Sirpiyin kanavugal – Final
Sirpiyin kanavugal – Final
அத்தியாயம் – 15
அன்று மாலை வீடு திரும்பிய எழிலன் தன் மனைவியை தேடி வந்தான். அவள் சமையலறையில் இருக்க அவளின் பின்னோடு சென்று கட்டியணைத்து கொண்டவன், “உன்னை எங்கயாவது வெளியே கூட்டிட்டு போகவா”என்று கேட்க அவனின் கைக்குள் கட்டுபட்டு நின்றவளோ, “இன்றாவது வெளியே கூட்டுட்டு போக எண்ணம் வந்ததே..” என்று அவனை வம்பிற்கு இழுத்தாள் மழைநிலா.
“சரி கெதியா கிளம்பு” என்றவன் சென்று தயாராக அவளை வெளியே அழைத்துச் சென்றான்.
‘காலிமுகத் திடல்’ கடற்கரை..!
அந்தி சாயும் நேரத்தில் தன் கூட்டை தேடி பறந்து சென்றது பறவைகள். நீல நிறம் கொண்ட வானம் சிவந்து கொண்டிருந்தது. முழு நிலவாக மாறி காட்சியளித்தது.
மெல்ல இருள் சூழ்ந்து வானத்தை கண்டபடி மனைவியுடன் மணலில் கால் புதைய இரண்டு கரம்கோர்த்து வெகுதூரம் நடந்தனர். இருவரின் இடையே இருந்த மௌனமே அவர்களின் மனதை சொல்லாமல் சொல்ல தூரத்தில் இரண்டு ஜோடிகள் கடற்கரை ரசித்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களை கண்டதும் நிலா, “எழில் அங்கே உர்கார்ந்திருக்கிற ஜோடியை பாரு நம்மள மாதிரியே இருக்காங்கோ இஞ்சருங்கோப்பா” என்று சொல்லியபடி இரண்டடி எடுத்து வைத்தாள்.
அதற்குள் அவளின் கரம்பிடித்து தடுத்த எழிலன், “ஷ்.. அவங்க என்ன கதைக்கிறாங்க எண்டு கேட்பம் நிலா” என்று மெல்ல அங்கிருந்த பாறையின் அருகே அவளை மறைவாக அழைத்துச் சென்றான்.
இருவரும் இணைந்தபடி தூரத்தில் அமர்ந்திருந்தவர்களின் மீது பார்வையை பதித்தனர் கணவனும் மனைவியும்!
நீல நிறத்தில் புடவையை அணிந்தபடி முழங்காலிட்டு அமர்ந்திருந்தவளின் பார்வை இலக்கு இல்லாமல் கடலை வெறித்தாள். அந்த பெண்ணின் அருகே அமர்ந்திருந்த அவனோ ஒரு காலை நீட்டிவிட்டு இன்னொரு காலை மடக்கி அவளையே இமைக்காமல் பார்த்தான்.
“என்ன மேகா யோசனை எல்லாம் ரொம்ப பலமாக இருக்கு” என்றான் கண்களில் குறும்பு மின்ன.
அவனை திரும்பிப் பார்த்த மேகா, “காலம் இவ்வளவு வேகமாக போகுது இல்லங்க” என்று புன்னகைத்தவளின் மனதில் திடீரென்று அந்த கேள்வி எழுந்தது.
“ஏன் முகில் நம்மள மாதிரி மனுஷங்களை பூமியில் படைச்சு இருப்பாங்களா” அவள் ஆர்வமாக கேட்க, “ம்ம் நம்மள பிரிச்ச விதிக்கு கூட ஆசை இருக்கும் இல்ல மேகா” அவன் கிண்டலடிப்பது போல கூற அவனின் நெஞ்சில் குத்திய மேகாவிடம் அடியை வாங்கியபடி சிரித்துக்கொண்டே மணலில் சரிந்தான் முகிலன்.
