LogicIllaMagic16

மேஜிக் 16

 

அன்றிரவு நிரஞ்சன், நந்தனா இருவரும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்க மறுமுனையில் ஸ்ரீராம், நிவேதா ஜோடியோ, முதல் முறையாகப் பேசிக்கொண்டும் மெஸ்சேஜ் பரிமாறிக்கொண்டும் இனிமையான உணர்வுடன் உறங்கச் சென்றனர்.

பின்னர் வந்த நாட்களில் நிரஞ்சனும் நந்தனாவும் ஒருவரை ஒருவர் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை. நிரஞ்சனும் அவன் லட்சியத்தை நோக்கி முதலடி எடுத்துவைத்தான்.

தேவை இருந்தும் பண வசதி இல்லாத நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்ற உதவிகளைச் செய்ய அறக்கட்டளை ஒன்றை முழு வீச்சில் துவங்கி இருந்தான்.

தற்பொழுது அறக்கட்டளையின் பிரதான உறுப்பினர்களாக நிரஞ்சன்(பிளாஸ்டிக் சர்ஜெரி) , கிரிதர் (இதய அறுவை சிகிச்சை), வைஷாலி (மகப்பேறு), வீணா(மனோதத்துவம்) ஆகியோர் இருக்க நிவேதா (பல் மருத்துவம்) படிப்பு முடிந்ததும் இவர்களுடன் இணைய இருக்கிறாள்.

இன்னும் சேவை மனப்பான்மையுடைய எந்த மருத்துவரும் தங்கள் குழுவில் இணையத் தமிழ்நாடு முழுவதும் அழைப்பு விடுத்திருந்தான், அந்த ட்ரஸ்டின் நிறுவனரான நிரஞ்சன்.

நந்தனாவும் கல்லூரி ப்ராஜெக்ட்டில் மனதைத் திசைதிருப்ப முயன்றுகொண்டிருந்தாள்.

***

அலுவலகத்தில் அப்பொழுதான் வேலைகளின் நடுவே சிறிது இளைப்பாறத் தேநீர் குடிக்க, ஆபீஸ் ஃபுட் கோர்டில் அமர்ந்திருந்த ஸ்ரீராம், தேநீரை மெதுவாகப் பருகியபடி காஞ்சனாவுடன் கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான்.

“காஞ்சு டார்லிங் என்ன நீ இப்படி குழந்தை மாதிரி வம்பு பண்றே ?”

காஞ்சனா கெஞ்சலும் கொஞ்சலுமாய் அவனைத் தன் வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்டுக்கொண்டிருந்தாள்.

“இப்போ எனக்கு கல்யாணாம் வேண்டாமே”

“காஞ்சு விளையாடுறியா?” ஸ்ரீராமின் குரலில் கோவம் எட்டிப்பார்க்க,

“டேய் அன்னிக்கி நீ பேசிப்பேசி எப்படியோ என்னை சம்மதம் சொல்ல வச்சுட்டே, இப்போ எனக்கு ஏனோ வயத்தை கலக்குறாப்ல இருக்குடா.”

“இதுல என்ன இருக்கு டார்லிங். நீ அவரை மீட் பண்ணி பேசிப்பாரு, நாங்க மீட் பண்ணி பேசினப்ப ரொம்ப நல்ல மாதிரியா தான் தெரிஞ்சார்.”

“நீயே அவருக்கு ஃபோன் பண்ணி ஏதான சொல்லி…” காஞ்சனா துவங்க நடுவில் பாய்ந்த ஸ்ரீராம்,

“என்ன காமெடி பன்றியா ? என்னை பார்த்தா கேனை கிறுக்கன்னு நெத்தியில் எழுதி, ஒட்டி இருக்கா என்ன?”

“டேய்! எனக்கு நிஜமா பயமா இருக்கு. ஏன்னே தெரியலை கல்யாணம்னு பேரைக் கேட்டாலே கை காலெல்லாம் டைப் அடிக்கிது டா” காஞ்சனாவின் குரலில் உண்மையான பயம் தெரிய, அதைத் தெளியவைத்தே தீரவேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டான் ஸ்ரீராம்,

“சரி ஒன்னு செய்வோம் நானும் உன் கூட வரேன். நாம சேர்ந்து போவோம் சரியா? நிவியை கிரிதர் கூட வர சொல்றேன். நாங்க பக்கத்துல எங்கேயாவது இருக்கோம் நீ அவர்கிட்ட பேசு.என்ன சொல்றே?”

கனிவாக அவன் சொல்ல, காஞ்சனாவும் அரை மனதுடன் சம்மதித்தாள்.

மாலை அலுவலகத்திலிருந்து காஞ்சனாவின் போடீக்கிற்கு ( பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட பெண்கள் ஆடை கடை) சென்று, அங்கிருந்து அவளுடன் மைலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றான்.

