அத்தியாயம் 24
கெடா என மலாயிலும் கடாரம் என தமிழிலும் அழைக்கப்படும் மாநிலம் மலேசிய தீபகற்பத்தின் வடக்கே அமைந்த மாநிலமாகும். பச்சைப் பயிர் மாநிலம் என அழைக்கப்படும் இங்கே தான் பரந்த வயல் வெளிகள் இருக்கின்றன. தென் கிழக்காசியாவிலே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரிகம் இருந்திருப்பதாக பல ஆய்வுகள் சொல்லுகின்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழர்கள் இங்கே ஆட்சி செய்திருக்கிறார்கள் எனவும் வரலாறு கூறுகிறது.
“பைத்தியமா உனக்கு? கொஞ்ச நாள் நான் ஊருல இல்ல! அதுக்குள்ள இவ்வளவு பிரச்சனையை இழுத்து வச்சிருக்க”
பார்வை எங்கோ வெறித்திருக்க, அமைதியாக அமர்ந்திருந்தாள் மிரு.
“மிரு! உன் கிட்டத்தான் பேசிட்டு இருக்கேன்” குரலை உயர்த்தினான் காசிம், மிருவின் நண்பன்.
“நல்லா கேட்குது!”
“இப்போ ஏன் எங்கள எல்லாம் விட்டுட்டு வேற ஊருக்குப் போற ப்ளான்? அதுவும் தூரமா கெடாவுக்கு? சொல்லு மிரு”
“இந்த ஊரு போர் அடிச்சிருச்சு காசிம்! எந்த ஊருக்குப் போனா என்ன! எல்லாமே மலேசியா உள்ளதானே இருக்கு! என்னமோ அண்டார்டிக்கா போற மாதிரி குதிக்கற!” குரலில் அலட்சியம் காட்டிக் கேட்டாள் மிரு.
அமைதியாக கைக்கட்டி மிருவை முறைத்துப் பார்த்தான் காசிம். காரணம் சொல்லாமல் இனி உன்னிடம் ஒரு வார்த்தைப் பேச மாட்டேன் என அவன் உடல் மொழி சொன்னதை சரியாக மொழிப் பெயர்த்துப் புரிந்துக் கொண்டாள் மிரு.
இருவரும் மாமாக் கடைக்கு வந்திருந்தார்கள். மிரு தே தாரேக் ஆர்டர் செய்திருக்க, காசிம் தே ஓ(பால் போடாத டீ) ஆர்டர் செய்திருந்தான். கடை ரேடியோவில் பாடல் கதறிக் கொண்டிருந்தது.
“திறம் கொண்டான்
தீரம் கொண்டான்
அறம் கொண்டான்
ஆரம் கொண்டான்
கடாரம் கொண்டான் ஓவ்வ்வ்வ்” என கடையே அதிர்ந்தது.
பக்கத்து மேசையில் இளசுகள்,
“பாட்ட மட்டும் தெறிக்க விடுவானுங்க! ஆனா படத்த ஃபேன் பண்ணி நம்மள தவிக்க விடுவானுங்க!” என கருவிக் கொண்டிருந்தார்கள்.
“மிரு, மிரு! உன் கிட்டத்தான் பேசிட்டு இருக்கேன்! நீ என்னான்னா வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க!” கோபமாக பேசினான் காசிம்.
“இப்ப எதுக்கு சவுண்ட் விடற? பொண்டாட்டி வந்ததும் ப்ரேண்ட கழட்டி விட்டுட்ட ஆளுதானே நீ! போ போ, கிளம்பி போ! மனசு சரியில்லைன்னு உன்னைக் கூப்பிட்டேன் பாரு! என்னை சொல்லனும்” அவனை கிளம்ப சொல்லிவிட்டு இவள் நாற்காலியில் இருந்து எழுந்தாள்.
பட்டென கைப்பிடித்து அவளை மீண்டும் அமர்த்தினான் காசிம்.
“சரி உட்காரு! நான் ஒன்னும் கேக்கல! இப்படியே ஒருத்தர ஒருத்தர் பார்த்துட்டே உட்கார்ந்திருக்கலாம்”
தலையைக் குனிந்துக் கொண்டாள் மிரு. காசிமும் டீயை அருந்தியவாறே அமைதியாக அமர்ந்திருந்தான். சில நிமிடங்களில் நிமிர்ந்தவள் கண்கள் லேசாக கலங்கி இருந்தது.
