Neer Parukum Thagangal 6.1

NeerPArukum 1-9ea28830

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 6.1

சுயமரியாதை பேசும் செல்வி – சரவணன்  

சரவணன்… வெகுநேரம் கடந்த பின்பும் அதே இடத்தில், சுவற்றைப் பார்த்தே நின்றிருந்தான். இடையிடையே பின்னால் திரும்பி, ‘ஏதும் தேவையா?’ என்று கேள்வியுடன் அவளைப் பார்க்கத் தவறவில்லை.

விசிறியபடியே செல்வி தூங்கும் மகன் முகம் காண்பாள்; அறையைச் சுற்றிப் பார்ப்பாள்; சரவணனைக் கவனிப்பாள்; மறுபடியும் மகனின் முகம்… இப்படியே நேரத்தைக் கடத்தினாள்.

ஒரு பத்து நிமிடம் கடந்த பின் சரவணனுக்குப் பசி எடுத்தது. சாப்பிடுவதற்கு உணவு இருந்தாலும் சாப்பிட மனமில்லை. எனவே, ‘காஃபி குடிக்கலாம்’ என்று அறைக்குள் வந்தான்.

அதன்பின் செல்வி வேறு எங்கும் பார்வையைத் திருப்பாமல், மகனின் முகம் பார்த்தவாறே விசிறிவிட்டாள்.

கொஞ்சமாக பால் எடுத்து சுட வைத்துவிட்டு, காஃபி போட தயார் செய்தபடி சரவணன் செல்வியைப் பார்த்தான். அவள் முகத்தில் உள்ளே வந்தபொழுது இருந்த பயம், பதற்றம் இல்லாவிடிலும் களைப்புடன் தெரிந்தாள்.

அதனால், “உங்களுக்குப் பசிக்கலையா?” என்று கேட்டான்.

செல்வி பதில் சொல்லாமல் அவனைப் பார்த்ததும், “எவ்வளவு நேரமாகும்னு தெரியலைல. அதான் கேட்டேன். பசிச்சா ஏதாவது எடுத்து சாப்பிடுங்க” என சொல்ல, “பசிக்குது” என உள்ளதைச் சொன்னவள், “ஆனா சாப்பிடணுங்கிற எண்ணம் வரமாட்டிக்குது” என்று உண்மையைச் சொன்னாள்.

அதன்பின் இருவரின் பேச்சு தொடரவில்லை. காஃபி போடுவதில் கவனமாக இருந்தான். இரண்டு நிமிடங்களுக்குப் பின்பு தனக்கான காஃபியை எடுத்துக் கொண்டு, இன்னொரு டம்ளர் காஃபியை செல்வியிடம் நீட்டினான்.

இதைச் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை என்பது போன்று முதலில் பார்த்தாள். அடுத்து, ‘வாங்கவா, வேண்டாமா?’ என அவள் பார்வை இருந்தது. கடைசியில், “எதுக்குங்க இதெல்லாம்? வேண்டாமே…” என தயக்கத்துடன் மறுத்தாள்.

“இதிலென்ன இருக்கு. பசிக்கு-ன்னு சொன்னீங்கள. இதையாவது குடிங்க” என சரவணன் சொன்னதும், “தேங்க்ஸ்” என ஒரு முறுவலோடு சொல்லி காஃபியை செல்வி வாங்கிக் கொண்டாள்.

அடுப்பின் அருகே நின்றபடி காஃபி குடித்தவன், “போலீஸ் வந்திருப்பாங்க-னு நினைக்கிறேன். ரொம்ப பயப்பட வேண்டாம். ஆனா கவனமா இருக்கணும்” என்று இருவருக்கும் சேர்த்தே சொல்ல, “ம்ம்” என தலையாட்டினாள்.

அதன்பின் இருவரிடமும் பேச்சே இல்லை. ஒருகையில் டம்பளர், மறுகையில் நாளிதழ் வைத்து விசிறுபவளைப் பார்த்தபடியே காஃபி குடித்து முடித்தவன், காய்கறிகள் போடப்பட்டிருக்கும் சந்தில் இருந்து ஒரு பழைய டேபிள் ஃபேன் ஒன்றை தூசிதட்டி எடுத்து வந்தான்.

