“கண்டிப்பா இதுக்கு பழி வாங்குவேன்…” என்று அவள் சவால் விட, அதை ரசித்தவன், “அக்செப்ட்டட்…” என்று சிரித்தபடி, “சரி வா… மண்டை சூடாகிடுச்சு… ரெண்டு காபி அடிக்கலாம்…” என்று கூற,
“என்ன அடிக்கறீங்களா? பாஸ்… இது ரெஸ்டாரன்ட்…” மீண்டும் இருவருமே தங்களது இயல்புநிலையை மீட்டுக் கொண்டு ஒருவரையொருவர் கால்வாரிக் கொண்டிருந்தனர். அதுவே இருவர் மனதையும் லேசாக்கிக் கொண்டிருந்தது.
“ஏதோ ஸ்லிப் ஆப் தி டங்… பீருக்கு பதிலா காபின்னு சொல்லிட்டேன்… அதுக்காக சிரிப்பியா?” என்று வேண்டுமென்றே கேட்க, அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“உங்களை இன்னும் ரெண்டு நாள் அந்த ஹாஸ்பிட்டல்லையே கிடங்கன்னு அமுக்கி போட்டிருக்கணும்…” என்றபடி,
“யூ சர்ட்டிபிகேட்ட ஏ சர்ட்டிபிகேட் ஆக்காம விட மாட்ட ப்ரீத்…” என்று அடக்க மாட்டாமல் சிரிக்க,
“ஏ சர்ட்டிபிகேட் போடற அளவு அப்படி என்ன சொன்னேன்?” சத்தமாவே யோசித்தாள் ப்ரீத்தி. அவள் யோசிப்பதை கண்டவனால், இன்னமும் சிரிப்பை அடக்க முடியவில்லை!
அவன் சிரிப்பதை கண்டபோது, ஏதோ விஷமம் என்று மட்டும் புரிந்தது. அதற்கும் மேல் எதுவும் புரியாமல்,
“எழுதி வெச்சுக்கங்க… இதுக்கும் சேர்த்து உங்களை பழி வாங்கல… என் பேரு…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,
“ப்ரீத்தி இல்ல… அதான?” என்று இவன் முடித்து வைக்க,
“ஹான்… அதே அதே…”
“எப்படி பழி வாங்குவ ப்ரீத்? ஒரு பத்து ஏ ஜோக்க மனப்பாடம் பண்ணிட்டு வர போறியா?”
“வேணாம். எனக்கும் காலம் வரும்…”
“காலம் வந்து?” அவளை விடாமல் கலாய்க்க,
“வந்து…” என்றவளுக்கு, என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எப்படி கூறினாலும், அதையும் இன்னமும் கலாய்ப்பான் எனும் போது என்ன செய்வது?
“வந்து?” அவளை போலவே கேட்க,
“எதோ பண்ணுவேன். விடுங்க…” என்றவள், தப்பிக்கப் பார்க்க, அவளது தலையை பிடித்து ஆட்டிக் கொண்டே,
“என்ன பண்ணுவன்னு சொல்லிட்டு போய்யா…”
“அதை இன்னமும் யோசிக்கல. யோசனை வரும் போது சொல்றேன்…” என்றவள், பெரிய திரையைப் பார்த்தபடி அமர்ந்தாள். அருகிலேயே அமர்ந்தான் ஷான்.
“குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலைன்னு சொல்வ…”
“நேக்கு மீசையே நஹி பாஸ்…” என்று ஹிஹி என்று சிரிக்க,
“பிராடு… போர்ட்வெண்ட்டி…” என்று சிரித்தபடியே, அவர்கள் முன் வந்து நின்ற சர்வரிடம், “இரண்டு காபி, ஷுகர் கம்மியா… அன்ட் மெது வடை ஒரு ப்ளேட், மசால் வடை ஒரு ப்ளேட், வாழைப்பூ வடை ஒரு ப்ளேட்…” என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போக, அவள் இடையில் குறுக்கிட்டு,
“போதுங்க… நீங்க கொண்டு வாங்க…” என்றவள், இவன் புறம் திரும்பி, “ஏன் கடை வைக்கப் போறீங்களா?” என்று கேட்க,
“உனக்கு ட்ரீட் குடுக்கவே இல்லல… அதான்…” என்று கூறியவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவள்,
“எனக்கு எதுக்கு ட்ரீட்?” என்று கேட்க,
“நீ குடுக்க மாட்டல்ல… அதான் நான் குடுக்கறேன்…” என்று கூற,
“நான் எதுக்கு குடுக்கணும்?” அவளுக்குப் புரியாமல் தலையை பியைத்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“அதான் நீ குடுக்க மாட்டன்னு சொல்லிட்டேன்ல…” என்று மீண்டும் குழப்பியவனை, கடித்துக் குதறும் ஆத்திரம் தான் வந்தது!
