sontham – 26

images (75)

அத்தியாயம் – 26

மாலை சொன்ன நேரத்திற்கு அனைவரும் வந்துவிடவே, “வாங்க வாங்க” என்று வந்தவர்களை புன்னகை முகமாகவே வரவேற்றாள் மதி.

“என்னம்மா வாசலில் நின்னுட்டு இருந்த? இன்னும் மாப்பிள்ளை வரவில்லையா?” என்று கேட்டார் தமயந்தி.

“இப்போதான் போன் பண்ணினாரும்மா. கொஞ்சம் வேலை அத்தை மாமாவை உட்கார வை நான் வந்துட்டே இருக்கேன்னு சொன்னாரு” என்று அவள் வாயில் வந்த பொய்யை சொல்லி சமாளிக்கவே பெற்றவர்களின் முகம் மலர்ந்தது.

சோபாவில் தன் மகளின் அருகில் அமர்ந்த தாமோதரன், “ஸ்ரீ நீ சந்தோசமாக இருக்கிற இல்ல?” கவலையோடு கேட்டார்.

“அப்பா உங்க மாப்பிள்ளை என்னை ரொம்ப நல்லா வைச்சிருக்கிறாரு!” என்றவள் எழுந்து செல்லவே அவரும் தன் மனைவியோடு பேசினார். அப்போது வீட்டிற்கு வந்த யுகேந்திரன், தனம் இருவரும் சேரவே அந்த இடம் கலகலப்பானது.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கவே மதி புது உடையை அணிந்துகொண்டு ரெடியாகும்போது வீட்டின் வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம்கேட்டு அறையிளிருந்தபடி வெளியே பார்த்தாள். கௌதம் தான் தன் கையில் பார்சலோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

“என்ன கௌதம் இன்னைக்கு மதிக்கு பிறந்தநாள் நீ லீவ் எடுத்து இருக்கலாம் இல்ல” என்று தனம் கேட்கவே, “இல்லம்மா கொஞ்சம் வேலை அதுதான் கிளம்பிட்டேன். அவகிட்ட நான் போன் பண்ணி சொன்னேனே. அவ சொல்லவே இல்லையா?” என்று மதியைப் போலவே கேட்டதும் பெரியவர்களின் முகம் தானாக மலர்ந்தது.

தன் பேத்தி சொன்ன பதிலையே அவனும் சொல்லவே, “கௌதம் உன்னோடு கொஞ்சம் பேசணும்” என்றார் ராஜலட்சுமி.

அவன் அவரைக் கேள்வியாக நோக்கிவன், “வாங்க பாட்டி மாடிக்குப்போய் பேசலாம்” என்று சொல்லவே அவரும் எழுந்து கௌதமோடு சென்றார்.

அவனின் கையைப்பிடித்து அழுத்தம்கொடுத்து, “நீ மதுவை காதலிச்சது தெரியாமல் குட்டையைக் குழப்பியது நான்தான். அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்து பேசி இருந்தால் இந்த குழப்பமே வந்திருக்காதுன்னு நான் சொல்ல மாட்டேன். மதுவுக்கு இந்த பூலோகத்தில் வேறு சில கடமைகள் எல்லாம் இருக்குன்னு கொஞ்சநாளுக்கு முன்னாடிதான் தெரிஞ்சிகிட்டேன். அவ அவளோட கடமையைச் செய்யும்போது யாரும் தடையாக இருக்கக்கூடாதுன்னு தான் மதியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேன். அதுக்காக என்னை மன்னிச்சிரு கௌதம்” என்ற பாட்டியின் மன்னிப்பில் அவன் பதறிவிட்டான்.

“ஐயோ பாட்டி என்ன நீங்க என்னிடம் இப்படி மன்னிப்பு கேட்கிறீங்க. தேவை இல்லாமல் எல்லாத்தையும் போட்டு குழப்பிகிறீங்க. நான் அவளை உங்களைவிட நல்ல பார்த்துக்குவேன். என்னை நம்புங்க பாட்டி” என்றான் உறுதியோடு.

அவனின் பேச்சில் அவரின் முகம் மலரவே, “நீங்க இருவரும் சந்தோசமாக இருக்கீங்கன்னு வீட்டிற்கு வந்ததுமே தெரிஞ்சிகிட்டேன்” என்றவர் சொல்லவே, “அப்போ சந்தோசமா இருங்க பாட்டி” என்று சொல்லி அவரை அழைத்துக்கொண்டு கீழே சென்றான்.

