Rose – 15

images - 2022-06-14T143813.532-a8ff6807

அத்தியாயம் – 15

அடுத்தடுத்து வந்த நாட்கள் இயல்பாக கழிந்தது. ரவீந்தர் காலையில் சென்றால் இரவுதான் வீடு வருவார். மகள் மட்டும் இல்லையெனில் அவர் வீட்டிற்கு வரப் போவதில்லை என நினைக்கும் அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருந்தது.

ராம்குமாரின் வீட்டின் அருகே குடி வந்தது யாழினிக்கு வசதியாகிப் போனது. காலை நேரங்களில் வகுப்புகளுக்குச் சென்றாலும், மீதி இருக்கின்ற பொழுதை அவர்களோடு சேர்ந்து கழிப்பதே அவளது வழக்கமாகிப் போனது.

மதுரயாழினிக்கு அன்று முதல்நாள் வகுப்பு. அதை பெரிதாக நினைக்காமல் ராம்குமாரின் வீட்டிற்குச் செல்ல, அங்கே அவளுக்காக மொத்த குடும்பமும் காத்திருந்தது. அமெரிக்கா நாட்டில் பிறந்து பதினேழு வருடம் ஆங்கில மொழியைக் கரைத்துக் குடித்தவளுக்கு தமிழை அரிச்சுவடில் இருந்து கற்றுத்தருவது என்பது சாதாரண விஷயம் அல்லவே!

ஒரு நோட் மற்றும் பேனாவுடன் ஸ்டைலாக வந்த யாழினியைப் பார்த்த கீர்த்தனாவோ, “இன்னைக்கு நீங்க படிச்சத் தமிழை மறக்கப் போவது உறுதி” வாய்விட்டுச் சிரிக்க, அவள் எதற்காக சிரிக்கிறாள் என்று புரியாமலே வந்து அமர்ந்தாள்.

ராம்குமார் தங்கையின் தலையில் குட்டு வைத்து அமர வைக்க, “உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18, உயிர்மெய் எழுத்துகள் 216, ஆயூத எழுத்து 1” வைஜெயந்தி எழுத்துகளின் வரிசையை விவரிக்க, “247 லெட்டர்ஸ்… ஓ மை காட்!” இரு கைகளாலும் தலையில் கைவைத்து அமர்ந்தாள் யாழினி.

“இதுக்கே பயந்தால் எப்படி… இன்னும் நீ கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கும்மா” என கீர்த்தனா அடுத்த குண்டைத் தூக்கிப் போட, அவள் பேசும் தமிழ் தெரியாமல் திருதிருவென விழித்தாள் பெரியவள்.

“ஏய் சும்மா பிள்ளையை பயமுறுத்தாமல் இரு” மகளை அதட்டிவிட்டு, யாழினிக்கு ஒவ்வொரு எழுத்தையும் எழுத சொல்லி கொடுத்தார் வைஜெயந்தி. அவர் எழுத்துகளை உச்சரிக்கும்போது உன்னிப்பாக கவனித்து, அதை மனதில் பதிய வைத்தாள்.

முதல் நாளே, ‘ல,ள,ழ,’ என்பதில் தொடங்கி ‘ண, ந , ன’ மற்றும் ‘ர, ற’ என்பது எல்லாமே ஒரே உச்சரிப்பு வருவதாக சொல்லி முற்றிலும் குழம்பிப் போனவளிடம், “இங்கிலீஷ் ரொம்ப ஈஸி ஆன்ட்டி. ஒன்லி 26 லெட்டர்ஸ் தான்” எழுத்துகளைக் கண்டு பயந்தபடி கூறியவளை எப்படி சமாளிப்பது என்று புரியாமல் தவித்தனர்.

“மதுரா இட்ஸ் வெரி சிம்பிள்” என்ற ராமும் அவளுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுக்க, முதல்நாள் வகுப்பிலேயே ஆயிரம் கேள்விகள் கேட்டு அவர்களைத் திணறடித்தாள்.

“அம்மா ரொம்ப ரிஸ்க் எடுக்கிறீங்கன்னு நினைக்கிறேன்” கீர்த்தனா விடாமல் வம்பிற்கு இழுக்க, அவளது கண்ணில் தெரிந்த குறும்பைக் கண்டு கொண்டாள்.

