Rose – 3

3dd087ef9a7e3362cdca08fbc9e38773-840b227c

அத்தியாயம் – 3

வானம் கார்மேகங்களால் சூழ்வதைக் கண்ட மீனலோட்சனி, “மழை வருவதற்குள் கொடியில் காயப்போட்ட துணிகளை எடுத்துட்டு வரலாம்!” என்ற எண்ணத்துடன் மாடிக்குச் சென்றார்.

பாதி துணிகளைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் போது கார் வந்து நிற்கும் சத்தம் கவனத்தை ஈர்க்க, “மருத்துவமனையில் இருந்து இவ்வளவு சீக்கிரம் வர மாட்டானே…” வாய்விட்டுப் புலம்பிய மாடியில் இருந்து எட்டிப்பார்க்க, காரின் கதவைத் திறந்து இறங்கிய யாதவ் கோபத்துடன் தோட்டத்திற்கு செல்வதைக் கண்டார்.

தன் மகனைப் பார்வையால் தொடர்ந்த மீனாவின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தாள் மதுரயாழினி. அவர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நிகழ்வதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியவரின் புருவம் முடிச்சிட்டது.

இருவருக்கும் நடுவே என்ன பிரச்சனை என்று புரியாமல் மனம் குழம்பிப் போனது. அவள் சென்ற திசையை இமைக்காமல் நோக்கியபடி சிலையாகி நின்ற மகனைக் கண்டு பெற்ற மனம் தவித்தது.

கொடியில் காய்ந்த துணிகளை எடுத்துகொண்டு அவர் கீழிறங்கிச் செல்ல, நடுஹாலில் இருகரங்களில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவனின் தோற்றம் நெஞ்சைப் பிசைய, “யாதவ்” என்ற தாயின் கனிவான குரல்கேட்டு சட்டென்று நிமிர்ந்தான்.

அவனது பார்வையில் இருந்த ஏதோவொன்று மனதைப் பாதிக்க, “என்ன தலை வலிக்குதா? நான் சூடா காஃபி போட்டு எடுத்துட்டு வரட்டும்மா?” அவர் அக்கறையுடன் கேட்கும்போதே, வேலையாள் கொண்டு வந்து காஃபியைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

தாயின் இதமான பேச்சும், அதில் இழையோடிய அக்கறையும் யாழினியால் காயப்பட்டிருந்த அவனின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவனுள் பழைய யாதவ் எட்டிப் பார்த்தான். அவரது மடியில் தலை சாய்த்து கொள்ள மனம் ஏங்கியது.

அவரிடம் அதைக் கேட்க முடியாமல் யாதவ் காஃபியை பருகிய கையுடன் எழுந்து அறைக்குச் செல்ல, அதைக் கவனித்த மீனா உடைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தன் அறைக்குள் நுழைந்ததும் தனிமை சூழ்ந்துக்கொள்ள, படுக்கையில் அமர்ந்த யாதவ் மனம் அவளைச் சுற்றி மட்டுமே வட்டமிட்டது. ஒரு மாத இடைவெளியில், அவனுக்குள் புதைந்திருந்த காதல் விதை வேர்விட்டு விருட்சமாக வளர்ந்து நின்றது.

தன்னை இவ்வளவு தூரம் வெறுக்கும் அளவிற்கு என்ன தவறு செய்தோம் என்று சிந்திக்கும்போது, அன்று அவன் மனசாட்சி இல்லாமல் பேசியது நினைவிற்கு வந்தது.

“தன் காதலை உணர்ந்து ஒருநாள்கூட ஆகாத நிலையில் அவளது உதாசீனம் என்னை இவ்வளவு தூரம் பாதிக்கிறது என்னும்போது, அன்று உள்ளம் முழுவதும் காதலைச் சுமந்துகொண்டு நின்றவளிடம், தன் பேசிய வார்த்தைகள் அவளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்று இப்போது சிந்திக்கும் போது புரிந்தது.

‘தாய்க்கு நிகராக அன்பைப் பொழிந்தவள், தன் தவறை மன்னித்து மறந்துவிட மாட்டாளா?’ மனம் அவளது அரவணைப்பிற்காக ஏங்கியது.

