Rose – 22

eiZ3L9R86145-ImResizer-cee2f08d

அத்தியாயம் – 22

கொஞ்ச நேரத்தில் சில்லென்று காற்று வீச, வானில் மின்னல் வெட்டியது. இடி முழுக்கம் காதைப் பிளக்க, சற்று நேரத்தில் சடசடவென்று மழை பொழிய துவங்கியது. யாதவ் வழக்கம்போல பால்கனிக்கு சென்று நின்று கொள்ள, யாரோ பாடும் பாடல் ஒலி காதருகே கேட்டது.

அவனது பால்கனிக்கு மிக அருகில் யாழினி அறையின் ஜன்னல் கதவுகள் திறந்திருக்க, யாதவ் மெல்ல எட்டிப் பார்த்தான். மழையை வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்த யாழினியின் நிழலுருவம் கண்ணில் பட்டு கருத்தில் பதிந்தது.

எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம்

பக்கம் வந்து தாலாட்டும்!

அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்

தொட்டுத் தொட்டு நீராட்டும்!

விழிகளில் கவிநயம் விரல்களில் அபிநயம்

கண்ணே நீ காட்டு!

விடிகிற வரையினில் மடியினில் உறங்கிடு

பாடல் நீ கேட்டு!” மழையும் சத்தம் மெல்ல குறைய, தன்னவள் பாடும் குரல் அவன் காதில் தெளிவாக விழுந்தது. அந்த பாடலில் இழையோடிய சோகம், யாதவ் மனதை வெகுவாக பாதித்தது.

தனியறையில் அவள் என்ன செய்கிறாள் என்று பலமுறை சிந்தித்தானே தவிர, ஒருநாள்கூட அதற்குள் சென்று பார்க்க முயன்றதில்லை. ஏற்கனவே அவளைக் காயப்படுத்தி அதனால் கற்ற பாடம், அவனைப் பொறுமையாக இருக்கும்படி எச்சரிக்கை செய்தது.

இன்று நடந்த நிகழ்வுகள் மனத்திரையில் படமாக ஓட, அந்த அறைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அதே சமயம் யாழினியின் அழுகுரல் காதில் விழுகவே, அவன் பொறுமை காற்றில் பறந்தது.

தன் அறைக்குள் சென்ற யாதவ், அவளின் அறைக்கதவு வழக்கத்திற்கு மாறாக திறந்து இருப்பதைக் கண்டு சிந்தனையில் புருவம் உயர்த்தினான். முதல் முறையாக அவளின் அனுமதி இல்லாமல் அறைக்குள் நுழைந்தான்.

சுவற்றிலிருந்த ஓவியத்தைக் கண்டு மலைத்து நின்றான். மரத்தின் கிளையில் பெரிய தொகை கொண்ட இரு மயில்கள் ஒன்றின் முகத்தினை மற்றொன்று பார்ப்பதுபோல வடிவமைக்கபட்டு இருக்க, வேகமாக அதன் அருகே சென்று பார்த்தான்.

களிமண் சுவரோவியம் என்பது புரியவே, அதைச் செய்ய மிகுந்த பொறுமை வேண்டும். அத்துடன் அவளுக்குள் இப்படியொரு திறமை இருப்பது அவன் அறியாத ஒன்று. தன்னுடன் இருந்தவரை யாழினி எந்தநேரமும் கலகலவென்று ஏதோவொரு விஷயத்தைப் பற்றி பேசுவாள்.

அவள் தந்தையின் இழப்பை ஈடுசெய்ய, அவளுக்கு தனிமை உணர வாய்ப்பே கொடுக்காமல் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். இந்தியா வரும்போது உண்டான பிளவு, இதோ இன்று இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

ஆனால் கண்முன் இருக்கும் சுவரோவியம் அவனுக்கு வேறு கதை சொன்னது. ஆம் தன் மனதின் இறுக்கத்தைக் குறைக்க வெளிநாடுகளில் பரவலாக பயன்படுத்தும் உக்திகளில் ஒன்று இந்த களிமண் சுவரோவியம்.

தனிமையை இரண்டு வைகையான மனிதர்கள் விரும்புவார்கள். ஒன்று தான் செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவினால், அதை வெற்றியாக மாற்றிக்கொள்ள சிலர் தனிமையை நாடுவது உண்டு.