அன்று வீட்டிற்குச் சென்ற யாழினி அவற்றை எழுதிப் பார்த்தபோதும், தமிழ் கற்றுக் கொள்வது அவளுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் அவள் இருக்கும் நாடு. அங்கே அனைவரும் ஆங்கிலத்தில் பேச, அவர்களுடன் சரளமாக உரையாடுவது தான்.

ராம்குமாரின் வீட்டில் பேசும் தமிழைப் புரிந்துகொள்ள முடியாமல், அவர்களின் முகபாவனைகளை வைத்து தமிழில் தன்னை கேலி செய்கிறார்கள் என்பதை மட்டுமே உணர்ந்தாள். அந்த எழுத்துகளை மனப்பாடம் செய்யவே, அவளுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலானது.

அடுத்த கட்டமாக உறவு முறைகள் என்ற பெயரில், “அப்பா, அம்மா, அண்ணா, தம்பி” என்று ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அவளை தாவ வைப்பதற்குள் வைஜெயந்திக்கு போதும் போதுமென்று ஆனது.

இத்தனைக்கும் நடுவே ஒருநாள் கூட அவள் தமிழ் கற்க வரவில்லை என்று சொல்லாதே அவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்க, முக்கியமாக செல்போன் மூலமாக தமிழ் படங்களை அவளுக்கு ஒளிபரப்பினர். அத்துடன் காலை, மாலை வேளைகளில் நியூஸ் பேப்பர் ரீடிங் கட்டாயம் என்றானது.

அன்று விடுமுறை நாள் என்பதால் லேப்டாப்பில் பஞ்சதந்திரம் தமிழ் மூவி போட, அதை மொத்த குடும்பமும் அமர்ந்து பார்க்க தொடங்கினர். தந்தையுடன் ஹோட்டலுக்கு சென்றுவிட்டு படம் பாதியில் இருக்கும்போது, “ஜெயம்மா” என்றபடி வந்தாள் யாழினி.

“என்னம்மா அப்பாவுடன் போயிட்டு வந்தாச்சு போல” என்றவர் கேட்க, அவளும் கையுடன் கொண்டு வந்த உணவு பார்சலை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு வந்து அமர்ந்தாள்.

“ஐயோ எவ்வளோ பெரிய மாத்திர…” தேவயானி சொல்ல, தமிழ் எழுத்துகளை நினைத்துக்கொண்டே, “ஐயோ தமிழ எவ்வளவு எழுத்து” யாழினி திடீரென்று சொல்ல, கீர்த்தனாவைத் தவிர மற்ற மூவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

“அப்படியே ஒரு கதை சொல்லு ராம்…” அவள் திரையில் சொல்ல,

“அப்படியே தமிழை சொல்லி கொடு ராம்…” என்றாள் யாழினி.

அவள் செய்யும் சேட்டையைக் கண்டு மூவரும் சிரிக்க, “ஒரு படத்தை நிம்மதியாக பார்க்க விடுறாங்களா?” என்று எழுந்து வந்த கீர்த்தனா அவளை அடி வெளுக்க, “ராமண்ணா… ராமண்ணா…” என்று வீடே அதிரும் அளவுக்கு கத்தினாள்.

“டேய் தேவயானி மாதிரி எவ்வளவு அழகாக ராமண்ணான்னு சொல்றா?!” வைஜெயந்தி வாயில் விரல் வைத்து வியக்க, அவனோ தலையில் அடித்துக்கொண்டு தங்கையின் பிடியில் இருந்து யாழினியைக் காப்பாற்றினான்.

“ஏய் அவளை எதுக்கு இந்தளவுக்கு அடிக்கிற? அவ உன்னைவிட பெரிய பொண்ணு” ராம் கீர்த்தனாவிடம் கூற, “இவங்க படம் பார்க்க விடாமல் பேசிட்டே இருக்காங்க அண்ணா” என்று சினுங்கினாள்.

“நீயாவது பேசாமல் இருக்கலாமே மதுரா” என்றவன் சொல்ல, “படம் பாரு! தமிழ் கத்துக் கொடுக்கலாம்னு நீதானே சொன்னே” தமிழைக் கொலை செய்ய, அதைகேட்டு ராமிற்கே சிரிப்பு வந்தது.

“இந்த லட்சணத்தில் நீ தமிழ் கற்பிக்க போறீயா? ஐயோ இந்த ஊரில் எத்தனை பேரு பைத்தியம் ஆகப் போறாங்களோ தெரியலையே” என்று சொல்லி கண்ணீர் வரும் அளவிற்கு சிரித்தான்.

