Neer Parukum Thagangal 7.2
Neer Parukum Thagangal 7.2
நீர் பருகும் தாகங்கள்
அத்தியாயம் 7.2
அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்!
லக்ஷ்மியின் கேள்விக்கு மௌனமே பதில் என்பது போல் மினி இருக்க, அவள் ‘கேட்டது தவறோ?’ என்ற ஓர் எண்ணம் வரவும், “சொல்ல ஒருமாதிரி இருந்தா, விட்டுவிடு. நாம வேற பேசலாம்” என்று சொன்னார்.
‘அப்படியெல்லாம் இல்லை’ என்று சொல்வது போல் தேம்புவதைக் குறைத்து, “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் இந்தப் பையன் ‘லவ் பண்றேன்’-னு சொல்லி வந்து நின்னான். ‘எனக்கு உன்னை பிடிக்கலை’-ன்னு ஸ்ட்ராங்கா அப்போஸ் பண்ணி, அப்பவே அதுக்கு ஒரு புல்ஸ்டாப் வச்சிட்டேன்!!
அதோட விட்டுருவான்னு நினைச்சேன். ஆனா விடாம நான் எங்க போனாலும் என் பின்னாலயே வந்து ‘லவ் பண்ணு’-னு டார்ச்சர் பண்ணான்” என்று அந்தப் பையன் பற்றி அசூயையான முகத்துடன் சுருக்கமாகச் சொன்னாள்.
கூடவே, “பாலோவ் பண்றது மட்டுமில்ல… நான் போற வழியில நின்னுக்கிட்டு போட்டோ எடுக்கிறது! கிப்ஃட் தூக்கிட்டு வந்து வாங்கிக்கோ-ன்னு ஃபோர்ஸ் பண்றது! நீயும் லவ் பண்ணுனு மிரட்டறது! மொபைல் நம்பர் தெரிஞ்சிக்கிட்டு மெசேஜ் அனுப்புறது. சரியான இம்சை இவன்!” என்றாள் வெறுப்புடன்!
மினி கூறிய விதத்திலே அவனை எந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறாளென்று புரிந்தது! ஆனால் இது அவனுக்கு ஏன் புரியவில்லை? இல்லை புரிந்தும் இவள் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பிடிவாதமா? என்ன ஒரு மனநிலை இதெல்லாம்? என்று லக்ஷ்மிக்கு கோபம் வந்தது!!
இப்படிப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி, வதைத்து, அவமதித்து வலியப் பெறுவது காதலா? என்ற கேள்வி லக்ஷ்மிக்குள் எழுந்தது! உடனே, ‘இல்லையே’ என்ற பதிலும் வந்தது!!
கூடவே… இந்த அளவிற்குத் தொந்தரவு செய்கிறவனைக் கண்டிக்க இவர்கள் பக்கமிருந்து நடவடிக்கை எடுத்தார்களா? என்ற வினா வந்ததாலும், அவனது தொல்லைகள் இன்னமும் தொடர்வதால், “மினி, இதெல்லாம் முதலயே வீட்ல சொல்றதுதான நல்லது? நீ சொல்லலையா?” என்று கேட்டார்.
“அதெப்படி சொல்லாம இருப்பேன்? அப்பாகிட்ட எப்பவோ சொல்லிட்டேன்”
‘என்ன நடவடிக்கை?’ என்று கேட்க நினைக்கையிலே, “கொஞ்ச நாளா… எந்தத் தொந்தரவும் பண்ணாம இருந்தான். திரும்ப இன்னைக்குத்தான் பின்னாடியே வந்து என்னென்னமோ உளறிக்கிட்டு இருக்கான். ப்ச், ரொம்ப ஒர்ஸ்ட்!!” என்று ஆவேசத்துடன் சொல்ல, அவள் தோளில் தட்டிச் சாந்தப்படுத்தினார்.
இதையெல்லாம் முதலிலேயே சொல்லியிருந்தால், இன்னும் எச்சரிக்கையுடன் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வந்ததால், “நான் அப்போ கேட்கிறப்ப, ஏன் சொல்லலை?” என்று கேட்டதும், “அப்போ எரிச்சலா இருந்தது. அதோட நீங்க யாருன்னே தெரியாதே!? எப்படிச் சொல்வேன்?” என்றாள்.