“பாஸ்ஸ்ஸ்ஸ்… ஏன் இப்படி?”
“ஒரு வடை ஆர்டர் பண்ணதுக்கு இவ்வளவு கேள்வியா ஆபீசர்? வடை வந்துதா, சாப்ட்டமான்னு இல்லாம…” என்று அவன் சிரிக்க,
“ஒரு அளவா கடிங்க பாஸ். ரொம்ப லென்த்தா போயிட்டே இருக்கு…”
“கலாய்ச்சீங்களா ஆபீசர்?”
“எஸ் பாஸ்…”
“சொல்லிட்டு செய்ங்க…” என்றவனைப் பார்த்து, கைகூப்பி வணங்கி,
“திடீர்ன்னு பார்ம்க்கு வந்துட்டு இப்படி என்னை கொடுமைப்படுத்தாதீங்க…” என்று வேண்ட, வாய்விட்டு சிரித்தான் சஷாங்கன்!
“ஓகே ஒரு ஜோக் சொல்லட்டா?” என்று கேட்டான் ஷான்.
“ம்ம்ம் சொல்லுங்க… கேட்டு வைப்போம்…” தலையாட்டினாள் ப்ரீத்தி.
“மிஸ்டர் குமாருக்கு பிறந்த நாளாம். அதனால மிசஸ் குமார் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாம்ன்னு சிட்டியில இருக்க டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க.”
“ம்ம்ம்ம்…” ம்மிட்டாள்!
“திடீர்ன்னு கூட்டிட்டு போனதால குமாருக்கு ஷாக் தாங்க முடியல. சரி என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம்ன்னு பாருக்கு போறார்.”
“ம்ம்ம்ம்…” புன்னகைத்தாள்.
“போனா கேட் கீப்பர் குட் ஈவினிங் குமார் சர்ன்னு சொல்ல, அதுக்கு அவரோட மனைவி, அவருக்கு எப்படி உங்களை தெரியும் கேக்க, அவர் என்னோட டென்னிஸ் ஆடற தோஸ்த்துன்னு சொல்லி சமாளிக்கறார் குமார்…”
“ம்ம்ம்ம்…” புன்னகை கொஞ்சம் விரிந்திருந்தது.
“பாருக்கு போனா பார் அட்டெண்டர் ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவான்னு கேட்டு வைக்க, அவரோட மனைவி முறைக்க, குமார், அப்படில்லாம் முறைக்காத, ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தப்ப ஒண்ணா ஒரு பெக் அடிச்சோம்ன்னு சமாளிக்கறார் …”
“ம்ம்ம்ம்…” சிரித்தாள்.
“அடுத்தது டான்ஸ் ஆரம்பிச்சுதாம். ஆடிட்டு வந்த டான்சர், ‘என்ன குமார் சர், எப்பவும் போல என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆடலையான்னு கேட்டு வைக்க, அவரோட மனைவி, ருத்ர தாண்டவமாடிட்டு குமாரை வெளிய கூட்டிட்டு வந்துடறாங்க…”
“ம்ம்ம்ம்…” வாய்விட்டு சிரித்தவளை புன்னகையோடு பார்த்தான்.
“சரி வீட்டுக்கு போலாம்ன்னு டாக்சி பிடிக்க, டாக்ஸில ஏறுனா, அந்த டிரைவர் கேட்டு இருக்கார், ‘என்ன குமார் சர், இன்னைக்கு வேற எதுவும் கிடைக்கலையா? மொக்க பிகரோட வரீங்கன்னு?’ கேட்டாராம். மனுஷனுக்கு அடுத்த நாள் என்ன ஊத்திருப்பாங்க சொல்லு?”
“வேறென்ன பால் தான்…” என்றவள், வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள். அவளோடு இணைந்து கொண்டவனின் மனம் லேசாகியிருந்தது.
