Rose – 28

1400964322069-b71fe94a

Rose – 28

அத்தியாயம் – 28

நேற்று இரவு யாழினியின் அறையில் இருந்த சுவரோவியங்களைப் பார்த்துவிட்டு வந்த மீனாவின் மனம் பரிதவித்தது. அதைப் பற்றிய தகவலை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என யோசிக்க, ராம்குமாரின் ஞாபகம் திடீரென்று வந்தது.

அவனை நேரில் சந்தித்துப் பேசலாம் என்ற எண்ணத்தில், மீனலோட்சனி நேராக அவர்களின் வீட்டிற்கே சென்றார். வரண்டாவில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த ராம்குமார், மீனாலோட்சனி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான்.

அவரை இன்முகத்துடன் வரவேற்ற ராம்குமார், “அப்பா – அம்மா ரெண்டு பேரும் இங்கே வாங்க. யாதவ் அம்மா வந்திருக்காங்க” அவன் உற்சாகத்துடன் குரல்கொடுக்க, சிவசந்திரன் – வைஜெயந்தி இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

“என்னம்மா அண்ணனோட வீட்டிற்கு வர உனக்கு இப்போதான் வழி தெரிந்ததா?” சிவசந்திரன் கேட்க, மீனாவோ புன்னகையைப் பதிலாக தந்தார்.

காஃபி போட்டு எடுத்து வந்த வைஜெயந்தி, “யாழினி எப்படி இருக்கிற?! மேடம் கல்யாணம் ஆனபிறகு இந்தபக்கமே வரல, அதனால் தான் கேட்டேன்” அக்கறையுடன் விசாரித்தார்.

“அவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வாகம் செய்யவே அவளுக்கு நேரம் சரியாக இருக்கு ஜெயந்தி, வீட்டுக்கே நைட் தான் வருகிறாள்” யாழினியை விட்டுக்கொடுக்காமல் பேசினர்.

சிவசந்திரன் – வைஜெயந்தி இருவரும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொள்ள, “இவனும் வேலையே கேதின்னு இருக்கான் ஆன்ட்டி. நான் எவ்வளவோ தூரம் சொல்லிட்டேன். அவன் காதிலேயே வாங்குன மாதிரி தெரியல” தன் நண்பனைப் பற்றி குற்றப்பத்திரிகை வாசித்தான் ராம்குமார்.

“ரெண்டு பேரின் வொர்க் டைம் மாறுது ராம். அவங்க ஓரிடத்தில் உட்கார்ந்து பேசி நான் பார்த்ததே இல்ல. காலில் சக்கரத்தைக் கட்டிவிட்ட மாதிரி, ஆளுக்கொரு திசையில் ஓடிட்டு இருக்காங்க” விளக்கம் கொடுக்க, மூவரின் முகமும் மலர்ந்தது.

இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்து, “என் சினேகிதி மகள், தனிமையில் இந்த மாதிரி களிமண் ஓவியங்கள் செய்வதாக சொன்னாள். அதுபற்றி உனக்கு தெரியுமா ராம்?!” அவள் இயல்பாக விசாரிக்க, ராம்குமார் தனக்கு தெரிந்த விஷயத்தைக் கூறினான்.

“ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறவங்க, வெளிநாட்டில் இந்த மாதிரி சுவரோவியம் செய்வாங்க. இது பற்றி போனவாரம் கூட ஒரு ஆர்ட்டிகல் படிச்சேனே. ஒரு நிமிஷம் ஆன்ட்டி அந்த மெகஸின் எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்து சென்ற ராம், கொஞ்ச நேரத்தில் ஒரு மாத இதழுடன் வந்து சேர்ந்தான்.

அது மருத்துவத்துறையில் சம்மதப்பட்ட நாளிதளில், “இதோ இதை படிச்சுப் பாருங்க, சரி மருத்துவமனைக்கு போகணும் ஆன்ட்டி நான் கிளம்பறேன்” மூவரிடமும் விடைபெற்று கிளம்பிச் சென்றான்.

சிவசந்திரன் – வைஜெயந்தியிடம் பேசிவிட்டு அந்த மாத இதழுடன் வீடு வந்து சேர்ந்த மீனா, அதைப் பொறுமையாக வாசித்தார். அதிலிருந்த தகவல்கள் அவரைத் திடுக்கிட செய்ய, யாழினியை சந்தித்த நாளில் இருந்து நடந்து அனைத்தும் நினைவிற்கு வந்தது.