தந்தையின் இறப்பும், தாயின் பிரிவும் தான் அவனை மனதளவில் வெகுவாக பாதித்த விஷயங்கள். அதன்பிறகு அவன் வாழ்க்கையில் வந்தவர்கள் எல்லோரும் கலைந்து செல்லும் மேகங்கள் போலவே இருந்தால், யாருக்கும் அவன் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர்களின் பிரிவை ஒரு பொருட்டாக மதித்ததும் கிடையாது.

மதுரயாழினியின் எதிர்பாராத சந்திப்பும், அது நெஞ்சினில் ஏற்படுத்திய தாக்கம் அனைத்தும் காதலென்று உணராமல் இருந்தான். தன் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களைப் போலவே, அவளை இயல்பாக கடந்துவிட்டதாக நினைத்தான்.

அது அவ்வளவு சுலபமான விஷயமன்று என, அவளைப் பிரிந்து வந்த பிறகே உணர்ந்தான். அமெரிக்கா நாட்டின் கலாச்சாரம் மீது ஏற்பட்ட ஈர்ப்புதான், தன் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பிழையை செய்ய காரணமாக இருந்திருக்கிறது என்ற உண்மை மனதைச் சுட்டது.

தன்னவளின் வெறுப்பு, கோபம், உதாசீனம் அனைத்திற்கும் தன் செயலே காரணமென்று தெரிந்ததும், ‘அவள் கொடுக்கும் வலியை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை’ என்ற முடிவிற்கு வந்தவன், அவளோடு வாழ்ந்த நாட்களின் நினைவில் படுக்கையில் சரிந்து விழி மூடினான்.

இரு விழிகளின் நடுவே வந்து நின்றவளின் பிம்பம், அவனது கன்னம் கிள்ளி சிரித்து, காற்றில் அசைந்த தலைமுடியில் விரல் நுழைத்து கோதியது. நெஞ்சினில் பசுமையாக மணம் வீசிய அவளின் நினைவுகள் அவனைத் தாலாட்டிட, தன்னையும் மறந்து உறங்கினான்.  

அடுத்தடுத்து வந்த நாட்கள் இயல்பாகக் கழிய, கீர்த்தனாவின் திருமண நாளும் இனிதாகவே விடிந்தது. அந்த பிரமாண்டமான மண்டபத்தின் மணவறையில் மாப்பிள்ளையாக வீற்றிருந்த அரவிந்தன், ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.

இரு வீட்டின் சொந்தங்களும் மண்டபத்தில் கூடியிருக்க, மணப்பெண் அலங்காரத்தில் மேடை ஏறிய கீர்த்தனா அவனது அருகில் அமர்ந்தாள். இருவரின் ஜோடிப்பொருத்தம் மனதிற்கு நிறைவைக் கொடுக்க, முதல் வரிசையில் அமர்ந்து அந்த திருமண நிகழ்வை ரசிக்க தொடங்கினாள் மதுரயாழினி.

இந்திய திருமணம் பற்றி ராம்குமாரின் மூலமாக அறிந்திருந்தாலும், இன்று அதன் பின்னிருக்கும் பல விஷயங்களையும், சடங்குகளையும் கண்டு இமைக்கமறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன்னருகே யாரோ வந்து அமரும் ஆராவாரம்கேட்டு திரும்பிப் பார்க்க, அந்த பெண்மணியின் முகம் பரிட்சையமானதாக தோன்றியது. அவளைப் பார்த்து அவர் சிநேகமாகச் சிரிக்க, அவளின் உதடுகளும் புன்னகையில் பூப்போல விரிந்தன.

அவரது முகசாயல் அவனை நினைவுப்படுத்தும் போதே, “அம்மா வாங்க…” என்ற அழைப்புடன் அங்கே வந்தான் ராம்குமார்.

பட்டுவேட்டி சட்டையில் நின்றவனைக் கண்டவுடன், “தங்கை திருமணம் என்றவுடன் உன்னைக் கையிலேயே பிடிக்க முடியல!” என்றார்.

