சற்று வசதி படைத்தவர்கள் குடியிருக்கும் லக்ஷரி பீச் அப்பார்ட்மெண்ட் பகுதி அது. அங்கு தான் பன்னிரண்டாம் தளத்தில் ரகுவின் வீடு.
ட்ராக்கிங் சூட் சகிதம் இருவரும் லிப்டில் இருந்து வெளியே வந்தனர்.
ரகு தான் அவளை கட்டாயப்படுத்தி ஜாக்கிங் செய்வதற்காக அழைத்துச் செல்கிறான். அவனது எண்ணமெல்லாம் அவளை பழைய தாமிராவாக மாற்ற வேண்டும் என்பது மட்டுமே.
கல்லூரி செல்லும் காலங்களில் சிந்து, ரகு, தாமிரா என மூவரும் ஒன்றாக ஜாக்கிங் செய்வது வழக்கம். ஆனால் இன்றைய நிலை அவர்களை தலைகீழாக மாற்றி விட்டிருந்தது.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இன்று இந்த காலை நேர ஜாக்கிங் அவள் மனதிற்கு பெரும் இதத்தை அளிக்க, அவனுடன் இலகுவாக கதையளந்தவாறே கடற்கரை பகுதியை அடைந்திருந்தனர். நீண்ட நேர மெல்லோட்டத்தில் அவளுக்கு வியர்க்கவாரம்பித்தது.
“ரகு டயர்ட்டா இருக்கு. வா அந்த பெஞ்ச்ல கொஞ்ச நேரம் உட்காரலாம்டா” என கடற்கரையோரமாக போடப்பட்டிருந்த பெஞ்சை நோக்கி நடக்க,
“என்னது அதுக்குள்ள டயர்டா? என் அம்மாவே ஒரு நாளைக்கு 2km க்கு மேல் நடக்குறாங்க. நீ பாதி தூரம் கூட தாண்டலை… உனக்கு ஒருவேளை நீ கிழவியாகிட்டு வர்றியோ என்னவோ? ” என புருவம் சுருக்கி அவளை கேலியாய் பார்த்தான்.
“ரகூ… ” என அவள் இழுக்க, அவன் இன்னும் கேலியாய் சிரித்தான்.
“நீ என்னை கிழவின்னு சொல்றியா? அரையடிக்கு மேல் வளர்ந்திருக்குற உன் தொப்பையை பாரு. இப்பவே நீ பாதி கிழவன் தான்.” என்று அவளும் கண்கள் சுருக்கி, நக்கலாய் சிரித்தாள்.
என்ன தனக்கு தொப்பையா? அவசராமக குனிந்து பார்க்க, அவள் பக்கென்று சிரித்து விட்டாள்.
பின்னே தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் அவனை பார்த்து அவள் அப்படிச் சொன்னதும், உண்மையில் தொப்பை வந்துவிட்டதோ என்று தான் சட்டென ஆராய்ந்தான்.
“ஹலோ தொப்பைலாம் இல்ல சும்மா சொன்னேன். ரொம்ப தான் பயப்படற. ஏன் தொப்பை இருந்தா எந்த பொண்ணும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கனு பயப்படறீயா? நான் வேணும்னா நல்ல பொண்ணு பார்த்து தரட்டுமா?” புன்னகை மாறாமலே கேட்க, அவன் பதிலளிக்கவில்லை.பேச்சை மாற்றினான்.
“இந்த கொஞ்சம் தூரம் வந்ததுக்கே உனக்கு இப்படி வியர்க்குது. என்னை பாரு இன்னும் எப்படி இருக்கேன்னு. ம்ம் அப்படின்னா ஒரு ரன்னிங் ரேஸ் வச்சுக்கலாமா? இந்த இடத்தில் இருந்து அதோ அங்க தூரத்துல தெரியுதே அந்த பெஞ்ச் வரைக்கும்… யாரு பர்ஸ்ட் வர்றாங்கனு பார்க்கலாம். அப்போ தெரிஞ்சிரும் யாரு ஒரிஜினல் கிழம்னு.” அவன் அவளை விடாமல் பந்தயத்துக்கு அழைத்தான்.