‘இந்த பெண்ணின் மீது தவறு இல்லையோ, நான்தான் இவளை வேண்டுமென்றே நோகடித்துவிட்டேனோ?!’ மனதினுள் சிந்தித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்.

அன்றைய நாளுக்குப் பிறகு யாதவ் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறிப் போனது. யாழினியை முடிந்தவரை தனிமையில் இருக்க விடாமல், எந்த நேரமும் ஏதோவொரு காரணத்தைச் சொல்லி அவளையே சுற்றி வந்தான். அவனது அன்பை ஏற்கவும் முடியாமல், அவன் மீதான கோபத்தை விடவும் முடியாமல் தடுமாறினாள்.

அன்றைய காலைப்பொழுது அழகாக விடிந்தது. வழக்கம்போலவே மருத்துவமனைக்கு செல்ல தயாராகி கண்ணாடி முன் நின்ற யாதவ் கவனம் முழுவதும், அவளின் அறையின் கதவுகள் மீதே நிலைத்தது.

தன் அறையைவிட்டு வெளியேறிய யாழினி, அந்த அறையின் கதவைப் பூட்டிவிட்டு திரும்பினாள். அதற்காகவே காத்திருந்த யாதவ், இரண்டே எட்டில் அவளை நெருங்கினான்.

சட்டென்று அவளின் கையில் இருந்த சாவியைப் பிடுங்கி ஜன்னலின் வழியாக வீசி எறிந்துவிட்டு, “இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்!” வாழ்த்துடன் அறையைவிட்டு வெளியேறினான்.

“யாதவ்” அந்த அறையே அதிரும்படி கத்தினாள் யாழினி.

“யெஸ் பேபி!” அவன் செல்லமாக கூற, “இப்போ எதுக்காக சாவியை வீசி எறிஞ்சே” என்றாள் எரிச்சலுடன்.

“நீ எதை மறைக்க ரூமைப் பூட்டி வைத்தாயோ, அதைதான் நான் பார்த்துட்டேனே! எவ்வளவு அழகாக இருந்த ரூமை இப்படி அலங்கோலம் பண்ணி வச்சிருக்கிற, அந்த கோபம் தான், சாவி மீதி திரும்பிடுச்சு” அறையைவிட்டு வெளியேற, யாழினி எரிச்சலோடு அவனைப் பின்தொடர்ந்தாள்.

யாதவ் – யாழினி இருவரும் வேலைக்குச் செல்ல தயாராகி கீழே வந்தனர். இருவரின் முகத்தையும் வைத்தே, இன்னும் எதுவும் சரியாகவில்லை என்ற விஷயத்தை ஓரளவு கணித்துவிட்டார் மீனா.

யாழினி நேராக சமையலறைக்குச் சென்று, ப்ரிஜ்ஜில் இருந்து மாவை எடுத்து தோசை ஊற்றினாள். அதற்கு தொட்டுக் கொள்ள மிதமான காரத்தில் வெங்காயச் சட்னி அரைத்தாள்.

இந்த காட்சியை டைனிங் டேபிள் அமர்ந்து ரசித்த யாதவ், “என்ன சமையல் அம்மா?!” என்றான்.

அவன் பார்வை செல்லும் திசையைக் கவனித்த மீனாவோ, “பூரியும்,உருளைக்கிழங்கு மசாலாவும் செஞ்சேன்” என்றார்.

அவனோ முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு, “எனக்கு சூடாக காரச்சட்னியுடன், தோசை சாப்பிட ஆசையாக இருக்கும்மா” மீனா சத்தமே இல்லாமல் சிரித்தார்.

“யாழினி இரண்டு தோசை ஊத்தி கொடுத்திடு” மாமியார் மகனுக்கு பரிந்து வர, அவளோ அதைக் காதிலேயே வாங்காமல் தனக்கு மட்டும் அளவாக செய்து எடுத்து சாப்பிட அமர்ந்தாள்.

இன்னொரு பிரச்னைக்கு பிள்ளையார் சுழியை மருமகள் போடுவதை உணர்ந்து, மீனாலோட்சனி சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார். அவர் சென்றதைக் கவனிக்காத யாதவ், “எனக்கு எங்கே?” என்றான் அதிகாரமாக.

