RR15

RR15

ரௌத்திரமாய் ரகசியமாய்-15

 

அவனிடம் பொறுமையில்லை. எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை எடுத்து விடுவான். அது அவள் கண் கூடாக பார்த்து தெரிந்து கொண்ட உண்மை. 

 

அவள் எதிரிலேயே எத்தனை பேரை சுட்டுப் பொசுக்கியிருக்கிறான். அந்தக் காட்டில் நடந்த சம்பவம், அதற்கு முன் நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவள் நினைவில் வந்தன.

 

ஓர் உயிரை கொல்வது என்பது சாதாரணமான விஷயமா? எத்தனை கொடூரம். அத்தனை கொடூரத்தையும் அசால்ட்டாக செய்யும் ஒருவனை நம்பியது பெரிய பிழை. 

 

அன்றிருந்த மனநிலையில் உயிரின் மதிப்பை அறிந்த அவளே அதைப்பற்றி சிந்திக்க மறந்து போனாள். 

 

அத்தகைய கொடூரத்தையும் புறந்தள்ளி அவனை மனதில் நிறுத்தியது எவ்வளவு பெரிய தவறு?

 

அது ஒன்றும் எதிர்ப்பாராமல் நடந்த விபத்து கிடையாது. அவனுடைய தொழிலே இது தானோ?

 

கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும் ஒன்று. அவள் மனம் உணர்ந்தது. அவளுக்கு உரைத்த உண்மையில் பதறித் துடித்தாள்.

 

உள்ளே ஒரே படபடப்பு… அவனது கனல் பார்வையை சந்திக்க முடியாமல் தடுமாறினாள். 

 

அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியிருக்க இது தேவையில்லாத பதட்டம். அவசியமற்ற பயம். ஆனாலும் அந்த  பயத்தையும் பதட்டத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.

 

காதுக்கு கொடுத்திருந்த அலைபேசியை அணைத்து விட்டு, அவளை நிலைத்துப் பார்த்தான். அந்தப் பார்வையில் தெரிந்த கூர்மை அவளை நடுங்கச் செய்தது.

 

“பரந்தாமன் அனுப்புன ஆள் நீயில்லை ரைட்?”

 

பயத்தில் அவளது தலை தானாகவே மேலும் கீழுமாக ஆடியது. அவளுக்கு வார்த்தை வர மறுத்தது. 

 

“அப்போ நீ ஏன் வந்த?” அவளிடமிருந்து பதில் வரவில்லை.

 

“கேள்வி கேட்டேன்?” அவனது குரலில் தெரிந்த அழுத்தத்தில் திடுக்கிட்டாள். 

 

“அ..அது சி..சிந்துவுக்கு உடம்பு சரியில்லை. அ..அதா…” அவள் தொண்டைக்குள் சிக்கி சிதறியது.

 

“பொய்…” இடையிட்டான். அவனது குரலின் கடுமை அவளை திகைப்படையச் செய்தது. அவளை நெருங்கி அவளது புஜத்தினை பற்றி அழுத்தினான்.

 

“யூ ஆர் லையிங்… யூ ஆர் லையிங்” கத்தினான்.

 

“ஏன்னா நீ அந்த விஸ்வநாத் பொண்ணு” அடங்கி ஒலித்தது அவன் குரல்.

 

மிரண்டு போய் அவனை பார்த்தாள். உடல் சிலிர்த்து தூக்கிப் போட பொசுக்கென்று அவன் கையை தட்டி விட்டாள்.

 

“இல்லை… இல்லை… நான் வந்தது ட்ரீட்மென்ட்டுக்கு தான். வேற எதுவும் எனக்கு தெரியாது.” அவனுக்கு தன்னை உணர்த்திடும் வேகத்தில் அழுதாள்.

 

“ஆஆஆஆஆ…” 

 

திடீரென யாரோ அலறும் சத்தம். அந்த அறைப்பக்கம் தான் கேட்டது. சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

“அவ்வளவு தான்… அவன் தான் போயிட்டான்” அவனது முகம் குரூர திருப்தியில் மின்னியது.

 

‘கடவுளே! அந்த மனிதனது அலறல் கேட்டு இவள் உள்ளம் துடித்தது. அவள் கண்களில் நீர் திரையிட்டிருந்தது.