“ஓ சார் எனக்கு ஓட முடியாதுன்னு நெனக்கிறீங்களா? ஓகே ஐம் ரெடி. பட் நீ தோத்துட்டா…?” அவள் இழுவையாக தலைசரித்து, கண்சிமிட்டிக் கேட்க, அவனுக்குப் புரிந்து விட்டது.
இந்தப் பார்வையை அவனால் மறக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.
கல்லூரி நாட்களில் மூவருமாக ஜாக்கிங் வந்து செய்யும் அரட்டைகள். அதிலும் மூவருக்குமான அந்த ஓட்டப்பந்தயம். அதில் இவன் தோற்றுவிட்டு தோழிகளிடம் சிக்கி, அவன் படும் அவஸ்தை. அந்த அழகிய தருணங்கள் யாவும் அவன் நினைவுப் பெட்டகத்தில் பத்திரமாகவே இருந்தது.
அந்த நினைவில், அவன் முகம் மலர சரி என தலையசைத்தான்.
“ஆனா நீ தோத்துட்டா… உனக்கும்…?” என அவன் உதடுகள் வளைய, அவளை பார்த்தான்
அவன் பக்கம் திரும்பி விழிகளை உருட்டி “ஹலோ மிஸ்டர் ரகு, மறந்துட்டீங்களா? இதுல எப்பவும் தோத்து பல்பு வாங்குறது நீங்க தான். இந்த தடவை மட்டும் விட்ருவேனா? அபிஷேகத்துக்கு ரெடியாகுடா.” என்று அவன் முதுகில் தட்டிவிட்டு, அவள் குதிரை வால் கொண்டையை மீண்டும் ஒருமுறை இறுகக் கட்டி விட்டு, திமிராக திரும்பினாள்.
ஒரு முழங்காலை மடித்து அமர்ந்து, இரு கைகளையும் தரையில் ஊன்றி இருவரும் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகினர்.
ஒன்… டூ… திரீ… கோ…
இருவரும் தங்களது வெற்றி எல்லையை நோக்கி வேகமாக ஓட்டம் எடுத்தனர். முதலில் இருவரும் சம வேகத்திலேயே ஓட, பின் ரகு அவளை முந்த, கையாட்டி நக்கலாக சிரித்துக் கொண்டே அவளை தாண்டி ஓடினான்.
விடுவாளா அவள்? தன் ஒட்டுமொத்த வேகத்தையும் ஒன்றுதிரட்டி வேகத்தை அதிகரிக்க, முன்பு போல் அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆனாலும் முயற்சியை விடவில்லை.
வெற்றி எல்லையை தொட இன்னும் சொற்ப நொடிகள் தான். இதோ இருவரும் தீவிரமாக ஓடுகின்றனர். இருவருக்குமான இடைவெளி ஓரிரு அடிகளே. இதோ முதலில் வெற்றி இலக்கை அடைந்தது தாமிரா தான்.
ஓட்டப்பந்தயத்தில் வென்று விட்டாள் அவள். கடைசி நொடியில் அவனை தோற்கடித்து விட்டாள் அவள். இல்லையில்லை அவனாகவே தோற்று விட்டான் அவளுக்காக.
ஓடிவந்து முழங்கால்களை மடித்து தரையில் அமர்ந்தவள் முகத்தில் முத்து முத்தாக அரும்பியது வியர்வை.
நீண்ட நீண்ட பெரு மூச்சுக்களை இழுத்து விட்டபடியே, கீழே விழுந்து கிடந்தவனை வீராப்பாக பார்த்தாள்.
“எப்பூடி? சொன்னேன்ல இந்த தடவையும் உனக்கு தான் பல்புன்னு. சரி வா வா…” எழுந்து கைகளில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட்டு, அவனை அழைக்க அவனுக்குத் தெரியும் எதற்கு இந்த அழைப்பென்று.
“ஓடி ரொம்ப களைச்சு போய் தெரியுற தாமிரா. இரு உனக்கு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வாரேன்.” நைசாக நழுவ முயற்சிக்க,
அவனது தலைமுடியை இழுத்து பிடித்து ஆட்டிக்கொண்டு,
“எங்கடா மெல்ல எஸ் ஆக பார்க்குற? மரியாதையா வா” அவனை இழுத்துக் கொண்டு நடந்தாள்.