அவள் சொல்வது நூறு சதவீதம் சரிதான்!
பார்த்ததுமே… தன் உள்ளம் உணர்ந்ததை அவளும் உணர வேண்டுமா என்ன? வேண்டாமே! ஆனால் இந்த யதார்த்தத்தை மூளை புரிந்து கொண்டது! மனம் புரிந்திட மறுத்தது!
அது, அவர் முகத்தில் சங்கடமாக வெளிப்பட்டது!!
அவர் முக மாற்றம் கண்டு, “அப்போதான்! இப்போ இல்லை” என்று மெதுவாக சொன்னதுமே ஒரு மென்னகை வர, “ஏன் மினி, அவன் ஒர்ஸ்ட்டா பேசறான்-னு சொல்ற! அப்போ கேர்ஃபுல்லா இருந்திருக்கணும்ல? எதுக்கு இங்கயே இருந்த? வீட்டுக்குப் போயிருக்கலாமே?” என்று தன் கேள்விகளை அடுக்கினார்.
“உடனே வெளிய போனா சேஃப் இல்லைன்னு தோணிச்சி. இத்தனை ஆளுங்க இருக்கிற இடத்தில அவனால என்ன பண்ணிட முடியும்னு நினைச்சேன். பாபு அங்கிள்-கு கால் பண்ணி கூட்டிட்டுப் போகச் சொல்ல இருந்தேன். பட் இப்படி மாட்டிக்கிடுவோம்… இதெல்லாம் நடக்கும்-னு… நினைக்கலை” என்று அவளது முன்னெச்சரிக்கைகள் வீணாய் போனதைக் கவலையுடன் சொன்னாள்!
“புரியுது மினி” என லக்ஷ்மி ஆறுதலாக சொல்லுகையில், “ஆண்ட்டி இதுல என் மிஸ்டேக் எதுவுமே இல்லை-ன்னு நினைச்சேன். பட் நீங்க இவ்ளோ கொஸ்டின் கேட்கிறப்போ, ஏதோ என்மேலதான் மிஸ்டேக்கோன்னு ஒரு பீல் வருது” என்று வருத்தமான குரலில் சொன்னாள்.
“ஃபர்ஸ்ட் உன்மேல தப்பு இல்லை. அன்ட் நான் அந்த அர்த்தத்தில கேட்கலை” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
மேலும் லக்ஷ்மி எதையோ சொல்ல வர, “ஆண்ட்டி… நீங்க ரொம்ப கொஸ்டின் கேட்கிறீங்க? இப்போ என் அப்பா மட்டும் இருந்திருந்தா என்னை எப்படி கேர் பண்ணியிருப்பாங்க தெரியுமா?” என்று அவளது அப்பாவின் அரவணைப்பை, அருகாமையைத் தேட ஆரம்பித்துவிட்டாள்.
லக்ஷ்மி, ‘தான் பேசிய விதத்தால்தான் இப்படியோ?’ என்று நினைக்கையிலே, “ஆண்ட்டி” என கண்ணில் கண்ணீரைத் தேக்கி வைத்து அழைத்த மினி, “எ… எனக்கு இப்பவே அப்பாவைப் பார்க்கணும்” என்று விம்மினாள்.
‘அதெப்படி சாத்தியம்?’ என அதிர்ந்தவர், “மினி, எப்படியும் இந்நேரம் போலீஸ் வந்திருப்பாங்க. சீக்கிரமா வெளிய போயிடலாம். பட் அதுவரைக்கும் வெயிட் பண்ணத்தான் செய்யணும்” என்று நிலைமையை எடுத்துச் சொன்னார்.
வேக வேகமாகத் தலையாட்டியவள், “எனக்கு வெயிட் பண்ணலாம் முடியாது. வுடனே அப்பாவைப் பார்க்கணும்” என அர்த்தமில்லாமல் பேசி அழுதாள்.
அவளது மனநிலை… இப்படிப் பேச வைக்கிறது என நினைத்தாலும், “இப்போ எப்படி முடியும்? புரிஞ்சிக்கோ” என்று அழுத்தமாகச் சொல்ல, “இல்லை! நான் பார்க்கணும்! பார்த்தே ஆகணும்!” என்று அடம்பிடித்து ஏங்கி ஏங்கி அழுததும், ‘எப்படி இவளைச் சமாதானப்படுத்த?’ என்றோர் சலிப்பு வந்தது.