அவன் சிரிப்பிற்கான காரணம் புரியாமல் யாழினி பேந்த பேந்த விழிக்க, “தமிழ் கத்துக்கலாம்னு சொன்னே என்று கேட்கணும்” என்று வைஜெயந்தி வாக்கியத்தில் இருந்த பிழையைத் திருத்த, அதுக்கு ராமை அடி வெளுத்தாள்.

“எங்க ஊரிலே இங்கிலீஷ் தப்பும் தவறுமாக பேசினாலும், யாரும் கிண்டல் செய்ய மாட்டாங்க. அந்த நபருக்கு புரியும்படி நிறுத்தி நிதானமாக பேசுவாங்க. நீ என்னை கிண்டலா பண்ற?” என்றவள் சரளமாக தமிழில் பேசியபோதும், அழகிய மழலை பேசுவதுபோலவே இருந்தது.

அவள் கேள்விகணைகளைத் தொடுக்க, “அம்மாடியோ!” கீர்த்தனா வாய்மீது விரல் வைக்க, “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” திருக்குறளைக் கூறிய சிவசந்திரனின் விழியோரம் கண்ணீர் கசிந்தது.

“யாழினி குட்டியை இவ்வளவு அழகாக தமிழ் பேச வைத்ததால், இன்னைக்கு ஈவினிங் நம்ம ரெஸ்டாரன்ட் போலாம். இன்னைக்கு அப்பாவோட  ட்ரீட்” என்ற கணவனின் தோள் சாய்ந்தார் வைஜெயந்தி.

அப்போதுதான் அவள் தமிழில் சரளமாக பேசியதை உணர்ந்த யாழினி, “ஹுரே” என்று குஷியாக குதித்தவள், அவளது மாற்றம் கண்டு மொத்த குடும்பத்தின் முகத்திலும் சந்தோசம் நிலையானது.

 அவர்கள் தமிழ் ரெஸ்டாரன்ட் ஒன்றின் உள்ளே நுழைய, “அப்பா ரெஸ்டாரன்ட்ல ட்ரீட் ஆ…” என்றவள் சொன்னபோது தான், அது ரவீந்தர் நடத்திக் கொண்டிருக்கும் ஹோட்டல் என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

அங்கிருக்கும் உணவுகள் அனைத்தும் தென்னிந்திய முறையில் தயாரிக்கப்பட, அதை ரசித்து உண்பதற்கு அங்கே தனி பட்டாளமே இருந்தது. ரவீந்தரின் கைமணம் அங்கிருக்கும் தமிழர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்று சொல்லாம்.

அன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்க, “அப்பா” என்ற அழைப்புடன் உள்ளே சென்ற யாழினி வரும்போது, ரவீந்தரையும் உடன் அழைத்து வந்தார்.

“சாரி இதுவரை இது உங்க ரெஸ்டாரன்ட் என்று எனக்கு தெரியாது” என்று சிவசந்திரன் சொல்ல, “அதனால் என்னங்க… இந்த ஊரில் பல கிளைகள் திறந்திருந்தாலும், இந்த கடை எனக்கு ரொம்ப ஸ்பெசல். சரி என்ன சாப்பிடுறீங்க” என்று அவர்களை அமர வைத்து உபசரிக்க தொடங்கினார்.

“ஒரு தமிழர் கடல்கடந்து வந்து அமெரிக்கா நாட்டில் ஹோட்டல் வைப்பது சாதாரண விஷயம் இல்லங்க” வைஜெயந்தி இலகுவாகக் கூற, அவரும் ஒப்புதலாக தலையசைத்தார்.

“இது என் மனைவியோட ஆசை. அவளுக்கு இயல்பாகவே சமையல் நல்லா வரும். இந்த நாட்டிற்கு வந்து நல்ல உணவுகளை சாப்பிடுவது அரிது என்று புரிந்ததும், எனக்காக நீங்க ஒரு ரெஸ்டாரன்ட் தொடங்கனும்னு சொன்னதன் வெளிப்பாடுதான் இப்போ நீங்க பார்க்கும் இந்த வளர்ச்சி” என்று சொல்லும்போது அவரின் கண்ணில் தெரிந்த காதலை மற்றவர்களால் உணர முடிந்தது.