அங்கிருக்கும் அமைதி அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிட்டு, அவர்களின் பாதையை மாற்றிவிடும். இந்த வகை தனிமை மனிதனுக்கு அவன் திறமை மற்றும் வலிமையை உணர்த்தும். அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டு வருவதும் உண்டு.

இன்று அதிகம் சாதித்த சாதனையாளரைக் கேளுங்கள், என்னை நானே தனிமைப்படுத்திய போதுதான் தவறுகளை உணர்ந்தேன், செல்ல வேண்டிய இலக்கை உணர்ந்தேன்னு சொல்வார்கள்

இரண்டாவது சில சூழ்நிலையின் காரணமாக காயம்பட்ட மனிதர்கள் மீண்டும் அந்த வலியை அனுபவிக்க தங்களால் முடியாது என்று தனிமைப்படுத்திக் கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களின் மீது தவறே இருக்காது ஆனாலும் வெறுத்து ஒதுக்குவதால் உண்டாகும் தனிமை.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், தனிமையை விரும்பாத நபர்களை சூழ்நிலை தனிமைப்படுத்திவிடும். இந்தவகை தனிமையில் அவர்களின் சிந்தனையும், செயலும் ஒருவிதமான இறுக்கமாகவே இருக்கும்.

வேண்டாத தனிமை சிறையில் அவர்களை சிறை வைப்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் மனநோயாக மாற்றிவிடும். அதை சிறுவயதில் இருந்தே உணர்ந்தவர்களை மீட்டெடுக்க, அவர்களுக்கு வழங்கப்படும் ட்ரீட்மென்ட்களில் இந்த களிமண் சுவரோவியமும் ஒன்று.

வீடு நிறைய ஆட்கள் நிறைந்திருக்கும் சமயம் தவிர்த்து, மற்ற நேரங்களில் அவர்களை தனிமையில் இருக்க நேரிடும். இந்த சுவரோவியம் தன்னைச் சுற்றி அழகான உலகம் இருப்பதுபோல ஓர் பிம்பத்தை அவர்களின் ஆழ்மனதில் விதைப்பதால், அவர்களும் தனிமையை உணராமல் சந்தோசமாகவே இருப்பார்கள்.

அத்துடன் அவர்களின் எண்ணவோட்டம் அறிய, அவர்கள் செய்யும் களிமண் சுவரோவியமே போதுமானது. சமீபத்தில் அதைப்பற்றிய ஆர்ட்டிகல் ஒன்றை படித்ததாக ராம்குமார் பகிர்ந்தது ஞாபகம் வர, ‘அந்தளவுக்கு தனிமையை உணர்கிறாளா? இல்லை மனோவியாதியா?’ என்ற சந்தேகம் மனதில் முளைவிட்டது.

சட்டென்று அறைக்குள் நுழைந்த யாதவைக் கண்டு திடுக்கிட்டு, “நீங்க இங்கே என்ன செய்யறீங்க?” என்றவளின் கையிலிருந்த பெயிண்டிங் மீது பார்வையைப் பதித்தான். ரோஜாப்பூக்கள் பூத்து குலுங்குவதுபோல களிமண்ணால் செய்யப்பட்ட புகைப்படம் பார்த்ததும் மனதின் சந்தேகம் அதிகரித்தது.

அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் பார்வையைச் சுழற்றினான். படுக்கையறையின் ஒருபக்க சுவற்றில் ஒற்றை ரோஜா மலர்ந்திருக்க கடிகாரத்தில் முள் ஐந்தைத் தொட அதை பார்த்தபடி பியானோவின் கீ போர்டில் காலை வைக்கு பூனைக் குட்டியின் பிம்பத்தை வரைந்திருந்தாள்.

அடுத்ததாக மரத்தின் கிளையை நோக்கி பறந்து வரும் கிளி, சிறு இலையை உதட்டில் கவ்விச் செல்லும் புறா, பட்டாம்பூச்சியில் வயலின் மற்றும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பூங்கொத்து என்று சுவர் முழுவதும் சின்ன சின்னதாக நிறைய ஓவியம் வரிசையாக இடம்பெற்றிருந்தது.

