Nan Un Adimayadi–EPi 13

அத்தியாயம் 13

கண்ணுதான் தூங்கவில்லை

காரணம் தோணவில்லை

பொண்ணு நீ ஜாதி முல்லை

பூமாலை ஆகவில்லை (முத்துக்காளை)

 

“காமு! டி காமூ!”

“என்னவாம்? இப்ப எதுக்கு என்னை ஏலம் போடறீங்க?”

“ஆமா, நீ கத்ரீனா காயிப்பூ..உன்னை ஏலம் போட்டுட்டாலும்!”

“கட்டிக்கிட்ட புதுசுல

‘ஆடைக்கட்டி வந்த நிலவோ

கண்ணில் மேடைக்கட்டி ஆடும் எழிலோ’ன்னு உங்காத்தா தலை அங்கிட்டு மறைஞ்சதும் இங்கிட்டு இளிச்சிக்கிட்டு நின்னதுலாம் மறந்துப் போச்சு போல! இப்ப என்னன்னா காமாட்சி கசக்கறா காயிப்பூ இனிக்கிறா!” என கோபமாக கேட்டார் காமாட்சி.

“அட எவடி இவ ஒருத்தி! பேர புள்ளைங்க நடு வூட்டுல ஓடி ஆடற வயசுல இன்னும் புருஷன போட்டு கொடையறா!”

“ஆமா கொடையறாங்க! இந்த பொம்பள ஜென்மமே இப்படி லோல் பட பொறப்பெடுத்த ஜென்மம்தானே! பொறந்த வூட்டுல மாடு மாதிரி உழைக்கனும், அப்புறம் புகுந்த வூட்டுல கழுதை மாதிரி பொதி சுமக்கணும்! சாகற வரைக்கும் அடுப்பங்கரைய கட்டிக்கிட்டு வெந்து வேகணும். ஆனா நாம ஒரு வார்த்தை சொல்லிட்டா, உடனே கொடையறா, கொல்லறான்னு சொல்லறது! எல்லாம் நான் வாங்கி வந்த வரம். நான் கட்டனதும் சரியில்ல, நான் பெத்ததும் சரியில்ல. நம்ம காளை மொகத்துல களையே இல்லாமே சுத்திட்டு இருக்கானே, அதுக்கு எதாச்சும் பண்ணுவோம்னு தோணுதா! எப்ப பாரு எடக்கு பேச்சு”

நொந்தே போனார் மச்சக்காளை. மகனைப் பற்றி பேசத்தான் காமு என அழைத்தார் அந்த அப்பாவி மனிதர். அது எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து கொஞ்சம் ஏறாத்தா என முடிந்திருந்தது.

அந்த அந்தி சாயும் நேரத்தில் இருவரும் திண்ணையில் அமர்ந்திருந்தனர். தவமங்கை இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. சில சமயங்களில் இப்படி லேட் ஆவதுண்டு. ஆங்கில பாடத்தில் கொஞ்சம் சிரமப்படும் பிள்ளைகளுக்கு பள்ளியில் இருந்தே எக்ஸ்ட்ரா கிளாஸ் எடுத்து விட்டு வருவாள். இது அவளின் மன திருப்திக்காக இலவசமாக செய்வது.

“காளையப் பத்தி தான் காமு பேசறதுக்கு வந்தேன். அதுக்குள்ள பேச்சு எங்க எங்கயோ போய்டுச்சு”

“என்ன பண்ணறதுன்னு எனக்கு ஒன்னும் புரியல! டீச்சர் அப்பாரு வந்துட்டு போனதுல இருந்து ஒலகமே இடிஞ்சி அவன் தலை மேல வுழுந்துட்ட கணக்கா சுத்திட்டு கெடக்கான். கல்யாணத்துக்கும் புடி குடுக்க மாட்டறான்! எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு! என் மவன் இப்படியே தனிமரமா நின்னுடுவானோ!”

