AnthaMaalaiPozhuthil–18

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 18

ரகுநந்தன் யோசனையோடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சற்று முன் இருந்த, உற்சாகம் வடிந்திருந்தது.

  ‘சார்… உங்க மனைவி ரொம்ப ஸ்மார்ட். கிளாஸ்க்கு எப்பவாவது தான் வராங்க. ஆனால், செமையா பிக்கப் பண்ணிடுறாங்க.அதுவே ரகுநந்தனின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அதன் பின் அவர் பேசிய எதுவும் அவன் மனதில் நிற்கவில்லை.

     தினமும் அபிநயா வகுப்பிற்காக வீட்டிலிருந்து கிளம்பி செல்வது அவனுக்கு தெரியும். அவர்கள் டிரைவர் தான் அவளை தினமும் இறக்கிவிட்டு, பின் அழைத்து வருவதும்.

    ‘வகுப்புக்கு செல்லவில்லை என்றால், இடைப்பட்ட நேரத்தில் எங்கே?’ என்ற கேள்வி அவன் மனதில்.

    ‘அபிநயா ஏதாவது தப்பு செய்கிறாளோ?’ என்ற சந்தேகம் எல்லாம் ரகுநந்தனின் மனதில் இல்லை.

       ‘ஆனால், என்னிடம் ஏன் சொல்லவில்லை?’ என்ற வருத்தம் மட்டுமே அவனிடம் மேலோங்கி இருந்தது.

                 ‘திருமணம் பிடிக்கவில்லை. கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றெல்லாம் கேட்டேன் தான். ஆனால், நான் அவளிடம் ஒரு தோழன் போல் பழகவில்லையா? இல்லை பேசும் உரிமையை நான் அவளுக்கு கொடுக்கவில்லையா?’ அவன் மனதில் முதலில் கோபம் கனன்றது.

சற்று நேரத்தில், அவன் கோபம் குறைந்து,  ‘இல்லை என் மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லையா? நான் அவள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லையா? என்னிடம் வாத்தியாரம்மா ஏன் சொல்லவில்லை?’ என்ற கேள்வியோடு, அன்பு கொண்ட அவன் மனம் அவனையே குற்றவாளியாக்கி அவள் விலக்கி வைத்ததில் ரணமாய் துடித்தது.

                   காரை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்றான். வீடு வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது. ரேவதியும், பவானியம்மாளும் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தனர்.

       ‘இது தொலைக்காட்சியா? இல்லை தொல்லை காட்சியா?’ என்ற கேள்வியோடு படியேறி அவர்கள் அறைக்கு சென்றான்.

     அவன் கண்ட காட்சியில், அப்படியே கதவோடு சாய்ந்து நின்றுவிட்டான் ரகுநந்தன்.

       சுவரோரமாக, நின்று கொண்டிருந்தனர் அபிநயாவும், கவினும்.

  கவின் என்று கொட்ட எழுத்தில் பெயரிட்டு, அங்கு ஒரு குழந்தைகளுக்கான காந்த பலகை (கிட்ஸ் மேக்னட்டிக் போர்டு) இருந்தது.

    அதில் ஒட்டுவதற்கு ஏதுவாக, அவள் கைகளில் எதுவோ இருந்தது.

       “கவின்… இன்னைக்கு வெரி குட் பாய். உனக்கு ஒரு மேக்னெட்டிக் ஸ்மைலி ஸ்டிக்கர்.” என்று கூறிக்கொண்டு, அதை காந்த பலகையில் ஒட்டினாள் அபிநயா.

