Sirpiyin Kanavukal – 13

Sirpiyin Kanavukal – 13

அத்தியாயம் – 13

தன் தாயின் இறப்புக்கு பிறகு அவன் அந்த வீட்டிற்கு வரவில்லை. மீண்டும் அந்த வீட்டிற்குள் நுழையும்போது சித்தார்த் மனம் பலவருடங்கள் பின்னோக்கி சென்றது.

மற்றவர்கள் அவரோடு வீட்டின் உள்ளே நுழைய ஹாலில் மேகாவுடன் சித்தார்த் இருப்பது போன்ற புகைப்படங்கள் ஏராளமாக இருப்பதை கவனித்த முகிலன், “என்னப்பா நீங்களும் அப்பம்மாவும் மட்டும் இருக்கீங்க.. அத்தை எங்கே அப்பப்பா எங்கே” என்று சிந்தனையுடன் கேட்க திவ்யா தன் அண்ணனை பார்த்தாள்.

அம்மா வாழ்ந்த வீட்டில் தாத்தாவின் போட்டோவுடன் தன் அன்னையின் போட்டோ மட்டுமே இருப்பதை கண்டு குழப்பத்தில் இருந்ததால், “அந்த வீட்டில் உங்க போட்டோ அப்புறம் தாத்தா போட்டோ மட்டும் தானே அம்மா இருந்தது அதுக்கு காரணமென்ன?” என்று புரியாமல் கேட்ட நந்தினியும் தருணும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்

எழிலன் – நிலா இருவருக்கும் உண்மை ஓரளவுக்கு தெரியும் என்ற காரணத்தினால் அவர்கள் இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தனர்.

அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “எழில் – நிலா நீங்க இருவரும் சண்டை போடுறீங்க என்று என் மகனும், மருமகளும் சொன்னாங்க. எங்க அப்பா அம்மாதான் பிரிஞ்சி போயிட்டாங்க. நீங்களும் சின்ன சின்ன சண்டையை பெரிசு பண்ணி உங்க வாழ்க்கையை சீரழிச்சுக்காதீங்க” என்றார் பொறுமையாக அவர்களை பார்த்தபடி.

அவர் பேசுவதை கேட்டு எழிலன் – நிலா இருவருக்கும் கோபம் வர, “நீங்க ஏன் இப்படி சொல்றீங்க என்று தெரிஞ்சிக்கலாமா” என்று நிறுத்தி நிதானமாக கேட்ட நிலாவை மற்றவர்கள் திகைப்புடன் பார்த்தனர்.

அவள் இலங்கை தமிழ் பேசாமல் இயல்பான தமிழில் பேசுவதை கண்டு, “நீ எப்படிம்மா இவ்வளவு தெளிவாக தமிழ் பேசற” என்று ஆச்சரியத்துடன் தருண் கேட்க, “நான் பிறந்த மண் இலங்கை என்றாலும் வளர்த்த பாட்டி தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அதை மறைக்காதீங்க” என்று சொல்லிவிட்டு சித்தார்த் பக்கம் திரும்பினாள்.

“நீங்க எங்க அப்பா அம்மா உருவத்தில் இருக்கீங்க” என்றார் அவர் பெருமூச்சுடன்.

“அதுக்காக இப்போ என்ன சொல்ல வரீங்க அங்கிள்” என்றான் எழிலன் கேள்வியாக புருவம் உயர்த்தியபடி.

“நீங்க அவங்களோட மறுஜென்மம். அதனால் தான் நாங்க சொல்றோம். உங்களை மாதிரி மறுப்பிறவியில் பிறந்த எல்லோரும் திருமணத்தில் என்ற பந்தத்தில் இணைவதில்லை. ஆனால் நீங்க இருவரும் இணைந்தது விதியின் செயல்தான்” என்று அடித்து ஆணித்தரமாக கூறினார்.

அவரின் பேச்சு முகிலன் – மேகாவை குழப்பிவிட, “அப்பா இங்கே என்ன நடக்குது..” என்று புரியாமல் கேட்க, “உங்களோட தாத்தாவும், பாட்டியும் உங்க அம்மா பிறந்த பொழுது பிரிச்சிட்டாங்க” என்றவர் சொல்ல சிறியவர்களுக்கு குழப்பாக இருந்தது.

