SST— epi 8

அத்தியாயம் 8

 

பல இனங்களைக் கொண்டவர்கள் வாழும் நாடாக இருப்பதால் உணவுப் பழக்கமும் இங்குள்ளவர்களுக்கு கலப்படமாகத் தான் இருக்கும். ஆனாலும் சீனர்கள் கடைக்கு இந்தியர்கள் போகும் போது பன்றி இறைச்சி போடலாமா வேண்டாமா என கேட்டே அவர்கள் சமைப்பார்கள். அதே போல மலாய் உணவு வாங்கும் போது, இது மாட்டிறைச்சி என சொல்லி விடுவார்கள். அவர்கள் சொல்ல மறந்துப் போகும் பட்சத்தில் நாமே கேட்டுத் தெளிவுப் படுத்தி சாப்பிட்டுக் கொள்வது சிறப்பு.

 

தனக்குப் பிடித்தப் பாடல் ரேடியோவில் ஒலிக்கவும், காரை பார்க் செய்து விட்டாலும் பாடல் முடியும் வரை காரிலேயே அமர்ந்திருந்தாள் மிரு. மின்னல் எப்.எமில் ஆனந்தப் பூங்காற்று நிகழ்ச்சியின் கடைசிப் பாடல் அது.

“மயக்கமா மயக்கமா

மறக்குமா செழும் மலரை காற்றும் மறக்குமா” பாலாவும் ஜானகியும் தங்கள் குரலால் கட்டிப் போட்டார்கள் மிருவை. கண் மூடி அப்படியே கரைந்துப் போனாள். சிறு வயதில் இருந்தே ரதியோடு என்பதாம் ஆண்டு பாடல்களைக் கேட்டு, அவர் ரசித்து சிலாகிப்பதைக் கேட்டு வளர்ந்தவள் மிரு. மிக அழகாகப் பாடுவார் ரதிதேவி. சமைக்கும் போதோ, துணி துவைக்கும் போதோ, பாத்திரம் துலக்கும் போதோ பாடிக் கொண்டே தான் இருப்பார். வேலை செய்யும் ரதியின் இடுப்பைப் பின்னால் இருந்துக் கட்டிக் கொண்டு, அவர் முதுகில் முகத்தைத் தேய்த்துக் கொண்டே கூட சேர்ந்து பாடுவாள் குட்டி மிரு. மகள் பாடும் மழலைத் தமிழைக் கேட்டு பூரித்துப் போய் முத்த மழைப் பொழிவார் ரதி. அவருக்கு வாழ்க்கையே பிள்ளைகள் தானே!

பாடலோடு கலந்து வந்த பழைய நினைவுகள் மிருவுக்கு புன்னகையைக் கொடுத்தன.

“ஐ லவ் யூ ரதி” முணுமுணுத்துக் கொண்டே காரைப் பூட்டினாள். இன்று கிரெப் ஓட்ட மூட்டே இல்லை அவளுக்கு. எட்டு மணிக்கே வீட்டு வளாகத்துக்கு வந்து விட்டாள். வேலைக்குக் போனதில் இருந்து அம்மாவிடம் பேசக் கூட நேரம் போதாமல் அல்லாடினாள். இன்று ஆற அமர ரதியைக் கொஞ்ச வேண்டும் என முடிவுடன் வந்திருந்தாள்.

கணே வேறு கேம் விளையாட இண்டெர்னெட் கபே போயிருந்தான். வாரம் ஒரு முறை இவளிடம் பணம் வாங்கிக் கொண்டு செல்வான். மற்ற பிள்ளைகள் போல வீட்டில் விளையாட இவளால் ப்ளே ஸ்டேஷனா வாங்கிக் கொடுக்க முடிகிறது! வெளியேயாவது விளையாடி விட்டு வரட்டும் என விட்டு விடுவாள். அதுவும் வீட்டுப் பாடங்களை முடித்து விட்டுப் போக வேண்டும், இரவு பத்துக்குள் வந்து விட வேண்டும் என்பது இவளின் கட்டளை.