அவர்களுடன் தன் மகளையும் அமர வைத்துவிட்டு, மற்ற பொறுப்புகளை வேலையாட்களிடம் ஒப்படைத்துவிட்டு வந்து அமர்ந்தார். ஆர்டர் கொடுத்த உணவுகள் வரும் வரை பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, கீர்த்தனா வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தாள்.

அங்கே நண்பர்களின் பட்டாளத்துடன் சாப்பிட்டுவிட்டு கிளம்பியவனின் மீது பார்வை படரவிட்டு, “இவன் ரொம்ப அழகாக இருக்கேன்” யாழினி மெல்லிய குரலில் முனுமுனுக்க, “அது அழகாக இருக்கேன் இல்ல… இருக்கான்” என்று சொல்லி திருத்தினான் ராம்குமார்.

அப்போதும் அந்த நபரின் மீது பார்வையை அகற்றாமல், “யெஸ் இவன் ரொம்ப அழகாக இருக்கான். எங்கப்பா பேஸ்கட் மாறியே இருக்கே, நீ சொன்ன அந்த பர்சன் இவனா?” தூரத்தில் நின்றிருந்த அடையாளம் காட்டி ராமிடம் கேட்க, அவனும் திரும்பிப் பார்த்தான்.

நண்பர்களின் புடைசூழ நின்றிருந்த யாதவைப் பார்த்தும், “ஆமா! உனக்கு மாப்பிள்ளை பொம்மை ஒன்னு இந்தியாவில் இருந்து வாங்கி அனுப்பறேன்னு சொன்னேன் இல்ல. அது இவனே தான்” ராம்குமார் சிரிக்காமல் சொல்ல, “ரியலி” என்றாள் யாழினி குதூகலத்துடன்.

அவனும் சிரித்தபடி தலையசைத்து, “உன்னோட ராமண்ணா சொல்றேன். உனக்கு மாப்பிள்ளை அவன்தான் போதுமா. நான் இங்கிருந்து போகும்போது, என் செல்ல தங்கையை இந்தியாவுக்கு கூட்டிட்டு போயிடுவேன். அவளுக்கு இந்த இயந்திர வாழ்க்கை வேண்டாம்”அவளின் தாடையைப் பற்றி செல்லம் கொஞ்சினான்.

அந்த சமயத்தில் யாதவ் கொள்கைகளைப் பற்றி அவன் அதிகம் யோசிக்கவில்லை. அத்துடன் யாழினி விளையாட்டுப் பெண் என்பதால், எதையும் யோசிக்காமல் சொன்னான். ஏனோ அது அவளின் ஆழ்மனதில் விதையாக விழுந்து விருச்சமென்று வளர்ந்தது.

ராம்குமார் பேசுவதைக் கேட்ட ரவீந்தரோ, “என் பெண்ணை இந்தியாவில் கட்டிக் கொடுத்துட்டு, என்னால் இங்கே எப்படி இருக்க முடியும்?! யாழினி எப்பவும் என் பக்கத்திலேயே இருக்கணும், அதனால் இங்கேயே இருக்கும் பசங்களாக பார்த்து தான் கட்டிக் கொடுப்பேன்” தன் மகளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

அவர் பேசும் வாக்கியம் கொஞ்சம் கொஞ்சம் புரிய, “அப்பா நம்ம இந்தியாவே போலாம். இந்த இயந்திர வாழ்க்கை வேணாம்” தன் பக்க கருத்தைக் கூற, அவரின் முகம் குழப்பத்தை தத்தெடுத்தது.

அதற்குள் உணவுகள் வந்துவிட, அனைவரும் சாப்பிட தொடங்க, “அக்கா இந்த சாப்பாடு டேஸ்ட் பண்ணிப் பாரு சூப்பராக இருக்கு. இங்கிருந்து போனதும் இதை எல்லாம் சமைத்துக் கொடுப்பாயாம். நான் டெஸ்ட் பார்த்து மார்க் போடுவேணாம்” சிரிக்காமல் சொல்ல, “ஓகே” என்றாள் யாழினி.

சிவசந்திரனின் குடும்பம் சாப்பிட்டுவிட்டு கிளம்பும் சமயத்தில் அவரைத் தேடிச் சென்றான் ராம்குமார். தன் மகன் செல்வதைக் கண்டு சிவசந்திரன் மனைவியைப் பார்க்க, “யாழினி பற்றி பேச போகிறான்” என்று கூறவே, அவருக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

“ஹாய் அங்கிள் பிஸியா? உங்களோட கொஞ்சம் பேசணும்” என்றான்.