அவனது சிரிப்பை கண்டவளுக்கு, நிறைவாக இருந்தது. இரண்டு நாட்களாக இருந்த இறுக்கமான சூழ்நிலை சற்று மாறியதினால் மனம் பூவாக மலர்ந்தது.
வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற, அவனது எண்ணமே தான் ப்ரீத்திக்கும்!
“சரி நான் ஒரு கேள்வி கேட்கறேன்…” என்று ப்ரீத்தி கூற,
“உன் கடியெல்லாம் என்னால தாங்க முடியாது பாப்பா… தயவு பண்ணி என்னை விட்டுடு…” கையெடுத்து கும்பிட்டான் ஷான்.
“அதெல்லாம் முடியாது. நான் கேட்டேத்தான் தீருவேன். நீங்க சொல்றதை எல்லாம் நான் கேட்கறேன்ல, நான் சொல்றதையும் நீங்க கேளுங்க…” வேண்டுமென்றே பிடிவாதமாக கூறியவளை பார்த்தவன், சிரித்தபடி,
“கூறும், கூறித் தொலையும்…” என்றான்!
“கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு இருந்த கொசு, திடீர்ன்னு செத்து போச்சாம். ஏன்?”
“ஏன்?”
“அதான் ஏன்?”
“அதான் நானும் கேக்கறேன், ஏன்?”
“ஏன்னா… இந்தியா ஆல் அவுட் ஆகிடுச்சாம்…” என்று அவள் சிரிக்க, கொலைகாண்டானவன், தலையிலடித்துக் கொண்டான்.
“சரி, எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வெச்சா எந்த பிரியாணி பெயிலாகும்?”
அவளை பார்த்து முறைத்தவன், “என்ன பிரியாணி?” என்று கேட்க,
“முட்டை பிரியாணி. ஏன்னா அதுல தான் முட்டை இருக்கே…” என்று சிரிக்க, அவளது கழுத்தைப் பிடித்துவிட்டான்.
“வேணா… போதும்…” என்றவன், “அழுதுருவேன்” என்று வடிவேலு பாணியில் கூற,
“சரி பாஸ்… பொழைச்சுப் போங்க…” என்றவள், “இதுக்கு மட்டும் பதில் சொல்லிடுங்க.” என்று கேட்க,
“ஏய்… வேணா. கொலைகாரனா மாறிடுவேன்…” என்று அவன் கூறியதையெல்லாம் கண்டுகொள்ளாதவள்,
“ஒரு கணவர் அவரோட மனைவி முகத்துல அடிக்கடி தண்ணி தெளிச்சு கிட்டே இருக்காரு ஏன்?” என்று கேட்க,
“ஏன்… அதையும் நீயே சொல்லிடு…”
“ஏன்னா அவரோட மாமனார் அவரோட பொண்ணை பூ போல பார்த்துக்கோ சொன்னாராம்.” என்று சிரிக்க,
“பக்கி… இந்த மாதிரி இன்னும் எவ்வளவு ஸ்டாக் வெச்சுருக்க? முடியல…”
“இன்னும் நிறைய இருக்கு பாஸ். உங்களுக்கு இன்னும் வேணுமா?” அப்பாவி போல அவள் கேட்க,
“கொன்னுடுவேன்…” என்று அவளது கழுத்தைப் பிடித்து நெரிக்க வந்தவனிடம் அகப்படாமல் அவள் தள்ளிக் கொண்டு சிரித்தாள்.
“ஏதோ எனக்குத் தெரிஞ்ச மாதிரி உங்களை பழி வாங்கிட்டேன் பாஸ்…”
“உப்ப்ப் கஷ்டம் தான்…”
“என்ன?”
“உன்னை வெச்சு மேய்க்கறது…”
“மேய்க்க நான் என்ன எருமை மாடா பாஸ்?”
“ஓ மை கடவுளே… இவ கிட்ட இருந்து காப்பாத்த யாருமே இல்லையா?”
“சத்தியமா இல்ல. வேற வழியே இல்ல. என் கடியெல்லாம் நீங்க தாங்கித்தானாகனும்…” சிரித்தாள்.
“ஈசியாரில் இளம் பெண் கொலைன்னு நியுஸ் வரும் பாத்துக்க…”
“உங்களுக்கு பொறாமை. என் அளவுக்கு உங்களுக்கு அறிவில்லன்னு…” என்றவளை பார்த்து சிரித்தவன்,
“ஆமா… ஆமா… ஒத்துக்கறேன். உன் அளவு எனக்கு அறிவில்லதான்…” என்றவன், கையை தூக்கியபடி சரணடைந்தான்.