“நல்லதையே நெனை காமு! இனிமேப்பட்டா நமக்கு மருமவ பொறந்து வரப்போறா! அவன் தலையில என்ன எழுதி வச்சிருக்கோ, அது அச்சுப்பிசகாம நடக்கும். நீ கவலைப்பட்டு எதாச்சும் உடம்புக்கு இழுத்து விட்டுக்கப் போற”

“ஆமா போய்யா! மவனுக்கு கல்யாணம் காட்சின்னு பார்க்காம, நான்லாம் இருந்தாத்தான் என்ன போனாத்தான் என்ன?” பெருமூச்செறிந்தார் காமாட்சி.

“என்னடி இப்படி பேசற! வயசு காலத்துல வசதி வேணும், புள்ளைங்கள நல்லபடியா வளக்கனும்னு நாயா பேயா உழைச்சோம். ஆசையா நாலு வார்த்தை நிதானமா பேசிருப்பமா, வெளியூரு கிளியூருன்னு போயிருப்பமா! இனிமேத்தான்டி எனக்கு நீ ஒனக்கு நான்னு வாழனும்! நாம ரெண்டு பேரும் ஜோடியா கோயில் கொளமெல்லாம் சுத்தனும்! ஒரு ஆம்பளைக்கு வயசு காலத்துல பொண்டாட்டி இல்லைனா கூட சமாளிச்சிருவான், வயசாகி பொண்டாட்டி இல்லைனா அவன் செத்த பொணத்துக்கு சமானம்டி காமு” பொங்கிவிட்டார் மச்சக்காளை. என்னதான் அப்படி இப்படி என காமாட்சியை வம்பிழுத்தாலும் மனைவி மேல் உயிரையே வைத்திருந்தார் அவர்.

“என்னய்யா பொணம் கிணம்னு! இனிமே இப்படிலாம் நான் பேசலை! மூஞ்ச தூக்கி வச்சிக்காம, எங்க சிரி பாப்போம்”

“ஒன்னும் வேணா போ!” தோளில் போட்டிருந்த துண்டை உதறியபடி எழுந்துக் கொண்டார் அவர்.

அந்த நேரம்தான் காளையின் வண்டி வீட்டின் முன்னே வந்து நின்றது. இறங்கியதும் அவன் பார்வை போனது திண்ணையின் அருகே செருப்பு கழட்டி விடும் இடம்தான். அங்கே மங்கையின் டொக் டொக் செறுப்பைக் காணாது முகம் சுருங்கினான். மங்கையின் ஹீல்சுக்கு அவன் வைத்திருந்த பெயர்தான் டொக் டொக் செறுப்பு.

“டீச்சர் இன்னுமா வரல ஆத்தா?”

“ஆமாடா! எக்கிஸ்டிரா(எக்ஸ்ட்ரா) கிளாசு இருந்தா லேட்டாத்தானே வருவாங்க! இன்னிக்கு அந்த கிளாசு போல.”

“சரி, நான் போய் பார்த்துட்டு வரேன் ஆத்தா!” என கிளம்பிவிட்டான் காளை.

“எதாச்சும் குடிச்சுட்டு போடா” என அழைத்த காமாட்சியின் குரல் காற்றோடு கலந்தது. இன்று தோப்பில் அதிக வேலை காளைக்கு. மரங்களுக்கு பூச்சிக்கொள்ளி மருந்து அடிப்பதில் முழு நாளும் ஓடி இருந்தது. உணவு பொருளை விளைவிப்பதால், சரியான விகிதத்தில் பூச்சிக் கொள்ளி மருந்துகளை கையாள வேண்டும். ஆகையால் வேலை பார்ப்பவர்கள் பக்கத்திலேயே இருந்து, அவன் தான் கலந்துக் கொடுப்பான். அவர்களோடு சேர்ந்து அவனும் வேலைப் பார்த்துவிட்டு, மருந்துகளை பாதுகாப்பாய் வைத்துவிட்டு வீட்டுக்கு வர நேரம் ஆகி இருந்தது.

