Rose – 29

20119200c6037d1-36420a60

Rose – 29

அத்தியாயம் – 29

தன் மகன் என்றோ ஒருநாள் தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தவரால், யாதவ் செய்த காரியத்தை மன்னிக்க முடியவில்லை. ஒரு பெண்ணிற்கு துரோகம் செய்யும் அளவிற்கு, தன்னுடைய வளர்ப்பு இருந்திருக்கிறது என்ற எண்ணமே அவரைக் கொள்ளாமல் கொன்றது.

அவன் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக இழந்த மீனா, “அவரவர் இஷ்டம்போல் வாழ்வதுக்கு பேர் வாழ்க்கையே இல்ல. லிவ்விங் ரிலேஷன்ஷிப் தூரத்தில் நின்று பார்க்க நல்லா இருக்குமே தவிர, நம்ம கலாச்சாரத்திற்கு அதுவொரு கருப்பு புள்ளிதான்” நிதானமாக வார்த்தைகளைவிட, யாழினி கரங்களுக்குள் முகத்தை புதைத்து கண்ணீரை அடக்கினாள்.

யாதவ் பதிலே பேசாமல் அமைதியாக இருக்க, “கணவன் – மனைவி சண்டையில் தலையிட, யாருக்கும் உரிமை இல்லத்தான். ஆனால் நீ செய்த தவறைத் தட்டிக் கேட்க, ஒரு தாயாக எனக்கு உரிமை இருக்கு” மீனா இடைவெளிவிட, மிருதுளாவின் பார்வை வியப்பைக் காட்டியது.

“அவளை தவிக்க விட்டுட்டு வந்த உன்னைக் கொன்று போடும் அளவுக்கு வெறி வருது. ஆனால் அப்படிப் பார்த்தால், உனக்கு பண்பாட்டை சொல்லி வளர்க்காத நான்தான் தண்டனை அனுபவிக்கணும்” சற்று தள்ளி அமர்ந்திருந்த யாழினியின் மீது படிந்தது.

தன்னுடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தவளின் அருகே சென்று, “சாரிடா! என் வளர்ப்பு சரியில்லன்னு ரொம்ப தாமதமாக உணரும்போது மனசு ரொம்ப வலிக்குது!” மீனாவின் குரலில் ஏதோவொன்று உடையா, யாதவ் தாயை அடிபட்ட பார்வைப் பார்த்தான்.

தாய் – மகன் இருவருக்கும் நடுவே பிளவை ஏற்படுத்த விரும்பாமல், “உங்க வளர்ப்பில் எந்த தவறும் இல்லங்க அத்தை. இன்று எத்தனை ஆண்கள் காதலென்ற பெயரில் நிறைய பெண்களை ஏமாற்றிவிட்டு போறாங்க.ஆனால் உங்க மகன் அப்படியில்ல” தன்னவனுக்காக வாதாடினாள்.

மீனலோட்சனியை நிமிர்ந்து பார்த்த யாழினி, “அவர் நினைச்சிருந்தால் ஏதோவொரு பெண்ணுடன் இதே ஊரில் உங்க கண்முன்னாடி லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்ந்திருக்கலாம். அவர் ஏன் என்னைத் தேடி வரணும்?” நிதானமாகக் கேட்க, மிருதுளாவின் புருவங்கள் முடிச்சிட்டது.

“அவன் கண்முன்னாடி நீ நடமாடினால் தான், என் மகன் திருமணம் செய்ய சம்மதிச்சான். இதுவே நீ அமெரிக்காவில் இருந்திருந்தால்?!” மீனா வாக்கியத்தை முடிக்காமல் பாதியில் நிறுத்த, மிருதுளாவின் பார்வை யாழினியின் மீது படிந்தது.

தன்னவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அவரோட மனம் உங்களிடம் எதிர்பார்த்து தாய்மையை மட்டுமே! நீங்க விலகிப் போனபிறகு, ஒருவிதமான பாதுகாப்பற்ற உணர்வில் அவரும் இறுகிப் போயிட்டார்” இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“அவர் உங்களிடம் எதிர்பார்த்து அன்பான அரவணைப்பும், ஆறுதல் மட்டுமே! அது என்னிடம் கிடைக்கும் என்ற எண்ணம் தான், அவரை அமெரிக்காவிற்கு இழுத்து வந்தது. அவரோட கொள்கை, கோட்பாட்டை மறந்து என்னோடு வாழவும் வைத்தது” தான் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாகக் கூறினாள்.

