Rose – 27

Rose – 27
அத்தியாயம் – 27
அன்று ஒய்வு தினமாததால் யாழினி வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாக ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க, யாதவ் சிறுவனைப்போல் வந்து அவளின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டு, “என் தலையைக் கோதிவிடு” அன்பு கட்டளையிட, அவளின் உதடுகளில் புன்னகை அரும்பியது.
அவள் கேள்வியாக புருவம் உயர்த்தி பார்க்க, “ப்ளீஸ்” என்றான்.
யாழினி சின்ன சிரிப்புடன் அவனின் கேசத்தில் கரம் நுழைத்து கோதிவிட, “காதல் என்பது” பாடல் தொடங்க, அதை ஓட்டிவிட ரிமோட்டைக் கையில் எடுத்தாள்.
“இந்த பாடல் பாடட்டும் விடு இனியா” என்றவனின் பார்வை அவளிடம் யாசித்தது. அவளும் மறுப்பு சொல்லாமல் அமைதியாகிவிட, பாடல் பாடியது.
“கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்
உன்னைப் பார்க்கும் முன்பு நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உந்தன் அருகில் வந்து தான், என் வேடந்தாங்கலை உணர்ந்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே
நீ இன்றி நானே வெறும் கூடுதானே தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்…”அவன் தன்னையும் மறந்து பாட, அதில் பொதிந்திருந்த அர்த்தம் யாழினியின் மனதை நெகிழச் செய்தது.
அவள் விழிவிரிய யாதவைப் பார்க்க, “உன்னில் என் அம்மாவைப் பார்க்கிறேன் இனியா. சிறுவயதில் நான் இழந்ததை உன் மூலமாக கடவுள் எனக்கு திரும்ப தருகிறார்” அந்த வாக்கியத்தைக் கூற, அவனின் நெற்றியில் முத்தமிட்டு விலகினாள் யாழினி.
அன்று வெளியே சென்றுவிட்டு யாதவ் தாமதமாக வீடு திரும்ப யாழினி சாப்பிடாமல் அவனுக்காக காத்திருந்தாள்.
இதை அறிந்த யாதவ் கோபத்தில், “ஏன் இனியா நீயெல்லாம் படிச்ச பெண்தானே, அப்புறம் எதுக்காக இப்படி முட்டாள்தனமாக நடந்துக்கிற?! இந்தியாவில் இருக்கும் பெண்கள்தான், உறவுகளைக் காரணம் காட்டி சாப்பிடாமல் இருக்காங்க. அவங்களை மாதிரி நீயும் ஆகிட்டே”அவளைத் திட்டித் தீர்த்தான்.
“எனக்கு தனியாக சாப்பிட பிடிக்கல, உங்களோடு உட்கார்ந்து சாப்பிட நினைச்சு காத்திருந்தது ஒரு தப்பா?” அவளும் அவனிடம் சண்டைக்கு வந்தாள்.
“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும், சோ எனக்காக உன் ஹெல்த்தை கெடுத்துக்காதே” கடிந்து கொண்டாலும், அவளுக்கு உணவை ஓட்டிவிட அவன் மறுக்கவில்லை.
யாழினி லாப்டாப்பை எடுத்துக்கொண்டு வேலையைத் தொடங்க, மற்றொரு அறைக்குச் சென்ற யாதவ் தன் உடமைகளைப் பேக் செய்ய தொடங்கினான். கொஞ்ச நேரத்தில் உண்ட உணவு அவளுக்குப் பிரட்டிக்கொண்டு வரவே, வாஸ்பெஷனில் போய் வாந்தி எடுத்துவிட்டு வந்து அமர்ந்தாள்.
ஏனோ உடல் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருக்க, யாழினி அதற்கான காரணத்தை சிந்திக்க தொடங்கினாள். மற்றொரு பக்கம் யாதவ் டிக்கெட் கன்பார்ம் ஆகிவிடவே, பயணத்திற்கு தயாரானான்.
அவனது கரங்கள் தேவையான பொருளை எடுத்து வைத்தாலும், யாதவ் மனம் யாழினியைச் சுற்றியே வலம் வந்தது. தந்தையை இழந்தவள் தனியாக விட்டுச்செல்ல மனமில்லாமல் தான், இந்த இரண்டு மாதமும் அவளருகில் இருந்தான்.