அங்கே ஏற்பாடுகள் தயாராக இருக்கவே, “ஒரு பத்து நிமிஷம் வந்துவிடுகிறேன்” என்று பொதுவாக சொல்லிவிட்டு அறைக்குள் சென்ற கௌதம் தன் யூனிபார்ம்மை மாற்றிவிட்டு கேசுலான உடையில் வெளியே வந்தான்.

அதற்குள் அசோக், காயத்ரியும் வந்துவிடவே மதி கேக் வெட்டிட கௌதம் ஒப்புக்கு அவளின் அருகே நின்றவனுக்கு அவள் கேக் ஊட்டிவிட முகம் மாறாமல் அதை சாப்பிட்டு அவளுக்கும் ஓட்டிவிட்டான்.

மதிக்கு தாமோதரன் – தமயந்தி இருவரும் அவளுக்கு நெக்லஸ் கொடுக்க, யுகேந்திரனும் – தனலட்சுமியும் தங்கமோதிரம் கொடுத்து வாழ்த்தினர்.

அசோக் – காயத்ரி இருவரும் அவளுக்கு கிப்ட் கொடுக்கவே, “கௌதம் நீ எதுவும் உன் பொண்டாட்டிக்கு கொடுக்கலையா?” என்று கிண்டலாகக் கேட்டார் ராஜலட்சுமி.

கௌதம் சிரித்தபடி ஒரு பார்சலை அவளிடம் கொடுக்கவே, “தேங்க்ஸ்” என்றபடி வாங்கிய மதி வேகமாக அதை பிரித்துப் பார்த்தாள்.

அதில் அழகான மரகத பச்சை நிறத்தில் அழகான வேலைபாடுகள் உடைய பட்டுப்புடவை இருந்தது. ஆங்காகே கற்கள் பதித்து அழகுற இருந்த புடவை பார்க்க சாதாரணமாகவே யாரின் கண்களையும் உறுத்தாத வேலைபாடுகளோடு இருந்தது.

அதை பார்த்த மறுநிமிடமே மற்றவர்களின் பார்வை மதியின் மீது படிந்தது. மதிக்கு எளிமையாக உடை உடுத்தும் பழக்கம் இல்லை என்பதால் கௌதமை தூக்கி எரிந்து பேசிவிடுவாளோ என்ற பதட்டத்துடன் இருந்தனர்.

“எனக்கு இப்படி துணிபோட்டு பழக்கமே இல்ல கௌதம். இந்த புடவையை நீங்க எனக்கு கொடுத்தற்கு கொடுக்காமல் இருந்திருக்கலாம்” என்று சொன்னவள் அதை தூக்கி சோபாவில் வீசி எறிந்தாள்.

கௌதம் சிரித்தபடி, “நான் உனக்கு வாங்கிட்டு வந்தேன்னு சொல்லவே இல்லையே மதி” என்றவன் சொல்லவே அங்கிருந்த அனைவரும் அவனை கேள்வியாக நோக்கினர்.

“அப்புறம் எதற்கு என் கையில் அதை கொடுத்தீங்க” என்று அவள் கோபத்துடன் கேட்டாள்.

“நான் என் மதுவுக்கு வாங்கிட்டு வந்தது” என்றவுடன் அவளின் முகம் கோபத்தில் சிவக்கவே, “அவ இறந்துட்ட இல்ல” என்று எரிச்சலோடு கூறினாள்.

மறுப்பாக தலையசைத்த கௌதம், “உன்னைப் பார்க்கும்போது மது இறந்துவிட்டால் என்ற எண்ணமே எனக்கு வரல. அதுதான் அவளுக்கு பிடிச்ச மாதிரி புடவையை அவ விரும்பி கேட்ட டிசைனில் தேடி வாங்கிட்டு வந்தேன். இதை கட்டுவதற்கு விருப்பம் இருந்தால் கட்டிக்கோ நான் மறுப்பு சொல்ல மாட்டேன். விருப்பம் இல்லன்னா பார்சலைப் பிரிக்காமல் படுக்கையின் மீது போட்டு வை நான் வந்து எடுத்துக்கறேன்” என்று முகத்தில் அடித்தாற்போல பதில் கொடுத்துவிட்டு நகர நினைத்தவனை மதியின் பேச்சு தடுத்தது.