“உங்களுக்கு யார் செஞ்சாங்க. எனக்கு ஆபீஸ்க்கு டைமாச்சு!” தோசைச் சட்னியைத் தொட்டு வாயருகே கொண்டு செல்ல, வலுக்கட்டாயமாக அவளின் கையில் இருந்த உணவை சுவைத்தான்.

அவனது சேட்டைகளை ரசிக்கும் மனநிலை இல்லாத காரணத்தால், “யாதவ் நீங்க லிமிட்டை ரொம்பவே கிராஸ் பண்றீங்க” அவள் விரல் நீட்டி எச்சரிக்க, யாதவ் சுற்றிலும் பார்வையைச் சுழற்றினான்.

அங்கே யாரும் இல்லை என்பது ஊர்ஜிதமாக,“புருசனுக்கு லிமிட் கிடையவே கிடையாதுடி!” ஹஸ்கி வாய்சில் கூறிய யாதவைப் பார்த்த பார்வையில், அவளின் உடல் உதறல் எடுத்தது.

“ஐயோ கருமம்! காலையிலேயே கண்டதையும் பேசறாரே! இப்போ என்ன சாப்பாடுதானே வேணும், இந்தாங்க நல்ல கொட்டிக்கோங்க” அவனின் கையில் தட்டைக் கொடுத்துவிட்டு நகர நினைக்க, அவளின் கரம்பிடித்து தடுத்தான் யாதவ்.

யாழினி அவனைக் கேள்வியாக நோக்கிட, “சுவர் இருந்ததால் தான் சித்திரம் வரைய முடியும் இனியா. ஹெல்த் ரொம்ப முக்கியம்” அவளை இழுத்து சேரில் அமரவைத்து, வழக்கம்போலவே அவளுக்கு ஊட்டிவிட தொடங்கினான்.

அவனையே இமைக்காமல் நோக்கிய யாழினி, “எனக்காக நடிக்காதே யாதவ். இன்னொரு முறை ஏமாற்றத்தை சந்திக்க என் உடலிலும் சரி, மனதிலும் தெம்பு இல்ல” வலிநிறைந்த வார்த்தைகளைக் கூறினாள்.

“அதுக்குதான் நல்ல சாப்பிட சொல்றேன்! அப்போதானே எதிர்த்து சண்டைப் போட தெம்பு இருக்கும்” இலகுவாகக் கூறி அவளுக்கு உணவை ஊட்டிவிட்டான்.

யாழினியின் விழிகளிரண்டும் கலங்கிட, “சட்னியில் காரம் அதிகமில்லையே! அப்புறம் எதுக்காக அழுக்கிற” அக்கறையுடன் கேட்க, அவளோ அவனைப் பொய்யாக முறைத்துவிட்டு எழுந்து அறைக்குச் சென்றவள், கீழே வரும்போது அன்று அலுவலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய ஃபைல்களுடன் கீழிறங்கி வந்தாள்.

“இனியா சாக்கிரதை!” யாதவ் அக்கறையுடன் கூற, அவனை வெட்டும் பார்வை பார்த்துவிட்டு கார் சாவியை எடுத்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள்.

வழக்கம்போல தன் அலுவலகத்திற்குள் நுழைந்த யாழினி, தன் கேபினில் அமர்ந்திருந்த மிருதுளாவைக் கண்டு அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றாள். ராம்குமார் – மிருதுளாவின் திருமணத்திற்கு, இரு வீட்டாரின் சம்மதம் கிடைத்துவிட்டது.

அதன் காரணமாக தன் குடும்பத்துடன் இந்தியா வருவதாக மிருதுளா ஏற்கனவே சொன்னது ஞாபகம் வர, ‘ஐயோ இவளுக்கு இன்னும் என்னோட திருமண விஷயம் தெரியாதே? யாதவ் தான் மாப்பிள்ளைன்னு தெரிந்தால், அவ்வளவுதான்’ மானசீகமாகத் தலையில் கை வைத்தாள்.

தன் தோழியின் கழுத்தில் இருந்த தாலியைக் கண்ட மிருதுளா, “யாழினி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா? இதை ஏன் நீ என்னிடம் சொல்லவே இல்ல” என்றாள்.