இப்போது அவள் பழையபடி மாறிவிட, யாதவ் இந்தியாவிற்கு செல்லும் முடிவை எடுத்திருந்தான். இந்த சந்தோசமான விஷயத்தை அவளிடம் சொல்ல நினைத்த யாதவ், “இனியா!” என்றழைக்க, அவளும் தட்டுத்தடுமாறி எழுந்து சென்றாள்.
அவனது சிந்தனையைக் கலைக்கும் விதமாக, “கிருஷ்ணா இப்போ எதுக்கு கூப்பிட்ட” என்ற அழைப்புடன் வீட்டினுள் நுழைய, அவன் சூர்கேசில் அனைத்தையும் எடுத்து வைப்பதைப் பார்த்து குழம்பிப் போனாள்.
அவளின் பார்வையை வைத்தே மனதைப் படித்த யாதவ், “நான் இந்தியா போகிறேன் இனியா” அவளின் தலையில் இடியை இறக்க, யாழினிக்கு ஒரு நிமிடம் உலகமே தட்டாலமாலையாகச் சுற்றியது.
தரையில் பெருவிரல் ஊன்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “கிருஷ்ணா என்ன சொல்ற?” அதிர்வுடன் கேட்டாள்.
அவன் மறுபடியும் இந்தியா போகப் போவதில்லை என்ற அவளின் நம்பிக்கை ஆட்டம் கண்டது. யாழினியின் அதிர்விற்கான காரணம் புரியாமல் நின்ற யாதவ், “இதுக்கு ஏன் ஷாக் ஆகிற?” புரியாமல் கேட்டான்.
உடனே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “நான் இந்தியா போக போறேன் இனியா. நான் பக்கத்தில் இல்லைன்னு சாப்பிடாமல் இருக்கவே கூடாது, நீ நேரத்திற்கு சாப்பிடணும்” என்றவன் இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.
அவளோ அதிர்ச்சியுடன் அவனை இமைக்காமல் நோக்கிட, “மாலை நேரத்தில் நேரத்துடன் வீட்டுக்கு வந்துவிடு. அதுக்காக தூக்கம் இல்லாமல் வேலை செய்து உடலைக் கெடுத்துக்காதே!” அவன் அக்கறையுடன் பேச, யாழினி கற்சிலைபோல சமைந்து நின்றிருந்தால்.
இரண்டே எட்டில் அவளை நெருங்கிய யாதவ், “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் இனியா. நீதான் உன்னைக் கவனமாக பார்த்துக்கணும். நான் எங்கிருந்தாலும், என் நினைவு உன்னைச் சுற்றியே இருக்கும்” என்றபடி அவளை இழுத்து அணைத்துக்கொண்டு, அவளின் நெற்றியில் இதழ்பதித்து நிமிர்ந்தான்.
அவன் சொல்வதை உள்வாங்கிய யாழினி, “அப்போ நம்ம கல்யாணம் யாதவ்?! நீ இங்கேயே கடைசிவரை இங்கேயே இருக்கப் போவதாக நினைச்சேனே?!” யாதவிடம் தன் சந்தேகத்தை நேரடியாக கேட்டாள்.
அவள் ஏதோ நகைசுவை சொன்னதாக நினைத்து வாய்விட்டுச் சிரித்த யாதவ், “நான் இங்கே வந்ததே, லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழத்தான். எனக்கு இந்த காதல், கல்யாணத்தில் எல்லாம் நம்பிக்கையே இல்ல இனியா” என்றான்.
யாழினி மனதில் பாரம் ஏறிக்கொள்ள, “நீங்க சொல்வது எனக்கு புரியல” கூர்மையான பார்வையுடன் கூறினாள்.
அவளது பேச்சில் வித்தியாசத்தை உணராமல், “பிடித்தவரை சேர்ந்து வாழ்வது, பிடிக்கவிட்டால் விலகிப் போகும் லிவ்விங் வாழ்க்கை தான் எனக்கு பிடிக்கும்னு சொன்னேன். அதுக்காகவே இவ்வளவு தூரம் வந்தேன், ஆனால் கடைசிவரை நான் நினைத்தது நடக்கவே இல்ல” என்றான் இயல்பாக புன்னகையுடன்.
“அப்போ இதுவரை நம்ம வாழ்ந்த வாழ்க்கைக்கு பெயர் என்ன?” ஆழ்ந்த குரலில் ஆர்பாட்டம் இல்லாமல் கேட்க, யாதவ் புருவங்கள் முடிச்சிட்டது.