    சந்தோஷமாக இருந்தாலும், ‘எதற்கு?’ என்பது போல் கவின் பார்க்க, “ம்… பீட்ரூட், கேரட், கீரை இட்லி எல்லாம் போட்டு ஸ்கிவர் காலையில் சாப்பிட்ட, மதியானமும் நான் கொடுத்த சேமியா பிரியாணி காலி பண்ணிட்ட. ஈவ்னிங் அத்தை கொடுத்த கார்ன் ஃபிளக்ஸ் சாப்பிட்ட, பாலும் உன் உடம்பில் சேர்ந்திருச்சு. பாரு, உன் கையில் எவ்வளவு ஸ்ட்ரென்த்?” என்று கேட்டுக்கொண்டே, கவினின் கைகளை பலசாலி போல் வைத்து முன்னும் பின்னும் அசைக்க, அவன் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

 

     அபிநயாவை பார்த்த நொடி, ரகுநந்தனின் கோபம், வருத்தம் இரண்டும் குறைய ஆரம்பித்திருந்தது.

   அவன் அவளை ரசனையோடு பார்த்தான்.

                     ‘இவள் எதற்காக கவினுக்காக இத்தனை மெனக்கிட வேண்டும்?’ என்ற கேள்வியோடு அவள் மேல் அவன் அன்பு பெருகியது.

    “அத்தைக்கு பலமே இல்லை. கவினுக்கு எவ்வளவு பலம்?” என்று அவள் உதட்டை பிதுக்க, கவினின் கண்களில் மெல்லிய ஆர்வம் பெருகியது.

     இப்படியே பேசி, பேசி அவனிடம் பல வேலைகளை வாங்கினாள் அபிநயா. பேசினால் தான், என்ற கண்டிப்போடு கவினை ஒரு சில வார்த்தைகளும் பேச வைத்திருந்தாள்.

    ரகுநந்தன், அபிநயாவை மெச்சுதலாக பார்த்தான்.  “டேய்… கவின் கொஞ்சம்  சிரிச்சிட்டே பண்ணுடா.” என்று அவன் தலையை கலைத்து விட்டு குளியலறை நோக்கி சென்றான் ரகுநந்தன்.

        கவின் தன் மாமாவை யோசனையாக பார்த்தான். அபிநயாவின் புருவங்கள் சுருங்கியது.

       ரகுநந்தன் குளித்துவிட்டு வர, அவனோடு விளையாடிவிட்டு, இரவு உணவுக்கு சென்றான் கவின்.

    உணவை முடித்துவிட்டு அன்றிரவு, அபிநயாவின் வருகைக்காக, காத்திருந்தான் ரகுநந்தன்.

     சிரித்த முகமாக உள்ளே நுழைந்தாள் அபிநயா.

       “வாத்தியாரம்மா, கிளாஸ் எப்படி போகுது?” என்று பேச்சை தொடங்கினான் ரகுநந்தன்.

   “நல்லாருக்கு.” என்று அவள் கூற, “பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்டான்.

     அவன் எதிரே மெத்தையில் அமர்ந்திருந்தாள் அவள்.

   “ம்…” என்று அவள் கூற, அவள் கண்களை பார்த்தபடி, “எல்லா வாத்தியரம்மாக்களும், வாத்தியாரும் ஒழுங்கா கிளாஸ்க்கு வராங்களா?” என்று அவன் கேட்க அவனை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள் அபிநயா.

     அவன் மேலும் பேச தொடங்க, “எனக்கு தூக்கம் வருது.” என்று பேச்சை தவிர்த்து அவள் படுத்துக் கொண்டாள்.

     அவன் ஒத்துக்கொண்ட அந்த இடைவெளியை விட்டுவிட்டு, அவள் பக்கம் திரும்பி, தன் கையை தலைக்கு அண்டை கொடுத்து, அவளை கூர்மையாக பார்த்தான் ரகுநந்தன்.

  “வாத்தியாரம்மாவுக்கு என் கூட பேச பிடிக்கலையா?” அவன் குரலில் வழக்கமாக இருக்கும் மென்மை மறைந்திருந்தது.

அவன் குரலின் மாற்றத்தை மனதில் குறித்து கொண்டு, “ச்… ச்ச… அப்படி எல்லாம் இல்லை.” அவளும் அவன் பக்கம் திரும்பி படுத்தாள்.

