Rose – 7

Rose – 7
அத்தியாயம் – 7
அடுத்தடுத்து வந்த நாட்கள் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவே கழிந்தது. மதுரயாழினி சௌந்தர்யாவின் உதவியோடு, தேயிலை பேக்டரியை திறமையாக நிர்வாகம் செய்யக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினாள்.
பேக்டரியில் வேலை செய்யும் நபர்களுக்கு முககவசம், கையுறை போன்ற உடைகளை வாங்கி அதை கட்டாயம் அனைவரும் அணிய வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தாள். அங்கே வேலை செய்பவர்களின் மெடிக்கல் செலவுகளை மனதில்கொண்டு இன்சுரன்ஸ் எடுக்க ஏற்பாடுகள் செய்தாள்.
ஏற்கனவே எம்.பி.ஏ. படித்து நிர்வாகம் செய்த யாழினி, யாரை எப்படி தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்ற கலையைக் கற்றிருந்தாள்.
அதனால் மனிதர்களின் மனம் நோகாமல் ஒரு விஷயத்தை சொல்லிவிடுவாள். அவளின் நிர்வாகத்திறமை கண்டு சௌந்தர்யாவே கொஞ்சம் திணறிப் போனார் என்றே சொல்லலாம்.
சூரியன் சுள்ளென்று சுட்டெரித்தாலும், அந்த ஊரில் வெயிலின் தாக்கம் துளியும் இல்லை. எட்டி பிடிக்கும் தூரத்தில் பொதி மேகங்கள் ஊர்வலம் செல்ல, சில்லென்ற காற்று வந்து அவளின் உடலைத் தழுவிச் சென்றதில் தன்னிலை மறந்தாள்.
தேயிலை தோட்டத்தில் நின்றிருந்த பெண்களை விரட்டி ஒருவர் வேலை வாங்கிக் கொண்டிருக்க, “இன்னைக்கு தேயிலைப் பற்றி கிளாஸ் எடுக்க போறீங்களா?” தன்னருகே நடந்து வந்த சௌந்தர்யாவிடம் விசாரித்தாள்.
“ம்ம் நீ சீக்கிரம் தேறிடுவே கண்ணம்மா” சிரித்த பெரியவளின் சாயலில் தன் அன்னையின் முகம் கண்டு திடுக்கிட்டாள்.
‘உங்கம்மாவின் தங்கச்சி இன்னும் இந்தியாவில் தான் இருக்காங்க’ தந்தையின் குரல் காதோரம் ரீங்காரமிட, அவளின் முகத்தில் சிந்தனை படர்ந்தது.
அவளின் முக மாறுதலைக் கவனிக்காத சௌந்தர்யா, தேயிலைச் செடிகளில் நடுத்தர வளர்ச்சியடைந்த இலையைப் பறித்து அவளின் கையில் கொடுத்தார்.
எங்கோ சென்ற சிந்தனைக்கு கடிவாளமிட்டு அவள் நிமிர, “ஒருநாளைக்கு ஒரு நபர் சராசரியாக முப்பது கிலோ தேயிலை பறிக்கிறாங்க” என்றது யாழினியின் விழிகள் வியப்பில் விரிந்தது.
“நிஜமாவா? என்னால் நம்பவே முடியல” சின்னவள் கூற, சௌந்தர்யாவிற்கு சிரிப்புதான் வந்தது.
அவளை முறைத்த பெரியவளோ, “அப்போ நான் சொல்வது பொய்யா? இந்த இலைகள் முறையாக உலர்த்தப்பட்டு தரம்பிரிக்கபடும். இது முக்கியமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் ரக தரத்தில் டீத்தூள் தயாரிக்கிறாங்க” நீண்ட விளக்கம் தரவே, யாழினியின் மனதில் திடீரென்று அந்த சந்தேகம் துளிர்விட்டது.
“அப்போ முதல் ரக டீத்தூள் தயாரிக்க எந்தமாதிரி இலைகளைப் பறிப்பாங்க. ஒருநாளை எவ்வளவு கிலோ பறிக்க முடியும்?” அந்த செடியிலிருந்து ரொம்ப சிறிய இலையைப் பறித்து நீட்டினார் சௌந்தர்யா.
அதைக் கையில் வாங்கிய யாழினி அதை ஆராய்ச்சி செய்ய, “இந்த மாதிரி குட்டி இலைகள் தான் முதல் ரக டீத்தூள் தயாரிக்க ஏற்றது. ஒருநாளைக்கு கால்கிலோ பறிக்க முடியும்” சௌந்தர்யா கூறவே, இந்த தகவலைக்கேட்டு திகைத்தாள்.