“சாரி காசிம்! நான் பேசனது ரொம்பத் தப்பு! மன்னிச்சிரு.”
“விடு மிரு! என்னை நீ திட்டறதும், ஏசறதும் என்ன புதுசா! அதெல்லாம் எனக்கு பழகிப் போச்சு. நானும் காதல், கல்யாணம், புது வீடு ஷிப்டிங் அப்படி இப்படின்னு உன் கூட டைம் ஸ்பேண்ட் பண்ணவே இல்ல. ஐம் ரியலி சாரி மிரு”
“இன்னிக்கு என்ன சாரி டேவா! நாம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாரி கேக்கறோம்! சரி சொல்லு, வைப் உன்னை கண் கலங்காம பாத்துக்கறாங்களா?”
“ரொம்ப நல்லா பாத்துக்கறா! ரெண்டு பேரும் வேலைக்கும் போக ஆரம்பிச்சிட்டோம்!” பேசும் போதே அவன் கண்கள் மின்னியது. நண்பனின் மகிழ்ச்சியில் இவளும் மகிழ்ந்துப் போனாள். மனைவியைப் பற்றி வாய் ஓயாமல் அவன் புகழ, இவளும் புன்னகையுடன் கேட்டிருந்தாள்.
“நீயும் வாழ்க்கையில நல்ல படி செட்டில் ஆகனும் மிரு. நம்மைப் பார்த்துக்க ஒரு ஆள் இருக்காங்கன்றதே எவ்வளவு சூப்பர் பீலிங் தெரியுமா!”
‘தெரியும்!’ மனதில் மட்டுமே சொல்லிக் கொண்டாள் மிரு.
“நம்மள பார்க்கறப்போ அவங்க கண்ணுல தெரியற ‘நீ என்னுடையவன்’ற பார்வையே கோடி சுகம் தெரியுமா?”
‘தெரியும், தெரியும், தெரியும்!’ அவள் மனம் கதறியது. வெளியே மட்டும் அமைதியாக அவன் பேசுவதைக் கேட்டிருந்தாள் மிரு.
“மிரு, எனக்கு எப்பவுமே ஒரு ஃபீல் இருக்குத் தெரியுமா?”
“என்ன?”
“நான் மட்டும்தான் உன்னை பெஸ்ட் ப்ரேண்டா நினைச்சு எல்லாத்தையும் சொல்லறேன்! நீ என்னை எப்பவுமே மூனு அடி தள்ளித்தான் வைக்கறே! பெத்தூல் கான்? (நெஜம்தானே)”
அவள் மனதை திசைத் திருப்ப அதையும் இதையும் பேசியவன், கடைசியில் செண்டிமெண்டை கையில் எடுத்திருந்தான்.
“அறைஞ்சிருவேன் பாத்துக்கோ! மெனெங்கா(இடைநிலை பள்ளி) ஸ்கூலுல என்னை ஆம்பளைப் பசங்க எல்லாம் ஒன்னு கூடி பூலி(bully) பண்ணப்போ நீ தான் காப்பாத்துன! அப்போ இருந்து, இப்போ வரை நீ தான் என் பெஸ்ட் ப்ரேண்ட். உனக்கு மறைச்சி என் குடும்பத்துல என்ன ரகசியம் இருக்கு?”
“அப்போ இல்ல, ஆனா இப்போ என்னவோ இருக்கற மாதிரி இருக்கே!”
பெருமூச்சொன்றை விட்டவள்,
“அம்மாவும், கணேவும் பெரிய மாமா வீட்டுக்குப் போயிட்டாங்க!” என்றாள்.
“என்னாது?”