கடைசியாக அவள் நின்றிருந்த இடத்திற்கு சென்றது அவன் பார்வை. டேபிளில் வைக்கபட்டிருந்த பேனா ஸ்டேண்ட் முழுவதும் களிமண் ஓவியமே…

‘லவ்’ என்ற வார்த்தையை சுமக்கும் இதயத்தின் முன்பு ஒருவன் மண்டியிட்டவன் கையில் ரோஜாவுடன் காதலை வெளிபடுத்த அதை வாங்கும் பெண் என்று மரத்தில் செய்யப்பட்டு இருக்க, பக்கத்திலேயே இதயம் போன்ற வடிவமைப்பை உடைய பிளவர் வாஸில் சிவப்பு நிற ரோஜா பூவை நிரப்பி வைத்திருந்தாள்.

அவளுக்கு தனிமை பிடிக்கவில்லை என்பதை மட்டும் உணர்ந்தவனின் மூளை வேகமாக வேலை செய்ய, “யாதவ்” என்ற அழைப்புடன் அறைக்குள் நுழைந்தார் மீனலோட்சனி.

இரவு உணவிற்கு சாப்பிட அழைத்து மகனிடம் பதிலில்லை என்பதால், அவரே அங்கு வந்திருந்தார். யாழினி அறையில் இருந்த சுவரோவியம் கண்டு, “ஒவ்வொரு பெயிண்டிங் பார்க்கும் போது அப்படியே கண்ணைப் பறிக்குது! ஆமா இதெல்லாம் செய்தது யாரு?!” என்றார் மீனலோட்சனி.

தாயின் குரல்கேட்டு மனம் மெல்ல நடப்பிற்கு திரும்பிட, “எனக்கும் எதுவும் புரியலம்மா, யாழினியிடம் தான் கேட்கணும்” யாதவ் பார்வை அவளின் மீது அழுத்தத்துடன் படிந்து மீண்டது.

தன்னவனின் பார்வையில் இருந்த ஏதோவொன்று மனதைப் பாதிக்க, குளியலறைக்குள் சென்று கதவடைத்தாள். அவளது செயலில் வித்தியாசம் தெரிய, “இவ்வளவு தூரம் ஓவியம் வரையும் விஷயம், ஒரே ரூமில் இருக்கும் உனக்கு தெரியாதா?” மகனிடம் விசாரணையில் இறங்கினார் மீனலோட்சனி.

அந்த அறைக்குள் நுழைந்ததும் தன் மகன் சார்ந்த எந்த பொருளும் அங்கில்லை என்று கண்டுபிடித்துவிட்ட மீனா, யாதவ் முகத்தில் வந்துபோன உணர்வுகளையும் படிக்க தவறவில்லை.

பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம்கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லங்க அத்தை. இதையெல்லாம் வரையும் வரை ரூமிற்குள் வர வேண்டாம்னு சொன்னது நான்தான்” மொத்த பழியைத் தன்மீது போட்டுக் கொள்ள, மீனாலோட்சனி சந்தேகமாக மகனைப் பார்த்தார்.

அவன் திகைத்த பார்வையே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று காட்டிக் கொடுத்துவிட, “உங்களுக்குள் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது. ஆனால் விலகி நிற்பதால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது. இருவரும் உட்கார்ந்து பேசுங்க” என்ற மீனா அறையைவிட்டு வெளியேறினார்.

அவர் சென்றதை உறுதிசெய்து கொண்டு, “திடீர்னு வரக்காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?” அவனைக் கேள்வியாக நோக்கினாள்.

அவளின் பார்வையைத் துணிவுடன் எதிர்கொண்ட யாதவ், “உனக்கு ஏதாவது பிரச்சனையா இனியா…” அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, இரண்டடி பின்னே நகர்ந்தவளின் விழிகள் கலங்கியது.

“எனக்கு எந்த குறையும் இல்ல. என் அளவில் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன். நீங்க எதுக்காக இங்கே வந்தீங்க, அந்த விஷயத்தை மட்டும் சொல்லிட்டுக் கிளம்புங்க” தன்னுடைய தடுமாற்றத்தை மறைத்து, அவனிடம் இயல்பாகப் பேச முயன்றாள்.

அவளது கண்களில் தெரிந்த வெறுமையைக் கண்ட யாதவோ, “என்னிடம் எப்போது பொய் சொல்ல தொடங்கின இனியா?” அவனின் விழிகளை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல், சுவற்றில் சாய்ந்து விழிமூடி நின்றாள்.

கட்டிய கணவனின் உரிமையை உணராமல், “என் விஷயத்தில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இப்போ அறையைவிட்டு வெளியே போறீங்களா? இல்லையா?” விழி திறவாமல் அவனிடம் கேள்வியைத் தொடுத்தாள்.