பள்ளியில் மங்கையோ மிகுந்த களைப்பாய் இருந்தாள். அவளுக்கு மார்ஸ் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. மாதாந்திர பிரச்சனையைத்தான் கல்லூரியில் படிக்கும் போது இவர்கள் மார்ஸ் என பெயரிட்டிருந்தார்கள். ப்ளேனேட் மார்ஸ் சிவப்பாய் இருப்பதை ஒட்டித்தான் இந்தக் காரணப் பெயர். அது வரும் ஒரு வாரத்துக்கு முன்னமே இவளுக்கு உடல் வலியோடு, தலைவலியும் சேர்ந்துக் கொள்ளும். வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என இவள் நினைக்க, பாடம் புரியவில்லை என வந்து நின்றார்கள் சில மாணவிகள். மறுவாரம் எக்ஸாம் வேறு ஆரம்பிப்பதால் இவளால் ஸ்திரமாக மறுக்கவும் முடியவில்லை.

சீக்கிரம் சொல்லிக் கொடுத்திருப்பாள், காதல் மன்னனின் தலையீடு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வந்து,

“டீச் டீ வேணுமா?”

“டீச் சமோசா?”

“டீச் புழுக்கமா இருக்கா?”

“டீச் ஜூஸ்?”

என கேட்டு கேட்டு இவள் காதை தீய்த்து விட்டான். அப்பா பார்த்த மாப்பிள்ளையை முறைக்கவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் களைத்துப் போனாள் மங்கை.

பிள்ளைகள் கிளம்பி விட, இவளும் கிளம்ப ஆயத்தமானாள். அருகில் வந்து நின்ற மறைச்செல்வன், மங்கையின் கையை மெல்ல பற்றிக் கொண்டான். சட்டென கையை இழுத்துக் கொண்டாள் தவமங்கை.

“ஏன் தவா, நான் தொடக் கூடாதா?” என சிரிப்புடன் கேட்டான் அவன்.

“ப்ளிஸ் மிஸ்டர் மறை! தொடற வேலைலாம் வேணா! கல்யாணம்னு ஒன்னு ஆகற வரைக்கும் எதுவுமே கேரண்டி இல்ல! அப்பா சொல்லிருப்பாரே, எனக்கு நிச்சயம் ஆகி கல்யாணம் நின்னுப் போயிடுச்சுன்னு! நிச்சயம் செஞ்சுக் கூட அவர் என் கிட்ட டீசண்டா தான் நடந்துகிட்டாரு. உங்களுக்கும் எனக்கும் இன்னும் அது கூட நடக்கல. சோ இப்படி டச்சிங் டச்சிங்லாம் வேணா! நாளைக்கு நமக்குள்ள என்ன வேணும்னாலும் நடக்கலாம். உங்களுக்கும் என்னைப் பிடிக்காம போகலாம். அப்போ மூனாவதா வரவருக்கு நான் பரிசுத்தமா இருக்கனுமா இல்லையா? ஆம்பள எப்படி இருந்தாலும் தனக்கு வரப்போற வைப் மட்டும் ப்பியூரா இருக்கனும்னு நினைக்கறது காலம் காலமா நடக்கறது இல்லையா! சோ ப்ளீஸ், நோ டச்சிங் டச்சிங் பிஸ்னஸ்” என சொன்னவள் ஸ்கூட்டியில் அமர்ந்து வேகமாக கிளப்பிக் கொண்டு போய்விட்டாள்.

அவள் செல்வதையே பார்த்திருந்த மறை,

“இந்தப் ப்பியூர் பியூட்டி அப்படியே எனக்குத்தான்” என புன்னகையுடன் சொல்லிக் கொண்டான்.

அவர்கள் தெருவை அடைவதற்குள் மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது. பசி வேறு காதை அடைக்க, சீக்கிரம் வீட்டுக்குப் போய் காமாட்சி கையால் சாப்பிட வேண்டும் என எண்ணிக் கொண்டே வந்தவள் சாலையில் உடைத்திருந்த திருஷ்டி பூசணியைப் பார்க்காமல் அதன் மேல் ஏற்றி தடுமாறி கீழே விழுந்திருந்தாள்.

