Rose – 25

download (78)-5b097536

Rose – 25

அத்தியாயம் – 25

நியூ யார்க் நகரில் காலை பத்துமணியளவில் தொடங்கிய இருவரின் பயணமும், மாலை நான்கு மணியளவில் ஸ்டேட் பார்க் அருகில் இருக்கும் ஹோட்டலில் முன்பு கொண்டுபோய் நிறுத்தினான். இதற்கிடையே அனைத்து உணவும் வாங்கி வைக்கபட்டிருக்க, அவனுடன் ஏதேதோ பேசியபடியே வந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்ற யாழினியைப் பார்த்து யாதவ் தனக்குள் சிரித்தான். அவன் காரை நிறுத்திவிட்டு, “யாழினி” அவளின் தோள்தட்டி அழைக்க, மெல்ல உறக்கம் கலைந்து கண்விழித்து சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றினாள்.

தாங்கள் வந்திருக்கும் இடம் எங்கே என்று சுற்றிலும் பார்க்க, “வா ரூமில் ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு போய் சாப்பிடலாம்” என்றான்.

இருவரும் காரைவிட்டு கீழே இறங்க, அவர்களை வரவேற்க ரவீந்தரும், மிருதுளாவும் ஹோட்டலின் வாசலில் காத்திருக்க, “அப்பா” என்றாள் ஆனந்த அதிர்வுடன்.

“ஹலோ மேடம் நானும் இங்கே தான் இருக்கேன்!” மிருதுளா கிண்டலுடன் கூற, தன் தோழியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் யாழினி.

தன்னுடைய காரின் கதவைத் திறந்த யாதவ், “இந்த உன்னோட திங்க்ஸ் எல்லாமே இதில் இருக்கு. சீக்கிரம் அந்த புடவையைக் கட்டிட்டு வா” காதோரம் ரகசியம் சொல்ல, யாழினி விழிகள் படபடவென்று அடித்துக் கொண்டது.

“ஆமா நம்ம இருவரும் இங்கே வரும் விஷயம் இவங்களுக்கு எப்படி தெரியும்?” அவள் சந்தேகமாக யாதவைப் பார்க்க, அவனோ பிறகு சொல்வதாக சைகை செய்தான்.

அங்கிருந்த ஹோட்டலில் இரண்டு ரூம் புக் செய்யப்பட்டிருந்தது. யாழினி தனிமையாக உணராமல் இருக்க ரவீந்தர் மற்றும் மிருதுளாவை முன்னதாகவே வரச்சொல்லிவிட்டு, யாதவ் தாமதமாக வந்து சேர்ந்தான்.

ரவீந்தர் – யாதவ் ஒரு அறையிலும், யாழினி – மிருதுளா ஒரு அறையிலும் தங்கிக் கொண்டனர். தங்களின் அறைக்குள் நுழைந்த யாழினி, “நீயும், அப்பாவும் இங்கே எப்படி வந்தீங்க?” தன் சந்தேகத்தைக் கேட்டு வைக்க, மிருதுளா படுக்கையில் உட்கார்ந்து கொண்டு மர்மமாக சிரித்தாள்.

அதற்கான காரணம் என்னவென்று புரியாமல் யாழினி விழிக்க, “ஏன் நாங்க வந்தது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கா?” மிருதுளாவின் கேள்வியில் உடனே மறுப்பாகத் தலையசைத்தாள்.

“திடீரென்று உங்களைப் பார்த்த ஷாக்கில் தான் அப்படி கேட்டேன் மிரு. இன்னும் சொல்ல போனால், அப்பாவும் – நீயும் இங்கே வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம் தான்” என்றவள் களைப்பு தீர குளித்து உடைமாற்றிவிட்டு வந்தாள்.

யாதவ் எடுத்து தந்த புடவையைக் காட்டி, “இந்த சேலையை எனக்கு கிப்ட்டாக தந்தாரு மிரு! எனக்கு இந்த கலர் எப்படி இருக்கும்?” அபிப்பிராயம் கேட்டாள்.

இந்த சேலைக்கு ஏற்றார்போல ரெடிமேட் பிளவுஸ் ஒன்றை எடுத்து வந்திருந்த மிருதுளா, “இந்த சந்தேகத்தை இப்போதே தீர்த்துவிடலாம். இந்த பிளவுஸ் போட்டு, சேலையைக் கட்டு!” அவளின் பதிலை எதிர்பார்க்காமல் குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.

