Rose – 21

8cb0e22d23c984afae35af027ad086be-33c84a22

Rose – 21

அத்தியாயம் – 21

சிலநொடிகள் தன்னை மறந்து சிலையாகி நின்றவள், உடனே தலையை உதறி தன்னிலைக்கு மீண்டாள். யாதவ் சொல்வதை நம்பி மற்றொரு முறை ஏமாற மனமில்லாமல் கீழே சென்றாள். பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு நேராக சமையலறைக்குச் சென்றார்

மீனலோட்சனி சமையலறையில் வேலையில் ஈடுபட்டிருக்க, “குட் மார்னிங் ஆன்ட்டி!” அவரின் பேசும் ஆர்வத்தில் சொல்ல, அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவளிடம் காஃபி கப்பை நீட்டிய மீனா, “உனக்கு தேவையானது எல்லாமே நீ இருக்கும் இடத்திற்கே வரும். ப்ளீஸ் கண்முன்னாடி வந்து நிற்காதே! உன்னைப் பார்க்கும்போது, அன்னைக்கு நீ சொன்ன வார்த்தை தான் வருது, அத்தோடு அருவருப்பும்!” சிறிதும் சிந்திக்காமல் வார்த்தையைச் சிதறவிட, அவளின் முகம் களையிழந்து போனது.

ஒற்றைப் பெண்மணியாக இருந்து கடனை அடைத்து தொழிலை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தவர் என்றும், அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களை அவ்வப்போது சௌந்தர்யா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறாள் யாழினி.

தன்னவனின் குணம் தவறான போதும், அவரின் வளர்ப்பில் பிழைகான முடியவில்லை. சில நேரங்களில் அவரை நினைத்து பெருமையும் அடைந்திருக்கிறாள். தாய் பாசத்தையே பார்த்திராத யாழினி மீனாலோட்சனியை தாய்க்கு நிகரான இடத்தில் வைத்திருக்க, அவர் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் முள்ளென்று தைத்தது.

யாருடைய பாசத்தையும் இரவல் வாங்கிப் பழகததால், “சரிங்க அத்தை!” கலங்கிய விழிகளோடு காஃபி கப்பை கையில் எடுத்துகொண்டு, சமையலறை கதவின் வழியாக தோட்டத்திற்கு சென்றவள், அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

ஊட்டியின் பனிக்கு நடுவே சூரியன் முகம் காட்ட மேகத்திடம் போர்புரிய, மழை மேகங்கள் வானை வளைத்து முற்றுகையிட்டது. தன்னைச்சுற்றி இருந்த பசுமை அவளின் மன வெறுமைக்கு ஆறுதல் சொல்லாமல் போக, அவளையும் அறியாமல் விழிகள் கலங்கியது.

தன்னவள் தனியாக தோட்டத்தில் அமர்வத்தைக் கண்ட யாதவ், மற்றொரு வழியாக நேராக அங்கு வந்து சேர்ந்தான். அவனது ரோஜா தோட்டத்தில் மங்கை அவளும் மற்றொரு மலராக மாறியிருக்க, “நான் பதியம் போட்டு வளர்த்த தோட்டம் இது! எப்படி இருக்கு இனியா!” என்ற கேள்வியுடன் அவளருகே இயல்பாக அமர்ந்தான்.

“ம்ம்” என்றவள் திரும்பாமல் பதில் சொல்ல, “எனக்கு ரோஜா பூ ரொம்ப பிடிக்கும். தன்னை மற்றவர்களிடம் இருந்து தற்காலிகமாக காத்துக் கொள்ள பூக்களோடு பூத்தாலும், பூவின் அழகுடன் சேர்ந்த கம்பீரம் மலரை அரசியாக காட்டிடும்! கிட்டதட்ட உன்னை மாதிரியே!” அவளின் காதோரம் சொன்னான்.

இம்முறை அவளிடம் பதிலே இல்லாமல் போக, “இந்த குளிரில் காஃபி சீக்கிரம் ஆறிடும்” யாதவ் கப்பை எடுத்து நீட்ட, அதை வாங்காமல் அமர்ந்திருந்தாள். தனக்கு முதுகாட்டி அமர்ந்திருந்தவளின் மௌனம் வித்தியாசமாகத் தோன்றவே, அவளின் தோளைத் தொட்டு தன்பக்கம் திருப்பினான்.

