SK -1

SK -1

சிற்பியின் கனவுகள்

அத்தியாயம் – 1
“நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீது தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனா போதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாளே..”

உண்மையான நேசத்தை நெஞ்சில் புதைத்துவிட்டு வேறு வேறு பாதையில் செல்லும் மேகவர்ஷினி, கார்முகிலனைக் கண்டு காதல் தான் அங்கே கண்கலங்கி நின்றதை கண்ட விதியும் அவர்களின் இளமையை மீட்டுகொடுத்து பிரிந்த காதலை இணைக்க எண்ணியதோ என்னவோ?

சித்தார்த் காரை சீரான வேகத்தில் செலுத்த அவனருகே சிந்தனையுடன் வந்த தாயின் முகம் அவனைக் கலக்கத்தில் ஆழ்த்தியது. கார்முகிலன், திவ்யதர்ஷினி இருவரையும் பார்த்துவிட்டு வந்தபிறகு தாய் மெளனமாக இருப்பதே அவரின் மனபோராட்டத்தை படம்பிடித்து காட்டியது.

“என்னம்மா அமைதியா வரீங்க” என்றவன் கேட்டபடி சாலையின் மீது கவனத்தைத் திருப்பும் போதுதான் எதிரே வந்த லாரியைக் கவனித்து காரை வேகமாக ஒடித்து திருப்பும் முன்னே வேகமாக வந்த லாரி காரில் மோதி பள்ளத்தில் உருண்டது. அந்த விபத்தைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மீட்டேடுத்து அருகில் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதே நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்த கார்முகிலனை வம்பிற்கு இழுத்தாள் அவரின் செல்ல மகள் திவ்யா.

“என்னப்பா அம்மாவைப் பார்த்த சந்தோஷத்தில் இருக்கீங்க போல என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி.

“உனக்கு வாலுத்தனம் அதிகமாகிப் போச்சு” என்றவர் மகளின் முதுகில் செல்லமாக அடித்துவிட்டு,“சித்தார்த்கிட்ட ஏன் அப்படி பேசின” என்று மகளிடம் கேட்டார்.

தந்தையின் முன்னே வந்து நின்ற மகளோ, “நான் அப்படி பேசலன்னா சித்தார்த் அண்ணா மனசு கஷ்டப்படுமே, உறவுகள் இருக்கிறவங்களுக்கு அதோட அருமை தெரியல. உறவுகளை தேடுபவர்களுக்கு அந்த மாதிரி அமைவதில்லை. அதான் அப்பா அப்படி பேசினேன்..” என்று ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்தாள்.

அவருக்கு மகளின் இந்த புரிதலை நினைத்து பெருமையாக இருந்தது. எந்தவொரு உறவையும் மற்றவரிடம் இருந்து பிரிக்க நினைக்காத அவளின் குணம் கண்டு மனம் மகிழ்ந்தார்.

“அப்பா காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று வேகமாக அறைக்கு சென்றவள் குளித்து உடைமாற்றிவிட்டு காபிபோட சமையலறைக்குள் நுழைந்தாள்.

கார்முகிலன் எழுந்து ஜன்னலின் ஓரம் நின்று வானத்தை வேடிக்கைப் பார்க்க திடீரென்று வானம் இருள் போர்வை போர்த்திக் கொள்ள, “ம்ம் மழை வருகின்ற மாதிரி இருக்கு” என்றவரின் மனதில் சற்றுமுன் மேகா பார்த்த பார்வையில் தெரிந்த காதலை நினைத்து விழிமூடி நின்றார்.

சில்லென்ற தென்றல் வந்து அவரின் முகத்தில் மோதிச்செல்ல அதை ஆழ்ந்து அனுபவிக்க காற்றுடன் கலந்து வந்த மல்லிகையின் மனமும் அவரின் சிந்தனையைக் கலைக்க அவரின் மனம் படபடவென்று அடிக்க தொடங்கியது. திடீரென்று அவரின் உடல்முழுவதும் வேர்க்க குளிர்காற்றில் அவரின் நெற்றியில் முத்து முத்தாக வேர்த்தது.

