Rose – 24

120813776_852117095549460_2702446625258828493_o-366f5bfb

Rose – 24

அத்தியாயம் – 24

மாலை நேரமும், மஞ்சள் பூசிய வானமும், பச்சைப்பசேல் என்று காட்சி தந்த மரங்களைப் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை. அத்துடன் சின்னஞ்சிறு மழலைகள் தொடங்கி, முதியவர்கள் வரை பரபரப்புடன் நடந்து செல்லும் காட்சி கண்டு உதடுகளில் புன்னகை அரும்பியது.

அதுவும் ஒரு காதல் ஜோடி ஆளுக்கொரு சைக்கிளில் ஒருவரையொருவர் முந்தி செல்லும் போது அவர்களின் முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளைக் கண்டு சிரித்தவள், “சைக்கிளில் போவதே தனி அனுபவம். அதுவும் ஒருவரையோருவர் வேண்டுமென்றே முந்திச்செல்ல, பின்தங்கி நிற்கன்னு எவ்வளவு அழகான காட்சி” என்றாள் ரசனையுடன்.

அந்த காட்சியை மனதினுள் ரசித்திருந்த யாதவ், “நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லிட்டீங்க யாழினி” என்றான் புன்முறுவலுடன்.

அதற்குள் ஆர்டர் செய்த காஃபி வந்துவிட, இருவரும் அதை அருந்த தொடங்கினர். இருவருக்கும் இடையில் நிலவிய மௌனம் அழகாக இருந்தது. மற்ற பெண்களைப்போல அதிகமாக பேசவும் இல்லை. அதற்காக பேசாமல் இருக்கவில்லை.

அளவாக பேசி அவனின் இதயத்தில் இடம் பிடித்தால் யாழினி. மொத்தத்தில் அவனின் இதயம் ரகசியமாக அவளிடம் களவுபோனது. ஏற்கனவே யாதவ் பற்றி அவளுக்கு தெரியும். அதனால்தான் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவனுடன் காஃபி ஷாப் வந்தாள்.

மற்ற ஆண்களைப்போல் திங்கும் பார்வை இல்லாமல், அவளுடன் இயல்பாக பழகிய அவன் குணம் அவளை வெகுவாகக் கவர்ந்தது. இருவரின் செல்போன் நபரும் பகிரப்பட, “பாய்” சொல்லி கிளம்ப, இந்த காட்சியை இருவிழிகள் நோக்கியது.

அன்றிரவு வீட்டை அடைந்த யாழினியின் மனம் சந்தோசத்தில் துள்ளியது எனலாம். இத்தனை நாளாக தந்தை திருமணத்திற்கு கேட்டபோது, மௌனத்தை மட்டுமே பதிலாக தந்திருந்தாள். இன்று யாதவை அவரிடம் அறிமுகம் செய்தால் என்னவென்ற எண்ணம் மனதிற்குள் முளைவிட்டது.

தன் மகளுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைத்திருந்த ரவீந்தர், “யாழிம்மா! சீக்கிரம் வா சாப்பிடலாம்” என்றழைக்க, அவளும் எழுந்து டைனிங் ஹாலிற்கு சென்றாள்.

மதுரயாழினி முகம் வழக்கத்திற்கு மாறாக பிரகாசமாக இருக்க கண்டு, “என்னம்மா இன்னைக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறாயா?” என்றார்.

“ஆமாப்பா!” என்றவள் யாதவ் சந்தித்த விஷயத்தைப் பகிர, அவரின் உதடுகளில் புன்னகை அரும்பியது. தன் மகள் விழிகளில் வந்துப்போன மின்னல், அவள் ஓயாமல் அவனைப் பற்றியே பேசுவதை வைத்தே புரிந்து கொண்டார். தன் மகளின் மனம் கவர்ந்தவன், யாதவ் கிருஷ்ணா என்று!