இருவரும் கோவில் வாசலிலிருந்து சிறிது தூரம் செல்ல நிவேதா “காஞ்சுமா இங்க இங்க” என்றபடி குரல் கொடுக்க , காஞ்சனா ஸ்ரீராம் இருவரும் ஒன்றுசேரக் குரல் வந்த திசை பார்க்க ,

அங்கே பிராகாரத்தில் நிவேதாவும் கிரிதரும் அமர்ந்திருந்தனர். இவர்களைக் கண்டு இருவரும் எழுந்து வர

காஞ்சனா தயக்கத்துடன் கிரிதரை பார்க்க, அவனோ காஞ்சனாவை பார்த்து ஸ்நேக புன்னகையுடன், தன் கையை நீட்டி

“ஹாய்! நைஸ் டு மீட் யு மிஸ் காஞ்சனா. நான் கிரிதர் ” தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

தயக்கத்துடன் கைகுலுக்கிய காஞ்சனா “ஹாய்” என்று விட்டு மௌனமானாள்.

“பார்த்தாச்சு , பேசியாச்சு சந்தோஷமா இப்போ கிளம்புவோமா?” என்று ஸ்ரீராமின் காதில் காஞ்சனா ரகசியமாய் கேட்க, அவனோ வேண்டுமென்றே விஷம புன்னகையுடன் ரகசியமாய் பதிலளித்தான்.

“நீ மொதல்ல அவரை ஒழுங்கா பார்த்தியா? முகத்தைக் கூட பார்க்காம சும்மா தரையைப் பார்த்து ஹலோ சொல்லிப்புட்டு கிளம்பணுமாமே! நீ அவர்கூட பேசாட்டிப்போ, நான் நிவிகூட பேசணும்.”

நிவேதாவோ “என்ன ரகசியம் ? எனக்கும் சொல்லேன் ராம்” கிரிதரன் தோளில் கையை வைத்தபடி கண்சிமிட்டிக் கேட்க

ஸ்ரீராமின் மனமோ அவளிடம் ஓடிச்சென்று ஒட்டிக்கொண்டது ‘ நீ இப்படி கேட்டா நான் எப்படி மறுப்பேன்?’

“காஞ்சு மொதல்ல ஸ்வாமி தரிசனம் முடிச்சுட்டு பேசலாம்னு சொல்றா அவளோதான்” புன்னகைக்க

“தாராளமா! ” என்றபடி கிரிதர் அவ்விடத்தை விட்டுக் கிளம்ப மீதி மூவரும் அவனைத் தொடர்ந்து சென்றனர்.

பிள்ளையார் சன்னிதியில் நால்வரும் சேர்ந்து தரிசனம் செய்ய நிற்கும் நேரம் ,கிரிதரை பாதி மூடிய கண்களால் பார்த்த காஞ்சனா,

“ஆண்டவா என்ன பேசுறதுன்னே தெரியலையே. நீ தான் என்னை காப்பாத்தணும். அவரை பார்த்தா நல்லவர் மாதிரிதான் தெரியுது ஆனாலும் ஏனோ எனக்கு பயமாத்தான் இருக்கு. தயவுசெய்து ஏதாவது உதவி பண்ணேன்.”

பிள்ளையாரிடம் முணுமுணுத்தபடி தலையை ஆட்டி, ஆட்டி வேண்டிக் கொண்டிருந்தவளைக் கண்கள் இமைக்காமல் பார்த்திருந்தான் கிரிதர்.

வேண்டுதலை வைத்துவிட்டு அவள் திரும்பும் நேரம், ஸ்ரீராமும் நிவேதாவும் பேசியபடி முன்னே சென்றுவிட, கிரிதரும் காஞ்சனாவும் சேர்ந்து பின்னே செல்லவேண்டி வந்தது.

காஞ்சனா மெல்லிய வெட்கத்துடனும், தயக்கத்துடனும் மௌனமாகவே நடக்க, கிரிதர் மெல்லப் பேசத் துவங்கினான்

“அப்புறம் நீங்க பொட்டீக் வச்சுருக்கீங்களாமே. எப்படி இன்டெரெஸ்ட் வந்தது?” எதார்த்தமாக அவன் கேட்க, மெல்ல அவன் பக்கம் திரும்பியவள் ஏதும் சொல்லாது மௌனமாக ஏதோ யோசித்திருந்தாள்.

அவள் மௌனம் கிரிதரின் முகத்தில் மெல்லிய வருத்தம் தர, “ஏன் காஞ்சனா எதுவுமே பேசமாட்டேங்கறீங்க ? உங்களுக்கு என்னை பிடிக்கலையா?”

அவன் கேள்வியில் சட்டென நிமிர்ந்த காஞ்சனா “ப்ளீஸ்” என்றவள் “எனக்கு உங்களை பிடிச்சுருக்கு ஆனா…” தயங்கியபடி யோசிக்க,

“வேற ஏதாவது அசௌரியமா இருக்கா?” ஆதங்கமாய் கேட்க

“எனக்கு கல்யாணம்னா ரொம்ப பயம்! அதான்…” அவள் மெல்ல கிரிதரன் முகத்தைப் பார்க்க,

“என்ன பயம் ?” புருவம் முடிச்சிட கேட்டான்.