“ஆமா! அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ பாட்டிக்கு ரொம்ப முடியாம போயிருச்சு! எத்தனைப் புள்ளைங்க கூட இருந்தாலும், விட்டுட்டுப் போனவங்க மேல தானே மனசு அடிச்சுக்கும். பாட்டிக்கும் ரொம்ப நாளா அம்மாவப் பார்க்கனும், அவங்க கூட இருக்கனும்னு ஆசை. என் தாய் மாமன் விடல. இப்போ பாட்டியோட கடைசி ஆசை அதுன்னு தெரியவும் அம்மாவ வந்து ஹாஸ்பிட்டல்ல பார்த்தாங்க! ரதியப் பத்தி தெரியாதா! அண்ணாவ பாத்ததும் கண்ணீர் விட்டு கதற, அவரும் கண் கலங்கன்னு ஒரே சீனா போச்சு! இனி என் கூடத்தான் இருக்கனும் நீ! அம்மா கடைசி காலத்துலயாச்சும் எல்லாத்தையும் மறந்துட்டு ஒன்னா இருக்கலாம்னு சொல்ல, இவங்களும் தலைய ஆட்டிட்டாங்க”
“ஹ்ம்ம்ம்! பிரிஞ்ச குடும்பம் ஒன்னு சேர்துருச்சு! அப்புறம் என்ன கவலை? ஏன் ஊர விட்டுப் போகனும்?”
“இப்ப நான் எங்க தங்கிருக்கேன் தெரியுமா?”
“எங்க?”
“ஹோட்டல்ல!”
“வாட்?”
“பல்ல கடிச்சுக்கிட்டு அம்மாவுக்காக அந்த வீட்டுக்குப் போனேன்டா! அங்கிருக்கற ஒவ்வொரு நிமிஷமும் நெருப்புல நிக்கற மாதிரி தகிக்குது! என்னால முடியல” கண்கள் லேசாக கலங்க, தலையை மீண்டும் கீழே குனிந்துக் கொண்டாள் மிரு. குரலை செறுமியவள்,
“என் தாய் மாமன் இருக்காரே, என் முகத்தக் கூட நிமிர்ந்துப் பார்க்கறது இல்ல. அந்த அத்தையம்மா யாரும் பக்கத்துல இல்லாத டைம்ல நீக்ரோகாரிச்சி, பீடை, சனியன் அப்படின்னு முணுமுணுக்குது. பாட்டி கூட கணேவ கைப்பிடிச்சி தடவிக் குடுக்கறாங்க. என்னை கண்டுக்கவே இல்லைடா! ஒரு வாய் தண்ணீ இறங்கலடா எனக்கு. ஆனா அம்மாவையும் தம்பியையும் நல்லா வச்சிப் பார்க்கறாங்க! அது போதும்டா எனக்கு!”
“அம்மா எப்படி உன்னை ஹோட்டல்ல இருக்க விட்டாங்க?”
“அவங்களுக்குத் தெரியாது!”
“வாட்?”
“ஹ்ம்ம்! ஆபிஸ்ல பெர்மனேண்ட் ப்ராஜேக்ட் வோர்க்குக்காக கெடாக்கு போக சொல்லிருக்காங்கன்னு பொய் சொல்லி வச்சிருக்கேன். இன்னும் கொஞ்ச நாளுல அவங்களையும் அங்க கூட்டிக்கறேன்னு சொல்லிருக்கேன்! அவங்க நான் எத சொன்னாலும் நம்புவாங்க! கணே தான் ஒரு மாதிரி பார்த்தான். அவனையும் சமாளிச்சிட்டேன்!”
“ஏன் மிரு இப்படி? அம்மாகிட்ட இதெல்லாம் சொல்ல வேண்டியது தானே?”
“என்ன சொல்ல சொல்லுற? ஜாடை மாடையா என்னை பேசறாங்க, நான் சாப்பிட்ட தட்டையும் குவளையையும் பிரிச்சு தனியா வைக்கிறாங்க, அவங்க வீட்டு குட்டிப் பிள்ளைங்க என்னைப் பார்த்து சிரிச்சா அடிச்சுபுடறாங்கன்னு காம்ப்ளேய்ண்ட் பண்ண சொல்லுறியா? எனக்கு தெரிஞ்சு ரதி முகத்துல இப்போத்தான் சந்தோஷத்தப் பார்க்கறேன். அம்மா, அம்மான்னு அவங்க அம்மா ரூமே கதியா கிடக்காங்க! அந்த சந்தோஷத்த துடைச்சி எறிய சொல்லறியா? விடுடா! அவங்க சந்தோசத்துக்காக நான் கொஞ்ச நாள் தனிமைல இருந்துட்டுப் போறேன்! எப்படியும் கொஞ்சம் மாசத்துல கிழவி போய் சேர்ந்துரும். அப்போ போஉ அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்துருவேன். அதுக்கு முன்னயே கூட ரதி, மிரு, மிரும்மா அம்மா உன் கூட வரேன்னு புலம்ப ஆரம்பிச்சிருவாங்க பாரேன்!”