“நான் எவ்வளவு சீரியசாக பேசறேன்.. நீங்க என்ன கிண்டல் பண்றீங்க” என்ரவண்ணம் அவனின் நெஞ்சில் சரிந்தவளோ, “முகில் விளையாடாமல் பதில் சொல்லுங்க” என்று சிணுங்க அவளின் முகத்தை வருடிய முகிலன்,
“ஒரு முத்தை ஈன்றெடுக்கு சிப்பிக்கு இந்த உலகில் அதிகம் மதிப்பில்லை மேகா. ஆன ஒரு சிலையை செதுக்கும் சிற்பிக்கு அவனின் கற்பனை மீது உருவாக்க போற அந்த சிலையின் மீதும் அவனுக்கு ஆயிரம் கனவு இருக்கும்..” என்றவன் மனைவியின் முகத்தை நோக்கியவன் தொடர்ந்து,
“அந்த மாதிரிதான் மேகா நம்ம படைத்த அந்த கடவுளுக்கும் சில கனவுகள் இருக்கும். உன்னையும் என்னையும் சேர்க்க முடியாமல் போனாலும், நம்மள மாதிரி உருவத்தில் இருவரை படைத்து அவங்களுக்கு காதலால் ஒரு திருமணம் நடந்து அவர்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்ப்பார்” என்றதும் அவளின் முகத்தில் தெளிவு பிறந்தது..
“ஆன இந்த விஷயம் நல்ல பிள்ளைகளுக்கு புரியல போல. நம்மள மாதிரி உருவத்தில் இருக்காங்க என்பதற்காக அவங்களும் பிரிஞ்சி போயிருவாங்களோ என்ற பயத்தில் அவங்க நிம்மதியை தொலைச்சிட்டு இருக்காங்க” என்று வருத்தத்துடன் அவள் கூற மனைவியை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்தான் முகிலன்.
பிறகு, “நீ என்னைவிட்டு பிரிஞ்சி போயிட்ட என்று தானே இந்த உலகம் முழுக்க நினைக்குது. ஆன நம்ம என்னைக்கு மேகா பிரிஞ்சோம் திரும்ப சேர்வதற்கு?” என்று குறும்புடன் கேட்டவன்,
“நிமிசத்திற்கு எழுபத்தி இரண்டு முறை துடிக்கும் என் இதயம் கூட உன்னை ஒரு நிமிஷம் கூட மறந்ததில்லை. நீ என்னைவிட்டு விலகி போன பிறகு எத்தனை முறை என்னை பார்க்க வந்த என்று எனக்கு தெரியும்டி. உன்னோட தவறை மன்னிக்கவே முடியாது போடான்னு நீ தூக்கி எறிஞ்சிட்டு போனாலும் அதுக்கு பின்னாடி கூட நம்ம குழந்தையோட எதிர்காலத்தையும், என்னையும் நினைத்து அந்த முடிவை எடுத்து இருக்க..” என்று அவன் விடாமல் பேசிக்கொண்டே போவதை கண்டவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது.
தங்களின் எதிரே அமர்ந்திருப்பவர்கள் இருவரும் கார்முகிலன் – மேகவர்ஷினியின் ஆத்மாக்கள் என்ற உண்மையை உணர்ந்து எழிலன் – நிலா இருவரும் திகைப்பின் உச்சிக்கு சென்றனர்..
“ஆன அந்த உண்மையை யாருமே புரிஞ்சிக்கல முகில். உன்னை என்னவோ நான் வேணும்னு தூக்கி எறிஞ்சிட்டு போன மாதிரி பேசறாங்க நினைக்கிறாங்க. நீங்க சொன்ன மாதிரியே நம்மள மாதிரி உருவத்தில் பிறந்தவங்க நம்மளவிட அதிகமாக நேசிச்சு கடைசிவரை ஒருவரையொருவர் விட்டுகொடுக்காமல் வாழ்வாங்க என்ற எண்ணம் வருது..” என்ற மேகா கணவனை பார்த்து மனதார புன்னகைத்தாள்.
அவர்கள் பிரிந்தே இருந்தபோதும் மனதளவில் இணைந்தே இருந்தனர் என்ற உண்மையை அவர்கள் பேசுவதை கேட்டு புரிந்துகொண்ட எழிலன் தன் மனைவியிடம், “இவங்க கூட நம்மள நல்ல புரிஞ்சி வச்சிருக்காங்க. நினைக்கவே மனசுக்கு நிறைவா இருக்கு. இவங்களை பிரிச்சதுக்கு பதில் நம்மள படைச்சு இருக்காரு அந்த ஆண்டவன். ஆன இவங்கள மாதிரி நம்ம வாழ கூடாது எண்டு இவங்க வாழ்க்கையை நமக்கு தெரிய படுத்தி இருக்காங்க” என்றவன் மனைவியுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்..