அவள் விழுந்ததை தூரத்தில் இருந்துப் பார்த்த முத்துக்காளை, பைக்கில் இருந்து அப்படியே குதித்து ஓடி வந்தான். அவன் பைக் ஆளில்லாமல் ஓடி யார் வீட்டு திண்ணையிலோ இடித்துக் கொண்டு கீழே சரிந்தது. டீச்சர் என கத்திக் கொண்டு ஒரே பாய்ச்சலாக ஓடியவன் கத்தலில் சீரியலில் மூழ்கி இருந்த தெருவே வெளியே ஓடி வந்தது.

அவன் நெருங்குவதற்குள் எழுந்து அமர்ந்திருந்தாள் தவமங்கை. கையில் தோல் வழண்டு ரத்தம் வந்தது. முகத்திலும் தலையிலும் செம்மண் பூசி இருந்தது. ஊரே சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்க, இவளுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. முயன்று அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.

ஓடி வந்த காளை கண்டது கண்ணில் நீர் முட்ட தன்னையேப் பார்த்திருந்த மங்கையைதான். முட்டிக்காலிட்டு அவள் முன்னே அமர்ந்தவன்,

“டீச்சர்! வேற எங்கயாச்சும் அடிப்பட்டுருக்கா?” என அவளை முழுதாக கண்களால் ஆராய்ந்தப்படியே கேட்டான். தொட்டுத் தடவி எங்காவது அடிப்பட்டிருக்கிறதா என தெரிந்துக் கொள்ள துடித்த கரங்களை சிரமப்பட்டு அடக்கினான் அவன். காளையின் கேள்வியில் சட்டென இரு சொட்டு கண்ணீர் உருண்டோடியது அவள் கன்னத்தில்.

கண்களை இறுக மூடித் திறந்தவன்,

“ஒன்னும் இல்ல டீச்சர்! வீட்டுக்குப் போயிடலாம்! ஆத்தா சரி பண்ணிடும் எதா இருந்தாலும்.” என குழந்தைக்கு ஆறுதல் சொல்வது போல சொல்லி தன் வேட்டியைக் கிழித்து அவள் கை ரத்தத்துக்குக் கட்டுப் போட்டான். (ஏன் லேடிஸ் மட்டும்தான் சேலையைக் கிழிக்கனுமா? வேட்டியையும் கிழிக்கலாம்! தப்பில்ல..)

அவன் கண்களில் தெரிந்த பதற்றத்தையும், உடல் மொழி காட்டிய துடிப்பையும் கலங்கிய கண்களுடன் பார்த்திருந்தவள், ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை.

“எழுந்துக்க முடியுமா டீச்சர்?”

முடியும் என அவள் தலையாட்ட, இவனும் அவள் எழ கைக்கொடுத்தான். எழுந்து நின்றவள் ஆவெனும் சத்தத்துடன் மீண்டும் மடிந்து கீழே விழப்போனாள். பட்டென அவளைப் பிடித்துக் கொண்டவன், இரு கைகளாலும் அவளைத் தூக்கிக் கொண்டான். ஊர் மக்களின் வாய்க்கு அவள் மீண்டும் அவலாக வேண்டாம் என எண்ணித்தான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தள்ளி நின்று எல்லாம் செய்தான் காளை. ஆனால் அவள் விழப் போனதும், ஊராவது ஹேராவது(இதுக்கு தமிழ் மை……………….. வார்த்தை வரனும். எனக்கு சங்கோஜமா இருக்கு எழுத. அதான் இங்கிலிபீசு) என முடிவெடுத்தவன், தன் உயிரானவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.

“தோ.. இப்போ வீட்டுக்குப் போயிடலாம் டீச்சர்” என வேகமாக நடையை எட்டிப் போட்டான்.