அவனுக்கு யாரும் இல்லை என்று அறிந்ததும், அவரின் சந்தோசம் இரட்டிப்பானது. அவரின் ஒரேயொரு ஆசை,தன் மகள் கடைசிவரை தன்னுடன் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதுதான். அவனும் நம்முடன் இறுதிவரை இருப்பான் என மனக்கணக்குப் போட்டார்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் அவளுக்கு வேலை இருக்கவே, ராகுலுடன் வெளியூர் பயணம் சென்றான். அந்த வார இறுதியில் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால், யாரிடமாவது பேசினால் நல்ல இருக்குமே என்ற எண்ணத்தில் ராம்குமாரின் வீட்டு எண்ணிற்கு அழைத்தாள். மறுப்பக்கம் அழைப்பு போய்கொண்டே இருந்ததே தவிர, யாரும் எடுக்கவில்லை.

மறுமுறை முயன்றும் பதிலில்லை என்றவுடன், “என்ன பிரச்சனைன்னு தெரியல. சரி என்னோட நம்பர் பார்த்தால், அண்ணா போன் பண்ணுவான்” என்ற எண்ணத்தில், அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

‘கீன்’ என்ற மெசேஜ் சத்தம் கேட்க, திரையில் தெரிந்த பெயர் கண்டதும் முகம் மலர, “ஹாய்” என்று அனுப்பினாள்.

“மேடம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” அவன் இயல்பாக விசாரிக்க,

“லீவ் சோ வீட்டில் இருக்கேன், அப்பா ஹோட்டல் போயிட்டாரு! நீங்க என்ன செய்யறீங்க” இவள் பதில் அனுப்பி வைத்தாள்.

“லிவ்விங் டூ கேதர் ஃலைப் வாழலாம் வான்னு ஒருத்தி கூப்பிட்டால், நானும் சரியென்று சொல்லி அவளோடு தங்கிட்டேன்” மறுபக்கம் இருந்து பதில் வரவே, இவளின் முகம் களையிழந்து போனது.

அவளிடம் பதில் வரவில்லை என்றதும், “என்னாச்சு மேடம்?” மீண்டும் அவனிடமிருந்து யோசனையுடன் கூடிய ஸ்மைலியை அனுப்பினான்.

“கற்பிற்கு முக்கியத்துவம் தரும் நாட்டில் பிறந்துவிட்டு, உங்களிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை யாதவ்” டைப் செய்து அனுப்பி வைக்க, மறுப்பக்கம் அதை வாசித்த யாதவ் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“அவளுக்கு என்னையும், எனக்கு அவளையும் பிடிச்சிருக்கு. சோ ஃலைப் ஸ்டார்ட் பண்ணோம். இதில் என்ன தப்பிருக்கு!” அவன் சாதாரணமாகக் கேட்டு வைக்க, மறுப்பக்கம் அதைப் வாசித்தவளின் முகம் மாறியது.

உடனே மனதில் தோன்றியதை அவள் வரி மாறாமல் எழுதி அனுப்பிவிட, கீன் என்ற இசைகேட்டு திரையை நோக்கியவனின் இதயத்தில் லட்சம் பூக்கள் மலர்ந்தது.

“என்னைக்கும் உடலும், மனசும் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம். தன்னைப்போலவே தனக்கு வரும் கணவனும் இருக்கணும்னு பெண்கள் எதிர்பார்ப்பாங்க. உங்களை மாதிரி ஆளுங்களுக்கு இதெல்லாம் சொன்னாலும் புரியாது!” தன் கருத்தைக் கூறிவிட்டு ஆப்லைன் சென்றுவிட்டாள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் அவனுடன் பேசுவதைத் தவிர்த்தாள் யாழினி. யாதவிற்கு விளையாட்டு வினையானதே என்ற எண்ணத்தில், அவளை பேச வைக்கும் முயற்சியில் இறங்கினான். இந்த ஒரு வாரத்தில் வெளியிடங்களில் அவளைப் பார்க்க முடியாமல் போகவே, நேராக அவங்க அப்பாவை நேரில் சென்று சந்தித்தான்.

தன் மகளைத் தேடி யாதவ் வந்து நிற்க, அவனின் விழிகளில் தெரிந்த தேடலும், தவிப்பும் கண்டு வாயடைத்துப் போனார். தவறு செய்தவனிடம் இந்த நிமிர்வும், நேர்கொண்ட பார்வையும் இருக்காதே என்று மனம் சொல்ல, “அவளுக்கு ஒரு வாரமாகவே உடம்பு சரியில்ல” என்றார்.