‘கடவுளே லிப்ட் வேலை செய்யனும்பா!’ வேண்டுதல் வைத்தவாறே நடந்தாள். கடவுள் இன்று டூட்டிக்கு லீவ் போட்டிருந்தார் போல. இவள் வேண்டுதல் கேட்காமல், லிப்ட் பழுதாக இருந்தது.

முனகிக் கொண்டே படி ஏறினாள். அவள் கிரகம், மூன்றாவது மாடி படிக்கட்டில் படியை மறைத்தவாறு அமர்ந்திருந்தார்கள் அந்த ப்ளாட்டின் விஐபிகள்.

‘போச்சுடா! எருமை மாடு மாதிரி மேல போக விடாம மறைச்சுட்டு உட்கார்ந்து இருக்கறானுங்களே! பார்க்கற பார்வையைப் பாரு! எருமை கடாங்க’

“எக்ஸ்கியூஸ் மீ. வழி விடறீங்களா?” கோபத்தை அடக்கி அமைதியாகக் கேட்டாள் மிரு.

“மச்சி திடீருனு குயில் கூவுற சத்தம் கேட்கல?”

“ஆமா மச்சி! ஜோக்கா(நல்லா) கூவுது!”

“வழி விடுங்க ப்ளிஸ்”

“சேச்சே நீ போய் எங்க கிட்ட ப்ளிஸ் போடலாமா? நாங்கத்தான் உன் கிட்ட ப்ளிஸ் கேட்கனும். இல்லடா?”

“ஆமா மச்சி, ஆமா மச்சி” தலைவன் போல இருந்தவனும் அவனின் மூன்று அல்லக்கைகளும் ஓவராக வழிந்தனர்.

‘அடச்சை! ஒன்பது மணிக்கு மேல தானே இவனுங்க அலப்பறைய கூட்டுவானுங்க. இன்னிக்கு எட்டுக்கே ஆரம்பிச்சிட்டானுங்களே!’ நொந்துப் போனாள் மிரு.

கீழே திரும்பி போய் காரில் அமர்ந்துக் கொண்டு கணேவை வர சொல்லலாமா என யோசித்தாள். இவர்களைத் தாண்டிப் போனால், கண்டிப்பாக உரசுவார்கள் என அவர்கல் பார்க்கும் பார்வையிலெயே புரிந்தது.

திரும்பி கீழே நடக்க போனவள் பின்னால் வந்த சீன அங்கிளைப் பார்த்து நிம்மதியாக மூச்சு விட்டாள். அவருக்கு வழி விட்டுத்தானே ஆக வேண்டும். அவர் படி ஏற அவருடன் பேச்சுக் கொடுத்தப் படியே சேர்ந்து ஏறினாள் மிரு.

“தப்பிச்சுட்டேன்னு நினைக்காதேடி! என்னைக்காச்சும் உனக்குப் படையல் போடாம விடமாட்டேன்” படைத் தலைவன் அவளைப் பார்த்து கத்தினான்.

இவள் வேகவேகமாக மீத படிகளை ஏறினாலும், அவர்கள் பாடிய பாடல் இவளுக்குக் கேட்கவே செய்தது.

“இம்மாம் பெரிய பஞ்சு மிட்டாய்

இது வரைக்கும் பார்த்ததில்லை!!

ஹே இடுப்பாட்டும் இளவம் பஞ்சு காடே!!!” என தலைவன் பாட அவனின் அடிப்பொடிகள் காடேஏஏஏஏ என கோரஸ் பாடி வெடி சிரிப்பு சிரித்தார்கள்.

கண்கள் கரித்துக் கொண்டு வந்தது மிருவுக்கு. வீட்டை அடைந்து, உள்ளே போகாமல் கண்ணை அழுந்தத் துடைத்து முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்தாள். அப்பொழுதுதான் கவனித்தாள் வாசலில் கிடந்த புது காலணியை.