அவனுக்கு எப்படியாவது இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். கடல் அலை அவர்கள் காலை தொட்டுச் செல்லும் தூரம் வரை வந்தவன் மெல்ல நழுவி ஓட முயற்சிக்க, படாரென்று முதுகில் அடி போட்டு முறைத்தாள்.
“ப்ளீஸ்டி… ப்ளீஸ்… நோ… நோ… நனைஞ்சிட்டு வீட்டுக்கு போக முடியாதுடி விட்ருடீ” அவளிடம் கெஞ்சத் துவங்கி விட்டான்.
அவனது கெஞ்சல் எல்லாம் அவளிடத்தில் செல்லாது. அவனை இழுத்து வேகமாக கடலுக்குள் தள்ளி விட தொப்பென்று விழுந்தவனை முழுமையாக நனைத்தது உவர்நீர்.
முழுவதுமாக நனைந்து கிடந்தவனை, பார்த்து கைகொட்டி சத்தமாக சிரிக்க, அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்தான் ரகு.
அவனுக்கு இது தானே வேண்டும். இந்த அழகிய புன்னகையை பார்க்கத் தானே அவன் துடியாய் துடித்தது.
அவளது இந்த அழகிய புன்னகை காண, என்ன செய்தாலும் தகும் என்றே தோன்றியது.
அலைகள் வந்து அவனை தாக்கிச் சென்றதையும் உணராதவனாய், புன்னகை நிறைந்த அவள் வதனத்தையே கண்களுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தவன், திடீரென அவள் கையையும் பிடித்து இழுக்க, அவளும் நீக்குள் விழுந்து விட்டாள்.
இரண்டு தடவை நீருக்குள் மூழ்கிய எழுந்தவள்
“பாவி, என்னை ஏன்டா இழுத்த? உன்னை…” என்று அவன் தலையை பிடித்து நீருக்குள் இரண்டு மூன்று தடவைகள் அமிழ்த்தி எடுத்தாள்.
ஒவ்வொரு தடவையும் மூச்செடுப்பதற்காக, ஆ வென்று வாயை பிளக்க, அதற்குள் மீண்டும் அவன் தலையை அமிழ்த்தி விடுவாள்.
அவர்களுக்கு மிகவும் பழக்கமான ஆபத்தில்லாத கடற்கரை பகுதி தான்.
இருவரும் நீண்ட நேரமாக, நீரை ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு விளையாடி விட்டு, கரைக்கு வந்தவர்கள் முழுவதும் தொப்பலாக நனைந்து விட்டனர்.
தலையில் வழிந்து கொண்டிருந்த தண்ணீரை கைகளால் துவட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
ஜீவனிழந்து கிடந்த அவள் முகம் புன்னகையில் விகத்துக் கிடந்தது. மின்னிடும் குறும்பை மீட்டிட்ட மகிழ்ச்சி அவன் முக்திலும் தெரிந்தது.
“உன்னோட இந்த சிரிப்பை ரொம்ப மிஸ் பண்ணேன் தாமிரா. நீ இப்படியே சிரிச்சிட்டு இருக்கனும்” அவள் முகத்தில் பார்வையை பதித்த வண்ணம் கூற, அவன் குரலில் தெரிந்த உணர்ச்சி மாற்றம் அவள் இதயத்தை பலமாக தாக்கியது.
“தேங்க்ஸ் ரகு.” தன் அழகிய பற்கள் மின்னிய, அவன் முகத்தை மென்மையாக பார்த்தாள்.
அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்திடல் துணிவான் இவளது தோழன். அது அவளுக்கும் தெரிந்தது. அவளில் சிரிப்பை வரவழைப்பதற்காக என்ன என்னவெல்லாம் செய்து விட்டான்.
“இந்த சந்தோஷத்துக்கு காரணமே நீ தான் ரகு.” இலகுவாக அவன் தோளை தட்ட,
ஆம் அவன் நண்பன் தானே அவனும் சிரித்துக்கொண்டான்.
அதே நேரம், அவர்கள் முன் திடீரென்று ஓர் உருவம் நிழலாட, இருவரும் நிமிர்ந்து பார்க்க, அங்கே சிந்து நின்றிருந்தாள்.