அது… ‘சமாதானப்படுத்தணுமே’ என்று சங்கடப்பட்டு வந்த சலிப்பல்ல! இந்த நொடியில் அவளைச் சமாதானப்படுத்தும் பொறுப்பு தனக்கு வந்திருப்பதால் உண்டான ஒருவித சந்தோஷ சலிப்பு!!
அவளைச் சமாளிக்க நினைத்தவர், “மினி மெச்சூர்டு எனஃப்-தான? சொன்னா ஈஸியா புரிஞ்சிக்கிற பொண்ணுதான? அப்போ புரிஞ்சிக்கணும்” என்று நல்ல விதமாகச் சொன்னதும், “புரிஞ்சிக்கிறேன் ஆண்ட்டி. ஆனா ஒரு தடவை, ஒரே ஒரு தடவை அப்பாகிட்ட பேசணும்” என்று வேண்டினாள்.
‘இதற்கு என்ன சொல்ல?’ என அவர் யோசிக்கையில், “ஆண்ட்டி ப்ளீஸ், ப்ளீஸ்” என்று அவர் தாடையைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்ட விதத்தில், சாக்கு போக்கு சொல்லி சமாளிக்கத் தோணாமல், ‘என்ன செய்ய?’ என்று மினிக்காக லக்ஷ்மி யோசிக்க ஆரம்பித்தார்!
********************************
வணிக வளாகத்தின் வெளியே
அதே இடம்தான். இருள் சூழ ஆரம்பித்திருந்ததால் சாலையோர விளக்குகள் போடப்பட்டிருந்தன. வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், அந்தச் சாலையே வெறிச்சோடிக் கிடந்தது.
அந்தச் சாலை நுழைவுப் பகுதியில் மஞ்சள் நிற தடுப்பு அரண்கள் கொண்டு காவல்துறையினரால் வழியடைப்புச் செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் அதுவரையில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தாண்டி வருவதற்கு பொதுமக்கள், ஊடகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதை கண்காணிக்கவென இரு காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள்!
உள்ளே மாட்டிக் கொண்டவர்கள் உறவுகளிடம், ‘யாரும் பயப்பட வேண்டாம். இதுவரை எந்த உயிருக்குமே ஆபத்து இல்லை. இனிமேலும் ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வோம்’ என்று ஆய்வாளர் பெனசீர் வந்து உறுதி கொடுத்துச் சென்றிருந்தார்.
அதன்பின்தான் காத்திருக்கும் உறவினர்களின் முகத்தில் பதற்றமும், பயமும் குறைந்தது. அதில் சரவணன் சித்தப்பாவும் ஒருவர்.
மக்கள் பேசிக் கொள்வது, தப்பித்து வந்தவர்களிடம் ஊடகத் துறையிலிருந்து பேட்டி எடுப்பது என அந்த இடமே சலசலப்புடன் காணப்பட்டது.
****************************
கடமை தவறா காவலர் பெனசீர்!
பெனசீர் அமர்ந்திருந்த இடம் எந்த சத்தமுமில்லாமல் அமைதியாக இருந்தது. சூழலை அப்படி வைத்துக் கொண்டார். தான் யோசிக்கவும், இங்கே இருக்கும் காவாலர்கள் வணிக வளாகத்தை உன்னிப்பாக கவனிக்கவுமே இப்படியொரு ஏற்பாடு செய்திருந்தார்.
அவர் உத்தரவின்படி வணிக வளாக மேலாளர், நான்கு தளத்தின் செக்யூரிட்டி பெண்கள், வாயிலில் நிற்கும் செக்யூரிட்டி பெண்மணி ஒருவர் மற்றும் கேட் செக்யூரிட்டி என்று அனைவரையும் கூட்டி வந்து செந்தில் நிறுத்தினான்.
அவர்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டுமென நினைத்த பெனசீர், முதல் கேள்வியாக, “சிசிடிவி எங்கெல்லாம் பிளேஸ் பண்ணியிருக்கீங்க?” என்று மேலாளர் பொறுப்பில் இருக்கும் இளைஞனிடம் கேட்டார்.