அவளின் மீன் விழிகள் கண்ணீரில் மிதக்கக்கண்டு, “ஏய் என்னாச்சு! எதுக்காக இப்போ அழுகிற?” என்றவன் அவளின் தோளில் கைபோட்டான்.

அவனது ஸ்பரிசத்தில் தன்னிலைக்கு மீண்ட யாழினி, “ஒண்ணுமில்ல! அப்பா ஞாபகம் வந்திடுச்சு” உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்க போராடிய மனையாளை இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த நிமிடம் அவனிடம் ஆறுதல் தேட மனம் விளைய, தன்னையும் மறந்து அவன் மார்பில் முகம் புதைத்து குலுங்கி அழுதாள்.

அவளின் தலையை மெல்ல வருடி, “இங்கே பாரு! மாமா இங்கே நம்ம பக்கத்தில் தான் இருப்பாரு இனியா. நீ இப்படி கலங்கினால், அவரால் நிம்மதியாக இருக்க முடியுமா?!” அவளின் கண்ணீரைத் துடைத்துவிட, மெல்ல அழுகை மட்டுப்பட நிமிர்ந்து பார்த்தாள்.

தன்னவளின் நெற்றியில் பட்டும்படாமல் முத்தமிட்டு, “என் இனியா எவ்வளவு தைரியமானவள் தெரியுமா? அவனோட யாதவையே பார்வையால் மிரட்டிவிடுவாள். எனக்கு இந்த தொட்ட சிணுங்கியைப் பிடிக்கல” கேலி செய்ய, அவளின் நினைவலைகள் எங்கோ சென்று திரும்பியது.

அதுவரை இளகியிருந்த அவளின் மனம் இறுகிப்போக, “ஸாரி” அவனைவிட்டு விலகிய வேகத்தில் எழுந்து அறைக்குச் சென்றுவிட்டாள். தன்னை நெருங்கி வந்தவள், நொடியில் விலகியது அவனுக்கு குழப்பத்தைக் கொடுத்தது.

தன்னவளை சமாதானம் செய்துவிட்டு வீட்டினுள் நுழைந்த மகனிடம், “உன் பொண்டாட்டியை நான் எதுவும் சொல்லல. அவளாக ஏதாவது சொன்னால் என்னிடம் வந்து சண்டைக்கு நிற்காதே” என்றார்.

சம்மந்தமே இல்லாமல் பேசிய தாயைக் கேள்வியாக நோக்கி, “நீங்க அவளைக் காயப்படுத்தும் விதமாக பேசியிருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் அவளுக்கு கொடுத்த வலியே அதிகம், நீங்களும் என்னை மாதிரி புரியாமல் தவறு செய்யாதீங்க! ப்ளீஸ்” யாதவ் கூற, மீனலோட்சனி பாத்திரத்தின் மீது தன் கோபத்தைக் காட்டினார்.

அன்றிலிருந்து யாழினியின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிப் போனது. தினமும் காலை வழக்கம்போலவே ஃபேக்டரி செல்பவள், இரவான பிறகே வீடு திரும்புவாள்.

அவளுக்கு தேவையான உணவை மீனா சமைத்து வைக்க, “என் வேலையை நானே செய்துதான் பழக்கம்! எனக்காக நீங்க எதுவும் செய்ய வேண்டாம், என்னைக் கவனிச்சுக்க எனக்கு தெரியும் ஆன்ட்டி” தன் மனதில் தோன்றியதை மறைக்காமல் சொல்லிவிட்டாள்.

இரவு அந்த அறைக்குள் சென்றால், மீண்டும் மறுநாள் காலையில் தான் அவளைப் பார்க்க முடியும். யாதவ் எவ்வளவோ தூரம் அவளிடம் இயல்பாக பேச நினைத்து நெருங்கிச் சென்றாலும், அதற்கான வாய்ப்பையே தராமல் விலகுவதிலேயே குறியாக இருந்தாள் யாழினி.