“ஹா அது…” என்று சிரித்தவள், எல்ஈடி ஸ்க்ரீனை எதேச்சையாகப் பார்த்தாள்.
பெரிய திரையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பட்டுக் கொண்டிருந்தது. பெரிய திரை என்றால், கிட்டத்தட்ட மல்ட்டிப்ளக்ஸில் இருக்கும் அளவை விட சற்று சிறியதாக!
முதலில் பேச்சு சுவாரசியத்தில், இருவருமே அதை கவனிக்கவில்லை. ஸ்வேதாவின் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது, லைவ் நிகழ்ச்சியாக!
ஸ்வேதா என்றதும், அவனையும் அறியாதவொரு வெட்கம், முகம் சற்று சிவக்க, ப்ரீத்தியை பார்த்து வைக்க, அவளும் கிண்டல் சிரிப்போடு,
“பாஸ்… உங்காளு…” என்றவள், கைக்கு கன்னத்தைக் கொடுத்தவாறு, திரையை சுவாரசியமாக பார்த்தாள்.
ஸ்வேதா நேரில் இருப்பதை விட, திரையில் இன்னுமழகு அவள்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்கு பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டதற்கு முதலில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அந்த விஜே ஆரம்பிக்க, ஸ்வேதா அதை பாந்தமாக ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தாள்.
ப்ரீத்தி குழப்பமாக ஷானை பார்க்க, அவனது முகமும் குழப்பத்தை சுமந்தபடி இவளைப் பார்த்தது!
பிரான்ட் அம்பாசிடர் என்பது சற்று பெரிய விஷயம். தான் ஐபிஎல் விஷயத்தில் தலையிடுவதில்லை என்றாலும் அதற்குள் என்ன நடக்கிறது என்பதைக் கூட தான் அறிந்து கொள்ளவில்லை என்பது அவனது முதல் கோபம். அம்பாசிடராக ஸ்வேதாவை அறிவித்திருப்பது, அதை அவனிடம் அவள் கூறாமலிருப்பது இரண்டாவது கோபம், பெரும் கோபம்!
தாடை இறுக அவளது பேட்டியை, ஷான் பார்த்துக் கொண்டிருப்பதை, பிரீத்தியும் பார்த்தாள். நிச்சயமாக அவளுக்கே இது அதிர்ச்சியாக இருக்கும் போது, அவனை நினைக்கையில் சற்று சங்கடமாகதான் இருந்தது.
இதற்கு எப்படி வைஷ்ணவி ஒப்புக்கொண்டார் என்பதும், மாதேஸ்வரன் எப்படி அனுமதித்தார் என்பதும் அவளுக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்விகள்.
ஏனென்றால், இருவருக்குமே ஸ்வேதாவை சற்றும் பிடிக்காது என்பது வெளிப்படையான உண்மை. அப்படி இருக்கும் போது, அவர்களைத் தாண்டித்தான் இது நடக்க முடியும் என்றபோது, எப்படி இது சாத்தியமானது என்று புரியவில்லை.
சட்டென்று கோபமாக எழுந்த ஷானது கைப்பிடித்து அமர வைத்தாள்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க. இது லைவ் ப்ரோக்ராம். முடியட்டும். அப்புறமா நேர்ல பொறுமையா பேசுங்க…” என்று அவனது வேகத்தை அடக்கினாலும், அவளுக்குள் பெரும் சந்தேகம் எழத்தான் செய்தது.
அப்படியென்றால் ஷானுக்கு கொக்கையின் கொடுத்ததற்கும் ஸ்வேதா பிரான்ட் அம்பாசிடராக ஆவதற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா?
ஷான் எதுவும் பேசாமல் மெளனமாக ப்ரீத்திக்கு அருகில் அமர, அவனது வலது கையை அவளது இடது கையால் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் ப்ரீத்தி. எதுவோ மிகத் தவறாக நடப்பதாக அவளது மனதுக்குள் தோன்றிக் கொண்டே இருந்தது. அதை என்னவென்று வரையறுக்க முடியவில்லை.