இவ்வளவு நேரம் சிரித்த அவள் உதடுகள் சிரிப்பை நிறுத்தி, முகம் கடுகடுத்தது. சிந்துவை பார்க்க விரும்பவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டு போக நகர முயன்றவளை,
“தாமிரா… ப்ளீஸ் பேசு” என்று அவள் கையை பிடிக்க, பட்டென தட்டி விட்டாள்.
“டோண்ட் டேர் டு டேக் மை நேம் அகைன். உன்கூட நான் ஏன் பேசனும். நீ யாரு?” அவளது அந்நியமான பார்வையும் பேச்சும் சிந்துவை மிகவும் வருத்தியது.
“சாரிடி. அன்னைக்கு நான் உன்னை புரிஞ்சுக்காம பேசிட்டேன். தப்புதான். அதுக்காக எத்தனை வாட்டி மன்னிப்பு கேட்டுட்டேன். இத்தனை வருஷமா என்னை யாரோ போல பார்க்குறது ரொம்ப கஷ்டமா இருக்குடி.” உண்
“ஓஹோ கஷ்டமா இருக்கா? அன்னைக்கு எனக்கும் அப்படிதானே கஷ்டமா இருந்து இருக்கும். நீ என் பிரெண்ட் என்னை நம்புவ என்னை கண்டிப்பா புரிஞ்சுக்குவனு நம்பி வந்தேன். ஆனா கடைசி வரைக்கும் நான் சொல்றது கேட்கலைல. உண்மையான நட்புக்கு அடையாளமே நல்ல புரிதலும் நம்பிக்கையும் தான் அது உன் கிட்ட இல்லை. என்னை நம்பாத யார் உறவும் எனக்கு வேண்டாம்.” பட்பட்டென வார்த்தைகளை அவிழ்த்து விட்டவள், அதற்கு மேலும் அங்கு நில்லாமல் கிளம்பி விட்டாள்.
இருவரும் அவனது தோழிகள் இந்த விடயத்தில் யார் பக்கம் நிற்பதென அவனுக்கு தெரியவில்லை. இருவரும் அவனுக்கு முக்கியமானவர்கள். அதனால் அமைதி காத்தான்.
கண்களில் வேதனையுடன் ரகுவின் முகத்தை பார்க்க, ஆதரவாய் தோள் தொட்டு,
“அவ ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கா சிந்து. அவளை மாத்த ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அவ பேசினதை மனசுல வச்சிக்காதே. கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். நீ கிளம்பு” அவளுக்கு ஆறுதலளித்து அனுப்பி வைத்து விட்டே அவன் சென்றான்.
***
அன்றிரவு அவளது தாய் அழைத்திருக்க, வீட்டுக்கு ரகுவுடன் வந்திருந்தாள். அவளது தாய் சுமித்ரா, அக்ஷரா, அண்ணி வந்தனா என அனைவருமே நன்றாக பேசினாலும் கூட, இன்னும் இரண்டு ஜீவன்கள் மட்டும் அவளை கண்டு கொள்வதேயில்லை.
அது அவளது தந்தை மற்றும் தருண்.
இவள் வந்தாலே முகம் திருப்பி சென்று விடுவான் தருண். தந்தையோ அவளது அறைக்குள் இவள் நுழைந்தாலே சத்தமிடுவார்.
சற்று தேறி வரும் அவரது உடல் நிலையை பரிசோதிப்பதற்காகவே ரகு வந்திருந்தான். கூடவே அவளும் வந்து விட்டாள்.
சுமித்ராவுக்கும் அக்ஷராவுக்கும் தாமிரா செய்த காரியத்தில் சற்று மனவருத்தம் இருந்தது தான். யாருக்குத் தான் வருத்தம் இருக்காது?
அவர்கள் இருவரும் ஊர் சென்றிருந்த வேளை திருமணம் செய்து கொண்டாள் அதுவும் அவள் விருப்பத்திற்கு என்ற செய்தியில் பெரிதாக அதிர்ந்தனர் இருவரும்.
ஆனால் தான் விரும்பி தேடிக் கொண்ட வாழ்க்கையை வெறுத்து இந்த நாட்டை விட்டுச் சென்று இத்தனை வருடங்கள் தனியாக வாழ்ந்திருக்கிறாள் என்றால் அவள் மனம் நோக எதோ ஒன்று நடந்திருக்கும் என்று தானே அர்த்தம்.