மீனாவின் வார்த்தைகளில் தெரிந்த கனிவு மனதிற்கு நிம்மதியைக் கொடுக்க, “என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க… அங்கே பாருங்க உங்க மகனை!” அவர் கைகாட்டிய திசையில் யாதவ் கிருஷ்ணா பம்பரமாகச் சுழன்று மற்றவர்களை வரவேற்று உபசரிப்பதைக் கண்டு, அவரின் மனம் நிறைந்தது.

“கீர்த்தனாவிற்கு இரண்டு அண்ணன்!” என்றார் புன்னகையுடன்.

அவர் சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தவன், “அது என்னவோ உண்மைதான்” என்றான் ராம்.

அதே சமயம் யாதவை விழிகளால் தொடர்ந்த யாழினி மனமோ, ‘அத்தனை உண்மைகளையும் மறைத்து அடுக்கடுக்காகப் பொய் சொல்லி, ச்சே நினைக்கவே அருவருப்பாக இருக்கு…’ என்றவள் நினைத்தும் அவனின் மீதான வெறுப்பு பன்மடங்காகப் பெருகியது.

அவளது சிந்தனையோட்டத்தை உணராமல், “அப்புறம் அம்மா இவ என்னோட இன்னொரு தங்கை மதுரயாழினி” மீனாவிற்கு அவளை அறிமுகப்படுத்தினான் ராம்.

வாடாமல்லி நிற பட்டுச்சேலையைப் பந்தமாக உடுத்திக்கொண்டு, கம்பீரமாக அமர்ந்திருந்தவளின் நிமிர்வு மனத்தைக் கவர்ந்தது. அத்துடன் நீல கருங்கூந்தலை பின்னலிட்டு மல்லிகைப் பூவைச் சூடி, நெற்றியில் வட்ட பொட்டு வைத்து, காதில் ஜிமிக்கி அணிந்து, மூக்குத்தி மின்ன அளவான ஒப்பனையில் தேவதைபோல காட்சியளித்த பெண்ணை பார்த்து இமைக்க மறந்தார்.

அவன் ஏதோ அவரிடம் சொல்ல நினைக்க, “ராம் இங்கே ஒரு நிமிஷம் வாப்பா” என்ற தந்தையின் குரல்கேட்டு, அவன் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான்.

அவளை அடையாளம் கண்டுகொண்டதற்கு அடையாளமாக அவரின் விழிகளில் மின்ன, “நான் யாதவ் கிருஷ்ணாவின் அம்மா. என் பெயர் மீனலோட்சனி” தன்னை அறிமுகம் செய்து கொள்ள, அவனின் மீதிருந்த கோபம் முழுவதும் அவரின் பக்கம் திரும்பியது.

யாதவ் செய்த தவறுக்கு அவரை உண்டில்லை என்று ஆக்கிவிடும் நோக்கத்துடன் அவரின் பக்கம் திரும்ப, “உன்னை இதுக்கு முன்பு இங்கே பார்த்ததே இல்லையே…” என்றார்.

தன்னவன் செய்த தவறுக்கு இவரை தண்டித்து ஆகப்போவது என்னவென்று நினைத்தவள், தன் மனக்கசப்புகளை ஓரம்கட்டிவிட்டு அவரிடம் இயல்பாக பேச முடிவெடுத்து, “நான் அமெரிக்கா ஆன்ட்டி. கீர்த்தனாவின் கல்யாணத்திற்காக வந்திருக்கிறேன்” என்றாள். 

“ஓ! எங்களுக்கு ஊட்டிதான் பூர்வீகம். கோகுலம் எஸ்டேட் என்று சொன்னால், இந்த ஊருக்குள் தெரியாத ஆட்களே இருக்க முடியாது” அதை சொல்லும்போது அவரின் குரலில் இருந்த கர்வத்தைக் கண்டு கொண்டாள் யாழினி.

அவளது பெற்றவர்களைப் பற்றி விசாரிக்க, “அம்மா முகம் பார்த்ததே இல்ல. அப்பா இப்போ சமீபத்தில் தான்…” அதுக்குமேல் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

சட்டென்று யாழினியின் கரம்பிடித்து, “அப்பா உன்னோடுதான் இருப்பாருன்னு நினைச்சுக்கோ. பிறந்தவர்கள் ஒருநாள் இறப்பது இயல்பு. அதனால் முடிந்தவரை நடந்ததை மறக்கப்பாரு” அவளுக்கு ஆறுதல் சொல்லும் காட்சியைத் தூரத்தில் நின்று பார்த்தான் யாதவ்.