அவரின் ஆழ்மனதில், “முகில்” என்ற அவளின் குரலோசை வெகு தூரத்தில் கேட்க யாரோ அவனின் உயிரை பறித்தெடுத்து போவது போன்ற ஒரு வலியில் அவனையும் அறியாமல் அவனின் கண்கள் கலங்கியது.

அவன் தனக்குள் நிகழும் மாற்றங்கள் உணர, ‘யாரோ உயிருக்கு ஆபத்து’ அவனின் மனம் உரைக்க மனத்திரையில் மின்னி மறைந்தது மேகாவின் பளிங்கு முகம்.

தனக்கு பிரித்த பாடலை முணுமுணுத்த திவ்யா கையில் காபியுடன் வந்து சேர ஜன்னலின் அருகே நின்ற தந்தையின் முகம் கண்டு, “அப்பா என்னாச்சு? திடீரென்று ரொம்ப அமைதியாக இருக்கீங்க?” என்றபடியே அவரின் அருகே சென்றாள்.

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நின்றவரின் அருகே சென்ற பிறகுதான் அவரின் முகத்தை உன்னிப்பாக கவனித்தாள்.

அவரின் பார்வை இலக்கில்லா வானத்தை வெறிக்க தன் உணர்வுகளைக் கட்டுபடுத்த அவர் போராடுவது உணர்ந்து துணுக்குற்றாள்.

அந்தநேரம் திவ்யாவின் செல்போன் சிணுங்கிட அவளின் கவனம் அதில் திரும்பியது. திரையில் தெரிந்த மருத்துவமனை நம்பரைப் பார்த்ததும், “ஹலோ” என்றாள்.

“………………….” மறுபக்கம் சொல்லப்பட்ட தகவலைக் கேட்டதும் அவளின் முகம் பேய் அறைந்தது போலானது. அவளையும் அறியாமல் அவளின் பார்வை தந்தையின் முகம் பார்க்க அவளின் மனமோ சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்தது.

தன் கையிலிருந்த போனைப் பார்த்தபடி இடிந்துபோய் சோபாவில் அமர்ந்த திவ்யாவின் கண்கள் கலங்கிட வேகமாக விழிகளைத் துடைத்துவிட்டு மெல்ல தந்தையின் அருகே சென்றாள்.

அவரின் முகம் இறுகிக்கிட அவரைப் பார்க்கவே திவ்யாவிற்கு பயமாக இருந்தது. இந்த நிலையில் அந்த தகவலை சொன்னால் தன் தந்தையின் நிலை என்ற சிந்தனையுடன் மெல்ல அவரின் கரங்களைப் பிடித்து அழுத்தினாள்.

அதில் அவரின் கவனம் கலையாமல் இருக்க, “அப்பா” என்றழைத்த மகளின் குரல்கேட்டு திரும்பியவர் மகள் கலங்கி நிற்பதைக் கண்டு மெல்ல அவளின் கூந்தலை வருடிவிட்டு, “என்னன்னு தெரியலம்மா மனசு படபடன்னு அடிச்சுக்குது, இதுக்கு நீயேன் கலங்கி நிற்கிற? என் பொண்ணு எதுக்கும் கலங்கக்கூடாது” என்றார்.

“அப்பா ஒரு முக்கியமான வேலை மறுபடியும் ஹாஸ்பிட்டல் போகணும்” என்றாள் கரகரத்த குரலை சமன்செய்ய முயன்றபடி.

அவர் மகளைப் புரியாத பார்வை பார்க்க, “நீங்க கூட வாங்கப்பா” என்றவள் காரணத்தை அவரிடம் சொல்லாமல் அழைக்க அவரும் வந்து காரில் ஏறும்போது, “அப்பா நான் காரை ஓட்டுறேன்” என்று டிரைவர் சீட்டில் அமர்ந்தவளை ஒரு பார்வை பார்த்தவர் மெளனமாக தலையசைத்தார்.

இதே கொஞ்சநேரத்திற்கு முன்னால் மகள் அப்படி சொல்லியிருந்தால் கண்டிப்பாக மறுப்பு சொல்லி தானே காரை ஓட்டியிருப்பார், ஆனால் இப்போது அவரின் மனநிலை சரியில்லை என்ற காரணத்தினால் அமைதியாகவே வந்தார்.