“எனக்கு சமைக்கத் தெரியாது…”

“நான் சமையலுக்கு ஆளா தேடுறேன்?” கேலியாக அவன் கேட்கச் சிரித்துவிட்டவளோ,

“அதில்லை. எனக்கு வீட்டு வேலைகூட செய்து பழக்கமில்லை…”

“நான் வீட்டு வேலைக்கும் ஆள் தேடி இங்க வரலை !” முகத்தில் கேலி குறையவில்லை

“நான் நிறைய சாப்பிடுவேன், நிறைய பேசுவேன், நிறைய ஊர் சுத்திட்டே இருக்க விருப்ப பாடுவேன்” கொஞ்சம் தயக்கம் குறைந்து காஞ்சனாவின் இயல்புத் தலை தூக்கத் துவங்கியது.

“வெரி குட்!” கிரிதர் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு கட்டை விரலைக் காட்ட, காஞ்சனா குழப்பமாய் அவனைப் பார்த்து

“என்னத்துக்கு இந்த வெறி குட்டு? நான் சொல்றது உங்களுக்கு புரியலையோ?” காஞ்சனா சந்தேகமாய் கேட்க

“நீங்க சொன்னதுக்கெல்லாம் சேர்த்துத்தான் சொன்னேன். இதான் உங்க இயல்புன்னு ஒளிவு மறைவில்லாமல், தைரியமா சொன்னது எனக்கு பிடிச்சுருக்கு” அவன் முகத்தில் புன்னகை குறையவில்லை.

“நான் சொன்னதெல்லாம் நிஜம்” அவள் சொன்னதை அவன் புரிந்து கொள்ளவில்லை என்று நினைத்து அவன் பேசத் துவங்க, அவளை இடைமறித்தான் கிரிதர்.

காஞ்சனா இயல்பிலேயே மிகவும் வேகமாகப் பேசக்கூடியவள், அவளை மிஞ்சும் அளவிற்கு இருந்தது கிரிதரின் பேசும் வேகம், “காஞ்சனா இங்க பாருங்க. நான் தனியாவே இருந்து பழகினவன். நானும் நிரஞ்சனும் மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு போனப்போ தனியாத்தான் இருந்தோம் அப்போ நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சமைச்சு பழகிகிட்டோம்.

உங்களுக்கு சமைக்க தெரியலைன்னா பரவாயில்லை. எனக்கு தெரியும், நான் வித விதமா சமைச்சுத்தறேன் ஆசையா சாப்பிட நீங்க சம்மதிச்சா போதும்.

நானும் நிறைய பேசுவேன் ஆனா தனியா இருக்க போர் அடிக்குமேன்னு எப்போவும் ஹாஸ்பிடல்ல, மைதிலி அத்தை வீட்டுலன்னு பொழுதைக் கழிப்பேன். சோ இனி பேச்சு துணைக்கு நீங்க இருந்தா சந்தோஷமே.

அப்புறம் ஊர் சுத்துறது அது எனக்கு பழக்கம் இல்லை, வேணும்னா பழகிக்கிறேன்.

நான் எனக்கு சமைச்சு போடவோ, வீட்டு வேலை செய்யவோ ஆள் தேடலை எனக்கு ஒரு துணை வேணும் எனக்கு மனைவியே தோழியா இருந்தா போதுமென்ற ஒரே கண்டீஷன் தான்!

நான் ஹார்ட் சர்ஜன், எப்போ என்ன எமெர்ஜென்சி வரும், எப்போ எப்போ ஹாஸ்பிடல்ல இரவை கழிக்க வேண்டிய இருக்கும் தெரியாது. இதுக்கு மட்டும் உங்களுக்கு ஆஷேபனை  இல்லைன்னா எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.”

படபடவென மனதில் இருந்ததை கொட்டிவிட்டு ‘இனி உன் முறை’ என்பதுபோல் காஞ்சனாவை பார்க்க, அவளுக்கோ அவன் சொன்ன ஒவ்வொன்றையும் உள்வாங்கிக் கொள்ள சில நொடிகள் தேவைப் பட்டது.

என்ன பதில் தருவதென்று யோசித்திருக்க , கிரிதர் அவளை கண்ணோடு கண் பார்த்து புன்னகையுடன் தீர்க்கமாய், “காஞ்சனா! எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு! நான் உங்களை கம்பெல் பண்ண மாட்டேன். நீங்க பொறுமையா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க” அதற்கு மேல் எதுவும் பேசாது மௌனமானான்.

அவன் நேர்மையும் , அணுகுமுறையும் காஞ்சனாவை மெல்ல மெல்ல கவர்ந்து விட, “எனக்கு உங்களை பிடிச்சுருக்கு.” என்றவள் அவனை மீண்டும் பாராமல் தங்களைச் சுற்றி பார்வையை சுழல விட்டாள்.

