குறும்பு பார்வையிலே – 11
பார்வதி பேசிக் கொண்டிருந்ததைக் கூர்மையாகப் பார்த்தாள் ஸ்ருதி.
பாரவ்தி பட்டென்று கூறிவிட, சிறிதும் தயக்கமுமின்றி ஸ்ருதி தன் கேள்வியை எழுப்பினாள் ஸ்ருதி.
“அம்மா, நான் வேறு யாரு கூடவோவா போக போறேன். நம்ம ஆகாஷ் தானே?” என்று எளிதாகக் கேட்டாள்.
அவள் கேட்ட கேள்வியில், முதலில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது கார்த்திக் தான். ‘திருமணம் கூட முடியாமல் ஆகாஷ் எப்படி நம்ம ஆகாஷாக முடியும்?’ என்று ஸ்ருதியை தன் நெற்றி சுருக்கி பார்த்தான் கார்த்திக்.
தன் மகளின் பேச்சில் ஈஸ்வரன் உதடுகள் மடிந்து கொண்டன. மெல்லிய புன்னகையும் எட்டிப் பார்த்தது.
‘சின்ன பெண். இயல்பாகப் பேசுகிறாள்.’ என்ற ஜாடையோடு தன் மனைவியைப் பார்த்தார் ஈஸ்வரன்.
‘சின்ன பெண் தான். இயல்பாகத்தான் பேசுகிறாள். ஆனால்…’ என்று சிந்தனையில் ஆழ்ந்தார் பார்வதி.
“என்ன அம்மா யோசிக்கிறீங்க? என் வாழ்க்கையையே ஒப்படைக்க போறீங்க? இது ஜஸ்ட் போட்டோ ஷூட் தானே?” என்று ஸ்ருதி கேட்க, பார்வதி சற்று முன் வைத்த வாதம் எல்லாம் தவிடுபொடியாகிக் கொண்டிருந்தது.
“வெளிநாடு போறதை பற்றி யோசிக்கிறீங்களா? வெளிநாடு ஒரு விஷயமா? நான் படிச்சதும் அங்க தான். கிளைண்ட்ஸ் டீலிங்கும் அங்க தான். அத்தனை ப்ராஜெக்ட் மீட்டிங்கும் அங்க தான். இது ஜஸ்ட் ஒன் வீக் ட்ரிப்.” என்று ஸ்ருதி அசட்டையாக கூற, பார்வதி மௌனித்துக் கொண்டார்.
மௌனித்துக் கொள்ள வேண்டும் என்பது அவர் எண்ணமில்லை. ஆனால், ‘எப்படிச் சொல்வது? என்ன சொல்வது?’ என்று தெரியாமல், அவர் எதுவும் பேசவில்லை.
‘இது நம்ம ஸ்ருதி தானா?’ என்று கார்த்திக் அவளை விசித்திரமாக பார்த்தான். ஸ்ருதி, அவள் அறையை நோக்கி உற்சாகமாகத் துள்ளிக் குதித்துச் செல்ல, “என்ன கார்த்திக், உன் தோழியை விசித்திரமா பாக்குற?” என்று ஈஸ்வரன் கார்த்திக்கிடம் கேட்டார்.
கார்த்திக் தர்மசங்கடமாகச் சிரிக்க, “பசங்க சட்டுன்னு பொண்ணு வீட்டோட ஒட்டிக்க மாட்டாங்க. ஆனால், பொண்ணு மேல உரிமை எடுத்துப்பாங்க. பொண்ணுங்க வாழப்போற வீட்டில் பல குறைகள் இருந்தாலும் பொருந்தி போய்டுவாங்க. அது, வளர்ப்பில் வருதா, இல்லை இயல்பா அப்படி தானான்னு தெரியலை.” என்று கார்த்திக்கின் சிரிப்புக்குப் பின் மறைந்திருக்கும் சந்தேகத்திற்குப் பதில் கூறுவது போல் பெருமூச்சு விட்டார் பார்வதி.
“அது நல்லது தானே?” என்று ஈஸ்வர் கேட்க, “கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தா தான் நல்லது. கல்யாணத்துக்கு முன்னாடியே அவ்வளவு ஒட்டுதல் தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன்.” என்று கூறிக்கொண்டு தன் வேலையில் மூழ்கினார் பாரவ்தி.
கார்த்திக் வேலை சம்பந்தமாக ஈஸ்வரனிடம் பேச வேண்டியதைப் பேசிவிட்டு, அவர்கள் வீட்டுக்குச் சென்றான்.