“என்ட்ரன்ஸ், அன்டர்கிரௌன்ட் பார்க்கிங் ஏரியா, லிஃப்ட்… அப்புறமா எல்லா ப்ளோர்லயும் சிசிடிவி கேமரா உண்டு மேடம். ஃபோர்த் ப்ளோர்ல செக்யூரிட்டி மானிட்டர் ரூம் இருக்கு. அங்கருந்துதான் சிசிடிவி ஃபுட்டேஜ் அக்சஸ் பண்ண முடியும்” என்றான் மேலாளர் இளைஞன்.
இது எதிர்பார்த்ததுதான் என்பதனால், “இங்க அந்த ரூம் ஸ்டாஃப் யாராவது இருக்காங்களா?” என்று கேட்டார்.
“இதோ கூட்டிட்டு வர்றேன் மேடம்” என்று மேலாளர் இளைஞன் ஓடிச் சென்று ஒருவரை அழைத்து வந்தான்.
சற்று தயங்கி வந்து நின்றவரிடம், “இதை மட்டும் சொல்லுங்க. இன்னைக்கு மானிட்டர் பண்றப்போ, நீங்க சந்தேகப்படுற மாதிரி எதும் ஆக்ட்டிவிட்டிஸ் பார்த்தீங்களா?” என்று பெனசீர் நேரடியாக கேட்டார்.
சில நொடிகள் யோசித்தவர், “மேடம், நான் பார்த்தவரைக்கும் அப்படி எதுவும் இல்லை” என்றதும், ‘அப்புறம் எப்படி!?’ என எண்ணிய பெனசீர், “என்ட்ரன்ஸ்ல செக்யூரிட்டி சிஸ்டம்… லைக் பேக்கேஜ் ஸ்கேனர் மாதிரி எதும் இருக்கா?” என மேலாளரைப் பார்த்துக் கேட்டார்.
“ஸ்கேனர் இல்ல மேடம். பட் ஜென்ஸை டோர் பக்கத்தில இருக்கிற வாக் த்ரு மெட்டல் டிடெக்டர் வழியாதான் உள்ளே அலோவ் பண்ணுவோம். லேடிஸ்-க்கு மெட்டல் டிடெக்டர் வச்சி, அவங்கதான் செக் பண்ணி அனுப்புவாங்க” என்று வாயில் செக்யூரிட்டி பெண்மணியைக் காட்டினான்.
“நீங்கதானா என்ட்ரன்ஸ்ல நிக்கிறது?” என்று அடுத்து கேள்வியை வாயில் செக்யூரிட்டி பெண்மணியைப் பார்த்து பெனசீர் கேட்டார்.
நிற்கும் இடத்திலிருந்து கொஞ்சம் முன்னே வந்து, “ஆமாங்க மேடம்” என்றார்.
“கன், கட்டை இதெல்லாம் வச்சிருக்கவங்க எப்படிங்க உள்ளே போக முடியும்? எப்படி அலோவ் பண்ணீங்க? செக் பண்றப்போ தெரிஞ்சிருக்கும்ல? இல்லை செக் பண்ணாமலே அனுப்பியாச்சா?” – பெனசீர்.
“அப்படி இல்லை மேடம். இன்னைக்கு இங்கே ஒரு ப்ரோகிராம் நடக்குது-ன்னு எல்லாரையும் செக் பண்ணிதான் அனுப்பினேன். ஜென்ஸ் போறப்பவும் சரி, லேடிஸ்க்கு செக் பண்றப்பவும் சரி… சந்தேகப்படுற மாதிரி எதும் இல்லை”
“என்ன ப்ரோகிராம்?” – பெனசீர்.
“விமன்ஸ் டே கொண்டாட்டம் மேடம்” – வாயில் செக்யூரிட்டி பெண்மணி.
அவர் பதிலிலிருந்து, ‘விமன்ஸ் டே கொண்டாட்டம்’ என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு, “இந்த செலிப்ரேஷன் எந்த ஃப்ளோர்-ல நடந்தது? என்று யாரையும் குறிப்பிடாமல் பெனசீர் பொதுவாகக் கேட்டார்.
“ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல மேடம்” – மேலாளர் இளைஞன்.
பெனசீர் எதையோ யோசிக்கையில், “மேடம், படிக்கட்டு வழியாவும் ஆளுங்க வருவாங்க. இப்போ கட்டுமான வேலை நடக்கிறதால, அதுவழியா யாரையும் விடலை. முன்னாடி வழியாதான் எல்லாரையும் உள்ளே விடறோம்” என்றார் வாயில் செக்யூரிட்டி பெண்மணி கூடுதல் தகவலாக!