இருவரும் கரம் கோர்த்துக்கொண்டு கடலலை சத்தத்தை ரசித்தபடி வெகுதூரம் நடக்க, “எழில் – நிலா சீக்கிரம் எழும்புங்க” என்ற சரளாவின் குரல்கேட்டு பட்டென்று மெல்ல கண் விழித்தான் எழிலன்.
அவன் கண்முழித்து பார்க்கும்போது நிலா அவனைவிட்டு விலகி பாத்ரூம் நோக்கி சென்று கொண்டிருந்தாள். தனக்கு வந்தது கனவா? இல்லை நிஜமா? என்று புரியாமல் இரண்டு கரங்களில் தலையை தாங்கியபடி அமர்ந்தவன் மீண்டும் நேற்று நடந்ததை சிந்தித்து பார்த்தான்.
இரவு கூடலுக்கு பிறகு தூங்கியது நினைவுவர, ‘எனக்கு மட்டும் இந்த கனவு வந்ததா? இல்ல நிலாவிற்கு வந்ததா?’ என்றவன் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க குளித்துவிட்டு பச்சை நிறத்தில் வெள்ளை ஜரிகை கொண்ட பூனம் புடவையை உடுத்திக்கொண்டு ட்ரசிங் டேபிளின் முன்னாடி நின்றவளின் முகத்தில் புது பொலிவுடன் இருந்தது.
அந்த குழப்பத்துடன் எழுந்து சென்ற எழிலனின் பார்வை நிலாவின் மீது கேள்வியாக படிந்தது. அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் நின்றிருக்க சட்டென்று அவளை இழுத்து அணைத்து இதழில் முத்தமிட்டுவிட்டு சிரித்தபடி அவன் குளியலறைக்குள் சென்று மறைந்தான்.
“இஞ்சாருங்கோப்பா இனி நான் திரும்ப குளிகோணும்” அவள் மீண்டும் சிணுங்க கண்ணிமைக்கும் நொடியில் அவளை அலேக்காக இரண்டு கரங்களில் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.
அடுத்து அவர்கள் வெளியே வர இரண்டு மணிநேரத்திற்கு மேலானது.
எழிலன் வந்து சாப்பிட அமர அவனுக்கு பரிமாறிய நிலாவின் முகத்தில் தெரிந்த சந்தோஷமே சரளாவிற்கு நிம்மதியைக் கொடுக்க, “அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போங்க இஞ்சாருங்கோப்பா” என்றாள் மெல்லிய குரலில்.
அவனோ பட்டென்று நிமிர்ந்து அவளின் முகம் பார்த்து, “கெதியா கிளம்பு நிலா. நான் ஓபிஸ் போகும் போது உன்னை உங்க வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு போறன்” என்றான்.
அவள் உடனே புடவையை மாற்றிவிட்டு வெளியே வர அவளை அமர வைத்து தலையை பின்னலிட்ட சரளா, “இங்க பாரும். நீ வைத்த ரோஜா செடியில் பூத்த பூ” என்று மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ரோஜாவை அவளின் தலையில் வைத்து சந்தோசமாக இருவரையும் வழியனுப்பு வைத்தார்.
அவர்கள் வாசல் வரை வந்து இரண்டு புறமும் பார்த்துவிட்டு, “கிளம்புங்கோ” என்று சொல்லும்போது பக்கத்துவீட்டு பெண் ஒருத்தி எதிர்ப்பாராத நேரத்தில் வெளியே வர அவளின் முகத்தை பார்த்தும்,
“பிள்ளைகள் வீட்டைவிட்டு கிளம்பும்போது இது என்ன அபசகுணம்” என்று சத்தமாக சொல்ல அந்த பெண் தலையைக்குனிந்தபடி செல்வதை எழிலன் நிலா இருவருமே பார்த்தனர்.
அந்த பெண்ணிற்கு திருமணம் ஆன இரண்டு மாதத்தில் அவளின் கணவர் இறந்துவிட்டார் என்று நல்லது கெட்டதுக்கு போகும்போது அவளின் முகத்தில் முழிக்காமல் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர் அந்த வீதியில் இருந்தவர்கள்.