அவரின் நடவடிக்கைகள் திவ்யாவின் மனத்தைக் கலங்க வைத்தபோதும் துணிவை வரவழைத்து காரை எடுத்தாள். அடுத்த சில நிமிஷத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.
தன்னுடைய சீட்டில் சாய்ந்து விழிமூடிய முகிலன், “நீ போய் வேலையை முடிச்சிட்டு வாம்மா” என்றார்.

அப்போதும் திடீரென்று கண்ணைக் கூசவைக்கும் மின்னல் வந்து செல்ல பலமான சத்தத்தில் இடி இடிக்க மழை பொழிந்தது . அவர் வெளியே வேடிக்கைப் பார்க்க மகளோ தந்தையிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது ஆயிரம் முறை ஒத்திகை பார்த்தாள்.

“அப்பா அம்மாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சுப்பா, சித்தார்த் மட்டும் உயிருக்கு போராடிட்டு இருக்கிறாரு” முடிந்தவரை உண்மையை விழுங்கிவிட்டு தந்தையின் முகத்தைக் கேள்வியாக நோக்கினாள்.

அவளின் பேச்சில் கவனம் கலைந்து திரும்பிய முகிலன், “அப்போ என் உணர்வுகள் பொய் சொல்லல, என் மெகா என்னைவிட்டு போ..” என்ரவரால் அதற்குமேல் பேச முடியாமல் தொண்டை கரகரத்தது.

அவள் தந்தையின் தோள் சாய்ந்து கதற மகளின் முதுகை ஆறுதலாக வருடிவிட்டு, “தியா பூமிக்கு வந்த எல்லோரும் ஒருநாள் போகவேண்டியவங்கதான். என்ன உங்க அம்மா கொஞ்சம் முன்னாடியே போயிட்டா” என்று மகளை தேற்றிய முகிலனின் கண்கள் கலங்குவதற்கு பதிலாக சிவந்தது.

தான் கலங்கி நின்றால் மகள் தாங்கமாட்டாள் என்று உணர்ந்தாரோ என்னவோ அவரின் கண்கள் கூட கலங்கவில்லை. அவர் மகளை சாமதானம் செய்து மேகாவைப் பார்க்க அழைத்துச் சென்றார். அங்கே படுக்கையில் உயிரற்ற உடலாக கிடந்த தாயைப் பார்த்து, “அம்மா” வாய்விட்டுக் கதறினாள்.

அவரால் இன்னும் மனைவியின் இறப்பை ஏற்றுகொள்ள முடியவில்லை. பல வருடங்களுக்கு பிறகு சந்தித்த மனைவி தன் காதலை வெளிபடுத்திய சிலநொடியில் இறப்பை சந்தித்தால், ‘ஏன் எங்களை மீண்டும் சந்திக்க வெச்சான் இந்த கடவுள்’ தனக்குள் கேள்விகேட்டுக் கொண்டார்.

புடவை முழுவதும் ரத்தகறையுடன் இருந்த மனைவியின் முகத்தில் காயமில்லை. அதனால் மெல்ல அவரின் முகத்தை வருடிவிட்டு, “ஐ லவ் யூ மேகா” என்று நெற்றியில் இதழ்பதித்துவிட்டு, “சித்தார்த் எந்த ரூமில் இருக்கான்” என்று கேட்டார்.

திவ்யா வேகமாக கண்களைத் துடைத்துவிட்டு, “அப்பா அவரை ஐ.சி.யூவில் வெச்சிருக்காங்க” அவள் வேகமாக சொல்ல மகளை அங்கே விட்டுவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.

அவர் செல்லும்போது அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வர, “சார் நான் சித்தார்த் அப்பா இப்போ என் மகன் எப்படி இருக்கான்” என்று பதட்டத்துடன் கேட்டார்.

“அவரை பிழைக்க வெச்சிட்டோம் என்ன இரண்டு மாதம் பேட் ரெஸ்ட் எடுக்கணும், கையில் பிராக்சர் அது குனமாகிட்ட ஒரு பிரச்சனையும் இல்ல” என்று புன்னகைக்க முகிலனின் மனம் நிம்மதியடைந்தது.

“நான் என் மகனை பார்க்கலாமா டாக்டர்” என்று கேட்க, “ஒரு கால்மணிநேரம் அவரை ரூமிற்கு மாத்திருவாங்க அப்புறம் நீங்க போய் பாருங்க” என்றார்.