உடனே மேலாளர் இளைஞன், “ஸ்டேர்கேஸ் கான்கிரிட் வீக்கா இருக்கிறதால, ரிப்பேர் ஒர்க் போய்க்கிட்டு இருக்கு மேடம்” என்றான்.
“மெய்ன்டனன்ஸ் ஒர்க் நடந்தா மால் க்ளோஸ் பண்ண மாட்டிங்களா? எதுவும் ஒரு எமர்ஜென்சினா பப்ளிக் எப்படி எஸ்கேப் ஆவாங்க?” என கோபப்பட்டவர், செக்யூரிட்டி பெண்களைப் பார்த்து, “பாருங்க நல்லா யோசிச்சு சொல்லணும். வழக்கத்துக்கு மாறா, சந்தேகப்படுற மாதிரி எதும் நடந்ததா?” என கேட்டார்.
சில நொடிகள் யோசித்தார்கள்!
பின் நான்காவது தள செக்யூரிட்டி பெண் முன்வந்து, “மேடம், ஒரு பொண்ணு! எஸ்கலேட்டர்ல வர்றப்போ ஒரு பையனை திட்டிச்சு. அப்புறமா மேடம் அதே பொண்ணு, சாப்பிடற கடை பக்கமா நின்ன ஒரு பையன்கிட்ட கத்திக்கிட்டு இருந்திச்சு” என்று சொன்னார்.
“உடனே என்கிட்ட சொல்லியிருக்கலாமே-க்கா” என்று மேலாளர் இளைஞன் இடையே புகுந்து சொன்னதும், ‘குறுக்க பேசாதீங்க’ என்பது போல் பெனசீர், பார்த்துவிட்டு, “இது நடந்தது ஃபோர்த் ப்ளோர்லயா?” என்றார்.
“ஆமாங்க மேடம்”
“அந்தப் பொண்ண பார்த்தா அடையாளம் காட்ட முடியுமா?”
“ம்ம்ம், காட்டுவேன் மேடம்”
இதற்குமேல் இவர்களிடம் கேள்வி கேட்க இப்போதைக்கு எதுவுமில்லை என்று எண்ணிய பெனசீர், “எங்கயும் போக கூடாது. அப்படிப் போய் இருங்க” என்று சொன்னதும், அவர்கள் எல்லோரும் புல்வெளி தரையில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் சென்று அமர்ந்தனர்.
அவர்கள் சென்றதும் செந்திலிடம், “இன்னைக்கு விமன்ஸ் டே செலிப்ரேஷன் நடந்திருக்குது. ப்ரோக்ராம்ல வீடியோ எடுத்தாங்களானு விசாரிங்க. அப்படி எதும் எடுத்திருந்தா, உடனே அது கிடைக்கிற மாதிரி பாருங்க செந்தில்” என சொன்னதும், சரியென்று அவனும் சென்றுவிட்டான்.
அடுத்ததாக இங்கிருக்கும் நிலவரம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தன் உயர் அதிகாரிக்குப் பெனசீர் சொல்லிவிட்டு, மீண்டும் வணிக வளாக கட்டிடத்தைப் பார்த்தார்.
அந்தப் பெண் யார்? அவள் நடந்து கொண்ட விதம் சந்தேகத்திற்கு உரியதா? உள்ளே இருப்பவர்கள் மாட்டிக் கொண்டார்களா? இல்லை, பிடித்து வைக்கப் பட்டிருக்கிறார்களா? இன்னும் ஏன் அந்த நபர்களிடமிருந்து கோரிக்கையோ, அச்சுறுத்தலோ வரவில்லை? என பெனசீருக்குள் பல கேள்விகள் எழுந்தன!
******************************
மனிதநேயம் பேசும் மஹிமா – கார்த்திகேயன் – ???
இரண்டு அலைபேசிகளைக் கையில் வைத்துப் பார்த்த பைரவி, மஹிமாவின் அலைபேசியைத் தூக்கி காட்டவும், “வீட்லருந்து கால் பண்றாங்க” என அவள் தொடுதிரையைப் பார்த்துச் சொன்னதுமே, “சரி பேசு” என்று அலைபேசியை பைரவி கொடுத்தாள்.