‘இவ்வளவு நல்ல பெண்ணைத் தவறாக எடைப் போட்டு விட்டேனே’ மாமியார் மனதிற்குள் மறுகிட, யாதவ் பார்வை யாழினியைவிட்டு அசைய மறுத்தது.

அவளது பேச்சில் உணர்ந்த மிருதுளா மௌனம் சாதிக்க, “உங்க வளர்ப்பு சரியாகத்தான் அத்தை இருந்திருக்கு. ஒரு சிகரெட் பழக்கமோ, டிரிங் பழக்கமோ இவரிடம் இல்ல” உதட்டில் புன்னகை அரும்பியது.

தான் பேசுவதை இமைக்காமல் நோக்கிய யாதவைப் பார்த்து, “உங்க மகனை அடிக்கவோ, கடிந்துகொள்ளவோ உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனால் என் கண்முன்னாடி அதை செய்யாதீங்க, அதைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை” என்றாள்.

அங்கே வெறும் பார்வையாளராக நின்றிருந்த மிருதுளாவிற்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. மற்றவர்கள் முன்பு யாதவை வெறுத்தாலும், அவளின் ஆழ்மனதில் காதல் இறக்கவில்லை. அவனை யாருக்காகவும், எதுக்காகவும் அவள் விட்டுத்தர தயாராக இல்லை.

யாழினி பேசும் ஒவ்வொரு வார்த்தையும், தன்மீது கொண்ட காதலை உணர்ந்தான். தனக்கானவள் என்ற வார்த்தையின் அர்த்தம் புரிய, அவன் மனதை நெகிழ்ந்தது.

தன் தவறை மன்னிக்காமல் இருக்கின்ற யாழினி, தன் தாய் திட்டுவதை ஏற்க முடியவில்லை. அதுவே அவளின் காதலின் அளவைக் காட்டிக் கொடுக்க, அவளை கண்ணுக்குள் பொத்தி பாதுக்காக்க வேண்டுமென்று உள்ளம் ஏங்கியது.

தன் மருமகளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, “இன்னைக்கு ரெண்டில் ஒன்று பார்க்கலாம்னு வந்தேன் ஆன்ட்டி. ஆனால் நீங்க எனக்குமேல் அதிரடியாக இருக்கீங்க” என்றாள் சிறுபுன்னகையுடன்.

மிருதுளாவின் குரல்கேட்டு திரும்பிய மீனாவோ, “இந்த பொண்ணு யாரு?” மருமகளிடம் விசாரித்தார்.

“இவ மிருதுளா அத்தை. என்னோட பிரெண்ட்” இருவருக்கும் பரஸ்பர அறிமுகம் செய்து வைக்க, இம்முறை நிதானமாக அவளை ஏறிட்டார்.

ஏனோ அவளைப் பார்த்தும் பிடித்துப் போக, “ஸாரிம்மா! இங்கே நடந்த பிரச்சனையில் உன்னைக் கவனிக்கவே மறந்துட்டேன். நீங்க உட்கார்ந்து பேசிட்டு இருங்க, நான் போய் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” சமையலறை நோக்கிச் சென்றார் மீனலோட்சனி.

யாதவ் கிருஷ்ணா – மதுர யாழினி மற்றும் மிருதுளா மூவரும் தனித்து விடப்பட்டனர். அங்கே நிலவிய இறுக்கமான சூழ்நிலையைக் கலைக்கும் விதமாக, “உங்கமேல் எனக்கு கோபம் அதிகம் இருந்துச்சு, ஆனால் இப்போது இல்லண்ணா. இவ்வளவு நடந்த பிறகும், யாழினி உங்களைக் கல்யாணம் செய்து முட்டாள்தனம் செய்துவிட்டாளோ என்ற எண்ணத்தில் இங்கே வந்தேன்” சிறிது இடைவெளிவிட்டாள்.

யாழினி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும்படி சமிஞ்சை செய்ய, “அவளை ஏன் பேச வேண்டாம்னு தடுக்கிற?” யாதவ் அதட்டல் போட்டான்.