அவளின் கேள்வியில் சிந்தனைக் கலைய, “அது ஒண்ணுமில்ல” என்றவள் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிக்க, அவளின் பார்வையில் இருந்த தடுமாற்றத்தைக் கண்டு கொண்டாள்.

“ஏய் உன் பார்வையே சரியில்ல. ஆமா யார் மாப்பிள்ளை?” யாழினி மௌனத்தைப் பதிலாக தர, ஓரளவு விஷயத்தை யூகித்தாள் மிருதுளா.

“யாதவ் கிருஷ்ணாவா?” அவள் மெல்லிய குரலில் கேட்க, யாழினியும் வேறு வழியே இல்லாமல் ஒத்துக் கொண்டாள். இருவருக்கும் நடுவே நடந்த பிரச்சனை, அதனால் அவள் அனுபவித்த வலி அனைத்தும் மிருதுளாவின் கண்முன்னே வந்து போனது.

“நீ கடைசி முறை வந்தபோதே, உன்னிடம் ஏதோ மாற்றம் தெரிஞ்சது? அவனை சந்தித்த விஷயத்தைக்கூட என்னிடம் சொல்லாமல் மறைச்சிருக்கிற இல்ல, எனக்கே தெரியாமல் அவனைக் கல்யாணம் பண்ணிருக்கிற?” என்றவள் கோபத்தில் அந்த அறைக்குள் நடைபயில, யாழினி மௌனமாகவே இருந்தாள்.

கடைசியாக ஒரு முடிவிற்கு வந்த மிருதுளா, “நீ என்னுடன் வா! இன்னைக்கு அவனை உண்டில்லன்னு பண்ணனும்” என்று சொல்ல,

“பிளீஸ் நீ எதுவும் சொல்லாதே மிரு!” அவளைத் தடுக்க யாழினி எவ்வளவோ தூரம் போராடினாள்.

அதையெல்லாம் காதிலேயே வாங்காமல், “உனக்கு காதல் பெருசாக இருக்கலாம், ஆனால் எனக்கு நீதான் முக்கியம். நீ அனுபவித்த கஷ்டத்தை பக்கத்தில் இருந்து பார்த்தவ நான், இப்போ நீயாக கிளம்பி வரீயா? இல்ல நான் ராமிடம் நடந்ததை சொல்லட்டுமா?” என்று கேட்க, வேறு வழியே இல்லாமல், மிருதுளாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.

***

கொஞ்ச நாளாகவே தன் மகனின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்த மீனலோட்சனி, “யாதவ் ஒரு நிமிஷம்!” என்ற அழைப்புடன் அருகே வந்தார்.

தாயின் தீர்க்கமான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் யாதவ் தடுமாறினான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த மீனாலோட்சனி, அவனையும் அமரும்படி சைகை செய்தார்.

அவனும் மறுபேச்சின்றி மெளனமாக அவர் சொன்னதை செய்ய, மீனாவின் பார்வை அவனைத் துளைத்தெடுக்க, “அம்மா ப்ளீஸ் அப்படி பார்க்காதீங்க, ஏதோ கோபத்தில்…” என்றவனை கையமர்த்தி தடுத்தார்.

“உன்னோட வாழ்க்கை நல்ல இருக்கணும்னு, அன்னைக்கு நான் பேசியது உனக்கு எவ்வளவு வலிச்சது! எவ்வளவு தூரம் என்னை வெறுத்து ஒதுக்கி வெச்ச?! பிள்ளைகள் தரும் காயமெல்லாம் தாய்க்கு வலிக்காதுடா!” என்றவர் இடைவெளிவிட, யாதவ் பதில் பேச முடியாமல் மௌனமானான்.

தன் மருமகளின் முகத்தை மனதினுள் கொண்டு வந்த மீனாவோ, “ஆனால் நீ சொன்ன வார்த்தை, அவளை எவ்வளவு தூரம் பாதிச்சிருக்கும்னு யோசி. நீ ஏற்படுத்திய காயத்தை மறந்து அவள் உன்னை உடனே மன்னிக்கணும் என்று எதிர்பார்ப்பது ரொம்ப தப்பு” கண்டிப்புடன் கூற, அவர் சொல்வதை மெளனமாக உள்வாங்கினான்.

‘அம்மா சொல்வதும் உண்மைதானே?’ என்ற எண்ணம் நெஞ்சினில் தோன்ற, அவனது சிந்தனையோட்டம் அறியாமல் தொடர்ந்து பேசினார் மீனா.

