sippayinmanaivi1

sabari-3d562587

sippayinmanaivi1

பகுதி 1 : சிப்பாயின் மனைவி

அத்தியாயம் 1 : காளி கோவில்

பெருங்கலூரில் இருந்து மேற்கு நோக்கி நாற்பத்தைந்து காத தூரம் இருக்கும் கூடல் நகரத்தில் வாகை சூடிய நாகர் பேரரசில் கொண்டாட்டம் முடிந்து வீரர்கள் ஊர்திரும்பி கொண்டிருக்கிறார்கள். கூடல் பேரரசு கரும்நள்ளி வடக்கில் இருக்கும் எதிரி நாட்டு பேரரசன் உக்கரகாரி எதிர்த்து பூம்புகார் அருகே போர் சில திங்கள்களாக நடந்துவந்தது. சுமார் இருவதாயிரத்திற்குமேல் போர் வீரர்கள் மற்றும் பத்து குறுநில மன்னர்கள் போரிட்டு தங்கள் வடக்கு துறைநகரமான பூம்புகாரை காப்பாற்றி கொண்டனர். பெருங்கலூர் மக்கள் தலைவன் மலையமான், தான் கூட்டி சென்ற இரண்டாயிரம் வீரர்களில் இருநூறிற்கும் குறைவான வீரர்களையே பறிகொடுத்து வீடு திரும்புகிறான்.

இன்று முதல் தனி சுதந்திர நாடாக பெருங்கலூர் இருக்கும், பெருங்கலூர் மட்டுமல்ல பேரரசுடன் சேர்ந்து போரிட்ட பத்து குறுநில மன்னர்களுக்கும் இச்சுதந்திரம் சொந்தமானது. கூடலில் இருந்து தாங்கள் வந்திருந்த நூறுக்கு மேற்பட்ட படகுகளுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்கள் பெருங்கலூர் மக்கள். மலையமானின் தோழனும் எப்பொழுதும் அவன் விசுவாசியாக இருப்பவன் முகிலன், மலை நாடுகளின் தலைவன். பெருங்கலூர் அருகில் இருக்கும் மலைநாடுகளாகிய தேன்மலை மற்றும் முருகமலை, மலை நாட்டிலிருந்து வெறும் இருநூறு வீரர்கள் தான் ஆனால் ஒருவர் கூட உயிருக்கு பயந்தவர்கள் இல்லை.

மக்கள் கூட்டத்தில் திளைத்திருந்தது கூடல் நகரம், கரையில் இருந்து பார்த்தால் வைகை நதியை பார்க்கவே முடியாத அளவுக்கு நிறைந்திருந்த படகுகள், மக்கள் ஆரவாரமாக வீரர்களை வழியனுப்ப நின்றிருந்தனர். மிகப் பெரிய மக்கள் வெள்ளம், இத்தனை திங்கள்கள் இந்த மக்களுக்காக தான் போராடினோம் என மன நிறைவடைந்திருந்தனர் போர் வீரர்கள். என்னதான் அழகிய மலைநாட்டுக்கு தலைவனாய் இருந்தாலும் மிகப் பெரிய பேரரசான நாகரை ஆளும் கரும்நள்ளிக்கு முகிலன் ஒரு சிப்பாய் குழுவின் தலைவன்தான், குறிப்பாக முகிலனும் சிப்பாய் தான். முகிலனுக்கு அது பெரும் குறையன்று அவனை பொறுத்த வரை தன்னை நம்பிவந்த மலையமானுக்கு துணையாக இருக்க வேண்டும், தான் அழைத்து வந்த இருநூறு பேருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வைகையில் சீறி பாய்ந்து கொண்டிருந்தது படகுகள். ‘இனி நாம் தனி நாடு தோழா’ மலையமான் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இதுவரை கண்டிராத மகிழ்ச்சியாக இருந்தது முகிலனுக்கு.