“நீங்க என் புருஷன் என்னை மட்டும்தான் நினைக்கணும். இன்னொரு முறை மது பற்றி நீங்க பேசவும் கூடாது, நினைக்கவும் கூடாது” என்று அவள் அழுத்தம் திருத்தமாக சொல்லவே அவளின் அருகே வந்து நின்றான் கௌதம்.

“என்ன சொன்ன இன்னொரு முறை சொல்லு” என்று கௌதம் அவளை நேருக்கு நேர் பார்த்தபடியே கேட்க அதற்கு பயப்படாமல் அவள் சொன்னதையே சொல்ல அடுத்தநொடி அவனின் கரங்கள் அவளைப் பதம் பார்த்தது.

அவன் அடித்த அடியில் அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் பதறிவிடவே, “இங்கே  பாரு மதுவை நினைக்கக்கூடாதுன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல. இன்னொரு முறை மதியை மட்டும் நினைக்கணும்னு உன் வாயில் வார்த்தை வந்துச்சு அவ்வளவுதான்” என்று விரல்நீட்டி எச்சரித்துவிட்டு அவன் வீட்டைவிட்டு வெளியேறினான்.

அடுத்த நிமிடமே புருஷன் – பொண்டாட்டி சண்டையில் நம்ம தலையிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவரவர் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அனைவரும் சென்றபிறகு சோபாவில் வந்து அமர்ந்த மதி அந்த புடவையை கையில் எடுத்து பார்த்தாள்.

அவன் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் காதில் ரீங்காரமிடவே, ‘இப்போ இதை கட்டலாமா? இல்ல வேண்டாமா?’ என்ற சிந்தனையோடு வெகுநேரம் அமர்ந்திருந்தாள்.

இறுதியாக ஒரு முடிவெடுத்த மது தன் அறைக்கு சென்று அந்த புடவையை கட்டிகொண்டு கண்ணாடி முன் நின்று நெற்றியில் குங்குமம் வைக்கும்போது அவளின் கன்னங்களில் அவனின் விரல்தடம் பதிந்து இருப்பதை கண்டாள்.

பிறகு நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைத்துவிட்டு சிறிதும் யோசிக்காமல் நெற்றியில் வைத்திருந்த பொட்டிற்கு மேல் குங்குமம் வைத்துவிட்டு கண்ணாடியில் அவளின் முகம் பார்த்தாள்.

பின்னலிட்ட ஜடையில் மல்லிகை பூச்சரம் அலங்கரிக்க நெற்றி வகிட்டில் சுமங்கலிகளின் அடையாளமாக வைத்திருந்த குங்குமம் அவளுக்கு தனி அழகாய் கொடுக்க நெற்றியில் சற்றுமுன் வைத்த குங்குமம் அவளுக்கு சந்தோஷத்தை பரிசளித்தது.

அவளின் உடலை தழுவியிருந்த சேலை அவளின் அழகை இன்னும் பன்மடங்காக அதிகரிப்பதை உணர்ந்து, ‘ம்ம் நல்ல ரசனைக்காரன் தான்’ என்று நினைத்தவள் அவன் வரும் முன்னே உடையை மாற்றிவிட முடிவெடுத்தாள்.

அதற்குமுன் அவள் எண்ணத்தின் நாயகனே கதவைத் திறந்துகொண்டு அறைக்குள் நுழைந்தான். அவனை கண்ணாடி வழியாக பார்த்த ஸ்ரீமதி சட்டென்று திரும்பி கௌதமை பார்த்தாள். அவன் அவளைப் பார்த்தபடியே தடுமாறியவண்ணம் அவளின் அருகே வந்தான்.

அவனின் மீது மதுவின் வாடை வீசவே, “கௌதம் குடிச்சீங்களா?” என்று கேட்டாள்.

அதே நேரத்தில் அவளை இமைக்காமல் பார்த்த கௌதமிற்கு அவளின் அலங்காரம் கண்டு மதுவே தன் முன்னே நிற்பதைப்போல உணர்ந்தான். மதியின் மீது தன் உயிர் காதலி மதுவின் வாசனை வீசுவதை உணர்ந்து அவளை நெருங்கிய கௌதம் கண்ணில் விழுந்தது அவள் நெற்றியில் கீற்றாக வைத்திருந்த குங்குமம். அடுத்த நொடியே, “மது” என்ற அழைப்புடன் அவளை இறுக்கியணைத்தான் கௌதம்.