சமையலறையில் இருந்து மூவரையும் கவனித்த மீனா, “யாழினி இங்கே வாம்மா” என்று அழைக்க, இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்று எழுந்து சென்றுவிட்டாள்.

தன்னவளைப் பார்வையால் பின்தொடர்ந்த யாதவிடம், “மீனாம்மா மாதிரி ஒருத்தங்களுக்கு மகனாக பிறந்துட்டு, நீங்க எப்படி தவறு செய்தீங்கன்னு புரியல. அதை நீங்க திருத்திக் கொண்டதால், உங்களை மன்னித்து விடுகிறேன்” ஆரம்பிக்கும் போது சீரியசாக தொடங்கி, கிண்டலில் முடித்தாள்.

மிருதுளாவை ஒரு தங்கையாகப் பாவித்திருந்த யாதவ், “தேங்க்ஸ் மா! நானும் அவளை சரியாகப் புரிஞ்சிக்கலன்னு இப்போதான் புரியுது!” உள்ளங்கை ரேகையை ஆராய்ந்தபடி கூறினான். மீனாவுடன் கலகலப்பாக உரையாடும் யாழினியின் குரல் ஹாலை எட்டியது.

“நீங்க உங்க மகனை அடித்ததுக்கு, இன்னைக்கு என்னோட ட்ரீட். நான் குலாப்ஜாமுன் செய்து தர்றேன்” யாழினி கிண்டலாகக் கூற,

“நீ ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சு ஏமாந்துட்டேனே! இரு யாதவிடம் சொல்லி உன் கொழுப்பைக் குறைக்க சொல்றேன்” மீனலோட்சனி செல்லமாக அவளின் தலையில் தாட்டினார்.

“உங்க மகன் அப்படியே நீங்க சொன்னதும் கேட்டுவிட்டுதான் மறுவேலை பாப்பாரு! அட போங்க அத்தை” அவளும் விளையாட்டாக பேச, இந்த காட்சியை நேரில் கண்ட மிருதுளாவின் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“அவளால் உங்களை எப்போதும் வெறுக்க முடியாது அண்ணா. இந்த ஊரிலேயே இருக்க அவளுக்கொரு பிடிப்பு வேணும், பக்கத்தில் சண்டை போட நீங்க வேணும்னு திட்டம் போட்டு நிறுவனத்தை வாங்கி இருக்கிறாள்” இலகுவாக விஷயத்தை யூகித்துவிட, அவனது முகம் பளிச்சென்று பிரகாசமானது.

யாதவ் சத்தமில்லாமல் தனக்குள் சிரித்துகொண்டு நிமிர, “என் முன்னாடி அம்மா உங்களை அடிச்சிட்டாங்க என்ற கோபம் வரலயா அண்ணா” மிருதுளா தயக்கத்துடன் கேட்க, அவனின் தலை மறுப்பாக அசைந்தது.

“அன்றைய சூழலில் சகலமும் நானென்று என்னை சார்ந்து இருந்தவளை, தனியாக தவிக்க விட்டுட்டு வந்த எனக்கு பனிஷ்மெண்ட் யார் தருவா? அதை அம்மா தந்ததில், எனக்கு கொஞ்சம் திருப்தி. எல்லோரும் விருப்பம்போல வாழ தொடங்கிவிட்டால், அடுத்த தலைமுறைன்னு ஒன்னு இருக்காதுன்னு இன்னைக்கு நல்ல புரிய வச்சிட்டாங்க” அந்த நிலையிலும் தாயை விட்டுகொடுக்காமல் பேசினான்.

தான் அங்கிருந்து வந்தபிறகு அங்கே என்ன நடந்தது என்று மிருதுளாவிடம் கேட்க வாயெடுக்க, “அண்ணா உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேசணும்” என்றாள்.

யாதவ் பார்வை சமையலறையை நோக்கிச் செல்ல, “அவங்க ஏதாவது ஸ்வீட் செய்து எடுத்துட்டு வர லேட் ஆகும்” மிருதுளா கூற, இருவரும் தோட்டத்திற்குச் சென்றனர்.