அவர் சென்றபிறகும் முகிலன் அங்கேயே நின்றிருக்க சித்தார்த்தை ரூமிற்கு மாற்றிவிட்டனர். அதற்குள் திவ்யா அங்கே வர, “நீ சித்து அண்ணாகூட இரும்மா” என்றவர் அங்கிருந்து நகர நினைக்க தந்தையின் கைபிடித்து தடுத்தாள் மகள்.

அவர் அவளைக் கேள்வியாக நோக்கிட, “சித்தார்த்தை என்னோட அண்ணாவாக நான் கட்டாயம் ஏத்துக்கணுமா அப்பா” கண்களின் கண்ணீரைத் தேக்கி நின்ற மகளைப் பொறுமையுடன் ஏறிட்டார்.

சற்றுநேரம் சிந்தித்த தந்தையின் கைகளை பிடித்துகொண்ட மகளோ, “அப்பா நீங்க என்னைத் தவறா நினைக்க வேண்டாப்பா. நான் அண்ணாவா ஏத்துகிட்டா சித்தார்த் என்னை தங்கையா ஏத்துக்குவாரா என்ற தயக்கம் மனசில் இருக்குப்பா” என்றாள்.

அவளின் புரிதலைக் கண்டு மகளின் தலையை வருடிவிட்டு, “ஒரு இழப்பை ஈடுசெய்ய அந்த இடத்திற்கு இன்னொரு உறவு வரணும். அம்மா இல்லன்னா என்னடா தங்கையா இருந்து நீ அவனைக் கொஞ்சம் பார்த்துக்கோ” என்றவர் மற்ற வேலைகளைக் கவனிக்க சென்றார்.

மேகாவின் உடலை வாங்க அனைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டு மகனைக் காண அந்த அறைக்குச் சென்றார். திவ்யா அவனின் அருகே நின்றிருக்க அப்போதுதான் கண்விழித்தான் சித்தார்த்.

அவனின் அருகே இருந்த சேரை இழுத்துபோட்டு அமர்ந்த முகிலன், “சித்து இப்போ எப்படிப்பா இருக்கு” என்றார் கரகரப்பான குரலில்.

“அம்மா” என்றவனின் கண்கள் தானாக கலங்கிட, “உஸ்ஸ் கண்ணா அப்பா இருக்கேன்டா” அவனை சமாதானம் செய்ய முயற்சித்தார் முகிலன்.

“இல்லப்பா எனக்கு அம்மா வேணும்” அவன் குழந்தைபோல அடம்பிடிக்க அவனை தேற்றுவதற்குள் இவருக்குப் போதும் போதுமென்று ஆகவிட அவர் பொறுமை இழக்கும் வேளையில் அருகே வந்தாள் திவ்யா.

“அண்ணா கொஞ்சம் அமைதியா இரு, நீ அழுதா அம்மாவுக்கு பிடிக்காது இல்ல” என்றவனின் கைகளைக் கெட்டியாக பிடித்துக்கொள்ள அந்த ஸ்பரிசத்தில் தாயின் தளிர்விரல் சூட்டை உணர்ந்தானோ என்னவோ அவன் அப்படியே அமைதியாகிவிட்டான்.

அதன்பிறகு அவனையும் அழைத்துக்கொண்டு மேகாவின் உடலை வாங்கி மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போது சேதுராமனுக்கு தகவல் கொடுத்தான் முகிலன். அவர்கள் மூவரும் வீடு செல்லும்போதே அங்கே உறவினர் கூட்டம் கேட்டைத் தாண்டி நின்றிருந்தனர்.