“வேண்டாம்” என மஹிமா மறுக்க, “பேச வேண்டியதான?” என பைரவி கேட்க, “வாய்ஸ்ல டயர்ட்நெஸ் தெரியுது. என்னென்னு கேட்பாங்க. இந்த விஷயத்தை சொன்னா பயப்படுவாங்க. அப்படியே விட்டுடு. பிஸின்னு நினைச்சிப்பாங்க. நான் அப்புறமா பேசிக்கிறேன்” என மறுப்பிற்குக் காரணம் சொன்னாள்.
அதற்குமேல் பைரவி சொல்லிக் கொண்டிருக்காமல், சற்றுத் தள்ளிச் சென்று தனக்கு வந்து கொண்டிருந்த அழைப்பை ஏற்றாள்.
வெளியே நடப்பதைப் பற்றி அவர்களைச் சார்ந்த நபர் ஒருவர் மறுமுனையில் சொல்லச் சொல்ல பைரவியின் முகம் மாறியது. மௌனமாக அனைத்தையும் கேட்டுவிட்டு, “புரிஞ்சிக்கிறாங்களானு வெயிட் பண்ணிப் பார்க்கலாம்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
அலைபேசியை கையில் வைத்தபடியே, ‘இதுவும்… தங்களுக்குச் சாதகமாக இருக்காதோ? உதவாதோ?’ என்ற குழப்பத்தில் பைரவி நின்றாள்!
அவள் முகம் தெளிவில்லாமல் இருந்ததைக் கண்ட அல்போன்ஸ், “பைரவி ஏன் ஒருமாதிரி இருக்க? எல்லாம் சரியாதான போகுது?” என்று ஒருவித தவிப்புடன் கேட்க, “அங்கிள் ஒன்னுமில்லை. எதுனாலும் பார்த்துக்கலாம்” என்று சட்டென முகத்தைச் சரிசெய்து கொண்டு சொன்னாள்.
ஆனால் மனதிற்குள், ‘நினைத்தது நடக்காதோ?’ என்ற ஓர் பதற்றம், ‘இன்னும் எவ்வளவுதான் போராட வேண்டும்?’ என்ற ஓர் வலி, வந்து வந்து போனது. இது கூடவே, ‘எதற்கும் வேறு வழியிலும் முயற்சித்தால் என்ன?’ என்று மூளைக்குள் யோசனை போய்க் கொண்டிருந்தது!
‘வேறு வழி என்ன… என்ன?’ என்று மீண்டும் மீண்டும் யோசிக்கையில் பைரவி மஹிமாவைப் பார்த்தாள். சட்டென அவளுக்கு ஒன்று தோன்றியது!
உடனே வேகமாக மஹிமா இருக்கும் இடத்திற்கு சென்ற பைரவியை பார்த்த பெரியவர், “ஏதாவது பிரச்சனையா-மா?” என்று அவள் மனம் படும்பாட்டைப் உணர்ந்து கேட்கவும், “இருங்க தாத்தா. சொல்றேன்” என்று பொறுமையாகச் சொல்லிவிட்டு, மஹிமா முன்னே அமர்ந்தாள்.
அவளது களைப்பையும் காயத்தையும் பார்த்த பைரவி, “ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டதற்கு, ‘இதுவரை இல்லாமல் இப்பொழுது என்ன புதிதாய்!’ என்று மஹிமாவிற்குத் தோன்றவும், “உனக்கு என்ன வேணும்னு சொல்லு?” என்றாள் அவளை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே!
பைரவிக்கு, ‘எனக்கும் இரக்கம் உண்டு’ என கத்த வேண்டும் போல இருந்தது!
ஆனால் அதற்கு இது நேரமல்ல என்பதால், “நீ ஒரு லாயர் சொன்னேல? அவர் ஹெல்ப் பண்ணுவாரா?” என்று அவசரமாக கேட்க, “இப்ப இது எதுக்கு?” என்று பெரியவர் கேட்டார் என்றால், அல்போன்ஸ் அதே கேள்வியோடு பைரவியைப் பார்த்துக் கொண்டிருந்தார்!
“கொஞ்சம் பொறுங்க தாத்தா” என்றவள், கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து மஹிமாவைப் பார்க்க, “ம்ம், ஹெல்ப் பண்ணுவான்” என்றாள்.