முகம் மலர்ந்த கிரிதர் “தேங்க்ஸ்!” என்றபடி தன் கையை நீட்டி “பிரெண்ட்ஸ்?” என்று கேட்க, அதை தட்டியவள் “பிரெண்ட்ஸ்!” என்று புன்னகைக்க அதன் பின் அவர்கள் மத்தியில் தயக்கம் தொலைந்து கலகலப்பாய் பேச்சு சுவாரசியமாய் தொடர, நிவேதா ஸ்ரீராம் பல முறை நேரமாவதை சொல்லி அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு இழுத்துச் செல்லும் வரை தொடர்ந்தது.

***

காஞ்சனா கிரிதர் சந்திப்பும் நிகழ்ந்து இருவரும் தங்கள் சம்மதத்தை சொல்ல, ஒரு சுபயோக சுபதினத்தில் மூன்று ஜோடிகளின் நிச்சயதார்த்த நாள் குறிக்க பட்டது.

டிரஸ்ட் விஷயமாய் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்த நிரஞ்சன் சென்னை திரும்பும் வரை அவன் வீட்டினர் அவனுக்கு நிச்சயதார்த்த செய்தியைச் சொல்லி இருக்கவில்லை.

தந்தை தாய் இருவரையும் அழைத்து அமரசெய்தவன்,

“நான் எவ்ளோ சொல்றேன்? ஏன் கொஞ்சமும் என் பேச்சைக் கேட்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்க? அவங்க ரெண்டு ஜோடிக்கும் நிச்சயம் பண்ணுங்க. நானும் நந்துவும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்குறோம்.”

“இதை பேசத்தான் கூப்பிட்டியா? எங்களுக்கு வேலை தலைக்கு மேல இருக்கு. இன்னும் எத்தனை பேரை அழைக்கணும் தெரியுமா? சும்மா விளையாடிகிட்டு” ‘என்ன பிள்ளையோ’ என்று புலம்பியபடி மைதிலி எழுந்து சென்றுவிட்டார்

ஜெகந்நாதானோ “நீ ஏதாவது என்கிட்டே சொல்ல விருப்ப படுறியா ? அப்படி ஏதாவது இருந்தா இப்போவே சொல்லிடு. நாளை விடிஞ்சா உன் வாயிலிருந்து பாசிட்டிவ் விஷயங்கள் தவிர நான் எதுவும் கேட்க விருப்பபடலை.

உன் இஷ்டப்படி மட்டுமே நான் இந்த கல்யாண பேச்சை துவங்கினேன், இப்போ தெரிஞ்சோ தெரியாமலோ இதுல இன்னும் 4 பேரோட வாழ்க்கை சம்மந்த பட்டிருக்கு.

அவங்க ரெண்டு ஜோடியும் இணைஞ்சது உன்னால, உன் காதலால. இந்த கல்யாணம் நல்லபடியா நடக்குறது உன் பொறுப்பு! நீ ஏதான சொல்லனுமா சொல்லு இன்னிக்கே பேசிடுவோம்”

திட்டவட்டமாகத் தன் மனதில் பட்ட அனைத்தையும் எந்தவித தயக்கமின்றி சொல்லி முடித்தவர் மகனின் பதிலுக்காக அவனைப் பார்த்திருந்தார்

அவர் சொன்ன சொல் ஒவ்வொன்றிலும் இருந்த உண்மை நிரஞ்சனை ஊமையாகியது.

“ஒண்ணுமில்லை பா! நீங்க வேலையை கவனிங்க. குட் நயிட்” ஒரு நொடிகூட நில்லாமல் இரவு உணவு வேண்டாமென்று தன் அறைக்கு சென்றுவிட்டான்.

அவன் மனசாட்க்ஷி அவனைக் கூறுபோட்டு கொண்டிருந்தது

‘எல்லாம் சரிதான் ஆனா என்னை நம்பி, எனக்காகப் பொய் சொல்லி, இப்போ ஆனால தன் வாழ்க்கையை பணையம் வச்சிருக்குற என் பேபிக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?’

நந்தனாவின் குரலைக் கேட்க முதல் முறை ஏங்கியவன் அவளுக்குக் கால் செய்தான்.

“பேபி”

அவன் குரல் கேட்டதுதான் தாமதம் உடைந்து அழைத்துவங்கிவிட்டாள் நந்தனா. அவள் அழுகையை கேட்கப் பிடிக்காமல் உடனே அழைப்பைத் துண்டித்தவன்,

‘ஆசையா பேசலாம்னா அழற? அவளுக்கு என் கூட பேசக்கூட விருப்பம் இல்லை போல. என்னை தப்பா நினைச்சுகிட்டு இருக்காளோ?’ தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

மறுமுனையில் நந்தனவோ கண்களில் நீர் மெல்ல மெல்ல வழியக் கைப்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘நீ என்னை மிஸ் பண்ணவே இல்லல ?’ ஏக்கமாய் அவன் வாட்ஸாப்ப் புகைப்படத்தைப் பார்த்தபடி இருக்க

‘அவன் ஏன் உன்னை மிஸ் பண்ணனும் ?’