 

“கமால்…” திடீரென்று எழுந்த பெருங்குரலில் ஒருவன் ஓடி வந்தான். அவனுக்கு தன் கண்களாலே கட்டளையிட, வந்தவனோ அவளை நெருங்க, கலவரமானாள்.

 

அதற்குள் அவளை பிடித்து தரதரவென இழுத்துச் செல்ல, அவனிடமிருந்து விடுபட போராடினாள்.

 

“ப்ளீஸ்… என்னை விட்டுடுங்க. நான் உங்களை பத்தி யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன்” கத்தினாள். கதறினாள். 

 

“லீவ் மீ ப்ளீஸ்” பதைப்புடன் திரும்பி திரும்பி அவனை பார்த்தாள். அவனோ எதற்கும் மசிய மாட்டேன் என கற்சிலை போல் இறுகி நின்றான்.

 

***

 

தனிமையில் அமர்ந்திருந்த ருத்ரனின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தாள் தாமிரா. சிறிது நேரம் தாமதித்திருந்தால் கூட அந்த அழைப்பு அவளது தந்தையை போய் சேர்ந்திருக்கும்.

 

அதற்கெல்லாம் பயந்து ஓடி ஒளிபவனல்ல. அவனால் அவனுக்கு உதவி செய்தவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வதை அவன் விரும்பவில்லை.

 

தாமிராவின் மீது எந்தத் தவறும் இல்லை தான். ஆனால் அந்த சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அவளுக்கு எதிராக இருந்தது. அவனுக்கு செய்ய வேண்டிய அலுவல்கள் ஏராளம் காத்திருக்க, இவன் இவளின் நினைவிலேயே இருந்தான்.

 

அப்போது தான் அவளது செல்ஃபோன் திரை ஒளிர்ந்தது. மேசையின் மேல் கிடந்த செல்போனை எடுத்தான். ரகுவிடமிருந்து வந்த குறுந்தகவல் அது. அடுத்தடுத்து வந்த அழைப்புகள் வேறு.

 

அவ்வளவு தான். அவனது தாடை இறுகியது. செல்ஃபோன் திரையை வெறித்தவனது முகம் இறுக பல்லைக் கடித்தான்.

 

அதுவே அவனை அடுத்த கட்டத்திற்கு முன்னேற உந்துதலாக அமைந்து விட்டது.

 

***

 

பொழுது விடிந்து விட்டது. மயக்கம் தெளிந்து தாமிரா மெல்ல இமைகளை பிரித்தாள். மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் வீழ்ந்து கிடப்பதை அவளால் உணர முடிந்தது. உடலுக்குள் ஏற்கனவே

ஜில்லென்ற ஒரு குளிர்ச்சி ஊடுவியிருந்தது.

 

கூந்தல் கற்றைகள் பிரிந்து முகத்தில் புரண்டிருந்தன. மிரட்சியும் பீதியும் டன் டன்னாய் வழிகிற விழிகளோடு சற்றே தலையை உயர்த்திப் பார்த்தாள்.

 

அது ஒரு சாதாரண அறை. ஒரு மேசையும் ஓரிரண்டு நாற்காலிகளையும் தவிர வேறு எதுவும் காணப்படவில்லை. 

 

அவளுக்குத் தலை வலித்தது. மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள். முன் தின இரவு நடந்த ஒவ்வொன்றும் அவளது மூளையில் ஓடியது.

 

மரண சுழலில் சிக்கியது போல அவளுக்கு மூச்சு முட்டியது. இந்த  இடத்தை விட்டு எப்படி தப்பிச் செல்வது என்ற கலக்கத்துடனே கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

‘விடிந்துவிட்டது! அப்பா என்னை தேடியிருப்பாரா? கண்டிப்பாக தேடுவார். சிந்துவிடம் போய் விசாரித்தாலே போதும் தான் இருக்கும் இடம் தெரிந்து விடும். நிச்சயம் என் அப்பா என்னை இங்கிருந்து மீட்டு விடுவார்’ அவள் மனம் உறுதியாக நம்பியது.

 

அங்கிருந்து எப்படியாவது ஓடி விட வேண்டும். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ருத்ரனை மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறாள் அவள்.

 

ஒரு தடவை அவன் உயிரைக் கூட காப்பாற்றியிருக்கிறாள். அப்படியிருந்தும் கூட அவன் அவளிடம் இரக்கமற்று நடந்து கொண்ட முறை அவளை காயப்படுத்தியது.