நிலாவோ பைக்கை விட்டு இறங்கி, “இஞ்சருங்கோப்பா நீங்க போய் அந்த பெண்ணை கூட்டுட்டு வாங்கோ” என்றாள் கட்டளையிடுவது போலவே.
சரளா தன் மருமகளை முறைக்க, “பூனை குறுக்கே போன அபசகுணம், விதவை பெண்ணின் முகத்தில் முழிச்சிட்டு போன அபசகுணம் எண்டு இன்னும் எத்தனை முறை தான் மாமி சொல்வீங்க. அவங்களைப் பாருங்கோ அவங்களுக்கு இப்படியெல்லாம் தன் வாழ்க்கையில் நடக்குமெண்டு தெரிந்த அந்த பிள்ளை திருமணத்திற்கு ஒப்புதல் சொன்னது.. பாவம் எல்லோ மாமி” என்று அத்தையின் தாடையை பிடித்து கொஞ்சினாள்.
அதே நேரத்தில் அந்த பெண்ணை அழைத்து வர சென்ற எழிலனின் காதில் அந்த பெண்ணின் குரல் தெளிவாகக் கேட்டது..
“இத்தனை நாள் இல்லாமல் புருஷனும், பொஞ்சாதியும் வெளியே போகும் போது நான் அவங்க கண்ணில் விழுவது போல வெளியே போயிட்டேனே.. ஐயோ சாமி அவங்க போகின்ற காரியம் எந்த தடையும் இல்லாமல் நடக்கணும்” என்று அவள் பேசும்போதே அவள் தமிழ்நாட்டை சேர்ந்தவள் என்று புரிந்தது.
அவளின் பேச்சைக் கேட்டதும் அவனின் உள்ளத்தில் சந்தோசமடைய, “சிஸ்டர்” என்ற குரல்கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் அந்த பெண்.
“நான் உங்கன்ர பக்கத்து வீட்டில் இருப்பவன். நாங்க கிளம்பும்போது நீங்க வெளியே வந்ததை பார்த்து அம்மா தவறா கதைச்சிட்டாங்க. அதை பெரிசா நினைக்காதீங்கோ. உங்களை என்ர தங்கையாய் நினைத்து கேட்கிறன். வீட்டு வாசல்வரை வந்து என்னையும், என்ர மனுஷியையும் வழியனுப்பி வைங்கோ” என்று அவன் மலர்ந்த முகத்துடன் கேட்க பெண்ணின் முகம் சட்டென்று மலர்ந்தது.
அவள் இரண்டடி எடுத்து வைத்தபிறகு சரளாவின் நினைவு வந்து அந்த பெண் அமைதியாக நிற்க, “நாங்க போற காரியம் நல்லா நடக்கோணும் எண்டு வேண்டிகொண்ட அந்த நல்ல மனம் யாருக்கு வரும். கெதியா வாங்கோ எங்க அம்மா எதுவும் பேசாமல் நான் பார்த்துக்கறன்..” என்று அந்த பெண்ணை அழைத்து சென்றான்.
அங்கே நிலா சரளாவின் தாடையை பிடித்து கொஞ்சுவதை பார்த்து எழிலனுக்கு சிரிப்பு வந்தது. தன் கணவனோடு அந்த பெண் வருவதை கவனித்தவளின் முகம் மலர, “செல்லம் அந்த பிள்ளையை நோகடிக்கிற மாதிரி கதைக்கதீங்கோ மாமி” என்று அவள் கெஞ்ச அவரும் சரியென்று கூறினார்.
அந்தப்பெண் வந்து வழியனுப்ப, “தேங்க்ஸ் சிஸ்டர்”என்ற நிலா கணவனுடன் தாயின் வீட்டிற்கு சென்றாள். அன்று முழுவதும் பாட்டி மற்றும் அம்மாவுடன் பொழுதை அவள் கழிக்க மாலை வந்த எழிலன் அவளை அதே கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்..