“எல்லாருக்கும் பார்க்கறியே தவிர, உன்னை நினைச்சுப் பார்த்தியா? உன்னை மாதிரி ஒரு முட்டாள நான் பார்த்ததே இல்ல! போடோ(முட்டாள்)” என திட்டினான் காசிம்.
“இருந்துட்டுப் போறேன்”
“கிளம்பு! என் கூட வந்து இரு, கண்ட ஹோட்டல்ல எல்லாம் தங்க வேண்டாம்”
“இப்போ நீதாண்டா போடோ! உன் பொண்டாட்டி என்னை செருப்பால அடிச்சு துரத்தவா? என்னைப் பார்த்தாலே அடுத்தவ புருஷன அடிச்சிட்டுப் போக வந்தவ மாதிரிதான் பொண்ணுங்க பார்ப்பாங்க! எதுக்குடா வம்பு!”
“அவளுக்கு நம்ம ப்ரேண்ட்ஷிப் பத்தி தெரியும். ஒழுங்கா வா”
“இதுக்குத்தான் உன் கிட்ட சொல்ல தயங்கனேன்!. இன்னும் ஒரு மூனு வாரம்தான் இப்படி பட்ஜேட் ஹோட்டல்ல தங்குவேன்! அப்புறம் கெடாக்கு போயிருவேன்.”
எதற்காக அங்கே போகிறாள், யார் அங்கே வேலை வாங்கிக் கொடுத்தது, இந்த இடைப்பட்ட மூன்று வாரங்கள் கோலாலம்பூரில் என்ன செய்யப் போகிறாள் என அனைத்தையும் அவனிடம் மட்டும் அல்ல தன் குடும்பத்தினரிடமும் இருந்து மறைத்தாள் மிரு. வேலையை விட்டு விட்டதை மட்டும் காசிமிடம் பகிர்ந்துக் கொண்டவள், வேலைக் கொடுத்தவனிடம் மனதை விட்டதை மட்டும் மறைத்தாள்.
“எல்லாம் சொன்னியே, எதுக்கு இடம் மாற்றம்னு சொன்னியா மிரு?”
“மன மாற்றத்துக்கு இடம் மாற்றம் தேவைடா”
அவன் எவ்வளவு கெஞ்சியும் அவன் வீட்டுக்குப் போக மறுத்தவள், விடைப்பெற்றுக் கிளம்பினாள். நாள் ஒன்றுக்கு என்பது ரிங்கிட் வசூலிக்கும் அந்த பட்ஜேட் ஹோட்டலுக்கு வந்தாள் மிரு. தனது ரூமுக்குள் நுழைந்து கதவடைத்தவள், கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள். குட்டியான அறை பாத்ரூம் வசதியுடன். முகம் பார்க்க சின்ன கண்ணாடி, உட்கார ப்ளாஸ்டிக் நாற்காலி ஒன்று, சிங்கிள் பெட், வெள்ளை விரிப்பு, ஒரு தலையணை, சுவற்றில் என்ன படம் என்றே அறிய முடியாத ஒரு மாடர்ன் ஆர்ட். அவ்வளவுதான் இருந்தது அந்த அறையில். செண்ட்ரல் ஏர்கோன் வசதி அந்த ஹோட்டலில். டெப்ம்ரெச்சரை நம்மால் ஏற்றவோ இறக்கவோ முடியாது. இன்று பார்த்து குளிர் எலும்பைத் துளைத்தது மிருவுக்கு. மெல்லிய வெள்ளை கம்போர்டரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் மிரு. இருந்தும் குளிர் அடங்கவில்லை.