 

‘கொலைகாரன்… கொலைகாரன்’ அவள் உள்ளம் குமுறியது. கண்களில் கண்ணீர் கசிந்தது. இவனிடம் இரக்கத்தை எதிர்ப்பார்ப்பது பெருந்தவறு.

 

உடலும் மனமும் சோர்ந்து போனது. 

 

அதே நேரம் வெளியே சில பேச்சுக் குரல்கள். ஜன்னலருகே தன் காதை கொண்டு சென்றவள் கூர்ந்து கேட்கத் துவங்கினாள்.

 

ஒரு குரல் ருத்ரனது. அதே போல் மற்ற இருவரது குரல்களும் அவளுக்கு வெகு பரீச்சயமான குரல்கள். அவள் மூளையில் மின்னல் தோன்றி மறைந்தது.

 

அங்கிருந்த எல்லா அறைகளிலுமே ஜன்னல்கள் சற்று உயரமாகவே அமைப்பட்டிருந்தது. அந்த அறையிலும் அப்படித்தான். ஒரு நாற்காலியை ஜன்னலருகே இழுத்துப் போட்டாள்.

 

சற்று உயரமான ஜன்னல் தான். நாற்காலியின் ஆதாரத்துடன் எம்பி பார்த்தாள். அவளது கண்கள் வரை மாத்திரமே தெரிந்தது. 

 

அவள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் புல்வெளியும் ஆங்காங்கே சில மரங்களும். பார்வையை சுழற்றி தேடினாள்.

 

அங்கே நின்றிருந்தவர்களை கண்டதும் சட்டென மகிழ்ச்சியில் மலர்ந்தது அவள் முகம். 

 

அது அவளது மருத்துவமனை தலைமை மருத்துவர் பரந்தாமன் மற்றும் காக்கி உடையில் இன்னொருவர் நின்றிருந்தார். 

 

அவர் அந்தப்பக்கமாக திருமபியிருக்க, முதுகு மட்டுமே அவளுக்குத் தெரிந்தது.  

 

அவள் இங்கே சிக்கிக் கொண்டு இருப்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தினால், இந்த ஆபத்தானவர்களிடமிருந்து எப்படியாவது அவளை காப்பாற்றி விடக்கூடும். 

 

ஆனால் அந்த ருத்ரன்? ஆனாலும் அவள் மனம் வேகமாக கணக்கிட்டது. 

 

அந்தக் காக்கிச்சட்டை மனிதன் திரும்புகிறான். அவனது முகத்தை கண்டதும் அவளது முகம் பளிச்சிட்டது.

 

அது ராகவன். அவரை அவளது தந்தையுடன் பலமுறை பார்த்திருக்கிறாள். அவளது வீட்டுக்குக் கூட ஓரிரு முறைகள் வந்திருக்கிறான். 

 

அவளது தந்தை கூட அவனை திறமையானவன் என்று அடிக்கடி கூறுவார். அவர் நிச்சயம் அவளுக்கு உதவுவார் என்றே தோன்றியது.

 

இரவு முழுவதும் தான் வீடு திரும்பாததால் நிச்சயம் தந்தை அவளை தேடுவார். ஏன் இப்போது அவர் தன்னை தேடிக்கொண்டிருக்கக் கூடும்.

 

ராகவன்  சீஃப் டாக்டருடன் என்னைப் பற்றி விசாரிக்கத்தான் இங்கே வந்திருப்பாரா? அப்படியும் இருக்கலாம்.

 

ஒருவேளை அவன் நான் இங்கு இல்லை என அவர்களை திருப்பி அனுப்பி விட்டால்… அதை எண்ணிப் பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. 

 

அவர்கள் மூவருமாக நடந்து அந்த அறைப்பக்கம் வந்தார்கள்.

 

இப்போது அவள் கத்தி உதவி கேட்க முனைந்தாள். ஆனால் அதற்குள் அவர்களது பேச்சில் இவள் உடல் வெடவெடுத்தது.

 

“சிந்துவை தான் போக சொல்லிருந்தேன் பட் தாமிரா வந்து இப்படிலாம் ஆகும்னு தெரியாது ருத்ரன்” அவரது பேச்சு ருத்ரனிடம் மன்னிப்பை வேண்டுவது போல் தெரிந்தது.