எதிர்பார்க்காத நேரத்தில் அவன் இருக்கியணைத்ததில் தடுமாறியவளின் மேனியில் கௌதமின் கரங்கள் எல்லை மீறியது. அவளோ அவனைத் தடுக்க முடியாமல் போராடியளை முற்றிலும் தன்னவளாக மாற்றியபிறகு அவளின் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தில் தன் இதழைப் பதித்தவன், “ஐ லவ் யூ மது” என்றவனின் விழிகளில் உறக்கம் தழுவியது. 

அவன் உறங்கியபிறகு கண்ணைத் திறந்து அவனை காதலோடு பார்த்தவளின் கரங்கள் அவனின் அலையலையான கேசத்தை கோதிவிட்டவளுக்கு அவனின் மீது கடுகளவு கூட கோபம் வரவில்லை.

வெகுநேரம் சென்று போன் அடிக்கும் சத்தம்கேட்டு கண்விழித்த மதியை இறுக்கியணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கௌதம். அவனின் கரங்களை விலக்கிவிட்டு எழுந்த மதிக்கு நடந்தது புரியவே, ‘நிஜமாவே ரொம்ப குழம்பி போயிருக்கிறாரா? இது இவரோட இயல்பே இல்லையே?’ என்ற எண்ணத்துடன் அவனை பார்த்தாள்.

அவளின் செல்போன் விடாமல் அடித்துக்கொண்டே இருக்கவே, “ஹலோ” என்றதும் மறுப்பக்கம், “மேடம் இங்கே ஒருத்தங்களுக்கு ஆபரேசன் செய்ய பிளட் பத்தவில்லை. அந்த பெசண்ட் உங்க பிளட் குரூப் தான். நீங்க கொஞ்சம் வந்து பிளட் கொடுத்தால் அவரோட உயிரை காப்பாற்ற முடியும்” என்று சொல்லவே வேகமாக எழுந்து குளித்துவிட்டு புடவையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

சற்று நேரத்தில் மெயின் ரோட்டிற்கு சென்ற மதி ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு சென்று ஒரு உயிரைக் காப்பாற்ற பிளட் கொடுத்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வழியில் ஓரிடத்தில் மதி வந்த ஆட்டோ ரிப்பேர் ஆகி நின்றது.

அவள் என்னவென்று கேட்டதற்கு, “இங்க இப்போ பார்த்து சரி செய்கிறேன்” என்று ஆட்டுக்காரர் சொல்லவே அவளோ கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தாள் மணி நடுராத்திரி ஒன்றை கடந்து சென்றது. கௌதம் கண்விழிக்கும் முன்னே வீடு செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் சுற்றிலும் பார்வையை சுழற்றினாள்.

அப்போது எங்கிருந்தோ வந்த முனகல் சத்தம் அவளின் கவனத்தை ஈர்க்கவே சுற்றிலும் பார்வையைச் சுழற்றினாள். இருவழி சாலையில் ஓரிடத்தில் மட்டும் புதர் காடு மாதிரி வளர்ந்திருப்பதை கண்டு, ‘இங்கிருந்து சத்தம் வருதோ’ என்ற எண்ணத்துடன் சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்றாள்.

அவள் பக்கத்தில் செல்லும்போது ஒரு பெண்ணை ஒருவன் வலுக்கட்டாயமாக அடித்து அவள்மீது படர்வதை கண்ட மதிக்கு வந்த வெறியில் ஒரு கையால் அவனை பிடித்து இழுத்த வேகத்தில் அவன் பத்தடி தூரம் தள்ளிப்போய் விழுந்தான்.

அதற்குள், “அம்மா ஆட்டோ ரெடி ஆகிருச்சும்மா” என்று சொல்லவே, “அண்ணா இங்கே ஒரு நிமிஷம் வாங்க அண்ணா” என்றழைக்க அவரும் பதட்டத்துடன் மதியின் அருகே ஓடி வந்தார்.

அங்கே அலங்கோலமான கோலத்தில் கிடந்த பெண்ணைக் கண்டவுடன், “ஐயோ இந்த பொண்ணு என்னம்மா இப்படி கிடக்குது. முதலில் உயிர் இருக்கான்னு பாரும்மா..” என்று பதட்டத்துடன்  கூறினார்.