      ‘வேண்டாம்… வேண்டாம்…என்று அவன் மனம் எச்சரித்தாலும், அவன் கண்கள் அவள் மேனியை, அந்த சேலைக்கு இடையில் அவள் அங்க வடிவை ரசித்தது.

        “என்கிட்டே பேச உனக்கு எதுவுமே இல்லையா?” அவன் அவள் முகம் பார்த்து கேட்டான்.

  “கவின்…” என்று அவள் ஏதோ பேச ஆரம்பிக்க, “அவனை தவிர, நீ என்கிட்டே ஒண்ணுமே பேச மாட்டியா? உன்னை பத்தி… என்னை பத்தி… இப்படி  எதுவுமே உன்கிட்ட கிடையாதா?” அவன் வார்த்தைகள் சுள்ளென்று வந்து விழுந்தது.

         அவன் கோபத்தை பார்த்திருக்கிறாள் தான். ஆனால், ‘இது என்ன?’ என்று எங்கோ நெருடியது அவளுக்கு.

    “ஆபிசில் எதுவும் பிரச்சனையா? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க?” என்று தன்மையாக கேட்டாள் அவள்.

  ‘இதெல்லாம் அக்கறையா கேட்பா?’ அவன் சலித்து கொண்டான்.

   ‘நான் நேரடியாக கேட்கவா?’ என்ற கேள்வி எழ, ‘தப்பா நினைச்சிட்டா என்ன பண்றது?’ என்ற அச்சமும் ஒருசேர எழ, ‘அவளா சொல்லமாட்டாளா?’ என்று உரிமையும் போட்டி போட்டுக் கொண்டு நின்றது.

  ‘அவளா சொல்ற வரைக்கும் நானும் கேட்க மாட்டேன்.அவன் மனமும் வீம்பாக உறுதி எடுத்துக் கொண்டது.

    “ஏன் ஏதாவது பிரச்சனைனா தீர்த்து வைக்க போறியா?” அவன் கடுப்பாகவே கூறினான்.

அவன் கடுப்பில், அவள் கோபம் கனன்றது.

        “ஆமா, நான் தீர்த்து வைக்கிற மாதிரி தான் நீங்க எல்லாத்தயும் என் கிட்ட சொல்லிட்டு செய்யறீங்க? இதுவரைக்கும், உங்க பிசினெஸ் என்ன, நீங்க என்ன பண்றீங்கன்னு என்கிட்டே சொன்னது கூட கிடையாது.” அவள் நறுக்கு தெறித்தார் போல் கூறினாள்.

   “நீ கேட்டதில்லையே?” அவன் எழுந்து மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு பேசினான்.

       “ம்… அவ்வுளவு தான். கேட்டால் தான் சொல்லணுமிங்கிற அளவு தான், நமக்குள்ள இருக்கிற உறவு. அப்புறம் என்ன தீர்த்து வச்சிருவியான்னு நக்கல்?” என்று நொடித்து கொண்டு அவன் எதிரே அமர்ந்தாள் அபிநயா.

 

   “நான் நாளைக்கு உன்னை…” அவன் ஆரம்பிக்க, “அதெல்லாம் வேண்டாம். நான் கேட்டு யாரும் கஷ்டப்பட வேண்டாம்.” என்று முடித்துவிட்டாள் அபிநயா.

   “உங்களுக்கு என்னை பிடிக்காது. அது தான் நான் பேச வந்தாலே எரிந்து விழறீங்க.” அவள் முகத்தை சுழித்தாள்.

  “வாத்தியரம்மா…” அவன் குரல் தழைந்து போனது.

     “நான் பேச வந்தேன்…. கோபப்பட்டது யார் நீங்க தானே?” அவள் பேச்சை தவிர்த்ததை வசதியாக ஒதுக்கி கொண்டு, அவன்  கோபங்கொண்ட நொண்டியை பிடித்துக் கொண்டாள்.

     இது ரகுநந்தனுக்கு தோன்றினாலும், ‘தூக்கம் என்று சொல்ல போகிறாள். பேசி பயனில்லை என்று அவனும் மௌனித்துக் கொண்டான்.