அதன்பிறகு கார்முகிலன் – மேகவர்ஷினி பற்றிய விவரங்களை கூறியவர் தான் திவ்யாவின் அண்ணன் இல்லை என்ற உண்மையையும் சொல்ல சிறியவர்கள் திடுகிட்டு போயினர். ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் கூட இவ்வளவு ஒற்றுமையுடன் இருக்கவில்லையே என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற முகிலனின் பார்வை மேகாவின் மீது நிலைத்தது.

‘இதுநாள் வரையில் தனக்கு உரிமையானவள்’ என்ற அவனின் எண்ணம் சடுதியில் மாறிப்போக அதை தாங்க முடியாதவனின் முகத்தில் வலி அதிகமானது.

அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த நிலா, “அவங்க சண்டையிட்டு பிரிஞ்சாங்க என்று சொல்றீங்க. ஆனால் நீங்க சொல்வதைப் பார்த்தால் என்னால் உண்மைன்னு நம்ப முடியல” என்று கூறிவே சித்தார்த் பொறுமை மெல்ல மெல்ல குறைய தொடங்கியது..

“நாங்க அவங்களோட மறுஜென்மமாக இருந்தா எங்களுக்கு அந்த நினைவுகள் நீங்க சொல்லாமல் வந்திருக்குமே அங்கிள். உருவங்கள் ஒரே மாதிரி இருப்பதால் மட்டும் எல்லாம் சரி என்று யாராலும் சொல்ல முடியாது” என்றான் எழிலன் நிறுத்தி நிதானமாக கூறினான்.

“அப்போ நாங்க சொல்வது எல்லாம் போயின்னு சொல்றீங்களா? அவங்க இருவரும் பிரிஞ்சதில் பாதிக்கபட்டவர்கள் நானும் என்னோட அண்ணனும் தான். எனக்கு அம்மா  பாசம் கிடைக்கல, எங்க அண்ணனுக்கு அப்பா பாசம் கிடைக்கல” என்றார் வருத்தத்துடன்.

அவரின் பேச்சு மேகாவை பாதிக்க தாயை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டே முகிலனை கண்ணீரோடு ஏறிட்டு பார்க்க அவன் வலியுடன் முகத்தை திருப்பினான்.  இந்தியாவில் இப்படியொரு திருப்புமுனை தங்களின் வாழ்வில் வருமென்று வேறு யார் சொல்லியிருந்தாலும் அவர்கள் இருவரும் கிண்டலடித்து சிரித்திருப்பார்கள்.

திவ்யாவின் பேச்சை பொறுமையாக கேட்ட நிலாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“நீங்க எல்லாம் அவங்க பிரிச்சிட்டாங்க என்று நெகட்டிவ் சைடு மட்டும் பார்க்கிறீங்க. அவங்க பிரிஞ்சதால் தான் சித்தார்த் அங்கிளை நொடிக்கு நூறுமுறை நீங்க அண்ணான்னு கூப்பிடுறீங்க திவ்யா ஆன்ட்டி. இந்த பாசம் யாரால உங்களை பெத்தவங்க வளர்ப்பால் வந்தது” என்பதை கூறியவன் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான்.

அங்கே குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அங்கே அமைதி நிலவியது.

“அவங்க பிரிஞ்ச மாதிரி நீங்களும் பிரியக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் உங்கள் இருவரையும் இங்கே கூட்டிட்டு வந்து இத்தனை உண்மையும் சொல்றோம் கொஞ்சம் புரிஞ்சிகோங்க” என்றார் சித்தார்த் மெல்ல சோபாவில் அமர்ந்தபடி.

“அங்கிள் தப்பா நினைக்காதீங்க கார்முகிலன் – மேகவர்ஷினியின் பிரிவு தானாக நிகழ்ந்த ஒன்று என்று உங்களால் சொல்ல முடியுமா?” என்று நிலா மெல்லிய குரலில் கேட்ட போதும் அவள் கூறிய வாக்கியம் திவ்யா மற்றும் சித்தார்த் இருவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்க இப்போது மௌனமாவது அவர்களின் முறையானது.