குருவின் சூடான அணைப்பு வேண்டும் போல மனம் ஏங்கியது. காய்ச்சல் அன்று அவன் அணைத்துப் படுத்திருந்ததை எண்ணிக் கொண்டாள் மிரு. மருந்தின் மயக்கத்தில் இருந்தாலும், அவன் அணைத்துப் பிடித்ததை அவளால் உணர முடிந்தது. அந்த அணைப்பில் சுகம் காணவில்லை அவள். ஒரு பாதுகாப்பைத்தான் உணர்ந்தாள். அந்த பாதுகாப்பு வாழ்க்கை முழுமைக்கும் வேண்டும் போல இருக்க, அசையாமல் அவன் கையணைப்பில் கிடந்தாள் மிரு. கொஞ்ச நேரத்திலேயே அவன் விலகி விட, ஏமாற்றமாகிப் போய் விட்டது அவளுக்கு. அதன் பிறகு அவன் பாடிய பாடல், அதில் இருந்த பாவம் இவளுக்கு அழகை வரும் போல இருந்தது. அவன் முன் அழுது வைத்து விடுவோமோ எனும் பயத்தில் தான் புரண்டுப் படுத்தாள். இவள் நினைத்தது போலவே, எகிறி குதித்து ஓடிவிட்டான் குரு. ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், இன்னொரு பக்கம் அவன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தோமே என தன் மேலேயே கோபமும் வந்தது.
குருவை சந்தித்ததில் இருந்து ஒவ்வொன்றையும் அசைப்போட்டப்படி படுத்திருந்தவள், அந்த பொல்லாத நாளையும் நினைத்துப் பார்த்தாள். அதே நேரம் குருவும் அந்த காட்சிகளை பல முறை ஓட விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்று சமைத்து பேக் செய்து வைத்தவள், அவசரமாகக் குளிக்க செல்லலாம் என கிச்சனுள் இருந்து வெளி வந்த போது, வாசல் கதவு திறக்கக் கண்டாள். இன்றும் குருதான் வந்து விட்டானோ என எண்ணியவள், புன்னகையுடன் அவனை எதிர் கொள்ள நின்றிருந்தாள். உள்ளே வந்ததோ ஒரு பெண்ணுருவம். மிருவுக்கு முதலில் தோன்றிய கேள்வி,
‘எத்தனைப் பேருடா இந்த வீட்டு சாவிய கையில வச்சிருக்காங்க?’ என்பதுதான்.
உள்ளே வந்த உருவத்தை இவளுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. டீவி மாட்டி இருந்த சுவற்றின் கீழ் இருந்த நீள் மேசையில் பலவித கலைப் பொருட்களை வைத்திருந்த குரு, அழகான ஒரு போட்டோ ப்ரேமையும் வைத்திருந்தான். அதில் அவன் அம்மாவைப் பின்னிருந்து அணைத்தப் படி கன்னத்தில் முத்தமிடும் படம் இருந்தது. அவன் அம்மா அதில் சிரித்த முகத்துடன், கண்கள் மின்ன இருந்தார். அந்த மின்னிய கண்கள் இப்பொழுது இவளை மேலிருந்து கீழ் வர எடைப் போட்டப்படி இருந்தன.
“வாங்கம்மா! பாஸ் ஆபிசுக்குப் போயிருக்காரு”
பதில் ஏதும் பேசாத ஆனந்தி, மெல்ல நடந்து வந்து ஹால் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். கலவரத்துடன் அவரைப் பார்த்தாள் மிரு. பட்டுத் துணியில் தைத்திருந்த நீல நிற சுடிதார் அணிந்திருந்தார் ஆனந்தி. அது அவருக்குப் பொருத்தமாகவும், பாந்தமாகவும் இருந்தது. கருப்பு நிறத்தில், வெள்ளை கற்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த குட்டிக் கைப்பையை மேசை மேல் வைத்தவர்,
“நான் என் மகன பார்க்க வரல” என அவளை நேராகப் பார்த்து சொன்னார்.
“ஓஹோ!”
தனது லேசர் விழிகளால் மிருவை அங்குலம் அங்குலமாக அளவிட்டார் ஆனந்தி. அவர் பார்வையில் தைரியமான மிருவே நெளிய ஆரம்பித்தாள்.