யாதவ் காலையில் மருத்துவமனை செல்லும் முன்பே அவள் பேக்டரிக்கு சென்றுவிடுவாள். இரவு அவன் வீடு வரும்போது, அவளோ தனியறையில் முடங்கி விடுவாள். அவன் காலை எழும்போது பூட்டிய கதவு அவனைப் பார்த்து சிரிக்கும்.

இப்படியே இருவரின் கண்ணாமூச்சி ஆட்டமும் தொடர்ந்தது. தன் மகனின் மீது தவறு என்று தெரியாமல், யாழினி மீது இருந்த கோபத்தில் இருந்தார். அதனால் கணவன் – மனைவிக்கு இடையே இருக்கும் பிளவை உணராமல் போனார்.

இப்படியே நாட்கள் ரேக்கைக்கட்டிப் பறக்க, யாதவ் பொறுமை படிப்படியாக குறைந்தது. அவளின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த யாதவ், அன்று வழக்கத்திற்கு மாறாக முன்னாடியே வீடு திரும்பினான்.

“என்னடா இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்திருக்கிற?” – மீனா

“கல்யாணமான பிறகு அவளை வெளியே கூட்டிட்டே போகலம்மா. இன்னைக்கு கோவிலுக்கு போலாம்னு சீக்கிரம் வந்தேன்” – யாதவ் இரண்டிரண்டு படிகளாகத் தாவி அறைக்குச் சென்றான். வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, மீனலோட்சனி எட்டிப் பார்த்தார்.

அன்று ஒரு கிளைன்ட் மீட்டிங் முடித்துவிட்டு மாலை யாழினி முன்னதாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வீட்டினுள் நுழையும் போதே தலைவலி மண்டையைப் பிளக்க, கீழிருந்த அறையில் முகம் அலம்பிவிட்டு நேராக சமையலறைக்குச் சென்றாள்.

அவளது செல்போன் சிணுங்க திரையில் தெரிந்த பெயரைக் கண்டு முகம் மலர, “செல்லக்குட்டி! உன்னிடம் பேசாமல் மண்டை சூடாகிடுச்சு! அப்புறம் அமெரிக்கா எப்படி இருக்கு” ஆர்வமாக பேசியபடி காஃபி போட்டு எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டாள்.

பரஸ்பர நலவிசாரிப்பிற்கு பிறகு மிருதுளா இந்தியா வரப்போவதாக சொல்ல, “ஹே நிஜமாவா?! சூப்பர்! ஆமா எப்போ வர்றேன்னு சொல்லு, நானே வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக்கிறேன். இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். நமக்குள் சீக்ரெட்டாக இருக்கட்டும், உன் லவ்வருக்கு ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கலாம்” என்றாள் யாழினி.

தன்னவள் தோட்டத்தில் நின்று போன் பேசுவதைக் கவனித்தபடி யாதவ் பார்மல் உடையில் கீழே இறங்கி வர, கோவிலுக்குச் செல்ல தேவையான பூஜை சாமான்களை எடுத்து வைத்த மீனலோட்சனி “அவளோட மனசு அலைபாயும். இவளைக் கல்யாணம் கட்டாதேன்னு சொன்னேன், எங்கே என் பேச்சைக் கேட்டான்” தலையில் அடித்துக்கொண்டார்.

மிருதுளாவிடம் பேசிவிட்டு உள்ளே நுழைந்தவளின் காதில் அவர் பேசுவது காதில் விழவே, “நானாக உங்க மகனைக் கல்யாணம் செய்யறேன்னு ஒத்த காலில் நிற்கல. திருமணமே வேணாம் என்றவளை மணந்தவர் உங்க மகன். அதுக்கென்ன காரணம்னு யோசிங்க, சும்மா என்னிடம் குத்தம் கண்டுபிடிக்காதீங்க” சூடாக பதிலடி கொடுத்துவிட்டு, காஃபி கப்பை கழுவி வைத்தாள்.

அவளின் பேச்சு அவரின் கோபத்திற்கு தூபம் போட, “நான் பெத்ததுக்கு தான் புத்தி மழுங்கி போயிடுச்சுன்னு நினைக்கிறேன்” மீனா அவளின் கையில் பூஜை கூடையைக் கொடுக்க, அதை வாங்காமல் கேள்வியாக நோக்கினாள் சின்னவள்.