அந்த கேள்வியைக் கேட்ட நிலா எழுந்து சென்று தங்களோடு கொண்டுவந்த ஒரு கவரை எடுத்து வந்து அவரின் முன்னே நின்றவள் அந்த பைலை கையில் எடுக்க பெரியவர்கள் நால்வரும் அவளை கேள்வியாக நோக்கினர்.

“நீங்க நினைக்கிற மாதிரி அவங்க இருவரும் சண்டையிட்டு பிரியல. மேகா முகிலனை பிரிந்தால் மட்டுமே உயிரோட வாழ முடியும் என்ற முடிவை எழுதிய விதிதான் அவங்களை பிரிச்சது” என்ற தீர்க்கமான பார்வையுடன் சொல்ல சித்தார்த் மற்றும் திவ்யாவிற்கு தூக்கிவாரிப்போட்டது.

அப்போதுதான் தன் தந்தை தன்னிடம் ஏதோ பேசவேண்டும் என்று அழைக்க அவரின் அறைக்கு சென்ற மகளிடம் அந்த  உண்மையை கூறியது இன்றும் திவ்யாவின் நினைவிற்கு வந்தது…

அன்று..

பள்ளி படிப்பு முடிந்த கடைசிநாள் முகிலன் அளவிற்கு அதிகமான சந்தோசத்துடன் இருந்ததை கண்டு அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து தந்தை மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்திருக்கிறாளே தவிர இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

பால்கனியில் நின்று முழுநிலவை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தார் கார்முகிலன். திவ்யதர்ஷினி தன் கையில் பாலுடன் அவரின் அறைக்குள் நுழைய மகளைத் திரும்பி பார்த்து பளிச்சென்று புன்னகைத்தார்.

“என்னப்பா இன்னைக்கு இவ்வளவு சந்தோசமாக இருக்கீங்க” என்று அவள் கேட்டபடி அவரின் அருகே செல்ல, “இன்னைக்கு உங்க அம்மாவை உன்னோட ஸ்கூல் முன்னாடி பார்த்தேன் தியா. இன்னும் அவளிடம் அந்த திமிரு மட்டும் துளியளவு கூட குறையவே இல்ல” என்றார் அன்றைய நாளின் நினைவோடு மிதந்தபடி.

“அப்பா இதெல்லாம் சரியில்ல. நீங்க மட்டும் அம்மாவை பார்த்துட்டு என்னோட கண்ணில் காட்டவே இல்ல” என்றாள் மகள் கோபத்துடன்.

தன் செல்ல மகளின் தலையை வருடி நெஞ்சோடு சேர்த்து சாய்த்து கொண்டவர், “திவ்யா இத்தனை வருடமும் உங்க அம்மா என்னை நேசிக்கிற என்று தெரியும். ஆனால் அதை அவள் வாயால் ஒருமுறை கூட நான் கேட்டதில்லை. இன்று அவளை தூக்கி எரிஞ்ச காதலின் முன்னாடி தலைநிமிர்ந்து சொன்ன திவ்யா. என்னோட புருஷன் கால் தூசுக்கு பெறமாட்ட நீயென்று.. இந்த வார்த்தை கேட்க எத்தனை வருடம் ஆகிபோச்சு” என்றவர் அப்போதுதான் இன்னொரு உண்மையையும் சொன்னார்.

“திவ்யா நானும் உங்க அம்மா பிரிஞ்சி போனதை நினைச்சு வருத்தப்பட்டேன். அவள் சென்ற கொஞ்சநாளில் அவளோட தோழிகிட்ட இருந்து எனக்கு ஒரு லெட்டர் வந்துச்சு அதோட ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் ஃபைல் வந்தது” என்றவர் அப்போதுதான் கீதாவின் கடிதம் பற்றிய உண்மையை கூறினார்.

திவ்யா அவரைக் கேள்வியாக நோக்கிட அவரின் நினைவுகள் அந்த நாளை நோக்கி பயணித்தது.