“இருங்கம்மா குடிக்க தண்ணி எடுத்துட்டு வரேன்” என கிச்சனுக்கு நழுவி ஓடினாள் மிரு. கிளாசில் ஆப்பிள் ஜீஸ் ஊற்றி, ஹாலுக்கு எடுத்து வந்தாள் அவள். அங்கே ஆனந்தியோ அவரும் குருவும் சிரித்தப்படி எடுத்திருந்த போட்டோவில் பார்வையை நிலைக்க விட்டப்படி அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் மெல்லிய புன்னகை. மிரு வந்த அரவம் கேட்டு நிமிர்ந்த அவர் முகம், மீண்டும் கடினத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.
அவர் முன்னே இருந்த டேபிளில் பானத்தை வைத்தவள்,
“குடிங்கம்மா!” என மரியாதையாக சொன்னாள்.
கிளாசையும் மிருவையும் மாறி மாறிப் பார்த்தவர்,
“நீ கைப்பிடிச்சு எடுத்து வந்த இந்த கிளாசைத் தொடவே எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. அப்படி இருக்க, என் மகன நீ தொட்டு எனக்கு ஒரு பேரப்பிள்ளையக் கொடுக்கனும்னு நினைக்கறத என்னால எப்படி சகிச்சுக்க முடியும்?” என ஆசிட்டை அள்ளி ஊற்றினார் வார்த்தைகளில்.
இவ்வளவு நேரம் மரியாதையாக நின்றிருந்த மிரு இந்த வார்த்தைகளில் கொதித்துப் போனாள். முன்னே நடந்து வந்து ஆனந்தியின் எதிர் சோபாவில் அமர்ந்தவள், கிளாசில் இருந்த ஜீசை தானே எடுத்து மடமடவென அருந்தினாள்.
“ஒரு பேரப்பிள்ளைன்னு ஏன் கஞ்சத்தனமா பேசறீங்க அத்தை! உங்க மகன் என் மேல வச்சிருக்கற ஆசைக்குப் பல பேரப்பிள்ளைங்க வரிசையா வருவாங்க உங்களுக்கு!” என எகத்தாளமாகப் பேசினாள் மிரு.
“ஹேய்! யாருடி உனக்கு அத்தை?”
“என்னைக் கட்டிக்கோ கட்டிக்கோன்னு உங்க மகன் என் பின்னாலயே சுத்தறப்போ, அவரோட அம்மாவான நீங்க எனக்கு அத்தை முறையாத்தானே ஆகனும்?”
“சீச்சீ! கண்ட ஜாதி பூக்கான்லாம் என்னை அத்தைன்னு கூப்படறத கேட்கவே கேவலமா இருக்கு”
இங்கே இனம் விட்டு இனம் திருமணம் செய்து பிறக்கும் குழந்தைகளை ஜாதி பூக்கான் என அழைப்பார்கள். அவர்களின் கலவையான நிறம், எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என பிரித்தறிய முடியாத தோற்றம் இவற்றைக் கொண்டே இந்த மாதிரி அழைப்பார்கள். அது கொஞ்சம் மரியாதைக் குறைவான வார்த்தையாகும்.
அந்த வார்த்தையில் சட்டென ஒரு துளி கண்ணீர் மிருவின் கண்களில் இருந்து வழிந்தது. பிறந்ததில் இருந்து பலரால் இந்த வார்த்தைக் கொண்டு அழைக்கப்பட்டிருக்கிறாள். கேலி, கிண்டல் செய்யப்பட்டிருக்கிறாள். கேட்டு மரத்துப் போய்விட்டது என நினைத்த வார்த்தை தன் மனம் கவர்ந்தவன் தாய் வாய் வழி வர மனமுடைந்துப் போனாள் மிரு. தன்னை குத்திக் கிழிக்க வந்திருக்கும் அவர் முன் பலவீனத்தைக் காட்டக் கூடாது என நினைத்தவள், மீண்டும் திமிருடன் நிமிர்ந்தாள்.
“கேவலமா இருக்கோ? உங்க அருமை மகனுக்கும் இந்த ஜாதி பூக்கானுக்கும் பிறக்கப் போற உங்க பேரப் பிள்ளைங்களும் ஜாதி பூக்கானுங்க தான். பாருங்க அத்தை, நாம எல்லாம் சேர்ந்து குடும்ப போட்டோ எடுக்கறப்போ நாங்க மட்டும் தனிச்சுத் தெரிவோம்! சத்தியமா போட்டோ அழகா இருக்கும் அத்தை. என்னை நம்புங்க!”