அவள் சொன்னதைகேட்டு அதிர்ந்த யாழினி, “அதெப்படி முடியும்? எனக்கு புடவைக் கட்டத் தெரியாதுன்னு உனக்கு தெரியாதா? அதுவும் இங்கே இந்த நேரத்தில் சரிவராதுடி” என்று அலறினாள்.

பாத்ரூம் உள்ளே நின்று வாய்விட்டுச் சிரித்தவளோ, “நான் இருக்க பயமேன்” என்றபடி வெளியே வந்து, அவளுக்கு சேலையைக் கட்டிவிட தொடங்கினாள்.

அவளது ஹேரை ஃப்ரீயாகவிட்டு அளவான ஒப்பனை செய்து, “நீ எவ்வளவு அழகாக இருக்கிற தெரியுமா?” கண்ணாடி முன் அவளை நிறுத்தினாள்.

தன்னைப் பார்த்து இமைக்க மறந்து நின்ற யாழினியின் தோளில் சாய்ந்து, “வானத்து தேவதையே கீழிறங்கி வந்த மாதிரி இருக்கு! நிஜமாவே அண்ணா ரசனைக்காரர்தான். அறியாத வயதில் நீ வைத்த அன்பு, கைநழுவிப் போகாமல் உன்னிடமே வந்திருக்கிறது யாழி! நீ ரொம்ப லக்கி!” என்றாள் மிருதுளா.

தன்னிலைக்கு மீண்ட யாழினி, “தேங்க்ஸ்! ஆனால் அப்பாவிடம் விஷயத்தை எப்படி சொல்ல போறேன்னு தெரியல. அதை நினைச்சால் தான் கொஞ்சம் பயமாக இருக்கு” திணறலோடு கூறிய தோழியைப் பார்த்து கண்சிமிட்டினாள்.

“ரவீந்தர் அப்பா வாழ்வதே உனக்காகத் தான், சோ பயப்படாமல் விஷயத்தை சொல்லு. இந்த விஷயத்தை யாதவ் அண்ணா பேசினால், அப்பா உடனே சம்மதிக்க வாய்ப்பிருக்கு! சோ இந்த நொடியை என்ஜாய் பண்ணு!” மிருதுளா கிண்டலாகக் கூறவே, யாழினிக்கும் அதுவே சரியென்று தோன்றியது.

வழக்கத்திற்கு மாறாக ரெட் கலர் சர்ட் அண்ட் சாண்டில் கலர் பேண்ட் அணிந்து எதிரே வந்த யாதவைப் பார்த்து, யாழினியின் விழிகள் வியப்பில் விரிந்தது. தன்னவளைப் புடவையில் பார்த்த சந்தோசத்தில், பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலைக் சேர்த்து அவளைப் பார்த்து, “சூப்பர்” என்றான் யாதவ்.

அவனது பாராட்டில் முகம் வெட்கத்தில் சிவக்க, யாழினியின் விழிகள் தரையை நோக்கியது. மிருதுளா கண்டும் காணாமல் சிரித்துக் கொள்ள, ரவீந்தருக்கு தன் மகளின் வளர்ச்சியைக் கண்டு வியப்பு கூடிப்போக, “எனக்கு இந்த சேலை எப்படி இருக்கு?” என்றாள் யாழினி.

“என் மகளுக்கு என்ன குறை? உங்க அம்மா மாதிரியே அழகாக இருக்கிறம்மா” தன் மகளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அவளை மையலோடு நோக்கினான் யாதவ்.

“சரி வாங்க நேரமாகுது! எல்லோரும் சாப்பிட்டுவிட்டு அருவியைப் பார்க்க போலாம்” என்று கூற, பக்கத்தில் இருக்க ஹோட்டலுக்கு நால்வரும் சென்றனர். அவர்கள் உணவை முடித்துக்கொண்டு நயாகரா நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க தொடங்கினர்.