“டீச்சர வுட்டுட்டு வந்து ரோட்டுல பூசணிக்காய உடைச்சவன், மண்டையை ஒரே போட்டுல உடைக்கறேன்டா!” என கர்ஜித்தப்படிதான் நடந்தான் முத்துக்காளை.

“காளை டீச்சர தூக்கிட்டான் டோய்! தொட்டுத் தூக்கிட்டான் டோய்” என தெருவுக்குள் ஒரே சலசலப்பு.

அவன் வேகமாக நடக்க அவள் ஒரு பக்க முகம் அவன் நெஞ்சில் உரசியது. உடல் வலியோடு, காலின் வலியும் சேர்ந்துக் கொள்ள, காளையின் நெஞ்சில் இன்னும் ஒண்டிக் கொண்டாள் தவமங்கை. ஒரு கணம் காளையின் நடை நின்றுப் போனது.

“டீச்சர்!” மெல்லிய குரலில் முனகினான் காளை.

“வலிக்குது காளை” என சொல்லியவளின் கண்ணீர் அவன் நெஞ்சை நனைத்தது. அதன் பிறகு அவன் நடையில் அசுர வேகம்தான்.

வீட்டில் நுழையும் முன்னே, ஆத்தா என கத்தியபடி தான் வந்தான். என்னமோ ஏதோ என பதறியபடி வந்தார்கள் காமாட்சியும் மச்சக்காளையும். அவள் ரூமுக்கு போகும் பொறுமை கூட இல்லை அவனுக்கு. அவன் ரூமில் நுழைந்து அவளைத் தன் கட்டிலில் மெல்ல கிடத்தினான்.

“டீச்சர் ஸ்கூட்டர்ல இருந்து விழுந்துட்டாங்க ஆத்தா! காலுல ரொம்ப வலி போல ஆத்தா! நடக்க முடியல அவங்களால!”

“சரி, நீ வெளிய போ! நான் என்னான்னு பார்க்கறேன்” என்றார் காமாட்சி.

“இல்ல ஆத்தா! நான் இருக்கேன்.”

“அடேய் போடா வெளிய! என்னங்க இவன கூட்டிட்டுப் போங்க” என மச்சக்காளையை விரட்டினார் காமாட்சி. மகனை அவர் வெளியே இழுக்க, அவன் பார்வை எல்லாம் மங்கையின் மேலேயே இருந்தது.

ஆண்கள் இருவரும் வெளியேற,

“எங்கடாம்மா வலிக்குது? கொஞ்சம் பார்த்து வரக்கூடாதாத்தா?” என மங்கையின் முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கி விட்டு பாசமாய் கேட்டார் காமாட்சி.

“எல்லா இடத்துலயும் வலிக்குதுத்தா! ஆனா கணுக்காலுல மட்டும் வலி உயிர் போகுது.” என சலுகையாய் அழுதாள். அவளுக்கு விவரம் தெரிந்து இப்படி யாரிட்மும் சலுகை கொண்டாடியது இல்லை அவள். என்னவோ காமாட்சியின் பரிவில் அழுகை வந்தது அவளுக்கு.

“இரு நான் பார்க்கறேன்” என அவளின் சுடியின் பேண்டை அவர் கழட்ட முனைய, கதவு தட்டப்பட்டட்து.

“ஆத்தா”

“என்னடா?”

“வாத்தா”

“இவனோட…” கத்தியவாறே கதவைத் திறந்தார் காமாட்சி. அவர் கையில் மங்கையின் துண்டையும், ஒரு வாளி தண்ணீரையும் கொடுத்தான் அவன்.

“மேலலாம் மண்ணுத்தா! குளிக்க கொள்ள நடக்க முடியுமா தெரியல டீச்சருக்கு! இங்கயே தொடைச்சிக்கட்டும்தா”

வாங்கிக் கொண்டு உள்ளே வந்தார் காமாட்சி. மறுபடியும் சுடி பேண்டை கழட்டப் போக, திரும்ப கதவைத் தட்டும் சத்தம். முனகிக் கொண்டே போனார் காமாட்சி.