 

“எந்த பிரச்சனையும் பண்ணாத ஒரு டாக்டர் ஒருத்தர அனுப்ப சொன்னா‌. மொத்தமே பிரச்சனையா அனுப்பி வச்சிருக்கீங்க” கடுகடுத்தான் ருத்ரன். 

 

இப்போது ராகவன்,

“அந்த விஸ்வநாத்துக்கு ஆல்ரெடி‌ உன் மேல சந்தேகம் இருக்கு. இதுல இந்தப் பொண்ணு வேற… அந்த ஆள் நோண்ட‌ ஆரம்பிச்சாருன்னா அவ்ளோதான்” ராகவனது குரலில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.

 

“ருத்ரன் அவ இங்க இருந்து வெளியே போனா எல்லாருக்கும் பிரச்சினை” பரந்தாமன் குரலில் தீவிரம் தெரிந்தது.

 

ருத்ரனது முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவரது பேச்சை ஆமோதிப்பது போல் அமைதியாக இருந்தான்.

 

அப்போ என்னை இங்கிருந்து அனுப்பப் போதில்லையா? அவளையும் கொலை செய்யப் போகிறார்களா!

 

கொலை…! கொலை…!

 

குலைநடுங்கிப் போனாள்.‌ அவளது இமைகள் மிரண்டு போய் விரிந்து கொண்டன.

 

அவளது இதயத் துடிப்பின்‌ வீதம் எக்கச்சக்கமாக எகிறியிருந்தது. அவளுக்கு இதயமே வெடித்து விடுவது போல இருந்தது.

 

இவர்கள் யாரும் மனிதர்களே இல்லை அரக்கர்கள். அசுரர்கள். அவளுக்கு மூச்சடைத்தது. உடலில் உரோமங்கள் எல்லாமே குத்திட்டு நின்றன.

 

பூட்டப்பட்டிருந்த கதவுக்குப் பின்னால் ஏதோ அரவத்தை உணர்ந்தாள். அடுத்த நொடி ‘படார்’ அதிவேகமாக திறக்கப்பட்ட கதவு சுவரில் மோதி அதிர்ந்து நின்றது. 

 

உடல் தூக்கி வாரிப் போட அதிர்ந்தாள். பயத்தில் அவள் வியர்வையில் அவள்‌‌ ஆடை நனைந்து விட்டது.

 

“கெட் அப்…” ருத்ரன் உள்ளே வந்தான்.

 

‘கடவுளே… என்னை கொல்ல போறான்’

 

அவனை கண்டதும் பதறித்துடித்த இதயத்துடன் சுவரோடு ஒட்டிக் கொண்டு நின்றாள்.

 

உணர்வற்ற ஜடம் போல் அவளருகில் நெருங்கியவன், அவளை தரதரவென அவ்வறையை விட்டும் வெளியே அழைத்துச் சென்றான்.

 

அழுதாள்: கெஞ்சினாள்: கதறினாள். அவளது கெஞ்சல், அழுகை, கதறல் எதுவும் அவனை பாதிக்கவில்லை. இயந்திரத் தன்மையுடன் அவளை இழுத்துச் சென்றாள்.

 

அவன்‌ கைகளிலிருந்து விடுபட திமிறினாள். துள்ளினாள். அவனது பிடி உடும்புப் பிடி. ஒரு பலனும் இல்லை. ஓரடி‌ கூட அவளால் நகர முடியவில்லை.

 

“தப்பிக்கலாம் முடியாது. தேவையில்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்காத” அவனது முரட்டுக் குரலில் பயந்தாள்.

 

அவளை வதைக்க எப்படி மனம் வந்தது. கடந்து வந்த நாட்களை மறந்து விட்டானா?

 

அவனால் எந்த ஆபத்தும் வந்து விடாது என‌ உறுதியாக நம்பியிருந்தாளே?

 

அவளது புஜத்தை அழுத்தியிருந்த அவனது பிடி இறுக,

 

“கையை‌ விடுங்க. இட்ஸ் ஹர்ட்டிங் மீ. ப்ளீஸ்” தொண்டையிலிருந்து சிரமத்துடன் வெளிப்பட்டது அவள் வார்த்தைகள்.

 

அதில் அவன் கைகள் தனாக தளர்ந்தது. 

 

விண் விண் என்று வலித்த கையை அழுந்தத் தேய்த்தாள். வலியிலும் பயத்திலும் அவள் சத்தமாய் அழுதாள்.