      “அப்புறமும், நான் சமாதானம் பேசினேன். சண்டை இழுத்தது யார் நீங்க தானே? எங்கையோ உள்ள கோபத்தை நீங்க என்கிட்ட காட்டறீங்க?” சட்டென்று அவன் நாடியை பிடித்துவிட்டாள்.

      ‘வாத்தியரம்மா இதெல்லாம் அசால்ட்டு தான். ஆனால், சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லை. இதுல என் மேல கோபம் வேற?’  என்று தன் கண்களை சுருக்கி அவளை கூர்மையாக பார்த்தான்.

   அபிநயா, வெடுக்கென்று திரும்பி கொண்டு, படுத்துவிட்டாள்.

                    “ம்… ச்…” என்று அவன் குரல் எழுப்ப, “நான் தான் சொல்றேன்ல, உங்களுக்கு என்னை பார்த்தா சலிப்பா இருக்கு.” என்று கூறிக்கொண்டே, ஜன்னல் அருகே சென்று நின்று கொண்டாள்.

    அழுத்தமான கால் அடிகளோடு அவள் அருகே வந்தான் ரகுநந்தன். “திரும்ப சொல்லு.” அவன் குரல் இப்பொழுது கோபமாக ஒலித்தது.

                  ‘எதுக்கு இவ்வளவு கோபப்படுதாக?’ அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

      அவன் மிக அருகே நின்று கொண்டிருந்தான். “இப்ப சொல்லு…” அவள் காதில் கிசுகிசுப்பாக கூறினான்.

   ‘சலிப்புன்னு சொன்னது அவ்வளவு பெரிய குத்தமா? இப்படி மிரட்டுதாக?’ என்று அவனை அழுத்தமாக பார்த்தாள் அவள்.

      ஜன்னல் வழியாக வீசிய காற்றில், அவள் தலை முடி முன்னே வர, அங்கு மேஜையில் இருந்த பேனா கொண்டு, அதை ஒதுக்கினான்.

    “நான் உன்னை தொடலை.” அவன் அழுத்தம் கூடி இருந்தது.

   கண்கள் சற்று கோபத்தை வெளிப்படுத்தியது.

 சலிப்பு குத்தம் தான் போல. அவுகளுக்கு பிடிக்காத மாதிரி, ஏதோ எக்குத்தப்பா சொல்லிட்டோம் போல.அவன் குரலின் அழுத்தத்தில், அவன் கண்கள் பிரதிபலித்த கோபத்தில், நொடி பொழுதில் அவள் மனதை மாற்றிக் கொண்டாள்.

      வீசிய காற்றில், அவள் சேலை விலகி அவனை இம்சித்தது.  அவன் நெருக்கத்தில், அவள் இதயம் வேகமாக துடிக்க அவள் மூச்சு காற்றில், ‘எங்கு தடுமாறிவிடுவோமோ?’என்று தயக்கம் அவனுள் கோபத்தை கிளப்பியது.

    “நீ சொன்னதை திரும்பி சொல்லுன்னு சொன்னேன்.” அவன் கர்ஜித்தான்.

 

          ‘சொல்ல வேண்டியதை சொல்ல மாட்டா. தேவை இல்லாததெல்லாம் நல்லா பேசுவா.அவன் மனம் கொதித்தது.

   “உ… உங்களுக்கு என்னை பார்த்து சலிப்பு…”அவள் தட்டு தடுமாறி கூற, “இன்னொரு தடவை அப்படி சொல்லி பாரு. என் ஆசையின் அளவு என்னன்னு காட்ட வேண்டியது வரும்.” அவன் இடைவெளியை கூட்டாமல், குறைத்து கொண்டு கூறினான்.

அவன் கோபம் கொண்டு பேசினாலும், அவன் பேசிய விதமும், அவன் அருகாமையும் சிறிதும் பயம் தராமல், அவள் மனம் துள்ளாட்டம் போட்டது.