அந்த மெடிக்கல் பைலுடன் சேர்ந்து வந்த கீதாவின் லெட்டரின் சாரம்சம்…

“ஹாய் மேகா,

உன்னை தனியாக இருக்காதே திருமணம் செய் என்று சொன்னவளே நான்தான். உனக்கு திருமணம் ஆன கொஞ்ச நாளுக்கு பிறகு நான் உன்னை செக் பண்ண டாக்டர் எனக்கு போன் செய்தார். நானும் இயல்பாக அவரை சந்திக்க போனேன்.

அங்கே சென்ற பிறகுதான் எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தது. உன் இருதயத்தில் ஒரு வாழ்வு சுருங்கி இருக்கு, மற்றொரு வாழ்வு அடைப்புடன் இருக்கு, இது மட்டும் இல்லாமல் இதயம் ஓட்டையாக இருக்கு. இத்தனை பிரச்சனையுடன் சேர்த்து நீ தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டால் அதை தாங்கும் சக்தி உன்னோட இதயத்திற்கு இல்ல.

இந்த உண்மை தெரிஞ்ச பிறகு நான் ரொம்ப பயந்து போனேன். உன்னோட குடும்ப சூழ்நிலை எல்லாம் டாக்டரிடம் சொன்னதற்கு அவர் சொன்னது ஒரே விஷயம்தான்.

 என்னதான் டெக்னாலஜி வளர்ந்தபோதும் உன்னோட கேஸில் அவங்க சொன்னது, “அந்த பொண்ணு என்றும் மனதை அமைதியாக வெச்சுக்கணும். தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடவே கூடாது.” இதை தாண்டி சொன்னாங்க.

அவங்ககிட்ட பணம் இருக்கு இதை மருத்துவத்தில் குணபடுத்த முடியுமா என்று கேட்டதற்கு, “மருந்து இல்லாமல் அந்த பொண்ணு எத்தனை வருடம் வேண்டும் என்றாலும் வாழலாம் நான் சொன்ன இரண்டையும் கட்டாயம் செய்யணும்” என்று சொல்லிட்டார்.

இந்த விதியைப் பாரு மேகா. உன் கணவரிடம் கோடி கோடியாக பணம் இருந்தாலும் அதை உன்னை குணப்படுத்த கொஞ்சம்கூட பயன்படாது. இந்த கடிதத்துடன் உன்னோட மெடிக்கல் ரிப்போர்ட் சேர்த்து அனுப்பியிருக்கேன். நீ நிதானமாக யோசித்து ஒரு முடிவெடு மேகா.

நான் திருமணம் முடிந்ததும் இலங்கை போறேன் என் கணவருடன். நேரம் கிடைக்கும் போது கீழே இருக்கும் நம்பருக்கு கால் பண்ணு

இப்படிக்கு

உயிர் தோழி

கீதா.

அதை படித்ததும் சுரேஷிடம் முகிலன் புலம்ப, “சார் நீங்க மேடமை போய் கூட்டிட்டு வாங்க” என்று கூற, “வேண்டாம் சுரேஷ். அவள் என்னை பிரிந்து போனது நல்லதுதான். இந்த ரிப்போர்ட் பார்த்ததும் மனசு சொல்லும் ஒரே விஷயம் என்னோட மேகா எங்கோ சந்தோசமாக இருக்கிறா. அது மட்டும் எனக்கு போதும்” என்றவன் தன்னையும் மீறி ஒரு வார்த்தை சொன்னான்.

“நான் ஒரு நிமிஷம் உணர்ச்சி வசத்தில் அவளை தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுத்தினால் அவ உயிருடன் இருக்க மாட்டா. அதுக்கு இப்படி எங்கோ கண்காணாத ஊரில் அவள் சந்தோசமாக வாழ்ந்தா அதுவே போதும். பணம் இருந்து என்ன பயம் பாரு. அவளோட உயிரை காப்பாற்ற கூட பயன்படல” என்றவனை எப்படி சாமதானம் செய்வது என்று புரியாமல் தவித்தான் சுரேஷ்.