வானம் விரிந்து காணப்பட, பொதி மேகங்கள் ஊர்கோலம் போனது. சில்லென்று காற்று வந்து உடலைத் தழுவிச் சென்றது. தோட்டத்தில் பூத்திருந்த பூக்களை ரசனையுடன் ஏறிட்ட மிருதுளா, இதை எப்படி சொல்வது என்று மனதிற்குள் ஒத்திகைப் பார்த்தாள்.

மீனலோட்சனியுடன் பேசினாலும் யாழினியின் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, ‘மிரு மட்டும் உண்மையைச் சொன்னால், இங்கே இன்னொரு பிரச்சனை வருமே! நான் வேண்டுமென்றே மறைத்தேன்னு யாதவ் கேட்டால் என்ன சொல்றது?!’ அவள் சிந்தனை எங்கோ சென்றது.

சமையலறையில் நின்றிருந்தவளின் முகத்தில் வந்து போகும் உணர்வை உன்னிப்பாக கவனித்த யாதவ், “என்னவோ பேசணும்னு சொன்னே” என்று எடுத்துக் கொடுத்தான்.

சட்டென்று அவனை நிமிர்ந்து நோக்கிய மிருதுளா, “நயாகரா போயிட்டு கனடா போனவள், என்னோட வொர்க் எல்லாம் முடிச்சிட்டு நியூ யார்க் அன்னைக்கு தான் வந்து சேர்ந்தேன். நான் போய் பார்க்கும்போது, யாழினி அவளோட அப்பா ரூமில் இரத்த வெள்ளத்தில் துடிச்சிட்டு இருந்தாண்ணா” என்றவள் குரல் உடைய, யாதவிற்குத் தூக்கிவாரிப் போட்டது.

அந்தநாள் நினைவில் வந்துபோக, அவனின் மனம் வேகமாகக் கணக்குப் போட்டது. மருத்துவன் என்பதால் அதைக் கண்டுபிடிக்க அதிகமாக யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போக, ‘குழந்தையா?!’ நினைத்ததும், சில்லென்ற உணர்வு அவன் நெஞ்சில் பரவியது.

அவன் முகத்தில் வந்துபோகும் உணர்வைப் படித்த மிருதுளா, “மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தால், குழந்தை அப்பார்ட் இறந்து போயிடுச்சு. யாழினிக்கு மயக்கம் தெளிந்தபிறகு விசாரித்த பிறகுதான், அனைத்து விஷயமும் எனக்கு தெரிய வந்துச்சு” என்றாள்.

இத்தனை நாளாக யாழினி கேட்ட கேள்விக்கு, இன்று பதில் கிடைத்தது. ஆனால் உள்ளுக்குள் ஏதோவொன்று நொறுக்கும் உணர்வு எழவே, ‘அந்த நிலையில் விட்டுட்டு வந்திருக்கேனே! அவ எவ்வளவு தூரம் வலியால் துடிச்சிருப்பாள். அதை உணராமல் நானும் வார்த்தையால் அவளை நோகடித்துவிட்டேனே’ மனதில் நினைத்தவன், தலையில் அடித்துக் கொண்டான்.

“குழந்தை இழப்பில் இருந்து அவளால் மீண்டு வரமுடியாமல் ரொம்ப துடிச்சுப் போயிட்டாள். ஏற்கனவே அவ தனிமையில் தள்ளப்பட்டு, கிட்டதட்ட மனநோயாளி நிலைக்கு போனவளை மீட்டெடுக்க, நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அவளுக்கு டாக்டர் கொடுத்த பெஸ்ட் ட்ரீட்மென்ட் களிமண் சுவரோவியம் தான்” மிருதுளா சொல்வதைக் கேட்டு, யாதவ் குற்றஉணர்வு இன்னும் அதிகரித்தது.

அவனது முகத்தில் வந்து போகும் உணர்வைப் படித்தவளோ, “இவ்வளவுக்கு பிறகும் அவள் உங்களைக் கல்யாணம் செய்ய ஒரே காரணம் அவளோட காதல் தான். இதுவரை நடந்ததை மறந்துட்டு, இனிமேல் அவளை சந்தோசமாக வச்சுக்கோங்க” அறிவுரை வழங்கிவிட்டு அவள் அங்கிருந்து நகர, யாதவ் தலை சம்மதமாக ஆடியது.