‘இவன் குரலை கேட்காம எவளோ பீல் பண்ணேன் தெரியுமா?’

‘அவன் உன்னை மாதிரி இல்லை! நீதான் எதோ வயசு கோளாறுல அவன் மேல் ஈர்க்க பட்டிருக்கே. அவன் தெளிவாத்தான் இருக்கான்’

கண்களைத் துடைத்துக்கொண்டவள் கோவமாக அவன் புகைப்படத்துடன் “போடா போ ! இனி உன் குரலைக் கேட்க ஆசை படமாட்டேன். உன்னை சைட் அடிக்க மாட்டேன்” சவால் விட்டுக்கொண்டாள்.

இருவரின் மனமும் ஒரே திசையில் பயணிக்கத் துவங்கியதை இருவரும் உணரவே இல்லை.

***

“நிச்சயதார்த்தத்துக்குப் புடவை வாங்கணும் இப்படி லீவ் போடமாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படிம்மா ?” சரஸ்வதி நந்தனாவிடம் கடிந்துகொள்ள

“முடியாதுமா எனக்கு இன்னிக்கி கிளாஸ் மிஸ் பண்ண முடியாது” நந்தனா மறுத்தபடி கல்லூரிக்குப் புறப்பட

“ஏய் நில்லு ! என்ன இது? அம்மா இவளோ சொல்றா. லீவ் போட்டா என்ன?” கண்ணன் முறைத்தபடி கைப்பேசியை எடுத்து “நான் உன் எச்.ஓ.டி (HOD) கிட்ட நான் சொல்றேன்” என்றபடி கைப்பேசியில் டயல் செய்ய

பதறிய நந்தனா “இல்லை பா ப்ளீஸ். ஒரு அரை நாள் போயிட்டு வரேன்.” என்று கெஞ்ச

“ம்ம் சரி 3 மணிக்கு கடைல நீ இருக்கனும்!” மிரட்டியவர் அலுவலகம் சென்றுவிட்டார்.

கல்லூரிக்குச் சென்றவளால் பாடத்தைக் கவனிக்கவும் முடியவில்லை, கணினியின் முன் அமர்ந்தால் நிரஞ்சனின் முகமே கண்முன் வர, அரண்டவள் உடனே எழுந்துவிட்டாள்.

சுகன்யா “என்னடா? ஏன் கொஞ்ச வாராமாவே ஒருமாதிரி இருக்க?” அக்கறையாய் கேட்க,

மயூராவோ “ஆமாம் அப்பறம் மறுபடி மந்திரிக்கப் போக வேண்டி இருக்கும். வசதி எப்படி ?” நக்கலாய் புன்னகைத்தாள்.

“உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒன்னு சொல்லணும்…” தயக்கத்துடன் தோழிகளைப் பார்த்தவள், “இங்க வேண்டாம், கேன்டீன் போகலாமா?” என்று கேட்க, மூவரும் கல்லூரி உணவகத்திற்குச் சென்றனர்.

உணவை வாங்கிக்கொண்டு அமர்ந்ததும் மெல்லத் தயங்கித் தயங்கி “எனக்கு அடுத்தவராம் நிச்சயதார்த்தம்…” மென்று விழுங்கிச் சொல்ல,

சுகன்யா “என்னடி சொல்றே? நிஜமாவா?” அதிர்ச்சியாய் கேட்க

மயூராவோ “ஹே நான் உன்கிட்ட பொய்ச் சொன்னேன்னு நீ பொய் சொல்றே தானே?” என்று வம்பிழுக்க

“நான் நிஜமாத்தான் சொல்றேன்!” என்றவள், தோழிகளிடமும் நிரஞ்சன் சொல்லச் சொன்ன பொய்யைச் சொல்ல, தோழிகள் இருவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான்.

“கூடவே இருக்கோம் எப்படி எங்களுக்கு தெரியாம காதல்? அவர் பெயரென்ன? என்ன பன்றார்? பார்க்க எப்படி இருப்பார்? யார் முதலில் காதலை சொன்னது ? போட்டோ இருக்கா?”

கேள்விக்கணைகளை விடாமல் தோழிகள் தொடுக்க, இதுநாள் வரை இதையே சொல்லிச் சொல்லிப் பழகியதாலோ என்னவோ, அசராமல் பதிலளித்து தோழிகளை நம்ப வைத்தாள் நந்தனா.

“ஆக உனக்கு இத்தனை நாள் பிடிச்சிருந்தது நிரஞ்சன்ற டாக்டர் மேல இருந்த காதல் பேயின்னு சொல்லு!” மயூரா கிண்டல் செய்ய, நந்தனாவிற்கு ஏனோ முதல் முறை உண்மையாகவே வெட்கம் வந்து முகம் சிவந்தது.