மிரு காட்டிய பிம்பத்தில் ஏகத்துக்கும் கடுப்பானார் ஆனந்தி. நல்லபடி பேசி இவளை குருவின் வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்தலாம் என வந்தவரை தான் மிருவின் தோற்றமும், அவளின் நடை உடையும் கோபப்படுத்தி இருந்தது. தன் மகனின் டேஸ்ட் ஏன் இப்படி தரமிறங்கி போக வேண்டும் என உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்.
எப்பொழுதும் குருவைப் பற்றி அறிந்துக் கொள்ள ஹரியைத் தான் அனுப்பி வைப்பார். அண்ணன் தம்பிக்குள் இருக்கும் அந்நியோன்யம் சிலதை தன்னிடம் மறைக்க வைக்கும் என்பதையும் அறிந்து வைத்திருந்தார் ஆனந்தி. எதற்கும் இருக்கட்டும் என குருவைப் பார்க்க வரும் போது, பில்டிங் ரிசப்ஷனில் இருக்கும் பையனிடம் நன்றாகப் பேசி பழகி இருந்தார். அன்பளிப்பு போல வரும் போதெல்லாம் பணமும் கொடுப்பார் ஆனந்தி. அந்த விசுவாசித்தான் மிருவும், கணேவும் குருவின் வீட்டில் இருப்பதை போன் வழி போட்டுக் கொடுத்திருந்தான்.
வீட்டிற்கு எந்த பெண்ணையும் அழைத்து வந்திராதவன், இப்பொழுது ஒரு பெண்ணையும் பையனையும் கூடவே வைத்திருப்பது ஆனந்திக்கு உறுத்தியது. அதை என்ன, ஏது என கண்டுக் கொள்ளத்தான், தனக்கு தெரிந்த விஷயத்தை சொல்லாமல் அன்று ஹரியை அனுப்பி வைத்தார். அவன் திரும்பி வந்து ஒன்றும் சொல்லாமல் இருந்ததில் இவருக்கு விஷயம் சீரியஸ் என புரிந்துப் போனது. அதனால் தான் அவரே களத்தில் இறங்கி விட்டார். ஸ்பையிடம் அந்தப் பெண் வீட்டில் இருக்கும் டைம் எல்லாம் கேட்டுக் கொண்டவர், மகனைக் காப்பாற்ற வந்துவிட்டார்.
“எந்தக் காலத்துலயும் என் குருப்பா என்னை மீறி உன்னைக் கட்டிக்க மாட்டான்டி”
வார்த்தைகளால் தன்னைக் குத்திக் கிழிக்கும் ஆனந்தியை அப்படியே விட்டுவிட மிரு என்ன பைத்தியக்காரியா? அவரது திமிர் பேச்சுக்கு கொஞ்சமாகவாச்சும் திருப்பிக் கொடுக்காவிட்டால், இத்தனை நாள் ரதி உப்புக் காரம் போட்டு சமைத்துக் கொடுத்ததுக்கு என்ன அர்த்தம்!
“ஆயிரம் பேர நீங்க கொண்டு வந்து நிறுத்தினாலும், உங்க குருப்பா என்னை மட்டும்தான் கட்டிப்பான்” சோபாவில் சப்பளங்காலிட்டு கையைக் கட்டிக் கொண்டு ஆனந்தியின் கண்களை நேராகப் பார்த்து சொன்னாள் மிரு.
ஆத்திரம் மிக,
“அவ்ளோ திமிரா உனக்கு! தரம், தராதாரம், அந்தஸ்த்து எல்லாத்தையும் மீறி உன்னை மாதிரி ஒருத்திய வீட்டுல வச்சிருக்கான்னா என்ன அர்த்தம்? நீ எதையோ காட்டி மயக்கி வச்சிருக்கன்னு தானே!” அவள் கைக்கட்டி அமர்ந்திருக்க, முன்னே துருத்தி நின்ற மிருவின் தாராள நெஞ்சத்தைப் பார்த்தவாறே அருவருப்புடன் சொன்னார் ஆனந்தி.