“அப்போ அவங்களுக்கு வழக்கத்திற்கு அதிகமாக சம்பளம் கொடுக்கணும். அதை ரகம் பிரித்து, உலரவைத்து, அரைத்து, அதை மீண்டும் தரம் பிரித்து பேக்கிங் செய்து, அப்படியோ யோசிக்கும்போதே தலையே சுத்துது அம்மா” மயங்கி விழுவதுபோல பாவனை செய்ய, அவளின் குறும்பில் வாய்விட்டுச் சிரித்தார்.
அங்கே வேலை செய்யும் பெண்மணிகளைப் பார்வையிட்டபடி, “காலை நேர புத்துணர்வு தரும் டீ குடிக்கும் பழக்கம், இங்கே பலருக்கு இருக்கு. ஆனால் அதில் இத்தனை வேலை இருக்குன்னு சொன்னால், யாராவது நம்புவாங்களா? டீத்தூள் விலை ஏறினால், காபித்தூளுக்கு மாறிடுவாங்க” இலகுவாக சிரித்தபடி மக்களின் மனதைப் பற்றியும் விவரித்தார் சௌந்தர்யா.
மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமான அட்டைப்பூச்சிகள் மட்டும் விஷஜந்துங்களின் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களை எப்படி பாதுகாப்பது என்று சிந்திக்க, சௌந்தர்யாவின் பேச்சினில் கவனம் செல்ல மறுத்தது.
“இந்தியாவில் தேயிலை 180 ஆண்டுகள் பழமையானது. அசாம் தேயிலை, டார்ஜீலிங் தேயிலை, நீலகிரி தேயிலை எல்லாமே சிவப்புக்குறியீடு பெற்றது” தகவல்களுக்கு பதில் இல்லை என்றவுடன், சௌந்தர்யாவின் நடை நின்றது.
சின்னவளின் முகத்தில் முகாமிட்டு இருந்த சிந்தனை ரேகையைக் கவனித்தவரோ, “மலைபிரதேசத்தில் மட்டும் விளையும் பயிர் என்பதால், மக்களை இங்கேயே வேலை செய்யவைக்க ஆங்கிலேயர் நிறைய யுக்தியைக் கையாண்டு இருந்தார்” என்று சொல்ல, அவரின் பேச்சின் சுவாரசியம் அவளை கவனத்தை ஈர்த்தது.
“அப்படி என்ன செய்வாங்க?” புரியாத பாவனையுடன் புருவம் உயர்த்தினாள்.
உதடுகளில் பூத்த புன்முறுவலோடு, “தாங்கள் வேலை செய்து சம்பாரிக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு அவரவர் ஊர்களுக்குச் சென்றுவிட்டால், இங்கேயே வேலை செய்ய ஆள் இருக்காதே. இந்த ஊர்களில் மட்டும் பயன்படுத்தும்படி நாணங்களை வெளியிட்டு பல ஆண்டுகள் மக்களை அடிமையாக வச்சிருந்தாங்க” தனக்கு தெரிந்த விவரங்களை அவளிடம் பகிர்ந்தார்.
இந்த தகவல் அவளுக்கு முற்றிலும் புதிது. அத்துடன், அந்நாளில் மக்களின் நிலை என்னவாக இருக்கும் என சிந்தித்தவள் மனமெங்கும் ஒருவிதமான வலி பரவியது.
“அமெரிக்காவிற்கு ஒரு வரலாறு இருப்பதுபோல, இந்தியாவிற்கும் வரலாறு இருக்கிறதா?” தனக்குதானே கேள்வி கேட்டவள், “சீக்கிரமே படித்து தெரிஞ்சிக்கணும்” என்ற யாழினியின் இயல்பான பேச்சு, சௌந்தர்யாவை திகைப்பில் ஆழ்த்தியது.
மற்றவர்கள் மதிக்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதாலோ என்னவோ காட்டன் சேலையை மடிப்பெடுத்து அழகுற அணிந்து, அதே சமயம் கூந்தலைப் பின்னலிட்டு மல்லிகைச்சரம் சூடியிருந்தாள். பிற பெண்களைப்போல அலங்காரத்தில் ஈடுபாடு காட்டாத யாழினியை அவருக்குப் பிடித்துப் போனது.