வீட்டின் வாசலில் வந்து இறங்கிய தங்கையின் உடலைப்பார்த்து, “ஐயோ இத்தனை வருடம் கழிச்சு உன்னை இப்படிதான் நான் பார்க்கணுமா?” என்று தலைதலையாக அடித்துக்கொண்டு நின்ற தந்தையை தாங்கிப் பிடித்தனர் அருணும், தருணும்
இந்த இடைப்பட்ட காலத்தில் தாயின்றி தவித்த அனுபவம் இருவருக்குமே உண்டு என்பதால் திவ்யாவின் மனநிலை உணர்ந்து இருவரும் அமைதியாக நின்றனர். அ

நடக்கவேண்டிய சடங்குகள் நடந்து முடிய மனைவிக்கு கொல்லி வைத்தார் முகிலன்.
அதன்பிறகு வந்த நாட்களில் சித்தார்த் கொஞ்சம் நிதர்சனத்தை உணர்ந்து தன்னைக் கவனிக்க இனி யாருமில்லை என்ற நேரத்தில் தங்கை என்று வந்து நின்றாள் திவ்யா. தந்தை சொன்னது போல அவனை மனமார ஒரு அண்ணனாக ஏற்றுக்கொண்டு அவனை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு மாற்றினாள்.

தாயின் இறப்புக்கு பிறகு இவர்களுடன் நாம் இருப்பது சரியா தவறா என்ற குழப்பத்துடன் பலநாட்கள் உறங்காமல் விழித்துகொண்டே இருப்பான்.

திவ்யா என்னதான் அவனைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட போதும் தாயின் இழப்பை அவனால் சீக்கிரம் ஏற்கமுடியாமல் திணறினான்.

மேகாவின் இறப்பிற்கு பிறகு சாதாரணமாக மற்றவருடன் பேசுவதைக்கூட நிறுத்திவிட்டார் முகிலன். சித்தார்த் சில நேரங்களில் பேச முயற்சி செய்ய அவனுடன் மட்டும் ஒரு சில வார்த்தைகள் பேசுவார். திவ்யா தந்தையின் மனமுணர்ந்து ஒதுங்கி இருந்தாள்.

அன்று மாலை கம்பெனிக்கு சென்றுவிட்டு வீடு வந்த முகிலன், “சித்தார்த் – திவ்யா இருவரும் இங்கே வாங்க” என்று ஹாலில் இருந்து குரலொடுக்க இருவரும் ஹாலிற்கு வந்தனர்.

“என்னப்பா விஷயம்” என்று வந்த மகளை ஒரு சோபாவில் அமர சொன்னவர், “சித்தார்த் எங்கே” என்று கேட்கும்போதே அறையிலிருந்து வெளியே வந்தான்.

“ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க முகத்தில் சந்தோஷம் தெரியுதுப்பா” என்றவன் வந்து ஒரு சோபாவில் அமர்ந்தான்.

“சித்தார்த் எனக்கு அப்புறம் உன்னோட தங்கையை நான் உன்னை நம்பி ஒப்படைக்கிறேன் ஒரு அண்ணனா இருந்து அவளுக்கு நீ என்ன செய்ய நினைத்தாலும் செய்” என்று பேச்சைத் தொடங்கியவர்,

“என்னோட சொத்தை சரிபாகமாக பிரிச்சு இருவரின் பெயருக்கும் உயில் எழுதியிருக்கேன்” என்ற உண்மையைக் கேட்டதும் சித்தார்த் முகம் பேய் அறைந்தது போலானது.

“அப்பா இப்போ எதுக்கு இப்படி செஞ்சீங்க” என்றவன் அவரிடம் உரிமையுடன் சண்டைக்கு வர, “மகன் என்று வார்த்தையில் சொல்ல கூடாது. இதுக்கு பிறகும் வாழ்க்கை இருக்குப்பா” என்று அவனுக்கு புரிய வைத்தவர்,

“இனிமேல் திவ்யா உன்னோட பொறுப்பு” என்று அறைக்குச் சென்ற தந்தையைத் திவ்யா கேள்வியாக நோக்கிவிட்டு சித்தார்த்தைப் பார்க்க அவனோ என்ன செய்வது என்று அறியாமல் நின்றிருந்தான்,.

தன் கடமையை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அறைக்குள் நுழைந்த முகிலன் மனைவியின் புகைப்படத்தைக் கையில் வைத்து வருடியபடி அமர்ந்திருந்தார்.

இரவு உணவு வேலைக்கு தந்தை வெளியே வரவில்லை என்று அவரை அழைக்க தந்தையின் அறைக்குள் நுழைந்த திவ்யா, “அண்ணா” என்று அலறிட அவளின் சத்தம் கேட்டு ஓடிவந்த சித்தார்த் அதிர்ந்து நின்றான்.

error: Content is protected !!