எங்கே வைக்க… சுவிட்ச் போர்டு வசதி… என்று பார்த்தவன், இருவரும் இருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி சிமெண்ட் தரையில் காற்றாடியை வைத்தான். பின்னர் வயரை சொருகி ஸ்விட்ச் போட்டதும் காற்றாடி ஓடியது.

சில நொடிகளில், “பாஸ்டா இருக்கு” என்று அவள் சொன்னதும், காற்றாடியின் வேகத்தைக் குறைத்து, ‘இது போதுமா?’ என்பது போல் செல்வியைப் பார்க்க, “ம்ம்ம், போதும்” என்று அவள் சொல்லவும் எழுந்துவிட்டான்.

மீண்டும் அதுவரை அவன் நின்ற இடத்தை நோக்கிப் போகும் பொழுது, “ஏன் அங்கேயே நிக்கிறீங்க? இங்கே வந்து உட்காரலாமே?!” என்று கேட்க, ஒருசில நொடிகள் யோசித்தான். பின் செல்வியின் எதிர்பக்கம் வந்தமர்ந்தான்.

விசிறும் வேலை இல்லாததால் மெதுவாக காஃபி குடித்தவள், “என்னாலதான் இப்படியோ?” என கேட்க, “அது முடிஞ்சிருச்சி. விடுங்க” என எளிதாக அவன் சொன்னதும், காஃபி குடித்து முடிக்கும் வரை அவள் பேசாமல் இருந்தாள்.

குடித்ததும், “உங்க…” என அவன் கவனிக்கா நேரம் பேச ஆரம்பித்தாள். அவன் நிமிர்ந்து பார்க்க, “ம், உங்க” என மீண்டும் அதையே சொல்லி, தன் வலப்பக்க கழுத்தைச் சுட்டிக் காட்டி, “எப்படி இது?” என்று சுருங்கி கறுத்திருந்த அவனது கழுத்து, தாடை தோலைப் பற்றிக் கேட்டாள்.

“உங்க அக்கா சொல்லலையா?”

“இப்படினு தெரியும். ஆனா காரணம் தெரியாது. வேறேதுவும் சொல்லலை”

“ஓ!?”

“இது தீக்காயமா?”

மென்னகையுடன், “தீக்காயம் இல்லைங்க. ஆசிட் அட்டாக்” என்றதும், “ஆசிட்!” என்று அதிர்ந்து, “நம்ப முடியலைங்க” என்று சொல்ல, ” ஏங்க நம்புங்க. ஆசிட் அட்டாக்தான்” என்றான்!

இன்னும் நம்பாமல், “எப்படிங்க இப்படி ஆனது?” என செல்வி இறங்கிப் போன குரலில் கேட்டதும், ‘ஏன் இப்படி?’ என்று சரவணன் பேச ஆரம்பித்தான்.

இருவருக்குமிடையே இயல்பாக பேச்சு ஆரம்பிக்கப்பட்டது!

**************************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

கோபத்துடன் ஏறிட்ட சேது, தண்ணீர் பாட்டிலை அவள் மீது எறிவதற்காக கை உயர்த்தினான். ‘எங்கே?! எறிந்துவிடு பார்க்கலாம்!?’ என்பது போல் ஸ்திரமாக நின்றவளைப் பார்த்ததும், “ச்சே!” என்று எரிச்சலடைந்து, தண்ணீர் பாட்டிலை பொத்தென்று கீழே போட்டான்.

பின், “உனக்கு என்ன பிரச்சனை? இப்போ எதுக்காக ஸ்பிரே பண்ண?” என்று எகிறிக் கொண்டு வரும் குரலில் கேட்டதும், “நான் கதவை உடைச்சி வெளிய போனா உனக்கென்ன? நீ எதுக்கு வந்து தடுத்த?” என்று அவனது தொனியிலே கண்மணி கேட்டாள்.

“நீ வெளிய போறது பத்தி எனக்கொன்னுமில்லை. பட், கதவை போட்டு இந்த ஆட்டு ஆட்டினா… லாக் பண்ணிட்டு போனவங்களுக்கு கேட்காதா? அவங்க திரும்ப வந்தா என்ன பண்ணுவ?”

