழ்வுகளைப் பகிருந்து கொண்டனர். யாதவ் வருகை அந்த குடும்பத்தை சந்தோசத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். அவனுக்குமே அவர்களைப் பிரிவு பெரிய வலியைத் தந்தது.

யாதவ் சென்று ஓய்வெடுக்க, மாலை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறினான் ராம்குமார். இப்படியே ஒருவாரம் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

செப்டம்பர் இறுதியில் இருந்து அக்டோம்பர் தொடக்கத்தில் அங்கிருக்கும் மரங்கள் பனிகாலத்திற்கு தங்களை தயார் செய்துகொள்ள இலைகளை உதிர்க்க தொடங்கும். இலையுதிர் காலங்களில் பச்சை இலைகள் மெல்ல சிவப்பு, மஞ்சளாக நிறம் மாறி கீழே விழும்.

சாலைகளின் ஓரமாக குவிந்து கிடக்கும் இலைகளைக் காணும் வேளையில், காரணம் இல்லாமல் துள்ளும். மாலை நேரத்தில் சூரிய வெளிச்சம் பட்டும்போது, மரத்தின் இருக்கும் இலைகள் தங்கம் போல ஜொலிக்கும்.

அன்று மாலை வழக்கம்போலவே நண்பர்கள் இருவரும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பினர். இயற்கை காட்டும் வர்ணஜாலத்தை மனதினுள் ரசித்தபடி நண்பனுடன் சைக்கிள் பயணிப்பது யாதவிற்கு உற்சாகத்தைத் தந்தது.

வீட்டின் வாசலில் விளையாடும் குழந்தைகள் அந்த இலைகளை வாரியெடுத்து ஒருவரின் மீது மற்றொருவர் வீசி விளையாடுவது கண்டு கீர்த்தனாவின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“இதே நம்ம நாடாக இருந்தால் குப்பைக்கு நடுவே கிடக்கும் இலைகளைத் தொடவே அருவருப்பாக இருக்கும். இங்கே இந்த பசங்க விளையாடுவதைப் பார்த்தால், எனக்கே ஆசை வருது” என்றான் யாதவ் சிரிப்புடன்.

“நீ சொல்வது என்னவோ உண்மைதான். ஆயிரம் சொன்னாலும் சொந்த நாடுபோல வருமா?” ராம்குமாரின் கேள்விக்கு மறுப்பாகத் தலையசைத்தான்.

அந்த சாலைகளில் நடந்து செல்பவர்கள் இளைபாற சாலையோரம் இரும்பினால் ஆன பெஞ்ச் அமைக்கப்பட்டிருக்கும். இலையுதிர்காலத்தில் மரங்களில் இருந்து விழும் இலைகளின் நடுவே, அந்த இடமே ரம்மியமாக காட்சியளிக்கும்.

இருவரும் சைக்கிளை சீரான வேகத்தில் ஓட்டிக்கொண்டு செல்லும் போது, பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்ணின் மீது பார்வை படிந்தது. அனைவரும் சந்தோசமாக வலம்வர, அந்த பெண்ணின் முகத்தில் மட்டும் வரையறுக்க முடியாத சோகம் யாதவ் மனதைப் பாதித்தது.

மீண்டும் அந்த வழியாகத் திரும்பும்போது, அந்த பெஞ்சின் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு நண்பர்கள் இருவரும் அமர்ந்தனர். சற்றுத் தொலைவில் அந்த பெண் அமர்ந்திருக்க, திடீரென்று ஒருவன் அவளின் அருகே சென்றான்.

அதைக் கவனித்த ராம்குமார், “அங்கே பாரு ஒரு லவ் ப்ரப்போசல் நடக்குது” கைகாட்டவே, யாதவ் கவனம் முழுவதும் அவளின் மீதே நிலைத்தது.

அவனைக் கேள்வியாக நோக்கியவளிடம், “மதுரா யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ். கேன் வீ டேட்?” என்றவனின் பார்வை அவளைத் துகிலுரிக்கும் பார்வையாக இருந்ததில், யாழினிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

அந்த பார்வையிலேயே, ‘தான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன்’ என்ற எண்ணத்தில், “நோ ஷ்யாம். ஐ டோன்ட் லைக் இட். ப்ளீஸ் டோன்ட் டிஸ்டப் மீ!” தன் மறுப்பை வெளிப்படையாக கூற, அது இருவரின் காதில் தெளிவாகவே விழுந்தது.