“அங்கிள் நான் அவளைப் பார்க்கணும்” என்றவன் இருவருக்கும் நடுவே நடந்த வாக்குவாதத்தை மறைக்காமல் கூறவே, அவனது நேர்மை அவரை வெகுவாகக் கவர்ந்தது. யாதவைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

காலிங்பெல் சத்தம்கேட்டு கதவைத் திறந்த யாழினி பார்வையில் கோபம் என்னும் கனல் வீச, “வாங்க” என்றவள் காஃபி போட சமையலறைக்குச் சென்றாள்.

ஆண்கள் இருவரும் ஹாலில் அமர்ந்திருக்க, ரவீந்தர் அவனைப்பற்றி விசாரித்தார். அவரின் கேள்விகளுக்கு பதில் சொன்னாலும், அவனின் பார்வை யாழினி மீதே நிலைத்திருந்த்தது.

கொஞ்ச நேரத்தில் காஃபியுடன் வந்து கொடுத்துவிட்டு, “சரிப்பா நான் ரூமிற்கு போறேன்” உள்ளே செல்ல திரும்ப, ஏனோ அவளை வருத்தப்பட வைக்க முடியவில்லை.

ஒரு வாரமாக அவளுடன் பேசாமல் இருப்பதே தவிப்பைக் கொடுக்க, உயிரற்ற ஓவியம்போல காட்சியளித்த தன்னவளைக் கண்டு அவன் இதயம் வலித்தது.

ரவீந்தருக்கு ஒரு போன் வரவே அவர் எழுந்து செல்ல, “இங்கே பாரு! நான் சும்மா விளையாட்டுக்கு பேசினேன்! நானும் நீ சொல்லும் இந்தியாவில் பிறந்தவன்தான், பார்க்கும் பெண்களிடம் தடுமாற மாட்டேன்” அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வேகமாக கூறினான்.

அவளின் முகம் பூவாக மலர்ந்திட, “இனிமேல் உன்னிடம் விளையாட்டுக்கு இப்படி பேச மாட்டேன்.ஸாரி!” என்றான்.

இந்த காட்சியை நேரில் பார்த்த ரவீந்தருக்கு, தன் மகளைப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது. அத்துடன் அவன் தற்போது இருக்கின்ற ஏரியா மற்றும் நண்பர்களிடம் விசாரித்ததில், அவனை நல்லவிதமாகவே கூறினர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.

“சரிங்க அங்கிள் நான் கிளம்பறேன்” அவரிடம் விடைபெற்று யாதவ் கிளம்ப, அவனை வழியனுப்பி வைக்கும் எண்ணத்துடன் அவனின் பின்னோடு சென்றாள் யாழினி.

தன்னவள் பின்னோடு வருவதைக் கண்ட யாதவ், “நான் தடுமாறியது உன்னிடம் மட்டும் தான்” என்றதும் அவளின் முகம் குங்குமமாகச் சிவந்தது. அவளிடம் விழிகளின் வழியாக விடைபெற்றுக் கிளம்பினான்.

தன் மகளுக்கு நினைத்த வாழ்க்கை கிடைக்க போகிறது என்ற சந்தோசத்தைவிட, தன்னுடைய மகள் கடைசிவரை தன்னருகே இருக்க போகிறாள் என்ற எண்ணமே மனதிற்கு அவரின் மனதிற்கு அமைதியைத் தந்தது.

அமெரிக்காவில் திருமணம் செய்ய வேண்டும் எனில் அதை முன்பே பதிவு செய்ய வேண்டும், அனைத்து சான்றிதழும் சரியாக இருந்தால் மட்டுமே அனுமதி தருவார்கள். அத்துடன் இந்தியாவைப்போல பார்த்தும் வீட்டினருக்குப் பிடித்தாத உடனே திருமணம் என்று இல்லாமல், சம்மந்தபட்டவர்கள் பேசி புரிந்துகொண்ட பிறகு மணம்முடிப்பது வழக்கம்!