தோழிகளிடம் சொல்லிவிட்டு துணிக்கடைக்குச் சென்றவள் பட்டுப்புடவை தளத்திலிருந்த குடும்பத்தினரிடம் சென்றாள்.

பெண்கள் அவரவர் புடைவைகளைத் தேர்ந்தெடுப்பதும் மறுப்பதுமென அந்தத் தளத்தையே உண்டு இல்லை என்று செய்துகொண்டிருந்தனர்.

நிவேதாவும் காஞ்சனாவும் அங்கு வேலையைச் செய்பவர்களை வேலையோ வேலை வாங்க, புடவை தேர்ந்தெடுத்துவிட்டு மைதிலியும் சரஸ்வதியும் ஒரு ஓரமாய் நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

நிவேதா, காஞ்சனாவின் அருகிலிருந்த ஸ்ரீராமும் கிரிதரும் வெளியே புன்னகையும் உள்ளே ‘நீ எதை சொன்னாலும் சரிம்மா தாயே, எங்களை கொஞ்சம் உட்கார விட்டால் போதும்’ என்ற மனநிலையில் விழி பிதுங்கி நின்றிருக்க. எதிலுமே ஒட்டாமல் இருந்த நந்தனா எந்தப் புடவையையும் சாஸ்திரத்திற்குக் கூட பார்க்கவில்லை

நந்தனாவின் ஒட்டுதலின்மையைக் கண்டு மனம் வருந்திய மைதிலி அவளை அருகில் அழைத்து “என்னடா? இங்க புடவை எதுவும் பிடிக்கலையா? வேற கடைக்குப் போகலாமா?” வாஞ்சையுடன் கேட்க

“இல்லை மா! பரவால்ல இங்கேயே பாக்கறேன்” வெற்றுப் புன்னகையுடன் சொல்ல

“நிரஞ்சன் வரலைன்னு மனசு வருத்தமா இருக்காடா? அவன் ஒரு சர்ஜெரி இருக்கு, சீக்கிரம் முடிஞ்சா வர ட்ரை பன்றேன்னு சொல்லிருக்கான்டா” அவள் கையைப் பிடித்துக்கொண்டு சொல்ல,

“பரவாயில்லை மா. அவரை தொந்தரவு பண்ண வேண்டாம். நான் பாக்கறேன்” என்று மெல்லப் புடைவைகளைப் பார்க்கச் சென்றார்.

ஓர கண்ணால் அருகிலிருந்த இரு ஜோடிகளையும் பார்த்தவள் மனதில் ஏனோ ஏக்கம் சூழ்ந்து கொள்ள

‘நிவேதா ஸ்ரீராம் பார்த்ததும் காதல், லவ் மேரேஜ்,

காஞ்சுக்குட்டி கிரிதரண்ணா பக்கா அரேஞ்ட் மேரேஜ்,

நான், நிரஞ்சன்? காதலுமில்லை பெரியவர்கள் பார்த்து வைத்ததுமில்லை, போலி மேரேஜ்’

மனம் உண்மையை முள்ளாய் கீறி உணர்த்தக் கண்கள் மெல்லக் கலங்கத் துவங்கியது.

‘எங்கடா இருக்க? உன்னை பார்க்கக் கூட முடியலை’ மனதில் பாரம் கூட, கண்களை சில நொடிகள் மூடிக்கொண்டாள்.

“ஹாய் பேபி!” அவள் காதின் வெகு அருகில் நிரஞ்சனின் குரல் கேட்க, ஒரு நொடி அவள் சுவாசம் தடைபட்டு இயங்க அவள் திரும்பியபொழுது, வசீகரிக்கும் புன்னகையுடன் அருகில் நின்றிருந்தான் நிரஞ்சன்.

“சாரி கொஞ்சம் வேலை. நீ புடவை பார்க்கலயா? என்ன யோசிச்சிகிட்டு இருக்க?” புன்னகையுடன் கேட்டபடி அவள் காதுவரை குனிந்தவன்.
“அங்க பாரேன் நிவியும், உன் காஞ்சுகுட்டியும் பண்ற ரகளையை.ஆண்டவா நல்ல மாட்னானுங்க ராமும் கிரியும்” சிரித்தபடி சொன்னவன், “வா பேபி, பார்” என்று ஆர்வமாய் சில புடவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தான்.

“இதில் ஏதாவது பிடிச்சிருக்கா பாரு பேபி. நீ செலக்ட் பண்ணிவை நான் இதோ வரேன்” என்றவன், அங்கிருந்த இரண்டு ஜோடிகளையும் கிண்டல் செய்யச் சென்றுவிட்டான்

உற்சாகமாய் தன் மனதிடம் ‘என்னமோ அவனுக்கு என்னை பிடிக்காதுன்னு சொன்ன? பார் எனக்காகப் பார்த்துப் பார்த்துப் புடவை எடுத்து வச்சுட்டு போயிருக்கான்’ பெருமையாய் சொல்லிக்கொண்டாள்.