அதை சாதாரணமாகப் பார்த்த ராம்குமார், “இங்கே டேட்டிங் இப்போ லிவ்விங் ரிலேஷன்ஷிப் இதெல்லாம் ரொம்ப சகஜம்டா! சரி வா வீட்டுக்குப் போலாம்” என்றவன் அழைக்க, யாதவ் மறுப்பாக தலையசைத்தான்.

“நீ போடா! இன்னும் கொஞ்சநேரம் இங்கேயே உட்கார்ந்து இருந்துட்டு வர்றேன்” என்று கூற, ராம்குமார் அதுக்குமேல் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

ஏனெனில் வீடு செல்லும் பாதையை யாதவ் தெளிவாக மனப்பாடம் செய்து வைத்திருக்க, “சீக்கிரம் வந்துடு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றான்.

அதற்குள் யாழினி தன் வீடு இருக்கின்ற சாலையில் திரும்பி நடக்கத் தொடங்க, அவளைப் பின்தொடர்ந்தான் புதியவன். ஏனோ இதைக் கவனித்த யாதவிற்கு ஏதோ தவறாகத் தோன்றவே, இவனும் சைக்கிளை எடுத்துகொண்டு அவர்களின் பின்னோடு சென்றான்.

ஆள் நடமாட்டம் இல்லாத பாதையில் தனியாக நடந்து சென்ற யாழினியின் வழியை மறித்தான் ஷயாம். அவனைக் கண்டவுடன் அவளின் உள்ளங்கை சில்லிட்டுப் போக, அவளை மோகப்பார்வை பார்த்தபடி முத்தமிட நெருங்கினான்.

அவனது நோக்கம் என்னவென்று உணர்ந்த மதுரா, “ஷ்யாம்…” அவனைப் பிடித்து தள்ளிவிட முயன்றாள். அவளின் முயற்சிகள் தோல்வியைத் தழுவியது. அந்தளவிற்கு அவனின் பிடி உடும்புப் பிடியாக இருந்தது.

இதைக்கண்ட யாதவ் முகம் கோபத்தில் சிவக்க, நேராக சைக்கிளை கொண்டுபோய் அவர்களின் அருகே நிறுத்தி இறங்கினான். யாழினியின் உதட்டை நெருங்கும் வேளையில், அவனின் தலையின் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தான் யாதவ்.

ஷ்யாம் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட, அங்கேயே சுருண்டு விழுந்தான். தன்னைக் காப்பாற்றிய புதியவனைக் கண்டு விழிகள் இமைக்க மறுத்திட, சற்றுமுன் நிகழ்ந்த அதிர்ச்சியில் அவளுக்குப் பேச்சுவர மறுத்தது.

மெல்ல அவளை நெருங்கிய யாதவ், “ஆர் யூ ஆல்ரைட்!” என்று கேட்க, அவள் மனம் மெல்ல நடப்பிற்கு திரும்பியது.

அவனது கேள்விக்கு தலையாட்டல் மட்டுமே பதிலாக கிடைக்க, “எனக்கென்னவோ தப்புன்னு தோணுச்சு. அதான் உன்னைவிட்டு விலகி நின்று உன்னைக் கவனிச்சேன்” இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான் யாதவ்.

அந்த நேரத்தில் அவனுமே தன் கட்டுப்பாட்டை இழந்திருக்க, அவளுக்கு தமிழ்மொழி தெரியுமா என்று கேட்கவில்லை. அதற்கு காரணம் யாழினியின் தோற்றமாகக் கூட இருக்கலாம். இந்திய பெண்ணை அச்சில் வார்த்ததுபோல இருந்த பதிமூன்று வயது பெண்ணிடம் சரளமாக தமிழில் பேசினான் யாதவ்.