வாழ்க்கையே தொலைத்து நிற்பவளை மேலும் கஷ்டப்படுத்த விருப்பமின்றியே ஏற்றுக் கொண்டார்கள்.
அவளது இந்த திடீர்ச் செயலில் பெரிதாக உடைந்து போனது அவளது தந்தை தான். அதனால் தான் இன்று அவருக்கு இந்த நிலை.
கணவனின் கட்டளையின் பேரில் தாமிரா திருமணம் செய்து கொண்டாள் என்ற உண்மை அவர்களது உறவினர்கள் மத்தியில் மறைக்கப்பட்டு, மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று விட்டாள் என்றே கூறி வந்தனர். ஒருவகையில் அது உண்மையும் கூட.
அவள் திருமணம் செய்து கொண்டாள் என்று தெரிந்தாலும் யாரை? எப்படி? என்று எதுவும் அவர்களுக்கு கூறப்படவில்லை.
அதனால் தான் அன்று விஸ்வநாத்தை சந்திக்க வந்திருந்த புதியவனை புரியாமல் பார்த்திருக்க, தருண் கூறிய பின்பே அவன் தாமிராவின் கணவன் என்று தெரிந்தது.
ருத்ரனை பார்த்ததுமே சுமித்ராவுக்கும் அக்ஷராவுக்கும் பிடித்துவிட்டது. அவனது ஆளுமையான கம்பீரமான தோற்றமும் கூட அதற்கு காரணம்.
மகள் அவளுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒருவனை திருமணம் செய்து கொண்டாளோ? அதனால் தான் அவள் வாழ்க்கை தடம் புரண்டு விட்டதோ?என்ற எண்ணம் தான் இன்றுவரை அவரை வதைத்திருக்க, ருத்ரனின் வருகை அவருள் பெரிதும் நம்பிக்கையை கொடுத்தது.
பல ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் இதர நிறுவனங்களுக்கு உரிமையாளன் என்பதும் அவருக்குத் தெரிய வந்தது. அவனது இன்னொரு முகம் அவருக்கு தெரியவில்லை போலும்.
தாமிரா ஏன் அவனிடமிருந்து விலகிப் போனாள்? என்ற காரணம் மட்டும் இன்னும் பிடிபடவில்லை. அவளிடம் எப்படிக் கேட்டாலும் எதையும் கூறத்தயாராயில்லை.
விஸ்வநாத் தாமிராவை அவனுக்கே ஊரறிய இந்தத் திருமணத்தை நடத்த திட்டமிருப்பது தெரிய வந்ததும், ஏன்? எதற்கு? என்ற எவ்வித கேள்வியும் எழவில்லை. மாறாக தாயான அவர் மனம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்ந்தது.
இன்று மாலை ருத்ரனின் தாயார் வேறு வந்து பேசிச் சென்றது அவருக்கு மனநிறைவை கொடுத்தது.
ரகு விஸ்வநாத்தை பரிசோதிக்க அறைக்கு சென்றிக்க, தாமிரா மாத்திரம் கூடத்தில் அமர்ந்திருந்தாள்.
“என்னை எதுக்கும்மா வர சொன்ன?” தன்னை ரகு வீட்டிலிருந்து வரவழைத்த காரணத்தை அறியும் நோக்கில் கேட்டாள் அவள்.
“நீ ஒன்னும் சின்னப்பிள்ளை இல்லை தாமிரா. நீ கல்யாணம் ஆனவ. இனி அங்க போய் தங்குறது சரியா வராது.” என்றவர்,
“தாமிரா உன் கல்யாணத்துக்கு மூனு நாள் பார்த்து வச்சிருக்கோம். உனக்கு எந்த நாள் வசதிப்படும்னு பார்த்து சொல்லு” சந்தோஷ பூரிப்புடன் மகளின் பார்க்க, அவள் முகமோ இறுகி விட்டது.
“இது எந்த நாள்ல நடந்தாலும் அது எனக்கு கெட்ட நாள் தான். இப்பவே இந்த கல்யாணம் நடக்கலைனு யார் அழுதா? முடிஞ்சா கொஞ்ச நாள் தள்ளி போடுங்க” வேண்டா வெறுப்பாய் அவளிடமிருந்து வந்தது பதில்.