ராமும் கிரியும் கண்விழி பிதுங்கிவிட , நிரஞ்சன் “ என்னப்பா இதுக்கே இப்படியா? நான்லாம் சின்ன வயசுலேந்து எங்கம்மா தங்கை கூட ஷாப்பிங் போய்ப் பழகிட்டேன். பெண்களை சமாளிக்க என்னைப் பார்த்துக் கத்துக்கோங்க பசங்களா” காலரைத் தூக்கிவிட்டபடி “இப்புடு சூடு!” என்றபடி நேரே தங்கையிடம் சென்றான்

“ஹாய் நிவி! ஹாய் காஞ்சும்மா!” என்று புன்னகைக்க

“காஞ்சும்மா? அத்தைன்னு கூப்பிடுவீங்களே என்னாச்சு?” காஞ்சனா புருவம் விரிய

“இனி அத்தைன்னு எப்படி சொல்ல முடியும்? நீங்க என் மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க போறீங்களே!” புன்னகையுடன் சொல்ல

காஞ்சனா, தன் நெற்றியைப் பிடித்தபடி மெல்லிய வெட்கத்துடன் “ஸ்ஸ் ஆமால்ல!” புன்னகைக்க

“என்ன ரெண்டு பேரும் புடவை எடுத்தாச்சா? காட்டுங்க” ஆர்வமாய் கேட்க,

இருபெண்களும் இல்லை என்றுவிட்டு மாறி மாறிப் புடவைகளை அவனுக்குக் காட்டி அபிப்பிராயம் கேட்க

“ஆஹா என்ன நீங்க? இப்போ ட்ரெண்ட் தெரியவேண்டாமா? காஞ்சும்மா நீங்க இந்த துறையில் இருக்கவங்க டக்குன்னு டக்குன்னு எடுத்து அசத்த வேண்டாமா?” அப்பாவியாய் கேட்க

“அதெல்லாம் குழப்பம் ஒன்னும் இல்லை, சும்மா அப்படியே பார்க்கலாம்னு…” ஏனோ நிரஞ்சனை பாராது சில நொடிகளில் புடவையைத் தேர்ந்தெடுக்க, இப்பொழுது நிரஞ்சனிடம் சிக்கியது நிவேதா!

“நிவி போன தீபாவளிக்கு நீல கலர்ல டிரஸ், பிறந்தநாளுக்கு கத்திரிப்பூ கலர், பொங்கலுக்கு மஞ்சள் கலர்…ம்ம்ம் அப்படி பார்த்தா…ம்ம்…கல்யாணத்துக்கு எப்படியும் முகூர்த்த புடவை அரக்கு தான்…பேசாம ஊதா, ரெட், பச்சை இப்படி எதாவது எடேன்? ம்ம் பிங்க் கரும்பச்சை போட்டோக்கு நல்லா இருக்கும். நான் வெயிட் பண்றேன்” பொடிவைத்துப் பேசிவிட்டு ஆண்களிடம் சென்றான்.

போட்டோ எடுத்துக்கொள்வதில் மிகவும் ஈடுபாடு கொண்ட நிவேதாவிடம் எப்படிப் பேசினால் வேலை நடக்கும் என்று நன்கு அறிந்தவன் அதற்கேற்றாற்போல பேசி செல்ல, நிவேதாவும் சில நொடிகளில் தேர்ந்தெடுத்தாள்.

“எப்படி இப்படி பின்ரேபா?” ஸ்ரீராம் அதிசயிக்க

“அடேய் எப்படிடா நிவி டிரஸ் கலர் எல்லாம் புட்டுபுட்டு வைக்குறே?” கிரிதர் வாய் பிளக்க

“எல்லாம் சிம்பிள் ட்ரிக். இவங்க விசேஷத்துக்கு போட்டுக்குற டிரஸ் எல்லாத்தையும் ஒரு போட்டோ எடுத்து, இதோ பார்” கைப்பேசி திரையைக் காட்டியபடி “இப்படி ஒரு ஆல்பமா போட்டுவச்சுப்பேன்.

கடைக்கு வாரத்துக்கு முன்னாடி ஒரு ரவுண்டு பார்த்துப்பேன். கடைக்குப் போனதும் பேசி பேசி பிட்பிட்டா போட்டா, டொப்பு டொப்புன்னு நம்ம வேலை ஆகிடும். பின்னாடி ஹோட்டல் போனோமா சாப்பிட்டோமா வீட்டுக்கு போனோமான்னு இருக்கலாம்.”

இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பது போலச் சொன்னவன் அனைவருடன் சில நிமிடங்களில் ஜவுளிக் கடையிலிருந்து வெற்றிகரமாக வெளியேறினான்.