‘யார் வந்துருக்கா இந்நேரத்துல?’ யோசித்தப்படியே உள்ளே நுழைந்தாள்.

“வாம்மா மிரு” தன் அம்மாவின் உற்சாகமான குரல் அடுப்படியில் இருந்து வந்தது. ஹாலில் நெடுநெடு உயரத்தில் ஒருவன் உட்கார்ந்திருந்தான். யாரென்று இவளுக்குத் தெரியவில்லை. சிநேகிதமாக புன்னகைத்து,

“ஹலோ” என்றாள் மிரு.

அவனோ, அவளை மேலிருந்து கீழ் வரை அலட்சியமாகப் பார்த்து விட்டு பதில் ஹலோ கூட சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

‘அட, திமிரப் பாரேன்! என் வீட்டுல வந்து சட்டமா உட்கார்ந்துகிட்டு என்னையே கேவலமாப் பார்க்கறான்! இது கண்டிப்பா ரதி வீட்டு ரத்தமா தான் இருக்கும். அதுங்களுக்குத்தான் கொழுப்பு, கோலெஸ்ட்ரோல்லாம் அதிகம்’

ஏற்கனவே கீழே நடந்த தாக்குதலில் கோபமாக இருந்தவள், இவன் முகத்தைத் திருப்பவும் இன்னும் கோபமானாள்.

“யாரும்மா இந்த செவிட்டு மிஷினு?” என சத்தமாகக் குரல் கொடுத்தாள்.

சடாரென திரும்பிய அவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“போடா டேய்!” என மெல்ல அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவள் பேகை அலட்சியமாக நாற்காலியில் எறிந்தாள்.

அதற்குள் கையில் நெஸ்காபியுடன் வந்தார் ரதி.

“வாயை அடக்கிப் பேசுடி மிரு! இது எங்கண்ணன் மவன்! பேரு அருள்நாதன். ஆஸ்திரேலியால வேலை செய்யறான். இப்போ லீவுக்கு வந்துருக்கான். அன்னிக்கு என்னை ஹாஸ்பிட்டல்ல பாத்துட்டு மனசு கேக்காம பார்க்க வந்துருக்கான் புள்ள. அருளு, இது என் மவ மிருதுளாஸ்ரீ” என அறிமுகப்படுத்தியவர்,

‘நல்லா பாத்துக்கோ நான் பேசனது இவனப்பத்திதான்’ என மகளுக்குக் கண் ஜாடைக் காட்டினார்.

‘நான் பார்த்து என்னம்மா செய்யறது? உங்க அருள், நெஜமா அருள் வந்த மாதிரியில என்ன கோபமாப் பார்க்கறான்! ஆடு உறவாம் குட்டிப் பகையாம்!’

ரதி அறிமுகப்படுத்த மருந்துக்குக் கூட அவன் இவளை நிமிர்ந்துப் பார்க்கவில்லை. இவளும் போடா இவனே என கண்டுக் கொள்ளவில்லை.

“உங்கண்ணா மகன் வரவும், ரதிக்கு முகம்லாம் பல்பு போட்ட மாதிரி ஜொலிக்குது! நடத்துங்க! நான் போய் குளிக்கறேன்” என சொல்லியவள் நகர்ந்து விட்டாள். மிக மிக மெதுவாகவே குளித்தாள். அதற்குள்ளாவது அவன் போய் விட மாட்டானா என எண்ணித்தான்.

‘பார்க்க ரொம்ப அழகாவே இருக்கான். எங்கம்மா மாதிரியே நல்ல கலரு. நல்ல ஹைட்டு! ஆனா அழகா இருந்து என்னப் பண்ண அகம்பாவமும் சேர்ந்து இல்ல இருக்கு. முகத்த அப்படித் திருப்பறான். நீக்ரோ கூட ஓடிப்போன அத்தை மட்டும் வேணும், அவங்கப் பெத்த மக வேணாமாம்! இது எந்த ஊர் நியாயம்? அம்மா மட்டும் கேக்கற தூரத்துல இல்லைனா சீனாகிப் போயிருப்படா அருளு!’ கருவியப்படியே குளித்து வந்தாள்.