“இந்த அறையைவிட்டு வெளியே போக மட்டும்தான் சொல்றீயா? இல்ல ஒரேயடியாக உலகத்தைவிட்டே போக சொல்றீயா?” காரணம் புரியாமல் கேள்வி கேட்க, சட்டென்று விழிதிறந்து அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

அவள் செய்து வைத்திருந்த பூ பெயிண்டிங்கை கையில் வாங்கிப் பார்த்த யாதவ், “பூவோட வாசனை காற்றுடன் கலந்து போகலாம், அதோட நிறம் என்றுமே மாறாது இனியா. அதுபோல தான் என் மனமும், குணமும். அதை நீயே சீக்கிரம் புரிஞ்சிக்குவே” அவன் தந்த விளக்கம் அவளுக்கு கோபத்தை வரவழைத்தது.

இரண்டே எட்டில் அவனை நெருங்கி சட்டையைக் கொத்தாகப் பிடித்து, “அப்புறம் எதுக்குடா என்னை தவிக்க விட்டுட்டு இந்தியா வந்தே? நீதான் என் உலகம்னு இருந்தேனே… நான் வெறுக்கும் தனிமை சூழலில் வாழ வச்சிட்ட இல்ல…” இரண்டு கைகளாலும் அவனை மார்பில் குத்த, அவள் தரும் வலியைத் தாங்கிக்கொண்டு சிலையாகி நின்றான்.

“ஷ்! இனியா ப்ளீஸ் அழுகாதே!” அவளை இழுத்தணைத்துக் கொள்ள,

“உனக்கு தண்டனை தந்தால், அது எனக்குதான் வலிக்குது கிருஷ்ணா. நீ என்னோடு இருந்த ஒவ்வொரு நொடியும், என் மனசில் பொக்கிஷமாக இருக்கு. அதைவிட நீ கொடுத்த வலியை என்னால் தாங்க முடியல”அவன் மார்பில் புதைந்து விம்மி அழுதாள்.

அவளைப் பேசவிட்டு யாதவ் அமைதியாக இருக்க, “உன்னை எவ்வளவு நேசிச்சேன், ஆனால் என் மனதை நீ சல்லி சல்லியாக நொறுக்கிட்ட, அன்னைக்கு நீ வந்தபிறகு…” அன்றைய நாளில் நடந்ததைச் சொல்லல வந்த யாழினி, திடீரென்று மயங்கிச் சரிந்தாள்.

தன்னவளைக் கையில் ஏந்திச் சென்று படுக்கையில் படுக்க வைத்த யாதவ் உயிரே அவன் கையில் இல்லை. அது சாதாரண மயக்கம் என்பதை மூளை சொல்ல, அவன் மனமோ அதை ஏற்க மறுத்தது.

அவளின் கரம்பிடித்து பால்ஸ் பார்த்த யாதவ், “இனியா கண்ணைத் திறந்து பாரு” என்றபடி அவளின் கன்னத்தை தட்டினான். அவன் இதயத்துடிப்பு நின்று போனதுபோல ஒரு உணர்வு எழுந்திட, பக்கத்தில் இருந்த தண்ணீரை அவளின் முகத்தில் தெளித்தான்.

மெல்ல மயக்கம் தெளிந்து விழிதிறந்து பார்த்த யாழினியிடம், “கொஞ்ச நேரத்தில் என்னை பதற வச்சிட்டீயே!” என்றான்.

தன்னால் அவள் மனம் வெகுவாகக் காயப்பட்டு இருப்பதை உணர்ந்த யாதவ், “என்னோட கேள்விக்கு பதில் சொல்லு. இந்த களிமண் சுவரோவியம் எப்போது இருந்து செய்யற?!” என்றான்.

அவனது விழிகளை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல், “பதினைந்து வயதில் இருந்திருந்து…” அவளின் கையைப்பிடித்து தன் கரங்களுக்குள் வைத்தான்.

அவனது ஸ்பரிசம் உணர்ந்து அவள் நிமிர்ந்து பார்க்க, “அன்னைக்கு நான் அங்கிருந்து கிளம்பிய பிறகு என்ன நடந்தது?” யாதவ் நேரடியாக யாழினியிடம் கேட்டான்.