சிறிதுநேரத்தில் அனைத்தையும் மறந்து அவருடன் இயல்பாகப் பேசி சிரித்தவளின் அருகாமை வேண்டுமென்று மனம் அடம்பிடிக்க, இரண்டே எட்டில் அவளை நெருங்கிய யாதவ் அவளின் இடதுபுறம் இயல்பாக அமர்ந்தான்.

‘இவன் இந்த பெண்ணை விரும்புகிறானோ?’ மீனாவின் பார்வை மகனை நோட்டம்விட, அதைக் கண்டுகொள்ளாமல் சாந்தமாக அமர்ந்து இருந்தவனைக் கண்டு, யாழினிக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கு ஏறியது.

அதைக் காட்ட முடியாமல் இருக்கும் இடம் அவளைத் தடுக்க, “யாழினி இப்படி கேட்கிறேனே என்று தவறாக நினைக்காதே!” பீடிகையுடன் தொடங்கிய தாயின் குரலில் இருந்த மாற்றம் அவனை சிந்திக்க வைக்க, யாழினி அவரைக் கேள்வியாக நோக்கினாள்.

“உன்னைப் பார்த்தும் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. என் மகனை நீ கல்யாணம் செய்து கொள்கிறாயா?” என்று கேட்டவரின் பார்வை யாதவ் முகத்திலேயே நிலைக்க, அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

தன் தாய் மனதைப் படிக்க முயல்வதைக் கண்டு, “அம்மா” அவன் அதட்டியவனின் குரல்கேட்டு சட்டென்று சுதாரித்தாள் யாழினி.

தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிட மனமின்றி, “நான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பெண். எனக்கு இந்த காதல், கல்யாணம் இவற்றின் மீது நம்பிக்கையே இல்லை. பிடிக்கும் வரை சேர்ந்து வாழ்வது, பிடிக்கவில்லை என்றால் குட் பாய் சொல்லி பிரிந்து செல்லும் லிவ்விங் டூ கெதர் ஃலைப் தான் எனக்கு பிடிக்கும்” என்றவள் பார்வை யாதவ் மீது அழுத்தத்துடன் படிந்து மீள, அதைக் கேட்டு மீனாவின் முகம் வாடிப் போனது.

தன் சொன்ன வார்த்தைகளை ஒரு வரி மாற்றாமல் திரும்ப படித்தவளைக் கண்டு அதிர்ந்துப் போனான். மீனாவின் பார்வையில் இருந்தே, ‘இவரின் மனதில் தரம் தாழ்ந்து போகிறேனே…’ பெருமூச்சுடன் நினைத்தவளின் கவனம் மேடையின் பக்கம் திரும்பியது.

இதே வாக்கியத்தை மகன் சொன்னது ஞாபகம் வரவே, ‘ஒருவேளை இருவரும் காதலர்களாக இருப்பார்களோ?! கருத்து வேறுபாட்டின் காரணமாக, அவர்களுக்கு நடுவே பிளவு ஏற்பட்டதோ?’ என்ற சந்தேகம் மனதில் எழவே, அவரது பார்வை யாதவ் மீது படிந்து மீண்டது.

அவனது அதிர்ந்த முகமே அவருக்குத் தேவையான பதிலைக் கொடுக்க,   “இந்திய கலாச்சாரம் மீது கொண்ட ஈடுபாட்டினால், தமிழ் கற்றுக் கொண்டதாக சொன்னே! இப்போ இப்படி சட்டென்று மாற்றி பேசுகிறாயே..” அவளை ஆழம் பார்த்தார்.

“நீங்க சொல்வது உண்மைத்தான் ஆன்ட்டி. அதுக்காக, கணவனே கண்கண்ட தெய்வம் என நினைத்து, காலம் முழுக்க அவனுக்கு பணிவிடைகள் செய்து வாழ என்னால் முடியாது. அதனால் தான் அப்படிச் சொன்னேன்” சிரித்தபடி விளக்கம் கொடுக்க, யாதவ் முகம் சட்டென்று மாறியது.