வானம் மெல்ல இருள் போர்வைப் போர்த்திக் கொள்ள, பொதி மேகங்கள் கூட்டமாக நகர்ந்து சென்றது. நட்சத்திரங்களின் நடுவே நிலவு அழகாக முகம் காட்டியது.ஈரி ஏரியிலிருந்து (Lake Eerie) வழிந்தோடும் நீரே நயாகரா நதியாக பாய்ந்து பபலோ (Buffalo) என்ற இடத்தில் நயாகரா நீர் வீழ்ச்சியாக (Niagara Falls) அமெரிக்கா மற்றும் கனடா என்ற இரு பெரிய நாடுகளுக்கு இடையில் கொட்டுகிறது.

நதியின் நீர் வெள்ளம்போல பெருகியோடிச் சென்று கீழே விழுந்தது. அதற்கு எதிர்முனையில் இருந்து கலர் பிளாஷ் லைட்கள் அடித்து, வெள்ளை நிற நதியின் நிறம் நொடிக்கு நொடி நிறம் மாறும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

அதுமட்டும் இன்றி கனடா பகுதியில் இருந்து வானவேடிக்கை அந்த இடத்தைக் கோலாகலமாக மாற்ற, “நானும், மிருவும் இங்கே நிறைய முறை வர ட்ரை பண்ணிருக்கோம். பட் எங்களுக்கு அந்த வாய்ப்பே கிடைக்கல யாதவ். இன்னைக்கு நீங்க இங்கே கூட்டிட்டு வருவீங்கன்னு நினைக்கவே இல்ல” யாழினி புன்னகையுடன் கூற, தன்னவளின் கரங்களோடு தன் கரம் கோர்த்து நடந்தான்.

இரவு நேரத்தில் நயாகரா அருவின் அழகு அதிகரிக்க, கடல்போல ஓடும் நதி கீழே விழும் சத்தம் மனதிற்கு பரவசம் தந்தது. அந்த அழகை யாழினி அணுஅணுவாக ரசிக்க, தன்னவளின் மீதிருந்து பார்வையை அகற்ற முடியாமல் தவித்தான் யாதவ்.

அவளைத் தன்பக்கம் திருப்பிய யாதவ், தன் கையில் வைத்திருந்த ஹார்ட் வடிவம் உடைய தங்க லாக்கெட்டை யாரின் அனுமதியும் கேளாமல் அவளின் கழுத்தில் அணிவித்தான். தன்னவனிடம் இந்த செயலை எதிர்பார்க்காத யாழினி அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றாள்.

“உனக்காக ஸ்பெஷலாக வாங்கியது” அவன் குறும்புடன் கண்சிமிட்டிச் சிரிக்க, யாழினி அதிர்ச்சியுடன் ரவீந்தரைப் பார்த்தாள். அவர் யாரிடமோ போனில் பேச, மிருதுளா வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி சற்று தள்ளி நின்று நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தாள்.

தன்னவளின் பார்வை சென்ற திசையைக் கவனித்த யாதவ், “அவங்க யாரும் பார்க்கல. சும்மா பதறாமல் லாக்கெட்டைத் திறந்து பாரு” அவளின் காதோரம் கூற, அவன் மீசை முடியின் உராய்வில், அவளின் மேனி சிலிர்த்து அடங்கியது.

யாழினி ஆர்வத்துடன் ஹார்ட் செப் உடைய லாக்கேட்டைத் திறக்க, அது நித்தியக்கல்யாணி பூவைப்போல அழகாக விரிந்தது. வெவ்வேறு இடங்களில் எடுத்த புகைப்படம் அதில் இடம்பெற்று இருக்க, “ரொம்ப அழகாக இருக்கிறது கிருஷ்ணா! தேங்க்ஸ் ஃபார் தி ஸ்பெசல் கிப்ட்” என்றாள்.

“இந்த ஸ்பெசல் தருணம் நம்ம வாழ்க்கையில் எப்போதும் நினைவில் இருக்கணும்” என்ற யாழினி தன்னுடைய செல்போனை மிருதுளாவிடம் தந்து ஒரு புகைப்படம் எடுக்க சொன்னாள்.

யாதவ் இயல்பாக தன்னவளின் தோளில் கைபோட்டு நிற்க, உரிமையுடன் அவன் தோள் சாய்ந்தாள் யாழினி. இருவரின் ஜோடிப் பொருத்தமும் மிருதுளாவைத் திகைப்பில் ஆழ்த்திட, அந்த தருணத்தை செல்போனில் புகைப்படமாக எடுத்தாள்.