இந்த முறை கொடியில் உலர்த்தி இருந்த மங்கையின் நைட் பேண்டும், டீசர்டும் அவன் கையில் இருந்தது. அதோடு மஞ்சளும் இருந்தது காயத்துக்குப் போட.

“டீச்சர் உடுப்பு மண்ணாயிருச்சு! இத மாத்திக்கட்டும் ஆத்தா”

“இதுக்கு மேல கதவைத் தட்டுன, வகுந்துப்புடுவேன் வகுந்து” என திட்டிவிட்டு கதவை சாற்றிவிட்டு வந்தார்.

காமாட்சியின் முன் கூச்சமாக இருக்க, அவரைத் திரும்ப சொல்லிவிட்டு முட்டி வரை இருந்த தன் நைட் டீ சர்டை அவளே போட்டுக் கொண்டாள் மங்கை. காலைப் பிடித்து அசைத்துப் பார்த்த காமாட்சி,

“காலு சுளுக்கிருக்குத்தா. மத்தப்படி கையில இருக்கற காயம் மட்டும்தான். இரு போய் எண்ணெய் காய்ச்சிட்டு வரேன். சுளுக்கெடுத்துடலாம்.” என காயத்துக்கு மஞ்சள் பத்து போட்டுவிட்டு வெளியேறினார் அவர்.

“என்னாத்தா? காலுக்கு என்ன? வாடகை வண்டி சொல்லவா? டவுனாஸ்பித்திரிக்குப் போலாமா?” என அவர் பின்னோடே வந்தான் காளை.

“சுளுக்குப் புடிச்சிருக்குடா! நானே பார்த்துக்குவேன்! நீ போய் குளிச்சுட்டு வாடா! மருந்து வாடை அடிக்குது. இந்த வாடையோடயா டீச்சர தூக்கிட்டு வந்த” என கேட்டப்படியே எண்ணெயை சூடு காட்டினார் காமாட்சி.

சட்டையைக் கழட்டியவனுக்கு மருந்து வாடை வரவில்லை. மங்கையின் வாசம் தான் வந்தது. தன் நெஞ்சில் சாய்ந்தழுதவளின் கண்ணீர் தடத்தைத் தடவிப் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மெல்ல தன் உதட்டை அதில் பதித்து மீட்டான் அவன்.

கிணற்றில் தண்ணீர் மொண்டு அவன் குளித்துக் கொண்டிருக்கும் போது மங்கையின் அலறல் சத்தம் வர அவசர அவசரமாக துடைத்துக் கொண்டு தன் அறை வாசலில் வந்து நின்றான். காமாட்சியின் கைவைத்தியத்துக்குத் தான் அந்தக் கத்து கத்தினாள் மங்கை.

“தோ முடிஞ்சது! அம்புட்டுத்தான்” என அவளை சமாதானப்படுத்தியபடியே சுளுக்கை எடுத்து விட்டிருந்தார் அவர்.

“ரெண்டு நாளைக்கு இந்தக் காலை ஊணி நடக்காதத்தா!”

கண்ணீர் முகத்துடன் சரி என அவள் தலையாட்ட, பிரசவ வார்டுக்கு வெளியே நிற்கும் கணவனைப் போல வெளியே தவித்தப்படி நின்றிருந்தான் காளை.

“போய் ஒடம்ப துடைச்சுப்புட்டு சாப்பிட வாடா மவனே!” என குரல் கொடுத்தார் மச்சக்காளை. அப்பொழுதும் அசையவில்லை அவன்.