“இங்க பாரு தாமிரா. நீ விரும்பி தானே அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட. உனக்கும் உன் புருஷனுக்கும் என்ன பிரச்சினைனு தெரியாது. ஆனா சரி செய்ய முடியாத பிரச்சினைனு எதுவுமில்லை. உனக்கு அவர் கூட என்னை தான் பிரச்சினை?” கேட்டார்.
அவனுக்கும் அவளுக்குமான பிரச்சினையை தாயிடம் எப்படி உரைப்பாள்? என்னவென்று உரைப்பாள்?
அவன் எதற்கு தன்னை திருமணம் செய்தான்? எதற்காக தன்னை அப்படி நடத்தினான்? உண்மையில் அவளுக்குக் கூட அது தெரியாதே.
அது ஒரு காதல் திருமணம் அல்ல. துப்பாக்கி முனையில் நடந்த திருமணம். தந்தையின் உயிருக்காக அவள் வாழ்க்கையை பணையம் வைத்து நடத்தப்பட்ட திருமணம்.
இதையெல்லாம் சொன்னால் உண்மையென்று நம்பி விடுவார்களா என்ன?
“அதான் அவன் கூடவே அனுப்ப போறீங்களே. பின்னே எதுக்கு இந்த கேள்வி?” எழுந்து கொண்டாள்.
அவளது முகத்தில் என்ன கண்டாரோ? கண்களை கூர்மையாக்கி அவளை பார்த்தார்.
“உன் அப்பாவோட கட்டளை இது. நீ ஒரு தடவை அவர் ஆசையெல்லாம் உயிரோட குழி தோண்டி புதைச்சது போதும். இப்போவாவது அவர் ஆசையை நிறைவேற்று. இதுக்கு மேல அந்த மனுஷனை கஷ்டப்படுத்தாதே. உன் புருஷன் கூட போய் சேர்ந்து வாழ்ற வழியை பாரு.” எவ்வளவு முயன்றும் இம்முறை அவரால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இயலாமையுடன் தாயை பார்த்தாள். அவள் மனம் தான் கிடந்து அடித்துக் கொண்டது.
அதே நேரம் தந்தையின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு ரகுவும் ஹாலுக்கு வந்து சேர்ந்தான்.
“தாமிரா அப்பாவுக்கு சில மெடிசின்ஸ் வாங்கனும். நான் வாங்கி வந்து கொடுக்கட்டுமா?” என அவளை பார்க்க,
“இரு ரகு நானும் வர்றேன்” என்றவள் தாயின் பக்கம் திரும்பி,
“அப்போவோட ஹெல்த் பத்தி கொஞ்சம் பேசனும். நானும் கூட போய் வந்துட்றேன்மா” என்று அவனுடன் கிளம்பினாள்.
அந்த இரவு நேரத்தில் இருவரும் நடந்தே போய் கொண்டிருந்தனர். சிறிது தூரம் வரை அவள் அமைதியாகவே நடக்க, அவளது குழப்பம் நிரம்பிய முகத்தை கண்டு அவனும் அமைதியாக நடந்தான்.
“ரகு அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு?” தாமிராவே ஆரம்பித்தாள்.
அவளது கண்கள் அவனை எதிர்ப்பார்ப்புடன் பார்த்திருக்க, அதை அவனும் புரிந்து கொண்டான்.
“ம்ம்.. நல்ல முன்னேற்றம் தெரியுது. இப்போ குழறலா பேசினாலும். கொஞ்ச நாள்ல நார்மல் ஆகிடுவாரு.”
“ஆனா அவர் எப்போ முன்ன மாதிரி எழுந்து நடப்பாரு?” கண்களில் ஆர்வம் மின்ன கேட்டவளை,
“நீயும் டாக்டர்ங்குறதை மறந்து பேசறியே. அதெல்லாம் சீக்கிரமாவே நடப்பாரு” பொய்யாய் முறைத்தான்.
அப்படியே மெடிக்கல் ஷாப்பும் வந்துவிட, தாமிராவின் தந்தைக்கு தேவையான மருந்துகளை வாங்கிக் கொண்டு திரும்பி நடந்து கொண்டிருந்தனர்.
அவளது வீட்டுக்கு வந்தபோது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. மீண்டும் சோகக் கடலுக்குள் மூழ்கி விட்டது போன்ற அவளது தோற்றம் ரகுவை வெகுவாக பாதித்தது.