பார்வதியின் முகம் சிந்தனை ரேகைகளை வெளிக்காட்ட, “என்ன யோசனை பார்வதி?” என்று கேட்டார் ஈஸ்வரன்.
“பையனை பெத்த அவங்க யோசிக்க மாட்டாங்க. அது தான் நான் யோசிக்கிறேன்.” என்று பாரவ்தி சலிப்பாகக் கூறினார்.
“பெரிய இடம் பார்வதி.” என்று ஈஸ்வரன் கூற, “அது தாங்க இன்னும் பயமா இருக்கு.” என்று பார்வதி கூற, ஈஸ்வரனின் நெற்றியில் சிந்தனை சுருக்கங்கள்.
தன் கணவன் மௌனிக்க, “இவ்வளவு செல்வாக்கான இடம் வேணும்ன்னு நமக்கென்ன அவசியம்? நம்ம கிட்ட இல்லாத பணமா?” என்று பார்வதி கழுத்தை நொடித்துக் கொண்டார்.
“பையன் விருப்பப்பட்டது மட்டுமில்லை. ஸ்ருதிக்கும் அந்த பையனை பிடிச்சிருக்கு” என்று ஈஸ்வரன் நிதானமாகக் கூற, “நானும் அதனால் தான் சம்மதம் சொன்னேன். ஆனால்…” என்று பார்வதி இழுக்க, ‘என்ன?’ என்பது போல் தன் மனைவியைப் பார்த்தார்.
“வெளிநாட்டில் ப்ரீ வெட்டிங் ஷூட் எல்லாம் ரொம்ப அதிகம்.” என்று மனத்தாங்கலாகக் கூறினார் பார்வதி.
“காலத்தின் காட்டாயம் பார்வதி. நாம தான் புரிஞ்சிக்கணும்.” என்று ஈஸ்வரன் கூற, பார்வதியின் முகம் தெளியவில்லை.
“சரி… உனக்கு பிடிக்கலைன்னா, ஸ்ருதி கிட்ட ப்ரீ வெடிங் ஷூட் எல்லாம் வேண்டாமுன்னு சொல்லிருவோம். மாப்பிள்ளை வீட்டிலும் சொல்லிரலாம்.” என்று ஈஸ்வரன் கூற, “இல்லைங்க… அப்படி சட்டுனு மறுக்க முடியாது. நம்ம பொண்ணு அவங்க வீட்டில் தான் வாழப்போகணும். பிரச்சனை எதுக்கு. ஸ்ருதி மனசும் சங்கடப்படும்.” என்று பார்வதி யோசனையோடு கூறினார்.
“நீயும் கூட போ. நான் இங்க எல்லாம் பாத்துக்குறேன்.” என்று ஈஸ்வரன் கூற,”இல்லைங்க, என்னால முடியாது. அதை அப்ப பாப்போம்.” என்று கூறி சமையலறை நோக்கிச் சென்றார் பார்வதி.
அதே நேரம் ஆகாஷ் அவன் அறைக்குள் திரைப்படப் பாடலை முணுமுணுத்தபடி உல்லாசமாக நுழைந்தான்.
கீதா திரும்பி அவனைப் பார்த்துவிட்டு, தன் படிப்பைத் தொடர்ந்தாள்.
தன் தங்கையை சொடக்கிட்டு அழைத்தான்.
‘என்ன திமிர்?’ என்று அவனை நோக்கித் திரும்பினாள் கீதா.
“இன்னும் கொஞ்ச நாள் தான் நீ என் ரூமுக்கு வர முடியும். அப்புறம் முடியாது.” என்று வம்பிழுத்தான் ஆகாஷ்.
“அண்ணா. கல்யாணம் பேசிட்டு வந்திருக்காங்க. அவ்வுளவு தான். இன்னும் நிச்சயதார்த்தம் கூட முடியலை. அதுக்குள்ள நீ ரொம்ப ஓவரா போற.” என்று கீதா கடுப்பாகக் கூறினாள்.
“ஹா… ஹா… தங்கச்சி நீ சின்ன பொண்ணு. நாங்க இடையினம் தாண்டி, வல்லினம் நோக்கி பயணிச்சிக்கிட்டு இருக்கோம். இதெல்லாம் உனக்குப் புரியாது.” என்று கெத்தாகக் கூறினான் ஆகாஷ்.
தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் கீதா.