அவனின் தவிப்பை உணராமல் மனதில் இருப்பதை அவனிடம் கொட்டி தீர்க்கும் எண்ணத்துடன், “அவ மட்டும் என்னுடன் இருந்து இதெல்லாம் நடந்து இருந்தா அவள் இறந்து போயிருப்பா சுரேஷ். நான் அவளை மறக்க முடியாமல் மகளையும் வளர்க்க தெரியாத கோழையா வாழ்ந்திருப்பேன். மறுபடியும் சிகரெட், தண்ணி என்று தவறில் இறங்கியிருப்பேன். அப்போ என்னோட மகள் தாயையும் இழந்து, தந்தை உருப்படி இல்லாமல் வளர்ந்து இருப்பாளே.” என்றவன் தன்னையும் மீறி விரக்தியுடன் சிரித்தான்.

“பெண் புத்தி பின் புத்தி என்று சொல்றோம். அவளுக்கு பின்னாடி தனக்கு மரணம் வரபோவது தெரிஞ்சி என்னையும், என் மகளையும் நேர்வழியில் செல்ல சொல்லிட்டு தனிச்சு போயிட்டா பாரு. என் மனைவியை நினைக்க எனக்கு பெருமையாக இருக்குடா” என்றவன் இறுதியாக சொன்ன வார்த்தை சுரேஷ் மனதை உலுக்கியது.

“என் மேகா இறந்துட்டா என்று தெரிஞ்சா கொஞ்சநாள் மட்டும் என் மகளை பொறுப்பாக ஒருவரிடம் சேர்க்கும் வரை இந்த உயிர் அதன் கூட்டில் இருக்கும். அதுக்கு மேல் ஒரு நிமிஷம் கூட நான் என் மனைவியை விட்டுட்டு இருக்க மாட்டேன் சுரேஷ்” என்றவன் வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறிவிட்டான்.

அத்தனை நாளும் மனதில் வைத்திருந்த உண்மையை மகளிடம் கூறியவர், “அவளோட முடிவு சரிதான் திவ்யா. அதனால் உனக்கு அம்மாமேல் கோபம் வரக்கூடாதும்மா” என்றவர் இன்னொரு விஷயத்தை சொன்னார்.

“நான் எப்படி உன்னை வளர்க்கிறேனோ அதே மாதிரி உன்னோட அம்மா ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்துட்டு இருக்கிறா. அவன் உன்னைவிட பெரியவன் பெயர் சித்தார்த். அவனை நீ அண்ணானாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று மகளிடம் பக்குவமாக அவர் கூற கலங்கிய கண்களோடு சரியென்று தலையசைத்தாள் மகள்.

அவர் கடந்த காலத்தை கூறி முடிக்க எல்லோரின் கண்களும் கலங்கிப் போனது. அவர்களின் பிரிவிற்கு பின்னாடி இப்படியொரு உண்மை மறைந்திருக்கும் விஷயம் அங்கிருந்த யாருக்குமே தெரியாது சித்தார்த் மற்றும் திவ்யாவை தவிர.

இப்போது அந்த உண்மையை அறிந்தவர்கள் எழிலனும், நிலாவும் தடுமாற்றம் இல்லாமல் நிதானமாகவே இருந்தனர்.

அப்போது மனைவியின் அருகே வந்து நின்ற எழிலன், “நீங்க இருதய நிபுணர் இல்ல. அந்த படிப்பை நீங்க உங்க அம்மாவைக் காப்பாற்ற தான் படிச்சீங்க என்று நான் சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க அங்கிள்” என்றவன் முடிவாக கேட்க முற்றிலும் உடைந்து போனார் சித்தார்த்.

அவர் அவனை பார்த்து, “எனக்கு உண்மை தெரியும் எழில். அம்மாவை காப்பாற்ற நினைச்சுத்தான் நான் அந்த படிப்பையே படித்தேன்”என்றவர் அன்று இரவு தாய் தன் தோழியான கீதாவிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உறங்கிவிட்டார்.

அப்போதுதான் எழுந்த சித்தார்த் கண்களில் அந்த கடிதம் பட, ‘என்ன இருக்கும் இந்த கடிதத்தில்’ என்ற சிந்தனையுடன் கடிதத்தை பிரித்து படித்தான்.