‘நாட்டு மக்களுக்கு தான் சுதந்திரம், உனக்கல்ல. இதன் பிறகு உனக்கு இன்னும் பொறுப்பு அதிகமாகும், பிரச்சனைகளும் அதிகமாகும்’ முகிலன் சொன்னான்.

‘ஆம் , ஆனால் வரி என்ற பெயரில் செல்வங்களை இழக்க வேண்டாம், நான் அரசன் அல்ல மக்கள் தலைவன்.’ மலையமான் சிரித்தவாறு சொன்னான்.

‘அடுத்த திங்கள் தனி நாடாக அறிவிக்கப் போகிறோம்,மலைநாடுகள் தலைவராக நீ வர வேண்டும் ‘ என்றார் மலையமான்.

‘உறுதியாக தோழா’ முகிலன் சொல்லிவிட்டு கதிரவன் இருக்கும் இடத்திற்கு சென்றான்.

‘கதிரவா நாம வருவதை சொல்ல ஊருக்கு ஆள் அனுப்பினாயா?’ முகிலன் கேட்டான்.

‘அனுப்பிவிட்டேன் அய்யா’ கதிரவன் சொன்னான்.

மஞ்சள் வெயில் நெற்றியில் பட, படகு கீழ் நோக்கி செல்வதால் பெரும் உடல்செலவின்றி படகு – மலையுச்சியில் இருந்து உருளும் பாறை போல் ஒரு தடையுமின்றி வேகமாக சென்றது.

பெருங்கலூர், வைகை கரையில் இறங்கினார்கள், முகிலன் மலையமானிடம் விடைபெற சென்றான்.

‘தோழனே, இன்றிரவு விருந்து உண்டுவிட்டு போகலாம்’ மலையமான் சொன்னான்.

‘இல்லை தோழா, இன்று காளிக்கு நன்றி சொல்லும் விழா, செய்யாவிடில் குற்றமாகிவிடும், இன்னும் மூன்று நான்கு மணி நேரத்திற்குள் மலையேறியாக வேண்டும்’ முகிலன் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டான்.

மதிய வேலைக்கு பின்னால் வைகையில் நீரோட்டம் சூரிய ஒளியில் வைர கற்கள் குவியலாய்
கொட்டிய புதையல் அறை போல் மின்னியது. நதியில் மீன்பிடிப்போர் மற்றும் பெருங்கலூரில் இருந்து சில காத தூரம் இருக்கும் கடலில் மீன்பிடிப்போர் சந்தை வைத்திருந்தனர். சுற்றி இருக்கும் பல வேளாண் குடிகளுக்கு பெருங்கலூர் தான் நகர பகுதி. தங்கள் பொருட்களை பண்டமாற்றம் செய்து கொள்வதற்கு பெருங்கலூர் அன்றி வேறு இடம் சிறப்பாய் இல்லை. வாழ்த்தொலிகள் காதை கிழிக்கும் அளவிற்க்கு ஓங்காரமாய் ஓளமிட்டிருந்தது. பறைகளும் எக்காளமும் இசையெழுப்பி மலைமானையும் தங்கள் வீட்டு ஆண் மக்களையும் வரவேற்றனர். முகிலன், நதிக்கரைகளை இணைக்கும் பாலத்தின் மேல் தனது வீரர்களுடன் வேகமெடுத்தான்.