தன் தாயை முறைத்த யாதவ், “அவங்களுக்கு தேவை இல்லாமல் நீ எதுக்காக விளக்கம் கொடுக்கிற?” அடிக்குரலில் அவளிடம் சீற,  சட்டென்று திரும்பி அவனை தீப்பார்வை பார்த்தாள் யாழினி.

“குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதோ?” என்றவளின் உதடுகளில் கசந்த புன்னகைத் தோன்றி மறைய, அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்தான் யாதவ்.

இருவரின் பேச்சையும் கண்டும் காணாமல் கவனித்த மீனாவின் சந்தேகம் உறுதியாக, “கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” ஐயரின் குரல்கேட்டு அவன் நிமிர அரவிந்தன் – கீர்த்தனாவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டு நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துவிடும் காட்சியை கண்டான்.  

அந்த காட்சி மனதைப் பிசைய, தன்னவளைத் திரும்பிப் பார்க்கநான்கு விழிகளும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது. யாழினியின் உதடுகள் துடிக்க, அவளது விழிகளில் கண்ணீர் திரண்டது.

அதை யாதவ் பார்வையில் இருந்து மறைக்க நினைத்தவள் பட்டென்று இருக்கையைவிட்டு எழுந்து  மண்டபத்தின் வாசலுக்கு விரைய, “யாழினி” அவளின் பின்னோடு செல்ல நினைத்த மகனின் கரம்பிடித்து தடுத்தார் மீனா.

“இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என்றான் எரிச்சலோடு.

மற்றவர்களின் கவனத்தைக் கவராத வகையில், “அவ பின்னாடி போகும் எண்ணம் இருந்தால், அதை இப்போவே மறந்துவிடு!” பார்வையை மாற்றாமல், அவனுக்கு கட்டளையைப் பிறப்பித்தார்.

அவர் உதட்டளவில் சொன்ன விஷயம் உயிர் வரை ஊடுருவிச் செல்ல, “இந்த நிமிஷம் இங்கே என்ன பிரச்சனை நடந்திட்டு இருக்குன்னு தெரியாமல், அவளோட குணத்தைத் தவறாக எடைப் போடாதீங்க” முகத்திற்கு நேராக விரல் நீட்டி எச்சரித்தவனின் விழிகளில் வழிந்த காதல், அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது.

அதற்குள் மற்றவர்கள் சாப்பிட எழுந்து செல்ல, “ஓரிடத்தில் ஒருவர் பேசுவதற்கு பின்னோடு ஆயிரம் காரணம் இருக்கும். அதுக்கான காரணம் என்னவென்று ஆராயாமல், அவர்களின் குணம் தவறென்று முடிவெடுப்பது தானே மனித இயல்பு. அதுக்கு நீங்க மட்டும் என்ன விதிவிலக்கா?” என்றவன் பார்வையில் தான் இன்னும் கீழிறங்கிப் போனதை அதிர்ச்சியுடன் உள்வாங்கினார் மீனா.

“என்னவள் குணத்தில் புடம்போட்ட தங்கம். அவளைத் தவறாக பேசினால், அவங்க நாக்கு அழுகிப் போயிடும்” என்றான் அழுத்தமாகவே.

அவனிடம் இருந்து உண்மையை வரவழைத்துவிடும் நோக்கத்தில்,  “யாழினியை உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்றார் திகைப்பு மாறாத குரலில்.

“அவ என்னோட உயிர் மா” ஒற்றை வரியில் அவரின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் தந்தான்.  அந்த வாக்கியத்தைச் சொல்லும்போது அவன் கண்ணில் தெரிந்த மின்னல் மின்னியது. அவனது மொத்த காதலையும் ஒற்றை வார்த்தையில் வெளிபடுத்திவிட்டு, தன்னவளைத் தேடிக்கொண்டு வாசலுக்கு விரைந்தான்.

தன் மகனின் வாய்மொழியாக அவன் மனதை அறிந்த தாயுள்ளம், அவர்களை வாழ்க்கையில் இணைக்கும் வழியைப் பற்றி சிந்திக்க தொடங்கியது.