 

இப்போது அவனது துப்பாக்கி முனையில் நின்றிருந்தாள். 

 

தாமிராவின் விழிகள் இப்போது மிரட்சியில் இன்னும் அதிகமாக விரிந்து கொண்டன. உடலில் ஒரு வித நடுக்கம் உறபத்தியாகி, வெடவெடக்க ஆரம்பித்திருந்தது.

 

இப்படி ஒரு இடத்தில் வந்து வகையாக மாட்டிக் கொண்டோம் என்று நினைவே அவளை சில்லிட்டுப் போக வைத்தது.

 

அவளது அழுகை, கதறல் அவனுக்கு காதில் விழுந்ததாக தெரியவில்லை. ஆனால் அவனது பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது.

 

அவள் முகத்தை வெறித்து பார்த்தபடியே அவளை நெருங்கினான். துப்பாக்கியை அவள் தலையில் வைத்து அழுத்த, அவளது கண்களில் கலவரம் கூடியது.

 

“நீ.. நீங்க என்கிட்ட ஏன் இப்படி நடந்துக்குறீங்கனு தெரியாது. நீங்க ரொம்ப நல்லவரு.

 

உங்க கிட்டேயும் நல்லதை பார்த்திருக்கேன்.  ஆனா ஏன் தப்புக்கு மேல் தப்பு செய்யறீங்க? ப்ளீஸ் வேண்டாம்” அவனிடம் மன்றாடினாள்.

 

அந்த மரண பீதியிலும் அவனை அவனுக்கே உணர்த்திடும் வேகம்.

 

கண்களில் கண்ணீர் பளபளக்க கெஞ்சினாள். அப்படியாவது தன்னை விட்டு விடமாட்டானா? என்ற நப்பாசையில்.

 

அவனது கண்களில் சுவாரஸ்யம் கூடிப் போயிருந்தது. அவளது முகத்தில் வழிந்திருந்த கூந்தலை அப்புறப்படுத்தினான்.

 

“இஸ் இட்?’ போலியாக வியந்தான். அவன் கண்களில் நக்கல் தெரிந்தது.

 

“இப்படிலாம் எமோஷனல்லா பேசி என் மனசை கரைக்கலாம்னு ட்ரை பண்றியா? டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்” அவன் கண்களில் தெரிந்த சீற்றத்தில் ஆடிப் போனாள்.

 

‘கடவுளே! என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்?’

 

கண்ணீர் திரையிட்ட விழிகளுடன் நிமிர்ந்து அவனை நோக்கினாள். அழுகை அடங்கியது. ஒரு முடிவுக்கு வந்தாள்.

 

இருவரது பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன.

 

“ஃபைன் என்னை கொன்னுடுங்க. பட் லுக் திஸ் ப்ளட் வில் நாட் ஜஸ்ட் டிசப்பியர். இந்த ஒரு பேரை மட்டும் மறந்துடாதீங்க. விஸ்வநாத் என் அப்பா! அவர் வருவாரு. டோண்ட் எவர் ஃபார்கெட் இட்.

அவர் உங்க யாரையும் சும்மா விட மாட்டாரு‌. யாரையும் விட மாட்டாரு” அவள் பார்வையில் இப்போது பயம் இல்லை. 

 

‘கொன்று விடு! கொன்று விடு! ஆனால் என்‌‌ தந்தை உன்னை உயிருடன் விடமாட்டார்’ என்று சொல்லாமல் சொன்னது அவள் பார்வை.

 

அவனது முகம் உணர்ச்சியற்று இருந்தது. துப்பாக்கியை கீழிறக்கி அவள் கண்களை ஆழ்ந்து நோக்க, அவள் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

“ஆல்ரைட்… உனக்கு உயிரோடு இருக்கனுமா?” 

 

என்ன கேள்வி இது? யாருக்குத் தான் உயிர் வாழ ஆசையிருக்காது. அதுவும் துப்பாக்கி முனையில் வைத்து கேட்டால்… அதற்கு தானே இத்தனை கெஞ்சல், கதறல் எல்லாமே.

 

‘ஆம்’ தலையாட்டியவள், குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.

 

“நீ என்னை கல்யாணம் பண்ணிக்கனும்.”

 

என்ன! கல்யாணமா? அதிர்ந்தாள். 

 

# # #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!