“உன்னை வெளியே கூட்டிட்டுப் போகணும்னு தான், சீக்கிரமே வந்து காத்திருக்கிறான். முதலில் போய் புடவையை மாத்திட்டு அவனோட கிளம்பு” மீனா கட்டளைப் பிறப்பிக்க, அவள் மெல்ல எட்டிப் பார்த்தாள்.

மாமியார் – மருமகள் சண்டையில் மூக்கை நுழைத்தால், நம் நிம்மதிக்கு வெட்டு வைத்துவிடுவார்கள் என நன்கு அறிந்தவன் யாதவ். அதுவரை இருவரின் சண்டையை ஆர்வமாக ஹாலில் அமர்ந்து பார்த்தவன், தன்னவளின் பார்வைக் கண்டு சட்டென்று திரும்பிக் கொண்டான்.

இருவரின் சண்டையைக் காதிலேயே வாங்காமல், டிவியில் நியூஸ் மும்பரமாகப் பார்ப்பதுபோல நடித்தான். அதைக் கவனித்துவிட்ட யாழினிக்கு சுள்ளென்று கோபம் தலைக்கேற, “உத்தமன் வேஷம் போட்டுதானே காரியத்தை சாதிக்கிறான்! இவனை அன்னைக்கே போலீசில் பிடிச்சுக் கொடுத்திருக்கணும்” முணுமுணுத்தபடி மாடிக்குச் சென்றாள்.

வீட்டிற்கு வந்ததும் மாமியாரிடம் வம்பு இழுத்துவிட்டு, இங்கே இருந்தால் சரிவராது என்பது மட்டும் நன்றாகவே புரிய, “இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், இந்த மாமியார் குணம் மட்டும் மாறவே மாறாது” தனக்குள் பேசியபடியே போய் புடவை மாற்றிவிட்டு வந்தாள்.

தன்னவளின் வரவை உணர்ந்து திரும்பிய யாதவின் விழிகள் இமைக்க மறந்தது. அவனது உடைக்கு ஏறார்போல ஸ்கை புளூ நிற காட்டன் சேலையில் நடந்து வந்தவளை அவன் அணுஅணுவாக ரசிக்க, சட்டென்று நிமிர்ந்து அவனை முறைத்தாள்.

அதுவரை ஆர்வமாக பார்த்த யாதவ் முகம் நொடியில் களையிழந்து போக, யாழினி விழிமூடி திறந்து தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள். தன் மகனின் பார்வையில் இருந்த ஆர்வமும், யாழினி கண்ணில் தெரிந்த எதிர்ப்பைக் கவனித்த மீனாவின் புருவங்கள் முடிச்சிட்டது.

யாதவ் கார் சாவியை எடுத்துகொண்டு முன்னே செல்ல, பூஜை கூடையைக் கையில் வாங்கிய யாழினி கணவனைப் பின்தொடர்ந்தாள். டிரைவர் சீட்டில் யாதவ் அமர, முன்பக்கம் கதவைத் திறந்து ஏறியமர்ந்தாள் யாழினி.

அவன் காரை சீரான வேகத்தில் செலுத்த, வெளிப்புறம் வேடிக்கைப் பார்த்தபடியே மெளனமாக வந்தாள். அவன் கோவில் முன்பு காரை நிறுத்தி இறங்க, அவனுடன் இணைந்து நடந்தாள்.

யாதவ் காரை கோவில் முன்பு நிறுத்த, அவள் கீழே இறங்கிக் கொண்டாள்.அமெரிக்கா கோவில்கள் பளிங்கு கற்களால் ஆனது. கோவிலில் தெய்வம் இருக்கும், அதில் உயிர்ப்பு என்பது துளியும் இருக்காது.

இந்திய கோவில்களில் ஒரு தெய்வீக தன்மை நிறைந்திருப்பதைப் போல உணர்ந்தாள் யாழினி. யாதவ் காரைப் பார்க் செய்துவிட்டு வர, அவனோடு இணைந்து நடந்தவளின் மனம் ஏனோ நிறைந்திருந்தது.