அந்த பெண்ணிடமிருந்து முனகல் சத்தம் வருவதை கண்ட மதி, “அண்ணா பொண்ணு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லன்னா. இந்நேரம் அவரை இவனோடு போராடிய போராட்டத்தில் மயங்குகின்ற நிலையில் இருக்கிற போல” என்று சொல்லவே அவரும் கைத்தாங்கலாக அந்த பெண்ணை தூக்கிச் சென்று ஆட்டோவில் படுக்க வைத்தார்.

அப்போது மதி திரும்பி அந்த ஆளைப் பார்க்கவே, “ஏய் யாருடி நீ? எதுக்குடி அவளை கூட்டிட்டுப் போற?” அறை போதையில் உளறியபடி எழுந்து நின்றவனை பார்த்தவளுக்கு கோபம் வந்தபோது, ‘கடவுளே இப்படி இருக்கிற சிலர் திருந்தவே மாட்டாங்களா? இவனுக்கான தண்டனையை நீயே கொடு’ என்று நினைத்தபடி உடனே ஆட்டோவில் ஏறியமர்ந்தாள்.

ஆட்டோ டிரைவர் வண்டியை எடுக்கவே, “பாப்பா அந்த பொண்ணு கன்னத்தை தட்டி வீடு எங்கே இருக்குன்னு கேளும்மா” என்று சொல்லவே மதி அப்படியே செய்ய அந்த பெண் மயக்கம் தெளிந்து வீட்டின் முகவரியைக் கூறியது.

அவர் நேராக அந்த விலாசத்திற்கு சென்று நடந்ததை சொல்லி பொறுப்பாக அந்த பெண்ணை வீட்டில் இருந்த பெரியவர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு வண்டியில் ஏறியவர், “காலம் கெட்டு போயிருச்சும்மா. இப்போ எல்லாம் பொண்ணுங்களை என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க. அதெல்லாம் நினைக்கவே மனசு பதறுது. ஒருப்பக்கம் பல வருஷம் ஆகியும் குழந்தை வரம் கிடைக்கலன்னு கோவில் கோவிலாக ஏறி இறங்கும் என்னை மாதிரி ஆளுங்க” என்றவர் சொல்லும்போது உன்னிப்பாக கவனித்தாள் மதி.

“இப்படி பள்ளி கல்லூரி போகும் பிள்ளைகளைப் பார்த்தால், நமக்கும் ஒரு குழந்தை பிறந்து இப்படி ஸ்கூலுக்குப் போகும்மான்னு தோணுது! இன்னொரு பக்கம் இந்த தவறுகளை எல்லாம் கண்கூட பார்க்கும்போது பிள்ளைகள் இல்லாமல் இருப்பது புண்ணியம்னு நினைக்கத் தோணும்மா. என்ன சொல்லி என்ன பண்றது? எல்லாம் கண்முன்னாடி நடந்துட்டுதானே இருக்கு. அந்த தவறை எல்லாம் தடுக்க முடியாமல்தானே இருக்கோம்னு நினைக்கும்போது குற்ற உணர்ச்சி அதிகமாக இருக்குமா. ஏதோ உன் புண்ணியத்தால் இந்த பெண்ணைக் காப்பாற்றினேன். இதுவே மனசுக்கு நிறைவாக இருக்கு” என்று அவள் சொல்லி முடிக்கவும் மதியின் மனம் நிறைந்தது.

ஏழை அடுத்த வேலைக்கு ஆட்டோ ஓட்டி சம்பாரிக்கும் நல்ல எண்ணம் கூட சிலருக்கு இல்லையே என்ற எண்ணம் அவளின் மனதில் தோன்றி மறைய, “அதுனால என்ன அண்ணா. நீங்களும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வழங்க. அப்படி இல்லையா நிறைய குழந்தைகள் இருக்கும் இடத்தில் வேலைக்கு சேர்ந்திருங்க. இங்கே அனாதை பிள்ளைகள் பலபேருக்கு பாசம் கிடைக்கல அண்ணா” என்றாள் புன்னகைத்தபடியே.

“ம்ம் நீ சொன்னதும் ஒரு வழியில் நல்லதுதானேம்மா. கண்டிப்பா நான் யோசித்து ஒரு நல்ல முடிவுக்கு வரேன்” என்றவர் மதியை அவளின் வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிட்டார்.