அதற்கான அவகாசத்தைக் கொடுத்த ரவீந்தர், யாதவ் கிருஷ்ணா – மதுரயாழினி இருவரும் வந்து சொல்லும் வரை அமைதி காக்க முடிவெடுத்தார். இதை அறியாத இருவரும் தங்களின் விருப்பம்போல ஊரைச் சுற்றி வலம் வந்தனர்.

அன்று வெளியே போகலாம் என யாதவ் கூற, அவனைத்தேடி அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றாள். காலிங்பெல் அடித்துவிட்டு அவள் வெளியே நிற்க, யாதவ் வந்து கதவைத் திறந்தான். ஏனோ அவனின் முகத்தில் கவலைக் கோடுகளைக் கண்டு துணுக்குற்றாள்.

“வா இனியா!” அவளை வரவேற்ற யாதவ் வீட்டினுள் நுழைய வழிவிட்டு விலகி நின்றான். தன்னவனின் முகமாற்றம் வைத்தே அவனது கவலையைப் புரிந்துகொண்ட யாழினி நேராக சோபாவில் சென்று அமர்ந்தாள்.

மற்றவர்களைப்போல் இல்லாமல் வீட்டை அழகாகப் பரமாரித்திருந்தான் யாதவ். அவன் காஃபி போட சமையலறைக்குச் செல்ல, யாழினி பார்வையைச் சுழலவிட்டாள். அந்த அறையில் நிறைய புத்தகங்கள், லேப்டாப் என்றிருந்தது.

கடைசியாக டேபிளில் வைத்திருந்த இரண்டு சேலை அவளின் கவனத்தை ஈர்க்க, மெல்ல எழுந்து சென்று பட்டுப்புடவையைக் கையில் எடுத்துப் பார்த்தவள், “யாதவ் புடவை யாருக்கு எடுத்து வச்சிருக்கிற?” என்றாள்.

அதற்குள் கையில் காஃபியுடன் வந்தவன், “இன்னைக்கு அம்மாவுக்குப் பிறந்தநாள். வழக்கமாக அம்மாவுக்கு ஏதாவது வாங்குவேன். இந்த வருஷம் புடவை எடுத்து வச்சிருக்கேன்” அதை அவருக்கு அனுப்ப மனமில்லை என்பதை சொல்லாமல் விட்டுவிட்டான்.

இறந்த தாயை நினைத்து அவன் மனம் வருந்துவதாக நினைத்த யாழினி, “உன்னோட அம்மாவை ரொம்ப பிடிக்குமா?” எனக்கேட்க, ஒரு தலையாட்டல் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

யாதவ் கையில் இருந்த காஃபி கப்பை வாங்கி பக்கத்திருந்த டேபிளில் வைத்துவிட்டு திரும்ப, அவளைப் பின்னிலிருந்து அணைத்தான் யாதவ்.

அவனிடம் இதை எதிர்பார்க்காத யாழினி திகைப்புடன், “என்ன செய்யறீங்க?” என்றாள்.

‘ஷ்…’ என்றவன் அவளின் காதோரம், “என்னவோ தெரியல அம்மா நினைவாகவே இருக்குடி. கொஞ்சநேரம் உன் மடியில் படுத்துக்கவா?” அவனிடம் அனுமதி கேட்க, அவளின் மனம் பாகாக உருகிப் போனது

தன்னவனின் ஏக்கம் நிறைய குரல் அவளை என்னவோ செய்ய, “ம்ம்” என்றவளை இரு கரங்களில் ஏந்திகொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்.

அவளது மனம் படபடவென்று அடித்துக்கொள்ள, “சும்மா பயப்படாதே! நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்து நிம்மதியாக தூங்கணும்” என்று சொல்லிவிட்டு அவளைப் படுக்கையில் இறக்கிவிட்டான்.

அவள் சுவரோடு சாய்ந்து கால்நீட்டிக் கொள்ள, அவளின் மடியில் தலை வைத்துப் படுத்தான் யாதவ். அவன் கேசத்தை இதமாக கோதிவிட்டு, “உன் அம்மாவுடன் இருந்த நினைவுகளை சிந்தித்துப் பாரு. நம்ம மனசு அப்படியே லேசாகிடும்” என்றவளை இமைக்காமல் நோக்கினான்.