சட்டென கட்டி இருந்த கைகளை விடுவித்தவளுக்கு, விம்மல் வெடித்து வந்தது. உதட்டைக் கடித்து வாயை இருக மூடிக் கொண்டாள் மிரு. வழிய பார்த்த கண்ணீரை கஸ்டப்பட்டு அடக்கினாள். கோபத்திலும் அவமானத்திலும் சிவந்த முகத்தையும், நடுங்கிய உடலையும் கட்டுக்குள் கொண்டு வர போராடினாள் மிரு.
பவுஸ் பட்டனைத் தட்டிய குரு, டீவியின் அருகே போய் அமர்ந்தான். உடலைக் குறுக்கி கால்களை மேலே ஏற்றி தன் இரு கரங்களால் அவற்றை தழுவியபடி தன் நெஞ்சத்தை மறைத்துக் கொண்டவளை மனம் உருக பார்த்திருந்தான் குரு. தன் மிருதுவை அந்தக் கோலத்தில் அவனால் கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை. நடுங்கிய உதடுகளை பற்களால் கடித்தப்படி அமர்ந்திருந்த அவள் பிம்பத்தைத் தடவிக் கொடுத்தான் குரு. சொல்லொண்ணா துயரத்தை தாங்கி நிற்கும் அவள் கண்களையும் தடவினான். இருகிப் போய் கிடந்த கன்னத்து சதையையும் தடவிக் கொடுத்தவனின் மனம் படாத பாடு பட்டது.
“சாரி மிரும்மா! சாரிம்மா! என்னை மன்னிச்சிரு” அவன் கண்கள் சிவந்துப் போய் கிடக்க, விரல்கள் திரையை வருடியபடி இருக்க வாய் விடாமல் முணுமுணுத்தப்படியே இருந்தது.
அப்படி அவன் அமர்ந்திருந்தது சொற்ப நிமிடங்கள் தான். பின் உறுதியுடன் எழுந்து நின்றவன், உடனே போனை எடுத்து பேராவுக்கு மறுநாள் செல்வது போல ப்ளைட் புக் செய்தான். இத்தனை நாள் மிருவின் நிராகரிப்பிலும், அவள் விட்டுப் போனதால் கோபத்திலும் இருந்தவன் அவளை தொடர்பு கொள்ள முயன்றான். போன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. மிருவின் வீட்டிற்கே செல்வது என கிரேப் புக் செய்ய முயல, அந்நேரத்தில் எந்த காரும் கிடைக்கவில்லை. மூச்சை இழுத்து விட்டவன், கார் சாவியை எடுத்துக் கொண்டு பார்க்கிங்குக்கு ஓடினான்.
அவன் கையில் கார் சீறி பாய்ந்தது. மிருவின் ப்ளாட் அருகே பார்க், செய்து விட்டு லிப்டுக்குக் கூட காத்திருக்காமல், மூன்று படிகளாய் தாவி ஏறினான். அங்கே மிருவின் வீட்டில் தொங்கிய பூட்டைப் பார்த்து விக்கித்துப் போய் நின்றான் குரு.
மிருவின் மேல் கோபம் இருந்தாலும், அவள் அம்மாவைப் பார்க்கப் போவது போல அவளைப் பார்க்கலாம் என மருத்துவமனைக்கு நேற்று மாலைதான் சென்றிருந்தான். சில நாட்களுக்கு முன்னரே அவர்கள் வீட்டுக்குப் போய் விட்டதாக அங்கே தகவல் கிடைக்கவும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி இருந்தான் குரு. இன்று வீடு பூட்டி இருக்க, எங்கே சென்றிருப்பார்கள் என குழம்பி நின்றான்.
அந்த நேரத்தில் தான் அவனுக்கு ஒரு போன் வந்தது. புதிய நம்பராக இருக்க, இவனுக்கு எடுக்கவே இஸ்டமில்லை. ஆனாலும் விடாமல் பல முறை அடிக்கவும், எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ!”
“பாஸ், நான் கணே பேசறேன்”
பேசிய சில நிமிடங்களில் அவன் சொன்ன விஷயத்தைக் கேட்ட குருவுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது.
“மிருது, எங்கடி இருக்க?”
(தவிப்பார்கள்)