“எல்லாரும் கேட்கற, எல்லாரும் தெரிஞ்சுக்க விரும்பற ஒரு கேள்வியை இப்ப நான் கேட்க விரும்பறேன் ஸ்வேதா.” என்று பீடிகையிட்ட அந்த விஜே, “உங்களது திருமணம் எப்போது? யாருடன்?” புன்னகையோடு கேட்க, ஸ்வேதாவின் முகத்தில் சிறு வித்தியாசமுமில்லை!
“மேரேஜ் எல்லாம் இன்னும் அஞ்சு வருஷம் போகணும்… இப்போதைக்கு ஐ ம் நாட் ப்ரிபர்ட்…” என்று தட்டையாக கூறியவளை வெறித்துப் பார்த்தான் ஷான்.
அது பேட்டிக்காக கூறப்பட்டதாக இருக்கலாம். ஆனால் இவனால் ரசிக்க முடியவில்லை. ஒரு உறவை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாதவர்கள் எல்லாம் ஏன் காதலிக்க வேண்டும்?
“ஆனால் ஒரு டாக் இருக்கே…” என்று அந்த விஜே இழுக்க,
“என்னன்னு சொல்லுங்க…” கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கேட்டாள் ஸ்வேதா.
“பெரிய இடத்து வாரிசு கூட உங்களுக்கு காதல் என்பது மாதிரியான ஒரு டாக்… அவரால தான் உங்களை பிரான்ட் அம்பாசிடரா…” என்று அவர் இழுக்க, வாய்விட்டு சிரித்தாள் ஸ்வேதா.
“அந்த வாரிசு யாருன்னும் நீங்களே சொல்லிடுங்க…” என்று இவள் கொக்கி போட,
“அதை எப்படி என் வாயால சொல்ல முடியும்?” என்று அவர் சிரிக்க,
“சொல்லவே முடியாதது எல்லாம் ரூமர் தான்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று சிரிக்க, அவளோடு சேர்ந்து கொண்டார் அந்த விஜே!
சிரித்து முடித்தவள், “நீங்க சொன்னதுல ஒரு பர்சன்ட் கூட உண்மை இல்ல…” என்றவள், “இன்பாக்ட், நீங்க சொல்றவருக்கு கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் கூட இருக்காதுன்னு நினைக்கறேன்…” என்றவள், சொல்ல வந்ததை சட்டென நிறுத்தி, சப்தமே இல்லாமல், “பிகாஸ் ஹி இஸ் எ… கே…” என்று முனுமுனுத்தாள்!
“வாட்… கம் அகையின்…” அந்த விஜே அதிர்ச்சியில் உறைந்தபடி கேட்க,
“என்ன சொல்லணும்? அது அவரோட பெர்சனல் சாய்ஸ். இன்னொருத்தரோட பர்சனல் பற்றி நாம எதுக்காக விவாதிக்கணும்? அது தப்புங்க. இப்ப எல்லாமே லீகலாகிடுச்சு அன்ட் ஈவன் ஐ சப்போர்ட் எல்ஜிபிடி கம்யுனிட்டி. சோ இதெல்லாம் நீங்க ஷாக் ஆகற அளவுக்கு ஒரு இஸ்யு கிடையாது.”
“ரியலி கிரேட் தாட்ஸ் ஸ்வேதா. நீங்க இந்தளவு ஓபன் மைன்ட்டடா இருக்கறதால தான் நம்பர் ஒன்னா இருக்கீங்க…” என்று அவர் பாராட்ட,
“தேங்க்ஸ்…”
கொஞ்சமும் குற்ற உணர்வே இல்லாமல், ஸ்வேதா நன்றி கூற, அதுவரை முகத்தில் எந்தவிதமான உணர்வையும் காட்டாமல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பிரீத்தியே நடந்த நிகழ்வில் அதிர்ந்து விழித்து, ஷானை பார்க்க,
அவனது நிலை இன்னும் மோசமாக இருந்தது!
முகம் முழுக்க சிவந்து, கன்றியிருந்தது.
அது அவமானத்தாலா? அல்லது கோபத்தாலா?
அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும் அவனிருந்த நிலை, எதிர்கொள்ளப் போகும் சூழ்நிலை என்று அனைத்தும் ஒருவித நடுக்கத்தைக் கொடுத்தது!
அடுத்தது என்னவாகும் என்ற மிகப்பெரிய கேள்வி அவள் முன் நின்று தாண்டவமாடியது!