சில காத தூரம் நடந்த பின்னர் கண்ணுக்கு அருகில் தெரிந்தது, அருகருகே இருந்த தேன்மலை மற்றும் முருகமலை. பூமியில் இருந்து அரை காத உயரம் வானிற்கு பக்கத்தில் அதன் உச்சி தெரிந்தது. மலைகளை காக்க இங்கேயே விட்டுவிட்டு சென்ற வீரர்கள் முகிலனை நோக்கி வந்தார்கள். அவர்கள் முகிலனை பார்த்ததும் முகிலனின் மாமன் கார்மேகம் வீரர்களுக்கு சைகை செய்தான், நீண்டு உயர்ந்த எக்காளகளை இரண்டு வீரர்கள் இசை எழுப்பினர். மல மல வென காட்டு தீ போல கீழிருந்து மலை உச்சிக்கு தீ பந்தங்கள் ஏற்றப்பட்டது. மாலை சூரியன் சாய்ந்த நேரம் பாசி தங்கிய பாறைகளை அதன் ஈரப்பதத்தால் நெருப்பொளியில் மின்னச்செய்தது. இருநூறு வீரர்களும் காளியின் முன் நிற்கவைக்கப்பட்டனர். இரண்டாள் உயர காளி சிலை பாறையில் பொறிக்கப் பட்டிருந்தது. இருளாகி இருந்தது நிழலாய் மட்டும் காளி தெரிந்தாள்.

சிலைக்கும் மக்கள் கூடியிருந்த இடத்திற்கும் நடுவில் இருந்த குட்டி மைதானத்தில் ஒரு எருமை தலைகீழாக ஒரு பெரும் கட்டையில் கட்டப்பட்டிருந்தது. ஐந்து எக்காளம், பத்து சங்கு, மூன்று பெரும்பறை மற்றும் இருவது பறை தயார் நிலையில் இருந்தது. ஐந்து அடுக்கு தீபத்தட்டு , அடி அடுக்கு ஒன்பது கிண்ணங்கள் அதன் மேல் அடுக்கு ஏழு என ஒருமையில் குறைந்து கொண்டே மேல் அடுக்கில் ஒரு கிண்ணம், தீபத்தட்டு முழுவதும் எரி கட்டைகள் நிரப்பப்பட்டிருந்தது. காளி கோயில் பூசாரி சைகை செய்தார் . எக்காளம் ஓங்காரமிட்டது , பெரும்பறை அடிக்க பட்டது, சங்கு முழங்க பட்டது , பறைகள் ஒரு சேர இசைக்க பட்டது. ஐந்தடுக்கு தீபத்தட்டு பற்றவைக்கப்பட்டது. பெரும் அரிவாள் கொண்டு எருமையின் தலை துண்டாக்கப்பட்டது . அதன் தலையை காளி காலில் வைத்தார்கள். மக்கள் யாவரும் எக்காள ஓசைக்கும் பறை அடிக்கும் களியாட்டம் தொடங்கினர். காதுகள் அடைக்கும் அளவிற்கு ஓங்காரம் நிறைந்திருந்தது. பலரும் கால்கள் ஆடுவதை அடக்க முடியாமல் நின்றனர். மக்கள் அனைவரும் இந்த தருணத்திற்காகத்தான் காத்திருக்கிறார்கள். சிலைக்கு பக்கத்தில் இருந்த மேடை மீது பூசாரி ஏறி காளி முகத்தில் எருமை ரத்தத்தை தெளித்தார். கூட்டம் ‘ஒஒஒஒஒஒஒஒஒ’ என்று ஓலமிட்டது. கூட்டத்தில் இரண்டு மூன்று பேர் சித்தம் இழந்து பரவசத்தில் ஆடினார்கள். பூசாரி காளி முகத்தை நோக்கி தீபத்தை காண்பித்தார் தீயின் ஒளியில் ஆக்ரோஷ காளி கைகளில் அரிவாள் , சிவந்த நாக்கு நீண்டு ரத்தம் கசியும் பெரும் கண்களுடன் காட்சி அளித்தாள். மக்களுக்கு வெறி ஏறியது. வீரர்கள் வேல் கம்பை பூமியில் ஒருசேர பல முறை அடித்து பூமி அதிர

‘வெற்றி வேல் வீர வேல்’
‘வெற்றி வேல் வீர வேல்’
வெற்றி வேல் வீர வேல்’

போர்க்கோஷமிட்டார்கள். எருமை உடலுக்கு அடியில் தீ முட்டப்பட்டது. மக்கள் களியாட்டம் தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!