அந்த இடத்தைக் கண்டதும் நிலா குழந்தையாய் மாறி குதூகலிக்க, “இந்த இடத்திற்கு வந்த நினைவு இருக்கா நிலா” என்றவன் அவளை இமைக்காமல் பார்த்தபடி அவன் கேட்க அவனை பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி சிரித்த்வளோ,
“திருமணம் ஆனபிறகு இண்டைக்குத்தான் வெளியே அழைச்சிட்டு வந்திருக்கீங்க இஞ்சருங்கோப்பா” என்று கூற, “ஆமா எதுக்கு இப்போ அதை கேட்கிறயேள்..” என்றவள் சந்தேகமாக கேட்க அவனோ மெளனமாக அவளின் கரம்கோர்த்தபடி வெகுதூரம் நடந்தான்.
“அப்போ அந்த கனவு எனக்கு மட்டும்தான் வந்ததோ” என்றவன் குழப்பத்துடன் வினாவ, “எந்த கனவு..” என்றவள் வேண்டுமென்றே அவள் வம்பிற்கு இழுக்க அவளின் பார்வையின் பொருள் புரிந்தும் புரியாதவன் போல, “நேற்று இரவு உன்னை இங்கே அழைச்சிட்டு வந்தேனே” என்றவன் குறும்புடன் கூற, “இதோ பார்டா..” என்றவளின் கண்கள் உண்மையை உரைத்தது.
“உன்ர கண்கள் வேறு சொல்லுதே” என்றவன் கிறக்கத்துடன் அவளின் இடையோடு கரம்பற்றி தன்னோடு சேர்த்தணைக்க, “இருவருக்கும் வந்தது ஒரே கனவுதான் எழிலன். நம்ம இணையனும் என்பது நம்மை படைத்த இறைவனின் கனவு. அவன் தானே நம்மை செதுக்கிய சிற்பி” என்றவள் அவனின் தோளில் முகம் புதைத்து கொள்ள காதலோடு அவனை அணைத்து கொண்டான்..
வானில் இருள் சூழ்ந்து கொள்ள வெளிச்சத்தின் மகளாக வந்த வான்நிலவுடன் இவர்களின் மௌனமும் கலந்தது. கடற்கரை அலையின் சத்தமும், சில்லென்ற தென்றலில் வருடலும் அவர்களை அவர்களின் மௌன நிலையை கலைக்கவில்லை..
எங்கிருந்தோ கேட்டது அந்த பாடலின் வரிகள்..
“ நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே..
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே..
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்..
நீண்டநாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்..
நான் இனி நீ.. நீ இனி நான்..
வாழ்வோம் வா கண்ணே..” என்ற பாடல் வரிகளை கேட்டு மெய்மறந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள அவர்களின் கண்ணில் வழிந்த காதலைக் கண்ட விதி தன் நண்பனான காதலிடம் அந்த காட்சியைக் காட்டியது..
எழிலனும் – நிலாவும் இணைந்து நிற்பதைக் கண்டு காதலின் மனம் மகிழ அவர்களுக்கு எதிர்புறம் இன்னொரு புறமோ விதியால் பிரிந்த முகிலனும் – மேகாவும் கைகோர்த்தபடி இணைந்து சென்றனர்..
மெல்ல அந்த ஆத்மாக்களின் உருவம் காற்றோடு கலந்து மறைந்துவிட அதை அறியாத இளம் காதல் சிட்டுகள் இரண்டும் தங்களுக்குள் காதலை பரிமாறிக் கொண்டிருந்தனர் பார்வையால்..
சில நேரங்களில் நம்மை படைத்த கடவுளுக்கும், நம்மை இந்த பூமிக்கு கொண்டு வந்த பெற்றோருக்கும் சில கனவுகள் இருக்கும். அவர்களின் கனவுகள் இருக்கும். அதையும் தாண்டி காலத்திற்கு, காதலுக்கு மட்டுமே தெரியும் நம் படைப்பின் ரகசியம்…
அவர்கள் இருவரும் கடைசிவரை நம்மோடு பயணிக்கின்றனர். சில திருப்பத்தை கொண்டுவது காதல் கொண்ட மனங்களை இணைப்பது தான் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை.. அதையே அவர்கள் இன்றுவரை சரியாக செய்கின்றனர்..
இவர்கள் இன்றுபோல என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்ற வாழ்த்துகளுடன் விடைபெறுகிறேன்..