அதற்குள் ரவீந்தர் அருகே வருவதைக் கவனித்த மிருதுளா, “அப்பா வாராரு அண்ணா, உங்க ரோமான்சை கொஞ்சம் அப்புறமாக வச்சுக்கோங்க” என்று சொல்லி யாழினியின் அருகே வந்து நிற்க, யாதவ் பின்னந்தலையை வருடிவிட்டு அழகாக வெட்கப்பட்டான். அதையும் தன்னுடைய செல்போனில் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டாள் யாழினி.

தன் தோழியின் மனம் உணர்ந்ததால், மிருதுளாவும் அவனைப் பற்றி அதிகமாக விசாரிக்கவில்லை. அவனது செயலில் வெளிப்பட்ட அன்பே, அவளுக்கு நம்பிக்கையைத் தந்தது. நால்வரும் அன்றிரவு ஹோட்டல் ரூமில் தங்கினர். மறுநாள் மீண்டும் நயாகராவில் இருக்கும் மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க சென்றனர்.

நால்வருக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டை யாதவ் வாங்கி வரவே, நீர்வீழ்ச்சியின் கீழே அமைந்திருக்கும் படகுத்துறைக்குச் செல்ல லிப்டை பயன்படுத்தினர். படகு கிளம்புவதற்கு தயாராக இருக்க, நால்வரும் கோர்ட் அணிந்து கொண்டு படகில் ஏறிக் கொண்டனர். நீர்வீழ்ச்சியை நோக்கி பயணம் ஆரம்பமானது!

நயாகரா நீர்வீழ்ச்சி மூன்று பகுதிக்காக இருக்கும். முதல் இரண்டு அருவியான ப்ரைடல் வேயில் அருவி (Bridal Veli Falls) மற்றும் அமெரிக்கன் அருவி (American Falls) அமெரிக்காவின் எல்லையிலும், ஒரு பகுதி குதிரை லாட அருவி (Horseshoe) கனடாவின் எல்லையிலும் அமைந்துள்ளது. கனடா பகுதியில் இருக்கும் அருவிக்கு செல்ல அனுமதி இல்லை என்பதால், முதல் இரண்டு அருவிகளை நோக்கி படகு நகர்ந்தது.

வானில் இருந்து நீர் அருவியாக ஆர்பரித்துக் கொட்டியது. அதிலிருந்து எழுந்து செல்லும் காற்று மேகத்துடன் கைகோர்க்கும் அற்புதமான காட்சியைக் கண்டு அனைவரும் வியக்க, நீர்த்துளிகள் காற்றில் கலந்து பூந்தூரலாய் உடலை நனைத்தது.

இரண்டு அருவின் அருகில் செல்லும்போது, அந்த பிரம்மாண்டமான காட்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. நீர் ஆகாயத்தில் இருந்து அருவியாக மாறி கொடுக்கிறதோ என்ற எண்ணத்தை மனதினுள் விதைத்துச் சென்றது.

அத்துடன் வில்லென்று வளைந்த வானவில் சில நிமிடங்கள் தோன்றி மறைய, யாழினி அவசரமாக அதை புகைப்படம் எடுத்தாள். படகு மீண்டும் கரையை நோக்கிச் செல்ல, “ப்ளீஸ் கிருஷ்ணா இன்னொரு முறை போலாம்” குழந்தையாக அடம்பிடித்த யாழினியை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றானது.

அன்று மதியம்அங்கிருந்த உணவகத்தில் உணவை முடித்துவிட்டு, கேவ் ஆப் விண்ட்ஸ் என்ற இடத்திற்கு சென்றனர். மேலிருந்து 150 அடி கீழே லிப்ட்டில் சென்றால், ஒரு கிளை அருவியில் சென்று குளிக்க முடியும். அளவில் சிறிது என்று மற்றவர்கள் சொன்னாலும், அந்த அருவி அருகே செல்லும் போது பெரிதாக காட்சியளிக்கும்.