அன்று நடந்த நிகழ்வு மனதில் படமாக ஓட, “ஹே! நீ இன்னும் அன்னைக்கு நடந்த விஷயத்தை மறக்கவே இல்லையா? அந்த சூழலில் நம்ம தடுமாறியது உண்மைதான், ஆனால் அதுக்குபிறகு அப்படியொரு தவறு நடக்காமல் பார்த்துகிட்டோமே! அன்னைக்கு நடந்த சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக நினைச்சு மறந்திடு” என்று இலகுவாகக் கூற, அவளின் உதடுகளில் கசந்த புன்னகைத் தோன்றி மறைந்தது.
யாதவ் தன்னிடம் விளையாடுவதாகவே நினைத்த யாழினி, “கிருஷ்ணா ப்ளீஸ் ஸ்டாப். நீ நிஜமாகவே இந்தியா போகிறாயா? என்னால் உன்னை விட்டுட்டு இங்கே தனியாக இருக்க முடியாது” என்ற யாழினியிடம் தன்னுடைய பிளைட் டிக்கெட்டை எடுத்து காட்டினான்.
“அப்போ நீ என்னைக் காதலிக்கவே இல்லையா?” ஒரு மாதிரியான குரலில் கேட்க, அவனோ அவளைப் பார்த்தபடி மறுப்பாகத் தலையசைத்தான். அவளது இதயம் சுக்குநூறாக உடைய, அவளின் வயிற்றில் சுருக்கென்று ஒரு வலி தோன்றி மறைந்தது.
ஒரு ஆணும், பெண்ணும் உடலால் இணைவது முறைப்படி திருமணம் முடிந்த பிறகுதான். ஆயிரம் தான் இந்தியக் காலச்சாரத்தைக் கற்றுக்கொண்ட போதும், அவள் வாழ்வது அமெரிக்கா மண்ணில் அல்லவா?!
‘அதனால் தான் இத்தனை நாளாக இவை அனைத்தும் தனக்கு தவறாக தோன்றவில்லையோ? ஒருவேளை அவள் இந்தியாவில் இருந்திருந்தால், மற்றவர்கள் அவள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி இருப்பார்களோ?!’ என்ற சந்தேகம் அவளின் மனதில் தோன்றி மறைந்தது.
இந்தியாவைப் போல இங்கிருக்கும் மக்கள் மற்றவர்களைக் கவனிப்பதில்லை, கண்டுகொள்வதும் இல்லை. அவரவர் வேலை உண்டு என்று இருப்பதாலும், மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையில்லாமல் தலையிடாததால் தன் பிழையைச் சுட்டிக்காட்ட ஆளில்லாமல் போனது என்ற உண்மையைத் தாமதமாக உணர்ந்தாள்.
ஒவ்வொரு நிமிடமும் வயிற்றுவலி அதிகரிக்க, அவளது முகத்தில் வந்து போகும் உணர்வுகளை உன்னிப்பாக கவனித்த யாதவ், “யாழினி ஆர் யூ ஓகே?” என்ற கேள்வியுடன் அருகே நெருங்கியவனைத் தள்ளி நிற்கும்படி சைகை செய்தாள்.
“காதல், கல்யாணத்தில் நம்பிக்கை இல்லன்னு நீங்க முன்னாடியே சொல்லியிருந்தால், உங்களைவிட்டு விலகிப் போயிருப்பேனே! இப்போ உங்களால் என் வாழ்க்கைக் கேள்விக்குறியாகி இருக்கு யாதவ்” அவள் கோபத்தில் வார்த்தையைவிட, அவன் புருவங்கள் மேலேறி இறங்கியது.
அதுவரை அவளின் மீது வைத்திருந்த கண்மூடித்தனமான அன்பும், பரிவு மற்றும் பாசம் காணாமல் போக, “அன்னைக்கு ஒருநாள் நடந்ததை வச்சு, என்னை நீ கட்டுப்படுத்த நினைக்கிற இனியா. நீ அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள். இங்கே இதெல்லாம் சகஜம்!” என்றவன் கூற, யாழினியின் விழிகள் கோபத்தில் சிவந்தது.