ரதி இன்னும் தன் மருமகனைச் சீராட்டிக் கொண்டிருந்தார். இவளுக்குப் பசி காதை அடைத்தது.

‘இவன் எப்போ கிளம்பி, நான் எப்போ சாப்பிடறது?’

ஹாலுக்கு வந்தாள் மிரு.

“அம்மா சாப்பிட்டியா?”

“அதெல்லாம் ஆச்சுடி! அருளுக்கு என் கையால சமைச்சுப் போட்டேன். சின்ன புள்ளைல ஆசையா சாப்பிடுவான் என் சமையல. நானே ஊட்டி விட்டேண்டி மிரு என் மனசு நிறைஞ்சு போய் கிடக்கு” கண் கலங்கினார் ரதி.

“அழாதீங்க அத்தை! கொஞ்ச நாள் போகட்டும், நான் எப்படியாவது அப்பா கிட்ட பேசி பாட்டியப் பார்க்க ஏற்பாடு பண்ணுறேன்” அப்பாவுக்கு பயந்து ரதியிடம் முகத்தைத் திருப்பினாலும் அவர் கையால் சாப்பிட்டப் பாசம் அருளுக்கு இருக்கத்தான் செய்தது.

அம்மாவின் கண்ணைத் துடைத்த அருளின் செய்கையைப் பார்த்தவள்,

‘அம்மாவுக்காக இந்த கொசு தொல்லையத் தாங்கிக்கத்தான் வேணும் போல’ என எண்ணிக் கொண்டாள்.

அவன் முகத்தைக் கூட நிமிர்ந்துப் பார்க்காமல், சமையல் கட்டுக்குப் போய் உணவைத் தட்டில் இட்டவள் டீவியின் முன்னே தரையில் அமர்ந்துக் கொண்டாள். மருமகனுக்காக சார்டின்(டின்னில் இருக்கும் சார்டின் மீன்) கறி, முட்டைப் பொரியல், ரசம், முட்டைகோஸ் பொரியல் என சமைத்திருந்தார் ரதி.

சேனல் ஒன்றில் மலேசியா சிங்கப்பூருடன் மோதும் பந்துவிளையாட்டு ஓடியது. சாப்பிட்டுக் கொண்டே அதைப் பார்த்தாள் மிரு. ரதி சந்தோஷமாக பழைய கதைகளை அருளிடம் பேசிக் கொண்டிருந்தார். நடு நடுவே மகளின் புகழையும் எடுத்து விட்டுக் கொண்டிருந்தார். அவள் படித்தப் படிப்பு, இப்பொழுது செய்யும் வேலை என. அவள் பெயர் அடிபடும் போதெல்லாம் அருளின் பார்வை தன் முதுகை துளைப்பதை உணர்ந்தே இருந்தாள் மிரு. ஆனால் அசையாமல் சாப்பிடும் வேலையை மட்டும் பார்த்தாள்.

“மிரும்மா, அது என்ன கம்பேனி நீ வேலைப் பார்க்கறது?” கேட்டார் ரதி.

“ஜிபி ஐடி சொலுஷன்” கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னாள்.

“என்ன வேலைன்னும் அத்தான் கிட்ட சொல்லும்மா!”

‘அத்தானா? என் கிட்ட செத்தான்!’ திரும்பி அவனைப் பார்த்தாள் மிரு.

அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

‘அத்தான்னு மட்டும் கூப்புடு, அடுத்த டெட் பாடி நீதான்’ என்பது போல இருந்தது அவன் பார்வை.