உள்ளிருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்ற மும்முரத்தில், வெளியே மாட்டிக் கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கை உணர்வு குறைந்து போனதை நினைத்து அவள் அமைதியாக நின்றாள்.

“அம்மா தேடுவாங்க… ஏழு மணிக்குள்ள வீட்டுக்குப் போகணும்னு சொன்ன?!? இப்போ வீட்டுக்குப் போகணு-ங்கிற ஆசை இல்லையோ?” என்று கேட்டவன், “சொல்லு, திடீர்னு எதுக்காக வெளிய போக நினைச்ச?” என்று ஒரு சந்தேகக் குரலில் கேட்டான்.

“நீயேன் இவ்வளவு பக்கத்தில வந்து உட்கார்ந்த?” என்றாள் அவனுக்குச் சரிசமமாக!

“ப்ச், இருக்கிறதே கொஞ்ச இடம். இதுல வேற எங்க போய் உட்கார முடியும்?” என்றான் சலிப்புடன்!

“அந்த பாக்ஸெல்லாம் எடுத்து வச்சிட்டு… அங்கயே உட்காரலாமே?” என்றாள் சளைக்காமல்!

“அங்கேயா?” என்று அதிருப்தி காட்டியவன், “உனக்குத் தேவைனா, நீ போய் உட்காரு. என்னை ஏன் சொல்ற?” என்று எரிச்சல்பட்டு, “இங்க பாரு, இப்போ உட்காரப் போறேன். வேற ஏதாவது செஞ்ச… அவ்வளவுதான்” என கடுமையாக எச்சரித்துவிட்டு சேது அமர்ந்து கொண்டான்.

கண்மணிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது!

அந்தக் கோபத்தில் உட்காராமலே சற்று நேரம் நின்றாள். பின்னர், இவன் மீது கொண்ட கோபத்தில் தான் ஏன் கால்கடுக்க நிற்க வேண்டும் என்ற எண்ணம் வர, சட்டென அமர்ந்து… அவன் முகம் பார்க்காமல் வேறு பக்கமாக திரும்பிக் கொண்டாள்.

கண்மணி உட்கார்ந்ததை ஓரப்பார்வை கொண்டு பார்த்த சேது, “உன்னோட பேச்சு, ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாம் பார்த்தா… ஒன்னு மட்டும் நல்லா தெரியுது” என்று சொல்லி ஒரு இடைவெளிவிட்டான்.

“என்ன தெரியுது?” என்று திரும்பிப் பார்த்தவளிடம், “நான்… உன்னை ஏதாவது செஞ்சிடுவேனோ-ன்னு பயப்படுற. அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் எனக்கு கிடையாது!” என்று வெளிப்டையாகச் சொன்னான்.

“அப்புறம் எதுக்கு வெளிய வச்சி அப்படிப் பார்த்த?”

“எஸ்கலேட்டர் பக்கத்தில ஒரு பையன்கிட்ட நீ கத்திப் பேசினதைப் பார்த்தேன். வித்தியாசமான பொண்ணா தெரிஞ்சது. அதான் பார்த்தேன்” என்று விளக்கம் கொடுத்தான்.

அதோடு நிற்காமல், “இப்ப, ‘இவன் ஏன் தொடர்ந்து பார்க்கணுங்கிற?’ கேள்வி உனக்கு வரும். கரெக்ட்டா?” என்று கேட்டதும், ‘ம்ம்’ என தலையாட்டினாள்.

“நான் ஒரு ஷார்ட் பிலிம் டைரக்டர். அதான் கேரக்டர் அப்சர்வ் பண்றதுக்காக பார்த்தேன். அன்ட் அப்ப கேட்டியே எதுக்கு இங்க வந்து இருக்க-ன்னு? உள்ள இருந்தா… போலீஸ்-க்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா இங்க இப்படி சிக்னல் இல்லாம போகும்னு எஸ்பெஃக்ட் பண்ணலை” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தான்.