இன்னும் நடுக்கம் குறையாமல் நின்றிருந்தவளிடம், “ஒரு பெண்ணோட மனதைத் தொடுபவன் மட்டுமே, அவளோட உடலைத் தீண்ட முடியும். இப்படி கண்டவங்க கை வைக்க வந்தால், இரண்டு போடு தப்பே இல்ல” அதை சொல்லும்போது, அவன் வடிவில் தன் அன்னையின் முகம் கண்டாள்.

“இந்தியாவில் ஒரு வயதிற்குமேல் அக்கா, தங்கையைத் தள்ளி நின்றுதான் பேசுவாங்க. ஆண்களுக்கும் நீ அவளைத் தொடக்கூடாதுன்னு கண்டிப்பாங்க. அதை தான் இப்போ குட் டச், பேட் டச்னு சொல்லி கொடுக்கும் நிலைக்கு வந்துட்டோம்” வழக்கம்போலவே மொழி புரியாதபோதும், அவன் சொல்வதை உன்னிப்பாக உள்வாங்கியது அவளது மூளை.

“பெண் என்பவள் போகப்பொருள் கிடையாது, எந்த நாட்டு பெண்ணாக இருந்தாலும், அவளோட விருப்பம் இல்லாமல் விரல் நுனி தீண்டுவதுகூட தவறுதான்” என்று சொல்லும்போது அவன் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்தாள் யாழினி.

 “கற்பு என்பதை இரு பாலருக்கும் பொதுவாக வைப்போம் என்பது பாரதியாரோட கருத்து. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், ஆண், பெண் இருவரும் கற்புடன் இருக்கணும். நீ அவனை எதிர்த்து அடிக்கணும், நீ உன் பெற்றவர்களும் பொருள் இல்ல பொக்கிஷம்” என்றவனின் நினைவுகளை மனதினுள் பொக்கிஷமாக சேகரித்தாள்.

தன் வசம் வைத்திருந்த டாலர் செயினை அவளின் அனுமதியின்றி கழுத்தில் அணிவித்து நிமிர்ந்தான் யாதவ். தன் கழுத்தில் இருக்கும் டாலரில் முண்டாசுக்கவி பாரதியாரின் பிம்பம் இருக்கக் கண்டு, அவள் வியப்புடன் அவனை நோக்கினாள்.

“இந்நேரம் வரை நான் சொன்னது இவரைத்தான். இதைப் பார்க்கும்போது உன் மனசில் தைரியம் வரும், அவங்களை எதிர்க்கும் துணிவு வரும்” – யாதவ் அவளுக்கு தைரியம் சொல்லிவிட்டு நிமிரும்போது, வானம் இருள் சூழ்ந்தது.

“ஓகே பாய்! டேக் கேர்” என்ற யாதவ் அங்கிருந்து செல்ல, யாழினியின் விழிகளோ அவன் சென்ற திசையை இமைக்காமல் நோக்கியது. வீடு நோக்கிச் சென்றவளின் மனதில் மீண்டும் தமிழைக் கற்றுகொள்ள வேண்டும், அவன் பேசிய வாக்கியத்தின் உண்மையான பொருளை உணர வேண்டும் என்ற முடிவை எடுத்தாள்.

அன்றே யாழினி வகுப்பில் சேர்ந்திருந்தால், இன்று யாதவ் பேசும்போது அதிலிருக்கும் அர்த்தத்தை உணர்ந்திருப்பாள். எதிர்பாராத விதமாக ரவீந்தருக்கு விபத்து நிகழ்ந்திட, மூன்று மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லி டாக்டர்கள் அறிவுரை வழங்கினர்.

அதனால் யாழினியின் ஆசை நிறைவேறாமல் தடைபட்டுப் போனது. தந்தையைக் கவனிப்பது, ஸ்கூல் செல்வது என்று நாட்கள் ரேக்கைகட்டிப் பறந்தது. இன்று நடந்த நிகழ்வு, மீண்டும் அவளுக்கு தமிழ் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

அதைவிட யாதவ் பேசிய வாக்கியத்தின் உண்மையான பொருளை தானே உணரவேண்டும் என்ற உத்வேகத்துடன் வீடு வந்து சேர்ந்தாள். அந்த வார இறுதியில் யாழினி தமிழ் பயிற்சி வகுப்பில் சேர, அதற்கு காரணமானவனோ இந்தியாவிற்கு மீண்டும் திரும்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!