அந்த அருவியின் அருகே செல்ல படிகள் அமைக்கப்பட்டிருக்க, நால்வரும் மெல்ல பேசியபடி மேலே சென்றனர். யாதவ் இறுக்கமாக பற்றிய கரத்தைக் கடைசிவரை பிரிக்காமல் இருக்க, “ஐயோ எவ்வளவு அழகாக இருக்கு! இத்தனை வருஷம் இதே ஊரில் இருக்கேன்னு பேரு, ஆனால் நீங்க வந்து சுத்திக் காட்டுபடி ஆகிடுச்சு” என்றான்.

அவன் சத்தமின்றி அவளது கன்னத்தில் முத்தம் பதிக்க, “ஐயோ யாரவது பார்க்க போறாங்க கிருஷ்ணா. இன்னும் அப்பாவிற்கு நம்ம விஷயம் தெரியாது, அந்த பயத்திலேயே இருக்கேன். என் பயம் புரியாமல் விளையாடிடு இருக்கீங்க” சிணுங்களோடு அருவியின் அழகை ரசித்தாள்.

மலை முகட்டில் இருந்து சலசலவென்று சத்தமாக ஓடும் அருவியை அருகில் பார்த்த யாழினியின் முகம் மலர, “யாதவ் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்னு சொன்னால், அது இது மட்டும்தான். உங்க பக்கத்தில் தான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன். ஐ லவ் யூ கிருஷ்ணா, ஃலைப் லாங் உன் பக்கத்திலேயே இருக்கும் வரத்தை எனக்கு மட்டும் தாடா” அவனின் தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சினாள்.

மெல்ல தண்ணீரை தொட்டு குழந்தைபோல ஆர்பரித்தவளின் அழகை ரசித்தபடி இருந்தவனின் காதில் அவள் கடைசியாக சொன்ன வாக்கியம் விழுகவே, “உன்னை என்னைக்கும் பிரிய மாட்டேன் இனியா, உன் பக்கத்தில் கடைசிவரை இருக்கேன் போதுமா” என்று சொல்ல அவளின் சந்தோசம் இரட்டிப்பானது.

இருவரும் அங்கே ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். யாதவ் – யாழினி நெருக்கத்தைக் கவனித்த ரவீந்தர், திருமணம் பற்றி தெளிவாக பேசிவிடும் முடிவெடுத்தார். நால்வரும் ஹோட்டல் ரூமை காலி செய்துவிட்டு கிளம்பும் நேரத்தில், மிருதுளாவிற்கு அவளின் பெற்றோரிடம் இருந்து போன் வந்தது.

அதை எடுத்து பேசியவாளோ, “நீங்க மூன்று பெரும் கிளம்புங்க, வீட்டில் வெக்கேஷன் டூர் ப்ளான் பண்ணிருக்காங்க. அதை முடிச்சிட்டு வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்” என்றாள்.

 “ஏய் மறுபடியும் எப்போ இங்கே வருவே?” யாழினி ஆர்வமாக கேட்க,

“அப்படியே ஆபீஸில் ஒரு முக்கியமான வொர்க் விஷயமாக ஜெர்மனி போயிட்டு வர எப்படியும் நான்கு மாசம் பக்கம் ஆகிடும்” மிருதுளா அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்ப, மற்ற மூவரும் காரில் மறுபடியும் வீடு வந்து சேர்ந்தனர்.

அன்றிரவு தாமதம் ஆன காரணத்தால், “யாதவ் நீ இங்கேயே ரெஸ்ட் எடுத்துக்கோ, நாளைக்கு உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று சொல்லி, அவனை தங்களுடன் தங்க வைத்தார் ரவீந்தர்.

யாழினி தூக்க கலக்கத்திலேயே தன் அறைக்குச் சென்றுவிட, யாதவை நடுராத்திரியில் அனுப்ப மனம் வரவில்லை. அதனால் அவனையும் தங்களுடன் தங்க சொன்ன ரவீந்தர், “உன்னிடம் நிறைய பேச வேண்டும் யாதவ், இன்னைக்கு நீ களைப்பாக இருக்கிற, நாளைக்கு பேசலாம். குட் நைட்” என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்றார்.

அன்று மட்டும் ரவீந்தர் பேசியிருந்தால், இன்று இருவரும் இரு கரைபோல பிரிந்து நிற்க வேண்டிய அவசியம் வந்திருக்காதோ?! விதியின் கைகளில் நாம் அனைவரும் பொம்மைகள் தானோ?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!