ஒவ்வொரு சந்நிதானமாக சென்று தெய்வத்தின் பெயரையும் அதன் சிறப்பையும் கணவன் சொல்ல, அவனைப் பின்பற்றி தானும் தெய்வத்தை வெளிப்பட்டாள். பிரகாரத்தை சுற்றிவிட்டு கோவில் பிரசாதம் வாங்கிகொண்டு மரத்தடியில் இருவரும் அமர, அவர்களின் மனம் நெகிழ்ந்து போனது.

யாழினி அங்கே வழிபடும் மக்களை ஆர்வமாகப் பார்க்க, யாதவ் கவனம் முழுவதும் தன்னவளின் மீதே நிலைக்க, “நம்ம திருமணம் முடிந்து முதல் முறையாக வெளியே வந்திருக்கிறோம். என் மனசு நிறைவாக இருக்கு, உனக்கு இனியா?” என்றான் கனிவான குரலில்.

அந்த குரல் அதுவரை இளகியிருந்த மனதை இறுகச் செய்தது. யாதவ் மூலமாக தான் அனுபவித்த வலி வேதனைகள் நினைவுவர, சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் யாழினி.

“மழையே காணாத வறண்ட பூமி மாதிரி என் மனசும் இறுகிப் போயிருக்கு. இங்கே வந்ததால் தலைவலி இல்ல, மத்தப்படி வேறேதும் மாற்றம் வரல!” வெறுப்புடன் வார்த்தையைச் சிதறவிட, அவளது அலட்சியமான பேச்சில் யாதவ் பொறுமைக் காற்றில் பறந்தது.

தான் செய்த தவறைத் திருத்திக் கொண்ட பிறகும், எதுக்காக தன்னைவிட்டு விலகி செல்கிறாள் என்று புரியாமல், “அமெரிக்காவில் இதே நான் செய்தபோது, அவ்வளவு சந்தோஷப்படுவாயே! இப்போ ஏன் இப்படி மாறிப்போயிட்ட?!” என்றான்.

“உங்க நடிப்பை நிஜமென்று நம்பி ஏமாந்தது ஒரு காலம். என் மனசில் காதல் இருந்துச்சு, உங்கமேல் அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. நீங்கதானே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படக்கூடாது என்ற பெரிய பாடத்தையே எனக்கு கத்து தந்தது” என்றவளின் வார்த்தைகள் அவனைத் தேள்போல கொட்டியது.

அவன் நினைவுகள் அந்த நாளுக்குச் சென்று திரும்ப, “இப்போ என்ன நடந்திடுச்சு?” சாதாரணமாகக் கேட்க, யாழினியின் உதடுகளில் கசந்த புன்னகைத் தோன்றி மறைந்தது.

“என் வாழ்க்கையில் நிறைய இழந்துட்டேன் யாதவ்! என்னைக்கும் என் இழப்பை உங்களால் ஈடு செய்ய முடியாது! என் காதலை மட்டுமா நீங்க கொன்னீங்க, உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள?!” அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை அவனை நோக்கி வீசிவிட்டு எழுந்து சென்றாள்.

அவளின் புதிரான பேச்சில் புருவங்கள் முடிச்சிட, ‘ஏன் இப்படி நிம்மதி இழந்து தவிக்கிறாள்’ காரணமே புரியாமல் விழித்தான்.

அவனைத் தூரமான நின்று பார்த்த யாழினியோ, “உங்களை அதிகமாக காதலிக்கிறேன், ஆனால் என்னால் உங்களை நெருங்கவும் முடியல, உங்களைவிட்டு விலகவும் முடியல” விழிகள் ஏனோ கலங்கியது.

‘நெஞ்சம் முழுக்க காதலை வச்சிருந்த என்னைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தாயே, நீ மட்டும் என்னோடு இருந்திருந்தால், நம்ம இன்னைக்கு சந்தோசமாக இருந்திருக்கலாமே!’ அவள் மனம் தவிக்க, யாதவ் அவளருகே வந்தான்.

இருவரும் கோவிலில் இருந்து வீடு வந்து சேர, வழக்கம்போலவே தன் அறைக்குச் சென்று கதவடைத்தாள். யாதவ் குழப்பத்துடன் படுக்கையில் அமர்ந்து, இருகரங்களில் முகம் புதைத்தவனின் மனம் நிம்மதியிழந்து தவித்தது.

Leave a Reply

error: Content is protected !!