தட்டில் இருந்த குழம்பை ஆட்காட்டி விரலால் வழித்து வாய்க்குள் விட்டு சப்பியபடியே, அவன் பார்த்ததை விட கேவலமாக ஒரு லுக் கொடுத்து விட்டு கைக் கழுவ போனாள் மிரு.

அவள் முறைக்கும் போது கண்ணில் பாய்ந்த ஒளியும், விரல் சப்பும் போது உதட்டில் தெரிந்த பளபளப்பும் இவனை மின்சார ஷாக்கைப் போல தாக்கிப் போயின. தலையை உலுக்கிக் கொண்டு நடப்புக்கு வந்தான் அருள். அதற்குள் கணே வீட்டுக்கு வந்திருந்தான். அவனிடமும் அறிமுகப்படலத்தை நடத்தி வைத்தார் ரதி. பார்க்க அவர்களைப் போல் இருந்த கணேவை உடனேயே தன் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டான் அருள்.

அவர்க மூவரும் அமர்ந்து சுவாரசியமாகப் பேச, மிரு ரூமுக்குள் நுழைந்துக் கொண்டாள். மனம் விண்டு விடும் போல வலித்தது.

‘என்னை மட்டும் ஏன் ஒதுக்கறாங்க? அப்பா மாதிரி பொறந்தது என் தப்பா? பார்க்கறவங்களுக்கு எல்லாம் என்னைக் கண்டா மட்டும் இளக்காரம்! இல்லையே குரு அப்படி இளக்காரமா பார்க்கலையே!’

அன்று ஸ்பூன் அலப்பறை நடந்த நாளுக்கு மனம் போனது.

இவள் பேய் முழி முழிக்க, சிரிப்புடன் அவளைப் பார்த்திருந்தான் குரு.

“என்ன மிரு மேடம்! பேய் அடிச்ச மாதிரி நிக்கறீங்க? அதுக்குத்தான் ஓவரா ஆடக்கூடாதுன்னு சொல்லுறது! போய் வேலைய பாருங்க”

“பாஸ்!”

“என்ன?”

“நெஜமா நீங்க யூஸ் பண்ண ஸ்பூனா பாஸ்?”

“ஏன் நான் யூஸ் பண்ணிருந்தா என்ன தப்பு? கடைக்குப் போய் சாப்புடறப்போ ஸ்பூன் தராங்களே, அத கழுவி தந்தாலும், நமக்கு முன்ன எத்தனை ஆயிரம் பேர் யூஸ் பண்ணிருப்பாங்க! ஆனாலும் நீ அதுல சாப்பிடறத்தானே?”

ஆமென தலையாட்டினாள் மிரு.

“ஆயிரம் பேர் சாப்பிட்ட எச்சி ஸ்பூன் பெட்டரா? இல்லை நான் ஒருத்தன் மட்டும் சாப்பிட்ட எச்சி ஸ்பூன் பெட்டரா?” கேள்வி வேறு கேட்டு வைத்தான் குரு.

‘இதுக்கு என்னன்னு நான் ஆன்ஸ்சர் பண்ண?’ மண்டை குழம்பிப் போனாள் மிரு.

அவள் முகம் போன போக்கைப் பார்த்து சிரிப்பு வந்தது குருவுக்கு.

“கமான் அன்சர் மீ மிரு!” அவளை கேள்விக் கேட்டுக் கொண்டே காபி மிசினில் காபியை எடுத்து அருந்தினான் குரு. அவளுக்கும் ஒரு கப் எடுத்துக் கொடுத்தான்.

“காபி குடிச்சுட்டே யோசி மிரு!”

கப்பை கையில் வாங்கிக் கொண்டாள் மிரு.

“இந்தப் பஞ்சாயத்துக்கே நான் வரல! இனிமே நூடுல்ஸ் சாப்பிட்டாக் கூட கைல அள்ளியே சாப்பிட்டுக்கறேன் பாஸ். யாரு எச்சி பெட்டர்னு பட்டிமன்றம்லாம் வைக்காதீங்க, மிரு செத்துருவா!” காபியைக் குடித்தப்படியே சொன்னாள் மிரு.