அவளது பளிங்கு முகத்தில் குடிகொண்டு இருந்த நிதானம், மற்றவர்களை பார்க்கும் கூர்மையான விழிகளைக் கண்டு, ‘இந்த சாயலை யாரிடமோ பார்த்த ஞாபகம்’ நெற்றியை வருடி சிந்தித்தார்.
அவர்களின் தேயிலையைக் கிள்ளி போடும் வேகம் கண்டு, “ரொம்ப சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறாங்கம்மா” சௌந்தர்யாவின் சிந்தனையோட்டம் அறியாமல் தன்போக்கில் சொல்லிவிட்டு, மீண்டும் பேக்டரி நோக்கி நடந்தாள்.
“நீ அமெரிக்காவில் பிறந்த பெண்ணென்று சொன்னால் ஒருத்தனும் நம்ப மாட்டான். அந்தளவுக்கு தமிழைத் தெளிவாக உச்சரிக்கிற…” மனம்திறந்து பாராட்ட, யாழினியின் நடை பாதியில் நின்றது.
சிறிதுநேரத்தில் தன்னை சமன்செய்து கொண்டு, “தேயிலை தோட்டத்திற்கு நடுவே இந்த மரங்களை எதுக்காக வைத்தார்கள்?!” அங்கிருந்த தேக்கு மரங்களைக் கைகாட்டி விசாரித்தாள் யாழினி.
அவள் பேச்சை திசை திருப்புவதை உணர்ந்து, “தேயிலை தோட்டத்திற்கு நிழல் வேண்டும். அதனால் தான் இடைவெளிவிட்டு மரங்களை நட்டு இருக்காங்க” விளக்கம் கொடுக்க, “ஓ” என்றாள்.
அதே நேரத்தில் அங்கே ஒரு பஸ் வந்து நின்றது. அதிலிருந்து சில குடும்பம் கீழே இறங்கி நிற்க, ‘இவங்க எதுக்காக வந்திருக்கிறாங்க?’ சிந்தனையோடு இரண்டே எட்டில் அவர்களை நெருங்கினாள் யாழினி.
அவளின் பின்னோடு சௌந்தர்யாவும் செல்ல, “மேடம் இந்த பேக்டரியைச் சுற்றிப் பார்க்க யாரிடம் அனுமதி வாங்கணும்?” கேட்ட நபரிடம், “நீங்க?” என்றார் சௌந்தர்யா.
“நான் டூரிஸ்ட் கைடு ராஜ்குமார். இவங்களுக்கு ஊட்டி சுற்றிக் காட்ட கூட்டிட்டு வந்தேன்” தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, பேக்டரியைச் சுற்றிப் பார்க்க னுமதி வழங்கினாள் யாழினி.
“மணிகண்டன்” என்று குரல்கொடுக்க, பேக்டரி உள்ளிருந்து ஒரு ஆள் வேகமாக ஓடி வந்தார்.
அவரிடம் டூரிஸ்ட் கைடு பற்றிய விவரங்களை சுருக்கமாகச் சொல்லி, “மற்ற பணியாட்களுக்கு இடையூறு கொடுக்காமல் இடத்தைச் சுற்றிக் காட்டு” என்று கட்டளையிட, மற்றவர்களின் முகமும் மலர்ந்தது.
“இதற்கு கட்டணம் என்னன்னு சொல்லுங்க மேடம்” என்றார் ராஜ்குமார்.
“அதெல்லாம் வேண்டாம் சார்” உதட்டோரம் பூத்த புன்முறுவலோடு அங்கிருந்து நகர்ந்தாள் யாழினி. அவளின் நடவடிக்கைகளை அருகே நின்று பார்த்த சௌந்தர்யாவிற்கு புரியாத புதிராக இருந்தது.
மீனலோட்சனி கையில் நிர்வாகம் இருந்தவரை, இதுபோல வரும் டூரிஸ்ட்களுக்கு பேக்டரியைச் சுற்றிப் பார்க்கும் அனுமதி வழங்கியது கிடையாது. இப்போது அந்தந சொந்தக்காரி மதுரயாழினி.
தன் சந்தேகத்தை அவளிடம் எப்படி நேரடியாகக் கேட்பது என யோசித்த சௌந்தர்யா அமைதியாக இருக்கையில் சென்று அமர, “உங்க குழப்பம் கொஞ்ச நேரத்தில் தீர்த்துவிடும்மா!” தன் இடத்தில் அமர்ந்து வேலையைத் தொடங்கினாள்.