மேகா கீதாவிற்கு எழுதிய கடிதம்…

ஹாய் கீதா,

எப்படி இருக்கிறாய்? இலங்கை புது இடம் உனக்கு பிடித்து இருக்கிறதா? உன் குடும்பத்தில் எல்லோரும் எப்படி இருக்காங்க?

கீதா எனக்கு குழந்தை பிறந்த பிறகு அந்த டாக்டர் சொன்ன விஷயம் உறுத்தலாக இருக்க நான் தனியாக சென்று செக்கப் செய்து என்னுடைய நிலையை அறிந்து கொண்டேன்.

எனக்கு இப்படியொரு நோய் என்று தெரிந்தால் அவர் கண்டிப்பாக உடைந்து போய்விடுவார் கீதா. அவரிடம் இருக்கும் பணம் கூட என்னை மரணத்தில் இருந்து காப்பாறாது என்று தெரிந்தால் அவர் தாங்க மாட்டார் என்று எனக்கு புரிந்துவிட்டது.

நானும் என் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் மறந்து அவரோடு வாழலாம் என்று முடிவெடுத்த நேரம் இப்படியொரு உண்மை தெரிந்தது. இப்போது நான் அவரை பிரிந்து வருவதே சரியென்ற முடிவிற்கு வந்துவிட்டேன்.

அந்த முடிவை இப்போது செயல்படுத்திவிட்டேன் கீதா. என் கணவருக்கு கடைசி வரை இந்த உண்மை தெரிய கூடாது. தெரிஞ்சா அவர் திரும்ப பழைய வாழ்க்கைக்கு போனாலும் போகலாம் என்ற எண்ணம் வரும்போது மகளுக்காக அவர் வாழ நினைக்கட்டும் என்று எங்களுக்கு பிறந்த குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன் கீதா.

எனக்கு வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் இருக்கிற மாதிரி தோன்றும் சமயத்தில் நான் சித்தார்த்தை பார்த்தேன். அவனுக்குள் இருக்கும் ஆசைகள் கனவுகளை நிறைவேற்றும் எண்ணத்துடன் இனி பயணிக்க போகிறேன்.

மரணம் இன்று வருமா? நாளை வருமா? என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அந்த மரணம் வரும் வரை சந்தோசமாக வாழ முடிவெடுத்து இருக்கேன்டி. இன்னொரு விஷயம் கீதா என்னதான் நான் அவரை பிரிந்து வந்திருந்தாலும் நான் அவரைத்தான் உண்மையாக நேசிக்கிறேன்.

என் காதலை அவரிடம் சொல்ல வாய்ப்பு இனிமேல் அமையுமா தெரியல. அதன் இப்போ உன்னிடம் சொல்கிறேன். ஆனால்  ப்யூச்சரில் அவரை சந்திக்க நேர்ந்தால் நான் என்னோட காதலை சொல்லிருவேன் கீதா.

என்னவோ என் மனதில் உள்ள அனைத்தையும் உன்னிடம் கொட்டிய பிறகு மனசு ரொம்ப லேசாக இருக்கு. தேங்க்ஸ் கீதா.

இப்படிக்கு

உயிர் தோழி

மேகவர்ஷினி.” என்று அந்த கடிதத்தை பற்றி கூறியவர்,

“இதற்கு பிறகுதான் நான் ஒரு முடிவெடுத்தேன். என்னோட அம்மாவைக் காப்பாற்ற முடிவெடுத்து இருதய நிபுணருக்கு படித்தேன். ஆனால் என்னோட படிப்பிற்கு நோ யூஸ் என்னோட அம்மாவை கடைசிவரை என்னால் காப்பாற்ற முடியல” என்றார் வலியுடன்.

அவரின் வலியைக் கண்டு நந்தினி தான் அவரை தேற்றும்படி ஆனது..

அப்போதுதான் தன் கையிலிருந்த பைல் மற்றும் அவர்கள் கூறிய கடிதங்களை அனைத்தையும் அவர்களின் பார்வைக்கு வைத்தனர் எழிலனும், நிலாவும்!

error: Content is protected !!