குருவின் பார்வை மிக மிக ரசனையாக சிரித்திருக்கும் அவள் முகத்தில் படிந்திருந்தது. அதை கவனித்த மிருவுக்கு சங்கடமாக இருந்தது. இது நாள் வரை மோகத்துடன், ஆசையுடன், கோபத்துடன், வெறியுடன் மட்டுமே அவள் முகத்தைப் பார்த்திருந்த ஆண்களைக் கண்டிருந்தவள் இந்த ரசனைப் பார்வையில் தடுமாறினாள். ஆனாலும் சட்டென தன்னை மீட்டுக் கொண்டாள் மிரு.

“பாஸ்!”

“ஹ்ம்ம்!”

“தகுதி பாஸ் தகுதி!”

“என்ன?”

“என்னை ஒரு மாதிரி பார்க்கறீங்க! இதெல்லாம் உங்க தகுதிக்கு சரியில்ல! நீங்களே சொல்லி இருக்கீங்க, மறந்திறாதீங்க!’ ஞாபகப்படுத்தினாள் மிரு.

மிக மெதுவாகவே தன் பார்வையை அவள் முகத்தில் இருந்து விலக்கிக் கொண்டான் குரு.

“யெஸ், யூ ஆர் கரேக்ட்! சாரி மிரு. வெயில்ல சுத்தி திரிஞ்சிட்டு, ஏர்கோண்ட அறைக்கு நுழைஞ்சதும் அந்த சிலுசிலுப்ப ஒரு நிமிஷம் கண் மூடி ரசிப்போம்ல, அந்த மாதிரி வோர்க் டென்ஷன்ல இருந்தவன் நீ அழகா சிரிக்கவும் கொஞ்ச நேரம் மனசு விட்டு ரசிச்சுட்டேன். சாரி அகைய்ன்” என சொல்லியவன், தனது அறைக்குப் போய் விட்டான்.

‘ஷப்பா! சொன்ன கேட்டுக்கறான், ரொம்ப நல்லவன்’ என இவள் நினைக்க,

‘ஆசையாப் பார்த்தா கூட அத அப்படியே விட்டுட்டுப் போகாம இப்படி பார்க்காதேன்னு சொல்லுற பொண்ணுலாம் மில்லியன்ல ஒருத்தியா தான் இருப்பாங்க. மிருது சத்தியமா அந்த கேட்டகேரி தான்!’ என மனதுக்குள் சிரித்துக் கொண்டான் குரு.

அவள் கனவைக் கலைப்பது போல அறை வாயிலில் வந்து நின்ற அருள் தொண்டையை செருமினான். இவள் நிமிர்ந்துப் பார்க்க,

“கிளம்பறேன்! அத்தௌ உன் கிட்ட சொல்லிட்டுப் போக சொன்னாங்க!” என வேண்டா வெறுப்பாக சொன்னான்.

சரி என தலையாட்டியவள்,

“அருள்!” என கூப்பிட்டாள்.

இவன் என்ன என்பது போல பார்க்க,

“ஆஸ்திரேலியாவுல என்ன வேலைப் பார்க்கறீங்க? ஆப்பிள் புடுங்கறதா?” என கேட்டு கட்டிலில் வைத்திருந்த தலையணையை முகத்தில் புதைத்து குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

‘உடம்பு முழுக்கத் திமிரு! உன்னைக் கல்யாணம் கட்டி அந்த திமிர அடக்கறேண்டி!’ இவ்வளவு நேரம் யாருக்கு வந்த விருந்தோ என இருந்தவன், அவள் குறும்பில் சொக்கிப் போய் மிருவைத் தன்னவளாக்கிக் கொள்ள முடிவெடுத்தான்.

 

(தவிப்பான்)