“ஓஹோ ஒரு சிலர் அவங்க விருப்பம்போல லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வந்தால், மொத்த அமெரிக்காவும் அப்படித்தான்னு முடிவெடுத்துடுவீங்களா? உங்க நாட்டு பெண்களுக்கு இருக்கும் கற்பு, எங்களுக்கு எல்லாம் இருக்கவே கூடாதா?” அவளும் அவனை லேசில் விடுவதாக இல்லை.
அவனைத் தீர்க்கமாக நோக்கிய யாழினி, “கற்பு என்று வந்தால் இரு பாலினரின் பொதுவில் வைப்போம்னு பாரதியார் சொன்னாரே, அதைக்கூட மறக்க சொல்றீங்களா? நான் எந்த நாட்டில் இருக்கேன் என்பது அவசியமில்ல, என்னோட கேரக்டர் சரியாக இருக்கா என்பதுதான் முக்கியம்” – ஆழ்ந்த குரலில் கூறியவளின் மீது கோபம் வந்தது.
அவனது பின்னணியை சரியாக அறியாமல், காதல் என்ற பெயரில் கற்பை இழந்ததை நினைத்து தன்மீதே அவளுக்கு வெறுப்பு உண்டானது. அவனது கொள்கையும், கோட்பாடும் அறிந்த பிறகு உள்ளம் கசந்துபோனது.
அவளிடமிருந்து இந்த கேள்வியை எதிர்பார்க்காத யாதவ் திகைத்தாலும், “கற்பு என்பது மனசு சார்ந்தது இனியா, அதை உடலோடு ஒப்பிடாதே!” பட்டென்று மனதில் தோன்றியதை சொல்லிவிட்டான்.
அதில் அவளின் கோபம் இன்னும் அதிகரிக்க, “நீ சொல்லுபடி பார்த்தாலும், என் மனசுக்கு கற்பு இருக்கு இல்ல. பதினைந்து வயதில் டேட்டிங் போகும் இதே ஊரில் இத்தனை வருசமாக இருக்கேன். ஆனால் என் மனசில் நினைச்சது உன்னை மட்டும்தான், என் உடலைத் தொட்டவன் நீ மட்டும்தான்” தன் காதலை விநோதமாகக் கூறியவளின் விழிகளில் கண்ணீர் பெருகியது.
அவள் நீலிக்கண்ணீர் வடித்து தன்னை வசப்படுத்த நினைப்பதாக எண்ணிய யாதவ், “ஒருநாள் நடந்துக்காக உன்னோடு காலம் முழுக்க இருக்க என்னால் முடியாது. அமெரிக்காவில் பிறந்துட்டு கண்ணைக் கசக்கிட்டு நிக்கிற?” அவன் எரிச்சலோடு கூற, அவளின் இதழ்களில் கசந்த புன்னகைத் தோன்றி மறைந்தது.
யாதவ் யோசிக்காமல் கூறிய வார்த்தை அவளின் மனதில் முள்ளென்று தைக்க, மெல்ல அவளின் உணர்வுகள் செத்துப் போனது. அவன் கைகளில் அலராக மலர்ந்த ரோஜா, இன்று காகித பூவாக தோற்றம் பெற்றது. அவன் உள்ளத்தில் காதல் உணர்வு இல்லாதபோது, அந்த கூடலுக்கு பெயரே வேறு என்று புத்தி உரைத்தது.
“அமெரிக்கா பெண்கள் அழவே கூடாதுன்னு சட்டம் எழுதல யாதவ். எந்தவொரு பொருளும் சீக்கிரம் கிடைத்துவிட்டால், அதொட மதிப்பு தெரியாதுன்னு அப்பா அடிக்கடி சொல்வாரு. உன் பார்வையில் இப்போ நானும் வேண்டாதவள் தான்” என்றவள் கூற, யாதவ் கோபத்துடன் அவளை முறைத்தான்.
அவனை உயிர்ப்பின்றி ஒரு பார்வை பார்த்தவள், “இப்போதாவது உண்மையைச் சொன்னீங்களே, ரொம்ப சந்தோசம். ஒரு நாளும் எனக்கு வாழ்க்கைத் தரும்படி கேட்கவோ, உங்க வாழ்க்கைக்கு இடையூறு தரவே மாட்டேன்!” கணீர் குரலில் கூறிய யாழினி, அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை அவனின் மீது வீசினாள்.