அவளது திடீர் பதிலில் திடுக்கிட்ட போதும், ‘என் முகத்தைப் பார்த்தே மனதைப் படித்துவிட்டாளே கெட்டிக்காரி தான்’ மனதினுள் நினைத்தபடி, நிலுவையில் இருக்கும் வேலைகளைக் கவனித்தார் சௌந்தர்யா.
சிறிதுநேரத்தில் மற்றொரு நபரை அழைத்து, “இப்போ வந்த அனைவருக்கும் டீ போட்டுக் கொடுக்க சொல்லு” அடுத்த கட்டளையைப் பிறப்பிக்க, அவரும் சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
யாழினியிட்ட கட்டளையின் பெயரில் அங்கே வந்த நபர்களுக்கு டீயை வழங்க, “வாவ் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு” பருகிய பெண்மணி மனம்விட்டு பாராட்டினார்.
அவரைத் தொடர்ந்து டீயைக் குடித்த மற்றொரு நபர், “இங்கே அரைக்கிலோ, கால்கிலோ சேல்ஸ் பண்ணுவாங்களான்னு தெரியல. இவங்க பொருள் தரம் நல்ல இருக்குன்னு சொல்லி விற்றால், கடைக்கு இன்னும் சில கஸ்டமர் வருவாங்க” என்றார் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர்.
“அட நூறு கிராம் பாக்கெட் மாதிரி கிடைத்தால், எங்க ஊர் மளிகைக் கடையில் நல்ல வியாபாரமாகும். இப்போவெல்லாம் விலையைவிட தரம்தான் முக்கியம்னு சொல்லும் அளவுக்கு மக்களின் மனநிலை மாறி இருக்கே, அப்போ நல்ல பொருளாக விற்றால் தான் கடை ஓடும்” என்றாள் கிராமத்துப் பெண்மணி ஒருத்தி.
அவர்களுக்குப் பேசுவதை கேமராவின் வழியாகப் பார்த்த யாழினி, “இப்போ வந்து நம்ம பொருட்களை வாங்கணும்னு சொன்னால், அவங்க முகவரி மற்ற விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுங்கம்மா” சௌந்தர்யாவிடம் கட்டளையிட்ட கையோடு, தன்னிடம் இருந்த விசிட்டிங் கார்டு எடுத்து மேலே வைத்தாள்.
அவளது நடவடிக்கைகளுக்கு பின்னோடு மறைந்து இருக்கும் மர்மம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையுடன் சௌந்தர்யா இருக்க, சிறிதுநேரத்தில் அறையின் கதவுகள் தட்டப்படும் ஓசை கேட்டது.
“யெஸ் கமின்!” என்ற யாழினியின் கணீர் குரலில் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தவர் ராஜ்குமார்.
“என்ன சார்! பேக்டரி சுற்றிப் பார்த்துட்டீங்களா?” என்று விசாரிக்க, அவரும் ஒப்புதலாக தலையசைத்தார்.
“என்னோடு வந்த சிலருக்கு உங்க கம்பெனி டீ டெஸ்ட் ரொம்ப பிடிச்சிருக்கு மேடம். சிலர் பெரிய டிப்பார்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர்கள், நீங்க நேரடியாக கடைகளுக்கு சப்ளை பண்ண முடியுமான்னு கேட்கிறாங்க” என்று கூற, அதைக்கேட்டு சௌந்தர்யா திகைப்புடன் சின்னவளை நோக்கினாள்.
“எங்க கம்பெனி தயாரிப்பு எல்லோருக்கும் சென்று சேரணும் என்பதுதான் எங்களோட நோக்கம். அது சின்னக்கடையாக இருந்தாலும் சரி, நாங்க நேரடியாக சப்ளை பண்றோம்” தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூற, ராஜ்குமாரின் முகமும் மலர்ந்தது.
அங்கிருந்த கேபினில் வேலையில் ஈடுப்பட்டிருந்த சௌந்தர்யா அம்மாவைக் கைகாட்டி, “அவங்களோட விவரங்களை இவங்களிடம் கொடுக்க சொல்லுங்க. மற்ற விஷயங்களை நான் அவங்களிடம் பேசிக்கிறேன்” என்றாள்.
மற்றவர்களைப்போல எரிந்து விழுகாமல், அவரையும் மனிதனாக மதித்து பேசியது அவருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அத்துடன் அவரின் மனதில் பலப்படிகள் மேலே சென்றாள் மதுர யாழினி.