தன் முன்பு போடபட்டிருந்த இருக்கையைக் கைகாட்டி, “இப்படி உட்காருப்பா பேசலாம்” என கூற, அவனும் மறுப்பு சொல்லாமல் அமர்ந்தான்.

“அங்கிள் இந்த பணத்தை யாருக்காக சம்பாரிக்கிறீங்க?” ராமின் நேரடியான கேள்விக்கு, “மதுர யாழினிக்காக மட்டும்தான்” என்றார் ரவீந்தர்.

“இந்த நிலைக்கு நீங்க வர எவ்வளவு வருஷம் ஆச்சு அங்கிள்” என்றவன் அடுத்த கேள்வியைத் தொடுக்க, சிறிதுநேரம் மெளனமாக இருந்தார்.

பிறகு, “பதினைந்து வருடம் இருக்கும்” என்றார்.

“இவ்வளவு நாளும் நீங்க சம்பாரித்த பணத்தில் உங்க மகளோட சந்தோசத்தை வாங்க முடியாது அங்கிள். அவளுக்கு இந்த ஃலைப் பிடிக்கல. விவரம் தெரியாத நாளில் இருந்து அவள் அனுபவித்த தனிமை, இப்போ கொஞ்சம் கொஞ்சமாக அவளை மனநோயாளியாக மாத்திட்டு இருக்கு” அவன் உண்மையைப் போட்டு உடைக்க, அவருக்குமே அது சற்று அதிர்ச்சியாக இருந்தது.

“என்னப்பா சொல்றே” என்றவரிடம், அவளை தான் முதல் முதலாக பார்த்ததில் தொடங்கி, இப்போது வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான்.

“அவளுக்கு பக்கபலமாக நீங்க இருக்க வேண்டிய நேரம் இதுதான். மதுராவிற்கு லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை பிடிக்கல. இங்கிருக்கும் நபர்களைப் பார்த்து வளர்ந்தவளுக்கு இங்கே நிரந்தரமாக இருக்க பிடிக்கல” என்றான்.

அவன் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கவே, அவரும் சிந்திக்க தொடங்கினார். இத்தனை நாளாக வீட்டினுள் நுழையும்போது மகளின் முகம் மலர்ச்சியைக் கண்டு அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்று கணக்கிட்டது தவறு என்று உணர்ந்தார்.

“நீங்க பக்கத்தில் இருக்கணும்னு நினைக்கிறாள். அவளோட உலகம் உங்களைச் சுற்றி இயங்கிட்டு இருக்கு அங்கிள். அவளுக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க” என்றவன் அங்கிருந்து கிளம்பி வெளியே செல்ல, அவனின் பின்னோடு சென்றார்.

ஒரு பேரர் மசால் தோசை எடுத்து வர, “நெய் மணக்கும் கமகம தோசை! அதுக்கு சைட் டிஷ் சாம்பார், புதினா துவையல், காரசட்னி” அவள் கூறுவதைக் கேட்டு, அங்கே வந்திருந்த தமிழ் குடும்பத்தின் முகம் மலர்ந்தது.

தன் மகள் தமிழில் உரையாடுவதைக் கண்டு வியந்தவர், அதற்கு காரணமான சிவசந்திரன் குடும்பத்தை நன்றியுடன் பார்த்தார். அடுத்தடுத்து வந்த நாட்களில் மகளிடம் நேரம் செலவிட்டவர், அவளோடு தமிழில் பேச தொடங்கினார்.

அதன் மூலமாக தமிழ் மீது இருந்த ஆர்வம் இன்னும் அதிகரிக்க, இந்திய நாட்டின் கலாச்சாரம், பாரம்பரிய உடை, உணவு முறைகள், பழக்கவழக்கங்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொள்ள தொடங்கினாள்.

ராம்குமாரின் குடும்பத்தில் ஒருத்தியாக மாறிய யாழினி, பி.பி.ஏ. எடுத்து மேல்படிப்பைத் தொடர, வருடங்கள் உருண்டோடியது. அவள் மூன்றாம் வருடம் முடிக்கும்போது, சிவசந்திரன் மொத்தமாக இந்தியா செல்வது என்று முடிவெடுத்தனர்.