அவளின் வயிற்றுவலி படிப்படியாக உயர, அவளோ பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொள்ள, “இன்னைக்கு நைட் ஃபிளைட். நான் இப்போது கிளம்பினால் தான், அங்கே போக சரியாக இருக்கும். என் வாழ்க்கையில் உன்னைப் பார்க்கவே எனக்கு விருப்பமில்லா இனியா” என்றவன் கூற, அவளின் இதழ்களில் கசந்த புன்னகைத் தோன்றி மறைந்தது.
அவனைத் திமிராக ஒரு பார்வை பார்த்த யாழினி, “நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்னு சொல்வாங்க. உங்களுக்கும் என்னோட அருமை ஒருநாள் புரியும். உங்களைத் தடுக்க மாட்டேன், முடிந்தவரை சொல்லாமல் போங்க” யாழினி ரவீந்தரின் அறைக்குச் சென்று தாழ்போட்டுக் கொள்ள, தன்னுடைய உடமைகளை எடுத்துகொண்டு யாதவ் வீட்டைவிட்டு வெளியேறினான்.
எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அவனை விலகிச் செல்ல அனுமதித்த யாழினி, தன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள். யாதவ் அங்கிருந்து சென்ற கொஞ்ச நேரத்தில், வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
ஏர்போர்ட் வந்தபிறகு அவளை பார்க்க வேண்டும் என்று மனம் அலைபாய, தன் கொள்கையை மனதினுள் கொண்டு வந்து இந்தியாவிற்கு பிளைட் ஏறினான். அவளின் அருகில் இருக்கும் போது உணராத காதலை, அந்த பிரிவு அவனுக்கு உணர்த்தியது.
கடைசியாக அவன் கண்ட கனவு, தன்னவளின் இழப்பை பெரிதாக காட்டியது. அப்போதுதான் தன் கையில் கிடைத்த சொர்க்கத்தை வேண்டாமென்று உதறிவிட்டு ஓடி வந்திருப்பதை உணர்ந்தான்.
தன்னிலைக்கு மீண்ட யாதவ் பார்வைக் கடிகாரத்தின் மீது படிந்து மீண்டது. கடிகாரம் காலை ஆறு என்றவுடன் ஜன்னலைப் பார்க்க, கீழ்வானம் சிவந்த நிறத்தில் காட்சியளித்தது. பனிக்காற்று முகத்தில் வந்து மொதிச் செல்ல, சில்லென்ற உணர்வில் சிலநொடிகள் சிலையாகி நின்றான்.
வானில் பரவிய வெளிச்சம் அறைக்குள் நுழைய, அதை உணராமல் சிலையாக அமர்ந்திருந்தவளைக் கண்டவுடன், ‘என்னை இவ்வளவு கீழ்த்தரமான நினைக்க இவளுக்கு மனசு எப்படி வந்துச்சு’ சுள்ளென்று கோபம் தலைக்கேறியது.
அடுத்த நொடியே, ‘எந்தவிதமான உறுத்தலும் இல்லாமல் அவளோடு வாழ்ந்தவனுக்கு, அவளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிட்டோமே என்ற எண்ணம் வராமல் போனது ஏன்? தன்னவள் என்ற எண்ணம்தானே?!’ அவனின் மனம் சிந்தனையில் இறங்கியது.
‘தன் தாயின் மீதிருக்கும் கோபத்தில், அவருக்கு பிடிக்காத விஷயத்தை தேடி செய்தேன். ஆனால் இனியாவுடன் வாழ்ந்த வாழ்க்கை பொய்யில்லையே! இத்தனை நடந்தபிறகு அவளைக்கரம் பிடித்திருக்கிறேன் என்றால், என் தாயின் வளர்ப்பு ஒன்றும் தவறாகவில்லை’ தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
‘தான் அங்கிருந்து வந்தபிறகு என்ன நடந்தது? இதை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது?’ என்ற கேள்வியுடன் மருத்துவமனைக்குச் செல்ல, தன்னிலைக்கு மீண்ட யாழினியின் பார்வை அவனைத் தேடியது.
பக்கத்து அறையில் நிலவிய நிசப்தமே, அவன் சென்றுவிட்டதை உறுதி செய்தது. அவளின் உதடுகளில் விரக்தி புன்னகைத் தோன்றி மறைய, அவன் தந்த தனிமையை நிரந்திரமாக்கிக் கொண்டு படுக்கையில் படுத்து உறங்கிவிட்டாள்.