“இப்படி டீ பேக்டரியை சுற்றிக் காட்டுவதால், எங்களுக்கும் நல்ல வருமானம் வரும்மா. ஆனால் நிறையப்பேர் அதை வேண்டாம்னு தடுக்கறாங்க. நீங்க அனுமதி தந்தால், சுற்றுலா பயணிகளை அழைத்துவரலாம்னு நினைக்கிறேன்” அவளிடம் அனுமதி கேட்டார்.
அவரின் பேச்சில் இருந்த உண்மைப் புரிய, “இங்கே வேலை செய்கின்ற தொழிலாளர்களை தொந்தரவு செய்யாமல், பேக்டரியைச் சுற்றிக் காட்டுவதாக இருந்தால் கூட்டிட்டு வாங்க” அனுமதி கொடுக்க, அவரின் முகமும் தெளிந்தது.
அவளிடம் நன்றியுரைத்து அறையைவிட்டு வெளியேறியவர், கொஞ்ச நேரத்தில் டீத்தூள் கேட்ட நபர்களின் விவரங்களைத் திரட்டி வந்து சௌந்தர்யாவின் கையில் கொடுத்தார்.
அந்த நிறுவனத்தைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் கால்கிலோ, அரைக்கிலோ என்ற அளவில் டீத்தூள் பாக்கெட் வாங்கிவிட்டு செல்ல, அவர்களை அனுப்பிவிட்டு கேபினுக்குள் நுழைந்த சௌந்தர்யா, “உன்னோட நடவடிக்கை எதுவுமே எனக்கு புரியல” என்றார்.
தன் கையில் இருந்த பேனாவின் மீது பார்வையைப் பதித்த யாழினி, “சின்ன மீனைப் போட்டு பெரிய மீன் பிடிப்பது தான் சூட்சமம் தானம்மா!” கண்சிமிட்டியவளைப் புரியாத பார்வை பார்த்தார் சௌந்தர்யா.
“இப்போ வந்தவங்க ஒரு இருபது பேர் இருப்பாங்களா?” என்ற கேள்விக்கு குத்து மதிப்பாக தலையாட்டி வைத்தாள் பெரியவள்.
“ஒருத்தருக்கு ஒரு டீ பத்து ரூபாய் என்று கணக்குப் போட்டால், இருபது இருநூறு ரூபாய் செலவு. நமக்கு வந்த ஆர்டர் ரெட் வந்து ஐம்பதாயிரம். எப்படி பார்த்தாலும் நிறுவனத்திற்கு இலாபம்தான்” கடகடவென்று கணக்குப் போட்ட யாழினியைப் பார்த்து, அவள் அதிர்ச்சியில் சிலையாகி நின்றார் சௌந்தர்யா.
“ஒரு பொருளின் சுவை தெரியாமல், அதை யாரும் நம்பி வாங்க மாட்டாங்கன்னு அப்பா சொல்வாரு. என் பக்கத்திலிருந்து அவங்களுக்கு சுவையையும், அதன் தரத்தையும் உணர வச்சேன் அவ்வளவுதான்!” அவளின் இதழ்கடையோரம் புன்னகை தோன்றி மறைந்தது.
“நீ நல்ல வருவே” திகைப்புடன் கூறிய மீனா இருக்கையில் சென்று அமர, அடுத்தடுத்து வந்த நாட்கள் இயல்பாகக் கழிந்தது. ஆறு மாதங்கள் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. வாரத்தில் இரண்டு முறை இருமுறை டூரிஸ்ட் கைடு ஆட்களை அழைத்து வந்து சுற்றிக் காட்டினார்.
அவருடன் வந்த சிலர் யூடூப்பில் சேனல் வைத்திருக்க, அந்த பேக்டரியை வீடியோ எடுக்க அனுமதி கேட்டனர். அதனால் ஏற்படப்போகும் பின்விளைவு அறியாமல், யாழினி வழக்கம்போலவே அனுமதி கொடுத்தாள்.
அந்த வார இறுதியில் வீடியோ சேனலில் இணையதளத்தில் பதிவேற்றப்படவே, அதன் மூலமாக விற்பனை அதிகரித்தது.
“உனக்கு நான் கற்றுக் கொடுக்கும் நிலையைக் கடந்துவிட்டேன். இனி நான்தான் உன்னிடம் கத்துக்கணும்” சௌந்தர்யா சொல்ல, சன்ன சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் யாழினி.