“உனக்கு எப்படி அவரைத் தெரியும்?” என்று பைரவி கேட்கவுமே, ‘இதெல்லாம் எதுக்கு?’ என்பது போல் மஹிமா பார்க்க, “நீ ஹெல்ப் கேட்டு பண்ணுவாரா-னு தெரியணும்ல? அதான்” என பைரவி சொன்னதும், “எங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகியிருக்கு. நீ என்னென்னு சொல்லு, ஹெல்ப் பண்ணுவான்” என்றாள்.
இதை மஹிமா உறுதியாகச் சொன்னாலும் கார்த்தி நியாயம், நேர்மை என்று இருப்பவன். இவர்கள் நடந்து கொண்டது தெரிந்தால், ‘என்ன சொல்வானோ?’ என்ற பயம் இருந்தது. ஆனால் அதை அவர்களிடம் சொல்லவில்லை.
சற்று யோசித்த பைரவி மஹிமாவின் அலைபேசியை அவளிடம் நீட்டி, “என்ன ஹெல்ப்-னு அப்புறமா சொல்றேன். எங்களுக்கு ஒரு கோரிக்கை இருக்குன்னு மட்டும் சொல்லு. எங்களைப் பத்தியும் எதும் சொல்லாத!” என்றாள்.
சரியென தலையாட்டிவிட்டு அவள் அலைபேசியை வாங்கியதும், “அப்போ நீ சொன்ன மாதிரி ஸ்பீக்கர்ல போட்டு பேசு” என்று பைரவி சொல்ல, ‘இன்னுமா நம்பிக்கை வரவில்லை?’ என்று மஹிமா ஒரு சிறு வலியுடன் பார்த்தாள்!
“யாரையும் நம்புற நிலைமையில நானில்லை” என்றாள் குரலில் ஒரு பெரிய வலியுடன் பைரவி!
‘இவளுக்கு என்னதான் பிரச்சனை?!’ என்ற ஓர் எண்ணத்துடனே மஹிமா கார்த்திக்கு அழைத்தாள்.
‘ரிங்’ போய் கொண்டே இருந்தது. கார்த்தி எடுக்கவே இல்லை. முழு அழைப்பு முடியவும், பதற்றத்துடன் இருந்த பைரவி முகத்தைப் பார்த்த மஹிமா, “இரு… திரும்ப கால் பண்றேன்” என்று சொல்லி மீண்டும் அழைத்தாள்.
இம்முறையும் அழைப்பை ஏற்கப்படவில்லை!
‘ப்ளீஸ் கார்த்தி கால் அட்டன் பண்ணு’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும் அழைத்தாள். ஒரு கட்டத்தில் அவன் அழைப்பை ஏற்கவும், “ஹலோ” என்று எதிர்பார்ப்போடு மஹிமா தொடங்கினாள்.
எதிர்பார்ப்பு!? நடந்த நிகழ்வுகளால் இருவரும் பேசியதையெல்லாம் ஒதுக்கி வைத்ததால், காயம் பற்றி கார்த்தியிடம் சொல்ல வேண்டும்! அதற்கு அவன் ஆறுதல் கூற வேண்டுமென்று அவள் மனம் ஏங்கியது!
ஆதலாலே இந்த எதிரிபார்ப்பு!!
அதேபோல் அவர்கள் மூவருக்கும்கூட, ‘இவனாவது உதவுவான்’ என்ற ஓர் சிறு எதிரிபார்ப்பு இருந்தது!!
ஆனால் மஹிமா ஆரம்பித்த அடுத்த நொடி, “போ-ன்னு சொல்லிட்டு எதுக்குத் திரும்ப திரும்ப ஃபோன் பண்ற? நிஜமா கிளையன்ட் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு. ஸோ கால் பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணாத” என அவள் பேச இடம் கொடுக்காமல் பேசி, கார்த்தி அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
கார்த்திகேயன் பேச்சால்… மஹிமாவிற்கு ஒருவிதத்தில் ஏமாற்றம் என்றால், மற்ற மூவருக்கும் வேறொரு வகையில் ஏமாற்றம் அடைந்திருந்தனர்!
******************************
Disclaimer :
Opinion differs! I respect each other’s opinion!!