அவள் சிரிப்பின் அர்த்தம் புரியாமல், அவன் அவளைப் பார்க்க, “எனக்கு தெரியாதா? இந்த விஷயத்தில் நீ தான் எனக்கு தம்பி. தம்பி… நீ இன்னும் வளரனும். நீ இடையினம் ஸ்டேஜ்க்கு ஜஸ்ட் என்டரிங். அப்படியே துள்ளி குதிக்குற.” என்று கீதா கூற, அவன் தன் தங்கையை யோசனையாகப் பார்த்தான்.
“அம்மா செம்ம காண்டில் இருக்காங்க. பாட்டி, வச்சி நீ உன் காரியத்தை சாதிச்சிகிட்டன்னு.” என்று கீதா வீட்டின் நிலைமையை எடுத்துரைக்க, ஆகாஷிற்கு தெரிந்திருந்தாலும், தங்கையின் சொல் அதன் தீவிரத்தை உணர்த்தியது.
“இதுல உனக்கு ப்ரீ வெட்டிங் ஷூட் வெளிநாட்டில் கேட்குது?” என்று கீதா புருவம் உயர்த்தினாள்.
“ப்ரீ வெட்டிங் ஷூட் எல்லாம் என் பிளான் இல்லை. பாட்டி பிளான்.” என்று பதறினான் ஆகாஷ்.
“பொண்ணு செலெக்ஷன் மட்டும் தான் நான்.” என்று ஆகாஷ் கூற, “எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ ப்ரீ வெட்டிங் ஷூட்க்கு எங்க போறியா, நானும் அங்க வருவேன்.” என்று கீதா உறுதியாக கூறினாள்.
“அது தானே பார்த்தேன். இது தான் உன் பிளான்? சும்மா காலேஜ் லீவு போடலாமுன்னு பார்த்த, அவ்வுளவு தான்.” என்று ஆகாஷ் தங்கையை மிரட்டினான்.
“ஆ… ஏன் சொல்ல மாட்ட, நீ தனியா ஜாலியா போக இது என்ன ஹனிமூன் ட்ரிப்பா?” என்று கீதா சட்டம் பேச, “நான் பாட்டி, தாத்தாவை கூட்டிட்டு போறேன். நீ வேண்டாம்.” என்று மறுப்பு தெரிவித்தான் ஆகாஷ்.
“அஸ்க்கு, புஸுக்கு ஆசை தோசை ஆமை வடை. ஏன் பாட்டி, தாத்தாவை கூப்பிடுற. கிராமத்தில் ஒன்னு விட்ட கொள்ளு பாட்டி இருப்பாங்க, அவங்களை கூட்டிட்டு போயேன்.” என்று கீதா உதட்டைச் சுழித்தாள்.
“அவங்க வந்தா கூட்டி போக நான் ரெடி.” என்று கூறி கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கீதா அருகே இருந்த நாற்காலியில் கால்களை நீட்டினான் ஆகாஷ்.
“ம்… அப்பத்தான் அவங்க நடக்க முடியாதுனு பாதி தூரத்தில் உட்காந்திருவாங்க. நீங்க ஜாலியா ஊரு சுத்தலாம்.” என்று கீதா சந்தேகம் கேட்க, “நீ படிக்கிற வேலை தவிர, மத்த வேலை எல்லாம் நல்லா பாக்குற.” என்று ஆகாஷ் அவளை திசை திருப்பினான்.
“நான் உன் கூட வருவேன். டாட்.” என்று சட்டவட்டமாக அறிவித்தாள் கீதா.
ஆகாஷ் மேலும் பேசுமுன் அவன் அலைபேசி ஒலித்தது.
ஸ்ருதி அழைத்திருக்க, அவன் தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
“ஆகாஷ்…” அவள் குரல் மென்மையாக அழைத்தது.
“சாரி… ராங் நம்பர்ன்னு நினைக்கிறேன்.” என்று அவன் கூற, “ஆகாஷ்…” என்று அவள் குரல் ஓங்கி ஒலித்தது.
“இப்ப இது நம்ம டாலி தான்.” என்று கூற, ஸ்ருதியின் முகத்தில் மெல்லிய புன்னகை.
“சரி…குறும்பான்னு கூப்பிடு. அப்புறம் பேசுவோம்.” என்று அவன் கூற, “எப்பவும் அப்படி கூப்பிட முடியாது.” என்று அவள் சிணுங்கினாள்.