“ஏன் தாமிரா ஒரு மாதிரி டல்லா இருக்க? என்ன நடந்துச்சு?” அவளது முகவாட்டத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள நினைத்தான்.
“அதான் இன்னும் ஒரு வாரத்துல ருத்ரனுக்கு எனக்கும் கல்யாணமாம். இதுக்கு நாள் வேற குறிச்சிட்டாங்களாம்.”
“வாட்?” அதிர்ந்தான்.
“நோ தாமிரா. அன்னைக்கு ஆன்ட்டி இந்த விஷயத்தை சொன்னப்போ அவ்ளோ பெருசா எடுத்துக்கல. ஏன்னா நீ அவனை லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்க, ஜஸ்ட் ஏதோ மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்ல பிரிஞ்சிருப்பீங்க. அதனால் சேர்த்து வைக்கிறது தான் கரெக்ட்டா இருக்கும்னு அப்போ நெனச்சேன்”
“ஆனா அவனை பத்தி எல்லாம் தெரிஞ்ச பிறகு என்னால் இதுக்கு ஒத்துக்கொள்ள முடியாது. உன் வாழ்க்கையில நடந்த எதுவுமே தெரியாத காரணத்தால தானே இப்படி பண்றாங்க. இப்பவே நாம போய் அங்கிள், ஆன்ட்டி கிட்ட நடந்த உண்மையை சொல்லலாம்.” அவன் படபடத்தான்.
அவன் எண்ணமெல்லாம் மீண்டும் தன் தோழியை அந்த இக்கட்டான வாழ்வுக்கு தள்ளி விடக் கூடாது. அவள் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
“சொல்லி?” அவனை கேள்வியாக நோக்க,
“சொன்னா இந்த கல்யாணத்தை நிறுத்திடுவாங்க. நீ நிம்மதியா இருக்கலாம். அவன் கூட போய் கஷ்டப்பட்டு ஒரு வாழ்க்கையை வாழத் தேவையில்லை” என்றான்.
“இது நடந்தாலும் நடக்கலைனாலும் இன்னும் நான் மிஸஸ் ருத்ரன் தான் ரகு.” அவளது கூற்றில் இருந்த உண்மை உரைக்க, அமைதியானலும் அவனால் அப்படியே விட்டு விட முடியவில்லை.
“அங்கிளுக்கு இந்த உண்மை தெரிஞ்சா கண்டிப்பா உன்னை அ…” அவன் விடாமல் பேச, இடைபுகுந்தவள்,
“அவரை ஆல்ரெடி ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ரகு. இதுக்கு மேல அவருக்கு இதெல்லாம் தெரிஞ்சு… அவரால் தான் என் வாழ்க்கை இப்படியாகிருச்சுன்னு தெரிஞ்சா மொத்தமா உடைஞ்சு போயிடுவாரு. வேண்டாம் ரகு இதை இத்தோட நிறுத்திக்கலாம்.” என்றாள்.
“ஆனால் அவன் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணி இருக்கான்.. இ.. இப்படிப்பட்ட ஒருத்தனை நம்பி அவன் கூட உன்னை எப்படி அனுப்ப முடியும்? உன்னை இன்னும் கஷ்டப்படுத்திடுவானோன்னு பயமா இருக்கு தாமிரா.” அவள் மீதான அவனது அக்கறையில், அவனை கனிவுடன் பார்த்து, லேசான புன்னகை சிந்தினாள்.
“அப்போ இருந்த பயந்தாங்கொள்ளி தாமிரா இப்போ இல்லை சோ பயப்படாதே ரகு. அவனால என்னை ஒன்னும் செய்ய முடியாது.” அழுத்தமாக மொழிந்தவளது கண்களில் தெரிந்த தீவிரம் அவனை யோசிக்க வைத்தது.
அவன் அறிந்த தோழி இதுவல்ல. அதே போல் தாமிராவின் தந்தை விஸ்வநாத்தையும் நன்கு அறிந்தவன் அவன்.
அப்படியிருக்க அவரது இந்த முடிவு? அவன் அறியாத சில விடயங்களும் இருக்கக்கூடுமோ? உட்சபட்ச குழப்பத்தில் தவித்தது அவனது மனம்.
***