அடுத்து நிச்சயதார்த்த மோதிரம் வாங்க நகைக் கடைக்குச் செல்ல “நிரஞ்சன் சார்! இங்க உங்க திறமையை காட்டுங்க?” ஸ்ரீராம் சவால் விட “ஜுஜுபி” என்றவன் பெண்களுக்கு முன்னரே, ஸ்ரீராம், கிரிதருடன் மோதிர பிரிவிற்கு விரைந்தான்.

சில நிமிடங்கள் பொறுமையாக மோதிரங்களைப் பார்த்தவன்

முதலில் படையெடுத்தது காஞ்சனாவிடம்!

“காஞ்சும்மா! நீங்க துணிகளோடவே எப்போவும் வேலை பாக்குறீங்க சோ…ம்ம்… இதோ இந்த மாதிரி வழுவழுப்பான மோதிரம் போட்டா துணியை கிழிக்காது. உங்களுக்கு தெரியாதான்னா நீங்க ட்ரெண்ட்ல இருக்கவங்க” எல்லாம் உனக்குத் தெரியுமே என்ற தொனியில் சொல்ல,

காஞ்சனா விரைவாய் அவளுக்கு மோதிரம் தேர்ந்தெடுக்க கிரிதர் அதற்கு நிகரான ஆண்கள் மோதிரம் தேர்ந்தெடுத்தான்.

அடுத்தது அவன் சென்றது நிவியிடம் “நிவி நீ எப்படியும் கூடிய சீக்கிரம் பிராக்டீஸ் ஆரம்பிக்கணும். கல்லு எதுவும் இல்லாம, கூர் முனைகள் இல்லாம பாரு க்ளோவ்ஸ் போட்டா கிழிக்காது. போட்டோக்கும் ஸ்டைலா இருக்கும். பார்த்துக்கோ” சொல்லிச் செல்ல அந்த ஜோடியும் வெற்றிகரமாக மோதிரத்தைத் தேர்ந்தெடுத்தது.

கடைசியாக அவன் நந்தாவிடம் சென்றான்

‘இவளை என்ன சொல்லி…’ யோசிக்கலானான்.

“பேபி!” அவளை ஆசையாய் மோதிரங்களைப் பார்க்க அழைத்துச் சென்றான்

அவன் மட்டும் கேட்கும் வண்ணம் “சார்! அவங்களுக்கு மோதிரம் வாங்கினீங்க சரி! நிஜமாவே நமக்கு நிச்சயம் நடக்க போகுதா என்ன?” கிண்டலாய் அவள் கேட்க

ஒருநொடி இறுகியது அவன் முகம்,

“நாம எடுக்காம இருந்தா எப்படி? நிச்சயம் ஆகுமா ஆகாதா தெரியாது. ஆனால் கல்யாணம் உன்னை வற்புறுத்தி நடக்காது! நான் அவ்வளவு சுயநல வாதி இல்லை.” எந்த உணர்ச்சியுமின்றி சொன்னவன்

“உன்னக்கு என்ன ஆக ஆசை?” முதல் முறை கேட்டான்

“எனக்கு அனிமேஷன்ல இண்டெர்ஸ்ட்!”

“ம்ம்…கைக்கு நெறய வேலை கொடுக்கணும் அப்போ கொஞ்சம் எடை குறைவா அழகா வைர மோதிரம் வாங்கிக்கோ. எனக்கு அடிக்கடி அறுவை சிகிச்சை இருக்கும் நாசூக்கா நோயாளிகளைக் கையாள வேண்டி இருக்கும்.

நானும் கிரிதர் மாதிரி வழுவழுப்பான வேலைப்பாடில்லாத மோதிரம் எடுத்துக்குறேன். அடிக்கடி கயட்டி வைக்கவேண்டி இருக்கும் வேற.” புன்னகையுடன் சொல்ல, அவன் விருப்பப்படியே அவள் மோதிரத்தைதேர்ந்தெடுத்தாள்.

நடப்பது எதுவும் உண்மை இல்லை என்றபோதும் இந்தச் செய்கை எல்லாம் நந்தனாவிற்கு ஏனோ சந்தோஷத்தைத் தந்தது. நிரஞ்சனின் அருகாமை சின்ன சின்ன விஷயங்களையும் எளிமையாகக் கையாளும் விதம், எவரையும் பேச்சால் கவரும் திறமை அவளை மெல்ல மெல்ல அவனின்பால் இன்னும் ஈர்த்தது.

நிச்சயதார்த்த நாள் நெருங்க நெருங்க மனதில் தன்னையும் மீறி ஒரு எதிர்பார்ப்பும், தவிப்பும் தோன்றத் துவங்கியது.

அவனுடன் செலவிடும் நேரங்களில் ஏற்படும் உணர்வுகளுக்கு என்ன பெயர் கொடுப்பதென்ற குழப்பம் அவளை வாட்டத் துவங்கியது.

நிரஞ்சன் தன் முழு நேரத்தையும் அறக்கட்டளை, மருத்துவமனை என்று அர்ப்பணித்து இரவு பகல் பாராது உழைக்கத் துவங்கி இருந்தான்.