அதற்குள் யாழினி மூலமாக சிவசந்திரனின் குடும்பத்தினருக்கு தகவல் போய்விட, கொஞ்ச நேரத்தில் அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அத்தனை வலி வேதனைகளைத் தனக்குள் புதைத்துக்கொண்டு, தன் கண்முன்னாடி சிரித்த முகமாக நடமாடும் யாழினியைப் பார்க்கும்போது மனம் வலித்தது.

 மருத்துவமனையில் லீவ் சொல்லிவிட்டு ராம்குமாரும் அங்கே வந்து சேர, “அப்புறம் அண்ணா கல்யாண சாப்பாடு எப்போ போட போறே” யாழினி வழக்கம்போல வம்பிற்கு இழுக்க, மிருதுளா வெட்கத்தில் தலைக் குனிந்தாள்.

அதைக் கவனித்த யாதவிற்கு அப்போதுதான் விஷயம் புரிய, “அடப்பாவி! நீ காதலிச்ச விஷயத்தை என்னிடம் சொல்லவே இல்ல” ராம்குமாரைப் பார்த்து பொய்யாக முறைத்தான்.

யாதவ் பார்வை தன்னவளைச் சுற்றியே வட்டமிட, கணவன் பார்வையை உணராமல் வந்தவர்களை உபசரித்தாள் யாழினி. தன்னவளிடம் மன்னிப்பு கேட்க சொல்லி மனம் அறிவுரை வழங்க, அவனால் அதை செய்ய முடியவில்லை.

‘தன்னுடைய மன்னிப்பு என்னும் வார்த்தையால், வாழ்க்கையில் நடந்ததை மாற்ற இயலாது. அதனால் தன்னவள் அனுபவித்த வலியைத் திரும்ப பெறவும் முடியாது. மன்னிப்பு என்பது தப்பிக்கும் கருவி மட்டுமே தவிர, அது சரியான தீர்வு அல்ல’ என்று மனம் அறிவுறுத்தியது.

சிவசந்திரன் – வைஜெயந்தி மற்றும் மீனலோட்சனி மூவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ள, யாதவ் – யாழினி இருவரும் சேர்ந்து ராம்குமாரை கேலி செய்தனர்.  அங்கே சந்தோசம் இரட்டிப்பாக மாற, அன்றைய பொழுது நில்லாமல் ஓடி மறைந்தது.

அனைவரும் இரவு உணவை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் செல்ல, யாதவ் மாடிப்படிகளில் ஏறி மேலே சென்றான். மீனலோட்சனிக்கு மகன் மீது கோபம் இருந்தாலும், யாழினியை ஏமாற்றாமல் திருமணம் செய்தது அவரை சிந்திக்க வைத்தது.

யாழினி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் காதோரம் ரீங்காரமிட, ‘இதெல்லாம் நடக்கனும்னு விதி இருந்திருக்கும், இனிமேல் ரெண்டு பேரும் சந்தோசமாக இருக்கட்டும்’ என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டார் மீனா.

சமையலறையை ஒதுக்கி வைத்துவிட்டு வெளியே வந்த யாழினியிடம், “நீ மேலே போக வேண்டாம், என்னோட ரூமில் போய் தூங்கு! அங்கே தனியறையில் அடைந்து இன்னும் உன்னோட உடல்நிலையை மோசமாக்கிக் கொள்ளாதே” கண்டிப்புடன் கூற, அவளது பார்வையில் ஒருவிதமான தடுமாற்றம் வந்து போனது.

இன்று காலையிலிருந்து நடந்த அனைத்தும் மனத்திரையில் படமாக ஓட, “நான் என்னோட ரூமிற்கே போறேன் அத்தை. இனிமேல் என்னை நானே தனிமைப்படுத்திக்க மாட்டேன்” அவளிடமிருந்து பதில் உடனே வந்தது.

மீனலோட்சனிக்கு அவளின் மனநிலை புரியவே, அவரும் உடனே சம்மதித்தார். அவரின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு, “என் செல்ல அத்தை” என்று சீராட்டிவிட்டு மாடியேறிச் சென்றாள். அவளது குழந்தைத்தனம் கண்டு தனக்குள் சிரித்த மீனா அங்கிருந்து நகர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!