“லிவ்விங் டூ கெதர் வாழ்க்கைதான் எனக்கு பிடிக்கும் ஆன்ட்டின்னு கர்வமாக சொன்னவளின் முகத்தில் மருந்துக்கு கூட மலர்ச்சியில்லடா! அன்னைக்கே உன்னை நான் கவனிக்க ஆரம்பிச்சிட்டேன்” என்று அவனைத் திகைப்பில் ஆழ்த்தினார்.

அவரிடம் ஏதோ சொல்ல வந்த மகனைக் கையமர்த்தி தடுத்துவிட்டு, “நீ யாழினியைத் திருமணம் செய்யணும்னு வந்து நின்றபோதே, உன்மேல் சந்தேகம் வந்துச்சு. இவ்வளவு திறமையான பொண்ணு ஏன், அன்னைக்கு அப்படி பேசின என்ற கேள்வி மனசுக்குள் உறுத்திட்டே இருந்துச்சு” என்றார்.

யாதவை புழுவைப் போல பார்த்த மீனாவோ, “என்னிடம் மறைக்காமல் உண்மையைச் சொல்லு. இரண்டாவது முறையாக எதுக்கு அமெரிக்கா போனே?” என்றவர் நேரடியாக விஷயத்திற்கு வர, யாதவ் பதில் சொல்ல திணறினான்.

“இப்போ நீயாக சொல்றீயா? இல்ல” மீனா தீர்க்கமான பார்வையுடன் அவனை நோக்கினார். இரண்டாம் முறை அமெரிக்கா சென்றதில் தொடங்கி, அங்கே நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான்.

அவன் முடிக்கும் வரை பொறுமையை இழுத்துப்பிடித்து அமர்ந்திருந்த மீனா, யாதவ் கன்னத்தில் பளாரென்று ஒரு அறைவிட்டார். அவரிடம் இதை எதிர்பார்க்காத யாதவ் அதிர்ச்சியில் சிலையாக உறைய, மிருதுளாவுடன் வீட்டினுள் நுழைந்த யாழினி, இந்த காட்சியை நேரில் கண்டு, “அத்தை” அவரைத் தடுக்க சென்றாள்.

அவளை அங்கே எதிர்பார்க்காத மீனாலோட்சனி, “நீ முதலில் பக்கத்தில் வராதே! இது அம்மாவுக்கும், மகனுக்கும் நடுவே இருக்கிற பிரச்சனை” அவளைத் தள்ளி நிறுத்தினார்.

மற்றவர்களைப்போல பெற்ற மகன் செய்த தவறை மூடி மறைக்கும் அம்மாவாக இல்லாமல், மீனா மகனைக் கண்டித்தது மிருதுளாவின் மனதை வெகுவாகக் கவர்ந்தது.

‘சபாஷ்!’ அவரின் செயலை மனதினுள் பாராட்டிய மிருதுளாவோ அமைதியாக நின்றுவிட, “உன் மனசில் என்னடா நினைச்சிட்டு இருக்கிற? உன்னை அமெரிக்கா அனுப்பியது படிக்கத்தானே தவிர, அங்கிருக்கும் பழக்கவழக்கங்களைக் கற்று வருவதற்காக இல்ல” என்றார்.

மீனா தனக்காக பேசுவது புரிந்தாலும், அவனைக் காயப்படுத்துவதைப் பார்க்க முடியாமல் யாழினியின் விழிகள் கலங்கியது. அதே நேரத்தில் அவரின் வயத்திற்கு மரியாதை தந்து, எதுவும் பேசாமல் மெளனமாக நின்றாள்.

மிருதுளா சுவாரசியமாக அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க, “ஒரு பெண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டு, எந்தவித உறுத்தலும் இல்லாமல் சர்வசாதாரணமாக இருக்க உன்னால் எப்படி முடியுது?” தாயின் கோபத்தில் நியாயம் இருந்ததால், எதுவும் பேசாமல் மெளனமாக நின்றான்.

தாய் – மகன் சண்டையிடும் காட்சியைப் பார்க்க முடியாமல், இருவரின் பிரிவிற்கு தான் காரணம் ஆனோமே என்ற கழிவிரக்கத்தில் சோபாவில் அமர்ந்து மனதிற்குள் குமிறினாள் யாழினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!