அவன் சிகைக்குள் கைவிட்டு கொதியத்தில் அவ இமைகள் தானாக மூடிக் கொண்டது. அவளது சின்ன ஸ்பரிசம் அவனது அலைபாய்ந்த மனதிற்கு அமைதியைக் கொடுத்தது. தன் தாயின் மீதிருந்த கோபத்தை மறந்து, தாய் – தந்தையுடன் வாழ்ந்த இனிமையான நினைவுகளை சிந்தித்த யாதவ் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

அவனது முகத்தில் வந்து போகின்ற உணர்வுகளை உன்னிப்பாகப் படித்த யாழினி, “நம்ம நினைவுகளில் அவங்க உயிரோடு வாழ்ந்துட்டு தான் யாதவ் இருக்காங்க. நம்ம தான் இறந்து போயிட்டாங்கன்னு கவலைப்பட்டு வாழவேண்டிய வாழ்க்கையைத் தொலைச்சிட்டு இருக்கோம்” என்றவள் கூற மெல்ல இமை திறந்து அவளைப் பார்த்தான்.

நான்கு விழிகளும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டது. பெண்ணின் காந்த விழிகளில் காதல்வழிய, அதைக் கண்டவனின் மனம் கர்வம் கொண்டது. அந்த கர்வம் ஏன் வந்தது என்று புரியாமல் இருக்க, மெல்ல அவளின் கன்னங்களில் சிகப்பு ரோஜாக்கள் எட்டிப் பார்த்தன.

ஏனோ அவளின் வெட்கம் அவனைத் தடுமாறச் செய்ய, சட்டென்று அவளின் மடியிலிருந்து எழுந்து அமர்ந்தான் யாதவ். அவளின் செந்நிற இதழைப் பார்க்கும்போது, உள்ளுக்குள் ஏதோ செய்ததது.

திடீரென்று எழுந்த யாதவைப் பார்த்து, “நீங்க தூங்குங்க யாதவ். நம்ம நாளைக்கு வெளியே போலாம்” அங்கிருந்து செல்ல வழியைக் கண்டுபிடிக்க, மெல்ல அவளின் கரம்பிடித்து அருகே இழுத்தான்.

அவனின் மடியில் வந்து விழுந்த யாழினியின் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போக, இதழ்களில் ஒருவிதமான நடுக்கம். தன்னவளின் விழிகளில் பார்வையைக் கலந்த யாதவ், அவளின் இதழ்நோக்கி குனிந்தான்.

அவளின் செவ்விதழைக் கவ்விய அவனது உதடுகள் வண்டுபோல தேனெடுக்க, மெல்ல அவளின் கரங்கள் அவன் கழுத்தில் மாலையாகக் கோர்த்தது. முதன்முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசம் உணர்ந்து அவளின் தேகம் நடுங்கியது.

அவளைவிட்டு விலகிய யாதவ்,

“என்னோட முதல் முத்தம்

உன்னோடு தான் பெண்ணே!

இதழ் முத்தத்தில் என் சிந்தையைக்

கலங்க வைக்கிறாயே!

உன்னுள் என்னைத் தொலைக்கும்

நாள் வெகு அருகில்தானோ?” அவளின் காதோரம் கவிதை சொல்ல, வெட்கம் தாளாமல் அவனைப் பிடித்து தள்ளிவிட்டு வெளியே ஓடினாள் யாழினி.

அவளின் பின்னோடு வந்த யாதவ் தாய்க்காக வாங்கிய புடவையில் ஒன்றை அவளிடம் கொடுத்து, “இந்த புடவையை நீ வச்சுக்கோ யாழினி. நிஜமாவே மனசு ரொம்ப லேசாக இருக்குடி” மெல்ல அவளை இழுத்து நெற்றியில் இதழ்பதித்து விலக, அவளின் கன்னங்களில் ரோஜாக்கள் பூத்தன.

“இன்னைக்கு உனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு இடத்திற்கு போறோம்” என்று சொல்லி காரை எடுத்தான். யாழினி எங்கே போகிறோம் என்று ஆர்வமிகுதியில் கேட்க, அவளின் எந்த கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!