    கோபம் கொள்ளாமல் அவன் அருகாமையை ரசிக்கும், அவள் அணுக்களின் செயல்பாட்டை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

        சில நொடிகள், சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றன.

அவனும் அவளும்!

    அவள் கண்கள், அவன் கண்களை ஆழமாக பார்த்தன. அவள் கண்களின் ஏக்கம், அவனுக்கு புரிவது போல் இருந்தது.

   ‘அவள் சொல்லாமல், நான்…மேலே அவன் மனம் அதன் செயற்ப்பாட்டை நிறுத்தி கொண்டு, அறிவு வேலை செய்ய, சட்டென்று விலகி கொண்டான்.

    “ஆசையின் அளவை காட்டிட்டாலும்…” அவள் அவனுக்கு கேட்காதவாறு முணுமுணுக்க, “என்ன சொன்ன?” அவன் கேட்க அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

      “எதுவும்  பிரச்சனையா? ஏன் ஒரு மாதிரி இருக்கீக?” அவள் சமாதான கொடியை பறக்க விட, அவன் முகத்தில் புன்னகை.

   ‘இவுங்களுக்கு இந்த மாஸ் சண்டை ஸீன் மாதிரி, ரொமான்ஸ் ஸீன் மாதிரி  பில்டப் எல்லாம் தேவையா?’ என்பது போல், வீசிய காற்று தன் தலையில் தானே அடித்து கொண்டு கடுப்பாகி ஜன்னல் வழியாக மீண்டும் வெளிய சென்று விட்டது.

      அவள் பேசிய அனைத்தும் மறந்து போக, மறுப்பாக தலை அசைத்தான்.

      “நான் உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்.” அவன் நீட்ட, அதை அவள் பிரித்து பார்த்தாள்.

  “டிராக்ஸ், ஸூட்?” என்று அவள் அதிர்ச்சியாக கேட்க, “ஏன் போட மாட்டியா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“இது வரை போட்டதில்லை.” அவள் தயக்கமாக கூறினாள்.

   “சுடிதார், லெக்கின்ஸ் எல்லாம் போடுற?” அவன் நிறுத்த, “இல்லை… அத்தை எதுவும் சொல்ல மாட்டாகளா?” என்று அவள் யோசனையாக கேட்டாள்.

    “ஒரு பெண்ணோடு உடையை வச்சி ஒரு பெண்ணோடு கேரக்டரை கணிக்குற அளவுக்கு அம்மா பத்தாம் பசலி கிடையாது.   சேலை, சுடிதார் உடுத்திரவங்க எல்லாரும் மட்டும் யோக்கியமா?” என்று கேட்டான் அவன்.

   “எந்த டிரஸ் போட்டாலும், அதை போடுற விதமா போடணும். விகல்பம் இல்லாம உடுத்தினா எல்லாமே நல்ல உடை தான்.” அவன் தெளிவாக பேசினான்.

    “நீட்டா சேலை , சுடிதார் போட்டுட்டு போனாலும் தப்பா பாக்குறவங்க அப்படி தான் பார்ப்பாங்க.” என்று அவன் பேச, அவள் அவனை மரியாதையாக பார்த்தாள்.

       “நீ உன் இஷ்டப்படி உனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணு.” அவன் கூற, “தேங்க்ஸ்.” அவள் வெட்கத்தோடு கூறினாள்.

 

      “இவ்வளவு நாக்கு வறண்டு போற அளவுக்கு பேசியிருக்கேன். தேங்க்ஸ் மட்டும் தானா?” என்று அவன் உதட்டை மடித்து சிரிக்க, “இந்த தேங்க்ஸ் கூட உங்களுக்கு இல்லை. இந்த மாதிரி நல்ல புருஷனை கொடுத்த கடவுளுக்கும், உங்களை பார்த்து கொடுத்த எங்க அம்மா, அப்பாவுக்கும் தான்.” அவள் தீவிரமாக கூறினாள்.

    அவன் கலகலவென்று சிரிக்க, சட்டென்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் அவள்.