மேலும், “இதுக்கு மேலயும் என்கிட்ட கேட்க உனக்கு கேள்வி இருக்குமே!?” என நிறுத்த, ‘ஆமாம்’ என அவள் வேகமாக தலையாட்ட, “ஆனா அதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது” என்று சொல்லிவிட்டு, அலைபேசியிலே கவனத்தை வைத்துக் கொண்டான்.

சேது பேச்சை நிறுத்தவும் கண்மணி, “அந்தப் பையன் அந்த பொண்ணுகிட்ட தேவையில்லாம பிரச்சனை பண்ணான். அதனால சத்தம் போட்டேன். அவன் ஒன்னும் நல்லவன் கிடையாது” என, ‘தேவையில்லாமல் கத்தவில்லை!’ என்ற அர்த்தத்தில் சொன்னாள்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. பட் நான் நல்லவன்” என்று அலைபேசியைப் பார்த்தபடியே அலட்சியமாகச் சொன்னான்.

அவன் சொன்ன விதத்தில் எழுந்த எரிச்சலில், “நீ ரொம்ப நல்லவன்! அதனால இப்போ என்ன? ஸ்பிரே அடிச்சதுக்கு சாரி கேட்கணுமா?” என வெடுக்கென்று கேட்டதும், “அட! இது எனக்குத் தோணலையே?!” என்று நிமிர்ந்து பார்த்தவன், “சாரி கேளு… ம்ம்ம்… சாரி கேளு” என்று பிடித்துக் கொண்டான்.

சில வினாடிகள் தயங்கிக் கொண்டே இருந்தாள். அதன்பின்னர், “சாரி” என்று மெதுவாகச் சொன்னதும், “திட்றப்போ இருந்த சத்தம்… இப்ப இல்லை?!” என்று சொல்லி, மீண்டும் அலைபேசியைப் பார்க்கத் தொடங்கினான்.  

ஓர் சிறு அமைதிக்குப் பின் , “நீ ஏன் இப்படி இருக்க?” என்று சேது கேட்டதும், “எப்படி இருக்கேன்?” என்று அவள் திரும்ப கேட்க, “வெளிய அந்தப் பையன்கிட்ட பேசின விதம்… என்கிட்ட நடந்துக்கிற விதம்… டிஃபரென்ட்டா தெரியுது. அதான் கேட்கிறேன்… எதுக்கு இப்படி இருக்க?” என்றான்.

“ம்ம்… இப்படி இருந்தா… எல்லாருக்கும் ஒரு பயம் இருக்குமில்லையா?

“என்னைப் பார்த்ததுலருந்தே நீ இப்படித்தான் இருக்கிற! உன்னைப் பார்த்து நான் பயந்தேனா? இல்லை நான் பயப்பிடற மாதிரி உனக்குத் தெரியுதா?”

‘இல்லை’ என அவள் தலையசைக்க, “அப்புறம் ஏன் இப்படி இருக்க?” என்றான்.

நிறையவே யோசித்தவள், “மத்தவங்க பயப்படலைனாலும்… அட்லீஸ்ட் நான் பயப்படறது வெளிய தெரியாதில்லையா?” என நின்று நிதானமாக சொன்ன போது அவள் குரல் அயர்வுடன் ஒலித்தது.

கண்மணியின் முக மாற்றங்களைப் பார்த்தவன், அதுவரை குரலில் இருந்த துள்ளலை விட்டுவிட்டு, “நீ ஏன் பயப்படணும்?” என்று மெல்ல கேட்டுப் பார்த்தான்.

எங்கோ பார்த்து, “பயப்பட வச்சிட்டாங்க” என்று இடைவெளி விட்டவள், “நான் ஒரு…” என்று ஆரம்பித்து, தயக்கத்தில் பேச்சை நிறுத்தி… பின், “நான்…” என்று தொடங்கி, பின் நிறுத்தி… கடைசியாக, “நான் ரேப் விக்டிம்” என்று அவனைப் பார்த்துச் சொன்னாள்.

அடுத்த கணத்திலிருந்து அவ்விடத்தில்… அதுவரை இல்லாத வகையில்… அந்த அறையின் நீள, அகலங்களைக் காட்டிலும் பன்மடங்கு பெரியதான அமைதி ஒன்று நிலவியது!

************************************