“ஹே… டாலி… நான் உன்னை கூப்பிடறேன்ல?” என்று அவன் கேள்வியாக நிறுத்த, “நான் முக்கியமான விஷயம் பேசக் கூப்பிட்டேன்.” என்று ஸ்ருதி கூற, “நான் பேசுறது அதை விட முக்கியம். நீ என்னை கூப்பிடறதை விட வேற என்ன முக்கியமான விஷயம் இந்த உலகத்தில் இருக்க முடியும் டாலி?” என்று ஆகாஷ் சந்தேகம் கேட்டான்.
ஸ்ருதி மௌனிக்க,”சரி சொல்லு. நம்ம டீலிங்கை நேரில் வச்சிக்கலாம். நம்ம ஸ்டைலில்” என்று அவன் குறும்பாகக் கூறினான்.
குறும்பை ரசிக்கும் மனநிலையை ஒதுக்கி, “நிச்சயதார்த்த தேதி, கல்யாண தேதி எல்லாம் முடிவு பண்ணிட்டாங்க.” ஸ்ருதியின் குரலில் சற்று வருத்தம் இருந்தது.
“ஏன் டாலி அதை இவ்வுளவு வருத்தமா சொல்லுற? உனக்கு எதுவும் வசதி இல்லையா?” என்று அக்கறையாகக் கேட்டான் ஆகாஷ்.
“இல்லை ரொம்ப நாள் இடைவெளி இருக்கு. நமக்குச் சரிப்பட்டு வராது தானே டாலி?” என்று ஏக்கமாகவும் கேட்டான்.
“ம்… க்கூம்… நீங்க என் கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலை.” என்று அவள் கூற, “இது தான் என் டாலிக்கு கோபமா? எனக்கும் தெரியாது. எல்லாம் அம்மா, பாட்டி வேலை தான் போல.” என்று ஆகாஷ் கூற, “ஓ…” என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டாள் ஸ்ருதி.
“நம்பலையா? இது விளையாட்டில்லை. உண்மை தான்.” என்று கூற, “நம்புறேன்… நம்புறேன்… உங்களை நம்பாமல் எப்படி?” என்று அவள் கூற, “டாலி குரலில் அவ்வுளவு உற்சாகம் இல்லையே?” என்று கேட்டான் ஆகாஷ்.
‘குறும்பா… என்ன கேலி பேசினாலும் எல்லாம் கண்டுபிடித்துவிடுவான். இப்படி தான் அவன் பிசினெஸ்ஸையும் வெற்றிகரமா கையாளுவான் போல?’ என்ற எண்ணத்தோடு, மௌனித்தாள் ஸ்ருதி.
“ஸ்ருதி எதுவும் பிரச்சனையா?” என்று அழுத்தமாகக் கேட்டான் ஆகாஷ்.
“அது… அது…” என்று அவள் தடுமாற, “என்கிட்டே என்ன தயக்கம் டாலி?” என்று அவன் விடாமல் கேட்டான்.
“ப்ரீ வெட்டிங் ஷூட்டுக்கு வெளி நாடு வரைக்கும் போகணுமா? அம்மா யோசிக்கிறாங்க.” என்று அவள் இழுத்தாள்.
“ம்… சரி தான். பாட்டி, அம்மா முடிவு தான் ஸ்ருதி. நான் பேசுறேன்.” என்று அவன் கூற, “தேங்க்ஸ்.” என்று ஒற்றை வார்த்தையில் முடித்தாள் ஸ்ருதி.
“கேளு ஸ்ருதி.” என்று அவன் கேட்க, “என்ன?” என்று சந்தேகமாகக் கேட்டாள் ஸ்ருதி.
“இன்னும் ஏதோ கேட்கணும்ன்னு நினைக்கிற. ஆனால், உன் பேச்சை பாதியிலே முடிச்சிட்டியே. ” என்று அவன் நேரடியாக கேட்டான்.
“குறும்பா!” அவள் உதடுகள் மெல்லமாக உச்சரித்தது.
“எனக்கு கேட்கலை டாலி.” அவன் குரல் ஆசையாக ஒலித்தது.
“அட… நான் என்ன நினைக்கிறேன்னு மொபைல்ல பேசினா கூட தெரியுமா?” என்று தான் கேட்க நினைத்ததை தவிர்த்து பேச்சை வளர்த்தாள் ஸ்ருதி.
“உன் பேச்சில் நான் எல்லாம் கண்டுபிடிச்சிருவேன்.” என்று அவன் பேச்சை வளர்க்காமல் முடிக்க, “இல்லை உங்களுக்குக் கோபம் வந்து நான் பார்த்ததே இல்லையே?” என்று அவள் கேட்க, “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் ஆகாஷ்.