அவளுக்கு உணவு எடுக்க காமாட்சி வெளியே வர இவன் ஈரம் சொட்ட சொட்ட வேட்டியுடனும், உடம்பை போர்த்திய துண்டுடனும் உள்ளே நுழைந்தான். நைட் பேண்ட் போடாமல் இருந்தவள் அவன் சடக்கென உள்ளே வரவும், காலை மூட போர்வை தேட அவனோ அவள் முகத்தைத் தவிர வேறெங்கும் பார்வையை நகர்த்தவில்லை. தன் உடம்பை மூடி இருந்த துண்டை எடுத்து அவள் காலை மறைத்துப் போட்டவன், தனது பீரோவுக்குப் போய் அவனுடைய உடைகளை எடுத்துக் கொண்டான். அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு, ஈர வேட்டியோடு அவள் அருகே வந்தவன்,

“இப்ப எப்படி இருக்கு டீச்சர்? டவுனுக்குப் போலாமா ஆஸ்பித்திரிக்கு?” என கேட்டான்.

“வலி இருக்கு! ஆனா முன்ன மாதிரி விண்ணுன்னு தெறிக்கல காளை” மெல்லிய குரலில் சொன்னாள்.

தன் கட்டிலில் சாய்ந்திருப்பவளைத் தன் நெஞ்சில் சாய்த்து ஆறுதல் படுத்த துடித்த கைகளை அடக்கிக் கொண்டவன்,

“நல்லா போயிடும் டீச்சர்! ஸ்கூலுக்குப் போகாம வீட்டுலயே ரெஸ்டு எடுங்க! நல்லாகிடும்! ஊருல ஆபத்து அவசரம்னா ஆத்தா கிட்டத்தான் வைத்தியத்துக்கு வருவாங்க! கைவைத்தியத்துல காமாட்சி எக்ஸ்பெர்ட்டு” என சொன்னான்.

“என் ரூமுக்குப் போகவா நான்?”

“அவளோ தூரம்லாம் நடக்க வேணா டீச்சர். இங்கயே படுத்துக்குங்க! நான் வெளியே படுத்துக்கறேன்”

“இல்லை வேணா ப்ளீஸ்! நான் போறேன்” என பிடிவாதம் பிடித்தாள்.

பெருமூச்சொன்றை விட்டவன், சரியென தலையாட்டி விட்டான்.

உணவு கொடுத்த காமாட்சிதான் அவளை கைத்தாங்கலாக அவளது அறைக்குள் விட்டு வந்தார். நடுராத்திரியில் எப்பொழுதும் போல நேச்சர் கால் வர, நொண்டிக்காலை வைத்துக் கொண்டு விந்தி விந்தி நடந்து வந்தவளை ஒரு ஜோடி கரம் மெல்லத் தூக்கிக் கொண்டது. அதிர்ந்தவள்,

“என்னதிது?” என கேட்டாள்.

“பஸ் சர்வீசு மாதிரி இது பாத்ரூமு சர்வீசு டீச்சர்! கால ரொம்ப ஊணக் கூடாதுல, அதுக்குத்தான்” என பாத்ரூம் வாசல் வரை விட்டு, அவள் வெளியே வந்ததும் மீண்டும் ரூமில் போய் விட்டு வந்தான். அன்று மூன்று வேளையும் இந்த ஷட்டல்(shuttle) சர்வீசை தன் டீச்சருக்காக இலவசமாக செய்தான் முத்துக்காளை. (அடேய் சத்தியமா என்னால முடியலடா உன்னோட அக்கப்போரு! இந்த எபில இவன் பண்ணுற அட்டகாசத்துக்கு எனக்கே நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணிக்கிறேன்.

“உடலில் வழிந்தோடும் உதிரம்

உனை கேட்கும்

அடேய் காளை

நான் செய்த தீங்கு என்ன

நான் செய்த தீங்கு என்ன!!!!!

விடுகதையா இந்த வாழ்க்கை……….)

(அடி பணிவான்…)

 

(அடுத்த எபி முடிஞ்சப்ப டைப் பண்ணி போடறேன். இங்க இன்னும் ரெண்டு வாரம் லாக்டவுன் எக்ஸ்டேண்ட் ஆகிருக்கு. நான் எப்படி இருக்கேன்னு கேட்ட எல்லோருக்கும் நன்றி. நீங்களும் பத்திரமா இருங்க.. லவ் யூ ஆல்)