தன்னவன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிப் போன யாழினி, “அங்கே எதுவும் நடக்கல. நீ இப்போ என் ரூம் விட்டு வெளியே போ… நான் கொஞ்ச நேரம் நிம்மதியாக தூங்கனும்” மீண்டும் அவள் பழையபடி இறுகிய குரலில் கூற, அவளது விழிகள் படபடவென்று அடித்துக் கொண்டது.

அவள் உண்மையை மறைக்க போராடுவதை உணர்ந்த யாதவ், “உன்னையே சுற்றி வருகிறேனே! என் தவறை மன்னித்து ஏற்றுகொள்ள மாட்டாயா?” என்ற கேள்வியுடன் அவளைத் தீர்க்கமாக நோக்கினான்.

எந்தவிதமான சலனமும் இல்லாமல் அவனை ஏறிட்ட யாழினி, “உங்களை நான் மன்னிக்கணுமா? அதனால் நான் இழந்த எல்லாமே கிடைத்துவிடுமா?” என்றவளின் விழியில் அடிப்பட்ட வலி அப்பட்டமாக வெளிப்பட்டது.

இதுநாள்வரை நெஞ்சுக்குள் எரியும் நெருப்பை அணைக்க முடியாமல், நடந்ததை மறைக்க முடியாமல் மனம் தவிக்கின்ற தவிப்பு அவள் மட்டுமே அறிந்தது.

அவளது சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “இன்னும் உன் கோபம் தீரலயா இனியா?!” நிதானமாகக் கேட்க, அவளின் பொறுமைக் காற்றில் பறந்தது.

“கற்பு என்பதை இருபாலினரின் பொதுவில் வைப்போம் உத்தமன் மாதிரி கிளாஸ் எடுத்தீங்களே, உள்ளத்தில் காதலே இல்லாமல், உடலோடு உறவாடுவதற்கு இந்த ஊரில் என்ன பெயர் தெரியுமா?” முகம் சுழிக்க, அவள் சொல்லாமல் விட்ட வார்த்தையின் அர்த்தம் புரிந்து தன்னிலை மறந்த யாதவ் தன்னையும் அறியாமல் அவளைக் கைநீட்டி அறைந்தான்.

யாழினி கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க, விழிகளிரண்டும் சிவக்க ருத்திரமூர்த்தியாக நின்றிருந்தான் யாதவ். அவள் மனதில் பொறுக்கியாக மட்டுமே பதிந்து இருக்கிறோம் என்ற கசப்பான உண்மையைப் புரிந்துகொண்டான்.

அவளை நிதானமாக ஏறிட்ட யாதவ், “காதல் இல்லாத இடத்தில் காமத்திற்கு இடமில்ல, உன்னை உண்மையாகவே காதலிச்சேன். அதை நான் உணர எடுத்துகிட்ட டைம் தான், என்னை குற்றவாளியாக காட்டுது!” என்றவன் வலியுடன் கூற, யாழினி அவனைத் திகைப்புடன் ஏறிட்டாள்.

அந்த காரிகையின் காந்த ஈர்ப்பு விழிகளுக்குள் தன்னைத் தொலைத்த யாதவ், “இந்த விழிகள் தான், என் காதலின் முகவரி. இதனால் எத்தனையோ இரவு தூக்கத்தை இழந்து தவிச்சிருக்கேன். எந்த பெண்ணும் தட்டாத என் இதயக்கதவைத் திறந்தவள் நீ! என் கொள்கை கோட்பாடு தவறாக இருந்தாலும், நான் தேடி வந்தது உன்னை மட்டும்தான்!” தன் வார்த்தைகளுக்கு வடிவம் தந்து, உள்ளத்தின் கதவைத் திறந்தான்.

“உன்னோட பாயிண்ட் ஆப் வியூவில் நான் பொறுக்கியாக தெரிந்தால், அதுக்கு நான் பொறுப்பில்ல. என் உடல் மற்றும் உள்ளத்தின் தேவை நீயாக மட்டுமே இருந்தாய்…” அவனது கண்களில் தெரிந்த காதல் அவளைத் திகைப்பில் ஆழ்த்தியது.

யாதவ் கோபத்துடன் அவளது அறையைவிட்டு வெளியேற, யாழினி அதிர்வுடன் சிலையாகி அமர்ந்திருந்தாள். இருவரின் நினைவலைகளும் பின்னோக்கி நகர்ந்தது…