“என்ன சிரிப்பு?” என்று அவள் வெடுக்கென்று கேட்க, “உன்னை மாதிரி பட்டென்று கோபம் வராது. ஆனால், கோபம் வரும். நானும் சராசரி மனுஷன் தானே?” என்று அவன் கூற, சண்டைக்கு தயாரானாள் ஸ்ருதி.
“இப்ப என்ன சொல்ல வரீங்க? நான் அடிக்கடி கோபப்படுறேன்னு சொல்றீங்களா?” என்று அவள் கேட்க, “நீ கோபப்பட்டா என் தண்டனை வேற மாதிரி இருக்கும் டாலி.” என்று அவன் கூற, அன்று அவன் தடம் பதித்த இடத்தை எண்ணி அவள் முகம் குங்குமமாகச் சிவந்தது.
“ஆகாஷ்…” என்று அவள் தாயின் குரல் கேட்க, “நான் அப்புறம் கூப்பிடுறேன் ஸ்ருதி.” என்று கூறிக்கொண்டு படிறங்கி அனைவரும் அமர்ந்திருக்கும் ஹாலுக்கு சென்று சோபாவில் அமர்ந்தான்.
“உங்க பிரிவெட்டிங் ஷூட் எங்க வச்சிக்கலாம்? மால்தீவ்ஸ் போறீங்களா? இல்லை பாலி போறீங்களா? இல்லை சன்டோரினி போறீங்களா? சுவிஸ் போறீங்களா?” என்று ஆகாஷின் தந்தை சங்கரன் அடுக்கி கொண்டே போக, ஆகாஷ் மௌனமாக அமர்ந்திருந்தான்.
“இல்லை அப்பா… ஸ்ருதி வீட்ல அவ்வளவு தூரம்ன்னா யோசிப்பாங்கன்னு நினைக்கிறேன்.” என்று ஆகாஷ் இழுக்க, “அது சரி… தகுதி பார்த்து பொண்ணு எடுக்கணும்.” என்று சுமதி நக்கலாகக் கூறினார்.
ஆகாஷின் முகம் வாடியது.
தன் சகோதரனின் முகவாட்டம் பிடிக்காமல், “அம்மா…” என்று கீதா தன் தாயிடம் சென்று அமர்ந்தாள்.
“நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். ஒரு சாதாரண குடும்ப கல்யாணத்தில் கூட, ப்ரீ வெட்டிங் போட்டோ எடுத்து அங்கங்க போடுறாங்க. நாம என்ன மஹாபலிபுரம், பாண்டிச்சேரியா போக முடியும்?” என்று சுமதி கேள்வியாக நிறுத்தினார்.
“எல்லாரும் ஊட்டி, கேரளாவாது போறாங்க. ஒரு சாதாரண பிசினெஸ் மேன் வீட்ல கூட, குலு மணாலி, டார்ஜெலிங் போறாங்க. நம்ம ரேஞ்சுக்கு வெளிநாட்டுக்கு போகணும்.” என்று தன் மனைவியின் பேச்சை தொடர்ந்து, முற்று புள்ளி வைத்தார் சங்கரன்.
“அப்பா… என் கல்யாணத்துக்கு ப்ரீ வெட்டிங் ஷூட் போறோமா? இல்லை உங்க ஸ்டேட்ஸ்க்கு போறோமா?” என்று ஆகாஷ் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“உன் கல்யாணத்தில் தானே நம்ம ஸ்டேட்டஸ் அடங்கி இருக்கு.” என்று சங்கரன் நிறுத்தி நிதானமாகக் கூறினார்.
“நம்ம சொந்தத்தில் பொண்ணு எடுத்திருந்தா, நம்மளை நம்பி அனுப்பிருப்பாங்க. இவங்க வேற தானே?” என்று சுமதி மீண்டும் தொடங்க, “அம்மா… ஸ்ருதி வருவா. நான் பேசிக்குறேன்.” என்று உறுதியாகக் கூறிவிட்டு, அவன் அறை நோக்கிச் சென்றான் ஆகாஷ்.
அப்பொழுது மீண்டும் ஸ்ருதி அலைபேசியில் அழைக்க, ‘ஸ்ருதியிடம் என்ன சொல்வது?’ என்ற கேள்வியோடு அவள் அழைப்பை எடுக்காமல் சிந்தனையில் ஆழ்ந்தான் ஆகாஷ்.
‘இப்படி காதலிக்கும், தன் வீடு ஆளுங்களுக்கும் இடையில் தவிப்பது தான் இடையினமோ?’ என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.
குறும்புகள் தொடரும்…