    அவன் சிரிப்பு சட்டென்று நின்று கண் மலர்த்தி அவளை பார்க்க, “தொட கூடாதுங்கிற கட்டுப்பாடு, இடைவெளி எல்லாம் உங்களுக்கு மட்டும் தான். எனக்கில்லை.” கூறி கொண்டு, அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு புன்னகையோடு மெத்தையில் படுத்து  கொண்டாள்.

    அவள் புன்னகை அவனை தொற்றி கொண்டு, நிம்மதி அடைய செய்தது.

          அவன் கேட்க நினைத்ததை கூட ஒதுக்கிவிட்டான். அவன் கோபம் கூட  மறைந்து விட்டது.

   ‘வாத்தியரம்மா என்னை என்னவோ பண்ணறா.அவன் தன் இதயத்தை தட்டி கொடுத்து கொண்டான்.

     மறுநாள் காலையில் அவள் ட்ராக்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்றாள்.

     ‘தொள தொளன்னும் இல்லை. டைட்டா அசிங்கமாவுமில்லை. அழாக இருக்கு.என்று எண்ணி கொண்டாள்.

     அவள் வடிவத்திற்கு ஏற்ப, அழகாக பொருந்தி இருந்தது.

 

         கண்ணாடி வழியாக அவன் அவளை ரசித்து கொண்டிருந்தான். அப்பொழுது தான், அவளுக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்தது.

   “என் சைஸ் எப்படி உங்களுக்கு இவ்வளவு சரியா தெரியும்?” அவன் குறும்பாக சிரித்தான்.

   “நேத்து பக்கம் பக்கமா டைலாக் பேசினீங்க?” அவள் முறைக்க, “அது புருஷன் பொண்டாட்டிக்கு பொருந்தாது.” அவன் கண்சிம்மிட்ட, ‘இவுகளை…அவள் நாக்கை கடித்து திரும்பி கொண்டாள்.

      இருவரும் பேசிக் கொண்டே, படி இறங்கினர். யாரும் இன்னும் எழவில்லை. வேலை செய்பவர்களிடம் கூறிக்கொண்டு, இருவரும் ஜாக்கிங் சென்றனர்.

            ரகுநந்தன், அவளிடம் இயல்பாக பேசினான். அபிநயாவாக ஏதாவது சொல்லுவாளா?’ என்று எதிர்பார்த்து ஏமாற்றமே அடைந்தான்.

   அவளை கேள்வி கேட்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. அபிநயாவும் இயல்பாக பேசினாள். அவளிடம் எந்த தடுமாற்றமும் இல்லை.

இருவரும் வீடு திரும்பினர்.

         ரேவதி அபிநயாவை மேலும் கீழும் பார்த்தாள்.

   “அம்மா, உன் மருமக ட்ரெஸை பாரேன்.” என்று சமையலறை சென்று தன் தாயின் காதில் முணுமுணுக்க, “நான் ஏன்டி பார்க்கணும். அவ புருஷன் பார்த்தா போதாதா?” என்று கூற, தன் தாயின் கைகளை இழுத்து வந்து படி ஏறி கொண்டிருந்த மருமகளை காட்டினாள்.

 

   “ஜாக்கிங்க்கு நல்லாருக்கும் போல. நீயும் வேணா ஒன்னு வாங்கி போடு. போட்டால் மட்டும் போதாது ரேவதி. அவளை மாதிரி சுறுசுறுப்பா எழுந்து ஜாக்கிங் போகணும்.” பவானியம்மாள் தன் முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு நக்கல் பேசினார்.

  ‘அவ ஜோடி போட்டு ட்ரெஸ் பண்ணிட்டு ஊரை சுத்துறா. நீங்க, என்னை வச்சி காமெடி பண்றீங்களா? உங்களுக்கு வைக்கிறேன் வேட்டு.என்று கருவி   கொண்டு  அலைபேசியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றாள் ரேவதி.

பொழுதுகள் விடியும்…